விளையாட்டுகள் அவசியமா?

நாம் எதில் நமது நேரத்தைச் செலவிடுகிறோம் என்பதைக் கவனிப்பது மிகவும் அவசியம். நமது நேரங்களைக் கொட்டி முன்னேறிட நினைக்கும் துறைகளெல்லாம் மக்களுக்குப் பயனுள்ளவையாக உள்ளனவா என்பதைக் கண்டிப்பாக உற்றுநோக்க வேண்டும். இன்று பயனற்றத் துறைகளில் நேரத்தை வீணாக்குவதும், அதற்காகக் காசுகளை அள்ளி வீசுவதும் சாதாரணமாகிவிட்டது. இவைகள், கேள்வியின்றி இவ்வளவு தூரத்திற்கு  எப்படி மனிதர்களிடம் ஊடுருவியது என்பது விடைதெரியா கேள்விதான்.  விளையாட்டுகள்தான் இதில் முதலிடத்தைப் பெறுகிறது. விளையாட்டுகளைப் பொருத்த வரையில், அவைகளால் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. மக்களின் நேரங்களை வீணாக்குவதைத் தவிர‌ வேறெதையும் அவைகள் சாதிக்கவில்லை‌. விளையாட்டுகள் என்பது விளையாடுபவர்களின் ஆரோக்கியத்திற்கான ஒன்று, அவ்வளவுதான். அதைத் தவிர அதில் வெறெந்த பயனும் இல்லை. எனவே, அதில் அதிகமான நேரத்தைச் செலவிடுவதும், அதற்காக பெரிய பெரிய விழாக்கள் நடத்தி செல்வங்களை வீணாக்குவதும், மக்களுக்காக எதையுமே செய்யாத அந்த விளையாட்டாளர்களுக்குப் பதக்கங்களை வழங்குவதும்,  விளையாட்டுகளில் வெற்றி பெறுபவர்களைத் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுவதும் தேவையற்றவைகள்தான். 

உடற்பயிற்சிக்காக சில மணிநேரங்களை அதில் செலவிடுவதில் தவறில்லை. அது தேவையானதும் கூட. அதேபோன்று, தற்காப்பு கலைகளும் வீரவிளையாட்டுகளும் இதில் அடங்காது‌. இவைகளைத் தவிர்த்து தேவையற்ற சில விளையாட்டுகள் உள்ளன. அவைகள் எவை என்பதை நாம் அறிந்திருப்போம், விளக்க வேண்டிய அவசியமில்லை. வாழ்க்கையையே அதில் அழிப்பதும், அதில் வெற்றிபெறத் துடிப்பதும் அர்த்தமற்றது. இன்னும் சிலர் விளையாட்டுகளில் வெற்றி பெறவில்லையெனில் நாம் எதற்குமே தகுதியற்றவர்கள் என்பதாக எண்ணி, தன்னைத்தானே வருத்திக் கொள்கின்றனர். அவ்வாறு வருத்தமைடைவதற்கு எந்த அவசியமும் இல்லை. 

நமது பொன்னான நேரத்தை மற்ற பயனுள்ள விடயங்களில் ஈடுபடுத்துவதே சிறந்தது‌. அதுவும் ஒரு முஸ்லிமின் வாழ்வு பிறருக்குப் பயனுள்ள முறையில் வாழ்வதிலேயே முழுமையடைகிறது. இதுபோன்ற அர்த்தமற்ற விடையங்களில் தனது நேரத்தை வீணாக்குபவர்களைக் கவுரவிப்பதைத் தவிர்த்து மக்களுக்குப் பயனுள்ள முறையில் வாழ்பவர்களுக்குக் கண்ணியத்தை அளிக்கத் தொடங்கவேண்டும்‌. இதுபோன்ற விளையாட்டுகளில் வெற்றிபெறுவதை சாதனையாக நினைப்பதை நிறுத்தவேண்டும். இதுபோன்ற விளையாட்டுகளுக்காக மனதைப் போட்டு வருத்திக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

விளையாட்டு மட்டுமல்ல, எழுத்து, பேச்சு என எந்தத் துறையாக இருந்தாலும் அதில் மக்களுக்கு பயனுள்ளதா என்பதைக் கவனிப்பது மிக முக்கியம்.  உடற்பயிற்சிக்காக விளையாட்டுகளை மேற்கொள்வதை ஊக்குவியுங்கள். அதேநேரத்தில் அதனை வாழ்க்கையாக அல்லது களியாட்டமாக எடுத்து நடப்பதை அனுமதிக்காதீர்கள். மற்ற பயனுள்ள பணிகளில் முன்னேறுவதற்கும் தனது பங்களிப்பை நல்குவதற்கும் மற்றவர்களை ஆர்வமூட்டுங்கள். 

~ முஹய்யுத்தீன்.
Previous Post Next Post