மறைவான விஷயங்களை அறிந்தவன் யார்?

மறைவான விஷயங்களை அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறிய மாட்டார்கள். சில மறைவான விஷயங்களை அல்லாஹ் தன் நபிமார்களுக்கு மட்டும் அறிவித்துக் கொடுத்திருக்கின்றான். அல்லாஹ் அல்லாதவர்கள் மறைவானவற்றை அறிவார் என்று நம்புவது நிராகரிப்பாகும். 
                                                
 நபிமார்கள் மறைவான விஷயங்களை அறிவார்களா? 
                                                
 மறைவான விஷயங்களை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய முடியாது. எனினும் நபிமார்களுக்கு வஹீயின் மூலமாக மறைவான விஷயங்களை அல்லாஹ் அறிவித்துக் கொடுக்கின்றான். மறைவான செய்திகளை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய முடியாது என்று அல்லாஹ் தெளிவாகத் தனது வேதத்தில் தெளிவு படுத்திவிட்டான். 
                                                
 அல்லாஹ் கூறுகிறான்: 

 قُلْ لَّا يَعْلَمُ مَنْ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ الْغَيْبَ اِلَّا اللّٰهُ‌ وَمَا يَشْعُرُوْنَ اَيَّانَ يُبْعَثُوْنَ 

 (இன்னும்) நீர் கூறுவீராக: “அல்லாஹ்வைத் தவிர்த்து, வானங்களிலும், பூமியிலும் இருப்பவர் எவரும் மறைவாயிருப்பதை அறிய மாட்டார்; இன்னும்: (மரித்தோர் இறுதியில்) எப்போது எழுப்பப்படுவார்கள் என்பதையும் அவர்கள் அறியமாட்டார்கள்.” 

 (அல்குர்ஆன் : 27:65) 
                                                
 وَعِنْدَهٗ مَفَاتِحُ الْغَيْبِ لَا يَعْلَمُهَاۤ اِلَّا هُوَ‌ وَيَعْلَمُ مَا فِى الْبَرِّ وَالْبَحْرِ‌ وَمَا تَسْقُطُ مِنْ وَّرَقَةٍ اِلَّا يَعْلَمُهَا وَلَا حَبَّةٍ فِىْ ظُلُمٰتِ الْاَرْضِ وَلَا رَطْبٍ وَّلَا يَابِسٍ اِلَّا فِىْ كِتٰبٍ مُّبِيْنٍ 

 அவனிடமே மறைவானவற்றின் திறவு கோல்கள் இருக்கின்றன. அவற்றை அவனன்றி எவரும் அறியார். மேலும் கரையிலும் கடலிலும் உள்ளவற்றையெல்லாம் அவன் அறிவான்; அவன் அறியாமல் ஓர் இலையும் உதிர்வதில்லை. பூமியின் (ஆழத்தில் அடர்ந்த) இருள்களில் கிடக்கும் சிறு வித்தும், பசுமையானதும், உலர்ந்ததும் (எந்தப் பொருளும்) தெளிவான (அவனுடைய) பதிவேட்டில் இல்லாமலில்லை. 

 (அல்குர்ஆன் : 6:59) 
                                                
 31:34, 34:3 ஆகிய வசனங்களும் இதே கருத்தைக் கூறுகின்றன. இந்த வசனங்களின் அடிப்படையில் நபிமார்கள், மலக்குகள், ஜின்கள், மனிதர்கள் உள்ளிட்ட எவரும் மறைவானவற்றை அறிய முடியாது என்பதுதான் அஹ்லுஸ்ஸுன்னா அறிஞர்களின் விளக்கமாகும். 
                                                
 عٰلِمُ الْغَيْبِ فَلَا يُظْهِرُ عَلٰى غَيْبِهٖۤ اَحَدًا ۙ اِلَّا مَنِ ارْتَضٰى مِنْ رَّسُوْلٍ فَاِنَّهٗ يَسْلُكُ مِنْ بَيْنِ يَدَيْهِ وَمِنْ خَلْفِهٖ رَصَدًا ۙ لِّيَـعْلَمَ اَنْ قَدْ اَبْلَغُوْا رِسٰلٰتِ رَبِّهِمْ وَاَحَاطَ بِمَا لَدَيْهِمْ وَاَحْصٰى كُلَّ شَىْءٍ عَدَدًا 

 “(அவன் தான்) மறைவானாவற்றை அறிந்தவன்; எனவே, தான் மறைத்திருப்பவற்றை அவன் எவருக்கும் வெளியாக்கமாட்டான். 

 “தான் பொருந்திக் கொண்ட தூதருக்குத் தவிர - எனவே அவருக்கு முன்னும், அவருக்குப் பின்னும் பாதுகாவலர்க(ளான மலக்குக)ளை நிச்சயமாக நடத்தாட்டுகிறான். 

 “தங்களுடைய இறைவனின் தூதுச் செய்திகளை, திட்டமாக எடுத்துச் சொல்லிவிட்டார்களா? என்று அறிவதற்காக - இன்னும் அவர்களிடமுள்ளவற்றை அவன் சூழ்ந்தறிந்து கொண்டிருப்பதுடன், அவன் சகல பொருளையும் எண்ணிக்கையால் மட்டுப்படுத்தி இருக்கிறான்.” 

 (அல்குர்ஆன் : 72:26-28) 
                                                
 இறைத் தூதர்களில், தான் நாடியோருக்கு அல்லாஹ் மறைவானவற்றை அறிவித்துக் கொடுப்பதாக இந்த வசனங்கள் குறிப்பிடுகின்றன. இதை வைத்து நபிமார்களுக்கு மறைவான விஷயங்கள் அனைத்தும் தெரியும் என்று வாதிட முடியாது. அல்லாஹ் அறிவித்து தந்த இல்மைத் தவிர வேறு எதுவும் இறைத்தூதர்கள் அறிந்திருக்கவில்லை. நபிமார்களுக்கு மறைவான ஞானம் இல்லை என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் குர்ஆனில் உள்ளன. இறுதித் தூதரான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் மறைவான ஞானம் இல்லை என்று திருக்குர்ஆன் தெளிவாகப் பிரகடனம் செய்கின்றது. 
                                                
 قُلْ لَّاۤ اَمْلِكُ لِنَفْسِىْ نَـفْعًا وَّلَا ضَرًّا اِلَّا مَا شَآءَ اللّٰهُ‌  وَلَوْ كُنْتُ اَعْلَمُ الْغَيْبَ لَاسْتَكْثَرْتُ مِنَ الْخَيْرِ  ‌ۛ وَمَا مَسَّنِىَ السُّۤوْءُ‌ ‌ۛ اِنْ اَنَا اِلَّا نَذِيْرٌ وَّبَشِيْرٌ لِّقَوْمٍ يُّؤْمِنُوْنَ 

 (நபியே!) நீர் கூறும்: “அல்லாஹ் நாடினாலன்றி நான் எனக்கே யாதொரு நன்மையோ அல்லது தீமையோ செய்து கொள்ள சக்தியில்லாதவன்; மறைந்திருப்பவற்றை நான் அறிபவனாக இருந்தால் நன்மைகளை அதிகமாகத் தேடிக்கொண்டிருப்பேன்; (அந்நிலையில் எவ்விதமான) தீங்கும் என்னைத் தீண்டியிராது - நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு நான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனும், நன்மாராயம் கூறுபவனுமேயன்றி வேறில்லை.” 
 
 (அல்குர்ஆன் : 7:188) 
                                                
 மேலும் பார்க்க: அல்குர்ஆன் 5:109, 6:50, 11:31, 11:49. 
                                                
 قُلْ لَّاۤ اَقُوْلُ لَـكُمْ عِنْدِىْ خَزَآٮِٕنُ اللّٰهِ وَلَاۤ اَعْلَمُ الْغَيْبَ وَلَاۤ اَقُوْلُ لَـكُمْ اِنِّىْ مَلَكٌ‌  اِنْ اَتَّبِعُ اِلَّا مَا يُوْحٰٓى اِلَىَّ‌  قُلْ هَلْ يَسْتَوِى الْاَعْمٰى وَالْبَصِيْرُ‌  اَفَلَا تَتَفَكَّرُوْنَ 

 (நபியே!) நீர் கூறும்: “என்னிடத்தில் அல்லாஹ்வின் பொக்கிஷங்கள் இருக்கின்றன என்று நான் உங்களிடம் கூறவில்லை. மறைவானவற்றை நான் அறியமாட்டேன்; நிச்சயமாக நான் ஒரு மலக்காக இருக்கின்றேன் என்றும் நான் உங்களிடம் சொல்லவில்லை; எனக்கு (வஹீயாக) அறிவிக்கப்பட்டதைத் தவிர (வேறு எதையும்) நான் பின்பற்றவில்லை.” இன்னும் நீர் கூறும்: “குருடனும் பார்வையுடையவனும் சமமாவாரா? நீங்கள் சிந்திக்க வேண்டாமா?” 

 (அல்குர்ஆன் : 6:50) 
                                                
 இன்னும் சில வசனங்களும் இறைத்தூதர் அவர்கள் மறைவானவற்றை அறியமாட்டார் என்பதைத் தெளிவாக எடுத்துரைக்கிறது. 
                                                

 - உஸ்தாத். M. பஷீர் ஃபிர்தௌஸி 
                                                
Previous Post Next Post