«اللَّهُمَّ أَصْلِحْ لِي دِينِي الَّذِي هُوَ عِصْمَةُ أَمْرِي، وَأَصْلِحْ لِي دُنْيَايَ الَّتِي فِيهَا مَعَاشِي، وَأَصْلِحْ لِي آخِرَتِي الَّتِي فِيهَا مَعَادِي وَاجْعَلِ الْحَيَاةَ زِيَادَةً لِي فِي كُلِّ خَيْرٍ، وَاجْعَلِ الْمَوْتَ رَاحَةً لِي مِنْ كُلِّ شَرٍّ».
அல்லாஹ்வே! எனது (அனைத்து) விடயங்களுக்கும் பாதுகாப்பாக உள்ள எனது மார்க்கத்தை எனக்குச் சீர்படுத்துவாயாக! என் வாழ்வு அமைந்துள்ள எனது இம்மையையும் எனக்குச் சீர்படுத்துவாயாக! என் திரும்புமிடம் அமைந்துள்ள எனது மறுமையையும் எனக்குச் சீர்படுத்துவாயாக! இவ்வாழ்க்கையை, எல்லா நன்மைகளிலும் எனக்கு அதிகரிப்பை ஏற்படுத்தக் (காரணமாக இருக்கக்)கூடியதாக ஆக்குவாயாக! மரணத்தை, (பாவங்கள், கவலைகள், சோதனைகள் போன்ற) எல்லாக் கெடுதிகளிலிருந்தும் எனக்கு ஓய்வுவைத் தரக்கூடியதாக ஆக்குவாயாக!
முஸ்லிம்: (2720), அறிவிப்பவர்: அபூ ஹுறைறஹ் (றளியல்லாஹு அன்ஹு).
விளக்கக் குறிப்புகள்
நபி ﷺ அவர்கள் இவ்வாறு பிரார்த்திப்பவர்களாக இருந்தார்கள் என்று அபூஹுறைறஹ் (றளியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இம்மை, மறுமைத் தேவைகளை முழுமையாக உள்ளடக்கியதாக இப் பிரார்த்தனை அமைந்திருக்கின்றது.
நபி ﷺ அவர்களுக்கு 'ஜவாமிஉல் கலிம்' எனும் நிறைந்த அர்த்தங்களை குறைந்த வார்த்தைகளில்; இரத்தினச் சுருக்கமாக சொல்லும் ஆற்றல் வழங்கப்பட்டிருக்கிறது.
இப்பிரார்த்தனையில் மிக முக்கியமான தேவை முதலில் வேண்டப்பட்டுள்ளது. அதுதான் மார்க்கம் சரிசெய்யப்பட வேண்டும் என்பதாகும். ஒருவருடைய மார்க்கமே அவரது அனைத்து காரியங்களுக்கும் பாதுகாப்பாக அமைந்திருக்கிறது என்றும் நபி ﷺ அவர்கள் இங்கு சுட்டிக்காட்டியுள்ளார்கள். ஏனெனில் ஒரு மனிதன் இஸ்லாம் மார்க்கத்தைக் கற்று அதன் அடிப்படையில் செயல்பட்டால், அது அவனை அனைத்து கெடுதிகளில் இருந்தும் பாதுகாக்கும் கேடயமாக அமையும். ஒருவரது மார்க்கம் சீராக இருப்பதற்கு 'இஹ்லாஸ்' எனும் அல்லாஹ்வுக்காக மாத்திரம் செயலாற்றும் பண்பும், நபி ﷺ அவர்களின் வழிகாட்டலின் அடிப்படையில் செயலாற்றும் பண்பும் அவசியமாகும்.
இரண்டாவதாக இம்மை வாழ்க்கையை சீர் செய்து தருமாறு வேண்டப்பட்டுள்ளது. அதில் தான் என் வாழ்க்கை அமைந்துள்ளது என்று அதற்கான நியாயமும் குறிப்பிடப்பட்டுள்ளது. மனிதன் அல்லாஹ்வை வணங்கி, வழிபட்டு நடப்பதற்கு அவனது வாழ்நாட்கள் அவனுக்கு அவசியம். என் வாழ்வு என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள 'மஆஷீ ' என்ற சொல் வாழ்வாதாரம் / வாழ்வதற்கான வழி என்ற அர்த்தத்தையும் தரும். அதனை சீர் செய்து தருமாறும் இங்கு வேண்டப்படுகிறது. வாழ்வாதாரத்தை சம்பாதித்துக் கொள்வதற்காக எடுக்கப்படும் முயற்சியும் கூட, அல்லாஹ்விடம் நற்கூலியை எதிர்பார்த்து நல்ல நோக்கங்களை மையமாக வைத்து எடுக்கப்படுமானால் அம்முயற்சியும் 'இபாதத்' எனும் வணக்கமாக மாறுகிறது.
மூன்றாவதாக மறுமை வாழ்வை சீர்படுத்தித் தருமாறு வேண்டப்படுகிறது. நாம் செய்யும் நல்ல அமல்களின் காரணமாகத்தான் நாம் சொர்க்கம் நுழைய முடியுமாக இருந்தாலும் கூட; அவை சுவர்க்கம் என்னும் பெரும் பரிசுக்கு ஈடானவையாக இல்லை. ஆனாலும் அல்லாஹ் தன் அருளினால் நல்லவர்களை சுவர்க்கத்தில் நுழைய வைக்கிறான். மேலும் மறுமையில் நடக்க இருக்கும் கெடுதிகளில் இருந்து அவனே எங்களைப் பாதுகாக்க வேண்டியிருக்கும்.
அடுத்ததாக வாழ்நாட்களை, நல்லமல்களை அதிகப்படுத்துவதற்கான காரணியாக ஆக்க வேண்டும் என்று பிரார்த்திக்கப்பட்டுள்ளது. ஒருவர் தனது வாழ்நாட்களை தீமைகளை அதிகரித்துக் கொள்வதற்கான காரணியாக ஆக்கிக் கொள்ளாது; நன்மைகளை அதிகரித்துக் கொள்வதற்கான காரணியாக ஆக்கிக் கொள்வதற்கு அல்லாஹ்வே அனுகூலம் புரிய வேண்டியிருக்கிறது.
இறுதியாக இவ்வுலகத்தைப் பிரியும் மரணம் எனும் இறுதி முடிவை நல்லதாக்கித் தர வேண்டும் என்று பிரார்த்திக்கப்பட்டுள்ளது. ஒரு நல்ல மனிதனின் மரணம் அவனுக்கு இவ்வுலகின் சோதனைகள் மற்றும் கஷ்டங்களில் இருந்து விடுதலையாக அமைந்துவிடுகிறது. மேலும், மண்ணறை வாழ்க்கையின் சோதனையோ வேதனையோ நரகின் கெடுதிகளோ அவனுக்கு ஏற்படமாட்டாது. அதனால் அவன் சுவனத்தில் நிம்மதியாக வாழ்வான்.
உசாத்துணை:
شرح الأحاديث - الدرر السنية
-ஸுன்னாஹ் அகாடமி