ஜனாஸாவின் சட்டங்கள்


மனிதன் உலகில் பிறந்தவுடன் அவனுக்கு மரணம் நிச்சயம் என்பது இறைவனால் வகுக்கப்பட்ட நியதி. ஒருவர் மரணித்து விட்டால் அந்த மைய்யத்திற்கு செய்யப்பட வேண்டிய கடமைகளான குளிப்பாட்டுதல், கபனிடல், தொழ வைத்தல், கப்றில் வைக்கப்படல் போன்ற கடமைகள் சாமானியர்கள் புரிந்து செய்ய முற்படுவதில்லை.மைய்யத்தின் நெருங்கிய உறவினர்கள் செய்ய வேண்டிய காரியங்களைக் கூட செய்யாமல் அல்லது செய்யத் தெரியாமல் எல்லாவற்றுக்கும் பள்ளியில் தொழ வைக்கும் ஹஜரத்களையும், முஅத்தீன்களையும் அழைத்துச் செய்யச் சொல்லும் வழக்கம்தான் இன்று எல்லா ஊர்களிலும் நம்மிடையே இருந்து வருகிறது. அவ்வாறில்லாமல் நம்முடைய உறவினர்கள் மரணித்தால் அவர்களின் எல்லா காரியங்களையும் நாமே முன்னின்று செய்வது சுன்னத்தாக இருக்கிறது. எல்லோரும் ஜனாஸாவின் சட்டங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் நபி(ஸல்) அவர்களின்(சுன்னத்தின்) அறிவித்துத் தந்த ஆதாரங்களின் படி இங்கு தந்துள்ளோம். எல்லோரும் அறிந்து அதன் படி நடந்து இறைவனின் நற் பேற்றினைப் பெறுவோமாக.

இவ்வுலகில் பிறக்கின்ற ஒவ்வொரு மனிதனும் இறப்பது நிச்சயம். இதில் எந்தவொரு மனிதனும் ஐயப்படவோ கருத்து முறன்பாடு கொள்ளவோ முடியாது. இதையே அல் குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:

 'நீங்கள் எங்கிருந்த போதிலும் உங்களை மரணம் வந்தடைந்தே தீரும் மிகவும் உறுதியாக கட்டப்பட்ட கோட்டைகளில் நீங்கள் இருந்தாலும் சரியே" (4:78)

ஒரு முஸ்லிம் தனது வாழ்வில் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு அவர்களது கட்டளைகளுக்கு அடிபணிந்து வாழ்வது எவ்வாறு கடமையோ அவ்வாறே அவன் மரணித்தபின் அவனது கண்களை கசக்கி மூடி விடுவதிலிருந்து புதை குழியில் வைத்து விட்டு திரும்புகின்ற வரைக்கும் உண்டான ஜனாஸாவோடு தொடர்புடைய அனைத்து அம்சங்களிலும் அல்லாஹ்வினதும், அவனது தூதரினதும் கட்டளைகளுக்கேற்ப ஒழுகுவது ஏனைய முஸ்லிம்கள் அனைவர் மீதுமுள்ள கடமையாகும் (ஃபர்லு கிஃபாயா) அதனை சிலர் மேற்கொண்டாலும் அனைவர் மீதுமுள்ள கடமை நீங்கிவிடும். அதனை எவரும் நிறைவேற்றவில்லை எனில் அல்லாஹ்விடத்தில் அனைவரும் குற்றவாளிகளாக கருதப்படுவர்.

ஜனாஸாவை நல்லடக்கம் செய்வதற்கான ஒழுங்குகளைப் பின்வருமாறு மேற்கொள்ள வேண்டும்.

 குளிப்பாட்டுதல்

 ஒரு ஜனாஸாவை குளிப்பாட்டுவதில் பங்கு கொள்வோருக்கு அல்லாஹ்விடத்தில் மகத்தான கூலியுண்டு அவர்களின் பாவங்கள் மன்னிக்கப்பட்டு அன்று பிறந்த பாலகனைப் போல ஆகி விடுகிறார்கள். அதனை அவர்கள் அல்லாஹ்வுக்காக மேற்கொள்வதோடு அந்த ஜனாஸாவில் அவர்கள் காணும் குறைகளை வெளிப்படுத்தாமலும் இருக்க வேண்டும் ( ஆதாரம் : ஹாகிம் , பைஹகி )

ஜனாஸாவை குளிப்பாட்ட வேண்டிய ஒழுங்குகள்

1. மரணமானவர், தன்னை இன்ன நபர்தான் குளிப்பாட்;ட வேண்டும் என்று வசிய்யத் செய்திருந்தால் குறித்த அந்நபர் குளிப்பாட்டுவதுதான் சிறந்தது.

2; வசிய்யத் செய்திராத பட்சத்தில் தந்தை, அல்லது தந்தையின் தந்தை அல்லது மகன் அல்லது மகனின் மகன் போன்ற நெருக்கமான உறவினர்கள் குளிப்பாட்டுவதே சிறந்தது. அதே போல் பெண் ஜனாஸாவாக இருந்தால் அவர் இன்ன நபர்தான் தன்னை குளிப்பாட்ட வேண்டும் என்று வசிய்யத் செய்திருந்தால் குறித்த அந்நபர் குளிப்பாட்டுவதுதான் சிறந்தது. அவ்வாறு வசிய்யத் செய்திராத பட்சத்தில் ஜனாஸாவின் தாய் அல்லது தாயின் தாய் அல்லது மகள், மகளின் மகள் போன்ற நெருங்கிய உறவினர்கள் குளிப்பாட்டுவதே சிறந்தது.

3. ஆண் ஜனாஸா ஆண்களாலும் பெண் ஜனாஸா பெண்களாலும் குளிப்பாட்டப்படல் வேண்டும்.

4. குளிப்பாட்டுபவர்கள் அது பற்றி நன்கு அறிந்தவர்களாகவும் நன்நடத்தை உடையவர்களாகவும் இருப்பது சாலச்சிறந்தது.

5. மனைவியைக் கணவனும், கணவனை மனைவியும் குளிப்பாட்டலாம்.

6. குளிப்பாட்டுவதற்கு ஒருவரும் அவருக்கு உதவியாளர்களாக ஜனாஸாவின் குடும்பத்தவர்களில் இருவரும் இருப்பது விரும்பத்தக்கது.

7. ஏழு வயதிலும் குறைவான சிறுவர்களின் ஜனாஸா இரு தரப்பினராலும் குளிப்பாட்டாப்படலாம்.

8. குளிப்பாட்டுபவர் கை, கால், மூக்கு, வாய் போன்றவற்றிற்கு பாதுகாப்பு உறை அணிந்து கொள்வது நல்லது.

9. ஜனாஸாவை குளிப்பாட்டுகின்ற போது ஒரு துண்டை கையில் சுற்றிக் கொள்ள வேண்டும்.

10. வயிற்றை மிருதுவாக மூன்று முறை அழுத்தி அழுக்குகள் வெளியேறும் இடங்களை கழுவிச் சுத்தம் செய்ய வேண்டும். அத்தோடு பல், மூக்கு போன்றவற்றை சுத்தம் செய்வதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

11.முன், பின் துவாரங்களைக் கழுவி சுத்தம் செய்த பின் ஒழுவின் உறுப்புகளை முதலில் கழுவி ஜனாஸாவின் வலது பக்கங்களை முற்படுத்தி குளிப்பாட்டுதலை ஆரம்பிக்க வேண்டும்.

12. மூன்று முறை அல்லது ஐந்து முறை அல்லது ஏழு முறை என ஒற்றைப் படையாக தேவைக்கேற்ப குளிப்பாட்டலாம். குளிப்பாட்டும் போது சோப்பு, இலந்த இலை போன்றவற்றையும் பயன் படுத்தலாம்.

13. இறுதியாக கற்பூரம் போன்ற வாசனை கலந்த நீரால் கழுவுவது சிறப்பானது. முஹ்ரிமாக (இஹ்ராம் கட்டிய நிலையில் மரணித்தவர்) இருந்தால் நீரில் வாசனை கலக்கக்கூடாது .

14. நீர் குளிராக இருப்பின் இளம் சூடான நீரில் குளிப்பாட்டலாம்.

15. குளிப்பாட்டிய பின் தூய்மையான துணியால் உடலை நன்கு துடைக்க வேண்டும்.

16. தலை, நெற்றி, மூக்கு, கண், கை, முழங்கால், கக்கம் போன்ற இடங்களுக்கு அத்தர் போன்ற வாசனைப் பொருட்களை பூசுவதோடு முன் பின் துவாரங்களுக்கு வாசனை பூசிய பஞ்சை வைக்க வேண்டும்.

17. குளிப்பாட்டுபவர் குளி;ப்பாட்டுவதற்கு முன்னால் ஒழுச் செய்து கொள்ளவதும். குளிப்பாட்டிய பின்னர் தான் குளித்துக் கொள்வதும் சுன்னத்தாகும்.

18. ஜனாஸாவின் அங்கங்கள் வெளியே தெரியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

19. ஷஹீதாக மரணித்தவர் குளிப்பாட்டப்படுவதில்லை. அவர் ஜனாபத் குளிப்புக் கடமையான நிலையில் இருந்தாலும் சரியே.

20. நான்கு மாதங்களுக்கும் குறைவான சதைக்கட்டியாக இருந்தால் அதைக் குளிப்பாட்டவோ, கபனிடவோ தேவையில்லை. சிலர் ஜனாஸாவைக் குளிப்பாட்டும் போது ' அஷ்ஹது அன் லாயிலாஹ இல்லல்லாஹ்..." எனும் கலிமாவைச் சொல்லியவாறு குளிப்பாட்டுகிறார்கள். இதுவோ அல்லது வேறு ஏதாவது வார்த்தைகளோ கூறியவாறு குளிப்பாட்டுவதற்கு எவ்வித ஆதாரமும் கிடையாது.

ஜனாஸாவைக் கபனிடல்.

1. ஜனாஸாவின் உறுப்புக்களை மடக்கி உடைத்து வதை செய்வது தடுக்கப்பட்;டதாகும்.

2. கபனிடுவதற்கான துணி தூய்மையானதாகவும் முழு உடலையும் மறைக்கக் கூடியதாகவும் இருத்தல் அவசியம். அத்துணி வெண்மையானதாக இருப்பதும் விரும்பத்தக்கது.

3. கபன் துணிக்கு சிறிதளவு வாசனை இட்டுக் கொள்ள வேண்டும்.

4. துணி போதாத பட்சத்தில் ஒரு கபனில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஜனாஸாக்களை வைத்தும் கபனிடலாம். அவ்வாறே இருக்கும் துணி ஒருவருக்கும் போதாத பட்சத்தில் தலைப்பகுதியை கபன் துணியால் மூடிவிட்டு கால் பகுதியை இழை, தழை கொண்டு மூடி விடலாம்.

5. ஆண்களுக்கு கபன் துணியால் மூன்று சுற்றுக்களும் பெண்களுக்கு ஒரு சட்டை, ஒரு வேட்டி, ஒரு முகமூடி உட்பட இரண்டு சுற்றுக்களும் இருப்பது விரும்பத் தக்கது. ஒவ்வொரு சுற்றின் போதும் உடல் முழுமையாக மறைக்கப்பட வேண்டும்.

6. இஹ்ராமுடைய நிலையில் மரணித்தவர் தான் அணிந்திருந்த துணிகளாலேயே கபனிடப்படுவார்.

7. கபன் அல்லது அதற்குறிய செலவுகள் தன்னுடையதாக இருப்பது விரும்பத்தக்கது.

8. கபன் துணியால் ஜனாஸாவை சுற்றிய பிறகு அதன் தலை, கால் பகுதிகளைக் கட்டிவிட வேண்டும்.

ஜனாஸாவை சுமத்தலும் பின் தொடர்தலும்

1. வீட்டிலிருந்து ஆரம்பித்து ஜனாஸாவை அடக்கம் செய்யும் வரை பின் தொடர்ந்து செல்வதே சிறந்தது.

2. ஜனாஸாவை சுமப்பவர்களாயினும் சரி பின் தொடர்ந்து செல்பவர்களாயினும் சரி மொளனமாகச் செல்வதே நபி வழியாகும். கலிமா, இஸ்திஃபார், ஸலவாத் போன்றவற்றை சத்தமிட்டு கூறிச் செல்வதற்கு எந்த விதமான ஆதாரமும் கிடையாது. (இமாம் நவவி (ரஹ்) அவர்களுக்குறிய அல்-அஸ்கார் எனும் நூலில், ஜனாஸாவை சுமந்து செல்லல் எனும் பகுதியில் காணலாம்)

3. ஜனாஸாவுக்கு நெருக்கமாக செல்வதே சிறப்பானது.

4. ஜனாஸாவுக்காக எழுந்து நிற்பது நபி(ஸல்) அவர்களின் ஆரம்பகால நடைமுறையாகும். பின்னர் அது மாற்றப்பட்டு விட்டது.

5. ஜனாஸாவுக்கு பின்னால் பெண்கள் செல்வது தடுக்கப்பட்டுள்ளது.

6. ஜனாஸாவுக்கு பின்னால் ஒப்பாரி வைத்து அழுது கொண்டு செல்வது, சாம்பிராணி போன்றவைகளை புகைத்துக் கொண்டு செல்வது போன்றன தடுக்கப்பட்டவைகளாகும்.

7. ஜனாஸாவை சுமந்து செல்பவர்கள் பின்னர் ஒழுச் செய்து கொள்வது சுன்னத்தாகும்.

ஜனாஸாத் தொழுகை.

1. இத்தொழுகை ஜமா அத்தாக நிறைவேற்றப்பட வேண்டும்.

2. ஜனாஸா இமாமுக்கு முன்னால் வைக்கப்பட வேண்டும்.

3. ஜனாஸாத் தொழுகையை வாரிசுரிமை பெறக்கூடிய தந்தை, மகன் போன்ற உறவுக்காரர்கள் தொழுவிப்பதே சிறந்தது.

4. தொழுவிப்பவர் ஆண் ஜனாஸாவின் தலைக்கு நேராகவும், பெண் ஜனாஸாவின் உடம்பின் நடுப்பகுதிக்கு நேராகவும் நிற்க வேண்டும்.

5. ஒன்றுக்கு மேற்பட்ட ஜனாஸாக்கள் இருப்பின் தனித்தனியாகவோ அல்லது அனைத்திற்கும் பொதுவாக ஒரே முறையிலேயும் தொழுகை நடத்தலாம்.

6. மார்க்கத் தண்டனை நிறைவேற்றப்பட்டு மரணித்தவர் பெரும் பாவங்களில் திளைத்திருந்தவர், கடன்காரர், தொழுவிக்கப்படாமல் அடக்கம் செய்யப்பட்டோர், தொழுகை நடத்த எவரும் இல்லாத ஓர் இடத்தில் மரணித்தவர் போன்ற அனைவருக்கும் ஜனாஸாத் தொழுகை நடத்தலாம்.

7. ஜனாஸாத் தொழுகை நான்கு தக்பீர்களைக் கொண்டதாகும்.

8. தொழுபவர் (இமாம், மஃமூம்) ஜனாஸாத் தொழுகையை நிறைவேற்றுகிறேன் என்ற எண்ணத்துடன் தனது இரு கைகளையும் காது வரை உயர்த்தி அல்லாஹு அக்பர் எனக் கூறி உயர்த்திய இரு கைகயையும் நெஞ்சின் மீது கட்டிக் கொள்ள வேண்டும்.

9. முதல் தக்பீர் பின் பிஸ்மியுடன் அல்ஹம்து சூராவை மொளனமாக ஓத வேண்டும்.

10. இரண்டாவது தக்பீருக்குப் பின் அத்தஹ்ஹிய்யாத்தில் கூறப்பட்டிருப்பதைப் போன்று நபி(ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து ஓத வேண்டும்.

11. மூன்றாவது தக்பீருக்குப் பின் ஜனாஸாவுக்காக பிரார்த்திக்க வேண்டும்.

12. நான்காவது தக்பீருக்குப் பின்னும் ஜனாஸாவுக்காக பிரார்த்திக்க வேண்டும். பின்னர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் எனக் ஸலாம் கூறி தொழுகையை நிறைவு செய்ய வேண்டும்.

 அடக்கம் செய்தல்

1. ஜனாஸாவை பொது மைய வாடியில் அடக்கம் செய்வதே சிறப்பானது. வீடுகளில் அடக்கம் செய்வது தடுக்கப்பட்டதாகும்.

2. மண்ணறை ஆழமானதாகத் தோண்டப்படல் வேண்டும்

3. மண்ணறையின் அடிச்சுவர் பகுதியில் கிப்லாவை நோக்கிய வண்ணம்  ஜனாஸாவை வைக்கக்கூடிய அளவுக்கு ஒரு குழி தோண்டப்பட வேண்டும்.

4. (திருமணமானவர் ஆக இருப்பின்) முந்திய இரவில் தாம்பத்திய உறவில் ஈடுபடாதவர் ஜனாஸாவைக் கப்றில் வைப்பது சுன்னத்தாகும்.

5. ஜனாஸாவை கப்றில் வைக்கும் போது கால் பகுதியால்(முதலில்) இறக்குவதும், கப்றில் வைப்பவர் 'பிஸ்மில்லா வ அலா சுன்னத்தி ரசூலிலில்லாஹ்"  எனக் கூறுவதும் சுன்னத்தாகும்.

இன்றும் சில ஊர்களில் ஜனாஸாவைக் கப்றில் வைக்கம் போது ' மின்ஹா கலக்னாகும், வ மின்ஹா நுயீதுகும், வ மின்ஹா நுக்ரிஜுகும் தாரதன் உக்ரா" எனும் திருமறை வசனத்தை ஓதுகிறார்கள். இது ஆதாரமற்ற முற்றிலும் நபி வழிக்கு முறனான செயலாகும். இமாம் ஷவ்கானி அவர்களுக்குறிய நைலுல் அவ்தார் எனும் நூலில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

6. ஜனாஸாவின் முகம் கிப்லாவை நோக்கியதாக வைக்கப்பட வேண்டும்.

7. ஜனாஸாவை நல்லடக்கம் செய்தபின் அந்த ஜனாஸாவுக்காக பிரார்த்திப்பது நபி வழியாகும். நபி (ஸல்) அவர்கள் ஜனாஸாவை அடக்கி முடித்தவுடன் அங்கே நின்று 'உங்களது சகோதரருக்காக மன்னிப்புத் தேடுங்கள். அவருக்கு (கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்கும்) மன உறுதியையும் கேளுங்கள் அவர் இப்போது கேள்விக் கேட்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்." என அங்கிருக்கும் தமது தோழர்களிடம் கூறுவார்கள். என்று உஸ்மான் (ரலி) அறிவிக்கிறார்கள்.

8. ஜனாஸாவை அடக்கிய பிறகு அதன் ஈடேற்றத்திற்காக அல்லாஹ்விடம் ஒவ்வொருவரும் பிரார்த்திக்க வேண்டும் எனும் நபி வழியை விட்டு விட்டு இன்று சில இடங்களில் தல்கீன் என்ற பெயரில், ஜனாஸாவை விளித்து உம்மிடம் கப்றில் வந்து கேள்வி கேட்கும் மலக்குகளிடம் இவ்வாறு, இவ்வாறெல்லாம் விடை சொல் என்று பாடம் நடத்துவது போல் சொல்லிக் கொடுப்பது நபி வழிக்கு மிகவும் முறனானதாகும். சிறிதும் பயனற்றதாகும்;;

இது பற்றி அல் குர் ஆன் இவ்வாறு கூறுகிறது:

'( நபியே ) நிச்சயமாக மரணித்தோரை செவியுறச் செய்ய உன்னால் முடியாது" (27:80)

'( நபியே ) சமாதிகளில் உள்ளவர்களைச் செவியுறச் செய்பவராக நீர் இல்லை." ( 36: 22)

9. ஜனாஸா அடக்கம் செய்யப்பட்ட பிறகு அதை அவசியம் வெளியேற்ற வேண்டும் என்று முக்கியத்துவம் ஏற்பட்டால், அவசியம் வெளியேற்றியாக வேண்டும் என்ற நிலை உருவானால் அதை வெளியேற்றுவதில் குற்றமில்லை.

10. சூரியன் உதித்துக் கொண்டிருக்கும் நேரத்திலிருந்து அது உயர்ந்து வரும் வரை, நடு உச்சியில் சூரியன் இருக்கும் நேரத்திலிருந்து அது சற்று சாயும் வரை, சூரியன் மறைய ஆரம்பித்ததிலிருந்து நன்கு மறையும் வரை ஆகிய மூன்று நேரங்களிலும் ஜனாஸாவை அடக்கம் செய்வது தடுக்கப்பட்டதாகும்.

 11. கப்றுக்கு மேல் கட்டடம் கட்டுவதோ, அங்கே விழாக்கள் கொண்டாடப்படுவதோ அதைத் தொழுமிடமாக ஆக்கிக் கொள்வதோ தடுக்கப்பட்டதாகும். கப்றுகளை உயர்த்திக் கட்டுவதும், அங்கு விழாக்கள் எடுக்கப்படுவதும் நபி வழிக்கு முற்றிலும் முறன் பட்டதாகும்.

 12. ஒரு மனிதர் இறந்து விட்டால் அவரது குடும்பத்தவர்கள், அவரோடு நெருக்கமானவர்கள், நண்பர்கள் போன்றோர் அவரது பிரிவால் துயருருவதையோ, கண்ணீர் சிந்துவதையோ, சப்தமின்றி அழுவதையோ இஸ்லாம் தடை செய்யவில்லை மாறாக அதைப் பாசத்தின் வெளிப்பாடு என்றே இஸ்லாம் கூறுகிறது. ஆனால் சப்தமாக கூக்குரலிட்டு, ஓலமிட்டு, ஒப்பாரி வைத்து அழுது புலம்புவதையே இஸ்லாம் தடை செய்துள்ளது.

13. மைய்யத் வீட்டில் திரளாக மக்கள் ஒன்று கூடுவது, அங்கு விருந்துபசாரம் நடத்துவது போன்றன தடுக்கப்பட்டதாகும் 'மைய்யத்தை அடக்கிய பிறகு மைய்யத் வீட்டில் கூடுவதையும், அங்கு விருந்து சமைப்பதையும் ஒப்பாரி வைத்து ஓலமிடும் குற்றத்தைப் போன்றதாக நாங்கள் கருதுவோம் " என்று ஜரீர் பின் அப்தில்லாஹ் அல்-பஜலி அவர்கள் கூறுகிறார்கள். (ஆதாரம் : அஹ்மத், இப்னு மாஜா)

அல்லாஹ் நம் அனைவர் மீதும் அவனது அன்பையும் அருளையும் அருள்வானாக.
Previous Post Next Post