கேள்வி:
ஜனாஸாக்களை தூரத்திலிருந்து உறவினர்கள் வரும்வரை சிலர் தாமதித்து காலதாமதமாக அடக்கம் செய்கின்றனர். இது கூடுமா ?
பதில் ; ஷேக் ஸாலிஹ் உதைமீன்.
ஜனாஸாக்களை வெளிநாடு வெளியூர்களில் இருந்து உறவினர்கள் வந்து சேரும் வரை பல மணி நேரம் அடக்கம் செய்யாது தாமதிக்கும் செயல் மார்க்கத்திற்கு விரோதமான ஹராமான செயலாகும். இது பாவமாகும் . ஏனெனில் ஒரு மையித்து மரண வேளையிலே அவர் நல்லவராக இருப்பின் சுவர்க்கத்தை கொண்டு நன்மாராயம் கூறப்படுவதால் அந்த சுவனத்து இன்பங்களை சுவைக்க ஆவலோடு இருக்கும் நிலையிலேயே உயிர் பிரிகின்றது.எனவே அவ் ஆன்மா என்னை சீக்கிரமாக நல்லடக்கம் செய்யுங்கள் என துடிதுடிக்கின்றது. தீய ஜனாஸாவாகின் என்னை எங்கு கொண்டு செல்லப் போகின்றீர்கள் என ஓலமிடுகின்து . நூல் நஸாயி.
நபியவர்கள் கூறினார்கள் ஜனாஸாக்களை விரைவாக நல்லடக்கம் செய்யுங்கள் ஏனெனில் அந்த ஜனாஸா நல்லவராக இருந்தால் அவருக்கு கிடைக்கவிருக்கும் உபசாரங்களை நீங்கள் தாமதிப்பதால் தாமதப்படுத்தியதாக ஆகின்றது. அன்றில் அவர் தீயவராயின் தீயவரை ஏன் நீங்கள் நீண்ட நேரம் சுமந்து கொண்டு காத்திருக்க வேண்டும்?, சீக்கிரம் கடமையை முடித்துவிட்டு தீமையை சுமந்து கொண்டிருக்கிறாமல் இறக்கி வைத்து விடுங்கள்.
நூல் முஸ்லிம்
ஜனாஸாக்களை உடனடியாக விரைவாக நல்லடக்கம் செய்வது இஸ்லாமிய வழிகாட்டலாகும். நீண்ட நேரம் அல்லது பல நாட்கள் கூட அஞ்சலி செலுத்துவதற்காக வைத்திருந்து பின்னர் புதைப்பது அல்லது எரிப்பது ஏனைய சமயத்தவர்களின் செயலாகும். யார் வேறொரு சமயத்தவரின் பாரம்பரியங்களை பின்பற்றி நடக்குகிறாரோ அவரும் அவர்களைச் சார்ந்தவரே என்பது நபி மொழி.
நம்மவர்களில் சிலர் மரணித்தவர்களை இறுதியாக ஒரு தடவை பார்த்துக் கொள்வது கடமை அல்லது சுன்னத் என கருதுகின்றனர். அவ்வாறு இல்லை. மரணித்தவருக்காக துஆச் செய்வதும் பாவமன்னிப்பு தேடுவதும் அவரது ஜனாஸா தொழுகையில் கலந்து கொள்வதும் நல்லடக்க நிகழ்வில் பங்கு பற்றுவதுமே ஒருவர் ஒரு ஜனாஸாவுக்கு செய்யவேண்டிய மார்க்கம் கூறிய விடயங்களாகும். ஜனாஸாவை மன திருப்திக்காக கடைசி தடவையாக பார்த்துக் கொள்வது என்பது அனுமதிக்கப்பட்ட ஒரு ஒரு செயல் மாத்திரமே. அது பர்லோ சுன்னத்தோ அல்ல. எனவே அதற்காக ஒரு கடமையை பிற்படுத்த முடியாது. மையித்தின் உறவினர்களில் ஒருவர் வெளியூரில் வெளிநாட்டில் இருப்பதால் வருகை தாமதமானால் அவருக்கு அறிவித்துவிட்டு ஊரில் இருப்பவர்கள் அவசரமாக ஜனாஸா நல்லடக்க விடயங்களை கவனித்து அடக்கம் செய்வதே இஸ்லாமிய வழிகாட்டல் ஆகும்.