பித்ஆக்கள் இப்படித்தான் உருவாகின்றன...!

-ARM. ரிஸ்வான் (ஷர்கி)

இமாம் தர்தூஷி (ரஹ்) அவர்கள் தனது நூலில் குறிப்பிடும் பின்வரும் நிகழ்வு ஆழ்ந்து நோக்கத்தக்கது :

'அபூமுஹம்மத் அல்மக்திஸீ அவர்கள் எனக்கு கூறினார் : றஜப், ஷஃபான் மாதங்களில் தொழப்படும் விஷேட தொழுகை பைதுல் மக்திஸில் முன்னர் ஒருபோதும் நடைமுறையில் இருந்ததில்லை. ஹி. 448ல்தான் இத்தகையதொரு தொழுகை புதிதாக உருவாக்கப்பட்டது. அந்த வருடம் நாபுலுஸ் பிரதேசத்தை சேர்ந்த இப்னு அபில் ஹம்ரா என்பவர் பைதுல் மக்திஸுக்கு வருகை தந்தார். அழகிய தொனியில் அல்குர்ஆனை ஓதக்கூடியவர் அவர். ஷஃபான் மாதம் பிறை 15ல் மஸ்ஜிதுல் அக்ஸாவில் அவர் நீண்ட நேரம் நின்று வணங்கத் தொடங்கினார். அப்போது அவரோடு இன்னொருவர் அத்தொழுகையில் இணைந்துகொண்டார். பின்னர் மூன்றாவதாக இன்னொருவர் அதில் இணைந்துகொண்டார். பின்னர் நான்காவதாக மற்றொருவர்... இறுதியில் அத்தொழுகையை தொழுதுமுடித்துவிட்டு பார்த்த போது ஒரு பெரும் கூட்டம் சேர்ந்திருந்தது.

அடுத்த வருடம் வந்தது. அதே ஷஃபான் பிறை 15ல் அவர் அத்தொழுகையை தொழ ஆரம்பித்தவுடன் பெரும் சனத் திரள் அவருக்கு பின்னால் நின்று தொழுதது. இப்படியே அந்தத் தொழுகை மஸ்ஜிதுல் அக்ஸாவில் மட்டுமன்றி முழு வீடுகளிலும் ஒரு ஸுன்னா போன்று தொழப்படும் நிலை உருவாகிவிட்டது.

' நீங்களும் அதை ஜமாஅத்தாக தொழுததை கண்டேனே?'  என்று எனக்கு இந்த நிகழ்வை கூறியவரிடம் கேட்டேன். அதற்கவர் 'ஆம், அதற்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோருகிறேன். ஹி. 440களுக்கு முன்னர் ஒருபோதும் பைதுல் மக்திஸில் அவ்வாறானதொரு தொழுகையை நாம் பார்த்ததுமில்லை, கேள்விப்பட்டதுமில்லை" என்று கூறினார். 

(நூல் : 'அல்ஹவாதிஸ் வல் பிதஃ' , பக் : 132-133)

ஷஃபான் மாத நடுப்பகுதியில் பள்ளிவாயல்களிலும் வீடுகளிலும் வியாபார நிலையங்களிலும் மூன்று யாஸீன் ஓதுவது உள்ளிட்ட அத்தனை பித்ஆக்களும் இப்படித்தான்  வரலாற்றின் ஏதோவொரு காலகட்டத்தில் இடைநடுவில் உருவாகி சமூகத்தில் பரவலாக்கம் அடைந்தது மட்டுமன்றி மார்க்கத்தில் அவை இன்றியமையாத வணக்கம் என்ற நிலையை அடைந்திருக்கின்றன என்பதற்கு ஹி. 05ம் நூற்றாண்டினது மேற்படி நிகழ்வு தெளிவான சான்று.
أحدث أقدم