பொழைக்கத் தெரியாதவன்..

 " வரதட்சணை வாங்கக் கூடாதுனு சொல்றான்! எல்லாரையும் மன்னிக்கனும்னு சொல்றான்! கொடுக்க மறுக்குற சொந்தக்காரனுக்கு குடுக்கனும்னு சொல்றான்! மதிக்காதவன மதிக்கனும்னு சொல்றான்! உலகத்துல எல்லாம் நிரத்தரமில்லாததுனு சொல்றான்! யார பத்தியும் தப்பா பேசக் கூடாதுனு சொல்றான்!...... இவன்லாம் 'எங்க பொழைக்கப்போறான்'. " 

ஈமானில்(இறைநம்பிக்கையில்) குறைவுள்ளவர்கள், ஈமானின் நல்ல நிலையில் உள்ளவர்களைப் பற்றி கூறும் வார்த்தைகள்தான் இவை. இவ்வார்த்தைகள், எல்லோரது காதுகளையும் ஏற்கனவே அடைந்ததாகத்தான் இருக்கும். அல்லது வாய்களால் மொழியப்பட்டிருக்கும்‌. 

ஆம்; அவர்கள் வாழத் தெரியாதவர்கள்தான். ஏனெனில்,  அவர்கள் பின்பற்ற முயற்சிப்பது முஹம்மத் ﷺ அவர்களை அல்லவா! பிறகு வேறெப்படி இருப்பார்கள். 

அந்த இறைத்தூதர் முஹம்மத் ﷺ அவர்களோ, தன்னைப் பின்பற்ற, தனக்காக உயிரை விட பல மக்கள் இருந்தும், மிகப்பெரும் பரப்பை ஆட்சி செய்தும், தனது முதுகில் தடம் பதியுமாறு ஒரு பேரிச்ச ஓலையில் படுத்திருந்தார்களே! கேட்டதற்கு, "இறைநம்பிக்கையாளனுக்கும் இவ்வுலகத்துக்கும் என்ன சம்பந்தம் இருந்துவிட போகிறது?" என்பதை உணர்த்தினார்களே!

அவர்களைப் பின்பற்ற நினைக்கும் இவர்கள், பிறரைப் பிழைக்க விடாது நடந்துகொண்டால்தானே ஆச்சரியம்? பிழைக்கத் தெரியாதவர்களாக வாழ்வதில் என்ன அதிசயம் இருந்திவிடப் போகிறது? 

தனக்கிருந்த ஒரே ஒரு ஆடையைத் தாண்டி மற்றொரு ஆடை அன்பளிப்பாகக் கிடைத்தபோது, அதனை ஏற்றுக்கொண்டு, வைத்திருந்த நேரம், தோழரொருவர் அந்த ஆடையைக் கேட்டதும் உடனே எடுத்துக் கொடுத்தார்களே! பிற தோழர்களெல்லாம்  "நபி ﷺ எது கேட்டாலும் கொடுக்க மறுக்க மாட்டார்களென்பதால் இதையும் வாங்கிக் கொண்டீரா?" என்று கடிந்துகொண்டார்களே! 

கேட்டீர்களா? எதைக் கேட்டாலும் கொடுக்க மறுக்க மாட்டார்களாம்! அவர்களைப் பின்பற்ற நினைக்கும் இவர்கள், பிழைக்கத் தெரியாதவர்களாய் இருப்பதில் என்ன ஆச்சரியம்? 

தனது சொந்த ஊரான மக்காவை வெற்றிகொண்டு அதிகாரம் அனைத்தையும் கொண்டிருக்கும்போது; தன்னைத் துரத்தி அடித்த, தன்னைக் கொல்லத் திட்டமிட்ட, தன்னைக் கொலை செய்ய முயற்சி செய்த, தனது பெரியதந்தையைக் கொன்று சிதைத்த, பல அப்பாவி மக்களைத் துன்புறுத்திய  மக்களெல்லோரும் "நமக்கு மரண தண்டனைதான்" என்று பயந்து நடுங்கிக் கொண்டிருந்தபோது, 
"இன்றையத்தினம் அனைவரையும் நான் மன்னித்துவிடுகிறேன்!" என்றார்களே! 

அவர்களைப் பின்பற்ற நினைக்கும் இவர்கள், சிறு சிறு தவறுகளையும் மன்னிக்கவில்லையென்றால்தானே அதிசயம்? 

"எனது தோழர்களைப் பற்றி வெறுக்கும் விடயங்கள் எதையும் என்னிடம் சொல்லாதீர்கள். நான் அவர்களை நல்ல எண்ணத்துடன் சந்திக்க விரும்புகிறேன்" என்றார்களே! 

அவைரைப் பின்பற்றும் இவர்கள், பிறரைப் பற்றி தவறாக பேசினால்தானே ஆச்சரியம்? 

தொழுதால் இடையில் ஒரு ஆள் படுக்குமளவிற்குக்கூட இடமில்லாத வீட்டில் வாழ்ந்தார்களே! 
 
அவர்களைப் பின்பற்றும் இவர்கள், வாழத் தெரிந்தவர்களாய் இருந்தால்தானே ஆச்சரியம்! 

அத்தூதரைப் பின்பற்ற நினைக்கும் ஒவ்வொருவரும் வாழத் தெரியாதவராகவும் பிழைக்கத் தெரியாதவராகவுதான் இருப்பார்கள். ஏனெனில், அவர்களது எண்ணம் "இவ்வுலகம் நிலையற்றது" என்பதின் மீது கட்டப்பட்டிருக்கும். 
அல்லாஹ், அவனுடைய தூதரின் மனைவிகளிடம் கூறியதையே இங்கும் கூறுகிறேன். "உங்களுக்கு இவ்வுலகமும் இதிலுள்ளவைகளும் விருப்பமானவைகளாய் இருக்குமானால், போய்விடுங்கள்." அந்த வாழத் தெரியாதவர்கள் உங்களுக்கு பயன்பட மாட்டார்கள். 

ஒருநாள் வரும். அன்று இவ்வுலகை பயன்படுத்தியவர்களும் அனுபவித்தவர்களும் பிரிக்கப்படுவார்கள். அப்போது தெரிந்துவிடும் வாழத் தெரிந்தவர்கள் யார் என்பது. 

வாழுங்கள்! வாழவேண்டிய முறைபடி வாழுங்கள்!

-முஹய்யுதீன்
أحدث أقدم