நோன்பின் சட்டங்கள்


-பண்ருட்டி அபூ ஷர்ஃபுத்தீன்



நோன்பிற்கு அரபி மொழியில் ஸவ்ம் என்று சொல்லப்படும். ஸவ்ம் என்ற அரபி வார்த்தைக்குத் தடுத்துக் கொள்ளுதல் (கட்டுப்படுதல்) என்று பொருள்.


நோன்பு கடமையான ஆண்டு:

ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு ஷஃபான் மாதத்தின் இறுதியில் நோன்பு நோற்க வேண்டும் என்ற சட்டம் பிறப்பிக்கப்பட்டது.


ரமலான் மாதத்தின் நோன்பை நோற்பது கடமை:

ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்;ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (2:183)

ரமலான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்; எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்; அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்;லை குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்) (2:185)

ஹதீஸ்:
1.இஸ்லாத்தின் கடமைகள் ஐந்து அல்லாஹ்வைத் தவிர வணங்கப்படுவதற்கு வேறு இறைவன் இல்லையென்றும், முஹம்மது(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் சாட்சி கூறுவது தொழுகையை நிறைவேற்றுவது ரமலானில் நோன்பு நோற்பது, ஜகாத்கொடுப்பது, ஹஜ் செய்வது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - உமர்(ரலி) : புகாரி, முஸ்லிம்.


பிறை பார்த்தல்:

1. பிறை பார்த்து நோன்பு வையுங்கள் பிறை பார்த்தே நோன்பை விடுங்கள் (வானம்) மேகமூட்டமாக இருந்தால் மாதத்தின் எண்ணிக்கையை முப்பதாக பூர்த்தி செய்து கொள்ளுங்கள். - அபூஹுரைரா(ரலி) :  புகாரி, முஸ்லிம்

2. ரமலானிற்காக ஷஃபான் பிறையைக் கணக்கிட்டு வாருங்கள் என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.  அபூஹுரைரா(ரலி):  திர்மிதி.


ரமலான் மாதத்தின் சிறப்புகள்:

1.ரமலான் மாதம் வந்து விட்டால் வானத்தின்(சுவனத்தின்) கதவுகள் திறக்கப்படும். நரகத்தின் கதவுகள் மூடப்படும், ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அபூஹுரைரா(ரலி) : புகாரி

2.அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டவராகவும், நன்மையை எதிர்பார்த்தவராகவும் ரமலான் மாதத்தில் யார் நோன்பு நோற்கின்றாரோ அவரின் முன் சென்ற பாவங்கள் மன்னிக்கப்படும். லைலத்துல் கத்ர் இரவில் அல்லாஹ்வை ஈமான் கொண்டவராகவும் நன்மையை எதிர் பார்த்தவராகவும் யார் நின்று வணங்குகின்றாரோ அவரின் முன் பாவங்கள் மன்னிக்கப்படும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - அபூஹுரைரா(ரலி) : புகாரி


நோன்பின் சிறப்புகள்:

நோன்பு நரகத்திலிருந்து பாதுகாக்கும் கேடயமாகும். ஆகவே நோன்பு நோற்றிருக்கும் நேரத்தில் உடலுறவு கொள்ளக்கூடாது. இன்னும் இஸ்லாத்துக்கு மாற்றமான செயல்களையும் செய்யக்கூடாது. யாராவது சண்டையிட்டால் அல்லது ஏசினால் நிச்சயமாக நான் நோன்பாளி, நான் நோன்பாளி என்று கூறட்டும். என் உயிர் எவனிடம் இருக்கின்றதோ அந்த இறைவன் மீது ஆணையாக நோன்பாளியின் வாயிலிருந்து வெளியாகும் வாடை அல்லாஹ்விடத்தில் கஸ்தூரியை விட மிகவும் நறுமணமுள்ளதாகும் (காரணம்) தன்னுடைய உணவையும், பானத்தையும் இச்சையையும் எனக்காகவே விட்டுவிடுகிறான். நோன்பு எனக்குரியது அதற்கு நானே கூலி கொடுகின்றேன். ஒரு நன்மைக்கு பத்து மடங்கு நன்மை கொடுக்கப்படும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - அபூஹுரைரா(ரலி) : புகாரி

சுவர்க்க வாசல்களில் ஒன்றுக்கு அர்ரய்யான் என்று சொல்லப்படும், மறுமை நாளில் அதில் நோன்பாளிகளைத் தவிர வேறு யாரும் நுழையமாட்டார்கள். நோன்பாளிகள் எங்கே என்று அழைக்கப்படும் அப்போது நோன்பாளிகள் எழுந்து அவ்வாசல் வழியாக நுழைவார்கள். அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல் மூடப்படும். அவர்களைத் தவிர வேறு யாரும் அவ்வாசல் வழியாக நுழையமாட்டார்கள், என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - ஸஹ்ல்(ரலி) : புகாரி

ஒவ்வொரு நன்மையான காரியத்துக்கும் பத்து முதல் எழுநூறு மடங்கு வரை பரிசு வழங்கப்படுகிறது. ஆனால் நோன்பு எனக்கே உரியது. எனவே அதற்கு நானே பரிசளிப்பேன் என்று அல்லாஹ் கூறுகிறான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - அபூஹுரைரா(ரலி) : புகாரி

நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று நோன்பு துறக்கும் போது மற்றொன்று தன் இறைவனைச் சந்திக்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சியாகும், என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - அபூஹுரைரா(ரலி) :  புகாரி

யார் ரமலான் மாதத்தில் நம்பிக்கையுடனும் மறுமைப் பயனை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ அவர் அதற்கு முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூஹுரைரா(ரலி) : புகாரி


நோன்பின் நோக்கம்:

பசியின் கொடுமையைப் பணம் படைத்தவர்கள் உணர வேண்டுமென்பதற்காகத்தான் நோன்பு கடமையாக்கப்பட்டது என்பர் சிலர். பசியை உணர்வது தான் காரணம் என்று அல்லாஹ்வும் கூறவில்லை, அவனது தூதரும் கூறவில்லை. இது இவர்களின் கற்பனையே தவிர வேறு இல்லை.

பசியை உணர்வது தான் காரணம் என்றால் செல்வந்தர்களுக்கு மட்டும் நோன்பு கடமையாக்கப்பட்டிருக்க வேண்டும். அன்றாடம் பசியிலேயே உழல்பவனுக்கு நோன்பு கடமையில்லை என்று அவறிவிக்கப்பட்டிருக்க வேண்டும்.

மேலும் பணக்காரர்களேயானாலும் நோன்பு நோற்காமலே பசியின் கொடுமையை உணர்ந்து தான் இருக்கின்றனர். மனிதர்கள் மட்டுமின்றி எல்லா உயிரினங்களும் பசியை உணர்ந்திருக்கின்றன எனவே இந்தக் காரணம் முற்றிலும் தவறாகும்.

உடல் ஆரோக்கியம் பேணப்படுகிறது என்பது தான் நோன்பின் நோக்கம் என்பர் வேறு சிலர் அதுவும் தவறு.

நோன்பு கடமையாக்கப்பட்டதற்குரிய காரணத்தை அல்லாஹ்வே மிகத் தெளிவாகக் கூறி விட்டான். அந்தக் காரணம் தவிர வேறு எந்தக் காரணத்திற்காகவும் நோன்பு கடமையாக்கப்படவில்லை. மேலே நாம் எடுத்துக் காட்டியுள்ள வசனத்தில் நீங்கள் இறையச்சமுடையோராவதற்காக என்று இறைவன் குறிப்பிடுகிறான்.

நோன்பு நோற்பதால் இறையச்சம் ஏற்படும். ஏற்படவேண்டும் என்பது தான் அல்லாஹ் கூறுகின்ற காரணம்.

நமக்குச் சொந்தமான உணவை பகல் நேரத்தில் அல்லாஹ் கட்டளையிட்டதால் தவிர்த்து கொள்கிறோம். நமது வீட்டில் நாம் தனியாக இருக்கும் போது நமக்குப் பசி எற்படுகிறது. வீட்டில் உணவு இருக்கிறது. நாம் சாப்பிட்டால் அது யாருக்கும் தெரியப்போவது இல்லை. ஆனாலும் நாம் சாப்பிடுவதில்லை. நாம் சாப்பிடக்கூடாது என்று அல்லாஹ் கட்டளையிட்டுள்ளதால் நாம் சாப்பிடுவதில்லை. யாரும் பார்க்கா விட்டாலும் நாம் சாப்பிடுவது அல்லாஹ்வுக்குத் தெரியும். அவன் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற எண்ணம் நமது உள்ளத்தில் ஆழமாகப் பதிந்திருப்பதாலேயே நாம் சாப்பிடுவதில்லை. யாரும் பார்க்கவிட்டாலும் இறைவன் பார்க்கிறான் என்பதற்காக நமக்குச் சொந்தமான உணவை ஓதுக்கும் நாம் ரமலான் அல்லாத மற்ற மாதங்களிலும் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று நம்ப வேண்டும்.

ஹராமான காரியங்களில் ஈடுபடும் பொழுது இறைவனுக்குப் பயந்து ஹலாலானதையே நாம் ஒதுக்கி வந்ததை நினைத்துப் பார்க்க வேண்டும்.

இந்த ஆன்மீகப் பயிற்சிதான் நோன்பு கடமையாக்கப்பட்டதற்கான ஒரே காரணம். இதை நபி(ஸல்) அவர்களும் விளக்கியுள்ளார்கள்.

1.ஹதீஸ்: யார் பொய்யான பேச்சுக்களையும், பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு; விடவில்லையோ அவர் பசித்திருப்பதோ, தாகித்திருப்பதோ அல்லாஹ்வுக்குத் தேவையில்லை. என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - அபூஹுரைரா(ரலி) : புகாரி, அஹமத், அபூதாவூத், திர்மிதி, இப்னுமாஜா

2.ஹதீஸ்: உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருக்கும் போது யாரேனும் முட்டாள் தனமாக நடந்து கொண்டால் நான் நோன்பாளி என்று கூறிவிடுங்கள் நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். - அபூஹுரைரா(ரலி) : புகாரி, திர்மிதி

புகாரியின் மற்றும் சில அறிவிப்புகளில் யாரேனும் சண்டைக்கு வந்தால் யாரேனும் திட்டினால் என்று கூறப்பட்டுள்ளது.


நோன்பிலிருந்து சலுகையளிக்கப்பட்டவர்கள்:

நிரந்தர சலுகை அளிக்கப்பட்டவர்கள்:

தள்ளாத வயதினர் மற்றும் நோயாளிகள்:

(இவ்வாறு விதிக்கப் பெற்ற நோன்பு) சில குறிப்பட்ட நாட்களில் (கடமையாகும்) ஆனால் (அந்நாட்களில்) எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால் (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்க வேண்டும்; எனினும் (கடுமையான நோய், முதுமை போன்ற காரணங்களினால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்குப் பரிகாரமாக - ஃபித்யாவாக - ஒரு மிஸ்கீனுக்கு (ஏழைக்கு) உணவளிக்க வேண்டும்;. எனினும் எவரேனும் தாமாகவே அதிகமாகக் கொடுக்கிறாரோ அது அவருக்கு நல்லது - ஆயினும் நீங்கள் (நோன்பின் பலனை அறீவீர்களானால்), நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும் (என்பதை உணர்வீர்கள்). (2:184)

தற்காலிக சலுகை அளிக்கப்பட்டவர்கள்:

பயணிகள்:

(இவ்வாறு விதிக்கப் பெற்ற நோன்பு) சில குறிப்பட்ட நாட்களில் (கடமையாகும்) ஆனால் (அந்நாட்களில்) எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால் (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்க வேண்டும்; எனினும்(கடுமையான நோய், முதுமை போன்ற காரணங்களினால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்குப் பரிகாரமாக - ஃபித்யாவாக - ஒரு மிஸ்கீனுக்கு (ஏழைக்கு) உணவளிக்க வேண்டும்;. எனினும் எவரேனும் தாமாகவே அதிகமாகக் கொடுக்கிறாரோ அது அவருக்கு நல்லது - ஆயினும் நீங்கள் (நோன்பின் பலனை அறீவீர்களானால்), நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும் (என்பதை உணர்வீர்கள்). (2:184)

ஹதீஸ்:
1. நான் பயணத்தில் நோன்பு நோற்கலாமா? என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் ஹம்ஸா பின் அம்ர்(ரலி) கேட்டார், அதற்கு நபி(ஸல்) அவர்கள் நீ விரும்பினால் நோன்பு நோற்றுக் கொள்! விரும்பினால் நோன்பை விட்டுவிடு என விடையளித்தார்கள். - ஆயிஷா(ரலி) : புகாரி

2. பயணத்தின் போதும் நோன்பு நோற்க எனக்குச் சக்தி உள்ளது. எனவே (நோன்பு நோற்பது) குற்றமாகுமா? என் நான் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் அது அல்லாஹ்வின் சலுகையாகும். யார் அச்சலுகையைப் பயண்படுத்திக் கொள்கிறாரோ அது நல்லதே, யார் நோன்பு நோற்க விரும்புகிறாரோ அவர் மீது குற்றமில்லை, என்றார்கள். - ஹம்ஸா பின் அம்ரு (ரலி) : முஸ்லிம்

3. நபி(ஸல்) அவர்கள் மக்கா வெற்றி கொள்ளப்பட்ட நிகழ்ச்சியின் போது நோன்ப நோற்றவர்களாக போருக்கு ஆயத்தமானார்கள். கதீத் எனும் நீரோடையை அடைந்த போது நோன்பை விட்டு விட்டார்கள். பின்னர் அம்மாதம் (ரமலான்) முடியும் வரை நோன்பை விட்டு விட்டார்கள். - இப்னு அப்பாஸ்(ரலி) : புகாரி, முஸ்லிம், அஹ்மத்

கர்ப்பிணிகளும், பாலூட்டும் அன்னையரும்
கர்ப்பிணிகளுக்கும் பாலூட்டும் அன்னையருக்கும் நோன்பிலிருந்து நபி(ஸல்) அவர்கள் சலுகையளித்தார்கள்  அனஸ்பின் மலிக்(ரலி) : திர்மிதீ, அபூதாவூத், நஸயீ, அஹ்மத், இப்னுமாஜா

தடுக்கப்பட்டவர்கள்:

மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள்:

1.நாங்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுடன் இருந்த காலத்தில் மாதவிடாய் ஏற்பட்டு தூய்மையடைவோம். அப்போது விடுபட்டிருந்த நோன்பைக் களாச் செய்யுமாறு நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிடுவார்கள். விடுபட்ட தொழுகைகளைச் களாச் செய்யுமாறு கட்டளையிட மாட்டார்கள். - ஆயிஷா(ரலி) : புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ, இப்னுமாஜா

2.ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் அவள் தொழுவதில்லை நோன்பு நோற்பதில்லை அல்லவா? அது தான் மார்க்கத்தில் அவளுக்(பெண்ணுக்)குள்ள குறைபாடாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - அபூ ஸயீத்(ரலி) : புகாரி

சலுகை பற்றிய விளக்கம்:

நோன்பு நோற்க சக்தி பெற்றவர்கள் ஒரு ஏழைக்கு உணவளிப்பது அவசியம் என்ற (2:184) வசனம் பற்றி இப்னு அப்பாஸ்(ரலி) கூறும் போது இது முழுமையாக மாற்றப்படவில்லை, நோன்பு நோற்கச் சக்தியற்ற கிழவர்கள் மற்றும் கிழவிகள் ஒரு நாள் நோன்புக்கு பதிலாக ஒரு ஏழைக்கு உணவளிக்கவேண்டும் என்று விளக்கம் அளித்துள்ளனர்.

இப்னு அப்பாஸ்(ரலி) குறிப்பிடும் வசனம் பற்றி முதலில் நாம் அறிந்து கொண்டால்தான் முழு விளக்கம் பெறமுடியும்.

நோன்பு கடமையாக்கப்பட்ட ஆரம்ப காலத்தில் ஒரு சலுகையுடன் தான் கடமையாக்கப் பட்டிருந்தது. நோன்பு நோற்கச் சக்தியுள்ளவர்கள் விரும்பினால் நோன்பு நோற்கலாம். விரும்பினால் நோன்பை விட்டுவிட்டு ஒரு ஏழைக்கு உணவளிக்கலாம் என்பதுதான் அந்த சலுகை.

நல்ல திடகாத்திரமாக இருந்தவர்கள்கூட நோன்புக்கு பகரமாக ஏழைக்கு உணவளித்து வந்தனர். பின்னர், ''யார் ரமலானை அடைந்து விட்டாரோ அவர் அம்மாதத்தில் நோன்பு நோற்கட்டும்"" என்ற வசனம் அருளப்பட்டவுடன் இந்தச் சலுகை நீக்கப்பட்டுவிட்டது. சக்தியுள்ளவர்கள் கட்டாயம் நோன்பு தான் நோற்க வேண்டும் என்ற சட்டம் இதன மூலம் நடைமுறைக்கு வந்தது.

இதைத்தான் இப்னு அப்பாஸ்(ரலி) குறிப்பிடுகிறார்கள். ஏழைக்கு உணவளிக்க வேண்டும் என்ற சட்டம் சக்தியுள்ளவர்களைப் பொருத்தவரை மாற்றப்பட்டாலும் தள்ளாத வயதினரைப் பொருத்தவரை மாற்றப்படவில்லை என்று இப்னு அப்பாஸ்(ரலி) கூறுகிறார்கள்!.


நோன்பின் நேரம்(கால அளவு):

சுப்ஹுநேரம் வந்தது முதல் சூரியன் மறையும் வரை நோன்பின் நேரமாகும். அதாவது சுப்ஹுநேரம் துவங்கியது முதல் சூரியன் மறையும் வரை உண்ணாமல், பருகாமல், உடலுறவுகொள்ளாமல் இருந்து நோன்பை முழுமைப்படுத்த வேண்டும். பஜ்ரு எனும் வெள்ளை நூல் (இரவு எனும்) கறுப்பு நூலிருந்து தெளிவாகும் வரை உண்ணுங்கள்! பருகுங்கள் (2:187)

இவ்வசனத்தில் பஜ்ரு வரை உண்ணலாம், பருகலாம் என்று இறைவன் அனுமதிக்கிறான். பஜ்ரிலிருந்து தான் நோன்பின் நேரம் ஆரம்பமாகிறது என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம். பின்னர் இரவு நோன்பை முழுமையாக்குங்கள். (2:187)

இரவு என்பது சூரியன் மறைந்தவுடன் ஆரம்பமாகிறது. எனவே சூரியன் மறைவது வரை உண்ணாமல் பருகாமல், இருக்க வேண்டியது அவசியம்.

ஹதிஸ்: இத்திசையிலிருந்து இரவு நம்மை நோக்கிவந்து அத்திசையில் பகல் பின்னோக்கிச் சென்று சூரியனும் மறைந்து விடுமானால் நோன்பாளி நோன்பு துறக்க வேண்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். - இப்னு அபீ அவ்பா(ரலி) : முஸ்லிம்

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தோம். சூரியன்; மறைந்தவுடன் ஒரு மனிதரிடம் ''போய் நமக்காக (நோன்பு துறக்க) மாவுக்கரைசலைக் கொண்டு வருவீராக"" என்றார்கள் அதற்கு அம்மனிதர் ''இன்னும் கொஞ்சம் மாலையாகட்டுமே"" என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ''போய் மாவைக் கரைத்து எடுத்துவருவீராக"" என்றார்கள் இன்னும் பகல் நேரம் மிச்சமுள்ளதே என்று அவர் கூறிக் கொண்டே சென்று மாவைக் கரைத்து எடுத்துவந்தார். அதை நபி(ஸல்) அவர்கள் குடித்தார்கள். - இப்னு அபீ அவ்பா(ரலி): புகாரி, முஸ்லிம்


ஸஹர்(அதிகாலை) உணவு:

நீங்கள் ஸஹர் நேரத்தில் உண்ணுங்கள் ஏனெனில் ஸஹர் நேர உணவில் பரகத்(புலனுக்குத் தெரியாத மறைமுகமான பேரருள்) உள்ளது, என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். - அனஸ்பின் மாலிக்(ரலி) :  புகாரி, முஸ்லிம், நஸயீ, திர்மிதி

நமது நோன்புக்கும் வேதம் கொடுக்கப்பட்ட (யூத, கிருஸ்த்த)வர்களின் நோன்புக்கும் வித்தியாசம் ஸஹர் நேரத்தில் உண்பதாகும் எனவும் நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். - அம்ரு பின் அல்ஆஸ்(ரலி) : முஸ்லிம்

3.ஸஹர் உணவைத் தாமதப்படுத்தி நோன்பு துறப்பதை விரைவு படுத்தும் வரை மக்கள் நன்மையில் நீடித்துள்ளார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். - அபூதர்(ரலி) : அஹமத்

4.நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஸஹர்செய்துவிட்டு (சுபுஹ்) தொழுகைக்கு ஆயுத்தமாவோம் என்று ஸைத் பின் ஸாபித்(ரலி) கூறினார்கள் (ஸஹருக்கும் சுபுஹுக்கும் இடையே) எவ்வளவு நேரம் இருக்கும் என்று அவர்களிடம் நான் கேட்டேன், அதற்கவர்கள் ஐம்பது வசனங்கள் ஓதும் நேரம் என விடையளித்தார்கள். - அனஸ்(ரலி) : புகாரி, திர்மிதி


நோன்பாளி மனதில் எண்ணிக்கொள்வது:

அமல்களுக்கு கூலி கொடுக்கப்படுவது எண்ணங்களைப் பொறுத்துத்தான்; என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - உமர்(ரலி) : புகாரி

பஜ்ருக்கு முன்னால் யார் நிய்யத்து வைக்க(எண்ண)வில்லையோ அவருக்கு நோன்பு கிடையாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - திர்மிதி


நோன்பு திறப்பது:

நோன்பு திறப்பதை (தாமதிக்காது) விரைவுபடுத்தும் காலம் வரைக்கும் என் உம்மத்து நலவிலேயே இருப்பார்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - புகாரி

நானும் மஸ்ரூக் என்னும் நபித்தோழரும் ஆயிஷா(ரலி) அவர்களிடத்தில் சென்று முஃமின்களின் தாயே! நபி(ஸல்) அவர்களின் இருதோழர்கள் நன்மையைத் தேடும் விஷயத்தில் குறைவு செய்வதில்லை. ஒருவர் நோன்பு துறப்பதை அவசரப்படுத்தி நேரத்தோடு தொழுதும் விடுகின்றார், மற்றவர் நோன்பு திறப்பதை பிற்படுத்தி தொழுகையையும் பிற்படுத்துகின்றார், என்றார். யார் நோன்பு திறப்பதையும் தொழுகையையும் அவசரப்படத்துகின்றார்? என ஆயிஷா(ரலி) அவர்கள் கேட்டார்கள். அப்துல்லா இப்னு மஸ்ஊத்(ரலி) என்று நாங்கள் கூறினோம். அப்படித்தான் நபி(ஸல்) அவர்கள் செய்தார்கள் என ஆயிஷா(ரலி) அவர்கள் கூறினார்கள். - முஸ்லிம்

இன்னும் ஒரு அறிவிப்பில் மற்ற நபித்தோழர் அபூமூஸா அல் அஷ்அரி(ரலி) அவர்கள் என்று அறிவிக்கப்பட்டிரக்கிறது. - திர்மிதி

நோன்பு திறப்பதில் காலதாமதம் செய்யாதவர்கள் தான் எனக்கு விருப்பமான அடியார்கள் என்று அல்லாஹ் கூறுவதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - அபூஹுரைரா(ரலி) : திர்மிதி


நோன்பு திறக்க ஏற்ற உணவு:

1: யாருக்கு பேரீச்சம் பழம் கிடைக்கிறதோ அவர் அதன் மூலம் நோன்பு துறக்கட்டும். கிடைக்காதவர்கள் தண்ணீர் மூலம் நோன்பு திறக்கட்டும். ஏனெனில் அது தூய்மையானதாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.  - அனஸ் பின் மாலிக்(ரலி) : திர்மிதி, நஸயீ

2:நபி(ஸல்) அவர்கள் தொழுகைக்கு செல்வதற்கு முன் கனிந்த ஈத்தம் பழங்களைக் கொண்டு நோன்பு துறப்பார்கள். அது இல்லையென்றால் சாதாரண சில ஈத்தம் பழங்களைக் கொண்டு நோன்பு துறப்பார்கள், அதுவும் இல்லை யென்றால் சில மிடர் தண்ணீர் குடித்துக் கொள்வார்கள். - திர்மிதி

உங்களில் ஒருவர் நோன்பு துறந்தால் ஈத்தம் பழத்தைக் கொண்டு நோன்பு துறக்கட்டும், அது கிடைக்கவில்லை யென்றால் தண்ணீரைக் கொண்டு நோன்பு துறக்கட்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - திர்மிதி, அபூதாவூத்

நோன்பு துறந்து வயிறு குளிர்ந்த பின் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் விதமாக கேட்கும் ஒரு துஆவை நபி(ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள். நோன்பு துறந்து முடிந்ததும் அதை ஓதிக்கொள்ள வேண்டும்.

துஆ ''தஹபள்ளமவு வப்தல்லதில் உரூகு, வஸபதல் அஜ்ரு இன்ஷா அல்லாஹ்"" என்று நபி(ஸல்) அவர்கள் ஓதுவார்கள்.இப்னு உமர்(ரலி) :  அபூதாவூத்


நோன்பாளியின் பிரார்த்தனை:

நோன்பாளி நோன்பு துறக்கும் போது கேட்கும் பிரார்த்தனை தட்டப்பட மாட்டாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - இப்னுமாஜா

நோன்பாளி நோன்பை துறக்கும் வரைக்கும், நீதியான அரசன், அநியாயம் இழைக்கப்பட்டவன், இம்மூவரின் பிரார்த்தனைகள் தட்டப்படுவதில்லை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - திர்மிதி


நோன்பு திறக்க வைப்(உணவளிப்)பதின் சிறப்புகள்:

யார் ஒருவரை நோன்பு திறக்க வைக்கின்றாரோ அவருக்கு, நோன்பு நோற்றவர்க்கு கிடைக்கும் நன்மையைப் போன்று (ஒரு பங்கு) கிடைக்கும், ஆனால் நோன்பு நோற்றவரின் நன்மையில் எதுவும் குறையாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். திர்மிதி


நோன்பை முறிப்பவை:

சுபுஹ் முதல் மஃரிப்வரை உண்ணாமல் இருப்பது பருகாமல் இருப்பது, இல்லறத்தில் ஈடுபடாமல் இருப்பது ஆகிய கட்டுப்பாடுதான் நோன்பு எனப்படுகிறது. நோன்பாளிகளுக்கு இம்மூன்றைத் தவிர வேறு எதையும் செய்யக் கூடாது என்று தடை இல்லை. இம்மூன்று காரியங்களில் எதைச் செய்தாலும் நோன்பு முறிந்து விடும்.

சாப்பிடுதல், குடித்தல், போன்றவற்றால் (அவைகள் உடலுக்கு பயன்தராத புகைபிடித்தல் போன்றவையாக இருந்தாலும் சரியோ) நோன்பு முறிந்துவிடும்.

முத்தமிடுதல், அணைத்தல், சுய இன்பம் போன்றவற்றால் இந்திரியம் வெளியானால் நோன்பு முறிந்துவிடும், தூக்கத்தில் தானாகவே இந்திரியம் வெளியானால் நோன்பு முறியாது.

வேண்டுமென்றே வாந்தி எடுத்தால் நோன்பு முறிந்து விடும். தானாகவே வாந்தி வந்தால் நோன்பு முறியாது.

உணவைப் போன்று சக்தியூட்டக்கூடிய வற்றை (மருந்து, குளுக்கோஸ், போன்றவைகளை) ஊசி போன்றவற்றின் மூலம் உடலுக்கு செலுத்தினால் நோன்பு முறிந்து விடும்.

மாதவிடாய் மற்றும் பிரசவ இரத்தம் வெளிப்பட்டால் நோன்பு முறிந்து விடும்.


அனுமதிக்கப் பட்டவைகள்:

மறதியாகச் செய்தல்:

ஒருவர் நோன்பு நோற்றிருக்கும் போது மறதியாக சாப்பிட்டாலோ, பருகினாலோ அவர் தனது நோன்பை முழுமையாக்கட்டும்! ஏனெனில், அவருக்கு அல்லாஹ்வே உண்ணவும் பருகவும் அளித்துள்ளான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - அபூஹுரைரா(ரலி) : புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், திர்மிதீ, இப்னுமாஜா

மனைவியுடன் நோன்பாளி நெருக்கமாக இருப்பது:

1.நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது தம் மனைவியரை முத்தமிடுவார்கள். கட்டியணைப்பார்கள் அவர்கள் தம் உணர்வுகளை அதிகம் கட்டுப்படுத்திக் கொள்பவர்களாக இருந்தார்கள்! - இப்னுமாஜா : ஆயிஷா(ரலி) : புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், திர்மிதீ, நஸயீ

2. நோன்பாளி (தம் மனைவியை) கட்டியணைப்பது பற்றி ஒரு மனிதர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் கேட்டார் அவருக்கு அனுமதி அளித்தார்கள். மற்றொருவர் வந்து கேட்டபோது அவருக்கு அனுமதி மறுத்தார்கள். அனுமதி வழங்கப்பட்டவர் முதியவராகவும், அனுமதி மறுக்கப்பட்டவர் இளைஞராகவும் இருந்தனர். - அபுஹுரைரா(ரலி) : ஆபுதாவுத்

குளிப்புக் கடமையான நிலையில் நோன்பு நோற்பது:

ரமலான் மாதத்தில் நபி(ஸல்) அவர்கள் குளிப்புக் கடமையானவர்களாக சுப்ஹு நேரத்தை அடைவார்கள் (அந்த நிலையில்) நோன்பும் நோற்பார்கள். - உம்மு ஸலாமா(ரலி) , ஆயிஷா(ரலி) : புகாரி, முஸ்லிம், அஹ்மத்

நோன்பு வைத்துக் கொண்டு குளிக்கலாம்:

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது வெப்பத்தின் காரணமாக தமது தலையில் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்ததை நான் பார்த்துள்ளேன் என்று நபித்தோழர் ஒருவர் அறிவிக்கிறார்.  - அஹ்மத், அபூதாவூத், நஸயீ

நோன்பு நோற்றவர் பல் துலக்குதல்:

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது எண்ணிச் சொல்லமுடியாத தடவை பல் துலக்கியதை நான் பார்த்துள்ளேன். - ஆமிர் பின் ரபீஆ(ரலி) : அபூதாவூத், திர்மிதீ

உணவுகளை ருசி பார்ப்பது:

உணவு சமைக்கும் போது போதுமான அளவு உப்பு மற்றும் காரம் உள்ளதா? என்பதை அறிய நாக்கில் வைத்துப் பார்ப்பதில் தவறேதும் இல்லை. உள்ளே விழுங்கி விடாமல் ருசி பார்க்கலாம். இப்னு உமர்(ரலி) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது துணியைத் தண்ணீரில் நனைத்துத் தன் மீது போட்டுக் கொள்வார்கள்.

சமைக்கப்பட்ட உணவை ருசி பார்ப்பது தவறில்லை என்று இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்கள்.

வாய் கொப்பளிப்பதும், உடலைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்வதும் தவறில்லை என்று ஹஸன் பஸரி (ரலி) கூறினார்.

உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருந்தால் காலையில் தலைக்கு எண்ணெய் தேய்த்து தலை வாரிக் கொண்டு வெளியே வரட்டும் என்று இப்னு மஸ்வூத்(ரலி) கூறுகிறார்கள்.

என்னிடம் கல்லால் ஆன தண்ணீர்த் தொட்டி உள்ளது. நோன்பு வைத்துக் கொண்டு அதில் மூழ்கிக் குளிப்பேன் என்று அனஸ்(ரலி) கூறியுள்ளார்கள்!

பச்சையான குச்சியால் பல்துலக்குவது குற்றமில்லை என்று இப்னு சீரீன் கூறினார், அதற்கு ருசி இருக்கிறதே என்று ஒருவர் கேட்டார். அதற்கவர்கள், தண்ணீருக்கும் தான் ருசி உள்ளது ஏன் வாய் கொப்பளிக்கிறாய்? என்று திருப்பிக் கேட்டார்கள். - புகாரி

இந்த காரியங்கள் நோன்புக்கு எதிரானது என்ற கருத்து பிற்காலத்தில் உருவானது என்பதற்கு புகாரியில் இடம் பெற்ற இந்தச் செய்திகள் ஆதாரமாகவுள்ளன.

நோன்பின் போது காயங்களுக்கு மருந்து போடுதல், பல்பிடுங்குதல், கண், காதுகளுக்கு சொட்டு மருந்திடுதல் போன்ற வற்றிற்கு அனுமதியுள்ளது.

நோன்பு நாட்களின் பகல் பொழுதில் பல்துலக்குவது தவறில்லை. மாறாக அது நோன்பல்லாத நாட்களில் சுன்னதாக இருப்பது போன்றே நோன்பு நாட்களிலும் சுன்னதாகும்.

குளிப்பு கடமையான நிலையில் ஸஹர் செய்வதில் தவறில்லை. சுப்ஹுதொழுகைக்காக குளித்துக் கொண்டாலே போதுமானது.

கடும் வெயிலின் காரணமாக குளிர்ந்த நீரை உடலில் ஊற்றிக் கொள்வதோ, பகல் மற்றும் மாலை பொழுதில் குளித்துக் கொள்வதோ தவறில்லை.

நோன்பு திறக்க எதுவும் கிடைக்காவிட்டால் நோன்பு திறக்கும் நேரத்தில், நோன்பு திறப்பதாக எண்ணிக் கொள்ள வேண்டும். பிறகு வாயப்;புக் கிடைக்கும் போது சாப்பிட்டுக் கொண்டால் போதுமானது.

வாய் கொப்பளிக்கும் போது தன்னை அறியாது தண்ணீர் தொண்டையில் இறங்கிவிட்டால் நோன்பு முறியாது. ஆனால் அடித்தொண்டை வரை தண்ணீரை செலுத்தாமல் இருக்க வேண்டும்.

நேரம் தெரியாது சூரியன் மறைந்து விட்டது என்று நினைத்து, சூரியன் மறைவதற்கு முன்னரோ, அல்லது ஃபஜ்ர் நேரம் வரவில்லை என்று நினைத்து ஃபஜ்ர் நேரம் நேரம் வந்ததற்கு பிறகு சாப்பிட்டுவிட்டாலோ நோன்பு முறியாது. எனினும் சரியான நேரம் தெரிந்து விட்டால் உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும்.

காயங்கள் சிறு(கிளி) மூக்கு உடைதல், பல் பிடுங்குதல் போன்றவற்றால் இரத்தம் வெளியானால் நோன்பு முறியாது. மறந்து அல்லது தெரியாமல் சாப்பிட்டோ, குடித்தோவிட்டால் நோன்பு முறியாது, ஆனால் நோன்பின் நினைவு வந்தவுடனே நிறுத்தி கொள்ளவேண்டும்.


தவிர்க்கவேண்டியவை:

1: யார் கெட்ட பேச்சுக்களையும், செயல்களையும் விட்டுவிடவில்லையோ அவர் உணவை விடுவதிலும், குடிப்பை விடுவதிலும் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையும் இல்லை என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

2: எத்தனையோ நோன்பளிகள் அவர்கள் பசித்திருந்ததைத் தவிர வேறு எதையும் அவர்களின் நோன்பினால் பெற்றுக் கொள்வதில்லை. இன்னும் இரவில் நின்று வணங்கும் எத்தனையோ பேர் இரவில் கண் விழிப்பதைத் தவிர வேறு எதையும் பெற்றுக் கொள்வதில்லை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்! (நஸயீ, இப்னு மாஜா)

3: உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருந்தால் தன் மனைவியோடு உடல் உறவுக்கொள்ளக் கூடாது, இன்னும் கெட்ட வார்த்தைகள் பேசவும் கூடாது யாராவது அவரை ஏசினால் அல்லது அடித்தால் அவர் நோன்பாளி என்று கூறிக் கொள்ளட்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - புகாரி, முஸ்லிம்


நோன்பை(வேண்டுமென்றே)முறிப்பதற்குரிய பரிகாரம்:

ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்தார். அல்லாஹ்வின் தூதரே! நான் அழிந்து விட்டேன் என்றார். என்ன அழிந்துவிட்டாய்? என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். ரமலானில் என் மனைவியுடன் உடலுறவு கொண்டுவிட்டேன் என்று அவர் கூறினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ''ஒரு அடிமையை விடுதலை செய்ய உம்மால் இயலுமா? என்க் கேட்டார்கள் அவர் இயலாது என்றார்;. அப்படியானால் தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு நோற்க இயலுமா? என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர் இயலாது என்றார். அப்பபடியானால் அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க உம்மால் இயலுமா? என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள் அதற்கும் அவர் இயலாது என்றார். பின்னர் அந்கேயே (பள்ளியில்) அமர்ந்து விட்டார்.சற்று நேரத்தில் பேரிச்சம் பழம் நிரம்பிய கூடை ஒன்று நபி(ஸல்)அவர்களிடம் கொண்டு வரப்பட்டது. அதை நபி(ஸல்) அவர்கள் அவரிடம் வழங்கி இதைத் தர்மம் செய்வீராக என்றார்கள். அதற்கவர் இந்த மதினாவுக்குள் எங்களைவிட ஏழை யாரும் இல்லையே என்றார் அதைக்கேட்ட நபி(ஸல்) அவர்கள் தமது கடைவாய்ப் பற்கள் தெரிய சிரித்தார்கள். இதை உமது குடும்பத்தாருக்கே வழங்குவீராக எனவும் கூறினார்கள். - அபுஹுரைரா(ரலி) : புகாரி, முஸ்லிம், நஸயி, திர்மிதி, அபுதாவுத்


ஒழுக்கங்கள்:

ஃபஜ்ருக்கு சற்று முன்பு ஸஹர் உணவு உண்பதும் சூரியன் மறைந்த உடனே தாமதப்படுத்தாது நோன்பு திறப்பதும் சுன்னத்தாகும்.

பேரீத்தம் பழத்தைக் கொண்டு நோன்பு திறப்பது, அது கிடைக்கவில்லையெனில் தண்ணீரைக் கொண்டு நோன்பு திறப்பது சுன்னத்தாகும்.

ஸஹர் நேரத்தில் தாமதாமாக எழுந்து ஃபஜ்ருடைய நேரம் வந்து விட்டது என தெரிந்தும் விடி ஸஹர் என்ற பெயரில் எதையேனும் உண்பது தவறாகும். ஃபஜ்ர் நேரம் வந்துவிட்டால் எதையும் உண்ணக்கூடாது. இது போன்ற நிலைகளில் ஸஹர் செய்யாமலேயே நோன்பு நோற்க வேண்டும்.

ஹலாலான உணவையே உட்கொள்ள வேண்டும். இதை எல்லாக் காலங்களிலும் கடைப்பிடிக்க வேண்டும்.

நோன்பாளி அதிகமான வணக்க வழிபாடுகளில் ஈடுபடவேண்டும். அல்லாஹ் தடுத்தவைகளை விட்டும் முழுமையாகத் தவிர்ந்து கொள்ளவேண்டும் பொய், புறம், கோள் சொல்லுதல். ஏமாற்றுதல், ஹராமான வழியில் பொருளீட்டல் போன்ற தவறான அனைத்து சொல் செயல்களை விட்டும் தவிர்ந்திருத்தல் கட்டாய கடமையாகும்.

கடைசிப் பத்து நாட்களில் அதிலும் குறிப்பாக ஓற்றைப்படை இரவுகள் அனைத்திலும் இரவு முழுவதும் வணக்க வழிபாட்டில் ஈடுபட்டு லைலத்துல் கத்ர் இரவைத் தேடிக் கொள்ள வேண்டும்.
பெருநாள் தொழுகைக்கு முன்பு (ஜகாத்துல் ஃபித்ர்) எனும் பெருநாள் தருமத்தை முறையாகக் கொடுக்க வேண்டும்.


மற்றவர்களுக்காக நோன்பு நோற்பது:

1. நோன்பு களாவாகவுள்ள நிலையில் ஒருவர் மரணித்து விட்டால் அவருக்காக அவரது பொருப்பாளர் நோன்பு நோற்க வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - ஆயிஷா(ரலி) : புகாரி

2. ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்தார். அல்லாஹ்வின் தூதரே என் தாய்மீது ஒரு மாத நோன்பு (கடமையாக) உள்ள நிலையில் மரணித்து விட்டார்.அவரது சார்பில் நான் அதை நிறைவேற்றலாமா? என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ஆம் நிறைவேற்றலாம். அல்லாஹ்வின் கடன் நிறைவேற்றப்பட அதிகம் தகுதியானது என்று கூறினார்கள். - இப்னு அப்பாஸ்(ரலி) : புகாரி


ரமலான் இரவு வணக்கங்கள்:

1. ரமலானில் நபி(ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது? என்று அயிஷா(ரலி) அவர்களிடம் நான் கேட்டேன் அதற்கு அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் ரமலானிலும் ரமலான் அல்லாத மாதங்களிலும் நபி(ஸல்) அவர்கள் பதினொரு ரக்அத்களுக்கு மேல் தொழுததில்லை, நான்கு ரக அத்துகள் தொழுவார்கள் அதன் அழகையும் நீளத்தையும் கேட்க்க வேண்டாம் பின்னர் நான்கு ரக அத்துகள் தொழுவார்கள் அதன் அழகையும் நீளத்தையும் கேட்க்க வேண்டாம் பின்னர் மூன்று ரக அத்துகள் தொழுவார்கள் என்று விடையளித்தார்கள். - அபூஸலமா(ரலி) : புகாரி, முஸ்லிம், திர்மிதி

மேற் கண்ட ஹதீஸின் மூலம் இரவுத் தொழுகையை நான்கு நான்காகத்தான் தொழ வேண்டும் என்றல்லவா விளங்க முடிகிறது. அப்படியானால் நாம் இரண்டிரண்டாக தொழுவது சரியா? சரிதான் அதற்கான ஆதாரம்

2. இஷாவை முடித்ததிலிருந்து சுப்ஹு(ஃபஜ்ர்)வரை நபி(ஸல்) அவர்கள் பதினொரு ரக அத்துகள் தொழுவார்கள் ஒவ்வொரு இரண்டு ரக அத்துகளுக்குமிடையே ஸலாம் கொடுப்பார்கள். - ஆயிஷா(ரலி) : இப்னு மாஜா.

3.நபி(ஸல்) அவர்கள் நள்ளிரவில் பள்ளிக்குச் சென்றுத் தொழுதார்கள் அவர்களைப் பின்பற்றி மக்களும் தொழுதார்கள் விடிந்ததும் மக்கள் இதுபற்றிப்;; பேசிக்கொண்டார்கள் (மறு நாள்) முதல் நாளை விட அதிகமான மக்கள் திரண்டு நபி(ஸல்) அவர்களின் பின்னால் நின்று தொழுதார்கள் விடிந்ததும் மக்கள் இதுபற்றிப் பேசிக் கொண்டார்கள் மூன்றாம் இரவில் பள்ளி வாசலுக்கு நிறைய பேர் வந்தனர். நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசலுக்கு வந்து தொழுதார்கள் அவாகளைப் பின் பற்றி மக்களும் தொழுதனர். நான்காம் இரவு பள்ளிவாசல் கொள்ளாத அளவுக்கு மக்கள் திரண்டனர். ஆனால் நபி(ஸல்) அவர்கள் சுப்ஹு தொழுகைக்குத்தான் பள்ளி வாசலுக்கு வந்தார்கள். சுப்ஹு தொழுகையை முடித்ததும் மக்களை நோக்கி நான் இறைவனைப் போற்றிப் புகழ்ந்து கூறுகிறேன் நீங்கள் வந்திருந்தது எனக்குத் தெரியாமலில்லை எனினும் இது உங்கள் மீது கடமையாக்கப்பட்டு அதை உங்களால் நிறைவேற்ற இயலாமல் போய்விடுமோ என்று அஞ்சுகிறேன் எனவேதான் நான் தொழுவிக்க வரவில்லை என்று கூறினார்கள். - ஆயிஷா(ரலி) - புகாரி.

மூன்று நபர்களுக்கு மேல் நாம் ஜமாத்தாக தொழலாமா? தொழலாம். ஆதாரம் என்ன?

4. ரமலானில் மக்கள் (தனித்தனி) குழக்களாகத் தொழுது வந்தனர் குர்ஆனில் சிறிதளவு மனனம் செய்திருந்த ஒருவரைப் பின்பற்றி ஐந்து நபர்கள் அல்லது ஏழு நபர்கள் அல்லது அதைவிடக் குறைந்த எண்ணிக்கையினர் அல்லது அதைவிட அதிக எண்ணிக்கையினர் தொழுது வந்தனர்.  - ஆயிஷா(ரலி) : அஹ்மத்.

5.நபி(ஸல்) அவர்கள் காலத்தில் (மக்கள்)சிறு சிறு ஜமாஅத்தாக தொழுது வந்தனர் இதனை நபி(ஸல்) அவர்கள் அங்கீகரித்தார்கள். - ஆயிஷா(ரலி) : அஹ்மத்.

தராவீஹ் என்ற பெயரில் 20 ரக்அத்துகள் தொழும் வழக்கம் பரவலாகவுள்ளது. இதில் ஆச்சர்யமான விஷயம் என்ன வென்றால் திருகுர்ஆனிலோ, (பல்லாயிரக் கணக்கான ஹதீஸ்கள் இருந்தும்);, ஒரே ஒரு ஹதீஸிலோ, கூட தராவீஹ் என்ற வார்த்தையே இடம் பெறவில்லை.

நபி(ஸல்) அவர்கள் ரமலானிலும், ரமலான் அல்லாத மாதங்களிலும் தொழுத தொழுகை தஹஜ்ஜத் இரவுத் தொழுகை என்றுதான் குறிப்பிடப்படுள்ளது.


லைலத்துல் கத்ர்:

இந்தத் திருக்குர்ஆனை மகத்துவமிக்;க ஓர் இரவில் நாம் அருளியுள்ளோம். மகத்துவமிக்க இரவைப்பற்றி உமக்கு தெரியுமா? அந்த மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களைவிடச் சிறந்ததாகும் (97:1-5)

லைலத்துல் கத்ரை ரமளானின் கடைசிப்பத்து நாட்களின் ஒற்றைப்படை இரவுகளில் நீங்கள் தேடுங்கள். - ஆயிஷா(ரலி) : புகாரி

நபி(ஸல்) அவர்கள் மக்களிடம் வந்தார்கள் அப்போது இரண்டு மனிதர்கள் வழக்காடிக் கொண்டிருந்தனர். அவ்விருவருடனும் ஷைத்தான் இருந்தான். எனவே அதை நான் மறந்துவிட்டேன். எனவே அதைக் கடைசிப்பத்து நாட்களில் தேடுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - அபூஸயீத்(ரலி) : முஸ்லிம், அஹமத்

அல்லாஹ்வை ஈமான் கொண்டவராகவும், நன்மையை எதிர்பார்த்தவராகவும் ரமலான் மாதத்தில் யார் நோன்பு நோற்கின்றாரோ அவரின் முன்சென்றப் பாவங்கள் மன்னிக்கப்படும். லைலத்துல் கத்ரில் அல்லாஹ்வை ஈமான் கொண்டவராகவும் நன்மையை எதிர்பார்த்த வராகவும் யார் நின்று வணங்குகின்றாரோ அவரின் முன் பாவங்கள் மன்னிக்கப்படும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - புகாரி

ரமலான் மாதத்தின் கடைசிப் பத்தின் ஒற்றைப்படை நாட்களில் லைலத்துல் கத்ரின் இரவை தேடிப் பெற்றுக் கொள்ளுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - புகாரி

நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு லைலத்துல் கத்ரை அறிவித்துக் கொடுப்பதற்காக வெளியில் வந்தார்கள், அப்போது இரண்டு பேர் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டார்கள், அப்போது நபி(ஸல்) கூறினார்கள், லைலத்துல் கத்ரை உங்களுக்கு அறிவித்து கொடுப்பதற்காக நான் வெளியாகி வந்தேன் இரண்டு பேர் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டதின் காரணமாக அல்லாஹ் அதைப்பற்றிய செய்தியை உயர்த்தி விட்டான் என்று கூறி அது உங்களுக்கு நலவாக இருக்கக் கூடும் என்றார்கள். ஆகவே அதை இருபத்தி ஜந்து, இருபத்தி எழு, இருபத்தி ஒன்பது ஆகிய நாட்களில் தேடிப் பெற்றுக் கொள்ளுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.  - புகாரி

7. (ரமலானின் கடைசிப்) பத்து நாட்கள் வந்து விட்டால் நபி(ஸல்)அவர்கள் இல்லறத் தொடர்பை நிறுத்தித் கொள்வார்கள்.இரவை (அல்லாஹ்வை வணங்கி) உயிர்ப்பிப்பார்கள். (இறைவனை வணங்குவதற்காகத்)தம் குடும்பத்தினரை எழுப்பி விடுவார்கள்;. ஆயிஷா(ரலி)புகாரி.

8.அல்லாஹ்வின் தூதரே லைலத்துல் கத்ரின் இரவை நான் அறிந்து கொண்டால் அதில் என்ன கூற வேண்டும் என்று கேட்டேன்? இவ்வாறு கூறுமாறு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அல்லாஹும்ம இன்னக்க அஃப்வுன் துஹிப்புல் அஃப்வ ஃபஉஃபுஅன்னீ. - ஆயிஷா(ரலி): திர்மிதி


இஃதிகாஃப்:

...நீங்கள் பள்ளிவாசலில் தனித்து (இஃதிகாஃபில்) இருக்கும் போது, உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள்-இவையே அல்லாஹ் விதித்த வரம்புகளாகும்; அந்த வரம்புகளை(த்தாண்ட) முற்படாதீர்கள்; இவ்வாறே (கட்டுப்பாடுடன்) தங்களைக்காத்து பயபக்தியுடையோர் ஆவதற்காக அல்லாஹ் தன்னுடைய சான்றுகளைத் தெளிவாக்குகின்றான். (2:187)

நபி(ஸல்) அவர்கள் ரமலானின் கடைசிப் பத்து நாட்களில் அவர்கள் மரணிக்கும் வரை இஃதிகாஃப் இருந்துள்ளார்கள். - ஆயிஷா(ரலி) : புகாரி, முஸ்லிம், அஹ்மத்

நபி(ஸல்) அவர்கள் இஃதிகாஃப் இருக்க நாடினால் சுப்ஹுதொழுது விட்டு தமது இஃதிகாஃப் இருக்குமிடம் சென்று விடுவார்கள். - ஆயிஷா(ரலி) : புகாரி, முஸ்லிம், அஹ்மத்,நஸயீ, திர்மிதி, இப்னுமாஜா

ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரைத் தேடுமாறு நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளதை முன்பே நாம் அறிந்தோம். எனவே பஜ்ரு தொழுதவுடன் இஃதிகாஃப் இருக்கத்துவங்குவார்கள் என்பது 21 ஆம் நாள் ஃபஜ்ராக இருக்க முடியாது அப்படி இருந்தால் அந்த இரவு அவர்களுக்குத் தவறிப்போயிருக்கும். 20ம் நாள் பஜ்ரு தொழுதுவிட்டு இஃதிகாப் இருப்பார்கள் என்று விளங்குவதே சரியானது.

ரமலான் மாதத்தின் கடைசிப் பத்தில் நபி(ஸல்) அவர்கள் இஃதிகாஃப் இருப்பார்கள். - அபூஹுரைரா(ரலி) : புகாரி

நபி(ஸல்) அவர்கள் மரணிக்கும் வரைக்கும் ரமலான் மாதத்தின் கடைசிப்பத்தில் இஃதிகாஃப் இருக்கக் கூடியவர்களாக இருந்தார்கள். அவர்கள் மரணித்த பிறகு அவர்களின் மனைவிமார்கள் இஃதிகாஃப் இருந்தார்கள். - புகாரி

நபி(ஸல்) அவர்கள் ஒவ்வொரு ரமலான் மாதமும் பத்து நாட்கள் இஃதிகாஃப் இருப்பார்கள், மரணித்த வருடத்தில் இருபது நாட்கள் இஃதிகாஃப் இருந்தார்கள்.- அபூஹுரைரா(ரலி) : புகாரி

(நோன்பின்) கடைசிப்பத்து வந்து விட்டால் நபி(ஸல்) அவர்கள் இரவெல்லாம் விழித்திருந்து அமல் செய்வார்கள், தன் குடும்பத்தையும் அமல்செய்வதற்காக எழுப்பிவிடுவார்கள், தன் மனைவிமார்களிடமிருந்து தூரமாகி விடுவார்கள். - ஆயிஷா(ரலி) : புகாரி, முஸ்லிம்

நபி(ஸல்) அவர்கள் இஃதிகாப் இருக்கும் போது மனிதனின் அவசியத்தேவை (மலஜலம் கழித்தல்)க்காகத் தவிர வீட்டிற்குச் செல்லமாட்டார்கள். - ஆயிஷா(ரலி) : புகாரி, முஸ்லிம், அஹ்மத்

நபி(ஸல்) அவர்கள் பள்ளியில் இஃதிகாஃப் இருக்கும் போது நான் வீட்டில் மாதவிடாயாக இருந்து கொண்டே அவர்களது தலையை வாரிவிடுவேன். அவர்கள் தமது தலையை(மட்டும்) வீட்டிற்குள் நீட்டுவார்கள். - ஆயிஷா(ரலி) : புகாரி, முஸ்லிம், அஹ்மத்

நபி(ஸல்) அவர்கள் இஃதிகாஃப் இருந்தார்கள். இரவில் அவர்களைச் சந்திக்க நான் சென்றேன். அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தேன். பின்னர் நான் புறப்படுவதற்காக எழுந்தேன், என்னை வீட்டில் விடுவதற்காக அவர்களும் எழுந்தார்கள். - ஸபிய்யா(ரலி) : புகாரி, முஸ்லிம், அஹ்மத்

இஃதிகாஃப் இருப்பவர் நோயாளியை விசாரிக்காமலிருப்பதும், ஜனாஸாவில் பங்கெடுக்காமலிருப்பதும், மனைவியைத் தீண்டாலும் அணைக்காலிருப்பதும், அவசியத் தேவையை முன்னிட்டே தவிர வெளியே செல்லாமலிருப்பதும் நபிவழியாகும். - ஆயிஷா(ரலி) : அபூதாவூத்

பெண்களும் இஃதிகாஃப் இருக்கலாம்:

முஃமின்களின் தாயான ஒருவர் உதிரப் போக்கு உள்ள நிலையிலும் (மாதவிலக்கு அல்ல) இஃதிகாஃப் இருந்துள்ளார்கள். - ஆயிஷா(ரலி) : புகாரி

இஃதிகாஃபின் முடிவு:

நபி(ஸல்) அவர்கள் (ஈதுல் ஃபித்ர்)பெருநாளன்று (காலை) உணவு உண்டு பெருநாள் தொழகை முடிக்காதவரை (இஃதிகாஃபை விட்டு) வெளியேற மாட்டார்கள். - புரைதா(ரலி) : திர்மிதி, ஹாகிம், அஹ்மத்.

(ஜகாத்துல் ஃபித்ர்)கட்டாயக் கடமை:

அடிமைகள், சுதந்திரமானவர்கள், ஆண்கள், பெண்கள். சிறியோர், பெரியோர் ஆகிய அனைத்து முஸ்லிம்கள் மீதும் நோன்புப் பொருநாள் தர்மத்தை நபி(ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள். பேரீச்சம் பழம், தீட்டப்படாத கோதுமை, ஆகியவற்றிலிருந்து ஒரு ஸாவு எனவும் அவர்கள் நிர்ணயித்தார்கள். மேலும் (பெருநாள்) தொழுகைக்கு மக்கள் புறப்படுவதற்கு முன்பே அதை வழங்கிவிட வேண்டும் எனவும் கட்டளையிட்டார்கள். - இப்னு உமர்(ரலி) : புகாரி, முஸ்லிம்

நபி(ஸல்) அவர்கள் அழைப்பாளர்களை மக்காவின் தெருக்களுக்கு அனுப்பி தெரிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக ஜகாத்துல் ஃபிதர் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும் என்ற வாசகத்தை சொல்லச் சொன்னார்கள். - அம்ர் பின் ஷுஐப் (ரலி) : திர்மிதி

ஜகாத்துல் ஃபித்ர் கொடுக்கவேண்டிய காலம்:

நபித் தோழர்கள் நோன்புப் பெருநாளைக்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்கு முன்னதாக அதை(ஜகாத்துல் ஃபித்ரை)க் கொடுத்து வந்தனர். - இப்னு உமர்(ரலி) : புகாரி

நோன்பு நோற்றவர் வீணான காரியங்களில் ஈடுபட்டதற்குப் பரிகாரமாகவும், ஏழைகளுக்கு உணவாகவும் இருக்கும் பொருட்டு நோன்புப் பெருநாள் தர்மத்தை நபி(ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள். யார் (பொருநாள்) தொழுகைக்கு முன்பு அதை நிறைவேற்றுகிறாரோ அது ஏற்கப்பட்ட கடமையான ஜகாதுல்ஃபித்ராhக அமையும், யார் பெருநாள் தொழுகைக்குப் பின் வழங்குகிறாரோ அது சாதாரண தர்மங்களில் ஒரு தர்மம் போல் அமையும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - இப்னு அப்பாஸ்(ரலி) : அபூதாவூத்

ரமலான் இறுதியில் உங்கள் நோன்பு தர்மத்தை கொடுத்து விடுங்கள் எனக்கூறி இத்தருமத்தை நபி(ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள். - இப்னு அப்பாஸ்(ரலி) : அபூதாவூத், நஸயீ

ஜகாத்துல் ஃபித்ரின் (பொருள்) அளவு:

பேரித்தம் பழம் கோதுமை ஆகியவற்றிலிருந்து பெருநாள் தர்மம் ஒரு ஸாவு என்று நபி(ஸல்) அவர்கள் நிர்ணயம் செய்தார்கள். - இப்னு உமர்(ரலி) : பைஹகி, தாரகுத்னி

ஒரு ஸாவு என்பது இரு கைகள் நிறைய நான்கு முறை அள்ளினால் எவ்வளவு இருக்குமோ அந்த அளவாகும்.

(ஜகாத்துல் பித்ர்) கொடுக்க வேண்டிய பொருள்:

நாங்கள் நபி(ஸல்) அவர்கள் காலத்தில் உணவுப்பொருட்களில் ஒரு ஸாவு ஃபித்ரா தர்மம் வழங்குவோம் அன்றைய தினங்களில் எங்களின் உணவாக கோதுமையும, உலர்ந்த திராட்சையும் இருந்தது. அபூஸயீத்(ரலி)புகாரி

ஷவ்வால் (ஆறு)நோன்பு:

யார் ரமலான் மாதம் நோன்பு நோற்று அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதம் ஆறு நோன்பு நோற்கிறாரோ அவர் காலமெல்லாம் நோன்பு நோன்பு நோற்றவராவார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். - அபு அய்யுப்அல் அன்சாரி (ரலி) : முஸ்லிம், அபுதாவுத், திர்மிதி, இப்னு மாஜா

விடுபட்ட(களா)நோன்பு:

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் இருக்கும்போது எங்களுக்கு மாதவிடாய் எற்பட்டு தூய்மையடைவோம். அப்போது விடுபட்ட நோன்பைக் களா செய்யுமாறு நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிடுவார்கள். விடுபட்ட தொழுகை களைக் களாச்செய்யுமாறு கட்டளையிடமாட்டார்கள். - ஆயிஷா(ரலி) : புகாரி, முஸ்லிம்.

எனக்கு ரமலானில் சில நோன்புகள் விடுபட்டுவிடும். அதை ஷஃபான் மாதத்தில் தவிர என்னால் நிறைவேற்ற முடியாது. - ஆயிஷா(ரலி) : புகாரி

நபி(ஸல்) அவர்களுக்கு ஆயிஷா(ரலி) அவர்கள் பணிவிடை செய்ததே இதற்குக் காரணம் என்று யஹ்யா கூறுகிறார்.

இறந்தவர்களுக்காக நோன்பு வைத்தல்:

அல்லாஹ்வின் தூதரே! என் தாயாருக்கு ஒரு மாத நோன்பு கடமையாக இருந்த நிலையில் இறந்து விட்டார் அவர்களுக்காக நான் அதை நிறைவேற்றலாமா? ஏன்று ஒருவர் கேட்டார். உனது தாய்க்கு (மற்ற)கடன்கள் இருந்தால் நிறைவேற்றத்தானே செய்வாய் என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள் அதற்கு அவர் ஆம் என்றார். அப்படியானால் நிறைவேற்றப்பட அதிகம் தகுதி வாய்ந்தது அல்லாஹ்வின் கடனா(நோன்பா)கும். என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - இப்னு அப்பாஸ்(ரலி) : புகரி, முஸ்லிம்.

ஏவரேனும் தன் மீது நோன்பு கடமையாக இருக்கும் நிலையில் மரணித்து விட்டால் அவருக்காக அவரது பொருப்பாளி (வாரிசுதாரர்) நோன்பு வைப்பார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - ஆயிஷா(ரலி) : புகாரி, முஸ்லிம்


சுன்னத்தான நோன்புகள்:

ஆஷுரா நோன்பு

ரமலானுக்குப்பின் நோன்புகளில் மிக்க விஷேசமான நோன்பு அல்லாஹ்வின் மாதமாம் முஹர்ரம் மாதத்தின் நோன்பாகும். ஃபர்லான தொழுகைக்குப்பின் மிக்க விஷேசமான தொழுகை இரவுத் தொழுகையாகும் என அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள்; கூறினார்கள். - அபுஹுரைரா(ரலி) : முஸ்லிம்

ரமலான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன் இந்த நோன்பு கட்டாயக் கடமையாக இருந்தது. ரமலான் நோன்பு கடமையாக்கப்பட்ட பின் விரும்பியவர் நோற்கலாம் என்ற நிலைக்கு வந்தது. - ஆயிஷா(ரலி) : புகாரி, முஸ்லிம்

நபி(ஸல்) அவர்கள் மதினாவிற்கு வந்தபோது யூதர்கள் முஹர்ரம் பத்தாம் நாளன்று நோன்பு நோற்கக் கண்டு இது என்ன நோன்பு என்று கேட்டதற்கு இந்த நல்ல நாளில் தான் மூஸா(அலை) அவர்களையும் பனூ இஸ்ரவேலர்களையும் அவர்களின் எதிரிகளிடமிருந்து அல்லாஹ் காப்பாற்றினான். அதனால் மூஸா(அலை) நோன்பிருந்தனர் என்றனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் உங்களைவிட மூஸா(அலை) அவர்களுக்கு மிகவும் உரிமையுடையவன் நான் தான் என்று கூறி விட்டு தானும் நோன்பு நோற்று மற்றவர்களையும் நோன்பு நோற்கக் கட்டளையிட்டார்கள். - அபூஹுரைரா(ரலி) : அபூதாவூத்

முஹர்ரம் மாதம் பத்தாவது நாளில் நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருந்தனர் மற்றவர்களையும் நோன்பு நோற்கும்படி பணித்தார்கள். நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே யூதர்களும் கிருஸ்தவர்களும் இந்நாளை கண்ணியப்படுததுகின்றனர் என்று கூற அதற்கு நபி(ஸல்) அவர்கள் இன்ஷாஅல்லாஹ் (இறைவன் நாடினால்) வரும் ஆண்டு நான் உயிருடன் இருந்தால் ஒன்பதாவது நாளும் நோன்பு வைப்பேன் என்றார்கள். ஆனால் மறு ஆண்டு வருவதற்குள் நபி(ஸல்) அவர்கள் மரணித்துவிட்டார்கள். - இப்னுஅப்பாஸ்(ரலி) : முஸ்லிம் அபூதாவூத்

ரஸுல்(ஸல்) அவர்களிடம் முஹர்ரம் மாதத்தின் பத்தாவது நாள் நோன்பு பற்றி கேட்கப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள் முந்தய வருடப்பாவங்களுக்கு அது பரிகாரமாக அமையும் என்று கூறினார்கள். - அபூகதாதா(ரலி) : முஸ்லிம்

அரஃபா நோன்பு

அரஃபா நாளில் நோன்பு நோற்பது அதற்கு முந்தய வருடம் மற்றும் அடுத்த வருடத்திற்கான பரிகாரமாகும். என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - அபூகதாதா(ரலி) : முஸ்லிம், அஹ்மத், அபுதாவுத், நஸயி, இப்னுமாஜா

அரஃபாவில் தங்கியிருப்போர் அரஃபா நாளில் நோன்பு நோற்பதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். - அபூஹுரைரா(ரலி) : அஹ்மத் இப்னுமாஜா

திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் நோன்பு

நபி(ஸல்) அவர்கள் திங்கள் வியாழன் ஆகிய நாட்களைத் தேர்ந்தெடுத்து நோன்பு நோற்று வந்தார்கள். - ஆயிஷா(ரலி) : அஹ்மத், நஸயி, திர்மிதி, இப்னுமாஜா

ஒவ்வொரு வியாழன் மற்றும்; திங்கட்;கிழமைகளில் அமல்கள் (இறைவனிடம்) சமர்ப்பிக்கப்படுகின்றன. எனவே நான் நோன்பு நோற்றுள்ள நிலையில் எனது அமல்கள் சமர்ப்பிக்கப்படுவதை நான் விரும்புகிறேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - அபுஹுரைரா(ரலி) : அஹ்மத், திர்மிதி, இப்னுமாஜா

திங்கட்கிழமை நோன்பு நோற்பது குறித்து நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. ஆதற்கு நபி(ஸல்) அவர்கள் அன்றுதான் நான் பிறந்தேன்;. அன்று தான் என்மீது இறைச்செய்தியும் அருளப்பட்டது என்று விடையளித்தாத்கள். - அபுகதாதா அல் அன்சாரி(ரலி) : முஸ்லிம்

மாதம் மூன்று நோன்புகள்

மாதந்தோறும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பதும் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதும் காலமெல்லாம் நோற்றதாக அமையும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - அபுகதாதா(ரலி) : முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத்

அபுதர் மாதம் மூன்று நோன்பு நோற்பதென்றால் 13, 14, 15 ஆகிய நாட்களில் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - அபூதர்(ரலி) : அஹ்மத், நஸயி, திர்மிதி.

உபரியா(நஃபிலா)ன நோன்பு

ஒரு நாள் நபி(ஸல்) அவர்கள் என் வீட்டில் நுழைந்து (உண்பதற்கு) ஏதாவது உள்ளதா என்று கேட்டார்கள். நாங்கள் இல்லை என்றோம் அவர்கள் நான் நோன்பாளியாக உள்ளேன் என்று கூறினார்கள் பின்னர் மறுநாள் நபி(ஸல்) அவர்கள் வந்தார்கள் அன்பளிப்பாக மாவு கொஞ்சம் வந்துள்ளது என்று நான் கூறினேன் அதைக்கொண்டு வாருங்கள். நான் நோன்பாளியாக காலை நேரத்தை அடைந்தேன் என்று கூறினார்கள் பின்னர் அதை உண்டார்கள். - ஆயிஷா(ரலி) : முஸ்லிம்

அதிக பட்ச(உபரியான) நோன்பு

மாதந்தோறும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பீராக எனறு நபி(ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள். அப்போது எனக்கு இதை விட அதிக சக்தி இருக்கிறது என்று கூறினேன். முடிவில் நபி(ஸல்) அவர்கள் ஒரு நாள் நோன்பு நோற்று ஒரு நாள் விட்டுவிடுவீராக. அதுதான் நோன்புகளிலேயே சிறந்ததாகும் இது என் சகோதரர் தாவூத் நபி(அலை) அவர்களின் நோன்பாகும் என்று கூறினார்கள். அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி) ,புகாரி, முஸ்லிம், அஹ்மத்.


வெள்ளிக்கிழமை(மட்டும்) நோன்பு நோற்கலாகாது

வெள்ளிக்கிழமைக்கு முன்பு ஒரு நாள் அல்லது அதை அடுத்து ஒரு நாள் சேர்த்தே தவிர வெள்ளிக்கிழமை நோன்பு நோற்கலாகாது. என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - அபுஹுரைரா(ரலி) : திர்மிதி இப்னுமாஜா

வெள்ளிக்கிழமை நான் நோன்பு நோற்றிருந்தபோது நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். நேற்று நோன்பு நோற்றாயா? என்று கேட்டார்கள். நான் இல்லை என்றேன் நாளை நோன்பு நோற்கும் எண்ணம் உள்ளதா? என்று கேட்டார்கள் நான் இல்லை என்றேன். அப்படியானால் நோன்பை விட்டுவிடு என்று கூறினார்கள். - ஜூவைரியா(ரலி) : புகாரி

நோன்பு நோற்கக் கூடாத நாட்கள்

நபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் மற்றும் ஹஜ்ஜூப் பெருநாள் ஆகிய இரண்டு நாட்களில் நோன்பு நோற்கத் தடை விதித்தார்கள். - அபூஸயீத்(ரலி) : புகாரி, முஸ்லிம், அஹ்மத்

தஷ்ரீகுடைய நாட்கள்; (துல்ஹஜ் பிறை 11, 12, 13)உண்பதற்கும் பருகுவதற்கும் உரிய நாட்களாகும் அந்நாட்களில் எந்த நோன்பும் கிடையாது என்று பிரகடனம் செய்யுமாறு எனக்கு நபி(ஸல்) அவர்கள் கட்டளை இட்டார்கள். - ஸஃது பின் அபீவக்காஸ்(ரலி)  : அஹ்மத்.
Previous Post Next Post