இந்நூலின் பெயர் “ஷரஹ் உஸுலுஸ் ஸுன்னா” என்பதாகும். ஆரம்பகாலங்களில் கொள்கை விளக்க நூற்கள் “சரஹுஸ் ஸுன்னா”, “உஸுலுஸ்ஸுன்னா” போன்ற பெயர்களிலேயே எழுதப்பட்டுள்ளன. இந்நூலின் மூல நூல் “உஸுலுஸ் ஸுன்னா” என்பதாகும்.
இது இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) அவர்கள் எழுதியது.
ஷேக் அப்துல்லாஹ் பின் அப்துர் ரஹ்மான் அல்ஜப்ரீன் என்பவர் தமது வகுப்புக்களில் இந்நூலுக்கு விளக்கமளித்துள்ளார்.
அஹ்லுஸ் ஸுன்னா வல்ஜமாஅத்தினுருடைய மூத்த அறிஞர்களில் ஒருவரும், ஸஊதி அரேபியாவின் பத்வாக்குழுவின் சிரேஷ்ட உறுப்பினரும், இமாம் முஹம்மத் பின் ஸுஊத் இஸ்லாமிய பல்கலைக் கழகத்தின் ஓய்வுபெற்ற முதுநிலை விரிவுரையாளர்களில் ஒருவருமாவார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
இவரது மாணவர்களில் ஒருவரான ஷேக் அலிய் பின் ஹஸன் அபூ லெளஸ் என்பவர் அந்த விளக்கங்களைத் தொகுத்து புத்தக மயப்படுத்தியுள்ளார்.
அது மாத்திரமன்றி கருத்துக்கள் தெளிவாக விளக்கப்படவேண்டிய இடங்களிலும், மேலதிக விபரங்கள் தேவைப்படும்போதும் அடிக்குறிப்புகளைச் சேர்த்துள்ளார்.
இந்த நூலில் இடம்பெற்றுள்ள ஹதீஸ்களின் அறிவிப்பாளர்கள் மற்றும் அவை பதிவு செய்யப்பட்ட நூற்கள் போன்றவற்றையும் அடையாளப்படுத்தியுள்ளார்.
இவ்வாறு எழுதப்பட்ட அடிக்குறிப்புக்களையும் ஷேக் ஜபரீன் அவர்கள் மறு பரிசீலனை செய்து இந்நூலை வெளியிட அனுமதி வழங்கியுள்ளார்.
புத்தகத்தின் முழுப்பயனும் சமூகத்துக்குச் சென்றடைய வேண்டும் என்பதற்காக ஷேக் ஜப்ரீன் அவர்களுடைய விளக்கவுரையையும், தொகுப்பாசிரியர்
சேர்த்துள்ள அடிக்குறிப்புக்களையும் சேர்த்து இங்கு மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.
எனவே, இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) அவர்களுடைய மூல நூலும் அதற்கு ஷேக் ஜபரீன் அவர்கள வழங்கிய விளக்கவுரையையும் தொகுப்பாசிரியரான ஷேக் அலிய் பின் ஹஸன் அபூ லெளஸ் அவர்களுடைய அடிக்குறிப்புகளும் சேர்ந்த தொகுப்பே “சரஹ் உஸுூலுஸ் ஸுன்னா” என்ற இந்நூல் ஆகும்.
இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்களால் எழுதப்பட்ட இந்நூல் பற்றி அபூயஃலா (ரஹ்) அவர்கள் கூறுவதாவது:-
"ஒருவர் இந்நூலைத் தேடி சீனா தேசம் சென்றாலும் போதாது".
அர்ப்பண சிந்தனையுடன் பணிபுரிந்த ஸலபுல் ஸாலிஹீன்கள் இறைக் கோட்பாடு (அகீதா), தெளஹீதின் வகைகள், ஈமானின் அடிப்படைகள், அஹ்லுஸ்ஸுன்னாவின் அடிபடைகள் உள்ளிட்ட முக்கியமான விடயங்களைத் தெளிவுபடுத்துவதில் அதிக கவனம் செலுத்தியுள்ளனர்.
அல்லாஹ் இவர்கள் மூலம் தனது மார்க்கத்தைப் பாதுகாத்தான். இவர்கள் பித்அத்துக்கள், அனாச்சாரங்கள், வழிகேடுகள் போன்றவற்றை சமூகத்துக்கு இனங்காட்டியும் அடையளப்படுத்தியும் உள்ளனர்.
இஸ்லாத்தின் துரிதமான வளர்ச்சி கண்டு சகித்துக் கொள்ள முடியமற்போன இஸ்லாத்தின் எதிரிகள் மார்க்கத்தில் குறைகாணவும் அதில் சந்தேகங்களை ஏற்படுத்தவும் தொடங்கினர். அதே போன்று முஸ்லிம்கள் மத்தியிலேயே இஸ்லாத்தின்மீதான குற்றச் சாட்டுக்களையும் சந்தேகங்களையும் கட்டவிழ்த்துவிட்டனர். இம்முயற்சியில் எதிரிகள் ஒரளவு வெற்றியடைந்துள்ளனர்என்று குறுப்பிடுவதே பொருத்தமானதாகத் தென்படுகிறது.
ஏனெனில், இவர்களுடைய சதிவலையில் அதிகமான முஸ்லிம்கள் சிக்கிக் கொண்டனர். இதன் விளைவாக அல்குர்ஆனிலும் ஹதீஸிலும் தெளிவாகச் சொல்லப்பட்ட பல விடயங்களை மறுக்க ஆரம்பித்தனர். எனவே, இவர்களுக்கு இஸ்லாத்தின் அடிப்படைகளையும் அஹ்லுஸ் ஸுன்னாவின் அடிப்படைகளையும் தெளிவுபடுத்த வேண்டிய கடமை அஹ்லுஸ் ஸுன்னாவின் அறிஞர்கள் மீது இருந்தது.
இஸ்லாத்தின் விரோதிகளுக்குப் பதிலுரைப்பதற்காகவும், முஸ்லிம்களுக்கு அஹ்லுஸ் ஸுன்னாவின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்துவதற்காகவும் அவ்வப்போது நூற்கள் எழுதப்பட்டுள்ளன. இவ்வரிசையில் எழுதப்பட்ட நூற்களில் இதுவும் ஒன்று. இவ்வாறு அஹ்லுஸ்ஸுன்னாவின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியவர்களில் இந்நூலாசிரியரின் புதல்வரான இமாம் அப்துல்லாஹ் பின் ஹன்பல் (ரஹ்), இமாம் மர்வஸி(ரஹ்) , இமாம் அல்லாலகாஈ (ரஹ்), இமாம் இப்னு ஜரீர் (ரஹ்) போன்றோர் குறிப்பிட்டத்தக்கவர்களாவர்.
அஹ்லுஸ் ஸுன்னாவின் அடிப்படைகளிற் சில மிகச் சுருக்கமாகவும், தெளிவாகவும் எழுதப்பட்ட நூற்களில் இதுவும் ஒன்று, இஸ்லாமிய சமூகத்தில் கருத்து - வேறுபாடுகளும், பிரிவினைகளும், வழிகெட்ட சிந்தனைகளும் அரசியல் செல்வாக்குப் பெற்று அமோக ஆதரவுடன் இருந்த ஹிஜ்ரி மூன்றாம் நூற்றாண்டிலேயே இந்நூல் எழுதப்படுள்ளது.
அன்று வழிகேட்டில் மூழ்கியிருந்த பலர், தாம் சத்தியத்திலே இருப்பதாக வாதாடிக் கொண்டு, சத்தியத்தில் இருந்தவர்களை வழிகேடர்கள் எனக் கூறிக்கொண்டும் இருந்தனர். இதே நிலைதான் இன்றும் தோன்றியுள்ளது.
சிலர் குர்ஆன், ஹதீஸையே தாம் பின்பற்றுவதாகக் கூறிக்கொள்கின்றனர். ஆனால், இவ்விரண்டையும் விடப் பகுத்தறிவுக்கு முன்னுரிமை வழங்கி, வழிதவறிய நிலையில் உள்ளனர். இவர்கள் அகீதா (கொள்கை) ரீதியாக குர்ஆன் ஹதீஸைக் கைவிட்டுவிட்டு, தத்துவ சிந்தனைகளான இல்முல் கலாம், இல்முல் மன்திக் போன்றவை மூலம் அகீதாவை அணுகுகின்ற அஷ்அரீ மற்றும் மாத்ரூதீ இயக்கங்களைச் சார்ந்துள்ளனர். இவ்விருசாராரும் முஃதஸிலாக்கள் வழிவந்த வழிதவறியவர்களாவர்.
வேறு சிலர், குர்ஆன் மற்றும் ஹதீஸைப் பின்பற்றுவதாகக் கூறிக் கொள்ளும் அதேவேளை இவ்விரண்டையும் நமக்கு அறிவித்துத் தந்த ஸஹாபாக்களினுடைய சிறப்புக்கள், இவர்களுக்கு இஸ்லாம் வழங்கியுள்ள அந்தஸ்த்துக்கள்', இவர்களின் முன்மாதிரிகள் போன்ற முக்கியமான அடிப்படைகளை ஏற்க மறுக்கின்றனர்.
இதனடிப்படையில் ஸலபுஸ் ஸாலிஹீன்களின் வழிமுறைகளைப் பின்பற்றி மார்க்க விடயங்களை அணுகும் சிந்தனைப் போக்கைக் கைவிட்டுவிட்டனர். இதன் விளைவாக, ஜின்கள் மனிதனைத் தீண்டுதல், ஒரு முறை ஸகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் ஸகாத் வழங்குதல், நபி (ஸல்) அவர்களுக்கு நெஞ்சு பிளக்கப்பட்டு பரிசுத்தப் படுத்தப்பட்டமை, நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டமை போன்ற பல ஆதாரபூர்வமான விடயங்களைப் புறக்கணிக்கின்றனர்.
தற்போது அதிகமானோர் சமகால அறிஞர்களின் நூற்களில் மாத்திரம் தங்கியுள்ளனர். இஸ்லாமிய வரலாற்றுப் பின்னணி எதுவுமின்றி ஸலபுஸ்ஸாலிஹீன்களையும், ஆரம்பகால அறிஞர்களையும் விமர்சிக்கவும் முற்பட்டுவிட்டனர். இதன் விளைவு மிகப் பாரதூரமானதாகும். “தடி எடுத்தவன் எல்லாம் வேட்டைக் காரன்” என்ற நிலை ஏற்பட்டமை மிகவும் வேதனைக்குரியதாகும்.
வேறுசிலர் அல்குர்ஆனையும், ஹதீஸையும் பின்பற்றுவதாகக் கூறிவருகின்றனர். எனினும் இவ்விரண்டுக்கும் அவர்களுக்குமிடையில் மிக நீண்ட இடைவெளியிருப்பதைக் காணமுடிகின்றது.
இவ்வாறு பல வழிகளிலும் முஸ்லிம்கள் வழிகேட்டில் சிக்கித் தவிப்பதற்கு ஒரு முக்கியமான காரணம் இருக்கிறது. குர்ஆன், ஹதீஸ், ஸலபுஸ்ஸாலிஹீன்களின் வழிமுறைகள் போன்றன சமூகத்திலிருந்து ஓரங்கட்டப்பட்டிருப்பதும், அர்ப்பண சிந்தனையோடு பணிபுரிந்த ஆரம்பகால அறிஞர்களின் நூற்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதுமே காரணங்களாகும்.
இவ்வாறான காலகட்டத்தில் இஸ்லாத்தின் கொள்கை விளக்க நூற்கள், அஹ்லுஸ்ஸுன்னாவின் அடிப்படைகள்பற்றி ஆரம்பகால அறிஞர்களால் எழுதப்பட்ட அடிப்படையான நூற்களைத் தமிழில் மொழி பெயர்ப்பது காலத்தின் தேவையும், கற்றறிந்த உலமாக்களின் கடமையுமாகும்.
அணமைக்காலத்தில் கருத்துத் தெளிவும் சீரான முறையில் மதக்கோட்பாடுகளை அணுகுகின்ற முறையும் தோன்ற ஆரம்பித்துள்ளது. அதாவது, குர்ஆன், ஸுன்னா என்பவற்றினதும், ஸலபுஸ் ஸாலிஹீன்களதும் வழிமுறைகளின் ஒளியில் மார்க்க விடயங்களை அணுகுகின்ற முறை தோன்றி அது வேகமாக வளர்ச்சி கண்டு வருவதும் மனதைக் குளிரவைக்கின்றது.
இது இறைவனின் நியதியும் ஆகும். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“சத்தியத்தில் நிலைத்திருக்கும் ஒரு சாரார் எனது உம்மத்தினரிடையே எப்போதும் இருந்து கொண்டே இருப்பர். அவர்களை எதிர்ப்பவர்களால் அவர்களை அழித்தவிட முடியாது. தீனை (இறை நெறியைப்) பாதுகாக்கின்ற இவர்கள் இந்நிலையில் இருக்கும் போதே அல்லாஹ்வின் தீர்ப்பு மறுமை நாள்) வந்துவிடும். அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரழி), நூல்: முஸ்லிம்: 1924)
அறிவிப்பாளர் தொடர் நெடுகிலும், ஒரு அறிவிப்பாளரையோ, இரு அறிவிப்பாளர்களையோ மூன்று அறிவிப்பாளர்களையோ கொண்ட “ஆஹாத்” வகையைச் சேர்ந்த நபிமொழிகளை ஹலால், ஹராமுடன் தொடர்பான சட்டக்கலை, நம்பிக்கைக் கோட்பாடுகள் பற்றிய விடயங்களில் ஏற்கக்கூடாது என்று கூறி சில நபிமொழிகளை சிலர் மறுக்கின்றனர். இவர்களில் மத்ஹப்வாதிகள் சிலரும், அஷ்அரீயா மற்றும் மாதுரீதியா இயக்கத்தினரும் அடங்குவர்.
இதன் பின்னணியில் “தஜ்ஜாலின் வருகையை சிலர் மறுக்கின்றனர். அதேநேரம் தஜ்ஜாலின் வருகையை மறுமையின் பெரிய அடையாளங்களில் ஒன்றாகவும், இதனை நம்புவதும் ஈமானின் அடிப்படைகளில் ஒன்றாகவுமே அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஅத்தினார் கருதுகின்றனர். ஒரு தனிநபர், அல்லது இருவர், அல்லது மூவர் அறிவிக்கின்ற செய்திகளில், அறிவிப்பாளர்களின் எண்ணிக்கையைக் கருத்திற்கொள்ளாது, அவர்களின் நம்பகத்தன்மையின் அடிப்படையில் செய்தி ஆதாரபூர்வமானதாகக் காணப்பட்டால், இதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது அஹ்லுஸ்ஸுன்னாவின் ஏகோபித்த முடிவாகும்.
இதனடிப்படையில் நம்பிக்கைக் கோட்பாடுகள், சட்டக்கலை, அமல்களின் சிறப்புக்கள் போன்ற அனைத்துத் துறைகளிலும் ஆதாரபூர்வமான, “ஆஹாத்” வகையைச் சேர்ந்த செய்திகள் சான்றுகளாகக் கொள்ளப்படும். இறுதி ஹஜ்ஜின்போது நபி (ஸல்) அவர்களுடன் ஒரு இலட்சத்து இருபத்து நாலாயிரம் நபித்தோழர்கள் கலந்து கொண்டனர். இவ்வளவு பெருந் தொகையிலான ஸஹாபாக்கள் கலந்து கொண்ட பிரபல்யமான நிகிழ்ச்சியின் ஆரம்பம் முதல் கடைசி வரையான செய்திகளை ஜாபிர் (ரழி) அவர்களைக் தவிரவேறு யாரும் அறிவிக்கவில்லை. இது “ஆஹாத்” வகையைச் சேர்ந்த ஆதாரபூர்வமான செய்திகளில் ஒன்றாகும். ஸஹீஹ் முஸ்லிம் எனும் கிரந்தத்தில் காணப்படுகின்ற மிக நீண்ட ஹதீஸ்களில் இதுவும் ஒன்றாகும். எனவே, இந்நபிமொழியை ஏற்றுக் கொள்கின்றனர். இதேபோல் இம்மியளவும் தரத்தில் குறையாமல், இதே ஹதீஸ் தரத்தில் உள்ள மற்றுமொரு நபிமொழிதான் “தஜ்ஜாலின் வருகை” தொடர்பான செய்தி. எனினும், அவர்கள் இதனை மறுக்கின்றனர்.
“எல்லா அமல்களுக்கும் நிய்யத்தைப் பொறுத்தே கூலி வழங்கப்படுகின்றது” என்ற நபிமொழி ஸஹீஹ் முஸ்லிம் எனும் கிரந்தத்தில் பதிவாகியுள்ளது. இதுவும் “ஆஹாத்” வகையைச் சேர்ந்த, ஆதாரபூர்வமான செய்திகளில் ஒன்றாகும். இதன் அறிவிப்பாளர் உமர் (ரழி) அவர்கள்ஆவார் இந்நபிமொழியை அனைவரும் ஏற்றுக்கொள்கின்றனர்.
அணுவளவும் குறையாமல் ஒரே தரத்தில் காணப்படுகின்ற நபிமொழிகளில் சிலதை ஒதுக்கிவிட்டு மற்றதை நடைமுறைப்படுத்துகின்றனர்.
எனவே, கோளாறு எங்கோயுள்ளது என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
இவ்வாறு மனிதர்கள் வழிகேட்டில் வீழ்ந்து தடம் புரண்டு செல்வதற்கான காரணம் சரீஆவின் மூலாதாரங்கள் யாவை? அஹ்லுஸ் ஸுன்னா என்போர்
யார்? இவர்களின் அடிப்படைகள் எவை? போன்ற முக்கியமான அம்சங்கள் பற்றிய அறிவின்மையாகும். எனவே, அஹ்லுஸ்ஸுன்னாவின் அடிப்பைடக் கோட்பாடுகள் பற்றித் தெரிந்து கொள்வதற்கு இந்நூல் ஒரு வழிகாட்டி எனலாம்.
மேலும், இந்நூலில் இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்கள் புதிதாகத் தோன்றிய சில வழிகெட்ட இயக்கங்களை பெயர்களால் மாத்திரம் அறிமுகப்படுத்திவிட்டுச் செல்கின்றார். அதேபோன்று இந்நூலின் விரிவுரையாளரான ஷேக் ஜபரீன் அவர்களும் புதிதாகத் தோன்றிய சில வழிகெட்ட இயக்கங்கள் மற்றும் வழி கெட்ட தரீக்காக்களைப் பெயரளவில் அடையாளப்பட்டுத்திவிட்டுச் செல்கின்றனர். இவைபற்றிய விரிவான விளக்கங்கள் எதனையும் இவர்கள் குறிப்படவில்லை. இவைபற்றி இஸ்லாம் மற்றும் இஸ்லாமிய நாகரீக நூல்களில் விரிவாகக் காணலாம்.
இவ்வாறு சிதறிய சிந்தனைகளால் முஸ்லிம்கள் நிலைதடுமாறிக் கொண்டிருப்பதைக் கண்ட ஸலபுஸ் ஸாலிஹீன்களான இமாம்கள், நபிவழியையும், சரியான அகீதாவையும் அவ்வப்போது தெளிவுபடுத்தி வந்துள்ளனர். இந்த வரிசையில் எழுதப்பட்ட நூற்களில் இதுவும் ஒன்று. இதில் அஹ்லுஸ்ஸுன்னாவின் அடிப்படைகள், மறைமுகமான விடயங்களை நம்புதல், ஈமானுடைய சில அடிப்படைகள் போன்றன குர்ஆன், ஹதீஸின் ஒளியில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. அத்துடன் அஹ்லுஸ்ஸுன்னாவுடன் பித்அத்தவாதிகள் முரண்பட்டுக்கொண்ட சில அம்சங்களும் இதில் எழுதப்பட்டுள்ளன. இவ்வகையில் இது மிகவும் பயனுள்ள நூற்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நூலில் இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்கள் அஹ்லுஸ்ஸுன்னாவுடைய ஐம்பது அடிப்படைகளை எழுதியுள்ளார். இந்நூலில் இமாம் அஹ்மத் (ரஹ்) கூறுபவைகள் தடித்த எழுத்துக்களால் எழுதப்பட்டுள்ளன. இவைகளுக்கு ஷேக் ஜபரீன் அவர்கள் வழங்கிய விளக்கங்களும், ஷேக் அபூ லெளஸ் அவர்கள் எழுதிய அடிக்குறிப்புக்களும் “விளக்கம்” என்ற தலைப்பின் கீழ் காணப்படுகின்றன. இந்நூலில், ஆட்சித் தலைவருக்குக் கட்டுப்படுவதன் அவசியம், அவருக்கு எதிராகப் போராடும் கவாரிஜ்கள், இவர்கள் விடயத்தில் சரீஅத்தின் நிலைப்பாடு, பெரும் பாவங்கள் மற்றும் அவைகளுக்கான தண்டனைகள் பற்றி இடம்பெற்றுள்ள ஹதீஸ்களை அஹ்லுஸ் ஸுன்னா வல்ஜமாஅத்தினர் கையாளும் முறை, பெரும்பாவிகள் விடயத்தில் முஃதஸிலாக்களின் பிழையான நிலைப்பாடு, பெரும்பாவிகள் விடயத்தில் அஹ்லுஸ் ஸுன்னாவின் சரியான நடுநிலையான நிலைப்பாடு போன்ற அனைத்து விடயங்களும் மிகத் தெளிவாகவும் சுருக்கமாகவும் எழுதப்பட்டுள்ளன. இவை இந்நூலின் சிறப்பம்சமாகும்.
ஆனால், “கூறியது கூறல்” இடம்பெற்றிருப்பதும், பாடங்கள், தலைப்புக்கள் அடிப்படைகள் எழுதப்படாமிலிருப்பதும் இந்நூலில் காணப்படும் குறைபாடுகளில் ஒன்று. எனினும், இதனை முறையான நூலாக்கம் செய்த ஷேக் அலிய் பின் ஹஸன் அபூ லெளஸ் அவர்கள் இந்நூலுக்குப் பொருளடக்கம் எழுதியுள்ளார்.
இந்தப் புத்தகத்தின் உயரிய பயனை அடைவதற்கு இப்பொருளடக்கம் வழிசெய்யும் என நம்புகிறேன். அஹ்லுஸ் ஸுன்னாவின் அடிப்படைகள், கொள்கை விளக்கங்கள் பற்றி அறிந்து கொள்ள விரும்புவோருக்கு இந்நூல் ஒரு வழிகாட்டியாகவும், வழிகேட்டில் சிக்கி இருப்போருக்கு ஒரு படிப்பினையாகவும் அமைய வேண்டுமென அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்கிறேன்.
அனைத்து நிறைவுகளுக்கும் சொந்தக்காரன் அல்லாஹ் ஒருவனே! குறைபாடுகளுக்குச் சொந்தக்காரன் மனிதன் ஆவான். அல்லாஹ் யாவற்றையும் மிகவும் அறிந்தவன்!
பொருளடக்கம்
தலைப்புக்கள்:
1. பதிப்புரை
2. மதிப்புரை
3. ஆசியுரை
4. நூலாசிரியர் அஹ்மத் (ரஹ்) அறிமுகம்
5. பிறப்பும் வளர்ப்பும்
6. கல்வி தேடல்
7. அஹ்மத் (ரஹ்) பற்றி
8. அவரது ஆசிரியர்கள்
9. அவரது மாணவர்கள்
10. அவரின் பிற நூற்கள்
11. முஸ்னத் அஹ்மத் பற்றி
12. உலகப்பற்றின்மையும், பேணுதலும்
13.மரணம்
14. நூல் அறிமுகம்
15. "ஆஹாத்” வகை சார்ந்த ஹதீஸ்கள் சான்றாகுமா?
16. சுன்னாவின் அடிப்படைகள்
17. அல்குர்ஆனும், ஸுன்னாவும்
18. பித் அத்துக்களை விட்டு விடுதல்
19. பித்அதுக்களின் வகைகள்
20. சண்டை, சச்சரவு செய்வதை விட்டுவிடுதல்
21.மார்க்க விவகாரங்களில் தர்க்கம் செய்வதையும் விவாதம் புரிவதையும் கைவிடல்
22. ஸுன்னாவின் வரை விலக்கணம்
23. ஸுன்னா அல்குர்ஆனுக்கு விளக்கவுரையாகும்.
24. இசைந்து போகாத அம்சங்களை ஸுன்னா எனக் கூடாது
25. உதாரணங்கள் கூறி சுன்னாவைப் புறக்கணித்தல் ஆகாது.
26. பகுத்தறிவினாலோ, மனோ இச்சையினாலோ சரீஅத் சட்டங்களுக்கான நியாயங்களை அறிய முடியாது
27. வலிந்து விளக்கம் (தஃவீல்) கொடுக்கலாகாது
28. விதியை நம்புதல்
29. விதியை நம்புவது ஈமானின் 6 கடமைகளில் ஒன்று
30. மறுமையில் முஃமின்கள் தமது இறைவனைக் கண்டு மகிழ்வர்
31. மறைவான விடயங்களை ஏற்றுக் கொள்ளவும், உண்மைப்படுத்தவும் வேண்டும்
32. அல்குர்ஆன் அல்லாஹ்வுடைய கலாமாகும்.
33. இதற்கான ஆதாரங்கள்
34. அல்குர்ஆன் விடயத்தில் முஃதஸிலாக்களதும், இபாளிய்யாக்களதும் நிலைப்பாடு
35. அல்குர் ஆன் விடயத்தில் அஹ்லுஸ்ஸுன்னாவின் நிலைப்பாடு
36. மறுமையில் முஃமின்கள் அல்லாஹ்வைக் காண்பதை நம்புதல்
37. இதுபற்றி இடம் பெற்றுள்ள நபிமொழிகள் நம்பகமானவை
38. நபி (ஸல்) அவர்கள் இறைவனைக் கண்டார்கள்
39. இவ்விடயத்தில் தென்படுகின்ற கருத்து முரண்பாடு
40. நபி (ஸல்) அவர்கள் தமது அகக் கண்ணால் கண்டனர்
41. மறுமையில் “மீஸான்” எனும் தராசு உண்டு என நம்புதல்
42. அடியான் நிறுக்கப்படுதலும், அதற்கான ஆதாரங்களும்
43. அமல்கள் நிறுக்கப்படுதலும், அதற்கான ஆதாரங்களும்
44. அமல்கள் பதிவு செய்யப்பட்ட ஏடுகள் நிறுக்கப்படுதலும் அதற்கான ஆதாரங்களும்
45. அல்லாஹ் மறுமையில் தன் அடியார்களுடன் பேசுவான் என்பதை நம்புதல்
46. அல்லாஹ்வின் பேசுகின்ற தன்மையை மறுப்போர்
47. இவ்விடயத்தில் அஹ்லுஸ்ஸுன்னாவின் நிலைப்பாடு
48. மறுமையில் நபி (ஸல்) அவர்களுக்கு ஒரு நீர்த்தடாகம் உண்டு
49. நீர்த்தடாகம் தொடர்பான நபி மொழிகள் முதவாதிர் வகையைச் சார்ந்தவை
50. நீர்த்தடாகத்தின் ஸூபத்துக்கள்
51. முஃமின்கள் அதிலிருந்து நீர் அருந்தலும், நயவஞ்சகர்களும் காபிர்களும் தடுக்கப்படுதலும்
52. கப்ர் வேதனையை நம்புதல்
53. கப்ரில் நிகழ்கின்ற குழப்பங்கள்
54. கப்ரில் முன்கர், நகீர் ஆகிய இரு மலக்குகளும் அடியானிடம் விசாரணைநடத்தல்
55. கப்ர் சுவனப்பூஞ்சோலை அல்லது நரகப்படுகுழி
56. நபி (ஸல்) அவர்களுடைய சபாஅத்தை நம்புதல்
57. சபாஅத் விடயத்தில் அஹ்லுஸ்ஸூுன்னாவின் நிலைப்பாடு
58. சபாஅத்தின் வகைகள்
59. தஜ்ஜாலின் வருகையும், நபி ஈஸா (அலை) அவர்களுடைய இறங்குதலும்
60. இது தொடர்பான நபி மொழிகள் "முதவாதிர்” வகையைச் சேர்ந்தவை
61. ஈஸா (அலை) தஜ்ஜாலைக் கொலை செய்தல்
62. ஈஸா (அலை சிலுவைகளை உடைத்தலும், பன்றியைக் கொலை செய்தலும்
63. ஈமான் என்பது சொல், செயல் போன்றவற்றை உள்ளடக்கியதாகும்
64. ஈமானின் விளக்கம்
65. புறக்கணிப்பாக தொழுகையை விட்டவனின் நிலை
66. அலட்சியமாகத் தொழுகையை விடுவதன் சட்டம்
67. தொழுகையைத் தொடர்ந்து விடுபவன் தெளபாச் செய்து மீளாவிடின் கொலை செய்யப்படுதல்
68. ஸஹாபாக்களில் மிகச் சிறந்தவர்கள் 4 கலீபாக்களுமாவர்
69. சிறப்பில் இவர்களின் வரிசை முறை
70. பொதுவாக சிறப்பில் இவர்களின் வரிசை முறை
71. அலி (ரலி) விடயத்தில் ராபிழாக்களின் நிலைப்பாடு
72. தோழமையின் சிறப்பு, ஸஹாபி என்றால் யார்?
73. ஸஹாபாக்களை அடுத்து தாபிஈன்௧ளே சிறந்தவர்கள்
74. தாபிஈன்௧களை அடுத்து தபஉத்தாபிான்கள் சிறப்புக்குரியவர்களாவர்
75. ஆரம்ப 3 நூற்றாண்டுகளிலும் வாழ்ந்தவர்கள் சிறந்தவர்களாவர்
76. பித்அத்வாதிகள் மற்றும் சீஆக்களின் தோற்றம்
77. ஆட்சித் தலைவரான அமீருக்குக் கட்டுப்படுதல்
78. கவாரிஜ்களே ஆட்சியாளர்களுக்கு எதிரான புரட்சிகளை அனுமதிப்பர்
79. இமாம்- ஆட்சித் தலைவர்- என்பவர் யார்?
80. இமாமுக்கு எதிராகப் புரட்சி செய்வதன் விபரீதம்
81. அமிருடைய அனுமதியுடனேயே ஜிஹாத் செல்லுபடியாகும்
82. "பைஉ"வைப் பங்கு வைத்தலும், தண்டனை வழங்கும் அதிகாரமும் ஆட்சியாளர்களுக்கு உரியது
83. "ஸகாத்"ஐ ஆட்சியாளரிடம் ஒப்படைத்தல்
84. பாவச் செயல்கள் தவிர்ந்த எல்லாவிடயங்களிலும், ஆட்சியாளருக்குக் கட்டுப்படுதல்
85. அமீருக்கும் அவரது பிரதிநிதிகளுக்கும் பின்னால் நின்று ஜும்ஆத் தொழுதல்
86. அமீருக்குப் பின்னால் நின்று தொழுத தொழுகையை மீட்டித் தொழுவது
பித்அத்தாகும்
87. ஆட்சியாளருக்கு எதிராகப் புரட்சி செய்வது முஸ்லிம்களின் ஒற்றுமையைக் குலைப்பதாகும்
88. ஆட்சியாளருடன் சண்டையிடுவதும் அவருக்கெதிராகப் புரட்சி செய்வதும்
கூடாது.
89. இத்தகைய புரட்சிகளின் விபரீதங்கள்
90. கவாரிஜ்களுடனும் திருடர்களுடனும் சண்டையிடுதல்
91. அநியாயக்காரர்களும் திருடர்கள் போன்றவர்களே!
92. எவரைப்பற்றியும் சுவர்க்கவாசி என்றோ, நரகவாசி என்றோ சாட்சி கூறமுடியாது
93. அல்லாஹ்வின் அருளை ஆதரவுவைத்தலும் அவனுடைய தண்டனையைப் பயப்படுதலும்
94. சுவர்க்கத்தைக் கொண்டு நற்செய்தி பெற்றவர்கள்
95. நரகவாசிகள் என நபி (ஸல்) அவர்கள் நவின்றவர்கள்
96. பாவிகளின் தெளபா அங்கீகரிக்கப்படும்
97. குற்றவாளிக்குரிய தண்டனை நிறைவேற்றப்பட்டால், அது, அவனுக்குக் குற்றப்பரிகாரமாக அமையும்
98. தெளபாச் செய்யாமல் மரணிக்கும் பாவிகளின் நிலை
99. முஃமின்கள் அல்லாஹ்வின் மன்னிப்புக்கு அருகதையுடையோர்
100. மறுமையில் காபிர்களின் நிலை
101. திருமணமான பிறகு விபச்சாரம் புரிந்தவருக்குரிய தண்டனை
கல்லெறிந்து கொலை செய்வதாகும்
102. நபி (ஸல்) அவர்கள் கல்லெறிந்து தண்டனை நிறைவேற்றினார்கள்
103. இதே தண்டனையை கலீபாக்களும் நிறை வேற்றியுள்ளனர்
104. திருமணமான விபச்சாரியை கல்லெறிந்து கொலைசெய்வதற்கான ஆதாரங்கள்
105. கவாரிஜ்கள் கல்லெறிந்து கொலை செய்யும் தண்டனையை மறுக்கின்றனர்
106. ஸஹாபாக்களைக் குறை கூறல்
107. றாபிழாக்கள் ஸஹாபாக்களை அதிகம் குறை கூறியவர்களே
108. ஸஹாபாக்கள் விடயத்தில் அஹ்லுஸ்ஸுன்னாவின் நிலைப்பாடு
109. நயவஞ்சகம் என்றால் என்ன?
110. நயவஞ்சகத்தின் வகைகள்
111. பெரும்பாவிகள் விடயத்தில் அஹ்லுஸ்ஸூன்னாவின் நிலைப்பாடு
112. பெரும்பாவங்கள் மனிதனை இஸ்லாத்கதிலிருந்து வெளியேற்றி
விடமாட்டாது
113. பெரும்பாவிகளைக் காபிர்கள் எனக் கூறுவது கூடாது.
114. சுவர்க்கமும், நரகமும் படைக்கப்பட்டு, அவை இப்போதும் காணப்படுகின்றன
115. இவ்விரண்டும் படைக்கப்பட்டுவிட்டன என்பதற்கான ஆதாரங்கள்
116. முஸ்லிம்கள் அனைவர் மீதும் ஜனாஸாத் தொழுகை நிறை வேற்றப்படவேண்டும்
117. முஸ்லிம்கள் அனைவருக்காகவும் பாவ மன்னிப்புத் தேடல்
118. துஆவுக்கு மிக அருகதையுள்ளவர்கள் பாவிகளே!
119. ஜஹமிய்யாக்கள், றாபிழாக்கள் போன்று பித்அத்துக்களின் பால் மக்களை
அழைப்போரும் காபிர்களே!
120. தலைவர் போன்றோர் - ஏனையோரை எச்சரிக்கும் நோக்குடன் - பெரும்பாவிகள் மீது ஜனாஸாத் தொழாது தவிர்ந்து கொள்ளல்
121. நூலின் சுருக்கம் (மேற்கூறப்பட்ட 50 அடிப்படைகளும்)
“ஷரஹ் உலூஸுலுஸ் ஸுன்னா”
நூலாசிரியர்:
இமாம்:
அஹ்மத் பின் முஹம்மத் பின் ஹன்பல் (ரஹ்) அவர்கள்
பிறப்பு:164 மரணம்: 241 ஹிஜ்ரி
விளக்கவுரை:
பேரறிஞர் அப்துல்லாஹ் பின் அப்துர் ரஹ்மான். அல் ஜப்ரீன் (ரஹ்) அவர்கள்
உறுப்பினர், மேல்மட்ட அறிஞர் சபை, பத்வாக்குழு, அறிவியல் ஆய்வு நிறுவனம்
ஸவூதி அரேபியா
தொகுப்பாசிரியர்:
செய்த ஷேக் அலிய் பின் ஹஸன் அபூ லெளஸ்
மொழியாக்கம்:
மெளலவியா எம். வை. மஸிய்யா. B.A (Hons)
இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
அஹ்லுஸ் ஸுன்னா வல்ஜமாஅத்தினராகிய எம்மிடம் காணப்படும் சரீஆவின் அடிப்படைகளாவன :-
1. நபித்தோழர்கள் (ஸஹாபாக்கள்) இருந்த வழிமுறைகளைப் பற்றிப் பிடித்து அவர்களைப் பின்பற்றுவதாகும்.
விளக்கம் :
சரீஆவிற்குச் சில மூலாதாரங்கள் உள்ளன. அவை அல்லாஹ்வின் வேதமாகிய அல்குர்ஆனும், நபி (ஸல்) அவர்களின் வழிமுறையான ஸுன்னாவும் ஆகும். அவ்வாறே ஸஹாபாக்களின் வழிவந்த செய்திகளும், அவர்களின் முன்மாதிரிகளும் இஸ்லாத்தின் அடிப்படைகளாகும்.
எனவே, மனிதர்கள் இவ்வடிப்படைகளில் அல்குர்ஆன், ஆதாரபூர்வமான ஹதீஸ்கள், ஸஹாபாக்களுடைய முன்மாதிரிகள் போன்றவற்றை ஏற்று நடக்க வேண்டும். இவற்றைப் பின்பற்றுவதன் மூலம் இம்மூலாதாரங்களிலிருந்து பிரிகின்ற ஏனைய உட்பிரிவுகளையும் பின்பற்றியவர்களாகக் கருதப்படுவர்.
நபி (ஸல்) அவர்களின் தோழர்களான ஸஹாபாக்கள் வாழ்ந்த வழிமுறைகளை ஏற்று நடப்பதும், அவர்களைப் பின்பற்றுவதும் அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஅத்தினரின் மிக முக்கியமான அடிப்படைகளில் ஒன்றாகும். இதனை வலியுறுத்துகின்ற ஏராளமான ஆதாரங்கள் காணப்படுகின்றன.
அல்லாஹ் கூறுகின்றான்:-
எவனொருவன் நேர்வழி இன்னது என்று தனக்குத்தெளிவான பின்னரும், அல்லாஹ்வின் இத்தூதரை விட்டுப்பிரிந்து முஃமின்கள் செல்லாத வழியில் செல்கிறானோ அவனை அவன் செல்லும் தவறான வழியில் செல்ல விட்டு நரகத்திலும் அவனை நுழையச் செய்வோம். அதுவோ, சென்றடையும் இடங்களில் மிகக் கெட்டதாகும்.
அந்நிஸாஃ(4:115)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனக்குப் பின்னர் உங்களில் உயிர் வாழ்வோர் ஏராளமான கருத்து வேற்றுமைகளைக் காண்பார்கள். அப்போது எனது வழிமுறைகளைகயும், நேர்வழி நடந்த குலபாஉர் ராஷிதீன்களின் வழிமுறைகளையும் மிக உறுதியாகப் பற்றிப் பிடித்துக்கொள்ளுங்கள்.
(அறிவிப்பவர்: இர்பாழ் இப்னு ஸாரியா (ரழி) அவர்கள்.
(நூல்: அபூதவூத்: 4607, திர்மிதி :2676, இப்னுமாஜா: 42.
இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் குறிப்பிடுவதாவது: உங்களில் எவரேனும் ஒரு வழிமுறையை முன்மாதிரியாகக் கருதிப் பின்பற்ற விரும்பினால், அவர் முஹ்ம்மத் (ஸல்) அவர்களுடைய தோழர்களான ஸஹாபாக்களைப் பின்பற்றி நடக்கட்டும். இவர்கள் இந்த உம்மத்தில் மிகுந்த இதய சுத்தியும், ஆழமான அறிவும், அளவுக்கதிகமாகத் தம்மை வருத்திக்கொள்ளாதவர்களாகவும் வாழ்ந்தவர்கள். மேலும், நேர்வழி நடந்தோராகவும், நற்குண சீலர்களாகவும் காணப்பட்டனர். நபியின் தோழமைக்காக அல்லாஹ் இவர்களைத் தெரிவு செய்து கொண்டது, இவர்களுக்குக் கிடைத்த மாபெரும் நற்பேறாகும். எனவே, இவர்களுடைய சிறப்புக்களை அறிந்து இவர்களின் முன்மாதிரிகளைப் பின்பற்றுங்கள். ஏனெனில், இவர்கள் நேர்வழி நடந்தவர்களாவர்.
(நூல்: இப்னு அப்தில்பர்: ஜாமிஉ பயானில் இல்ம்: 1810)
2. பித்அதுக்களை விட்டு விடவேண்டும். எல்லா பித்அத்துக்களும் வழிகேடாகும் (இதுவும் அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஅத்தினருடைய அடிப்படைகளுள் ஒன்று).
விளக்கம்:-
“பித்அத்” என்பது மார்க்கத்தில் அதாவது இஸ்லாமிய சரீஅத்தில் இபாதத்துக்களில் புதிதாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டவைகளையே குறிக்கும்.
ஆனால், இவை இஸ்லாத்தில் உள்ளவைகளன்று. இவ்வாறு புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள பித்அத்துக்கள் மூன்று வகைப்படுகின்றன. அவைகளாவன:-
அ) நம்பிக்கை சார்ந்த பித்அத்துக்கள்.
ஆ) உடல் உறுப்புக்களால் நிறைவேற்றப்படுகின்ற இபாதத்துக்கள் சார்ந்த பித்அத்துக்கள்.
இ) சொல்ரீதியான இபாதத்துக்களில் ஏற்படுத்தப்பட்ட பித்அத்துக்கள்.
எனினும், நிச்சயமாக அல்லாஹ் இந்த மார்க்கத்தைப் பூர்த்தியாக்கி விட்டான். நபி (ஸல்) அவர்களின் இறுதிக்காலத்தில் இவ்வசனம் இதனையே கூறுகின்றது.
அல்லாஹ் கூறுகின்றான்:-
இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தைப் பரிபூரணமாக்கிவிட்டேன்; மேலும், நான் உங்கள் மீது எனது அருட்கொடையைப் பூர்த்தியாக்கிவிட்டேன். மேலும், உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே தேர்ந்தெடுத்துள்ளேன்.
(அல் மாயிதா: 03)
அவ்வாறே நபி (ஸல்) அவர்களும் தமது இறைவனால் தமக்கு இறக்கியருளப்பட்ட மார்க்கத்தைப் பூரணமாக எத்திவைத்தார்கள். மேலும், தேவையான அனைத்து விடயங்களையும் ஸஹாபக்களுக்குக் கற்றுக்கொடுத்தார்கள். சிறுநீர் கழித்துவிட்டு சுத்தம் செய்கின்ற முறை போன்ற பிறர் நேரடியாகக் கேட்டுத் தெரிந்துகொள்ள வெட்கப்படுகின்ற சிறிய அம்சங்களைக்குக் கூட நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களுக்குக் கற்றுக்கொடுக்காமல் விட்டுவிடவில்லை.
வளிமண்டலத்தில் சிறகடித்துப் பறந்து திரிகின்ற பறவையிலிருந்து கூட பல அறிவு ஞானங்களை நமக்குப் போதித்துத் தந்துள்ளார்கள்.
இதனை அபூதர் அல்கிபாரீ (ரழி) கீழ்வருமாறு குறிப்பிடுகின்றார்:
“வளிமண்டலத்தில் பறந்து திரிகின்ற பறவையிலிருந்துகூட பல அறிவு ஞானங்களை நமக்குப் போதிக்காமல் நபி (ஸல்) அவர்கள் இவ்வுலகை விட்டும் பிரிந்து செல்லவில்லை.
(நூல்: அஹ்மத் 5:153,163 ஹைதமீ: மஜ்மஃ அஸ்ஸவாயித் 8: 263, 264.)
எனவே, தமது உம்மத்தினர் மார்க்கத்தில் புதிதாக எதனையும் ஏற்படுத்தத் தேவையில்லாத அளவுக்கு அனைத்து விடயங்களையும் நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தந்துள்ளனர்.
'தனது உம்மதினர் 73 பிரிவினராகப் பிரிவர் அதாவது அவர்கள் வழிகெட்ட கொள்கைகளுடனும் கோட்பாடுகளுடனும் காணப்படுவர். அவர்களில் ஒரு கூட்டத்தைத் தவிர ஏனைய அனைவருமே நரகம் செல்வர் என்று நபியவர்கள் ஏற்கனவே முன்னறிவிப்புச் செய்து விட்டார்கள்.
“யூதர்கள் 71 கூட்டத்தினராகப் பிளவுபட்டுவிடுவர், கிறிஸ்தவர்கள் 72 கூட்டத்தினராகப் பிளவுபட்டுவிடுவர், எனது உம்மத்தினர் 73 கூட்டத்தினராகப் பிளவுபட்டுவிடுவர், அவர்களில் ஒரு கூட்டத்தினரைத் தவிர, ஏனைய அனைவருமே
நரகம் செல்வர்” என்று நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள். அப்போது (நபித்தோழர்கள்) அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் யார்? என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் “இன்று நானும் எனது ஸஹாபாக்களும் இருக்கின்ற வழிமுறையைப் பின்பற்றி நடப்பவர்களே” என்று பதிலுரைத்தார்கள்.
(அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரழி) அவர்கள்
நூல்கள்: திர்மிதீ: 2641, அல்பானி: அஸ்ஸில்ஸிலதுல் ஸஹீஹா: 203,1492)
நபி (ஸல்) அவர்கள் செய்த இந்த முன்னறிவிப்பை இன்று இஸ்லாமிய உலகம் நிதர்சனமாகக் காண்கின்றது. அகீதா ரீதியான பித்அத்துக்களும் பிளவுகளும் தோன்றிவிட்டன. இவ்வாறு தோன்றிய பித்அத்துக்களையும், பிரிவினர்களையும் ஸலபுஸ்ஸாலிஹீன்களாகிய நம் முன்னோர்கள் பொருத்தமான பெயர்களில் அறிமுகப்படுத்தியும், அடையாளப்படுத்தியும் உள்ளனர்.
இவர்களில் கவாரிஜ்கள், கதரிய்யாக்கள், ஐஹமிய்யாக்கள், முஃதஸிலாக்கள், ராபிழாக்கள், முஷப்பிஹாக்கள், முஅத்திலாக்கள், ஸுபிய்யாக்கள், ஜபரிய்யாக்கள், முர்ஜிஆக்கள், மதசார்பற்றவர்கள், பாதிஸ்ட்டுக்கள், கப்ர் வணங்கிகள், அஷ்அரிய்யாக்கள் போன்ற பிரிவினர்களும் இவர்களிலிருந்து பிரிந்துசென்ற தீஜானிய்யா தரீக்கா, நக்ஷபந்திய்யா தரீக்கா, ஷிஆக்கள், ஜாஹிலிய்யாக்கள், பஹாஸமிய்யாக்கள் போன்ற பிரிவினர்களும் இங்கு பெயர் குறிப்பிடாத இன்னும் பல பிரிவினரும் அடங்குவர்.
இப்பிரிவினர்களில் சிலர் தனது பித்அத்தின் காரணமாக இறை நிராகரிப்பிற்கு உட்படுகின்றனர். வேறு சிலர் தமது பித்அத்துக்களின் காரணமாக பெரும் பாவத்திற்கு உட்படுகின்றனர். இவர்கள் பற்றிய தீர்ப்புக்கூறும் இஸ்லாமிய அறிஞர்கள் பல்வேறுபட்ட கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
எனவே, அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஅத்தினரும் மார்க்க அறிஞர்களும் மேற்படி பிரிவினர்களுடன் விவாதங்களில் ஈடுபட்டும், அவைகளை சமூகத்துக்கு எச்சரிக்கை செய்தும் உள்ளனர். மேலும், இவ்வாறான வழிகெட்ட பிரிவினர்கள் பேசுவதை செவிமடுத்தல், அவர்களின் பேச்சைக் கேட்டல், அவர்களுடன் உட்கார்ந்திருத்தல், அவர்களுடன் விவாதம் புரிதல் போன்ற அனைத்தும் தடைசெய்யப்பட்டதாகும். மேலும், இவர்களிடமிருந்து ஒதுங்கி நடக்குமாறும் உபதேசம் செய்துள்ளனர்.
ஸலபுஸ்ஸாலிஹீன்களும் இமாம்களும் மேற்கூறப்பட்ட பித்அத்வாதிகள் பற்றிக் குறிப்பிட்டுள்ள விடயங்களை இமாம் இப்னு பத்தா (ரஹ்) அவர்கள் தமது “அல்இபானதுல் குப்ரா“ எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார். (இது அஹ்லுஸ்ஸுன்னாவின் கொள்கை விளக்க நூல்களில் பிரசித்தி பெற்ற ஒரு நூலாகும்.).
வழிகெட்டவர்கள் போதிக்கின்ற அமல்கள் ரீதியான பித்அத்துக்களின் நிலையும் இவ்வாறுதான். இவர்கள் மெளலிதுகள், ரகாயிப் தொழுகை போன்ற பித்அத்துக்களை ஏற்படுத்தினர். மேலும், கடமையான மற்றும் உபரியான தொழுகைகளிலும், ஏனைய வணக்கங்களிலும், ஜனாஸாக்களை அடக்குகின்ற விடயங்களிலும், மையவாடிகளிலும் வழிகெட்ட பல பித்அத்துக்களை ஏற்படுத்தியுள்ளனர். இவ்வாறு இவர்கள் ஏற்படுத்திய பித்அத்துக்களுக்கு சரீஅத்தில் எந்தவகையான ஆதாரமும் இல்லை.
இவ்வாறு வரலாறு நெடுகிலும் ஏற்படுத்தப்பட்ட பித்அத்துக்களை அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஅத்தினரின் இமாம்களும், அறிஞர்களும் அடையாளப்படுத்தியும், கண்டித்தும் வந்துள்ளனர். அவ்வப்போது தகுந்த மறுப்புக்களையும் எழுதியுள்ளனர்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “காரியங்களில் மிகக் கெட்டது புதிதாக ஏற்படுத்தப்பட்டவைகளாகும்; புதிதாக ஏற்படுத்தப்பட்ட அனைத்தும் பித்அத்துக்களாகும். பித்அத்துக்கள் அனைத்தும் வழிகேடுகளே!'
(அறிவிப்பவர்: இர்பாழ் பின் ஸாரியா (ரழி) அவர்கள். )
(நூல்: அபூதாவூத்: 4607, திர்மிதீ: 2678, இப்னுமாஜா : 32, 43)
மேலும், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “இந்த மார்க்கத்தில் இல்லாதவைகளை அதில் யாராவது ஏறபடுத்தினால் அது மறுக்கப்படும்”.
(அறிவிப்பவர்: ஆயிஷா (ரழி) அவர்கள்.)
(நூல்கள்: புகாரி: 2697, முஸ்லிம்: 1718. )
பித்அத்துக்களைக் கண்டிக்கின்ற இதுபோன்ற நபிமொழிகள் ஏராளமாகக் காணப்படுகின்றன.
3. சர்ச்சைகளில் ஈடுபடுவதையும், மனோஇச்சைக்கு வழிப்படுவோருடன் உட்கார்ந்திருப்பதையும் விட்டுவிட வேண்டும். (இது அஹ்லுஸ் ஸுன்னாவின் அடிப்படைகளில் ஒன்று)
விளக்கம்:
மார்க்க விஷயங்களில் கருத்து முரண்பட்டுக் கொள்வதை நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தடைசெய்பவர்களாகக் காணப்பட்டனர். அவ்வாறே, அல்குர்ஆன் பற்றிய சர்ச்சைகளில் ஈடுபடுவதையும், விவாதங்கள் புரிவதையும் தடைசெய்துள்ளனர்.
அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள்:-
நானும் எனது சகோதரனும் ஒரு சபையில் உட்கார்ந்திருந்தோம். சிவந்த ஒட்டகைகள் அதற்குக் கூலியாகக் கிடைக்க வேண்டும் என ஆசைப்பட்டுக் கொண்டிருந்தேன். பின்னர், நானும் எனது சகோதரனும் சிறிதளவு முன்னோக்கிச் சென்றோம். அப்போது வயது முதிர்ந்த சில நபித்தோழர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வீட்டு வாசலுக்கருகில் உட்கார்ந்திருந்தனர். அவர்களுக்கிடையில் உட்கார்ந்து அவர்களைப் பிரிக்க விரும்பாத நாம், ஒரு ஓரமாக அமர்ந்துகொண்டோம். அப்போது அல்குர்ஆனின் ஒரு வசனத்தைக்குறிப்பிட்டு அதில் (கருத்துமுரண்பட்டதன் காரணமாக) சர்ச்சையில் ஈடுபட்டனர். அப்போது அவர்களது சப்தங்கள் உயர்ந்தன. எனவே, (இதனைச் செவியுற்ற நபி (ஸல்) அவர்கள் முகம் சிவந்த நிலையில் கோபப்பட்டவர்களாக வெளியேறி அவர்களுக்கு மண்ணால் வீசி அடித்தார்கள். அப்போது நபியவர்கள் பின்வருமாறு) கூறினார்கள்: எனது கூட்டத்தினரே! கொஞ்சம் பொறுங்கள்! இதனால் (சர்சை புரிந்ததனால்) தான் உங்களுக்கு முன்னிருந்த சமூகங்கள் அழிக்கப்பட்டன. அவர்கள் தமது நபிமார்களின் விடயத்தில் கருத்து முரண்பட்டுக் கொண்டதும், வேதத்தில் சில வசனங்கள் மூலம் வேறு சில வசனங்களைப் புறக்கணித்ததும் தான் அவர்களின் அழிவுக்குக் காரணங்களாகும். நிச்சயமாக அல்குர்ஆன் அதன் சில வசனங்கள் வேறு சில வசனங்களைப் பொய்ப்படுத்துவதற்காக இறங்கவில்லை. மாறாக, அதன் சில வசனங்கள் ஏனைய வசனங்களை உண்மைப் படுத்தக் கூடியதாகவே உள்ளன. ஆகவே, அல்குர்ஆனில் உங்களுக்குத் தெளிவாகத் தெரிந்தவைகளை நீங்கள் நடைமுறைப்படுத்துங்கள். அதில் உங்களுக்குத் தெரியாதவைகளைக் தெரிந்த ஆலிம்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
(நூல்: அஹ்மத்: 6702)
மற்றோர் அறிவிப்பில்:
ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் (வீட்டிலிருந்து) வெளியேறினார்கள். அப்போது சிலர் “விதி” பற்றி விவாதித்துக்கொண்டிருந்தனர். இதனைச் செவியுற்ற நபி (ஸல்) அவர்கள் கோபமுற்றனர். இதனால் அவர்களின் முகம் மாதுளம் பழச் சுளைகள் போன்று சிவந்து காணப்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள்
அம்மனிதர்களை நோக்கி, “ஏன் நீங்கள் அல்குர்ஆனின் சில வசனங்களைக்கூறி வேறுசில வசனங்களைப் புறக்கணிக்கிறீர்கள். இதனால் தான் உங்களுக்கு முன்னிருந்த சமூகத்தினர் அழிக்கப்பட்டனர்.”
(நூல்: அஹ்மத்: 2/179,6668, இப்னு மாஜா: 85, புகாரி: கல்கு அப்ஆலில் இபாத்: 218)
எனவே, சர்ச்சைகளை விட்டுவிடுதல், அவற்றில் ஈடுபடுவோரிடமிருந்து ஒதுங்கி விலகி நடத்தல், கருத்து வேற்றுமைகளைத் தவிர்த்துக் கொள்ளுதல், அவ்வாறே சத்தியத்தைப் பின்பற்றுதல், முஸ்லிம்கள் அனைவரையும் ஒன்றிணைப்பதிலும் அவர்களுக்கிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்துவதிலும் ஆர்வத்துடன் செயற்படுதல் போன்ற அனைத்து விடயங்களையும் மேற்படி நபிமொழி வலியுறுத்துகின்றது. அத்துடன் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் அல்குர்ஆனையும் நபி (ஸல்) அவர்களின் சுன்னாவையுமே பின்பற்ற வேண்டும் என்பதையும் மேற்கூறப்பட்ட நபிமொழி தெளிவுறுத்துகின்றது.
அல்குர்ஆன், அதன் சில வசனங்கள் மற்றும் சில வசனங்களைப் பொய்ப்படுத்துவதற்காக இறக்கியருளப்படவில்லை என்பது அனைவரும் அறிந்ததே! எனவே, அல்குர்ஆன் வசனங்களில் மிகத்தெளிவாகத் தெரிந்தவைகளையே பிறருக்குச் சொல்ல வேண்டும். தெளிவாகத் தெரியாத வசனங்களை அவற்றைத் தெரிந்தவர்களுக்கு விட்டுவிடுவதுடன், அவர்களிடம் அதுபற்றிக் கேட்டறிய வேண்டும்.
ஆனால், மனோ இச்சைக்கு வழிப்படுகின்றவர்களான பித்அத்வாகிகளும், வழிகேட்டின்பால் பிறரை அழைப்போரும் வழிகேட்டில் இருந்து கொண்டே தம்முடனிருப்போருக்குத் தாம் சத்தியத்தில் இருப்பது போன்று காட்டிக்கொள்வர். இதனால் பாமரர்கள் இவர்கள்தாம் சத்தியத்திலேயே உள்ளனர் என்று நம்பி,
ஏமாற்றமடைகின்றனர். இவர்களின் அழகான வார்த்தைகளாலும், பேச்சாற்றலாலும் ஏமாற்றமடைந்த பெருந்திரளான மக்கள் வழிகெட்டுவிட்டனர். இதனால்தான் வழிகெட்டவர்கள் பேசிக் கொண்டிருக்கும் இடங்களிலும் அவர்கள் விவாதிக்கும் போதும் அவர்களுடன் உட்கார்ந்திருப்பதை சரீஅத் தடைசெய்கின்றது.
அல்குர்ஆன் கூறுகின்றது:
அல்லாஹ்வின் வசனங்கள் நிராகரிக்கப்படுவதையும், பரிகசிக்கப்படுவதையும் நீங்கள் கேட்டால், அவர்கள் இதை விட்டு வேறு விஷயத்தில் ஈடுபடும் வரையில் அவர்களோடு நீங்கள் உட்கார வேண்டாம் என்று வேதத்தின் மூலம் அவன் உங்கள் மீது (கட்டளை) இறக்கியுள்ளான்.
(அந்நிஸா: 140)
மேலும், அல்லாஹ் கூறுகின்றான்:
நம் வசனங்களைப் பற்றி வீண் விவாதம் செய்துகொண்டிருப்போரை நீங்கள் கண்டால், அவர்கள் அதை விட்டு வேறு விஷயங்களில் கவனம் செலுத்தும் வரையில் நீர் அவர்களைப் புறக்கணித்து விடும்.
(அல் அன்ஆம்: 68)
இவை அனைத்தும் பித்அத்காரர்களையும் பாவிகளையும் சமூகப் புறக்கணிப்பிற்கு உட்படுத்தவும், மக்களிடையே அவர்களை இழிவுபடுத்தவும் அவர்களின் பாவங்களிலிருந்து சமூகத்தைப் பாதுகாக்கவும் இஸ்லாமிய சரீஅத் மேற்கொள்ளும் நடவடிக்கைகளாகும்.
இவ்வாறு செய்வதன் காரணமாக அவர்களின் வழிகேடுகள் முஸ்லிம்கள் மத்தியில் செல்வாக்குப் பெறாமல் தடுக்கின்றது. அதேவேளை, வழிகேடர்களும், பெரும்பாவிகளும் தாம் எதிர்கொள்ளும் இழிவையும் உணர்ந்துகொள்ள வழியமைக்கும்.
(“இது ஈமானின் “அல்வலாஉ வல்பராஉ” எனும் அடிப்படை சார்ந்த விடயமாகும். இதன் பொருள், இறை நேசர்களைச் சேர்ந்து நடத்தலும், இறைநிராகரப்பாளர்கள், இணைவைப்பவர்கள், காபிர்கள், முஷ்ரிக்குகள், பித்அத்துக்காரர்கள், பெரும்பாவிகள் போன்றோரை விட்டும் விலகி நடப்பதுமாகும்.)
அல்லாஹ்வின் வசனங்கள் நிராகரிக்கப்படுவதையும், பரிகசிக்கப்படுவதையும் நீங்கள் கேட்டால், அவர்கள் இதை விட்டு வேறு விஷயத்தில் ஈடுபடும் வரையில் அவர்களோடு நீங்கள் உட்கார வேண்டாம் என்று வேதத்தின் மூலம் அவன் உங்கள் மீது (கட்டளை) இறக்கியுள்ளான்.
4. மார்க்க விடயங்களில் தர்க்கம்புரிதல், விவாதித்தல், சண்டையிடுதல் போன்றவற்றை விட்டு விடவேண்டும்.
விளக்கம்:
மேற்கூறப்பட்ட மூன்று விடயங்களும் சொற்களால் வேறுப்பட்டாலும், மிக நெருக்கமான கருத்துக்களையே கொண்டுள்ளன. கண்ணியம் மிக்க அல்குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான்:
"ஆகவே, அவர்களைப்பற்றி வெளிரங்கமான விஷயம் தவிர (வேறெது பற்றியும்) நீர் தர்க்கம் செய்ய வேண்டாம். ”
(ஸூரா அல் கஹ்ஃபு: வசனம்: 22)
ஸாயிப் பின் அப்துல்லாஹ் அல்மக்ஸுூமி (ரழி) அவர்கள் இஸ்லாத்கிற்கு முன்னர் நபி (ஸல்) அவர்களின் தோழராக இருந்துள்ளார்கள். அவர்கள் கூறுகின்றார்கள்: நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது (நபித்தோழர்கள்) என்னைப் பற்றி புகழ்ந்துரைத்து என்னை நினைவுபடுத்த ஆரம்பித்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் "நான் அவரைப்பற்றி உங்களைவிட அதிகம் அறிவேன்” என்றார். அதற்கு நான் "நீங்கள் உண்மை உரைத்துவிட்டீர்கள். எனது தாயும், தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும். எனது சிறந்த நண்பராக நீங்கள் இருந்தீர்கள். மேலும், நீங்கள் சர்ச்சை புரிபவராகவோ, அல்லது தர்க்கம் புரிபவராகவோ இருந்ததில்லை" என்றார்.
(நூல்கள்: அஹ்மத் 3/425 இப்னு மாஜா : 2287 அபூதாவூத் : 4836)
(மேற்கூறப்பட்ட செய்தி, இஸ்லாத்திற்கு முன்னர்கூட நபியவர்களிடம் விவாதித்தல், தர்க்கம் புரிதல் போன்ற கூடாத பழக்கங்கள் காணப்படவில்லை என்பதையே சுட்டிக் காட்டுகின்றது.)
நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்: "அல்குர்ஆனில் (சந்தேகத்தை ஏற்படுத்தக்கூடிய முறையில்) விவாதிப்பது இறைநிராகரிப்பை ஏற்படுத்தும்"
(நூல்: அஹ்மத் : 2/286,300,424,503, அபூதாவூத்: 4603, இப்னு ஹிப்பான்:73)
அதாவது, அல்குர்ஆனில் சந்தேகத்தை ஏற்படுத்தக்கூடியவாறு விவாதிப்பதும், சர்ச்சையில் ஈடுபடுவதும் இறைநிராகரிப்புக்கு இட்டுச் செல்லும் என்பதையே மேற்கூறப்பட்ட நபிமொழி விளக்குகின்றது.
அத்தோடு மேற்கூறப்பட்டுள்ள தர்க்கம் புரிதல் என்பதுடன் தொடர்பான விளக்கங்கள் பொதுவாகவே, அனைத்து மார்க்க விடயங்களிலும் தர்க்கிப்பதையும், விவாதிப்பதையும் கண்டிக்கின்றன. விதி, மனிதனின் செயற்பாடுகள் போன்றவற்றில் தர்க்கித்தல், அல்லாஹ்வின் திருநாமங்கள், பண்புகள், அவை குறித்து நிற்கும் கருத்துக்கள், அவை விளக்குகின்ற விடயங்கள் போன்றன குறித்து விவாதம் புரிதல் போன்ற அனைத்துமே இதில் உள்ளடங்கும். அவ்வாறே, மண்ணறை (கப்ர்) இனது வேதனை, அதில் தண்டிக்கப்படும் முறை, அதற்குப் பின்னருள்ள வாழ்வு போன்ற மறைவான விடயங்களில் தர்க்கம் புரிவதும் தடைசெய்யப்பட்டதாகும்.
எனவே, அஹ்லுஸ் ஸுன்னா வல்ஜமாஅத்தினர் தெளிவான ஆதாரம் உள்ளவைகளை மாத்திரமே பேசுவர்; மேலும், பித்அத்துக் காரர்களுடன் விவாதிக்கவும் மாட்டார்கள்; அல்லாஹ் தமக்குத் தெளிவுபடுத்தாது விட்டுவிட்ட மறைவான விடயங்களில் தர்க்கம் புரியவும் மாட்டார்கள். மறைவான ஞானம் அல்லாஹ்வுக்கு மாத்திரம் சொந்தமான விடயமாகும்.
எனவே, தாம் குறிப்பிடுவதற்காக எந்தவொரு ஆதாரமும் கிடைக்காத பட்சத்தில், மறைவான விடயங்கள் தொடர்பாக எதிலும் கருத்து முரண்படவோ, தர்க்கிக்கவோ மாட்டார்கள். இது அஹ்லுஸ் ஸுன்னாவின் பொதுவான நம்பிக்கைக் கோட்பாடுகளில் ஒன்றாகும். அல்லாஹ் மிக அறிந்தவன்.
5. ஸுன்னா என்பது இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வழிமுறையாகும் என்பதே அஹ்லுஸ் ஸுன்னாவினரின் கருத்தாகும்.
6. மேலும், ஸுன்னா என்பது அல்குர்ஆனின் விளக்கவுரையுமாகும். அதாவது, ஸுன்னா அல்குர்ஆனை விளக்குகின்ற ஆதாரங்களாகும்.
7. மேலும், ஸுன்னாவில் இல்லாத விடயங்களை (கியாஸ்)"ஒப்பீட்டாய்வு" அடிப்படையில் ஸுன்னாவுடன் சேர்க்கக் கூடாது.
விளக்கம்:
இங்கு ஸுன்னா என்பதன் மூலம், நபி (ஸல்) அவர்களின் வழிமுறையே கருதப்படுகின்றது. அவர்கள் சம்பந்தமான வழிமுறைகள் வழி, வழியாக, தொன்று தொட்டு ஆதாரங்களின் அடிப்படையில் இடம் பெற்றுள்ளன. அவை அல்குர்ஆனை விளக்கும் விரிவுரையுமாகும். அதாவது, அல்குர்ஆனைத் தெளிவு படுத்துமாறு, அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்குக் கட்டளையிட்டான்.
அல்லாஹ் கூறுகின்றான்:
(நபியே! மனிதர்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காகவும். .
(அந்-நாஹ்ல்: வசனம்: 44)
ஸுன்னா என்பதில் நபி (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் ஆகிய அனைத்தும் உள்ளடங்கும். இவற்றைப் பின்பற்றுமாறு இஸ்லாமிய ஷரீஅத் வலியுறுத்துகின்றது. மேலும், இவை அல்குர்ஆனின் கருத்துக்களுக்கு (விளக்கவுரையும்) தெளிவுரையாகவும் இருக்கின்றது. இவைகளுடன் பொருத்தமில்லா எதையும் இணைக்காது, இவற்றுடன் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
இதுவே, ஸுன்னாவுடன் ஒப்பீட்டாய்வு செய்யக் கூடாது என்பதன் மூலம் கருதப்படுகின்றது. ஆனால், ஸுன்னாவின் அடிப்படைகளுக்கும், சட்ட விதிகளுக்கும் இசைவாக அமைந்த தெளிவான விடயங்கள் ஸுன்னாவில் சேர்த்துக் கொள்ளப்படும்.
இங்கு “கியாஸ்” என்பதால் கருதப்படுவது, சுன்னாவில் இடம்பெறாத ஒரு விடயத்தை சுன்னாவுடன் இணைத்துவிட்டு, அது சுன்னாவைச் சார்ந்தது என்றும், அது சுன்னாவில் வெளிப்படையாக இடம்பெற்றுள்ளது என்றும் கூறுவதாகும்.
எனினும், இங்கு குறிப்படப்பட்டுள்ள கியாஸ் என்பது, ஸுன்னாவில் தெளிவான ஆதாரங்கள் கிடைக்காத பட்சத்தில் , (பிக்ஹ்) சட்ட நூற்களில் கையாளப்பட்டுள்ள கியாஸ் என்பதைச் சுட்டிக்காட்டமாட்டாது.
எனவே, ஒரு மனிதன் ஸுன்னாவில் இடம்பெற்ற விடயங்களுடன் மாத்திரம் தனது வாழக்கையைச் அமைத்துக் கொண்டால், அதுவே போதுமானதாகும். மேலும், ஸுன்னாவில் அடங்காத விடயங்களை ஒருவர்
அதிகப்படுத்தினால் அல்லது அதனுடன் இணைத்தால் அவர் பித்அத் செய்தவர் ஆவார். இஸ்லாத்தில் இல்லாத நவீன அனுஷ்டானங்கள் அனைத்தும் பித்அத்
ஆகும். அனைத்து பித்அத்களும் வழிகேடாகும். இந்த விடயம் பற்றி ஏற்கனவே விளக்கப்பட்டுள்ளது.
பித்அத்காரர் வழிகெட்டவர் என்பதன் கருத்தாவது, அவர் தவறிழைத்தவரும், நேர்வழியறியாது தட்டுத் தடுமாறுபவரும் ஆவார். நபிவழியைக் கடைப்பிடித்து அதனைப் பின்பற்றுபவர் தவறிழைக்காதவராவார். மேலும், நேர்வழியிலும், அல்லாஹ்விடமிருந்துள்ள ஒளியின் மீதும் இருப்பவருமாவார்.
8. (சுன்னாவை மறுக்கும் விதமாக) அவைகளுக்கு உதாரணங்கள் கூறக் கூடாது.
9. பகுத்தறிவினாலோ, மனோ இச்சையினாலோ -சுன்னாவின்- யதார்த்தத்தை அடைந்து கொள்ள முடியாது. நிச்சயமாக ஷரீஅத் என்பது சுன்னாவைப் பின்பற்றுவதும், மனோ இச்சையை விட்டுவிடுவதுமாகும்.
விளக்கம்:
சுன்னாவில் ஆதாரபூர்வமாக இடம் பெற்றுள்ளவைகளை மறுக்கும் விதமாகவோ அல்லது அவற்றை விமர்சிக்கும் விதமாகவோ அவற்றுக்கு உதாரணங்கள் கூறக்கூடாது . அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்:-
"ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு உதாரணங்களைக் கூறாதீர்கள்; நீச்சயமாக அல்லாஹ்தான் (யாவற்றையும் நன்கு) அறிபவன்; ஆனால், நீங்கள் அறியமாட்டீர்கள்"
(அத்தியாயம்: அந்-நஹ்ல் - வசனம் :74)
இவ்வசனம், அல்லாஹ்வைத் தமது கடவுள்களுடன் ஒப்பிடுகின்ற இணைவைப்பாளர்களுக்கு மறுப்பாகும். மேலும், இவர்கள் தமது கடவுள்களைப் பற்றிச் சொல்கின்ற செய்தியை அல்குர்ஆன் கீழ்வருமாறு கூறுகின்றது:-
"அவர்கள் எங்களை அல்லாஹ்விடம் சமீபமாக்கி வைப்பதற்காகவேயன்றி நாங்கள் அவர்களை வணங்குவதில்லை (எனக் கூறுகின்றனர்)”
(அத்தியாயம் : ஸுமர்-வசனம் :3)
மேலும், அவர்கள் பின்வருமாறு கூறியதாக அல்லாஹ் கூறுகின்றான்:-
அ) "இவர்கள் அல்லாஹ்விடம் எமக்காகப் பரிந்துரை செய்யதோராவர்"
(அத்தியாயம்: யூனுஸ் : வசனம்: 18)
நபி (ஸல்) அவர்களின் சுன்னாவுக்கு இணைவைப்பாளர்கள் சொன்னது போன்று உதாரணங்கள் சொல்லக் கூடாது. அவர்கள் சொன்ன உதாரணத்தை அல்லாஹ் அல்குர்ஆனில் பின்வருமாறு கூறுகின்றான். "நமக்கிடையில் இவர்மீதுதான் நல்லுபதேசம் இறக்கப்பட வேண்டுமா? (என்றும் கூறுகின்றனர்)”
(அத்தியாயம் : ஸாத் - வசனம் :8)
மேலும் (அவர்கள் கூறிய உதாரணத்தை) அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான் :-
(மக்கா, தாயிப் ஆகிய) இவ்விரு ஊர்களிலுள்ள ஒரு பெரிய மனிதர் மீது இந்தக் குர்ஆன் இறக்கப்பட்டிருக்கக் கூடாதா? என அவர்கள் கூறுகின்றார்கள்"
(அத்தியாயம் : ஸுக்ருப்- வசனம் : 31)
எனவே, நபி (ஸல்) அவர்களை உண்மைப்படுத்துவதும், நபி வழிச் செய்திகளின் அடிப்படையில் செயற்படுவதும் எம்மீது கடமையாகும். அவைகளை மறுக்கக்கூடாது. மேலும், அவைகளுக்கு வலிந்து விளக்கங்கள் கூறுவதோ, அனுமானத்தின் அடிப்படையில் விளக்கம் கூறுவதோ தடைசெய்யப்பட்டதாகும்.
வலிந்து விளக்கம் கொடுக்கப்பட்ட ஹதீஸ்களுக்கு உதாரணங்களாக பின்வரும் இரண்டு நபிமொழிகளையும் கூறலாம். அவையாவன:-
1) நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: மிக்க மேலான, மிக்க பாக்கியமுடைய நமது இறைவன் ஒவ்வொரு இரவும், இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும் போது கீழ்வானத்திக்கு இறங்கி, “என்னிடம் பிரார்த்திப்பவர்கள் யாரேனும் உண்டா? அதை நான் அங்கீகரிப்பதற்கு? மேலும், என்னிடம் கேட்பவர்கள்
யாரேனும் உண்டா? அதை நான் கொடுப்பதற்கு. மேலும், என்னிடம் பாவமன்னிப்புக் கேட்பவர்கள் யாரேனும் உண்டா? அவர்களுக்கு மன்னிப்பு
வழங்குவதற்கு" என்று கூறுவான்.
(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி) அவர்கள்.)
(நூல்கள்: புகாரி : 1145, முஸ்லிம் : 756)
மேற்கூறப்பட்ட ஹதீஸில் அர்ஷில் இருக்கின்ற அல்லாஹ், கீழ்வானத்துக்கு இறங்குவதாக இடம் பெற்றுள்ளது. இவ்வாறு அல்லாஹ் இறங்கும் போது, அர்ஷுடன் சேர்ந்து இறங்குகின்றானா? அல்லது தனியாக இறங்குகின்றானா? தனியாக இறங்கினால் அந்நேரத்தில் அர்ஷ் காலியாகி விடுமா? போன்ற சர்ச்சைகளை (முஅவ்விலாக்கள் எனும்) வலிந்து விளக்கம் கொடுப்போர் கிளப்பியுள்ளனர்.
இந்நபிமொழி பற்றி ஷேக் இப்னு ஜபரீன் (ரஹ்) அவர்கள் கூறுவதாவது:
இந்த ஆதாரபூர்வமான நபி மொழியை அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஅத்தினர் ஏற்றுக் கொண்டுள்ளனர். மேலும், இந்நபிமொழறி உள்ளடக்கியுள்ள இறைவன் இறங்குதல், அவன் தனது அடியார்கள்மீது காட்டும் உள்ளன்பு போன்றவற்றையும்
விசுவாசிக்கின்றனர். மேலும், அவர்கள் இரவின் கடைசிப் பகுதியில் துஆக் கேட்டல், திக்ர் செய்தல், பாவமன்னிப்புக் கோரல் போன்ற விடயங்களில் ஈடுபடுமாறும் மக்களைத் தூண்டியுள்ளனர். அவ்வாறே, இறைவன் இறங்குகின்ற முறை எவ்வாறானது என்பது குறித்து மெளனம் சாதிக்கின்றனர். எனினும், மிக்க மேலான அல்லாஹ் தனது கண்ணியத்துக்கு ஏற்றவாறு பொருத்தமான முறையில் இறங்குவான் என்பதை உறுதியாக நம்புகின்றனர். (இவ்வாறு இறங்குதல் என்பது அல்லாஹ்வின் செயல்ரீதியான பண்புகளில் உள்ளதாகும்.)
அல்லாஹ்வின் பண்புகளைப் மறுக்கின்ற ஜஹமிய்யாக்கள் போன்றோர், இந்த ஹதீஸை மறுத்துரைக்கின்றனர். அவர்களில் சிலர் கூறுகின்றார்கள்:
இந்நபிமொழி தனி நபர் அறிவிக்கின்ற ஆஹாத் வகையைச் சேர்ந்ததாகும். எனவே, இந் நபிமொழி வலியுறுத்தும் கருத்து ஊர்ஜிதமானதல்ல. ஆகவே, நம்பிக்கைக் கோட்பாடுகளுடன் தொடர்பான அம்சங்களில் தனிநபர் வழியாக இடம் பெறும் செய்திகளை ஏற்றுக் கொள்ள முடியாது என்கின்றனர்.
முஅவ்விலாக்கள் (வலிந்து விளக்கம் கொடுப்போர்) கூறுவதாவது: அல்லாஹ் இறங்குகிறான் என்பதன் கருத்து அவனுடைய அருளும், கட்டளையும் இறங்குவதையே குறிக்கின்றது.
ஜஹமிய்யாக்கள் போன்ற வலிந்து விளக்கம் கொடுப்போருக்கு, அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஅத்தினர் பின்வருமாறு மறுப்புக் கூறுகின்றனர்:
நபித்தோழர்கள் பலரால் அறிவிப்புச் செய்யப்பட்டுள்ள இந்நபிமொழி ஸஹீஹான கிரந்தங்களிலும், ஏனைய ஹதீஸ் நூல்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே, இந்நபி மொழி ஊர்ஜிதமான, உறுதியான கருத்தையே தருகின்றது. இவ்வாறே தனிநபர் வழியாக வந்துள்ள ஆஹாத் வகையைச் சார்ந் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் அனைத்தின் நிலையும் இதுதான்.
இவைகளை அஹ்லுஸ் ஸுன்னா வல்ஜமாஅத்தினர் ஏற்றுக் கொண்டுள்ளனர். எனவே, எந்த வகையான பாரபட்சமுமின்றி நம்பிக்கைக் கோட்பாடுகள், சட்டதிட்டங்கள், ஒழுக்க மாண்புகள் போன்ற அனைத்து அம்சங்களிலும் இத்தகைய நபிமொழிகள் ஆதாரமாகக் கொள்ளப்படும்.
அல்லாஹ் இறங்குகின்றான் என்ற விடயத்தை அவனின் அருளும் கட்டளையும்தான் இறங்குகின்றன என்றும் திரிபுபடுத்திக் கருத்துக் கூறும் முஅவ்விலாக்களின் விளக்கம் பிழையானதாகும்.
ஏனெனில், அல்லாஹ்வின் கட்டளை (இரவும் பகலுமாக) எல்லா நேரத்திலும் நாள் முழுவதும் இறங்கக் கூடியவையாகும். ஆகவே, அவை இரவில் அதன் மூன்றில் ஒன்று கழிந்த பின்பு வரக்கூடிய கடைசி நேரத்திற்கு மாத்திரம் சொந்தமானதல்ல. (மாறாக அல்லாஹ்வின் கட்டளைகள் எவ்வேளையிலும் இறங்கலாம்) மேலும், "என்னிடம் பிராத்திப்போர் உண்டா? அதனை அங்கீகரிப்பதற்கு மேலும் என்னிடம் கேட்பவர்கள் உண்டா? அதனை வழங்குவதற்கு" என்று இறைவன் கூறுகின்ற வார்த்தைகள் அவனது கட்டளைகளாகும் என்று கூறுவதும் பிழையானதாகும்.
2) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
"நீங்கள் முழு நிலவுள்ள இரவில் சந்திரனைக் காண்பதுபோல், உங்கள் இறைவனை நிச்சயமாகக் காண்பீர்கள், அவனைக் காண்பதில் ஒருவரையொருவர் நெருங்கி முந்திக் கொள்ளத் தேவையில்லை"
(அறிவிப்பவர் : ஜரீர் பின் அப்துள்ளாஹ் (ரழி)
(நூல்கள் : புகாரி :554, முஸ்லிம் : 633)
மேலும், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:- "பெளர்ணமி இரவில் முழு நிலவைக் காண்பதில் உங்களுக்குச் சிரமம் உண்டா? என்று கேட்டார்கள். (அதற்கு மக்கள் "இல்லை அல்லாஹ்வின் தூதரே!” என்று பதிலளித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மேகம் மறைக்காத சூரியனைக் காண்பதில் உங்களுக்குச் சிரமம் உண்டா? என்று கேட்டார்கள் (அதற்கு மக்கள்) இல்லை", அல்லாஹ்வின் துதரே! என்று பதிலளித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் “இவ்வாறு தான் (மறுமையில், இறைவனை நீங்கள் காண்பீர்கள்.”
(அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரழி) அவர்கள்)
(நூல்கள் : புகாரி :7437, முஸ்லிம் : 299)
ஷேக் இப்னு ஜபரீன் (ரஹ்) கூறுவதாவது:
மறுமையிலும் சுவனத்திலும் அல்லாஹ்வின் நாட்டப்படி முஃமின்கள் தமது கண்களால் நேரடியாக அல்லாஹ்வைக் காண்பர். அதேவேளை இறைவன் தனது படைப்புக்களின் தனித்துவங்கள் பண்புகள் போன்றவற்றை விட்டும் மிகவும் பரிசுத்தமானவனாகவே இருக்கின்றான். மறுமையில் மஹ்ஷர் வெளியில் மக்கள் கொண்டு வந்து நிறுத்தப்படும்போது, முஃமின்களும், அவர்களுடன் ஈமானை வெளிப்படுத்திக் கொண்டிருந்தவர்களும், அல்லாஹ்வை காண்பார்கள். சுவனத்திலே விஷேடமாக முஃமின்கள் அல்லாஹ்வைக் காண்பார்கள். சுவன வாசிகளில் சிலர் காலையிலும், மாலையிலும் அல்லாஹ்வைக் காண்பர், இன்னும் சிலர் வெள்ளிக்கிழமை போன்ற தினங்களில் அல்லாஹ்வைத் தரிசிப்பதுடன், அவனைக் கண்டு மகிழ்வர். இத்தினம் யவ்முல் மஸீத் என்றழைக்கப்படும், சுவன வாசிகள் அனுபவிக்கின்ற இன்பங்களில் மிக்க மேலான இன்பம் அல்லாஹ்வைக் காண்பதாகும். இதனால்தான், மறுமையில் இறை நிராகரிப்பாளர்கள் தமது இறைவனைப் பார்க்க முடியாமல் திரையிடப்பட்டுத் தடைசெய்யப்படுவர். இதுவே அவர்களுக்கு கொடுக்கப்படுகின்ற மிகப்பெரும் தண்டனையாகும். இவ்வாறு மக்கள் தம் கண்களாலேயே நேரடியாக அல்லாஹ்வைக் காண்பார்கள் என்ற விடயத்தை அல்குர்ஆன் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது;
மேலும், இதே விடயத்தை நபி (ஸல்) அவர்களது மணிமொழிகளும் விபரித்துள்ளன. மறுமையில் முஃமின்கள் அல்லாஹ்வைக் காண்பார்கள் என்ற இந்த நபி மொழியை ஜஹாமிய்யாக்களும், அவர்கள் வழி வந்த முஃதஸிலாக்களும், சில முர்ஜிஆக்களும் மறுக்கின்றனர்.
இவர்கள் கூறுவதாவது:-
இறைவனைக் காணமுடியும் என்பது அவனைப் படைப்புக்களுக்கு ஒப்பிடுவதாகும். எனவே, அப்படியாயின் படைப்புக்களுக்கு இருப்பது போன்றதொரு உருவம் தேவைப்படுகிறது. அதே போன்று ஒரு திசையும் அவசியப்படுகிறது. எனவே, உருவம், திசை போன்றன படைக்கப்பட்ட பொருட்களுக்கும், உருவாக்கங்களுக்கும் சொந்தமானவையே! எனவே, உருவம், திசை போன்றன படைப்புக்களின் இயல்புகளைச் சார்ந்தவையே. தவிர படைத்த கடவுளின் இயல்பல்ல என்று கூறுகின்றனர். அதேபோன்று மேற்படி அல்லாஹ்வைக் காணமுடியும் என்ற கருத்தில் இடம் பெற்ற ஆதாரங்களை மறுப்பதற்காக, இன்னும் பல அறிவுக்குப் பொருந்தாத மறுப்புக்களையும், கருத்துக்களையும் கூறுகின்றனர்.
எனினும், அஹ்லுஸ் ஸுன்னாவினர், அல்லாஹ் மிக உயர்ந்த இடத்திலேயே இருக்கின்றான் என்ற கருத்தில் இடம் பெற்றுள்ள ஆதாரங்களின் அடிப்படையில் அவனுக்கு திசை உண்டு என்பதை ஏற்றுக் கொள்கின்றனர். எனவே, இறைவனுக்குத் திசை உண்டு என்று கூறுவதானது, அவனது பண்புகளில் எதையும் புதிதாக ஏற்படுத்துவதாக அமைந்து விடமாட்டாது!
அல்லாஹவைக் காணமுடியாது என்ற தமது வார்த்தையை நிரூபிப்பதற்காக பின்வரும் அல்குர்ஆன் வசனத்தை முன்வைக்கின்றனர்:
"பார்வைகள் அவனை அடைய முடியாது”
(அத்தியாயம் : அல் அன்ஆம் -வசனம் : 103)
இவ்வசனத்தின் கருத்து: மனிதன் அல்லாஹ்வைக் தனது கண்களால் காண்டாலும், அவனது யதார்த்த நிலையைக் கண்டுகொள்ளும் அளவுக்கு அவனுக்கு சக்தி காணப்படாமையால், இறைவனைத் தனது பார்வையால் சூழ்ந்து கொள்ளவோ அடைந்து கொள்ளவோ முடியாது என்பதாகும். அதாவது பார்த்தல் என்பது அடைந்து கொள்ளல் என்பதைவிட கருத்தாளம் குறைந்ததாகும். இதனடிப்படையில் மேற்கூறப்பட வசனமும் மனிதனுக்கு இறைவனைப் பார்க்க முடியும் என்ற கருத்தையே விளக்குகின்றது. இறைவனைக் கண்களால் பார்க்க முடியாது என்பதற்கு ஜஹமிய்யாக்களும் அவர்கள் சார்ந்தோரும் கீழ்வரும் சம்பவத்தை ஆதாரமாகக் கூறுகின்றனர்.
அதாவது: நபி மூஸா (அலை) அவர்கள் தனது இறைவனைப் பார்க்க விரும்பி "என் இறைவனே! நான் உன்னைப் பார்க்க வேண்டும்; எனக்கு உன்னைக் காண்பிப்பாயாக!" என்று கூறினார்கள். அ(தற்கு)வன் "நிச்சயமாக உம்மால் (இம்மையில்) என்னைக் காணமுடியாது” என்று பதிலளித்தான். இந்நிகழ்ச்சி அல்குர்ஆனில் அல்-அஃராப் அத்தியாயத்தில் 143 ம் வசனத்திலே இடம் பெற்றுள்ளது.
அஹ்லுஸ் ஸுன்னாவினர் ஜஹமிய்யாக்களுக்குக் பின்வருமாறு மறுப்புக் கூறுகின்றனர்.
1. மூஸா (அலை) தமது இறைவனிடம் கேட்கத்தகாத ஒரு கேள்வியைக் கேட்டார் என்று கருதக் கூடாது. மாறாக, இறைவனைத் தனது கண்களால் பார்க்கின்ற அளவுக்கு மனிதன் சக்தியற்றவனாக, பலம் குன்றியவனாக இருப்பதன் காரணமாகவே அல்லாஹ் இதனைத் தடை செய்தான். இதனால்தான், அல்லாஹ் அம்மலைக்குத் தேற்றமளித்தபோது அம்மலை துகள், துகளாக சிதறுண்டது. மற்றுமொரு அறிவிப்பில் அம்மலை பூமியில் புதையுண்டது என்று இடம்பெற்றுள்ளது. எனினும், மறுமையில் இறைவன் தன்னைக் காண்பதற்குப் போதியளவு சக்தியைத் தனது அடியார்களுக்கு வழங்குவான்.
இறைவனைக் காணமுடியும் என்பது பற்றிய மேலதிக விளக்கங்கள் இந்நூலில் பின்னர் இடம்பெறும். பகுத்தறிவினாலோ, மனோ இச்சையினாலோ ஸுன்னாவின் யதார்த்தத்தை அறிந்து கொள்ள முடியாது என்பதன் கருத்து யாதெனில், மறைவான விடயங்களின் உண்மையான நிலையை அறிந்துகொள்ளப் போதியளவு அறிவு மனிதனுக்கு வழங்கப்படவில்லை என்பதும், அவனுக்கு வழங்கப்பட்டுள்ள பகுத்தறிவு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பதுமாகும். மார்க்க சட்டங்கள் கடமையாக்கப்பட்டதற்கான நியாயமான காரணங்களையும் தத்துவங்களையும் அறிந்து கொள்ளும் விடயத்திலும் மனிதனின் நிலை இவ்வாறுதான்.
இதனால்தான் சரீஆ (பர்ளு) கடமையாக்கியுள்ள சில அம்சங்களையும், (ஹராம் ) தடைசெய்துள்ள சில விடயங்களையும் சிலர் ஆட்சேபிக்கின்றனர்.
இஸ்லாமிய ஷரீஆ இவற்றை விதித்துள்ள அல்லது தடைசெய்துள்ள நோக்கத்தை அறிந்துகொள்ள முடியாமற் போனதால் சிலர், அவற்றில் சந்தேகங்களையும் சர்ச்சைகளையும் கிளப்பியுள்ளனர். உதாரணமாக, கஃபாவை வலம் வருதல், ஹஜருல் அஸ்வத் கல்லை முத்தமிடுதல், ஸபா - மர்வாக்கிடையில் தொங்கோட்டம் ஓடுதல், ஜமராக்களுக்குக் கல் எறிதல் போன்றவை கடமையாக்கப்பட்டள்ளமைக்கான நியாயங்களைத் தேடி சிலர் குழம்பிப்போயினர்.
அதே போன்று இரு தரப்பினருடைய விருப்பத்துடன் நடைபெற்ற போதும் வட்டி, விபச்சாரம் போன்றன ஹராமாக்கப்பட்டுள்ளமைக்கான நியாயம் என்ன?
மேலும், மனித மனதுக்கு இன்பமூட்டி சுகம் அனுபவிப்பதற்காக பயன்படுத்தக் கூடிய மதுபானம், போதைப் பொருட்கள் போன்றன ஹாராமாக்கப்பட்டுள்ளமைக்கான நியாயம் என்ன? போன்ற வினாக்களுக்கு விடை தேடி குழம்பிப்போய், மார்க்கத்தில் கருத்து முரண்பட்டுக் கொண்டுவிட்டனர்.
அதனால்தான் இத்தகையோர் இஸ்லாமியக் கடமைகளிலும், இஸ்லாம் தடைசெய்துள்ள விடயங்களிலும் சர்ச்சைகளை ஏற்படுத்துயுள்ளனர்.
மனிதனுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவுக்குத்தான் பகுத்தறிவு வழங்கப்பட்டுள்ளது என்பதைக் கூட இவர்களால் உணர்ந்து கொள்ள முடியவில்லை. சில அறிஞர்கள் சில சரீஅத் சட்டங்களுக்கான நியாயங்களையும், அதன் நன்மைகளையும் தெளிவுபடுத்தியுள்ளனர்.
மேலும், சில சட்டங்களுக்கான நியாயங்களைத் தம்மால் விளங்கிக் கொள்ள முடியாமற் போனபோது மெளனமாக இருந்து விட்டனர். அதேவேளை இறைச் சட்டங்களின் நியாயங்கள் நமக்குத் தெளிவாகப் புலப்படாவிட்டாலும் அவை அனைத்தும் எப்போதும் நியாயமானவையும் நலன்கள் நிறைந்தவையுமாகும் என்று தெளிவுபடுத்தியும் விட்டனர்.
மேலும், (கப்ர்) மண்ணறை வேதனை, கப்ரின் சுகபோகம், உயிரும் அதன் தன்மையும், உலகிலும் மண்ணறை (பர்ஸக்) வாழ்விலும் மனிதனுக்கும் உயிருக்கும் இடையிலான தொடர்பு, மறுமையில் எழுப்பப்படும் முறை, விசாரணைக்காக ஒன்று திரட்டப்படுதல், அதன் பின்பு நடக்கக்கூடியவைகள் போன்றவற்றின் யதார்த்த நிலை போன்ற மாறைவான விடயங்களை அறிந்துகொள்வதற்கு தமக்கு சக்தி இல்லை என்பதை தெளிவாகக் கூறிவிட்டனர்.
எனவே, இத்தகைய விடயங்களை ஏற்றுக் கொள்வதும், நபி வழியைப் பின்பற்றி நடப்பதும் நம்மீது கடமையாகும். இவ்வாறே, மனோ இச்சைக்கு வழிப்படுவதைக் கைவிடுதும், எண்ணங்கள் மற்றும் பகுத்தறிவின் அடிப்படையில் மார்க்க விடயங்களை விமர்சிப்பதைக் கைவிடுவதும் நம்மீது கடமையாகும். இதுவே, இறைக் கட்டளைகளை உளப்பூர்வமாகப் பொருந்திக் கொண்டதற்கும், அதிருப்தியின்றி ஏற்றுக் கொண்டதற்குமான அடையாளமாகும்! அல்லாஹ்வே
மிகவும் அறிந்தவன்.
10. நன்மை, தீமை அனைத்தும் அல்லாஹ் தீர்மானித்த (களா-கத்ர்) விதியின் அடிப்படையிலே நடைபெறுகின்றன. விதி பற்றி வந்துள்ள ஹதீஸ்கள் அனைத்தையும் ஏன்? ஏப்படி? என்று கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொண்டு, அவற்றை நம்பிக்கை கொள்ளவும், உண்மைப்படுத்தவும் வேண்டும். விதியுடன் தொடர்பான ஒரு சிறிய அம்சத்தைக் கூட மறுக்கவோ, புறக்கணிக்கவோ கூடாது. அவ்வாறு மறுப்பவர் முஃமின் ஆக மாட்டார் என்பது அஹ்லுஸ் ஸுன்னாவின் இறைக் கோட்பாடுகளில் ஒன்றாகும்.
11. ஒருவனுக்கு குறித்த ஒரு ஹதீஸின் விளக்கத்தை அறிந்து கொள்ள முடியாவிடின், மேலும் அது அவனது அறிவுக்கு எட்டாவிடின் அத்துடன் அவன் நின்று கொள்ள வேண்டும்; அது அவனுக்குப் புரியவில்லை என்பதை வைத்தே அவனுடைய விடயத்தில் தீர்ப்புச் சொல்லப்படும். எனவே, அவன் குறித்த ஹதீஸை ஈமான் கொண்டு, அதனை ஏற்றுக் கொள்வது அவசியமாகும்.
12. இதற்கு "கத்ர்" எனும் விதிபற்றிய பின்வரும் இரண்டு நபிமொழிகளையும் உதாரணமாகக் கூறலாம்.
விளக்கம்:
விதியை நம்புவது ஈமானின் ஆறு கடமைகளில் ஒன்றாகும். நிச்சயமாக அல்லாஹ் பின்னர் நடைபெறவுள்ள விடயங்கள் அனைத்தையும் அறிவான். என்றும், அவன் அவற்றை லெளஹூல் மஹ்பூல் எனும் பாதுகாக்கப்பட்ட ஏட்டில் பதிவு செய்து வைத்துள்ளான் என்றும் விசுவாசம் கொள்வதே விதியை நம்புதல் என்பதன் பொருளாகும். மேலும், அல்லாஹ்வின் நாட்டமின்றி பிரபஞ்சத்தில் எதுவுமே நடைபெறமாட்டாது என்றும், அவன் நாடுபவை மாத்திரமே நடைபெறும் என்றும் விசுவாசம் கொள்வதே விதியை நம்புவதாகும். மேலும் நிச்சயமாக
அல்லாஹ் தான் அனைத்தையும் படைக்கிறான் என்றும் பிரபஞ்சத்தில் உள்ள படைப்புக்கள், சட்டங்கள் என அனைத்தையும் படைக்கின்றவன் அல்லாஹ்வன்றி வேறு யாருமில்லை என்று நம்புவதும் விதியை விசுவாசித்தல் என்பதன் மூலம் கருதப்படுவதாகும்.
அப்போது தான், தனக்கென்று தீர்மானிக்கப்பட்டவை தன்னை வந்தடையாமல் தவறிவிடமாட்டாது என்பதையும் அவ்வாறே பிறருக்கென்று தீர்மானிக்கப்பட்டவை தன்னை ஒரு போதும் வந்தடையமாட்டாது என்பதையும் விசுவாசிப்பான்.
இதனை நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்:
அறிந்து கொள்! இந்த உலகமே ஒன்று திரண்டு உனக்கு ஏதாவது நன்மை செய்ய முயன்றாலும் அல்லாஹ் ஏற்கனவே ஏற்படுத்திவைத்துள்ளதைக் காட்டிலும் அதிகமாக எதையும் செய்துவிட முடியாது. இன்னும் இந்த உலகமே ஒன்று திரண்டுவந்து எதையாவது பயன்படுத்தி உனக்குத் தீங்குவிளைவிக்க
முயன்றாலும், அது அல்லாஹ் உனக்கு ஏற்கனவே குறித்துவைத்தவற்றைக் கொண்டல்லாமல் எந்தத் தீங்கையும் செய்துவிடமுடியாது.
(அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரழி)
(நூல் : திர்மிதி)
இவ்வாறே விதிக்கு உதாரணமாக ஹஸ்ரத் இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் அறிவிக்கின்ற நபிமொழியையும் கூறலாம்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நிச்சயமாக நீங்கள் ஒவ்வொருவரும் உங்களது தாயின் வயிற்றில் நாற்பது நாட்கள் கருவாகவும், பின்னர் இதே கால அளவுக்கு ஒரு துண்டு சதையாகவும் இருந்தீர்கள். பின்னர் உங்களுள் ஆவியை ஊதி உயிர் தரக் கூடிய வானவர் அனுப்பப்படுகிறார். அவர் பின்வரும் நான்கு விடயங்கள் குறித்துக் கட்டளையிடப்படுகிறார். உங்களது வாழ்கைத் தேவைகளைக் தேடிக்கொள்ளும் வழிகள் - உங்களது ஆயுட்காலம் - உங்களது செயல்கள் - உங்களது வாழ்க்கை நல்லமுறையில் அமையுமா? அல்லது துன்பகரமாக அமையுமா?
(நுல்கள் : புகாரி : 3332, முஸ்லிம் : 5145)
மேற்கூறப்பட்ட அனைத்து விடயங்களும் ஒரு சிசு தாயின் வயிற்றினுள் இருக்கின்ற போதே எழுதப்பட்டுவிடும்.
(நபியவர்கள் விதியைப்பற்றிக் கூறியபோது) நபித் தோழர்கள் நபி (ஸல்) அவர்களிடம், அப்படியாயின் நாம் அமல் செய்வதை விட்டுவிட்டு, எமது விதியின் மீது பாரத்தைப் போட்டுவிட்டு இருந்து விடலாமா? என்று கேட்டனர்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் செயலாற்றுங்கள்; நல்லவர், கெட்டவர் எல்லோருக்கும் அவரவர் செல்லும் பாதை எளிதாக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்கள்.
(நூல்கள் : புகாரி :4945, முஸ்லிம் : 5152)
எனவே, நாம் அமல் செய்யும்படி கட்டளையிடப்பட்டுள்ளோம். அல்லாஹ் மனிதனை எதற்காகப் படைத்துள்ளானோ அதற்குரிய அமலைச் செய்வதற்கு அவனுக்கு (வாய்ப்புக்களை வழங்கி) இலகுபடுத்தி உதவி செய்வான்.
அவ்வாறு நரகத்திற்கென்று படைத்தவர்களுக்கு நரகத்திற்கு இட்டுச் செல்லும் செயல்களில் ஈடுபடுவதை இலகுவாக்குவான். மேலும், அவன் சுவனத்திற்கென்று படைத்தவர்களுக்கு சுவனத்திற்கு இட்டுச் செல்லும் அமல்களில் ஈடுபடுவதை இலகுபடுத்துவான். இது விதியை நம்புதல் என்பதுடன் தொடர்பான விடயமாகும். விதிபற்றி ஏராளமான விளக்கங்கள் காணப்படுகின்றன.
13. முஃமின்கள் மறுமையில் அல்லாஹ்வைக் காண்பது சம்பந்தமாக வந்துள்ள செய்திகளும் இவ்வாறுதான். அவற்றைக் கேட்கும் போது ஏதோ அரிதான செய்திபோன்றும், கேட்பவர் ஆச்சரியப் படக்கூடிய செய்தி போன்றும் இருந்தாலும் கூட, அவற்றை ஏற்றுக் கொண்டு விசுவாசம் கொள்ள வேண்டும். அவற்றின் ஒரு எழுத்தைக் கூட மறுக்கக் கூடாது. அதேபோன்று நம்பகரமான அறிவிப்பாளர் தொடர் வரிசையினூடாகக் கிடைக்கப் பெறுகின்ற அனைத்து நபிமொழிகளையும் நம்பவேண்டும்; அவற்றை மறுக்கக் கூடாது!
14. இப்படியான நபிமொழிகளின் விடயத்தில் யாருடனும் சண்டையிடவோ, விவாதிக்கவோ கூடாது. மேலும், தர்க்கவியலைக் கற்றுக் கொள்ளவும் கூடாது. விதி, மறுமையில் அல்லாஹ்வைக் காணுதல், அல்குர்ஆன் உட்பட ஏனைய ஷரீஆ விடயங்கள் எதிலும் தர்க்கம் புரிவது வெறுக்கப்பட்டதும், தடை செய்யப்பட்டதும் ஆகும். இவ்வாறு தர்க்கம் புரிபவர், தனது தர்க்கத்தின் மூலம் சரீஅத்திற்கு உடன்பாடானதொரு கருத்துக்கு வந்தாலும் கூட, அவர் தனது தர்க்கத்தைக் கைவிட்டு விட்டு, எந்த விதமான அதிருப்தியுமின்றி ஹதீஸ்களை நம்பி, அவற்றை ஏற்றுக் கொள்ளும்வரை, அவர் அஹ்லுஸ் ஸுன்னாவைச் சேர்ந்தவர் ஆகமாட்டார்.
விளக்கம் :-
நிச்சயமாக முஃமின்கள் சுவனத்தில் அல்லாஹ்வைக் காண்பார்கள் என்ற விடயத்தை விசுவாசம் கொள்ள வேண்டும். இவ்விடயம் அல்குர்ஆனிலும், ஹதீஸிலும் இடம்பெற்றுள்ளது. இது சம்பந்தமாக பல அல்குர்ஆன் வசனங்களும், ஆதாரபூர்வமான நபி மொழிகளும் காணப்படுகின்றன.
அவற்றுள் சில:-
I. அல்லாஹ் கூறுகின்றான்:-
"நன்மை செய்தோருக்கு அழகான கூலியும் மேலதிகமும் இருக்கின்றது"
(அத்தியாயம் : யூனுஸ் - வசனம் : 26)
மேற்கூறப்பட்ட வசனத்தில் இடம்பெற்றுள்ள "இன்னும் அதிகம் உண்டு" என்ற வார்த்தை "சுவனத்தில் முஃமின்கள் அல்லாஹ்வைக் கண்டு மகிழ்வர்” என்ற கருத்தையே குறிப்பிடுகின்றது என நபி (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளர்கள்.
(அறிவிப்பவர் : ஸுஹைப் (ரழி) அவர்கள்.)
(நூல் : முஸ்லிம் : 181)
II. அல்லாஹ் கூறுகின்றான்:-
"அந்நாளில் சில முகங்கள் தமது இரட்சகனைப் பார்த்து மலர்ச்சியுற்றிருக்கும்.”
அத்தியாயம் : அல்கியாமா - வசனம் :22,23)
III. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:-
"நீங்கள் முழு நிலவுள்ள இரவில் சந்திரனைக் காண்பதுபோல், உங்கள் இறைவனை நிச்சயமாகக் காண்பீர்கள், அவனைக் காண்பதில் ஒருவரையொருவர் நெருங்கி முந்திக் கொள்ளத் தேவையில்லை"
(அறிவிப்பவர்: ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரழி))
(நூல்கள் : புகாரி :554, முஸ்லிம் : 633)
இதனை இபாழிய்யாக்களும், முஃதஸிலாக்களும் மறுக்கின்றனர். விவாதம் புரிவதைத் தவிர்ந்து கொள்ள வேண்டும். சண்டை, சச்சரவுகளுக்கு வழிவகுக்கும் விவாதத்தை நபி (ஸல்) அவர்கள் தடைசெய்துள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"நேர் வழி கிடைத்த பின்னர் விவாதம் புரிய ஆரம்பித்தாலே தவிர ஒரு சமூகம் வழிகெட்டு விட மாட்டாது”
(நூல்கள்: திர்மிதி (3253), இப்னு மாஜா : (48))
எனவே, அல்லாஹ்வின் புறத்திலிருந்து அத்தாட்சிகள் இல்லாத விடயங்களில் விவாதம் புரிவதைத்தவிர்ந்து கொள்ள வேண்டும். ஏனெனில், விவாதம் புரிதல் சண்டை, சச்சரவுகளுக்கும், கருத்து முரண்பாடுகளுக்கும் இட்டுச் செல்லும். எனவே, கருத்து தெளிவாகத் தெரிந்த நபி மொழிகளை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். தனக்கு கருத்து தெளிவாகத் தெரியாவிட்டாலும் கூட, ஆதார பூர்வமான செய்திகள் எதனையும் மறுக்கக் கூடாது. மறைவான விடயங்கள் பற்றிக் கேள்விகள் கேட்கக்கூடாது. எனவே, அல்லாஹ் ஏன் இப்படிப் படைத்தான்? அவன் ஏன் இப்படிக் கட்டளையிட்டுள்ளான்? போன்ற கேள்விகளை எழுப்பக் கூடாது. மாறாக, நாம் (அவனது கட்டளையை) செவியுற்றோம், நாம் (அவற்றுக்கு) வழிப்பட்டோம்” என்றே கூற வேண்டும்.
அல்லாஹ்வின் திருநாமங்கள், அவனது பண்புகள் போன்றன எத்தகையவை என்று அவற்றின் யதார்த்தம் பற்றிக் கேள்விகள் கேட்கக் கூடாது. மேலும், அல்லாஹ்வின் செயல்கள், சட்டதிட்டங்கள் போன்றவற்றுக்கான நியாயங்கள், காரணங்கள் போன்றவை பற்றியும் கேள்விகள் கேட்கக் கூடாது. அவற்றில் நியாயங்கள் தெரிந்தவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதேவேளை நியாயங்கள் தெரியாதவற்றையும் (மனப்பூர்வமாக) ஏற்று, அவற்றுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.
15. அல்குர்ஆன் அல்லாஹ்வின் பேச்சா(கலாமா)கும். அது அவனது படைப்புக்களில் ஒன்றல்ல என நம்புவது அஹ்லுஸ்ஸுன்னாவின் நம்பிக்கை கோட்பாடாகும்.
"அல்குர்ஆன் படைக்கப்பட்டதல்ல” என்று மாத்திரம் சொல்வதும் ஈமானின் பலவீனமாகும். எனவே, அது படைக்கப்பட்டதல்ல; அது அல்லாஹ்வின் வார்த்தையாகும் என்ற இரு விடயங்களையும் இணைத்துக் கூறுவதே ஈமானின் பூரணமான தன்மையாகும். மேலும், அல்லாஹ்வின் பேச்சு அவனை விட்டும் வேறுபட்ட ஒன்றல்ல. அது அவனது செயல்ரீதியான பண்புகளில், பேசும் தன்மையால் உண்டானதாகும். மேலும், அல்குர்ஆனின் விடயத்தில் பித்அத்தான நடைமுறைகளை ஏற்படுத்தியவர்களுடன் தர்க்கம் புரிவதுபற்றி நான் எச்சரிக்கை செய்கிறேன்.
அதேபோன்று, 'அல்குர்ஆனின் வார்த்தைகள் மாத்திரம் அல்லாஹ்வுக்குரியது; பேச்சு அவனுடையதல்ல' என்போருடன் விவாதம் புரிவது பற்றியும் எச்சரிக்கை செய்கிறேன்.
மேலும் அல்குர்ஆன் படைக்கப்பட்டதா? அல்லது அது படைக்கப்படவில்லையா? என்பது தெரியாது. ஆனால் "இது அல்லாஹ்வின் பேச்சு" என்று மாத்திரம் என்று கூறி சமாளித்துக்கொள்வோருடனும் விவாதம் புரிவதை நான் எச்சரிக்கை செய்கிறேன்.
ஏனெனில், இவ்வாறு கூறி சமாளிப்பவரும், அல்குர்ஆன் படைக்கப்பட்டது என்று கூறுபவரும் சமனான பித்அத்வாதிகளே!
எனவே, நிச்சயமாக அல்குர்ஆன் அல்லாஹ்வின் பேச்சாகும். அது அவனுடைய படைப்புக்களில் ஒன்றல்ல என்று விசுவாசம் கொள்ள வேண்டும்.
விளக்கம்:-
அல்குர்ஆனின் விடயத்தில் தர்க்கம் புரிவது தடைசெய்யப்பட்டதாகும்.
ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
அல்குர்ஆனின் விடயத்தில் தர்க்கம் புரிவது இறை நிராகரிப்பை ஏற்படுத்தக் கூடியதாகும்.
(அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரழி) அவர்கள்.)
(நூல் : அபூதாவூத் (4603)
இன்றுவரை ஆரம்பகால அறிஞர்களும், பிற்பட்டகால அறிஞர்களும் பேசிவருகின்ற மிக முக்கியமான விடயங்களில் ஒன்றுதான் அல்குர்ஆன்.
அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஅத்தினர் கூறுகின்றனர்:
அல்குர்ஆன் அல்லாஹ்வின் போச்சாகும். இதனை நபி (ஸல்) அவர்கள் மீது அல்லாஹ் இறக்கிவைத்தான். யதார்த்தமாகவே அல்லாஹ் அதனைப் பேசினான். மேலும், லெளஹுல் மஹ்பூல் எனும் பாதுகாக்கப்பட்ட பலகையிலும், ஏடுகளிலும் அதனைப் பதிவு செய்யுமாறு கட்டளையிட்டான். இவ்வாறான அல்குர்ஆன் அல்லாஹ்வின் பேச்சு என்ற நிலையிலிருந்து ஒருபோதும் நீங்கிவிடுவதில்லை. (இதனை ஓதுவதனால் நன்மை கிடைக்கும்; மேலும், இது அல்பாத்திஹா எனும் அத்தியாயம் கொண்டு ஆரம்பமாகி, அந்நாஸ் எனும் அத்தியாயத்துடன் முடிவடைகின்றது. இதனுடயை ஒவ்வொரு வசனமும் அல்லாஹ்வின் அத்தாட்சியும் அற்புதமும் ஆகும். அவ்வாறே இவை முதவாதிர் வகையைச் சார்ந்த ஹதீஸ்கள் மூலம் ஊர்ஜிதமானவைகளும் ஆகும்.
அல்குர்ஆன் அல்லாஹ்வின் வார்த்தை என்பதை முஃதஸிலாக்களும், ஓமான் நகரிலுள்ள இபாழிய்யாக்களும், இன்னும் சில பிரிவினரும் மறுக்கின்றனர்; இவர்கள் நிச்சயமாக “அது படைக்கப்பட்டதாகும்" என்று கூறி அதனையும் ஏனைய படைப்புக்கள் போன்று ஆக்கிவிட்டனர்.
அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஅத்தினர், அல்லாஹ் பேசக்கூடியவன்; அவன் நாடினால் பேசுவான்; அவனுடைய பேச்சு பூர்வீகமானது; அவன் விரும்பும் போது பேசுவான்; அவனது பூர்வீகமான பேச்சின் ஒரு பகுதியே இந்த அல்குர்ஆனாகும் என்று விளக்கம் கூறி மேற்கூறப்பட்டோருக்கு மறுப்புக் கூறினர்.
அவ்வாறே நிச்சயமாக அது படைக்கப்பட்டது என்று கூறுவோருக்கும், அது படைக்கப்பட்டதா அல்லது படைக்கப்படாததா என்று எமக்குத் தெரியாது என்று கூறிக்கொண்டிருந்தவர்களுக்கும் மறுப்புக் கூறினார்கள்.
மேலும், அவனுடைய பேச்சு, அவனிடமிருந்தே ஆரம்பமானது. திரும்பியும் அவனிடமே சென்று விடும். எனவே அவனிடமிருந்து வருகின்ற பேச்சின், வார்த்தையின் கருத்தோ எதுவும் படைக்கப்பட்டது என்று கூறக்கூடாது. மாறாக, இவை அனைத்தும் அல்லாஹ் யதார்த்தமாகவே பேசிய அவனுடைய பேச்சாகும் என்று அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஅத்தினர் கூறினர்.
அல்லாஹ் தான் நினைக்கின்றபோது பேசக்கூடியவன் என்று கூறி, பேச்சு எனும் பண்பு இறைவனுக்கு உண்டு என ஏற்றுக் கொள்கின்றனர். அவனுடைய பேச்சின் யதார்த்தமான தன்மையைப் பற்றியோ, மனிதனின் அறிவுக்கெட்டாத மறைமுகமான விடயங்கள் பற்றியோ அஹ்லுஸ்ஸுன்னாவினர் எதுவும் பேசாது தவிர்ந்து கொள்வர். மேலும், இவர்கள் இவைபற்றிய அறிவை அல்லாஹ்விடமே சாட்டிவிடுகிறோம் என்றும் கூறுவார்கள்.
16. மறுமையில் முஃமின்கள் அல்லாஹ்வைக் காண்பார்கள் என்ற விடயத்தை விசுவாசம் கொள்ள வேண்டும். இவ்விடயம் நபி (ஸல்) அவர்கள் மூலம் அறிவிக்கப்பட்டு ஸஹீஹான ஹதீஸ்களில் பதிவாகியுள்ளது.
விளக்கம்:
முஃமின்கள் மறுமையில் தமது இறைவனைக் காண்பர். அதேபோன்று இறைவன் நாடுவதைப் போல் சுவர்க்கத்திலும் அவனைக் கண்டு மகிழ்வர். இது தொடர்பாக வந்துள்ள ஹதீஸ்கள் அனைத்தும் ஆதாரபூர்வமானவைகளாகும்.
முஃமின்கள் மறுமையில் அல்லாஹ்வைக் காண்பதையும், இது தொடர்பாக இடம்பெற்றுள்ள ஆதாரபூர்வமான செய்திகளையும் மறுப்பவர்கள் பற்றி நாம் பொருட்படுத்தத் தேவையில்லை.
இந்நிகழ்ச்சியின் யதார்த்தமான நிலையை நாம் அறிய முடியாது. (இதனை அல்லாஹ் மாத்திரமே அறிந்து வைத்துள்ளான்.) எனினும், நிச்சயமாக முஃமின்கள் தமது இறைவனை தமது கண்களால் பகிரங்கமாகவும், நேரடியாகவும் கண்டிஉமகிழ்வர் என்பதை நாம் உறுதியாக நம்புகிறோம். மேலும் சுவர்க்க இன்பங்களில் மிக மகத்தானது தமது இறைவனைக் கண்டு மகிழ்வதாகும்.
அல்லாஹ் கூறுகின்றான்:
நன்மை செய்தோருக்கு அழகான கூலியும் மேலதிகமும் இருக்கின்றது.
யூனுஸ் :10 : 26)
மேலும் அல்லாஹ் கூறுகின்றான்:
அவர்கள் விரும்புவது அதில் அவர்களுக்கு இருக்கிறது. மேலும், அதைவிட அதிகமானதும் எம்மிடம் இருக்கின்றது.
(காப் :50:35)
இவ்விரு வசனங்களிலும் இடம்பெற்றுள்ள, "இன்னும் அதிகம் உண்டு” என்பதன் பொருள்: மறுமையில் அவர்கள் அல்லாஹ்வைக் கண்டு மகிழும்
நிகழ்ச்சியையே குறிக்கின்றது.
ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சுவர்க்கவாசிகள் சுவர்க்கத்தில் நுழையும் போது (அவர்களிடம்) அல்லாஹ், "உங்களுக்கு நான் இன்னும் கூடுதலாக ஏதேனும் வழங்க வேண்டுமென நீங்கள் விரும்புகின்றீர்களா?” என்று கேட்பான். அதற்கு அவர்கள், (இறைவா நீங்கள் எங்கள் முகங்களை வெண்மையாக்கவில்லையா? எங்களை நரகத்திலிருந்து காப்பாற்றி சுவர்க்கத்திற்குள் பிரவேசிக்கச் செய்யவில்லையா? (இதைவிடக் கூடுதலாக எங்களுக்கு வேறென்ன வேண்டும்)?” என்று கேட்பார்கள். அப்போது அல்லாஹ் (தன்னைச் சுற்றிலும் இருக்கும் திரையை விலக்கி (அவர்களுக்கு தரிசனம் தந்தி)டுவான் அப்போது தம் இறைவனைக் (காணும் அவர்களுக்கு அவனைக்) காண்பதைவிட மிகவும் விருப்பமானது வேறெதுவும் வழங்கப்பட்டிராது.
(அறிவிப்பவர் : ஸுஹைப் (ரழி) அவர்கள்)
(நூல் : முஸ்லிம் :(297)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இந்த நிலாவை நீங்கள் நெருக்கடியின்றிக் காண்பதுபோல் உங்கள் இறைவனையும் மறுமையில் காண்பீர்கள்.
(அறிவிப்பவர் : ஜபீர் (ரழி) அவர்கள்)
(நூல்கள் : புகாரி :7434, முஸ்லிம் : )
17. நிச்சயமாக நபி (ஸல்) அவர்கள் தமது இறைவனைக் கண்டார்கள். இது பற்றி வந்துள்ள நபிமொழி ஆதாரபூர்வமானது; இதனை ஹஸ்ரத் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(நூல் : தர்மிதி : 3279)
இந்த ஹதீஸை அதனுடைய நேர்பொருளுடன் நபி (ஸல்) அவர்களிடமிருந்து வந்தது போன்றே - நம்ப வேண்டும் என்பது அஹ்லுஸ் ஸுன்னா வல்ஜமாஅத்தினருடைய அடிப்படைகளில் ஒன்று. எனவே, இதில் தர்க்கம் புரிவது பித்அத் ஆகும். ஆகவே, நாம் இந்த நபி மொழியை அது வெளிப்படையாக வந்திருப்பது போன்றே நம்பிக்கை கொள்வோம். நாம் இவ்விடயத்தில் யாருடனும் தர்க்கம் புரிய மாட்டோம்.
விளக்கம்:
நபி (ஸல்) அவர்கள் நேரடியாகத் தமது இறைவனைக் கண்டார்களா? இல்லையா என்பது கருத்துவேறுபாடுள்ள விடயங்களில் ஒன்றாகும். நபி (ஸல்) அவர்கள் தமது இறைவனை நேரடியாகக் கண்டார்கள் என மேற்படி ஹதீஸில் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
எனினும், இதனை அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் மறுக்கின்றனர். முஹம்மத் (ஸல்) அவர்கள் தமது இறைவனைப் புறக்கண்ணால் கண்டார்கள் என்று கூறுவோரின் கூற்றுக்கு இவர்கள் மறுப்புக் கூறியுள்ளார்கள். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வைக் காணவில்லை" எனக்குறிப்பிடுகின்ற சில நபிமொழிகள் இடம் பெற்றுள்ளன. இதற்கு உதாரணமாகக் பின்வரும் நபிமொழிகளைக் குறிப்பிடலாம்.
1. மஸ்ரூக் பின் அஜ்தஃ (ரஹ்) கூறியதாவது:
நான் அன்னை ஆயிஷா (ரழி) அவர்களிடம் அமர்ந்திருந்தேன். அப்போது அவர்கள் (என்னிடம்) "அபூ ஆயிஷா, மூன்று விடயங்கள் உள்ளன. அவற்றில் எந்த ஒன்றை யார் கூறினாலும் அவர் அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டியவர் ஆவார்” என்று கூறினார்கள். நான் அவை எவை? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "யார் முஹம்மத் (ஸல்) அவர்கள் தம் இறைவனை (நேரில்) பார்த்தார்கள் என்று கூறுகின்றாரோ அவர் அல்லாஹ்வின் மீது மிகப்பெரும் பொய்யை இட்டுக்கட்டிவிட்டார். என்று சொன்னார்கள். உடனே, சாய்ந்து அமர்ந்து (ஓய்வெடுத்துக்) கொண்டிருந்த நான் எழுந்து (நேராக) அமர்ந்து, "இறைநம்பிக்கையாளரின் அன்னையே! நிதானித்துக் கூறுங்கள்!அவசரப்படாதீர்கள். திண்ணமாக அவனைக் தெளிவான அடிவானத்தில் அவர் கண்டார்”
(அத்தக்வீர் :81 : 23)
என்றும்,
நிச்சயமாக அவர் மற்றொரு முறையும் அவனைக் கண்டார்
(அந்நஜ்ம் :53:13)
என்றும் கூறவில்லையா? என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரழி) அவர்கள், பின்வருமாறு விளக்கம் தந்தார்கள்:
இந்தச் சமுதாயத்தில் இது தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேள்வி கேட்ட முதல் ஆள் நான்தான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அது (வானவர்) ஜிப்ரீலை தான்பார்த்ததையே குறிக்கிறது. நான் ஜிப்ரீலை அவர் படைக்கப்பெற்றுள்ள (நிஜத்) தோற்றத்தில் இந்த இரு தடவைகள் தவிர வேறெப்போதும் பார்த்ததில்லை. அவர் வானிலிருந்து பூமிக்கு இறங்கிக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன். அப்போது அவருடைய பிரமாண்டமான தோற்றம் வானம் பூமிக்கிடையேயுள்ள இடைவெளியை அடைத்துக் கொண்டிருந்தது” என்று கூறினார்கள். மேலும் , ஆயிஷா (ரழி) அவர்கள் (தமது கருத்துக்குச் சான்றாக) அல்லாஹ் (பின்வருமாறு) கூறுவதை நீங்கள் செவியுறவில்லையா? என்று கேட்டார்கள்.
"கண்பார்வைகள் அவனை எட்டமுடியாது; அவனோ அனைத்தையும் பார்க்கிறான். அவன் நுட்பமானவனும், நன்கறிந்தவனும் ஆவான்."
(அல் அன்ஆம் : 06 :103)
அல்லது பின்வருமாறு அல்லாஹ் கூறுவதை நீங்கள் கேட்கவில்லையா?
"எந்த மனிதருடனும் அல்லாஹ் நேருக்கு நேர் பேசுவதில்லை. ஆயினும் வஹியின் மூலமோ, திரைக்கு அப்பாலிருந்தோ ஒரு தூதரை அனுப்பி வைத்துத் தன் அனுமதியின் பேரில் தான் நாடியவற்றை (வேதமாக) அறிவிக்கச்செய்தோ அல்லாமல் நேரடியாகப் பேசுவதில்லை. நிச்சயமாக அவன் உயர்ந்தோனும் ஞானமிக்கோனும் ஆவான்"
(அஷ்ஷூரா : 42:51)
தொடர்ந்து ஆயிஷா (ரழி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறைவேதத்திலிருந்து எதையாவது மறைத்தார்கள் என்று யாராவது கூறினால், அவரும் அல்லாஹ்வின் மீது மிகப்பெரும் பொய்யை இட்டுக்கட்டிவிட்டார். அல்லாஹ்வோ, “எம் தூதரே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப் பெற்ற (வேதத்தை (மக்களுக்கு) எடுத்துரைத்து விடுங்கள்! (இவ்வாறு) நீங்கள் செய்யாவிட்டால் அவனுடைய தூதை நீங்கள் நிறை வேற்றியவராக மாட்டீர்கள்” என்று கூறுகின்றான்.
(அல் மாயிதா :5:67)
நபி (ஸல்) அவர்கள் நாளை நடக்கவிருப்பவற்றைத் தெரிவிப்பவர்கள்' என்று யாரேனும் கூறினால் அவர் அல்லாஹ்வின் மீது மிகப்பெரும் பொய்யைப் புனைந்துவிட்டார். ஏனெனில் அல்லாஹ், "நபியே! கூறுக. அல்லாஹ்வைத் தவிர வானங்களிலும், பூமியிலும் உள்ள யாரும் மறைவானவற்றை அறிய மாட்டர்கள்” என்று கூறுகின்றான்.
(அந்நம்ல் :27:65)
(நூல்கள் : புகாரி : 4612, 4855 , முஸ்லிம் :287)
2. அபூதர் அல் கிபாரீ (ரழி) அவர்கள் கூறினார்கள்:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “நீங்கள் உங்கள் இறைவனைப் பார்த்தீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், (அவனைச் சுற்றிலும் இருப்பது) ஒளியாயிற்றே! நான் எப்படி அவனைப் பார்க்க முடியும்? என்று (திருப்பிக்) கேட்டார்கள்
நூல்: முஸ்லிம் : 291
அபூமூஸா (ரழி) கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடையே நின்று ஐந்து விசயங்களைச் சொன்னார்கள்! அவற்றில்... ஒளியே (அவனைப் பார்க்கவிடாமல் தடுக்கும்) திரையாகும். (மற்றொரு அறிவிப்பில்) நெருப்பே அவனது திரையாகும். அத்திரையை அவன் விலக்கி விட்டால், அவனது பார்வை எட்டும் தூரம் வரையுள்ள அவனது படைப்பினங்களை அது சுட்டெரித்துவிடும்.
(நூல்: முஸ்லிம் : 293)
நபி (ஸல்) அவர்கள் ஒரு ஒளியைத்தான் கண்டார்கள் என்பதற்கு மேற்கூறப்பட்ட இரு நபிமொழிகளும் சான்றுகளாகும். இன்னுமொரு ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் தமது இறைவனின் தன்மைகளைப்பற்றிக் குறிப்பிடும் போது, "நான் ஒரு ஒளியைக் கண்டேன்” என்று கூறியுள்ளார்கள்.
(நூல் : முஸ்லிம் : 292)
அதாஉ பின் அபீ ரபாஹ் (ரஹ்) கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தமது இறைவனை அகத்தால் பார்த்தார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்.
(நூல் : முஸ்லிம் : 284)
மேற்கூறப்பட்ட ஹதீஸ்களின் மூலம் நபி (ஸல்) அவர்கள் தம் இறைவனை தமது புறக்கண்ணால் காணவில்லை என்பது தெளிவாகி விடுகின்றது. எனவே, மேலே நபி (ஸல்) அவர்கள் தம் இறைவனைக் கண்டார்கள் என்று பொதுவாக இடம் பெற்றுள்ள செய்திகளுக்கு "அகக் கண்ணால் கண்டார்கள்" என மட்டுப்படுத்தப்பட்டு இடம்பெற்றுள்ள செய்திகள் விளக்கமாகும்.
இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) கூறுகிறார்கள்:
இது தொடர்பாக இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்ற செய்திகளிற் சில பொதுவானதாகவும், இன்னும் சில மட்டுப்படுத்தப்பட்டதாகவும் காணப்படுகின்றன. எனவே, மட்டுபடுத்தப்பட்டு வந்து செய்திகளில் உள்ள கருதுக்களுடன் சேர்த்துத்தான் பொதுவான செய்திகளை விளங்கிக் கொள்ளவேண்டும். இவ்வாறு செய்வதன் மூலமாக அன்னை ஆயிஷா (ரழி) அவர்களும், இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களும் அறிவிக்கின்ற இரு முரண்பாடான செய்திகளுக்குமிடையில் இணக்கம் காணமுடியும்.
இதனடிப்படையில் "கண்டார்கள்" என்ற செய்தியை, "தமது அகக்கண்ணால் கண்டார்கள்" எனவும் “காணவில்லை” என்ற செய்தியைப் "புறக்கண்ணால் காணவில்லை” என்றுமே கருத்துக் கொள்ள வேண்டும்.
(இப்னு ஹஜர் : பத்ஹுல்புகாரி 8/474)
நபி மூஸா (அலை) அவர்கள் தமது நாயனைக் காண நினைத்தபோது, "என் இறைவா! நான் உன்னைப் பார்க்க வேண்டும். எனக்கு உன்னைக் காண்பிப்பாயாக!" என்று வேண்டினார்கள். அதற்கு அல்லாஹ்: "மூஸாவே! நீர் என்னை ஒருபோதும் காணமுடியாது. எனினும் நீர் இந்த மலையைப் பார்த்துக் கொண்டிரும். அது தன் இடத்தில் நிலைத்திருந்தால், அப்போது நீர் என்னைப்பார்ப்பீர்!" என்று கூறித்தடுத்தான்.
(அல் - அஃராப் 7 : 143)
எனவே, நபி (ஸல்) அவர்கள் கண்டார்கள் என்பது தமது அகக் கண்ணால் கண்டதைக் குறிக்குமே தவிர, நேரடியாகத் தமது புறக்கண்களால் கண்டதாகக் குறிப்பிடமாட்டாது. ஏனெனில், இவ்வுலகில் மனிதனது பலவீனம் காரணமாக, அல்லாஹ்வின் மகத்துவத்தையும், வல்லமையையும், யதார்த்த நிலையையும் நேரடியாகக் கண்டு அறிந்துகொள்ளும் அளவுக்கு அவனுக்கு சக்தியில்லை. எனினும், மறுமையில் சுவர்க்கவாசிகளுக்கு, தன்னைப்பார்த்து மகிழக்கூடிய அளவுக்கு அல்லாஹ் ஆற்றலை வழங்குவான். அதன் மூலம் அவர்கள் தம்மைப் படைத்தவனை நேரடியாகத் தமது புறக்கண்களால் கண்டு மகிழ்வர். அவ்வாறே மனிதனுடைய பருமன் இவ்வுலகில் காணப்படுவது போலன்றி மறுமையில் வித்தியாசமாக, பெரியதொரு படைப்பாகவே இருக்கும்.
அல்லாஹ் மிக அறிந்தவன்.
18. இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) கூறினார்கள்:
மறுமை நாளில் “மீஸான்” எனும் தராசு உண்டு, என நம்பிக்கை கொள்ள வேண்டும். மேலும், அடியான் அதில் மறுமையில் நிறுக்கப்படுவான் என்றும், அப்போது அவன் ஒரு ஈயின் இறக்கையளவுக்குக் கூடப் பாரமானவனாக இருக்கமாட்டான். ஏனெனில்
நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்:
மறுமை நாளில் உடல் பருத்த கொழுத்த மனிதன் ஒருவன் வருவான். அவன் ஒரு ஈயின் இறக்கையளவு எடை கூட அல்லாஹ்விடம் பெறமாட்டான். "மறுமை நாளில் அவர்களுக்கு எத்தகைய எடையும் அளிக்கமாட்டோம்" (அல்கஹ்ப் : 18 : 105)
எனும் வசனத்தை ஓதிக் கொள்ளுங்கள் என்றார்கள்.
(அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரழி)
(நூல் : புகாரி : 4729)
அவ்வாறே அடியார்களின் அமல்களும் நிறுக்கப்படும். இது தொடர்பாக ஆதாரபூர்வமான நபிமொழிகள் இடம்பெற்றுள்ளன. இவற்றை நம்பிக்கை கொள்ள வேண்டும். அதேவேளை இதனை மறுப்பவர்களைப் புறக்கணித்து விட்டு, அவர்களுடன் தர்க்கம் புரியாது இருந்துவிட வேண்டும்.
விளக்கம்:
மறுமை நாளை நம்புவது அஹ்லுஸ்ளஸுன்னாவின் அடிப்படைகளில் ஒன்றாகும். மேலும், மறுமையில் நடைபெறவுள்ள அனைத்து விடயங்களையும் அல்லாஹ் அறிவித்துத் தந்துள்ளான். அவற்றையும் ஈமான் கொள்ள வேண்டும். இவ்வாறு அல்லாஹ் அறிவித்துத் தந்துள்ள விடயங்களில் “மீஸான்” எனும் தராசும் ஒன்றாகும், என விசுவாசம் கொள்ள வேண்டும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
மறுமை நாளில் நீதமான தராசுகளையே நாம் ஏற்படுத்துவேம். எந்த ஆத்மாவும் சிறிதளவும் அநியாயம் செய்யப்பட மாட்டாது. அது ஒரு கடுகின் வித்தளவு இருப்பினும் அதையும் நாம் கொண்டுவருவோம். கணக்கெடுப்பதற்கு நாமே போதுமானவர்கள்.
(அல் அன்பியா :21:47)
அவ்வாறே அடியானும் மறுமையில் நிறுக்கப்படுவான்.
அல்லாஹ்கூறுகின்றான்:
மறுமை நாளில் அவர்களுக்கு எந்த பெறுமானத்தையும் நாம் அளிக்கமாட்டோம்.
(அல்கஹ்பு : 18 : 105)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மறுமை நாளில் உடல்பருத்த, கொழுத்த மனிதன் ஒருவன் வருவான். அவன் அல்லாஹ்விடம் ஒரு கொசுவின் இறைக்கையளவு பெறுமானம்கூடப் பெறமாட்டான்.
(அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரழி)
(நூல்: புகாரி : 4729)
உருவமற்ற அமல்கள் மறுமையில் உருவம் கொடுக்கப்பட்டு நிறுக்கப்படும் என ஒரு கருத்துள்ளது. இவ்வாறு உருவமற்றவைகளுக்கும் உருவமளிக்க அல்லாஹ் வல்லமையுள்ளவனாவான். எனவே, தொழுகை, நோன்பு, திக்ர் போன்ற அனைத்து அமல்களும் உருவம் கொடுக்கப்பட்டு, அவை நிறுக்கப்படவுள்ளன. அதே போன்று பாவச் செயல்களும் உருவங்கொடுக்கப்பட்டு, அவையும் நிறுக்கப்படவுள்ளன, இவ்வாறு நன்மைகள் ஒரு தட்டிலும், தீமைகள் ஒரு தட்டிலும் வைத்து நிறுக்கப்படவுள்ளன.
மேலும், நன்மை, தீமைகள் பதிவுசெய்யப்பட்ட ஏடுகளும், ஓலைகளும் தான் மறுமையில் (மீஸான்) தராசின் இருதட்டிலும் வைக்கப்பட்டு நிறுக்கப்படவுள்ளதாக சில அறிஞர்கள் கருதுகின்றனர். எனவே மேற்கூறப்பட்ட மூன்று நிலைகளிலும் மீஸான் தராசைப்பற்றி ஒவ்வொரு முஃமினும் நம்பிக்கை கொள்ள வேண்டும்.
அல்லாஹ் கூறுகின்றான்:
அந்நாளில் செயல்கள் நிறுக்கப்படுவது உண்மையாகும். யாருடைய நிறைகள் கனத்துவிடுகின்றதோ அவர்கள் தான் வெற்றியாளர்கள். மேலும், யாருடைய நன்மையின் நிறைகள் குறைந்துவிடுகின்றதோ, அவர்கள் தான் தமது வசனங்களுடன் அநியாயமாக நடந்து கொண்ட காரணத்தினால் தமக்குத் தாமே நஷ்டமிழைத்துக் கொண்டோராவர். (அல் அஃராப்: 07: 8,9)
மறுமையில் “மீஸான்” எனும் தராசு உண்டு என்பதற்கு மேற்கூறப்பட்ட அல்குர்ஆன் வசனங்களும் நபிமொழிகளும் போதிய ஆதாரங்களாகும். மீஸான் தராசு உண்டு என்பதையும், அதனை விசுவாசம் கொண்டு உண்மைப்படுத்துவது அவசியம் என்பதையும் விளக்குகின்ற இன்னும் பல ஆதாரங்கள் காணப்படுகின்றன.
அவற்றிற் சில வருமாறு:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைவனைத் துதிக்கும் இரண்டு வாக்கியங்கள் நாவுக்கு எளிதானவை; நன்மை தீமை நிறுக்கப்படும் தராசில் கனமானவை; அளவற்ற அருளாளனுக்குப் பிரியமானவையாகும். (அவை:) சுப்ஹானல்லாஹீ வபிஹம்திஹி சுப்ஹானல்லாஹில் அளிம். பொருள்: அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து அவனைத் தூயவன் எனத் துதிக்கிறேன். கண்ணியமிக்க அல்லாஹ்வைத் தூயவன் எனத் துதிக்கிறேன்.
(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி)
(நூல்கள்: புகாரி : 6406, 7563 முஸ்லிம்: 5224)
தத்துவதாதிகள் இதனை மறுக்கின்றனர். இவர்கள், சில்லறைக் கடைக்காரர்களுக்கும் வியாபாரிகளுக்கும்தான் தராசு தேவைப்படுகின்றது என்கின்றனர். இவ்விடயத்தில் இவர்களின் நிலைப்பாட்டைப் பற்றிப் பொருட்படுத்த வேண்டிய அவசியம் இல்லை, ஏனெனில் இவ்வாறு தராசுவைத்து அமல்களை நிறுப்பது நிச்சயமாக அல்லாஹ்வின் நேர்மைக்குப் போதிய சான்றாகும்.
19. அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) கூறுகின்றார்கள்:
நிச்சயமாக அல்லாஹ் மறுமையில் அடியார்களுடன் பேசுவான். அப்போது அடியார்களுக்கும் அவனுக்கும் இடையில் மொழிபெயர்ப்பாளர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். இதனை ஈமான் கொண்டு உண்மைப்படுத்துவது கடமையாகும்.
விளக்கம்:
நிச்சயமாக அல்லாஹ் மறுமையில் அடியார்களுடன் பேசுவான் என்று நம்புவது, மறுமை, மரணத்தின் பின் எழுப்படுதல், மறுமையில் ஒன்று திரட்டப்படுதல் போன்றவைகளை நம்புவதன் ஒரு பகுதியாகும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் மறுமை நாளில் உங்களில் ஒவ்வொருவருடனும் (தனித்தனியாகப்) பேசாமலிருப்பதில்லை. அப்போது அல்லாஹ்விற்கும் உங்களில் ஒருவருக்கும் இடையே மொழிபெயர்ப்பாளர் எவரும் இருக்கமாட்டார்கள்.
(அறிவிப்பவர்: அதில் பின் ஹாதிம் (ரழி))
(நூல்கள்: புகாரி : 1413, 3595, 6539 முஸ்லிம்: 1846 )
அப்போது ஒரு மொழியிலிருந்து இன்னுமொரு மொழிக்கு மொழிபெயர்ப்பதற்கு யாரும் தேவைப்படமாட்டாது. அனைவரும் விளங்கிப் புரிந்து கொள்ளக் கூடிய முறையில் அல்லாஹ் பேசுவான். அவன் தான் நாடுவது போன்று தனது அடியார்களுடன் பேசமுடியும் என்பது தெட்டத் தெளிவான விடயமாகும்.
பேசுதல் என்ற அல்லாஹ்வின் பண்பை ஆரம்பகாலம் முதல் பித்அத்வாதிகள் மறுத்து வருகின்றனர். இதனை மறுப்பவர்களில் ஜஹமிய்யாக்கள் பிரதானமானவர்களாவர்.
இது அல்லாஹ்வின் பண்புகளில் ஒன்று என்பதை ஸலபுஸ்ஸாபிஹீன்கள் ஆதாரபூர்வமாக உறுதிப்படுத்திக் கூறியுள்ளதுடன், இதனை மறுக்கின்ற ஜஹமிய்யாக்கள் போன்றோருக்கு மறுப்புக் கூறியும் உள்ளனர்.
அஹ்லுஸ் ஸுன்னா வல்ஜமாஅத்தினர் கூறுகின்றார்கள்: நிச்சயமாக அல்லாஹ் பேசக்கூடியவன். தான் நாடும் போது, நாடுபவர்கள் கேட்கக்கூடிய விதமாகப் பேசுவான். “பேசுதல்” என்பது அல்லாஹ்வின் பூரணத்துவத்தை எடுத்துக்காட்டுகின்ற, புகழுக்குரிய பூரணமான பண்புகளில் ஒன்றாகும்.
இறைவன் பேசமுடியாதவன் என்று கூறுவதானது இறைவன் குறைபாடுடையவன் என்றும், அவன் ஒரு ஊமை என்றும் கூறுவது போன்றதாகும்.
பனூ இஸ்ரவேலர்கள் ஒரு மாட்டை வணங்கி வந்தனர் அவர்களால் கடவுளாக வணங்கப்பட்டுவந்த இந்த மாடு, அவர்களுடன் பேசுகின்ற ஆற்றல் கூட அற்றது. என இதனை (மாட்டை) அல்லாஹ் இழிவாகப்பேசுகின்றான். அல்லாஹ் கூறுகின்றான்:
நிச்சயமாக, அது (மாடு அவர்களுடன் பேச மாட்டாது என்பதை அவர்கள் அறியவில்லயா?
(அல் அஃராப்: 07: 148)
எனவே, இத்தகைய பண்புகளை விட்டும் அல்லாஹ் மிகத் தூய்மையானவன்; குறைபாடுகளுக்கு அப்பாற்பட்டவன். அவனுடைய பேச்சு பூர்வீகமானது! எனவே, அவன் பேசக்கூடயவன். அவன் நினைக்கின்றபோதெல்லாம் பேசுவான். மேலும், "பேசுதல்" என்பது அல்லாஹ்வின் "தாத்" உடன் தொடர்பான, செயல்ரீதியான பண்புகளில் ஒன்றாகும்.
20. இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) கூறினார்கள்:
மறுமையில் “ஹெளழுல் கெளஸர்” எனும் சிறப்பு நீர்த்தடாகம் உண்டு என்பதை நம்பிக்கை கொள்ள வேண்டும். அதாவது நபி (ஸல்) அவர்களுக்கு மறுமையில் "ஹெளழுல் கெளஸர்” என்ற சிறப்பு நீர்த்தடாகம் உண்டு. அவருடைய (உம்மத்தினர்) சமுதாயத்தினர் அதனிடத்தில் வருவார்கள். அதனுடைய அகலம் ஒருமாத தூரமாகும். நீளமும் இதே அளவுதான். அதனுடைய பாத்திரங்களின் எண்ணிக்கை வானத்திலுள்ள நட்சத்திரங்களின் எண்ணிக்கையளவைப் போன்றதாகும். இது பற்றி ஏராளமான ஆதாரபூர்வமான செய்திகள் வந்துள்ளன.
விளக்கம்:
"ஹெளழுல் கெளஸார்” எனும் நீர்த்தடாகத்தை நம்புவது மறுமை நம்பிக்கையின் ஒரு பகுதியாகும். இதனைப் பற்றி ஏறக்குறைய 30 அல்லது 40 ஆதாரபூர்வமான செய்திகள் வந்துள்ளன.
அவற்றிற் சில வருமாறு:
1. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"அல்கெளஸர்” எனும் எனது தடாகம் (பரப்பளவில்) ஒரு மாதகாலப் பயணத் தொலைவு கொண்டதாகும். அதன் அனைத்து மூலைகளும் சம அளவு கொண்டவையாகும். அதன் நீர் வெள்ளியை விட வெண்மையானதாகும். அதன் மணம் கஸ்தூரியைவிட நறுமணம் வாய்ந்ததாகும். அதன் விளிம்பிலிருக்கும் கூஜாக்கள் எண்ணிக்கையில் விண்மீன்கள் போன்றவையாகும். யார் அதன் நீரை அருந்துகிறாரோ அவர் அதன்பின் ஒருபோதும் தாகமடையமாட்டார்.
(அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அப்ர் பின் ஆஸ் (ரழி) (நூல்கள் :புகாரி: 6597, முஸ்லிம்: 4599)
2. அபூதர் (ரழி) அவர்கள் கூறியதாவது:
நான் (நபி (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! "அல்கெளஸர்" எனும் அத்தடாகத்தின் கோப்பைகள் என்ன? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! அதன் கோப்பைகள் (எண்ணிக்கையானது) மேகமோ, நிலவோ இல்லாத இரவில் காட்சியளிக்கும் விண்மீன்களின் எண்ணிக்கையை விட அதிகமானதாகும். அவையே சுவர்க்கத்தின் கோப்பைகளாகும். யார் அத்தடாகத்தில் அருந்துகிறாரோ அவருக்கு இறுதிவரை தாகமே ஏற்படாது. அதில், சுவர்க்கத்திலிருந்து இரு குழாய்கள் வழியாக நீர் வந்து சேர்கிறது. அதில் அருந்துபவருக்குத் தாகமே ஏற்படாது. அத்தடாகத்தின் அகலம் அதன் நீளத்தைப் பேன்று (சம அளவில்) இருக்கும். அதன் தொலைதூரம் (அன்றைய ஷாம் நாட்டிலிருந்து) "அம்மானு"க்கும், "அய்லா"வுக்கும் இடையேயுள்ள தொலை தூரத்தைக் கொண்டதாகும். அதன் நீர் பாலைவிட வெண்மையனது தேனைவிட மதுரமானது என்று கூறினார்கள்.
(நூல்: முஸ்லிம்: 4608)
3. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் உங்களுக்கு முன்பே (அல்கெளஸர்) தடாகத்திட்குச் சென்று உங்களுக்கு நீர்புகட்டக் காத்திருப்பேன்.
(அறிவிப்பவர்: ஜூன்துப் (ரழி) அவர்கள்)
(நால்: புகாரி: 6589, முஸ்லிம்: 4597)
4. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் உங்களுக்கு முன்பே "அல்கவ்ஸர்" தடாகத்திற்குச் சென்று (உங்களுக்கு நீர்புகட்டக் காத்திருப்பேன். யார் என்னிடம் வருகிறாரோ அவர் (அத்தடாகத்தின் நீரை) அருந்துவார். யார் அதை அருந்துகிறாரோ அவருக்கு ஒரு போதும் தாகமே ஏற்படாது. (அத்தடாகத்தினருகில்) என்னிடம் சிலர் வருவார்கள். அவர்களை நான் அறிந்து கொள்வேன் என்னையும் அவர்கள் அறிந்து கொள்வார்கள். பிறகு எனக்கும் அவர்களுக்கும் இடையே தடை ஏற்படுத்தப்படும்.
(அறிவிப்பவர்: அபூதர் (ரழி) அவர்கள்)
(நூல்கள்: புகாரி: 7050,7051 முஸ்லிம்: 4598)
5. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"நான் உங்களுக்கு முன்பே (கவ்ஸர் எனும்) தடாகத்திற்குச் சென்று (உங்களுக்கு நீர்புகட்டக் காத்திருப்பேன்) அப்போது மக்களில் சிலருக்காக நான் வாதாடுவேன். அப்போது நான் இறைவா! (இவர்கள்) என் தோழர்கள்; என் தோழர்கள் என்பேன். அதற்கு "உமக்குப் பின்னர் இவர்கள் (மார்க்கத்தில்) புதிது புதிதாக என்னென்ன செய்தார்கள் என்பதை நீர் அறிய மாட்டீர்” என்று செல்லப்படும்.
(அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள்)
(நூல்கள்: புகாரி: 6576, முஸ்லிம்: 4604)
மேற்கூறப்பட்ட நபிமொழிகளில் இந்த நீர்த்தடாகத்துடன் தொடர்பான அனைத்து அம்சங்களும் சுருக்கமாகவும், தெளிவாகவும் இடம்பெற்றுள்ளன. நபி (ஸல்) அவர்களுக்குரிய இந்த தடாகத்தில் நீர் அருந்துவதற்காக அவரது உம்மதினர் அங்கு வருவார்கள். எனினும், சிலர் அவரது உம்மத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தும் கூட அங்கு வரமுடியாமல் தடுக்கப்படுவார்கள். இந்த உம்மத்திற்குரிய அடையாளங்கள் அவர்கள் மீது தென்படும். இவர்கள் (வுழூவின் அடையாளத்தால்) உறுப்புக்கள் ஒளிவீசியவண்ணம் காணப்படுவார்கள். இதன் மூலம் நபியவர்கள் இவர்களை (தமது உம்மதினர் என்று) அடையாளம் கண்டு கொள்வார்கள். இவ்வாறிருந்தும் நீர் அருந்துவதற்காக அங்கு வரமுடியாமல் தடைசெய்யப்பட்டமைக்கான காரணம் அவர்கள் நபிவழியைப் புறக்கணித்துவிட்டு,(பித்அத்தான செயல்களில் ஈடுபட்டு) வாழ்ந்தமையாகும்.
இந்தத் தடாகத்தின் அகலம் ஒரு மாதத் தூரம் ஆகும். இதனுடைய நீளமும் இதே அளவு ஒரு மாதத் தூரம்தான். (எனவே, தடாகத்தின் 4 பக்கங்களும் சமஅளவு தூரத்தைக் கொண்டதாகும். இன்னும் சில அறிவிப்புக்களில், "இதனுடைய நீளமும் அகலமும் யமனிலுள்ள 'அதன்' எனும் நகரத்திற்கும் ஷாம் தேசத்திலுள்ள 'அப்யன்' நகரத்திற்குமிடைப்பட்ட தூரத்தின் அளவாகும். மேலும், வானத்திலுள்ள விண்மீன்களின் எண்ணிக்கையளவுக்கு அதன் ஓரங்களில் பாத்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. சுவனத்திருந்து இரண்டு குழாய்கள் வழியாக அதில் நீர்
கொட்டிக் கொண்டிருக்கின்றது. அதனுடைய நீர் பாலைவிட வெண்மையானதும், தேனைவிட இனிமையானதும் ஆகும். எவரேனும், இதிலிருந்து ஒரு மிடர் தண்ணீரைக் குடித்தால் அவர் சுவனத்தில் நுழையும் வரை தாகிக்கவே மாட்டார். அங்கு முஃமின்கள் மாத்திரமே நீர் அருந்த வருவர். நயவஞ்சகர்களும், பித்அத்காரர்களும், காபிர்களும் அங்கு நீர்அருந்த வரமுடியாமல் தடுக்கப்படுவர்” அதன் பரப்பளவு 'அதனுக்கும், யமனு'க்குமிடைப்பட்ட பயணத்தூரம் போன்றதாகும்.
இதன் மூலம், அன்றைய கால மக்களிடையே இவ்விரு பிரதேசங்களுக்குமிடையிலான பயணத்தூரத்தைக் கடந்து செல்ல மாதகாலம் தேவைப்பட்டது என அறியப்பட்டிருந்தமை கவனிக்கத்தக்கதாகும்.
21. இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) கூறினார்கள்:
"கப்ர் வேதனையை விசுவாசம் கொள்ள வேண்டும். நிச்சயமாக இந்த உம்மத்தினர் கப்ருகளில் குழப்பங்களுக்குள்ளாக்கப்படுவர். அதில், ஈமான், இஸ்லாம் பற்றி விசாரிக்கப்படுவர். மேலும், படைத்துப்பரிபாலித்தவன் (ரப்பு) யார்? நபி யார்? போன்ற கேள்விகள் கேட்கப்படுவர். அல்லாஹ் நாடுகின்ற போது, நாடுகின்றவாறு முன்கர், நகீர் ஆகிய இரு மலக்குகளும் அவர்களிடம் கேள்விகணக்குக் கேட்பதற்காக வருவர், இதனை ஈமான் கொள்வதும், உண்மைப்படுத்துவதும் கடமையாகும்.
விளக்கம்:
கப்ர் வேதனையை நம்பிக்கை கொள்வது மறுமையை நம்புவதன் ஒரு அங்கமாகும். ஒருவரது உடலிலிருந்து உயிர் பிரிகின்ற நேரத்திலிருந்து, மரணத்தின் பின்னர் நிகழும் அனைத்து விடயங்களும் மறுமையுடன் தொடர்பான அம்சங்களாகும். இதனால் தான், யார் மரணித்துவிடுகின்றாரோ அவருக்குரிய மறுமை நாள் ஆரம்பித்துவிடுகிறது என்றும், அவர் மரணத்தின் பின்னர் உள்ள வாழ்க்கையை ஆரம்பித்துவிடுகிறார் என்றும் கூறப்படுகிறது. மரணத்தின் பின்னர் நிகழக்கூடிய கப்ர் வேதனை மற்றும் அதில் கிடைக்கவுள்ள இன்பம், துன்பம் போன்ற அனைத்தையும் நம்ப வேண்டும். இது பற்றி ஏராளமாக அல்குர்ஆன் வசனங்களும், ஆதாரபூர்வமான நபிமொழிகளும் இடம்பெற்றுள்ளன. அவற்றிற் சில வருமாறு:
1. நபி (ஸுல்) அவர்கள் கூறினார்கள்:
கப்ர் வேதனையை விட்டும் அல்லாஹ்வைக் கொண்டு நீங்கள் பாதுகாப்புத் தேடுங்கள். நிச்சயமாக கப்ர் வேதனை உண்மையானதாகும். (நூல்) (உம்மால்: கன்ஸுல் அல்ஹிந்தீ: 41510)
2. மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மறுமையின் நிலைகளில் முதலாவது நிலை கப்ர் வாழ்க்கையாகும். இதிலிருந்து ஒருவர் தப்பிவிட்டால், அதற்குப் பின்னர் உள்ள நிலைகள் அவருக்கு மிக இலகுவானதாகும். கப்ரில் ஒருவர் தப்பாவிட்டால். அதற்குப் பின்னர் உள்ள நிலைகள் அவருக்கு மிகக் கஷ்டமானதாக அமையும்.
(அறிவிப்பவர்: உஸ்மான (ரழி) அவர்கள்.)
(நூல்கள்: ஸஹீஹுத் திர்மிதி: 1878 இப்னு மாஜா: 4267)
3. இப்னு அப்பாஸ் (ரழி) கூறியதாவது:
இரு கப்ருகளைக் கடந்து நபி (ஸல்) அவர்கள் சென்ற போது, இவ்விருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். ஆனால், மிகப்பெரும் பாவத்திற்காக வேதனை செய்யப்படவில்லை எனக்கூறினார்கள்.
(நூல்: புகாரி: 1376)
4. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இந்தச்ச முதாயம் மண்ணறையில் சோதிக்கப்படுகின்றது. நீங்கள் (இறந்தவர்களைப்) புதைக்காமல் விட்டுவிடுவீர்கள் என்ற அச்சம் மட்டும் எனக்கில்லையாயின், நான் செவிட்டு மண்ணறையின் வேதனையை உங்களுக்கும் கேட்கச் செய்யும் படி அல்லாஹ்விடம் பிரார்த்தித்து இருப்பேன்.
(அறிவிப்பவர்: ஸைத் பின் ஸாபித் (ரழி)
(நூல்: முஸ்லிம்: 5502)
5. அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (என்னிடம்) "நீ அறிவாயா சவக்குழிகளில் நீங்கள் வேதனை செய்யப்படுவீர்கள் என இறைவனால் எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது”
என்று கூறினார்கள்.
(நூல்: புகாரி: 86, முஸ்லிம்: 1025)
கப்ரில் விசாரணைக்காக முன்கர், நகீர் எனும் இரு மலக்குகள் வருவார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரு பயங்கரமான வானர்கள் வந்து, "உனது அதிபதி யார்?”. . . . எனக் கேட்பார்கள்.
(அறிவிப்பவர்: அல்பரா பின் ஆஸிப் (ரழி) அவர்கள்)
(நூல்: அபூதாவூத்: 4753)
உங்களைப் படைத்தவன் யார்? உங்கள் நபி யார்? உங்கள் மார்க்கம் என்ன போன்றவைகளை அவ்விரு மலக்குகளும் விசாரிப்பர். மேலும், முஃமின்களுக்கு, அவர்களுடைய கப்ருகள் விசாலமாக்கிக் கொடுக்கப்படும், காபிர்களுக்கு, அவர்களின் கப்ருகள் நெருக்கடியாக்கப்படும். இவர்களின் இருபக்க விலா எழும்புகளும் ஒன்றோடொன்று சேரும் வரை கப்ரு நெருக்கும்.
எனவே, கப்ர் சுவனப்பூஞ்சோலைகளில் ஒன்றாகவோ, அல்லது நரகப்படுகுழிகளில் ஒன்றாகவோ அமைந்து விடும். இது எல்லா மையித்திற்குமுரிய பொதுவான நிலையாகும். கப்ருகளில் அடக்கப்பட்டாலும் அல்லது அடக்கப்படாமல் மிருகங்கள் சாப்பிட்டு விட்டாலும் இதே நிலைதான். அதே போல் மரணித்தவரின் உடல் எரித்துச் சாம்பலாக்கப்பட்டு, சாம்பல் காற்றில் பறக்கவிடப்பட்டாலும் அல்லது தரையிலோ கடலிலோ விடப்பட்டாலும் சரி. எந்த நிலையிலும் ஒவ்வொருவருக்குமுரிய தண்டனையை, அல்லது இன்பத்தை அவரவருக்குச் சேர்ப்பதற்கு அல்லாஹ் வல்லமையுள்ளவன் ஆவான். மரணித்த பின்னரும், "பர்ஸக்" வாழ்விலும் உள்ள சட்டங்கள், விசாரனைகள் யாவும் ஆன்மாவுடன் நிகழும் உயிருடன் தொடர்பானவைகளாகும். உயிர்கள் - உடலிலிருந்து பிரிந்த பின்னர் - (அழியாது) நிலைத்திருக்கும். உடம்புகள் அழிந்துவிட்டாலும் கூட, தண்டனை, இன்பம் முதலியவற்றின் ஒரு பகுதியையேனும் கண்டிப்பாக அவை சுவைத்தே தீரும். எது எவ்வாறாயினும் ஒவ்வொரு முஃமினும் மரணத்தின் பின்னர் நடைபெறவுள்ள எல்லா விடயங்களையும் நம்பிக்கைகொள்ள வேண்டும். மேலும், அதன் பின்னருள்ள வாழ்க்கைக்காக, குறிப்பாக மறுமையின் அமளிதுமளிகளிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காகத் தேவையான முன்னேற்பாடுகளாக அமல்கள் செய்வதற்கும் கப்ர் பற்றிய நம்பிக்கையே துணைசெய்யும்.
22. அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) கூறினார்கள்:-
நபி (ஸல்) அவர்கள் மறுமையில் (சபாஅத்) சிபாரிசு செய்வார்கள் என நம்பிக்கை கொள்ள வேண்டும். பாவிகள் எரிந்து கரியான பின்னர், அல்லாஹ் அவர்களைப் பரிந்துரையின் மூலம் விடுதலை செய்வான். சுவர்க்க வாசலுக்கருகில் ஓடுகின்ற - நஹ்ருல் ஹயாத் எனும் உயிர்கொடுக்கும் நதியில் அவர்கள் போடப்பட்டு, அல்லாஹ் நாடியவாறு, அவன் நாடுகின்ற போது அவர்களுக்கு உயிரளிக்கப்படும். இது பற்றி ஆதாரபூர்வமான நபி மொழிகள் இடம்பெற்றுள்ளன. எனவே, இதனை நம்பிக்கை கொள்வதும் உண்மைப் படுத்துவதும் கடமையாகும்.
விளக்கம்:
சபாஅத்தை நம்புவது மறுமை நம்பிக்கையின் ஒரு பகுதியாகும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறுமையில் நான் சிபாரிசு செய்வேன் எனது சிபாரிசு ஏற்றுக் கொள்ளப்படும்.
(நூல்: முஸ்லிம்)
இது நபி (ஸல்) அவர்களுடைய தனித்துவங்களில் ஒன்றாகும். நபி (ஸல்) அவர்கள் தமது உம்மத்தினருக்கும், பொதுவாக அனைத்துப் படைப்பினங்களுக்கும் சிபாரிசு செய்வார்கள் என ஆதாரபூர்வமான பல செய்திகள் இடம்பெற்றுள்ளன.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
1. (மறுமை நாளில் விசாரணை முடிந்தபின்) சொர்க்க வாசிகள் சுவர்க்கத்திலும், நரகவாசிகள் நரகத்திலும் நுழைந்த பின் அல்லாஹ் "எவரது உள்ளத்தில் கடுகளவு ஈமான் உள்ளதோ அவரை நரகத்திலிருந்து வெளியேற்றி விடுங்கள்.” என்று கூறுவான். உடனே அவர்கள் கருகிய நிலையில் வெளியேறுவார்கள். அப்போது அவர்கள் கரிக்கட்டைகளாகக் காட்சியளிப்பார்கள். பின்னர் அவர்கள் நஹ்ருல் ஹயாத்- எனும் (ஜீவநதியில் போடப்படுவார்கள். உடனே அவர்கள் 'சேற்று வெள்ளத்தில்' அல்லது 'வெள்ளத்தின் கறுப்புக் களிமண்ணில் விதை முளைப்பதைப் போன்று (புதுப்பொலிவுடன்) நிறம் மாறிவிடுவார்கள். அந்த வித்துவிலிருந்து வரும் புற்பூண்டுகள் மஞ்சள் நிறத்தில் (பார்ப்பதற்கு அழகாகவும், காற்றில்) அசைந்தாடியதாக(வும்) முளைப்பதை நீங்கள் கண்டதில்லையா?
(அறிவிப்பவர்: அபூஸஈத் அல்குத்ரீ (ரழி)
(நூல்கள்: புகாரி: 22, 6560, முஸ்லிம்: 299)
( ஹதீஸ்)
(அறிவிப்பவர்: அனஸ் (ரழி))
(நூல்கள்: புகாரி:7510, 7440, முஸ்லிம்: 327)
( ஹதீஸ்)
(புகாரி: 4715, முஸ்லிம்: 300)
மஹ்ஷர் வெளியில் அதன் அகோரம் தாங்க முடியாத நிலையில் விசாரணைக்காக இறைவனின் வருகையை மனிதர்கள் எதிர்பார்த்திருப்பர். அப்போது உலுல் அஸ்ம்களான முறையே ஆதம் (அலை), நூஹ் (அலை),
இப்ராஹீம் (அலை), மூஸா (அலை, ஈஸா (அலை) ஆகியோரிடம் மனிதர்கள் சென்று அல்லாஹ்விடம் பரிந்துரை செய்யுமாறு கோருவர். இவ்வேளையில் நபிமார்கள் அனைவரும் காரணங்கள் கூறி மறுத்துவிடுவர். எனவே, இறுதியாக மனிதர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வருவார்கள். இவ்வேளையில் முஹம்மத் (ஸல்) அவர்கள் “அதற்காக உங்களுக்கு சிபாரிசு செய்வதற்காக நான் இருக்கிறேன்" எனக் கூறி, நபியவர்கள் அல்லாஹ்விடம் அனுமதி கோருவார்கள். உடனே, அதற்கு அல்லாஹ் அனுமதி வழங்குவான். இந்த அனுமதியின் மூலம் ஏனைய நபிமார்களை விட நபி முஹம்மத் (ஸல்) அவர்களுடைய சிறப்பு மேலோங்கிவிடும். அப்போது "அல்மகாமுல் மஹ்மூத் எனும் சிறந்த அந்தஸ்தையும் அவர் அடைந்து கொள்வார். இது நபியவர்களுக்கு அல்லாஹ் வாக்களித்த அந்தஸ்துக்களில் ஒன்றாகும்.
அல்லாஹ் கூறுகின்றான்:
உமது இறைவன் (புகழப்பட்ட இடமான) மகாமுல் மஹ்மூதில் உம்மை எழுப்புவான்
(அல்இஸ்ரா.: 17: 79)
மேலும், நபி (ஸல்) அவர்கள்களின் சிபாரிசை அங்கீகரித்து தீர்ப்பு நாளில் விசாரணைக்காக, மலக்குகள் அணிவகுத்த நிலையில் அல்லாஹ் வருவான்.
பரிந்துரை தொடர்பாக இடம் பெற்றுள்ள ஹதீஸ்களின் அடிப்படையில் ஷபாஅத் 6 வகைப்படும். அவையாவன:-
1. தீர்ப்பு நாளின் விசாரணையை ஆரம்பிக்கக் கோரி இடம்பெறும் முதலாது சிபாரிசு (பெரிய ஷபாஅத்)
2. சுவர்க்கவாசிகள் அதில் நுழைவதற்காக, அதனைக் திறக்குமாறு கோரி, சிபாரிசு செய்தல். நபி (ஸல்) அவர்களுக்காகவே சுவர்க்கம் முதலில் திறக்கப்படும்.
3. சுவர்க்கவாசிகள் சிலரின் அந்தஸ்துக்களை உயர்த்தக் கோரி சிபாரிசு செய்தல்.
4. நரகிற்குத் தகுதியான சிலர் அதில் தள்ளப்படாதிருப்பதற்காக சிபாரிசு செய்தல்.
5. அவரது சிறிய தந்தை அபூதாலிப் போன்ற சில காபிர்களுக்குத் தீர்மானிக்கப்பட்ட தண்டனையைக் குறைக்கக் கோரி சிபாரிசு செய்தல்.
குறிப்பு: பொதுவான சிபாரிசு, இது நபி (ஸல்) அவர்களுக்கும், ஏனைய நபிமார்கள், ஸாலிஹீன்கள், போன்ற அனைவருக்கும் பொதுவானதாகும். இவர்களின் பரிந்துரையின் மூலம், தங்கள் பாவத்தின் காரணமாக நரகில் நுழைந்துவிட்ட முஃமின்கள் அவர்கள் எரிந்து சாம்பலாகிவிட்ட பின்னர், அதிலிருந்து வெளியேற்றப்படுவார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நரகத்திற்கேயுரியவர்களான நரகவாசிகள் நரகில் இறக்கவும்மாட்டார்கள்; வாழவும் மாட்டார்கள்; ஆனால், "தம் பாவங்களால்" அல்லது குற்றங்களால் நரக நெருப்பிற்கு ஆளான மக்களை உடனே இறைவன் இறக்கச் செய்துவிடுவான். அவர்கள் (எரிந்து) கரிக்கட்டையாக மாறிவிடும் போது (அவர்களுக்காகப்) பரிந்துரை செய்ய (சுவர்க்கவாசிகளான) முஃமின்களுக்கு அனுமதி வழங்கப்படும். உடனே அவர்கள் தனித்தனிக் கூட்டங்களாகக் கொண்டு வரப்பட்டு, சொர்க்க நதிகளின் படுகையில் பரப்பி வைக்கப்படுவர். பிறகு (சுவர்க்கத்திலிருப்பவர்களிடம்) "சுவர்க்கவாசிகளே! அவர்கள் மீது தண்ணீரை ஊற்றுங்கள்” என்று கூறப்படும். (அவ்வாறே ஊற்றப்படும், உடனே அவர்கள் வெள்ளத்தில் மிதந்து வரும் விதைப்பயிர் முளைப்பதைப் போன்று (புதுப்பொலிவுடன்) மாறிவிடுவார்கள்.
(அறிவிப்பவர்: அபூஸஈத் அல்குத்ரீ (ரழி)
(நூல்கள்: புகாரி: 6560, முஸ்லிம்: 304, 305, 306)
மேலும், பல கூட்டத்தினரை எவருடைய பரிந்துரையும் இன்றி, தனது கருணையினாலும், கிருபையினாலும் மாத்திரம் நரகிலிருந்து வெளியேற்றுவான். ஆனால், மறுமையில் இணைவயைப்பாளர்களுக்கு பரிந்துரைகள் பயன் அளிக்கமாட்டாது. ஏனெனில் அல்லாஹ் கூறுகின்றான்:
ஆகவே, பரிந்துரை செய்பவர்களின் பரிந்துரை அவர்களுக்குப் பயனளிக்கமாட்டாது.
(அல்முத்தஸ்ஸிர்: 74: 48)
முஃதஸிலாக்கள், கவாரிஜ்கள் போன்ற பிரிவினர்கள், பரிந்துரையின் காரணமாக பெரும்பாவிகள் நரகத்திலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்ற விடயத்தை மறுக்கின்றனர். தண்டனைகள் தொடர்பாக இடம்பெற்றுள்ள சட்டம் சம்பந்தமான வசனங்களுக்கு முன்னுரிமை வழங்குவது இவர்களுடைய மத்ஹபின் அடிப்படைகளில் ஒன்று. இதன் அடிப்படையில், சிபாரிசின் காரணமாக பெரும்பாவிகள் வெளியேற்றப்படுவதாகக் கூறும் ஹதீஸ்களை மறுக்கின்றனர்.
23. அஹ்மத் பின் (ரஹ்) கூறினார்கள்:
தஜ்ஜால் தோன்றுவான். அவனுடைய இருகண்களுக்குமிடையே “காபிர்” நிராகரிப்பவன் என எழுதப்பட்டுள்ளது பேன்ற விடயங்களை விசுவாசம் கொள்ள வேண்டும். இது தொடர்பாக பல நபிமொழிகள் இடம்பெற்றுள்ளன. இவை என்றோ ஒரு நாள் நடைபெற்றே தீரும் என்பதையும் நம்பிக்கை கொள்ள வேண்டும்.
24. மர்யம் அவர்களின் மைந்தனாகிய ஈஸா (அலை அவர்கள் இறங்கிவந்து, டமஸ்கஸ் நகரிலுள்ள “பாபுலூத்” எனுமிடத்தில் வைத்து தஜ்ஜாலைக் கொலை செய்வார்கள்.
விளக்கம்:-
இது மறைவான விடயங்களை விசுவாசிப்பதன் ஒரு பகுதியாகும். இது போன்று எதிர் காலத்தில் நிகழவுள்ள மறைவான விசயங்களை நபி (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்துள்ளார்கள். எனவே, இவைகளை நம்பிக்கை கொண்டு, உண்மைப்படுத்துவது கடமையாகும். ஏனெனில், இவை தொடர்பாக பல அறிவிப்பாளர் தொடர்வரிசைகள் கொண்ட (முதவாதிர் வகையைச் சேர்ந்த) ஆதாரபூர்வமான செய்திகள் பதிவாகியுள்ளன. தஜ்ஜால் பற்றி இடம்பெற்றுள்ள செய்திகளைப் பார்க்கும் போது, இவன் ஒரு மனிதன் என்பதும் வலக்கண் குருடன் என்பதும் தெளிவாகத் தெரிய வருகிறது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எல்லா இறைத்தூதர்களும் தம்சமுதாயத்தினரை மகா பொய்யனான ஒற்றைக் கண்ணன் (தஜ்ஜால்) குறித்து எச்சரிக்காமல் இருந்ததில்லை. அறிந்து கொள்ளுங்கள். அவன் ஒன்றைக் கண்ணன் ஆவான். ஆனால், உங்கள் இறைவன் ஒற்றைக் கண்ணன் அல்லன். அந்தப் பொய்யனுடைய இரு கண்களுக்கிடையே குஃப்ர் (இறைமறுப்பாளன்) காபிர் என்று தனித்தனி எழுத்துக்களில் எழுதப்பட்டிக்கும்.
(அறிவிப்பவர்: அனஸ் (ரழி) அவர்கள்.)
(நூல்கள்: புகாரி:7131, 7408 முஸ்லிம்: 5620)
இவனுடைய வருகை ஒரு (பித்னா) குழப்பமாகும். அதிகமானோர் இவனுடைய குழப்பங்களுக்கு ஆளாகிவிடுவர் அல்லாஹ் சத்தியத்தைப் பின்பற்றி வந்தவர்களை தஜ்ஜாலின் குழப்பங்களிலிருந்து பாதுகாப்பான். எனவே, இவர்கள் தஜ்ஜாலின் குழப்பங்களில் சிக்கிக் கொள்ளமாட்டார்கள். மேலும், இவர்கள் இவன் ஒரு பெரும் பொய்யன் என்பதையும் அறிந்து கொள்வர். இதனால் தான் இவனுக்கு தஜ்ஜால் என்று பெயர் சொல்லப்படுகின்றது. தஜ்ஜால் என்ற வார்த்தை அதிகம் பொய்யுரைப்பவன், பெரும் குழப்பக்காரன் என்று பொருள் தரும்.
மறுமையின் பெரிய அடையாளங்களில் ஒன்றான தஜ்ஜாலின் வருகைபற்றி ஏராளமான ஆதாரபூர்வமான நபிமொழிகள் வந்துள்ளன. இமாம் இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள், இவற்றைத் தமது “அல்பிதாயா வந்நிஹாயா” எனும் வரலாற்று நூலின் முதலாவது பாகத்தில் தொகுத்து வழங்கியுள்ளார். ஒவ்வொரு தொழுகையிலும் தஷஹ்ஹுத்- அத்தஹிய்யாத்- ஓதியபின்னர், ஸலாம் கொடுக்க முன்னர் தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்து பாதுகாப்புத் தேடுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள். அந்த அளவுக்கு தஜ்ஜாலின் வருகை ஒரு மாபெரும் குழப்பமாகக் காணப்படும். நம் அனைவரையும் அல்லாஹ் பாதுகாப்பனாக!
'தான் கடவுள் என்று வாதிடுவான். இவன் அண்டப் புழுகன்! வழமைக்கு மாற்றமான - அதிசயமான- பல நிகழ்வுகளை அல்லாஹ் இவன் மூலம் நிகழ்த்துவான். இவைகூட குழப்பமாகவும், சோதனையாகவுமே காணப்படும். அவ்வாறே, நபி ஈஸா (அலை) அவர்களின் வருகை பற்றியும் பல நபி மொழிகள் காணப்படுகின்றன. இவையும் பல அறிவிப்பாளர் தொடர்வரிசையினூடாக வந்துள்ள ஆதார பூர்வமான செய்திகளாகும். இவற்றை இமாம் இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் தமது அல்குர்ஆன் விரிவுரை நூலான “தப்ஸீருல் குர்ஆனில் அளிம்” எனும் நூலில் வேதத்தையுடையோரில் எவரும் (அவர் மீண்டும் பூமிக்கு வந்து) அவர் மரணிப்பதற்கு முன்னரே அவரை நம்பிக்கை கொள்ளாமல் இருக்கமாட்டார்கள்.
(அந்நிஸா: 04: 159)
எனும் வசனத்தின விளக்கவுரையில் ஒன்று திரட்டியுள்ளார். நபி ஈஸா (அலை) அவர்கள் கடைசி காலத்தில் இறங்கி வருவார் என்பதும், அவர் மரணிக்க முன்னர் கிறிஸ்தவர்கள் அனைவரும் அவர்களை நிச்சயமாக விசுவாசம் கொள்வார்கள் என்பதுமே மேற்படி வசனத்தின் விளக்கமாகும்.
இவர் டமஸ்கஸ் பள்ளிவாசலிலுள்ள வெள்ளை மனாராவுக்கு அருகில் இறங்குவார். மேலும், இவர் "பாபுலூத்” எனுமிடத்தில் வைத்து தஜ்ஜாலை கொலை
செய்வார். மேலும், இவர் முஸ்லிம்கள் மத்தியில் ஒரு நேர்மையான ஆட்சியாளராகக் திகழ்வார். தமது பெயரால் கிறிஸ்தவர்கள் வணங்கி வந்த சிலுவைகளை உடைப்பார். அதே போன்று அவர்கள் சாப்பிடுகின்ற பன்றிகளையும் கொலை செய்வார். மேலும், காபிர்கள் இஸ்லாமிய அரசுக்கு செலுத்திவருகின்ற "ஜிஸ்யா” எனும் வரியையும் நீக்கிவிடுவார். எனவே, அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலைக்கு அல்லது யுத்தத்திற்குத் தயாராக வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவர். இதன் பின்னர் அல்லாஹ் நாடியவாறு இஸ்லாம் உலகத்தில் பரவத் தொடங்கிவிடும். அவ்வேளை உலகத்தில் செல்வம் பல்கிப் பெருகும். பூமி தமக்குள் புதைத்துவைத்துக் கொண்டுள்ள செல்வங்கள் அனைத்தையும் வெளியாக்கிவிடும். இவர் பூமியில் ஏழாண்டு காலம் வாழ்ந்து மரணிப்பார். முஸ்லிம்கள் அவர் மீது ஜனாஸாத் தொழுகை நடத்தி அடக்கம் செய்வர்.
மேலும், இவர் (கிறிஸ்தவர்கள் விசுவாசிப்பது போன்று) ஏற்கனவே, கொலை செய்யப்படவில்லை. மாறாக, அல்லாஹ் இவரைத் தன்னளவில் உயர்த்திக் கொண்டான்.
அல்லாஹ் கூறுகின்றான்:
மேலும், அல்லாஹ்வின் தூதராகிய மர்யமின் மகன் ஈஸா மஸீஹை நாமே கொலை செய்தோம் என்று அவர்கள் கூறியதினாலும் (சபிக்கப்பட்டனர்.) அவர்கள் அவரைக் கொலை செய்யவும் இல்லை; அவரைச் சிலுவையில் அறையவும் இல்லை. மாறாக, அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான். நிச்சயமாக அவர் விசயத்தில் கருத்துவேறுபாடு கொண்டோர் அவர்பற்றி சந்தேகத்திலேயே இருக்கின்றனர். வெறும் யூகத்தைப் பின்பற்றுவதைத் தவிர அவரைப்பற்றி எவ்வித அறிவும் அவர்களுக்கு இல்லை. உண்மையாக அவர்கள் அவரைக் கொலை செய்யவில்லை. மாறாக, அவரை அல்லாஹ் தன்பக்கம் உயர்த்திக் கொண்டான். அல்லாஹ் யாவற்றையும் பிகைத்தவனாகவும் ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.
(அந்நிஸா: 4: 157,158)
எனவே அவர் திரும்பவும் உலகிற்கு வரும்போது வானத்திலிருந்தே இறங்கிவருவார். இவை அனைத்தும் எதிர் காலத்தில் நிச்சயமாக நடைபெறும் என்பதை அனைத்து முஸ்லிம்களும் விசுவாசம் கொள்ள வேண்டும். எனினும் இவை எப்போது நடைபெறும் என்பதை அல்லாஹ் மாத்திரமே மிக அறிந்தவன்.
25. அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) கூறினார்கள்:
"ஈமான்" திருக்கலிமாவை நாவினால் மொழிந்து, அதன் அடிப்படையில் அமல் செய்வதாகும். மேலும், ஈமான் கூடிக் குறையக்கூடியது. இதனையே நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்:
"முஃமின்களில் பூரணமான ஈமானுடையவர், அவர்களில் சிறந்த நற்குணமுடையவர் ஆவார்.”
(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி)
(நூல்: அபூதாவூத் 4682)
விளக்கம்:
ஈமான் என்றபதம் அரபு மொழியில், ஒரு விடயத்தை உண்மைப்படுத்தல், உறுதிப்படுத்தல் என்று பொருள்படும். அல்லாஹ் கூறுகின்றான்:
நீங்கள் எம்மை நம்புவோராக இல்லை.
யூஸூஃப்: 12: 17)
பரிபாஷையில்: திருக்கலிமாவை நாவினால் மொழிந்து, அதனை உள்ளத்தால் உறுதியாக நம்பிக்கை கொண்டு, அந்த நம்பிக்கையின் அடிப்படையில் உறுப்புக்களால் அமல் செய்வதாகும். மேலும், மனிதன் நல்லறங்களில் ஈடுபடும் போது ஈமான் அதிகரிக்கும். அவ்வாறே பாவச் செயல்களில் ஈடுபடும்போது ஈமான் குறைந்து விடும். நாவினால் மொழிவதற்கு உதாரணமாக இரு கலிமாக்களையும், நாவினால் மொழிதல், திக்ர் செய்தல், துஆக் கேட்டல், அல்குர்ஆனை ஓதல், நல்லவார்த்தைகளைப் பேசுதல் போன்ற சொல்ரீதியான விடயங்களை உதாரணமாகக் கூறலாம்.
உறுப்புக்களால் நிறைவேற்றப்படுகின்ற அமல்களுக்கு தொழுகை, நோன்பு, ஹஜ், ஜிஹாத், கைகளினால் பாவச் செயல்களைத் தடைசெய்தல் போன்ற செயல் செயல்ரீதியான அமல்களை உதாரணமாகக் கூறலாம்.
உள்ளத்தால் நிறைவேற்றப்படுகின்ற நற்செயல்களுக்கு உறுதியாக நம்புதல், உண்மைப்படுத்தல், (இக்லாஸ்) உளத்தாய்மை, குவக்குல்) பொறுப்புச் சாட்டுதல், அன்புவைத்தல், போன்ற நல்லறங்களை உதாரணமாகக் கூறலாம்.
ஈமான் என்ற வார்த்தைக்கு பரிபாஷையில் விளக்கம் கூறும் விடயத்தில் முர்ஜிஆக்கள், அஹ்லுஸ்ஸுன்னாவுடன் முரண்படுகின்றனர். ஈமானுக்கும் - அமல்களுக்குமிடையில் எந்தத் தொடர்பும் இல்லை என்று முர்ஜிஆக்கள் கருதுகின்றனர். (பார்க்க: முர்ஜிஆக்கள்: சரஹுஸ்ஸுன்னா: தமிழாக்கம்)
(எனவே குர்ஆன் ஹதீஸுக்கு முரணான இவர்களின் இந்த நிலைப்பாட்டுக்கு மறுப்புச் சொல்லவேண்டிய அவசியமும் தேவையுமிருந்தது. இதற்காகத்தான் இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) தமது இந்த - இஸ்லாத்தில் அடிப்படைக் கொள்கைவிளக்க- நூலில், ஈமானுக்கும், அமல்களுக்குமிடையில் தொடர்பு உண்டு என்பதை எடுத்துக்காட்டியபும் விளக்கியும் உள்ளார். இதற்கு சில நல்லறங்கள் அடங்கிய நபி மொழிகளை உதாரணமாகக் காட்டியுள்ளார்.)
எனவே, ஈமான் என்பது திருக்கலிமாவை நாவினால் மொழிந்து, அதனடிப்படையில் அமல் செய்வதைக் குறிக்கும். மேலும் அது நம்பிக்கைகள், சொல்கள், செயல்கள் அனைத்தையும் உள்ளடக்கிக் கொள்கின்ற கருத்தாழம்மிக்க வார்த்தையாகும்.
ஏனெனில், இவைகளிற் சில உள்ளமும் நாவும் ஒன்றிணைந்து மேற்கொள்கின்ற நல்லறங்கள் ஆகவும், மற்றும் சில உள்ளமும் ஏனைய உடலுறுப்புக்களும் சேர்ந்து செய்கின்ற நல்லறங்களாகவும் காணப்படுகின்றன.
ஆகவே, ஒரு மனிதன் நாவினால் செய்கின்ற திக்ர்கள், ஈமான் எனும் விசுவாசத்தையும், அகீதா எனும் நம்பிக்கைக் கோட்பாடுகளையும் சார்ந்தவையாகும். அவ்வாறே ஒரு மனிதன் தனது உள்ளத்தால் மேற்கொள்கின்ற நற்கருமங்களும் ஈமானின் கிளைகளாகும். எனவே, சுருங்கக் கூறின், உடல் உறுப்புக்களால் நிறைவேற்றப்படுகின்ற அனைத்து நல்லறங்களும் ஈமானின் கிளைகளும், அதன் நேரடியான பிரதிபலிப்புக்களுமாகும்.
இதனையே, நபி (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:
இறைநம்பிக்கை என்பது 70க்கும் அதிகமான அல்லது 60க்கும் அதிகமான கிளைகளைக் கொண்டதாகும். அவற்றில் உயர்ந்தது அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று கூறுவதாகும். அவற்றில் தாழ்ந்தது, தொல்லைதரும் பொருளைப் பாதையிலிருந்து அகற்றுவதாகும். நாணமும் இறைநம்பிக்கையின் ஒரு கிளைதான்.
(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி)
(நூல்: புகாரி:9 முஸ்லிம்: 58)
இந்த நபி மொழியில் ஈமானின் விளக்கத்தில் சொல்லப்பட்ட மூன்று பகுதிகளுக்கும் உதாரணங்களைப் பார்க்க முடிகின்றது. அவை வருமாறு:
1. லா இலாஹ இல்லாஹு எனும் திருக்கலிமாவை மொழிவது ஈமானின் அடிப்படைகளில் ஒன்று. இது நேரடியாக நாவினால் நிறைவேற்றப்படுகின்ற நல்லறங்களில் ஒன்றாகும்.
2. மனிதனுக்குத் தீங்கிழைக்கக் கூடிய பொருட்களைப் பாதையிலிருந்து அகற்றி விடுதல் ஈமானின் கிளைகளில் ஒன்றாகும். இது உடல் உறுப்புக்களால் நேரடியாக மேற்கொள்ளப்படுகின்ற நல்லறங்களில் ஒன்றாகும்.
3. வெட்கம் ஈமானின் கிளைகளில் ஒன்று. இது ஒருவர் தனது உள்ளத்தால் நேரடியாகப் புரிகின்ற நல்லறங்களில் ஒன்றாகும்.
ஈமானின் ஏனைய எல்லாக் கிளைகளும் இவ்வாறுதான் இவற்றிற் சில நேரடியாக நாவுடன் தொடர்புடையதாகவோ, அல்லது ஏனைய உடல் உறுப்புக்களுடன் தொடர்புடையனவாகவோ, இருப்பதைக் காணமுடிகிறது. அல்லது இவை மனித உள்ளத்துடன் நேரடியாகத் தொடர்புடையதாக அமைந்துள்ளன. அதேநேரம் ஈமானின் விளக்கத்துக்குத் தேவையான மூன்று உதாரணங்களும் ஒரே நபிமொழியில் இடம் பெற்றிருப்பது இந்த நபிமொழியின் சிறப்பம்சமாகும். ஆகவே, சரீஅத்தின் வணக்கமாகக் கருதப்படுகின்ற அனைத்து நற்கருமங்களும் ஈமானின் கிளைகளாகும். இவற்றின் மூலம் ஈமான் அதிகரிக்கின்றது. அவ்வாறே பாவச் செயல்களின் மூலம் ஈமான் குறைந்துவிடுகின்றது.
எனவே, ஈமான் என்பது வணக்கவழிபாடுகளில் ஈடுபடுவதன் மூலம் அதிகரிக்கும்; அது பாவச் செயல்கள் மூலம் குறைந்துவிடும் என்பதன் பொருள்: உளத்தூய்மையின் அளவுக்கும், அமல்களில் அதிகமதிகம் ஈடுபடுவதற்கும் ஏற்ப, ஈமானின் படித்தரத்தில் மனிதர்கள் வேறுபடுவர் என்பதாகும்.
எனவே, உதாரணமாக ஒரு மனிதன் அல்லாஹ்வை திக்ர் செய்தல், அவனைப்புகழ்தல், அவனுக்கு நன்றிசெலுத்தல் தர்மம் கொடுத்தல், ஜிஹாத் செய்தல் போன்ற வணக்க வழிபாடுகளில் ஈடுபடும் போது அவனுடைய ஈமான் அதிகரிக்கும். அவ்வாறே உதாரணமாக பழித்தல், ஏசுதல், பிறர் பொருளை அபகரித்தல், மமதை, பொறாமை போன்ற பாவங்களில் ஈடுபடும் போது ஈமான் குறைந்து விடுகின்றது.
ஈமான் அதிகரிக்கும் தன்மை கொண்டது என்பதற்கு பின்வரும் திருமறை வசனங்கள் சான்றுகளாகும்.
அல்லாஹ் கூறுகின்றான்:-
அவனே நம்பிக்கையாளரின் உள்ளங்களில் அவர்களது நம்பிக்கையுடன் மேலும் நம்பிக்கையை அதிகரிப்பதற்காக அமைதியை இறக்கி வைத்தான்.
(அல்- பத்ஹ் 48: 04)
மேலும் அவன் கூறுகின்றான். அது மேலும் நம்பிக்கையை அதிகரித்துவிட்டது. அவர்களோ..
(தெளபா: 09: 124)
இதே கருத்தை வலியுறுத்துகின்ற இன்னும் ஏராளமான ஆதாரங்களை அல்குர்ஆன் நெடுகிலும் காணக்கூடியதாகவுள்ளது. அதிகரிப்பை ஏற்புடைய தன்மை கொண்ட அனைத்தும் குறைதலையும் ஏற்கும் தன்மை கொண்டது என்ற அமைப்பில் நல்லறங்களில் ஈடுபடும் போது அதிகரித்துச் செல்லும் ஈமான் பாவச் செயல்களில் ஈடுபடும் போது குறைந்து செல்லும்.
26. இமாம் அஹ்மத் (ரஹ்) கூறுகின்றார்கள்:-
யார் தொழுகையை விட்டுவிடுகின்றாரோ, அவர் காபிராகி விடுவார். தொழுகையைத் தவிர வேறு எந்த இபாதத்தையும் விட்டுவிடுபவன் காபிராகிவிடுவதில்லை. எனவே, தொழுகையை விட்டுவிடுபவன் காபிராகிவிடுவான். இவனைக் கொலை செய்வதையும் அல்லாஹ் அனுமதித்துள்ளான்.
விளக்கம்:
ஈமானின் கிளைகளில் செயல் சார்ந்த இபாதத்துக்களில் தொழுகையும் ஒன்றாகும். தொழுகையை விட்டு விடுவது இறைநிராகரிப்பை ஏற்படுத்தும் என்பதற்கு பல ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் இடம்பெற்றுள்ளன.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நிச்சயமாக மனிதனுக்கும், இணைவைப்பு மற்றும் இறைமறுப்பு ஆகியவற்றுக்குமிடையே காணப்படுகின்ற வேறுபாடு தொழுகைய விடுவதுதான்.
(அறிவிப்பவர்: ஜாபிர் (ரழி) அவர்கள்.)
(நூல்: முஸ்லிம்: 134)
மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நமக்கும் இறை நிராகரிப்பாளர்களுக்குமிடையில் உள்ள உடன்படிக்கை தொழுகையாகும். எனவே, யாராவது தொழுகையை விட்டால் அவர் காபிராகிவிடுவார்.
(அறிவிப்பவர்: புரைதா (ரழி) அவர்கள்)
(நூல்கள்: ஸஹீஹுத் திர்மிதி: 2113)
தபிஈன்களில் ஒருவரான அப்துல்லாஹ் பின் ஷகீக் (ரஹ்) கூறியதாவது:
தொழுகை தவிர்ந்த ஏனைய இபாதத்துக்களை ஒருவர் விட்டுவிடுவதால், ஒருவர் காபிராகி விடுவதில்லை. என ஸஹாபாக்கள் கருதிவந்தனர்.
(நூல்: ஸஹீஹுத் திர்மிதி: 2114 ஹாகிம்: 1/7)
இபாதத்துக்களில், பிரதானமான தொழுகை ஈமானின் கடமைகளில் ஒன்றும், ஈமானின் முக்கியமான கிளையுமாகும். மட்டுமன்றி தொழுகை என்பதே ஈமான்
என்கிற அளவுக்கு அது மிகமிக முக்கியமானதாகும். அல்லாஹ் கூறுகின்றான்:
கிப்லாவின் திசை மாற்றப்பட முன்னர் நீங்கள் நிறைவேற்றிய தொழுகைகளை அல்லாஹ் வீணாக்கிவிட மாட்டான்.
(அல்பகரா: 02: 143)
இந்த வசனத்தில், தொழுகையை அல்லாஹ் 'ஈமான்' என்றே குறிப்பிடுகின்றான். ஏனெனில், தொழுகை ஈமானின் பிரதிபலனாகும். இதனால்தான் மேற்கூறப்பட்ட வசனத்தில் தொழுகையை இறைவன் ஈமான் என்று குறிப்பிடுகின்றான்.
இஸ்லாத்தில் தொழுகை மிக்க மகத்தானது என்பதிலோ, மிகப் பிரதானமானது என்பதிலோ எவ்வித சந்தேகமும் இல்லை. இதனால் தான் அல்குர்ஆனில் பல இடங்களில் அல்லாஹ் தொழுகையை வலியுறுத்திக் கூறுயுள்ளதுடன், பல இடங்களில் திரும்பத் திரும்பக் கூறியுள்ளான்.
நபி (ஸல்) அவர்களும் தொழுகையை மிகவும் வலியுறுத்திக் கூறியுள்ளார்கள். தொழுகையைவிட்டு விடுவது இறைநிராகிரப்பை ஏற்படுத்தும் என இடம் பெற்றுள்ள நபி மொழிகளை மேலே பார்த்தோம். அவை தொழுகையை மனமுரண்டாகவோ வேண்டுமென்றோ விடுவதைத்தான் குறிப்பிடுகின்றது. இவ்வாறு மனமுரண்டாக இவர் தெளபாச் செய்து மீண்டு, தொழ ஆரம்பித்து விட்டால், இவருடைய தெளபா ஏற்றுக் கொள்ளப்படும். இவ்வாறு தெளபாச் செய்யாவிட்டால் கொலை செய்யப்படுவார்.
இவன் கொலை செய்யப்படும்வரை தொழுகையை விடும் நிலைதொடர்ந்தால் (முர்தத்) மதம் மாறியவருடைய சட்டங்களே இவர் விடயத்திலும் நடைமுறைப்படுத்தப்பட்டு, முர்தத் என்ற நிலையிலேயே இவன் கொலை செய்யப்படுவான்.
இமாம் பகவீ (ரஹ்) கூறினார்கள்:
பர்ழான தொழுகையை மனமுரண்டாக விடுபவன் காபிராகிவிடுவானா இல்லையா என்பதில் அறிஞர்கள் மத்தியில் இரு வேறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. அவையாவன:-
1. மனமுரண்டாகத் தொழுகையை விடுபவன் காபிராகி விடுவான்.
2. தொழுகையை விடுபவன் காபிராகிவிடமாட்டான்.
முதலாம் கருத்து:
இது ஸஹாபாக்களான உமர் (ரழி), இப்னு மஸ்த் (ரழி) ஆகியோருடையவும், இமாம்களான இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்), இப்னுல் முபாரக் (ரஹ்), அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்), இஸ்ஹாக் (ரஹ்) ஆகியோரின் கருத்தாகும்.
பெரும்பாலான உலமாக்களுடையவும், சமகால ஆய்வாளர்களுடையவும் நிலைப்பாடும் இதுதான்.
ஹஸ்ரத் உமர் (ரழி) அவர்கள் கூறுவதாவது:
தொழுகையை விட்டவனுக்கு இஸ்லாத்தில் எந்தப் பங்கும் இல்லை.
ஹஸ்ரத் இப்னு மஸ்வூத் (ரழி) கூறுவதாவது:
தொழுகையை விடுவது இறைநிராகரிப்பாகும்.
இமாம் அப்துல்லாஹ் பின் ஷகீக் (ரஹ்) அவர்கள் கூறுவதாவது:
தொழுகை தவிர்ந்த ஏனைய எந்தவொரு இபாதத்தையும் விட்டுவிடுவதனால் ஒருவர் காபிராகிவிடமாட்டார். எனினும் தொழுகையை விடுவதனால் காபிராகி விடுவார் என்றே ஸஹாபாக்கள் கருதிவந்தனர்.
இரண்டாம் கருத்து:
தொழுகையை விட்டவன் காபிராகிவிடமாட்டான். மேற்கூறப்பட்ட நபிமொழிகள் தொழுகை கடமையானது என்ற விடயத்தை மனமுரண்டாக விடுபவனின் நிலையைத்தான் குறிப்பிடுகின்றது. எனவே, தொழுகையில் அலட்சிய போக்குடையவர்களைக் கண்டிப்பதற்காகவும் அவர்களை எச்சரிக்கை செய்வதற்காகவுமே நபி (ஸல்) அவர்கள் அப்படிக் கூறியுள்ளார்கள் என சில அறிஞர்கள் கூறுகின்றனர்.
இமாம்களான ஹம்மாத் பின் ஸைத் (ரஹ்), மக்ஹூல் (ரஹ்), ஷாபிஈ (ரஹ்) போன்ற அறிஞர்கள் கூறுவதாவது:
தொழுகையை விட்டுவிடுபவர் முர்தத் போன்று கொலை செய்யப்படுவார். எனினும் ஏனைய மதம் மாறியோர் விடயத்தில் நடைமுறைப் படுத்தப்படுகின்ற எல்லாச் சட்டங்களும் இவர் விடயத்தில் அமுல் படுத்தப்படமாட்டாது. இவரது விடயத்தில் ஏனைய சரீஅத் சட்டங்கள் - ஒரு முஸ்லிமைப் போன்று நடை முறைப்படுத்தப்படும்.
இமாம் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுவதாவது:
நோன்பு, ஸகாத், ஹஜ் போன்ற வணகங்களை விட்டுவிட்டவன் கொலை செய்யப்படமாட்டான். அதேபோன்று தொழுகையை விட்டவனும் கொலை செய்யப்படமாட்டன். ஆனால், அவன் தொழுகையை நிறைவேற்றும் வரை அடைத்துவைத்து அடித்துத் தண்டிக்கப்படுவான்.
ஹனபி மத்ஹபின் நிலைப்பாடும் இதுதான்
(ஷரஹுஸ்ஸுன்னா (1/ 179)
தொழுகை இஸ்லாத்தின் பிரதானமான சின்னங்களில் ஒன்று. இவ்வளவு முக்கியமானதொரு அம்சத்தில் ஒரு முஸ்லிம் அலட்சியமாக இருப்பதை இஸ்லாமிய சரீஅத் அனுமதிக்கமாட்டாது என்பதில் சந்தேகமில்லை.
27. இமாம் அஹ்மத் (ரஹ்) கூறுகினார்கள்:-
நபிமார்களில் சிறந்தவர் முஹம்மத் (ஸல்) அவர்களாவர். அவர்களுக்குப் பின்னர் இந்த உம்மத்தில் சிறந்தவர்கள் முறையே கலீபாக்களான அபூபக்கர் (ரழி), உமர் (ரழி) உஸ்மான் (ரழி ஆகியோராவர். இம்மூவரையும் நபித்தோழர்கள் முதன்மைப்படுத்தியது போன்றே நாமும் அவர்களை முதன்மைப்படுத்த வேண்டும். இவ்விடயத்தில் நபித்தோழர்கள் மத்தியில் முரண்பாடு தென்படவில்லை.
28. மேற்கூறப்பட்ட மூவருக்கும் அடுத்ததாக மனிதர்களி சிறந்தவர்கள் அஸ்ஹாபுஷ்ஷூரா எனப்படும் ஆலோசனைசபை உறுப்பினர்களான அலீ பின் அபூதாலிப் (ரழி), தல்ஹா (ரழி), ஸஃது பின் அபீவக்காஸ் (ரழி), ஸுபைர் (ரழி), அப்துர் ரஹ்மான் பின் அவப் (ரழி) போன்றோராவர்.
மேற்கூறப்பட்ட அனைத்து நபித்தோழர்களும் இஸ்லாமிய ஆட்சி நடத்துவதற்கும் தகுதியானவர்களாக விளங்கினர். அவ்வாறே இவர்களனைவரும் முன்மாதிரியாகக் கொள்ளப்படும் இஸ்லாமிய சமூகத்தின், தலைவர்களாவர்.
இதற்கு ஆதாராமாக இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்துள்ள செய்தியை ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியும். ஹஸ்ரத் இப்னு உமர் (ரழி) கூறியதாவது:
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் மக்களிடையே சிறந்தவர்கள் இன்னார், இன்னார் என்று மதிப்பிட்டு வந்தோம். முதலில் அபூபக்கர் (ரழி) அவர்களைச் சிறந்தவராக மதிப்பிட்டோம் பிறகு உமர் பின் கத்தாப் (ரழி) அவர்களையும் பிறகு உஸ்மான் அப்பான் (ரழி) அவர்களையும் சிறந்தவர்களாக மதிப்பிட்டு வந்தோம்.
(நூல்: புகாரி: 3655)
29. சூரா உறுப்பினர்களுக்கு அடுத்ததாக மனிதர்களில் சிறந்தவர்களில் முஹாஜிரீன்களைச் சேர்ந்த பத்ர்வாசிகளும், அதற்கடுத்ததாக அன்ஸாரிகளைச் சேர்ந்த பத்ர்வாசிகளும் ஆவார். இவர்கள் ஹிஜ்ரத்தின் அடிப்படையிலும், நன்மையின் பால் முந்திக் கொண்டதன் அடிப்படையிலும் சிறப்பை அடைந்து கொள்வர்.
30. மேற்கூறப்பட்ட ஸஹாபாக்களுக்கு அடுத்ததாக, மனிதர்களில் சிறந்தவர்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு நபித்துவம் கிடைத்தபோது வாழ்ந்து கொண்டிருந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்களாவர். எனவே, ஒரு வருடம், ஒரு மாதம், ஒரு நாள், ஏன் ஒரு சிறிதளவு நேரம் கூட நபி (ஸல்) அவர்களுடன் தோழமைகொண்டிருந்த அனைவரும் ஸஹாபாக்கள் என்ற சிறப்புக்கு அருகதையுள்ளவர்களாவர். ஒருவர் நபி (ஸல்) அவர்களைத் தன் கண்களால் கண்டிருந்தாலும் கூட அவரும் நபித்தோழரேயாவர்.
மேலும், இவர்கள் ஒவ்வொருவரும் தோழமை கொண்டிருந்த அளவுக்கும், நன்மை செய்வதில் முந்திக்கொண்ட அளவுக்கும் ஏற்ப சிறப்புக்குரியவர்களாவர். அதேபோன்று நபிகள் நாயகத்திடம் ஹதீஸ்களைக் கேட்டறிந்து கொண்டோரும், அவர்களை ஒரு முறையாவது கண்ணால் கண்டோரும் சிறப்புக்குரியவர்களாவர். நபிகள் நாயகத்தை கண்களால் காணாத அடுத்த நூற்றண்டைச் சேர்ந்த தாபிஈன்௧கள் எல்லா வகையான அமல்களையும் செய்த நிலையில் மரணித்தாலும் கூட, ஒரு சொற்ப நேரமேனும் நபிகள் நாயகத்தின் தோழமை கிடைத்த ஸஹாபியே சிறந்தவராவர்.
நபிகள் நாயகத்துடன் தோழமை கொண்டு, அவர்களைக் கண்டு, அவர்களிடமிருந்து ஹதீஸ்களைக் கேட்டறிந்தவர்களும் சிறப்புக்குரியவர்களாவர். மேலும், அவர்களை ஒரு சொற்ப நேரமேனும கண்களால் கண்டு, அவர்களை விசுவாசம் கொண்டவரும் தாபிஈன்௧களை விட மிகச்சிறந்தவர் ஆவார். தாபிஈன்கள் எல்லா வகையான அமல்களையும் செய்த நிலையில் மரணித்தாலும் கூட.
விளக்கம்:
இஸ்லாத்தில் இறைக்கோட்பாடுகள் பற்றி எழுதிய அதிகமான அறிஞர்கள் நபித்தோழர்களான ஸஹாபாக்கள் தொடர்பாகவும் எழுதியுள்ளது கவனிக்கத்தக்கதாகும். றாபிழாக்களுக்கு மறுப்புக் கூறுவதே இந்நூற்களில் ஸஹாபாக்கள் பற்றி எழுதியதற்குக் காரணமாகும். ஏனெனில், றாபிழாக்கள்
அதிகமான ஸஹாபாக்களைக் காபிர்கள் என்கின்றனர்.
இதற்கு றாபிழாக்கள் அலி (ரழி) அவர்கள் விடயத்தில் கொண்டுள்ள ஒரு பிழையான நம்பிக்கையே காரணம் ஆகும். நபி (ஸல் அவர்களுடைய வபாத்துக்குப் பிறகு இஸ்லாமிய கிலாபத்திற்கு, அபூபக்ர் (ரழி), உமர் (ரழி), உஸ்மான் (ரழி) ஆகியோரை விட ஹஸ்ரத் அலி (ரழி அவர்களே பொருத்தமானவரும் அருகதையுடையவருமாவர் என்று றாபிழாக்கள் கருதுகின்றனர். இதனை உறுதிப்படுத்தும் பொருட்டு பல பொய்யான ஹதீஸ்களை இட்டுக்கட்டிக் கொண்டனர்.
எனவே, றாபிழாக்கள் தாம் கொண்ட இலக்கை அடையமுடியாத நிலை ஏற்பட்டு, சூழல் தமக்குப் பாதகமாக அமைந்து போது அபூபக்ர் (ரழி), உமர் (ரழி), உஸ்மான் (ரழி), ஆகியோர் கொள்ளையர்கள் என்றும், தமக்கு உரிமையற்ற, அலி(ரழி) அவர்களுக்குச் சொந்தமான ஆட்சிப் பொறுப்பை இவர்கள் மூவரும் பறித்துக்கொண்டனர் என்றும், ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தினர். மேலும், அம்மூவரையும் ஏற்றுக் கொண்டு, அவர்களுக்கு பைஅத் செய்து கொண்ட ஸஹாபாக்களும் தவறிழைத்தனர் என்றும் கருதினர்.
நபிகள் நாயகத்திற்குப் பிறகு ஆட்சிக்கு மிகத்தகுதியானவராக விளங்கிய அலி (ரழி) அவர்களிடமிருந்து ஆட்சி பறிமுதல் செய்யப்பட்டது மூலம் அவர் அநியாயம் இழைக்கப்பட்டார் என்றும் கூறுகின்றனர்.
இந்த அளவுடன் அவர்கள் நிறுத்திக் கொள்ளவில்லை அந்த ஸஹாபாக்கள் - முர்தத்துகளாகி - காபிர்களாகி - விட்டனர். என்ற நம்பிக்கையொன்றையும் ஏற்படுத்தினர். "உங்களுக்குப் பிறகு, மார்க்கத்தில் அவர்கள் புதிதுபுதிதாக என்னென்ன உருவாக்கினர்கள் என்று உங்களுக்கு தெரியாது” (புகாரி: 6576) எனும் நபிமொழி முர்தத்துகளாகிவிட்ட இவர்களுடைய விடயத்தில்தான் வந்ததாகவும் நம்புகின்றனர். இவ்வாறு றாபிழாக்கள் பொய்யான செய்திகளையும், பழிகளையும் ஸஹாபாக்கள் மீது சுமத்தினர். இவ்வாறு ஸஹாபாக்கள் மீது அபாண்டங்களைச் சுமத்திய றாபிழாக்களுக்கு மறுப்புக் கூறவேண்டிய தேவையும் அவசியமும் அஹ்லுஸ்ஸுன்னாவின் அறிஞர்கள் மீதிருந்தது.
எனவே தான் ஸஹாபாக்களின் சிறப்புக்கள் தொடர்பாக இடம்பெற்றுள்ள நபிமொழிகளைத் தொகுத்து வழங்கினர். மேலும், -கலீபாக்களான- ஆட்சியாளர்கள் தெரிவு செய்யப்பட்ட வரிசைமுறை ஸஹாபாக்களின் ஏகோபித்த முடிவாகும். இவர்களில் முதலாமவர் கலீபா அபூபக்ர் (ரழி) அவர்களாவர். இவர் - கலீபது ரஸுலில்லாஹ் - ரஹூல் (ஸல்) அவர்களின் பிரதிநிதி என்றழைக்கப்பட்டார். இவரை முதலாவது கலீபாவாகத் தெரிவுசெய்யும் விடயத்தில் ஸஹாபாக்கள் மத்தியில் கருத்துவேறுபாடுகள் தென்படவில்லை. எனவே தான் அனைத்து நபித்தோழர்களும் அவருக்கு ஏகமனதாக பைஅத் செய்தனர்.
ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்த போது தமக்குப் பதிலாகத் தொழுகை நடத்துவதற்கு இமாமாக- அபூபக்ர் (ரழி) அவர்களை நியமனம் செய்தனர். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"மக்களுக்கு தொழுகை நடத்துமாறு அபூபக்ரிடம் சொல்லுங்கள்"
(அறிவிப்பவர்: அயிஷா (ரழி)
(நூல்: புகாரி 664)
இவ்வாறு தொழுகை நடத்த அபூபக்ரை ஏவுங்கள் என்ற வார்த்தையை பல தடவைகள் கூறினார்கள். பிறகு நபி (ஸல்) அவர்களுடைய மானைவியர்களிற் சிலரான அன்னை ஆயிஷா (ரழி) அன்னை ஹப்ஸா (ரழி) போன்றோர் நபி (ஸல்) அவர்களிடம், "உமர் (ரழி) அவர்களுக்கு கட்டளையிட்டால் நல்லது தானே? என்றனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், மக்களைத் தொழவைக்குமாறு அபூபக்ரை ஏவுங்கள்! நிச்சயமாக நீங்கள் யூஸுப் (அலை) அவர்களுக்குச் சதிசெய்த பெண்களைப் போன்று இருக்கப்போகிறீர்களா?” என்று கேட்டார்கள்.
இதற்கிணங்க நபி (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்த காலம் முழுவதும் அபூபக்ர் (ரழி) அவர்களே இமாமாக நின்று தொழுகை நடத்திவந்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள் மரணித்த வேளை, தமது தலைவராகவும், ஆட்சியாளாராகவும் அபூபக்ர் (ரழி) அவர்களை நியமனம் செய்ய ஸஹாபாக்கள் முடிவு செய்து, அனைவரும் அவருக்கு பைஅத் செய்தனர்.
"நபி (ஸல்) அவர்கள் தமது மார்க்க விடயத்துக்குத் தலைவராக யாரை நியமனம் செய்தாரோ அவரையே நமது உலக விவகாரங்களுக்கு(ம் தலைமைத்துவத்திற்குப்) பொருந்திக் கொண்டோம் என்று கூறிய ஸஹாபாக்கள், ஏகோபித்த முடிவேடுத்து அவருக்கு பைஅத் செய்தார்கள், இவ்விடயத்தில் அவர்களிடம் கருத்து முரண்பாடுகள் நிலவவில்லை"
அபூபக்ர் (ரழி) அவர்களுடைய சிறப்புக்கள் பற்றி ஏராளமான ஹதீஸ்கள் இடம் பெற்றுள்ளன. இவற்றை இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) அவர்கள், "ஸஹாபாக்களின் சிறப்புக்கள்” எனும் தமது நூலில் தொகுத்து வழங்கியுள்ளார்.
மேலும், அதில் உமர் (ரழி), உஸ்மான் (ரழி), அலி (ரழி) போன்றோரின் சிறப்புக்கள் தொடர்பாக இடம்பெற்றுள்ள ஹதீஸ்களும் காணப்படுகின்றன. எனவே, அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஅத்தினர் அனைத்து ஸஹாபாக்களையும் பொருந்திக் - கொள்கின்றனர். மேலும், அவர்களுக்கு அல்லாஹ்வின் அருளும், திருப்பொருத்தமும் கிடைக்க துஆச் செய்கின்றனர்.
சமூகங்களில் மிகச்சிறந்த சமுகமாகிய இந்தச் சமூகத்தில் மிகச் சிறந்தது நபி (ஸல்) அவர்கள் தூதராக அனுப்பப்பட்ட நூற்றாண்டாகும். இந்நூற்றண்டில் வாழ்ந்தவர்களில் சிறப்புக்குரியவர்கள் ஸஹாபாக்களேயாவர்.
இவ்வாறு நபித்தோழர்களில் சிறந்தவர்கள் 4 கலீபாக்களுமாவர். இந்நால்வரிலும் சிறந்தவர் அபூபக்ர் (ரழி) ஆவார். நபிகள் நாயகத்தின் மரணத்திற்குப் பின்னர், இந்த உம்மத்தில் இவர்தான் சிறப்புக்குரியவர் ஆவார். இது நம்முன்னோர்களினதும், அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஅத்தினதும் ஏகோபித்த முடிவாகும்.
அப்துல்லாஹ் பின் உமர் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
நபி (ஸல்) அவர்களின் வபாத்துக்குப் பின்னர் இந்த உம்மதில் சிறந்தவர் அபூபக்ர் (ரழி) ஆவார். அடுத்து உமர் (ரழி), ஆவார். அடுத்து உஸ்மான் (ரழி) ஆவார் என்று நபி (ஸல்) அவர்கள் எங்களுடன் இருக்கும்போதே நாம் கூறிக் கொண்டிருந்தோம்.
(நூல்: புகாரி: 3655)
இதனை நபி (ஸல்) அவர்கள் கேட்டுக்கொண்டிருப்பார்கள். அவர்கள் அதனை மறுக்கவில்லை.
(நூல்: இப்னு அபீ ஆஸிம்: அஸ்ஸுன்னா 2 /568,569)
அவர்களின் சிறப்புக்கள் தொடர்பான மேற்படி வரிசையை நபி (ஸல்) அங்கீகரித்துள்ளார்கள் என்பதற்கு இந்தச் செய்தி போதிய சான்றாகும். நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு இந்த உம்மத்தில் சிறந்தவர் அபூபக்ர் (ரழி) ஆவார்; அடுத்து உமர் (ரழி) ஆவர் என ஹஸ்ரத் அலீ (ரழி) அவர்கள் தமது குத்பாப் பேருரைகளில் கூறி வந்துள்ளார்கள். இதற்கு ஏராளமான ஆதாரபூர்வமான செய்திகள் சான்றுகளாகக் காணப்படுகின்றன.
ஆகவே, அபூபக்ர் (ரழி), உமர் (ரழி) போன்றோரின் சிறப்புக்களுக்கு அலி (ரழி) அவர்கள் தாமாகவே கூறியுள்ள செய்திகள் மிகப்பலமான சான்றுகளாகும். எனினும் பழிசுமத்தும் சமூகமாகிய றாபிழாக்கள், ஹஸ்ரத் அலி (ரழி) அவர்களைத் தலைவராகவும், உண்மையாளராகவும் நம்புகின்றோம் என்பவர்கள், தமது - நம்பிக்கைக் - கோட்பாடுகளுடன் அலி (ரழி), அவர்களுடைய கூற்றுக்கள் முரண்படுகின்ற காரணத்தினால் அவற்றை ஏற்க மறுக்கின்றனர்.
இவர்கள் எவ்வளவு மோசமானவர்கள் என்பதற்கு இது ஒன்று மாத்திரமே போதுமானது.
அபூபக்ர் (ரழி) அவர்கள் தமது வாழ்நாளின் இறுதித்தறுவாயில், மரணம் சமீபித்திருந்த வேளையில் தமக்கு அடுத்த ஆட்சிப் பொறுப்பை உமர் (ரழி) அவர்களுக்கு உடன்படிக்கை செய்து கொண்டார். இதனை ஸஹாபாக்கள் அனைவரும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டு, உமர் (ரழி) அவர்களுக்கு பைஅத் செய்து கொண்டனர். இதன்மூலம் இஸ்லாமிய கிலாபத்தின் (இரண்டாவது ஆட்சியாளராக இவர் காணப்பட்டார். இவரே இஸ்லாமிய வரலாற்றில் முதலாவதாக அமீருல் முஃமினீனில்) தலைவர், முஃமீன்களின் தலைவர் என்று அழைக்கப்பட்டார்.
இவர் 10 வருடகாலம் ஆட்சி செய்தார். அபூலுஃலுஆ என்பவனால் கொலை செய்யப்பட்டார். இவர் கொலை செய்யப்பட்ட பிறகு முஸ்லிம்கள் பெரும் குழப்பத்துக்குள்ளானார்கள். நபி (ஸல்) அவர்களுடைய வபாத்துக்குப் பின்னர், இஸ்லாமிய உம்மதினருக்கு இவரது கொலையைப் போன்ற பேரிழப்பொன்று ஏற்பட்டதில்லை என்று கூறும் அளவுக்கு முஸ்லிம்கள் துயருக்குள்ளானார்கள். 10 வருடகாலம் மிக நேர்மையாகவும், திறமையாகவும் ஆட்சி செய்தார். ஆட்சியாளர்களுக்கு ஆழகான, பூரணமான முன்மாதிரி கலீபா உமர் (ரழி) என்று கூறினால் அது மிகையாகாது.
இவர் கொலைசெய்யப்பட்ட பிறகு மூன்றாவது கலீபாவாக ஹஸ்ரத் உஸ்மான் (ரழி) அவர்களுக்கு மக்கள் பைஅத் செய்துகொண்டனர். இவருக்கு எதிராகப் புரட்சி செய்த கிளர்ச்சியாளர்களால் இவரும் கொலை செய்யப்பட்டார். இவரும் கொலை செய்யப்பட்ட பின்னர், இஸ்லாமிய ஆட்சியின் தலைமைத்துவத்துக்கு ஹஸ்ரத் அலி (ரழி) அவர்களைவிட வேறு யாரும் தகுதியானவர்களாகக் காணப்படவில்லை. எனவே, அதிகமானேர் அவருக்கு பைஅத் செய்து கொண்டனர். எனினும் சாம் தேசத்தவர்கள், அவருக்கு உடன்படிக்கை செய்யாது தவிர்ந்து கொண்டனர். உஸ்மான் (ரழி) அவர்களின் கொலையுடன் தொடர்பானவர்களைக் கொண்டு வந்து சட்டத்தின்முன் நிறுத்தும் வரை தாம் பைஅத் செய்யப்போவதில்லை எனத் தெரிவித்தனர்.
இதன் பின்னனியில் இஸ்லாமிய உம்மத் பிளவுபட்டது.
சாம் தேசத்தவர்களுக்கும் ஈராக் வாசிகளுக்கும் மத்தியில் யுத்தம் மூண்டது. ஈராக், ஹிஜாஸ், யமன், ஈரான் முதலிய நாட்டவர்கள் ஹஸ்ரத் அலி (ரழி) அவர்களுக்கும். சாம், எகிப்து முதலிய நாட்டவர்கள் ஹஸ்ரத் முஆவியா (ரழி) அவர்களுக்கும் பைஅத் செய்து கொண்டனர். ஹஸ்ரத் அலி (ரழி) அவர்கள் கொலை செய்யப்படும் வரை இந்நிலை நீடித்தது.
இவரது கொலைக்குப் பின்னர், இவரின் அருமை மைந்தனான ஹஸன் (ரழி) அவர்கள் ஆட்சிபீடம் ஏறினார்கள். இவருடைய ஆட்சி 6 மாதகாலம் நீடித்தது. பிறகு இவர் பதவியை ராஜினாமாச் செய்து விட்டு, ஹஸ்ரத் முஆவியா (ரழி) அவர்களிடம் ஆட்சிப்பொறுப்பை ஒப்படைத்துவிட்டார்கள்.
எது எவ்வாறாயினும், இந்த உம்மத்தில் சிறந்த நூற்றாண்டுகளில் வாழ்ந்தவர்கள் என்ற சிறப்பு ஸஹாபாக்களுக்கு உரியதாகும். அல்லாஹ்வின் அருளும், திருப்பொருத்தமும் கிடைக்கப் பிரார்த்திப்பதற்கு மிகவும் அருகதையுள்ளவர்கள் இவர்களே!
இஸ்லாத்தை ஏற்பதில் முந்திக்கொண்டவர்கள் என்ற சிறப்புக்கும், எந்தவொரு மனிதராலும் அடைந்துகொள்ள முடியாத பல சிறப்புகளுக்கும் இவர்களே சொந்தக்காரர்கள்.
அல்லாஹ் கூறுகின்றான்:
மேலும், முஹாஜிர்கள் மற்றும் அன்ஸாரிகளில் (ஈமான் கொள்வதில்) முதலாமவர்களாக முந்திக் கொண்டோரையும், அவர்களை நல்லமுறையில் பின்பற்றியோரையும் அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அவனைப்பொருந்திக் கொண்டார்கள். அவன் அவர்களுக்கு சுவனச் சோலையைத் தயார் செய்துவைத்துள்ளான். அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள் இதுவே மகத்தான வெற்றியாகும்.
(தெளபா: 9: 100)
இம்ரான் பின் ஹுஸைன் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உங்களில் (மக்களில்) சிறந்தவர்கள் என் தலைமுறையினர் ஆவர். பிறகு அவர்களை (உங்களை) அடுத்து வருபவர்கள்.
பிறகு அடுத்து வருபவர்கள் என்று கூறினார்கள்.
(நூல்: புகாரி: 2651 முஸ்லிம்: 4960)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என்தோழர்களை ஏசாதீர்கள். என் தோழர்களை ஏசாதீர்கள். என் உயிர் எவன் கையிலுள்ளதோ அந்த இறைவன் மீது சத்தியமாக! உங்களில் ஒருவர் உஹத் மலையளவுக்குத் தங்கத்தை (தானமாகச்) செலவிட்டாலும், என் தோழர்கள் (இறைவழியில்) செலவிட்ட இருகையளவு, அல்லது அதில் பாதியளவைக் கூட எட்ட முடியாது.
(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி) அவர்கள்)
(நூல்: புகாரி: 3673 முஸ்லிம்: 4967,4966)
எனவே, ஒருவர் உஹத் மலையளவு பெறுமதியான, பெருந்தொகைப் பணத்தைச் செலவு செய்தாலும் கூட ஒரு நபித்தோழர் தமது கையளவு, அல்லது அதில் பாதியளவு தர்மம் கொடுத்ததற்கு ஈடாகமாட்டாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதிலிருந்து தர்மங்களுக்கும் அதுபோன்ற வெகுமதிகளும், நற்கூலிகளும் வேறுயாருக்கும் கிடைக்கமாட்டாது என்பது தெளிவாகின்றது.
எனவே, ஒருவர் நபி (ஸல்) அவர்களைக் கண்டு, அவரை விசுவாசம் கொண்டு, அந்த விசுவாசத்துடன் வாழ்ந்து மரணித்தால், இவர் - ஸஹாபி - நபித்தோழர் என்ற தனித்துவத்தைப் பெற்றுக் கொள்வார். ஆகவே, இவருக்கு நபிகள் நாயகத்துடன் தோழமை பூண்ட சிறப்பும், அவர்களின் தூதுத்துவத்தை ஏற்ற சிறப்பும், அவருக்கு பைஅத் செய்த சிறப்பும், அவரைக் கண்ட சிறப்பும் என பல்வேறு சிறப்புக்கள் கிடைக்கின்றன. இது ஒரு நபருக்குக் கிடைக்கும் தனிச்சிறப்பும் வெகுமதியும் ஆகும். ஆகவே, இதனை பிறரால் அடைந்துகொள்ள முடியாது.
ஸஹாபாக்களுக்கு அடுத்து இந்த உம்மத்தில் சிறந்தவர்கள் தாபிஈன்கள் எனப்படும் - நபித்தோழர்களைப் பின்பற்றியவர்கள் - இவர்களில் ஸஹாபாக்களுடைய பிள்ளைகளும், மாணவர்களும், அவர்களிடம் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டோரும் அடங்குவர். அடுத்து சிறப்புக்குரியவர்கள் அந்தத் தாபிஈன்௧களைப் பின்பற்றியவர்களான தபஉத்தாபிஈன்௧ள் ஆவர். ஏனெனில், இம்ரான் பின் ஹுஸைன் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின தூதர் (ஸல்) அவர்கள், "உங்களில் (மக்களில்) சிறந்தவர்கள் என் தலைமுறையினர் ஆவர். பிறகு அவர்களை (உங்களை) அடுத்து வருபவர்கள். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள்" என்று கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "தம் தலைமுறையினருக்குப்பிறகு (அவர்களை அடுத்து வருபவர்கள் என்று) இரண்டு தடவை கூறினார்களா அல்லது மூன்று தடவை கூறினார்களா என்பது எனக்குத் தெரியவில்லை.
(நூல்: புகாரி: 2651, முஸ்லிம்: 4960)
இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் தமது மூன்று தலைமுறையினருக்குப் பின்னர் இரண்டு அல்லது மூன்று தலைமுறையினர் சிறந்தவர்களாக விளங்குவர் என்று கூறிவிட்டு ஏனைய காலங்களைப் பற்றி எதுவும் கூறாது மெளனமாக இருந்து விட்டார்கள். எனவே, இந்தச் சமூகத்தில் சிறந்த தலைமுறையினர் முதலாம் தலைமுறையினர் தான் என்பதற்கு இதுவே ஆதாரமாகும். இதனால் தான் இம்மூன்று தலைமுறையினரிலும் சத்தியமும். நபிவழியும் செல்வாக்குப்பெற்றுவிளங்கியுள்ளது.
அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஅத்தினர் செல்வாக்குப் பெற்று விளங்கியுள்ளனர். பித்அத்வாகிகளும், அசத்தியவாதிகளும் அநாதரவாகவும், இழிவாகவும் காணப்பட்டனர். பித்அத்வாதிகள் 4ஆம் நூற்றாண்டிலும் அதன் பின்னரும் தான் செல்வாக்கு பெற்றுள்ளனர். இந்தக் காலப்பகுயிதில்தான் நபிவழியைப் புறக்கணிப்போருக்கு முன்னுரிமை மற்றும் செல்வாக்குக் கிடைத்தது. இதனால் சுன்னாவை புறக்கணிப்பவர்கள் அதிகமாயினர். முஃதஸிலாக்கள், ஜஹமிய்யாக்கள், கதரிய்யாக்கள், ஜபரிய்யாக்கள். ஷிஆக்கள், மற்றும் ஏனைய பித்அத் வாதிகளும், பிரிவினர்களும் செல்வாக்குப் பெற்றன. இவர்கள் ஈராக்கில் பனூபுவையா சிற்றரசு போன்ற சிற்றரசுகளை ஏற்படுத்தி சில மாநிலங்களைத் தமது அதிகாரத்தின் கீழ் வைத்துக் கொண்டனர்.
இவ்வாறே சாம் தேசத்தில் பாத்திமிய்யா சிற்றரசு போன்ற சில சிற்றரசுகளை ஏற்படுத்தி அங்கும் சில மாநிலங்களைத் தம் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். பாத்திமிய்யாக்கள் எனப்படுவோர் பனூஉபைத் கோத்திரத்தைச் சேர்ந்தவர்களாவர்.
இவர்களின் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட அனாச்சாரங்கள், பித்அத்துக்கள் போன்றவற்றின் படிவுகள் இன்று வரை அந்நாடுகளிலும் (ஏனைய நாடுகளிலும்) இருக்கவே செய்கின்றன. அக்காலத்தில் இந்த வழிகேடுகளை உம்மத்தினருக்கு தெளிவுபடுத்தவும், எச்சரிக்கை செய்யவும் ஆற்றல்மிகு உலமாக்களை அல்லாஹ் அந்த சமூகத்துக்கு வசப்படுத்திக் கொடுத்திருந்தான்.
ஆகவே முஸ்லிம்கள் அனைவரும் ஸஹாபாக்களின் சிறப்புக்களையும், அவர்கள் மிகச் சிறந்த தலைமுறையினர் என்பதையும் நம்பிக்கை கொள்ள வேண்டும். இவ்விடயத்தில் றாபிழாக்கள் ஸஹாபாக்கள் மீது கூறிவருகின்ற குற்றச்சாட்டுக்களையும், அவற்றிற்கான மறுப்புக்களையும் தெரிந்து கொள்வது மிகப்பொருத்தமானதாகும். அபூபக்ர் (ரழி), உமர் (ரழி) போன்றோர் செய்ததாகச் சில தவறுகளை றாபிழாக்கள் பட்டியலிட்டுள்ளனர்.
அவைகளிற்சில வருமாறு:
அபூபக்ர் (ரழி) அவர்கள், காலித் பின் வலீத் (ரழி) அவர்களை அல்லாஹ்வின் வாள் எனப் புகழ்ந்துரைக்கிறார். எனினும், தளபதி காலித் பின் வலீத் (ரழி) அவர்களோ மாலிக் பின் நுவைரா என்பவரைக் கொலை செய்துவிட்டு அவரது மனைவிக்கு தம்மீது கடமையான இத்தாவைக் கூட அனுஷ்டிக்க அவகாசம் கொடுக்காமல், அதே நாள் இரவில் அவளைக் திருமணம் செய்து கொண்டார். இதனை கலீபா அபூபக்ர் (ரழி) அவர்கள் அங்கீகரித்தார்கள் என்றும் குற்றம் சுமத்துகின்றார்கள்.
காலித் பின் வலீத் (ரழி), போன்ற ஒருவரை எந்தப் பெண்ணும் பெற்றெடுக்க முடியாதென்றொரு சந்தர்ப்பத்திலும், அல்லாஹ்வின் வாள் என்று மற்றுமொரு சந்தர்ப்பத்திலும் காலித் (ரழி) அவர்களைப் புகழ்ந்து கூறும் கலீபா அபூபக்ர் (ரழி) அவர்கள் குற்றமிழைத்துவிட்டார் என்று அபூபக்ர் (ரழி) அவர்கள் மீது றாபிழாக்கள் குற்றம் கூறுகின்றனர்.
பதில்:
இது கலீபா அபூபக்ர் (ரழி), தளபதி காலித் பின் வலீத் (றழி) போன்றோர் மீது றாபிழாக்கள் சுமத்தும் அபாண்டமாகும். காலித் பின் வலீத் (ரழி) அவர்கள், இத்தா அனுஷ்டிக்க வேண்டிய ஒரு பெண்ணைத் திருமணம் முடிக்கின்ற அளவுக்கு, அல்லது ஒரு பெண்ணின் அழகால் கவரப்பட்டு, அவரின் கணவனைக் கொலைசெய்துவிட்டு அவரது மனைவியைத் திருமணம் முடித்துக் கொள்ளும் அளவுக்கு மோசமான ஒருவரல்ல. இவையனைத்தும் றாபிழாக்கள் ஸஹாபாக்கள் மீது சுமத்தும் அபாண்டங்களாகும்; வதந்திகளாகும்.
குற்றச்சாட்டு 2:
உஸாமா (ரழி) அவர்களின் தலைமையில் நபி (ஸல்) அவர்கள் இறுதியாக தயார் செய்துவைத்திருந்த படையில் உமர் (ரழி) அவர்களும் இடம்பெற்றிருந்தார்.
ஆனால், நபி (ஸல்) அவர்களுடைய வபாத்துக்குப்பிறகு, இந்தப்படையில் இணைந்து யுத்தகளத்துக்குப் போகாமல் அவர் பின்வாங்கினார் என்று உமர் (ரழி) அவர்கள் விடயத்தில் றாபிழாக்கள் பழி சுமத்துகின்றனர்.
பதில் :-
நபி (ஸல்) அவர்களுடைய வபாத்துக்குப் பிறகு அபூபக்ர் (ரழி) அவர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்கள். இவர் உமர் (ரழி) அவர்களை தமது ஆட்சியில் ஒரு அமைச்சராகக் கருதினார். இதனால் அவர் உமர் (ரழி) அவர்களுக்கு மதீனாவிலிருந்து வெளியில் செல்ல அனுமதி வழங்கவில்லை. மேலும், அபூபக்ர் (ரழி) அவர்கள், உஸாமா (ரழி) அவர்களின் தலைமையில் படையை அனுப்பி வைத்தார்கள். சென்ற படையினர் வெற்றிவாகையுடன், இறைவனது நற்கூலிபெற்றுத் திரும்பிவந்தனர்.
குற்றச்சாட்டு (3):-
நபித்தோழர்கள் ஹுனைன் யுத்தின்போது, நபி (ஸல்) அவர்களை விட்டுவிட்டுப் புறமுதுகாட்டி ஓடினர் என்று கூறி, ஸஹாபாக்கள் விடயத்தில் குறை சொல்கின்றனர். இதற்குக் பின்வரும் அல்குர்ஆன் வசனத்தை ஆதாரமாகக்கூறுகின்றனர்:
"அதிகமான போர்க்களங்களில் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்துள்ளான். இன்னும், ஹுனைன் போர்த்தினத்தன்றோ உங்களில் அதிக எண்ணிக்கை உங்களை அகமகிழச் செய்திருந்தும், அது உங்களுக்கு எவ்விதப் பயனையும் அளிக்கவில்லை. பூமி விசாலமானதாக இருந்தும் அது உங்களுக்கு நெருக்கடியாகிவிட்டது. பின்னர் நீங்கள் புறமுதுகு காட்டி ஓடினீர்கள்”
(தெளபா: 09: 25)
பதில்:-
அல்லாஹ்வும் அவனது தூதரும் மேற்கூறப்பட்ட ஸஹாபாக்களுக்கு மன்னிப்பு வழங்கிவிட்டார்கள். அதாவது இணைவைப்பாளர்கள் பலவகையான ஆயுதங்களால் அவர்களைத் தாக்கியபோது. அவர்களுடன் கடுமையாக மூண்ட போரிலே நபித்தோழர்கள் படுதோல்வி அடைந்தனர். அவ்வேளையில் அவர்கள் திரும்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. எனினும், பிறகு நபி (ஸல்) அவர்கள்
அவர்களை அழைத்தபோது அவர்கள் வந்து மீண்டும் போராடினர்.
எனினும், இந்நிகழ்ச்சியின்போது, இவ்வாறு புறமுதுகுகாட்டி ஓடாது நபிகள் நாயகத்துடன் தங்கிவிட்டவர்கள் யார் என்கின்ற விடயம் தொடர்பான
செய்திகள் இடம்பெற்றிருப்பதாகத் தெரியவில்லை.
அவ்வாறே நபி (ஸல்) அவர்களுடன் தங்கிவிட்டவர்களில் அலி (ரலி) அவர்களும் காணப்பட்டார் என்பதற்கும் ஆதாரம் எதுவும் இல்லை. எனினும், அப்பாஸ் (ரழி) அவர்களும், ஹாரிஸ் பின் அப்துல் முத்தலிப் (ரழி) ஆகியோர் நபிகள் நாயகத்துடன் தங்கிவிட்டார்கள் என்ற விடயம் மாத்திரமே வரலாற்றில் இடம்பெற்றுள்ளது. ஆகவே, இப்போரில் தோல்வியுற்ற அனைவரும் வழிகேடர்கள், காபிர்கள், நயவஞ்சகர்கள் என்று கூறுவது வெறுமனே, ஸஹாபாக்கள் மீது சொல்லப்படுகின்ற பொய்யும் அபாண்டமுமேயன்றி வேறில்லை.
குற்றச்சாட்டு 4- ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் ஜூம்ஆ தினத்தன்று பிரசங்கம் செய்து கொண்டிருந்துபோது, அவர்களை அப்படியே விட்டுவிட்டுச் ஸஹாபாக்கள் சென்றுவிட்டனர் என்று கூறி ஸஹாபாக்கள் மீது பழி சுமத்துகின்றனர். இதற்கு
ஆதாரமாகக் பின்வரும் அல்குர்ஆன் வசனத்தைக் கூறுகின்றனர்.
அல்லாஹ் கூறுகின்றான்:
வியாபாரத்தையோ அல்லது வீணானதையோ கண்டால், உம்மை நின்றவாராக விட்டுவிட்டு அவர்கள் அதன்பால் சென்றுவிடுகின்றனர்.
(அல்ஜூம்ஆ: 62: 11)
பதில்:-
இவர்களது இந்தக் குற்றச்சாட்டு பொருத்தமற்றதாகும். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் பிரசங்கம் செய்யும் போது வெளியேறிச் சென்ற நபித்தோழர்கள் உடனே திரும்பி வந்துவிட்டனர் என்றே நாம் கூறுகின்றோம். இவ்வாறு ஏனைய ஸஹாபாக்களைப் போன்று நபி (ஸல்) அவர்களை விட்டு விட்டுச் செல்லாது, அவருடன் தங்கியவர்களில், அலி (ரழி) அவர்கள் காணப்பட்டார்கள் என்று கூறி, அலி (ரழி), அவர்களைப் புகழ்ந்துரைத்துவிட்டு ஏனைய நபித்தோழர்களைக் குறை கூற அவர்களிடம் என்ன ஆதாரம் இருக்கின்றது.?
ஒருவேளை பிரசங்கத்தின்போது வெளியேறியவர்களில் அலி (ரழி) அவர்களும் ஒருவராகக் காணப்படிருந்தால் இவர்கள் என்னதான் கூறுவார்களோ! ஆகவே, அல்குர்ஆன் கூறுவதுபோன்று நபித்தோழர்கள் வெளியேறிச் சென்றார்கள் என்றும், அவர்கள் திரும்பிவந்து நபி (ஸல்) அவர்களுடன் சேர்ந்து தொழுகையைப் பூர்த்திசெய்தார்கள் என்றுமே நாம் உறுதியாகக் கூறமுடியும்.
இதனால்தான் அல்லாஹ் இவர்களைப்பற்றிக் கூறும் போது இதேவசனத்தொடரில் பின்வருமாறு கூறிகின்றான்:
(நபியே!) நீர் கூறுவீராக! அல்லாஹ்விடத்தில் இருப்பது வீணானதையும், வியாபாரத்தையும்விடச் சிறந்ததாகும். உணவளிப்போரில் அல்லாஹ் மிகச் சிறந்தவன்.
(அல்ஜும்ஆ: 62: 11)
எல்லா நிலையிலும் றாபிழாக்களாகிய இவர்கள், ஸஹாபாக்களுடைய விடயத்தில் சுமத்திய அபாண்டங்களும், கூறிய பொய்களும் மக்கள் மத்தியில் ஸஹாபாக்களைப் பற்றி தப்பெண்ணத்தை ஏற்படுத்தி, தமக்கு ஆதரவாளர்களாக மக்களைத் திசை திருப்பிக் கொள்ளும் நோக்கத்திலேயாகும். ஆகவே, றாபிழாக்கள், சத்தியத்தையும், நேர்வழியையும் விட்டும் மிகவும் தொலை தூரத்தில் இருக்கின்றனர் என்பது வெள்ளிடைமலை.
31. இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) கூறினார்கள்:
முஃமின்களின் ஆட்சியாளர்களுக்கும், தலைவர்களுக்கும் கட்டுப்படுவது கடமையாகும். இவர் நல்லவராயினும் சரி! கெட்டவராயினும் சரி! அவர் மக்களின் விருப்பத்துடனும், அவர்களின் ஏகமனதான ஆதரவுடனும் ஆட்சிபீடம் வந்தவராகவோ, அல்லது ஆயுதமுனையில் ஆட்சிபீடம் ஏறியவராகவோ இருக்கலாம். எவ்வாறாயினும் இவர் மக்களின் கலீபாவாகிய (அமீருல் முஃமினீன்) முஃமின்களின் தலைவர்- என்று அழைக்கப்படுகின்ற நிலை வந்துவிட்டால் அவருக்கு வழிப்பட்டு நடப்பது கடமையாகும்.
உபாதா பின் ஸாமித் (ரழி) அவர்கள் கூறியதாவது:
இன்பத்திலும், துன்பத்திலும் கட்டளையைச் செவியேற்றுக் கீழ்ப்படிந்து நடப்போம் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நாம் விசுவாசப்பிரமாணம் செய்து கொண்டோம்.
(நூல்கள்: புகாரி: 7199, முஸ்லிம்: 3518-3756)
32. ஜிஹாத் அமீருடன் நிறைவேற்றப்பட வேண்டிய இபாதத் ஆகும். அமீர் நல்லவராகவோ, கெட்டவராகவோ இருந்தபோதிலும் அவருடைய அனுமதியுடனயே ஜிஹாத் செல்லுபடியாகும். மறுமை நாள்வரை ஜிஹாத் செய்வதை விட்டுவிடக்கூடாது.
33. பைஉ முதல் பங்குவைத்தல், மற்றும் தண்டனைகளை நிறைவேற்றுதல் அனைத்தும் அமீருடைய கடமைகளாகும். இவ்விடயங்களில் யாரும் அவரைக் குறை கூறவோ, அவருடன் முரண்படவோ கூடாது.
34. ஒரு மனிதர் தமது சொத்துக்குரிய ஸகாத்தை தம் தலைவரிடம் ஒப்படைத்துவிடலாம். இவ்வாறு இமாமிடம் ஒப்படைத்துவிட்டால் அது நிறைவேறிவிடும். அவர் நல்லவராக இருந்தாலும் சரி, கெட்டவராக இருந்தாலும் சரி.
35. தலைவருக்குப் பின்னால் அல்லது அவரது பிரதிநிதிக்குப் பின்னால் நின்று ஜும்ஆத் தொழுகையை நிறைவேற்றுவது கடமையாகும். ஜும்ஆத் தொழுகை இரண்டு ரக அத்துக்களுடைய பூரணமான தொழுகையாகும். யாராவது ஜூம்ஆத் தொழுகையை மீட்டித் தொழுதால், அவர் பித்அத் காரனும், நபிவழியைக் கைவிட்டவரும், நபிவழிக்கு முரண்பட்டவரும் ஆவார்.
தலைவர்- நல்லவராக இருந்தாலும் சரி, கெட்டவராக இருந்தாலும் சரி- அவருக்குப் பின்னால் நின்று தொழுவது கூடாது என்று யாராவது கருதினால் அவருக்கு ஜும்ஆத் தொழுகையின் எந்தச் சிறப்பும் கிடைக்காது. தலைவருடன் சேர்ந்து 2 ரக் ஆத்துக்கள் ஜும்ஆத் தொழுகையை நிறைவேற்றுவதே நபிவழியாகும்.
இவ்வாறு நிறைவேற்றுவதே பூரணமான தொழுகையாகும். இவ்விடயத்தில் யாருடைய உள்ளதிலும் எந்த வகையான சந்தேகமும் இருக்கக் கூடாது.
விளக்கம்:-
இஸ்லாமிய ஆட்சியாளர்களுக்கெதிரான புரட்சிகளில் ஈடுபடுகின்ற கவாரிஜ்களுக்கு மறுப்புக் கூறுகின்ற நோக்கத்தில் தான் மேற்படி செய்தி கூறப்பட்டுள்ளது. அவ்வாறே ஆட்சியாளர்களுக்கெதிரான கிளர்ச்சிகளில் ஈடுபடுவதை ஆதரிக்கின்ற முஃதஸிலாக்கள் போன்றோருக்கும் இது மறுப்பாகும். ஒருவர் பின்வரும் மூன்று முறைகளில் ஏதாவது ஒரு முறையில் இஸ்லாமிய உம்மத்தின் தலைவராக நியமனம் பெற முடியும்.
அவை வருமாறு:-
1. முன்னைய ஆட்சியாளரால் நியமிக்கப்படவராக இருத்தல்.
2. மக்களால் தெரிவு செய்யப்பட்டவராக இருத்தல்.
3. ஆயுதமுனையில் ஆட்சிபீடமேறியவராக இருத்தல். மேற்படி மூன்று முறைகளில் எந்த முறையில் ஒரு முஸ்லிம் ஆட்சிபீடம் ஏறினாலும் அவரே- அமீருல் முஃமினீன் - முஃமின்களின் தலைவர் ஆவார்.
ஆகவே, அவரது வார்த்தைகளைச் செவியேற்று, அவருக்குக் கட்டுப்பட்டு நடப்பது கடமையாகும். அவ்வாறே அவருக்கு எதிரான புரட்சிகளில் ஈடுபடலாகது. ஏனெனில், ஆட்சியாளர்களுக்கெதிரான புரட்சிகளில் ஈடுபடுவது இஸ்லாமிய உம்மத்தில் குழப்பநிலையும், தீமைகளும் தலைதூக்கக் காரணமாக அமையும்.
* இவ்வாறான புரட்சிகளால் இதுவரை எத்தனைபேர் கொல்லப்பட்டுள்ளனர்?
* புரட்சிகளினால் எத்தனைபேர் சிறைவாசம் அனுபவிக்கின்கின்றனர்?
*. இவற்றின் மூலம் எத்தனை இஸ்லாமிய அறிஞர்களும், முஸ்லிம்களும் பாதிப்பக்குள்ளாயினர்!
இதனால்தான் இஸ்லாமியத் தலைவருக்கும், ஆட்சியாளருக்கும் செவியேற்றுக் கட்டுப்படுவது கடமை ஆகும் என்று அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமா
அத்தினர் கூறுகின்றனர்.
இதனை நபி (ஸல்) அவர்கள் (கீழ்வருமாறு)
கூறுகின்றார்கள்:-
அல்லாஹ்வின் வேதப்படி உங்களை வழிநடத்துகின்ற, உடலுறுப்புக்கள் துண்டிக்கப்பட்ட கறுப்பு நிற அடிமையொருவர் உங்களுக்குத் தலைவராக நியமிக்கப்பட்டாலும் அவரது சொல்லையேற்று அவருக்குக் கீழ்படிந்து நடவுங்கள்.
(நூல்: முஸ்லிம்: 3754)
அல்லாஹ்வுக்கு வழிப்படுகின்ற விடயங்களில் தலைவருக்குக் கட்டுப்பட்ட நடக்க வேண்டும் என்று கட்டளையிடப்பட்டுள்ளது போலவே அல்லாஹ்வுக்கு மாற்றமான செயல்களில் ஆட்சியாளருக்குக் கட்டுப்படக்கூடாது என்றும் ஏவப்பட்டுள்ளது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
படைத்தவனுக்கு மாற்றமான விடயங்களில், படைப்பினங்களுக்கு வழிப்படக் கூடாது.
(அறிவிப்பவர்: அலி பின் அபூதாலிப் (ரழி)
(நூல்: அஹ்மத்: 1/131)
ஆனால், இத்தகைய நிலையிலும் ஆயுதமுனையில் அவர்களுக்கெதிரான புரட்சிகளில் ஈடுபடுவதும், அவர்களுக்குச் செய்து கொண்ட உடன்படிக்கையை
முறித்துக் கொள்வதும் கூடாது.
ஆனால், தலைவருடன் சேர்ந்து நிறைவேற்றப்படுகின்ற எல்லா அமல்களும் நிறைவேறும், பெரும்பாலும் ஹஜ், ஜிஹாத் போன்ற வணக்கங்களுக்கு ஆட்சித் தலைவரே தலைமையேற்று நடத்துவார். எனவேதான் அமீர் நல்லவராகவோ கெட்டவராகவோ இருந்த போதிலும், ஹஜ், ஜிஹாத் போன்ற வணக்கங்கள் அவருடன் சேர்ந்து நிறைவேற்றப்பட வேண்டும்; இவை அவரின் நல்லறங்களாகவே கணிக்கப்படும் என்று அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஅத்தினர் கூறுகின்றனர்.
ஒரு யுத்தத்திற்கு தலைமை தாங்கும் அமீர் - அல்லது அவரின் பிரதிநிதி - இசைகேட்டல், போதைப்பொருள் பாவித்தல் போன்ற பெரும்பாவங்களில் ஈடுபடுபவராக இருந்தபோதிலும், அவருக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் அவருடைய பாவச் செயல்கள், அவருக்கு கட்டுப்படுவதாக நிறைவேற்றப்பட்ட உடன்படிக்கையை முறித்துக் கொள்வதற்கு நியாயங்களாக மாட்டது.
அதேபோன்று ஹஜ் கடமையைத் தலைமைதாங்கி நடாத்துகின்ற தலைவரோ, அவருடைய பிரதிநிதிகளோ, ஆளுநர்களோ பாவச் செயல்களில் ஈடுபடுபவர்களாக இருந்தாலும் அவர்களுக்குக் கட்டுப்படுவது அவசியமாகும்.
ஏனெனில், இது அவர்களின் நல்லறங்களாகும். இவர்கள் பாவச் செயல்களில் ஈடுபடுவதைக் காரணமாகக் காட்டி இவர்களுக்கெதிரான புரட்சிகளில் ஈடுபடவோ, உடன்படிக்கையை முறித்துக் கொள்ளவோ கூடாது.
கனீமத் (யுத்த களத்தில் கிடைக்கப்பெற்ற, எதிரிகளின் பொருட்கள்) பைஉ போன்ற எல்லாச் சொத்துக்களையும் பகிர்ந்தளிக்கின்ற பொறுப்பு (அமீர்) தலைவருக்கு உரியதாகும். அவர், அல்லாஹ்வின் கட்டளைப்படி உரியவர்களுக்கும், தகுதியானவர்களுக்கும் அவற்றைப் பகிர்ந்து வினியோகம் செய்வார். இவர்களின் பகிர்வை மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறே ஸகாத், ஸதகா போன்றவற்றையும் பகிர்ந்தளிப்பதற்காக, ஆட்சியாளரிடம் ஒப்படைத்து விடலாம். இவ்வாறு ஒருவர் அவற்றை ஆட்சித்தலைவரிடம் ஒப்படைத்துவிட்டால் அவரது கடமை நீங்கிவிடும். மீண்டும் அவற்றைத் தாமாகவே செலுத்த வேண்டியதில்லை. ஆட்சித்தலைவர் பாவச் செயல்களை ஏவாதவரை எல்லா நிலைமைகளிலும் அவருக்குக் கட்டுப்பட்டு நடப்பது கடமையாகும். (அவர் பாவச் செயல்களை ஏவியபோதும்) அவருக்கு எதிராகப் புரட்சி செய்வது தடைசெய்யப்பட்டதாகும். ஏனெனில், இதனைல் அதிகமான குழப்பங்களும், அநியாயாங்களும் ஏற்படலாம். ஆட்சியாளர்களுக்குப் பின்னால் நின்று தொழுவதும் கடமையாகும். ஆரம்பகாலத்தில் இவர்களாகவே ஜும்ஆ மற்றும் பெருநாள் தொழுகைகளை நடத்தி வந்தனர்.
எனவே, ஆட்சித் தலைவர், ஜும்ஆ, பெருநாள் முதலிய தொழுகைகளை இமாமாக நின்று நடாத்துவது அன்றைய வழமையாகக் காணப்பட்டது. எனவே அவர்கள் சில கெட்ட நடத்தைகளில் அல்லது பாவச் செயல்களில் ஈடுபடுபவர்களாக இருந்தாலும் கூட, அவர்களைப் பின் பற்றியே தொழ வேண்டும்.
ஆட்சியாளருக்குப் பின்னால் மஃமூமாக நின்று தொழுவது கூடாது என்று முஃதஸிலாக்கள் கருதுகின்றனர். இவர் (தொழுகை நடத்துபவர்) அமீர் எனும் தலைவராக இருந்தாலும் சரி! அல்லது வாலி எனும் கவர்னராக இருந்தாலும் சரி இவர்களுக்குப் பின்னால் நின்று தொழக்கூடாது என்பதே முஃதஸிலாக்களின் நிலைப்படாகும்.
ஆட்சித்தலைவருக்குப் பின்னால் நிர்ப்பந்தரீதியாகத் தொழவேண்டிய நிலை முஃதஸிலாக்களுக்கு ஏற்பட்டால் அவர்கள் அத்தொழுகையை மீட்டித் தொழுபவர்களாகவே இருந்தனர். இது முஃதஸிலாக்களின் பிடிவாதமும் அளவுமீறலும் ஆகும். ஏனெனில், ஸஹாபாக்கள் கூட ஹஜ்ஜாஜ் பின் யூஸூப், இப்னு ஸியாத், வலீத் பின் உக்பா போன்ற சில தீய நடத்தைகள் கொண்ட ஆட்சியாளர்களுக்குப் பின்னால் மஃமூம்களாக நின்று தொழுது வந்துள்ளனர். ஆனால் அவர்கள் அந்தத் தொழுகைகளை மீட்டித் தொழவில்லை.
36. இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) கூறியதாவது:
ஒரு தலைவருக்கு (மக்களின் விருப்பத்துடன் அல்லது ஆயுதமுனையில் ஆட்சிபீடம் ஏறியவராக இருப்பினும் கூட) எதிராக யாராவது புரட்சியில் ஈடுபட்டால், அவர் முஸ்லிம்களின் ஒற்றுமையைச் சீர்குலைத்தவரும், ரஸுல் (ஸல்) அவர்களின் வழிமுறைக்கு மாற்றம் செய்தவரும் ஆவார். மேலும் இவ்வாறு புரட்சி செய்தவர் மரணித்தால், அவர் அறியாமையிலேயே (ஜாஹிலிய்யத்திலேயே) மரணிப்பார்.
ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தம் ஆட்சித் தலைவரிடத்தில் (மார்க்க விடயத்தில்) குறை எதையேனும் கண்டு அதைவெறுப்பவர் பொறுமையைக் கடைபிடிக்கட்டும். ஏனெனில், ஒருவர்
(ஒன்றுபட்ட, கட்டமைப்பிலிருந்து ஒரு சாண் அளவுக்குப் பிரிந்து இறந்து போனாலும் அவர் அறியாமைக்கால மரணத்தையே தழுவுகின்றார்.
(அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரழி)
(நூல்கள்: புகாரி: 7053, 7054, 7143 முஸ்லிம்: 3766, 3769)
37. மேலும், ஆட்சியாளருடன் சண்டையிடுவதோ, அவருக்கு எதிரான புரட்சிகளில் ஈடுபடுவதோ எந்தவொரு மனிதனுக்கும் அனுமதிக்கப்பட்டதன்று. இவ்வாறு யாராவது செய்தால் அவர் பித்அத் காரரும், நபி வழியிலிருந்து விலகிக் கொண்டவரும் ஆவார்.
விளக்கம்:-
ஆட்சியாளர்களுக்கு எதிரான புரட்சிகளில் ஈடுபடுவதானது அதிகமான அநியாயாங்கள் நடைபெறக் காரணமாக அமைகின்றது. இதனால் குழப்பங்களும், கொலைகளும், நல்லடியார்கள் மீது அடக்குமுறைகளும் ஏற்படுகின்றன.
வன்முறைகள் அதிகரிக்கின்றன. மேலும், இதனால் மார்க்கப்பற்றுள்ளவர்களும், உண்மையான இறைவிசுவாசிகளும், மார்க்க அறிஞர்களும் நன்நடத்தையுள்ளோரும் இழிவுக்கும் இன்னல்களுக்கும் ஆளாக நேரிடும்.
இஸ்லாமிய வரலாற்றில் ஆரம்ப காலங்களில் ஏற்பட்ட புரட்சிகளும், அவற்றின் விபரீதங்களும் இஸ்லாமிய உம்மத்தினருக்குப் போதிய அனுபவங்களும், படிப்பினைகளுமாகும்.
இப்னுல் அஷ்அஸ் என்பவரும் அவரது ஆதரவாளர்களும் அமீருல் முஃமினீன் அப்துல் மலிக் அவர்களுக்குச் செய்திருந்த சத்தியப்பிரமாணத்தை முறித்துக் கொண்டு, ஈராக் பகுதியின் ஆளுநராக இருந்த ஹஜ்ஜாஜ் பின் யூஸுப் என்பவருக்கு எதிராகப் புரட்சி செய்ய ஆரம்பித்தனர். இவரது ஆதரவாளர்களில் அதிகமானோர், அன்று வாழ்ந்த தாபிஈன்களைச் சேர்ந்த உலமாக்களாவர். எனினும் அப்போது ஆளுநராக இருந்த ஹஜ்ஜாஜ் பின் யூஸுப் அவர்கள், புரட்சியாளரையும், அவரது ஆதரவாளர்களையும் வெற்றி கொண்டதையடுத்து அவர்கள் கொலைசெய்யப்பட்டனர். அதுமட்டுமன்றி இந்நிகழ்ச்சியின் பின்னணியில் ஹஜ்ஜாஜ் அவர்கள் பெருந்தொகையானவர்களைக் கொலை செய்தார். இறுதியாக பேரறிஞர் ஸாத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்களும் கொலை செய்யப்பட்டார். இவர் மிகச்சிறந்த தாபிஈன்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
குதைபா பின் முஸ்லிம் என்பவர் மிகச்சிறந்த போர் வீர்ராகவும், தளபதிகளில் ஒருவராகவும் காணப்பட்டார். இவர் அமீருல் முஃமினீன் ஸுலைமான் பின் அப்துல்மலிக் என்பருக்குச் செய்திருந்த உடன்படிக்கையை முறித்துக்கொண்டு, அவருக்கு எதிரான புரட்சியில் ஈடுபட ஆரம்பித்தார். இதன் விளைவாக இரு தரப்பினருக்குமிடையில் சண்டை மூண்டது. இறுதியில் தளபதி குதைபா அவர் கொலை செய்யப்பட்டார்.
இமாம் இப்னு கதீர் (ரஹ்) அவர்கள் கூறுவதாவது:
"யார் பைஅத் செய்யாமல் மரணிக்கிறாரோ அவர் ஜாஹிலிய்யத்தில் மரணிக்கின்றார் என்ற நபிமொழி தளபதி குதைபா பின் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் விடயத்திற்கு மிகப்பொருத்தமானதாகத் தென்படுகின்றது. ஆனாலும், இவருக்கு அல்லாஹ்வின் அருள் கிடைக்கப் பிரார்த்திக்க வேண்டும்.
ஏனெனில், இவர் ஜிஹாதில் நிறையப்பங்களிப்புச் செய்துள்ளார். இந்தியா, ரஷ்யா போன்ற நாடுகளையும், இன்னும் பல நாடுகளையும் வெற்றி கொண்ட சிறப்பு இவருக்குச் சொந்தமானதாகும்.”
இவ்வாறே இப்னுல் முஹல்லப் என்வரும் பைஅத்தை முறித்துக் கொண்டு, ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான புரட்சியில் ஈடுபட்டார். இதன் பின்னணியிலும் வன்முறைகளும் குழப்பங்களும் ஏற்பட்டன.
உமையாக்களின் ஆட்சியின் இறுதிக்காலப் பகுதியில் ஹுஸைன் (ரழி) அவர்களின் பேரரான ஸைத் என்பவர் ஆட்சியைக் கைப்பற்ற நினைத்து புரட்சியில் ஈடுபட்டார். இதன் பின்னணியில் இவரும் இவரது ஆதரவாளர்களிற் பலரும் கொலை செய்யப்படனர். ஏனையோர் அடக்கி ஒடுக்கப்பட்டனர்.
கலீபா மன்னர் அவர்களுடைய ஆட்சிக்காலத்தில் அலவிய்யீன்களைச் சேர்ந்த முஹம்மத் பின் அப்துல்லாஹ் பின் ஹஸன் என்பவரும், அவரது சகோதரர் அல் அப்பாஸ் என்பவரும் ஆட்சியாளருக்கு எதிரான புரட்சியில் ஈடுபட்டார்கள். இவ்விருவருக்கும் அதிகமானோர் பைஅத் செய்து கொண்டனர். எனினும், ஈற்றில் இவர்கள் அனைவரும் கொலை செய்யப்பட்டார்கள்.
எனவே, எந்த நிலையிலும் ஆட்சியாளருக்கு எதிரான புரட்சிகளில் ஈடுபடுவது கூடாது. இதனால், நல்லவர்களும், அப்பாவிகளும் ஆட்சியாளர்களின் துன்புறுத்தல்களுக்கும், இழிவுக்கும், அடக்குமுறைகளுக்கும் ஆளாகின்றனர்.
ஏனெனில் எப்போதும் அதிகாரம் என்பது ஆட்சியாளர்களின் கைவசமுள்ளதாகும். எனவே, பாவச் செயல்கள் தவிர்ந்த ஏனைய எல்லா விடயங்களிலும், அவர்களுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். இவர்களுக்கு எதிராக புரட்சிகளில் ஈடுபடுவது தடைசெய்யப்பட்டதாகும்.
எனினும் நேரடியாக இறைநிராகரிப்பை ஏற்படுத்தக் கூடிய செயல்களில் ஈடுபட்டால் அவர்களுக்கு எதிராகப் புரட்சி செய்யலாம். ஏனெனில், உபாதா (ரழி)
அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களை அழைத்தார்கள். நாங்கள் அவர்களிடம் சென்று உறுதிமொழி அளித்தோம். எங்களுக்கு விருப்பமான விசயத்திலும், எங்களுக்கு விருப்பமில்லாத விடயத்திலும் நாங்கள் சிரமத்தில் இருக்கும் போதும் வசதியாய் இருக்கும்போதும் எங்களைவிட மற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் போதும் கூட (தலைமையின் கட்டளையைச்) செவியுற்றுக் கீழ்படிந்து நடப்போம் என்றும், ஆட்சியதிகாரத்தில் இருப்போருடன் அவருடைய அதிகாரம் தொடர்பான விடயத்தில் நாங்கள் சண்டையிட மாட்டோம் என்றும் உறுதிமொழி அளிப்போம். "எந்த விடயம் பகிரங்கமான இறைமறுப்பு என்பதற்கு அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு ஆதாரம் கிடைத்துள்ளதோ அத்தகைய விஷயத்தை நீங்கள் ஆட்சியாளரிடம் கண்டாலே தவிர” என்று எங்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உறுதிமொழிவாங்கியதும் அவர்கள் எங்களிடம் பெற்ற பிரமாணங்களில் அடங்கும்.
(நூல்கள்: புகாரி: 7055, 7056 முஸ்லிம்: 3755)
எனவே, ஆட்சியாளர்கள் தொழுகையை நிலைநாட்டி, மார்க்கத்தின் ஏனைய சின்னங்களையும் நிலை நிறுத்திவிட்டால் போதுமானது.
உம்மு ஸலமா (ரழி) கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "(எனக்குப் பின்) சில தலைவர்கள் வருவார்கள். அவர்களிடம் நீங்கள் நன்மையையும் காண்பீர்கள், தீமையையும் காண்பீர்கள். யார் தீமையைத் தெளிவாக அறிந்து கொண்டாரோ அவர் பிழைத்தார். யார் வெறுத்தாரோ அவர் தப்பித்தார்....... "
(நுல்: முஸ்லிம்: 3775)
மக்களின் விவகாரங்களில் இவர்களால் தவறுகள் நடந்தாலும், அல்லது இவர்களே பாவச் செயல்களில் ஈடுபட்டாலும் கூட, இவர்களுக்கு கட்டாயம் வழிப்பட்டு நடக்க வேண்டும். இவர்கள் விடுகின்ற தவறுகளோ, ஈடுபடுகின்ற பாவச் செயல்களோ இவர்களுக்கெதிரான புரட்சிகளில் ஈடுவடுவதை நியாயப்படுத்தவோ, அங்கீகரிக்கப்படவோ மாட்டது.
38. இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) கூறினார்கள்:
கவாரிஜ்கள் மற்றும் திருடர்கள் ஒரு மனிதரைக் கொலைசெய்யவோ அல்லது அவருடைய சொத்துக்களைப் பறிமுதல் செய்யவோ வந்தால் அவர்களுடன் போராடுவது அனுமதிக்கப்பட்டதாகும். இவ்வாறான சந்தர்ப்பத்தில் தனது உயிர் மற்றும் உடைமைகளைப் பாதுகாத்துக் கொள்ளும்பொருட்டு தற்பாதுகாப்புக்காக அவர்களுடன் போராடுவதை சரீஅத் அனுமதித்துள்ளது.
இதற்காக சக்திக்குட்பட்ட அனைத்து வழிகளிலும், முயற்சிக்க வேண்டும். அப்போது அவர்கள் தப்பியோடிவிட்டால், அவர்களை விரட்டிச் செல்வதோ (அமீர் எனும் ஆட்சித்தலைவருக்கோ அவருடைய பிரதிநிதிக்கோ அன்றி யாருக்கும்) அனுமதிக்கப்பட்டதன்று.
ஆட்சித்தலைவர் மற்றும் அவரது அதிகாரம் பெற்ற பிரதிநிதிகள் தவிர்ந்த வேறுயாரும் சண்டை நடந்த இடத்திலன்றி வேறு எந்த இடத்திலும் அவர்களுடன் சண்டையிடுவது கூடாது. அதேபோன்று சண்டையிடும் போது, அவர்களைக் கொலை செய்வதை நோக்கமாக் கொள்ளவும் கூடாது.
ஆனால், தற்பாதுகாப்புக்காக ஒருவர் சண்டையிடும்போது இவருடைய கையினால் கவாரிஜ்கள் மற்றும் திருடர்களில் யாராவது கொலை செய்யப்பட்டுவிட்டால் அதில் தவறேதுமில்லை.
அதேவேளை சண்டையில் இவர் கொலை செய்யப்பட்டுவிட்டால், இவர் - ஷஹீத் - உயிர்த்தியாகியாகக் கருதப்படுவார். இது தொடர்பாக இடம்பெற்றுள்ள செய்திகள் அனைத்தும் கவாரிஜ்களுடனும், திருடர்களுடனும் சண்டையிடுவதை அனுமதிக்கின்றது.
அபூஹுரைரா ரழி அவர்கள் கூறினார்கள்:
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து "அல்லாஹ்வின் தூதரே! ஒருவன் எனது செல்வத்தைப் பறிக்கும் நோக்கில் வந்தால் (நான் என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள்?” என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவனுக்கு உங்களது செல்வத்தைவிட்டுக் கொடுக்க வேண்டியதில்லை." என்று கூறினார்கள். அந்த மனிதர், "அவன் என்னுடன் சண்டையிட்டால்?” என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீரும் அவனுடன் சண்டையிட வேண்டியது தான்” என்றார்கள் . "(அந்தச் சண்டையில் அவன் என்னைக் கொன்றுவிட்டால்?” என்று அந்தமனிதர் கேட்டார். அவர்கள், "அப்போது நீர் உயிர்த்தியாகி (ஷஹீத்) ஆவீர்” என்றார்கள். "நான் அவனைக் கொன்றுவிட்டால்... ?” என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவன் நரகத்திற்குச் செல்வான்” என்று பதிலளித்தார்கள்.
(நூல்: முஸ்லிம்: 225)
எனவே, கவாரிஜ்கள், திருடர்கள் போன்ற குற்றவாளிகளை நேரடியாகக் கொலைசெய்வதோ, தப்பியோடிவிட்டால் அவர்களைத் தேடிச் செல்வதோ கூடாது.
அவ்வாறே அவர்கள் மயக்கமுற்றோ அல்லது காயப்பட்டோ விழுந்துவிட்டால் திரும்பவும் அவர்களைத் தாக்கவோ, கொலை செய்துவிடவோ கூடாது. அவர்கள் சரணடைந்து விட்டால் அல்லது கைதிகளாக பிடிபட்டுவிட்டால், இவ்விரு நிலைகளிலும் அவர்களைக் கொலை செய்வதோ, அவர்களுக்குரிய தண்டனையை நிறைவேற்ற நினைப்பதோ கூடாது. இவர்களுக்குத் தண்டனை வழங்குகின்ற அதிகாரம் ஆட்சித்தலைவருக்கு உரியதாகும்.
எனவே, இவர்களை ஆட்சியாளரிடம் ஒப்படைக்க வேண்டும். இவர்களின் விடயத்தில் முடிவெடுக்கின்ற அதிகாரம் ஆட்சித்தலைவருக்கு உரியதாகும்.
விளக்கம்:-
பிறரது பொருட்களை அபகரிக்க முயல்வோர் திருடர்களாவர். வழிப்பறிக்கொள்ளையர்களும், அட்டூழியக்காரர்களும் இவர்களைப் போன்றோரே! ஆனால், இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடுவதனால் இவர்கள் காபிர்களாகி விடுவதில்லை. இவர்கள் ஆயுதங்களுடன் திருடவோ கொள்ளையிடவோ வந்தால், இவர்களுக்கு எதிராக சக்திக்குட்பட்ட அனைத்து ஆயுதங்களையும்
பயன்படுத்தலாம்.
இவ்வாறானவர்களுக்குரிய தண்டனையை அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது:
"அல்லாஹ்வுடனும் அவனது தூதருடனும் போர்புரிந்து, இன்னும் பூமியில் குழப்பம் விழைவிப்போருக்குரிய தண்டனையாவது அவர்கள் கொல்லப்படுவதும், அல்லது சிலுவையில் அறையப்படுவதும், அல்லது அவர்களுடைய மாறுகைகள், மாறு கால்கள் வெட்டப்படுவதும், அல்லது அவர்கள் நாடு கடத்தப்படுவதும் ஆகும். இது இவ்வுலகில் அவர்களுக்குரிய இழிவாகும். மறுமையிலோ அவர்களுக்குக் கடுமையான வேதனையுண்டு”
(அல்மாஇதா: 5: 33)
திருடர்கள் திருடுவதற்காக வீட்டினுள் நுழைந்து விட்டால், விட்டுரிமையாளர் அவர்களைத் தடுத்து நிறுத்த மிகச் சிறந்த வழிமுறைகளைக் கையாள வேண்டும். சண்டையிடும் நோக்கமின்றி வெறுமனே பணத்தையோ பொருள்களையோ திருடும் நோக்கில் அல்லது கொள்ளையடிக்கும் நோக்கில் வந்திருப்பின் ஆரம்பத்திலேயே அவர்களுடன் சண்டையிடத் தொடங்கக்கூடாது. அவர்கள் சண்டையிட ஆரம்பித்தாலே தவிர, ஆனால், திருடன் ஆயுதம் தாங்கிய நிலையில் வீட்டாருடன் சண்டையிடும் நோக்கில் வந்திருப்பதை அவதானித்தால் அவர்களுடன் போராட வேண்டும்.
(ஒரு முறை அப்துல்லாஹ் பின் உமர் (ரழி) அவர்களின் வீட்டுக்கு ஒரு திருடன் வந்தான். உடனே இவர் திருடனைக் கொலைசெய்வதற்காக அவனை நோக்கி வாளை உருவினார். இவருடைய பிள்ளைகள் இவரைப் பிடித்திருக்காவிட்டால், இவர் திருடனை அதே இடத்தில் கொலை செய்திருப்பார். ஏனெனில், இந்தத் திருடர் வரம்பு மீறிய ஒருவராகவோ, அட்டூழியக்காரர்களில் ஒருவராகவோ இருக்கலாம் என்பது இப்னு உமர் (ரழி) அவர்களின் கருத்தாக இருக்கக் கூடும்.)
எனினும் இவர்கள் காயப்பட்டு விழுந்துவிட்டால், இவர்களைக் கொலை செய்து விடவோ, புறமுதுகுகாட்டித் தப்பியோடிவிட்டால் விரட்டிச் செல்லவோ கூடாது. இவர்களைவிட்டுவிட வேண்டும் என்பது சரீஅத்தின் நிலைப்பாடாகும்.
ஷரீஅத்தின் இந்நிலைப்பாட்டிலிருந்து இவர்கள் தமது குற்றச் செயல்களின் மூலம் - இஸ்லாத்திலிருந்து வெளியேறிவிடவில்லை என்பது தெரியவருகின்றது. எனவே ஆரம்பத்தில், இவர்களுக்கு இறைவனை நினைவூட்டிய பிறகு எச்சரிக்கை செய்து பயமுறுத்த வேண்டும். இவர்களிடம் இறை நினைவூட்டலோ, அச்சமூட்டி எச்சரிக்கை செய்தலோ பயனளிக்காத போது, அவர்களைத் தாக்குகின்ற, தடுத்து நிறுத்தக் கூடிய ஆயுதபலம் தம்மிடம் இருப்பதைத் தெரிவிக்க வேண்டும். இதுவும் பயனளிக்காவிட்டால், படிப்படியாக ஆயுதங்களை அவர்களுக்கெதிராகப் பயன்படுத்த வேண்டும். அதாவது தடி போன்றவைகளைப் பயன்படுத்துவதன் மூலம் அவர்களைத் தடுத்து நிறுத்த முடியுமாயின், ஆயுதங்களைப் பயன்படுத்தாது அவற்றைக் கொண்டு போதுமாக்கிக் கொள்ள வேண்டும். இதுவும் பயனளிக்காவிட்டால் வாள் போன்ற ஆயுதங்களைத் தவிர்த்து, கத்தி போன்றவற்றைப் பயன்படுத்த வேண்டும். இவற்றுக்கும் அவர்கள் அடங்காவிட்டால், வாளையோ, அவர்களைக் கொலை செய்யக்கூடிய ஏதாவது ஒன்றையோ அல்லது தற்காலத்தில் பயன்படுத்தப்படுகின்ற துப்பாக்கி போன்ற ஆயுதங்களையோ பயன்படுத்தி, அவர்களுடைய சூழ்ச்சிகள் மற்றும் தீமைகள் போன்றவற்றில் இருந்து தற்காத்துக் கொள்ள அனுமதியுண்டு.
கொலை செய்தல், பொருட்களைக் கொள்ளையடித்தல், வீட்டிலுள்ள பெண்களைக் கற்பழித்தல் போன்ற எந்த நோக்கத்திற்காக வந்தவர்களாயினும் சரி, இவர்கள் வரம்பு மீறிய திருடர்களாகவே கருதப்படுவர்.
ஆகவே, இவ்வாறு அத்துமீறி வருபவர்களின் சூழ்ச்சிகளில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக தேவைப்படும் ஆயுதங்களைப் படிப்படியாகக் கையாள
வேண்டும். அதாவது இவர்களைக் கைது செய்து தண்டிக்கின்ற அதிகாரம் பெற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டும், முறைப்பாடு செய்ய வேண்டும்.
39. இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) கூறினார்கள்:
முஸ்லிம்களில் எவரைக் குறித்தும், அவர் செய்கின்ற அமல்களின் அடிப்படையில், அவர் சுவர்க்கவாசி என்றோ நரகவாசி என்றோ அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஅத்தினர் ஆகிய நாம் சாட்சி சொல்லமாட்டோம். இவர்களில் நல்லவர்களுக்கு அல்லாஹ்வின் அருள் கிடைக்க வேண்டும் என நாடுகிறோம். அத்தோடு அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய அல்லாஹ்வின் தண்டனையை நினைத்துப் பயப்படுவோம். மேலும், பாவிகள் விடயத்தில் அல்லாஹ்வின் தண்டனைபற்றிப் பயப்படுவதுடன் அவர்களுக்கும் அல்லாஹ்வின் அருள்கிடைக்க வேண்டும் என நாடுகிறோம்.
விளக்கம்:-
ஒரு தனிநபரைப் பார்த்து இவர் சுவர்க்கவாசி என்றோ நரகவாசி என்றோ அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஅத்தினர் சாட்சி சொல்லமாட்டார்கள். சுவர்க்கத்தைக் கொண்டு நற்செய்தி சொல்கின்ற அல்லது நரகத்தைப பற்றி எச்சரிக்கை செய்கின்ற சில நபிமொழிகளுக்கு ஏற்றவாறு இருந்தாலும் கூட. இவ்விரு வகையான செய்திகளும் எவ்வகையான ஹதீஸ்களை ஒருவர் ஏற்று அமல் செய்தாலும் அவரது இறுதி முடிவு அல்லாஹ்விடமே உண்டு என்பது அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஅத்தினரின் நம்பிக்கையாகும்.
இதற்கு உதாரணமாகக் பின்வரும் நபிமொழிகளைக் குறிப்படலாம்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் திருப்தியை நாடி 'லாஇலாஹ இல்லல்லாஹ்' என்று சொன்னவரை நரகத்திலிருந்து அல்லாஹ் தடுத்து (ஹராமாக்கி) விட்டான்.
(அறிவிப்பவர்: இத்பான் பின் மாலிக் (ரழி) அவர்கள்)
(நூல்: முஸ்லிம்: 1165)
இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
நபி (ஸல்) அவர்கள், “எவருடைய உள்ளத்தில் அணுவளவு தற்பெருமை இருக்கிறதோ அவர் சுவர்க்கத்தில் நுழையமாட்டார்" என்று கூறினார்கள்.
(நூல்: முஸ்லிம்: 147)
ஹுபைதா (ரழி) அவர்கள்,
"கோள் சொல்கின்றவன் சொர்க்கம் செல்ல மாட்டான்" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கோட்டுள்ளேன் என்று கூறினார்கள்.
(நூல்கள்: புகாரி: 6056 முஸ்லிம்: 168, 169)
இவை நரகத்தைப் பற்றி எச்சரிக்கை செய்கின்ற ஹதீஸ்கள் ஆகும். இதனடிப்படையில் மமதை கொள்கின்ற அல்லது புறம் பேசுகின்ற ஒரு தனிநபரை
நோக்கி, நரகவாசி என அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஅத்தினர் கூறமாட்டார்கள். இவர்களின் விவகாரம் அல்லாஹ்வின் கையில் உள்ளது. ஏனெனில், இவர்களின் உள்ளத்தை அவனே அறிந்தவன் ஆவான். ஆனால், மேற்கூறப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் 'இவர்கள் பாவிகள்' என்பர். எனினும், இவர்களது முடிவு அல்லாஹ்விடமேயுள்ளது. இவர்களை அல்லாஹ் நாடினால் தண்டிப்பான்; அவன் நாடினால் மன்னிப்பான். சிலருக்குப் பாவமன்னிப்பு வழங்குவதாகவும், நற்கூலி அளிப்பதாகவும் அல்லாஹ் கூறியுள்ளான். ஆகவே, இவர்களின் விவகாரமும் அல்லாஹ்விடமேயுள்ளது. எனவே அவன் நாடினால் பாவமன்னிப்பைப் பூரணமாக்கி, தனது பேரருளால் இவர்களை சுவர்க்கத்தில் நுழையச் செய்வான்.
அவ்வாறே அவன் நாடினால் பாவங்களுக்காக அவர்களைத் தண்டிப்பான். அவர்களை எப்படித் தண்டிப்பான் என்பதை அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.
நபி (ஸல்) அவர்கள் யாருக்கு சுவர்க்கம் கடமையாகிவிட்டது என்று நற்செய்தி கூறினார்களோ, இவர்கள் சுவர்க்கவாசிகள் என்று கூறவும், நம்பவும் வேண்டும். அவ்வாறே நபி (ஸல்) அவர்கள் யாருக்கு நரகம் வாஜிபாகிவிட்டது என்று கூறினார்களோ இவர்கள் நரகவாசிகள் என்று கூறுவதும், நம்புவதும் அஹ்லுஸ்ஸுன்னாவின் அடிப்படையாகும்.
ஸஹாபாக்களான அபூபக்ர் (ரழி), உமர் (ரழி), உஸ்மான் (ரழி), ஸஃது பின் அபீவக்காஸ் (ரழி), அபூ உபைதா ஆமிர் பின் ஜர்ராஹ் (ரழி), தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரழி), ஸஈத் பின் ஸைத் (ரழி) முதலானவர்கள் சுவர்க்கத்தைக் கொண்டு நற்செய்தி பெற்ற பிரபலமான 10 நபித்தோழர்களுமாவர்.
அவ்வாறே ஹஸன் (ரழி), ஹுஸைன் (ரழி), ஸாபித் பின் கைஸ் (ரழி), உகாஷா பின் மிஹ்ஸன் (ரழி), அப்துல்லா பின் ஸல்லாம் (ரழி), அம்மார் பின் யாஸிர் (ரழி) போன்றோரும் சுவர்க்கத்தைக் கொண்டு நற்செய்திபெற்றோர் ஆவர்.
இவ்வாறு நற்செய்திபெற்றோர் இன்னும் சிலர் உள்ளனர். இவ்வாறே இன்னும் சிலருக்கு நரகம் கடமையாகி விட்டது என்பதை அல்குர்ஆனும், ஸுன்னாவும் கூறுகின்றன. இவர்களில் அபூலஹப் என்பவனைப் பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகிறது.
அபுலஹபின் இருகைகளும் நாசமாகட்டும்! மேலும், அவனும் நாசமாகட்டும்.
(அல்லஹுப்: 111: 01)
மேலும், அபூஜஹ்ல், நபி (ஸல்) அவர்களுடைய தகப்பனாரான அப்துல்லா, சிறிய தந்தையான அபூதாலிப் போன்றோரும் நரகவாசிகள் எனக் குறிப்பட்டுச் சில ஆதாரபூர்வமான செய்திகள் வந்துள்ளன. இந்த வரிசையில் இன்னும் பலர் உள்ளனர். இவர்கள் விடயத்தில் ஆதாரபூர்வமான நபிமொழிகள் வந்துள்ளன. ஆகவே, குர்ஆனும், சுன்னாவும் நரகவாசிகள் என்று கூறும் இவர்களை நரகவாசிகள் என்று நாமும் கூறவும், நம்பவும் வேண்டும்.
இவர்கள் விடயத்தில் இதுவே அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஅத்தினரின் நம்பிக்கையாகும்.
40. இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) கூறினார்கள்:
நரகம் கடமையாகிவிடக்கூடிய பாவங்களில் ஈடுபட்ட ஒரு மனிதர், அதில் தொடர்ந்து ஈடுபடாமல், தெளபாச் செய்த நிலையில் மரணித்தால், நிச்சயமாக அல்லாஹ் அவரை மன்னிப்பான். (அவன் அடியார்களிடமிருந்து தெளபாவை ஏற்றுக் கொள்பவனாகவும், குற்றச் செயல்களை மன்னிப்பவனாகவும் இருக்கிறான்.)
41. குற்றம் செய்த ஒருவர், அவர் மீது அக்குற்றத்திற்கான தண்டனை உலகிலேயே நிறைவேற்றப்பட்ட பின்னர் மரணித்தால், அது அவரின் குற்றத்திற்குரிய பரிகாரமாக அமையும். இதனை ஹதீஸ்கள் உறுதிப்படுத்துகின்றன.
42. தண்டனைக்குரிய பாவத்தில் ஈடுபட்ட ஒருவர், அதனைத் தொடர்ந்து செய்தவராக, தெளபாச் செய்யாமல் மரணித்தால், இவருடைய விவகாரம் அல்லாஹ்வின் நாட்டத்தில் உள்ளதாகும். இவரை அவன் நாடினால் மன்னிப்பான், அவன் நாடினால் தண்டிப்பான்.
விளக்கம்:-
மறுமையின் அதிகாரங்கள் அனைத்தும் அல்லாஹ்விடம் உள்ளது. பாவிகளை அவன் நாடினால் மன்னிப்பான். அவன் நாடினால் தண்டிப்பான். மன்னிக்கின்ற அல்லது தண்டிக்கின்ற அதிகாரம் அவனுக்கு மாத்திரமே உரியதாகும்.
எவ்வாறாயினும் ஈமானுடன் மரணிக்கின்ற ஒருவர், அல்லாஹ்வின் மன்னிப்புக்கு அருகதையுள்ளவர் ஆவார். இதனை அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்:
மேலும், அவன் தனது அடியார்களின் பாவமன்னிப்புக் கோரலை ஏற்று, தீமைகளை மன்னிக்கின்றான். இன்னும் நீங்கள் செய்பவற்றையும் அவன் நன்கறிவான்.
(அஷ்ஹுரா: 42: 25)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சூரியன் மேற்கிலிருந்து உதிப்பதற்கு (யுக முடிவுக்கு) முன் யார் பாவமன்னிப்புக் கோரித் திருந்திவிடுகிறாரோ அவருடைய தெளபாவை அல்லாஹ் ஏற்றுக் கொள்கின்றான்.
(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி)
(நூல்: முஸ்லிம்: 5236)
எனவே, ஈமான் கொண்ட ஒருவர், இணைவைத்தல் தவிர்ந்த வேறு எந்தக்குற்றச் செயல்களைப் புரிந்த நிலையில் மரணித்தாலும் அவரை அல்லாஹ் நாடினால் மன்னிப்பான். அல்லது அவன் நாடினால் தண்டிப்பான்.
அல்லாஹ் கூறுகின்றான்:
நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைக்கப்படுவதை மன்னிக்கவேமாட்டான். இது தவிர ஏனையவற்றைக் தான் நாடுவோருக்கு அவன் மன்னிப்பான்.
(அந்நிஸா.ஃ: 04: 116)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காமல் இறந்துவிடுகிறாரோ அவர் நிச்சயமாக சுவர்க்கம் செல்வார். யார் அல்லாஹ்வுக்கு இணைவைத்தவராக இறந்துவிடுகிறாரோ அவர் நிச்சயமாக நரகம் செல்வார்.
(அறிவிப்பவர்: ஜாபிர் (ரழி) அவர்கள்.)
(நூல்: முஸ்லிம்: 151)
எனவே, அவன் வானம், பூமி அனைத்திலுமுள்ள அனைவரையும் தண்டித்தாலும் யாருக்கும் அநியாயம் செய்யாமல், குற்றங்களின் அளவுக்கே தண்டிப்பான். அவர்கள் அனைவருக்கும் அவன் அருள் புரிந்தால், அவர்கள் அனைவருக்கும் தமது அமல்களைவிட அல்லாஹ்வின் அருள் மிகச் சிறந்ததாகவே காணப்படும்.
ஏனெனில், இவர்களின் அமல்களுக்காக எவ்வளவு பெரிய கூலி கிடைத்தாலும், அவை அவர்களுக்குக் கிடைக்கின்ற, அல்லாஹ்வின் அருளுக்கும், கருணைக்கும் ஈடாக மாட்டாது.
ஏனெனில் நபி (ஸல்) அவர்கள்,
"நடுநிலையாக நற்செயலாற்றுங்கள். (அல்லது) அதற்கு நெருக்கமாக செயலாற்றுங்கள். நற்செய்தி பெற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில், யாரையும் அவரது
நற்செயல் ஒருபோதும் சுவர்க்கத்தில் நுழைவிக்காது” என்றார்கள். அப்போது மக்கள், “தங்களையுமா? அல்லாஹ்வின் தூதரே!" என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என்னையும் தான், அல்லாஹ் தனது பேரருளால் என்னை அரவணைத்துக் கொண்டால் தவிர”
(அறிவிப்பவர்: ஆயிஷா (ரழி) அவர்கள்.)
(நூல்கள்: புகாரி: 6464, 6467 முஸ்லிம்: 5423- 5430)
ஆகவே நாம் அனைவரும் அல்லாஹ் அருள்பாலிக்க வேண்டியவர்களாக உள்ளோம். ஏனெனில், மறுமையில் நமது ஈடேற்றத்திற்கு நாம் செய்கின்ற நல்லமல்கள் மாத்திரம் ஒருபோதும் போதுமானவையல்ல.
இதே வேளை நல்லமல்கள் புரியுமாறு அல்லாஹ் நமக்குக் கட்டளையிட்டுள்ளான். மேலும் அவற்றில் அதிகமதிகம் ஈடுபடுமாறும், பாவங்களைவிட்டும் விலகி நடக்குமாறும் கட்டளையிட்டுள்ளான்.
ஏனெனில், இறைவன் தனது அடியான் நல்லறங்களில் ஈடுபடுவதையும், பாவங்களைத் தவிர்ந்து நடப்பதையும் இறையருளும், சுவனம் கிடைப்பதற்குரிய காரணங்களாக அமைத்துள்ளான். அவ்வாறே பாவச் செயல்களில் ஈடுபடுவதையும், அவனுக்கு மாறு செய்வதையும் அவன் தடைசெய்துள்ளான்.
ஏனெனில் இவை அவனது கோபத்தையும் தண்டனையையும் தேடித்தருபவைகளாகும். தண்டனைக்குரிய குற்றச் செயல் புரிந்த ஒருவர், அக்குற்றத்திற்குரிய தண்டனை நிறைவேற்றப்படூம் போது தனது குற்றத்தையுணர்ந்து அதிலிருந்து தெளபா பாவ மீட்சி செய்த நிலையில் மரணித்தால், அது அவருடைய குற்றத்திற்குரிய பரிகாரமாகக் கொள்ளப்படும். (இந்தக் குற்றத்திற்காக இவர் மறுமையில் மீண்டும் தண்டனைக்கு ஆளாக மாட்டர்.)
ஆனால், தனது தவறை உணராது, அதற்காக மனப்பூர்வமாக- (தெளபா) பாவமீட்சி செய்யாத நிலையில் அவர் மீது தண்டனை நிறைவேற்றப்பட்டால், இது அவருக்குரிய குற்றப்பரிகாரமாக அமையாது. (அவர் மறுமையில் மீண்டும் தண்டிக்கப்படுவார்.) இவ்வாறு நிறை வேற்றப்படுகின்ற தண்டனை இவர் மீண்டும் அதேபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்கின்ற அதேவேளை பிறருக்கு இது ஒரு படிப்பினையாகவும் அமையும்.
எனவே, தெளபாச் செய்த நிலையில் தண்டனையை ஏற்றுக் கொண்டாலே தவிர, தண்டனைகள் குற்றங்களுக்குப் பரிகாரமாக அமையமாட்டாது. உதாரணமாக, விபச்சாரம் புரிந்த ஒருவர் முதலில் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொள்ள வேண்டும்.
அடுத்து, தாமாக முன்வந்து "தண்டனையை நிறைவேற்றி என்னைப் பரிசுத்தப் படுத்துங்கள்." என்று மனமுவந்து கூறவேண்டும். மேலும், அதற்குரிய தண்டனையை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அப்போதுதான் அவர் மீது நிறைவேற்றப்படுகின்ற தண்டனை குற்றப்பரிகாரமாக அமையும். இதற்கு மாஇஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள், காமிதிய்யாப் பெண்மணி போன்ற ஸஹாபாக்களின் நிகழ்ச்சிகள் முன் உதாரணங்களாகக் கொள்ள முடியும்.
புரைதா பின் ஹுஸைப் (ரழி) கூறியதாவது:
மாஇஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! (விபச்சாரக் குற்றத்திற்குரிய தணடனையை நிறைவேற்றி) என்னைப் தூய்மைப்படுத்துங்கள். என்று கூறினார்கள்......”
(நூல்: முஸ்லிம்: 3493- 3499)
பிறகு 'அஸ்த்' குலத்தின் ஒரு கிளையான காமித் கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி வந்து, "அல்லாஹ்வின் தூதரே! என்னைத் தூய்மைப்படுத்துங்கள்" என்று கூறினார்.
(நூல்: முஸ்லிம்: 3499- 3501)
எனவே, ஒரு குற்றவாளி தான் செய்த குற்றத்தை ஏற்க மறுத்து, சாட்சிகள் மூலம் அக்குற்றம் நிரூபிக்கப்பட்டு அவர் (தெளபா) பாவமீட்சி செய்யாத நிலையில்
- தண்டனை வழங்கப்பட்டால், இவ்வாறு வழங்கப்படுகின்ற தண்டனை அவரது குற்றத்திற்கு பரிகாரமாக அமையமாட்டாது.
ஏனெனில், இவர் தண்டனையை மனப்பூர்வமாக ஏற்றுத் தெளபாச் செய்யவில்லை.
இவ்வாறு நிறைவேற்றப்படுகின்ற தண்டனைகள் பிறருக்குப் படிப்பனையாக அமைந்து சமூகத்தின் ஒழுக்க வரம்புகளைப் பாதுகாக்கும்.
இஸ்லாம் வழங்கியுள்ள ஏனைய எல்லாத் தண்டனைகளும் இவ்வாறுதான். எனவே, தெளபாச் செய்தவராக, தண்டனையை மனப்பூர்வமாக ஏற்றுகொண்டால், இது குற்றபரிகாரமாக அமையும். இல்லாவிட்டால் இவர் மறுமை நாளில் மீண்டும் தண்டிக்கப்படுவார்.
43. அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) கூறினார்கள்:
இறைவனை நிராகரித்த நிலையில் ஒருவர் மரணித்தால், இவரை அல்லாஹ் தண்டிப்பான். அவனுக்கு மன்னிப்பு வழங்க மாட்டான்.
விளக்கம்:-
"குப்ர்" என்ற வார்த்தை 4 கருத்துக்களில் பயன்படுத்தப்படுகின்றது.
அவை பின்வருமாறு:-
அல்லாஹ்வின் படைத்துப் பரிபாலிக்கின்ற ஆற்றலைப் புறக்கணித்தல். வணக்க வழிபாடுகளில் அல்லாஹ்வுக்கு இணைவைத்தல். இஸ்லாமிய ஷரீஆவை நிராகரித்தல்.
(எல்லோரும் அறிந்த) ஷரீஅத்தில் பிரபல்யமான மார்க்க சட்டங்களில் ஏதேனும் ஒரு அம்சத்தைப் புறக்கணித்தல். இதற்கு உதாரணமாகத் தொழுகையைப் புறக்கணிப்பதைக் கூறலாம்.
ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு அடியானுக்கும், "குப்ர் இறை நிராகரிப்புக்கும் இடையிலான வேறுபாடு தொழுகையை விட்டு விடுவதாகும்.
(அறிவிப்பவர்: ஜாபிர் (ரழி) அவர்கள்.)
(நூல்: முஸ்லிம்: 134)
எனவே, ஒரு இறைநிராகரிப்பாளன், இணைவைத்தல், இறைத்தூதையோ அல்குர்ஆனையோ குறை கூறுதல், மறுமையில் எழுப்பப்படுதல், விசாரணைக்காக ஒன்று திரட்டப்படுதல் போன்றவற்றை மறுத்தல் போன்ற குப்ரை ஏற்படுத்தக் கூடிய செயல்களில் ஈடுபட்ட நிலையில் மரணித்தால், இவர் நிரந்தரமாக நரகவாசி ஆவார். இவர் மறுமையில் தண்டனைக்கும் ஆளாவார்.
அல்லாஹ் கூறுகின்றான்:-
நிச்சயமாக எவர்கள் நிராகரித்து, நிராகரிப்பாளர்களாகவே அவர்கள் மரணித்தும்விடுகின்றார்களோ அவர்களில் ஒருவர் பூமி நிரம்பும் அளவுக்கு தங்கத்தை பிரதிஈடாகக் கொடுத்தாலும் (அது) அவரிடமிருந்து ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. அவர்களுக்கு நோவினைதரும் வேதனையுண்டு. மேலும், அவர்களுக்கு உதவியாளர்கள் எவரும் இல்லை.
(அலஇம்ரான்: 03: 91)
இறைவனை நிராகரித்த நிலையில் மரணித்தவனுடைய நிலையே இது.
எனவே கடைசி நேரத்திலாவது ஒருவர் திருக்கலிமாவை மொழிந்து அல்லாஹ்வை விசுவாசம் கொண்டுவிட்டால், அவனது நிராகரிப்பும், விசுவாசம் கொள்ள முன்னால் நடைபெற்ற எல்லாக் குற்றங்களும் மன்னிக்கப்படுகின்றன.
ஏனெனில், முஸய்யப் பின் ஹஸன் (ரழி) அவர்கள் கூறியதாவது:
அபூதாலிப் அவர்களுக்கு மரண வேளை நெருங்கிய போது நபி (ஸல்) அவர்கள், அவர்களிடம் சென்றார்கள். அப்போது அபூஜஹ்ல் அவரருகே இருந்தான். நபி (ஸல்) அவர்கள், "என் பெரியதந்தையே! 'லாஇலாஹ இல்லல்லாஹ்' - வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைக் தவிர வேறெவருமில்லை என்று சொல்லுங்கள். இந்தச் சொல்லை வைத்து, உங்களுக்காக அல்லாஹ்விடம் நான் வாதாடுவேன்" என்று சொன்னார்கள்.
(நூல்: முஸ்லிம்: 3884)
அல்லாஹ் கூறுகின்றான்:
நிச்சயமாக எவர்கள் நிராகரித்து, அல்லாஹ்வின் பாதையைவிட்டும் பிறரைத் தடுத்து, பிறகு நிராகரிப்பாளர்களாகவே மரணிக்கின்றனரோ அவர்களை அல்லாஹ் ஒருபோதும் மன்னிக்கவே மாட்டான்.
(முஹம்மத்: 47: 34)
பத்ர் யுத்த களத்திலே கொலைசெய்யப்பட்ட பிரபலமான குறைசித் தலைவர்களுடைய விடயத்திலேயே இந்த வசனம் இறங்கியது . இறை நிராகரிப்பாளர்களாகவே இவர்கள் மரணித்தார்கள். இதன் காரணமாக இவர்களை அல்லாஹ் மன்னிக்கவில்லை.
எனவே, பொதுவாகவே இணைவைத்தலை ஒரு போதும் அல்லாஹ் மன்னிக்கமாட்டான். என்பதை அவன் பறைசாற்றி விட்டான்.
அல்லாஹ் கூறுகின்றான்:-
நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைக்கப்படுவதை மன்னிக்கவேமாட்டான். அது தவிர ஏனையவற்றை, தான் நாடுவோருக்கு அவன் மன்னிப்பான். எவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கிறானோ அவன் நிச்சயமாக பெரும் பாவத்தையே இட்டுக்கட்டக் கூடியவன் ஆவான்.
(அந்நிஸாஃ: 04: 48)
இவ்வசனம் சிறிய வகையான சிர்க், பெரிய வகையான சிர்க் ஆகிய இரண்டு வகையையும் உள்ளடக்கிக் கொள்கின்றது.
மேலும் அல்லாஹ் கூறுகின்றான்:
மர்யமின் மகன் மஸீஹ்தான் நிச்சயமாக அல்லாஹ் எனக்கூறியோர் நிராகரித்துவிட்டனர். "இஸ்ராயீலின் சந்ததியினரே! எனது இரட்சகனும் உங்களது இரட்சகனும் ஆகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்” என்று மஸீஹ் கூறினார். நிச்சயமாக யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கின்றானோ அவனுக்கு அல்லாஹ் சுவனத்தைத் தடுத்துவிடுவான். அவனது ஒதுங்குமிடம் நரகமே! அநியாயக்காரர்களுக்கு உதவியாளர் எவரும் இல்லை.
(அல் மாயிதா: 05: 72)
பெரிய வகையான ஷிர்க்கில் ஈடுபடுவோரையே இவ்வசனம் குறிக்கின்றது. மேலே கூறப்பட்ட அல்குர்ஆன் வசனங்களும் நபி மொழிகளும் இறைநறிராகரிப்பு, இணைவைத்தல் ஆகிய பெரும்பாவங்களின் விபரீதத்தை எடுத்துக்காட்டுகின்றன. அல்லாஹ் மிக அறிந்தவன்.
44. அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) கூறினார்கள்:
திருமணமான ஒருவர் விபச்சாரம் புரிந்தால், அவரைக் கல்லெறிந்து கொலை செய்வது, அதற்குரிய நியாயமான தண்டனையாகும். அவர் தனது குற்றத்தைத் தாமாக ஏற்றுக் கொண்டாலோ, அல்லது சாட்சிகள் மூலம் அக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர் மீது தண்டனை நிறைவேற்றப்படும்.
45. திருமணமான பிறகு விபச்சாரம் புரிந்தவர்களை நபி (ஸல்) அவர்களும், அடுத்து குலபாஉர் ராஷிதீன்௧களும் கல்லெறிந்து கொலை செய்துள்ளனர்.
விளக்கம்:-
திருமணமான பிறகு விபச்சாரம் புரிபவர்களை கல்லெறிந்து கொலை செய்வது நபிவழியாகும். இது பற்றி முதவாதிர் வகையைச் சேர்ந்த, ஆதாரபூர்வமான நபிமொழிகள் இடம்பெற்றுள்ளன.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(விபச்சாரக் குற்றத்திற்கான தண்டனை சட்டத்தை) என்னிடம் இருந்து பெற்றுக் கொள்வீர்; என்னிடமிருந்து பெற்றுக்கொள்வீர்; அல்லாஹ் (வாக்களித்திருப்பதைப் போன்று), பெண்களுக்கு ஒரு வழியை ஏற்படுத்திவிட்டான். மணமாகாத பெண்ணுடன் மணமாகாத ஆண் விபச்சாரம் செய்துவிட்டால், நூறு கசையடிகள் வழங்கி, ஓராண்டு காலத்திற்கு நாடு கடத்தப்பட வேண்டும். மணமான பெண்ணுடன் மணமான ஆண் விபசாரம் செய்துவிட்டால், நூறு கசையடிகள் வழங்கி, கல்லெறிந்து தண்டனை வழங்கப்பட்டவேண்டும.
(அறிவிப்பவர்: உபதாபின ஸாமித் (ரழி) அவர்கள்.)
(நூல்: முஸ்லிம்: 3489)
மேலும், நபி (ஸல்) கூறினார்கள்:
மூன்று காரணங்களுக்காகவேயன்றி ஒரு முஸ்லிம் கொலை செய்யக்கூடாது; திருமணமான பிறகு ஒருவர் விபசாரம் புரிந்துவிட்டால், அவர் கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும்.......
(அறிவிப்பவர்: உஸ்மான் (ரழி) அவர்கள்)
(நூல்: நஸாஈ: 4068)
நபி (ஸல்) அவர்களுடைய வபாத்துக்குப் பிறகு குலபாக்களும் இதே தண்டனையை நிறைவேற்றி வந்துள்ளனர்.
ஹஸ்ரத் இப்னு அப்பாஸ் (ரழி) கூறினார்கள்:
கலீபா உமர் (ரழி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவரகளது சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீது அமர்ந்தபடி (பின்வருமாறு) கூறினார்கள். முஹம்மத் (ஸல்) அவர்களைச் சத்திய மார்க்கத்துடன் அல்லாஹ் அனுப்பிவைத்தான். அவர்களுக்கு வேதத்தையும் அருளினான். அல்லாஹ் அருளிய வேதத்தில் கல்லெறு தண்டனை குறித்த வசனம் இருந்தது. அதை நாங்கள் ஓதியிருக்கின்றோம். அதை மனனமிட்டிருக்கிறோம். அதை விளங்கியுமிருக்கிறோம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (மணமானவர்கள் விபசாரம் செய்தால் அவர்களுக்குக்) கல்லெறி தண்டனை (ரஜம்) நிறைவேற்றியுள்ளார்கள். அவர்களுக்குப் பிறகு நாமும் அந்தத் தண்டனையை நடைமுறைப்படுத்தினோம், காலப் போக்கில் மக்களின் சிலர், 'இறைவேதத்தில் கல்லெறி தண்டனை குறித்த வசனத்தை நாங்கள் காணவில்லை' என்று கூறி, இறைவன் அருளிய விதியொன்றைக் கைவிடுவதன் மூலம் வழிதவறிவிடுவார்களோ என நான் அஞ்சுகிறேன். மணமுடித்த ஆணோ, பெண்ணோ விபசாரம் செய்து, அதற்குச் சாட்சி இருந்தாலோ, அல்லது கர்ப்பம் ஏற்பட்டாலோ, அல்லது ஒப்புதல் வாக்கு மூலம் அளித்தாலோ அவருக்கு கல்லெறி தண்டனை உண்டு என்பது இறைச்சட்டத்தில் உள்ளதாகும்.
(நூல்கள்: புகாரி: 6829, 6830, 7323 முஸ்லிம்: 3492)
எனவே, யார் இத்தண்டனையைப் புறக்கணிக்கின்றாரோ அவர் பகிரங்கமாகனதொரு நபிவழியை நிராகரித்தவர் ஆவார். இதனை கவாரிஜ்கள் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர். இவர்கள் அல்குர்ஆனில் இடம் பெற்றுள்ளவைகளைக் தவிர வேறு எதனையும் அமல் செய்யமாட்டார்கள்.
இவர்கள், கல் எறிந்து கொலை செய்தல் தொடர்பாக அல்குர்ஆனில் எதுவும் இடம்பெறவில்லை என்கின்றனர். இதற்கு மறுப்புக் கூறும் உமர் (ரழி) அவர்கள், "அல்குர்ஆனில், வசனம் மாற்றப்பட்டு, சட்டம் நடைமுறையில் இருக்கின்ற வசனங்களில் ஒன்றாகும்" என்கின்றனர். மேலும், அவர் கூறுவதாவது, கல்லெறிந்து கொலை செய்வது பற்றி இறங்கிய வசனத்தை நாம் எழுதிவைத்திருந்தோம், நபி (ஸல்) அவர்களின் காலத்தில் ஓதியும் வந்தோம். பின்னர் இந்த வசனம் மாற்றம் செய்யப்பட்டது.
ஆனால் இது கொண்டிருந்த கருத்து (உள்ளடக்கம்) அமுலில் உள்ளது.
எனவே, திருமணமான ஒருவர் விபசாரம் புரிந்தால் அவர் - மரணிக்கும் வரை- கல்லெறிந்து கொலை செய்யப்படுவது நபி வழியாகும் என்பதை நம்பிக்கை கொள்ள வேண்டும். இவ்வாறு குற்றம் புறிந்தவர், தன் குற்றச் செயலில் ஈடுபட்டதாக நான்குமுறை தானாக ஏற்றுக் கொண்டு. தன் மீது தண்டனை நிறைவேற்றப்படும் வரை இதனை மறுக்கவும் கூடாது.
அல்லது சாட்சிகள் மூலம் அவரது குற்றச் செயல் நிரூபிக்கப்பட வேண்டும். அப்போதுதான் அவர் மீது கல் எறிந்து கொலை செய்தல் எனும் தண்டனை நிறைவேற்றப்படும்.
இங்கே ஒரு கேள்வி எழுகின்றது.
அஹ்லுஸ்ஸுன்னாவின் கொள்கைக் கோட்பாடுகள் பற்றிய இந்நூலில், நூலாசிரியர் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) அவர்கள் அல்லாஹ்வின் திருநாமங்கள் மற்றும் பண்புகள் பற்றிப் பேசாமல் திருமணமான பிறகு விபச்சாரம் புரிந்தவரைக் கல் எறிந்து கொலை செய்தல், திருடர்களுடன் போராடுதல் போன்ற விடயங்கள் பற்றி ஏன் எழுதியுள்ளார், என்பதே அக்கேள்வியாகும்.
இதற்குக் பின்வருமாறு பதில் கூறலாம்.
அதாவது இந்நூலில் ஆரம்பத்தில் அல்குர்ஆன் மற்றும் ஸுன்னாவைப் பின்பற்றுவதன் அவசியத்தை வலியுறுத்தினார். அல்லாஹ்வின் திருநாமங்கள் அல்லது பண்புகள் போன்றவற்றை நம்புவது பொதுவாகவே குர்ஆன், ஸுன்னாவைக் கடைபிடிப்பதில் அடங்குகின்றன. இதனால் இந்நூலில் அமல்களுடன் தொடர்பான, சில வெளிப்படையான விடயங்களை உள்ளடக்கியுள்ளார். அவை சரீஆவின் உட்பிரிவுகளாக கணப்பட்டாலும் கூட, இங்கு அவற்றையும் குறிப்பிடுவது பொருத்தமானது என்றே அவர் கருதுகின்றார் போலும்.
ஏனெனில் அவருடைய காலத்திலும், அதற்குப் பின்பும் இவ்விடயங்களில் கருத்து வேற்றுமை நிலவியதன் காரணமாக மக்களுக்கு இவற்றைத் தெளிவுபடுத்துவதற்காக இவைபற்றி கவனம் செலுத்தவும், இவை பற்றி எழுதவும் வேண்டிய தேவை இருந்தது. எந்தவொரு நூலாசிரியரும் தாம் ஒரு நூலை எழுதும் போது சமகாலப் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுப்பது இயல்பானதே!
46. இமாம் அஹ்மத் (ரஹ்) கூறினார்கள்:
எவரேனும் ஸஹாபாக்களில் ஒருவரையாவது குறைகூறினால், அல்லது அவரால் ஏற்பட்ட ஒரு (குற்றச்) செயலுக்காக அவருடன் கோபித்துக் கொண்டால், அல்லது அவருடைய தீமைகளைப் பற்றிப் பேசினால் அவர் பித்அத் காரராகவே இருப்பார். எனவே, உள்ளத்தில் எவ்வகையான அதிருப்தியுமின்றி அவர்களைப் பொருந்திக் கொண்டு, அவர்களுக்கு மென்மேலும் அருள்கிடைக்க அல்லாஹ்விடம் துஆச் செய்யாதவரை அவர் பித்அத் காரராகவே இருப்பார்.
விளக்கம்:-
ஸஹாபாக்களுக்கு ஏராளமான சிறப்புக்கள் இருக்கின்றன. மனிதர்களில் நபிமார்களை அடுத்து இவர்களே சிறந்தவர்கள். இதற்கு ஏராளமான ஆதாரங்கள் காணப்படுகின்றன.
அல்லாஹ் கூறுகின்றான்:
அல்லாஹ் இந்த நபியையும், முஹாஜிர்களையும் அன்ஸாரிகளையும் மன்னித்துவிட்டான். அவர்கள் தங்களிலுள்ள ஒரு சாராரின் உள்ளங்கள் தடுமாறுகின்ற நிலையை அண்மித்த பின்னரும், கஷ்டமான நேரத்தில் அவரைப் பின்பற்றினர். பின்னரும், அவர்களை அவன் மன்னித்தான். நிச்சயமாக அவன் அவர்களுடன் பெரும் கருணையாளன்; நிகரற்ற அன்புடையோன்.
(தெளபா: 9: 117)
மேலும் அவன் கூறுகின்றான்:
இவர்களுக்குப் பின் வருவோர், 'எங்கள் இரட்சகனே! எங்களையும், நம்பிக்கை கொள்வதில் எங்களை முந்திவிட்ட எமது சகோதரர்களையும் மன்னிப்பாயாக! இன்னும், நம்பிக்கை கொண்டோர் குறித்து எமது உள்ளங்களில் குரோதத்தை ஏற்படுத்தி விடாதே! எங்கள் இரட்சகனே! நிச்சயமாக நீ மிக்க மன்னிப்பவனும், நிகரற்ற அன்புடையோனுமாவாய்' எனக் கூறுவார்கள்.
(அல் ஹுஷர்: 59: 10)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என்தோழர்களை ஏசாதீர்கள், என் உயிர் எவன் கையில் உள்ளதோ அந்த இறைன் மீது சத்தியமாக! உங்களில் ஒருவர் உஹத் மலையளவு தங்கத்தை (தானமாகச்) செலவிட்டாலும், என் தோழர்கள் (இறைவழியில்) செலவிட்ட இருகையளவு அல்லது அதில் பாதியளவைக் கூட எட்டமுடியாது.
(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி) அவர்கள்)
(நூல்கள்: புகாரி: 3673, முஸ்லிம்: 4967, 4768)
மேற்கூறப்பட்ட ஆதாரங்களின் வழியாக ஸஹாபாக்களின் சிறப்புக்கள் நமக்குத் தெளிவாகின்றன. எனவே, அவர்களின் நன்மைகளை எடுத்துக் கூறவேண்டும்.
இன்னும் அவர்களுக்கிடையில் நடந்த குழப்பங்கள், அவர்களுடைய தவறுகள் தொடர்பான விடயங்களில் நாவைக் கட்டுப்படுத்தி, மெளனமாக இருப்பதும் கடமையாகும். ஏனெனில், இஸ்லாத்தை ஏற்பதில் முந்திக்கொண்ட சிறப்பும், இன்னும் பல சிறப்புக்களும் அவர்களுக்கு உண்டு என்பதை நம்ப வேண்டும். ஆகவே, ஸஹாபாக்களில் ஒருவரையாவது குறை கூறுவது, மற்றும் அவர்களின் தவறுகள், குற்றங்கள் போன்றவற்றை எடுத்துக் கூறுவது ஆகிய அனைத்தும் பித்அத்தும், அவர்கள் விடயத்தில் வரம்பு மீறுவதும் ஆகும்.
ஸஹாபாக்களிடம் ஆய்வின் அடிப்படையிலான விடயங்களில் சில தவறுகள் நிகழ்ந்துள்ளன என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், இவ்வாறான ஆய்வுரீதியான தவறுகள் ஒருபோதும் குற்றச்செயல்களாகக் கருதப்படமாட்டாது. இவற்றை ஸஹாபாக்களின் குற்றச் செயல்களாகவும், தவறுகளாகவும் றாபிழாக்கள் கருதுவர். சில ஸஹாபாக்களால் ஆய்வுரீதியாக எடுக்கப்பட்ட முடிவுகள் தவறானவைகளாக இருந்தாலும் கூட, இவை சரீஅத்தின் சிறப்பியல்புகளும், ஸஹாபாக்களின் தனித்துவங்களும் ஆகும்.
இவற்றை றாபிழாக்கள் குற்றச் செயல்களாகவும், குறைகளாகவும் கருதினாலும் கூட, ஆய்வின் அடிப்படையில் நிகழ்ந்த தவறுகள் எந்த வகையிலும் ஸஹாபாக்களுடைய அந்தஸ்துக்குப் பங்கம் ஏற்படுத்துவையன்று.
ஸஹாபாக்களை விமர்சிப்பதில் றாபிழாக்கள் முன்னனி வகிக்கின்றனர்.
இவர்கள் ஸஹாபாக்களை ஏசுகின்றனர்; திட்டுகின்றனர். காபிர்கள் என்கின்றனர். முக்கிய ஸஹாபாக்களான சுவர்க்கத்தைக் கொண்டு நன்மாராயம் பெற்ற 10 பேர்களில் ஹஸ்ரத் அலி (ரழி) அவர்கள் தவிர்ந்த ஏனைய அனைவரையும் றாபிழாக்கள் காபிர்கள் என்கின்றனர். மேலும் அவர்கள் மீது பெரும் பொய்களையும் அபாண்டங்களையும் சுமத்தயுள்ளனர். அவர்களின் சிறப்புக்கள் அனைத்தையும் மறுக்கின்றனர். அல்குர்ஆனின் ஒரு பகுதியை மறைத்து விட்டதாகவும்
கருதுகின்றனர். ஆனால், ஹஸ்ரத் அலி (ரழி) அவர்களையும் - அஹ்லுல் பைத்களான- நபி (ஸல்) அவர்களுடைய குடும்பத்தினரையும் அளவுமீறிப் புகழ்கின்றனர். இது மட்டுமன்றி றாபிழாக்கள் அல்லாஹ்வை விட்டுவிட்டு - இவர்களை வணங்கவும் துணிந்து விட்டனர்.
எனவே, இவர்களுக்கு மறுப்புக் கூறவேண்டிய அவசியமும் இவர்களின் திரையைக் கிழிக்க வேண்டிய தேவையும் அஹ்லுஸ்ஸுன்னாவின் இமாம்கள் மீது இருந்தது. இதனால் தான் ஸஹாபாக்கள், அவர்களின் தனித்துவங்கள், இஸ்லாத்தை ஏற்பதில் அவர்கள் முந்திக் கொண்டமை முதலான அம்சங்களை அஹ்லுஸ்ஸுன்னாவின் இமாம்கள் இஸ்லாத்தின் அடிப்படைகள் மற்றும் நம்பிக்கைக் கோட்பாடுகள் பற்றிய தமது நூற்களில் எழுதலாயினர்.
பிறகு இவை அஹ்லுஸுன்னாவின் அடிப்படைக்கோட்பாடுகளில் ஒரு பகுதியாக்க் கொள்ளப்பட்டது.
எனவே, நாம் ஸஹாபாக்கள் மீது நேசம் கொள்ளவும், அவர்களைப் பொருந்திக் கொள்ளவும் வேண்டும். இன்னும் அவர்களின் சிறப்புக்களை அறிந்து கொள்வதும், ஏற்றுக் கொள்வதும் அவசியமாகும். மேலும் அவர்களுக்காவும் அல்லாஹ்விடம் துஆச் செய்ய வேண்டும்.
அல்லாஹ் கூறுகின்றான்:
இவர்களுக்குப் பின் வருவோர், 'எங்கள் ரட்சகனே! எங்களையும், நம்பிக்கை கொள்வதில் முந்திவிட்ட எமது சகோதரர்களையும் மன்னிப்பாயாக! இன்னும், நம்பிக்கை கொண்டோர் குறித்து எமது உள்ளங்களில் குரோதத்தை ஏற்படுத்திவிடாதே! நிச்சயமாக நீ மிக்க மன்னிப்பவனும், நிகரற்ற
அன்புடையோனுமாவாய்' எனக்கூறுவார்கள்.
(அல் ஹஷ்ர்: 59: 10)
மேற்கூறப்பட்ட வசனத்தில் உள்ளவாறு நாம் எமக்காகவும், அவர்களுக்காகவும் துஆச் செய்யவோமாக!
இவ்வளவு சிறப்புக்களும் இவர்களுக்குக் கிடைக்கக்காரணம், இவர்கள் அல்லாஹ்வை விசுவாசம் கொண்டு, முஸ்லிம்கள் சிறுபான்மையினராகவும், பிறரின் இழிவுக்கும் ஆளாகியுமிருந்த வேளையில் ரஸூல் (ஸல்) அவர்களை உண்மைப்படுத்தியதேயாகும்.
மேலும் இவர்கள் தமது சொந்த ஊர், குடும்பத்தவர்கள், சொத்துக்கள் என அனைத்தையும் துறந்து ஹிஜ்ரத் செய்தனர். மேலும் தமது உயிர்கள், உடமைகள் அனைத்தையும் அல்லாஹ்வின் பாதையில், ரஸூல் (ஸல்) அவர்களுக்கு உதவுவதாற்காகவும், அல்லாஹ்வின் மார்க்கம் உலகில் மேலோங்குவதற்காகவும் செலவு செய்தனர்.
இவ்வாறே வணக்க வழிபாடுகளை நிறைவேற்றுதல், தஹஜ்ஜுத் தொழுதல், நன்மையின் பால் போட்டி போட்டு முந்திக் கொள்ளுதல் போன்ற எல்லாவகையான நல்லறங்களிலும் ஈடுபட்ட சிறப்பும் இவர்களுக்கு உண்டு.
இமாம் இப்னு தைமிய்ய (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நபித்தோழர்கள் குறித்து வந்திருக்கின்ற செய்திகளில் பெரும்பாலானவை இஸ்லாத்தின் விரோதிகளால் இட்டுக் கட்டப்பட்ட அபாண்டங்களாகவே உள்ளன. இன்னும் பல செய்திகள் கூட்டிக் குறைத்துச் சொல்லப்பட்டவைகளாகக் காணப்படுகின்றன. அல்லது திரிவுபடுத்தப்பட்டவைகளாகவோ, விரோதிகளின் கையாடல்களுக்கு உட்பட்டனவாகவோ உள்ளன.
எனவே, அவர்கள் ஆராய்ச்சிக்குட்பட்ட விவகாரங்களில், ஆய்வின் இறுதியில் ஒரு தவறான முடிவை எட்டியிருக்கலாம். இந்நிலையில் இவர்கள் அடைந்த பிழையான முடிவுக்காக மன்னிப்பும், ஆய்வு செய்ததற்காக நற்கூலியும் பெறுவர், இன்னும் அவர்கள் ஆய்வின் மூலம் சரியான முடிவை அடைந்திருந்தால், ஆய்வு செய்ததற்கான கூலியும், சரியான முடிவை அடைந்ததற்கு மற்றுமொரு கூலியுமாக இரு கூலிகள் வழங்கப்படுவர். இவ்விரு நிலைகளிலும் அவர்கள் மன்னிக்கப்பட்டு, நற் கூலியடைந்தவர்களாகவே இருப்பர்.
ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீதிபதி தீர்ப்பளிப்பதற்காக ஆய்வு செய்து சரியான தீர்ப்பு வழங்குவாராயின், அவருக்கு இரண்டு நன்மைகள் உண்டு, அவர் தீர்ப்பளிப்பதற்காக ஆய்வு செய்து தவறான தீர்ப்பு வழங்குவாராயின், அவருக்கு ஒரு நன்மையுண்டு.
(அறிவிப்பவர்: அம்ர் பின் அல்ஆஸ் (ரழி))
(நூல்கள்: புகாரி: 7352, முஸ்லிம்: 3536)
47. இமாம் அஹ்மத் (ரஹ்) கூறினார்கள்:
நயவஞ்சகம் என்பது இறை நிராகரிப்பாகும். அதாவது, அல்லாஹ்வை நிராகரித்துவிட்டு, அவனல்லாதவர்களை வணங்குவதும், வெளித்தோற்றத்தில் முஸ்லிம் போன்று நடிப்பதும் (நயவஞ்சகம்) ஆகும்.
நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் வாழ்ந்த நயவஞ்சகர்களை இதற்கு உதாரணமகக் கூறலாம்.
"நயவஞ்சகர்களின் அடயாளங்கள் 3 ஆகும். ”
"நான்கு குணங்கள் எவரிடம் குடிகொண்டுள்ளனவோ அவர் அப்பட்டமான நயவஞ்சகர் ஆவார்”
போன்ற செய்திகளை எச்சரிக்கையின் அடிப்படையில் அவை வந்துள்ளவாறே சொல்வர். ஆனால், அவற்றுக்குத் தாமாக விளக்கம்
சொல்லமாட்டார்கள்.
விளக்கம்:-
வெளிப்படையாக முஸ்லிம் போன்று நடித்துக் கொண்டு (குப்ர் எனும்) இறை நிராகரிப்பை மறைத்து வைத்துக் கொண்டு இருப்பவரே நயவஞ்சகன் எனப்படுவான். இவர்களை அல்குர்ஆன் பின்வருமாறு விளக்குகின்றது.
அல்லாஹ் கூறுகின்றான்:
அவர்கள் நம்பிக்கை கொண்டோரைச் சந்திக்கும் போது. நாங்களும் நம்பிக்கை கொண்டோம், எனக் கூறுகின்றனர். தங்களது (தலைவர்களாகிய) ஷைத்தான்களுடன் தனித்திருக்கும் போது, நிச்சயமாக நாங்கள் உங்களுடன் தான் இருக்கின்றோம். நாங்கள் (இவ்விதம் கூறி அவர்களைப்) பரிகாசம் செய்பவர்களே என்று கூறுகின்றனர்.
(அல்-பகரா: 02: 14)
மேலும், அவன் கூறுகின்றான்:
அவர்கள் தமது உள்ளங்களில் இல்லாததைத் தமது நாவுகளால் கூறுகின்றனர்.
(அல் பத்ஹ்: 48: 11)
மேலும் அவன் கூறுகின்றான்:
அவர்கள் உம்மிடம் வெளிப்படுத்தாத பலதை தமது மனங்களில் மறைத்து வைதக்கிருக்கின்றனர்.
(ஆல இம்ரான்:03: 154)
மேலும் அவன் கூறுகின்றான்:
நிச்சயமாக நயவஞ்சகர்கள் நரகத்தின் அடித்தட்டில் இருப்பார்கள். அவர்களுக்கு எந்தவொரு உதவியாளரையும் நீர் காணமாட்டீர்.
(அந்நிஸாஃ: 04: 145)
இது போன்று இன்னும் நிறைய ஆதாரங்கள் இருக்கின்றன. இவையனைத்தும் குப்ரை மறைத்து வைத்துக் கொண்டு, வெளிப்படையில் ஒரு முஸ்லிமைப் போன்று நடிப்பது நயவஞ்சகம் என்பதையே குறிக்கின்றது. இது (அந்நிபாக் அல் இஃதிகாதிய்) நம்பிக்கை ரீதியான நயவஞ்சகம் என்றழைக்கப்படும்.
இவர்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் நோக்குடன் அல்லது தமது உண்மையான நிலையை மறைத்துக் கொள்ளும் நோக்குடன் இவ்வாறு செய்தாலும் சரி இவர்கள் நயவஞ்சகர்களேயாவர்.
இவர்கள் முஸ்லிம்களுடன் ஒன்று சேர்ந்திருக்கும் போது நாம் உங்களுடன் இருக்கின்றோம் என்பர். எனவே, கனீமத் பொருட்களில் இருந்து நமக்கும் பங்கு தாருங்கள் என்பர்.
அதே நேரம் காபிர்களுக்கு வெற்றி கிடைத்தால். பின்வருமாறு கூறுபவர்களாக இருந்தனர்.
அல்குர்ஆன் கூறுகின்றது:
நிராகரிப்பாளர்களுக்கு ஏதேனும் ஒரு பங்கு கிடைத்தால், உங்களை வெற்றி கொள்ள முடியுமாக இருந்தும் உங்களை நாம் வெற்றி கொள்ளாது, நம்பிக்கையாளர்களை விட்டும் உங்களை நாம் தடுத்துவிடவில்லையா? என்பர்.
(அந்நிஸாஃ: 04: 141)
எனவே, இவர்கள் வெளிப்படையாக முஃமின்௧களுடன் இருப்பர். மறைமுகமாக காபிர்களுடன் இருப்பர். இதுதான் நயவஞ்சகத்தின் அடிப்படையாகும். இதனை (நிபாக் இஃதிகாதீய்) நம்பிக்கை சார்ந்த நயவஞ்சகம் என்றழைப்பர். இது முதலாவது வகையாகும்.
இரண்டாவது வகை: “நிபாக் அமலிய்” அமல்கள் சார்ந்த நயவஞ்சகம் என்பதாகும்.
இதனை நபி (ஸல்) அவர்கள் கீழ்வருமாறு கூறுகின்றார்கள்:
நயவஞ்சகனின் அடையாளங்கள் 3 ஆகும், அவன் பேசும் போது பொய் உரைப்பான்; வாக்களித்தால் அதற்கு மாறு செய்வான்; அவனிடம் நம்பி (ஏதேனுமொன்றை) ஒப்படைத்தால் (அதில்) மோசடி செய்வான்.
(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி) அவர்கள்)
(நூல்கள்: புகாரி: 33, 2682 முஸ்லிம்: 107)
மற்றுமொறு செய்தியில்,
"வழக்காடினால் நேர்மை தவறுவான்"
(அறிவிப்பவர்: அப்துல்லா பின் அம்ர் (ரழி))
(நூல்கள்: புகாரி: 34, 2459, 3178 முஸ்லிம்: 107)
இந்நபிமொழிகள் கூறுகின்ற விடயங்கள் அனைத்தும் செயல்ரீதியான நயவஞ்சகம் ஆகும். இவை நம்பிக்கையின் அடிப்படையிலான நயவஞ்சகத்தின் வெளிப்பாடும், அதன் அடையாளங்களும் ஆகும்.
48. இமாம் அஹ்மத் (ரஹ்) கூறினார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனக்குப் பின்னால் உங்களில் ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக்கொள்ளும் இறைமறுப்பாளர்களாக மாறிவிடாதீர்கள்.
(அறிவிப்பவர்: ஜரீர் (ரழி) அவர்கள்)
(நூல்கள்: புகாரி: 121, 4405 முஸ்லிம்: 118-120)
மேலும், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரண்டு முஸ்லிம்கள் தம்வாட்களால் ஒருவரையொருவர் சந்தித்து மடிந்தால் அவர்களில் கொன்றவர், கொல்லப்பட்டவர் இருவருமே நரகிற்குச்
செல்வார்கள்.
(அறிவிப்பவர்: அபுபக்ரா (ரழி) அவர்கள்)
(நூல்கள்: புகாரி: 31, 6875, 7083 முஸ்லிம்: 5533-5535)
மேலும், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு முஸ்லிமை ஏசுவது பாவமாகும், அவனுடன் போரிடுவது (அல்லது கொலை செய்வது) இறைமறுப்பாகும்.
(அறிவிப்பவர்: இப்னு மஸ்த் (ரழி)
(நூல்கள்: புகாரி: 48, 6044, 7076 முஸ்லிம்: 116, 117)
மேலும், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மனிதர் தம் (முஸ்லிம்) சகோதரரை 'இறைமறுப்பாளர்' என்று கூறினால் நிச்சயமாக அவர்கள் இருவரில் ஒருவர் அச்சொல்லுக்கு உரியவராகத் திரும்புவார்.
(அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி)
(நூல்கள்: புகாரி: 6104 முஸ்லிம்: 111, 112)
மேலும், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தன் தந்தையை வெறுத்து, வேறொருவரைத் தன்தந்தையென்று கூறுவது -அவர் தம் தந்தையல்ல என்பதை அறிந்து கொண்டே- இறைமறுப்பாகும்.
(அறிவிப்பவர்:)
(நூல்கள்: அஹ்மத் 2/215 புகாரி: 6768 முஸ்லிம்: 113-115 ஸஹீஹுல் ஜாமிஃ: 4485)
இவ்வாறான கருத்துக்களைத தரக்கூடிய ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் பல உள்ளன. இவற்றை அதிருப்தியின்றி மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். இவற்றின் விளக்கங்கள் தெரியாவிட்டால், இவற்றைப்பற்றித் தர்க்கிக்கவோ, விவாதிக்கவோ கூடாது. இத்தகைய நபிமொழிகளை விளக்கும் போது, நபி (ஸல்) அவர்கள் மூலம் வந்துள்ள ஏனைய இவ்வாறான நபிமொழிகளின் துனை கொண்டேயன்றி விளக்கம் செய்யக் கூடாது. மேலும், இந்நபி மொழிகளை, இவற்றை விடத்தரத்தில் கூடிய நபிமொழிகள் மூலமேயன்றி ரத்துச் செய்யவும் கூடாது.
விளக்கம்:-
கவாரிஜ்கள், மேற்கூறப்பட்ட நபிமொழிகளை ஆதாரமாகக் கொண்டு, ‘பெரும்பாவிகள்' காபிர்கள் என்கின்றனர். பெரும்பாவங்கள் மனிதனை இஸ்லாத்திலிருந்து வெளியேற்றி இறைநிராகரிப்பில் நுழைவித்துவிடுகின்றன என்று கூறுகின்றனர்.
இதனடிப்படையில் பொதுவாக பாவிகளும், குறிப்பாகப் பெரும்பாவிகளும் நிரந்தர நரகவாசிகள் என்று தீர்ப்புக் கூறுகின்றனர். இதற்கு பின்வரும் நபிமொழிகளை ஆதாரமாகக் கொள்கின்றனர்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு முஸ்லிமை ஏசுவது பாவமாகும். அவனுடன் போரிடுவது இறை மறுப்பாகும்.
(அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரழி)
(நூல்கள்: புகார: 48, 6044, 7076 முஸ்லிம்: 116, 117)
மேலும், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனக்குப் பின்னால் உங்களில் ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக்கொள்ளும் இறைமறுப்பாளர்களாக மாறிவிடாதீர்கள்.
(அறிவிப்பவர்: ஜரீர் (ரழி) அவர்கள்)
(நூல்கள்: புகாரி: 121, 4405 முஸ்லிம்: 118-120)
அவ்வாறே நயவஞ்சகம் பற்றியும், அதன் அடையாளங்கள் பற்றியும் இடம்பெற்றுள்ள நபி மொழிகளை ஆதாரமாகக் கூறுகின்றனர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான்கு குணங்கள் எவரிடம் குடிகொண்டுள்ளனவோ அவர் அப்பட்டமான நயவஞ்சகன் ஆவார். எவரிடத்தில் அவற்றில் ஒரு குணம் குடிகொண்டுள்ளதோ அவர் அதை விட்டுவிடும் வரை அவருள் நயவஞ்சகத்தின் ஒரு குணம் குடியிருக்கும். பேசினால் பொய் சொல்வதும், ஒப்பந்தம் செய்து கொண்டால் மோசடி செய்வதும், வாக்களித்தால் மாறு செய்வதும், வழக்காடினால் நேர்மை தவறுவதும் தான் அவைகளாகும்.
(அறிவிப்பவர்: அபுதல்லாஹ் பின் அம்ர் (ரழி)
(நூல்கள்: புகாரி: 34, 2459, 3178 முஸ்லிம்: 106)
இந்நபிமொழிகளில் கூறுப்பட்டு்ள்ள விடயங்கள் இறை நிராகரிப்பை ஏற்படுத்துக் கூடியவைகளன்று. உதாரணமாக, கொடுத்த வாக்கை மீறுவது ஒரு மனிதனை இஸ்லாத்திலிருந்து வெளியேற்றிவிடமாட்டாது. ஏனெனில் இது நம்பிக்கை ரீதியான நயவஞ்சகம் அல்ல. மோசடி போன்ற ஏனைய விடயங்களும் இவ்வாறுதான். இவை இறை நிராகரிப்பை ஏற்படுத்தாது. எனினும், இவை பெரும் பாவங்களாகும். இத்தகைய ஆதாரங்களைக் கேட்கின்ற ஒருவர், அவற்றை ஏனைய அல்குர்ஆன் வசனங்களுடனும், ஹதீஸ்களுடனும் ஒடப்பிட்டுப்பார்த்து விளங்கிக் கொள்ளவும், அவற்றை நம்பி ஏற்றுக் கொள்ளவும் வேண்டும்.
ஆனால், இவை இறை நிராகரிப்பை ஏற்படுத்தக் கூடியவை என்றோ, இவற்றில் ஈடுபடுவோர் முஸ்லிமல்ல என்றோ கூறக்கூடாது. மாறாக இவ்வாறான பெரும்பாவங்களில் ஈடுபடுவோரின் நிலையை அல்லாஹ்வே அறிவான் பின்வரும் நபிமொழிகளும் மேற்படி கருத்திலேயே வந்துள்ளன.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தன் தந்தையை வெறுத்து, வேறொருவரைக் தம் தந்தையென்று கூறுபவர் இஸ்லாத்திலிருந்து வெளியேறிவிட்டார். அவர் தம் தந்தையல்ல என்று அறிந்திருந்தாலும் கூட.
(அல்பானீ: ஸஹீஹுல் ஜாமிஃ: 44868)
மேலும், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் தம் சகோதரரைக் 'காபிர்' என்று கூறினால் அவர்கள் இருவரில் ஒருவர் அச்சொல்லுக்கு உரியவராகத் திரும்புவார்.
(அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி)
(நூல்கள்: புகாரி: 6104 முஸ்லிம்: 111, 112)
இவ்வாறான ஹதீஸ்கள் அனைத்தும் பாவச்செயல்களையும், அவை தொடர்பான எச்சரிக்கையின் கடினத்தன்மையையும் உணர்த்தக் கூடியனவாகும்.
அஹ்லுஸ்சுன்னா வல்ஜமா அத்தினர் கூறுகின்றனர்:
தண்டனைகள் தொடர்பாக இடம்பெற்றுள்ள ஹதீஸ்கள் அவற்றின் கடுமையை உணர்த்துவதற்காக வேண்டி, அவை இடம்பெற்றுள்ளது போன்றே வெளிப்படையான கருத்துக்களில் கையாளப்பட வேண்டும். எனினும், இவ்வாறு எச்சரிக்கப்பட்ட செயல்கள் ஒருவரை இஸ்லாத்திலிருந்து வெளியேற்றிவிடமாட்டாது என்பதையும் நம்பிக்கை கொள்ள வேண்டும். ஆனால், அவர் இறை நிராகரிப்பை ஏற்படுத்துகின்ற ஒரு செயலைச் செய்துவிட்டார்; ஆனாலும், அவர் காபிராகிவிட மாட்டார் என்றே கூற வேண்டும். ஏனெனில், இறை நிராகரிப்பை ஏற்படுத்துகின்ற செயல்களுக்கும், அவற்றில் ஈடுபடுவோருக்குமிடையில் பாரிய வேறுபாடு உண்டு. இதனடிப்படையில் அவர் செய்த செயல் காபிர்களுடைய அல்லது நயவஞ்சகர்களுடைய செயல்களில் ஒன்றாக இருக்கலாம். ஆகவே, இத்தகைய செயல்களில் ஈடுபடும் அனைவரும் இஸ்லாத்திலிருந்து வெளியேறிவிட்டனர்; இறை நிராகரிப்பில் நுழைந்து விட்டனர் என்று கருதமுடியாது. ஏனெனில் இவர்களுடைய விவகாரம் அல்லாஹ்விடமே உள்ளது. எனவே, இவர்களை அல்லாஹ்விடம் தெளபாச் செய்து மீளுமாறு தூண்டுவதுடன், ஆர்வமூட்டவும் வேண்டும்.
பெரும்பாவம் போன்று குற்றச் செயல்களில் ஈடுபட்டதன் காரணத்தை வைத்து மாத்திரம், ஒரு முஸ்லிமைப் பார்த்து “காபிர்” என்று சொல்லக் கூடாது. ஆனால், பெரும்பாவங்களின் தண்டனையைப்பற்றி வந்திருக்கின்ற குர்ஆன் வசனங்களையும், நபிமொழிகளையும் அவைகளின் நேரடியான பொருளுடன் கையாள வேண்டும். அப்போதுதான் அவை எச்சரிக்கையின் கடுமையை உணர்த்தக் கூடியதாய் அமையும்.
அதே நேரம், இத்தகைய பெரும்பாவங்கள் ஒரு மனிதனை இஸ்லாத்திலிருந்து வெளியேற்றிவிடவோ, நிரந்தமாக நரகத்தில் தள்ளிவிடவோமாட்டது என்பதே அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஅத்தினரின் நம்பிக்கையகும்.
பெரும்பாவிகள் குறைந்த ஈமானையுடைய இறைவிசுவாசிகளாவர்;
அல்லது தமது பெரும்பாவங்கள் மூலம் நெறிதவறிய இறைவிசுவாசிகளாவர்;
இவர்களை மறுமையில் அல்லாஹ் தன் விருப்பப்படி நடத்துவான். எனவே, அவன் நாடினால் அவர்களை மன்னிப்பான்; அல்லது பாவத்தின் அளவுக்கு அவர்களைத் தண்டிப்பான். இறுதியாக சுவனத்தில் நுழையச் செய்வான்.
பெரும்பாவிகள் விடயத்தில் இதுவே அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஅத்தினரின் நிலைப்பாடாகும்.
எனினும் கவாரிஜ்கள், பெரும்பாவிகள் விடயத்தில் அஹ்லுஸ்ஸுன்னாவுக்கு மாற்றமான கருத்தைக் கொண்டுள்ளனர். பெரும்பாவிகள் காபிர்களாவர்; இவர்களுடைய பொருட்களை அபகரிப்பதும், இவர்களைக் கொலை செய்வதும் அனுமதிக்கப்பட்டதாகும் என்று கூறுகின்றனர்.
பெரும்பாவிகள் விடயத்தில் முஃதஸிலாக்களுடைய நிலைப்பாடு சற்று வித்தியாசமானது. அதாவது பெரும்பாவிகள் காபிகளாகிவிடுவதில்லை. இஸ்லாத்திற்கும் இறை நிராகரிப்புக்கும் இடைப்பட்டதொரு நிலைக்குத் தள்ளப்படுவதாக முஃதஸிலாக்கள் கருதுவர்.
ஆனால், மறுமையில் பெரும்பாவிகள் நிரந்தமாக நரகத்தில் தங்கிவிடுவர் என்பதில் கவாரிஜ்களும், முஃதஸிலாக்களும் உடன்பாடன கருத்தையே கொண்டுள்ளனர். இதனால், இவர்கள் பாவமன்னிப்புப்பற்றி வாக்களிக்கப்பட்ட ஹதீஸ்கள், சிபார்சு (சபாஅத்) தொடர்பான அறிவிப்புக்கள் போன்றவற்றை மறுக்கின்றனர்.
49. இமாம் அஹ்மத் பின் ஹம்பல் (ரஹ்) கூறினார்கள்:
சுவர்க்கமும், நரகமும் படைக்கப்பட்டுவிட்டன. இதற்கு பல நபி மொழிகள் ஆதாரமாக இருக்கின்றன.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் சுவர்க்கத்தில் நுழைந்தேன்; அதில் ஒரு மாளிகையைக் கண்டேன்.
(அறிவிப்பவர்: ஜாபிர் (ரழி) அவர்கள்)
(நூல்கள்: புகாரி: 3679, 5226, 7024 முஸ்லிம்: 4766)
மேலும், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"அல்கெளஸர்” எனும் சிறப்பு நீர்த்தடாகத்தைக் கண்டேன்.
(அறிவிப்பவர்: அனஸ் (ரழி) வர்கள் )
(நூல்: புகாரி: 4964, 6581)
மேலும், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் சுவர்க்கத்தை எட்டிப்பார்த்தேன். அங்கு குடியிருப்போரில் அதிகமானவர்களாக ஏழைகளையே கண்டேன். நரகத்தையும் எட்டிப்பார்த்தேன். அங்கு குடியிருப்போரில் அதிகமானவர்களாகப் பெண்களையே கண்டேன்.
(அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுஸைன் (ரழி)
(நூல்: புகாரி: 3241, 5198)
எனவே, சுவர்க்கம், நரகம் இரண்டும் இது வரை படைக்கப்படவில்லை என்று யாராவது கருதினால், இவர் அல்குர்ஆனையும், ஹதீஸ்களையும் பொய்பித்தவர் ஆவார். மேலும், இவர் சுவர்க்கம் நரகம் இரண்டையும் விசுவாசம் கொண்டவராக இருக்க முடியாது என்றே நான் கருதுகின்றேன்.
விளக்கம்:
சுவர்க்கம், நரகம் இரண்டும் படைக்கப்பட்டுவிட்டன; இவ்விரண்டும் இப்போதும் உள்ளன என நம்புவது ஈமானின் அடிப்படைகளில் ஒன்றான மறுமை நாள் பற்றிய நம்பிக்கை சார்ந்த விடயமாகும். எனவே சுவர்க்கம், நரகம் இரண்டும் உண்மையானவை: அல்லாஹ் தன் நேசர்களை சொகுசான வாழ்வளித்து சுவனத்தில் அவர்களை கெளரவப்படுத்துவான். அவ்வாறே தனது எதிரிகளுக்கு வேதனை வழங்கி, நரகில் அவர்களை இழிவு படுத்துவான். இவ்விரண்டும் அதற்குரியவர்களால் நிரப்பப்படும். இதனை ஒவ்வொருவரும் நம்பிக்கை கொள்ள வேண்டும். அல்லாஹ் தனது அருள்மறை அல்குர்ஆன் நெடுகிலும் சுவர்க்கம் நரகம் இரண்டைப் பற்றியும், அவற்றில் அவன் சித்தப்படுத்திவைத்துள்ள இன்பதுன்பங்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளான்.
சுவர்க்கம், நரகம் இரண்டுமே இப்போதும் இருக்கின்றன. சுவனத்தைப் பற்றி அல்லாஹ் கூறுகின்றான்: அது (சுவர்க்கம்) பயபக்தியாளர்களுக்காகவே தயார் செய்யப்பட்டுள்ளது.
(ஆல இம்ரான்: 03: 133)
மேலும், நரகத்தைப்பற்றி அல்லாஹ் கூறுகின்றான்:
அது (நரகம்) நிராகரிப்பாளர்களுக்காவே தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது.
(அல் பகரா: 02: 24)
மேலும், பிர்அவ்னுடைய சமூகத்தாரின் மறுமை நிலையைப் பற்றி அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்:
காலையிலும், மாலையிலும் நரகத்தில் அவர்கள் கட்டப்படுவார்கள்.
(அல் முஃமின்: 40: 46)
நபி (ஸல்) அவர்கள் சூரிய கிரகணத் தொழுகையை நடத்திக் கொண்டிருக்கும் போது சுவர்க்கத்தையும், நரகத்தையும், அதில் உள்ளவர்களையும் கண்டார்கள் என்றுகூறி விட்டு அவ்விரண்டும் தற்போதும் உள்ளன என்பதை மிகவும் தெளிவாகவும், உறுதியாகவும் வருணித்துச்சொன்னார்கள்.
அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் கூறியதாவது:
ஒரு முறை சூரிய கிரகணம் ஏற்பட்டது. நபி (ஸல்) அவர்கள் எழுந்து நின்று நீண்ட அத்தியாயம் ஒன்றை ஓதித்தொழுதார்கள். பிறகு நீண்டநேரம் ருகுஊ செய்தார்கள். பிறகு தலையை உயர்த்தி மற்றொரு அத்தியாயத்தை ஓதினார்கள். பிறகு மற்றொரு ருகுஊ செய்து முடித்தார்கள். ஸஜ்தாவும் செய்தார்கள். இவ்வாறே இரண்டாம் ரகஅத்திலும் செய்தார்கள். பின்னர், "சூரிய, சந்திர கிரகணங்கள் இரண்டும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளவை. எனவே இவற்றை நீங்கள் கண்டால், அவை உங்களை விட்டும் விலக்கப்படும் வரை தொழுங்கள்! எனக்கு வாக்களிக்கப்பட்ட அனைத்தையும் இந்த இடத்தில் நான் கண்டேன். நான் முன்னே செல்வது போல் நீங்கள் என்னைக் கண்ட போது சுவர்க்கத்தின் ஒரு திராட்சைப்பழக்கொத்தை பறிக்க முயன்றேன். நான் பின்னே செல்வது போல நீங்கள் என்னை கண்டபோது நரகத்தின் ஒரு பகுதி மற்றொரு பகுதியை அழித்துக் கொண்டிருப்பதைக் கண்டேன். நரகத்தில் 'அம்ர் பின் லுஹய்' என்பவனையும் கண்டேன். அவன் தான் ஸாலிபத் எனும் (கால் நடைகளை சிலைகளுக்கு நேர்ச்சை செய்யும்) வழிபாட்டை உருவாக்கியவன் என்று கூறினர்கள்.”
(நூல்: புகாரி: 1212)
மற்றுமொரு அறிவிப்பில்,
"சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின சான்றுகளில் இரண்டு சான்றுகாளகும். எவரது இறப்பிற்காகவோ பிறப்பிற்காகவோ அவற்றுக்குக் கிரகணம் ஏற்படுவதில்லை. எனவே இதை நீங்கள் கண்டால் அல்லாஹ்வை நினைவு கூறுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது மக்கள், அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் (தொழுது கொண்டிருக்கையில்) இதோ இந்த இடத்தில் எதையோ பிடிக்க முயன்றதைக் கண்டேன். பிறகு பின் வாங்கியதையும் கண்டோமே அது ஏன்?" என்று தோழர்கள் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், நான் (தொழுது கொண்டிருக்கையில்) 'சொர்க்கத்தைக் கண்டேன்' அல்லது சொர்க்கம் எனக்குக் காட்டப்பட்டது அதிலிருந்து பழக்குலையொன்றை எடுக்க முயன்றேன். அதை நான் எடுத்திருந்தால் இந்த உலகம் உள்ளவரை அதிலிருந்து புசித்திருப்பீர்கள். மேலும், நான் தொழுது கொண்டிருக்கும் போது நரகத்தையும் கண்டேன். இன்றைய தினத்தைப் போல ஒரு பயங்கரமான காட்சி எதனையும் ஒருபோதும் நான் கண்டதேயில்லை. மேலும், நரகவாசிகளில் அதிகமாகப் பெண்களையே
கண்டேன் என்றார்கள்.
(அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரழி)
(நூல்: புகாரி: 1052, 5197)
இவ்விரண்டையும் நபி (ஸல்) அவர்கள் கண்டார்கள் என்பதிலிருந்து, இவ்விரண்டும் படைக்கப்பட்டு விட்டன என்பதும், அவை இப்போதும் உள்ளன என்பதும் தெளிவாகின்றது. இன்றேல், இது வரை படைக்கப்படாத, இல்லாத ஒன்றை எப்படிக் காணமுடியும்? அவர்கள் தாம் காணாத ஒன்றைக் கண்டதாகக் கூறவும் மாட்டார்கள். ஆகவே, சுவர்க்கம், நரகம் இரண்டும் படைக்கப்பட்டு விட்டன. அவை தற்போது உள்ளன என்பது அஹ்லுஸ்ஸுன்னாவின் நம்பிக்கைக் கோட்பாடாகும்.
எனினும் தத்துவவாகிகளும், முஃதஸிலாக்களும் இவர்களின் சிந்தனைகளால் கவரப்பட்டவர்களும் இவ்விடயத்தில் முரண்பாடான கருத்துக்களில் உள்ளனர்.
இவர்கள், 'இவ்விரண்டும் இதுவரை படைக்கப்படவில்லை' என்றும், அல்லாஹ் அவற்றை மறுமையில் படைப்பான் என்றும் கூறுகின்றனர். ஆனால், நபி (ஸல்) அவர்கள் தாம் சுவனத்தில் நுழைந்தாகவும், அதில் சுவர்க்கவாசிகளைக் கண்டதாகவும், நரகத்தையும் அதிலிருந்தவர்களையும் கண்டதாகவும் கூறியுள்ள ஹதீஸ்கள் தெளிவானவைகளாகவும், ஆதார பூர்வமானவைகளாகவும் உள்ளன. இவை, சுவர்க்கம், நரகம் இரண்டும் படைக்கப்பட்டுவிட்டன; இப்போதும் அவ்விரண்டும் உள்ளன என்பதற்குப் போதிய ஆதாரங்களாகும்.
மறுமையில் இறைநேசகர்களுக்கு சுர்க்கமும், பாவிகளுக்கு நரகமும் வெளியாக்கப்படும்; அவை அவர்களுக்காக கொண்டு வரப்படும்: மலக்குகள் நரகத்தை இழுத்துக் கொண்டு வருவார்கள்.
அல்லாஹ் கூறுகின்றான்:
பயபக்தியாளர்களுக்கு சுவர்க்கம் அருகில் கொண்டு வருப்படும். வழிகேடர்களுக்கு நரகம் வெளிப்படுத்தப்படும்.
(அஷ்ஷுஅராஃ: 26: 90,91)
மேலும், அவன் கூறுகின்றான்:
அந்நாளில் நரகம் கொண்டுவரப்படும்.
(அல்-பஜ்ர்: 89: 23)
இந்த வசனத்தைப் பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அன்றைய நாளில் நரகம் 70 ஆயிரம் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டுக் கொண்டு வரப்படும். ஒவ்வொரு சங்கிலியுடனும் 70 ஆயிரம் வானவர்கள் இருந்து, இழுத்து வருவார்கள்.
(அறிவிப்பவர்: அபுதுல்லாஹ் பின் மஸ்ஊத் (ரழி))
(நூல்: முஸ்லிம்: 5464)
அல்லாஹ் மிக அறிந்தவன்.
50. இமாம் அஹ்மத் பின் ஹம்பல் (ரஹ்) கூறினார்கள்
முஸ்லிம்களில் யார் மரணித்தாலும் அவருக்காக ஜனாஸாத் தொழுகை நிறைவேற்றப்பட வேண்டும். இன்னும், அவருக்காகப் பாவமன்னிப்புத் தேடவும் வேண்டும். சிறுபாவங்கள், பெரும் பாவங்கள் போன்ற இஸ்லாம் தடைசெய்கின்ற குற்றச் செயல்களில் இவர் ஈடுபட்டிருந்தாலும் கூட. இவர் மீது ஜனாஸாத் தொழுகையை நிறைவேற்றாதிருந்து விடவோ, அவருக்காகப் பிழைபொறுக்கத் தேடுவதை விட்டுவிடவோ கூடாது. அல்லாஹ் நாடினால் இவரை மன்னிப்பான்; அவன் நாடினால் இவரைத் தண்டிப்பான். புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே உரியதாகும். முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும், அவரது குடும்பத்தவர் மற்றும் தோழர்கள் மீதும் அல்லாஹ் ஸலவாத்தும் ஸலாமும் சொல்வானாக!
விளக்கம்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"லாஇலாஹ இல்லாஹ்” எனும் திருக்கலிமாவை மொழிந்த அனைவர் மீதும் ஜனாஸாத் தொழுகையை நிறைவேற்றுங்கள்.
(அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி)
(நூல்: தாரகுத்னீ (184)
இது மிகப் பலவீனமான செய்தியாகும் என்கிறார் ஷேக் அல்பானீ (ரஹ்) அவர்கள்: பார்க்க: இர்வாஃ 2/305, 3/177
எனவே, இஸ்லாத்தில் இணைந்துகொண்டவர்களும், வெளிப்படையாக முஸ்லிம்கள் போன்று நடித்துக்கொண்டு இருப்பவர்களும் முஸ்லிம்களாகவும், ஏகத்துவ வாதிகளாகவுமே கருதப்படுவர். இவர்களில் யார் மரணித்தாலும், அவருக்காக ஜனாஸாத் தொழுகையை நிறைவேற்ற வேண்டும். அவர்- குப்ரை ஏற்படுத்தாத - பாவச்செயல்களில் ஈடுபட்டுவந்ததாகத் தெரிந்திருந்தாலும் கூட, இவருக்காக ஜனாஸாத் தொழுகையை நிறை வேற்ற வேண்டும்.
இறை நிராகரிப்பை ஏற்படுத்தக் கூடிய பாவச்செயல்களுக்கு வேண்டுமென்றே, தொடர்ச்சியாகத் தொழுகையை விடுவது, நம்பிக்கை ரீதியான நயவஞ்சகம் போன்றவற்றை உதாரணங்களாகக் கொள்ளலாம்.
நயவஞ்சகர்கள் விடயத்தில் அல்லாஹ் கீழ்வருமாறு கூறுகின்றான்:
நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நிராகரித்ததினாலும், பாவிகளாகவே அவர்கள் மரணித்து விட்டதினாலும், அவர்களில் எவனுக்காகவும் ஒரு போதும் நீர் தொழுகை நடத்த வேண்டாம்.
(அத்தெளபா: 09: 84)
எவ்வித சந்தேகமுமின்றி இவர்கள் நயவஞ்சகர்களாவர். இவர்களுடைய நயவஞ்சக்த்தன்மை அனைவரும் அறிந்ததாகும். இவர்களுடைய அடையாளங்களையும், பெயர்களையும் ஹுதைபா (ரழி) அவர்களுக்கு நபி (ஸல்)அவர்கள் பட்டியலிட்டுக் கொடுத்தார்கள். எனவே, சந்தேகத்துக்கிடமானவர்களில் யார் மரணித்தாலும், அவர் மீது ஹுதைபா (ரழி) அவர்கள் ஜனாஸாத் தொழுகையை நிறைவேற்ற வரும் வரை, ஸஹாபாக்கள் அவர் மீது தொழுகையை நிறைவேற்ற மாட்டார்கள்.
ஆனால், முஸ்லிம்களில் யார் மரணித்தாலும் அவர் மீது ஜனாஸாத் தொழுகை நிறை வேற்றப்பட வேண்டும். இவர்கள் வணக்க வழிபாடுகளில் அலட்சியமாய் இருந்து போதும், பாவச் செயல்களில் ஈடுபட்டிருந்த போதும் கூட ஜனாஸாத் தொழுகை நடத்தப்பட வேண்டும். இவர்களுடைய மறுமை விவகாரங்களை அல்லாஹ்விடமே பொறுப்புச் சாட்டிவிட வேண்டும்.
அதேவேளை இவர்களுடைய குற்றச் செயல்கள், இவர்களை இஸ்லாத்திலிருந்து வெளியேற்றி விடவில்லை. (அதாவது பாவச் செயல்களின் மூலம் இவர்கள் காபிர்களாகி விடவில்லை) என்று நம்ப வேண்டும். பிறருடைய துஆவுக்கு மிக அருகதையுள்ளவர்கள் பாவிகள் தான் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில், இவர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு மாற்றம் செய்தோர் ஆவர். எனவே, இவர்களுக்காக ஜனாஸாத் தொழுகையை நிறை வேற்றவும், துஆச் செய்யவும் வேண்டும். மேலும், இவர்களுக்கு அல்லாஹ்வின் மன்னிப்பும் இறையருளும் கிடைக்கப் பிரார்த்திக்க வேண்டும்.
சில பித்அத்துக்கள் இறை நிராகரிப்பை ஏற்படுத்துக் கூடியவைகளாக உள்ளன். இவ்வாறு இறை நிராகிரிப்பை ஏற்படுத்தக்கூடிய பித்அத்துக்களைச் செய்கின்றவர்கள் மரணித்துவிட்டால் அவர்கள் மீது ஜனாஸாத் தொழுகை நடத்தக் கூடாது.
பித்அத்துக்களில் ஈடுபடுவதற்கு மக்களை அழைக்கின்ற ஜஹமிய்யாக்கள் போன்றவர்களைக் காபிர்கள் என்றே ஸலபுஸ்ஸாலிஹீன்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். இவ்வாறே றாபிழாக்களும் இறை நிராகரிப்பாளர்களாவர். இது அஹ்லுஸ்ஸுன்னாவின் நம்பிக்கையாகும். ஏனெனில், இவர்கள் அல்குர்ஆனிலும், சுன்னாவிலும் குறை காண்கின்றனர்; மேலும், ஸஹாபாக்களைக் குறை கூறுகின்றனர். எனவே, இவர்கள் மீது ஜனாஸாத் தொழுகை நிறைவேற்றக் கூடாது.
எனெனில், மேற்கூறப்பட்ட இவர்களுடைய செயற்பாடுகள் இறை நிராகரிப்பை ஏற்படுத்தக் கூடியன என்றே அஹ்லுஸ்ஸஸுன்னா வல்ஜமாஅத்தினர் கருதுகின்றனர்.
குறிப்பாக இவர்கள், துன்பதுயரங்கள், கஷ்ட நஷ்டங்கள் ஏற்படும்போது- அல்லாஹ்வை விட்டு விட்டு -ரஸுல் (ஸல்) அவர்களுடைய குடும்பத்தவர்களை அழைத்து, அவர்களிடம் துஆக் கேட்கின்றனர்;
அவர்களை வணங்கி வழிபடவும் செய்கின்றனர். அவ்வாறே பகிரங்கமாக இறைவனுக்கு இணைவைப்பவர் அச்செயல்களின் காரணமாக, ஒரு முஸ்லிமாகவோ, ஏகத்துவவாதியாகவோ கருதப்பட மாட்டார். அவர் ஒரு கப்ர் வணங்கியாக அல்லது எம்பியாக இருந்தாலும் சரியே. எனவே, இவ்வாறானவர்கள் மரணித்தால் அவர்கள் மீதும் ஜனாஸாத் தொழுகை நடத்தக் கூடாது.
இவ்வாறே கனீமத் பொருளில் மோசடி செய்தவர், தற்கொலை செய்து கொண்டவர் போன்ற பெரும்பாவிகள் மீது -அமீர்- ஆட்சித்தலைவர் போன்ற முக்கியமானவர்கள் ஜனாஸாத் தொழுகை நடத்தவோ, அவர்கள் மீது நடத்தப்படும் ஜனாஸாத் தொழுகையில் கலந்து கொள்ளவோ கூடாது. இவர்களுடைய இந்தச் செயல்களைப் புறக்கணிப்பதும், இதன் மூலம் பிறருக்குப் படிப்பினையூட்டுவதுமே இவ்வாறு தவிர்ந்து கொள்வதன் நோக்கமாகும்.
ஆனால், இவ்வாறானவர்கள் மீது -
அமீர்- ஆட்சித்தலைவர் ஜனாஸாத் தொழுகை நடத்தாவிட்டாலும், அதில் அவர் கலந்து கொள்ளாவிட்டாலும் பிறர் அவர் மீது தொழுகை நடத்த அனுமதி வழங்க வேண்டும்.
ஏனெனில், தற்கொலை போன்ற பெரும்பாவங்களில் ஈடுபட்டவர்களாயினும் இவர்கள் முஸ்லிம்களேயாவர். இவர்கள் இஸ்லாத்திலிருந்து வெளியேறியவர்களாகக் கருதப்பட மாட்டார்கள்.
இத்துடன் இந்நூல் நிறைவு பெறுகின்றது. அல்லாஹ் மிகவும் அறிந்தவன்.
அல்லாஹ் நபி (ஸல்) அவர்கள் மீதும், அவருடைய குடும்பத்தவர்கள், மற்றும் தோழர்கள் மீதும் ஸலவாத்தும் ஸலாமும் சொல்வானாக! !