தொழுகையின் முதல் வரிசையில் அறிஞர்களுக்கே முன்னுரிமை!

தொழுகையில் இமாமுக்கு அடுத்தபடியாக உள்ள முதல் வரிசையின் மத்திய பகுதியில் மார்க்க அறிஞர்களும், அறிவாற்றலும் விவேகமும் மிக்கவர்களுமே நிற்க வேண்டும். இமாமுக்கு ஏதேனும் மறதி ஏற்பட்டால் திருத்துவதற்கும், தேவைப்பட்டால் தொழுகையைத் தொடர்ந்து நடத்துவதற்கும் இவர்களே தகுதி படைத்தவர்கள் என்பதைப் பின்வரும் அறிவிப்பு தெளிவுபடுத்துகிறது:

عَنْ قَيْسِ بنِ عُبَادٍ، قَالَ: بَيْنَا أَنَا فِي الْمَسْجِدِ فِي الصَّفِّ الْمُقَدَّمِ، فَجَبَذَنِي رَجُلٌ مِنْ خَلْفِي جَبْذَةً فَنَحَّانِي وَقَامَ مَقَامِي، فَوَاللهِ مَا عَقَلْتُ صَلَاتِي، فَلَمَّا انْصَرَفَ فَإِذَا هُوَ أُبَيُّ بْنُ كَعْبٍ، فَقَالَ: يَا فَتَى، لَا يَسُؤْكَ اللهُ إِنَّ هَذَا عَهْدٌ مِنْ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَعَلَى آلِهِ وَسَلَّمَ إِلَيْنَا أَنْ نَلِيَهُ، ثُمَّ اسْتَقْبَلَ الْقِبْلَةَ، فَقَالَ: «هَلَكَ أَهْلُ الْعُقَدِ وَرَبِّ الْكَعْبَةِ» ثَلَاثًا، ثُمَّ قَالَ: «وَاللهِ مَا عَلَيْهِمْ آسَى وَلَكِنْ آسَى عَلَى مَنْ أَضَلُّوا». قُلْتُ: يَا أَبَا يَعْقُوبَ، مَا يَعْنِي بِأَهْلِ الْعُقَدِ؟ قَالَ الْأُمَرَاءُ .

هذا حديث صحيحٌ،

கைஸ் பின் உபாதா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

"நான் பள்ளியில் முதல் வரிசையில் தொழுது கொண்டிருந்தபோது, எனக்குப் பின்னாலிருந்த ஒரு மனிதர் என்னை ஈர்த்துப் பின்னுக்கு நகர்த்திவிட்டு, என் இடத்தில் நின்றுகொண்டார். அல்லாஹ்வின் மீது ஆணையாக! (அந்த அதிர்ச்சியினால்) எனது தொழுகையை என்னால் உணரவே முடியவில்லை.

தொழுகை முடிந்ததும் திரும்பிப் பார்த்தேன்; அவர்தான் உபை பின் கஅப் (ரழி) அவர்கள்!
உடனே அவர் என்னிடம்: 'இளைஞனே! அல்லாஹ் உனக்கு மனவருத்தத்தைத் தரமாட்டான்! "(தொழுகையில்) எனக்குத் தொட்டுப் பின்னால் (எனக்கு அடுத்து) உங்களில் அறிவும் விவேகமும் உள்ளவர்களே நிற்க வேண்டும்" என்பது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு இட்ட கட்டளையாகும்' என்று கூறினார்.

பின்னர் கிப்லாவை நோக்கி முகம் திருப்பி, 'கஃபாவின் இறைவன் மீது ஆணையாக! அதிகாரம் படைத்த தலைவர்கள் அழிந்துவிட்டார்கள்!' என்று மூன்று முறை கூறினார்கள். தொடர்ந்து, 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர்கள் அழிவதைப் பற்றி நான் துக்கப்படவில்லை; மாறாக, அவர்கள் யாரையெல்லாம் வழிகேட்டில் வீழ்த்துகிறார்களோ அவர்களைப் பற்றியே துக்கப்படுகிறேன்' என்றார்கள்."

(அறிவிப்பாளர்களில் ஒருவரான சுலைமான் அத்-தைமீ கூறுகிறார்:) நான் (எனது ஆசிரியர்) அபூ யஃகூபிடம்: "அதிகாரம் படைத்தவர்கள் என்று அவர் யாரைக் குறிப்பிடுகிறார்?" என்று கேட்டேன். அதற்கு அவர்: "ஆட்சியாளர்களைத் தான்" என்று விளக்கமளித்தார்.

ஆதாரம்: சுனன் அந்-நஸாஈ 808

( இது ஸஹீஹ் தரத்தில் அமைந்த ஆகும்.)

சிந்தனைத் துளி :

1. முறையான வரிசை அமைப்பு: தொழுகையில் இமாமுக்கு நேரடியாகப் பின்னால் அறிவும், மார்க்கப் பக்குவமும், விவேகமும் நிறைந்த சான்றோர்கள் நிற்பதே மார்க்க முறைமையாகும்.

2. ஆசிரியரின் கரிசனை: ஒரு நடைமுறையைச் சுட்டிக்காட்டி திருத்தும்போது, அந்த இளைஞனின் மனம் புண்படாதவாறு "அல்லாஹ் உனக்கு மனவருத்தத்தைத் தரமாட்டான்!" எனப் பிரார்த்தித்து மென்மையாகக் கற்பிக்கும் உயர் பண்பை உபை (ரழி) அவர்களிடம் காண்கிறோம்.

3. வழிகேட்டின் ஆபத்து: சமுதாயத்தைத் தவறான பாதைக்கு இட்டுச் செல்லும் தலைவர்களினால் சாமானிய மக்களுக்கு ஏற்படும் தீங்கைக் குறித்து மார்க்க அறிஞர்கள் எப்போதும் விழிப்புணர்வுடனும் கவலையுடனும் இருக்க வேண்டும்.

அல்லாஹ் மிக அறிந்தவன்
Previous Post Next Post