மறுமையை நம்புவது

மறுமை நாளின் மீது நம்பிக்கை கொள்வது, மேலும் அதைப் பற்றிய முன்னறிவிப்புகள் மற்றும் சிறிய, பெரிய அடையாளங்கள் குறித்து நம்புதல். 
                                                
 இறுதி நாள் உண்டென நம்புவது கடமையாகும். உலகில் வாழ்ந்து இறந்து போன மனிதகுலம் இவ்வுலகம் முற்றாக அழிந்து போனதன் பின் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப்படுவர். அதன் பின் சுகபோகம் நிறைந்த சுவர்க்கத்திலோ அல்லது தண்டனைகள் நிறைந்த நரகிலோ அவர்கள் இருப்பர். இனி யவ்முல் கியாமா எனும் இறுதி நாளுடன் தொடர்புடைய மற்றும் பல விடயங்களைக் கவனிப்போம். 
                                                
 மீண்டும் எழுப்புதல்:
                                                
இஸ்ராபீல்(அலை) ஸூர் எனும் ஊது குழலை இரண்டாம் தடவையாக ஊதியதும், மரணமடைந்த யாவரும் உயிர் பெற்று எழுவர். அப்போது அவர்கள் யாவரும் பிறந்த மேனியுடனும், வெற்றுக்காலோடும், அகிலங்களின் இரட்சகனின் தீர்ப்பை எதிர்பார்த்த வண்ணம் இருப்பர். 
                                                
 இது பற்றி அல்லாஹ் கூறுகிறான்: 

 وَنُفِخَ فِى الصُّوْرِ فَصَعِقَ مَنْ فِى السَّمٰوٰتِ وَمَنْ فِى الْاَرْضِ اِلَّا مَنْ شَآءَ اللّٰهُ‌  ثُمَّ نُفِخَ فِيْهِ اُخْرٰى فَاِذَا هُمْ قِيَامٌ يَّنْظُرُوْنَ 

 ஸூர் (எக்காளம்) ஊதப்பட்டால் உடன் வானங்களில் உள்ளவர்களும், பூமியில் உள்ளவர்களும் - அல்லாஹ் நாடியவர்களைத் தவிர - மூர்ச்சித்து விடுவார்கள்; பிறகு அதில் மறு தடவை ஊதப்பட்டதும் உடன் அவர்கள் யாவரும் எழுந்து, எதிர் நோக்கி நிற்பார்கள். 

 (அல்குர்ஆன் : 39:68) 
                                                
 كَمَا بَدَاْنَاۤ اَوَّلَ خَلْقٍ نُّعِيْدُهٗ‌  وَعْدًا عَلَيْنَا‌  اِنَّا كُنَّا فٰعِلِيْنَ 

 முதலில் படைப்புகளைப் படைத்தது போன்றே, (அந்நாளில்) அதனை மீட்டுவோம்; இது நம் மீது வாக்குறுதியாகும்; நிச்சயமக நாம் இதனை செய்வோம். 

 (அல்குர்ஆன் : 21:104) 
                                                
 பதிவேடு:
                                                
 ஒவ்வொருவரும் தத்தமது செயல்களைப் பார்த்துக் கொள்வதற்காக அவரவரின் பதிவேடு அவர்களின் கையில் கொடுக்கப்படும். அப்போது சிலரின் வலது கரத்திலும் இன்னும் சிலரின் இடது கரத்திலும் அவை வழங்கப்படும். இவை யாவும் நிஜம் என்பதே நமது நம்பிக்கை. 
                                                
 فَاَمَّا مَنْ اُوْتِىَ كِتٰبَهٗ بِيَمِيْنِهٖۙ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَّسِيْرًا ۙ وَّيَنْقَلِبُ اِلٰٓى اَهْلِهٖ مَسْرُوْرًا وَاَمَّا مَنْ اُوْتِىَ كِتٰبَهٗ وَرَآءَ ظَهْرِهٖۙ فَسَوْفَ يَدْعُوْا ثُبُوْرًا ۙ وَّيَصْلٰى سَعِيْرًا  

 ஆகவே எவனுடைய பட்டோலை அவனுடைய வலக்கையில் கொடுக்கப்படுகின்றதோ, 

 அவன் சுலபமான விசாரணையாக விசாரிக்கப்படுவான். 

 இன்னும், தன்னைச் சார்ந்தோரிடமும் மகிழ்வுடன் திரும்புவான். 

 ஆனால், எவனுடைய பட்டோலை அவனுடைய முதுகுக்குப் பின்னால் கொடுக்கப்படுகின்றதோ- 

 அவன் (தனக்குக்) “கேடு” தான் எனக் கூவியவனாக- 

 அவன் நரகத்தில் புகுவான். 

 (அல்குர்ஆன் : 84:7-12) 
                                                
 وَكُلَّ اِنْسَانٍ اَلْزَمْنٰهُ طٰۤٮِٕرَهٗ فِىْ عُنُقِهٖ‌ وَنُخْرِجُ لَهٗ يَوْمَ الْقِيٰمَةِ كِتٰبًا يَّلْقٰٮهُ مَنْشُوْرًا اِقْرَاْ كِتٰبَك َ كَفٰى بِنَفْسِكَ الْيَوْمَ عَلَيْكَ حَسِيْبًا 

 ஒவ்வொரு மனிதனுடைய செயல் குறிப்பையும் அவனுடைய கழுத்தில் நாம் மாட்டி இருக்கிறோம்; கியாமத் நாளில் அவனுக்காக ஓர் ஏட்டை வெளிப்படுத்துவோம் - திறக்கப்பட்ட நிலையில் அதனை அவன் பெற்றுக் கொள்வான். 

 “நீ உம் புத்தகத்தைப் படித்துப் பார்! இன்று உனக்கு எதிராக உன்னுடைய ஆத்மாவே கணக்கதிகாரியாக இருக்கப் போதும்” (என்று அப்போது நாம் கூறுவோம்). 

 (அல்குர்ஆன் : 17:13,14) 
                                                
 நாளை மறுமை நாளில் எந்தவொரு ஆத்மாவுக்கும் அநீதி நிகழா வண்ணம் ஒவ்வொருவரின் செயலும் நிறுத்து சரி பார்க்கப்படும் என்பதையும் நாம் நம்புகிறோம். இதனை அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகிறான். 
                                                
 فَمَنْ يَّعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَّرَهٗ وَمَنْ يَّعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَّرَهٗ 

 எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார். 

 அன்றியும், எவன் ஓர் அனுவளவு தீமை செய்திருந்தாலும், அ(தற்குரிய பல)னையும் அவன் கண்டு கொள்வான். 

 (அல்குர்ஆன் : 99:7,8) 
                                                
 فَمَنْ ثَقُلَتْ مَوَازِيْنُهٗ فَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ وَمَنْ خَفَّتْ مَوَازِيْنُهٗ فَاُولٰٓٮِٕكَ الَّذِيْنَ خَسِرُوْۤا اَنْفُسَهُمْ فِىْ جَهَـنَّمَ خٰلِدُوْنَ‌ تَلْفَحُ وُجُوْهَهُمُ النَّارُ وَهُمْ فِيْهَا كٰلِحُوْنَ 

 எவருடைய (நன்மைகளின்) எடைகள் கனமாக இருக்கின்றனவோ அவர்கள் தாம் வெற்றியாளர்கள். 

 ஆனால், எவருடைய (நன்மைகளின்) எடைகள் இலேசாக இருக்கின்றனவோ, அவர்கள் தாம் தங்களையே நஷ்டப்படுத்திக் கொண்டவர்கள்; அவர்கள் தாம் நரகத்தில் நிரந்தரமானவர்கள். 

 (நரக) நெருப்பு அவர்களுடைய முகங்களை கரிக்கும்; இன்னும் அதில் அவர்கள் உதடு சுருண்டு (முகம் விகாரமானவர்களாக) இருப்பார்கள். 

 (அல்குர்ஆன் : 23:102-104) 
                                                
 مَنْ جَآءَ بِالْحَسَنَةِ فَلَهٗ عَشْرُ اَمْثَالِهَا‌  وَمَنْ جَآءَ بِالسَّيِّئَةِ فَلَا يُجْزٰٓى اِلَّا مِثْلَهَا وَهُمْ لَا يُظْلَمُوْنَ 

 எவர் ஒருவர் (ஒரு) நன்மையைச் செய்கிறாரோ அவருக்கு அதுபோல் பத்துப் பங்கு (நன்மை) உண்டு; எவர் ஒருவர் (ஒரு) தீமையைச் செய்கிறாரோ அதைப்போன்ற அளவுடைய கூலியே கொடுக்கப்படுவார் - அவர்கள் அநியாயம் செய்யப்படவும் மாட்டார்கள். 

 (அல்குர்ஆன் : 6:160) 
                                                
 ஷபாஅத் :
                                                
கியாமத்துடைய நாளில் மக்கள், தங்களை துக்கமும், துயரமும் சூழ அந்த வெட்ட வெளியில் குழுமி இருப்பார்கள். அதிலிருந்து விடுதலை பெற அல்லாஹ்வின் தீர்ப்பை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அவர்கள் அதற்காக அல்லாஹ்விடம் பரிந்து பேசுமாறு ஆதம், நூஹ், இப்ராஹீம், மூஸா, ஈஸா ஆகிய ரஸூல்மார்களிடம் வேண்டுவார்கள். ஆனால், யாருக்கும் அனுமதி கிடைக்காது. இறுதியில் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு மாத்திரம் அனுமதி கிடைக்கும். எனவே நபியவர்கள் எல்லா மக்களுக்குமாக அல்லாஹ்விடம் ஷபாஅத் செய்வார்கள். இதுவே மிகப்பெரிய ஷபாஅத் (الشفاعة الكبرى) எனப்படுகிறது. ரஸூல் (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் சிறப்புமிகு இந்த ஷபாஅத்தை உண்மையென நாம் நம்புகிறோம். 
                                                
 இவ்வாறே நரகில் போடப்பட்ட சில முஃமின்களை விடுவிப்பதற்காக ரஸூல் (ஸல்) அவர்களுக்கு மாத்திரமின்றி ஏனைய நபிமார்கள், முஃமின்கள் மற்றும் மலக்குகள் சிலருக்கும் ஷபாஅத் செய்வதற்கான அனுமதி வழங்கப்படும். மேலும், அல்லாஹ் தன் அருளால் ஷபாஅத் எதுவும் இல்லாமலும் சில முஃமின்களை நரகில் இருந்து விடுதலை செய்வான். 
                                                
 எனவே, இத்தகைய ஷபாஅத்துக்கள் யாவும் உண்மையென்பதே நமது நம்பிக்கையும், நிலைப்பாடுமாகும். 
                                                
 ஹவ்ளு :
                                                
 இறுதி நாளில், மறுமையில், கடும் வெயிலில் நீரின்றி மக்கள் தாகத்தால் தகிப்பர். 'ஹவ்ளு' எனும் நீர் தடாகத்தை தவிர வேறு நீர் வளம் எதுவும் அங்கு இருக்காது. அதன் நீள, அகலம் ஒரு மாத பயணத்தின் தூரமாகும். அதன் நீர், பாலை விட வெண்மையாகவும், தேனை விட இனிமையாகவும், கஸ்தூரியை விட வாசமாகவும் இருக்கும். முஃமின்களுக்கு அதிலிருந்து தண்ணீர் வழங்கப்படும். எவர் அதிலிருந்து ஒரு தடவை தண்ணீர் அருந்தினாரோ அவருக்கு அதன் பின்னர் தாகமே வராது. 
   
 சிராத் :
                                                
இது நரகின் மேல் கட்டப்பட்டிருக்கும் பாலத்தின் பெயர். இதனைத் தாண்டியே சுவர்க்கம் செல்ல வேண்டும். தவறினால் நரகம் தான் தஞ்சம். நற்செயல்களின் பரிமாணத்தின் படி அதனை சிலர் வேகமாகவும், இன்னும் சிலர் மெதுவாகவும் கடந்து செல்வர். இதன்படி சிலர் மின்னல் வேகத்திலும், இன்னும் சிலர் காற்றின் வேகத்திலும், மற்றும் சிலர் பறவையின் வேகத்திலும், பயணிகளின் வேகத்திலும் அதனை கடப்பர். அச்சமயம் நபியவர்கள் அங்கு நிற்பார்கள். அப்போதவர்கள் "என் இரட்சகனே! பாதுகாப்பாயாக! பாதுகாப்பாயாக! என்று மன்றாடுவார்கள். அப்போது நற்செயல்கள் குறைந்தவர்களும் அதனைக் கடக்க அங்கு வருவார்கள். அப்போது அதன் இரு புறங்களிலும் மாட்டப் பட்டிருக்கும் கொக்கிகள் செயல்பட ஆரம்பிக்கும். யார் அதன் சிறாய்ப்புக்கு இலக்காகவில்லையோ அவர் தப்பித்துக் கொள்வார். ஆனால் அதில் சிக்குண்டவர் நரகில் விழுவார். இவ்வாறு மறுமை நாள் குறித்தும், அதன் அதிபயங்கரத்தைக் குறித்தும் ஸஹீஹான ஹதீஸ்களில் வந்துள்ள எல்லா செய்திகளையும் நாம் நம்புகிறோம். அதன் அபாயங்களிலிருந்து நம்மை அல்லாஹ் பாதுகாப்பானாக!. மேலும் நபியவர்களுக்குப் பிரத்தியேகமாக வழங்கப்பட்டிருக்கும் மற்றுமொரு ஷபாஅத்தின் மூலம் சுவர்க்கவாசிகளை சுவர்க்கத்தில் பிரவேசிக்க அனுமதிக்குமாறு பரிந்து பேசுவார்கள் என்றும், எந்த ஒரு கண்ணும் பாத்திராத, எந்த ஒரு செவியும் கேட்டிராத, எந்த ஒரு உள்ளமும் கற்பனை செய்ய முடியாத அருள் நிறைந்த சுவர்க்கம் முஃமின்களுக்காகவும், தண்டனைகள் நிறைந்த நரகம் காபிர்களுக்காகவும், பாவிகளுக்காகவும் அல்லாஹ் தயார்படுத்தி வைத்துள்ளான் என்றும் நாம் நம்புகிறோம். 
                                                
 இதனை வலியுறுத்தும் சில வசனங்கள் பின்வருமாறு: 
                                                
 فَلَا تَعْلَمُ نَفْسٌ مَّاۤ اُخْفِىَ لَهُمْ مِّنْ قُرَّةِ اَعْيُنٍ‌ جَزَآءً بِمَا كَانُوْا يَعْمَلُوْنَ 

 அவர்கள் செய்த (நற்) கருமங்களுக்குக் கூலியாக மறைத்து வைக்கப்பட்டுள்ள கண் குளிர்ச்சியை (மறுமையின் பேரின்பத்தை) எந்த ஓர் ஆன்மாவும் அறிந்து கொள்ள முடியாது. 

 (அல்குர்ஆன் : 32:17) 
                                                
  اِنَّاۤ اَعْتَدْنَا لِلظّٰلِمِيْنَ نَارًا ۙ اَحَاطَ بِهِمْ سُرَادِقُهَا‌ وَاِنْ يَّسْتَغِيْثُوْا يُغَاثُوْا بِمَآءٍ كَالْمُهْلِ يَشْوِى الْوُجُوْهَ‌ بِئْسَ الشَّرَابُ وَسَآءَتْ مُرْتَفَقًا 

 அநியாயக் காரர்களுக்கு (நரக) நெருப்பை நிச்சயமாக நாம் சித்தப்படுத்தியுள்ளோம்; (அந்நெருப்பின்) சுவர் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும்; அவர்கள் (தண்ணீர் கேட்டு) இரட்சிக்கத் தேடினால் உருக்கப்பட்ட செம்பு போன்ற தண்ணீரைக் கொண்டே இரட்சிக்கப்படுவார்கள். (அவர்களுடைய) முகங்களை அது சுட்டுக் கருக்கி விடும்; மிகக் கேடான பானமாகும் அது! இன்னும், இறங்கும் தலத்தில் அதுவே மிகக் கெட்டதாகும். 

 (அல்குர்ஆன் : 18:29) 
                                                
 وَمَنْ يُّؤْمِنْ بِاللّٰهِ وَيَعْمَلْ صَالِحًـا يُّدْخِلْهُ جَنّٰتٍ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَاۤ اَبَدًا‌ قَدْ اَحْسَنَ اللّٰهُ لَهٗ رِزْقًا 

 எவர் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல் செய்கின்றாரோ அவரை அல்லாஹ் சுவனச் சோலைகளில் பிரவேசிக்கச் செய்கிறான் - அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கின்றன. அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பார்கள்; அல்லாஹ் அவர்களுக்குத் திடமாக உணவை அழகாக்கினான். 

 (அல்குர்ஆன் : 65:11) 
                                                
 اِنَّ اللّٰهَ لَعَنَ الْكٰفِرِيْنَ وَاَعَدَّ لَهُمْ سَعِيْرًا ۙ خٰلِدِيْنَ فِيْهَاۤ اَبَدًا  لَا يَجِدُوْنَ وَلِيًّا وَّلَا نَصِيْرًا يَوْمَ تُقَلَّبُ وُجُوْهُهُمْ فِى النَّارِ يَقُوْلُوْنَ يٰلَيْتَـنَاۤ اَطَعْنَا اللّٰهَ وَاَطَعْنَا الرَّسُوْلَا 

 நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களைச் சபித்து, அவர்களுக்காகக் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்பைச் சித்தம் செய்திருக்கின்றான். 

 அதில் அவர்கள் என்றென்றும் தங்குவார்கள்; தங்களைக் காப்பவரையோ, உதவி செய்பவரையோ அவர்கள் காணமாட்டார்கள். 

 நெருப்பில் அவர்களுடைய முகங்கள் புரட்டப்படும் அந்நாளில், “ஆ, கை சேதமே! அல்லாஹ்வுக்கு நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே; இத்தூதருக்கும் நாங்கள் கட்டுப்பட்டிருக்க வேண்டுமே!” என்று கூறுவார்கள். 

 (அல்குர்ஆன் : 33:64-66) 
                                                
 மேலும் தங்களின் இரட்சகனும், ரஸுலும் யார் என்பது பற்றியும், தங்களின் மார்க்கம் யாது என்பது பற்றியும், கப்ரில் வைத்து கேட்கப்படும் கேள்விகளும், அது போன்ற ஏனைய சோதனைகளும் உண்மையென்றும், அப்பொழுது ஒரு முஃமின், என்னுடைய மார்க்கம் இஸ்லாம், என்னுடைய நபி முஹம்மத் (ஸல்) அவர்களாவார்கள் என்றும் பதிலளிப்பான். அவன் ஒரு காஃபிராகவோ, முனாஃபிக்காகவோ இருந்தால் அது பற்றி எனக்கொன்றும் தெரியாது. ஆனால் மக்கள் எதனையோ சொல்ல நானும் கேட்டேன். அதனையே நானும் சொன்னேன் என்பான். இப்படியான நிகழ்வுகளும் உண்மையென்பதே நமது நம்பிக்கை. 
                                                
 இது பற்றி அல்லாஹ் குறிப்பிடும்போது: 

 يُثَبِّتُ اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا بِالْقَوْلِ الثَّابِتِ فِى الْحَيٰوةِ الدُّنْيَا وَفِى الْاٰخِرَةِ‌ 

 எவர்கள் ஈமான் கொள்கிறார்களோ அவர்களை இவ்வுலக வாழ்விலும் மறுமையிலும் உறுதியான சொல்லைக் கொண்டு அல்லாஹ் உறுதி படுத்துகின்றான். 

 (அல்குர்ஆன் : 14:27) 
                                                
 மேலும் கப்ரில் முஃமின்கள் சுகமாகவும், காஃபிர்களும், அநியாயக்காரர்களும் துன்புறுத்தலுக்கு மத்தியிலும் இருப்பார்கள் என்பதையும் நாம் நம்புகிறோம். இதனை அல்லாஹ்வின் இந்த வசனங்கள் உறுதி செய்கின்றன. 
                                                
 الَّذِيْنَ تَتَوَفّٰٮهُمُ الْمَلٰۤٮِٕكَةُ طَيِّبِيْنَ‌ ۙ يَقُوْلُوْنَ سَلٰمٌ عَلَيْكُمُۙ ادْخُلُوا الْجَـنَّةَ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ 

 (குஃப்ரை விட்டும்) தூயவர்களாக இருக்கும் நிலையில் மலக்குகள் எவருடைய உயிர்களைக் கைப்பற்றுகிறார்களோ அவர்களிடம்: “ஸலாமுன் அலைக்கும்” (“உங்கள் மீது சாந்தி உண்டாவதாக); நீங்கள் செய்து கொண்டிருந்த (நற்) கருமங்களுக்காக சுவனபதியில் நுழையுங்கள்” என்று அம்மலக்குகள் சொல்வார்கள். 

 (அல்குர்ஆன் : 16:32) 
                                                
 وَلَوْ تَرٰٓى اِذِ الظّٰلِمُوْنَ فِىْ غَمَرٰتِ الْمَوْتِ وَالْمَلٰٓٮِٕكَةُ بَاسِطُوْۤا اَيْدِيْهِمْ‌ اَخْرِجُوْۤا اَنْفُسَكُمُ‌ اَلْيَوْمَ تُجْزَوْنَ عَذَابَ الْهُوْنِ بِمَا كُنْتُمْ تَقُوْلُوْنَ عَلَى اللّٰهِ غَيْرَ الْحَـقِّ وَكُنْتُمْ عَنْ اٰيٰتِهٖ تَسْتَكْبِرُوْنَ 

 இந்த அநியாயக்காரர்கள் மரண வேதனையில் இருக்கும் போது நீங்கள் அவர்களைப் பார்த்தால், மலக்குகள் தம் கைகளை நீட்டி (இவர்களிடம்) “உங்களுடைய உயிர்களை வெளியேற்றுங்கள்; இன்றைய தினம் நீங்கள் இழிவுதரும் வேதனையைக் கூலியாகக் கொடுக்கப்படுவீர்கள். ஏனெனில், நீங்கள் உண்மையல்லாததை அல்லாஹ்வின் மீது கூறிக் கொண்டிருந்தீர்கள்; இன்னும், அவனுடைய வசனங்களை (நம்பாது நிராகரித்துப்) பெருமையடித்துக் கொண்டிருந்தீர்கள்” (என்று கூறுவதை நீர் காண்பீர்). 

 (அல்குர்ஆன் : 6:93) 
                                                
 இது சம்பந்தமாக ஏராளமான தகவல்களை ஹதீஸ்களில் காணலாம். எனவே மறைவான இத்தகைய விஷயங்கள் பற்றி அல்குர்ஆனிலும், ஸுன்னாவிலும் வந்துள்ள அனைத்தையும் நம்பிக்கை கொள்வது எல்லா முஃமின்கள் மீதும் கடமையாகும். மேலும் இவ்வுலக விஷயங்களுக்கும் மத்தியில் பெரிய வேறுபாடு உண்டென்றபடியால் மறு உலகத்தின் விவகாரங்களை இவ்வுலக விவகாரங்களுடன் ஒப்பு நோக்கலாகாது என்பதையும் புரிந்து கொள்வது அவசியம். 
                                                
 மறுமை நிகழ்வதற்கு முன் ஏராளமான அடையாளங்கள் நிகழ உள்ளன என்பதாக நபி(ஸல்) அவர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளார்கள். அவ்வடையாளங்கள் இரண்டு வகையாக உள்ளன. ஒன்று சிறிய அடையாளங்கள், மற்றொன்று பெரிய அடையாளங்கள். 

 சிறிய அடையாளங்கள் :
                                                
சிறிய அடையாளங்களை பொறுத்தவரையில் ஏராளமான அடையாளங்களை நபி(ஸல்) அவர்கள் அறிவித்துள்ளார்கள். அதில் நடந்தேறிய அடையாளங்களும் உள்ளன, நிகழவுள்ளதும் உள்ளன உதாரணமாக சிலவற்றைப் பார்க்கலாம். 
                                                
 நபி(ஸல்) அவர்கள் ஒரு நாள் மக்களுக்கிடையில் இருந்தபோது ஒருவர் அவர்களிடம் வந்து 'ஈமான் என்றால் என்ன?' என்று கேட்டதற்கு 'ஈமான் என்பது அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய சந்திப்பையும் அவனுடைய தூதர்களையும் நீர் நம்புவது.   மேலும், மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவதையும் நீர் நம்புவது' எனக் கூறினார்கள். அடுத்து 'இஸ்லாம் என்றால் என்ன?' என்று கேட்டதற்குவர்கள் கூறினார்கள். 'இஸ்லாம் என்பது அல்லாஹ்வுக்கு (எதனையும்) நீர் இணையாகக் கருதாத நிலையில் அவனை நீர் வணங்குவதும் தொழுகையை நிலை நிறுத்தி வருவதும் கடமையாக்கப்பட்ட ஸகாத்தை நீர் வழங்கி வருவதும் ரமலான் மாதம் நீர் நோன்பு நோற்பதுமாகும்' என்று கூறினார்கள். 
 அடுத்து 'இஹ்ஸான் என்றால் என்ன?' என்று அவர் கேட்டதற்குவர்கள் கூறினார்கள்: '(இஹ்ஸான் என்பது) அல்லாஹ்வை (நேரில்) காண்பதைப் போன்று நீர் வணங்குவதாகும். நீர் அவனைப் பார்க்காவிட்டாலும் நிச்சயமாக அவன் உம்மைப் பார்த்துக் கொண்டே இருக்கிறான் என்றார்கள்' அடுத்து 'மறுமை நாள் எப்போது?' என்று அம்மனிதர் கேட்டதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'அதைப் பற்றிக் கேட்கப்பட்டவர் (நான்) அதைப் பற்றிக் கேட்கின்ற உம்மை விட மிக்க அறிந்தவரல்லர். (வேண்டுமானால்) அதன் (சில) அடையாளங்களைப் பற்றி உமக்குச் சொல்கிறேன். அவை, ஓர் அடிமைப் பெண் தனக்கு எஜமானாகப் போகிறவனை ஈன்றெடுத்தல்; மேலும் கறுப்பு நிற ஒட்டகங்களை மேய்த்துக் கொண்டிருந்த மக்கள் உயர்ந்த கட்டிடங்கள் கட்டித் தமக்குள் பெருமையடித்துக் கொள்ளல். ஐந்து விஷயங்களை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறியமாட்டார்' என்று கூறிவிட்டு, பின்வரும் வசனத்தை ஓதிக் காட்டினார்கள். 'மறுமை நாளைப் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே உள்ளது.' (திருக்குர்ஆன் 31:34) பின்னர் அம்மனிதர் திரும்பிச் சென்றார். 'அவரை அழைத்து வாருங்கள்' என்றார்கள். சென்று பார்த்தபோது அவரைக் காணவில்லை. அப்போது, 'இவர்தான் ஜிப்ரீல். மக்களுக்கு அவர்களின் மார்க்கத்தைக் கற்றுக் கொடுக்க வந்திருக்கிறார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். 

 அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா(ரலி) 
 நூல்: ஸஹீஹ் புகாரி : 50. 
                                                
 இச்செய்தியை பதிவு செய்தபின் இமாம் புகாரி (ரஹ்) அவர்கள்: 

 ஜிப்ரீல்(அலை) அவர்களின் கேள்விகளுக்கு நபி(ஸல்) அவர்கள் அளித்த பதில்கள் அனைத்தும் நம்பிக்கையைச் சேர்ந்தது என்று புகாரி ஆகிய நான் கூறுகிறேன் என்றார். 
                                                
 'ஓர் அவையில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மக்களுக்கு அறிவுரை வழங்கிக் கொண்டிருந்தபோது அவர்களிடம் நாட்டுப் புறத்து அரபி ஒருவர் வந்தார். 'மறுமை நாள் எப்போது?' எனக் கேட்டார். நபி(ஸல்) அவர்கள் தங்களின் பேச்சைத் தொடர்ந்து கொண்டிருந்தார்கள். அப்போது (அங்கிருந்த) மக்களில் சிலர் 'நபி(ஸல்) அவர்கள் அம்மனிதர் கூறியதைச் செவியுற்றார்கள்; எனினும் அவரின் இந்தக் கேள்வியை அவர்கள் விரும்பவில்லை' என்றனர். வேறு சிலர், 'அவர்கள் அம்மனிதர் கூறியதைச் செவியுறவில்லை' என்றனர். முடிவாக நபி(ஸல்) அவர்கள் தங்களின் பேச்சை முடித்துக் கொண்டு, 'மறுமை நாளைப் பற்றி (என்னிடம்) கேட்டவர் எங்கே?' என்று கேட்டார்கள். உடனே (கேட்டவர்)' இறைத்தூதர் அவர்களே! இதோ நானே' என்றார். அப்போது கூறினார்கள்.' அமானிதம் பாழ்படுத்தப்பட்டால் நீர் மறுமை நாளை எதிர் பார்க்கலாம்.' அதற்கவர், 'அது எவ்வாறு பாழ் படுத்தப்படும்?' எனக் கேட்டதற்கு, 'எந்தக் காரியமாயினும் அது, தகுதியற்றவர்களிடம் ஒப்படைக்கப்பட்டால் நீர் மறுமை நாளை எதிர்பாரும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். 

 அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா(ரலி) 
 நூல்: ஸஹீஹ் புகாரி : 59. 
                                                
 'கல்வி மக்களிடமிருந்து மறைந்து விடுவதும் அறியாமை நிலைத்து விடுவதும் மது அருந்தப் படுவதும் வெளிப்படையாய் விபசாரம் நடப்பதும் மறுமை நாளின் அடையாளங்களில் சிலவாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். 

 அறிவிப்பாளர்: அனஸ்(ரலி) 
 நூல்: ஸஹீஹ் புகாரி : 80. 
                                                
 'எனக்குப் பின்னர் வேறு எவரும் உங்களுக்கு அறிவிக்க முடியாத நபிமொழி ஒன்றை (இப்போது) நான் உங்களுக்கு அறிவிக்கப் போகிறேன். 'கல்வி குறைந்து போய் விடுவதும் அறியாமை வெளிப்படுவதும் வெளிப்படையாய் விபச்சாரம் நடப்பதும் ஐம்பது பெண்களுக்கு அவர்களை நிர்வகிக்கும் ஒரே ஆண் என்ற நிலமை வரும் அளவுக்குப் பெண்கள் மிகுதியாவதும் ஆண்கள் குறைந்து விடுவதும் மறுமை நாளின் சில அடையாளங்களாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) கூறக் கேட்டிருக்கிறேன்'. 

 அறிவிப்பாளர்: அனஸ்(ரலி) 
 நூல்: ஸஹீஹ் புகாரி : 81. 
                                                
 காலம் சுருங்கும்வரை அந்நாள் ஏற்படாது. இன்றைய ஒரு வருடம் அன்று ஒரு வாரம் போன்றும், ஒரு வாரம் ஒரு நாள் போன்றும், ஒரு நாள் ஒரு மணி நேரம் போன்றும், ஒரு மணி நேரம் ஒரு வினாடி போன்றும் மாறிவிடும். 

 அறிவிப்பாளர்: சயது இப்னு சயீத் அல் அன்சாரி (ரலி) 
 நூல்: சுனனுத் திர்மிதி - 2332 
                                                

 - உஸ்தாத். M. பஷீர் ஃபிர்தௌஸி 
                                                
Previous Post Next Post