நற்செயல்கள் vs நற்குணம்

நற்செயல்கள் வேறு நற்குணம் வேறு. நற்செயல்களென்பது வெளித்தோற்றத்துடன் மட்டுமே தொடர்புடையது. நற்குணம் என்பது உள்ளத்துடன் மட்டுமே தொடர்புடையது. நற்குணம் இல்லையெனில் நற்செயல்கள் அனைத்துமே அழிந்துவிடும். எனவேதான் நற்செயல்களில் உச்சியைத் தொட்ட பெண்ணொருத்தி ஒரு பூனையைக் கட்டிவைத்து கொடுமைபடுத்தியதற்காக 'அவள் நரகத்திற்குரியவள்' என்றார்கள் முஹம்மத் ﷺ. 

நற்செயல்களைப் போல் நற்குணத்திற்கு எப்போதும் முகமூடி போட முடியாது. நற்செயல்களைப் போல் பார்க்கும் கண்களுக்கேற்ப நற்குணங்களை மாற்றியமைக்க முடியாது. எதாவது ஒரு புள்ளியில் முகத்திரை கிழிக்கப்பட்டுவிடும். எது உள்ளுள்ளதோ அதுவே எப்போதும், எல்லா இடங்களிலும் வெளிப்படும்.

முஹம்மத் ﷺ கூறினார்கள், "உங்களில் சிறந்தவர் உங்களது குடும்பத்தாரிடம் சிறந்தவராக இருப்பவர்தான்". நற்செயல்கள் எங்கு வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் வெளிப்படலாம். ஆனால், குணம் நற்குணமா இல்லையா என்பது ஒருவர் தனது குடும்பத்திடம்(தாய், தந்தை, மனைவி, கணவன், குழந்தைகள்) நடக்கும் முறையில்தான் அறியவரும். ஏனெனில், தன்னைச் சார்ந்த அவர்களுடன் பெரும்பாலான நேரங்களைக் கழிப்பதால் முகத்திரை அணிந்திருந்தால் சற்று கழற்ற வேண்டிவரும்; நடிக்க முடியாது. 

நற்குணமென்பது இரக்கம், பணிவு, அன்பு, மரியாதை, பெருமையின்மை, அமைதி, தனது இயலாமையை உணர்வது, அனைத்தும் இறைவனால் வந்தது, அனைத்தும் இறைவனுக்கானது என்ற உணர்வு, என்று அனைத்தையும் கொண்டுள்ள ஒரு முழுவடிவம். நற்செயல்களைச் செய்வது எளிது. ஆனால், நற்குணத்தில் முழுமை பெறுவது முஹம்மத் ﷺ அவர்களைத் தவிர வேறு யாருக்கும் இயலாத ஒரு போராட்டமாகவே இருக்கும். அவ்வாறு போராடிக்கொண்டிருப்பதுதான் நாம் நற்குணத்தில் இருப்பதற்கான அடையாளம். 

உனது நற்குணம் சிறிது சறுக்கினாலும் உனது உள்ளம் துடிக்குமானால்; அடுத்தமுறை அதன் வாடைகூட வீசக்கூடாது என்று உள்ளம் உறுதியெடுக்குமானால்; அடுத்தமுறை அந்தத் தவறு தவிர்க்கப்படுமானால், அதுதான் நற்குணம்.  

ஒருவரின் நற்குணத்தை அவரது நற்செயலை வைத்துத் தீர்மானிக்க முடியாது. ஆனால், நற்குணத்தினால் நற்செயல்கள் பல விளையும். 

இவ்வுலகுக்கு புரியும்படி சுருக்கமாய்ச் சொல்ல வேண்டுமெனில், தாயிடம் நல்ல முறையில் நடப்பது குறித்து வாட்ஸப்பில் ஸ்டேட்டஸ் வைக்கும் போது தாயிடம் இருந்து மறைத்து(Hide) வைக்காமலும், தந்தையைப் பற்றியச் செய்திகளை இடும்போது தந்தையிடம் இருந்து மறைக்காமலும், மனைவி மக்கள் என எந்த ஒரு நபரையும் மறைக்காமல் உனது ஸ்டேட்டஸ் இருக்குமானால் நீ நற்குணத்திலும், சொல்லிலும் செயலிலும் இருமுகமுடையவனாக இல்லாமலும் இருக்கிறாய். 

இதில்  ஸ்டேட்டஸ் வைப்பது நற்செயல். அதிலுள்ள நற்குணம் நான் மறைப்பதை(Hide) வைத்து முடிவுசெய்யப்படும். ஆனால், பிறர் பார்வையில் நான் நற்குணமுள்ளவன். அவ்வளவுதான். எப்போது எல்லா இடங்களிலும் நான் சீராகிறேனோ; எனது உள்ளம் சீராகிறதோ அப்போதுதான் என் இறைவனுடைய பார்வையிலும் என்னுடைய பார்வையிலும் நான் நற்குணமுள்ளவன். 

~ முஹய்யுத்தீன்
أحدث أقدم