பித்அத் என்றால் என்ன?

- மெளலவி ஏஜிஎம் ஜலீல் மதனி.

நபியவர்கள் ஸஹாபாக்களுக்கு கற்றுத்தராத மார்க்க விடயம் ஒன்றை இபாதத் வணக்கம் என்ற பெயரில் நன்மை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் யாராவது செய்தால் அதற்கு நூதன அனுஷ்டானம் -பித்அத் எனப்படும். 
இவ்வரைவிலக்கணத்தின் ஒவ்வொரு சொல்லும் கூர்ந்து கவனிக்கத்தக்கது.
 
1-நபிகள் கற்றுத்தராதது.
2- மார்க்க விடயத்தில் சம்பந்தப்பட்டது. 
3-இபாதத் வணக்கம் என்ற பெயரில் செய்யப்படுவது.
4-நன்மை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் செய்யப்படுவது...

சிலர் பித்அத்துக்களை , சிர்க் சார் விடயங்களை நியாயப்படுத்த முன்வைக்கும் வாதம் யாதெனில் நபியவர்கள் செய்யாததெல்லாம் சிர்க் என்றால் நபியவர்கள் கார் ஒடவில்லையே! கரண்ட் பாவிக்க வில்லையே! மைக்கில் பேசவில்லையே! ஆகவே அவையெல்லாம் பித்அத்தா? சிர்க்கா? எடுத்ததற்கெல்லாம் சிர்க் என்கின்றார்கள். சறுக்கி விழுந்தாலும் சிர்க்காம்.. முறுக்கு  உண்டாலும் சிர்க்காம் அப்படியெனில் அவர்கள் ரொட்டியை உண்டு  ஒட்டகத்தில் பயணித்து குப்பிவிளக்கு வெளிச்சத்தில் வாழ வேண்டியதுதான் என்று கூறுவர்.  

இதற்கு பதில்  இவை மார்க்க விடயம் சம்பந்தப்பட்டதல்ல . நன்மை கிடைக்கும் நம்பிக்கையில் செய்யப்பட்டதுமல்ல என்பதைக் கவனிக்க வேண்டும். 

மற்றும்  சிலர் இப்படி வாதிடுவர்..  கூட்டு ஸக்காத் ஆகும் கூட்டு உழ்ஹிய்யா ஆகும், கூட்டு நிகாஹ் ஆகும் அப்படியெனில் ஏன் கூட்டு திக்ர் கூடாது? கூட்டு துஆ  கூடாது என்று வினவுகின்றனர். 

மற்றும் சில உலமாக்கள் நபியவர்கள் ஐங்காலத் தொழுகையின்பின் கூட்டாக துஆ ஓத வில்லைதான் . கூட்டாக திக்ர் செய்ய வில்லைதான்.  ஆனால் இவை காலாதி காலமாக  நடந்து வருவது .. அதனால் அதைச் செய்வதில் தவறில்லை. அப்படியெனில் இவ்வளவு காலமும் இதைச் செய்து வந்த அறிஞர்கள் மார்க்கம் தெரியாதவர்களா?  அதைச் செய்த மக்கள் பாவிகளா? உங்கள் பார்வையில் நாங்கள் பித்அத் வாதிகளா? என்று வினவுகின்றனர். 

இவர்களுக்கு பித்அத் பற்றிய சரியான தெளிவூட்டல் செய்யாதது தமது தவறும்தான்....

 இதற்காக இவர்கள் சமர்ப்பிக்கும் ஆதாரம் பின்வரும் சட்ட விதியாகும்.     الأصل بقاء ما كان على ما كان
அதாவது நீண்ட காலமாக இடம்பெற்று வந்த ஒருவிடயம் பற்றிய மார்க்க நிலைப்பாடொன்று தெளிவாக இல்லாத போது  அது தொட்டு தொட்டு இருந்துவருவதே அது ஆகுமென்பதற்கான  ஆதாரமாகம் எனக் கொள்ளலாம்  என்பது இதன் கருத்து.  

இச்சட்டம் சரியே! ஆனால் இதை இங்கு ஆதாரமாக்குவதுதான்  பொருத்தமற்றதாகும். ஏனெனில் பழைமையை ஆதாரமாகக் கொள்வது ஆகும் என்பது எப்போதெனில்  மார்க்கம் அதுபற்றி எதுவும் பேசாத போதுதான். மார்க்கம் ஒரு முறையைக் காட்டிருக்க அதை விடுத்து  நீண்டகாலமாகச் செய்யப்பட்டு வந்தமையை யாரும் ஆதாரமாகக் கொள்ள முடியாது. அல்லாஹ்வை மாத்திரம் வணங்க வேண்டுமென நபிகளார் மக்களை அழைத்தபோது எமது மூதாதையர் காலாகாலமாக வணங்கிய சிலைகளையே நாங்கள் வணங்குவோமென அவர்கள் பதிலளித்த வேளை அல்லாஹ் அவர்களுக்கு இப்படிச் சொல்கின்றான்..  
உங்கள் மூதாதையினர் புரியாமல் தவறாகச் செய்து வழிதவறிச் சென்றிருந்தாலும் அவர்களைப் பின்பற்றுவீர்களா ? என்று எச்சரிக்கின்றான்.

கூட்டுப் பிரார்த்தனை,  கூட்டு திக்ர்மஜ்லிஸ் போன்றவற்றை கூட்டாக நடத்துவதானது கூட்டு ஸக்காத் , கூட்டு உள்ஹிய்யா   கொடுப்பது போன்றதல்ல! 

துஆ திக்ர்கள் கலப்பற்ற இபாதத் عبادة محضة ஸக்காத் உள்ஹிய்யா போன்றவை عبادة غير محضة பொதுவான இபாதத் என்றும் சொல்லப்படும் . இரண்டுக்குமான   வேறுபாடு யாதெனில்     தொழுகை துஆ திக்ர் போன்றவற்றை  அவர்கள்தான் தமக்காக நிறைவேற்ற வேண்டும். ஸக்காத் உழ்ஹிய்யா போன்றவற்றை யாரும் இன்னொருவருக்காக  நிறைவேற்றலாம். இன்னொரு வகையில் விளக்குவதாயின் தொழுகை துஆ திக்ர் போன்றவை செய்யப்படும் முறை விபரிக்கப்பட்ட இபாதத். இதில் எந்த மாற்றத்துக்கும் இடமில்லை. ஸக்காத் உள்ஹிய்யா போன்றவை நிய்யத் வைப்பதே இபாதத்  . நிறைவேற்ற வேறொருவரை பொறுப்பாக முடியும். 
இந்த வேறுபாடுகளை புரியாமல் சிலர் துஆ ஓதுவது இபாதத்தானே! அதை தனியாகச் செய்தால் என்ன? கூட்டாகச் செய்தால் என்ன? என்று குழம்புகின்றனர்.

 நபித்தோழர் இப்னு மஸ்ஊத்( றழி) அவர்களின்  காலத்தில் இடம்பெற்ற ஒரு சம்பவம் இது எவ்வளவு பெரிய தவறென்பதை நன்கு தெளிவுபடுத்துகின்றது.

 ஒருமுறை இப்னு மஸ்ஊத்(றழி ) அவர்களிடம் ஒருவர் ஓடோடி வந்து பக்கத்திலுள்ள மஸ்ஜிதொன்றில் சிலர் ஒன்றுசேர்ந்து நபியவர்களின் காலத்தில் நாம் கண்டிராத வித்தியாசமான முறையில் திக்ர் செய்கின்றார்கள். அதை நீங்கள் வந்து பார்த்துவிட்டு அதுபற்றிச் சொல்லுங்கள் என்றார். உடனே அவ்விடத்தை நோக்கி புறப்பட்ட இப்னுமஸ்ஊத் (றழி) அவர்கள் மஸ்ஜிதுக்குள் சென்று பார்த்தபோது அங்கு ஒருவர் கூட்டத்தின் நடுவில் அமர்ந்திருக்க ஏனையோர் அவரைச்சுற்றியிருக்க   திக்ர் மஜ்லிஸை நடத்தினார். நூறு தடவை ஸுப்ஹானல்லாஹ் கூறுங்கள் என்றுகூற அவர்களும் ஒரேகுரலில் சத்தமிட்டு திக்ர் செய்தனர். இதைக்கண்ட நபித்தோழர் இப்னுமஸ்ஊத் அவர்கள் நிறுத்துங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றீகள்? என வினவ நாங்கள்   கூட்டாக திக்ர் செய்து அதைக் கற்களால் கணக்கிடுகின்றோம் என பதிலளித்தனர்.  நீங்கள்  செய்யும் செயலால் கிடைக்கவிருக்கும் பாவங்களை எண்ணுங்கள்...  ஏன் இவ்வளவு விரைவாக வழிகேட்டின் பக்கம் போகின்றீர்கள்?? ..
இதோ நபிகளாருடன் இருந்த தோழர்கள் நிறைவாக எம்மத்தியில் வாழ.. நபிகள் பாவித்த ஆடை இற்றுத் போகக்கூட இல்லை. அவர்கள் பாவித்த பாத்திரங்கள் கூட உடைந்திடாமல்  இருக்கும் நிலையில் நபிவழிக்கு மாற்றமாக நடக்க ஆரம்பித்து விட்டீர்களே! என்று எச்சரித்தார்கள் . 

அதற்கவர்கள் நாங்கள் நல்லதைத்தானே செய்கின்றோம்.திக்ர் செய்வது தவறா? என்று வாதிட்டனர். அதற்கு இப்னுமஸ்ஊத் அவர்கள் நன்மை-நல்லது என்று நினைத்துக் கொண்டு செய்யும் அதிகமானோர் நல்லதைச் செய்வதில்லை. அப்படித்தான் நீங்களும் ... என்று கூறி அவர்களை மஸ்ஜிதை விட்டு வெளியேற்றுமாறு கட்டளையிட அவ்வாறே வெளியேற்றப்பட்டனர். 

இச்செய்தியை அறிவிக்கும் அறிவிப்பாளர் கூறுகிறார். இப்னு மஸ்ஊத் (றழி)யின் எச்சரிக்கையையும் மீறி வேறோர் இடத்தில் இவ்வாறு திக்ர் நடத்திய அவர்களில் அதிகமானோர் பின்னாளில் நஹர்வான் போரில் கலீபா அலி(றழி) க்கு எதிராகப் போராடிய கவாரிஜ் கூட்டத்தோடு சேர்ந்து  தங்களது மோசமான முடிவைத் தேடிக் கொண்டார்கள்.
ஆதாரம் ஸுனன் தாரமி 210 . 

பித்அத்தின் இறுதி முடிவு மார்க்கத்தில் வழிதவறலில் கொண்டு சேர்க்கும் என்பதற்கு இச்சம்பவம் நல்லது பாடமாகும்.
أحدث أقدم