நபி வழியில் நம் பெருநாள்

அல்லாஹுத்தஆலா எங்களுக்கு ஏற்படுத்திய அருட்கொடைகளில் ஒன்றே இரு பெருநாள் தினங்களாகும். அந்த இரு பெருநாட்களும் நோன்புப் பெருநாளும் ஹஜ்ஜுப் பெருநாளுமாகும். மிக முக்கியமான இரு வணக்கங்களுடன் இப்பெருநாட்கள் தொடர்பு கொண்டுள்ளன.நோன்புப் பெருநாள் கடமையான நோன்புக்குப் பின் கொண்டாடப்பட வேண்டிய ஒரு பெருநாள் தினமாகும். ஹஜ்ஜுப் பெருநாள் ஹஜ் வணக்கத்தை மையமாக வைத்து கொண்டாடப்பட வேண்டிய ஒரு பெருநாள் தினமாகும்.

இப்பெருநாள் தினங்களில் ஒரு முஸ்லிம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கையில் சிறந்த வழிகாட்டல் உள்ளது. அந்த வழிகாட்டல்களை அதிகமானோர் தெரியாமல் இருக்கின்றனர். ஆகவே, பின்வரக்கூடிய ஒழுங்கு முறைகளை நாம் எமது பெருநாள் தினங்களில் கடைபிடித்து நன்மைகளை அதிகரிக்க முயற்சி எடுக்க வேண்டும்.

1. பெருநாள் தினத்தில் தொழுகைக்கு முன் குளிப்பது விரும்பத்தக்கதாகும்.

அஷ்ஷெய்ஹ் பின் பாஸ் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் இந்த விடயத்தில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களைத் தொட்டும் எந்தவொரு ஸஹீஹான ஹதீஸும் இடம்பெறவில்லை எனக் கூறியள்ளார்கள்.

ஆனால், ஸஹாபாக்களின் வழிகாட்டலில் பெருநாள் தினத்தில் குளிப்பதற்கு ஆதாரம் உள்ளது. அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழியல்லாஹு அன்ஹுமா) அவர்கள் பெருநாள் தொழுகைக்குப் புறப்படுவதிற்கு முன்பு குளிக்கக்கூடியவர்களாக இருந்தார்கள் என நாபிஉ என்பவர் கூறினார். (முஅத்தா)

ஸஈத் இப்னுல் முஸய்யப் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறினார்கள்: நோன்புப் பெருநாளின் சுன்னத்கள் மூன்றாகும்: (அவை) தொழுகைக்கு நடந்து செல்வதும் வெளியேற முன் சாப்பிடுவதும் குளிப்பதுமாகும். (பிர்யாபீ) இதன் அறிவிப்பாளர் வரிசை சரியானதாகும் என அஷ்ஷெய்ஹ் அல்பானீ (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

ஆகவே, பெருநாளுக்காக குளித்துக் கொள்வது விரும்பத்தக்கது என்பதை ஸஹாபாக்களின் வழிமுறை அறிவிக்கின்றது.

2. தொழுகைக்குச் செல்ல முன் நறுமணம் பூசுவது விரும்பத்தக்கதாகும்.

பொதுவாக ஜும்ஆவுக்காக புறப்படுவதற்கு முன் நறுமணம் பூசலாம் என்பதற்கு ஆதாரம் உண்டு. அதனை ஆதாரமாக வைத்து அறிஞர்கள் பெருநாள் தினத்திலும் நறுமணம் பூசலாம் எனக் கூறுகின்றார்கள்.

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஜும்ஆத்தினமன்று கூறினார்கள்: நிச்சயமாக இது முஸ்லிம்களுக்கு அல்லாஹ் ஏற்படுத்திய பெருநாள் தினமாகும். எனவே, யார் ஜும்ஆவுக்காக வருகிறாரோ அவர் குளித்துக்கொள்ளட்டும். நறுமணம் இருந்தால் அதை அவர் தொட்டுக்கொள்ளட்டும். (ஸஹீஹ் சுனன் இப்னுமாஜா)

3. ஆடைகளில் சிறந்த ஆடையை அணிதல்.

இப்னு உமர் (ரழியல்லாஹு அன்ஹுமா) அவர்கள் அறிவிக்கின்றார்கள். உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் சந்தையில் விற்பனை செய்யப்படும் கனத்த பட்டினாலான ஒரு ஜுப்பாவை எடுத்து நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! இதனை நீங்கள் வாங்கி பெருநாளுக்காகவும் தூதுக்குழுக்களின் வருகையின் போதும் அழகுபடுத்திக் கொள்ளுங்கள் எனக் கூறினார்கள். அதற்கு அவர்கள் இது மறுமையில் எந்தப்பங்கும் இல்லாதவர்களின் ஆடையாகும் எனக் கூறினார்கள். (புஹாரீ, முஸ்லிம்)

இமாம் இப்னு குதாமா (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறும்போது: அவர்களிடத்தில் இந்த இடங்களில்; அழகுபடுத்திக் கொள்வது பிரபல்யமான ஒரு விடயமாக இருந்திருக்கின்றது என்பதை (இந்த ஹதீஸ்) அறிவிக்கிறது என்கிறார்கள்.

இமாம் மாலிக் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: அறிஞர்கள் ஒவ்வொரு பெருநாள் தினத்திலும் நறுமணம் பூசுவது, அலங்கரிப்பது விரும்பத்தக்கது எனக் கூறுவதை நான் செவிமடுத்துள்ளேன். இவ்வாறு செய்வது இமாமுக்கு மிக ஏற்றமானதாகும். ஏனென்றால் அவர் தான் பார்க்கப்படக்கூடியவராக இருக்கின்றார்.

4. நோன்புப் பெருநாள் தினத்தில் சாப்பிட்ட பின்பு தொழச் செல்லலும் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் தொழுத பின்பும் சாப்பிடுவதும்.

புரைதா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கின்றார்கள். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சாப்பிடும் வரை நோன்புப் பெருநாள் தொழுகைக்குப் புறப்படமாட்டார்கள். ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகையைத் தொழும் வரை சாப்பிடமாட்டார்கள். (ஸஹீஹ் அத்திர்மிதீ) இதற்கு இமாம் இப்னு குதாமா (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் பின்வருமாறு காரணம் கூறுகின்றார்கள்: நோன்புப்பெருநாள் தினத்தில் உடனடியாக சாப்பிடுவதற்கு காரணம் என்னவென்றால் கட்டாயமான நோன்புக்குப் பின் நோன்புப் பெருநாள் தினத்தில் நோன்பு நோற்பது ஹராமாகும். எனவே, அல்லாஹ்வுக்கு வழிப்படுவதின்பால் விரைந்து வழமைக்கு மாறாக நோன்பை விடும் விடயத்தில் அவனுடைய கட்டளைக்கு அடிபணிந்தவர்களாக அவசரமாக சாப்பிடுவது விரும்பத்தக்கதாகும். ஹஜ்ஜுப்பெருநாள் தினம் இதற்கு மாற்றமானதாகும். ஏனெனில், ஹஜ்ஜுப்பெருநாள் தினத்தில் உழ்ஹிய்யா கொடுப்பதும் அதிலிருந்து சாப்பிடுவதும் மார்க்கத்தில் உள்ளது. எனவே, அதிலிருந்து அவர் சாப்பிடுவது விரும்பத்தக்கதாகியது.

5. தொழுகைக்கு நடந்து செல்லல்.

ஸஃத் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கின்றார்கள். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பெருநாள் திடலுக்கு நடந்து செல்லக்கூடியவர்களாக இருந்தார்கள். (ஸஹீஹ் இப்னுமாஜா)

இமாம் இப்னு குதாமா (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: இவ்வாறு நடந்து செல்வதை விரும்பத்தக்க ஒரு செயலாகக் கருதியவர்களில் உமர் இப்னு அப்தில் அஸீஸ், அந்நஹஈ, அஸ்ஸவ்ரீ, அஷ்ஷாபிஈ போன்றவர்கள் உள்ளடங்குவர்கள்.

6. தொழுகைக்குச் செல்லும் போது ஒரு வழியாலும் திரும்பி வரும் போது வேறுரொரு வழியாலும் செல்லல்.

ஜாபிர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கின்றார்கள். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பெருநாள் தினமாக இருந்தால் பாதையை மாற்றிச் செல்வார்கள். (புஹாரீ)

ஏன் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இவ்வாறு பாதையை மாற்றிச் சென்றார்கள் என்பதற்கு அறிஞர்கள் பல காரணங்களைக் கூறுகின்றார்கள்.

1. இரு பாதைகளும் அவருக்கு சாட்சி கூறுவதற்காக.

2. இரு பாதைகளிலும் உள்ள மனிதர்கள், ஜின்கள் அவருக்கு சாட்சி கூறுவதற்காக.

3. இஸ்லாத்தின் அடையாளங்களை இரு பாதைகளிலும் வெளிப்படுத்துவதற்காக.

4. அல்லாஹ்வின் ஞாபகத்தை வெளிப்படுத்துவதற்காக.

5. இஸ்லாத்தின் எதிரிகளைக் கோபமூட்டுவதற்காக.

6. இரு பாதைகளிலும் உள்ளவர்கள் மீது மகிழ்ச்சியை நுழைவிப்பதற்காக.

7. உறவினர்களை சந்தித்து அவர்களுடன் உறவைப் பேணிக்கொள்வதற்காக.
இமாம் இப்னுல் கைய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் மேலே குறிப்பிடப்பட்ட அனைத்துக் காரணங்களையும் சரி கண்டுள்ளார்கள்.

7. பெருநாள் திடலை அடையும் வரை பாதையில் சத்தத்தை உயர்த்தி தக்பீர் கூறுதல்.

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் திடலை அடையும் வரை தக்பீத் கூறியவர்களாக வெளியேறுவார்கள். (இப்னு அபீஷைபா)

இந்த ஹதீஸை இதன் கருத்தில் வரக்கூடிய ஏனைய ஹதீஸ்களை வைத்து அல்பானீ (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் ஸஹீஹ் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

இமாம் இப்னு குதாமா (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: பெருநாள் தினத்தில் பாதையில் தக்பீர் கூறலாம். தக்பீரைக் கொண்டு அவருடைய சத்தம் உயர்த்தப்படவும் வேண்டும்.

இமாம் அஹ்மத் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறுகின்றார்கள் :தன்னுடைய வீட்டிலிருந்து ஒருவர் வெளியாகினால் திடலை அடையும் வரை அவர் சத்தமாக தக்பீர் கூறலாம்.

8. பெருநாள் தொழுகை திடலில் நடாத்தப்படுவதே நபிவழியாகும்.

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஒரு தேவை ஏற்படும் போதே தவிர பெருநாள் தொழுகையை பள்ளிவாசலில் தொழவில்லை.

அபூஸஈத் அல்குத்ரீ (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கின்றார்கள். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நோன்புப் பெருநாள் தினத்திலும் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்திலும் திடலுக்கு வெளியேறுவார்கள். அவர்கள் ஆரம்பிக்கின்ற முதலாவது விடயம் தொழுகையாகும். (புஹாரீ, முஸ்லிம்)

இப்னுல் ஹாஜ் அல்மாலிகீ என்ற அறிஞர் கூறுகின்றார்;;: இரு பெருநாட்களிலும் கடந்து சென்ற சுன்னா அவைகள் திடலில் தொழப்படுவதாகும். ஏனென்றால், நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியுள்ளார்கள்: இந்த என்னுடைய பள்ளிவாசலில் தொழப்படும் ஒரு தொழுகை மஸ்ஜிதுல் ஹராமைத்தவிர ஏனைய பள்ளிவாசல்களில் ஆயிரம் தொழுகையைவிட சிறந்ததாகும். (புஹாரீ, முஸ்லிம்) இந்த மகத்தான சிறப்பு இருந்தும் கூட அவர் அப்பள்ளியைவிட்டு திடலுக்கு வெளியாகியுள்ளார்.

9. பெருநாள் தினத்தில் வாழ்த்துக்கூறுவது ஸஹாபாக்களின் வழிமுறையாகும்.

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் தோழர்கள் பெருநாள் தினத்தில் ஒருவரையொருவர் சந்தித்தால் அவர்களில் சிலர் சிலருக்கு தகப்பலல்லாஹு மின்னா வமின்க என்று சொல்லக்கூடியவர்களாக இருந்தார்கள்.

முஹம்மத் இப்னு ஸியாத் என்பவர் கூறுகிறார்: நான் அபூஉமாமா அல்பாஹிலீ போன்ற ஒரு சில நபித்தோழர்களுடன் இருந்தேன். பெருநாள் திடலிலிருந்து திரும்பினால் அவர்களில் சிலர் சிலருக்கு தகப்பலல்லாஹு மின்னா வமின்க என்று கூறக்கூடியவர்களாக இருந்தார்கள். இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசை சிறந்ததாகும் என்று இமாம் அஹ்மத் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அலீ இப்னு சாபித் என்பவர் கூறுகிறார்: நான் மாலிக் இப்னு அனஸ் அவர்களிடம் 35 வருடங்களுக்கு முன் (இதைப்பற்றி) கேட்டேன். அதற்கு அவர் இந்த விடயம் மதீனாவில் அறியப்பட்ட விடயமாகவே இருந்து வந்தது என அவர் கூறினார்.

10. நோன்புப் பெருநாள் தொழுகை சற்று தாமதித்தும் ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகை நேரகாலத்துடனும் தொழப்பட வேண்டும்.

சூரியன் ஓர் ஈட்டி முனையளவு உயர்ந்த நேரத்தில் ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகையும் இரு ஈட்டியளவு உயர்ந்த நேரத்தில் நோன்புப் பெருநாள் தொழுகையும் தொழப்பட வேண்டும்.

இச்செய்தியை அறிவிக்கக்கூடிய ஹதீஸ்களின் தரங்கள் பலவீனமானவையாகும். என்றாலும் இவ்வாறு தான் தொழப்பட வேண்டும் என அறிஞர்கள் கூறியுள்ளார்கள். அதற்கான காரணங்களையும் அவர்கள் கூறியுள்ளார்கள்.

இமாம் இப்னு குதாமா (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: உழ்ஹிய்யா கொடுக்கும் நேரம் விசாலமாக இருப்பதற்காக வேண்டி ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையை முற்படுத்துவது சுன்னாவாகும். ஸதகதுல் பித்ரை வெளியாக்கும் நேரம் விசாலமாக இருப்பதற்காக வேண்டி நோன்புப் பெருநாள் தொழுகையை பிற்படுத்துவது சுன்னாவாகும்.

அஷ்ஷெய்ஹ் இப்னு உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: ஏனென்றால், ஸதகதுல் பித்ரை வெளியாக்கும் நேரம் விசாலமாக இருப்பதற்காக வேண்டி நோன்புப் பெருநாள் தொழுகையில் நீண்ட நேரத்தின்பால் மனிதர்கள் தேவையுடையவர்களாக இருக்கின்றார்கள். ஏனென்றால், ஸதகதுல் பித்ர் வெளியாக்கப்படும் சிறந்த நேரம் தொழுகைக்கு முன் பெருநாள் தினத்தின் காலைப்பொழுதாகும். ஏனென்றால், இப்னு உமர் (ரழியல்லாஹு அன்ஹுமா) அவர்களின் ஹதீஸில் இடம்பெற்றுள்ளதாவது, நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மனிதர்கள் தொழுகைக்கு வெளியேற முன் அது நிறைவேற்றப்படுவதற்கு ஏவினார்கள். (புஹாரீ, முஸ்லிம்)

தொழும் நேரம் நீண்டு அது பிந்தினால் அது மனிதர்களுக்கு மிக விசாலமாக இருக்கும் என்பது அறியப்பட்டவிடயமே. ஆனால், ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் உழ்ஹிய்யாவை விரைந்து கொடுப்பதே ஆகுமாக்கப்பட்ட ஒன்றாகும். ஏனென்றால், உழ்ஹிய்யா கொடுப்பது இஸ்லாத்தின் அடையாளங்களில் ஒன்றாகும். அல்லாஹ் அவனுடைய வேதத்தில் அதனைத் தொழுகையுடன் சேர்த்துக் கூறியுள்ளான். உமது இறைவனுக்காக தொழுது மேலும் நீ அறுத்துப் பலியிடுவீராக என அவன் கூறியுள்ளான். மேலும், அல்லாஹுத்தஆலா கூறியுள்ளான்: நபியே! நீர் கூறுவவீராக! நிச்சயமாக என்னுடைய தொழுகையும் அறுத்துப்பலியிடலும் நான் வாழ்வதும் மரணிப்பதும் அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கேயாகும். எனவே, இத்தினத்தில் அதை விரைந்து கொடுப்பது மிகச் சிறந்ததாகும். தொழுகை முற்படுத்தப்பட்டாலே இந்த விடயம் நடைபெற முடியும். ஏனெனில், தொழுகைக்கு முன் உழ்ஹிய்யா கொடுக்க முடியாது. (அஷ்ஷரஹுல் மும்திஇ)

எனவே, அன்பார்ந்த வாசகர் நெஞ்சங்களே! நாம் மேற்குறிப்பிட்ட விடயங்களைக் கருத்திற்கொண்டு புனித ஹஜ்ஜுத் திருநாளை அமைத்திட எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

by: ASKI IBNU SHAMSIL ABDEEN
أحدث أقدم