~அ(z)ஸ்ஹான் ஹனீபா~
சகோதரத்துவ இயக்கத்தினர் மற்றும் ஜமாஅதுல் இஸ்லாமியினர் தமக்கெதிரானவர்களது வாயை அடைக்க உபயோகப்படுத்தும் வார்த்தைகளே " நீங்கள் முதலில் பிக்ஹுல் அவ்லவிய்யாத், பிக்ஹுல் அகல்லியாத் மற்றும் மகாஸிதுஷ் ஷரீஆவைப் படிங்க பிறகு எங்களோட பேசுங்க" என்பவையாகும்.
மேற்குறித்த மூன்று பகுதியை கூறுபவர்கள் தமது இயக்கத்திற்கு ஏற்றால் போல் கற்றதினால் அதற்கேற்ற வகையில் இம்மூன்றையும் வளைவு நெளிவுடன் நோக்கியதால் வந்த விளைவே "மார்க்கத்தில் யாவும் கூடும்" எனும் நிலைப்பாடாகும். ஆதலால் மார்க்கத்தில் தடையானவற்றையும் தடையில்லாத வகையில் சுய சிந்தனைகளை உட்புகுத்தி மாற்றியமைப்பதை நன்றாக அவதானிக்க முடிகின்றது.
உதாரணமாக அந்நிய பெண்கள் ஆண்களுடன் முஸாபஹா செய்தல் (கைலாகு கொடுத்தல்), கரண்டைக்கு கீழ் ஆடையணிதல் போன்றவற்றை எடுத்துக்காட்டாக குறிப்பிடலாம். இவையல்லாத இன்னோரன்ன விடயங்களை மேற்குறித்த மூன்று பாடப்பகுதிகளை வைத்து திசை திருப்பி இருக்கின்ற சட்டதிட்டங்களை தமது இயக்கத்திற்கு ஏற்றவகையில் மாற்றியமைப்பது இறைவனது மார்க்கதில் யூதர்கள் மாற்றத்தை ஏற்படுத்திய தரம் குறைந்த நிலைக்குத்தான் நிச்சயம் கொண்டு சென்றுவிடும்.
கற்றறிந்த ஒரு நளீமிய்யா மாணவன் யூஸுப் கர்ளாவியை பெண்ணுடன் முஸாபஹா செய்வதற்கு ஆதாரம் காட்டுகின்றளவு நபியின் செயற்கள், ஹதீஸ்கள் புறந்தள்ளப்பட்டு இயக்க வெறி ஊடுருவியிருப்பதானது சத்தியத்தை விளங்குவதற்கு தடைக்கல்லாக அமைந்திருப்பதை கோடிட்டுக்காட்டுகிறது. இயக்கத்திற்காக சட்டங்கள் மாற்றப்பட்டு சத்தியங்கள் மறைக்கப்பட்டு நவீன சிந்தனையாளர்கள் என்று தோன்றிய ஒரு சில மனிதரது சிந்தனைகளும், சித்தாந்தங்களும், கருத்துகளுமே இஸ்லாம் என்ற பெயரில் தலைவிரித்தாடுவதோடு முன்னிலைப்படுத்தப்பட்டு திணிக்கப்படுகின்றன என்பதே நிதர்சனமாகும்.
ஆரம்ப பந்தியில் குறித்துகாட்டிய மூன்று பாடங்களை சரியாக உரிய முறையில் தெளிவாக கற்ற யாரும் மார்க்கத்தின் தனித்துவத்தை விட்டுக்கொடுக்காது முழு மூச்சாக பாடுபடுவதோடு பெரும்பான்மை சிறுபான்மை என்ற போர்வையில் மார்க்கத்தை விற்கமாட்டார் அத்தோடு அதற்கு விலையும் போகமாட்டார் என்பதும் நிச்சயமாகும். ஆதலால் மார்க்க சட்டதிட்டங்களை ஸலப் மன்ஹஜுக்குட்படுத்தி கற்க வேண்டுமே தவிர தற்காலத்தில் தோன்றிய இயக்கங்களின் போக்குக்கு ஏற்றவகையில் கற்பது முற்றிலும் தவறாகும், இவ்வியக்க கோட்பாடுகளின் அடிப்படையில் கற்கின்ற பொழுது மூளைச் சலவை செய்யப்படுவதோடு மனித சிந்தனை ஆதிக்கத்திற்கு உட்படுத்தப்படும் நிலைக்குத் தள்ளப்படுவதுமே யதார்த்தமாகும்.
ஆக, வல்லவன் அல்லாஹ் அனைவரையும் இறுதி மூச்சு வரை நேரான வழியில் இட்டுச் செல்வானாக! ஆமீன்
நட்புடன்
அ(z)ஸ்ஹான் ஹனீபா