எழுதியவர்: முஜாஹித் இப்னு ரஸீன்
ஜின்கள் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது என்பதை இப்பகுதியில் சற்று விரிவாகப் பார்ப்போம்.. ஜின் தொடர்பாக இஸ்லாம் என்ன சொல்கிறது என்ற இத்தலைப்பை இரு வகையாகப் பிரிக்கலாம். சில படைப்புக்களை நமது உடலுக்குள் நுழையும் தன்மை கொண்டதாக அல்லாஹ் படைத்துள்ளான். நுண்ணுயிர்களான கிருமிகள், புழுக்கள் போன்றவற்றை இதற்கு உதாரணமாகக் கூறலாம். சில படைப்புக்களை நமது உடலில் பட்டுத் திரும்பும் தன்மை கொண்டதாக அல்லாஹ் படைத்துள்ளான். பல இலத்திரன் கூறுகள் மனித உடலைத் துளையிடுவதாக அறிவியல் கூறுகிறது. இவ்விரு வகைப் படைப்புக்களிலும் ஜின்கள் எவ்வகை சார்ந்தவை என்பதில் அறிஞர்களிடையே பல காலமாகக் கருத்து முரண்பாடு இருந்து வந்துள்ளது. இது தனியாக ஆய்வு செய்யப்பட வேண்டிய ஒரு பகுதியாகும். என்றாலும் இங்கு நாம் கவனத்தில் கொள்வது ஜின் தொடர்பாக இஸ்லாம் என்ன சொல்கிறது என்ற இரண்டாவது பகுதியையே. அதன் பின் நாம் குறிப்பிட்ட முதல் பகுதியை அலசுவோம்.
‘ஜின்’ என்ற அரபுச்சொல்லுக்கு ‘ஒன்றையும் காண முடியாத இருட்டு’ என்று கருத்துக் கூறலாம். ‘ஜன்னா’ என்ற அரபுச்சொல்லுக்கு ‘சுவனம், தோப்பு’ என்பது அர்த்தமாகும். மரஞ்செடிகளால் அடர்ந்த சோலைக்குள் இருப்பவற்றைக் காண முடியாது அதனாலேயே அரபு மொழியில் தோப்பு இவ்வாறு அழைக்கப்படுகிறது. இவ்வாறுதான் கருவிலிருக்கும் சிசுவுக்கும் அரபு மொழியில் ‘ஜனீன்’ என்று அழைக்கப்படுகிறது. வெளியிலிருந்து காண முடியாதளவு அது மறைந்திருப்பதாலேயே இவ்வாறு அழைக்கப்படுகிறது. ஓன்றையும் அறியாத நிலையிலிருக்கும் பைத்தியகாரனுக்கு அரபு மொழியில் ‘மஜ்னூன்’ என்றழைப்பதும் இவ்வடிப்படையில்தான். ஆகவே இச்சொற்களனைத்துமே ‘ஜன்ன’ என்ற சொல்லிலிருந்து பிரிந்தவைகளே. இதே கருத்தைக் கொண்டதாக அல்குர்ஆனிலும் இச்சொல் இடம்பெற்றுள்ளது.
இப்றாஹீம் (அலை) அவர்களுடன் தொடர்பான ஒரு விடயத்தை அல்லாஹ் சுட்டிக்காட்டும் போது பின்வருமாறு கூறுகிறான்.
فَلَمَّا جَنَّ عَلَيْهِ اللَّيْلُ رَأَى كَوْكَبًا قَالَ هَذَا رَبِّي فَلَمَّا أَفَلَ قَالَ لَا أُحِبُّ الْآفِلِينَ الأنعام : 76
“இரவு அவரை மூடிக்கொண்ட போது ஒரு நட்சத்திரத்தைக் கண்டு “இதுவே என் இறைவன்” எனக் கூறினார். அது மறைந்த போது “மறைபவற்றை நான் விரும்ப மாட்டேன்” என்றார். (அல்அன்ஆம்:76)
இவ்வசனத்தில் جَنَّ என்ற சொல்லை ‘ஒன்றும் விளங்காமல் போனது’ என்ற கருத்திலேயே குர்ஆன் ஆள்கிறது. பாம்பிற்கு அரபு மொழியில் ‘ஜான்’ என்றழைக்கப்படுகிறது. நமது பார்வையிலிருந்து மிக அவசரமாக மறையக் கூடிய ஆற்றல் அதற்கிருக்கிறது. அதனால்தான் அவ்வாறழைக்கப்படுகிறது. பாம்புக்கு ‘ஜான்’ என்றழைக்கும் பிரயோகம் அல்குர்ஆனிலும் காணப்படுகிறது. ஆகவே ‘ஜின்’ என்றால் கண்ணுக்குப் புலப்படாமல் மாயமாகவே மறையக் கூடியது என்பதுதான் அர்த்தமாகும்.
ஆனால் நம்மில் சிலர் ‘ஜின்’ என்றால் பேய்களைத்தான் குறிக்கிறது என்று நம்பியுள்ளனர். இது முற்றிலும் தவறானதாகும். ஒரு வாதத்திற்கு இதை ஏற்றுக் கொண்டாலும் பேய்கள் எனப்படுபவை மரணித்தவர்களின் ஆவிகள் என்று நம்பப்படுகின்றன. இது இஸ்லாத்துக்கு முற்றிலும் முரணான மூட நம்பிக்கையாகும். பேய், பிசாசு என்றொன்று உலகில் கிடையாது. இந்துக்கள் பேயெனக் கூறுவது ஜின்களைத்தான் என்றும் நம்மில் சிலர் நம்புகின்றனர். இதுவும் தவறாகும். பேய்க்கு அரபியில் ‘ஷபஹ்’ என்பார்கள். இந்த பேய் ஆவி நம்பிக்கை ஆசியாவில் மட்டுமல்ல பல ஐரோப்பிய அமெரிக்க நாடுகளிலும் பரலவாக உள்ளன. குறிப்பாக சொல்வதெனில் 13ம் இலக்கத்தைக் குறிப்பிடலாம். 13ம் திகதியென்றால் அது பொருத்தமில்லாத நாள் என்று பலர் நம்புகிறார்கள். 13ம் இலக்கம் கொண்ட வாகனங்களை வாங்க மறுக்கிறார்கள். மூட நம்பிக்கைகளால் விளைந்ததே இவையாகும். ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள், பெரிய கட்டடத்தொகுதிகள் போன்றவை இந்த மூடநம்பிக்கையின் காரணத்தால் 12 மாடிகளோடு கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 13வது மாடி கட்டப்படுவதில்லை. அமெரிக்கா போன்ற நாடுகளில் 13ம் திகதி வெள்ளிக்கிழமையாக இருந்தால் பெரும் அழிவு ஏற்படும் என்றும் பேய் வெளிப்படும் தினம் என்றும் மக்கள் நம்பியுள்ளனர். இதற்கும் ஜின்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. (பேய் பிசாசு நம்பிக்கையின் தோற்றம் அதன் பரவல் அது பற்றிய இஸ்லாத்தின் பார்வை சம்பந்தமாக தெரிந்து கொள்ள பின்வரும் லின்கில் உள்ள பயானைப் பார்வையிடவும்)இதைப் பற்றி சற்று விரிவாக பின்னர் ஆராய்வோம்.
ஜின்களின் படைப்பு
அல்லாஹ் ஜின்ளைப் பற்றிக் கூறும் போது:
وَخَلَقَ الْجَانَّ مِنْ مَارِجٍ مِنْ نَارٍ الرحمن : 15 தீப்பிழம்பிலிருந்து ஜின்களைப்படைத்தான் (அர்ரஹ்மான் : 15)
மற்றோரிடத்தில் கூறும் போது: وَالْجَانَّ خَلَقْنَاهُ مِنْ قَبْلُ مِنْ نَارِ السَّمُومِ الحجر : 27 கடுமையான வெப்பமுள்ள நெருப்பால் இதற்கு முன் ஜின்னைப் படைத்தோம். (அல் ஹிஜ்ர் : 27)
மனிதர்கள் மண்ணால் படைக்கப்பட்டிருப்பது போல ஜின்கள் நெருப்பால் படைக்கப்பட்டுள்ளார்கள் எனவும் மனிதர்களுக்கு முன்னரே ஜின்கள் படைக்கப்பட்டிருக்கிறார்கள் எனவும் இவ்வசனங்களிலிருந்து தெரிகிறது. எதற்காக ஜின்கள் படைக்கப்பட்டார்கள் என்பதை அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்.
படைப்பின் நோக்கம்
وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنْسَ إِلَّا لِيَعْبُدُونِ الذاريات : 56 ஜின்களையும் மனிதர்களையும் என்னை வணங்குவதற்காகவே தவிர நான் படைக்கவில்லை (அத்தாரியாத் : 56)
ஜின்களையும் மனிதர்களையும் வணங்குவதற்காகத்தான் படைத்தேன் என்பதாக இந்த வசனத்துக்கு சிலர் தப்பாக விளக்கம் சொல்வார்கள். ‘என்னை வணங்குவதற்காகவே படைத்தேன்’ என்று அல்லாஹ் கூறியிருப்பதன் மூலம் அவனை மட்டுமே வணங்க வேண்டும் வேறெவரையும் வணங்கக் கூடாது என்பதைத் தெளிவாக விளங்கலாம். எனவே மனித ஜின் வர்க்கங்களில் நல்லவர் யார் கெட்டவர் யார் எனப் பிரித்தறியவே அல்லாஹ் இவ்விரு கூட்டத்தாரையும் படைத்திருக்கிறான் என்பது இதிலிருந்து தெரிகிறது.
ஜின்கள் மனிதர்கள் போன்று இரு வகையினர்
ஜின்களில் நல்லவர்களுமுள்ளனர் தீயவர்களுமுள்ளனர். காபிர்களுமுள்ளனர். முஸ்லிம்களுமுள்ளனர். இதை ஜின்கள் கூறுவதாகஅல்லாஹ் சூறா ஜின்னிலே கீழ்வருமாறு குறிப்பிடுகிறான்.
وَأَنَّا مِنَّا الْمُسْلِمُونَ وَمِنَّا الْقَاسِطُونَ فَمَنْ أَسْلَمَ فَأُولَئِكَ تَحَرَّوْا رَشَدًا الجن : 14 நம்மில் முஸ்லிம்களும் உள்ளனர். அநீதி இழைத்தோரும் உள்ளனர். இஸ்லாத்தை ஏற்போர் நேர் வழியைத் தேடிக்கொண்டனர். (அல்ஜின் : 14)
ஜின்களில் கெட்டவர்கள் ஷெய்த்தான்களா?
ஜின்களில் கெட்டவர்களே ஷெய்தான்கள். நல்லவர்கள் முஸ்லிம்கள் என்று சிலர் கூறுகிறார்கள். அப்படியாயின் கெட்ட ஜின்கள் இஸ்லாத்தை ஏற்கமாட்டார்களா? என்ற கேள்வியெழுகிறது. ஷெய்தான்கள் இஸ்லாத்தை ஏற்கமாட்டார்கள். நபியவர்கள் அல் குர்ஆன் ஓதியதைக் கேட்டு சில ஜின்கள் இஸ்லாத்தைத் தழுவியது போல கெட்ட ஜின்களும் இஸ்லாத்தை ஏற்கலாம். ஆகவே ஷெய்தான்களே கெட்ட ஜின்கள் என்று கூறமுடியாது. ஷெய்தான்கள் மனித ஜின் இரு கூட்டத்துக்கும் எதிரியாகும். அவனுடைய நோக்கமே இவ்விரு கூட்டத்தையும் வழிகெடுப்பதே என்பதை நாம் மறந்திடலாகாது. நல்ல ஜின்களை ஷெய்தான் வழிகெடுப்பதில்லை. நல்ல மனிதர்களையே அவன் வழிகெடுப்பான் என்று கூறுவது பகுத்தறிவு ரீதியாகக் கூட ஏற்க முடியாததாகும்.
ஷெய்தான்களும் ஜின்களும்
இப்லீஸ் எனப்படும் ஷெய்தானும் அவனுடைய பரம்பரையும் ஜின் இனத்தைச் சேர்ந்தவர்களே. அல்லாஹ் அவனுக்கு மிகப்பெரும் அந்தஸ்தைக் கொடுத்திருந்தான். மலக்குமார்களோடு அவனை வைத்திருந்தான். அல்லாஹ் ஆதம் (அலை) அவர்களுக்கு ஸுஜூது செய்யுமாறு அவனைப் பணித்த போது அவன் அதை மறுத்து சபதமிட்டவனாக அல்லாஹ்விடமிருந்து வெளியேறுகிறான். இங்கே நாம் கவனிக்கவேண்டியது, இந்த இப்லீஸும் இவனைத் தொடர்ந்து வந்தவர்களும் ஷெய்தான்கள் இவர்கள் இஸ்லாத்தை ஏற்கமுடியாது என்பதையே. இதை இல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்.
وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ كَانَ مِنَ الْجِنِّ فَفَسَقَ عَنْ أَمْرِ رَبِّهِ أَفَتَتَّخِذُونَهُ وَذُرِّيَّتَهُ أَوْلِيَاءَ مِنْ دُونِي وَهُمْ لَكُمْ عَدُوٌّ بِئْسَ لِلظَّالِمِينَ بَدَلًا الكهف : 50 ஆதமுக்குப்பணியுங்கள் என்று நாம் வானவர்களுக்குக் கூறியபோது இப்லீஸைத் தவிர அனைவரும் பணிந்தனர். அவன் ஜின் இனத்தைச் சேர்ந்தவனாக இருந்தான். தனது இறைவனின் கட்டளையை மீறினான். என்னையன்றி அவனையும் அவனது சந்ததிகளையும் பொறுப்பாளர்களாக்கிக் கொள்கிறீர்களா? அவர்கள் எங்களுக்கு எதிரிகள். அநீதி இழைத்தோர் பகரமாக்கியது மிகவும் கெட்டது. (அல்கஹ்ப் : 50)
எனவே இப்லீஸ் ஜின் இனத்தைச் சேர்ந்தவன் அவனுடைய பரம்பரைக்கே நாம் ஷெய்தான்கள் என்கிறோம். இவர்கள் யாரும் இஸ்லாத்துக்கு வருவதில்லை. இவர்களின் தொழிலே மனிதர்களையும் ஜின்களையும் வழிகெடுப்பதுதான் என்பதை நாம் புரிந்து கொள்ள வெண்டும்.
ஷெய்தானும் கரீன் என்ற அல்குர்ஆனின் பிரயோகமும்
‘கரீன்’ என்றால் ‘நண்பன்’ என்று கருத்தாகும். இந்த சொல்லை அல்லாஹ் அதிகமாக திருமறையில் கூறியிருப்பதைக் காணமுடிகிறது. ‘கரீன்’ என்ற சொல்லை பெரும்பாலும் கெட்டவர்களுக்கே அல்லாஹ் உபயோகித்துள்ளான். நல்லவர்களுக்கு அல்லாஹ் இதைப் பயன்படுத்தவில்லை. நண்பனுக்கு அரபு மொழியில் ‘ஸதீக்’ , ‘கலீல்’ என்பார்கள். ஆனால் கெட்டவர்களுக்கு ‘கரீன்’ என அல்லாஹ் கூறியுள்ளான். இது அல்குர்ஆனில் பின்வருமாறு இடம் பெற்றுள்ளது.
قَالَ قَرِينُهُ رَبَّنَا مَا أَطْغَيْتُهُ وَلَكِنْ كَانَ فِي ضَلَالٍ بَعِيدٍ ق : 27 எங்கள் இறைவா நான் இவனை வழிகெடுக்கவில்லை. இவனே தொலைவான வழிகேட்டிலிருந்தான். என்று அவனது கூட்டாளி கூறுவான். (காப் : 27)
யாரெல்லாம் மார்க்க்ததைப் புறக்கணித்து வாழ்கிறார்களோ அவர்களுக்கு இன்னும் பல கூட்டாளி ஷெய்தான்களை நாம் ஏற்படுத்திக் கொடுப்போம் எனவும் அல்லாஹ் கூறுகிறான்.
وَمَنْ يَعْشُ عَنْ ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ قَرِينٌ الزخرف : 36 எவர் அளவற்ற அருளாளனின் அறிவுரையைப் புறக்கணிக்கிறாரோ அவருக்கு ஒரு ஷெய்தானைச் சாட்டுவோம். அவன் அவருக்குத் தோழனாவான். (அஸ்ஸுக்ரூப் : 36)
நாளை மறுமையில் இந்த ஷெய்தானைப் பார்த்து இந்த மனிதன் பின்வருமாறு கூறுவான். حَتَّى إِذَا جَاءَنَا قَالَ يَا لَيْتَ بَيْنِي وَبَيْنَكَ بُعْدَ الْمَشْرِقَيْنِ فَبِئْسَ الْقَرِينُ الزخرف : 38 முடிவில் அவன் நம்மிடம் வரும் போது எனக்கும் உனக்கும் இடையே கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடைப்பட்ட தூரம் இருந்திருக்கக் கூடாதா? நீ கெட்ட தோழனாவாய் என்று அவன் கூறுவான். (அஸ்ஸுக்ரூப் : 38)உலகில் அல்லாஹ்வைப் புறக்கணித்து வாழ்வோருக்கு அல்லாஹ் பல ஷெய்தான்களைத் தோழர்களாக்கின்றான் என்பதற்கு இவ்வசனம் சான்றாகிறது.
ஷெய்தான்களின் தோற்றம்
ஷெய்தான்களின் தலை பற்றி அல்லாஹ் கூறும் போது أَذَلِكَ خَيْرٌ نُزُلًا أَمْ شَجَرَةُ الزَّقُّومِ (62) إِنَّا جَعَلْنَاهَا فِتْنَةً لِلظَّالِمِينَ (63) إِنَّهَا شَجَرَةٌ تَخْرُجُ فِي أَصْلِ الْجَحِيمِ (64) طَلْعُهَا كَأَنَّهُ رُءُوسُ الشَّيَاطِينِ الصافات : 62 – 65 இது சிறந்த தங்குமிடமா? அல்லது ஸக்கூம் மரமா? அதை அநீதி இழைத்தோருக்கு சோதனையாக நாம் ஆக்கினோம். அது நரகத்தின் அடிப்பகுதியிலிருந்து வெளிப்படும் மரம். அதனுடைய பாளை ஷெய்தான்களின் தலைகளை போன்றது. (அஸ்ஸாப்பாத் : 62-65) ஷெய்தான்களின் தலை பயங்கரமானது என்பதை இவ்வசனத்தின் மூலம் விளங்க முடிகிறது.
ஷெய்தான்களின் வாழ் நாள்
இப்லீஸுக்கு எந்தளவு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்பது பற்றி அல்லாஹ் கூறும் போது قَالَ مَا مَنَعَكَ أَلَّا تَسْجُدَ إِذْ أَمَرْتُكَ قَالَ أَنَا خَيْرٌ مِنْهُ خَلَقْتَنِي مِنْ نَارٍ وَخَلَقْتَهُ مِنْ طِينٍ (12) قَالَ فَاهْبِطْ مِنْهَا فَمَا يَكُونُ لَكَ أَنْ تَتَكَبَّرَ فِيهَا فَاخْرُجْ إِنَّكَ مِنَ الصَّاغِرِينَ (13) قَالَ أَنْظِرْنِي إِلَى يَوْمِ يُبْعَثُونَ (14) قَالَ إِنَّكَ مِنَ الْمُنْظَرِينَ (15) الأعراف : 12 – 15 நான் உனக்குக் கட்டளையிட்ட போது பணிவதை விட்டும் உன்னைத் தடுத்தது எது? என்று (இறைவன்) கேட்டான். நான் அவரை விடச் சிறந்தவன். என்னை நீ நெருப்பால் படைத்தாய் அவரைக் களி மண்ணால் படைத்தாய் என்று அவன் கூறினான். இங்கிருந்து நீ இறங்கி விடு இங்கே நீ பெருமையடிப்பது தகாது. எனவே வெளியேறு நீ சிறுமையடைந்தவனாவாய். என்று (இறைவன்) கூறினான். அவர்கள் உயிர்ப்பிக்கும் நாள் வரை எனக்கு அவகாசம் அளிப்பாயாக என்று அவன் கேட்டான். நீ அவகாசம் அளிக்கப்பட்டவனாவாய். என்று (இறைவன்) கூறினான். (அல் அஃராப் : 12-15) ஷெய்தான்களால் மறுமை வரைக்கும் வாழ இயலாது. அவர்களுக்கும் மரணமுண்டு. இப்லீஸுடைய பரம்பரைக்கும் அவ்வாறு வாழ முடியாது. அவர்களுக்கும் மரணமுண்டு. இப்லீஸுக்கு மட்டுமே மறுமை வரை வாழ அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்பதை இவ்வசனம் தெளிவுபடுத்துகிறது.
ஷெய்தான்களுக்கு மனிதர்கள் மீதுள்ள அதிகாரம்
நாளை மறுமையில் தன்னை வழிப்பட்டவர்களைப் பார்த்து இப்லீஸ் என்ன கூறுவான் என்பது பற்றி அல்லாஹ் கூறும் போது وَقَالَ الشَّيْطَانُ لَمَّا قُضِيَ الْأَمْرُ إِنَّ اللَّهَ وَعَدَكُمْ وَعْدَ الْحَقِّ وَوَعَدْتُكُمْ فَأَخْلَفْتُكُمْ وَمَا كَانَ لِيَ عَلَيْكُمْ مِنْ سُلْطَانٍ إِلَّا أَنْ دَعَوْتُكُمْ فَاسْتَجَبْتُمْ لِي فَلَا تَلُومُونِي وَلُومُوا أَنْفُسَكُمْ مَا أَنَا بِمُصْرِخِكُمْ وَمَا أَنْتُمْ بِمُصْرِخِيَّ إِنِّي كَفَرْتُ بِمَا أَشْرَكْتُمُونِ مِنْ قَبْلُ إِنَّ الظَّالِمِينَ لَهُمْ عَذَابٌ أَلِيمٌ إبراهيم : 22 அல்லாஹ் உங்களுக்கு உண்மையான வாக்குறுதி அளித்தான். நானும் உங்களுக்கு வாக்குறுதி அளித்து உங்களிடம் வாக்கு மீறி விட்டேன். உங்களை அழைத்தேன். எனது அழைப்பை ஏற்றீர்கள் என்பதைத் தவிர உங்கள் மீது எனக்கு எந்த அதிகாரமும் இல்லை. எனவே என்னைப் பழிக்காதீர்கள். உங்களையே பழித்துக் கொள்ளுங்கள். நான் உங்களைக் காப்பற்றுபவனும் அல்லன். நீங்கள் என்னைக் காப்பாற்றுவோரும் அல்லர். முன்னர் நீங்கள் (இறைவனுக்கு) என்னை இணையாக்கியதை மறுக்கிறேன். என்று தீர்ப்புக் கூறப்பட்டவுடன் ஷெய்தான் கூறுவான். அநீதி இழைத்தோருக்குத் துன்புறுத்தும் வேதனையுண்டு. (இப்றாஹீம் : 22) மனிதர்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் ஷெய்தானுக்கு இல்லை என்பது இவ்வசனத்திலிருந்து தெரிகிறது. அதை ஷெய்தானே தெளிவாகக் கூறியிருப்பதும் இவ்வசனத்திலிருந்து புரிகிறது.
ஷைதானிற்கு வழிப்படும் போது அதிகாரம் உண்டாகும்
ஷெய்தானைப் பார்த்து இவ்வாறு அல்லாஹ் கூறினான் إِنَّ عِبَادِي لَيْسَ لَكَ عَلَيْهِمْ سُلْطَانٌ إِلَّا مَنِ اتَّبَعَكَ مِنَ الْغَاوِينَ الحجر : 42 எனது அடியார்களில் உன்னைப் பின்பற்றிய வழிகேடர்களைத் தவிர மற்றவர்கள் மீது உனக்கு எந்த அதிகாரமும் இல்லை. (அல்ஹிஜ்ர் : 42) ஷெய்தானுக்கு வழிப்பட்டவர்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் அவனுக்குண்டு என்பதை இவ்வசனத்திலிருந்து விளங்கலாம்.
ஷெய்தானின் அதிகாரம் தொடர்பில் அல்லாஹ் மேலும் கூறும் போது إِنَّهُ لَيْسَ لَهُ سُلْطَانٌ عَلَى الَّذِينَ آمَنُوا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ (99) إِنَّمَا سُلْطَانُهُ عَلَى الَّذِينَ يَتَوَلَّوْنَهُ وَالَّذِينَ هُمْ بِهِ مُشْرِكُونَ النحل : 99 ، 100 நம்பிக்கை கொண்டோர் மீதும் தமது இறைவனையே சார்ந்திருப்போர் மீதும் அவனுக்கு அதிகாரம் இல்லை. தன்னைப் பாதுகாப்பாளனாக ஆக்கிக் கொண்டோர் மீதும் இறைவனுக்கு இணை கற்பிப்போர் மீதுமே அவனுக்கு அதிகாரம் உண்டு. (அந்நஹ்ல் : 99-100) மனிதர்கள் சொல்லி ஷெய்தான் கட்டுப்படுவதில்லை. ஷெய்தான் சொல்லியே மனிதர்கள் கட்டுப்படுகின்றனர். எனவே சில விடயங்களைக் கூறி தன்னை வழிப்படுபவர்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் அவனுக்குண்டு என்பது இவ்வசனத்திலிருந்து தெரிகிறது. மேலும் அல்லாஹ் கூறும் போது وَاسْتَفْزِزْ مَنِ اسْتَطَعْتَ مِنْهُمْ بِصَوْتِكَ وَأَجْلِبْ عَلَيْهِمْ بِخَيْلِكَ وَرَجِلِكَ وَشَارِكْهُمْ فِي الْأَمْوَالِ وَالْأَوْلَادِ وَعِدْهُمْ وَمَا يَعِدُهُمُ الشَّيْطَانُ إِلَّا غُرُورًا (64) إِنَّ عِبَادِي لَيْسَ لَكَ عَلَيْهِمْ سُلْطَانٌ وَكَفَى بِرَبِّكَ وَكِيلًا الإسراء : 64 ، 65 உனது குரல் மூலம் அவர்களில் எனக்கு முடிந்தோரை வழிகெடுத்துக் ககொள் உனது குதிரைப்படையையும் காலாட் படையையும் அவர்களுக் கெதிராக ஏவிக் கொள் பொருட் செல்வத்திலும் மக்கள் செல்வத்திலும் அவர்களுடன் நீ கூட்டாளியாகிக் கொள் அவர்களுக்கு வாக்குறுதியும் அளித்துக் கொள் (என்றும் இறைவன் கூறினான்) ஏமாற்றத்தைத் தவிர வேறெதனையும் ஷெய்தான் அவர்களுக்கு வாக்களிப்பதில்லை. எனது நல்லடியார்களில் உனக்கு எந்த அதிகாரமும் இல்லை. உமது இறைவன் பொறுப்பேற்கப் போதுமானவன். (அல் இஸ்ரா : 54-65)
ஷெய்தான் மனிதனை எவ்வாறெல்லாம் வழிகெடுப்பான்
ஷெய்தான் எவ்வாறு மனிதர்களை வழிகெடுப்பான் என்பது பற்றி அல்லாஹ் கூறும் போது لَعَنَهُ اللَّهُ وَقَالَ لَأَتَّخِذَنَّ مِنْ عِبَادِكَ نَصِيبًا مَفْرُوضًا (118) وَلَأُضِلَّنَّهُمْ وَلَأُمَنِّيَنَّهُمْ وَلَآمُرَنَّهُمْ فَلَيُبَتِّكُنَّ آذَانَ الْأَنْعَامِ وَلَآمُرَنَّهُمْ فَلَيُغَيِّرُنَّ خَلْقَ اللَّهِ وَمَنْ يَتَّخِذِ الشَّيْطَانَ وَلِيًّا مِنْ دُونِ اللَّهِ فَقَدْ خَسِرَ خُسْرَانًا مُبِينًا النساء : 118 ، 119 அல்லாஹ் அவனை (ஷெய்தானை) சபித்து விட்டான். உன் அடியார்களில் குறிப்பிட்ட தொகையினரை வென்றெடுப்பேன். அவர்களை வழிகெடுப்பேன். அவர்களுக்குத் (தவறான) ஆசை வார்த்தை கூறுவேன். அவர்களுக்குக் கட்டளையிடுவேன். அவர்கள் கால் நடைகளின் காதுகளை அறுப்பார்கள். (மீண்டும்) அவர்களுக்குக் கட்டளையிடுவேன். அல்லாஹ் வடிவமைத்ததை அவர்கள் மாற்றுவார்கள். என்று அவன் இறைவனிடம் கூறினான். அல்லாஹ்வையன்றி ஷெய்தானைப் பொறுப்பாளனாக்கிக் கொள்பவன் வெளிப்படையான இழப்பை அடைந்து விட்டான். (அந்நிஸா : 118 – 119) இன்னுமோரிடத்தில் அல்லாஹ் இது பற்றிக் கூறும் போதுقَالَ فَبِمَا أَغْوَيْتَنِي لَأَقْعُدَنَّ لَهُمْ صِرَاطَكَ الْمُسْتَقِيمَ (16) ثُمَّ لَآتِيَنَّهُمْ مِنْ بَيْنِ أَيْدِيهِمْ وَمِنْ خَلْفِهِمْ وَعَنْ أَيْمَانِهِمْ وَعَنْ شَمَائِلِهِمْ وَلَا تَجِدُ أَكْثَرَهُمْ شَاكِرِينَ الأعراف : 16 ، 17 நீ என்னை வழிகெடுத்ததால் அவர்களுக்காக உனது நேரான பாதையில் அமர்ந்து கொள்வேன் என்று கூறினான். பின்னர் அவர்களின் முன்னும், பின்னும்,வலமும், இடமும் அவர்களிடம் வருவேன். அவர்களில் அதிகமானோரை நன்றி செலுத்துவோராக நீ காணமாட்டாய். (என்றும் கூறினான்) அல் அஃராப் : 16 – 17) சூறதுல் ஹிஜ்ரிலே அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான். قَالَ رَبِّ بِمَا أَغْوَيْتَنِي لَأُزَيِّنَنَّ لَهُمْ فِي الْأَرْضِ وَلَأُغْوِيَنَّهُمْ أَجْمَعِينَ (39) إِلَّا عِبَادَكَ مِنْهُمُ الْمُخْلَصِينَ الحجر : 39 ، 40 என்இறைவா என்னை நீ வழிகெடுத்ததால் பூமியில் (தீமைகளை) அழகாக்கிக் காட்டுவேன். அவர்களில் உன்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட உனது அடியார்களைத் தவிர (மற்றவர்கள்) அனைவரையும் வழிகெடுப்பேன். என்று கூறினான். (அல் ஹிஜ்ர் : 39 – 40) இவ்வார்த்தைகளை ஷெய்தான் கூறியதாக அல் குர்ஆனில் பல் வேறு இடங்களில் அல்லாஹ் திரும்பத்திரும்ப கூறியுள்ளான். அற்ப விடயங்கள் முதல் ஆட்சியதிகாரம் வரையிலும் ஷெய்தானுடைய வழிகெடுத்தல் முயற்சிகள் நடந்து கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு செக்கனுக்கும் நாங்கள் அவற்றுக்கு ஆட்பட்டுக் கொண்டே இருக்கிறோம் என்பதற்கு இவ்வசனங்கள் சான்றாகவுள்ளன.
ஷெய்தானின் சபதத்தை அல்லாஹ் மற்றுமோரிடத்தில் கீழ்வருமாறு கூறுகிறான். قَالَ أَرَأَيْتَكَ هَذَا الَّذِي كَرَّمْتَ عَلَيَّ لَئِنْ أَخَّرْتَنِ إِلَى يَوْمِ الْقِيَامَةِ لَأَحْتَنِكَنَّ ذُرِّيَّتَهُ إِلَّا قَلِيلًا الإسراء : 62 என்னை விட நீ சிறப்பித்த இவரைப் பற்றிக் கூறுவாயாக கியாமத் நாள் வரை எனக்கு எனக்கு நீ அவகாசம் அளித்தால் சிலரைத் தவிர இவரது சந்ததிகளை வேரறுப்பேன் எனவும் கூறினான். (அல் இஸ்ரா : 62) மேலே நாம் அவதானித்த வசனங்களிலிருந்து ஷெய்தான்கள் மனிதர்களை வழிகெடுப்பார்கள். இப்லீஸுடைய குணமென்ன? அவனுடைய பரம்பரையுடைய வேலை என்ன? போன்ற விடயங்களை அறிந்தோம். ஜின்கள் மனிதர்களை வழிகெடுப்பார்களா? என்பது பற்றி அடுத்ததாக ஆராய்வோம்.
ஜின்கள் மனிதர்களை வழிகெடுப்பார்களா?
ஜின்கள் மனிதர்களை வழிகெடுப்பார்களா? என்பது பற்றி அடுத்ததாக ஆராய்வோம். மனிதர்களை மனிதர்கள் வழிகெடுப்பதைப் போல் ஜின்களை மனிதர்கள் வழிகெடுப்பதைப் போல் ஜின்கள் ஜின்களையும் மனிதர்களையும் வழிகெடுப்பார்கள். ஷெய்தானுக்கு வழிப்பட்டவர்களே இவ்வாறு செய்கிறார்கள். இதை அல்லாஹ் கீழ்வருமாறு கூறுகிறான்:
وَقَالَ الَّذِينَ كَفَرُوا رَبَّنَا أَرِنَا اللَّذَيْنِ أَضَلَّانَا مِنَ الْجِنِّ وَالْإِنْسِ نَجْعَلْهُمَا تَحْتَ أَقْدَامِنَا لِيَكُونَا مِنَ الْأَسْفَلِينَ فصلت : 29 எங்கள் இறைவா ஜின்களிலும் மனிதர்களிலும் எங்களை வழிகெடுத்தோரை எங்களுக்குக் காட்டு அவர்கள் இழிந்தோராகிட அவர்களை எங்களின் பாதங்களின் கீழே ஆக்குகிறோம். என்று (ஏக இறைவனை மறுத்தோர்) கூறுவார்கள். (புஸ்ஸிலத் : 29) ஜின்கள் மனிதர்களை வழிகெடுப்பார்கள் என்பதற்கு இன்னும் சில ஆதாரங்களை திருமறையில் காணலாம். ஜின்கள் மனிதர்களை வழிகெடுப்பார்கள் என்பதற்கு ஹதீஸிலும் ஆதாரம் உள்ளது:
صحيح البخاري – (8 . 525) عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ عِفْرِيتًا مِنْ الْجِنِّ تَفَلَّتَ الْبَارِحَةَ لِيَقْطَعَ عَلَيَّ صَلَاتِي فَأَمْكَنَنِي اللَّهُ مِنْهُ فَأَخَذْتُهُ فَأَرَدْتُ أَنْ أَرْبُطَهُ عَلَى سَارِيَةٍ مِنْ سَوَارِي الْمَسْجِدِ حَتَّى تَنْظُرُوا إِلَيْهِ كُلُّكُمْ فَذَكَرْتُ دَعْوَةَ أَخِي سُلَيْمَانَ رَبِّ {هَبْ لِي مُلْكًا لَا يَنْبَغِي لِأَحَدٍ مِنْ بَعْدِي} فَرَدَدْتُهُ خَاسِئًا இப்ரீத் என்ற ஜின் நான் தொழுது கொண்டிருக்கும் போது எனது தொழுகையைக் கெடுக்க முனைந்தது. அதை நீங்கள் பார்ப்பதற்காக நான் அதைப்பிடித்து பள்ளியின் தூனிலே கட்டிவைக்கப்பார்த்தேன். என்றாலும் சகோதரர் ஸுலைமானுடைய ‘எனக்குப் பின்பு யாருக்கும் கொடுக்காத ஆட்சியொன்றை இறைவா எனக்குக் கொடு’ என்ற துஆ எனக்கு நினைவில் வந்தது. அதனால் நான் அதை விட்டு விட்டேன். அறிவிப்பவர் : அபூஹுரைரா(ரழி) ஆதாரம் : புஹாரி.525 ஜின்கள் தமது உண்மையான தோற்றத்தில் வந்தால் நபியவர்களாலும் அவற்றைப் பிடிக்க முடியாது. ஸுலைமான் நபிக்கும் அல்லாஹ் அவற்றை வசப்படுத்திக் கொடுத்ததனாலேயே அவருக்கு அவற்றைக் கட்டுப்படுத்த முடிந்தது. அவரல்லாத வேறெந்த நபிக்கும் இந்த ஆற்றல் வழங்கப்படவில்லை. கண்ணிமைக்க முன்னால் ஒரு சிம்மாசனத்தைக் கொண்டு வரும் ஆற்றல் படைத்த ஜின்களைப் பிடித்து தூனிலே கட்டி வைத்தல் என்பது சிரமமான காரியமாகும். எப்போது இது சாத்தியமாகும் என்றால் ஜின்கள் தமது சொந்த தோற்றமல்லாது மனிதன், நாய் போன்ற ஏனைய சாதாரண படைப்புக்களின் தோற்றத்தில் வந்தால் அவற்றைக் கட்டுப்படுத்துவது சாத்தியமாகும். ஏனென்றால் எந்தப் படைப்பாயினும் அல்லாஹ் அவற்றுக்கு என்ன ஆற்றலை வழங்கியுள்ளானோ அவற்றை மாத்திரமே அவை கொண்டிருக்க முடியும் இது அல்லாஹ்வின் விதியாகும். ஒரு ஜின் நாயின் உருவத்தில் தோற்றமளித்தால் அதற்கு நாயுடை குண இயல்புகளே இருக்க முடியும். நாயின் தோற்றத்திலிருந்து கொண்டு ஜின் செய்யும் வேலைகளை அதனால் செய்ய முடியாது. நபியவர்களிடம் வந்த இப்ரீத் என்ற ஜின்னும் ஒரு மனித தோற்றத்திலேயே காணப்பட்டது. நாமெனில் அதை ஒரு மனிதனாகவே பார்த்திருப்போம். ஆனால் நபியவர்கள் அது மனித உருவத்தில் வந்திருக்கும் ஒரு ஜின் என்பதை அறிந்திருந்தார்கள். எனவே அதைக் கட்டி வைக்க முனைந்தார்கள் ஆனாலும் ஸுலைமான் நபியுடைய துஆ நபியவர்களுக்கு நினைவில் வந்ததால் அவ்வாறு செய்யமல் விட்டு விட்டார்கள். ‘நீங்கள் பார்ப்பதற்காக அதைக் கட்டி வைக்கப் பார்த்தேன். என்று நபியவர்கள் கூறியதிலிருந்து அது மனித தோற்றத்தில்தான் வந்திருந்தது என்பதை விளங்கலாம். ஜின்களும் வழிகெடுக்கும் வேலையைச் செய்யலாம் என்பதை இந்த ஹதீஸிலிருந்து விளங்க முடிகிறது.
ஜின்கள் வேறு தோற்றங்ளில் மாறும் ஆற்றலுடையவர்கள் என்பதற்கு கீழ் வரும் ஹதீஸ் ஆதாரமாகின்றது. صحيح البخاري – (17 449) عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ رَآنِي فِي الْمَنَامِ فَقَدْ رَآنِي فَإِنَّ الشَّيْطَانَ لَا يَتَخَيَّلُ بِي யார் என்னைக் கணவில் கண்டாரோ அவர் என்னையே கண்டார். ஷெய்தான் என்னைப் போன்று தோற்றமளிக்க மாட்டான். அறிவிப்பவர் : அனஸ் (ரழி) ஆதாரம் : புஹாரி
மனித உருவத்தில் தோற்றமளித்தும் ஷெய்தான் மனிதனை வழிகெடுப்பான் என்பதற்கு கீழ் வரும் அல் குர்ஆன் வசனம் ஆதாரமாகின்றது. وَقَالَ لَا غَالِبَ لَكُمُ الْيَوْمَ مِنَ النَّاسِ وَإِنِّي جَارٌ لَكُمْ فَلَمَّا تَرَاءَتِ الْفِئَتَانِ نَكَصَ عَلَى عَقِبَيْهِ وَقَالَ إِنِّي بَرِيءٌ مِنْكُمْ إِنِّي أَرَى مَا لَا تَرَوْنَ إِنِّي أَخَافُ اللَّهَ وَاللَّهُ شَدِيدُ الْعِقَابِ الأنفال : 48 இன்று மனிதர்களில் உங்களை வெல்ல யாருமில்லை. நான் உங்களுக்கு அருகில் இருக்கிறேன். எனவும் கூறினான். இரு அணிகளும் நேருக்கு நேர் சந்தித்த போது பின் வாங்கினான். உங்களை விட்டும் நான் விலகிக் கொண்டவன். நீங்கள் பார்க்காததை நான் பார்க்கிறேன். நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன். அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன். என்று கூறினான். (அல்அன்பால் : 48)
மனித உருவத்தில் ஷெய்தான் வருவான் என்பதற்குக் கீழ் வரும் ஹதீஸும் ஆதாரமாகின்றது.
صحيح البخاري – (6 17) عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ وَكَّلَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِحِفْظِ زَكَاةِ رَمَضَانَ فَأَتَانِي آتٍ فَجَعَلَ يَحْثُو مِنْ الطَّعَامِ فَأَخَذْتُهُ وَقُلْتُ وَاللَّهِ لَأَرْفَعَنَّكَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنِّي مُحْتَاجٌ وَعَلَيَّ عِيَالٌ وَلِي حَاجَةٌ شَدِيدَةٌ قَالَ فَخَلَّيْتُ عَنْهُ فَأَصْبَحْتُ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا أَبَا هُرَيْرَةَ مَا فَعَلَ أَسِيرُكَ الْبَارِحَةَ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ شَكَا حَاجَةً شَدِيدَةً وَعِيَالًا فَرَحِمْتُهُ فَخَلَّيْتُ سَبِيلَهُ قَالَ أَمَا إِنَّهُ قَدْ كَذَبَكَ وَسَيَعُودُ فَعَرَفْتُ أَنَّهُ سَيَعُودُ لِقَوْلِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّهُ سَيَعُودُ فَرَصَدْتُهُ فَجَاءَ يَحْثُو مِنْ الطَّعَامِ فَأَخَذْتُهُ فَقُلْتُ لَأَرْفَعَنَّكَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ دَعْنِي فَإِنِّي مُحْتَاجٌ وَعَلَيَّ عِيَالٌ لَا أَعُودُ فَرَحِمْتُهُ فَخَلَّيْتُ سَبِيلَهُ فَأَصْبَحْتُ فَقَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا أَبَا هُرَيْرَةَ مَا فَعَلَ أَسِيرُكَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ شَكَا حَاجَةً شَدِيدَةً وَعِيَالًا فَرَحِمْتُهُ فَخَلَّيْتُ سَبِيلَهُ قَالَ أَمَا إِنَّهُ قَدْ كَذَبَكَ وَسَيَعُودُ فَرَصَدْتُهُ الثَّالِثَةَ فَجَاءَ يَحْثُو مِنْ الطَّعَامِ فَأَخَذْتُهُ فَقُلْتُ لَأَرْفَعَنَّكَ إِلَى رَسُولِ اللَّهِ وَهَذَا آخِرُ ثَلَاثِ مَرَّاتٍ أَنَّكَ تَزْعُمُ لَا تَعُودُ ثُمَّ تَعُودُ قَالَ دَعْنِي أُعَلِّمْكَ كَلِمَاتٍ يَنْفَعُكَ اللَّهُ بِهَا قُلْتُ مَا هُوَ قَالَ إِذَا أَوَيْتَ إِلَى فِرَاشِكَ فَاقْرَأْ آيَةَ الْكُرْسِيِّ {اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ} حَتَّى تَخْتِمَ الْآيَةَ فَإِنَّكَ لَنْ يَزَالَ عَلَيْكَ مِنْ اللَّهِ حَافِظٌ وَلَا يَقْرَبَنَّكَ شَيْطَانٌ حَتَّى تُصْبِحَ فَخَلَّيْتُ سَبِيلَهُ فَأَصْبَحْتُ فَقَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا فَعَلَ أَسِيرُكَ الْبَارِحَةَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ زَعَمَ أَنَّهُ يُعَلِّمُنِي كَلِمَاتٍ يَنْفَعُنِي اللَّهُ بِهَا فَخَلَّيْتُ سَبِيلَهُ قَالَ مَا هِيَ قُلْتُ قَالَ لِي إِذَا أَوَيْتَ إِلَى فِرَاشِكَ فَاقْرَأْ آيَةَ الْكُرْسِيِّ مِنْ أَوَّلِهَا حَتَّى تَخْتِمَ الْآيَةَ {اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ} وَقَالَ لِي لَنْ يَزَالَ عَلَيْكَ مِنْ اللَّهِ حَافِظٌ وَلَا يَقْرَبَكَ شَيْطَانٌ حَتَّى تُصْبِحَ وَكَانُوا أَحْرَصَ شَيْءٍ عَلَى الْخَيْرِ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَا إِنَّهُ قَدْ صَدَقَكَ وَهُوَ كَذُوبٌ تَعْلَمُ مَنْ تُخَاطِبُ مُنْذُ ثَلَاثِ لَيَالٍ يَا أَبَا هُرَيْرَةَ قَالَ لَا قَالَ ذَاكَ شَيْطَانٌ நபி(ஸல்) அவர்கள் ரமளானுடைய (ஃபித்ரா) ஜகாத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை என்னிடம் கொடுத்தார்கள். அப்போது ஒருவர் வந்து உணவுப் பொருட்களை அள்ளலானார். அவரை நான் பிடித்து ‘உன்னை நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப் போகிறேன்!’ என்று கூறினேன். அதற்கவர் ‘நான் ஓர் ஏழை!’ எனக்குக் குடும்பம் இருக்கிறது. கடும் தேவையும் இருக்கிறது! என்று கூறினார். அவரை நான்விட்டு விட்டேன். விடிந்ததும் நபி(ஸல்) அவர்கள் ‘அபூ ஹுரைராவே! நேற்றிரவு உம்மால் பிடிக்கப்பட்டவர் என்ன செய்தார்? என்று கேட்டார்கள். நான் ‘இறைத்தூதர் அவர்களே! தாம் கடுமையான வறுமையில் இருப்பதாகவும் தமக்குக் குடும்பம் இருப்பதாகவும் அவர் முறையிட்டார். எனவே இரக்கப்பட்டு அவரை விட்டு விட்டேன்! என்றேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘நிச்சயமாக அவன் பொய் சொல்லியிருக்கிறான்! மீண்டும் அவன் வருவான்! என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதால் அவன் மீண்டும் வருவான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதால் அவன் மீண்டும் வருவான் என்று நம்பி அவனுக்காக(அவனைப் பிடிப்பதற்காக) காத்திருந்தேன். அவன் வந்து உணவுப் பொருட்களை அள்ளத் தொடங்கியபோது அவனைப் பிடித்தேன். ‘உன்னை நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப் போகிறேன்! என்று கூறினேன். அதற்கவன் ‘என்னைவிட்டுவிடு! நான் ஓர் ஏழை! எனக்குக் குடும்பமிருக்கிறது! இனிநான் வரமாட்டேன்! என்றான். அவன் மேல் இரக்கப்பட்டு அவனைவிட்டு விட்டேன். விடிந்ததும் நபி(ஸல்) அவர்கள் அபூ ஹுரைராவே! உம்மால் பிடிக்கப்பட்டவன் என்ன செய்தான்! என்று கேட்டார்கள். நான் ‘இறைத்தூதர் அவர்களே! அவன் (தனக்குக்) கடும் தேவையும் குடும்பமும் இருப்பதாக முறையிட்டான்; எனவே அவன் மேல் இரக்கப்பட்டு அவனைவிட்டுவிட்டேன்! என்றேன். ‘நிச்சயமாக அவன் உம்மிடம் பொய் சொல்லியிருக்கிறான். திரும்பவும் உம்மிடம் வருவான்! என்றார்கள். மூன்றாம் முறை அவனுக்காகக் காத்திருந்தபோதுஅவன் வந்து உணவு பொருட்களை அள்ளத் தொடங்கினான். அவனைப் பிடித்து ‘உன்னை நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப்போகிறேன்! (ஒவ்வொரு முறையும்) ‘இனிமேல் வரமாட்டேன்! என்று செல்லிவிட்டு மூன்றாம் முறையாக நீ மீண்டும் வந்திருக்கிறாய்! என்று கூறினேன். அதற்கவன் ‘என்னைவிட்டுவிடும்! அல்லாஹ் உமக்குப் பயனளிக்கக் கூடிய சில வார்த்தைகளைக் கற்றுத் தருகிறேன்!’ என்றான். அதற்கு நான் ‘அந்த வார்த்தைகள் என்ன? என்று கேட்டேன். ‘நீர் படுக்கைக்குச் செல்லும்போது ஆயத்துல் குர்ஸியை ஆரம்பத்திலிருந்து கடைசிவரை ஓதும்! அவ்வாறு செய்தால் விடியும் வரை அல்லாஹ்வின் தரப்பிலிருந்து உம்மைப் பாதுகாக்கிற (வானவர்) ஒருவர் இருந்து கொண்டேயிருப்பார். ஷைத்தானும் உம்மை நெருங்கமாட்டான்!’ என்றான். விடிந்ததும் நபி(ஸல்) அவர்கள் ‘நேற்றிரவு உம்மால் பிடிக்கப்பட்டவன் என்ன செய்வான்? என்று கேட்டார்கள். ‘இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ் எனக்குப் பயனளிக்கக் கூடிய சில வார்த்தைகளைக் கற்றுத் தருவதாக அவன் கூறினான்; அதனால் அவனைவிட்டு விட்டேன்!’ என்றேன். ‘அந்த வார்த்தைகள் என்ன? என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். ‘நீர் படுக்கைக்குச் செல்லும்போது ஆயத்துல் குர்சியை ஆரம்பம் முதல் கடைசிவரை ஓதும்! அவ்வாறு ஓதினால் விடியும் வரை அல்லாஹ்வின் தரப்பிலிருந்து உம்மைப் பாதுகாக்கிற (வானவர்) ஒருவர் இருந்துகொண்டேயிருப்பார். ஷைத்தானும் உம்மை நெருங்கமாட்டான்! என்று என்னிடம் அவன் கூறினான்’ எனத் தெரிவித்தேன். நபித்தோழர்கள் நன்மையானதைக் கற்றுக் கொண்டு செயல் படுத்துவதில் அதிக ஆர்வமுடையவர்களாக இருந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘அவன் பெரும் பொய்யனாக இருந்தாலும் அவன் உம்மிடம் உண்மையைத்தான் சொல்லியிருக்கிறான்! மூன்று இரவுகளாக நீர் யாரிடம் பேசி வருகிறீர் என்று உமக்குத் தெரியுமா? என்று கேட்டனர். ‘தெரியாது” என்றேன். ‘அவன்தான் ஷைத்தான்!’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிவப்பவர் : அபூஹுரைரா (ரழி) ஆதாரம் : புஹாரி
ஜின்களுக்கு பாடம் நடத்தல்
நபியவர்களிடமிருந்து பல் வேறு ஹதீஸ்களைக் கேட்டுப் படித்த மிகப் பெரும் மேதையான அபூஹுரைரா (ரழி) அவர்களுக்கே தன்னிடம் வந்தது ஷெய்தான் தான் என்பது தெரியவில்லை என்றால் ஜின்னுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பதாக சிலர் இன்று கூறுவதை எவ்வாறு ஏற்றுக் கொள்வது? என்ற கேள்வியெழுகிறது. நபியவர்கள் அல் குர்ஆன் ஓதிய போது சில ஜின்கள் அதைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால் இது நபியவர்களுக்குத் தெரிய வில்லை. அல்லாஹ் வஹீ மூலம் சொல்லிக் கொடுத்த பின்னரே நபியவர்களுக்கு இந்த விடயம் தெரிய வந்தது. இதை அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான். قُلْ أُوحِيَ إِلَيَّ أَنَّهُ اسْتَمَعَ نَفَرٌ مِنَ الْجِنِّ فَقَالُوا إِنَّا سَمِعْنَا قُرْآنًا عَجَبًا الجن : 1 ஜின்களில் ஒரு கூட்டத்தார் செவியுற்று ‘நாங்கள் ஆச்சரியமான குர்ஆனைச் செவியுற்றோம்’ என்று கூறியதாக எனக்கு அறிவிக்கப்பட்டது என (முஹம்மதே) கூறுவீராக. (அல்ஜின் : 1) தான் ஓதியதை ஜின்கள் கேட்டுக் கொண்டிருந்தது நபியவர்களுக்கே தெரியவில்லை என்றால் ‘தமது மர்கஸ்களில் ஜின்கள் வந்து படிப்பதாகவும் அவற்றில் திறமையான திறமை குறைந்த ஜின்களும் இருப்பதாகவும் ஜின் மாணவர்களின் துணையுடன் பெற்றோலின்றி தாம் மோட்டார் சைக்கிலில் செல்வதாகவும்’ இன்று சிலர் கூறுவது எவ்வளவு தூரம் நம்பகத் தன்மை வாய்ந்தது என்பது பற்றி நாம் மிக ஆழமாக சிந்திக்க வேண்டியுள்ளது. எனவே ஜின்களும் மனித உருவத்தில் வந்து மனிதர்களை வழிகெடுக்கலாம் என்பதை சற்று முன்னர் நாம் பார்த்த குர்ஆன் வசனம் ஹதீஸ் போன்றவற்றிலிருந்து சாரம்சமாக விளங்க முடியும்.
ஜின்களை அவற்றின் சொந்த உருவத்தில் காண்பதற்கான சந்தர்ப்பத்தை அல்லாஹ் மனிதர்களுக்கு உலகில் ஏற்படுத்தவில்லை. அவற்றுக்கு வேறு படைப்புக்களின் தோற்றத்திலேயே காட்சியளிக்க முடியும். அத்துடன் மனிதர்களிடம் ஊசலாட்டத்தை உண்டாக்குவதற்காக சில மாறு பட்ட தோற்றங்களை ஏற்படுத்தவும் ஜின்களுக்கு முடியும். அவ்வாறான நேரத்தில் தைரியத்துடன் சென்று நாம் பார்ப்போமானால் அந்த ஊசலாட்டத்தின் உண்மையும் தெளிவாகிவிடும்.
பாம்புகளிலும் ஜின்கள்
ஜின்களுக்கு அரபியில் ‘ஜான்’ என்று சொல்வதைப் போன்று பாம்பிற்கும் அரபியில் ‘ஜான்’; என்று கூறுவார்கள். பாம்பில் ஒர் இனம் ஜின்களாகும் என்பது இஸ்லாமிய நம்பிக்கையாகும். இதற்கு பின்வரும் ஹதீஸ் சான்றாகின்றது. صحيح مسلم – (7 40) إِنَّ بِالْمَدِينَةِ جِنًّا قَدْ أَسْلَمُوا فَإِذَا رَأَيْتُمْ مِنْهُمْ شَيْئًا فَآذِنُوهُ ثَلاَثَةَ أَيَّامٍ فَإِنْ بَدَا لَكُمْ بَعْدَ ذَلِكَ فَاقْتُلُوهُ فَإِنَّمَا هُوَ شَيْطَانٌ ஆனால் சில வகைப் பாம்புகளைக் கண்டால் அவற்றைக் கொன்று விடுமாறு நபியவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள். அதைப் பின்வரும் ஹதீஸ் கூறுகிறது. صحيح مسلم – (5 36) عَلَيْكُمْ بِالأَسْوَدِ الْبَهِيمِ ذِى النُّقْطَتَيْنِ فَإِنَّهُ شَيْطَانٌ கண்ணங்கரேலான பாம்பைக் கொன்று விடுங்கள் அது ஷெய்தானாகும். அறிவிப்பவர் : ஜபிரிப்னு அப்தில்லாஹ் (ரழி) ஆதாரம் : முஸ்லிம் சிலர் பாம்பு பழிவாங்கும் என்று பயந்து அதைக் கொல்லாது விடுகின்றனர் இது தவறாகும். பின்வரும் ஹதீஸ் இதைத் தெளிவாகக் கூறுகிறது. سنن أبى داود-ن – (4 534) 5252 – حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِى شَيْبَةَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ حَدَّثَنَا مُوسَى بْنُ مُسْلِمٍ قَالَ سَمِعْتُ عِكْرِمَةَ يَرْفَعُ الْحَدِيثَ فِيمَا أُرَى إِلَى ابْنِ عَبَّاسٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « مَنْ تَرَكَ الْحَيَّاتِ مَخَافَةَ طَلَبِهِنَّ فَلَيْسَ مِنَّا مَا سَالَمْنَاهُنَّ مُنْذُ حَارَبْنَاهُنَّ ». பாம்பு பழி வாங்கும் என்ற பயத்திற்காக யார் அதைக் கொல்லாமல் விடுகிறாரோ அவர் எம்மைச் சார்ந்தவரல்ல. அவற்றை நாம் எதிர்த்த காலத்திலிருந்து அவற்றோடு நாம் சமாதானமாகியதில்லை. அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரழி) ஆதாரம் : அபூதாவுத் கறுப்பு நாயும் ஷெய்தானே அதைப் பின்வரும் ஹதீஸ் உணர்த்துகிறது. صحيح مسلم – (2 59) الْكَلْبُ الأَسْوَدُ شَيْطَانٌ கறுப்பு நாய் ஷெய்தானாகும். அறிவிப்பவர் : அபூதர் (ரழி) ஆதாரம் : முஸ்லிம் மேலே நாம் முன்வைத்த சான்றுகளிலிருந்து ஜின்களைப் பற்றி சாரம்சமாக விளங்கலாம்.
ஜின்களால் மனிதனில் தாக்கம் செலுத்தமுடியுமா?
ஜின்களால் பாதிக்கப்பட்ட சிலர் வேறு மொழிகளில் பேசுவதையும் வித்தியாசமான குரலில் பேசுவதையும் விகாரமாகத் தோற்றமளிப்பதையும் சமூகத்தில் நாம் காண்கிறோம். மனநிலை பாதிக்கப்பட்டோருக்கான மருத்துவ நிலையங்களில் இருக்கும் நோயாளிகள் பற்றிய அறிக்கைகளைப் பார்க்கும் போது சிலருக்கு எதனால் பாதிப்பு ஏற்பட்டிருக்கின்றது என்ற காரணம் குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் சிலருக்கு அவ்வாறான காரணம் எதுவும் சொல்லப்பட்டிருக்காது. உலகிலுள்ள அனைத்து மனநல மருத்துவ நிலையங்களிலும் இத்தகைய அறிக்கைகள் காணப்படுகின்றன. ஆகவே இயற்கையாக அல்லாஹ் உலகில் ஏற்படுத்தியிருக்கும் புறச் சூழல்கள், இரசாயனங்கள் போன்றவைகளாலும் இவ்வாறான பாதிப்புக்கள் ஏற்படலாம். ஜின்கள் ஷெய்தான்களாலும் இவ்வாறான பாதிப்புக்கள் ஏற்படலாம். என்பதுவே இந்தப் பாதிப்புக்கள் பற்றிய இஸ்லாமிய நம்பிக்கையாகும். ஜின்களால் மனித உடலுக்குல் புக முடியும் என்பதற்கான ஆதாரங்கள் அல்குர்ஆனிலும் ஹதீஸிலும் காணப்படுகின்றன. ஜின்களின் தோற்றமானது கை, கால் கொண்ட ஏனைய சில படைப்புக்களின் தோற்றத்தைப் போன்றதல்ல. மாற்றமாக ஒரு விதமான காற்றைப் போன்ற தோற்றத்திலேயே ஜின்கள் படைக்கப்பட்டுள்ளன. உரு மாறும் ஆற்றலையும் ஜின்களுக்கு அல்லாஹ் கொடுத்துள்ளான் என்பதை இதற்கு முன்னர் நாம் பார்த்தோம். மனித உடலில் ஜின்கள் நுழையலாம் என்பதற்கான ஆதாரங்களை இப்போது அவதானிப்போம்.
வட்டி சாப்பிட்டவர்கள் மறுமையில் எவ்வாறு எழுப்பப்படுவார்கள் என்பதை அல்லாஹ் கீழ்வருமாறு கூறுகிறான்.
الَّذِينَ يَأْكُلُونَ الرِّبَا لَا يَقُومُونَ إِلَّا كَمَا يَقُومُ الَّذِي يَتَخَبَّطُهُ الشَّيْطَانُ مِنَ الْمَسِّ البقرة : 275
வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டி பைத்தியமாக்கிக் கொண்டிருப்பவர்களைப் போல்தான் எழுவார்கள். (அல்பகரா : 275)
ஷெய்தான் மனிதனில் நேரடியாகத் தாக்கம் செலுத்தலாம் என்பதற்கு இவ்வசனம் மிகப்பெரும் ஆதாரமாகவுள்ளது.
ஷெய்தான்கள் யார் மீது இறங்குவார்கள் என்பது பற்றி அல்லாஹ் கூறும் போது பின் வருமாறு கூறுகிறான்.
وَمَا تَنَزَّلَتْ بِهِ الشَّيَاطِينُ (210) وَمَا يَنْبَغِي لَهُمْ وَمَا يَسْتَطِيعُونَ (211) إِنَّهُمْ عَنِ السَّمْعِ لَمَعْزُولُونَ الشعراء : 210 – 212
“இதை ஷெய்தான்கள் இறக்கிடவில்லை. அது அவர்களுக்குத் தகுதியனதுமல்ல. அதற்கு அவர்களால் இயலாது. அவர்கள் செவியேற்பதை விட்டும் தடுக்கப்பட்டவராவர். “(அஷ்ஷுஅரா : 210 – 212)
هَلْ أُنَبِّئُكُمْ عَلَى مَنْ تَنَزَّلُ الشَّيَاطِينُ (221) تَنَزَّلُ عَلَى كُلِّ أَفَّاكٍ أَثِيمٍ (222) يُلْقُونَ السَّمْعَ وَأَكْثَرُهُمْ كَاذِبُونَالشعراء : 221 – 223
“ஷைதான்கள் யார் மீது இறங்குவார்கள் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? இட்டுக்கட்டும் ஒவ்வொரு பாவியின் மீதும் இறங்குகின்றனர். அவர்கள் ஒட்டுக் கேட்கின்றனர். ஆவர்களில் அதிகமானோர் பொய்யர்கள்.” (அஷ்ஷுஅரா : 221 – 223)
ஷெய்தான்கள் மனித உடலுக்குல் நுழைவார்கள் என்பதைப் பின்வரும் ஹதீஸ் கூறுகிறது.
முதலாவது ஹதீஸ்
صحيح مسلم – (8 226)
عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِى سَعِيدٍ عَنْ أَبِيهِ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ « إِذَا تَثَاوَبَ أَحَدُكُمْ فَلْيُمْسِكْ بِيَدِهِ فَإِنَّ الشَّيْطَانَ يَدْخُلُ »
உங்களில் ஒருவர் கொட்டாவி விடும் போது தனது கையை வாயில் வைத்து அதை மறைத்துக் கொள்ளட்டும். ஏனெனில் ஷெய்தான் நுழைகிறான்.
அறிவிப்பவர் : அபூஸஈதுல் குத்ரீ (ரழி)
ஆதாரம் : முஸ்லிம்
சில அறிவிப்புக்களில் ‘தன்னால் முடியுமான அளவுக்கு வாயை மறைத்துக் கொள்ளட்டும் என்றும் மற்றொரு அறிவிப்பில் ‘வாய்க்குள்ளே ஷெய்தான் நுழைகிறான்’ எனவும் இடம் பெற்றுள்ளது. ‘ஷெய்தான் நுழைகிறான்‘ என்றால் பாதிப்பு ஏற்படுகிறது , உண்மையில் நுழைவதை அது குறிக்காது என்று வலிந்துரை செய்ய முடியாது. தாக்கமும் ஏற்படுகிறது ஷெய்தான் நுழைவதும் அங்கு நடைபெறுகிறது.‘வாய்க்குள்ளே ஷெய்தான் நுழைகிறான்’ என்று நபியவர்கள் தெளிவாகவே கூறியிருப்பதிலிருந்து ஷெய்தானுக்கு மனித உடலிலே நுழைவதற்கு வசதியான உடலமைப்பையும் ஆற்றலையும் அல்லாஹ் வழங்கியுள்ளான் என்பதையே நாம் விளங்க வேண்டியுள்ளது.
இரண்டாவது ஹதீஸ்
صحيح البخاري ت – (8 333)
عَنْ صَفِيَّةَ بِنْتِ حُيَيٍّ قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُعْتَكِفًا فَأَتَيْتُهُ أَزُورُهُ لَيْلًا فَحَدَّثْتُهُ ثُمَّ قُمْتُ فَانْقَلَبْتُ فَقَامَ مَعِي لِيَقْلِبَنِي وَكَانَ مَسْكَنُهَا فِي دَارِ أُسَامَةَ بْنِ زَيْدٍ فَمَرَّ رَجُلَانِ مِنْ الْأَنْصَارِ فَلَمَّا رَأَيَا النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَسْرَعَا فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى رِسْلِكُمَا إِنَّهَا صَفِيَّةُ بِنْتُ حُيَيٍّ فَقَالَا سُبْحَانَ اللَّهِ يَا رَسُولَ اللَّهِ قَالَ إِنَّ الشَّيْطَانَ يَجْرِي مِنْ الْإِنْسَانِ مَجْرَى الدَّمِ وَإِنِّي خَشِيتُ أَنْ يَقْذِفَ فِي قُلُوبِكُمَا سُوءًا أَوْ قَالَ شَيْئًا
‘……………ஒரு முறை நபியவர்கள் தனது மனைவி ஸபிய்யா (ரழி) அவர்களோடு போய் கொண்டிருந்த சமயம் இரு நபித்தோழர்கள் அதைக் கண்டு விரைவாக செல்கிறார்கள். அப்போது நபியவர்கள் அவர்களைப் பார்த்து ‘கொஞ்சம் நில்லுங்கள். இது ஸபிய்யா தான் என்றார்கள்.’ அதற்கு அந்நபித் தோழர்கள் இருவரும் ‘அல்லாஹ்வின் தூதரே அல்லாஹ் தூய்மையானவன்’ என்று கூறினர். அதற்கு நபியவர்கள் ‘ஷெய்தான் மனிதனின் இரத்த நாளங்களிலெல்லாம் ஓடுகிறான். ஆவன் உங்கள் உள்ளங்களில் கெட்ட எண்ணங்களைப் ஏற்படுத்துவதை நான் அஞ்சுகிறேன்’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஸபிய்யா (ரழி)
ஆதாரம் : புஹாரி
இந்த தஹதீஸில் இரத்தம் ஓடுகிறது என்பதற்குப் பாவிக்கும் அதே சொல்லையே நபியவர்கள் ஷெய்தான் ஓடுகிறான் என்பதற்கும் பாவித்துள்ளார்கள். எனவே ஷெய்தான் ஓடவில்லை தாக்கம்தான் ஏற்படுகிறது என்று கூறினால் இரத்தமும் ஓடவில்லை என்பதாக அர்த்தப்பட்டு விடும். ஆகவே இரத்தம் ஓடுவது எவ்வளவு தூரம் உண்மையாகவுள்ளதோ அதுபோன்றே ஷெய்தான் ஓடுகிறான் என்பதும் உண்மையில் நிகழ்கிறது.
ஷெய்தான் ஒரு மனிதனில் நுழைந்து தாக்கத்தை ஏற்படுத்துவான் என்பதற்குப் பின்வரும் ஹதீஸும் ஆதாரமாகின்றது.
மூன்றாவது ஹதீஸ்
سنن ابن ماجه – (2 1174)
حدثني أبي عن عثمان بن أبي العاص قال لما استعملني رسول الله صلى الله عليه و سلم على الطائف جعل يعرض لي شيء في صلاتي حتى ما أدري ما أصلي . فلما رأيت ذلك رحلت إلى رسول الله صلى الله عليه و سلم . فقال : ( ابن أبي العاص ؟ ) قلت نعم يا رسول الله قال ( ماجاء بك ؟ ) قلت يا رسول الله عرض لي شيء في صلواتي حتى ما أدري ما أصلي . قال ( ذاك الشيطان . ادنه ) فدنوت منه . فجلست على صدور قدمي . قال فضرب صدري بيده وتفل في فمي وقال ( اخرج . عدو الله ) ففعل ذلك ثلاث مرات . ثم قال ( الحق بعملك )
قال فقال عثمان فلعمري ما أحسبه خالطني بعد
‘நபியவர்கள் என்னைத் தாயிபுக்கு கவர்னராக நியமித்தார்கள். நான் எவ்வளவு தொழுதேன் என்று சரியாகத் தெரிய முடியாதளவுக்கு தொழுகையில் எனக்குக் குறுக்கிடுவதை நான் உணர்ந்தேன். எனவே நபியவர்களிடம் சென்றேன். நபியவர்கள் என்னைக் கண்டதும் ‘உத்மான் இப்னு அபில் ஆஸா?’ என்று கேட்டு உன்னை அழைத்து வந்தது எது? என்று கேட்டார்கள். ‘ அல்லாஹ்வின் தூதரே எவ்வளவு தொழுதேன் என்று சரியாகத் தெரிய முடியாதளவுக்கு தொழுகையில் எனக்கு ஏதோ குறுக்கிடுவதாகத் தெரிகிறது.’ என்று அவர்களிடம் கூறினேன். ‘அது ஷெய்தானாகும். அமர்ந்து கொள்’ என்று சொன்னார்கள். நான் முழந்தாலிட்டு அமர்ந்தேன். தனது கையால் எனது நெஞ்சில் அடித்து எனது வாயில் துப்பி ‘அல்லாஹ்வின் எதிரியே வெளியேறு’ என்று சொன்னார்கள். இவ்வாறு மூன்று முறை செய்தார்கள்……’
அறிவிப்பவர் : உத்மான் இப்னு அபில் ஆஸ் (ரழி)
ஆதாரம் : இப்னுமாஜா
நான்காவது ஹதீஸ்
صحيح البخاري ت – (8 368)
عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا رَفَعَهُ قَالَ خَمِّرُوا الْآنِيَةَ وَأَوْكُوا الْأَسْقِيَةَ وَأَجِيفُوا الْأَبْوَابَ وَاكْفِتُوا صِبْيَانَكُمْ عِنْدَ الْعِشَاءِ فَإِنَّ لِلْجِنِّ انْتِشَارًا وَخَطْفَةً وَأَطْفِئُوا الْمَصَابِيحَ عِنْدَ الرُّقَادِ
மாலை வேளையில் (இரவு தொடங்கும்போது) பாத்திரங்களை மூடி வையுங்கள். தண்ணீர்ப் பைகளை (சுருக்குப் போட்டு) முடிந்து வையுங்கள். கதவுகளைத் தாழிட்டு விடுங்கள். உங்கள் குழந்தைகளை (வெளியே செல்லவிடாமல் அணைத்துப்) பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் (அந்நேரத்தில்) ஜின்கள் பூமியில் பரவி (பொருள்களையும் குழந்தைகளையும்) பறித்துச் சென்று விடும். மேலும் தூங்கும்போது விளக்குகளை அணைத்து விடுங்கள். ஏனெனில் தீங்கிழைக்கக் கூடிய (எலியான)து (விளக்கின்) திரியை (வாயால் கவ்வி) இழுத்துச் சென்று வீட்டிலிருப்பவர்களை எரித்து விடக் கூடும்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரழி)
ஆதாரம் : புஹாரி
ஷெய்தான் பிறக்கும் போதே மனிதர்களைத் தீண்டுகிறான் என்பதற்குக் கீழ்வரும் ஹதீஸ்கள் ஆதாரமாகின்றன.
ஐந்தாவது ஹதீஸ்
صحيح البخاري ت – (11 105)
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا مِنْ مَوْلُودٍ يُولَدُ إِلَّا وَالشَّيْطَانُ يَمَسُّهُ حِينَ يُولَدُ فَيَسْتَهِلُّ صَارِخًا مِنْ مَسِّ الشَّيْطَانِ إِيَّاهُ إِلَّا مَرْيَمَ وَابْنَهَا ثُمَّ يَقُولُ أَبُو هُرَيْرَةَ وَاقْرَءُوا إِنْ شِئْتُمْ {وَإِنِّي أُعِيذُهَا بِكَ وَذُرِّيَّتَهَا مِنْ الشَّيْطَانِ الرَّجِيمِ}
”(புதிதாகப்) பிறக்கும் குழந்தை எது வாயினும் அது பிறக்கும்போதே ஷைத்தான் அதைத் தீண்டுகிறான். ஷைத்தான் தீண்டுவதால் அக்குழந்தை உடனே கூக்குரலெழுப்பும். (ஆனால்) மர்யமையும் அவரின் புதல்வரையும் தவிர!’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) கூறினார். பிறகு அபூ ஹுரைரா(ரலி)இ ‘நீங்கள் விரும்பினால்இ ‘இந்தக் குழந்தையையும் இதன் வழித்தோன்றல்களையும் சபிக்கப்பட்ட ஷைத்தானிடமிருந்து காக்குமாறு உன்னிடம் நான் வேண்டுகிறேன் (என இம்ரானின் துணைவியார் இறைவனை வேண்டினார்)” எனும் (திருக்குர்ஆன் 03:36 வது) இறைவசனத்தை ஓதிக் கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஸஈதிப்னு முஸய்யப்
ஆதாரம் : புஹாரி
ஆறாவது ஹதீஸ்
صحيح البخاري ت – (1 147)
عَنْ ابْنِ عَبَّاسٍ يَبْلُغُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَوْ أَنَّ أَحَدَكُمْ إِذَا أَتَى أَهْلَهُ قَالَ بِاسْمِ اللَّهِ اللَّهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ وَجَنِّبْ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا فَقُضِيَ بَيْنَهُمَا وَلَدٌ لَمْ يَضُرُّهُ
‘உங்களில் ஒருவர் தம் மனைவியுடன் உடலுறவு கொள்ளச் செல்லும்போது ‘அல்லாஹ்வின் திரு நாமத்தைக் கொண்டு உடலுறவு கொள்ளப் போகிறேன். இறைவா! எங்களைவிட்டு ஷைத்தானைத் தூரமாக்கு! (இந்த உறவு மூலம்) நீ எங்களுக்கு அளிக்கப் போகும் (குழந்தைப்) பேற்றிலும் ஷைத்தானை அப்புறப்படுத்து’ என்று சொல்லிவிட்டு உறவு கொண்டு அதன் மூலம் அவ்விருவருக்கும் குழந்தை வழங்கப்படுமானால் அக்குழந்தைக்கு ஷைத்தான் எந்த தீங்கும் விளைவிப்பதில்லை’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்”
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரழி)
ஆதாரம் : புஹாரி
மனிதனுக்கு தீங்கை ஏற்படுத்தும் சிந்தனையும் சக்தியும் ஷெய்தானுக்குண்டு என்பதைக் கீழ் வரும் ஹதீஸ் கூறுகின்றது.
ஏழாவது ஹதீஸ்
மனிதனுக்கு தீங்கை ஏற்படுத்தும் சிந்தனையும், சக்தியும் ஷெய்தானுக்குண்டு என்பதைக் கீழ் வரும் ஹதீஸ் கூறுகின்றது.
صحيح مسلم – (2 72)
عَنْ أَبِى الدَّرْدَاءِ قَالَ قَامَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- فَسَمِعْنَاهُ يَقُولُ « أَعُوذُ بِاللَّهِ مِنْكَ ». ثُمَّ قَالَ « أَلْعَنُكَ بِلَعْنَةِ اللَّهِ ». ثَلاَثًا. وَبَسَطَ يَدَهُ كَأَنَّهُ يَتَنَاوَلُ شَيْئًا فَلَمَّا فَرَغَ مِنَ الصَّلاَةِ قُلْنَا يَا رَسُولَ اللَّهِ قَدْ سَمِعْنَاكَ تَقُولُ فِى الصَّلاَةِ شَيْئًا لَمْ نَسْمَعْكَ تَقُولُهُ قَبْلَ ذَلِكَ وَرَأَيْنَاكَ بَسَطْتَ يَدَكَ. قَالَ « إِنَّ عَدُوَّ اللَّهِ إِبْلِيسَ جَاءَ بِشِهَابٍ مِنْ نَارٍ لِيَجْعَلَهُ فِى وَجْهِى فَقُلْتُ أَعُوذُ بِاللَّهِ مِنْكَ. ثَلاَثَ مَرَّاتٍ ثُمَّ قُلْتُ أَلْعَنُكَ بِلَعْنَةِ اللَّهِ التَّامَّةِ فَلَمْ يَسْتَأْخِرْ ثَلاَثَ مَرَّاتٍ ثُمَّ أَرَدْتُ أَخْذَهُ وَاللَّهِ لَوْلاَ دَعْوَةُ أَخِينَا سُلَيْمَانَ لأَصْبَحَ مُوثَقًا يَلْعَبُ بِهِ وِلْدَانُ أَهْلِ الْمَدِينَةِ ».
ஒரு முறை தொழுகையின் போது நபியவர்கள் ‘உன்னை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்’ ‘அல்லாஹ்வின் சாபத்தைக் கொண்டு உன்னை சபிக்கிறேன்’ என்று மூன்று முறை கூறியதைக் கேட்டோம். அப்போது நபியவர்கள் ஏதோ ஒன்றை கையால் பிடிப்பது போல செய்தார்கள். தொழுகை முடிந்ததும் ‘நபியவர்களே தொழுகையில் நீங்கள் எதையோ கூறுவதைக் கேட்டோம். இதற்கு முன்னர் நீங்கள் அவ்வாறு கூறியதை நாம் கேட்டதில்லை. எதையோ பிடிப்பதற்காக தாங்களின் கையை நீட்டுவதையும் கண்டோமே?” என்று நபியவர்களிடம் கேட்டோம். அதற்கவர்கள் “அல்லாஹ்வின் எதரியான இப்லீஸ் எனது முகத்தில் தீப்பந்தத்தைப் போடப் பார்த்தான். எனவே ‘உன்னை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்’ என மூன்று முறை கூறினேன். ‘அல்லாஹ்வின் சாபத்தைக் கொண்டு உன்னை சபிக்கிறேன்’ என்றும் மூன்று முறை கூறினேன். மூன்று முறை அப்படி நான் கூறியும் அவன் பின்வாங்கவில்லை. எனவே அவனைப் பிடிக்கப்பார்த்தேன். எங்களது சகோதரர் ஸ{லைமானுடைய துஆ இல்லையென்றால் மதீனாவின் சிறுவர்கள் விளையாடும் அளவுக்கு அவன் கட்டிவைக்கப் பட்டவனாக அவன் ஆகியிருப்பான்.
அறிவிப்பவர் : அபுத்தர்தா (ரழி)
ஆதாரம் : முஸ்லிம்
இறையச்சத்திலும், ஈமானிலும் நம்மை விட பலமடங்கு அதிகமான நபியவர்களையே ஷெய்தான் தாக்க வந்தான் என்றால் நம்மிடம் வரமாட்டான் என்று கூறுது நேர்முரனாகின்றது.
صحيح مسلم – (8 / 138)
عَنْ جَابِرٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « إِنَّ إِبْلِيسَ يَضَعُ عَرْشَهُ عَلَى الْمَاءِ ثُمَّ يَبْعَثُ سَرَايَاهُ فَأَدْنَاهُمْ مِنْهُ مَنْزِلَةً أَعْظَمُهُمْ فِتْنَةً يَجِىءُ أَحَدُهُمْ فَيَقُولُ فَعَلْتُ كَذَا وَكَذَا فَيَقُولُ مَا صَنَعْتَ شَيْئًا قَالَ ثُمَّ يَجِىءُ أَحَدُهُمْ فَيَقُولُ مَا تَرَكْتُهُ حَتَّى فَرَّقْتُ بَيْنَهُ وَبَيْنَ امْرَأَتِهِ – قَالَ – فَيُدْنِيهِ مِنْهُ وَيَقُولُ نِعْمَ أَنْتَ ». قَالَ الأَعْمَشُ أُرَاهُ قَالَ « فَيَلْتَزِمُهُ »
இப்லீஸ் தனது அர்ஷை கடலில் வைத்துக் கொண்டு தனது படைகளை அனுப்புகிறான். மிகப்பெரும் குழப்பக்காரனே அவர்களில் அவனுக்கு மிகவும் நெருக்கமானவனாகும். அவனது படையிலுள்ள ஒருவர் அவனிடம் வந்து இதையிதையெல்லாம் நான் செய்தேன் என்று கூறுவார். அதற்கவன் நீ ஒன்றும் செய்யவில்லை. என்று கூறுவான். இன்னொருவன் அவனிடம் வந்து கனவனுக்கும் மனைவிக்குமிடையில் பிரிவை ஏற்படுத்தி விட்டதாகக் கூறுவான். அவனிடம் நெருங்கி போய் “நீயே சிறந்தவன்” என இப்லீஸ் கூறுவான்.
அறிவிப்வர் : ஜாபிர் (ரழி)
ஆதாரம் : முஸ்லிம்
மேலே முன்வைக்கப்பட்ட ஆதாரங்களைப் பார்த்த பின்பும் ஷெய்தான்களால் மனிதர்களுக்கு உடல் ரீதியில் பாதிப்புக்களை ஏற்படுத்த முடியாது என்று கூறுவோமென்றால் மேலே பார்த்த குர்ஆன் வசனங்களையும், ஹதீஸ்களையும் மறுக்கும் நிலைக்குத் தள்ளப்படுவோம் அல்லது தேவையற்ற வலிந்துரைகளை வழங்க வேண்டிய நிர்பந்தத்திற்குத் தள்ளப்படுவோம்
இந்த ஆதாரங்களிலிருந்து முக்கியமான இரு விடயங்களை விளங்கலாம். ஷெய்தானுக்கு இரண்டு வகையான ஆற்றல்களை அல்லாஹ் வழங்கியுள்ளான்.
1- குர்ஆனிலும், ஹதிஸிலும் மாற்றுக் கருத்துக்களை உண்டாக்குதல், சந்தேகங்களை ஏற்படுத்தல், அவற்றைப் புறக்கணிக்க வைத்தல், அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்க வைத்தல், போன்ற வழிகளில் மனிதனை வழிகெடுத்தல். ஒழுக்கக் கேட்டைத் தூண்டல் மானக் கேடான காரியங்களில் ஈடுபட வைத்தல்
2- தனக்கு அல்லாஹ் வழங்கியுள்ள ஆற்றலைக் கொண்டு நோய்கள் உண்டாவதற்கான காரணியாக செயல்படல். பாதிப்புக்களை உண்டாக்குதல்.
ஆகவே கிருமிகள் சில நோய்களுக்குக் காரணமாயிருப்புது போலவே ஷெய்தான்களும் சில நோய்களுக்குக் காரணமாயிருக்கின்றன. ஆனால் எப்படிக் கிருமி போன்றவைகளின் தாக்கத்திற்கு இவைனின் நாட்டப்படி நிகழுமோ அது போன்ற சைத்தானியத் தாக்கங்களும் இறைவனின் நாட்டப்படியே நிகழும் என்பதை நாம் புரிந்துகொள்ளல் வேண்டும்.