அதிகம் விளங்கப்படுத்த தேவையில்லை!

இஸ்லாத்தில் அதிகம் மூளையைப் போட்டு குழப்பி பகுத்தறிவு வாதம் பேச வேண்டிய அவசியமே இல்லை. இதற்கு நபியவர்களது இஸ்ரா, மிஃராஜ் மிகத் தெளிவான சான்று.

அருமை நபியவர்கள் இஸ்ரா, மிஃராஜ் சென்று வந்த செய்தி மக்கத்து மக்களிடம் பரவ ஆரம்பித்துக் கொண்டிருந்த போது இவ்வளவு தொலைத் தூரத்தை இவர் எவ்வாறு கடந்திருப்பார் எனும் தோரணையில் வியப்புடன் சிந்தித்த மக்கள், நபியவர்களை பொய்யராக அடையாளம் கண்டுகொண்டிருக்கையில் இச்செய்தி அபூபக்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு எட்டும் போது உடனே இதை முஹம்மத் -صلى الله عليه وسلم- சொல்லியிருந்தால் உண்மையாகத் தான் இருக்கும் என்று அறுதியும் உறுதியுமாக கூறிய செய்தி அனைவரும் அறிந்த விடயம்.

இச்சந்தர்ப்பத்தில் அபூபக்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நபியை சந்திக்கவும் இல்லை, காணவுமில்லை, செய்தியை அவர்களிடம் கேட்கவுமில்லை ஆனால் நபியவர்கள் சொன்னால் அதில் மாற்றுக்கருத்தில்லாமல் உண்மையாகத் தான் இருக்கும் என்பதை ஆணித்தரமாக கூறியதிலிருந்து விளங்குவது யாதெனில் நபியவர்கள் சொல்லிவிட்டால் மூளைக்கு படவில்லை, அறிவியலுக்கு படவில்லை, நவீன சிந்தனைக்கு ஒத்துப்போகவில்லை என்று புறக்கணிக்க முடியாது.

இஸ்லாத்தில் பகுத்தறிவு வாதத்தை புகுத்தி விடை காண முற்பட்டால் ஈற்றில் ஷைதான் வழிகெடுத்துவிடுவான் என்பதில் சற்றும் ஐயமில்லை.معاذ الله

நபியவர்கள் கூறிய செய்தி ஸஹாபாக்கள் வாயிலாக தரமான முறையில் ஆதாரபூர்வமாக எமக்கு கிடைக்கும் போது அதிகம் தலையைப் போட்டு குழப்பி, சிந்தித்து, பகுத்தறிவுக்கு உட்படுத்துத்துவதை தவிர்த்து, سمعا وطاعة செவியுற்றோம் கட்டுப்பட்டோம் எனும் கோட்பாட்டில் வாழ முயல்வோமாக!

இருக்கிற இஸ்லாத்திலும் சிந்தனைகளை புகுத்தாது, மீதமுள்ள தலைமுறையினருக்கு சரியான இஸ்லாத்தை கொண்டு சேர்ப்போமாக!

Azhan Haneefa

Previous Post Next Post