முஹர்ரம் மாதத்தின் சிறப்புகள் – ஒழுக்கங்கள் மற்றும் தவிர்க்கவேண்டிய அனாசாரங்கள் – சடங்குகள்

அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும் உரியன. அவனுடைய தூதர் மற்றும் அவர்களுடைய குடும்பத்தார், தோழர்கள் மீது ஸலாதும், ஸலாமும் நிலவுக!

நம்பிக்கையாளர்களே! நீங்கள் (தயங்கிக் கொண்டிருக்க வேண்டாம்.) இஸ்லாமில் முழுமையாக நுழைந்து விடுங்கள். (இதைத் தடை செய்யும்)
ஷைத்தானின் அடிச் சுவடுகளைப் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்குப் பகிரங்கமான எதிரியாவான். (அல்குர்ஆன் 2:208)

இவை அல்லாஹ்வின் சட்ட வரம்புகளாகும். எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிந்து நடக்கிறார்களோ அவர்களை
அல்லாஹ் சொர்க்கங்களில் சேர்க்கிறான். அவற்றில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும். அவற்றில் அவர்கள் (என்றென்றும்) தங்கிவிடுவார்கள். இதுதான் மகத்தான வெற்றியாகும். (அல்குர்ஆன் 4:13)

முஹர்ரம்: இஸ்லாமிய ஆண்டின் முதல் மாதமாகும் இது. அத்துடன், அல்லாஹ்ப புனிதமாதமாக்கிய சிறப்புற்ற நான்கு மாதங்களில் ஒரு மாதமாகும்

அல்லாஹ் கூறுகிறான்:
நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் மாதங்களின் எண்ணிக்கை ஓர் ஆண்டுக்கு பன்னிரெண்டுதான். இவ்வாறே வானங்களையும் பூமியையும் படைத்த
நாளில் அல்லாஹ்வின் புத்தகத்தில் பதியப்பட்டுள்ளது. அவற்றில் நான்கு மாதங்கள் சிறப்புற்றவை. இதுதான் நேரான மார்க்கம் ஆகும். ஆகவே, இவற்றில் நீங்கள் உங்களுக்கு தீங்கிழைத்துக் கொள்ள வேண்டாம்.
(அல்குர்ஆன் 9:36)

ஆண்டின் எல்லா மாதங்களிலும் பாவம் செய்வது தடுக்கப்பட்டதுதான். இருப்பினும் இந்த நான்கு புனித மாதங்களில் பாவம் செய்வது மேலும் கடுமையான குற்றமாகும். காலம் மற்றும் இடத்தின் புனிதத்திற்கு ஏற்ப அதில் பாவம் செய்வதும் பெரும்
குற்றமாகிவிடுகிறது. எப்படி மக்காவில் பாவம் செய்வது ஏனைய இடங்களில் பாவம் செய்வதைவிட கடுமையானதோ அதுபோன்றே புனித மாதங்களில் பாவம் செய்வதும் கடுமையானதாகும்.
புனிதமான நான்கு மாதங்களாவன

துல்கஅதா, துல் ஹிஜ்ஷா, முஹர்ரம், ரஷப்
ஆகும். (புகாரி:3025)

ஆண்டின் பன்னிரெண்டு மாதங்களில் சிறந்தவை இந்த நான்கு மாதங்களாகும்.
இந்த சிறந்த நான்கு மாதங்களில் மிகச் சிறந்தவை முஹர்ரம் மாதம் ஆகும்.
அபூதர் (ரழியல்லாஹு அன்ஹு) அறிவிக்கிறார்கள்: “நான் நபி (ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம்) அவர்களிடம் இரவின் எந்தப் பகுதி சிறந்தது? இன்னும்
மாதங்களில் எது சிறந்தது?” எனக் கேட்டேன். நபி (ஸல்) கூறினார்கள்: “இரவில்
சிறந்தது அதன் நடுப்பகுதி. மாதங்களில் மிகச் சிறந்தது நீங்கள் முஹர்ரம் என்று
அழைக்கின்ற அல்லாஹ்வுடைய மாதமாகும்.” (நசாயி:4612)

முஹர்ரம் அல்லாஹ்வுடைய மாதம் என்று சொல்லப்பட்டதிலிருந்து அதன் சிறப்பும்
மேன்மையும் கூடுதலானது என்பதை அறியலாம்.

நபி (ஸல்) கூறியதாக அபூஹுரைரா (ரழி) அறிவிக்கிறார்கள்: ரமழான் மாதத்தில்
உள்ள நோன்புகளுக்குப் பிறகு சிறந்த நோன்பு அல்லாஹ்வுடைய மாதம் முஹர்ரம்
மாதத்தின் நோன்பாகும். ஃபர்ழான தொழுகைக்குப் பிறகு சிறந்த தொழுகை இரவுத்
தொழுகையாகும். (முஸ்லிம்:747)

ஆயிஷா(ரழி) அறிவிக்கிறார்கள்: “முஹர்ரம் 10வது நாள் (ஆஷுரா) அன்று
அறியாமைக் காலத்தில் குறைஷிகள் நோன்பு நோற்று வந்தனர். நபி (ஸல்)அவர்களும் அக்காலத்தில் அதில் நோன்பு நோற்று வந்தார்கள். அவர்கள் மதீனா வந்தபோதும் அதில் தானும் நோன்பு நோற்று, பிறரையும் நோன்பு நோற்கும்படி
ஏவினார்கள். ரமழான் மாத நோன்பு கடமையாக்கப்பட்டபோது ஆஷுரா நோன்பு
விடப்பட்டுவிட்டது. விரும்பியவர் அதில் நோன்பு இருந்தார். விரும்பியவர் அதை
விட்டுவிட்டார்.” (புகாரி:2002)

அறியாமைக்கால மக்களும் இந்த நாளின் புனிதத்தை பேணி வந்தனர் என்பதை
இந்த ஹதீஸிலிருந்து தெரிய வருகிறோம்.

இப்னு அப்பாஸ் (ரழி) அறிவிக்கிறார்கள்: “நபி (ஸல்) மதினா வந்தபோது யூதர்கள்
ஆஜூரா அன்று நோன்பு நோற்றிருந்ததைக் கண்டார்கள். அவர்களிடம்,
“நீங்கள் நோன்பிருக்கின்ற இந்த நாள் என்ன (நாள்)?” என்று கேட்டார்கள்.
அதற்கு அவர்கள் பதில் கூறினர்: “இது ஒரு மகத்தான நாள். இதில் அல்லாஹ்
நபி மூஸா (அலைஹிஸ்ஸலாம்) மற்றும் அவருடைய மக்களையும் பாதுகாத்தான்.
பிர்அவ்னையும் அவனுடைய மக்களையும் மூழ்கடித்தான். எனவே, அதற்கு
நன்றி செலுத்துவதற்காக நபி மூஸா அதில் நோன்பு நோற்றார்கள். ஆகவே
நாங்களும் அதில் நோன்பு நோற்கிறோம்.” உடன் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“உங்களைவிட நபி மூஸாவிற்கு நாங்களே அதிகம் நெருக்கமானவர்கள்
(உரிமையுள்ளவர்கள்).” பிறகு நபி (ஸல்) அவர்களும் அன்று நோன்பு நோற்றார்கள்.
பிறரையும் அதில் நோன்பு நோற்கும்படி ஏவினார்கள்.” (முஸ்லிம்:2714)

இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: “நபி (ஸல்) அவர்கள் ஆஷுரா
நாளைத் தவிர வேறு நாளை நோன்பு நோற்பதற்காக சிறப்பித்து விஷேசமாகத்
தேடியதில்லை. அப்படியே ரமழான் மாதத்தைத் தவிர வேறு மாதத்தை
தேடியதில்லை. (புகாரி:1902)

ஆகவே, ஆஷுரா அன்றும் யூதர்களுக்கு மாறு செய்யும் நோக்கத்தில் அதற்கு
முன் 9வது நாள் அன்றும் நோன்பு நோற்பது மிக சிறந்த வணக்கமாகும்.

இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “நபி (ஸல்) ஆஷுரா அன்று நோன்பு நோற்று பிறரையும் நோன்பு நோற்க பணித்தபோது, “அல்லாஹ்வின்
தூதரே! இது யூதர்கள், கிறிஸ்துவர்கள் கண்ணியப்படுத்துகிற நாளாயிற்றே” என்றனர்.அதற்கு நபி (ஸல்) அவர்கள் “அடுத்த ஆண்டு வந்தால் இன்ஷா அல்லாஹ்
ஒன்பதாம் நாளன்றும் நாம் நோன்பு நோற்றுக் கொள்வோம்” என்றார்கள்.
ஆனால் அடுத்த ஆண்டு வருவதற்குள் நபி(ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள்.
(முஸ்லிம்:2722)

மற்றொரு அறிவிப்பில் வருகிறது “நான் அடுத்த ஆண்டுவரை உயிர்வாழ்ந்தால்
கண்டிப்பாக பிறை ஒன்பது அன்றும் நோன்பு இருப்பேன்” என நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள். (முஸ்லிம்:2723)

அபூகதாதா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “நபி (ஸல்) அவர்களிடம் அரஃபா நோன்பைப் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு ‘அது முந்திய மற்றும் வருகிற ஆண்டின் பாவங்களைப் போக்கி விடுகிறது’ என பதில் கூறினார்கள். ஆஷுரா நாளின்
நோன்பைப் பற்றி கேட்கப்பட்டபோது ‘அது முந்திய ஆண்டின் பாவங்களைப்
போக்கி விடுகிறது’ என பதில் கூறினார்கள். (முஸ்லிம்:2804)

குறிப்பு: மேற்கூறப்பட்ட ஹதீஸில் குறிப்பிடப்பட்ட பாவங்கள் சிறு பாவங்களாகும்.பெரும் பாவங்கள் தவ்பா கேட்பதைக் கொண்டுதான் மன்னிக்கப்படுகின்றன அல்லது
அல்லாஹ்வின் விஷேச அருளால் மன்னிக்கப்படுகின்றன. இவ்வாறு இமாம் நவவி,காழி இயாழ் போன்ற மார்க்க அறிஞர்கள் கூறுகிறார்கள். (அல்மஜ்மூவு 6/431)

ஆகவே, முஹர்ரம் மாதத்தில் பிறை 9, 10 ஆகிய நாட்களில் நாமும் நோன்பு
நோற்பது மிக சிறந்த வணக்கமாகும். ஒன்பதாம் நாள் அன்று நோன்பு இருக்கத்
தவறி விட்டாலும் பத்தாம் நாள் அன்று மட்டும் நோன்பு இருப்பது கூடும் என
மார்க்க அறிஞர்கள் கூறியுள்ளனர்.

அனாசாரங்களும் சடங்குகளும்:

இன்று முஸ்லிம்களில் பலர் இந்த மாதத்தில் அல்லாஹ்வும் அவனது தூதரும்
போதிக்காத, நேர்வழி பெற்ற நபித்தோழர்கள் செய்யாத சடங்குகளை செய்கின்றனர்.
இந்த பத்தாவது நாளை துக்க நாளாக அணுஷ்டிக்கின்றனர். ஹுஸைன் (ரழி)
அவர்கள் கொலை செய்யப்பட்டதை நினைவு கூறும் விதமாக அந்நாளில் பல
நூதன சம்பிரதாயங்களை கடைப்பிடிக்கின்றனர். இப்படி செய்வதற்கு இஸ்லாமிய மார்க்கத்தில் எவ்வித ஆதாரமும் இல்லை. மேலும், இந்த செயல்கள் மாற்று மத சடங்குகளுக்கு ஒப்பானவை என்பதால் பெரும் குற்ற செயல்களாகவே மார்க்கத்தில் கருதப்படும்.

“துக்கநாள்” கடைப்பிடிப்பதற்கு இஸ்லாமிய மார்க்கத்தில் அறவே அனுமதியில்லை.
பிறந்தநாள், இறந்தநாள் கடைப்பிடிப்பது பிற மத மக்களின் கலாசாரமாகும்.
முஸ்லிம்கள் கண்டிப்பாக இவற்றைச் செய்யக்கூடாது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் “யார் பிற மத மக்களைப் போன்று
செயல்படுகிறாரோ அவர் அவர்களைச் சார்ந்தவரே” (அபூ தாவூது:3512)

“இறந்தவர்களுக்காக மூன்று நாட்களுக்கு மேல் துக்கத்தை கடைபிடிக்கக்கூடாது
என நபி (ஸல்) அவர்களால் நாங்கள் தடுக்கப்பட்டிருக்கிறோம். ஆனால்
கணவன் இறந்துவிட்டால் மனைவி மட்டும் நான்கு மாதம் பத்து நாட்கள் துக்கம்
அணுசரிப்பாள்.” (புகாரி: 313)

“(சோதனைகளின் போதும் துக்கத்தின்போதும்) கண்ணத்தில் அறைந்து கொள்பவனும்
சட்டைகளை கிழித்துக் கொள்பவனும் மூடத்தனமான வார்த்தைகளை பேசுபவனும்
நம்மைச் சார்ந்தவன் அல்ல” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி:1294)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் நமது மார்க்கத்தில் புதிதாக சடங்குகளை
உருவாக்குவாரோ அந்த சடங்குகள் மறுக்கப்படவேண்டியவையே. (புகாரி:2499)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பேச்சில் சிறந்தது அல்லாஹ்வுடைய வேதமாகும்.
நேர்வழியில் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களுடைய நேர்வழியாகும்.
காரியங்களில் மிகக் கெட்டவை புதிதாக தோற்றுவிக்கப்பட்டவையாகும். நூதன
சடங்குகள் அனைத்தும் வழிகேடுகளே. (முஸ்லிம்:1435)

மேலும் கூறினார்கள்: புதிதாக தோற்றுவிக்கப்பட்ட எல்லா சடங்குகளை விட்டும்
உங்களை எச்சரிக்கிறேன். புதிய காரியங்கள் அனைத்தும் சடங்குகளே. சடங்குகள்
அனைத்தும் வழிகேடுதான். (அபூ தாவூது:4607)

மேலும் கூறினார்கள்: புதிய காரியங்கள் அனைத்தும் சடங்குகளே. சடங்குகள்
அனைத்தும் வழிகேடுதான். வழிகேடு அனைத்தும் நரகில்தான் கொண்டுபோய்
சேர்க்கும். (நசாயீ:1578)

இம்மாதத்தில் இன்று மக்கள் செய்கிற சில அனாசாரங்கள்:
• “பஞ்சா” என்று கை வடிவத்தில் அலங்கரித்து வைப்பது,
• அதைப் புனிதமாக கருதுவது, அதற்கு வழிபாடுகள் செய்வது,
• உடலைக் கிழித்துக் கொள்வது, மாரடிப்பது,
• யா அலி! யா ஹுஸைன்! என்று கத்துவது,
• பஞ்சா உடன் ஜோடிக்கப்பட்ட வீடு போன்றவற்றை வீதிகளில் இழுத்துக்
கொணடு உலா வருவது,
• இந்த பத்து நாட்களில் கணவன் மனைவி பிரிந்து இருப்பது,
• பத்தாவது நாளன்று தீ மிதிப்பது, உடலை அலங்கோலப்படுத்துவது,
• விசேஷமாக உணவு சமைத்து பரிமாறுவது…

இவையும் இன்னும் இவைப் போன்ற செயல்கள் முற்றிலும் இஸ்லாமில்
வெறுக்கப்பட்ட செயல்களாகும்; இணைவைப்பில் கொண்டுபோய் சேர்த்து
விடக்கூடிய பெரும் பாவங்களாகும். எனவே, முஸ்லிம்கள் இவற்றைவிட்டு
விலகுவார்களாக! அல்லாஹ்வின் உண்மை மார்க்கத்தின் பக்கம் திரும்புவார்களாக!
முஹர்ரம் மாதத்திலும் ஏனைய புனித மாதங்களிலும் ஃபர்ளான தொழுகைகளையும் உபரியான தொழுகைகளையும் பேணி மற்ற வணக்க வழிபாடுகளையும் முறையாகச்
செய்து அல்லாஹ்வுடைய அருளையும் மன்னிப்பையும் பெற முயற்சிப்பார்களாக!
ஷைத்தானுடைய அடிச்சுவடுகளையும் மாற்றுமத கலாச்சாரங்களையும்
பின்பற்றுவதை முற்றிலும் தவிர்ப்பார்களாக.

அல்லாஹ் நம் அனைவரையும் நேர்வழி நடத்த போதுமானவன்…

வெளியீடு:தாரூல் ஹுதா(சென்னை)
أحدث أقدم