- உஸ்தாத் அபூ நசீபா எம்.எஃப். அலீ
1. இஸ்லாமிய ஹிஜ்ரீ ஆண்டும் அதன் முதல் மாதமும்
அமீருல் முஃமினீன் உமர் இப்னுல் கத்தாப் (ரலி) ஆட்சிக்காலத்தில் ஒரு கடன் பத்திரம் அவர்களின் பார்வைக்கு வந்தது. அதில் மாதம் ஷஅபான் என்றிருந்தது. ‘எழுதியவர்கள் எந்த ஷஅபானைக் குறிப்பிடுகிறார்கள்? கடந்த வருடத்து ஷஅபானா? அடுத்த வருடமா? இப்போதைய ஷஅபானா?’ முடிவுக்கு வர முடியாமல் உமர் (ரலி), நமக்கென ஆண்டுகள் ஏன் இல்லை என்ற கேள்வியுடன் யோசித்தார்கள். முஹாஜிர், அன்ஸாரி தோழர்களை அழைத்தார்கள். ஆலோசனை கேட்டார்கள். வருடத்தைக் குறிப்பிட மக்களுக்கு ஒரு தொடக்கம் தேவை. என்ன செய்யலாம்?
ரோமர்களின் ஆண்டின்படி போகலாமா? வேண்டாம். அது ரொம்ப பழையது. அவர்கள் துல்கர்னைன் காலத்திலிருந்து கணக்கிடுகிறார்கள்.
சரி, பாரசீகர்களின் ஆண்டு? வேண்டாம். அதில் நிறைய குழப்பங்கள். ஒவ்வொரு புதிய மன்னனும் புது ஆண்டை ஆரம்பிக்கிறான்.
யானை ஆண்டு? அப்ரஹாவின் யானைப் படை துவம்சம் செய்யப்பட்டதே, அதிலிருந்து? அதுவும் நிராகரிக்கப்பட்டது.
ஆலோசனையில் நான்கு கருத்துகள் முக்கியமாகப் பேசப்பட்டன.
1. நபியவர்களின் பிறப்பு
2. அவர்கள் நபியான வருடம்
3. அவர்களின் ஹிஜ்றத்
4. மரணம்
இதில் பிறந்த வருடமும், நபியான வருடமும் சர்ச்சை செய்யப்பட்டன. அதனால் கைவிடப்பட்டன. நபியவர்கள் இறந்த வருடத்திலிருந்து தொடங்கினால் முஸ்லிம்கள் எல்லோரையும் அது கவலையில் தள்ளும். அதையும் கணக்கிட வேண்டாம். ஹிஜ்றத் செய்த வருடமே பொருத்தம் என்று முடிவானது. (பத்ஹுல் பாரீ பாகம் 7, பக் 268 இதே கருத்து சஹ்ல் இப்னு சஅது (ரலி) மூலமும் அறிவிக்கப்படுகிறது. புகாரீ 3934)
ஹிஜ்ரீயில் தொடங்கும் நமது வரலாறு
அலீ (ரலி) அவர்களிடம் உமர் (ரலி) கேட்டார்கள், ‘நம்முடைய வரலாறு எப்போதிருந்து ஆரம்பிக்கிறது’ என்று. அலீ (ரலி) சொன்னார்கள்,
مِنْ يَوْمِ هَاجَرَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَتَرَكَ أَرْضَ الشِّرْكِ
‘இணைவைப்பவர்களின் பூமியை விட்டுவிட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) வெளியேறினார்களே அப்போதிருந்து. அதாவது, ஹிஜ்றத்திலிருந்து.’ (அறிவிப்பு: சஈது இப்னு முசய்யப் (ரஹ்), முஸ்தத்ரக் அல்ஹாகிம் 4287)
உமர் (ரலி) தீர்மானமாக அறிவித்தார்கள். மக்காவை விட்டு வெளியேறி மதீனா வந்ததிலிருந்து ஆண்டைத் தொடங்கலாம். அதுதான் ஹிஜ்ரீ 1 ஆரம்பமானது. ஆனால் நபி (ஸல்) அவர்கள் மதீனா வந்தது ரபீஉல் அவ்வல் மாதம். அப்படியென்றால் அதுதான் முதல் மாதமா? நமது ஆண்டின் முதல் மாதம் எது?
புதிய முடிவு வெளியானது. நபியவர்கள் மதீனா வந்தது ரபீஉல் அவ்வல்தான், ஆனால் ஹிஜ்றத் செய்யும் யோசனை துல்ஹஜ்ஜில் ஆரம்பமானது. மதீனாவாசிகளின் இரண்டாம் அகபா உடன்படிக்கை அப்போதுதான் நடந்தது. அவர்கள் ஹஜ்ஜுக்கு வந்த நேரம் அது. அதற்கு அடுத்த மாதம் முஹர்ரம். மதீனாவாசிகள் தீர்மானமாக வேலையில் இறங்கிய மாதம். ஹிஜ்றத் திட்டங்கள் ஆரம்பமாயின.. எனவே, ஹிஜ்ரீ ஆண்டின் முதல் மாதம், முஹர்ரம். ஆனால் முஹர்ரம் மாதம் ஆண்டின் ஒரு தொடக்கம் மட்டுமல்ல!
2. முஹர்ரம் – ஓர் ஆண்டின் முதல் மாதம் மட்டுமல்ல
إِنَّ عِدَّةَ الشُّهُورِ عِنْدَ اللَّهِ اثْنَا عَشَرَ شَهْرًا فِي كِتَابِ اللَّهِ يَوْمَ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ ذَلِكَ الدِّينُ الْقَيِّمُ فَلَا تَظْلِمُوا فِيهِنَّ أَنْفُسَكُمْ وَقَاتِلُوا الْمُشْرِكِينَ كَافَّةً كَمَا يُقَاتِلُونَكُمْ كَافَّةً وَاعْلَمُوا أَنَّ اللَّهَ مَعَ الْمُتَّقِينَ
திட்டவட்டமாக அல்லாஹ்விடம் மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டுதான். இப்படித்தான் வானங்கள், பூமியை படைத்த நாளிலிருந்து அல்லாஹ்வின் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் நான்கு புனிதமானவை. இதுதான் நிலையான மார்க்கம். ஆகவே, இவற்றில் (போர்புரிந்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ள வேண்டாம். எனினும், இணைவைத்து வணங்குபவர்களில் எவரேனும் (அம்மாதங்களில்) உங்களுடன் போர் புரிந்தால் அவ்வாறே நீங்களும் அவர்கள் அனைவருடனும் போர் புரியுங்கள். நன்கு அறிந்துகொள்ளுங்கள்: இறையச்சம் உள்ளவர்களுடன் மட்டுமே அல்லாஹ் இருக்கிறான். (குர்ஆன் 9:36)
1. பன்னிரண்டு மாதங்கள்கூடிய ஓர் ஆண்டு – இஸ்லாமின் அருட்கொடை
ஆண்டுக்கு பன்னிரண்டு மாதங்கள். திட்டவட்டமாக அறிவிக்கிறான் அல்லாஹ். பழங்காலத்தில் அறபிகள் மாதங்களை முன்னும் பின்னுமாக மாற்றிக்கொண்டு இருந்தார்கள். அதில் ஏகப்பட்ட குளறுபடிகள். அறபிகள்போல மற்ற சமுதாயங்களிடமும் சரியான கணக்கு இல்லை. ரோமர்களின் பழைய காலண்டர் ஆண்டுக்குப் பத்து மாதங்களுடன் இருந்தது.
நிலா வளருவதையும் தேய்வதையும் வைத்து மிக எளிதாக மாதங்களைக் கணக்கிட வழி செய்த அல்லாஹ், அதன் சரியான எண்ணிக்கை பன்னிரண்டே என்று அறிவித்து பெரிய குழப்பத்தை ஒழித்தான். மனித சமுதாயத்திற்கு இஸ்லாம் வழங்கிய அருட்கொடைகளில் இதுவும் ஒன்று.
2. புனித மாதங்களின் பின்னணி
நபியவர்கள் (ஸல்) தம் கடைசி ஹஜ்ஜு பேருரையில் சொன்னார்கள்:
إِنَّ الزَّمَانَ قَدْ اسْتَدَارَ كَهَيْئَتِهِ يَوْمَ خَلَقَ اللهُ السَّمَوَاتِ وَالْأَرْضَ السَّنَةُ اثْنَا عَشَرَ شَهْرًا, مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ, ثَلَاثٌ مُتَوَالِيَاتٌ: ذُو الْقَعْدَةِ, وَذُو الْحِجَّةِ, وَالْمُحَرَّمُ وَرَجَبُ مُضَرَ الَّذِي بَيْنَ جُمَادَى وَشَعْبَانَ
நிச்சயமாக காலம், வானங்களையும் பூமியையும் அல்லாஹ் படைத்த நாளில் இருந்த அதன் அமைப்பைப் போலவே இப்போது சுற்றிவந்துவிட்டது. அல்லாஹ்விடம் மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டாகும். இப்படித்தான் வானங்களையும் பூமியையும் அல்லாஹ் படைத்த அன்று, அவனது புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. மூன்று, தொடர்ந்து வருபவை. அவை துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம். நான்காவது ஜுமாதா ஸானீக்கும் ஷஅபானுக்கும் இடையிலுள்ள முழர் கூட்டத்து ரஜப் ஆகும். (அறிவிப்பு: அபூபக்ரா (ரலி), புகாரீ 4662)
பன்னிரண்டு மாதங்களின் வரிசை பின்வருமாறு:
1. முஹர்ரம்
2. ஸஃபர்
3. ரபீஉல் அவ்வல்
4. ரபீஉல் ஆகிர்
5. ஜுமாதா அல்ஊலா
6. ஜுமாதா அல்உக்ரா
7. ரஜப்
8. ஷஅபான்
9. றமளான்
10. ஷவ்வால்
11. துல்கஅதா
12. துல்ஹஜ்ஜு
பிரபஞ்சத்தை படைத்தபோதே இத்தனை மாதங்கள்தான் ஆண்டுக்கு என்று முடிவுசெய்து எழுதியும் வைத்துவிட்டான் அல்லாஹ். எதில் எழுதினான்? அல்லவ்ஹுல் மஹ்ஃபூல் எனும் பதிவுப் புத்தகத்தில். விதி புத்தகத்தில். அப்போதே நான்கு மாதங்களைப் புனிதமாகவும் ஆக்கிவிட்டான். துல்கஅதா, துல்ஹஜ்ஜு, முஹர்ரம், ரஜப்.
இமாம் இப்னு கஸீர் (ரஹ்) எழுதுகிறார்கள்: அறியாமைக் காலத்திலிருந்தே அறபிகள் இந்த நான்கு மாதங்களைப் புனிதமாக நம்பி வந்தார்கள். அல்பஸ்ல் எனும் கூட்டத்தார் மட்டும் வரம்பு மீறி எட்டு மாதங்களைப் புனிதப்படுத்தினார்கள்... முழர் கூட்டத்து ரஜப் என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடக் காரணம், அக்காலத்தில் அவர்கள்தான் அதைச் சரியாக கணக்கிட்டு வந்தார்கள். ரபீஆ எனும் கூட்டம் ஷஅபானுக்கும் ஷவ்வாலுக்கும் இடையில் ரஜப்பைக் கணக்கிட்டார்கள். அதுவோ றமளான் மாதம்.
புனித மாதங்களில் மூன்று தொடர்ந்து வருகின்றன. ஒன்று தனியாக உள்ளது. ஹஜ்ஜையும் உம்றாவையும் இலகுவாகச் செய்யவே இப்படி. துல்கஅதா மாதத்தில் மக்கள் ஹஜ்ஜுக்குப் புறப்படுவார்கள். அடுத்தது துல்ஹஜ்ஜு. அந்த மாதம் ஹஜ்ஜு கிரியைகளை முடிப்பார்கள். அடுத்தது முஹர்ரம். பத்திரமாக ஊர் வந்து சேர்வார்கள். இந்த மாதங்களில் அச்சமில்லாமல், பாதுகாப்பாக பயணம் செய்ய முழு அறபுலகிலும் போர்கள் நிறுத்தப்பட்டுவிடும். புனிதம் பேணப்படும். தூரப் பிரதேசத்தில் உள்ளவர்கள் நடுவில் உள்ள ரஜப் மாதத்தில் உம்றா செய்ய வருவார்கள். பிறகு பத்திரமாக ஊர் திரும்புவார்கள். (தஃப்சீர் இப்னு கஸீர் 4/148)
3. புனிதத்தை மதிப்பது எப்படி?
போர் தடை செய்யப்பட்டு இம்மாதங்களைப் புனிதமாக மதிப்பது அல்லாஹ்வின் மார்க்கச் சட்டங்களில் உள்ள நிலையான சட்டம். இதில் வரம்பு மீறுவது பாவம், பெரும் அநியாயம்.
فَلَا تَظْلِمُوا فِيهِنَّ أَنْفُسَكُمْ
‘இவற்றில் (போர்புரிந்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ள வேண்டாம்..’ (9:36)
இமாம் இப்னு கஸீர் (ரஹ்) எழுதுகிறார்கள்: இந்தப் புனித மாதங்களில் பாவம் புரிவது மற்ற மாதங்களில் செய்கிற பாவத்தைவிட மோசமானது. எப்படி மற்ற இடங்களில் செய்கிற பாவத்தைவிட புனித மக்கா எல்லைக்குள் செய்கிற பாவம் பல மடங்கு மோசமானதோ அது போல.
அல்லாஹ் கூறுகிறான்:
وَمَنْ يُرِدْ فِيهِ بِإِلْحَادٍ بِظُلْمٍ نُذِقْهُ مِنْ عَذَابٍ أَلِيمٍ
அதில் (புனித மக்காவில்) யார் மார்க்கத்திற்கு விரோதமாக அநியாயம் செய்ய நினைக்கிறார்களோ, நாம் அவர்களுக்குத் துன்புறுத்துகிற வேதனையைச் சுவைக்க வைப்போம். (குர்ஆன் 22:25)
இப்னு அப்பாஸ் (ரலி) சொல்லும் விளக்கம்: ‘உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள்’ என்ற அல்லாஹ்வின் சொல்லை, ‘நிச்சயமாக அல்லாஹ்விடம் மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு’ என்கிற சொல்லுடன் சேர்த்து புரிய வேண்டும். அதாவது, தீங்கு செய்வது எல்லா மாதங்களிலுமே தடை செய்துவிட்டான் அல்லாஹ். பிறகு அந்த மாதங்களில் நான்கைத் தேர்வு செய்து புனிதமாக்கியுள்ளான். ஆக, இந்த மாதங்களில் பாவம் புரிவது மற்றதைவிட மிகப் பெரியது. அதேசமயம், இவற்றில் நல்ல அமல்கள் செய்வது, பல மடங்கு நன்மைகளைக் கொடுக்கும்.
கத்தாதா (ரஹ்) சொன்னார்கள்: ‘மற்ற மாதங்களில் அநியாயம் செய்வதைக் காட்டிலும் புனித மாதங்களில் அநியாயம் செய்வது மிக மோசமானது, கடுமையானது. நிச்சயமாக அநியாயம் செய்வது எப்போதுமே கூடாதுதான். ஆனால், அல்லாஹ் தனது விருப்பப்படி ஒன்றைவிட இன்னொன்றைக் கடுமையாக ஆக்குகிறான்..
தனது படைப்பில் ஒன்றைவிட இன்னொன்றை மேலானதாய் தேர்வு செய்கிறான் அல்லாஹ். மலக்குகளிலிருந்தும் மனிதர்களில் இருந்தும் தனக்குத் தூதர்களைத் தேர்ந்தெடுத்தான். எல்லாப் பேச்சுகளை விடத் தனது பேச்சைத் தேர்ந்தெடுத்தான். பூமியின் மற்ற பகுதிகளைவிட தனது மஸ்ஜிதுகளைத் தேர்ந்தெடுத்தான். மாதங்களில் றமளானையும் புனித மாதங்களையும் தேர்ந்தெடுத்தான். எல்லா நாட்களைவிட வெள்ளிக் கிழமையைத் தேர்ந்தெடுத்தான். எல்லா இரவுகளைவிட லைலத்துல் கத்ரைத் தேர்ந்தெடுத்தான். எனவே, அல்லாஹ் எதைப் புனிதப்படுத்தினானோ அதை நீங்களும் புனிதமாக எடுத்துக்கொள்ளுங்கள். இதுதான் அறிவுள்ளவர்கள், விளக்கமுள்ளவர்களின் வழக்கம்.’ (தஃப்சீர் இப்னு கஸீர் 4/148)
4. மாதங்களைவிட இஸ்லாம் புனிதமானது
புனித மாதங்களில் போர் புரிவது ஒருவர் தனக்குத் தானே அநியாயம் செய்துகொள்வது போல. ஆனால், இணைவைப்பவர்கள் நம்மிடம் போருக்கு வந்தால், அவர்களை எதிர்க்கலாம், தடுத்து போர் செய்யலாம் என்று அனுமதிக்கிறான் அல்லாஹ். இது நம்மையும் இஸ்லாமையும் பாதுகாத்துக்கொள்ள அவன் அளிக்கும் அனுமதி. தன் மார்க்கத்திற்காக போர் புரிவதை மாதங்களின் புனிதத்தைவிட மேன்மையாக்கியுள்ளான்.
3. புத்தாண்டுக்கு என்ன செய்யலாம்?
முஹர்ரம் என்றாலே புனிதமானது என அர்த்தம். போரை நிறுத்திவிட்டாலே அந்தப் புனிதத்தை மதித்துவிட்டதாக ஆகாது. அதையும் தாண்டி, பாவங்கள் புரிவதை நிறுத்த வேண்டும். நல்ல அமல்கள் செய்வதை அதிகப்படுத்த வேண்டும். இதுதான் முக்கியம். இந்தக் கோணத்தில் இன்று நாம் சிந்திக்கிறோமா? முஹர்ரம் பிறக்கிறது. சமீப காலமாக புத்தாண்டு வாழ்த்துச் சொல்லிக்கொள்கிற வழக்கமும் அதிகரித்திருக்கிறது.
கிறித்துவர்கள் ஜனவரியில் புத்தாண்டு கொண்டாடுகிறார்கள். அவர்களுக்கு நாம் குறைந்தவர்களா என்ன? நமக்கும் ஆண்டு இருக்கிறது. புத்தாண்டு பிறக்கிறது. ஹிஜ்றா காலண்டர் பற்றி நம்மிடம் விழிப்புணர்வு கொண்டு வர இதுதான் வாய்ப்பு. வாழ்த்துகளைப் பரிமாறுங்கள், கிரிட்டிங் கார்டு அனுப்புங்கள், எஸ்.எம்.எஸ், ஈமெயில், வாட்ஸ் அப், ஃபேஸ் புக் வாழ்த்து அனுப்புங்கள் என்கிறார்கள் கொண்டாட்டக்காரர்கள். எதில் கவனம் செலுத்த வேண்டுமோ, அது தவிர அனைத்திலும் நம் கவனம் குவிக்கப்படுகிறது. காலம் வீணாகிறது.
இமாம் முஹம்மது ஸாலிஹ் அல்உசைமீன் (ரஹ்) அவர்களிடம் முஹர்ரம் புத்தாண்டு வாழ்த்துச் சொல்வது பற்றி ஃபத்வா கேட்கப்பட்டது. அவர்கள் சொன்னார்கள்:
‘உங்களிடம் யாராவது புத்தாண்டு வாழ்த்துச் சொன்னால், அவருக்குப் பதிலளியுங்கள். நீங்களாக வாழ்த்துகளை ஆரம்பிக்காதீர்கள். இனிய புத்தாண்டு வாழ்த்துகள் என்று ஒருவர் சொன்னால், அல்லாஹ் உங்களுக்கு இந்த ஆண்டை நல்லதாக, அருளுக்குரியதாக ஆக்கட்டும் எனப் பதில் சொல்லுங்கள். இதுதான் சரியான நிலைப்பாடு. எனக்குத் தெரிந்த வரை நம் முன்னோர்கள் (நபித்தோழர்கள்) யாரும் புத்தாண்டு வாழ்த்து பரிமாறிக்கொண்டதாக எந்தத் தகவலும் இல்லை. சொல்லப்போனால், உமர் இப்னுல் கத்தாப் (ரலி) காலத்தில்தான் முஹர்ரம் மாதம் புதிய வருடத்தின் முதல் மாதமாக அறிவிக்கப்பட்டது.’ (இஃலாம் அல்முஆசிரீன் பி ஃபதாவா இப்னு உசைமீன் 372)
முஹர்ரம் – அல்லாஹ்வின் மாதம்
1. முஹர்ரமில் இரண்டு வகை நோன்புகள்
முஹர்ரம் மாதத்தில் இரண்டு விதமாக நோன்புகள் வைத்து நன்மைகளைப் பெறலாம்.
1. விட்டுவிட்டு நோன்புகள் வைக்கலாம்.
2. பிறை ஒன்பது, பத்தில் வைக்கலாம். அல்லது ஒன்பதைவிட நேர்ந்தால் பத்தில் மட்டும் வைக்கலாம்.
இந்த இரண்டுக்கும் ஆதாரங்கள் இருக்கின்றன.
عَنْ أَبِى هُرَيْرَةَ رضى الله عنه يَرْفَعُهُ قَالَ سُئِلَ أَىُّ الصَّلاَةِ أَفْضَلُ بَعْدَ الْمَكْتُوبَةِ وَأَىُّ الصِّيَامِ أَفْضَلُ بَعْدَ شَهْرِ رَمَضَانَ فَقَالَ أَفْضَلُ الصَّلاَةِ بَعْدَ الصَّلاَةِ الْمَكْتُوبَةِ الصَّلاَةُ فِى جَوْفِ اللَّيْلِ وَأَفْضَلُ الصِّيَامِ بَعْدَ شَهْرِ رَمَضَانَ صِيَامُ شَهْرِ اللَّهِ الْمُحَرَّمِ
‘கடமையாக்கப்பட்ட தொழுகைக்கு அடுத்தபடியாகச் சிறந்த தொழுகை எது, ரமழான் மாத நோன்புக்கு அடுத்தபடியாகச் சிறந்த நோன்பு எது’ என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘கடமையான தொழுகைக்கு அடுத்தபடியாகச் சிறந்த தொழுகை, நடுநிசியில் தொழுவதாகும். ரமழான் மாத நோன்புக்கு அடுத்தபடியாகச் சிறந்த நோன்பு, அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாத நோன்பாகும்’ என்று சொன்னார்கள். (அறிவிப்பு: அபூ ஹுரைரா (ரலி), முஸ்லிம் 2158, 2157)
அல்லாஹ்வின் மாதம் என்று சொன்ன காரணம், அதன் மகத்துவத்தை உணர்த்த. அல்காரீ (ரஹ்), ‘இதன் வெளிப்படையான அர்த்தம் முழு முஹர்ரம் மாதமும் நோன்பு வைப்பது’ என்கிறார்கள். ஆனால், இமாம் அபூதாவூதும் மற்றவர்களும், ‘முஹர்ரமில் நோன்பு வையுங்கள், விட்டுவிடுங்கள். நோன்பு வையுங்கள், விட்டுவிடுங்கள். நோன்பு வையுங்கள், விட்டுவிடுங்கள்’ எனக் கூறியுள்ளார்கள். (துஹ்ஃபத்துல் அஹ்வதீ 1/475)
ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் றமளான் தவிர எந்த மாதத்திலும் முழு மாதமும் நோன்பு வைத்ததில்லை என்பது உறுதி. ஆகவே, இந்த நபிமொழியின் நோக்கம், ஆர்வமூட்டுவதே தவிர முழு முஹர்ரமும் நோன்பு வைக்க வேண்டும் என்பதல்ல.
2. பத்தாம் நாள் நோன்பின் சிறப்பு
عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِى يَزِيدَ سَمِعَ ابْنَ عَبَّاسٍ رضى الله عنهما وَسُئِلَ عَنْ صِيَامِ يَوْمِ عَاشُورَاءَ فَقَالَ مَا عَلِمْتُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم صَامَ يَوْمًا يَطْلُبُ فَضْلَهُ عَلَى الأَيَّامِ إِلاَّ هَذَا الْيَوْمَ وَلاَ شَهْرًا إِلاَّ هَذَا الشَّهْرَ يَعْنِى رَمَضَانَ
உபைதுல்லாஹ் இப்னு அபீயஸீத் (ரஹ்) சொல்கிறார்கள்: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் முஹர்ரம் பத்தாவது நாள் (ஆஷூரா) நோன்பு பற்றி கேட்கப்பட்டது. அவர்கள், ‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நாட்களிலேயே இந்த (ஆஷூரா) நாளையும் மாதங்களிலேயே இந்த - றமளான் - மாதத்தையும் தவிர வேறெதையும் சிறப்பாகத் தேர்ந்தெடுத்து நோன்பு நோற்றதாக நான் அறியவில்லை’ என்றார்கள். (முஸ்லிம் 2086)
وَصِيَامُ يَوْمِ عَاشُورَاءَ أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِى قَبْلَهُ
‘முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்பதை, அதற்கு முந்தைய ஓராண்டிற்குப் பாவப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என நான் நல்லாதரவு வைக்கிறேன்’ என்று நபி (ஸல்) சொன்னார்கள். (அறிவிப்பு: அபூகத்தாதா (ரலி), முஸ்லிம் 2151)
மற்றோர் அறிவிப்பில், அபூகத்தாதா (ரலி) சொல்கிறார்கள்:
وَسُئِلَ عَنْ صَوْمِ يَوْمِ عَاشُورَاءَ فَقَالَ يُكَفِّرُ السَّنَةَ الْمَاضِيَةَ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஆஷூரா நாளில் நோன்பு நோற்பது பற்றி கேட்கப்பட்டது. அதற்கு ‘அது கடந்த ஆண்டின் பாவப் பரிகாரமாகும்’ என்றார்கள். (முஸ்லிம் 2152)
இந்த மூன்று நபிமொழிகளும் ஆஷூரா நோன்பின் சிறப்பைத் தெளிவாகச் சொல்கின்றன. நபி (ஸல்) அவர்கள் உபரியான நோன்புகளில் எந்த நோன்பைக் காட்டிலும் இதற்கே முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். இதன் மூலம் ஒரு வருடப் பாவங்கள் மன்னிக்கப்பட அல்லாஹ்விடம் நல்லாதரவு வைத்திருக்கிறார்கள்.
பாவங்கள் மன்னிக்கப்பட நோன்பு போதுமா?
பாவங்களுக்குப் பரிகாரம் என்றால் எந்தப் பாவங்கள்? சிறு பாவங்களா? பெரும்பாவங்களா? - இந்தக் கேள்விகளுக்கு விடை அறிவது முக்கியம்.
இமாம் நவவீ (ரஹ்) எழுதுகிறார்கள்: இது எல்லாச் சிறுபாவங்களுக்கும் பரிகாரமாகும். பெரும்பாவங்களுக்கு அல்ல... அரஃபா நோன்பு இரண்டு வருடங்களின் பாவங்களுக்குப் பரிகாரம். ஆஷூரா நோன்பு ஒரு வருடப் பாவங்களுக்குப் பரிகாரம். ஒருவர் தொழுகையில் ஆமீன் சொன்னால், அது மலக்குகளின் ஆமீனுடன் சேர்ந்து அமைந்துவிட்டால், அதுவும் அவருடைய முந்திய எல்லாப் பாவங்களுக்கும் பரிகாரம்.. நாம் குறிப்பிட்ட இந்த அனைத்தும் சிறுபாவங்களுக்குப் பரிகாரமாக ஆகும். (அல்மஜ்மூஃ ஷரஹ் அல்முஹத்தப், பாகம் 6, சவ்ம் யவ்ம் அரஃபா)
இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்களும், ‘தூய்மை, தொழுகை, றமளான் நோன்பு, அரஃபா தின நோன்பு, ஆஷூரா நோன்பு இவை சிறுபாவங்களுக்கு மட்டுமே பரிகாரம்’ என்கிறார்கள். (அல்ஃபதாவா அல்குப்ரா, பாகம் 5)
பெரும்பாவங்களைப் பொறுத்த வரை அதற்குக் கட்டாயம் பாவமன்னிப்புத் தேட வேண்டும். செய்த பாவங்களை நினைத்துக் கவலைப்படுவது, பயப்படுவது, இனி செய்யமாட்டேன் என்று உறுதி எடுத்துக்கொள்வது, அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்பது, பாதிக்கப்பட்டவர்களிடமும் மன்னிப்புக் கேட்பது - இந்த அம்சங்கள் நிறைவேற வேண்டும். அப்போதுதான் மன்னிக்கப்படும்.
ஒருவர் ஆண்டு முழுக்க பெரும் பாவங்களைத் துணிந்து செய்துவிட்டு, பல அநியாயங்களையும் பண்ணிவிட்டு, ஆஷூரா நோன்பு வைத்து பரிகாரம் தேடிக்கொள்ள நினைத்தால், அவர் பெரிய ஏமாளிதான்.
இமாம் இப்னுல் கய்யிம் (ரஹ்) இப்படிப்பட்ட ஆளைப் பற்றி எழுதுவதைக் கவனியுங்கள்: ‘இந்த வழிகெட்ட மனிதன் றமளான் மாத நோன்பும் ஐந்து நேரத் தொழுகைகளும் அரஃபா நோன்பு, ஆஷூரா நோன்புகளைக் காட்டிலும் மிக முக்கியமானவை என்பதைத் தெரியாமல் இருக்கிறான். ஒரு றமளானிலிருந்து மறு றமளானும், ஒரு ஜுமுஆவிலிருந்து மறு ஜுமுஆவும்கூட அதற்கு இடையே நடந்த பாவங்களுக்குப் பரிகாரம்தான். ஆனால், அதற்குப் பெரும்பாவங்கள் விடப்பட்டிருக்க வேண்டும்.
பெரும்பாவங்களை விடுவது, நல்ல அமல்களைச் செய்வது இந்த இரண்டும் சேர்ந்தால் மட்டுமே சிறுபாவங்கள் மன்னிக்கப்படும். ஏமாந்துபோகிறவன் தனது நல்ல அமல்கள் தன் பாவங்களைவிட அதிகமாக இருக்கும் என்று நினைத்துக்கொள்கிறான். அவன் தன் கெட்ட அமல்களின் பக்கம் கவனம் செலுத்துவதில்லை. தன் பாவங்களைப் பற்றி யோசிப்பதில்லை. ஆனால், ஒரு நல்ல அமலைச் செய்தவுடன் அதையே நம்பிக்கிடக்கிறான். அதை மட்டுமே ஞாபகத்தில் வைக்கிறான்.
இவனுக்கு உதாரணம் யார் தெரியுமா? ஒருவன் அல்லாஹ்விடம் தன் நாவைக் கொண்டு மன்னிப்புக் கேட்கிறான். ஒரு நாளைக்கு நூறு தடவை ஸுப்ஹானல்லாஹ் சொல்லி அல்லாஹ்வை மகத்துவப்படுத்துகிறான். ஆனால், முஸ்லிம்களைப் பற்றி புறம் பேசுகிறான். அவர்களின் கண்ணியத்திற்குப் பங்கம் உண்டாக்கி அவதூறு பரப்புகிறான். நாள் முழுக்க அல்லாஹ்வுக்குப் பிடிக்காததைப் பேசுகிறான். இவனோ தனது தஸ்பீஹ் பற்றியும் லா இலாஹ இல்லல்லாஹ் சொல்லிக்கொண்டிருப்பது பற்றியும் அதன் சிறப்பையே நினைத்துக்கொண்டிருக்கிறான். புறம், பேசுவது, பொய் சொல்வது, அவதூறு பேசுவது, இன்னும் நாவினால் உண்டாகும் எத்தனையோ பாவங்களின் பக்கம் கொஞ்சமும் கவனம் செலுத்துவதில்லை. இப்படிப்பட்டவர்கள்தான் வடிகட்டிய ஏமாளிகள்.’ (அல்மவ்சூஆ அல்ஃபிக்ஹிய்யா, பாகம் 31)
5. ஆஷூரா வரலாறும் படிப்பினைகளும்
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) சொல்கிறார்கள்:
أَنَّ أَهْلَ الْجَاهِلِيَّةِ كَانُوا يَصُومُونَ يَوْمَ عَاشُورَاءَ وَأَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم صَامَهُ وَالْمُسْلِمُونَ قَبْلَ أَنْ يُفْتَرَضَ رَمَضَانُ فَلَمَّا افْتُرِضَ رَمَضَانُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِنَّ عَاشُورَاءَ يَوْمٌ مِنْ أَيَّامِ اللَّهِ فَمَنْ شَاءَ صَامَهُ وَمَنْ شَاءَ تَرَكَهُ
அறியாமைக் கால மக்கள் (குறைஷிகள்) முஹர்ரம் பத்தாவது நாள் (ஆஷூரா) அன்று நோன்பு வைப்பார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் முஸ்லிம்களும் றமளான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன்புவரை முஹர்ரம் பத்தாவது நாளில் நோன்பு வைத்தார்கள். றமளான் நோன்பு கடமையானதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ‘முஹர்ரம் பத்தாவது நாள் அல்லாஹ்வின் நாட்களில் ஒரு நாள். நாடியவர் அந்நாளில் நோன்பு நோற்கலாம்; நாடியவர் அதை விட்டுவிடலாம்’ என்றார்கள். (முஸ்லிம் 2072)
ஆஷூரா நோன்பு மிகப் பழமையானது. நபி (ஸல்) அவர்கள் பிறப்பதற்கு முன்பே அது குறைஷிகளின் வழக்கத்தில் இருந்தது. நபி இப்றாஹீம் (அலை) அவர்களின் மார்க்க வழிமுறைகளில் மிச்சம் இது. (தஃப்சீர் குர்துபீ)
وَكَانَ يَوْمًا تُسْتَرُ فِيهِ الْكَعْبَةُ
அந்த நாளில்தான் கஅபாவுக்குப் புதிய திரை போடப்படும். (ஆயிஷா (ரலி), புகாரீ 1592)
இப்னு அப்பாஸ் (ரலி) சொல்கிறார்கள்:
أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَدِمَ الْمَدِينَةَ فَوَجَدَ الْيَهُودَ صِيَامًا يَوْمَ عَاشُورَاءَ فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مَا هَذَا الْيَوْمُ الَّذِى تَصُومُونَهُ فَقَالُوا هَذَا يَوْمٌ عَظِيمٌ أَنْجَى اللَّهُ فِيهِ مُوسَى وَقَوْمَهُ وَغَرَّقَ فِرْعَوْنَ وَقَوْمَهُ فَصَامَهُ مُوسَى شُكْرًا فَنَحْنُ نَصُومُهُ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَنَحْنُ أَحَقُّ وَأَوْلَى بِمُوسَى مِنْكُمْ فَصَامَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَأَمَرَ بِصِيَامِهِ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மதீனா வந்தபோது, யூதர்கள் முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு வைத்திருப்பதைக் கண்டார்கள். ‘நீங்கள் நோன்பு நோற்றிருக்கும் இது என்ன நாள்?’ என்று கேட்டார்கள். அதற்கு யூதர்கள், ‘இது ஒரு மகத்தான நாள்; இந்த நாளில்தான் மூஸாவையும் அவருடைய சமுதாயத்தையும் அல்லாஹ் காப்பாற்றி, ஃபிர்அவ்னையும் அவனுடைய சமுதாயத்தையும் மூழ்கடித்தான். எனவே, மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்வுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக நோன்பு நோற்றார்கள். ஆகவே, நாங்களும் இந்நாளில் நோன்பு நோற்கிறோம்’ என்றார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ‘உங்களைவிட நாங்களே மூஸா (அலை) அவர்களுக்கு மிகவும் உரிமையுள்ளவர்கள், நெருக்கமானவர்கள்’ என்று சொன்னார்கள். பின்னர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறும் கட்டளை பிறப்பித்தார்கள். (முஸ்லிம் 2083)
ஆஷூரா தினத்தை ஒரு மகத்தான நாள் هَذَا يَوْمٌ عَظِيمٌ என்று சொன்னது மட்டுமல்ல, நல்ல நாள் என்றும் யூதர்கள் சொன்னார்கள்.
هَذَا يَوْمٌ صَالِحٌ
இது ஒரு நல்ல நாள். (அறிவிப்பு: இப்னு அப்பாஸ் (ரலி), புகாரீ 2004)
هَذَا الْيَوْمُ الَّذِى أَظْهَرَ اللَّهُ فِيهِ مُوسَى وَبَنِى إِسْرَائِيلَ عَلَى فِرْعَوْنَ فَنَحْنُ نَصُومُهُ تَعْظِيمًا لَهُ
இந்த நாளில்தான் மூஸா (அலை) அவர்களுக்கும் பனூ இஸ்ராயீல் சமுதாயத்துக்கும் பிர்அவ்னுக்கெதிராக அல்லாஹ் வெற்றி கொடுத்தான். எனவே, இந்நாளைக் கண்ணியப்படுத்தி நாங்கள் நோன்பு வைக்கிறோம். (இப்னு அப்பாஸ் (ரலி), முஸ்லிம் 2712)
நபி (ஸல்) அவர்கள் இதை மறுக்கவில்லை. மக்கா வாழ்க்கையின்போதே தாமும் முஸ்லிம்களும் நோன்பு வைப்பது வழக்கம் என்றாலும், இந்த தடவை யூதர்களின் விசயம் தெரிய வந்தவுடன், ஆஷூரா நோன்பை வலியுறுத்திக் கட்டளை இட்டார்கள்.
فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لأَصْحَابِهِ أَنْتُمْ أَحَقُّ بِمُوسَى مِنْهُمْ فَصُومُوا
தம் தோழர்களிடம், அந்த யூதர்களைவிட நீங்கள்தான் மூஸா (அலை) அவர்கள்மீது உரிமை உள்ளவர்கள். ஆகவே, நீங்களும் நோன்பு வையுங்கள் என்றார்கள். (இப்னு அப்பாஸ் (ரலி), புகாரீ 4680)
ஆஷூராவைக் கடமையாக்கியவுடன் அதே நாளில் எல்லா முஸ்லிம்களுக்கும் தகவல் அனுப்பினார்கள் நபியவர்கள். ருபய்யிஉ பின்த் முஅவ்வித் இப்னு அஃப்ரா (ரலி) அவர்களின் செய்தி முக்கியமானது.
عَنِ الرُّبَيِّعِ بِنْتِ مُعَوِّذِ بْنِ عَفْرَاءَ قَالَتْ أَرْسَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم غَدَاةَ عَاشُورَاءَ إِلَى قُرَى الأَنْصَارِ الَّتِى حَوْلَ الْمَدِينَةِ مَنْ كَانَ أَصْبَحَ صَائِمًا فَلْيُتِمَّ صَوْمَهُ وَمَنْ كَانَ أَصْبَحَ مُفْطِرًا فَلْيُتِمَّ بَقِيَّةَ يَوْمِهِ فَكُنَّا بَعْدَ ذَلِكَ نَصُومُهُ وَنُصَوِّمُ صِبْيَانَنَا الصِّغَارَ مِنْهُمْ إِنْ شَاءَ اللَّهُ وَنَذْهَبُ إِلَى الْمَسْجِدِ فَنَجْعَلُ لَهُمُ اللُّعْبَةَ مِنَ الْعِهْنِ فَإِذَا بَكَى أَحَدُهُمْ عَلَى الطَّعَامِ أَعْطَيْنَاهَا إِيَّاهُ عِنْدَ الإِفْطَارِ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஆஷூரா (முஹர்ரம் பத்தாவது) நாளன்று காலையில் மதீனா புறநகரிலுள்ள அன்ஸாரிகளின் கிராமங்களுக்கு ஆளனுப்பி ‘(இன்று) காலையில் நோன்பாளியாக இருப்பவர், தமது நோன்பைத் தொடரட்டும்; நோன்பு நோற்காமல் காலைப் பொழுதை அடைந்தவர் இன்றைய தினத்தின் எஞ்சிய பொழுதை (நோன்பிருந்து) நிறைவு செய்யட்டும்’ என்று அறிவிக்கச் செய்தார்கள்.
நாங்கள் அதன் பிறகு அந்நாளில் நோன்பு வைத்தோம்; எங்கள் சிறுவர்களையும் - அல்லாஹ் நாடினால் - நோன்பு நோற்க வைப்போம். நாங்கள் மஸ்ஜிதுக்குச் செல்லும்போது, கம்பளியாலான விளையாட்டுப் பொருட்களை அவர்களுக்காகச் செய்து, அவர்களில் ஒருவன் (பசியால்) உணவு கேட்டு அழும்போது நோன்பு துறக்கும் நேரம்வரை (அவன் பசியை மறந்திருப்பதற்காக) அவனிடம் அந்த விளையாட்டுப் பொருளைக் கொடுப்போம். (முஸ்லிம் 2091)
இதிலிருந்து தெரிய வருபவை:
1. மக்காவில் ஆஷூரா நோன்பு கடமையாக இருக்கவில்லை. ஆனால், நபியவர்களும் முஸ்லிம்களும் நோன்பு வைப்பதுண்டு.
2. நபி (ஸல்) மதீனா வந்தபின்பு அதே நாளில் யூதர்களும் நோன்பு வைப்பதைப் பார்த்தவுடன், அவர்களைவிட நாமே மூஸா (அலை) அவர்களுக்கு அதிகம் உரிமை உள்ளவர்கள் என்ற காரணத்தைச் சொல்லி அந்நோன்பை அவசியமாக்கினார்கள். உடனே மதீனாவின் கிராமப்புற முஸ்லிம்களுக்கும் அறிவிப்புச் செய்தார்கள்.
3. இந்த நாளில்தான் மூஸா (அலை) அவர்களுக்கும் பனூ இஸ்ராயீல் சமுதாயத்துக்கும் வெற்றி கிட்டியது. அல்லாஹ்வை நம்பியவர்களுக்கு நிச்சயம் கடைசியில் வெற்றி கிட்டும், அல்லாஹ்வை நிராகரித்தவர்கள் அழிந்தே தீருவார்கள் என்பது நிரூபணமானது.
4. மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தி நோன்பு வைத்தார்கள். இப்படி நன்றி செலுத்துவது நபிமார்களின் வழிமுறை என்று தெரிகிறது.
5. யூதர்களைவிட நாமே மூஸா (அலை) அவர்களுக்கு மிகவும் உரிமை உள்ளவர்கள்; நெருக்கமானவர்கள். காரணம், மூஸா (அலை) அவர்களுக்கு யூதர்கள் மாறுசெய்தார்கள்; அவர்களின் கட்டளைகளைப் புறக்கணித்தார்கள். நாமோ மூஸா (அலை) அவர்களை உண்மையாக நேசிக்கிறோம்; அவர்களுக்கு இறக்கப்பட்ட வேதம் தவ்றாதை உண்மைப்படுத்துகிறோம்.
இமாம் முஹம்மது ஸாலிஹ் அல்உசைமீன் (ரஹ்) விளக்கும்போது, நபி(ஸல்) அவர்களும் அவர்களுடன் இருந்த மக்களும் மற்ற யாரைக் காட்டிலும் நபிமார்கள்மீது அதிகம் உரிமைகொண்டவர்கள். அல்லாஹ்வும் இதைப் பின்வருமாறு சொல்லிக் காட்டுகிறான்:
إِنَّ أَوْلَى النَّاسِ بِإِبْرَاهِيمَ لَلَّذِينَ اتَّبَعُوهُ وَهَذَا النَّبِيُّ وَالَّذِينَ آمَنُوا وَاللَّهُ وَلِيُّ الْمُؤْمِنِينَ
நிச்சயமாக மனிதர்களில் இப்றாஹீமுக்கு மிகவும் நெருங்கியவர், அவரைப் பின்பற்றியவர்களும், இந்த நபியும், விசுவாசம் கொண்டார்களே அவர்களும்தான். விசுவாசிகளைப் பாதுகாப்பவனாக அல்லாஹ்வே இருக்கிறான் (குர்ஆன் 3:68)
6. ‘உங்களைவிட நாங்களே மூஸா (அலை) அவர்களுக்கு மிகவும் உரிமை உள்ளவர்கள், நெருக்கமானவர்கள்’ என்ற நபி (ஸல்) அவர்களின் கூற்று, நபிவழிக்கு மாறுசெய்துவரும் இன்றைய முஸ்லிம்களையும் மறைமுகமாக எச்சரிக்கிறது. இவர்களும் யூதர்களைப்போல தங்கள் நபியின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாது நடந்தால், நிச்சயம் நபி முஹம்மது (ஸல்) அவர்களின் நெருக்கத்தையும் அன்பையும் பெற முடியாது. நபி முஹம்மதின்மீது உரிமை கொண்டாட அருகதை இல்லாமல் ஆவார்கள். ஒரு நோன்பை வைத்துவிட்டு நாங்கள் மூஸாவைப் பின்பற்றுகிறோம் என்று சொல்லிய யூதர்கள் எப்படி போலிகளோ, அப்படியே இந்த முஸ்லிம்களும் போலிகளாக கணக்கிடப்படுவார்கள். தங்கள் நபியை உண்மையாகப் பின்பற்றுவோர், அந்த நபியின் எல்லாக் கட்டளைக்கும் கட்டுப்பட வேண்டும். யூதர்களைப்போல இருக்கக் கூடாது.
7. நபித்தோழர்கள் தங்கள் குழந்தைகளையும் ஆஷூரா நோன்பிருக்க வைத்திருக்கிறார்கள். நபியவர்களின் கட்டளையை மதிப்பதில் அவர்களின் ஆர்வம் தெரிகிறது. சின்ன வயதிலேயே குழந்தைகளுக்குத் தர்பியத் செய்கிற விவேகம் புரிகிறது.
8. ரமழான் நோன்பு கடமையாக்கப்படும்வரை இந்த நிலையே நீடித்தது. அதன் பிறகு ஆஷூரா நோன்பு அவரவரின் விருப்பத்திற்கு விடப்பட்டுவிட்டது. இதுபற்றி வந்துள்ள வேறு அறிவிப்புகள்:
அஷ்அஸ் இப்னு கைஸ் (ரஹ்) சொல்கிறார்கள்:
دَخَلَ الأَشْعَثُ بْنُ قَيْسٍ عَلَى ابْنِ مَسْعُودٍ وَهُوَ يَأْكُلُ يَوْمَ عَاشُورَاءَ فَقَالَ يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ إِنَّ الْيَوْمَ يَوْمُ عَاشُورَاءَ. فَقَالَ قَدْ كَانَ يُصَامُ قَبْلَ أَنْ يَنْزِلَ رَمَضَانُ فَلَمَّا نَزَلَ رَمَضَانُ تُرِكَ فَإِنْ كُنْتَ مُفْطِرًا فَاطْعَمْ
நான் முஹர்ரம் பத்தாவது நாள் (ஆஷூரா) அன்று அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது (ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். நான், ‘அபூ அப்திர் ரஹ்மான், இன்று முஹர்ரம் பத்தாவது நாள் ஆயிற்றே?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘றமளான் நோன்பு கடமையாவதற்கு முன்பு (ஆஷூரா) நோன்பு நோற்கப்பட்டுவந்தது. றமளான் நோன்பு கடமையானபோது அந்த நோன்பு கைவிடப்பட்டது. ஆகவே, நீங்கள் நோன்பை விட்டுவிட விரும்பினால் நீங்களும் (என்னுடன்) சாப்பிடலாம்’ என்றார்கள். (முஸ்லிம் 2079)
ஜாபிர் இப்னு சமுரா (ரலி) சொல்கிறார்கள்:
عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ - رضى الله عنه - قَالَ كَانَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- يَأْمُرُنَا بِصِيَامِ يَوْمِ عَاشُورَاءَ وَيَحُثُّنَا عَلَيْهِ وَيَتَعَاهَدُنَا عِنْدَهُ فَلَمَّا فُرِضَ رَمَضَانُ لَمْ يَأْمُرْنَا وَلَمْ يَنْهَنَا وَلَمْ يَتَعَاهَدْنَا عِنْدَهُ
முஹர்ரம் பத்தாவது நாளில் நோன்பு நோற்குமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டு வந்தார்கள்; அந்நோன்பை நோற்குமாறு எங்களை ஊக்குவிக்கவும் செய்வார்கள். அந்த நாளில் (நாங்கள் நோன்பு நோற்கிறோமா என) எங்களைக் கவனித்தும் வந்தார்கள். றமளான் நோன்பு கடமையாக்கப்பட்டபோது, (ஆஷூரா நோன்பு நோற்குமாறு) எங்களுக்குக் கட்டளையிடவுமில்லை; எங்களுக்குத் தடை விதிக்கவுமில்லை; அந்த நாளில் எங்களைக் கவனிக்கவுமில்லை. (முஸ்லிம் 2080)
ஹுமைத் இப்னு அப்திர் ரஹ்மான் (ரஹ்) சொல்கிறார்கள்:
حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ أَنَّهُ سَمِعَ مُعَاوِيَةَ بْنَ أَبِى سُفْيَانَ خَطِيبًا بِالْمَدِينَةِ - يَعْنِى فِى قَدْمَةٍ قَدِمَهَا - خَطَبَهُمْ يَوْمَ عَاشُورَاءَ فَقَالَ أَيْنَ عُلَمَاؤُكُمْ يَا أَهْلَ الْمَدِينَةِ سَمِعْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- يَقُولُ لِهَذَا الْيَوْمِ هَذَا يَوْمُ عَاشُورَاءَ وَلَمْ يَكْتُبِ اللَّهُ عَلَيْكُمْ صِيَامَهُ وَأَنَا صَائِمٌ فَمَنْ أَحَبَّ مِنْكُمْ أَنْ يَصُومَ فَلْيَصُمْ وَمَنْ أَحَبَّ أَنْ يُفْطِرَ فَلْيُفْطِرْ
முஆவியா பின் அபீசுஃப்யான் (ரலி) அவர்கள் ஒரு முறை (சிரியாவிலிருந்து) மதீனாவுக்கு வந்தபோது, முஹர்ரம் பத்தாவது நாள் (ஆஷூரா) அன்று மக்களுக்கு உரையாற்றினார்கள். அப்போது ‘மதீனாவாசிகளே, உங்கள் அறிஞர்கள் எங்கே? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘இது, முஹர்ரம் பத்தாவது நாள் (ஆஷூரா) ஆகும்; இந்நாளில் நோன்பு நோற்பதை அல்லாஹ் உங்களுக்குக் கடமையாக்கவில்லை. நான் நோன்பு நோற்றிருக்கிறேன். உங்களில் நோன்பு நோற்க விரும்புகின்றவர் நோன்பு நோற்கட்டும்; விட்டுவிட விரும்புகின்றவர் விட்டுவிடட்டும்!’ என்று கூறியதை நான் செவியுற்றுள்ளேன் என்றார்கள். (முஸ்லிம் 2081)
9. நோன்பின் சட்டம் படிப்படியாக இறக்கப்பட்ட வரலாறும் இந்த ஆஷூரா குறித்த செய்திகளின் மூலம் தெரிகிறது. ஆரம்பத்தில் நபி (ஸல்) அவர்கள் மதீனா வந்த புதிதில் மாதத்திற்கு மூன்று நோன்பும் ஆஷூரா நோன்புமே முஸ்லிம்கள்மீது கடமையாயின. இந்த நோன்புகள் றமளான் நோன்பு கடமையானவுடன் ஸுன்னத்துகளாக ஆயின.
6. ஆஷூரா நோன்பு – எப்படி? ஏன்?
ஆஷூரா என்றால் பத்தாவது என அர்த்தம். ஆனால், முஹர்ரம் பத்தில் மட்டுமின்றி ஒன்பதிலும் நோன்பு வைப்பதே சிறந்தது.
عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ رضى الله عنهما يَقُولُ حِينَ صَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمَ عَاشُورَاءَ وَأَمَرَ بِصِيَامِهِ قَالُوا يَا رَسُولَ اللَّهِ إِنَّهُ يَوْمٌ تُعَظِّمُهُ الْيَهُودُ وَالنَّصَارَى فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَإِذَا كَانَ الْعَامُ الْمُقْبِلُ إِنْ شَاءَ اللَّهُ صُمْنَا الْيَوْمَ التَّاسِعَ قَالَ فَلَمْ يَأْتِ الْعَامُ الْمُقْبِلُ حَتَّى تُوُفِّىَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم
இப்னு அப்பாஸ் (ரலி) சொல்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஆஷூரா நாளில் தாமும் நோன்பு நோற்றார்கள். நோன்பு நோற்குமாறும் கட்டளையிட்டார்கள். அப்போது மக்கள், ‘அல்லாஹ்வின் தூதரே! இது யூதர்களும் கிறித்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளாயிற்றே’ என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ‘இன்ஷா அல்லாஹ், அடுத்த ஆண்டில் நாம் ஒன்பதாவது நாளிலும் நோன்பு நோற்போம்’ என்றார்கள். ஆனால், அடுத்த ஆண்டு வருவதற்குள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இறந்துவிட்டார்கள். (முஸ்லிம் 2088)
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ رضى الله عنهما قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لَئِنْ بَقِيتُ إِلَى قَابِلٍ لأَصُومَنَّ التَّاسِعَ
மற்றோர் அறிவிப்பில், ‘அடுத்த ஆண்டுவரை நான் உயிரோடிருந்தால் ஒன்பதாவது நாளிலும் நோன்பு நோற்பேன்’ என்று வந்துள்ளது. (முஸ்லிம் 2089)
عَنْ أَبِى مُوسَى رضى الله عنه قَالَ كَانَ أَهْلُ خَيْبَرَ يَصُومُونَ يَوْمَ عَاشُورَاءَ يَتَّخِذُونَهُ عِيدًا وَيُلْبِسُونَ نِسَاءَهُمْ فِيهِ حُلِيَّهُمْ وَشَارَتَهُمْ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَصُومُوهُ أَنْتُمْ
அபூமூஸா (ரலி) சொல்கிறார்கள்: கைபர்வாசிகள் (யூதர்கள்) முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்று வந்தார்கள்; அந்நாளை அவர்கள் பண்டிகை நாளாகக் கொண்டாடினர்; தங்களுடைய பெண்களுக்கு அந்நாளில் ஆபரணங்களையும் அழகிய ஆடைகளையும் அவர்கள் அணிவித்தார்கள். எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ‘இந்நாளில் நீங்கள் நோன்பு வையுங்கள்!’ என்றார்கள். (முஸ்லிம் 2085)
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் கூற்றாக இமாம் அப்துற்றஸ்ஸாக் (ரஹ்) தம்முடைய முஸன்னஃபில் பதிவு செய்துள்ள பின்வரும் செய்தி, யூதர்களுக்கு மாறுசெய்வதற்காக ஒன்பதிலும் பத்திலுமாக இரண்டு நாள்களில் நோன்பு வைப்பதே நபியவர்களின் விருப்பம் என்பதை நமக்கு உணர்த்துகிறது.
عَبْدُ الرَّزَّاقِ قَالَ: أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ: أَخْبَرَنِي عَطَاءٌ، أَنَّهُ سَمِعَ ابْنَ عَبَّاسٍ، يَقُولُ فِي يَوْمِ عَاشُورَاءَ: خَالِفُوا الْيَهُودَ وَصُومُوا التَّاسِعَ وَالْعَاشِرَ
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்து தாம் செவியுற்றதாக அதாஉ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். ‘ஆஷுறா நாளைக் குறித்து இப்னு அப்பாஸ் (ரலி) கூறும்போது, “யூதர்களுக்கு மாற்றமாக நடங்கள். முஹர்ரம் பிறை ஒன்பதிலும் பத்திலுமாக நோன்பு வையுங்கள்” என்று கூறினார்கள். (முஸன்னஃப் அப்துற்றஸ்ஸாக் 7839)
இது ஒரு குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கிறது. யூதர்களுக்கு மாறு செய்யும் நோக்கில் நபியவர்கள் அடுத்த ஆண்டில் ஒன்பதிலும் சேர்த்து வைக்க நாடினார்களா, அல்லது பத்துக்குப் பதில் ஒன்பதில் மட்டும் வைக்க விரும்பினார்களா என்ற சர்ச்சைக்குத் தெளிவு தருகிறது. நபிவழியை இப்னு அப்பாஸ் தமது சொல்லில் விளக்கிவிட்டார்கள். ஒன்பதிலும் பத்திலுமாக இரண்டு நாட்களிலும் நோன்பு வைப்பதின் மூலமே யூதர்களுக்கு மாறு செய்வது நபிவழியாகும். ஒன்பதில் மட்டும் வைத்து பத்தை விட்டுவிடுவதல்ல. இவ்விசயத்தில் யூதர்களுக்கு மாறு செய்கின்ற நபியவர்களின் விருப்பத்தை எந்த நபித்தோழர் அறிவிக்கிறாரோ, அதே இப்னு அப்பாஸ்தான் இந்த விளக்கத்தை அளிக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டாலே குழப்பம் விலகிவிடும். நபியின் அறபுமொழி வாசகத்தை இப்னு அப்பாஸ் போன்ற அறபியைவிடவும், குறிப்பாக அந்த நபித்தோழரைவிடவும் நாம் விளங்கப் போவதில்லை.
இதிலிருந்து தெரிய வருபவை:
1. ஆஷூரா நோன்பை பிறை 9, 10 இரண்டு நாட்களும் வைப்பதே சிறந்தது. நபி (ஸல்) அவர்கள் இச்சட்டத்தை அவர்களின் மரணத்திற்கு முந்திய வருடம்தான் சொன்னார்கள். அவர்கள் வைத்தது பத்தாம் நாள் மட்டுமே என்றாலும், ‘அடுத்த வருடம் உயிருடன் இருந்தால் ஒன்பதிலும் வைப்பேன்’ என்று அறிவித்ததைக் கொண்டு ஒன்பதில் வைப்பதும் நபிவழியாகும்.
2. இன்ஷா அல்லாஹ் அடுத்த வருடம் நான் உயிருடன் இருந்தால் என்ற சொல், நபியவர்கள் தம் இறுதிக் காலத்தை நெருங்கிக்கொண்டிருப்பதை உணர்ந்திருந்த நிலையைக் காட்டுகிறது. அல்லாஹ்வின் வெற்றி அவர்களின் அழைப்புப் பணியில் கிடைத்து, மக்கள் கூட்டம் கூட்டமாய் இஸ்லாமுக்குள் நுழைந்துகொண்டிருந்த நேரம் அது. கடைசி ஹஜ்ஜை முடித்துவிட்டு மதீனா திரும்பியிருந்த நேரம். அவர்களின் உடல்நிலை பலவீனப்பட்டுக்கொண்டிருந்த நேரம். அந்தக் கட்டத்திலும் நபியவர்கள் ஆஷூரா நோன்புடன் இருந்தார்கள். அடுத்த வருடம் இரண்டு நாட்கள் வைக்க ஆசைப்பட்டார்கள். இது ஒருபுறம் இபாதத்மீது அவர்களுக்கு இருந்த பேராசையைக் காட்டுகிறது. இன்னொரு புறம், யூத கிறித்துவர்களுக்கு மாற்றமாக நடக்க விரும்பிய அவர்களின் கொள்கை பிடிப்பைக் காட்டுகிறது.
3. பிறை ஒன்பதிலும் நபி (ஸல்) அவர்கள் நோன்பு வைக்க விரும்பிய ஒரே காரணம், யூதர்கள் கிறித்துவர்களுக்கு மாறு செய்வதைத் தவிர வேறில்லை.
இது நபிவழியின் மிக முக்கிய அடிப்படை, முக்கிய விதி. இதைப் பல கட்டங்களில் நபியவர்கள் செயல்படுத்தினார்கள். யூத, கிறித்துவர்களின் நம்பிக்கைகளுக்கும் நடைமுறைகளுக்கும் மாறு செய்வது முஸ்லிம்களின் மிக முக்கியப் பண்பு என்று வாய்ப்புக் கிட்டும்போதெல்லாம் உணர்த்தி வந்தார்கள். ஆஷூரா விசயத்திலும் அதைத் தவறவிடவில்லை.
யூதர்களும் கிறித்துவர்களும் அந்நாளில் நோன்பு வைப்பதுடன் நிறுத்திக்கொள்ளவில்லை. பண்டிகையும் கொண்டாடினார்கள். முஸ்லிம்கள் இதற்கு இரண்டு வழிகளில் மாறுசெய்ய சொல்லிக்கொடுத்தார்கள் நபியவர்கள்.
1. பத்துடன் ஒன்பதிலும் நோன்பு வைத்து மாறுசெய்வது.
2. வெறும் நோன்பு மட்டும் வைப்பது. பண்டிகை கொண்டாடுவதில்லை. (நமக்கு இரண்டு பண்டிகை நாட்கள் மட்டுமே. அந்த இரண்டு நாட்களிலும் நமக்கு நோன்பு ஹராம். யூத, கிறித்துவர்களோ அவர்களின் பண்டிகை நாட்களிலும் நோன்பு வைப்பார்கள்.)
4. இந்த நோன்பு குறித்த சட்ட விளக்கம் என்னவெனில், ஒன்பது பத்து இரண்டு நாட்களிலும் நோன்பு வைப்பது முஸ்தஹப் (விரும்பத்தக்கது). காரணம்,நபி (ஸல்) அவர்கள் பத்தில் நோன்பு வைத்தார்கள்; ஒன்பதிலும் வைக்க நாடி இருந்தார்கள். இக்கருத்தையே இமாம் ஷாஃபிஈ, அவர்களின் தோழர்கள், இமாம் அஹ்மது, இஸ்ஹாக் மற்றும் பலர் சொல்கிறார்கள்.
எனவே, குறைந்தபட்சம் பத்தில் வைக்கலாம். ஒன்பது, பத்து இரண்டிலும் வைப்பது சிறந்தது. இன்னும் முடிந்தால் முஹர்ரமில் அதிகமான நோன்புகள் வைக்கலாம். இந்த நிலைகளில் எதையும் பின்பற்றலாம்.
சிலர் பத்தில் மட்டும் வைப்பதை வெறுக்கத்தக்கது என்றோ, கூடாது என்றோ சொல்வதுண்டு. இது சரியல்ல.
இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) சொல்கிறார்கள்: ஆஷூரா அன்று நோன்பு வைப்பது ஒரு வருடப் பாவத்திற்கான பரிகாரம். அந்தத் தினத்தில் மட்டும் நோன்பு வைப்பது மக்ரூஹ் (வெறுக்கத்தக்கது) ஆகாது.. (அல்ஃபதாவா அல்குப்ரா, பாகம் 5)
இமாம் இப்னு ஹஜர் அல்ஹைஸமீ (ரஹ்), ஆஷூரா நாளில் மட்டும் நோன்பு வைப்பதில் எந்தத் தவறும் இல்லை என்கிறார்கள். (துஹ்ஃபத் அல்முஹ்தாஜ், பாகம் 3)
5. ஒன்பதில் தவற விட்டவர்கள், பத்தில் மட்டும் வைப்பது போதும்.
7. முஹர்ரம் – கொடிய பாவங்களின் விழாக் காலம் அல்ல!
முஹர்ரம் மாதத்தின் புனிதத்தை மதிப்பவர்கள், பாவங்களை விட்டு தூரமாகுவார்கள். நன்மைகளைச் செய்வார்கள். நோன்புகள் வைப்பார்கள் என்றே நபிவழி சொல்கிறது. ஆனால், நமது சமுதாயம் எல்லாப் பாவங்களுக்கும் வாசலைத் திறந்து வைத்து அதன் புனிதத்தைக் கெடுத்துக்கொண்டிருக்கிறது.
ஒன்றல்ல, இரண்டல்ல.. துல்லியமாகக் கணக்கிட்டு சொல்ல முடியாத அளவு, எத்தனையோ பாவங்களுக்கு விழாக் காலமாக முஹர்ரமை ஆக்கிவிட்டது. ஷிர்க், பித்அத்களின் கொண்டாட்டம் இந்த மாதத்தில்போல எந்த மாதத்திலும் இல்லை. உண்மை!
1. ஷீஆக்கள் போட்ட விதைகள்
இது இன்று நேற்றல்ல, காலங்காலமாக இருக்கும் நிலைமை. முஹர்ரமின் பெயரால் நடக்கும் அத்தனை ஷிர்க், பித்அத்களுக்கும் மூல காரணமாக இருந்தவர்கள், இருப்பவர்கள் ஷீஆக்கள்.
இவர்கள் யார் எனும் கேள்விக்கு இமாம் இப்னு பாஸ் (ரஹ்) அவர்களின் சுருக்கமான ஃபத்வா போதும்: ‘ஷீஆக்களில் பல பிரிவினர் உண்டு. அவர்களில் சிலர் அலீ (ரலி) அவர்களை வணங்குவார்கள், அவர்களை அழைத்து துஆ கேட்பார்கள், ஃபாத்திமா (ரலி), ஹுசைன் (ரலி) இன்னும் மற்றவர்களையும் வணங்குவார்கள். இப்படிப்பட்டவர்கள் காஃபிர்கள்.
இன்னும் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் எப்படியெனில், ஜிப்ரீல் (அலை) அவர்கள் அலீ (ரலி) அவர்களுக்கு துரோகம் செய்து நபித்துவத்தை முஹம்மதுக்கு வழங்கிவிட்டார், உண்மையில் அலீ (ரலி) அவர்கள்தாம் நபியாக வேண்டியவர்கள் என நம்பக்கூடியவர்கள்.
வேறு சிலரும் இருக்கிறார்கள், குறிப்பாக ராஃபிளி, இஸ்னா அஷரி என்று பன்னிரண்டு இமாம்களை நம்பிக்கைகொண்டவர்கள். இவர்கள் அலீ (ரலி) அவர்களை வணங்குவதுடன், தங்கள் இமாம்கள் அனைவரும் நபிமார்கள், மலக்குகளைவிட மேலானவர்கள் என்றும் சொல்வார்கள். எத்தனையோ கூட்டங்கள் அவர்களில் உண்டு. சிலர் காஃபிர்கள். சிலர் அப்படியல்ல. இவர்களில் மிதவாதிகள் யாரென்றால், அபூபக்ர், உமர், உஸ்மான் (ரலி) ஆகியோரைவிட அலீ (ரலி)தான் சிறந்தவர்கள் என்று சொல்பவர்கள்.
இப்படிச் சொல்கிறவன் காஃபிர் அல்ல. ஆனால், அவன் சொல்வது தப்பு. காரணம், அலீ (ரலி) அவர்கள் நான்காம் இடத்தையே பெறுவார்கள். அவர்களைவிட அபூபக்ர், உமர், உஸ்மான் (ரலி) ஆகியோர் சிறந்தவர்கள். ஒருவன் இவர்களைக் காட்டிலும் அலீ (ரலி) அவர்களைச் சிறப்பித்தால், அவன் தவறு செய்கிறான் என்பதோடு, நபித்தோழர்கள் அனைவரின் ஏகோபித்த முடிவுக்கு எதிராகப் போகிறான். ஆனால், அவன் காஃபிர் அல்ல.
ஷீஆக்கள் பல வகையினர், பல தரத்தினர். அவர்களைப் பற்றி நிறைய தெரிந்துகொள்ள விரும்புகிறவர்கள் அறிஞர்களின் புத்தகங்களைப் படிக்கட்டும். உதாரணமாக, முஹிப்புதீன் அல்கதீப் எழுதிய அல்குதூத் அல்அரீதா, இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) எழுதிய மின்ஹாஜுஸ்ஸுன்னா, இஹ்சான் இலாஹி ஜஹீர் (ரஹ்) எழுதிய அஷ்ஷீஆ வஸ்ஸுன்னா போன்றதைப் படிக்கலாம். இன்னும் பல புத்தகங்கள் அவர்களின் தவறுகள், தீங்குகளை விவரிக்கின்றன. (அல்லாஹ் நம்மைப் பாதுகாப்பானாக.) ஷீஆக்களில் மிக மோசமானவர்கள் ராஃபிளா என்று சொல்லப்படும் இமாமிகளும் இஸ்னா அஷரீகளும் நுசைரிகளும்தான்.
தன்னை முஸ்லிம் என்று சொல்லிக்கொள்ளும் ஒவ்வொருவனையும் முஸ்லிமாக ஏற்க வேண்டும் என்பதல்ல. எவன் அல்லாஹ்வையே வணங்கி, அவனுடைய தூதரை நம்பிக்கை கொண்டு, அந்தத் தூதர் கொண்டு வந்ததைப் பின்பற்றுகிறானோ அவனே உண்மை முஸ்லிம். ஒருவன் தன்னை முஸ்லிம் என்கிறான். ஆனால், ஃபாத்திமாவையோ, பதவீயையோ, அய்தரூசையோ, வேறு எதனையோ வணங்குகிறான் என்றால், அவன் முஸ்லிம் அல்ல..’ (மஜ்மூஃ அல்ஃபதாவா இப்னு பாஸ் 28/257)
இந்த ஷீஆக்கள்தான் முஹர்ரமை ஒரு துக்க மாதமாகச் சித்தரித்து முஸ்லிம் உலகில் ஏகப்பட்ட அனாசாரங்களை விதைத்தவர்கள்.
2. ஷீஆக்களும் முஹர்ரமும்
உலகம் முழுதும் ஷீஆக்கள் முஹர்ரமை துக்க மாதமாக அனுசரிக்கிறார்கள். பிறை ஒன்றிலிருந்து கருப்பு ஆடைகளை அணியத் தொடங்கும் அவர்கள், பத்து அன்று மேலாடையைக் கழற்றி எறிந்துவிட்டு மார்பில் அடித்துக்கொண்டு ஒப்பாரி வைக்கிறார்கள். உடலைக் கீறிக்கொள்வது, முகத்தில் அறைந்துகொள்வது, கத்தி ஓலமிட்டு ஒப்பாரி வைப்பது, குறுங்கத்திகள்கொண்ட சங்கிலிகளால் முதுகைக் காயப்படுத்திக்கொள்வது இந்த அனைத்தும் நபி (ஸல்) அவர்களின் பேரர் ஹுசைன் (ரலி) அவர்களின் மரணத்திற்காகச் செய்யப்படுகிறது.
ஹுசைன் (ரலி) அவர்கள் ஹிஜ்ரீ 61, முஹர்ரம் இராக் நாட்டின் கர்பலா எனும் இடத்தில் நடந்த போரில் கொல்லப்பட்டார்கள். அவர்களின் இரத்தம் சிந்தப்பட்டதை நினைவுகூர்ந்து தாங்களும் உடலைக் கீறிக்கொண்டு இரத்தம் சிந்துகிறார்கள் ஷீஆக்கள். இது மட்டுமின்றி, கர்பலாவுக்கு நேரடியாகப் போய் ஹுசைன் (ரலி) அவர்களின் கப்ரின் முன்பு (அவர்களது நம்பிக்கைப்படி) துக்கம் அனுசரிப்பதையும், அதன் மண்ணை எடுத்து வருவதையும் மிகச் சிறந்த அமலாக நம்புகிறார்கள்.
‘நீங்கள் ஹஜ்ஜு செய்ய விரும்பியும், ஹஜ்ஜு செய்ய முடியவில்லை என்றால் ஹுசைன் உடைய கப்ருக்குப் போய் வாருங்கள். அது உங்களுக்கு ஹஜ்ஜாக எழுதப்படும். நீங்கள் உம்றா செய்ய விரும்பி, அதுவும் முடியவில்லை என்றால், ஹுசைன் உடைய கப்ருக்குப் போய் வாருங்கள். அது உங்களுக்கு உம்றாவாக ஆகவிடும்’ என்று அவர்களின் புத்தகங்களில் எழுதி வைத்திருக்கிறார்கள். (வசாஇல் அஷ்ஷீஆ 10/332)
இந்தக் கோணத்தில் பார்த்தால், மார்க்கத்தின் அடிப்படைகள் அனைத்தையும் தகர்க்கிற கொள்கைகளை ஷீஆக்கள் பரப்புகிறார்கள் என்று புரியும். குறிப்பாக இது முஹர்ரம் மாதத்தில் உச்சக்கட்டத்தைத் தொடுகிறது.
இந்த இடத்தில் இமாம் இப்னு கஸீர் (ரஹ்) அவர்களின் சொல்லை மேற்கோள் காட்டுவது சிறந்தது. அவர்கள் எழுதுகிறார்கள்:
‘ஒவ்வொரு முஸ்லிமும் ஹுசைன் (ரலி) அவர்கள் கொல்லப்பட்டதை நினைத்து துக்கப்படத்தான் வேண்டும். காரணம், அவர்கள் முஸ்லிம்களின் தலைவர்களில் ஒருவர், நபித்தோழர்களில் ஓர் அறிஞர், அல்லாஹ்வின் தூதருடைய மகள்களில் சிறந்த மகளான ஃபாத்திமா (ரலி) அவர்களின் புதல்வர், பெரிய வணக்கசாலி, பெரும் வீரர், பெரும் வள்ளல். ஆனால், துக்கத்தையும் கவலையையும் வெளிப்படுத்த ஷீஆக்கள் செய்கிற எதிலுமே எந்த நன்மையும் இல்லை. அவர்களின் பெரும்பாலான காரியங்கள் முகத்துதியாகத்தான் இருக்கின்றன.
ஹுசைன் (ரலி) அவர்களின் தந்தை (அலீ) ஹுசைனை விடச் சிறந்தவர். அவரும் கொல்லப்பட்டார்தான். ஆனால், ஹுசைனுக்குச் செய்வது போன்ற எதையும் அவரின் தந்தை கொல்லப்பட்ட தினத்திற்காக இவர்கள் செய்வதில்லை. அவரின் தந்தையோ வெள்ளிக்கிழமை, ஃபஜ்ரு தொழுகைக்குப் பின் மஸ்ஜிதிலிருந்து வெளியேறிய நேரத்தில் கொல்லப்பட்டார். அது ஹிஜ்ரீ 40, றமளான் பிறை 17.
அஹ்லுஸ்ஸுன்னாவைப் பொறுத்த வரை அலீ (ரலி) அவர்களைவிட உஸ்மான் (ரலி) அவர்கள் சிறந்தவர். அவர்களோ தம் வீட்டிற்குள்ளேயே வைத்து முற்றுகை இடப்பட்டு, தொண்டை நரம்புகள் அறுபடும் அளவு வெட்டப்பட்டு கொல்லப்பட்டார்கள். அது ஹிஜ்ரீ 36, துல்ஹஜ்ஜு மாதத்தின் அய்யாமுத் தஷ்ரீக் நாளில் நடந்தது. மக்கள் அவர்களின் இறந்த தினத்தையும் துக்க தினமாக அனுசரிக்கவில்லை.
அலீ (ரலி), உஸ்மான் (ரலி) அவர்களைவிட உமர் இப்னுல் கத்தாப் (ரலி) இன்னும் சிறந்தவர். அவர்களோ ஃபஜ்ரு தொழுகையில், மிஹ்ராபில் நின்று கொண்டு குர்ஆன் ஓதிக்கொண்டிருக்கும்போது கொல்லப்பட்டார்கள். மக்கள் அவர்களின் இறந்த தினத்தையும் துக்க தினமாக அனுசரிக்கவில்லை. உமரைவிட அபூபக்ர் (ரலி) சிறந்தவர். அவரின் இறந்த தினத்தையும் யாரும் துக்க தினமாக அனுசரிக்கவில்லை.
இம்மையிலும் மறுமையிலும் ஆதமின் பிள்ளைகளுக்குத் தலைவராக ஆக்கப்பட்டவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்). முந்திய நபிமார்கள் இறந்ததுபோல் அவர்களையும் அல்லாஹ் எடுத்துக்கொண்டான். ஆனால், எந்த மனிதரும் இந்த ராஃபிளா ஷீஆக்கள் ஹுசைன் (ரலி) கொல்லப்பட்டதற்காக செய்வதுபோல நபியவர்கள் இறந்த தினத்தைத் துக்க தினமாக அனுசரிக்கவில்லை.
இந்தத் துயரங்களையும் இது போன்றவைகளையும் நினைக்கும்போது அலீ (ரலி) அவர்களின் வழியாக அறிவிக்கப்படும் நபிமொழியைச் சொல்வதே சிறந்தது. அவர்கள் அறிவிக்கிறார்கள் நபி (ஸல்) கூறியதாக: துயரத்திற்கு உள்ளான எந்த முஸ்லிமும் அதை அவர் நினைக்கும்போது இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் என்று சொல்லட்டும்.. அல்லாஹ் அந்தத் துயரத்திற்குச் சமமான கூலியை அவருக்குக் கொடுப்பான்..’ (அல்பிதாயா வந்நிஹாயா 8/221)
ஆக, ஷீஆக்கள் செய்கிற அத்தனையும் மார்க்கத்திற்கு எதிரானவை, நபிவழிக்கு முரணானவை.
3. துக்கமும் ஒப்பாரியும்
عَنْ أُمِّ عَطِيَّةَ قَالَتْ كُنَّا نُنْهَى أَنْ نُحِدَّ عَلَى مَيِّتٍ فَوْقَ ثَلاَثٍ إِلاَّ عَلَى زَوْجٍ أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًا وَلاَ نَكْتَحِلَ وَلاَ نَتَطَيَّبَ وَلاَ نَلْبَسَ ثَوْبًا مَصْبُوغًا إِلاَّ ثَوْبَ عَصْبٍ وَقَدْ رُخِّصَ لَنَا عِنْدَ الطُّهْرِ إِذَا اغْتَسَلَتْ إِحْدَانَا مِنْ مَحِيضِهَا فِي نُبْذَةٍ مِنْ كُسْتِ أَظْفَارٍ وَكُنَّا نُنْهَى عَنِ اتِّبَاعِ الْجَنَائِزِ
உம்மு அதிய்யா (ரலி) எனும் நபித்தோழி சொல்கிறார்கள்: இறந்து போனவர்களுக்காக மூன்று நாட்களுக்கு மேல் துக்கத்தை வெளிப்படுத்த நாங்கள் தடுக்கப்பட்டுள்ளோம். ஆனால், கணவன் இறந்த பின் அவனது மனைவி, நான்கு மாதம் பத்து நாட்கள் துக்கத்தை வெளிப்படுத்த வேண்டும். (அதாவது) இந்த நாட்களில் நாங்கள் சுர்மா இடவோ, நறுமணப் பொருட்களைப் பூசவோ, சாயமிடப்பட்ட ஆடைகளை அணியவோ கூடாது. ஆனால், நெய்வதற்கு முன் நூலில் சாயமிடப்பட்டு தயாரிக்கப்பட்ட ஆடைகளை அணியலாம். எங்களில் ஒருத்தி மாதவிடாயிலிருந்து நீங்குவதற்காகக் குளிக்கும்போது நறுமணப் பொருட்களைப் பயன்படுத்துவது அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜனாஸாவைப் பின் தொடர்ந்து செல்வதை விட்டும் நாங்கள் தடுக்கப்பட்டிருந்தோம். (புகாரீ 313)
கணவனை இழந்த மனைவி தவிர யாராக இருந்தாலும், அவருக்கு நெருக்கமான யார் இறந்திருந்தாலும், பெற்றெடுத்த தாயே என்றாலும் மூன்று நாட்களுக்கு மேல் அவர்களுக்காக துக்கம் அனுசரிக்க அனுமதி கொடுக்கவில்லை நபியவர்கள். இந்த ஷீஆக்களோ ஆயிரம் வருடங்களாக ஹுசைன் (ரலி) அவர்களுக்காக துக்கம் அனுசரிக்கிறார்கள். அந்த அனுசரித்தலும் முழுக்கமுழுக்க நபி (ஸல்) அவர்களின் கண்டனத்திற்கும் எச்சரிக்கைக்கும் உரியதாக இருக்கிறது. பின்வரும் நபிமொழிகளைக் கவனியுங்கள்:
لَيْسَ مِنَّا مَنْ ضَرَبَ الْخُدُودَ وَشَقَّ الْجُيُوبَ وَدَعَا بِدَعْوَى الْجَاهِلِيَّةِ
‘(துக்கத்தினால்) கன்னங்களில் அறைந்துகொள்பவனும் சட்டைகளைக் கிழித்துக்கொள்பவனும் அறியாமைக்கால (மாச்சரியங்களுக்காக) அழைப்புவிடுப்பவனும் நம்மைச் சார்ந்தவன் அல்லன்.’ (அறிவிப்பு: அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது (ரலி), புகாரீ 1297, 1298)
عَنْ أَبِي أُمَامَةَ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى الله عَليْهِ وسَلَّمَ لَعَنَ الْخَامِشَةَ وَجْهَهَا وَالشَّاقَّةَ جَيْبَهَا وَالدَّاعِيَةَ بِالْوَيْلِ وَالثُّبُورِ
அபூஉமாமா (ரலி) சொல்கிறார்கள்: ‘முகத்தைப் பிறாண்டிக் கொள்ளும் பெண்ணையும், சட்டையைக் கிழித்துக் கொள்ளும் பெண்ணையும், ‘என் கேடே! என் நாசமே!’ என ஒப்பாரி வைக்கும் பெண்ணையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சபித்துள்ளார்கள்.’ (சுனன் இப்னு மாஜா 1633, ஸஹீஹு இப்னு மாஜா 1289)
النَّائِحَةُ إِذَا لَمْ تَتُبْ قَبْلَ مَوْتِهَا تُقَامُ يَوْمَ الْقِيَامَةِ وَعَلَيْهَا سِرْبَالٌ مِنْ قَطِرَانٍ وَدِرْعٌ مِنْ جَرَبٍ
‘ஒப்பாரி வைப்பவள் தன் மரணத்துக்கு முன் பாவமன்னிப்பு தேடாத நிலையில் மரணிப்பாளேயானால் அவள் மறுமைநாளில் கொண்டு வரப்படும்போது அவளுக்கு தாரினால் ஆன கீழாடையும் உருக்கினாலான சட்டையும் அணிவிக்கப்படும்.’ (அறிவிப்பு: அபூமாலிக் கஅப் இப்னு ஆஸிம் (ரலி), முஸ்லிம் 1700)
இப்படி ஒப்பாரி வைப்பவர்கள் முஹர்ரம் ஆஷூரா நோன்பைக்கூட ஹுசைன் (ரலி) அவர்களின் மரணத்திற்காக வைப்பதாகவே நினைக்கிறார்கள். ஹுசைன் (ரலி) அவர்களோ நபி (ஸல்) அவர்களுக்குப் பின் மரணமானார்கள். அப்படியிருக்க நபியவர்கள் எப்படி துக்கம் அனுசரிக்க முடியும் என்று இவர்கள் சிந்திக்க வேண்டாமா?
4. பஞ்சா வணக்கம், தீ மிதி, நேர்ச்சை
தாங்கள் ஷீஆக்கள் அல்ல, ஸுன்னத் ஜமாஅத்தினர் என்று நினைத்துக்கொள்கிறவர்கள் ஏராளமான ஷிர்க், பித்அத்களை முஹர்ரமில் செய்கிறார்கள். அதில் மிக முக்கியமானது, பஞ்சா.
பஞ்சா என்றால் ஐந்து. அதாவது, நபி (ஸல்), அலீ, ஃபாத்திமா, ஹஸன், ஹுசைன் (ரலி) ஆகிய ஐந்து நபர்களை நினைவுகூரும் விதமாய் ஐந்து விரல்கள்கொண்ட கை ஒன்றை வெள்ளியில் செய்து தெரு முச்சந்தியில் பெரிய மேடை போட்டு வைத்துவிடுகிறார்கள். முஹர்ரம் பிறை பிறந்ததிலிருந்து பத்து நாட்கள் அந்த வெள்ளிக் கையை ஜோடித்து வைக்கிறார்கள். கூடவே தினசரி அதற்குச் சந்தனம் பூசுவதும், சாம்பிராணி, ஊதுபத்தி, மல்லிகைப் பூ ஜோடனை என்று பெரிய பூஜைகள் நடக்கின்றன. தெருவில் வருவோர் போவோர் அந்தப் பஞ்சாவின் முன் நின்று பிரார்த்தித்து அதன் அருளை வேண்டிச் செல்கிறார்கள். இறுதியில் பத்தாம் நாள் பெரியதோர் ஊர்வலம் நடக்கின்றது. பேண்ட் வாத்தியம், ஆட்டம் பாட்டம், புலி வேஷத்தில் ஆடுவது, வாண வேடிக்கை, சாகசங்கள் செய்வது என்று காஃபிர்களின் கோயில் திருவிழாவுக்கு நிகரான எல்லாம் நடந்து முடிகின்றது.
மொத்தத்தில் முழுக்கமுழுக்க ஷிர்க் கொடி கட்டிப் பறக்கின்றது. இந்தப் பஞ்சாவைத் தூக்க நேர்ச்சை செய்கிறவர்களும் உண்டு. கோயில் திருவிழாக்களில் தீ மிதிக்க நேர்ச்சை செய்துகொள்வதுபோல பஞ்சாவுக்காகவும் நேர்ச்சை செய்து தீ மிதிக்கிறார்கள். இந்த நேர்ச்சை அல்லாஹ்வுக்கு மாறுசெய்வதற்காக உள்ள நேர்ச்சை. பெரும் பாவம் மட்டுமின்றி பெரிய ஷிர்க்கும் கூட.
مَنْ نَذَرَ أَنْ يُطِيعَ اللَّهَ فَلْيُطِعْهُ وَمَنْ نَذَرَ أَنْ يَعْصِيَهُ فَلاَ يَعْصِهِ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சொன்னார்கள்: அல்லாஹ்வுக்கு கீழ்ப்படிவதாக ஒருவர் நேர்ந்துகொண்டால் (அதை நிறைவேற்றும் முகமாக) அவனுக்கு அவர் கீழ்ப்படியட்டும்! அல்லாஹ்வுக்கு மாறுசெய்வதாக ஒருவர் நேர்ந்துகொண்டால் (அதை நிறைவேற்றுவதற்காக) அவனுக்கு அவர் மாறுசெய்திட வேண்டாம். (அறிவிப்பு: ஆயிஷா (ரலி), புகாரீ 6696)
தீ மிதிக்க நேர்ந்துகொள்வது அல்லாஹ்வுக்கு வெளிப்படையாக மாறுசெய்வது. இப்படி நம்மை வருத்திக்கொள்வதை அல்லாஹ் விரும்பவில்லை. அவனுக்கு இதில் எந்தத் தேவையும் இல்லை.
وَلَا تَقْتُلُوا أَنْفُسَكُمْ إِنَّ اللَّهَ كَانَ بِكُمْ رَحِيمًا وَمَنْ يَفْعَلْ ذَلِكَ عُدْوَانًا وَظُلْمًا فَسَوْفَ نُصْلِيهِ نَارًا وَكَانَ ذَلِكَ عَلَى اللَّهِ يَسِيرًا
உங்களை நீங்களே அழித்துக்கொள்ளாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்கள்மீது மிக்க அன்புடையவனாக இருக்கின்றான். எவரேனும் (அல்லாஹ்வின்) வரம்பை மீறி அநியாயமாக இவ்வாறு செய்தால், நாம் அவரை (மறுமையில்) நரகத்தில் சேர்த்து விடுவோம். இவ்வாறு செய்வது அல்லாஹ்வுக்கு மிகச் சுலபமானதே. (குர்ஆன் 4:29, 30)
وَلاَ تُلْقُواْ بِأَيْدِيكُمْ إِلَى التَّهْلُكَةِ وَأَحْسِنُواْ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُحْسِنِينَ
உங்களை நீங்களே ஆபத்திற்குள்ளாக்கிக்கொள்ளாதீர்கள். நன்மையே செய்யுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்பவர்களை நேசிக்கின்றான். (குர்ஆன் 2:195)
عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى شَيْخًا يُهَادَى بَيْنَ ابْنَيْهِ، قَالَ: مَا بَالُ هَذَا؟யு، قَالُوا: نَذَرَ أَنْ يَمْشِيَ، قَالَ: إِنَّ اللَّهَ عَنْ تَعْذِيبِ هَذَا نَفْسَهُ لَغَنِيٌّயு، وَأَمَرَهُ أَنْ يَرْكَبَ
ஒரு முதியவர் தமது இரண்டு புதல்வர்(கள் தம்மைத் தோள்களில் தாங்கிக்கொண்டிருக்க, அவர்)களிடையே தொங்கியபடி கால்கள் பூமியில் இழுபட வந்துகொண்டிருந்ததைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், ‘இவருக்கு என்ன நேர்ந்தது’ என்று கேட்டார்கள். ‘(கஅபா வரை) நடந்து செல்வதாக இவர் நேர்ச்சை செய்திருக்கிறார்’ என்று மக்கள் கூறினார்கள். நபி (ஸல்), ‘இவர் தம்மை இவ்விதம் வேதனைப்படுத்திக்கொள்வதிலிருந்து அல்லாஹ் தேவையற்றவன்!’ என்று கூறிவிட்டு, அவரை வாகனத்தில் ஏறிச்செல்லுமாறு உத்தரவிட்டார்கள். (அறிவிப்பு: அனஸ் (ரலி), புகாரீ - 1865)
عَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: بَعَثَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَرِيَّةً فَاسْتَعْمَلَ رَجُلًا مِنَ الأَنْصَارِ وَأَمَرَهُمْ أَنْ يُطِيعُوهُ، فَغَضِبَ، فَقَالَ: أَلَيْسَ أَمَرَكُمُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ تُطِيعُونِي؟ قَالُوا: بَلَى، قَالَ: فَاجْمَعُوا لِي حَطَبًا، فَجَمَعُوا، فَقَالَ: أَوْقِدُوا نَارًا، فَأَوْقَدُوهَا، فَقَالَ: ادْخُلُوهَا، فَهَمُّوا وَجَعَلَ بَعْضُهُمْ يُمْسِكُ بَعْضًا، وَيَقُولُونَ: فَرَرْنَا إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ النَّارِ، فَمَا زَالُوا حَتَّى خَمَدَتِ النَّارُ، فَسَكَنَ غَضَبُهُ، فَبَلَغَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: لَوْ دَخَلُوهَا مَا خَرَجُوا مِنْهَا إِلَى يَوْمِ القِيَامَةِ، الطَّاعَةُ فِي المَعْرُوفِ
அலீ (ரலி) சொல்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஒரு படைப்பிரிவை அனுப்பி அதற்கு அன்ஸாரிகளில் ஒருவரைத் தளபதியாக்கி அவருக்குக் கீழ்ப்படிந்து நடக்கும்படி படைவீரர்களுக்கு உத்தரவிட்டார்கள். (அவர்கள் ஏதோ தவறிழைத்துவிட) அவர்கள்மீது அவர் கோபமுற்று, ‘நபி (ஸல்) அவர்கள் எனக்குக் கீழ்ப்படிந்து நடக்கும்படி உங்களுக்குக் கட்டளையிடவில்லையா’ என்று கேட்டார். அவர்கள், ‘ஆம் (கட்டளையிட்டார்கள்)’ என்று பதிலளித்தார்கள். அவர், ‘அப்படியென்றால் எனக்காக விறகு சேகரியுங்கள்’ என்று சொல்ல, அவர்களும் அவ்வாறே சேகரித்தார்கள். அவர், ‘நெருப்பு மூட்டுங்கள்’ என்று சொல்ல, அவர்களும் அவ்வாறே நெருப்பு மூட்டினார்கள். அவர், ‘இதில் (இந்த நெருப்பில்) நீங்கள் நுழையுங்கள்’ என்று கூற, அவர்கள் அதில் நுழையப்போனார்கள். அதற்குள் (அதில் நுழையவிடாமல்) அவர்களில் ஒருவர் மற்றவரைத் தடுக்கலானார். மேலும் அவர்கள், ‘(நரக) நெருப்பிலிருந்து வெருண்டோடித்தான் நாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றோம்’ என்று கூறலாயினர். இப்படிச் சிலர் சிலரைத் தடுத்துக்கொண்டிருக்க நெருப்பும் அணைந்துவிட்டது. படைத்தளபதியின் கோபமும் தணிந்து அமைதியடைந்தார். பிறகு நபி (ஸல்) அவர்களுக்குச் செய்தி எட்டியபோது, ‘அதில் அவர்கள் நுழைந்திருந்தால் மறுமைநாள் வரையிலும்கூட அதிலிருந்து அவர்கள் வெளியேறியிருக்கமாட்டார்கள். கீழ்ப்படிதல் என்பது நற்செயல்களில்தான்’ என்று சொன்னார்கள். (புகாரீ 4340)
இந்த ஆதாரங்கள் முஹர்ரமின் பெயரால் தீ மிதிப்பது, துக்கத்தில் உடம்பைக் கீறி இரத்தக் களறியாக்கிக்கொள்வது போன்ற எல்லாப் பாவ காரியங்களையும் கடுமையாக எச்சரிக்கின்றன.
இங்கு கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விசயம், இந்த எல்லாக் காரியங்களும் காஃபிர்களின் வழக்கங்களிலிருந்து காப்பி அடிக்கப்பட்டவை. பஞ்சா சம்பந்தப்பட்ட அனைத்தும் அப்படியே.
5. காஃபிர்களின் கலாசாரம்
கோயில் சிலைக்கு முன் பயபக்தியுடன் நின்று பிரார்த்தனை செய்கிற காஃபிர்கள் போலவே இந்தப் பஞ்சா முன்பும் பயபக்தியுடன் நிற்கிறார்கள் முஸ்லிம் பெயர் தாங்கிகள்.
وَمَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ
‘எவர் பிற மதத்தாருக்கு ஒப்பாக நடக்கிறாரோ, அவர் அவர்களைச் சேர்ந்தவரே!’ (அறிவிப்பு: இப்னு உமர் (ரலி), முஸ்னது அஹமது 5106, 5107, 5651)
عن أبي وَاقِدٍ الَّليْثِيِّ أَنَّ رَسُولَ الله لَمَّا خَرَجَ إِلَى حُنَيْنٍ مَرَّ بَشَجَرَةٍ لِلْمُشْرِكِينَ يُقَالُ لَها ذَاتُ أَنْوَاطٍ يُعَلِّقُونَ عَلَيْهَا أَسْلِحَتَهُمْ فقالوا يا رسولَ الله اجْعَلْ لَنَا ذَاتَ أَنْوَاطٍ كَمَا لَهُمْ ذَاتُ أَنْوَاطٍ فقال النبيُّ سُبْحَانَ الله هَذَا كَمَا قَالَ قَوْمُ مُوسَى اجْعَلْ لَنَا إِلٰهاً كَمَا لَهُمْ آلِهَةٌ وَالّذِي نَفْسِي بِيَدِهِ لَتَرْكَبُنَّ سُنَّةَّ مَنْ كَانَ قَبْلَكُم
அபூவாக்கிதுல் லைசீ (ரலி) சொல்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஹுனைன் போருக்குச் சென்றபோது (வழியில்) இணைவைப்பவர்களுக்குரிய ஒரு மரத்தைக் கடந்துசென்றார்கள். அது ‘தாத்து அன்வாத்’ என்று அழைக்கப்பட்டது. அ(க்கால இணைவைப்ப)வர்கள் தங்களின் போர்க்கருவிகளை (பரகத் நாடி) அதன்மீது தொங்கவிடுவார்கள். (பின்பு நாங்கள் பச்சை நிறமுடைய ஒரு பெரிய இலந்தை மரத்தைக் கடந்து சென்றோம்.) அப்போது நாங்கள், ‘(அல்லாஹ்வின் தூதரே!) நிராகரிப்பாளர்களுக்கு ‘தாத்து அன்வாத்’ இருப்பதைப்போல எங்களுக்கும் ஒரு ‘தாத்து அன்வாத்’ ஆக இதனை ஏற்படுத்துங்கள். (நிராகரிப்பாளர்கள் தங்களின் போர்க்கருவிகளைத் தொங்கவிட்டு, அதனைச் சுற்றி இஃதிகாஃப் இருப்பார்கள்)’ என்றோம். அதற்கு நபி (ஸல்) கூறினார்கள்: ‘ஸுப்ஹானல்லாஹ்! (அல்லாஹ அக்பர்! என் உயிர் எவன் கைவசமோ அவன்மீது ஆணையாக!) இது மூஸாவின் சமுதாயத்தார் (பனூ இஸ்ரவேலர்கள்) கூறியதுபோலவே இருக்கின்றது. ‘அவர்கள் வைத்திருக்கும் சிலைகளைப்போல் எங்களுக்கும் ஒரு சிலையை ஆக்கி வையுங்கள்’ என்று அவர்கள் கூறினார்கள். (அதற்கு மூஸா, ‘நிச்சயமாக நீங்கள் அறிவில்லாத மக்களாக இருக்கின்றீர்கள்’ என்று கூறினார். இவையெல்லாம் (அறியாமைக்கால) முன்னோர்களின் செயல்கள்.) என் உயிர் எவன் கைவசமோ அவன்மீது ஆணையாக! நீங்கள் உங்களுக்கு முன்னிருந்தவர்களுடைய வழிகளைப் (படிப்படியாகப்) பின்பற்றுவீர்கள்.’ (திர்மிதீ 2207, பார்க்க: முஸ்னது அஹமது 21518, 21521, மிஷ்காதுல் மஸாபீஹ் 5408)
நபியவர்களோடு இருந்தவர்களில் புதிதாக இஸ்லாமை ஏற்றிருந்த சிலர் அறியாமையினால் இப்படி ஆசைப்பட்டாலும், அது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார்கள். நபியவர்கள் தடுத்து எச்சரித்தவுடன் அவர்கள் விலகிக்கொண்டார்கள். ஆனால், இன்று இவர்களில் பலரை எவ்வளவோ எச்சரித்தும் இவர்கள் சிந்திப்பதற்குக்கூட தயாரில்லை.
இதன் விளைவாக, பாவங்களிலேயே கொடிய பாவமான ஷிர்க்கில் விழுகிறார்கள். அதுவோ அல்லாஹ் மறுமையில் மன்னிக்காத பாவம், நிரந்தர நரகத்தில் தள்ளி, சொர்க்கத்திற்குள் போகவே விடாத பாவம்.
إِنَّ اللَّهَ لَا يَغْفِرُ أَنْ يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَنْ يَشَاءُ وَمَنْ يُشْرِكْ بِاللَّهِ فَقَدِ افْتَرَى إِثْمًا عَظِيمًا
நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைத்து வணங்கப்படுவதை மன்னிக்கவேமாட்டான்.இதனைத் தவிர மற்ற எதனையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்.எவர்கள் அல்லாஹ்வுக்கு இணைவைத்து வணங்குகின்றார்களோ அவர்கள் நிச்சயமாக மிகப் பெரிய பாவத்தையே பொய்யாகக் கற்பனை செய்கின்றார்கள். (குர்ஆன் 4:48)
ஷிர்க் மட்டுமின்றி, முஹர்ரம் பிறை ஒன்று முதல் பத்து வரை மீன், கருவாடு சாப்பிடுவதை ஹராமாக்கிக்கொள்வது, தாம்பத்தியத்தை நிறுத்திக்கொள்வதும் நடந்து வருகிறது. அல்லாஹ்வோ அவன் நபியோ இப்படித் தடை செய்யாதிருந்தும், முஹர்ரமின் பெயரால் இதை அனுசரிப்பதும் பெரும்பாவம்தான். பித்அத்தும் கூட.
6. பித்அத்கள் - ஓர் எச்சரிக்கை
அல்லாஹ் சொல்கிறான்:
الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الأِسْلاَمَ دِيناً
‘இன்று உங்களுக்கு உங்களுடைய மார்க்கத்தை முழுமையாக்கிவிட்டேன். என்னுடைய அருளையும் உங்கள்மீது பரிபூரணப்படுத்திவிட்டேன். உங்களுடைய இந்த இஸ்லாம் மார்க்கத்தைப் பற்றியும் திருப்தியடைந்தேன்.’ (குர்ஆன் 5:3)
இந்த வசனம் நபி (ஸல்) அவர்களின் கடைசி ஹஜ்ஜில் இறங்கியது. அவர்கள் வாழும்போதே இஸ்லாமிய வழிகாட்டல் அனைத்தும் தெளிவாக எடுத்துச்சொல்லப்பட்டு, முழுமையாகவும் ஆக்கப்பட்டுவிட்டன. ஒரு முஸ்லிமின் எந்தக் காரியமும் அன்று நபியவர்கள் காட்டிச் சென்ற முறைப்படிதான் அமைய வேண்டும். இல்லையென்றால், அது அல்லாஹ்விடம் ஏற்கப்படாது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்:
مَنْ أَحْدَثَ فِي أَمْرِنَا هَذَا مَا لَيْسَ مِنْهُ, فَهُوَ رَدٌّ
‘நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகிறானோ அவனுடைய அக்காரியம் நிராகரிக்கப்படும்.’ (அறிவிப்பு: ஆயிஷா (ரலி), புகாரீ 2697)
مَنْ عَمِلَ عَمَلاً لَيْسَ عَلَيْهِ أَمْرُنَا فَهُوَ رَدٌّ
‘எவர் நம்முடைய கட்டளையில்லாத காரியத்தைச் செய்கிறாரோ, அது (அல்லாஹ்விடம்) நிராகரிக்கப்படும்.’ (அறிவிப்பு: ஆயிஷா (ரலி), முஸ்லிம் 4447)
عَنِ الْعِرْبَاضِ بْنِ سَارِيَةَ قَالَ صَلَّى لَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم صَلاَةَ الصُّبْحِ ثُمَّ أَقْبَلَ عَلَيْنَا فَوَعَظَنَا مَوْعِظَةً بَلِيغَةً وَجِلَتْ مِنْهَا الْقُلُوبُ وَذَرَفَتْ مِنْهَا الْعُيُونُ فَقُلْنَا يَا رَسُولَ اللَّهِ كَأَنَّهَا مَوْعِظَةُ مُوَدِّعٍ فَأَوْصِنَا قَالَ أُوصِيكُمْ بِتَقْوَى اللَّهِ وَالسَّمْعِ وَالطَّاعَةِ وَإِنْ تَأَمَّرَ عَلَيْكُمْ عَبْدٌ حَبَشِيٌّ وَإِنَّهُ مَنْ يَعِشْ مِنْكُمْ فَسَيَرَى اخْتِلاَفًا كَثِيرًا فَعَلَيْكُمْ بِسُنَّتِى وَسُنَّةِ الْخُلَفَاءِ الرَّاشِدِينَ الْمَهْدِيِّينَ عَضُّوا عَلَيْهَا بِالنَّوَاجِذِ وَإِيَّاكُمْ وَمُحْدَثَاتِ الأُمُورِ فَإِنَّ كُلَّ بِدْعَةٍ ضَلاَلَةٌ
இர்பாள் இப்னு சாரியா (ரலி) அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஒரு நாள் சுபுஹ் தொழுகை நடத்தினார்கள். பிறகு எங்கள் பக்கம் திரும்பி, எங்களுக்கோர் உருக்கமான, ஆழமான சொற்பொழிவு ஒன்றைச் செய்தார்கள். அதனால் எங்கள் கண்கள் கண்ணீரைப் பொழிந்தன. உள்ளங்கள் நடுங்கின. அப்போது நாங்கள், ‘அல்லாஹ்வின் தூதரே! இது இறுதி உபதேசம் போலுள்ளதே! எங்களுக்கு இன்னும் உபதேசம் செய்யுங்கள்’ என்று கேட்டோம்.
அதற்கு நபி (ஸல்) சொன்னார்கள்: அல்லாஹ்வுக்குப் பயப்படுங்கள். அபிசீனிய அடிமை உங்களை ஆண்டாலும் அவருக்குச் செவிசாயுங்கள்; கட்டுப்படுங்கள். உங்களில் எனக்குப் பின் வாழ்கிறவர், அதிகமான கருத்துவேறுபாடுகளைப் பார்ப்பார். அப்போது நீங்கள் எனது வழிமுறையையும் எனக்குப் பின் வருகின்ற நேர்வழி பெற்ற கலீஃபாக்களின் வழிமுறையையும் பற்றிப்பிடித்துக்கொள்ளுங்கள். அதைக் கடைவாய்ப் பற்களால் பிடியுங்கள். புதிய காரியங்கள் விசயத்தில் எச்சரிக்கையாக இருங்கள். ஒவ்வொரு புதிய காரியமும் வழிகேடுதான். (நூல்கள்: அபூ தாவூது 4609, அஸ்ஸுனன் அல்குப்றா லில் பைஹகீ 20835, முஸ்தத்ரக் அல்ஹாகிம் 329, முஸ்னது அஹ்மது 17184, அஸ்ஸஹீஹா 2735)
மற்றோர் அறிவிப்பில்:
قُلْنَا يَا رَسُولَ اللهِ إِنَّ هَذِهِ لَمَوْعِظَةُ مُوَدِّعٍ فَمَاذَا تَعْهَدُ إِلَيْنَا قَالَ قَدْ تَرَكْتُكُمْ عَلَى الْبَيْضَاءِ لَيْلُهَا كَنَهَارِهَا لاَ يَزِيغُ عَنْهَا بَعْدِي إِلاَّ هَالِكٌ وَمَنْ يَعِشْ مِنْكُمْ فَسَيَرَى اخْتِلاَفًا كَثِيرًا فَعَلَيْكُمْ بِمَا عَرَفْتُمْ مِنْ سُنَّتِي وَسُنَّةِ الْخُلَفَاءِ الرَّاشِدِينَ الْمَهْدِيِّينَ عَضُّوا عَلَيْهَا بِالنَّوَاجِذِ وَعَلَيْكُمْ بِالطَّاعَةِ وَإِنْ عَبْدًا حَبَشِيًّا فَإِنَّمَا الْمُؤْمِنُ كَالْجَمَلِ الأَنِفِ حَيْثُمَا انْقِيدَ انْقَادَ
‘அல்லாஹ்வின் தூதரே! இது இறுதி உபதேசம்போல் தெரிகிறதே? எங்களுக்கு என்ன கட்டளையிடுகிறீர்கள்?’ என்று கேட்டோம்.
அவர்கள் சொன்னார்கள்: நான் உங்களை மிகவும் வெண்மையான(மார்க்கத்)தின்மீது விட்டுச் செல்கிறேன். அதன் இரவும் பகலைப்போன்றது. அழிந்துபோகிறவனைத் தவிர வேறு எவனும் அதைவிட்டு வழிதவறமாட்டான். உங்களில் யார் (எனக்குப் பின்) வாழ்வாரோ, அவர் அதிகமான கருத்துவேறுபாடுகளைக் காண்பார். (அச்சமயம்) என் வழிமுறையிலும் நேர்வழி பெற்ற கலீஃபாக்களின் வழிமுறையிலும் நீங்கள் அறிந்துகொண்டதை உறுதியாகப் பற்றிப்பிடியுங்கள். இதைக் கடைவாய்ப்பற்களால் கவ்விப்பிடித்துக்கொள்ளுங்கள். (உங்கள் தலைவராக) அபிசீனிய அடிமை இருந்தாலும் அவருக்குக் கட்டுப்படுங்கள். நிச்சயமாக முஃமின், கடிவாளமிடப்பட்ட ஒட்டகம் போன்றவர். அது எங்கு இழுக்கப்பட்டாலும் கட்டுப்படும். (நூல்கள்: முஸ்னது அஹ்மது 17182, அஸ்ஸஹீஹா 937)
مَنْ يَهْدِهِ اللَّهُ فَلاَ مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْهُ فَلاَ هَادِيَ لَهُ إنَّ أَصْدَقَ الْحَدِيثَ كِتَابُ اللَّهِ وَأَحْسَنَ الْهَدْيِ هَدْيُ مُحَمَّدٍ وَشَرُّ الأُمُورِ مُحْدَثَاتُهَا وَكُلُّ مُحْدَثَةٍ بِدْعَةٌ وَكُلُّ بِدْعَةٍ ضَلاَلَةٌ وَكُلُّ ضَلاَلَةٍ فِي النَّارِ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்: ‘எவருக்கு அல்லாஹ் நேர்வழி காட்டினானோ, அவரை எவரும் வழிகெடுக்க முடியாது. எவனை அவன் வழிதவற விட்டுவிட்டானோ, அவனுக்கு வழிகாட்ட எவனாலும் முடியாது. நிச்சயமாக செய்திகளில் மிக உண்மையானது, அல்லாஹ்வின் நூலாகும்; வழிமுறையில் மிக அழகானது, முஹம்மது (ஸல்) அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் கெட்டது, (மார்க்கத்தின் பெயரால்) புதிதாகச் செய்யப்படுவதாகும். ஒவ்வொரு புதியவையும் பித்அத் (அனாசாரம்) ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்திற்கு இட்டுச் செல்லும்.’ (அறிவிப்பு: ஜாபிர் (ரலி), சுனன் நசாயீ - 1579, லிலாலுல் ஜன்னா 24)
(நிறைவுற்றது அல்ஹம்துலில்லாஹ்)