மையத்தை பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தலாமா?

-இம்தியாஸ் யூசுப் 

எவருடைய மரணத்தில் சந்தேகம் எழுகின்றதோ அவரது மரணத்தின் உண்மைத்தன்மையை கண்டறிவதற்காக மரணித்தவரின் பிரேதத்தை (மையத்தை)மருத்துவரீதியாக (உடற்கூறுகளை வெட்டி) பரிசோதனைக்கு உட்படுத்துவதை “போஸ்ட்மாட்டம்” (postmortem)  என கூறுவோம்.

குறித்த பிரேதத்தை அடக்கம் செய்யப்படுவதற்கு முன்னர்  அல்லது அடக்கம் செய்யப்பட்டதற்கு பின்னர்  அந்த பிரேதத்தை எடுத்து  - மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துகிறார்கள்.

ஒரு மனிதனின் உயிர் வாழும் உரிமையை உறுதிப்படுத்தவும் அவனது மரணத்திற்குப் பின் இருக்கும் மர்மத்தை கண்டுபிடிக்கவும் குற்றவாளிகளை சட்டத்திற்கு முன் நிறுத்தவும் நிரபராதிகளை விடுவிப்பதுமே இந்த போஸ்மார்டம் செய்வதன் நோக்கமாகும்.

மரணித்தவரின் உண்மையை நிலையை அறிவதற்கு குடும்பத்தாருக்கு உரிமை இருப்பது போல் அரசாங்கத்திற்கும் உரிமையுள்ளது.

அண்மைக்காலமாக இந்த போஸ்மார்ட்டம் செய்யும்  நிலமை நாட்டில் அதிகரித்து வருவதை காண்கிறோம். இதில் முஸ்லிம்களின் ஜனாஸாக்களும் விதிவிலக்கல்ல என்பதை நாம் அறிவோம்.

ஆனாலும், முஸ்லிம்களில் பெரும்பாலானோர் இதை விரும்புவதில்லை. இதற்கு இவர்கள் கூறும் காரணம்  “யுத்த களத்தில் இறந்துவிட்ட உடல்களை சிதைக்கக்கூடாது  என நபி(ஸல்) அவர்கள் தடைவிதித்துள்ளார்கள்.
இதனடிப்படையில் மையத்தை பிரேதபரிசோதனைக்கு உட்படுத்தாமல் இருப்பது நல்லது என கூறுகிறார்கள். 
இந்த புரிதல் தப்பானதாகும்.

யுத்தம் முடிவடைந்த பின் எதிரிகள் மீதுள்ள கோபத்தின் காரணமாக பழி தீர்ப்பதற்கு இறந்துபோன உடல்களை  துண்டு துண்டாக வெட்டுவது மற்றும் சிதைப்பது அன்றைய நடைமுறையில் இருந்து வந்தது. இது மனிதாபிமானமற்ற செயல். முஸ்லிம்கள் ஒருபோதும் இதை செய்யக் கூடாது என நபியவர்கள் கண்டிப்பாக உத்தரவிட்டார்கள்.

யுத்தமாக இருந்தாலும் யுத்தமல்லாத ஏனைய நேரங்களாக இருந்தாலும் ஒருவரது உடல் உறுப்புக்களை காயப்படுத்துவதை அல்லது சிதைப்பதை நபியவர்கள் அனுமதிக்கவே இல்லை. 

என்றாலும் இன்றைய காலச்சூழலில் பிரேதப் பரிசோதனை என்பது இறந்தவரின் உடல் உறுப்புக்களை வெட்டி சிதைப்பதல்ல. இறந்தவரின் மீதுள்ள கோபத்தின் காரணமாக கீறிகிழிப்பதுமல்ல. மாறாக
இது கொலையா? அல்லது மரணமா? என்பதை ஆராய்ந்து குற்றத்தை நிரூபித்து குற்றவாளியை நீதிக்கு முன் நிறுத்துவதற்காக செய்யப்படுகின்ற மருத்துவப் பரிசோதனையாகும்.

 இவ்விரண்டிற்குமுள்ள வேறுபாட்டை புரிந்துகொண்டால் பிரேதப் பரிசோதனையின் உண்மையையும் அதன் அவசியத்தையும் புரிந்து கொள்ள முடியும்..
 
மூஸா நபியின் சமூகத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்டு விடுகிறார். கொலையாளி யார்ட என்றுகூட தெரியவில்லை. அப்போது அல்லாஹ்வின் கட்டளைப் பிரகாரம் ஒருமாடு அறுக்கப்பட்டு அதன் பாகத்தினால் கொல்லப்பட்டவர்மீது அடிக்கப்பட்டது. கொலையுண்டவர் உயிர் பெற்றெழுந்து தன்னை கொன்றவர் இன்னார் தான் என அடையாளம் காட்டி விட்டு மரணிக்கிறார். இச்செய்தியை குர்ஆன் மிகத் தெளிவாக விபரிக்கிறது. (பார்க்க:2:72.73.)
கொலையாளி எந்த வகையிலும் தப்பி விடக்கூடாது என்பதில் அல்லாஹ் கவனம் செலுத்தியிருப்பதை முஸ்லிம்கள் சரிவர புரிந்து கொள்ளவேண்டும்.

ஒருவர் அநியாயமாக கொல்லப்படுபவத மிகப் பெரும் பாவமாக இஸ்லாம் போதிக்கின்றது..

நிர்ப்பந்தம் காரணமாக செய்யப்படும் எந்தக் காரியத்தையும் இஸ்லாம் தடுக்கவில்லை. பிரேதப் பரிசோதனையும் நிர்ப்பந்தம் காரணமாகத் தான் செய்யப்படுகின்றது. அது கூடாது என்ற சொல்வது தவறான வாதமாகும்.

அல்லாஹூ அஃலம்

Previous Post Next Post