ஜோசியக்காரன்/ குறிசொல்பவன் மறைவானவற்றை அறிவார்களா?

ஜோசியக்காரர்களும்/ குறி சொல்பவர்களும் சொல்வது உண்மை என்று நம்புவது நிராகரிப்பாகும். இவர்களை நாடிச் செல்வது பெரும்பாவமாகும். 
                                                
 இமாம் தஹாவி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: 

 ஜோதிடர்களும், குறிசொல்பவர்களும் கூறுவதை உண்மை என்று நம்பக்கூடாது. அவ்வாறே குர்ஆனுக்கும், ஸுன்னாவிற்கும், முஸ்லிம் உம்மத்தின் இஜ்மாவிற்கும் மாற்றமாக யார் வாதிடுவாரோ அவர்களையும் நம்பக்கூடாது. 

 நூல்: ஷரஹ் தஹாவியா - 475 
                                                
 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

 ஒருவர் சோதிடனிடம் சென்று, எதைப் பற்றியாவது கேட்டால், அ(வ்வாறு கேட்ட)வருடைய நாற்பது நாட்களின் தொழுகை அங்கீகரிக்கப்படுவதில்லை. 

 அறிவிப்பாளர்: ஸஃபிய்யா (ரலி) 
 நூல்: ஸஹீஹ் முஸ்லிம் : 4488. 
                                                
 குறிசொல்பவன் என்ன சொல்கிறான் பார்ப்போம் என்று யார் சொல்வார்களோ அவர்களுக்குத்தான் இந்நிலை. அவர்களுடைய தொழுகைக்கு எவ்வித பிரதிபலனும் இல்லை. 
                                                
 யார் குறிசொல்பவனிடமோ, ஜோதிடனிடமோ சென்று, எதையாவது கேட்டு, அவன் கூறுவதை உண்மை என்று நம்பிக்கை கொள்கிறானோ, அவன் முஹம்மத் அவர்களுக்கு இறக்கப்பட்டதை நிராகரித்தவர் ஆவார். 

 அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) 
 நூல்: முஸ்னத் அஹ்மத் - 9536. 
                                                
 இமாம் இப்னு அபில் இஸ்ஸூ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: 

 நட்சத்திரங்களை வைத்து குறி சொல்பவரும் குறிகாரர்கள் என்பதில் அடங்குவார்கள் என்று சில அறிஞர்கள் கூறியுள்ளார்கள். ஜோதிடர்களிடமும், குறிசொல்பவர்களிடமும் செல்பவருக்கே இந்நிலையெனில் குறிசொல்பவனுடைய, ஜோதிடர்களுடைய நிலையை எப்படி என எண்ணிப் பாருங்கள். 
                                                
 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

 மலக்குகள் மேகத்தில் இறங்கி விண்ணில் தீர்மானிக்கப்பட்ட விஷயத்தைப் பற்றிப் பேசி கொள்கிறார்கள். ஷைத்தான்கள் அதைத் திருட்டுத் தனமாக ஒளிந்திருந்து ஓட்டுக் கேட்டு, ஜோதிடர்களுக்கு அதை உள்ளுதிப்பாக அறிவித்து விடுகின்றன. ஜோதிடர்கள் அந்த உண்மையுடன் நூறு பொய்களைத் தம் தரப்பிலிருந்து புனைந்து (சேர்த்துக்) கூறுவார்கள். 

 அறிவிப்பாளர்: ஆயிஷா(ரலி) 
 நூல்: ஸஹீஹுல் புகாரி : 3210. 
                                                
 ஆயிஷா(ரலி) கூறினார்கள்: 

 இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சிலர் ஜோதிடர்களைப் பற்றிக் கேட்டார்கள். 'அ(வர்களின் கருத்)து (பொருட்படுத்தத் தக்க) ஒன்றுமில்லை' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! இந்தச் ஜோதிடர்கள் சிலவேளைகளில் எங்களுக்கு ஒன்றை அறிவிக்க, அது உண்மையாகி விடுகிறதே (அது எப்படி?)' என்று கேட்டார்கள். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'அந்த உண்மையான சொல் ஜின்னிடமிருந்து ஜோதிடன் எடுத்துக் கொண்டதாகும். அது தன் (ஜோதிட) நண்பனின் காதில் அதைப் போட அதனுடன் அவர்கள் நூறு பொய்களைக் கலந்து விடுவார்கள்' என்று பதிலளித்தார்கள். 

 நூல்: ஸஹீஹுல் புகாரி : 5762. 
                                                
 மனிதர்களில் சிலர் தங்களுக்கு மறைவான ஞானம் இருப்பதாகவும், அதன் மூலம் எதிர்காலத்தை தங்களால் கணிக்க முடியும் என்றும் வாதிடுகிறார்கள். இவர்களே குறிசொல்பவன், ஜோதிடர், கைரேகை பார்ப்பவர்கள் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் பிழைப்புக்காக மக்களை ஏமாற்றி எதிர்காலம் குறித்து கூறுகிறோம் என்று சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் இவர்கள் தங்களுடைய எதிர்காலம் குறித்தே எவ்வித அறிவும் இல்லாதவர்கள். இத்தகையவர்களிடமும் ஒரு முஸ்லிம் ஜோதிடம், குறிபார்க்க செல்வது கூடாது. யார் ஜோதிடர்களிடமும், குறிசொல்பவர்களிடமும் சென்று அவன் சொல்வதை நம்பிக்கை கொள்வானோ அவன் அல்லாஹ்வின் அஸ்மாயி வ ஸிஃபாத்து விஷயத்தில் அல்லாஹ்விற்கு இணைவைத்தவனாவான். மறைவானவற்றை அறியும் அல்லாஹ்வின் ஆற்றலை ஜோதிடர்களுக்கும், குறிசொல்பவர்களுக்கும் உண்டு என்று அவன் நம்புவது தான் இதற்கு காரணம். மறைவானவற்றை அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறிந்து கொள்ள முடியாது. 
                                                
 அல்லாஹ் கூறுகிறான்: 

 وَعِنْدَهٗ مَفَاتِحُ الْغَيْبِ لَا يَعْلَمُهَاۤ اِلَّا هُوَ‌ وَيَعْلَمُ مَا فِى الْبَرِّ وَالْبَحْرِ‌ وَمَا تَسْقُطُ مِنْ وَّرَقَةٍ اِلَّا يَعْلَمُهَا وَلَا حَبَّةٍ فِىْ ظُلُمٰتِ الْاَرْضِ وَلَا رَطْبٍ وَّلَا يَابِسٍ اِلَّا فِىْ كِتٰبٍ مُّبِيْنٍ 

 அவனிடமே மறைவானவற்றின் திறவு கோல்கள் இருக்கின்றன. அவற்றை அவனன்றி எவரும் அறியார். மேலும் கரையிலும் கடலிலும் உள்ளவற்றையெல்லாம் அவன் அறிவான்; அவன் அறியாமல் ஓர் இலையும் உதிர்வதில்லை. பூமியின் (ஆழத்தில் அடர்ந்த) இருள்களில் கிடக்கும் சிறு வித்தும், பசுமையானதும், உலர்ந்ததும் (எந்தப் பொருளும்) தெளிவான (அவனுடைய) பதிவேட்டில் இல்லாமலில்லை. 

 (அல்குர்ஆன் : 6:59) 
                                                
 قُلْ لَّا يَعْلَمُ مَنْ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ الْغَيْبَ اِلَّا اللّٰهُ‌ وَمَا يَشْعُرُوْنَ اَيَّانَ يُبْعَثُوْنَ 

 (இன்னும்) நீர் கூறுவீராக: “அல்லாஹ்வைத் தவிர்த்து, வானங்களிலும், பூமியிலும் இருப்பவர் எவரும் மறைவாயிருப்பதை அறிய மாட்டார்; இன்னும்: (மரித்தோர் இறுதியில்) எப்போது எழுப்பப்படுவார்கள் என்பதையும் அவர்கள் அறியமாட்டார்கள்.” 

 (அல்குர்ஆன் : 27:65) 

 - உஸ்தாத். M. பஷீர் ஃபிர்தௌஸி 
                                                . 
Previous Post Next Post