இயேசு கிருஸ்துவும் ,முஸ்லீம்களின் கிருஸ்துமஸ் கொண்டாட்டமும்

-உஸ்தாத் SM இஸ்மாயில் நத்வி

'இயேசு கிறுஸ்து' (அவர்களின் மீது சாந்தி உண்டாவதாக) என்ற பெயருக்கு, இலத்தீன் மொழியில் 'Jesus Christ' - அதாவது, "அருள் செய்யப்பட்டவர்" என்று அர்த்தம். 'Messiah' என்ற வார்த்தை கூட ஹீப்ரு மொழியில், "பாதுகாவலர்" என்று அர்த்தம் கொண்டது. அரபு மொழியில் (المسيح )அல்மஸீஹ் என்றால் 'தடவப்பட்டவர்' என்று அர்த்தம் (நோய்களை தன் கையால் தடவி நீக்குபவர் ).

அல்குர்ஆனில், இயேசு கிறுஸ்து, அதாவது "அல்மஸீஹ் ஈசா "என்று 9 இடத்திலும் , மர்யமின் குமாரன் ஈசா (இயேசு) என்று 22 தடவையும் , ஈசா என்று 25 இடங்களிலும் வந்துள்ளன.
ஆக, எந்த ஒரு ஏகத்துவ நம்பிக்கையாளரும், பரிபூரணமான முஸ்லிமாக ஆக முடியாது - அவர் - "ஈசா(அலை) அவர்கள் இறைவனின் தூதுவர்" என்று ஏற்று கொள்ளாதவரை.

எனவே, கிருஸ்துவர்களை விட முஸ்லீம்கள் தான், அவருடைய பெயருக்கு பின் "ஈசா (அலை) "என்று கண்ணியமாக அழைக்கின்றார்கள். இயேசு (அலை ) அவர்கள் போதித்த போதனைகளான, ஏகத்துவத்தை அதிகம் பின்பற்றுபவர்களாகவும் இருக்கின்றார்கள்.

இந்தியா போன்ற மதசார்பற்ற (!!) நாடுகளில், ஒவ்வொரு சமயத்தினரும், தங்களது சமய சுதந்திரத்தை பெற்றிருக்கின்றார்கள். ஆக,
கிருஸ்துவ நண்பர்கள் கொண்டாடுகின்ற கிறிஸ்துமஸ் - அவர்களின் சமய சுதந்திரம் - அதை யாரும் தடுக்க முடியாது , கிறிஸ்தவ மதத்திலேயே கிறிஸ்மஸ் கொண்டாடலாமா வேண்டாமா என்ற கருத்து மோதல் நீண்டகாலமாக நிகழ்ந்து வருகிறது !! 

வரலாற்று ரீதியாக பார்க்கும் பொழுது சூரியனை வணங்கிய ஒரு சமூகத்தினர் (பாகாலியல்-Paganism)கிறித்துவ மதத்திற்கு வரும்பொழுது அவர்கள் முன்வைத்த ஒரு நிபந்தனை சூரிய பிறப்பு தினத்தை கிறிஸ்துமஸ் ஆக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதே,
கிறித்துவ மதம் உலகத்தில் பரவவேண்டும் என்ற நோக்கிலே இன்றும் கிறிஸ்துவ உலகில் கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்டு வருகிறது என்பது ஒரு கசப்பான உண்மை!!

ஆனால், ஏகத்துவத்தை தங்களின் மார்க்கமாக எடுத்துக்கொண்ட முஸ்லிம்களுக்கு, இந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் எதற்கு ?

இப்பொழுது, தாங்கள் கூறுவீர்கள் - "நாங்கள் அவர்களின் பண்டிகையை கொண்டாடவில்லையே , வெறும் வாழ்த்துக்கள் தானே கூறினோம்" என்று. 
அப்பாவி பெயர்தாங்கிய முஸ்லிம்களே - இதோ இந்த செய்தி உங்களுக்கு தான் ...........!!!

இமாம் இப்னுல் கையூம் (ரஹ்) அவர்கள், தனது 'அஹ்காமு அஹ்லுத் திம்மா' என்ற நூலில் குறிப்பிடும்போது: 

'நிராகரிப்பாளர்களின் அடையாளச் சின்னங்களாகவே காட்சியளிக்கும் விடயங்களில், அவர்களை வாழ்த்துவது - ஏகோபித்த கருத்தின் அடிப்படையில் ஹராமாகும். அவைகள், அவர்களது பண்டிகைகள் அல்லது நோன்பு போன்ற கிரியைகளைக் குறிப்பிடலாம். எவ்வாறான சொற்களை பயன்படுத்தி வாழ்த்தினாலும் சரியே. 
இவ்வாறு வாழ்த்துபவர், குப்ஃரை விட்டு நீங்கியவராக இருந்தாலும், இது தடுக்கப்பட்டதாகும். இந்த வாழ்த்தானது, சிலுவைக்கு அவன் சிரம் பணிவதையே குறிக்கும். இது அல்லாஹ்விடத்தில் விபச்சாரத்தை விட, மதுபானத்தை விட, கொலையை விட மிகப் பெரும் குற்றமாகும். அவனுக்கு வெறுப்பை ஏற்படுத்தும் மிகக்கொடிய பாவச் செயலாகும். இந்த தூய்மையான மார்க்கத்தின் மீது எந்த மதிப்பும் இல்லாத (இந்த பரிசுத்த நெறியின் கண்ணியத்தை அறியாத) அதிகமானோர், இந்த அழிவில் வீழ்ந்து விடுவதை பார்க்கக்கூடியதாக இருக்கின்றது. அவனது இந்த மோசமான செயலின் பாரதூரத்தை, அவன் அறியாமல் இருப்பது மற்றொரு வேதனையான விடயம்.

எவனொருவன் ஒரு பாவமான காரியத்தை அல்லது ஒரு பித்அத்தை அல்லது குப்ஃரான விடயத்தை வாழ்த்துகின்றானோ அவன் அல்லாஹ்வின் கோபத்திற்கும், சாபத்திற்கும் ஆளாவது உறுதியானதாகும்.

اَلْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا

'இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன். மேலும் நான் உங்கள் மீது, என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன். இன்னும் உங்களுக்காக, நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்.' (5:3).

உங்களுடன் ஒன்றாக பணியில் ஈடுபடுபவர்களாக இருக்கலாம். இல்லாமல் இருக்கலாம். பொதுவாகவே இவ்வாறு வாழ்த்துவது ஹராமாக்கப்பட்டதாகும்.

அவர்களின் பண்டிகைகளுக்காக (பெருநாட்களுக்காக) எம்மை வாழ்த்தினால் நாம் அதற்கு பதில் வாழ்த்து தெரிவிப்பது கூடாது.
ஏனெனில், அவைகள் எமது பெருநாட்கள் அல்ல. இன்னும் அப்பெருநாட்களை அல்லாஹ் ஒருபோதும் பொருந்திக்கொள்வதில்லை, 

சில வேளை ,அவர்களது மதத்திலும், அது புதிதாக உருவாக்கப்பட்டதாக இருக்கலாம் அல்லது அவர்களது மதத்தில் உள்ள ஒன்றாக இருக்கலாம்.

இறுதி நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் அகில உலகிற்கும் தூதராக அனுப்பப்பட்டதன் மூலம் இஸ்லாம் ஏனைய அனைத்து வழிகெட்ட மதங்களையும், கொள்கைகளையும் செல்லுபடியற்றதாக்கிவிட்டது.

அல்லாஹ் தனது திருமறையில்:
وَمَنْ يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَنْ يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِين
'இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்படமாட்டாது, மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார்.' (3: 85).

இந்நிகழ்வுகளுடன் கூடிய விழாக்களுக்கோ, விருந்துகளுக்கோ - ஒரு முஸ்லிம் அழைக்கப்படும்போது, கலந்துகொள்வது தடுக்கப்பட்டதாகும். ஏனெனில் இவ்வாறான நிகழ்வுகளில் கலந்தகொள்வது, அவர்களுக்கு மிகப்பெரிய வாழ்த்தாக அமையும். ஒரு முஸ்லிம் இவைகளில் கலந்து, இனிப்புப் பண்டங்கள், உணவு வகைகள், குடிபானங்கள், பரிசுப் பொருட்களை அவர்களுக்கு மத்தியில் பரிமாறிக்கொள்வதும், நிராகரிப்பாளர்களுக்கு ஒப்பாக செயல்படுவதும் - முற்றிலும் தடுக்கப்பட்டதாகும். அந்நாட்களில் விடுமுறை எடுத்துக்கொள்வதும் ஹராமாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இக்கூற்று மிக முக்கியமானதாகும்: 

'எவர்கள் ஒரு கூட்டத்திற்கு ஒப்பாக செயல்படுவார்களோ அவர்களும் அக்கூட்டத்தை சார்ந்தவர்கள்' (அபூதாவுத்).

ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் தனது இக்திழாஉஸ் ஸிராதில் முஸ்தகீம் முஹாலஃபதி அஸ்ஹாபில் ஜஹீம் என்ற நூலில்:

'அவர்களின் பண்டிகைகளில் கலந்து அவர்களுக்கு ஒப்பாக செயல்படுவதென்பது, அவர்களின் உள்ளத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி, அவர்கள் இருக்கும் அசத்திய வழியையும் சரிகாணச் செய்யும். அதே போன்று, சில வேளைகளில் இவர்களுடன் கூடி, இவ்வாறான நிகழ்வுகளில் உணவுகளை பரிமாறுவது - இது போன்ற விடயங்களில் கலந்து கொள்வது மார்க்கத்தில் பலவீனமாக உள்ளவர்களை திசை திருப்புவதற்கும் சந்தர்ப்பமாக பயன்படுத்தப்படும்.'

மேற்கூறப்பட்ட விடயங்களை, எந்த நோக்கமுமின்றி வெளிப்படையாகவோ அல்லது நட்பை பிரதிபலிக்கும் விதமாகவோ, அல்லது வெட்கத்தின் காரணத்தாலோ அல்லது வேறு எந்த காரணத்திற்காக செய்தாலும் - அவன் ஒரு மிகப் பெரிய குற்றத்தை செய்த பாவியாவான். ஏனெனில், அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் வளைந்து கொடுப்பதென்பது, இறை நிராகரிப்பாளர்களின் உள்ளங்களை அவர்களின் வழிகெட்ட கொள்கைகளில் பலப்படுத்துவதுடன், அவர்கள் இருக்கும் வழிகெட்ட மதங்களைப்பற்றி ஒரு பெருமை அவர்களுக்குள் உருவாக்கவும் வழிசெய்யும்.
(ஷைகு ஸாலிஹ் அல் உஸைமீன் (ரஹ்) அவர்களின் மஜ்மூஉல் பஃதாவா எனும் நூல்: 369/3)

இன்னும், "மர்யமுடைய மகன் ஈஸாவே, 'அல்லாஹ்வையன்றி என்னையும் என் தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக்கொள்ளுங்கள்' என்று மனிதர்களிடம் நீர் கூறினீரா?" என்று அல்லாஹ் கேட்கும் போது அவர், "நீ மிகவும் தூய்மையானவன்; எனக்கு உரிமையில்லாத ஒன்றை நான் சொல்வதற்கில்லை. அவ்வாறு நான் கூறியிருந்தால், நீ அதை நிச்சயமாக அறிந்திருப்பாய். என் மனதிலுள்ளதை நீ அறிகிறாய், உன் உள்ளத்திலிருப்பதை நான் அறிய மாட்டேன்;. நிச்சயமாக நீயே மறைவானவற்றையெல்லாம் நன்கு அறிபவன்" என்று அவர் கூறுவார்.(அல்குர்ஆன் -5:116)
Previous Post Next Post