-உஸ்தாத் SM இஸ்மாயீல் நத்வி
"ஜின் ", என்ற வார்த்தை அரபு மொழியில் மறைவாக இருக்கும் ஒன்றுக்கு சொல்லப்படும், அதனால்தான் இதே ஒத்த கருத்தில் வருகின்ற சுவனம் என்பதும் மனிதர்களின் கண்களில் இருந்து மறைக்கப்பட்டு இருப்பதால் அதற்கும் " ஜன்னத் " என்று சொல்லப்படுகிறது,
மனித, பாம்பு ,நாய், விஷ ஜந்துக்கள் போன்ற உருவங்களில் ஜின்கள் தோன்றுவதற்கு பல ஆதாரங்களை நபிமொழிகளில் காண்கிறோம்!!
பத்ர் போரில் குறைஷிகளுக்கு துணை நிற்பதாக ஷத்தான் ஸுராகா பின் மாலிக் என்பவரின் தோற்றத்தில் வந்ததை நாம் வரலாற்றில் காண்கிறோம் அதை அல்லாஹ் திருக்குர்ஆனில் ஸுரா அன்ஃபாலில்
8:48 ல் குறிப்பிடுகிறான்.
ஜின் இனம் நெருப்பால் படைக்கப்பட்ட ஒரு படைப்பு , அதன் உண்மையான உருவ அமைப்பில் அதை நாம் இவ்வுலக வாழ்வில் காண முடியாது என்பதே வஹி (இறைச் செய்தி) நமக்கு உணர்த்தும் உறுதியான செய்தி,
اِنَّهٗ يَرٰٮكُمْ هُوَ وَقَبِيْلُهٗ مِنْ حَيْثُ لَا تَرَوْنَهُمْ
நிச்சயமாக அவனும், அவனுடைய இனத்தாரும், நீங்கள் அவர்களைக் காண முடியாதவாறு மறைவாக இருந்து கொண்டு உங்களை (வழி கெடுக்க சமயம்) பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்
(அல்குர்ஆன் : 7:27)
மனிதர்களைப் போன்றே ஜின்களும் அல்லாஹ்வால் படைக்கப்பட்ட படைப்பு என்பதை முஸ்லீம்களாகிய நாம் நம்புகிறோம்,
وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْاِنْسَ اِلَّا لِيَعْبُدُوْنِ
மேலும், ஜின்களையும், மனிதர்களையும் என்னை அவர்கள் வணங்குவதற்காகவே தவிர நான் படைக்கவில்லை.
(அல்குர்ஆன் : 51:56)
இறைவனுக்கு கட்டுப்படக்கூடிய வானவர்களின் பண்புகளையும் இறைவனுக்கு மாறு படக்கூடிய ஜின்களின் பண்புகளையும் அல்லாஹ் ஒருசேர மனிதனிடத்தில் இயல்பாக படைத்திருக்கிறான்,
வானவர்களுக்கும் ஜின்களுக்கும் மத்தியில் மனித இனம் சமநிலையில் படைக்கப்பட்டிருக்கிறது, தங்களை படைத்த ரப்புவை எந்த அளவிற்கு மனித இனம் 24 மணி நேரத்தில் கட்டுபடுகிறது எந்த அளவிற்கு மாறு செய்கிறது என்பதை சோதிப்பதற்கே அல்லாஹ் இந்த உலக வாழ்வை ஒரு சோதனைக் கூடமாக ஆக்கித் தந்திருக்கிறான் என்பதை
மேழ்காணும் வசனத்தின் ஊடாக நாம் புரிந்து கொள்ள முடியும்,
நமது அன்றாட வாழ்வில் தினந்தோறும் புதிது புதிதான பிரச்சனைகளையும் துன்பங்களையும் நாம் முன்னோக்குகிறோம் அதற்குரிய தீர்வை பெற்றுக்கொள்ள இயல்பாகவே நாம் விரும்புகிறோம் அல்லவா !!!
அதுபோல வஹீ என்ற இறை செய்தியை மையமாகக்கொண்டு தான் தீர்வை பெற்றுக் கொள்ள முடியும் என்ற ஆழமான நம்பிக்கையே ஒரு முஸ்லிமின் அடையாளம் !!
அந்த இறைச்செய்தியை (அல்குர்ஆன் & ஸுன்னா) நபித்தோழர்கள் விளங்கின அடிப்படையில் அதை ஒரு அளவுகோலாக வைத்து விளங்குவது அவசியம்.
அறிவை மட்டும் உரசிப்பார்த்து மார்க்கத்தை விளங்க நினைப்பது வழிகேடே, இஸ்லாம் ஒரு அறிவுபூர்வமான மார்க்கம் அதில் எந்த சந்தேகமும் இல்லை , பகுத்தறிவு என்பது ஷரீஅத்தை விளங்குவதில் உதவி புரியுமேத் தவிர ஷரீஅத்தை மார்க்கச் சட்டத்தை உருவாக்கவோ தீர்மானிக்கவோ மிக சொற்ப ஆற்றலுடைய மனிதனின் பகுத்தறிவு இடமளிக்காது,
ஆக இறைசிந்தனை இல்லாமல் இருக்கும் பொழுது மனிதர்களின் மீது ஜின் இனத்தைச் சேர்ந்த ஷைத்தான் ஆதிக்கம் செலுத்தி மனிதர்களின் உடல்களில் புகுவதும் ,உள்ளங்களில் ஆட்சி புரிவதும் வஹியின் ஊடாக நிரூபணம் செய்யப்பட்ட ஒன்று,
மார்க்கத்தை விளங்குவதில் பகுத்தறிவை மட்டும் அளவுகோலாக பயன்படுத்திய வழிகெட்ட முஃதஸிலாக்களைத் தவிர அஹ்லுஸ் ஸுன்னத்வல் ஜமாஅத் சான்றோர்கள் அனைவரும் ஏகோபித்த கருத்தில் சூனியம் இருக்கிறது ஜின்களின் பாதிப்புகள் இருக்கிறது என்று ஏற்றுக் கொள்கின்றனர் ,
இவர்களின் அடிச்சுவடுகளை பின்பற்றும் நவீன காலத்து முஃதஸிலாக்களும் இதே கருத்தை தான் முன்வைத்து சூனியம் என்பது இல்லை ஜின்கள் மனிதர்கள் உடலில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்ற தவறான கருத்துக்களை பிரச்சாரம் செய்கிறார்கள்.
ஷைத்தான் மனிதனை தீண்டுகிறான்
அவனால் பாதிப்புகள் இருக்கின்றன என்பதை அல்குர்ஆன் உறுதி செய்கிறது
اَلَّذِيْنَ يَاْكُلُوْنَ الرِّبٰوا لَا يَقُوْمُوْنَ اِلَّا كَمَا يَقُوْمُ الَّذِىْ يَتَخَبَّطُهُ الشَّيْطٰنُ مِنَ الْمَسِّ
வட்டியை உண்பவர்கள், ஷைத்தான் தீண்டியதால் எவனை அவன் நினைவிழக்கச்செய்தானோ அத்தகையவன் எழும்புவதுபோலன்றி (வேறு வகையாக மறுமைநாளில்) அவர்கள் எழமாட்டார்கள்.
(அல்குர்ஆன் : 2:275)
மேற்காணும் இறை வசனத்திற்கு இமாம் குர்துபி அவர்கள் தங்களது புத்தகத்தில் (3/355 ) யார் ஜின்னை மறுக்கிறார்களோ அவர்களுக்கு இந்த வசனம் ஒரு மறுப்பாகும், ஒரு மனிதனுக்கு ஜின்னால் தீண்டுதல் என்பது ஏற்படாது அது இயற்கையே, ஷைத்தான் மனிதனுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது என்று நினைப்பது தவறு ,
இமாம் இப்னு கஸீர் அவர்களும் இந்த வசனத்தை பற்றிய விளக்கத்தை சொல்லும் பொழுது (1/32 ) வட்டியை புசித்தவர்கள் மறுமைநாளில் ஜின்களால் பாதிக்கப்பட்ட மனிதர்கள் எவ்வாறு எழுந்திருப்பார்களோ அதேபோன்றுதான் எழுவார்கள் , இமாம் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களும் புத்தி சுவாதீனமான ஒரு மனிதனைப் போன்று என்று ஜின்னால் பாதிக்கப்பட்ட ஒரு மனிதனுக்கு கூடுதலான ஒரு விளக்கத்தைத் தருகிறார்கள்.
அபூ யூசுர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கும் ஸுனன் நசஈ என்ற புத்தகத்தில் ஆதாரமான நபிமொழியாக இடம்பெற்றிருக்கும்
நபியவர்களின் பிரார்த்தனையில்
இவ்வாறும் செய்திருக்கிறார்கள்
وأعوذ بك أن يتخبطني الشيطان عند الموت
""இறைவா !!
மரண நேரத்தில் ஷைத்தானின் தீண்டுதலை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் ",
இமாம் மனாவி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இந்த நபிமொழிக்கு தனது
ஃபைழுல் கதீர்- فيض القدير
(2/148) ல் ஷத்தானின் தூண்டுதலை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன் என்ற நபிமொழிக்கு விளக்கம் கூறும் பொழுது சைத்தான் என்னை தீண்டி , என்னுடன் கலந்து என்னை சீர்குலைத்து எனது மார்க்கத்தையும் அறிவையும் வீணாக்குவதை விட்டும் பாதுகாப்பு தேடுகிறேன் என்று கூறுகிறார்கள்.
ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்கள் மஜ்மஃஉல் ஃபதாவாவில் ( 24/276) ஷைத்தான் மனிதனின் உடலில் புகுந்து பாதிப்பு ஏற்படுத்துவது குர்ஆன் சுன்னாவின் ஊடாக ஊர்ஜிதம் செய்யப்பட்டு இருக்கும் ஒரு விடயம் 2: 275 திருக்குர்ஆன் வசனம் உறுதி செய்கிறது என்று சுட்டிக்காட்டிய பின் ,
ஸஹீஹான நபிமொழிகளில் இடம்பெற்றுள்ள "ஷைத்தான் மனிதனின் ரத்த நாளங்களில் ஓடுகிறான்" என்ற கருத்து அதை மேலும் உறுதி செய்கிறது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
இமாம் அஹ்மத் பின் ஹம்பல் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் மகனார் அப்துல்லாஹ் அவர்கள்
தங்களின் தந்தையிடம் சிலர் சைத்தான் மனித உடலில் ஊடுருவ மாட்டான் என்று கூறுகிறார்களே என்று கேட்டபொழுது ஷைத்தான் தான் அவர்களின் நாவுகளில் இவ்வாறாக பேசுகிறான் என்று ஒரு தகவலை கூறுகிறார்கள்.
யஃலா பின் முர்ரா அஸ்ஸகஃபி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கும் ஒரு நபிமொழி ஹாக்கிமில் பதிவு செய்யப்பட்டிருக்கிற நீண்ட அறிவிப்பில் நான் இறைத்தூதராக இருக்கிறேன் அல்லாஹ்வின் விரோதியே இந்த குழந்தையை விட்டு வெளியேறி விடு என்று கூறுகிறார்கள் , இந்த நபிமொழி ஆதாரம் மிக்கது என்பதாக இமாம் நாஸிருத்தீன் அல்பானி அவர்கள் தங்களின் ஸில்ஸிலது அஹாதீஸ் அந்நபவிய்யாவில் குறிப்பிடுகிறார்கள்.
ஆக ஜின் ஷைத்தானுடைய தீண்டுதல் என்பது இருக்கிறது என்பதை நாம் தெளிவான ஆதாரங்களின் ஊடாக பார்த்தோம்,
இதை பகுத்தறிவால் மறுத்துவிட்டு மார்க்கம் இல்லை என்று கூறுவதும் எவ்வாறு வழிகேடோ அதேபோன்று இந்த ஜின் , ஷைத்தான்களின் தீங்குகளை விட்டு தவிர்த்துக் கொள்வதற்கு தர்ஹாக்கள் தீர்வல்ல,
அது மேலும் மன நோயையும் ஷிர்க்கையும் இறைநம்பிக்கையாளர்களிடத்தில்
அதிகப்படுத்திவிடும், இன்று எத்தனையோ நபர்கள் காலம் காலமாக பல வருடமாக தர்ஹாக்களை அணுகி தங்களது பிரச்சினைகளை சரி செய்ய முயற்சித்து தோற்றுத்தான் போனார்கள்.
இந்த பிரச்சனைக்கு தீர்வு பாதிக்கப்பட்டவர்கள் மன இச்சைக்கு கட்டப்படாமல், மந்திரித்தல், தாயத்து கட்டுதல் என்ற மூடநம்பிக்கைகளை செய்யாமல், இறை சிந்தனையில், திக்ரில்,
இபாததுகளில் அதிகமான நேரத்தைச் செலவு செய்து இறைத்தூதர் ﷺ அவர்கள் காட்டித்தந்த வழியில் நின்று திருக்குர்ஆன் வசனங்களையும், ஸஹீஹான நபிமொழிகளில் இடம்பெற்றிருக்கும் துஆக்களையும் ஓதி தீர்வுகளை பெறலாம், இது இறைவனின் சோதனை என்பதை மனதில் கொள்ள வேண்டும், எந்த ஒரு காரியத்தை செய்ய ஆரம்பித்தாலும் அல்லாஹ்வுடைய பெயரைக் கொண்டு பிஸ்மில்லாஹ் கூறி ஆரம்பிக்க வேண்டும், கதவைத் திறந்தால், வாகனத்தில் அமர்ந்தால், மனைவியுடன் உறவு கொண்டால் இன்று நாம் அன்றாடம் செய்யும் பணிகளில் அல்லாஹ்வை நினைவு கொள்ள வேண்டும் இது ஷைத்தானின் தீங்கைவிட்டு பாதுகாக்கிறது,
இதற்கு முதலில் உறுதியான இறை நம்பிக்கையும் நிலைகுலையாத இஸ்லாமிய அடிப்படைக்கொள்கைகளும் இன்றியமையாத ஒன்று,
நம்மால் இந்த துஆக்களை ஓத முடியவில்லை என்றால் குர்ஆனிலும் ஸுன்னாலும் வந்திருக்கும் துஆக்களை கற்றுத் தேர்ந்து இருக்கும் ருகாதுகள் , உலமாக்களிடம் உதவியை நாடலாம், ஆனால் ஆமில்கள் என்ற பெயரில்
ஜின் ஷைத்தான்களை விரட்டுவது என்ற பெயரில் அதிகமான போலி ஆமில்கள் உலாவிவருகின்றனர் எச்சரிக்கை!!
தங்களின் வயிற்று பிழைப்பிற்காக அப்பாவி முஸ்லிம்களை ஏமாற்றி அவரிடத்தில் குடிகொண்டிருக்கும் இந்த பயத்தை தங்கள் லாபகரமான முதலீடுகளாக வியாபாரம் செய்யும் இழிவான செயல்கள் அதிகமாக இடம் பெறுகின்றன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்!!
இரவு நேரங்களில் படுப்பதற்கு செல்வதற்குமுன் ஆயத்துல் குர்ஸி, சூரா ஆல இம்ரானின் கடைசி வசனங்கள் போன்ற திருக்குர்ஆன் வசனங்கள் ஓதப்படும் பொழுது அங்கு ஷைத்தான் பிரவேசிப்பதில்லை என்ற தெளிவான ஆதாரங்கள் இருந்தும் அதையும் ஓதி அதற்குப்பின் சினிமா பாடல்கள் சினிமாக்கள் என்று நாம் இரவையும்,பகலையும், கழிப்பதன் மூலமாகவும் வீடுகளிலிருந்து விரட்டப்பட்ட ஷைத்தானை நாம் தோள் மேல் கை போட்டு அழைத்துக் கொள்கிறோம்,
டிவி சினிமா இன்று
கை அடக்கமாக ஸ்மார்ட் போன்களாக பரிணாமம் அடைந்து இருப்பதினால் மிக கவனத்துடன் அதை கையாள வேண்டும் பார்வைக்கு எதெல்லாம் அனுமதிக்கப்பட்டிருக்கிறதோ அதை தவிர்த்து தடுக்கப்பட்ட விடையங்களை அல்லாஹ்விற்காக தவிர்த்துக் கொள்ள வேண்டும், இரவு நேரங்களில் நம்மை கண்காணிப்பதற்கு யார் இருக்கிறார்கள்? என்ற ஷைத்தானிய சிந்தனைகளால் இறை சிந்தனை , இறையச்சம் போன்ற இறைநம்பிக்கையாளர்களின் பண்புகளை இழந்து நயவஞ்சகர்களின் பண்புகள் கொஞ்சம் கொஞ்சமாக நமது உள்ளங்களில் குடிகொள்ள ஆரம்பிக்கிறது என்பதை மறந்துவிட வேண்டாம் இவைகள்தான் ஷைத்தான் ஜின் என்ற தீய படைப்புகளால் உடல்களிலும் உள்ளங்களிலும் ஊடுருவல் என்று அர்த்தம்.
எப்பொழுதும் பாவமான சிந்தனையில் இருப்பது, அல்லாஹ்வும் தூதரும் தடுத்து இருக்கக் கூடிய விடயங்களை மனமுவந்து தைரியமாக செய்வது இணைவைத்தல், பித்அதுகளில் கவனமின்மையாக இருந்து அதை மார்க்கமாக செய்வது,
இவைகள்தான் நமது உடல்களில் உள்ளங்களில் ஷைத்தான் ஜின் போன்ற தீய படைப்புகள் உள் ஊடுருவதற்கு அடிப்படையான காரணங்கள்.
هَلْ اُنَبِّئُكُمْ عَلٰى مَنْ تَنَزَّلُ الشَّيٰـطِيْنُ
(விசுவாசிகளே!) ஷைத்தான்கள் எவர்மீது இறங்குகின்றனர் என்பதை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா?
(அல்குர்ஆன் : 26:221)
تَنَزَّلُ عَلٰى كُلِّ اَفَّاكٍ اَثِيْمٍۙ
(செயலால்) பாவியான, (செயலால்) அதிகமாகப் பொய்கூறும் ஒவ்வொருவரின் மீதும் அவர்கள் இறங்குகின்றனர்.
(அல்குர்ஆன் : 26:222)