பிறரது தேவைகளை நிறைவேற்றி வைப்பதும் சிரமங்களைப் போக்க உழைப்பதும் எவ்வளவு மகத்தானது என்பதை பின்வரும் நபிமொழிகள் உணர்த்தி நிற்கின்றன :
1. துன்பத்திற்குள்ளானவர்களின் துன்பத்தை நீக்கிவிடுபவருக்கு அல்லாஹ் எந்த நிழலும் இல்லாத மறுமை நாளில் தனது நிழலை வழங்குவான் (நூல் : ஸஹீஹுல் ஜாமிஃ).
2. சிரமப்படும் ஒருவரின் சிரமத்தை யார் போக்கிவிடுகிறாரோ அவருக்கு இவ்வுலகிலும் மறுமையிலும் ஏற்படும் சிரமங்களை அல்லாஹ் நீக்கிவிடுவான் (நூல் : ஸஹீஹுல் ஜாமிஃ).
3. ஒருவர் ஒரு சகோதரனுக்கு உதவிசெய்யும் காலமெல்லாம் அல்லாஹ் அவருக்கு உதவிசெய்கிறான் (நூல் : ஸஹீஹ் முஸ்லிம்).
4. யார் ஒரு சகோதரனின் தேவையை நிறைவேற்றி வைக்கிறாரோ அவரது தேவையை அல்லாஹ் நிறைவேற்றிவிடுகிறான் (நூல் : ஸஹீஹுல் ஜாமிஃ).
5. ஒரு சகோதரனின் தேவையை நிறைவேற்றி கொடுப்பதற்காக அவருடன் செல்வது பள்ளிவாசலில் ஒரு மாதம் இஃதிகாப் இருப்பதை விட எனக்கு அதிக விருப்புக்குரியதாகும் (நூல் : ஸில்ஸிலதுல் அஹாதீஸ் அஸ்ஸஹீஹா).
6. யார் ஒரு சகோதரனுடன் சென்று அவரது தேவையை நிறைவேற்றும் வரை அவருடன் தங்கியிருக்கிறாரோ, அவருக்கு அல்லாஹ் பாதங்கள் தடுமாறும் மறுமைநாளில் அவரது பாதத்தை உறுதிப்படுத்துவான் (நூல் : ஸில்ஸிலதுல் அஹாதீஸ் அஸ்ஸஹீஹா).
7. செயல்களில் மிகச் சிறந்தது உனது சகோதர முஸ்லிமுக்கு மகிழ்ச்சியை கொடுப்பதாகும், அல்லது அவரது கடனை நிறைவேற்றுவதாகும், அல்லது ஓர் உரொட்டியை உணவாக வழங்குவதாகும் (நூல் : ஸஹீஹுல் ஜாமிஃ).
8. மறுமையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து அல்லாஹ் தன்னை பாதுகாக்கவேண்டுமென யார் விரும்புகிறாரோ அவர் இவ்வுலகில் ஒருவருக்கு ஏற்படும் துன்பங்களை துடைத்துவிடவும் (நூல் : ஸஹீஹ் முஸ்லிம்).
9. துன்பத்திற்குள்ளானவர்களிடம் சென்று அவர்களது துன்பங்களை நீக்கிவிட்டால் அல்லாஹ்வை அவர் மறுமையில் சந்திக்கும் வேளையில் அல்லாஹ் அவரது துன்பங்களை துடைத்துவிடுவான் (நூற்கள் : புஹாரி, முஸ்லிம்).
*******
சாதி, மத, இன வேறுபாடுகள் கடந்து மனித குலத்தின் துன்பங்களை துடைக்குமாறு, தேவைகளை நிறைவேற்றுமாறு, மகிழ்ச்சியையும் ஆறுதலையும் ஏற்படுத்த உழைக்குமாறு இஸ்லாம் அழைப்புவிடுக்கிறது.
ARM. ரிஸ்வான் (ஷர்க்கி)