ஹதீஸ் ஒன்றின் அறிவிப்பாளர் வரிசையில் ஒவ்வொரு காலப்பகுதியிலும் எத்தனை நபர்கள் இடம் பெறுகின்றார்கள் என்ற எண்ணிக்கையை வைத்து ஹதீஸ்கள் இரண்டு வகைகளாக பிரிக்கப்படுகின்றன.
1. முதவாதிர் (ஒருமித்து அறிவிக்கப்படுவது)
(அறிவிப்பாளர் வரிசையில் குறித்த ஒவ்வொரு காலப்பகுதியிலும் பலர் ஒருமித்து அறிவிக்கும் செய்தி)
ஒரு செய்தியை மக்களால் பொய்ப்படுத்த முடியாத அளவிற்கு ஏராளமான நபித்தோழர்கள் அறிவிக்கின்றனர், தாபிஈன்களிலும் அதிகமானவர்கள் அறிவிக்கின்றனர். அவர்களை துயர்ந்து வருபவர்கள் பலர் அறிவிக்கின்றனர்.. இப்படி அறிவிக்கப்படும் செய்தியே முதவாதிராகும் (முதவாதிருக்கு ஐந்து நிபந்தனைகள் உண்டு)
2. ஹபருல் ஆஹாத் (தனிநபர் செய்தி)
முதவாதிர் என்ற தரத்தை அடையாத ஹதீஸ்களுக்கு ஹபருல் ஆஹாத் என்று பெயராகும், இது மூன்று வகைப்படும்.
1. கغரீப் - அறிவிப்பாளர் வரிசையின் ஏதாவது ஒரு காலப்பகுதியிலோ அல்லது அனைத்து காலப்பகுதியிலுமோ ஒருவர் மட்டுமே தனித்து அறிவிக்கும் ஹதீஸாகும்.
2. அஸீஸ் - அறிவிப்பாளர் வரிசையின் ஏதாவது ஒரு காலப்பகுதியிலோ அல்லது அனைத்து காலப்பகுதியிலுமோ இருவர் மட்டுமே தனித்து அறிவிக்கும் ஹதீஸாகும்.
3. மஷ்ஹூர் - அறிவிப்பாளர் வரிசையின் ஏதாவது ஒரு காலப்பகுதியிலோ அல்லது அனைத்து காலப்பகுதியிலுமோ குறைந்தது மூன்று நபர்கள் அறிவிக்கும் ஹதீஸாகும்.
ஹதீஸ் ஒன்றை ஒவ்வொரு காலப்பகுதியிலும் எத்தனை நபர்கள் அறிவித்துள்ளார்கள் என்று அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும் நபர்களின் எண்ணிக்கையை கணிப்பதற்காக வடிவமைக்ககப்பட்ட முதவாதிர் ஆஹாத் என்ற பகுதிகளை ஹதீஸ்களின் பலம் பலவீனம் (ஸஹீஹ் ழஈபோடு) தொடர்பு படுத்திப் பார்த்து, ஆஹாதான செய்திகளின் அறிவிப்பாளர் வரிசை, செய்தியின் உள்ளடக்கம் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரும் ஆஹாத் என்பதற்காகவே அந்த செய்திகளை புறக்கணிக்க முயற்சிப்பதானது, பகுத்தறிவு வணங்கிகளான நவீன முஃதஸிலாக்களின் ஹதீஸ் மறுப்புக் கொள்கையின் புதிய ஒரு வடிவமாகும்.
ஆஹாதான செய்திகளோ முதவாதிரான செய்திகளோ இவை ஒவ்வொரு காலப்பகுதிகளிலும் குறித்த அந்த ஹதீஸை அறிவித்த அறிவிப்பாளர்களின் எண்ணிக்கையை கணிப்பதற்கே உருவாக்கப்பட்டன, ஹதீஸின் நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்கல்ல என்பதனை இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஹதீஸ் கலை விதியின் படி ஆஹாதான ஒரு செய்தியின் அறிவிப்பாளர் வரிசை ஸஹீஹ் என உறுதிப்படுத்தப்பட்டால் அங்கு எமது பகுத்தறிவுக்கு எந்த வேலையும் கிடையாது, அதனை வைத்து அகீதா முதற்கொண்டு அமல்களின் சிறப்புக்கள் வரை எதனையும் எம்மால் நிறுவ முடியும், எதிலும் அவற்றை ஆதாரமாகக் கொள்ள முடியும்.
முஜத்திதுஸ் ஸுன்னா அல்லாமா அல்பானியின் "வுஜூபுல் அஹ்தி பிஹதீஸில் ஆஹாத் பில் அகீதா" என்ற நூலில் "ஹபருல் ஆஹாத்" ஒற்றை வழிச்செய்திகள் (மஷ்ஹூர், அஸீஸ், غகரீப்) ஸஹீஹானதாக இருந்தாலும் அகீதா சார்ந்த விடயங்களில் எடுப்பது கூடாது என்ற கருத்தைக் கூறும் பகுத்தறிவுவாத முஃதஸிலாக்கள், கத்ரிய்யாக்கள், ஜஹ்மிய்யாக்கள் போன்ற மனோ இச்சையை ஆதரிப்பவர்களுக்கான மறுப்புரை தாராளமாகவே வழங்கப்பட்டுள்ளது, என்பதனையும் ஞாபகம் செய்து கொள்கிறோம்.
By - Shk TM Mufaris Rashadi.
Lecturer, Al Manar Islamic Centre
Dubai , UAE.