தேவனுக்கு குமாரனா?

டிசம்பர் மாதம் 25ம் தேதியை இயேசு என்ற ஈஸா  (அலை) அவர்களின் பிறந்த நாள் எனக் கூறி கிருஸ்துமஸ் தினம் கொண்டாடுகிறார்கள். கிருஸ்தவ சகோதரர்கள். அந்த நாள் தான் உண்மையிலேயே அவர்கள் பிறந்த நாள் என்று ஒரு வாதத்திற்கு வைத்துக்கொண்டாலும் பிறந்த நாள் கொண்டாட்டம் என்பது முறையானதல்ல.

ஆனால் நாம் அந்த சர்ச்சையை விட்டுவிட்டு கிருஸ்தவ சகோதரர்கள் ஈசா நபி பற்றி கொண்டிருக்கும் அடிப்படை நம்பிக்கை சரிதானா என்று பார்ப்பதே முக்கியமனது.

ஈசா(அலை) அவர்களை தேவனின் குமாரன் எங்கின்றனர். அடிப்படையில் இந்த நம்பிக்கை இறைவன் இறக்கி வைத்த எல்லா வேதங்களுக்கும் எதிரானது, ஈசா (அலை) உட்பட எல்லாத் தூதர்களும் செய்த பிரச்சரத்துக்கு மாற்றமானது, பகுத்தறிவுக்கு ஒவ்வாதது.

நாம் சாதாரணமாக சிந்தித்து பார்த்தாலே இந்த நம்பிக்கை மிகத் தவறானது என்பதைப் புரியலாம்!

பிள்ளைப் பேறு உண்டாகுதல் என்பது எப்படி? மனிதனுக்கும் மற்ற படைப்புகளுக்கும் இச்சை என்று ஒன்று உள்ளது. அதைத் தணித்துக் கொள்வதால் பிள்ளைப் பேறு கிடைக்கிறது.

இவ்வாறான இச்சை என்று எல்லாம் வல்ல இறைவனுக்கு உண்டா என்றால் எல்லோருமே இல்லை என்று தான் சொல்கிறார்கள். அப்படியானால் அதனால் ஏற்படும் பிள்ளையும் தேவனுக்கு இல்லை என்பதே சரி!

அது போல் வயோதிக காலத்தில் உதவி செய்வதற்கு மனிதனுக்குத் தான் வாரிசு தேவைப்படுகிற்து. இவ்வாறு வயோதிகமும் பலவீனமும் அடையும் நிலை எல்லாம் வல்ல இறைவனுக்கு உண்டா என்றால் எல்லோரும் கிருத்தவர்கள் உட்பட பதிலளிப்பது இல்லை என்று தான். அப்படியானால் அவனுக்கு வாரிசு இல்லை என்பது தான் உண்மை!

தேவனுக்கு குமாரன் இருப்பதாக கூறுவது அவன் மீது கூறும் பெரும் அவதூறும் மோசமான வழிகேடும் ஆகும். இதனை சாதரண அறிவு கொண்டவரும் புரிந்துகொள்ளும் விதத்தில் திருக்குர்ஆனில் பல விதங்களில் தேவன் விளக்குகிறன். உண்மையை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் கொண்ட எந்த மனிதரும் அதை மறுக்க முடியாது!

மனைவி இல்லாதிருக்க
இறைவன் தனது இறுதி வேதத்தில் கூறுகிறான்:

“அவர்கள் ஜின்களை இறைவனுக்கு இணையானவர்களாக ஆக்குகிறார்கள். (அந்த ஜின்களான) அவர்களையும் அவனே படைத்தான். இருந்தும் அறிவில்லாத காரணத்தல் இணைவைப்போர் அவனுக்கு புதல்வர்களையும், புதல்விகளையும் கற்பனை செய்து கொண்டார்கள், அவனோ இவர்கள் (இவ்வாறு) வர்ணிப்பதிலிருந்து தூயவனானகவும், உயர்ந்தவனாகவும் இருக்கின்றன்.
அவன் வானங்களையும், பூமியையும் முன்மாதிரியின்றிப் படைத்தவன். அவனுக்கு மனைவி எவரும் இல்லாதிருக்க எவ்வாறு அவனுக்குப் பிள்ளை இருக்க முடியும்? அவன எல்லாப் பொருட்களையும் படைத்தான். இன்னும் அவன் எல்லப் பொருட்களையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.” அல்குர்ஆன் 6:100,101
இங்கு இறைவனுக்கு மகன் இல்லை என்பதை தர்க்க ரீதியாக அந்த இறைவனே விளக்குகிறான். மனைவி என்ற உறவின் மூலமாக ஏற்படுவது தான் பிள்ளை என்ற உறவு, அவனுக்கு மனைவி இல்லை என்று நீங்களே ஒப்புக் கொள்ளும் போது பிள்ளை இல்லை என்றும் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும் என்று இந்த தவறான நம்பிக்கை கொண்டவர்களுக்கு விளக்கமளிக்கிறான்.

இப்போது ஒருவர் தன் தவறான நம்பிக்கையை நியாயப்படுத்துவதற்காக, அவனுக்கு மனைவி இல்லை தான் ஆனால் குமாரன் மட்டும் உண்டு என்று கூறலாம். அப்படியானால்,ஒருவர் தேவனுக்கு அப்பன் இல்லைதான், ஆனால் அம்மா மட்டும் இருக்கிறாள் என்று சொல்லலாம்.

இன்னொருவர் அவனுக்கு தாய், தந்தை இல்லை தான், ஆனால் சகோதரன் மாத்திரம் இருக்கின்றான் என்று கூறலாம். இன்னொருவர் தேவனுக்கு மாமன் இல்லை தான். ஆனால் ‘மச்சான்’ மட்டும் இருக்கிறான் என்று வாதிடலாம். இந்த உறவுகளொல்லாம் இருப்பதாகச் சொன்னால், இது மனிதராக கற்பனை செய்வது, ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்பீர்கள்.

இதே பதில் தான் உங்களுக்கும்! தேவனுக்கு குமாரர் இருப்பதாக கூறுவதும் பொரும்பாவமான கற்பனை தான், இறைவழியில் மக்களை வழி நடத்திய தீர்க்கதரிசிகளெல்லாம் உங்களின் இந்த நம்பிக்கைக்கு எதிரானவர்கள், ஏன் இறைத் தூதர் இயேசு அவர்களும் இந்த நம்பிக்கைக்கு எதிரானவர் தான். அவர்களுக்குப் பின்னால் வந்த மனிதர்கள் உருவக்கிய கற்பனை தான் இந்த நம்பிக்கை என்பதை உணர வேண்டும்.

அடுத்து, இயேசுவை தேவ குமாரன் என்று வாதிப்போருக்கு அவர்களின் கூற்று தவறு என்பதை தெளிவான உதாரணத்தைக் கூறி அறிவுப்பூர்வமாக மறுப்பளிக்கிறான். தேவன் தன் இறுதி வேதத்தில், கவனியுங்கள்!

“நிச்சயமாக இறைவனிடத்தில் ஈசாவின் உதாரணம் ஆதமின் உதாரணத்தைப் போன்றதே! அவன் அவரை மண்ணிலிருந்து படைத்து பின் ‘ஆகுக’ எனக் கூறினான். அவர் ஆகிவிட்டார்.” அல்குர்ஆன் 3:59
இந்த வசனத்தில் இறைத்தூதர் ஈஸா அவர்கள் தகப்பனின்றி தாய் மூலமாக மட்டும் படைக்கப்பட்டதால் அவர்கள் அல்லாஹ்வின் மகன்தான் என்று கற்பனை செய்வோருக்கு சிறுபிள்ளையும் விளங்கும் விதத்தில் அழகான உதாரணத்தின் மூலம் விளக்கமளிக்கப்படுகிறது.

தகப்பன் மட்டுமின்றி படைக்கப் பட்டதாலேயே ஈசா நபி தேவனின் குமாரர் ஆகிவிடுவார் என்றால் தாய் தகப்பன் இருவருமின்றி படைக்கப்பட்ட ஆதம் தேவனின் குமாரர் என்று சொல்ல அதிக தகுதிபடைத் தவராகி விடுவார்.

நீங்களே சொல்லிவிடுவீர்கள், தாயும் தகப்பனும் இல்லாவிட்டாலும் அவரும் தேவனால் படைக்கப்பட்டவர் தானே என்று, இது தான் இயேசு விஷயத்திலும் சொல்லப்பட வேண்டியது.

தகப்பன் இல்லாவிட்டாலும் ஒரு அற்புதமாக இருக்க வேண்டுமெனபதற்காக இறைவன் தான் அவரை அவ்வாறு படைத்தான், படைக்கப்பட்டவரெல்லாம் தேவனின் அடிமைகள் தானே தவிர எவரும் அவனுக்கு குமாரர் அல்ல என்பதை புரிய வேண்டும்.

இயேசு இறைவனின் மகன் என்று சொல்வது கூடாது என்பதற்கு இன்னொரு அறிவார்ந்த வாதத்தை முன் வைக்கிறான் இறைவன்.

‘மர்யமின் குமாரர் ‘மஸீஹ் தூதரே தவிர வேறில்லை, அவருக்கு முன்னரும் தூதர்கள் பலர் சென்று விட்டனர்.அவருடைய தாயார் மிக்க உண்மையானவர். இவ்விருவரும் (மற்ற மனிதர்களைப் போல்) உணவு உண்பவர்களாகவே இருந்தனர். அவர்களுக்கு அத்தாட்சிகளை எவ்வாறு தெளிவு படுத்துகிறோம் என்பதை கவனிப்பீராக! அவர்கள் எவ்வாறு திசை திருப்பப்படுகிறார்கள் என்பதையும் கவனிப்பீராக!” அல்குர்ஆன் 5:75
இதில் இயேசுவும் அவர் தாயாரும் எல்லா மனிதர்களுக்குமுள்ள தேவைகள் உள்ளவர்களாகவே இருந்துள்ளனர் என்பதை கூறி, இயேசு தேவனின் குமாரராகவோ  கடவுளின் தன்மை கொண்டவராகவோ இருக்கவில்லை அவ்வாறு யாரும் இருக்க முடியாது என்பதை விவரிக்கிறான்.

இவ்வாறெல்லாம் அறிவார்ந்த ஆதாரத்துடன் தேவன் தன் இறுதி வேதத்தில் இயேசு தனது குமாரர் அல்ல, தனது அடிமையும், தூதரும் தான் என்று விளக்கமளிகிறான்.

இருப்பினும் கிருத்துவ சகோதரர்கள் அவர் தகப்பனின்றி பிறந்தாரே என்ற காரணத்தை முன்வைக்கலாம். ஆம் அவர் தகப்பனின்றி பிறந்தது உண்மை தான். அவரை எல்லாம் வல்ல இறைவன் அவ்வாறு படைத்தான்! அதற்கான காரணத்தையும் அவனே கூறுகிறான்.

“மர்யமின் மகனையும் அவரது தாயாரையும் ஓர் அத்தாட்சியாக்கினோம்.” அல்குர்ஆன் 23:50.
ஆணின் தீண்டுதல் இல்லாமல் ஒரு பெண் மூலம் தனது ‘ஆகட்டும்’ என்ற உத்தரவு மூலம் ஒரு மனிதரை படைக்க இயலும் என்பதற்கு ஓர் ஆதாரமாகவும் அற்புதமாகவும் இருப்பதற்காக அவ்வாறு படைத்துள்ளான்.

ஒரு வேளை தாய், தகப்பன் இருவரும் இல்லாமல் அவரை அல்லாஹ் படைத்திருந்தால் கூட அவர் அல்லாஹ்வின் மகனாக ஆக முடியாது, ஏனென்றால் அவனால் படைக்கப்பட்ட அனைவரும், அனைத்தும் அவனுக்கு அடிமைகள். அவனுக்கு உரியவர்கள்.

“’அல்லாஹ் ஒரு குமாரனை ஏற்படுத்திக்கொண்டான்’ என்று கூறுகின்றனர். அவன் (இவர்கள் கூறுவதிலிருந்து) மிகத்தூய்மையானவன்; வானங்களிலும் பூமியிலும் உள்ளவையாவும் அவனுக்கே அடிபணிகின்றன.” அல்குர்ஆன் 2:116
பைபிளில் இயேசுவைப் பற்றி தேவ குமாரன் என்று சொல்லப்பட்டிருபதால் அப்படிதான் நம்ப வேண்டும் என்று வாதிடலாம்; ஆனால் நல்லவர்களாக நடந்து கொள்பவர்களெல்லாம் தேவனுக்கு புத்திரர்கள் என்று பைபிளில் பொதுவாக சொல்லப்பட்டுள்ளது.

சில நன்னடத்தைகளை போதித்த ஈசா நபி, “இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்குப் புத்திரராய்யிருப்பீர்கள்…” ( மத்தேயு அதிகாரம் 5, வசனம்  45) என்று மக்களைப் பார்த்து கூறியதாக உள்ளது. அப்படியானால் நல்லவர்கள் எல்லாம் தேவனுக்கு மகன்தான்.

அதுபோல் இன்னொரு வசனம்:
“ஆகையால் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறது போல நீங்களும் பூரண சற்குணராயிருக்க கடவீர்கள்” (மத்தேயு அதிகாரம்-5, வசனம் 48)
இந்த வசனத்தின்படி பரலோகத்தில் இருக்கிற தேவன் உங்கள் எல்லோருக்கும் பிதா தான்!

இன்னொரு இடத்தில் கூறப்பட்டுள்ளது:

“அவருடைய நாமத்தின் மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனை பேர்களோ அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும் படி, அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்”. ( யோவான் அதிகாரம்-1, வசனம் 12)
நபி ஈசாவை ஏற்றுக் கொண்டவர்களாயிருக்கும் அத்தனை பேரும் தேவனின் குமாரர்களாக இருக்க அவர்களே அதிகாரம் கொடுத்து விட்டார்கள்.

ஆக இதுபோன்று பைபிளில் சொல்லப்படுவதெல்லாம் கடவுளுக்கு விருப்பமான வழியில் நடப்பவர்கள் அவனது பிள்ளைகள் என்று சொல்லப்படத்தக்கவர்கள், அந்த அளவிற்கு அவனுக்கு விருப்பமானவர்கள் என்ற கருத்தை தருகின்றன.

அவ்வாறிருக்கையில் பைபிளின் வார்த்தைப்படி,தேவனின் கோடிக்கணக்கான குமாரர்களில் ஒருவராயிருக்கும் இயேசுவை மட்டும் கர்த்தர் என்று கூறி மிகைபடுத்துவதும், தெய்வத்தன்மை உள்ளவராக சித்தரிப்பதும் அவரை வணங்குவதும் பெரும்பாவமாகும்.

இது பைபிள் ஏற்காத கொள்கையும், ஈசா நபி எதிர்க்கும் கருத்துமாகும். உண்மையைச் சொல்லப்போனால் தேவனுக்கு மகன் இருப்பதாக சொல்வது முற்காலத்தில் வழிகெட்டுப் போன விசுவாசமற்ற கூட்டத்தின் கொள்கையாகும்.

திருக்குர்ஆன் கூறுகிறது:
“யூதர்கள் ‘உஜைர்’ அல்லாஹ்வின் மகன் என்று கூறுகிறார்கள். கிருத்தவர்கள் ‘மஸீஹ்’  அல்லாஹ்வின் மகன் என்று கூறுகிறார்கள். இது அவர்கள் தங்கள் வாய்களால் கூறும் கூற்றேயாகும்,
(இவர்களுக்கு) முன்னிருந்த நிராகரிப்போரின் கூற்றுக்கு இவர்கள் ஒத்துப்போகிறார்கள். அல்லாஹ் அவர்களை அழிப்பானாக! அவர்கள் எங்கே திருப்பப்படுகிறார்கள்.” அல்குர்ஆன் 9:30.
ஈசா நபியையோ அல்லது வேறு எவரையுமோ இறைவனின் மகன் என்று கூறுவது பெரும்பாவமாகும். தேவன் தன் இறுதி வேதத்தில் கூறுகிறான்:

“அல்லாஹ் (தனக்கென) ஒரு மகனை எடுத்துக் கொண்டான் என்று சொல்பவர்களை எச்சரிப்பதற்காகவும் (இதனை இறக்கி வைத்தான்). அவர்களுக்கோ அவர்களுடைய மூதாதையர்களுக்கோ இதைப் பற்றி எவ்வித அறிவாதாரமுமில்லை அவர்களுடைய வாய்களிலிருந்து புறப்படும் (இந்த) வார்த்தை பெரும் பாவமானதாகும். அவர்கள் கூறுவது பொய்யேயன்றி வேறில்லை.” அல்குர்ஆன் 18:4,5.
“இன்னும், ‘அர்ரஹ்மான் (தனக்கென) ஒரு குமாரனை எடுத்துக் கொண்டுள்ளான்’ என்று அவர்கள் கூறுகிறார்கள். நிச்சயமாக நீங்கள் அபாண்டமான (ஒரு கூற்றைக்) கொண்டு வந்திருக்கீறீர்கள். இவர்களின் இந்த கூற்றினால் வானங்கள் வெடித்து பூமி பிளந்து மலைகள் சிதறுண்டு விடும் போலும் அவர்கள் அர்ரஹ்மானுக்கு ஒரு குமாரன் உண்டென்று தாவாச் செய்வதினால் – ஒரு குமாரனை எடுத்துக் கொள்வது அல்லாஹ்வுக்குத் தேவையில்லாதது. ஏனென்றால் வானங்களிலும் பூமியிலும் உள்ள ஒவ்வொருவரும் அர்ரஹ்மானிடம் அடிமையாய் வருபவரேயன்றி வேறில்லை.” அல்குர்ஆன் 19:88,93
ஆகவே இறைவனின் தண்டனையிலிருந்து தப்பிக்கவும் அவனது அருளைப் பெறவும் விரும்புபவர்கள் அவனுக்கு குமாரன் இருப்பதாக கூறும் வழிகேட்டிலிருந்து மனம் திருந்தி, தகப்பனும் மகனுமில்லாத எல்லாம் வல்ல ஒரே இறைவனை விசுவாசம் கொண்டு அவனை மட்டுமே வணங்கி வழிப்படும் சத்திய மார்க்கம் இஸ்லாத்திற்கு வர வேண்டும்.

 -M. அப்துர்ரஹ்மான் மன்பஈ.,MA.,M.phil         
أحدث أقدم