வழக்கமான பொருளாதாரத்தில், நாம் கற்றுக் கொள்ளும் முதல் விஷயங்களில் ஒன்று, மனிதன் சுயநலமானவன் என்பதைத் தான். அவன்/அவள் மிகக் குறைவான முயற்சி அல்லது செலவில் மிக உயர்ந்த பலனை அடைய முயற்சிப்பார்கள். மேலும், மேலும், பெற்றுக் கொள்வதில் தான் ஆர்வம் காட்டுவார்கள். இது மிகவும் வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கும் கோட்பாட்டுடைய குறைபாடுகளில் ஒன்று. இதற்கு மாறாக, இஸ்லாமிய பொருளாதாரக் கொள்கை இந்த அனுமானத்தை ஏற்றுக் கொள்வதில்லை.
நிச்சயமாக, நாம் சுயநலமாக இருக்கக்கூடியவர்கள் தான், நமக்குள், செல்வத்தை அதிகமாக சேகரிப்பது, சோம்பேறியாக இருப்பது, நமக்கு உரிமையில்லாதவற்றை எடுத்துக் கொள்வது போன்ற பல கெட்ட குணங்களும் உள்ளன. இஸ்லாம் இம்மாதிரி வரம்பு மீறுதல்களை தடுத்து, முஸ்லிம்களுக்கு நடுநிலைமையை பேணும் பயிற்சியைக் கொடுக்கிறது. இதைச் செய்வதற்கு, இஸ்லாம், தனி நபர்களுக்கு தார்மீக மற்றும், ஆன்மீக பயிற்சி கொடுப்பதை தான் முற்றிலும் சார்ந்திருக்கிறது. கல்வியை பயனுள்ள வழியில் பயன்படுத்தும்போது, அது அன்பு, ஒத்துழைப்பு, சுய உதவி, பிறருக்கு உதவுதல் போன்ற நல்ல பண்புகளை உருவாக்குகிறது. இவற்றை அடைவதற்கு சில வழிகள்:
1. அல்லாஹ்வின் மீது நம்பிக்கை: எவர் அல்லாஹ்வையும், அவனுடைய சக்தியையும், வல்லமையையும், நம்புகிறாரோ, அவர் அவன் தான் ஒவ்வொரு உயிரினத்துக்கும் எல்லாவிதமான அருள்வளங்களையும் வழங்குபவன் என்ற உண்மையையும் நம்ப வேண்டும்.
அன்றியும் (பூமியிலுள்ள) எத்தனையோ பிராணிகள் தங்கள் உணவைச் சுமந்து கொண்டு திரிவதில்லை; அவற்றுக்கும் உங்களுக்கும் அல்லாஹ் தான் உணவளிக்கின்றான் – இன்னும் அவன் (யாவற்றையும் செவிமடுப்பவனாகவும் (நன்கு) அறிபவனாகவும் இருக்கின்றான்.. [அல் குர்’ஆன், 29:60]
அந்த நம்பிக்கை நமக்கு இருந்தால், நம்மிடம் அதிகமான பணம் இருந்தாலும், ஒன்றுமே இல்லா விட்டாலும், அது ஒரு பொருட்டாக இருக்காது. நமக்கு அதிகமான செல்வம் இருந்தாலும், அது நம்முடைய வெற்றியால் கிடைக்கவில்லை, அல்லாஹ்வுடைய அருளால் தான் கிடைத்தது என்று அறிவதால், கர்வம் இருக்காது. மேலும், நாம் ஏழையாக, தேவையுள்ளவர்களாக இருக்கும்போது, அல்லாஹ் நம்மைப் பார்த்துக் கொள்வான் என்பதை நாம் அறிவதால், நாம் அதிக கவலையுடன் இருக்க மாட்டோம். அதனால், நாம் செல்வத்தை சார்ந்திருப்பதை விட, செல்வத்தை அளிக்கும் அல்லாஹ்வையே சார்ந்திருப்போம்.
2. இறுதி நாளின் மீது நம்பிக்கை: எவர் கணக்கு எடுக்கப்படும் இறுதி நாளின் மீது நம்பிக்கை வைக்கிறாரோ, அவர் தன் செல்வத்தை எப்படி சம்பாதிக்கிறோம், எப்படி செலவழிக்கியோம் என்பதில் கவனமாக இருப்பார். அவர் எத்தனை ஆடம்பரமாக இவ்வுலகில் வாழ்ந்திருந்தாலும், ஒரு நாள் எல்லாம் அழிந்து விடும், அந்த ஆடம்பரங்களை அடைவதற்கு அவர் என்னவெல்லாம் தீங்குகள் செய்தாரோ, அவற்றிற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டியிருக்கும் என்பதை அறிந்திருப்பார். இது மேலும், மேலும் அடைய வேண்டுமென்ற அவருடைய எல்லையில்லா, அதிகப்படியான ஆவலைக் கட்டுப்படுத்தும்.
3. உயர் நோக்கங்கள்: நாம் இயல்பாகவே சுயநலமும், பேராசையும் உடையவர்கள், நம்முடைய வாழ்வின் நோக்கம் சம்பாதிப்பதும், அதை அனுபவிப்பதும் என்று நம்புவதை விட, இஸ்லாம் நாம் அம்மாதிரி அற்ப நோக்கங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் என்று கற்றுத் தருகிறது. நாம் அதை விட உயர்ந்த நிலை மற்றும் கண்ணியத்தையும் உடையவர்கள்.
மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்; இன்னும் அல்லாஹ்வின்மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள்; [அல் குர்’ஆன் 3:110] மிகச் சிறந்தவர்களாக இருக்கும் கௌரவத்தை பெறுவதற்கு நாம் அல்லாஹ்வுடைய மார்க்கத்தை இப்பூமியில் நிலைநாட்டுவது தான் நம் லட்சியமாக இருக்க வேண்டும். எல்லாவிதமான பொருளாதார நோக்கங்களும் முதன்மையான நோக்கங்கள் அல்ல, மாறாக, அவை இறுதியான நோக்கத்தை அடைவதற்கான வழி தான்.
4. ஊதாரித்தனத்தையும், பேராசையையும் கட்டுப்படுத்துவது: மனிதர்கள் ஆசையுடையவர்கள் என்ற உண்மையை இஸ்லாம் ஒப்புக்கொள்கிறது. உண்மையில், உணவையும், நீரையும் பெறுவதற்கு அவர்கள் ஆவலோடு இருப்பது அவசியமாக இருக்கிறது. ஆனால், அது நம்முடைய ஆவல் கட்டுப்பாட்டுக்குள் இருக்க உதவுகிறது.
ஆகவே, உங்களால் இயன்ற வரை அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்; (அவன் போதனைகளைச்) செவிதாழ்த்திக் கேளுங்கள்; அவனுக்கு வழிபடுங்கள்; (அவன் பாதையில்) செலவு செய்யுங்கள்; (இது) உங்களுக்கே மேலான நன்மையாக இருக்கும்; அன்றியும்; எவர்கள் உலோபத்தனத்திலிருந்து காக்கப்படுகிறார்களோ, அவர்கள் தாம் வெற்றி பெற்றவர்கள். [அல் குர்’ஆன் 64:16]
5. தர்மத்தை கடமையாக்குதல்: ஏழைகளைப் பேணாத சமூகம், அழிவுப்பாதையை நோக்கி செல்வது இயற்கை. அதனால் தான், இஸ்லாத்தில் பொருட்களை தேக்கி வைப்பது வெறுக்கத்தக்கதாகவும், தர்மம் அளிப்பது உயர்வாகவும், கடமையாகவும் உள்ளது. இந்த தர்மம் தன்னைத் தானே, ‘நான் எத்தனை தாராளமானவன், இந்த தாழ்வான பிறவிகளுக்கு என்னுடைய பொருளைக் கொடுக்கிறேன்’ என்று பாராட்டிக் கொள்வதற்காக அல்ல. நம்மிடம் உள்ள பொருள் நம்முடையது அல்ல, அது அல்லாஹ்விடமிருந்து கிடைத்த பரிசு, அதனால், அந்த பரிசை மற்ற, மனிதர்களுடன் பகிர்ந்து கொள்வது நமக்கு கடமையாக இருக்கிறது.
சமுதாயத்தில் உள்ள ஒவ்வொருவரும் இப்படிப்பட்ட பயிற்சியைப் பெற்றிருந்தால், பொருளாதாரத்தை பேணுவதற்கு வெளியிலிருந்து எந்த சக்தியும் தேவையில்லை. நம்மால் சமுதாயத்தை மாற்ற முடியாது, ஆனால், நம்மால் நம்மை மாற்றிக் கொள்ள முடியும். நாம் உண்மையில் முழு கட்டிடத்தைப் பற்றியும் கவலைப் படத்தேவையில்லை. நம்முடைய பணி, நம் பொறுப்பில் ஒரு கல் அதன் இடத்தில் இருக்கிறதா என்று பார்த்துக் கொள்வது தான்.
- தபஸ்ஸும் முஸ்லெஹ்