இஸ்லாமிய அகீதா (சமூகத்தில்) இல்லாமல் போவதன் விளைவுகள்

நாம் அகீதாவின் முக்கியத்துவம், அதை பயிலுவதன் (மூலம் ஏற்படும்) பயன்கள், மேலும் அதைக் கற்றுக்கொள்வதில் கவனம் செலுத்துவதற்கான காரணம் ஆகியவற்றை (முந்தைய கட்டுரைகளில்) அறிந்த பின்னர், நாம் (மற்றொரு) முக்கியமான தலைப்பிற்கு வருவோம். அதுதான், 'உம்மத்திற்கு மத்தியில் இஸ்லாமிய அகீதா இல்லாமல் போவதன் விளைவுகள்'.

ஒரு மனிதன் சுமக்கின்ற அகீதாவிற்கு, அவனது நடத்தையை வழிநடத்துவதிலும், அவனது செயல்பாட்டிலும் தாக்கம் உண்டு என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. மேலும் இந்த அகீதாவில் ஏற்படும் எந்த ஒரு வழிகேடும் அல்லது இந்த அகீதாவிற்கு ஏற்படும் எந்த ஒரு இழப்பும், ஒரு மனிதனுடைய யதார்த்த வாழ்க்கை மற்றும் நடத்தையில் வெளிப்படும் என்பதிலும் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. 

இதனைத் தொடர்ந்து, அது சமூகத்தின் வாழ்க்கையிலும் (தெளிவாக) உணரக்கூடிய வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஏனெனில், நாம் தனிமனிதர் மற்றும் சமூகம் என (இரண்டையும்) பிரித்துப் பார்க்க முடியாது. 

இஸ்லாமிய அகீதா (சமூகத்தில்) இல்லாமல் போவதன் விளைவுகளுள் சில பின்வருமாறு:

1. நெருக்கடியான வாழ்க்கை,  மனிதர்களுக்கு மனக் கலக்கம் மற்றும் குழப்பம் ஏற்படுதல், மேலும் உள்ளத்தின் அமைதி மற்றும் ஆன்மாவின் சாந்தத்தன்மையை  இழந்துவிடுதல் 

நிச்சயமாக அல்லாஹ் கூறுகின்றான்:

وَمَنْ اَعْرَضَ عَنْ ذِكْرِىْ فَاِنَّ لَـهٗ مَعِيْشَةً ضَنْكًا وَّنَحْشُرُهٗ يَوْمَ الْقِيٰمَةِ اَعْمٰى
மேலும், “எவர் என்னுடைய நல்லுபதேசத்தைப் புறக்கணிக்கின்றாரோ, நிச்சயமாக அவருக்கு நெருக்கடியான வாழ்க்கையே இருக்கிறது, மேலும், மறுமைநாளில் நாம் அவனைக் குருடனாகவே எழுப்புவோம்.
(அல்குர்ஆன் : 20:124)

அல்லாஹ்வையும், களா கத்ர் (எனும் விதியை)யும் ஈமான் கொள்வதில் குறை இருக்கும் ஒரு மனிதர், எவ்வாறு அல்லாஹ்வுடைய களா கத்ரை பொருந்திக் கொள்வார் !? 

அவருக்கு என்ன தோன்றுகிறதோ அதனை செய்வார். அவரைத் தடுக்கக்கூடிய அல்லாஹ்வைப் பற்றியான நம்பிக்கை (அவரிடம்) இல்லை, எந்த ஒரு நோக்கத்திற்காகவும் வாழ மாட்டார். 

எனினும், அம்மனிதர் அவருடைய இறைவனை ஈமான் கொண்டு, அவனுடைய ஷரீஅத்தின் மீது உறுதியாக இருந்தால், வாழ்வாதாரங்களில் மிகவும் அடிப்படையானவற்றையே தவிர வேறு எதுவும் அவரிடம் இல்லையென்றாலும், அவருக்கு இன்பத்தையும் உறுதியையும் (அல்லாஹ்) வழங்கிடுவான். மேலும் அவருடைய காரியங்களையும் அவருக்கு இலேசாக்குவான். 

அதுவே அவர் அவனுடைய இறைவனை நிராகரித்து, அவனை வணங்குவதை விட்டும் பெருமையடித்தாரெனில், அனைத்து சுகங்களுக்குரிய காரணிகள் மற்றும் வெவ்வேறு வகையான இன்பங்களை அவர் கொண்டிருந்த போதிலும், (அல்லாஹ்) அவருடைய வாழ்க்கையை நெருக்கடியானதாக ஆக்கி விடுவான். மேலும் அவரின் மீது கவலைகளை ஒன்றுதிரட்டிவிடுவான். 

தன் (நாட்டு) மக்களுக்கு அனைத்து இன்பங்களுக்குறிய காரணிகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்ற நாடுகளில், நாம் தற்கொலை செய்து கொள்பவர்களை அதிகமாகக் காண்கின்றோம். 

வாழ்க்கையை அனுபவிப்பதற்காக, வெவ்வேறு வகையான உபகரணங்கள் மற்றும் விதவிதமான (சுற்றுலா) பயணங்களில் வீண் விரயங்கள் செய்யப்படுவதை நாம் காண்கின்றோம். 

உள்ளம் ஈமானற்று இருப்பது, இறுக்கம் மற்றும் நெருக்கடியை உணர்வது, மேலும் இந்த அமைதியின்மையை நீக்குவதற்கு வெவ்வேறு மற்றும் புதிதுபுதிதான வழிகளைக் கொண்டு முயற்சிப்பது ஆகியவையே அவற்றில் வீண் விரயம் செய்வதற்கு உந்துதலாக இருக்கின்றன.

2. மக்களுக்கு மத்தியில் தற்பெருமை அதிகமாக இருத்தல்

ஒவ்வொரு மனிதரும் தன்னுடைய நலனையே கவனத்தில் கொள்கின்றார், அந்த நலனானது மற்றவர்களுக்கு தீங்கு ஏற்படுத்தக்கூடியதாக இருந்தாலும் சரியே! உதாரணத்திற்கு, வெளியே திரியக்கூடிய ஒரு பெண் தன்னுடைய அலங்காரங்களை மக்களுக்கு முன் வெளிப்படுத்த விரும்புகிறாள். முஸ்லிமான அவளது சகோதரர்கள் மீது அவ்வாறு (அலங்கரித்து) திரிவதினால் ஏற்படும் பாதிப்பை பற்றி அவள் கவனத்தில் கொள்வதில்லை. 

எனவே, அல்லாஹ்வுடைய தண்டனையைக் கொண்டு தன்னை அவள் நாசமாக்கிக் கொள்கிறாள், தன்னுடைய முஸ்லிம் சகோதரர்கள் மத்தியில் ஃபித்னாவை ஏற்படுத்த நாடி இருந்தாலும் அல்லது அதனை அவள் நாடவில்லை என்றாலும் சரியே! ஏனெனில், அச்செயலே ஃபித்னாவிற்கு காரணமான ஒன்றாகும். மேலும் ஒருவரின் செயலானது (அதற்கு மாற்றமாக நடக்கும் அவருடைய) கூற்றின் பொய்த்தன்மைக்கு ஆதாரமாகும். 

3. மக்களுக்கு மத்தியில் குற்றங்கள் பரவியிருத்தல்

மற்றவரை பழிவாங்க விரும்பும் ஒவ்வொரு மனிதரும் பழி வாங்குவார், மார்க்கம் என்ற ஒரு விடயம் அவரைத் தடுக்காது. 

4. சமூகத்தின் சீர்கேடு 

சமூகத்தில் உள்ள தனிநபர்களின் சீர்கேட்டால், முழு சமுதாயமும் சீர்கெட்டுவிடும். 

5. வாழ்க்கையிலிருந்து (அதன் கஷ்டங்களிலிருந்து) விடுபடுவதற்காக அதிகமான தற்கொலைகள்

தற்கொலை செய்து கொள்ளக்கூடிய பெரும்பாலானவர்கள், வறுமையின் காரணமாக தற்கொலை செய்து கொண்டார்கள் என்று சொல்வதற்கு அவர்கள் ஒன்றும் ஏழைகளல்ல. மாறாக வசதிகள் கொடுக்கப்பட்ட செல்வந்தர்களும், மருத்துவர்களும், இன்னும் மேலாக மனிதர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி தருபவர்களாக நம்பப்படக்கூடிய உளவியல் சார்ந்த மருத்துவர்களுமே ஆவர்.

6. வெருப்பும், குரோதமும் மக்களுக்கு மத்தியில் பரவியிருத்தல்

(இது) அவர்களுடைய உள்ளங்களில் களா, கத்ரைப் பற்றிய நம்பிக்கையின் உறுதியற்ற தன்மையினால் ஆகும். 

7. கற்பனைகள் மற்றும் பயங்கள் மக்களுக்கு மத்தியில் பரவியிருத்தல்

ஷிர்க்கின் காரணமாக மக்கள் அவர்களுடைய உலக வாழ்க்கை குறித்து பயப்படுவார்கள். அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தான விடயத்தை படைக்கப்பட்ட அடிமைக்கு இருப்பதாக நம்பக்கூடிய சில மக்களை நீங்கள் காணலாம்.

8. ஒரு மனிதர் தனக்கும், தன்னைச் சுற்றியுள்ள ஏனைய மனிதர்கள் மற்றும் படைப்பினங்களுக்கும் அநீதி இழைத்துக் கொண்டு வாழக்கூடியவராக இருப்பார் மேலும் உரிமை கொடுக்கப்பட வேண்டியவர்களின் உரிமையை அறியாதவராக இருப்பார்

மறுமை நாள் ஏற்பட்டுவிட்டால், மனிதர்கள், விலங்குகள் என எவற்றிற்கெல்லாம் அவன் அநியாயம் செய்திருந்தானா அவர்கள் அனைவரும், அவன் முகத்திற்கு முன்பாக, அவனிடமிருந்து பழி தீர்ப்பதற்காக அவனுடைய இறைவனிடம் வேண்டுவார்கள். 

இஸ்லாமிய அகீதாவை அறியாத ஒருவர், தான் படைக்கப்பட்டதின் நோக்கமல்லாத பிறவற்றில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வார். அவனுடைய இறைவனை வணங்க மாட்டார். மாறாக, அவன் அல்லாத மனோ இச்சைகளை வணங்குவார். அநியாயம் என்பது ஒரு விடயத்தை அதற்குரிய இடத்தில் அல்லாது வேறொரு இடத்தில் வைப்பதாகும். வணக்க வழிபாட்டை அதற்குறியவனுக்கு அல்லாது மற்றவைகளுக்கு திருப்புவதை விட மிகப் பெரிய அநியாயம் எது இருக்க முடியும்!? 

9. இஸ்லாமிய அகீதாவை அறியாதவருக்கு நஷ்டமும் தோல்வியும் ஏற்படுதல்

உள்ளங்களும், ஆன்மாக்களும் எதனைக் கொண்டு இன்பமடையமோ, அதனை இம்மனிதர் நிச்சயமாக இழந்து விடுகிறார். அதுவே அல்லாஹ்வைப் பற்றி அறிந்து கொள்வது, அவனுடன் தனிமையில் உரையாடுவதில் மகிழ்ச்சி காண்பது, அவன் பக்கம் (திரும்புவதில்) அமைதி பெறுவது என்பனவாகும்.

மேலும் இவ்வுலக வாழ்க்கையையும் இழந்து விடுகிறார். ஏனெனில், அதில் அவர் பரிதாபமான குழப்பமான வாழ்க்கையையே வாழ்ந்தார். மேலும் எதற்காக தான் (பொருள்களை) சேர்க்கக்கூடியவராக இருந்தாரோ அவ்வாறான தன் நஃப்ஸையே இழந்து விட்டார். ஏனெனில், அதை (தனது நஃப்ஸை) எதற்காக அது படைக்கப்பட்டதோ அதில் அவர் ஈடுபடுத்தவில்லை. அதைக் கொண்டு அவர் உலகத்தில் மகிழ்ச்சியாக இல்லை. ஏனெனில், அது துர்பாக்கியமிக்கதாக வாழ்ந்தது. மேலும் துர்பாக்கியமிக்கதாக மரணித்தது. மேலும் மறுமையிலும் துர்பாக்கியசாலிகளுடனேயே எழுப்பப்படும்.

10. உண்மையான வாழ்க்கையை இழந்துவிடுதல்

தன்னுடைய இறைவனை நம்பிக்கை கொண்டு, தன்னுடைய நோக்கத்தை அறிந்து, தன்னுடைய பாதையைக் குறித்து சிந்தித்து, மேலும் தான் எழுப்பப்படுவதை உறுதியாக நம்புபவனே, (உண்மையான) வாழ்க்கைக்கு உகந்த மனிதனானவன். எனவே, அவன் ஒவ்வொரு உரிமையுடைவருக்கும் அவரது உரிமையை அறிந்தவன். எந்த உரிமையும் அறிந்த நிலையில் அவன் மறுக்க மாட்டான். மேலும் எந்த ஒரு படைப்பிற்கும் அவன் தீங்கு விளைவிக்க மாட்டான். 

எனவே, அவன் பாக்கியமிக்கவர்களுடைய வாழ்க்கையை வாழ்வான். மேலும் இம்மையிலும் மறுமையிலும் நல்லதொரு வாழ்க்கையை அடைந்து கொள்வான்.

எவனது அருட்கொடையினால் ஸாலிஹான அமல்கள் முடிவுபெறுமோ, அத்தகைய அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.

[குறிப்பு: இந்தக் கட்டுரையானது அலூகா எனும் வலைத்தளத்திலிருந்து எடுக்கப்பட்டதாகும்]


- மக்தபாஹ் அஸ்ஸுன்னாஹ் வ அஸ்ஸலஃபிய்யாஹ், மேலப்பாளையம்.
Previous Post Next Post