“லா இலாஹ இல்லல்லாஹ்‌” பற்றிய விளக்கம்‌

அறபு மூலம்‌ : அஷ்‌ ஷெய்க்‌ அப்துல்‌ கரீம்‌ அத்‌ தீவான்‌

தமிழில்‌ : ஏ. எல்‌. முஹம்மத்‌ இல்யாஸ்‌ (நளீமி)

வெளியீடு : 
இஸ்லாமியப்‌ பிரச்சாரப்‌ பணியகம்‌,
அல்‌-றவ்தா சனசமூக பிரிவு,
த.பெ.இல.87299, ரியாத்‌ - 11642, சவுதி அரேபியா,
தொ.பே - 4918051 , பெக்ஸ்- 49705061


“லா இலாஹ இல்லல்லாஹ்‌” பற்றிய விளக்கம்‌

அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்‌. அவனது இறுதித்‌ தூதர்‌ முஹம்மத்‌ (ஸல்‌) அவர்கள்‌ மீதும்‌, அவரது தோழர்கள், மற்றும்‌. இவர்களைப்‌ பின்தொடர்ந்தோர்‌ அனைவர்‌ மீதும்‌ ஸலவாத்தும்‌, ஸலாமும்‌ உண்டாவதாக.

இஸ்லாம்‌ மர்க்கத்தின்‌ அடிப்படையாகவும்‌, அடியார்களுக்குக்‌ கட்டளையிடப்படும்‌ முதன்மையான விடயமாகவும்‌ "லாஇலாஹ இல்லல்லாஹ்‌, முஹம்மதுர்‌ ரஸுலுல்லாஹ்‌” (வணக்கத்திற்குரிய இறைவன்‌ அல்லாஹ்வைத்‌ தவிர வேறுயாருமில்லை, முஹம்மத்‌ (ஸல்‌) அவர்கள்‌ அல்லாஹ்வின்‌ தூதர் ஆவார்கள்‌) எனும்‌ நம்பிக்கைப்‌ பிரகடனம்‌ இருந்து வருகின்றது என்பதிலும்‌, இதனை  மொழிவதனூடாக நிராகரிப்பாளன்‌ முஸ்லிமாகவும்‌, பகிரங்க எதிரி நெருங்கிய நண்பனாகவும்‌, செல்வம்‌ பறிக்கப்பட்டு இரத்தம்‌ சிந்தப்படவேண்‌டியவன்‌ அவற்றிலிருந்து பாதுகாப்புப்‌ பெற்றவனாகவும்‌ ஆகிவிடுகின்றான்‌ என்பதிலும்‌, மார்க்க அறிஞர்கள்‌ ஏகோபித்த கருத்துக்‌ கொண்டுள்ளார்கள்‌.

மேற்கூறப்பட்ட ஷஹாதாவை மொழிந்தாலேயன்றி, ஒரு நிராகரிப்பாளன்‌, முஸ்லிமாகிவிட்டதாகத்‌ தீர்ப்பளிக்கப்‌ படமாட்டாது. ஏனெனில்‌, ஷஹாதாக்‌ கலிமாதான்‌ இஸ்லாத்தின்‌ திறவுகோலாகவும்‌, அதன்‌ அடிப்படைக்கடமைகளில்‌ முதன்மையானதாகவும்‌ திகழ்கிறது.

பின்வரும்‌ ஹதீஸ்‌ இதனைத்‌ தெளிவுபடுத்துகின்றது:

"இஸ்லாம்‌ ஐந்து விடயங்களின்‌ மீது கட்‌டியெழுப்பப்‌ பட்டுள்ளது (இவற்றில்‌ முதலாவது). "லாஇலாஹ இல்லல்லாஹ்‌, முஹம்மதுர்‌ ரஸுலுல்லாஹ்‌” என சான்று பகர்வதாகும்‌...” (புகாரி, முஸ்லிம்‌)


சக்தி பெற்றிருந்தும்‌ இந்த ஷஹாதாவை மொழியாதவன்‌ பற்றிய சட்டம்‌

மார்க்க அறிஞரான இமாம்‌ இப்னு தைமியா (ரஹ்‌) அவர்கள்‌ கூறுகின்றார்கள்‌ :

"ஒருவன்‌ சக்தி பெற்றிருந்தும்‌, "லாஇலாஹ இல்லல்லாஹ்‌, முஹம்மதுர்‌ ரஸூலுல்லாஹ்‌" எனும்‌ ஷஹாதாவை மொழியாது புறக்கணித்து விட்டால்‌, முஸ்லிம்‌ அறிஞர்களின்‌ ஏகோபித்த முடிவின்படி இவன்‌ காஃபிர்‌ (நிராகரிப்‌பாளன்‌) ஆக மாறிவிடுகின்றான்‌”.

எனினும்‌ புலன்களின்‌ ஊனத்தாலோ அல்லது சட்டரீதியான இயலாமையினாலோ, அதனை மொழிய இயலாத நிலையில்‌ அவன்‌ இருந்தால்‌, அவனது அப்போதைய நிலைமைக்கு ஏற்ப அவன்‌ நடத்தப்படுவான்‌.


“லாஇலாஹ இல்லல்லாஹ்‌” வின்‌ பொருள்‌

இவ்வார்த்தை மறுத்தல்‌, உறுதிப்படுத்தல்‌ எனும்‌ இரு பகுதிகளை உள்ளடக்கியுள்ளது.

மறுத்தல்‌ என்பது, “லாஇலாஹ” அதாவது, "எந்த இறைவனும்‌ இல்லை” என்பதைக்‌ குறிக்கும்‌. இதில்‌ "இலாஹ்‌" எனும்‌ சொல்‌ “(வணக்கத்திற்குரிய) இறைவன்‌" எனப்‌ பொருள்படும்‌.

"உறுதிப்படுத்தல்‌" என்பது, "இல்லல்லாஹ்”‌ அதாவது, "வணக்கத்திற்குரிய உண்மையான இறைவன்‌ அல்லாஹ்வைத்‌தவிர யாருமில்லை என்றோ,

"வணங்கப்படுவதற்கு, அல்லாஹ்வைத்‌தவிர வேறு எவரும்‌ தகுதி படைத்தவரல்லர்‌”, என்றோ பொருள்‌படும்‌.

அறிவிலிகள்‌ சிலரின்‌ கருத்துக்கு மாற்றமாக, அதாவது அவர்கள்‌, "இந்தக்‌ கலிமாவின்‌ நோக்கம்‌, இதனை மொழிவது மட்டுமேயாகும்‌, அல்லது அல்லாஹ்‌ இருக்கின்றான்‌ என்பதை ஏற்றுக்கொள்வதாகும்‌, அல்லது அனைத்திற்கும்‌ அவனே உரிமையாளன்‌, அதில்‌ அவனுக்கு யாதொரு பங்காளனுமில்லை, என்பதை ஏற்பதாகும்‌” என இவர்கள்‌ கருதிக் கொண்டிருக்கிறார்கள்.‌ இந்த அளவிலான கருத்தை சிலைவணங்கிகள்‌ கூட அறிந்திருந்ததோடு, அதனை ஏற்கவும்‌ செய்தார்கள்‌. வேதத்தையுடையவர்களான யூத, கிறிஸ்தவர்களும்‌ அவ்வாறுதான்‌ இருந்தார்கள்‌. அவர்கள்‌ அவ்வாறு கருதுவதுதான்‌ சரி, என்‌றிருந்தால்‌, அவர்களுக்கு இதன்பால்‌ அழைப்பு விடுக்க வேண்டிய தேவையே இருந்திருக்காது .


இதன்‌ கருத்து பற்றிய சில சந்தேகங்களும்‌, அவற்றிற்கான தெளிவுகளும்‌

சந்தேகம்‌ :

சிலர்‌ வினவலாம்‌, "அல்லாஹ்வைத்‌ தவிர வேறு இறைவன்‌ இல்லை, என்று எப்படி நீங்கள்‌ கூறுகின்றீர்கள்‌? அல்லாஹ்வைத்‌ தவிர மக்களால்‌ வணங்கப்பட்டுவரும்‌ வேறு கடவுள்களும்‌ இருந்து வருகின்றார்களே, பின்வரும்‌ மறை வசனத்தில்‌ அல்லாஹுத் தஅலா அவற்றை, ஆலிஹா (கடவுள்‌) எனக்‌ குறிப்பிடுகின்றானே!

"உம்‌ இறைவனின்‌ கட்டளை வந்துவிட்ட‌ போது, அல்லாஹ்வையன்றி அவர்கள்‌ அழைத்துக்‌ கொண்டிருந்த தெய்வங்கள் அவர்களுக்கு யாதொரு பயனையுமளிக்கவில்லை...... (ஹூத்‌ 11:18)

தெளிவு :

அல்லாஹ்வைத்‌ தவிர்த்து வணங்கப்படும்‌ இத்‌ தெய்வங்கள்‌ யாவும்‌ போலியானவைதாம்‌. தவிர, அவை உண்மையான கடவுள்கள்‌ அல்ல, வணங்கப்படுவதற்கும்‌ அக்கடவுள்களிடம்‌, தெய்வீகத்திற்குரிய எந்த ஒரு பண்பும்‌ (அல்லது தகுதியும்‌) கிடையாது.

இதற்குப்‌ பின்வரும்‌ குர்‌ஆன்‌ வசனத்தை ஆதாரமாகக்‌ கொள்ளலாம்‌. :

நிச்சயமாக‌ அல்லாஹ்தான்‌ உண்மையான(இறை)வன்‌. அவர்கள் அல்லாஹ்வையன்றி அழைப்பவைகள்‌, நிச்சயமாக பொய்யானவைகளாகும்‌. அல்லாஹ்தான்‌ உயர்ந்தவன்‌, மேலும்‌ அவனே மிகப் பெரியவன்‌” (அல்‌ ஹஜ்‌ 22:62)

எனவே 'லாஇலாஹ இல்லல்லாஹ்‌” என்ற வார்த்தையின்‌ பொருள்‌, 'வணங்குவதற்கு‌ தகுதி பெற்ற உண்மையான இறைவன்‌, அல்லாஹ்வைத்‌ தவிர வேறு யாருமில்லை" என்பதாகும்‌ உண்மையில்‌, இதுதான்‌ ஏகத்துவம்‌.


இக்கலிமாலின்‌ மூலம்‌ ஒருவனின்‌ செயல்கள்‌, செல்லுபடியானவையாகவும்‌, ஏற்கக்‌ கூடியவையாகவும்‌ மாறிவிடுகின்றன.

"லாஇலாஹ இல்லல்லாஹ்‌” எனும்‌ வார்த்தையின்‌ உள்ளடக்கமான தவ்ஹீதின்‌ மூலமே, ஒரு அடியானின்‌ செயல்கள்‌ செல்லுபடியானவையாக மாறுகின்றன.

எந்த ஒருவனிடம்‌ இத்‌ தவ்ஹீத்‌ (பற்றிய நம்பிக்கை) இல்லையோ, அவனது எந்த ஒரு செயலும்‌ அவனுக்கு எந்தப்‌ பயனையுமளிக்காது. மாறாக அவை, பயனற்றவையாக மாறிவிடும்‌. காரணம்‌, ஏகத்துவத்திற்கு நேர் முரணாக உள்ள "ஷிர்க்”‌ உடன்‌ மேற்கொள்ளப்படும்‌ எந்த ஓர் வணக்கமும்‌ செல்லுபடியானதாக ஆகாது.

இதுபற்றி அல்குர்‌ ஆன்‌ பின்வருமாறு குறிப்பிடுகின்றது:

இணைவைத்து வணங்கும்‌ இவர்கள்‌, தாம்‌ நிராகரிப்பாளர்கள் எனத்தாங்களே சான்று வழங்கிக் கொண்டிருக்கும்‌ நிலையில்‌, அல்லாஹ்வுடைய மஸ்ஜித்துகளைப்‌ பரிபாலனம்‌ செய்ய, அவர்களுக்கு எந்த உரிமையும்‌ கிடையாது. அவர்களுடைய செயல்கள்‌ யாவும்‌ அழிந்து விட்டன. அவர்கள்‌ என்றென்றும்‌ நரகிலேயே தங்கிவிடுவார்கள்‌. (அத்‌ தவ்பா 9: 17)

"லாஇலாஹ இல்லல்லாஹ்‌" என ஒருவன்‌ மொழிந்து விட்டால்‌, அதுவே அவனுக்குப்‌ போதுமானது அதன்‌ பிறகு, அவன்‌ என்னென்ன செயல்கள்‌ செய்தாலும்‌ சரியே! எனச்‌ சிலர்‌ நினைக்கின்றார்கள்‌, உண்மைமில்‌ இது முற்றிலும்‌ தவறான ஒரு விடயமாகும்‌. அத்தோடு மிகப்‌ பெரும்‌ அறியாமையும்‌ கூட.

மிகவும்‌ கண்ணியம்‌ வாய்ந்த இவ்வார்த்தை, நாவினால்‌ மாத்திரம்‌ மொழியப்‌படவேண்டிய ஒன்றல்ல. எனினும்‌ அது, கருத்துச்செறிவு நிறைந்த ஒரு வார்த்தையாகும்‌. எனவே, அக்கருத்தை (செயல்களால்‌) நிருபித்துக்‌ காண்பிக்‌கவும் வேண்டும்‌.

அதாவது ஓர்‌ அடியான்‌, இவ்வார்த்தையை நாவினால்‌ மொழிந்து, உள்‌ளத்தால்‌ அதனை உறுதிப்‌படுத்தி, அதனடிப்படையில்‌ வாழ்ந்தும்‌ காட்டி, அதற்கு மாற்றமான அனைத்திலிருந்தும்‌ தன்னைப்‌ பாதுகாத்துக் கொள்ள வேண்டும்‌. அப்போதுதான்‌ அவன்‌, உயிர்‌, உடைமை இரண்டினதும்‌ பாதுகாப்பிற்கு உத்தரவாதமளிக்கப்பட்ட (ஒர்‌ உண்மை) முஸ்லிமாகத்‌ திகழ முடியும்‌. இந்த லாஇலாஹ இல்லல்லாஹ்‌ கலிமாவின்‌ பொருளை அறியாமலும்‌ அதனடிப்படையில்‌ அமல்கள்‌ செய்யாமலும்‌ இருந்து கொண்டு அதனை நாவினால்‌ மாத்திரம்‌ மொழிவது எவ்விதப்‌ பயனையுமளிக்காது என்பது முஸ்‌லிம்‌ அறிஞர்களின்‌ ஏகோபித்த கருத்தாகும்‌.


"லாஇலாஹ இல்லல்லாஹ்‌" எனும்‌ பிரகடனம்‌ பின்வரும்‌ ஆறு விடயங்களைக்‌ கொண்டு நிறைவேறுகின்றது.

1. வணக்க வழிபாடுகளை, அல்லாஹ்வுக்காக மாத்திரம்‌ நிறைவேற்றுதல்‌.

ஒருவனின்‌ தொழுகை, நோன்பு, பிரார்த்தனைகள்‌, உதவி வேண்டுதல்‌, நேர்ச்சை வைத்தல்‌, பிராணிகளை அறுத்துப்‌ பலியிடல்‌ போன்ற வணக்‌கங்கள்‌ யாவும்‌ அல்லாஹ்‌ ஒருவனுக்காக மாத்திரம்‌ நிறைவேற்றப்பட வேண்டும்‌. இவற்றில்‌ ஒன்றையாவது ஒருவர்‌ அல்லாஹ்‌ அல்லாத வேறு ஒருவருக்காக நிறைவேற்றினால்‌, அவர்‌ எத்தகைவராக இருப்பினும்‌ அவரது ‘லாஇலாஹ இல்லல்லாஹ்‌” என்ற பிரகடனம்‌ செல்லுபடியற்றதாக ஆகிவிடும்‌. அத்தோடு அவர்‌ ஓரிறைக்‌ கொள்கையுடையவராகவும்‌ இருக்கமாட்டார்‌. மாறாக, அந்த இறைவனுக்கு இணை கற்பிப்பவராக மாறிவிடுவார்‌.

அல்குர்‌ஆன்‌ இதுபற்றிப்‌ பின்னருமாறு குறிப்பிடுகின்றது :

(நபியே), உமதிறைவன்‌ தன்னைத் தவிர‌ (மற்றெவரையும்‌) வணங்கக்‌ கூடாதென கட்டளையிட்டிருக்கிறான். (அல்‌ இஸ்ரா 17 : 23).

இதுதான்‌ லாஇலாஹ இல்லல்லாஹ்‌ எனும்‌ பிரகடனத்தின்‌ உண்மைக்‌ கருத்தாகும்‌. "ஒருவன்‌ லாஇலாஹ இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரிய இறைவன்‌ அல்லாஹ்‌ ஒருவனைத்‌ தவிர வேறு யாருமில்லை), எனக்‌ கூறும்‌ அதேவேளை, அல்லாஹ்வுக்கு இணையும்‌ கற்பித்துக்‌ கொண்டிருக்கின்றானெனில்‌, அவன்‌ ஏகத்துவத்தின்பால்‌ திரும்பும்வரை அவனை எதிர்த்துப்‌ போராடவேண்டும்‌" என்பது, மார்க்க அறிஞர்களின்‌ ஏகோபித்த கருத்தாகும்‌.

2. அல்லாஹ்வால்‌ அருளப்பட்டுள்ள அனைத்தைக்‌ கொண்டும்‌ நம்பிக்கை கொள்ளல்‌:

சுவர்க்கம்‌, நரகம்‌, வேதங்கள்‌, இறைத்தூதர்கள்‌, மறுமைநாள்‌, நன்மை, தீமை பற்றிய நிர்ணயம்‌ பேன்ற அல்லாஹ்வாலும்‌, அவனது தூதராலும்‌ தெளிவுபடுத்தப்பட்ட அனைத்து விடயங்கள்‌ பற்றியும்‌ நம்பிக்கை கொள்ளல்‌.

3. அல்லாஹ்வுக்கு மாற்றமாக வணங்கப்படுபவற்றை நிராகரித்தல்‌:

இறைத்து(தர்‌ (ஸல்‌) அவர்கள்‌ கூறுகின்றார்கள்‌ :

"யார்‌ லாஇலாஹ இல்லல்லாஹ்‌ என மொழிவதுடன்‌, அல்லாஹ்வைத் தவிர்த்தும்‌ வணங்கப்படுபவற்றை புறக்கணித்தும் விடுகிறாரோ, அவரது உயிரும் உடமையும் பாதுகாப்புப் பெறுகின்றது, அவருக்குரிய ‌ கேள்வி கணக்கு அல்லாஹ்விடம்‌ உள்ளது". (ஆதாரம்‌ : முஸ்லிம்‌)

ஒருவனின்‌ உயிரும்‌, உடைமையும்‌ பாதுகாக்கப்‌படுவதை நபியவர்கள்‌, இரு விடயங்களைக்‌ கொண்டு நிர்ணயித்துள்ளார்கள்‌.

1. “லாஇலாஹ இல்லல்லாஹ்‌” என மொழிதல்‌.

2. அல்லாஹ்வுக்கு மாற்றமாக வணங்கப்‌படுபவற்றைப்‌ புறக்கணித்தல்‌.

ஒர்‌ உண்மை விசுவாசி (முஃமின்‌), இணைவைப்பவர்களை விட்டும்‌ முற்‌றாக ஒதுங்கி இருப்பதோடு, இவர்கள்‌ இணைவைத்துக்‌ கொண்டு செய்துவரும்‌ அவர்களது வணக்க வழிபாடுகளையும்‌ நிராகரித்து விடுவான்‌.

(இறைத்தூதர்‌) இப்றாஹீம்‌ (அலை) அவர்களும்‌ இதேபோன்று கூறியதை, அல்குர்‌ஆன்‌ பின்வருமாறு எடுத்துரைக்கின்றது.

"நிச்சயமாக நீங்கள்‌ வணங்குபவைகளை விட்டும்‌ நான்‌ விலகிக் கொண்டேன்‌. எனினும்‌ என்னை சிருஷ்டித்தவனை தவிர, (அவனையே நான்‌ வணங்குகிறேன்). (அல் ஸூஃருப்‌ 43:26)

பின்வரும்‌ மறை வசனமும்‌ இக்கருத்தையே குறிக்கின்றது.

"ஆகவே எவன்‌ தாகூத்களை (போலி கடவுள்களை) நிராகரித்து விட்டு, அல்லாஹ்வை விசுவாசிக்கின்றானோ, அவன்‌ நிச்சயமாக அறுபடாத மிகப் பலமானதொரு கயிற்றைப் பிடித்துக் கொண்டவன்‌ ஆவான்,” (அல்‌ பகரா 2: 256)

இவ்வசனத்தில்‌ வரும்‌ "அல் உர்வதுல் வுஸ்கா” (பலமான கயிறு) என்பதன்‌ கருத்து, “இஸ்லாம்‌” என்பதாகும்‌. அந்த இஸ்லாத்தின்‌ அடித்தளம்‌, ஏகத்துவக்‌ கலிமாவாகும்‌.

"யக்புர் பித் தாகூத்‌" என்பதன்‌ கருத்து, "போலிக்‌ கடவுள்களை வணங்குவதை‌ நிராகரித்து, அதிலிருந்து ஒதுங்கிக்‌ கொள்வதை”க்‌ குறிக்கும்‌.

"அத்‌ தாகூத்‌" என்பதன்‌ கருத்து :

அல்லாஹ்வுக்கு மாற்றமாக வணங்கப்படும்‌ அனைத்தையும்‌ இது குறிக்‌கும்‌. எனினும்‌, நபிமார்கள்‌, நல்லோர்கள்‌, மலக்குகள்‌ போன்ற, அல்லாஹ்வின்‌ நல்லடியார்களில்‌ சிலரை, அவர்கள்‌ சிறிதும்‌ விரும்பாத நிலையில்‌, அல்லாஹ்வுக்கு மாற்றமாக (சில வழிகேடர்கள்‌) வணங்கி வழிபடுகிறார்கள் எனில்‌, அத்தகையவர்‌ (நல்லடியார்‌) கள்‌ "தாகூத்‌” எனும்‌ தலைப்பில்‌ அடங்‌கமாட்டார்கள்‌. (வழிகெட்டவர்கள்‌ மத்தியில்‌) ஷைத்தான்‌ ஏற்படுத்திய குழப்‌பத்தின்‌ காரணமாகவே, அவர்கள்‌, அல்லாஹ்வை விடுத்து, அவனது அடியார்க(ளாகிய இவர்க)ளை வணங்க முற்பட்டுள்ளார்கள்‌.

4. லாஇலாஹ இல்லல்லாஹ்வின் அடிப்படையில்‌ அல்லாஹ்‌வும்‌, அவனது தூதரும்‌ ஏவியுள்ளவற்றை நடைமுறைப்‌படுத்தல்‌.

அல்லாஹ்‌ தஆலா கூறுகின்றான்‌ :

"அவர்கள்‌ பாவமன்னிப்பும்‌ கோரி, தொழுகையை நிலைநாட்டி, ஸக்காத்தும் கொடுத்தால்‌, அவர்களை (அவர்களது) வழியில்‌ விட்டுவிடுங்கள்‌.” (அத்‌ தவ்பா 9 : 5)

நபிகளார்‌ (ஸல்‌) அவர்கள்‌ கூறுகின்றார்கள்‌:

அல்லாஹ்‌ ஒருவனைத்‌ தவிர வணக்கத்திற்குரிய நாயன்‌ வேறெவருமில்‌லை, முஹம்மத்‌ (ஸல்‌) அவர்கள்‌ அல்லாஹ்வின்‌ இறுதித்‌ தூதராவார்கள்‌, என மொழிந்து, தொழுகையை நிலைநாட்டி, ஸக்காத்தையும்‌ கொடுக்கும்‌ வரையில்‌ நான்‌ (இறை மறுப்பாளர்களை) எதிர்த்துப்‌ போராடும்படி கட்டளையிடப்பட்டுள்ளேன்‌, இஸ்லாத்தின்‌ வேறு உரிமைகளில்‌ (வரம்பு மீறாமல்‌) அவற்றை அவர்கள்‌ நிறைவேற்றி விடுவார்களானால்‌. தமது உயிர்‌, உடமைமைகளுக்கு என்னிடம்‌ பாதுகாப்புப்‌ பெறுவார்கள்‌. மேலும்‌ அவர்களுக்குரிய விசாரணை அல்லாஹ்விடம்‌ உள்ளது. (ஆதாரம்‌ : புகாரி, முஸ்லிம்‌)

இந்த வசனத்தின்‌ கருத்து :

“அவர்கள்‌ பாவமன்னிப்பு‌ கோரினால்‌" அதாவது "ஷிர்க்‌ எனும்‌ இணைவைப்பை விட்டும்‌ (இறைவனிடம்‌) பாவமன்னிப்புக்‌ கோரி, ஏகத்துவத்தையும்‌ கடைப்பிடித்து, தொழுகையையும்‌ நிலைநாட்டி, ஜக்காத்தையும்‌ கொடுத்து வந்தால்‌, அவர்களை (அவர்களது வழியில்‌) விட்டு விடுங்கள்‌" என்பதாகும்‌.

ஷெய்குல்‌ இஸ்லாம்‌, இமாம்‌ இப்னு தைமியா அவர்கள்‌ கூறுகின்றார்கள்‌ :

"மிகவும்‌ நம்பகமான வகையில்‌ அறிவிக்கப்பட்டு, வெளிப்படையாகத்‌ திகழும்‌ இஸ்லாமிய சட்டநெறிகளைக்‌ கடைப்பிடித்து நடப்பதற்கு மறுப்புத்‌ தெரிவிக்கும்‌ ஒவ்வொரு குழுனினருக்கும்‌ எதிராகப்‌ போராடுவது, (எம்மீது) கடமையாகும்‌. அந்த சட்ட நெறிகளை, அவர்கள்‌ (மீண்டும்‌) கடைப்பிடித்து நடக்கும்‌ வரையில்‌ அப்போராட்டம்‌ தொடர வேண்டும்‌. அத்தகைய குழுவினர்‌, ஷஹாதாக்‌ கலிமாவை மொழிபவர்களாக இருந்து, ஷரீஅத்தின்‌ ஏதோ ஒரு சில விடயங்களைக்‌ கடைப்பிடித்து வந்தாலும்‌ சரியே!

ஹஜ்ரத்‌ அபூபக்ர்‌ (ரலி) அவர்களும்‌, ஏனைய நபித்‌ தோழர்களும்‌, ஸக்‌காத்‌ கொடுக்க மறுத்தவர்களை எதிர்த்துப்‌ போராடினார்கள்‌. அவர்களைத்‌ தொடர்ந்து வந்த சட்ட வல்லுனர்களும்‌, இக்கருத்தை ஏகமனதாக ஏற்றுள்‌ளார்கள்‌.”

5. "லாஇலாஹ இல்லல்லாஹ்‌” எனும்‌ நம்பிக்கைப்‌ பிரகடனம்‌ பின்வரும்‌ விடயங்களைக்‌ கொண்டு நிறைவேறுகின்றது .

(அதாவது, பின்வரும்‌ நிபந்தனைகளை, ஒருவர்‌ பூரணப்படுத்த வேண்டும்‌)

1. அல்‌ இல்ம்‌ - அறிவு. 
இது அறியாமையின்‌ எதிர்ப்‌பதமாகும்‌. அந்த ஷஹாதாக்‌ கலிமாவின்‌ கருத்து, இதற்கு முன்னர்‌ வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, "வணக்கத்திற்குரிய உண்மையான இறைவன்‌, அல்லாஹ்‌ ஒருவனைத்‌ தவிர வேறு யாருமில்லை" என்பதை அறிந்‌திருத்தல்‌ வேண்டும்‌.

2. அல்‌ யகீன்‌ - உறுதி.
இது சந்தேகத்தின்‌ எதிர்ப்பதமாகும்‌. இதனை மொழியும்‌ ஒருவர்‌, "வணக்கத்திற்கு உரிமை பெற்றவன்‌, அல்லாஹ்‌ ஒருவன்‌ மாத்திரமே”, என்பதில்‌ உறுதியாக இருக்க வேண்டும்‌.

3. அல்‌ இக்லாஸ்‌ - உளத்தூய்மை. 
அதாவது, ஒர்‌ அடியான்‌ தனது அனைத்து வணக்க வழிபாடுகளையும்‌ தன்‌ இறைவனுக்கு மட்டுமே உரித்தாக்குதல்‌ வேண்டும்‌. அவற்றில்‌ எதனையும்‌ அவனல்லாத பிறருக்குச்‌ செலுத்தலாகாது. அவ்வாறு செலுத்தினால்‌, அவன்‌ முஷ்ரிக்‌ - இணை வைத்தவனாக ஆகி விடுவான்‌.

4. அஸ்ஸித்க்‌ - உண்மை.
இக்கலிமாவை மொழியும்‌ ஒருவன்‌, அதில்‌ உண்மையாளனாக இருத்தல்‌. அதில்‌ அவனது உள்ளம்‌ நாவோடும்‌, அதேபோன்று அவனது நாவு, உள்ளத்தோடும்‌ ஒன்று படவேண்டும்‌.

நாவினால்‌ மாத்திரம்‌ இக்‌ கலிமாவை மொழிந்து விட்டு, உள்ளத்தினால்‌ அதனை நம்பாமலிருந்தால்‌, அது அவனுக்கு எந்தப்‌ பயனையும்‌ அளிக்காது அவ்வாறு செய்பவன்‌, ஏனைய நயவஞ்சகர்களைப்‌ போன்று, நிராகரிப்பாளனாக - காபிராக - மாறிவிடுவான்‌.

5. அல்‌ மஹப்பத்‌ - நேசித்தல்‌. 
இதன்‌ கருத்து : ஒருவன்‌ அல்லாஹ்வையும்‌, அவனை வழிபடுவதையும்‌ நேசிப்பதாகும்‌. இக்‌ கலிமாவை அவன்‌ மொழிந்துவிட்டு, அல்லாஹ்தை நேசிக்காவிடில்‌, அவன்‌ நிராகரிப்பாளனாவான்‌ .

6. அல்‌ இன்கியாத்‌ - அடிபணிதல்‌. 
அல்லாஹ்வை மாத்திரம்‌ வணங்குவதோடு, அவனது சட்டதிட்டங்களுக்கும்‌ முழுமையாக அடிபணிந்து, அவற்றை உள்ளத்தால்‌ விசுவாசித்து, அவை முற்றிலும்‌ உண்‌மையானவை எனவும்‌ ஒருவன்‌ உறுதிகொள்ளதை இது குறிக்‌கும்‌. இவற்றை விட்டும்‌ எவன்‌ தன்‌ முகத்தைத்‌ திருப்பிக்‌ கொள்‌கின்றானோ, அத்தகையவன்‌ ஷைத்தானையும்‌, அவனது வழியிலுள்ளோரையும்‌ போன்று, முஸ்லிமல்லாத ஒருவனாகவே இருப்‌பான்‌.

7.அல்‌ கபூல்‌ -ஏற்றுக்‌ கொள்ளல்‌. 
அதாவது 'லாஇலாஹ இல்லல்லாஹ்‌” எனும்‌ இவ்வார்த்தை, எம்மிடம்‌ வேண்டி நிற்கக்கூடிய விடயங்களான, "அல்லாஹ்‌ ஒருவனுக்காக மாத்திரம்‌ வணக்க வழிபாடுகளை மேற்கொள்ளல்‌, அவனல்லாதவற்றிற்கு வணக்கம்‌ செலுத்துவதை முழுமையாக விட்டுவிடல்‌" போன்ற விடயங்களைத்‌ திருப்தியோடு ஏற்று, அவற்றை முழுமையாகக்‌ கடைப்பிடித்தும்‌ வரவேண்டும்‌.

6. ஷஹாதா (லாஇலாஹ இல்லல்லாஹ்‌) வை முறிக்கக்‌ கூடிய விடயங்களில்‌ ஒன்றையாவது செய்யாதிருந்தாலும்‌ ஒருவனின்‌ (ஷஹாதா)  நிறைவேறுகின்றது.

ஷஹாதாவை முறிக்கக்கூடிய விடயங்களைப்‌ பின்வருமாறு வகைப்‌படுத்தலாம்‌.

1. "அல்லாஹ்வுக்கும்‌, தனக்குமிடைமில்‌ தரகர்களை ஏற்படுத்தி, அவர்‌களிடம்‌ பிரார்த்தனை புரிந்து, இறைவனிடம்‌ தனக்காக சிபாரிசு செய்யுமாறு அவர்களிடம்‌ வேண்டி, அவர்களையே முழுவதும்‌ சார்ந்‌திருப்பதன்‌ முலம்‌, ஒருவன்‌ நிராகரிப்பாளனாகிருகின்றான்‌", என்பது மார்க்க அறிஞர்களின்‌ ஏகோபித்த கருத்தாகும்‌.

2. அல்லாஹ்வுக்கு இணை வைப்பவர்களை, நிராகரிப்பாளர்களாகக்‌ கருதாமல்‌ இருத்தல்‌, அல்லது அவர்களை நிராகரிப்பாளர்களாகக்‌ கருதுவதில்‌ சந்தேகம்‌ கொள்ளல்‌, அல்லது அவர்களது வழிமுறையைச்‌ சரிகாணல்‌, என்பவற்றின்‌ மூலமும்‌ ஒருவன்‌ நிராகரிப்பாளனாக மாறிவிடுகின்றான்‌ .

3. இறைத்தூதர்‌ முஹம்மத்‌ (ஸல்‌) அவர்களது வழிமுறையை விட, வேறு ஒருவரது வழிகாட்டல்‌ பூரணத்துவம்‌ வாய்ந்ததென நம்புதல்‌, அல்‌லது அவர்களது தீர்ப்புக்களை கிட வேறு ஒருவரது தீர்ப்புக்கள்‌ சிறந்தவையென நம்புதல்,‌ நபியுடைய தீர்ப்புக்களை விட போலிக்‌ கடவுளர்களின்‌ தீர்ப்புக்களை ஒருவர்‌ சிறந்ததாகக்‌ கருதுவதை அதற்குரிய உதாரணமாகக்‌ கூறலாம்‌.

4. இறைத்தூதர்‌ முஹம்மத்‌ (ஸல்‌) அவர்கள்‌ போதித்தவற்றில்‌ ஏதும்‌ ஒரு விடயத்தை ஒருவன்‌ வெறுத்தாலும்‌ அவன்‌ நிராகரிப்‌பாளனாக ஆகி விடுகின்றான்‌. அவன்‌ நபியவர்களின்‌ போதனைகளைக்‌ கடைப்பிடித்து வந்தாலும்‌ சரியே !

5. நபிகளார்‌ போதித்த புனித மார்க்கமான இஸ்லாத்தில்‌ ஏதேனும்‌ ஒரு விடயத்தையாவது பரிகாசமாகப்‌ பேசினால்‌, அல்லது இஸ்லாத்தில்‌ கூறப்பட்டுள்ள தண்டனை - நற்கூலி பற்றி, ஒருவன்‌ பரிகாசமாகப்‌ பேசினாலும்‌, அவன்‌ நிராகரிப்பாளனாக  மாறிவிடுகின்‌றான்‌. இந்த நிலையில்‌, அவன்‌ மொழிந்த ஷஹாதாவும்‌, அவனுக்கு எந்தப்பயனையும்‌ அளிக்காது,

6 . இணைவைப்பவர்களோடு சேர்ந்து கோண்டு, முஸ்லிம்களுக்கெதிராக செயல்படுவதும்‌, எதிரிகளோடு ஒத்துழைப்பதும்‌, அவர்களுக்கு உதவுவதும்‌.

7. முஹம்மத்‌ (ஸல்‌) அவர்களது ஷரீஅத்‌ நெறிமுறையை விட்டும்‌ வெளியேறுவது மக்களில்‌ சிலருக்குச்‌ சாத்தியமாகலாம்‌, என ஒருவர்‌ நம்‌புதல்‌.

8. அல்லாஹ்வின்‌ மார்க்கமான இஸ்லாத்தைப்‌ புறக்கணித்தல்‌. அதனைக்‌ கற்பதுமில்லை, (வாழ்வில்‌) நடைமுறைப்‌ படுத்துவதுமில்லை.

9. அல்லாஹ்வின்‌ மார்க்கத்தில்‌ குறிப்பிடப்பட்டுள்ள, ஏதேனும்‌ ஒரு விடயத்தைப்‌ பொய்ப்படுத்தல்‌ .

10. அல்லாஹ்வும்‌, அவனுடைய தூதரும்‌ விலக்கிய (ஹறாமாக்கிய) ஏதேனும்‌ ஒரு விடயத்தை ஹலாலானவையாக - ஆகுமானவையாகக்‌ கருதுதல்‌. அதாவது, வட்டி எடு அல்லது விபச்சாரம்‌ புரி அது ஹலாலாகும்‌, எனக்‌ கூறுவது போன்றாகும்‌.


"லாஇலாஹ இல்லல்லாஹ்‌வை மொழிந்தவர்‌ சுவர்க்கம்‌ நுழைவார்‌" என்ற ஹதீஸின்‌ கருத்து விளக்கம்‌.

இதன்‌ விளக்கம்‌ பற்றி வந்துள்ள ஹதீஸ்கள்‌ ;

1. "எந்த ஒரு அடியான்‌, “ லாஇலாஹ இல்லல்லாஹ்‌‌” என மொழிந்து, அதே நிலையில்‌ மரணிக்கின்றானோ, அவன்‌ சுவர்க்கம்‌ நுழைவான்‌".( ஆதாரம்‌ : புகாரி, முஸ்லிம்‌)

2. "வணக்கத்திற்கு உரிமை பெற்றவன்‌ அல்லாஹ்வையன்றி வேறெவருமில்லை எனவும்‌, "முஹம்மத்‌ (ஸல்)‌ அவர்கள்‌, அல்லாஹ்வின்‌ அடியாரும்‌, தூதரும்‌ ஆவார்கள்‌ எனவும்‌, யார்‌ சான்று பகர்கின்றாரோ, அவர்மீது அல்லாஹ்‌ நரக நெருப்பை ஹறாமாக்கி (விலக்கி) விடுகின்றான்‌”. (ஆதாரம்‌ : முஸ்லிம்‌)

இந்த இரண்டு ஹதீஸ்களுக்கும்‌, இது போன்ற ஏனைய ஹதீஸ்களுக்கும்‌ விளக்கமளிப்பது எவ்வாறு ?

இந்த இரு ஹதீஸ்களினதும்‌ மேலோட்டமான கருத்து யாதெனில்‌, இந்தக்‌ கலிமாவை நாவினால்‌ மொழிந்த மனிதன்‌ சுவர்க்கம்‌ நுழைந்து விடுவதோடு, நரக நெருப்பும்‌ அவன்மீது ஹறாமாகி விடுகின்றது என்பதாக உள்ளது. எனினும்‌ இதுபற்றி வந்துள்ள மார்க்க அறிஞர்களின்‌ விளக்கங்களில்‌ இமாம்‌ இப்னு தைமியா (ரஹ்‌) அவர்களின்‌ விளக்கமே சிறந்ததாகும்‌.

இமாம்‌ அவர்களின்‌ விளக்கம்‌ பின்வருமாறு :

" நிச்சயமாக இந்த ஹதீஸ்கள்‌ யார்‌ ஷஹாதாக்‌ கலிமாவை மொழிந்து அந்த நிலையிலேயே மரணமடைகின்றாரோ அத்தகையவரைப்‌ பற்றியே கூறப்பட்டவையாகும்‌. சில அறிவிப்புக்களில்‌ இவ்வாறு நிபந்தனையிட்டு வந்திருப்பது போன்று, உளத்தூய்மையுடனும்‌, உள்ளம்‌ அதில்‌ முழுமையாக நம்பிக்கை கொண்ட நிலையிலும்‌, சந்தேகம்‌ எதுவுமின்றி, உறுதியுடனும்‌, வாய்மையுடனும்‌ எவர்‌ இந்த ஷஹாதாவை மொழிகின்றாரோ, அத்தகையவரைப்‌ பற்றியே இங்கு குறிப்பிடப்படுகின்றது.

"தவ்ஹீத்‌" எனும்‌ ஏகத்துவத்தின்‌ உண்மைநிலை யாதெனில்‌, ஒருவனின் முழு ஆத்மாவும்‌ அல்லாஹ்வின் பால்‌ ஈர்க்கப்‌படுவதாகும்‌. அவன்‌ தனது (அனைத்துப்‌) பாவங்களிலிருந்தும்‌ விலகி, மிகவும்‌ தூய முறையில்‌ (அல்லாஹ்விடம்‌) பாவமன்னிப்புக்‌ கோருவதன்‌ மூலமே இந்நிலை அவனைக்கு ஏற்படுகின்றது. இந்த நிலையில்‌ ஒருவன்‌ மரணித்து விட்டால்‌தான்‌ மேற்கூறப்பட்ட நிலையை (சுவர்க்கத்தை அடையும்‌ வாய்ப்பை) அவன்‌ அடைந்து கொள்கின்றான்‌.

அப்படியின்றி, (ஒருவன்‌ பாவங்களில்‌ முழ்கி) இருந்தால்‌, அது பற்றி நம்பகமான பல அறிவிப்புக்கள்‌ இவ்வாறு குறிப்பிடுகின்றன. அதாவது,

"லாஇலாஹ இல்லல்லாஹ்‌‌" கலிமாவை மொழிந்து, உள்ளத்தில்‌ ஒர்‌ நூலிழை அளவேனும்‌ நன்மை இருக்கும்‌ நிலையில்‌ யார்‌ உள்ளாரோ, அத்தகையவர்‌ நரகிலிருந்து வெளியேற்றப்‌படுவார்‌. மேலும்‌, அல்லாஹ்‌ தஆலா (ஒருவரின்‌) ஸஜ்தா உறுப்புக்களை நரக நெருப்பின்‌ மீது ஹறாமாக்கியுள்ளான்‌. எனவே, 'லாஇலாஹ இல்லல்லாஹ்‌‌" வை மொழிந்த ஒருவன்‌ கூட நரகில்‌ நுழைவான்‌ என்பதற்குரிய ஆதாரமாக இது அமைந்துள்ளது.

“லாஇலாஹ இல்லல்லாஹ்‌‌, முஹம்மதுர்‌ ரஸுலுல்லாஹ்‌" என மொழிந்தவனுக்கு நரகம்‌ ஹறாமாக்கப்பட்டுள்ளது.” என்ற கருத்தில்‌ அமைத்துள்ள ஹதீஸ்கள்‌ சில கடினமான நிபந்தனைகளைக்‌ கொண்டு வரையறுக்கப்‌பட்டுள்ளன. உண்மையில்‌, இந்த ஷஹாதாவை மொழிபவர்களில்‌ அதிகமானவர்கள்‌ ஒன்றோ வழக்கத்திற்காக அல்லது கண்மூடித்தனமானப்‌ பின்பற்றுவதற்குத்‌தான்‌ அதனை மொழிகின்றார்கள்‌. எனினும்‌ அதனை மொழியும்‌ போது அவர்களது உள்ளங்களில்‌ ஈமானின்‌ உறுதி ஏற்படுவதில்லை.

இல்வாறானவர்கள்‌ அவர்களது மரணத்தின்‌ போதுதான்‌ இக்கலிமா பற்றிப்‌ பரீட்சிக்கப்படுவார்கள்‌ என்பது தான்‌ இங்கு பயப்படவேண்டிய விடயமாகும்‌. இந்த அடிப்படையில்‌ ஒருவர்‌ சிந்தித்தால்‌ மேற்கூறப்பட்ட ஹதீஸ்களுக்கிடையில்‌ மேலோட்டமாகத்‌ தென்படும்‌ முரண்பாடுகள்‌ நீங்‌கி விடுகின்றன.

ஏனெனில்‌ ஒருவன்‌ இக்லாஸோடும்‌ (உளத்தூய்மை, பூரண உள உறுதியோடும்‌ (யகீன்‌) இக்கலிமானை மொழிந்து, பாவகாரியங்களில்‌ அவன்‌ பிடிவாதமாக இருக்காமல்‌, உலகிலுள்ள அனைத்தை விடவும்‌ அல்லாஹ்‌ அவனுக்கு அதிகம்‌ உவப்பிற்குரியனாக ஆகி, மேலும்‌ அல்லாஹ்‌ விலக்கியவற்றிற்கு அவனது உள்ளத்தில்‌ எந்தவொரு விருப்பமும்‌ இல்லாதிருந்து, அவன்‌ கட்டளையிட்டவை பற்றி எவ்வித வெறுப்பும்‌ அவனிடம்‌ இல்லையெனில்‌, இத்தகைய ஒருவன்மீது தான்‌ நரகம்‌ ஹறாமாக்கப்‌படும்‌, (அதாவது இத்தகைய ஒருவனைத்‌ தான்‌ நரகம்‌ தீண்டாது).

ஹஸன்‌ (ரலி) அவர்களிடம்‌, 'லாஇலாஹ இல்லல்லாஹ்‌‌” (வணக்கத்‌திற்குரிய உண்மையான இறைவன்‌, அல்லாஹ்வைத்‌ தவிர வேறுயாருமில்லை) என மொழிந்த ஒருவன்‌ சுவனம்‌ புகுந்து விடுவான்‌ என மக்களில்‌ சிலர்‌ சொல்கிறார்களே என வினவப்பட்டது.

அதற்கு அவர்கள்‌, யார்‌ "லாஇலாஹ இல்லல்லாஹ்‌” என மொழிந்து அதனது உரிமையையும்‌, கடமையையும்‌ நிறைவேற்றுகின்றாரோ, அவர்தான்‌ சுவனம்‌ புகுவார்‌” எனப்‌ பதிலளித்தார்‌.

வஹப்‌ இப்னு முனப்பஹ்‌ அவர்களிடம்‌ ஒருவர்‌, “லாஇலாஹ இல்லல்லாஹ்‌” என்பது சுவனத்தின்‌ திறவுகோலா என வினவியபோது, அவர்கள்‌,"ஆம்‌, எந்த ஒரு திறவுகோலாக இருப்பினும்‌ அதற்குப்‌ பற்கள்‌ இருக்கும்தானே, பற்களுள்ள திறவுகோலை நீ கொண்டு வந்தால்‌ சுவனம்‌ உனக்காகத்‌ திறந்து விடப்படும்‌. அல்வாறில்லையெனில்‌, சுவர்க்‌கம்‌ திறந்துவிடப்‌ படமாட்டாது.” எனப்‌ பதிலளித்தார்கள்‌.


அல்லாஹ்வே அனைத்தையும்‌ அறிந்தவன்‌. மேலும்‌ அவனுக்கே அனைத்துப்‌ புகழும்‌ உரித்தாகட்டும்‌, இறைத்‌ தூதர்‌ முகம்மத்‌ (ஸல்‌) அவர்கள்‌ மீது சாந்தியும்‌, அல்லாஹ்வின்‌ கருணையும்‌ உண்டாவதாக!

Previous Post Next Post