மீலாதும் மவ்லிதும்

 -அபூ ஹாலித் முஹம்மத்

புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாகட்டும். அவனின் அருளும், சாந்தியும், நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தவர்கள், தோழர்கள், நல்லடியார்கள், மற்றும் இறை விசுவாசத்தோடு வாழ்ந்தவர்கள், வாழ்ந்து கொண்டிருக்கின்றவர்கள் அனைவர் மீதும் நிலையாக உண்டாகட்டுமாக! 


அன்புக்கினிய இஸ்லாமிய வாழ் சகோதரர்களே! சகோதரிகளே!

இஸ்லாமிய மாதங்களின் மூன்றாவது மாதமான ரபீயுல் அவ்வல் மாதத்திலே நபி (ஸல்) அவர்கள் பிறந்து 63 வருடங்கள் வாழ்ந்துவிட்டு அதே மாதத்திலேயே மரணிக்கவும் செய்தார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று இலங்கையிலும் பல "மௌலித், மற்றும் திக்ர்" வைபங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, அரசியல் பிரமுகர்கள் முதல் சாதாராண பிரஜைகள் வரை அழைக்கப்பட்டு மிக விமர்சையாகக் கொண்டாடப்டுவதை எமக்கு காணக்கூடியதாக உள்ளது.

எனவே இம்மாதத்தில் பக்திப்பரவசத்தோடு மேற்கொள்ளப்படுகின்ற, குறிப்பாக "மீலாத் விழா" விற்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழி முறைக்கும் இடையில் காணப்படும் தொடர்பு பற்றி “காய்தல், உவர்தல் ஏதுமின்றி" நடுநிலையுடன் அல்குர்ஆன், அஸ்ஸுன்னா, மற்றும் இஸ்லாமிய வரலாற்றின் அடிப்படையில் ஆய்வு செய்வது இன்றைய காலத்தின் அவசியத்தேவையாக இருக்கின்றது. 

அதன் படி மீலாத் கொண்டாட்டம் நபிவழியை சார்ந்ததா? இல்லையா? என்பதை ஆய்வு செய்யும் முன் அல்குர்ஆன், ஹதீஸ், மற்றும் இஸ்லாத்தைக் கற்றறிந்த இமாம்களின் தீர்ப்பு என்பவற்றை அடிப்படையாக கொண்டு மீலாத் விழாக்கொண்டாட்டம் அமையப்பெற்றிருக்கின்றதா? இல்லையா? என்பதை ஆய்வு செய்து உறுதியாக கூறுகிறேன், இன்ஷா அல்லாஹ். “அசத்தியம் மறைந்து சத்தியம் மலரட்டும் " 


இஸ்லாம் முழுமைப்படுத்தப்பட்டுள்ள மார்க்கமா?

ஆம், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது 23 வருட நபித்துவக் காலத்தில் எச்சில் துப்புதல் முதல் ஆட்சி செய்யும் முறை வரை தமது தோழர்களுக்கு இஸ்லாத்தைக் கற்றுக்கொடுக்காது இவ்வுலகை விட்டு பிரியவில்லை என்பதை பின்வரும் நபி மொழி உறுதி செய்கிறது :
عَنْ سَلْمَانَ قَالَ قِيلَ لَهُ قَدْ عَلَّمَكُمْ نَبِيُّكُمْ صَلَّى اللَّهُ عَلَيْهِوَسَلَّمَ كُلَّ شَيْءٍ حَتَّى الْخِرَاءَةَ قَالَ فَقَالَ أَجَلْ لَقَدْ نَهَانَاأَنْ نَسْتَقْبِلَ الْقِبْلَةَ لِغَائِطٍ أَوْ بَوْلٍ أَوْ أَنْ نَسْتَنْجِيَ بِالْيَمِينِأَوْ أَنْ نَسْتَنْجِيَ بِأَقَلَّ مِنْ ثَلَاثَةِ أَحْجَارٍ أَوْ أَنْ نَسْتَنْجِيَبِرَجِيعٍ أَوْ بِعَظْمٍ (مسلم/برقم:262)
ஒருவர் ஸல்மான் (ரழி) அவர்களிடம் வந்து : உங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உங்களுக்கு அற்பமான காரியங்களையே கற்றுத்தந்துள்ளார்கள் என இழிவாக)க் கேட்ட போது ஆமாம் (உண்மைதான்) நாம் மலசலம் கழிக்கின்ற போது வலதை உபயோகிக்கக் கூடாது என்றும், மூன்று கற்களை விட குறைவானவற்றைக் கொண்டு சுத்தம் செய்யக் கூடாது என்றும், மிருக விட்டையினாலோ, எலும்பினாலோ சுத்தம் செய்யக் கூடாது என்றும் எமக்கு கற்றுத் தந்துள்ளனர்) அது பற்றி நாம் பெருமைப்படுகின்றோம்) எனப் பதிலளித்தார்கள்) ஆதாரம் : முஸ்லிம் (262)
இதிலிருந்து எவருக்கும் இஸ்லாத்தினுள் தமது விருப்பு, வெறுப்புக்களை புகுத்தி விடாமல் இருப்பதற்காக வேண்டி கழிவறை ஒழுக்கங்களை கூட கற்றுக் கொடுத்த நபி (ஸல்) அவர்கள் ஏன் !!! தனது (பிறந்த தின விழா) மீலாத் விழா பற்றி தனது தோழர்களுக்குக் கற்றுக் கொடுக்கவில்லை? அவ்வாறு கற்றுக் கொடுத்திருந்தால் அது சம்மந்தமாக அறிவிக்கப்பட்ட ஹதீஸ்கள் எங்கே போனது ? 

கொஞ்சம் சிந்திப்போம்....!


நபித்தோழர்களும் மீலாதுன் நபி விழாவும்:

இரண்டாம் கலீஃபா உமர் (ரலி) அவர்களின் காலத்தில் இஸ்லாமிய ஹிஜ்ரி ஆண்டை நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாளில் இருந்து கணிக்காது அவர்களின் “ஹிஜ்ரத்” பயணத்தை கவனத்திட் கொண்டு நிர்ணயம் செய்த நிகழ்வும், நபித்தோழர்களின் காலத்தில் மீலாத் தின கொண்டாட்டங்கள் இடம் பெறாமையும், அவர்கள் மத்தியில் மீலாத் தினம் முக்கிய இடத்தைப் பெறவில்லை என்பதை உணர்த்தப் போதுமான சான்றாகும். 


கிறிஸ்மஸும் மீலாதுன் நபி விழாவும் :

கிறிஸ்த்தவர்கள் ஈஸா (அலை) அவர்களின் பிறந்தநாளை கொண்டாடுவது போன்று சில முஸ்லிம்களும் நபி (ஸல்) அவர்களின் பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்கள். இந்த ஒப்பீடு சரிதானா?
பிறசமயக் கலாச்சாரத்தைப் பின்பற்றுபவன் அந்த சமயத்தையே சார்ந்தவன் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆதாரம் : அபூதாவூத்)
கிறிஸ்தவர்கள் பிறந்த நாளை விழாவாக கருதுவது போன்று முஸ்லிம்களாகிய நாமும் இவ்விடயத்தில் அவ்வாறு கருதினால் நாமும் கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவர்களாகிவிடுவோம் என இந்நபிமொழி எமக்கு உணர்த்துகிறது. எனவே நபிகளாரின் எச்சரிக்கைக்குப் பயந்து பிறந்த நாள் விழா மற்றும் இதுபோன்ற பிறமதக் கலாச்சாரங்களை விட்டும் முற்றிலும் விலகி, முழுமையான இஸ்லாமியராக வாழ முயற்சி செய்வோம்.


அரபுக் கவிதைகள் (மௌலிதுகள்) வணக்கமாகுமா?

நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடும் முகமாக பல விசேட வழிபாடுகள் நம் சமுதாயத்தில் அரங்கேற்றப்படுகின்றன. அதில் இன்றியமையாததாகக் கருதப்படுவது “மவ்லிது” என்ற பெயரால் பாடப்படும் அரபுக் கவிதைகலே. இக்கவிதைகளுக்கு நம் சமுதாயத்தில் பெரும் மதிப்பிருக்கின்றது. ஆனால் இஸ்லாத்தில் இதற்கெதிரான எச்சரிக்கைகலே இருக்கின்றன. அவை பள்ளிவாசள்கலும் புனித வழிபாடாகக் கருதி கூட்டம் கூடி பாடப்படுகின்றன. நபி (ஸல்) அவர்களைப் புகழ்வதற்காக இயற்றப்பட்ட இப்பாடல் வரிகளில் பல வரிகள் புகழ்ச்சியில் வரம்பு மீறி நபி (ஸல்) அவர்களுக்கு இறைத்தன்மைகளை கொடுக்கின்றன. அதாவது நபி (ஸல்) அவர்களிடம் உதவிதேடுவது, அவர்களிடம் பாதுகாப்புத் தேடுவது, அவர்களுக்கு மறைவான ஞானம் உண்டு என்று நம்புவது போன்ற ஷிர்க்கான (இறைவனுக்கு இணைவைக்கும்) கருத்துக்களை இப்பாடல் வரிகள் தன்னுள் கொண்டுள்ளன.
எக்கொள்கையை விட்டும் மக்களைத் தடுப்பதற்காக நபி (ஸல்) அவர்கள் நபியாக அனுப்பப்பட்டார்களோ அதே கொள்கையைக் அடிப்படையாக கொண்டு பாடல்களை இயற்றி நபி (ஸல்) அவர்களை புகழ்வதற்கு பாடுகிறார்கள். இது மிகப்பெரிய அநீதி அல்லவா? இதைவிடக் கொடுமை என்னவெனில் அல்லாஹ் மட்டுமே அழைக்கப்படவேண்டிய பள்ளிவாயல்கலிலேயே அவனுக்கு இணைவைக்கும் இக்கவிதைகள் பக்திப்பரவசத்தோடு பாடப்படுவது தான். அல்லாஹ்வின் தண்டனைக்கு பயப்படக்கூடிய மக்களாக நாம் இருந்தால் தவ்பாச் செய்து உடனே இச்செயலை விட்டும் விலகிவிட வேண்டும். 


அரபுக்கவிதைகளை (மௌலிதுகளை) உருவாக்கியவர்கள் யார்?

“ஃபாதிமிய்யாக்கள்” என்று அழைக்கப்படும் ஃபாதிமா (ரழி) அவர்களின் பரம்பரையில் வந்தவர்கள் என பொய் நாமம் சூட்டிக் கொண்ட “பனூஉபைத்” கூட்டத்தினரே இந்த பாதிமியாக்கள். இவர்கள் தான் பக்தாதில்லிருந்த அப்பாஸிய ஆட்சியை எதிர்த்து எகிப்தில் கிளர்ச்சி செய்து ஆட்சியைக் கைப்பற்றிக்கொண்டனர். பின்னர் தமது நிர்வாகத்தில் மக்களுக்கு ஏற்படும் அதிருப்தியை சமாளிப்பதற்காகவும், தமதாட்சியை தக்கவைத்துக் கொள்ளவதற்க்காகவும், மக்கள் தமக்கெதிராக புரட்சியில் ஈடுபடாமலிருக்கவும், மக்களின் கவனத்தை தம்பக்கம் ஈர்ப்பதற்காகவும் “மவ்லிதுன் நபி” “மவ்லிது அலி” “மவ்லிது ஹஸன்” “மவ்லிது ஹுஸைன்” “மவ்லிது ஃபாத்திமா” “மவ்லிது கலீபதில் ஹாழிர்” - (ஷீஆக்களின் நம்பிக்கைப்படி ஹிஜ்ரி 230 ற்குப் பின் பிறந்து 1200 ற்கும் மேற்பட்ட வருடங்கள் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் மஹ்தி ) ஆகிய ஆறு மவ்லித்களையும் சுன்னத் வல் ஜமாஅத்தினரை கருவறுத்தவனான “அல்முயிஸ் லிதீனில்லா ஹில் உபைதி" என்ற ஆட்சியாளனால் ஹிஜ்ரி 362-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. 

இவனே முதல் முதலில் பாங்கின் அமைப்பில் “ஹய்ய அலா கைரில் அமல்” என மாற்றம் செய்தவன் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. 

இவனைத் தொடர்ந்து “அல்முயிஸ்” என்றழைக்கப்படும் இவனது மகனும் அதனைப் பேணி வந்தான். அவனது ஆதரவாளர்கள் அவன் தான் பிற்காலத்தில் வெளிவரவிருந்த மஹ்தி என்றும் கூறிவந்தனர். அவர்களுக்குப் பின் ஆட்சியில் அமர்ந்த “சுன்னத் வல்ஜமாஅத்” ஆதாரவாளரான “அல் அஃப்ழல் அமீருல்ஜுயூஷ் பின் பத்ர் அல்ஜமாலி” என்பவரால் நடை முறையில் இருந்து வந்த மவ்லித் ஹிஜ்ரி 448 ல் ஒழிக்கப்பட்டது. 

மீண்டும் ஹிஜ்ரி 524-ம் ஆண்டு ஷீஆ ஆதரவாளரான “அல்ஆமிர் பிஆஹ்காமில்லாஹ்” என்பவரால் மவ்லித் புத்துயிரூட்டப்பட்டது இதுவே இதன் சுருக்கமான வரலாறு ஆகும். 

மேற்படி தகவல்களை ஷாஃபி மத்ஹப் பேரறிஞர் இமாம் அபூஷாமா அல்மக்திஸி (ரஹ்) அவர்கள் தனது “அர்ரவ்ழதைன் ஃபீ அக்பாரித்தவ்லதைன்” என்ற நூலில் பாகம்:1, பக்கம்: 201-ல் தொகுத்து வழங்கியுள்ளார்கள். 


மவ்லித் பற்றிய உண்மை நிலையை இமாம் தாஜுத்தீன் அல்பாகிஹானி (ரஹ்) அவர்கள் கூறும்போது:

لا أعلم لهذا المولد أصلا في كتاب، ولا سنة، ولا ينقلعمله عن أحد من علماء الأمة الذين هم القدوة في الدينالمتمسكون بآثار المتقدمين بل هو بدعة أحدثهاالبطالون، وشهوة نفسى اعتنى بها الأكالون. انظر : المورد في عمل المولد للفاكهاني صفحة: 20-21 أوالحاوي للفتاوى: (1/189) 


இந்த மவ்லிதிற்கு அல்குர்ஆனிலோ, நபி வழியிலோ எவ்வித அடிப்படையையும் நான் அறியேன். மேலும் இந்த சமூத்தில் முன்னோர்கள் வழி நடக்கும் மார்க்கத்தின் முன்மாதிரிமிக்க அறிஞர்கள் அதைச் செய்ததற்கான எந்தவொரு செய்தியும் இடம் பெறவில்லை. வீணர்களும், (நபுஸ்) மோகம் பிடித்தவர்களுமே அதனை புதிதாக உருவாக்கினர். உணவில் அதிக நாட்டம் உடையோர் அதற்கு முன்னுரிமை வழங்கி அதனை கட்டிக் காத்தனர் என்று குறிப்பிட்டுள்ளார்கள். பார்க்க: அல்மவ்ரித் ஃபீ அமலில் மவ்லித் பக்: (20- 21) அல்லது அல்ஹாவி பாகம் :1-பக் : (189) 


பிறந்த நாள் விழாவா? இறந்த நாள் விழாவா?

இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கிய விடயம் என்னவெனில் எந்த நாளில் நபி (ஸல்) அவர்கள் பிறந்தார்களோ அதே நாளில் தான் நபி (ஸல்) அவர்கள் மரணித்தார்கள் என்றும் கூறுகிறார்கள். இவ்வாறிருக்க இவர்களின் விழாக்களும் வழிபாடுகளும் நபி (ஸல்) அவர்களின் பிறப்பிற்காகவா? அல்லது இறப்பிற்காகவா? என்று கேள்வி எழுகிறது. 


மீலாதுன் நபி விழா கொண்டாடுவதற்காக இவர்கள் கூறும் காரணம் தான் என்ன?

மீலாதுன் நபி விழாவிற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லாத நிலையில், சிலர் நபிகளாரை கண்ணியப்படுத்தும் முகமாக இவ்வாறன விழாக்களை கொண்டாட முடியும் என்று காரணம் கூறுகின்றனர். வெளிப்படையாகப் பார்த்தால் இக்கருத்து நபி (ஸல்) அவர்களை போற்றுவது போன்று தோன்றினாலும் உண்மையிலயே இது நபி (ஸல்) அவர்கள் மீது அபாண்டமான பழி சுமத்தும் கொண்டாட்டம் ஆகும். இதனால் நபி (ஸல்) அவர்கள் சில நல்லறங்களை இச்சமுதாயத்திற்கு சொல்லாமல் மறைத்துவிட்டார்கள் என்று கருத வேண்டிவரும். மேலும் நபித்தோழர்களும் இந்நல்லறங்களை செய்யவில்லை என்று அவர்கள் மீதும் குறை கூறவேண்டிவரும். -நஊது பில்லாஹ்- இந்நிலையை விட்டும் அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக !


நபியை நேசிப்பதன் அளவுகோல் என்ன?

வருடத்தில் இது போன்ற ஓரிரு விழாக்களை கொண்டாடிவிட்டு, அதன் பிறகு நாம் நினைத்தது போன்று வாழ்ந்து கொள்வது நபி (ஸல்) அவர்களை நேசிப்பதாகாது. நம்வாழ்வின் அனைத்துத் துறைகளையும் அனைத்துச் செயல்களையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலின் அடிப்படையில் அமைத்துக் கொள்ளவேண்டும். அவர்களை முழுமையாக பின்பற்றவேண்டும்.
இதனையே அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்: 

قُلْ إِنْ كُنْتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمْ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ

நீங்கள் அல்லாஹ்வை நேசிக்கக் கூடியவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள்! அப்போது தான் அல்லாஹ் உங்களை நேசிப்பான் என்று நபியே நீர் கூறுவீராக! (அல்குர்ஆன் 3:31) 

“உங்களில் ஒவ்வொருவரும் சொர்க்கத்தில் நுழைந்து விடுவீர்கள் மறுப்பவரைத் தவிர என்று நபி (ஸல்) அவர்கள் கூற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே! மறுப்பவர் என்றால் யார்? என்று தோழர்கள் கேட்டனர். என்னைப் பின்பற்றுபவர் சொர்க்கத்தில் நுழைந்துவிடுவார், எனக்கு மாறுசெய்பவர் நிச்சயமாக என்னை மறுத்தவராவார் - அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார் - என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்”. (ஆதாரம் : முஸ்லிம்)
மேலும் ஒரு ஹதீஸில் : 

عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَدَعُونِي مَا تَرَكْتُكُمْ إِنَّمَا هَلَكَ مَنْ كَانَ قَبْلَكُمْ بِسُؤَالِهِمْوَاخْتِلَافِهِمْ عَلَى أَنْبِيَائِهِمْ فَإِذَا نَهَيْتُكُمْ عَنْ شَيْءٍفَاجْتَنِبُوهُ وَإِذَا أَمَرْتُكُمْ بِأَمْرٍ فَأْتُوا مِنْهُ مَا اسْتَطَعْتُمْ. (خ/برقم 7288)

“நான் உங்களுக்கு விட்டுச் செல்லும் வழியை பற்றி நில்லுங்கள் உங்களுக்கு முன்வாழ்ந்தோர் (பயனற்ற) கேள்விகளாலும், தமது நபிமார்கள் மீது முரண்பட்டுக் கொண்டதாலுமே அழிந்தனர். நான் ஏதாவது ஒரு விஷயத்தை தடுத்தால் அதனை முழுமையாக தடுத்துக் கொள்ளுங்கள், ஏதாவது ஒரு கட்டளை பிறப்பித்தால் அதிலிருந்து முடியுமான அளவு எடுத்து நடவுங்கள் எனக் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி-7288) 

மேற்படி ஹதீஸின் கருத்தில் அமைந்த பல நபிமொழிகள் நாயகம் (ஸல்) அவர்களை நேசிப்பதன் அளவு கோலாக அவர்களின் வழி நடப்பதையே வேண்டிநிற்கின்றன. எனவே நபி (ஸல்) அவர்களை பின்பற்றி நடப்பதே அவர்களை மதிப்பதின் அடையாளமாகும். 

மார்க்கம் முழுமையாக்கப்பட்டுவிட்டது :அல்லாஹ் நபி முஹம்மத் (ஸல்) அவர்களோடு இம்மார்க்கத்ததை முழுமையாக்கிவிட்டதாக குர்ஆனில் அறிவித்துவிட்டான். 

الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُلَكُمْ الْإِسْلَامَ دِينًا

“இன்றய தினம் உங்களுடைய மார்க்கத்தை உங்களுக்காக நாம் முழுமையாக்கி விட்டேன். நம்முடைய அருட்கொடையை உங்கள் மீது பரிபூரணப்படுத்தி விட்டேன். உங்களுடைய மார்க்கமாக நான் இஸ்லாத்தைப் பொருந்திக் கொண்டேன்”. (அல்குர்ஆன் 5:3) 

இந்த வசனம் ஹஜ்ஜத்துல் விதாவில் (விடைபெரும் ஹஜ்ஜில்) அரஃபா தினத்தன்று இறங்குகிறது. நபி (ஸல்) அவர்கள் உயிரோடு இருக்கும் போதே மார்க்கம் முழுமை பெற்றுவிட்டது எனும்போது, நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிறகு அவர்கள் கற்றுத்தராத ஒன்றை மார்க்கத்தில் இணைக்கவோ, அல்லது அவர்கள் கட்டளையிட்டவற்றில் ஒன்றை நீக்கவோ யாருக்கும் உரிமை கிடையாது. இதனடிப்படையில் “மீலாது விழா” என்பது நபி (ஸல்) அவர்கள் மரணித்து நான்கு நூற்றாண்டுகளுக்கு பிறகு ஆரம்பிக்கப்பட்டது எனும்போது அதற்கு மார்க்க சாயம் பூசுவது இறைவனுடைய அதிகாரத்தில் நமது கரங்களை நுழைப்பது போன்றாகும். இதுபோன்று மார்க்க விஷயத்தில் விளையாடிய யூத, கிருத்துவர்களுக்கு கிடைத்த தண்டனைகளையும் கிடைக்கவிருக்கும் மறுமை வேதனைகளையும் திருக்குர்ஆனில் அல்லாஹ் பல இடங்களில் கூறுகிறான். எனவே நாம் இதுபோன்று மார்க்கத்தில் புதிய செயல்களை உறுவாக்குவதை விட்டும் முற்றிலும் தூரமாகி விடவேண்டும். 


மார்க்கத்தில் நூதனச் செயல் :

மார்க்கத்தில் புதிதாக உறுவாக்கப்படுபவை அனைத்தும் பித்அத் (மார்க்கத்தில் நூதனச்) செயலாகும். அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் கற்று தராதவற்றை மார்க்கத்தின் அங்கமாக நினைத்து செயல்படுத்தப்பட்டால் நிச்சயமாக அது வழிகேடாகும், அது மறுமையில் நிராகரிக்கப்பட்டுவிடும், அதற்குரிய தண்டனையும் கிடைக்கும். 

பித்அத் பற்றி நபி (ஸல்) அவர்கள் எச்சரிக்கும் சில ஹதீஸ்கள் :
“மார்க்கத்தில் புதிதாக உண்டாக்கப்படும் அனைத்தும் வழிகேடாகும்”. (ஆதாரம் : புகாரி)

“யார் நம்முடைய இந்த மார்க்க விஷயத்தில் அதில் இல்லாத ஒன்றை புதிதாக உறுவாக்குகின்றாரோ அது மறுக்கப்பட்டுவிடும்”. (ஆதாரம் : முஸ்லிம்) 

“மஹ்ஷரில் கவ்ஸர் எனும் தடாகத்திலிருந்து நபி(ஸல்) அவர்கள் தண்ணீர் புகட்டிக் கொண்டிருப்பார்கள். அதில் நீர் அருந்துவதற்காக மார்க்கத்தில் நூதனச் செயல்களை உண்டாக்கியவர்களும் வருவார்கள். அவர்களை தண்ணீர் அருந்த விடாமல் மலக்குகள் இழுத்துச் சென்று விடுவார்கள்”. (ஹதீஸின் சுருக்கம்) (ஆதாரம் : புகாரி) 

எனவே மீலாது விழாவும் மார்க்கத்தில் புதிதாக உண்டாக்கப்பட்டவையே! இதற்காக செலவிடப்படும் பணத்திற்கோ, உழைப்பிற்கோ அல்லாஹ்விடத்தில் எந்த நன்மையும் கிடைக்காது. மாறாக மஹ்ஷரில் நபி (ஸல்) அவர்கள் புகட்டும் தண்ணீரை அருந்தும் வாய்ப்பை இழந்து கொடிய வெப்பத்தில் தாகத்தால் பரிதவிக்க நேரிடும். 

எனவே அன்பிற்கினிய சகோதரர்களே! மீலாது விழா உட்பட மார்க்கத்தில் முரணான எந்தச் செயலுக்கும் பொருளாலோ, உழைப்பாலோ, ஆலோசனையாலோ வேறு எந்த விதத்திலும் உதவவேண்டாம் என அன்புடன் வேண்டுகிறோம். 


ஐயமும் தெளிவும்:

ஐயம் : ஹஸ்ஸான் பின் தாபித் (ரலி) அவர்களிடம் இணைவப்பாளர்களை எதிர்த்துக் கவி பாட அனுமதித்தது மவ்லித் பாடலுக்கான அங்கீகாரம் தானே! 

தெளிவு : குரைஷியர், முஷ்ரிகீன்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை கவிதையால் நிந்திப்போராக இருந்தனர். அவர்களுக்கு கவிதையால் பதில் அளிக்க முடியாத நபி (ஸல்) அவர்கள் கவித்துறையில் சிறப்பு தேற்சி பெற்றிருந்த ஹஸ்ஸான் (ரலி) அவர்களை கவிதையிலேயே அவர்களுக்கு பதிலடி கொடுக்கும்படி பணித்தார்கள். அதனால் அவர்கள் நபியை உயர்த்தியும், எதிரிகளைத் இகழ்ந்தும் கவி பாடினார்கள். 

நபியின் அங்கீகாரம் பெற்ற ஹஸ்ஸான் (ரலி) அவர்களின் கவியை நாம் பிரதி வெள்ளிக் கிழமைகளில் “அல்கஹ்ஃப்” அத்தியாயத்தை ஓதி வருவது போன்று நபித்தோழர்கள் வருடா வருடம் ரபீவுல் அவ்வல் மாதத்தில் மஸ்ஜிதுன் நபவியில், அல்லது மதீனாவிலுள்ள வீடுகளில் ஓதி வந்தனரா? என்றால் இல்லை. 

நபி (ஸல்) அவர்களை உலகப்பயங்கரவாதத்திற்கு வித்திட்டவர் என அமெரிக்காவில் உள்ள ஒருவன் நவீன காலத்தில் காழ்ப்புணர்வுடன் சாடிப் பேசியதை நீங்கள் அறிவீர்கள். இந்நிலையில் இவன் போன்ற ஷைய்த்தான்களை எதிர்த்தும், நமது நபியை உயர்த்தியும் பாடுவதையும், எழுதுவதையுமே இந்த ஹதீஸ் விளக்குகின்றது. 

ஐயம் : மவ்லித் நபியின் காலத்தில் இல்லாததாக இருந்தாலும் சுன்னத்தான ஒன்றாகாதா? 

தெளிவு : முஸ்லிம் உலகில் அங்கீகரிக்கப்பட்ட இஸ்லாமிய அறிஞர்களுள் ஒருவரான இமாம் இப்னுஸ்ஸலாஹ் (ரஹ்) அவர்கள் சுன்னா (நபியின் வழி முறையை) ஹதீஸ்களின் துணை கொண்டு இரண்டாக வகுக்கின்றார்கள்.
(1) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்து காட்டியவை. உதாரணமாக: ஸிவாக் (மிஸ்வாக் ) செய்தல், தர்மம் கொடுத்தல், உண்ணுதல், பருகுதல், சிகை அலங்காரம் செய்தல் போன்றவை.
(2) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்யாது விட்டவை. உதாரணமாக: ஐங்காலத் தொழுகை முடிந்ததும் கூட்டாக பிரார்த்திக்காது தனிமையாக திக்ர் செய்தமை, பெருநாள் தொழுகைகளை பாங்கு, இகாமத் இன்றி நடாத்தியமை, பாங்கின் முன் ஸலவாத் இன்றி பாங்கைக் கற்றுத்தந்தமை போன்றவற்றைக் குறிப்பிட முடியும். ஆதாரம் : ஸியானது ஸஹீஹ் முஸ்லிம் (பக்.2-5) 

அடுத்ததாக நபியின் காலத்தில் இல்லாத ஒரு வழி முறையை தொழுகை, மற்றும் இதர வணக்கங்கள் போலாக்கி ஓதி வருவதை, கொண்டாடுவதை உலகில் அங்கீகரித்தவர்கள் யார்? நபித்தோழர்கள் முதல் அவர்களின் வழி வந்த எந்த இமாம்மும் அதனை அங்கீகரிக்கவில்லையே! மவ்லிதைப் பாடுவோர் அறிவால் விளக்கத்தால் முன்னோர்களான நபித்தோழர்கள், இமாம்களை விடவும் சிறந்தவர்களா? இதனால் தான் இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் : 

وما لم يكن يومئذ دينا فلا يكون اليوم دينا ( الاعتصامللشاطبي )


அந்தக்காலத்தில் மார்க்கமாக இல்லாமல் இருந்தது இந்தக்காலத்திலும் மார்க்கமாக இருக்க முடியாது (எனக் கூறினார்கள்) அல் இஃதிஸாம்


உங்களுக்கு ஓர் வேண்டுகோள் 

மவ்லிதை ஓதி, மீலாத் விழா நடத்தும் சகோதரர்களே! முதலாவதாக உங்கள் நடைமுறையால் நபி (ஸல் ) அவர்களை நேசியுங்கள். எப்படித் தொழுதார்கள்? எவ்வாறு திருமணம் செய்தார்கள்? அல்லது எப்படி திருமணம் செய்யச் சொன்னார்கள்? எவ்வாறு ஆடை அணியச் சொன்னார்கள்? எவ்வாறு இல்லற வாழ்வில் ஈடுபடும்படி கூறினார்கள்.? குழந்தைகளை எவ்வாறு வளர்த்தார்கள்? அண்டை அயலவர்கள், ஏழைகள் விருந்தினர்கள், எதிரிகள், குழந்தைகள், மனைவியர் ஆகியோருடன் எவ்வாறு நடந்து கொண்டார்கள்? தாடி எவ்வாறு வளர்த்தார்கள்? மீசை எவ்வாறு வைத்திருந்தார்கள்? எவ்வாறு உறங்கினார்கள்? உணவருந்தினார்கள்? நீர் பருகினார்கள்? காலை, மாலையில் என்ன ஃதிக்ர்" பிரார்த்தனை ஓதினார்கள். என்பன போன்ற நூற்றுக்கணக்கான நபியின் உண்ணத நடைமுறையை உங்கள் அன்றாட வாழ்வில் கடைப்பிடியுங்கள். அப்படி செய்தால், உங்கள் வாழ்வில் நடக்கும் பெரிய மீலாத் விழா வேறொன்றுமில்லை. 

குறிப்பு: இவ்வாய்வறிக்கையானது பல கட்டுரைகளின் தொகுப்பாகவும் இன்னும் மேலதிக பல தகவல்களை உள்ளடக்கியதாகவும் அமையபெற்றுள்ளது. 


துணை நின்றவை

@ அல்-குர்ஆன்.

@ புஹாரி, முஸ்லிம், திர்மிதி, அஹ்மத்.

@ மவாசீனுஸ்ஸுஃபிய்யா

ஆசிரியர்: அலி பின் அஸ்ஸெய்யித் அல்வஸீஃபி.

@ ஹுக்முல் இஹ்திஃபால் பில் மவ்லிதின் நபவிய்யி

ஆசிரியர்: இப்ராஹீம் பின் முஹம்மத் அல் ஹுகைய்யில்.

@ அல்குதூதுல் அரீழா

ஆசிரியர்: முஹிப்புத்தீனுல் கதீப் (ரஹ்)

@ அஷ்ஷீஆ வஸ்ஸுன்னா

ஆசிரியர்: இஹ்ஸான் இலாஹி ழஹீர் (ரஹ்) அவர்கள்.

@ அத்தபர்ருக் அன்வாஉஹு வஅஹ்காமுஹு

ஆசிரியர்: நாஸிர் பின் அப்துர்ரஹ்மான் பின் முஹம்மத் அல்ஜுதய்யிஃ.

@ இக்திழாஉஸ் ஸிராதில் முஸ்தகீம்

ஆசிரியர்: இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள்.
Previous Post Next Post