தவறாகப் புரியப்பட்ட நபித்தோழர் முஆவியா (ரழி)

- முஜாஹித் இப்னு ரஸீன்

முஆவியா (ரழி) அவர்களுடைய வாழ்க்கை வரலாறு சற்று விரிவாக ஆராயப்பட வேண்டியதொன்றாகும். 

பொதுவாக நபித்தோழர்கள் அனைவரும் ஏனையவர்களை விட சிறப்புடையவர்கள் என்பதனாலும், ஈமானிலும், நல்லமல்களிலும் ஏனையவர்களைக் காட்டிலும் முன்னணியில் திகழ்பவர்கள் என்பதனாலும் அவர்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கை வரலாறும் ஆராயப்பட்டு அவர்களிடமுள்ள நல்ல முன்மாதிரிகள் அவர்களுக்குப் பின்னால் படிப்பினைக்கு வைக்கப்பட வேண்டும். இதுவே நபித்தோழர்களின் வரலாறுகளைப் படிப்பதிலிருக்கும் ஏற்றமிகு நோக்கமாகும். 

ஆனால் இதற்கு மாற்றமாக நபித்தோழர்களின் வரலாறு பற்றி ஆராயமுற்பட்ட சிலரால் குறிப்பிட்ட சில நபித்தோழர்கள் பற்றிய செய்திகள் தவறாகப் புரியப்பட்டு, நபித்தோழர்களை அவமதிக்கும் வகையில் அவர்களின் வரலாறு பிழையாக எழுதப்பட்டு, இன்றுள்ள பாடவிதானங்களிலும் நுழைக்கப்பட்டிருக்கின்றன. பிழையாக எழுதப்பட்ட இவ்வரலாறுகளைப் படிக்கும் மாணவர்கள் மத்தியிலும் குறிப்பிட்ட சில நபித்தோழர்கள் தொடர்பாகப் பிழையான அபிப்பிராயங்கள் ஏற்பட்டிருக்கின்றன. 

நபித்தோழர் முஅவியா (ரழி) அவர்களுடைய வரலாறும் இவ்வாறுதான் தவறாக எழுதப்பட்டு, அவர் மீது மாசு பூசும் வகையில் முன்வைக்கப்பட்டிருக்கின்றது. ஆகவே இக்கட்டுரை மூலம் அவருடைய சரியான வரலாற்றை வெளிக்கொணர்வதோடு, அவர் மீதான தப்பபிப்பிராங்களை அகற்றி, அவருக்குள்ள சிறப்புக்களை ஆதாரபூர்வமாக சமர்ப்பிக்க முயற்சிக்கின்றோம்.

முஆவியா (ரழி) அவர்கள்தான் கிலாபத் ஆட்சி முறையில் மன்னர் ஆட்சி முறையைக் கொண்டு வந்தவர் என்று கூறி அவரின் ஆட்சி முறையானது பலராலும் பலவாறும் விமர்சிக்கப்படுகின்றது. 

ஆட்சி முறை இவ்வாறுதான் இருக்கவேண்டுமென்று பிரத்யேகமான எந்த முறையையும் இஸ்லாம் குறிப்பிட்டுக் கூறவில்லை. யார் ஆட்சி செய்தாலும் அவ்வாட்சிக்கு யாப்பாக அல்குர்ஆனும், அஸ்ஸுன்னாவும் இருக்கவேண்டுமென்பதுவே ஆட்சி தொடர்பில் இஸ்லாம் வலியுறுத்துகின்ற விதிமுறையாகவிருக்கின்றது. 

நபியவர்களுக்குப்பின்னால் ஆட்சிக்கு வந்த அபூபக்ர் (ரழி), உமர் (ரழி) போன்ற கலீபாக்கள் தெரிவு செய்யப்பட்ட விதங்களிலிருந்து இதை அறிந்து கொள்ளலாம். நபியவர்களுக்குப் பின்னால் வந்த நால்வரின் ஆட்சியும் நபித்துவத்தின் கீழ் அமைந்ததாகும். அதைக் கீழ்வரும் ஹதீஸ் சுட்டிக்காட்டுகின்றது.

سنن أبى داود 4648 – حَدَّثَنَا سَوَّارُ بْنُ عَبْدِ اللَّهِ حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ بْنُ سَعِيدٍ عَنْ سَعِيدِ بْنِ جُمْهَانَ عَنْ سَفِينَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « خِلاَفَةُ النُّبُوَّةِ ثَلاَثُونَ سَنَةً ثُمَّ يُؤْتِى اللَّهُ الْمُلْكَ – أَوْ مُلْكَهُ – مَنْ يَشَاءُ

நுபுவ்வத்தின் ஆட்சியானது முப்பது வருடங்களாகும். பின்னர் அல்லாஹ், தான் நாடியவருக்கு தனது ஆட்சியைக் கொடுப்பான். அறிவிப்பவர் : ஸபீனா
ஆதாரம்: அபூதாவுத் 4648

நான்கு கலீபாக்களின் ஆட்சியையும் இந்த ஹதீஸ்  சூசகமாக சிறப்பித்துக் கூறுகின்றது. 

நான்கு கலீபாக்களின் ஆட்சிக்காலத்தை சிறப்பித்து ஹதீஸ்கள் வந்திருப்பதைப் போலவே அதற்குப்பின்னால் வந்த முஅவியா (ரழி) அவர்கள் போன்றோரின் ஆட்சிக் காலங்களையும் நபியவர்கள் புகழ்ந்து கூறியுள்ளார்கள் . 

கீழ்வரும் ஹதீஸ் இதை அழகாகக் கூறுகின்றது.

المعجم الكبير للطبراني 10975

حَدَّثَنَا أَحْمَدُ بن النَّضْرِ الْعَسْكَرِيُّ، حَدَّثَنَا سَعِيدُ بن حَفْصٍ النُّفَيْلِيُّ، حَدَّثَنَا مُوسَى بن أَعْيَنَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ فِطْرِ بن خَلِيفَةَ، عَنْ مُجَاهِدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:أَوَّلُ هَذَا الأَمْرِ نُبُوَّةٌ وَرَحْمَةٌ، ثُمَّ يَكُونُ خِلافَةً وَرَحْمَةً، ثُمَّ يَكُونُ مُلْكًا وَرَحْمَةً، ثُمَّ يَكُونُ إِمَارَةً وَرَحْمَةً، ثُمَّ يَتَكادَمُونَ عَلَيْهِ تَكادُمَ الْحُمُرِ، فَعَلَيْكُمْ بِالْجِهَادِ، وَإِنَّ أَفْضَلَ جهادِكُمُ الرِّبَاطُ، وَإِنَّ أَفْضَلَ رباطِكُمْ عَسْقَلانُ.

“இந்தப் பொறுப்பு நபித்துவமாகவும் அருளாகவும் ஆரம்பித்தது. பின்னர் அது கிலாபத்தாகவும் அருளாகவும் பின்னர் மன்னராட்சியாகவும் அருளாகவும் மாறும்...” என்று நபியவர்கள் கூறினார்கள்.

ஷீஆக்கள், ஆட்சியை மையமாக வைத்து இஸ்லாத்தைப் போதிப்பவர்கள் போன்றோர் விமர்சிக்கின்ற அளவுக்கு முஅவியா (ரழி) அவர்களிடம் தவறான நடைமுறைகள் எதுவும் இருக்கவில்லை. மாற்றமாக மார்க்க விளக்கமுள்ள பெரும் நபித்தோழர்களுள் ஒருவராக அவர் காணப்பட்டார்.

முஆவியா ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மார்க்க அறிவு

அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரழி),

அப்துல்லாஹ் இப்னு  உமர் (ரழி),

அபூதர் அல் கிபாரி (ரழி) போன்ற

சுமார் 23 நபித்தோழர்கள் அவரிடமிருந்து ஹதீஸ்களை அறிவித்துள்ளதை வரலாற்றில் காண முடிகின்றதென்றால் நபியவர்களிடமிருந்து குறிப்பிடத்தக்களவிலான ஹதீஸ்களை அவர் கேட்டிருக்கின்றார் என்பதை அதிலிருந்து அறிய முடிவதுடன், மார்க்கம் பற்றிய விளக்கமுள்ள ஒருவராகவும் அவர் இருந்துள்ளார் என்பதையும்  விளங்க முடிகின்றது.

முஆவியா (ரழி) அவர்கள் அறிவித்துள்ள ஹதீஸ்கள் ஸஹீஹுல் புஹாரி, ஸஹீஹ் முஸ்லிம் உள்ளிட்ட பிரபல்யமான ஆறு ஹதீஸ் நூற்களிலும், அவை தவிர்ந்த ஏனைய ஹதீஸ் நூற்களிலும் இடம் பெற்றுள்ளன. 

ஆனால் நம்மில் பலருக்கு அவர் அறிவித்துள்ள ஓரெயொரு ஹதீஸைக் கூட தெரியாது. ஆனால் அபூஹுரைரா (ரழி) அவர்கள் போன்ற ஏனைய நபித்தோழர்கள் அறிவித்துள்ள ஹதீஸ்கள் ஏதோ ஒரு வகையில் பெரும்பாலும் நமக்கு அறிமுகமாகியிருக்கின்றன. இதை ஷீஆக்களின் தாக்கங்களில் ஒன்றெனக் கூறலாம்.

ஷீயாக்களின் தாக்கம்

குழந்தைகளுக்குப் பெயர் சூட்டும் போது ஆண் குழந்தையின் பெயருடன் ‘அலீ’ யைச் சேர்த்துக் கொள்வதையும், பெண் குழந்தையின் பெயருடன் ‘பாதிமா’ என்ற சொல்லை சேர்த்துக் கொள்வதையும் சமூகத்தில் காண்கிறோம். 

ஆனால் ‘யஸீத்’ என்ற பெயரையோ, ‘முஆவியா’ என்ற பெயரையோ யாரும் தமது குழந்தைகளுக்கு சூட்டுவதில்லை. 

இதற்குக் காரணம்தான் என்ன என்று தேடுவோமானால், இந்நபித் தோழர்கள் பற்றிய ஷீஆக்களின் விசமக் கருத்துக்கள் நம்மை அறியாமலேயே நம்முள் நுழைந்து விட்டன அதன் காரணமாக அவர்களுக்கு நாம் வழங்கவேண்டிய அந்தஸ்தும், மதிப்பும் நமதுள்ளங்களை விட்டும் அகற்றப்பட்டுவிட்டன என்பதுவே இதற்குக் காரணமெனலாம். 

இதன் காரணமாகவும், நபித்தோழர்களின்  வராலாறு  பற்றிப் பேசும் பல ஆய்வுகளில் முஆவியா (ரழி) அவர்களுக்கு உரிய இடம் வழங்கப்படவில்லையென்பதாலும் முஆவியா (ரழி) அவர்கள் பற்றிய வரலாற்றை பரந்தளவில் ஆய்வுசெய்து, சமூகத்துக்கு அதை எடுத்துக் கூறவேண்டிய தேவையேற்பட்டிருக்கின்றது.

முஆவியா (ரழி) பற்றி  நபித்தோழர்களிலேயே மிகச் சிறந்த நிர்வாகத்திறமை வாய்ந்த ஓர் ஆட்சியாளர் என்று நபித்தோழர்களே போற்றும் அளவுக்கு தகைமை வாய்ந்தவராக அவர் இருந்துள்ளதை வரலாறு கூறுகின்றது. தனது நிர்வாகத்திறமையினால் சிரியாவை சுமார் 20 வருடங்கள் ஆட்சி செய்துள்ளார். 

தனது நிலைப்பாட்டிற்கு எதிராக சிரியாவில் எவரும் கிளர்ந்தெழாதளவுக்கு அற்புதமான நிருவாகத் திறமையினை அவர் கொண்டிருந்தார். 

இதைப் பார்த்து உமர் (ரழி) அவர்களே ஆச்சரியப்பட்டிருக்கின்றார்கள்.

முஆவியா (ரழி) அவர்களின் குடும்பம்

முஆவியா (ரழி) அவர்களின் தந்தை அபூஸுப்யான் (ரழி) அவர்கள். தாயின் பெயர் ஹிந்தா(ரழி). யஸீத் எனும் பெயரில் ஒரு மகன் இருந்ததைப் போல அதே பெயர் கொண்ட சகோதரர் ஒருவரும் முஆவியா (ரழி) அவர்களுக்கிருந்துள்ளார். இவரின் முழுக் குடும்பமுமே இஸ்லாத்தைத் தழுவியது.

முஆவியா (ரழி) அவர்களின் சிறப்பு

التاريخ الكبير 1405 قال لي بن أزهر يعني أبا الأزهر نا مروان بن محمد الدمشقي نا سعيد نا ربيعة بن يزيد سمعت عبد الرحمن بن أبي عميرة المزني يقول سمعت النبي صلى الله عليه و سلم يقول في معاوية بن أبي سفيان اللهم اجعله هاديا مهديا واهده واهد به

யா அல்லாஹ் முஅவியாவை நேர்வழி காட்டுபவராகவும், நேர்வழி பெற்றவராகவும் ஆக்குவாயாக. அவருக்கு நேர் வழி காட்டுவாயக. அவர் மூலம் (மக்களுக்கு) நேர்வழிகாட்டுவாயாக. அறிவிப்பவர் : அப்துர்ரஹ்மான் பின் அபீ உமைரா
ஆதாரம் : அத்தாரீஹுல் கபீர் 1405

முஆவியா (ரழி) அவர்களுக்கு நேர்வழி காட்டச் சொல்லியும், அவர் மூலம் (மக்களுக்கு) நேர்வழி காட்டச் சொல்லியும் நபியவர்கள் அல்லாஹ்விடம் பிரார்தித்திருக்கின்றார்கள் என்றால் நபியவர்களின் இந்த துஅவை அல்லாஹ் நிச்சயமாக ஏற்றுக் கொண்டிருப்பான். எனவே அவர் மூலம் பலர் நேர்வழி பெற்றிருப்பர் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது. 

ஆகவே மக்களுக்கு நேர்வழிகாட்டும் ஒரு வழிகாட்டியாக முஆவியா (ரழி) அவர்கள் இருந்துள்ளார்கள். அவரின் சிறப்பைத் தெரிந்து கொள்ள இதுவொன்றே போதுமெனலாம்.

முஆவியா (ரழி) அவர்களின் சிறப்பை எடுத்துச் சொல்கின்ற மற்றொரு செய்தியாகக் கீழ்வரும் ஹதீஸ் அமைகின்றது.

صحيح مسلم 6565 – حَدَّثَنَا عِكْرِمَةُ حَدَّثَنَا أَبُو زُمَيْلٍ حَدَّثَنِى ابْنُ عَبَّاسٍ قَالَ كَانَ الْمُسْلِمُونَ لاَ يَنْظُرُونَ إِلَى أَبِى سُفْيَانَ وَلاَ يُقَاعِدُونَهُ فَقَالَ لِلنَّبِىِّ -صلى الله عليه وسلم- يَا نَبِىَّ اللَّهِ ثَلاَثٌ أَعْطِنِيهِنَّ قَالَ « نَعَمْ ». قَالَ عِنْدِى أَحْسَنُ الْعَرَبِ وَأَجْمَلُهُ أُمُّ حَبِيبَةَ بِنْتُ أَبِى سُفْيَانَ أُزَوِّجُكَهَا قَالَ « نَعَمْ ». قَالَ وَمُعَاوِيَةُ تَجْعَلُهُ كَاتِبًا بَيْنَ يَدَيْكَ. قَالَ « نَعَمْ ». قَالَ وَتُؤَمِّرُنِى حَتَّى أُقَاتِلَ الْكُفَّارَ كَمَا كُنْتُ أُقَاتِلُ الْمُسْلِمِينَ. قَالَ « نَعَمْ ».

முஸ்லிம்கள் அபூஸுப்யானைப் பார்க்காமலும், அவருடன் சேர்ந்து அமராமலும் இருந்தனர். அப்போது அபூஸுப்யான் நபியவர்களிடம் ‘அல்லாஹ்வின் நபியே மூன்று விடயங்களை எனக்குத் தருவீர்களா?’ என்று கேட்டார். அதற்கு நபியவர்கள் ‘ஆம்’ என்று பதில் கூறினார்கள். ‘என்னிடமுள்ள அரபுகளில் மிகச்சிறந்த, மிக அழகான  உம்மு ஹபீபா பின்த் அபீஸுப்யானை உங்களுக்கு மணமுடித்துத் தருகின்றேன்’ என்றார். அதற்கு நபியவர்கள் ‘ஆம்’ என்று பதில் கூறினார்கள். ‘(எனது மகன்) முஆவியாவை உங்களுடைய எழுத்தாளராக வைத்துக் கொள்ளுங்கள்’ என்றார். அதற்கு நபியவர்கள் ‘ஆம்’ என்று பதில் கூறினார்கள். ‘ முஸ்லிம்களுடன் நான் போரிட்டதைப் போல காபிர்களோடும் போராட என்னைத் தலைவராக்குங்கள்’ என்றார். அதற்கு நபியவர்கள் ‘ஆம்’ என்று பதில் கூறினார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹிப்னு அப்பாஸ் (ரழி)
ஆதாரம் : முஸ்லிம் 6565

குறைஷிகளை வழி நடாத்திய அபூஸுப்யானின் மகன் என்பதால் எழுத்தாற்றல், பேச்சாற்றல், நிருவாகத்திறமை போன்ற சிறந்த தேர்ச்சிகளை முஆவியா (ரழி) அவர்கள் பெற்றிருந்தார்கள். 

இத்தகைய விவேகமான ஒருவரைத்தான் அதியுயர் நம்பிக்கை, நாணயத்திற்குரிய பணியான ‘வஹீயை எழுதும் பணிக்கு’ நபியவர்கள் அமர்த்தியுள்ளார்கள். 

நபியவர்களுக்கருகிலிருந்து வஹீயை எழுதியவரென்பதால் அதிகமான ஹதீஸ்களை நபியவர்களிடமிருந்து அவர் கேட்டிருக்க வாய்ப்பிருக்கின்றது. அவருக்கு முன்னர் இஸ்லாத்தை ஏற்று, காலம் முழுவதையும் நபியவர்களோடு கழித்த அபூஹுரைரா (ரழி) போன்றோரைக் கூட நபியவர்கள் வஹீ எழுத அமர்த்தவில்லை. எனவே முஆவியா (ரழி) அவர்கள் எல்லா வகையிலும் சிறந்தவராகவும், தகுந்தவராகவும் இருந்துள்ளார்கள் என்பதை இதிலிருந்து விளங்கலாம்.

முஆவியா (ரழி) அவர்கள் அறிவித்துள்ள ஹதீஸ்கள்

முஆவியா (ரழி) அவர்கள் அறிவித்துள்ள ஹதீஸ்களைக் கவனிப்போமானால் மார்க்க விடயங்களில் அவருக்கிருந்த பேணுதலையும், கூர்மையான அவருடைய அவதானிப்பையும் அறிந்து கொள்ள முடிவதுடன் மதிப்பு, மரியாதை, அந்தஸ்து என்பவற்றுக்கப்பால் ஒர் அற்ப விடயமாயினும் அதையும் சுட்டிக்காட்டும் துணிவு, தவறுகளை ஏற்றுக் கொள்ளும் பணிவு போன்ற அதியுயர் பண்புகளையும் காணமுடியும்.

صحيح مسلم 5700 – عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ أَنَّهُ سَمِعَ مُعَاوِيَةَ بْنَ أَبِى سُفْيَانَ عَامَ حَجَّ وَهُوَ عَلَى الْمِنْبَرِ وَتَنَاوَلَ قُصَّةً مِنْ شَعَرٍ كَانَتْ فِى يَدِ حَرَسِىٍّ يَقُولُ يَا أَهْلَ الْمَدِينَةِ أَيْنَ عُلَمَاؤُكُمْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- يَنْهَى عَنْ مِثْلِ هَذِهِ وَيَقُولُ « إِنَّمَا هَلَكَتْ بَنُو إِسْرَائِيلَ حِينَ اتَّخَذَ هَذِهِ نِسَاؤُهُمْ ».

ஒரு முறை ஹஜ் காலம் ஒன்றின் போது முஆவியா (ரழி) அவர்கள் (மதீனாவுக்கு வந்து வந்து) மிம்பரில் ஏறி (மதீனாவின் அமீருடைய) மகனின் கையிலிருந்த சில முடிகளைத் தனது கையில் எடுத்தவராக ‘மதீனா வாசிகளே உங்கள் அறிஞர்கள் எங்கே! ‘பனூஇஸ்ரவேலர்கள் அழிந்தது இதை அவர்களின் பெண்கள் எடுத்த போதுதான்’ என்று கூறியவர்களாக நபியவர்கள் இதை தடைசெய்வதை நான் கேட்டுள்ளேன். என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஹுமைதிப்னு அப்திர்ரஹ்மான்
ஆதாரம் : முஸ்லிம் 5700

ஒட்டு முடி வைப்பதென்பது இன்றைக்கு சர்வசாதாரணமான ஒன்றாகவே பார்க்கப்படுகின்றது. அதனால்தான் ஒட்டு முடி வைக்கப்பட்டுள்ள தொப்பிகளை சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரும் அணிவதைக் காண்கின்றோம். ஆனால் முஆவியா (ரழி) அவர்கள் மிம்பரில் சுட்டிக் காட்டும் அளவிற்குப் பாரதூரமானதாக அதை விளங்கியிருந்தார்கள். ஒட்டு முடி வைத்தவர்களை அல்லாஹ் சபித்தான் எனும் ஹதீஸ்களை நாம் அறிந்துள்ளோம். ஆனால் இதே ஒட்டு முடியை வைத்ததன் காரணமாக அல்லாஹ் ஒரு சமூகத்தையே அழித்துள்ளான் என்பதை முஆவியா (ரழி) அறிவிக்கும் இந்த ஹதீஸிலிருந்து தெரிந்துகொள்ள முடிகின்றது. 

முஆவியா (ரழி) அவர்கள் இரத்தத்தையே கவனிப்பவரல்ல என்றுதான் வரலாற்றில் நமக்குக் காட்டியுள்ளார்கள். ஆனால் அவர்களோ ஒட்டு முடியில் கூட மிகக் கவனமாக இருந்துள்ளார்கள் என்பதை இதிலிருந்து விளங்க முடிகின்றது. அவர்கள் அறிவித்திருக்கும் மற்றுமொரு ஹதீஸைக் கீழே அவதானிப்போம்.

صحيح مسلم 2436 – عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَامِرٍ الْيَحْصَبِىِّ قَالَ سَمِعْتُ مُعَاوِيَةَ يَقُولُ إِيَّاكُمْ وَأَحَادِيثَ إِلاَّ حَدِيثًا كَانَ فِى عَهْدِ عُمَرَ فَإِنَّ عُمَرَ كَانَ يُخِيفُ النَّاسَ فِى اللَّهِ عَزَّ وَجَلَّ سَمِعْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- وَهُوَ يَقُولُ « مَنْ يُرِدِ اللَّهُ بِهِ خَيْرًا يُفَقِّهْهُ فِى الدِّينِ ». وَسَمِعْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- يَقُولُ « إِنَّمَا أَنَا خَازِنٌ فَمَنْ أَعْطَيْتُهُ عَنْ طِيبِ نَفْسٍ فَيُبَارَكُ لَهُ فِيهِ وَمَنْ أَعْطَيْتُهُ عَنْ مَسْأَلَةٍ وَشَرَهٍ كَانَ كَالَّذِى يَأْكُلُ وَلاَ يَشْبَعُ ».

உமர் (ரழி) அவர்கள் காலத்தில் அறிவிக்கப்பட்ட ஹதீஸ்களைத் தவிர்ந்த எனைய ஹதீஸ்களை அறிவிப்பதை விட்டும் நான் உங்களை எச்சரிக்கின்றேன். எனெனில் உமர் (ரழி) அவர்கள் அல்லாஹ்வுக்காக மக்களை அச்சத்தோடு வைத்திருந்தார். ‘அல்லாஹ் யாருக்கு நலவை நாடுகின்றானோ அவருக்கு மார்க்கத்தில் விளக்கத்தைக் கொடுப்பான். நான் சொத்துக்களைப் பாதுகாப்பவன்தான். எவருக்கு நான் மனமுவந்து (பைத்துல் மாலிலிருந்து) சொத்துக்களைக் கொடுக்கின்றேனோ அவருக்கு அதில் அபிவிருத்தி செய்யப்படும், கேட்டதனாலும், எதிர்பார்த்ததன் காரணத்தாலும் யாருக்காவது நான் சொத்துக்களைக் கொடுத்தால் அவர் உணவுண்டும் வயிறு நிறையாதவரைப் போன்றவராவார்.’ என நபியவர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன். என்று முஆவியா (ரழி) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹிப்னு ஆமிர் அல் யஹ்ஸபி
ஆதாரம் : முஸ்லிம் 2436

முஆவியா (ரழி) அவர்கள் காலத்தில் ரோம் பிரதேசம் போன்ற பல தேசங்கள் வெற்றிகொள்ளப்பட்டன. அதனால் அப்பிரதேசங்களிலிருந்து கைப்பற்றப்பட்ட கணிசமான கனீமத் பொருட்கள் முஆவியா (ரழி) அவர்களிடம் குவிந்து கிடந்ததனால் பலரும் முஆவியா (ரழி) அவர்களிடம் வந்து உதவி கோரத் தொடங்கினர். இந்த வேளையில்தான் முஆவியா (ரழி) அவர்கள் இந்த ஹதீஸை மக்களுக்கு எத்தி வைக்கின்றார்கள்.

முஆவியா (ரழி) அவர்களிடம் எத்தகைய ! பேணுதல் காணப்பட்டது என்பதை கீழ்வரும் செய்தியிலிருந்து அறியலாம்.

المستدرك  443 – عن أبي عامر عبد الله بن يحيى قال : حججنا مع معاوية بن أبي سفيان فلما قدمنا مكة أخبر بقاص يقص على أهل مكة مولى لبني فروخ فأرسل إليه معاوية فقال : أمرت بهذه القصص ؟ قال : لا قال : فما حملك على أن تقص بغير إذن ؟ قال : ننشىء علما علمناه الله عز و جل فقال معاوية : لو كنت تقدمت إليك لقطعت منك طائفة ثم قام حين صلى الظهر بمكة فقال : قال النبي صلى الله عليه و سلم : إن أهل الكتاب تفرقوا في دينهم على اثنتين و سبعين ملة و تفترق هذه الأمة على ثلاث و سبعين كلها في النار إلا واحدة و هي الجماعة و يخرج في أمتي أقوام تتجارى بهم تلك الأهواء كما يتجارى الكلب بصاحبه فلا يبقى منه عرق و لا مفصل إلا دخله و الله يا معشر العرب لئن لم تقوموا بما جاء به محمد صلى الله عليه و سلم لغير ذلك أحرى أن لا تقوموا به 

நாங்கள் முஆவியா (ரழி) அவர்களுடன் ஹஜ் செய்தோம். நாம் மக்காவை அடைந்த போது பனூ பரூஹ் கோத்திரத்தின் அடிமையொருவர் மக்கா வாசிகளுக்கு பலதரப்பட்ட கதைகளைச் சொல்லிவருவதாக அறிவிக்கப்பட்டது. முஆவியா (ரழி) அந்நபரிடம் ஒருவரையனுப்பி வரவைத்து ‘இந்தக் கதைகளைச் சொல்லுமாறு நீர் ஏவப்பட்டுள்ளீரா?’ என விசாரித்தார். அதற்கவர் ‘இல்லை’ என்று பதில் சொன்னார். ‘அனுமதியில்லாமல் இவ்வாறு கதைசொல்ல உம்மைத் தூண்டியது எது’ என்று முஆவியா (ரழி) அந்நபரிடம் கேட்டார்கள். ‘அல்லாஹ் வழங்கிய அறிவை மக்களுக்கு நாம் எத்தி வைக்கின்றோம்’ என்று கூறினார். ‘ஹஜ் காலமல்லாத வேறொரு காலத்தில் நான் வந்திருந்தால் உன்னை வெட்டியிருப்பேன்’ என்று அவரிடம் முஆவியா (ரழி) அவர்கள் கூறினார்கள். பின்னர் மக்காவில் ழுஹரைத் தொழுதுவிட்டு எழுந்த முஆவியா (ரழி) அவர்கள் ‘வேதக்காரர்கள் தமது மார்க்கத்தில் 72 பகுதிகளாகப் பிரிந்தார்கள். இந்த சமுதாயம் 73 பிரிவுகாகப் பிரியும். அதில் ஒன்றைத் தவிர மற்றைய அனைத்தும் நரகம் செல்லும். அந்த ஒன்று ஒரு ஜமாஅத்தாகும். வெறிபிடித்த நாய்.. போன்று மனோ இச்சைகளால் துவண்டு போன ஒரு கூட்டம் எனது சமூகத்திலிருந்து வெளிப்படும். அவர்களின் நரம்பு நாளங்களிலெல்லாம், மூட்டுக்களிலெல்லாம் மனோ இச்சைகள் நுழைந்திருக்கும். அரபு சமுதாயமே முஹம்மத் (ஸல்) அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தை நீங்கள் நிலைநாட்டவில்லையென்றால் மற்றையவர்கள் செய்யாததை வைத்து உங்களால் குறைகூற முடியாது’ என நபியவர்கள் கூறினார்கள் என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: அபூஆமிர் அப்துல்லாஹிபனு யஹ்யா
ஆதாரம் : ஹாகிம்443

‘அழைப்புப் பணியை நீங்களே செய்யவேண்டும். மனோ இச்சைக்குக் கட்டுப்படக் கூடாது’ என்றெல்லாம் முஆவியா (ரழி) அவர்கள் பேசியுள்ளார்கள் என்றால் எந்த அளவிற்கு மார்க்கத்தில் உறுதியாகவும், பேணுதலாகவும் அவர் இருந்திப்பார் என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

صحيح مسلم 7032 – عَنْ أَبِى سَعِيدٍ الْخُدْرِىِّ قَالَ خَرَجَ مُعَاوِيَةُ عَلَى حَلْقَةٍ فِى الْمَسْجِدِ فَقَالَ مَا أَجْلَسَكُمْ قَالُوا جَلَسْنَا نَذْكُرُ اللَّهَ. قَالَ آللَّهِ مَا أَجْلَسَكُمْ إِلاَّ ذَاكَ قَالُوا وَاللَّهِ مَا أَجْلَسَنَا إِلاَّ ذَاكَ. قَالَ أَمَا إِنِّى لَمْ أَسْتَحْلِفْكُمْ تُهْمَةً لَكُمْ وَمَا كَانَ أَحَدٌ بِمَنْزِلَتِى مِنْ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- أَقَلَّ عَنْهُ حَدِيثًا مِنِّى وَإِنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- خَرَجَ عَلَى حَلْقَةٍ مِنْ أَصْحَابِهِ فَقَالَ « مَا أَجْلَسَكُمْ ». قَالُوا جَلَسْنَا نَذْكُرُ اللَّهَ وَنَحْمَدُهُ عَلَى مَا هَدَانَا لِلإِسْلاَمِ وَمَنَّ بِهِ عَلَيْنَا. قَالَ « آللَّهِ مَا أَجْلَسَكُمْ إِلاَّ ذَاكَ ». قَالُوا وَاللَّهِ مَا أَجْلَسَنَا إِلاَّ ذَاكَ. قَالَ « أَمَا إِنِّى لَمْ أَسْتَحْلِفْكُمْ تُهْمَةً لَكُمْ وَلَكِنَّهُ أَتَانِى جِبْرِيلُ فَأَخْبَرَنِى أَنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يُبَاهِى بِكُمُ الْمَلاَئِكَةَ ».

பள்ளியிலிருந்த மக்கள் கூட்டத்திடம் சென்ற முஆவியா (ரழி) அவர்கள் ‘உங்களை அமர்த்தியது எது?’ என்று வினவிய போது ‘அல்லாஹ்வை நினைவு படுத்துவதற்காக அமர்ந்துள்ளோம்.’ என அவர்கள் கூறினர். ‘அல்லாஹ்வுக்காகவா அமர்ந்தீர்கள்? அதுவல்லாத வேறொன்றுமில்லையா’ என்று அவர்களிடம் முஆவியா (ரழி) அவர்கள் கேட்டார்கள். ‘அல்லாஹ் மீது ஆணையாக வேறெதற்காகவும் நாம் அமரவில்லை’ என்று அவர்கள் கூறினார்கள். அதற்கு முஆவியா (ரழி) அவர்கள் ‘பொய் சொன்னீர்கள் என்பதற்காக நான் உங்களிடம் சத்தியம் செய்து கேட்கவில்லை. என்னைப் போன்று நபியவர்களோடு நெருக்கமாகவிருந்து குறைந்த ஹதீஸ்களை அறிவித்தவர் யாருமில்லை. ஒரு முறை நபியவர்கள் கூட்டமாகவிருந்த தன் தோழர்களிடம் சென்று ‘உங்களை அமர்த்தியது எது?’ என்று கேட்ட போது ‘இஸ்லாத்தின் பால் எங்களுக்கு வழிகாட்டியதற்காகவும், அதை எங்களுக்கு அருளாக்கியதற்காகவும் அல்லாஹ்வை நினைவு படுத்தி, அவனைப் புகழ்வதற்காக அமர்ந்துள்ளோம்.’ என்று அத்தோழர்கள் கூறினர். அதற்கு நபியவர்கள் ‘அல்லாஹ்வுக்காகவா அமர்ந்தீர்கள்? அதுவல்லாத வேறொன்றுமில்லையா’ எனக்கேட்டார்கள். ‘அல்லாஹ் மீது ஆணையாக வேறெதற்காகவும் நாம் அமரவில்லை’ என்று அத்தோழர்கள் கூறினார்கள். அதற்கு  நபியவர்கள் ‘பொய் சொன்னீர்கள் என்பதற்காக நான் உங்களிடம் சத்தியம் செய்து கேட்கவில்லை. ஏனென்றால் அல்லாஹ் மலக்குமார்களிடம் உங்களைப் பற்றிப் பொருமையாகப் பேசுவதாக ஜிப்ரீல் (அலை) என்னிடம் கூறினார்’. என்று நபியவர்கள் சொன்னதாக முஆவியா (ரழி) கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஸஈதுல் குத்ரி (ரழி)
ஆதாரம் : முஸ்லிம்7032

அல்லாஹ்வை  நினைவுபடுத்துபவர்களைப் பார்த்து  அல்லாஹ் பெருமைப் படுகின்றான் என்ற ஹதீஸ்களை நாம் கேட்டிருக்கின்றோம். ஆனால் நபித்தோழர்களில் ஒரு கூட்டத்தினரைப் பற்றி மலக்குமார்களிடம் அல்லாஹ் பொருமையாகப் பேசுவதாக வருகின்ற செய்தியை முஆவியா (ரழி) அவர்கள் அறிவித்துள்ள இந்த ஹதீஸிலிருந்துதான் நாம் தெரிந்து கொள்கின்றோம்.

முஆவியா (ரழி) அவர்களுடைய படையும், அவருடைய மகன் யஸீத் அவர்களுடைய படையும் சுவனம் செல்லுமென்று நபியவர்கள் முன்னறிவிப்பு

முஆவியா (ரழி) அவர்களுடைய படையும், அவருடைய மகன் யஸீத் அவர்களுடைய படையும் சுவனம் செல்லுமென்று நபியவர்கள் முன்னறிவிப்புச் செய்துள்ளார்கள். அந்த சுபசோபனத்தை அறிவிக்கும் ஹதீஸ் கீழுள்ளவாறு இடம் பெறுகின்றது.

صحيح البخاري 2924 – أَنَّ عُمَيْرَ بْنَ الْأَسْوَدِ الْعَنْسِيَّ حَدَّثَهُ أَنَّهُ أَتَى عُبَادَةَ بْنَ الصَّامِتِ وَهُوَ نَازِلٌ فِي سَاحَةِ حِمْصَ وَهُوَ فِي بِنَاءٍ لَهُ وَمَعَهُ أُمُّ حَرَامٍ قَالَ عُمَيْرٌ فَحَدَّثَتْنَا أُمُّ حَرَامٍ أَنَّهَا سَمِعَتْ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ أَوَّلُ جَيْشٍ مِنْ أُمَّتِي يَغْزُونَ الْبَحْرَ قَدْ أَوْجَبُوا قَالَتْ أُمُّ حَرَامٍ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَنَا فِيهِمْ قَالَ أَنْتِ فِيهِمْ ثُمَّ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوَّلُ جَيْشٍ مِنْ أُمَّتِي يَغْزُونَ مَدِينَةَ قَيْصَرَ مَغْفُورٌ لَهُمْ فَقُلْتُ أَنَا فِيهِمْ يَا رَسُولَ اللَّهِ قَالَ لَا
உபாதா இப்னு ஸாமித்(ரலி) ‘ஹிம்ஸ்’ கடற்கரையில் தம் கட்டிடம் ஒன்றில் (தம் மனைவி) உம்மு ஹராம்(ரலி) அவர்களுடன் தங்கியிருந்தபோது அவர்களிடம் நான் சென்றேன். அப்போது உம்மு ஹராம்(ரலி) எம்மிடம் அறிவித்தார்கள்.“நபி(ஸல்) அவர்கள், ‘என் சமுதாயத்தினரில் முதலில் கடலில் (சென்று ஸைப்ரஸ் தீவை)  போர் புரியும் படையினர் சொர்க்கம் புகுவதற்கான தகுதியை  ஏற்படுத்திக்கொண்டனர்’ என்று கூறினார்கள். இதைச் செவியுற்ற நான், ‘இறைத்தூதர் அவர்களே! நான் அவர்களில் ஒருத்தியா?’ என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், ‘நீங்கள் அவர்களில் ஒருவர் தாம்’ என்று பதிலளித்தார்கள். பிறகு நபி(ஸல்) அவர்கள், ‘என் சமுதாயத்தினரில் சீசருடைய நகரத்தின் (பழைய கான்ஸ்டான்டி நோபிள் அல்லது தற்போதைய இஸ்தான்பூலின்) மீது படையெடுக்கும் முதலாவது படையினர் மன்னிக்கப்பட்டவர்கள் ஆவர்’ என்று கூறினார்கள். ‘அவர்களில் நானும் ஒருத்தியா? இறைத்தூதர் அவர்களே!’ என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், ‘இல்லை’ என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : உமைர் இப்னு அஸ்வத் அல் அன்ஸி(ரஹ்) ஆதாரம் : புஹாரி 2924

மத்தியதரைக் கடலில் முதல் கடல் யுத்தம் செய்த படையினர் முஆவியா(ரழி) அவர்களின் படையாகும். அதைப்போலவே கைஸருடைய நகருக்குள் சென்று போர் புரிந்த பெருமை யஸீத் அவர்களுடைய படைக்கு சேர்கின்றது. அப்படியாயின் இந்த ஹதீஸில் ‘என் சமுதாயத்தினரில் முதலில் கடலில் (சென்று)  போர் புரியும் படையினர் சொர்க்கம் புகுவதற்கான தகுதியை தகுதியை  ஏற்படுத்திக்கொண்டனர்‘ என்று நபியவர்கள் கூறியது முஆவியா (ரழி) அவர்களின் படையையும், ‘என் சமுதாயத்தினரில் சீசருடைய நகரத்தின் (பழைய கான்ஸ்டான்டி நோபிள் அல்லது தற்போதைய இஸ்தான்பூலின்) மீது படையெடுக்கும் முதலாவது படையினர் மன்னிக்கப்பட்டவர்கள் ஆவர்’ என்று நபியவர்கள் கூறியது முஆவியா (ரழி) அவர்களின் மகன் யஸீத் அவர்களுடைய படையையும் குறிக்கின்றது .

இஸ்லாமிய வரலாற்றில் பல்வேறு சிறப்புக்களுக்குரிய இவ்விரு படையெடுப்புக்களையும் முன்னின்று வழி நடாத்திய பெருமை முஆவியா (ரழி) அவர்களுக்கும், அவர்களின் மகன் யஸீத் அவர்களுக்குமே உரித்தாகும். அபூஅய்யூப் அல் அன்ஸாரீ (ரழி), அப்துல்லாஹிப்னு உமர் (ரழி), அப்துல்லாஹிப்னு ஸுபைர் (ரழி) போன்ற முக்கியமான நபித்தோழர்களும் இப்படைகளிலிருந்துள்ளார்கள். எனவே மிகப்பெரிய வரலாற்றுச் சிறப்பொன்று நம்மை விட்டும் மறைக்கப்பட்டுள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

முஆவியா (ரழி) அவர்களைப் பற்றி நபித்தோழர்கள் சொன்னவை

அப்துல்லாஹிப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் முஆவியா (ரழி) அவர்களைப் பின்வருமாறு புகழ்ந்து கூறியுள்ளார்கள்.

التاريخ الكبير  1405 عن معمر قال سمعت همام بن منبه عن بن عباس قال ما رأيت أحدا أخلق من معاوية
முஆவியாவை விட நற்குணமிக்க ஒருவரை நான் காணவில்லை.
ஆதாரம் : அத்தாரீஹுல் கபீர் 1405

உமர் (ரழி) அவர்கள் கூறும் போது

….اللَّهُمَّ إِنِّى أُشْهِدُكَ عَلَى أُمَرَاءِ الأَمْصَارِ وَإِنِّى إِنَّمَا بَعَثْتُهُمْ عَلَيْهِمْ لِيَعْدِلُوا عَلَيْهِمْ وَلِيُعَلِّمُوا النَّاسَ دِينَهُمْ وَسُنَّةَ نَبِيِّهِمْ -صلى الله عليه وسلم- وَيَقْسِمُوا فِيهِمْ فَيْئَهُمْ وَيَرْفَعُوا إِلَىَّ مَا أَشْكَلَ عَلَيْهِمْ مِنْ أَمْرِهِمْ…’

‘…..யா அல்லாஹ் நகரங்களுக்கு பொறுப்பான தலைவர்கள் விடயத்தில் உன்னை நான் சாட்சியாக்குகின்றேன். அந்தத் தலைவர்களை நான் அனுப்பியதெல்லாம் மக்களிடையே நீதியை நிலை நாட்டுவதற்கும், மார்க்கத்தையும், நபியின் நடைமுறையையும் மக்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்கும், யுத்தத்தில் கைப்பற்றப்பட்ட பொருட்களை மக்களுக்குப் பங்கிட்டுக் கொடுப்பதற்கும், மக்களிடையே ஏற்படும் சச்சரவுகளை எனக்கு எத்தி வைப்பதற்கும்தான்…’
அறிவிப்பவர்: அபூதல்ஹா
ஆதாரம் :முஸ்லிம் 1286

உமர் (ரழி) அவர்களுடைய ஆட்சிக் காலத்திலும் முஆவியா (ரழி) அவர்கள் சிரியாவுக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்தார் என்பதால் உமர் (ரழி) அவர்களுடைய இந்த துஆவில் அவரும் அடங்குகின்றார்

உமர் (ரழி), உத்மான் (ரழி) ஆகியோரின் ஆட்சிக் காலம் முழுவதும் முஆவியா (ரழி) அவர்கள் சிரியாவுக்கு கவர்னராகவிருந்துள்ளார்கள். அதற்குப் பிற்பட்ட காலங்களிலும் நீண்ட காலமாக சிரியாவை நிருவகித்துள்ளார்கள். இக்காலப் பகுதிகளில் எந்த வகையிலும் சிரியாவாசிகள் அவருடைய ஆட்சியைக் குறைகூறவோ, அதற்கெதிராகக் கிளர்ந்தெழவோ எதுவும் செய்யவில்லை. அவரின் தலைசிறந்த நிருவாகத் திறமைதான் இதற்குக் காரணமாகும். 

இதை முஆவியா (ரழி) அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள். 

‘என் தோழர்கள் எப்படியென்றால் அவர்கள் பறந்தால் நான் விழுவேன். நான் பறந்தால் அவர்கள் விழுவார்கள்’  அதாவது சரியான முறையில் தான் மக்களை நிருவகித்துள்ளதை அவர்கள் இவ்வாறு சுட்டிக்காட்டுகின்றார்கள்.

ஒரு முறை நபித்தோழர்களெல்லாம் ரோம், பாரசீக மன்னர்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கின்றார்கள். அதைப் பார்த்த உமர் (ரழி) அவர்கள் :
عن سعيد المقبري قال قال عمر بن الخطاب تذكرون كسرى وقيصر ودهاءهما وعندكم معاوية
‘முஆவியா உங்களுடன் இருக்கும் போதா நீங்கள் ரோம், பாரசீக மன்னர்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கின்றீர்கள்’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஸஈதுல் மக்பரீ (ரஹ்)
ஆதாரம் : தாரீஹுத் தபரீ (3 – 264)

(تاريخ بغداد – 1 – 209 )
عن الزهري قال أخبرني عروة بن الزبير ان المسور بن مخرمة أخبره انه قدم وافدا على معاوية بن أبي سفيان فقضى حاجته ثم دعاه فاخلاه فقال يا مسور ما فعل طعنك على الأئمة فقال المسور دعنا من هذا وأحسن فيما قدمنا له قال معاوية لا والله لتكلمن بذات نفسك والذي تعيب علي قال المسور فلم أترك شيئا أعيبه عليه إلا بينته له قال معاوية لا بريء من الذنب فهل تعد يا مسور مالي من الإصلاح في أمر العامة فان الحسنة بعشر أمثالها أم تعد الذنوب  وتترك الحسنات قال المسور لا والله ما نذكر إلا ما ترى من هذه الذنوب قال معاوية فانا نعترف لله بكل ذنب أذنبناه فهل لك يا مسور ذنوب في خاصتك تخشى أن تهلكك إن لم يغفرها الله قال مسور نعم قال معاوية فما يجعلك أحق ان ترجو المغفرة مني فوالله لما الي من الإصلاح أكثر مما تلي ولكن والله لا أخير بين أمرين بين الله وبين غيره إلا اخترت الله تعالى على ما سواه وإنا على دين يقبل الله فيه العمل ويجزي فيه بالحسنات ويجزي فيه بالذنوب إلا أن يعفو عمن يشاء فانا احتسب كل حسنة عملتها بأضعافها وأوازي أمورا عظاما لا أحصيها ولا تحصيها من عمل الله في إقامة صلوات المسلمين والجهاد في سبيل الله عز و جل والحكم بما انزل الله تعالى والأمور التي لست تحصيها وان عددتها لك فتفكر في ذلك قال المسور فعرفت ان معاوية قد خصمني حين ذكر لي ما ذكر قال عروة فلم يسمع المسور بعد ذلك يذكر معاوية إلا استغفر له

அலீ (ரழி) அவர்களுடைய மரணத்திற்குப் பின்னால் முஆவியா (ரழி) அவர்களுடைய ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த போது அவர்களினால் விளைந்த சில தவறுகளை கூறிய மிஸ்வரிப்னு மஹ்ரமா என்ற தாபிஈ  தனது தேவையொன்றுக்காக முஆவியா (ரழி) அவர்களிடம் செல்கிறார். அப்போது முஆவியா (ரழி) அவர்கள் அவரிடம் ‘மிஸ்வரே தலைவர்களைப் பற்றி நீர் என்ன குறைகளைக் கூறினீர்’ என்று கேட்டார்கள். அதற்கவர் ‘அதை விடுங்கள். நாம் எதற்காக வந்தோமோ அது இதை விட நல்லது’ என்று சொன்னார். அதற்கு முஆவியா (ரழி) அவர்கள் ‘அல்லாஹ் மீது ஆணையாக நீங்கள் என் மீது குறைகண்ட அனைத்து விடயங்களை இங்கு சொல்ல வேண்டும்’ என்று கூறினார்கள். ‘நான் எதையெல்லாம் அவரிடமுள்ள குறையாகக் கண்டேனோ அவையனைத்தையும் அவரிடம் கூறினேன்’ என்று மிஸ்வர் கூறினார். அதற்கு முஆவியா (ரழி) அவர்கள் ‘நான் பாவங்களிலிருந்து நிரபராதியல்ல. மிஸ்வரே எனது நல்ல காரியங்களை விட்டு விட்டு எனது தனிப்பட்ட பாவங்களை நீர் கணக்கிடுகிறீரா அல்லது ஆட்சிப்பொறுப்பில் நான் விட்ட தவறுகளை நீர்  கணக்கிடுகிறீரா’ எனக் கேட்டார்கள். அதற்கவர் ‘அல்லாஹ் மீது ஆணையாக உமது தனிப்பட்ட பாவங்களைப் பற்றி நான் பேசவில்லை’ என்று கூறினார். அதற்கு முஆவியா (ரழி) அவர்கள் ‘நாம் செய்த அனைத்துப் பவங்களையும் அல்லாஹ்வுக்காக ஏற்றுக் கொள்கின்றோம். மிஸ்வரே அல்லாஹ் மன்னிக்காவிட்டால் உனக்கு அழிவை ஏற்படுத்தும் என்று நீ பயப்படக் கூடிய  தனிப்பட்ட பாவங்கள் உங்களுக்கு உண்டா’ எனக்  கேட்டார்கள். அதற்கு மிஸ்வர் ‘ஆம்’ என்று கூறினார். அதற்கு முஆவியா (ரழி) அவர்கள் ‘என்னை விட  உங்களை அல்லாஹ் மன்னிக்க வேன்டும் என்று ஏன் நீர் ஆசைப்படுகிறீர். உமக்குள்ள பொறுப்புக்களை விட எமக்குள் பொறுப்புக்கள் அதிகமாகும். அல்லாஹ் மீது ஆணையாக அல்லாஹ்வா அல்லது ஏனையவைகளா என்று வருகின்ற போது அல்லாஹ்வையே நான் தேர்ந்தெடுத்தேன். நன்மைகள் அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, கூலி வழங்கப்பட்டு, அல்லாஹ்வால் மன்னிக்கப்பட்டாலே தவிர தீமைகளுக்காகத் தண்டனை வழங்கப்படும் மார்க்கத்தில் நாம் இருக்கின்றோம்…….’ என முஆவியா (ரழி) அவர்கள் மிஸ்வரிடம் கூறினார்கள். அன்றிலிருந்து மிஸ்வரிடம் முஆவியா (ரழி) அவர்களைப் பற்றி கூறப்பட்டால் அவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுபவராக  இருந்தார்.
அறிவிப்பவர் : உர்வதிப்னு ஸுபைர்
ஆதாரம்:தாரீஹு பக்தாத்

தனது குறை சுட்டிக்காட்டப்பட்ட போது பணிவாக அவற்றை ஏற்றுக் கொண்டு, ஆணவமின்றி தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச் சாட்டுகளுக்கு பதில் கூறிய முறையிலிருந்து முஆவியா (ரழி)  அவர்களின் இறையச்சத்தையும் நிருவாகத் திறமையையும் காணலாம்.

ஆயிஷா (ரழி) அவர்கள் முஆவியா (ரழி) அவர்களைப் பற்றிக் கூறும் போது ‘எனக்கு நீண்ட ஆயுளிருந்தால் அதில் ஒரு பகுதியை முஅவியாவுக்குக் கொடுக்க ஆசைப்படுகின்றேன்.’ என்று கூறனார்கள்.

ஒரு முறை அப்துல்லாஹிப்னு முபாரக் (ரஹ்)அவர்களிடம் உமரிப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்கள் சிறந்தவரா? முஆவியாவா சிறந்தவரா? என்று கேட்கப்பட்டது. அதற்கவர் ‘உமரிப்னு அப்துல் அஸீஸ் போன்ற ஆயிரம் பேர்தான் வந்தாலும் அவர்களை விட நபியவர்களோடு இருந்த முஆவியா (ரழி) அவர்களின் மூக்கினுள் நுழைந்த தூசி சிறந்தது’ என்று கூறினார்.

تاريخ الأمم والرسل والملوك- الطبري – (3  265)
عن علي بن محمد قال حدثنا أبو محمد الأموي قال خرج عمر بن الخطاب إلى الشأم فرأى معاوية في موكب يتلقاه وراح إليه في موكب فقال له عمر يا معاوية تروح في موكب وتغدو في مثله وبلغني أنك تصبح في منزلك وذوو الحاجات ببابك قال يا أمير المؤمنين إن العدو بها قريب منا ولهم عيون وجواسيس فأردت يا أمير المؤمنين أن يروا للإسلام عزا فقال له عمر إن هذا لكيد رجل لبيب أو خدعة رجل أريب فقال معاوية يا أمير المؤمنين مرني بما شئت أصر إليه قال ويحك ما ناظرتك في أمر أعيب عليك فيه إلا تركتني ما أدري آمرك أم أنهاك

உமர் (ரழி) அவர்கள் சிரியாவுக்குச் சென்ற போது அலங்கரிக்கப்பட்ட ஒட்டகமொன்றில் சில படை வீரர்கள் புடை சூழ, முஆவியா (ரழி) அவர்கள் வருவதைக் கண்டார்கள். அப்போது உமர் (ரழி) அவர்கள் முஅவியாவைப் பார்த்து ‘ஆடம்பரமாக அலங்கரிக்கப்பட்ட ஒட்டகத்தில் வருகிறீர் போகிறீர் ஆனால் வறியவர்கள் உன் கதவடியில் காத்துக்கிடப்பதாக செய்தி கிடைத்துள்ளதே’ என்று கேட்டார்கள்.’ அதற்கு முஆவியா (ரழி) அவர்கள் முஃமின்களின் தலைவரே எதிரிகள் நமக்கருகிலுள்ளனர். அவர்களின் ஒற்றரர்களும், உளவாளிகளும் நமை அவதானித்துக் கொண்டிருக்கின்றனர். இஸ்லாத்துக்கென்று ஒரு கௌவரம் இருக்கின்றது, முஸ்லிம்கள் இப்படியெல்லாம் உயர்தரமானவர்கள் என்று அவர்களுக்குக் காட்டுவதற்காகத்தான் நான் இவ்வாறு செய்கின்றேன்.’ எனக் கூறினார்கள். அதற்கு உமர் (ரழி) அவர்கள் ‘இது சிந்தனை மிக்க ஒருவர் செய்யும் சதியாகும் அல்லது விவேகியொருவரின் தந்திரமாகும்’ என்று கூறினார்கள். அதற்கு முஆவியா (ரழி) அவர்கள் ‘முஃமின்களின் தலைவரே நீங்கள் எதை ஏவினாலும் அதைச் செய்ய நான் தயாராகவுள்ளேன்’ என்று கூறினார்கள். அதற்கு உமர் (ரழி) அவர்கள் ‘நான் எதை உமக்கு குறையாய் கண்டாலும் தர்க்கித்து என்னை மிகைத்து விடுகின்றீர் அதனால் உமக்கு எதை ஏவுவது? எதைத் தடுப்பது? என்பது பற்றி எனக்கும் ஒன்றும் புரியவில்லை’ எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ முஹம்மத் அல் உமவீ
ஆதாரம் : தாரீஹுத் தபரீ (3 – 265)

முஆவியா மற்றும் அலி ரலியல்லாஹு அன்ஹும் அவர்களுக்கு மத்தியில் ஏற்பட்ட பிரச்சனையும் இருவரின் பேணுதலும்

ஒரு முறை முஆவியா (ரழி) அவர்கள் இரவு நேரத்தில் கையில் தீப்பந்தமொன்றை ஏந்தியவர்களாகப் பள்ளிக்கு எதையோ தேடினார்கள். ஏன் வந்தீர்கள் என்று விசாரிக்கப்பட்ட போது ‘பகலில் எச்சில் துப்பியது நினைவுக்கு வந்தது அதை அகற்றுவதறகாக வந்தேன்’ என்று கூறினார்கள். மார்க்க விடயங்களில் முஆவியா (ரழி) அவர்களுக்கிருந்த பற்றுதலை இது காட்டுகின்றது.

عن عبد الله بن بريدة قال :’ خرج معاوية فرآهم قياما لخروجه ، فقال لهم : اجلسوا فإن رسول الله صلى الله عليه وسلم قال : من سره أن يقوم له بنو آدم ، و جبت له النار
ஒரு முறை முஆவியா (ரழி) அவர்கள் வெளியேறிய வேளை அவரின் வருகைக்காக சிலர் எழுந்து நின்றதைக் கண்ட முஆவியா (ரழி) அவர்கள் அவர்களைப் பார்த்து ‘அமருங்கள். ஆதமுடைய மக்கள் தனக்காக எழுந்து நிற்பது யாருக்கு சந்தோசமளிக்கின்றதோ அவனுக்கு நரகம் கடைமையாகி விட்டது’ என்று நபியவர்கள் கூறினார்கள் என்று முஆவியா (ரழி) அவர்கள் கூறினார்கள்.

மரியாதைக்காக எழுந்து நிற்பது தலைவர்களுக்கு செய்ய வேண்டிய மிகப்பெரும் தொண்டு என்று உலகமே அதை ஒரு சம்பிரதாயமாக மாற்றியுள்ள போது இவ்வாறான நடைமுறைகள் ஏற்கத்தக்கதல்ல என இஸ்லாம் கூறுகின்றது. எனவே தனக்கு முன்னால் அவ்வாறான ஒரு தவறு நடைபெற்ற போது தயவு, தாட்சண்யமின்றி முஆவியா (ரழி) அவர்கள் உடனேயே அதைத் தடுத்திருக்கிறார்கள் என்றால் எவ்வளவுக்கு மார்க்க விடயத்தில் மிகுந்த அவதானிப்போடு அவர்கள் இருந்திருக்க வேண்டும் என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

ஆட்சிக்கு ஆசைப்பட்டுத்தான் முஆவியா (ரழி) அவர்கள் அலீ (ரழி) அவர்களோடு பேரிட்டார்கள் என்று கூறப்படுவதைப் பார்க்கின்றோம். ஆனால் உண்மை அதுவல்ல. இரு தரப்பு வாதங்களும் நியாயமாகவே இருந்தன. மாறுபட்ட சந்தர்ப்ப சூழல்களே அசாதாரண நிலைமைகளைத் தோற்றுவித்தன என்பதை வரலாற்றைப் படிக்கும் போது புரிந்து கொள்ளலாம். முஆவியா (ரழி) அவர்கள் ஆட்சியை மையமாக வைத்து அலீ (ரழி) அவர்களோடு போரிடவில்லை அதைப் பின்வரும் செய்தி தெளிவாகச் சொல்கின்றது.

البداية والنهاية – (7 – 260وخرج أبو الدرداء وأبو أمامة فدخلا على معاوية فقالا له يا معاوية علام تقاتل هذا الرجل فوالله إنه أقدم منك ومن أبيك إسلاما وأقرب منك إلى رسول الله صلى الله عليه و سلم وأحق بهذا الأمر منك فقال أقاتله على دم عثمان وإنه آوى قتلته فاذهبا إليه فقولا له فليقدنا من قتلة عثمان ثم أنا أول من بايعه من أهل الشام

அபூ தர்தா(ரழி), அபூ உமாமா(ரழி)  ஆகிய இருவரும் முஆவியா (ரழி) அவர்களிடம் சென்று ‘முஆவியாவே உம்மை விடவும், உம் தந்தையை விடவும் இஸ்லாத்தால் முந்திய, நபியவர்களுக்கு உம்மை விட மிக நெருக்கமான, ஆட்சிக்கு உம்மை விடத் தகுதியான இந்த மனிதருடனா நீர் போர் செய்யப் போகின்றீர்’ எனக் கேட்டார்கள். அதற்கு முஆவியா (ரழி) அவர்கள் ‘உத்மான் (ரழி) அவர்கள் கொலை செய்யப்பட்டதற்காகவே நான் அவரோடு போர் செய்யப் போகின்றேன். ஏனென்றால் அவர் உத்மான் (ரழி) அவர்களைக் கொலை செய்தவர்களுக்கு புகலிடம் கொடுத்துள்ளார். நீங்களிருவரும் அவரிடம் சென்று உத்மான் (ரழி) அவர்களைக் கொலை செய்தவர்களைத் தண்டிக்க சொல்லுங்கள். அவ்வாறு அவர் செய்தால் ஷாம் தேசத்திலிருந்து முதன் முதலில் அவருக்கு பைஅத் செய்வது நானே’ என முஆவியா (ரழி) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ தர்தா(ரழி) ஆதாரம் : தாரீஹு திமிஷ்க்

அலீ (ரழி) அவர்கள் பற்றி முஆவியா (ரழி) அவர்கள் என்ன நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார்கள் என்பதை அறிந்து கொள்ள கீழ் வரும் செய்தியொன்றே போதுமெனலாம்.

.تاريخ دمشق – (24  402)عن محمد بن غسان الكندي قال دخل ضرار بن ضمرة النهشلي على معاوية فقال له معاوية صف لي عليا يا ضرار قال أو تعفيني من ذلك يا أمير المؤمنين قال أقسمت عليك لتفعلن قال أما إذا أتيت فنعم كان والله بعيد المدى شديد القوى يتفجر العلم من جوانبه وتنطق الحكمة على لسانه يستوحش من الدنيا وزهرتها ويأنس بالليل ووحشته كان طويل الفكرة غزير الدمعة يقلب كفه ويخاطب نفسه وكان فينا كأحدنا يقربنا إذا أتيناه ويجيبنا إذا دعوناه ونحن مع قربه منا وتقريبه إيانا لا نبتديه لعظمته ولا نكلمه لهيبته فإن تبسم فعن مثل اللؤلؤ المنظوم يقدم أهل الدين ويفضل المساكين لا يطمع القوي في باطله ولا يأيس الضعيف من عدله فأقسم بالله لرأيته في بعض أحواله وقد أرخى الليل سدوله وغارت نجومه وهو قابض على لحيته في محرابه يتململ كما يتململ السليم ويبكي بكاء الوالد الحزين وهو يقول في بكائه يا دنيا يا دنيا إلي تعرضت أم لي تشوقت هيهات هيهات لا حان جنبك قد بتتك ثلاثا لا رجعة لي فيك عيشك حقير وخطرك يسير وعمرك قصير آه من يعد الدار وقلة الزاد ووحشة الطريق قال فانهملت دموع معاوية على خديه حتى كفكفها بكمه واختنق القوم جميعا بالبكاء فقال معاوية رحم الله أبا الحسن فلقد كان كذلك فكيف جزعكم عليه يا ضرار قال جزع من ذبح ولدها في حجرها فما تسكن حرارتها ولا ترقى دمعتها قال فقال معاوية لكن أصحابي لو سئلوا عني بعد موتي ما أخبروا بشئ مثل هذا

ழிறார் இப்னு லம்றா அவர்கள் ஒரு முறை முஆவியா (ரழி) அவர்களிடம் சென்ற போது ‘அலீ (ரழி) அவர்களைப் பற்றி சொல்லுங்களேன்’ என முஆவியா (ரழி) அவர்கள் ழிறார் இப்னு லம்றாவிடம் கேட்டார்கள். அதற்கு ழிறார் இப்னு லம்றா ‘முஃமின்களின் தலைவரே இந்த விடயத்தில் எனக்குக் கொஞ்சம் விட்டுத் தருவீர்களா?’ எனக் கேட்டார். அதற்கு முஆவியா (ரழி) அவர்கள் ‘உமக்கு விட்டுத் தரமாட்டேன் நீர் சொல்லத்தான் வேண்டும்’ என்றார்கள். ‘நீங்கள் அப்படிச் சொல்கிறீர்கள் என்றால், நான் சொல்கிறேன்’ என்று தொடர்ந்த ழிறார் இப்னு லம்றா

‘அல்லாஹ் மீது ஆணையாக அவர் ஒரு வீரராகவிருந்தார்.

அவரைச் சூழ அறிவு ஊற்றெடுத்துப்பாயும் அவரின் நாக்கில் ஞானம் பேசும்.

உலக இன்பங்களைத் துறந்தொதுங்கி இரவின் மடியில் இறைவனை வணங்கி அவர் ஆறுதலடைவார்.

அதிகம் சிந்திப்பார். அதிகமாயழுது கண்ணீர் வடிப்பார்.

தவறு செய்தவரைப் போல தனது கைகளைப் பிசைந்து, புரட்டிக் கொண்டிருப்பார்.

தினமும் தன்னை சுய விசாரணை செய்வார்.

அவர் எங்களில் ஒருவராகவே இருந்தார். அவரிடம் நாம் சென்றால் எம்மை அருகிலெடுத்து அரவணைத்துக் கொள்வார். அவரோடு மிக அந்நியோனியமாக நாமிருந்ததாலும், நம்முடன் இரண்டற அவர் கலந்திருந்ததாலும் அவரை நாம் அழைத்தால் எமக்கு பதிலளிப்பார். அவரின் அந்தஸ்துக்காகவும், அவர் மீதான மரியாதைக்காகவும் அவரோடு பேசமாட்டோம்.

புன்னகைத்தால் அவர் மின்னும் மாணிக்கம் போன்றிருப்பார்.

மார்க்க முடையோரை முற்படுத்துவார்.

ஏழைகளை சிறப்பிப்பார். ஒரு பலசாலி தனது வேலைகளை பலத்தை வைத்து அவரிடம் நிறைவேற்றிக் கொள்ள எண்ணமாட்டான். ஓரேழை அவரின் நீதியில் நம்பிக்கையிழக்கமாட்டான்.

இரவு தன் இருளையிழுத்துக் கொள்ள, விண்மீன்கள் விழிக்கும் வேளையில் மிஹ்ராபிலிருந்து கொண்டு தனது தாடியைப் பிடித்துக் கொண்டு அவர் அழுத சந்தர்ப்பங்களை நான் கண்டுள்ளேன். கவலை மிகுந்த ஒரு தந்தை அழுவதைப் போன்று அவர் அழுவார். ‘ஓ உலகமே! உன்பால் என்னை வசீகரிக்கப் பார்க்கின்றாயா? அது தூரமாகிவிட்டது! உன்பால் மீண்டும் நான் திரும்பமாட்டேன் ஏனென்றால் உனக்கு நான் முத்தலாக் சொல்லி விட்டேன். நான் உன்னில் வாழ்வது கேவலமானது. உனது அச்சுறுத்தல் அற்பமானது உனது ஆயுள் குறுகியது. கட்டுச்சாதனம் குறைந்ததும், ஆபத்துக்கள்  நிறைந்ததும், மிக நீளமானதுமான பிரயாணம் இது……..’

என்று சொல்லிக் கெண்டிருக்கும் போது,  முஆவியா (ரழி) அவர்கள் விம்மி அழத் துவங்கினார்கள்.  அவர்களின் கன்னங்கள் இரண்டிலும் கண்ணீர் வழிந்தோடியது. தன் கைகளால் முஆவியா (ரழி) அவர்கள் அதைத் துடைக்க முனைந்தார்கள். இதைப் பார்த்துக் கொண்டிருந்த அவையோர் அனைவரும் அழுது விம்மத்துவங்கினர். அப்போது முஆவியா (ரழி) அவர்கள் ‘ஹஸனின் தந்தை அலியிற்கு  அல்லாஹ் அருள்பாளிப்பானாக! ழிறாரே நீங்கள் இப்போது எப்படிப்பட்ட வேதனையை உணர்கிறீர்’ எனக் கேட்டார்கள். அதற்கு ழிறார் அவர்கள் ‘தன் மடியில் வைத்து தன் குழந்தை அறுக்கப்பட்டால் அந்தத் தாய் எவ்வாறு பரிதவித்து,  கண்ணீர் சிந்திக் கதறுவாளோ அதைப் போன்றதொரு வேதனயைத்தான் நான் இப்போது உணர்கின்றேன்’ என்றார். அதற்கு முஆவியா (ரழி) அவர்கள் ‘எனது மரணத்தின் பின்பு எனது தோழர்களிடம் என்னைப் பற்றிக் கேட்கப்பட்டால் இதைப்போன்று கூறமாட்டார்கள்’ என்று கூறினார்கள். 

அறிவிப்பவர் : முஹம்மத் பின் கஸ்ஸான், ஆதாரம் : தாரீஹு திமிஷ்க்

அலீ (ரழி) அவர்களோடு முஆவியா (ரழி) எந்தவிதமான குரோதமோ, பொறாமையோ கொண்டிருக்கவில்லை என்பதற்கு இச்சம்பவம் மிகப்பெரும் சான்றாக அமைகின்றது.

மரணிக்கும் தருவாயில் முஆவியா (ரழி) அவர்கள் பின்வருமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள்.

تاريخ دمشق – (59 216)اللهم إني قد أحببت لقاءك فأحب لقائي

யா அல்லாஹ் உன்னை சந்திக்க நான் விரும்புகின்றேன். எனது சந்திப்பை நீ விரும்புவாயாக.
அறிவிப்பவர் : உபதா பின் நுஸைஆதாரம் : தாரீஹு திமிஷ்க்

தான் ஒரு சாம்பிராஜ்யத்தின் தளபதியாகவிருந்தாலும் அதிகாரத்தோடு, ஆணவத்தோடு இருக்காமல் எந்நேரமும் அல்லாஹ்வைப் பயந்தவராகவும், இஸ்லாத்துக்காகவே வாழ்ந்தவர்களாகவும் முஆவியா (ரழி) அவர்கள் இருந்துள்ளார்கள் என்பதை இதிலிருந்து விளங்கலாம்.

தனது மகனுக்கு ஆட்சிப் பொறுப்பை வழங்கியது எதற்காக என்பதை முஆவியா (ரழி) அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள்.

تاريخ الخلفاء -

1- 182)اللهم إن كنت إنما عهدت ليزيد لما رأيت من فضله فبلغه ما أملت و أعنه و إن كنت إنما حملني حب الوالد لولده و أنه ليس لما صنعت به أهلا فأقبضه قبل أن يبلغ ذلك’

யா அல்லாஹ் யஸீதை நான் ஆட்சிப் பொறுப்பிற்கு அமர்த்தியதெல்லாம் அவரிடமுள்ள சிறப்புக்குத்தான் என்றால் அதில் அவருக்கு உதவி செய்வாயாக! அவ்வாறல்லாமல் தந்தை மகன் பாசத்துக்காகத்தான் நான் அவரை ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தியிருந்தேனாயின் அதைப் பெற முன்னர் அவரைக் கைப்பற்றி விடு’ என்று முஆவியா (ரழி) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அதிய்யா பின் கைஸ்ஆதாரம் : தாரீஹுல் ஹுலபா

முஆவியா (ரழி) அவர்களின் மகன் யஸீத் அவர்களைப் படுமோசமானவராக வரலாற்றில் கூறியுள்ளார்கள். இவையனைத்துமே நூறு வீதம் ஷீஆக்களால் புனைந்துரைக்கப்பட்டதாகும்.

இன்ஷா அல்லாஹ் சந்தர்ப்பம் கிடைக்கும் போது அது பற்றியும் விரிவாக எழுதுவோம்.
Previous Post Next Post