- அஷ்ஷெய்க். அப்துல்லாஹ் அல்-ஜப்ரின் رحمه الله
1) தவ்ஹீத் எனும் ஓரிறைக் கொள்கையை ஏற்றுக்கொண்டு, அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு நட..!
2) இணைவைப்பு, மற்றும் இணைவைப்பாளர்களை விட்டு விலகியே இருந்துகொள்..!
3) நமக்கு வழங்கப்பட்ட சட்டங்களை நமது மனையிச்சையோடு எடை போடாதே..!
4) ஆதாரங்களை முற்படுத்து, அதனையே உன் வழிமுறையாக ஆக்கிக்கொள்..!
5) மார்க்கம் முழுமைபெற்றுவிட்டது; நீயாக எந்த பித்அத்தையும் மார்க்கத்தில் நுழைக்காதே..!
6) இஸ்லாமில் இருந்துகொண்டு கடும்போக்கு வேண்டாம்; அதே சமயம் நடுநிலை என்ற பெயரில் மார்க்கத்தின் விஷயங்களை அலட்சியப்படுத்தாதே..!
7) நபி மூஸா, ஈஸா ஆகியோர் போதித்த மார்க்கம் ஏக இறைவனால் அருளப்பட்டதுதான்; ஆனாலும் அம்மார்க்கங்கள் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே வழங்கப்பட்டிருந்தது.
8) ஈஸா இப்னு மர்யம் عليه السلام அவர்கள் இறைவனின் நல்லடியாரும், தூதரும் ஆவார்; அவரை இறைவனின் மகனென்று சொல்லி எல்லைமீறாதே..!
9) இறைத்தூதர்களை அளவுகடந்து புகழாதே.! ; அதேசமயம் அவர்களை குறைகூறி அலட்சியமும் செய்யாதே..!
10) முஹம்மத் ﷺ அவர்களுக்கு கொடுக்கப்பட்ட இஸ்லாம் அனைவருக்குமான இறுதி மார்க்கமாகும்; அல்லாஹ்வே இதனை கொடுத்தான், அவனே இதனை பாதுகாக்கிறான்.!
11) செயல்கள் விடயத்திலும் கிறிஸ்தவ - யூத மதங்களை விடவும் இஸ்லாம் நடுநிலை வகிக்கிறது.!
உதாரணமாக....
12) யூதர்கள் விவாகரத்தை ஏற்கிறார்கள்; ஆனாலும் கணவன்-மனைவி மீண்டும் சேர்ந்துகொள்வதை ஏற்கவில்லை.!
கிறிஸ்தவர்கள் விவாகரத்தே கிடையாது என்கிறார்கள்.
இஸ்லாமோ கணவன்-மனைவியிடையே (தேவைப்பட்டால்) விவாகரத்து செய்ய உரிமையுண்டு; அதேசமயம் முதல் இரண்டு தடவைகள் மாத்திரம் தாங்கள் கொடுத்த விவாகரத்தை ரத்துசெய்து சேர்ந்து வாழ முடியும் என்கிறது. இவ்வாறாக அவசரத்தில் சிலர் எடுக்கும் முடிவுகளுக்கு மாற்று நடவடிக்கையை இஸ்லாம் தந்துள்ளது.
13) கொலை விடயத்தில் பழிக்குப் பழி வாங்கியே ஆக வேண்டுமென யூதர்கள் கருதுகிறார்கள்.
கிறிஸ்தவர்களோ, தீர்மானமாக மன்னித்தே ஆக வேண்டுமென கருதுகிறார்கள்.
ஆனால், இஸ்லாமோ பாதிக்கப்பட்டவரின் பொறுப்பாளருக்கு, "பழிக்கு பழி/ மன்னிப்பு/ இழப்பீடு வழங்குதல்" என எதையேனும் ஒன்றை தேர்வுசெய்ய அனுமதி வழங்கியுள்ளது.
வழிகெட்ட கூட்டங்களுக்கு மத்தியில் அஹ்லுஸ் ஸுன்னாவினரது நடுநிலை!
14) எத்தனையோ வழிகெட்ட கூட்டங்கள் படைத்தவனை விட்டுவிட்டு, படைப்புகளை வணங்குகின்றது; ஆனால் இஸ்லாமோ படைத்தவனை மாத்திரம் வணங்கச் சொல்கிறது.
15) அல்லாஹ்வை நம்பிக்கைகொண்டு, அவனை பயந்து நடக்கும் நன்மக்களை இறைநேசர்கள் (அவ்லியா) என இஸ்லாம் சொல்வது உண்மைதான்.! ஆனாலும் இறைநேசர்கள் விடயத்தில் எல்லைமீறி போகாதே.! எவரைப்பற்றியாவது அற்புத/கட்டுக் கதைகள் உன் செவிக்கு வந்தால் அவரை "அவ்லியா" என நம்பிவிடாதே..!எச்சரிக்கையாயிரு..!
16) குர்ஆன் -ஸுன்னாவிற்கு மறைவான அர்த்தங்கள் உண்டு, அவை மகான்களுக்கு மட்டுமே தெரியும் என்பதும், வெளிரங்கத்தில் செய்ய வேண்டிய அமல்களை உள்ளத்தில் செய்தால் போதுமென்பதும் வழிகெட்ட "பாத்தினிய்யா" கொள்கையாகும்.!
17) இறுதி நபித்துவத்தை மறுப்பது வழிகெட்ட "காதியானி" கொள்கையாகும்; ஈமானை பறிக்கக்கூடிய இந்த காதியானி காஃபிர்களை நம்பாதே.!
18) நபி ﷺ அவர்கள் கூறிய நேர்வழிபெற்ற கூட்டத்தினர் யாரென்றால், அவர்கள்தான் "அஹ்லுஸ் ஸுன்னா"வினர்; அதாவது குர்ஆன்-ஸுன்னாவை ஸஹாபாக்களின் புரிதலில் புரிந்து நடைமுறைப்படுத்துவோர்.
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸில் 'நேர்வழிபெற்ற கூட்டம் யாரென்றால், "நானும், என் தோழர்களும் எந்த வழிமுறையில் இருந்தோமோ அதனை பின்பற்றுவோர்தாம்" என்று நபியவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.
(பார்க்க : திர்மிதீ 2641; இமாம் அல்பானி, இமாம் இராக்கி رحمهما الله போன்றோர் இச்செய்தியை 'ஸஹீஹ்' என்கிறார்கள்).
விதி விடயத்தில் வழிகெட்ட கூட்டத்தினரும் - அஹ்லுஸ் ஸுன்னாவினரும்..!
19) " 'விதி' என்று எதுவுமே கிடையாது; மனிதனே தன் செயலை உருவாக்குகிறான்" என்ற கொள்கை வழிகெட்ட கத்ரிய்யாக்களுடையது.!
20) "அல்லாஹ்தான் மனிதனை நிர்பந்தத்திற்கும் - கட்டாயத்திற்கும் உட்படுத்துகிறான்; மனிதனுக்கு எவ்வித சுய விருப்பமும் இல்லை.! எல்லாமே விதிப்படிதான்." என்பது வழிகெட்ட ஜபரிய்யா கொள்கையாகும்..!
21) "மனிதன் தன் சுய விருப்பத்துடன் செயலாற்றும் ஆற்றல் பெற்றவன்; ஆனாலும் அவனது விருப்பம் இறைவனின் நாட்டத்தோடு பிணைக்கப்பட்டுள்ளது".என்பது அஹ்லுஸ் ஸுன்னா எனும் நபிவழி நடப்போரின் கொள்கையாகும்; இதுதான் விதி பற்றிய மிகச்சரியான நிலைப்பாடாகும்.
ஈமான் விடயத்தில் வழிகெட்ட கூட்டத்தினரும் - அஹ்லுஸ் ஸுன்னாவினரும்..!
22) செயலுக்கும் - ஈமானுக்கும் சம்பந்தமில்லை என்று சொல்லாதே..! ஏனெனில் இது வழிகெட்ட முர்ஜியாக்களின் கொள்கையாகும்.!
23) ஈமான் என்பது உள்ளத்தில் நம்பிக்கை கொண்டு, நவால் மொழிந்து, கட்டாயமான அமல்களை செய்து, பாவங்களை விட்டு விலகுவதாகும்; பெரும் பாவம் செய்தவர் முஃமின் அல்ல என்பது வழிகெட்ட ஹவாரிஜ், ஹரூரிய்யா, மற்றும் முஃதஸிலா போன்றோரின் கொள்கையாகும்.
24) பெரும்பாவம் செய்பவன் காஃபிராகிவிட்டான், எனவே அவனது உயிரை கொல்வது ஹலால், அவனது சொத்துக்களை அபகரிப்பதும் ஹலால் என்பது ஹவாரிஜ் எனும் பிரிவினரின் கொள்கையாகும்; இக்கொள்கைக்கு எவ்வித ஆதாரமும் இல்லை.!
25) அஹ்லுஸ் ஸுன்னா எனும் நபிவழி நடப்போர் கூறுவதாவது :
الإيمان قول وعمل ونية
• ஈமான் என்பது உள்ளத்தால் நம்பிக்கை கொண்டு, நாவால் மொழிந்து, உடலுறுப்புகளால் நடைமுறைப் படுத்துவதாகும்.
يزيد وينقص
• (நல்ல செயல்களை செய்வதால்) ஈமான் கூடும்; (பாவம் செய்வதால்) ஈமான் குறையும்.
பெரும்பாவம் செய்வதால் ஒருவர் காஃபிராகமாட்டார்; ஆனால் இறைநம்பிக்கையில் குறைபாடுள்ள ஓர் முஃமினாகவே இருப்பார்.
ஸஹாபாக்கள் விடயத்தில் வழிகெட்ட கூட்டத்தினரும் - அஹ்லுஸ் ஸுன்னாவினரும்..!
26) நபியவர்கள் தோழர்களை குறிப்பாக அலீ (ரலியல்லாஹு அன்ஹூ) மற்றும் அவர்களது குடும்பத்தினரை சபிக்காதே.! அவர்களை காஃபிர்கள் என்று சொல்லாதே.! ஏனென்றால், இது ஹவாரிஜ்களின் வழிகெட்ட கொள்கையாகும்.
27) அலீ (ரலியல்லாஹு அன்ஹூ) அவர்களை அல்லாஹ்வின் அளவுக்கு புகழ்வதும், மற்றும் அவரது குடும்பத்தினரை வணங்கலாம் என்பதும் ராஃபிழாக்களின் வழிகெட்ட நிலைப்பாடாகும்.!
28) அஹ்லுஸ் ஸுன்னாவினரை பொறுத்தமட்டில், அவர்கள் ஸஹாபாக்களின் விடயத்தில் நடுநிலையாக இருப்பார்கள்; அல்லாஹ் எந்தளவு ஸஹாபாக்களை புகழ்ந்துள்ளானோ, அவ்வாறே அவர்களும் புகழ்வார்கள்.
அஹ்லுஸ் ஸுன்னாவினர் அலீ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களை அல்லாஹ்வின் அளவுக்கு புகழமாட்டார்கள். அதேசமயம் அபூபக்கர், உமர், உஸ்மான் ஆகிய நபித்தோழருக்கு அடுத்தபடியாக அலீ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள்தாம் சிறந்த நபித்தோழர் என்று கூறுவார்கள்.
இறைநேசர்கள் விடயத்தில் வழிகெட்ட கூட்டத்தினரும் - அஹ்லுஸ் ஸுன்னாவினரும்..!
29) இறைநேசர்களை அல்லாஹ்வின் அளவுக்கு உயர்த்தி புகழாதே..! அவர்களது அடக்கஸ்தலங்களில் ஸஜ்தா செய்யாதே..! இன்னும் அத்தகைய இடங்களை சுற்றி வலம்வருதலோ, அங்கு அறுத்து பலியிடுவதோ மிகப்பெரும் பாவமாகும்.! இறைநேசர்களிடம் துஆ கேட்காதே..! நிச்சயமாக இவையாவும் வரம்புமீறிய, வழிகெட்ட ஸுஃபி போன்ற கூட்டங்களின் ஷிர்க்கான கொள்கைகளாகும்.
30) அதேசமயம் இறைநேசர்கள் என எவருமே இல்லை என்று ஒரேயடியாக மறுக்காதே...! இதுவும் வழிகேடு..!
ஏனென்றால் அல்லாஹு கூறுகிறான் :
أَلَآ إِنَّ أَوۡلِيَآءَ ٱللَّهِ لَا خَوۡفٌ عَلَيۡهِمۡ وَلَا هُمۡ يَحۡزَنُونَ
(நம்பிக்கையாளர்களே!)‘அறிந்து கொள்ளுங்கள் அல்லாஹ்வின் நேசர்க(ளான நல்லடியார்)களுக்கு நிச்சயமாக ஒரு பயமுமில்லை; அவர்கள் துன்பப்படவும் மாட்டார்கள்''.
ٱلَّذِينَ ءَامَنُواْ وَكَانُواْ يَتَّقُونَ
அவர்கள் (இறைவனை) உண்மையாகவே நம்பிக்கை கொண்டு (அவனுக்குப்) பயந்து நடக்கின்றனர்.
(அல்குர்ஆன் 10:62, 63)
31) அல்லாஹ்விற்கு செய்ய வேண்டிய வணக்க வழிபாடுகளை முறையாக செய்து, நல்ல முறையில் வாழ்ந்த ஸாலிஹான மக்கள் ''அவ்லியா (நல்லடியார்கள்)'' என்ற பட்டியலுக்குள் அடங்குவார்கள்; இவர்களை நேசிக்க வேண்டும், ஆனால் அந்த நேசமானது இவர்களது கப்ருகளையோ, (அல்லது) இவர்கள் பயன்படுத்திய இன்னபிற பொருட்களையோ நாம் புனிதப்படுத்தும் அளவிற்கு செல்லக்கூடாது..!
இன்'ஷா அல்லாஹ் ... ஸாலிஹான அமல்களை செய்வதின் மூலமாக நாமும் அல்லாஹ்விடம் சிறந்த நல்லடியாராக மாறுவதற்கு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
மூல நூல் : இஸ்லாமிய மார்க்கத்தில் சமநிலை (அத்துமீறாமலும், அலட்சியப்படுத்தாமலும்)