பனித கஃபதுல்லாஹ்வும் மக்காவும்... அன்றிலிருந்து இன்றுவரை

جهود المملكة العربية السعودية في إعمار المسجد الحرام،..  وإلى عهد خادم الحرمين الشريفين الملك سلمان بن عبدالعزيز آل سعود في  تحت رؤية 2030.

நபி இப்ராஹீம் (அலை  ) அவர்கள் முதன்முதலில் கஃபாவின் கட்டுமானப் பணியைப் பூர்த்தி செய்துவிட்டு இவ்வாறு பிரார்த்தித்தார்கள்.
என் றப்பே! இந்த மக்கா நகரத்தை மனிதர்களுக்கு அபயமளிக்கும் இடமாக ஆக்குவாயாக. அவ்வூர் மக்கள் உனக்கு நன்றிசெலுத்தும் பொருட்டு உணவு,கனிவர்க்கங்களை அவர்களுக்கு நல்குவாயாக. பகரா:  122. 

நபியவர்கள் கூறியுள்ளார்கள்.... 
மஸ்ஜிதுல் ஹராமில் நிறைவேற்றப்படும்படும் ஒரு தொழுகை ஏனைய மஸ்ஜித்களில் நிறைவேற்றப்படும் தொழுகையைவிட ஒருலட்சம் மடங்கு அதிக நன்மை தரக்கூடியதாகும். புகாரி. 

இக்கட்டுரையில் நபியவர்களின் காலத்துக்குப் பிற்பட்ட கஃபா, மற்றும் ஹரம் ஷரீபின் அபிவிருத்தி சார் வரலாற்றுத் தகவல்களையும், சமகால பிரமாண்டமான விஸ்தரிப்பில் உள்ளடக்கப்படவுள்ள சிறப்பம்சங்கள் பற்றியும்  சுருக்கமாக எடுத்துக்கூற விளைகின்றேன். 

கடந்த 2015 ல் ஆரம்பிக்கப்பட்ட  இரு ஹரம் ஷரீப்களினதும் விஸ்தரிப்பு பணி 2030 ல் நிறைவடைய இருக்கின்றது . சவூதியரேபிய அரசாங்கத்தின் 2030ல் தன்னிறைவை நோக்கிய தூரநோக்கு எனும் தொணிப்பொருளில் ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டங்களின் கீழ் அதிசயிக்கத்தக்க வகையில் மக்கா மதீனா ஹரம் இரண்டினதும் விஸ்தரிப்பு திட்டமும் முக்கியமானதாகும். இவ்விஸ்தரிப்புக்குப் பின்னரான முழுமைபெற்ற  ஹரம் ஷரீபின் ஆச்சரியப்படத்தக்க தோற்றத்தைக் கண்டுகளிக்கும் பாக்கியத்தை  2030ல் ஹஜ் - உம்ரா செல்லவிருக்கும் யாத்திரியர்கள்  பெற்றுக்கொள்வார்கள் இன்ஷா அல்லாஹ். 

சவூதியரேபியாவின் மன்னர் மலிக் ஸல்மான் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இத்திட்டம் கடந்த 7 வருடங்களாக அரசின் மிகமுக்கிய குறிக்கோளாக கருதப்பட்டு   துரித கதியில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 
இதுபற்றி மன்னர் குறிப்பிடுகையில்  ' உலகின் பல பாகங்களிலிருந்தும் ஹஜ் உம்ராவுக்காக வரும் பல லட்சம் யாத்ரிகர்கள் மக்கா மதீனாவில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் அவர்கள் எவ்வித அசெளகரியங்களுக்கும் முகம்கொடுக்காது பூரண திருப்தியுடன் தமது கிரியைகளை நிறைவேற்றுவதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் நவீன தரத்தில் ஏற்படுத்திக் கொடுப்பதே எமது அரசின் தலையாய கடமையாகும், ஏனெனில் இரு ஹரம்களும் எமது நாட்டின் சொத்துமட்டுமல்ல! மாறாக அவை உலகமுஸ்லிம்கள் அனைவரினதும்   சொத்தாகும் எனக் குறிப்பிட்டுள்ளார். 

தற்போதைய நவீன விஸ்தரிப்பு திட்டத்தின்படி 750,000 சதுரமீட்டர் பரப்பளவு மஸ்ஜிதுல் ஹராத்தைச் சூழவுள்ள நிலப்பரப்பு ஹரம்ஷஷரீபுக்குள் உள்வாங்கப்படவுள்ளது. இதனால் ஹரத்தைப் சுற்றியுள்ள காலிதிப்னு வலீத் வீதி, அபூஸுப்யான் வீதி,ஸூபைர் வீதி,  ஜபல் ஹிந்தி,   ஜபல் கஃபா மற்றும் பல்வேறு வீதிகளும் மூடப்பட்டு அப்பகுதியிலுள்ள கட்டிடங்களும் அகற்றப்பட்டு விட்டன.
விஸ்தரிப்பு முடிவுற்றபின் மக்கா மஸ்ஜிதின் மொத்த பரப்பளவு 400,000 சதுரமீட்டர்களாக அதாவது தற்போதிருக்கும் மஸ்ஜிதைப்போல் இருமடங்கு பெரியதாக இருக்கும். இப்பணிக்காக சவூதி அரசு 17,240,000,000  சுமார் 17 பில்லியன் டொலருக்கும் அதிக தொகையை ஒதுக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன்படி மஸ்திதுக்குள்ளேயே யாத்திரியர்களுக்கான வைத்தியசாலை , முதலுதவி மையங்கள்,அவசர சிகிட்சை மையங்கள், பொலிஸ் நிலையம், பாதுகாப்பு மையம், வழிகாட்டல் மையங்கள், பொருட்களை பாதுகாக்கும் பெட்டக மையங்கள், விசேஷ தேவையுடையோருக்கான உதவி நிலையங்கள், தானியங்கி வண்டிகள், மற்றும் பல சிறப்பம்சங்கள் உள்ளடக்கப்படுவதோடு மஸ்ஜிதைச் சூழவுள்ள 79 வாயில்க்கதவு தொகுதிகளும் தானியங்கி கதவுகளாக மாற்றப்படவுள்ளன. 

இஸ்லாமிய வரலாற்றில் ஹரம் ஷரீபின் விஸ்தரிப்புப் பணிகள்.
‐-------------
(1) கிலாபத் ஆட்சிக்காலத்தில்..
முதலாம் கலீபா அபூபக்ர்( றழி) ஆட்சியில்...
++++++++
அக்காலத்தில் மஸ்ஜிதைச் சுற்றி சுவர்கள் அமைக்கப்பட்டிருக்கவில்லை.கஃபாவைச் சுற்றியுள்ள இடம் தொழப் பயன்படுத்தப்பட்டது. அப்பால் பாதையும் அதைச்சூழ மக்களின் வீடுகளும் காணப்பட்டன. ஸபா-மர்வா மலைகள் மஸ்ஜிதை விட்டும் சற்றே தூரத்தில் தனியாக காணப்பட்டன. 

இரண்டாம் கலீபா உமர்(றழி) காலத்தில்...
உமர்(றழி) ஆட்சியைப்   பொறுப்பேற்றவுடன் ஹரம் ஷரீபைச் சுற்றியிருந்த வீடுகள் அனைத்தையுமே உரியவர்களிடம் அதிக விலைகொடுத்து வாங்கி அவற்றை தவாப்செய்யும் பகுதியாக ஆக்கி சுற்றிவர அரைஉயரத்தில் சுற்றுச் சுவரும் அமைத்து அதற்கப்பாலுள்ள இடத்தை தொழுவதற்குரிய பகுதியாக ஆக்கினார்கள் . 

மூன்றாம் கலீபா உஸ்மான்(றழி) காலத்தில் ஹிஜ்ரி 26ல் யாத்திரியர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் தவாப் செய்யும் பகுதியில் சனநெரிசல் ஏற்பட்டதையடுத்து  அவர்கள் மதாபை மேலும் விஸ்தரித்து சூழவுள்ள மற்றும் பல வீடுகளை விலைக்கு வாங்கி மஸ்ஜிதை மேலும் விஸ்தரித்தார்கள். மஸ்ஜிதுக்கு பிரதான நுழைவாயிலும் இவர்கள் காலத்திலேயே ஏற்படுத்தப்பட்டது. 

2- உமையாக்களின் ஆட்சியில்....
இக்காலப்பகுதியில் மக்காவை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த அப்துல்லாஹ் பின் ஸுபைர்(றழி) அவர்கள்  அன்று மஸ்ஜிதைச் சூழவுள்ள வீடுகளை விலைக்குப் பெற்று மஸ்ஜிதை விஸ்தரித்ததுடன் கஃபாவை நபி இப்ராஹீம்  அவர்கள் போட்ட அஸ்திவாரத்தின் மேல் சுவரமைத்து பெரிதாக்கினார்கள். (நபியவர்களின் வருகைக்குமுற்பட்ட காலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் கஃபா சேதமடைந்த போது அதை குறைஷியர்கள் புனரமைக்க விரும்பினார்கள் . இருப்பினும் அப்போதிருநத பஞ்சம் காரணமாக நிதிப்பற்றாக்குறையினால் கஃபாவின் அசல் அளவைவிட மேற்குத்திசையில்-     பீலி அமைந்திருக்கும் திசையில் சுமார் 20 அடி குறைவாக கஃபாவை அமைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இப்போது அப்பகுதி ஹிஜ்ர் (இஸ்மாயீல்)எனும் பெயரில் அரைவட்டச் சுவரைக்கப்பட்டு  அழைக்கப்படுகின்றது.) 

அப்துல் மாலிக் பின் மர்வான் ஆட்சியில்....
அப்துல் மாலிக் பின் மர்வானின் காலத்தில் ஹஜ்ஜாஜ் பின் யூஸுபின் தலைமையில் படைதிரட்டப்பட்டு மக்காநகரம்  ஸுபைரின்   ஆளுகையிலிருந்து மீட்கப்பட்டது. அப்போது  அப்துல்மலிக் மன்னரவர்கள் ஸுபைர்(றழி) சேர்த்துக்கட்டிய கஃபாவின் மேற்குப் பகுதியை இடித்துநீக்கிவிட்டு அதை முன்பிருந்தவாறே மீளக் கட்டியமைத்தார்.    அவ்வாறே மஸஜிதின் மேற்பரப்பில் தேக்கு மரத்தால் செய்யப்பட்ட உயர்ரக கூரையை இட்டு மெருகூட்டினார்.
அவ்வாறே ஹரம் ஷரீப் கட்டிடத்தின் சில பகுதிகளைத் தகர்த்துவிட்டு அவற்றை ஸ்பானியக் கட்டிடக் கலையம்சங்களுடன் புதுப்பித்து மஸ்ஜித் வளாகத்திற்கு சுற்றிவர சுவரமைத்து மெருகூட்டினார். 

பின்னர்  அவரின் மகனான வலீத் மன்னரின் காலத்தில் ஹரம் ஷரீபின் மஸ்ஜித் பகுதியின் தரை முழுவதற்கும் பளிங்குக் கற்கள் பதிக்கப்பட்டு மஸ்ஜிதைச் சூழவுள்ள விசாலமான முற்றம் உருவாக்கப்பட்டது. இக்காலப்பகுதியில் ஆட்சிக்குவந்த ஒவ்வொரு மன்னர்களும்  கஃபாவை புதுப்பித்தவர் என்ற புகழை பெறும் நோக்கிலோ என்னவோ ஆட்சிக்கு வந்தவுடன் கஃபாவை இடித்து விசாலமாக்குவதும் அடுத்த மன்னர்  கஃபாவை இடித்து முன்பிருந்வாறு ஆக்குவதுமாக  ஏட்டாபோட்டியாக செயல்பட்டதை அவதானித்த இமாம் மாலிக் (றஹ்) அவர்கள்  அரசகுடும்த்தாரிடம் ' உங்கள் புகழை பரப்புவதற்காக அல்லாஹ்வின் வீடான கஃபாவுடன் விளையாடாதீர்கள். நபியவர்களின், மற்றும் நான்கு கலீபாக்களின் காலத்தில் அது எப்படியிருந்ததோ அப்படியே விட்டுவிடுங்கள் என்று பரிந்துரைக்க இறுதியில் அதுவே முடிவாக்கப்பட்டு இன்றுவரை அதே பரப்பளவிலேயே கஃபா இருத்துவருகின்றது.
======≈===== 

(3)அப்பாசிய ஆட்சியில் ஏற்பட்ட புணர்நிர்மானம். 

கலீபா மன்ஸுரின் காலத்தில் கஃபாவின் மேற்குப்பகுதியிலுள்ள மஸ்ஜிதுக்கு மேல்தட்டு-மாடி அமைக்கப்பட்டதுடன் சுற்றியிருந்த குடியிருப்புக்கள் , மலைகளெல்லாம் அகற்றப்பட்டு மஸ்ஜிதின்  பரப்பளவு 12,512 சதுரமீட்டர் அளவுக்கு விசாலமாக்கப்பட்டது அதன்பின் 810 ஆண்டுகளாக உத்மானியப் பேரரசு உருவாகும் வரை மஸ்ஜிதுல் ஹராம் மற்றும் மஸ்ஜிதுந் நபவியில் எவ்வித புனரமைப்புப் பணிகளும் இடம்பெறவில்லை.  . 

உதுமானியர்களின் ஆட்சியில்,,..(4) 

உஸ்மானியா பேரரசின் அதிபர் சுல்தான் கான் அவர்களின் காலத்தில் ஹிஜ்ரி 984 கஃபாவின் நாற்புறச் சுவர்களிலும் பாரிய வெடிப்பும் சிதைவும்  ஏற்பட்டதால் கஃபா முற்றாக மீளக் கட்டப்பட்டது.பின் அவரின் மகன் கஃபாவைச் சூழவுள்ள மஸ்ஜிதையும் இடித்துவிட்டு துருக்கிய கட்டிட கலையம்சங்களுடன் ஆச்சரியப்படத்தக்க வகையில்  புதிதாக நிர்மானித்தார். 

இக்கட்டிடம் சுமார் 500 வருடங்களாகியும் இன்றுவரை கம்பீரமாய் காட்யளிக்கின்றது . பழைய உத்மானிய மஸ்ஜித் தொகுதி என்ற பெயரில் அழைக்கப்படும் இம்மஸ்ஜிதின் அழகும் கலையம்சங்களும் இன்றும் மெருகூட்டப்பட்டு பாதுகாக்கப்பட்டு  வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 
நவீன உபகரணங்கள் கண்டுபிடிக்கப்படாத அக்காலத்தில் அமைக்கப்பட்ட  இதன் கட்டிட கலையம்சமும் அழகும்  இன்றும் பார்ப்போரை ,ஏன்  பொறியியல் நிபுணர்களையே பிரமிக்க வைக்கின்றது. 

பின் ஹிஜ்ரி 1040ல் உத்மானியப் பேரரசர் சுல்தான் முராத் கானின் காலத்தில் ஏற்பட்ட பாரிய வெள்ளப்பெருக்கின்போது கஃபாவின் கீழுள்ள மணல்ப்பகுதி நீரால் அடித்துச்செல்லப்பட்டதால் கஃபாவில் ஏற்பட்ட வெடிப்புகள் செப்பனிடப்பட்டு மஸ்ஜிதின் பின்பகுதியில் சற்று விஸ்தரிக்கப்பட்டு 28,003 சதுரமீட்டர்  பரப்பளவுடன் மக்கா மஸ்ஜித் இலங்கியது. 

(5)சவூதியரேபியா நாடு உருவானதன் பின்னரான காலத்தில் ஏற்பட்ட புனரமைப்புப் பணிகள். 

சவூதிஅரசின் கஃபாவுக்கான முதல் மாபெரும் விஸ்சரிப்புப் பணி ஹிஜ்ரி  1344 ல் மன்னர் சவூத் அவர்களின் காலத்தின் முடுக்கிவிடப்பட்டது. 

இத்திட்டத்தின்கீழ் முழு மஸ்ஜிதும் திருத்தப்பட்டு மின்சாரம் பெறப்பட்டு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. தரைக்கு சலவைக்கல் மாபிள் பதிக்கப்பட்டு, மகாமு இப்ராஹீம் பகுதிக்கும் தவாப் செய்யும் பகுதிக்கும் நவீன நிழற்குடைகள் நிறுவப்பட்டு, ஸம்ஸம் கிணற்றின் மேற்பரப்பில் குப்பா அமைக்கப்பட்டு,  மதாபுக்கு வெப்பமடையாத குளிரும் மாபிள்கள் பொருத்தப்பட்டன
.   அத்துடன் ஸம்ஸம் கிணற்றடிக்குச் சென்று நீர் பெற இரு வாயில்கள் அமைக்கப்பட்டு,  நீரை பம்ப் செய்ய பாரிய மோட்டர்கள் பொருத்தப்பட்டன.  கஃபாவக்கு வெள்ளி வெங்கலம், மற்றும் தங்கம் சேர்த்து தயாரிக்கப்பட்ட புதிய கதவும் போடப்பட்டது. அவ்வாறே தங்க வேலைப்பாடுகள் செய்யப்பட்ட கஃபாவுக்கான பட்டும் போடப்பட்டு , கஃபாவைச் சுற்றி பொருத்தபட்டுருந்த மெழுகு விளக்குகள் அகற்றப்பட்டு மின்சார விளக்குகள் ஜொலிக்கவிடப்பட்டன.
பின் மன்னர் காலித் காலத்திலும் சிறு திருத்த வேலைகள் செய்யப்பட்டதுடன் கஃபாவுக்கான வேலைப்பாடுமிகு பட்டுத்துணி தயாரிக்க தனியானதொரு தொழிற்சாலையே ஏற்படுத்தப்பட்டது.
சவூதி அரசின் முதல் விஸ்தரிப்புக்குப் பின் ஒரேநேரத்தில் ஹரத்தில் மூன்றுலட்சம் பேர் நின்று தொழுமளவுக்கு விசாலமாக்கப்பட்டது. அப்போது மஸ்ஜிதுக்கு 64 கதவுகளும் 89 மீட்டர் உயரமான ஆறு மனாராக்களும் இருந்தன 

சவூதி அரசின் இரண்டாம் விஸ்தரிப்புப் பணிகள். 

சவூதி மன்னர் பஹ்த் பின் அப்துல் அஸீஸின் காலத்தில் ஹிஜ்ரி 1405 -அதாவது 1985  ல் மக்கா-மதீனா இரண்டு ஹரம்களும்  மாபெரும் வரலாறு காணாத அபிவிருத்தியை சந்தித்தன. மன்னரவர்கள் தமக்கு ஹாதிமுல் ஹரமைன் அஷ்ஷரீபைன்-இரு ஷரம்களின் சேவகன் என்ற பெயரைச் சூட்டி தம்மை அன்றைய வழக்கப்படி  ' மாட்சிமைமிகு மன்னர் 'என்று அழைக்கக்கூடாது என்று தடுத்துவிட்டார்கள். 

இவ்அபிவிருத்திக்காக ஹரத்தைச் சூழ  அருகிலிருந்த சூக் சகீர் என்றழைக்கப்பட்ட 30,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட கடைபஸார்கள், உயர்ரக ஹோட்டல்கள்,சுப்பர்மார்கட்கள் அனைத்தையும் அன்றைய   மதிப்பைவிட பலமடங்கு தொகைகொடுத்து உரியவர்களிடமிருந்து விலைக்குப் பெற்று அபிவிருத்தியை ஆரம்பித்தார்கள். 

இவ்வபிவிருத்தியில் பின்வரும் விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருநாதன.   
1- புதிதாகப் பெறப்பட்ட முப்பதாயிரம் சதுரமீட்டர் பரப்பில் நிலக்கீழ் தட்டு முதல்த்தட்டு,இரண்டாம் , மூன்றாம் தட்டுகள், மற்றும் திறந்த நான்காம்தட்டு என்பனவற்றை உள்ளடக்கிய மிகப் பிரமாண்டமான  மஸ்ஜித் கட்டிடத்தை நிறுவுதல். 

2-பழைய மஸ்ஜித் ,மதாப், மற்றும் புதிய மஸ்ஜிதைச் சூழவுள்ள அனைத்து பகுதிக்கும் வெப்பமடையாத சலவைக்கற்களை பதித்தமை. 

:3-மஸ்ஜிதின் மேற்பகுதிக்கு வீதியிலிருந்தே வரும்வகையில் 5 பிரமாண்டமான பாலங்களை நிர்மாணித்தமை. 

4- கீழ்தளத்திலிருந்து மேற்தளங்களுக்குச் செல்ல நவீன மின்சார ஏணிகளை நிறுவியமை. 

5- தொழ வருவோர் இளைப்பாறுவதற்காக மேற்குப்பக்கமாக விசாலமான ஸாஹா - முற்றத்தை ஏற்படுத்தியதுடன் நிலக்கீழ் சுரங்கப்பாதை வழியாக வருவோரும் மஸ்ஜிதின் நிலக்கீழ் தளத்தை இலகுவில் வந்தடைய நிலக்கீழ் வீதிகள் , மற்றும் நான்கு தளங்களிலும் பதினெட்டு இடங்களில் மொத்தம் பத்தாயிரத்திற்கும் அதிகமாக நவீன கழிவறை வசதிகளை ஏற்பதுத்தியமை. 

6-மின்சாரத்தில் இயங்கும் பிரமாண்டமான குப்பா-கோபுரங்களை ஏற்படுத்தி சூரிய ஒளியோ,உள் குளிரோ அதிகரிக்கும்போது திறந்து-காற்றோட்டம் தேவைப்படும் போது தானியங்கியாக செயற்படும் வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன. 

7- நிலக்கீழ் தளத்தை கழித்து மொத்தம் ஆறு தளங்களை நிர்மாணித்து கீழ்தளத்தில் எட்டுலட்சமும் ஏனைய தளங்களில் தலா நான்கு லட்சம் பேரும் தொழும் வகையில்   முன்பிருந்த ஹரத்தைவிட பத்து மடங்கு பெரிய பிரமாண்டமான முறையில் இவ்விஸ்தரிப்புப்பணி அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இறுதியாக தற்போது மன்னர் சல்மானின் ஆட்சியில் மாபெரும் அபிவினுத்திப்பணி தொடகின்றமை குறிப்பிடத்தக்கது. 

ஹஜ் உம்ரா யாத்திரியர்களுக்கு சேவைசெய்வதை எங்கள் பாக்கியமாக கருதுகின்றோம். ( ஹித்மத்துல் ஹூஜ்ஜாஜி ஷரபுன் லனா என்பதே சவூதி அரசின் மகுட வாசகமாகும்)
அதற்கேற்ப  தற்போதைய சவூதி மன்னர் காதிமுல் ஹரமைன் மலிக் ஸல்மான் அவர்களால் சமீப காலமாக ஹஜ்-உம்ராவுக்கு வருவோரின் எண்ணிக்கை பலமடங்காக அதிகரித்துச் செல்வதையடுத்து  மக்காவுக்கும் மினா,அரபு,முஸ்தலிபாவுக்குமிடையில் சொகுசு  மெட்ரோ ரயில் சேவையை 2018ல் ஆரம்பிக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து மதீனாவிலிருந்து மக்கா ,ஜித்தா வரையான மெட்ரோ ரயில் சேவையையும் ஏற்படுத்தி 400 km தூரத்தை வெறும் 1:30 மணிநேரத்தில் சென்றடையும் வகையில் அப்பணியும்  தற்போது பூர்த்தியடைந்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ். 

2030ம் ஆண்டு நிறைவடைவதற்கிடையில் ஒரே நேரத்தில் மூன்று கோடி ஹஜ்ஜாஜிகளை வரவேற்று உபசரிப்பதற்கான ஏற்பாடுகளும் அபிவிருத்திப் பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக 2030ல்  சவூதியின் இலக்கு.. என்ற திட்டத்தில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை  குறிப்பிடப்பட்டுள்ளது. 

வல்ல அல்லாஹ் உலக முஸ்லிம்களின் இரு கண்களாக இரண்டு ஹரம்களையும் மறுமை வரை பாதுகாத்து அவற்றை தரிசிக்கும் பாக்கியத்தை ஏ
எம்மையும் நல்குவானாக . ஆமீன்

ஆக்கம்
ஏ ஜீ எம் ஜலீல் மதனி
பணிப்பாளர்,
அல் ஈமான் கல்வி நிலையம்,
காத்தான்குடி,
أحدث أقدم