மௌலவி யூனுஸ் தப்ரீஸ் – சத்தியக் குரல் ஆசிரியர்
நபியவர்களின் வழி முறைகளை நாம் பின் பற்ற வேண்டும் என்று அல்லாஹ் நமக்கு கட்டளை இடுகிறான். அதே போல் என்னால் காட்டித் தரப்பட்ட அமல்களை நீங்கள் நடை முறைப் படுத்துங்கள் என்று நபியவர்கள் நமக்கு தெளிவாக கூறியுள்ளார்கள்.
அமல் ரீதியாக நாம் எதை செய்தாலும் நபியவர்கள் செய்ததை, அப்படியே செய்வது தான் மிகவும் ஏற்றதாகும். அதை மட்டும் தான் அல்லாஹ் ஏற்றுக் கொள்வான். அது இல்லாமல் மக்களால் நல்லது என்றடிப்படையில் உருவாக்கிய சகல செயல்பாடுகளும் புதியவைகளாகும். அனைத்து புதியவைகளும் வழிகேடுகளாகும், அனைத்து வழி கேடுகளும் நரகத்திற்கு செல்லும் என்று நபியவர்கள் கடுமையாக எச்சரித்தார்கள். ஏன் என்றால் மார்க்கத்தில் சட்டம் இயற்றும் அதிகாரம் அல்லாஹ்விற்கு மட்டும் தான் உள்ளது. அல்லாஹ் வஹியின் ஊடாக எதை சட்டங்களாக நபியவர்களுக்கு கொடுக்கிறானோ, அதை மட்டும் தான் நபியவர்கள் மக்களுக்கு மார்க்கமாக எத்தி வைப்பார்கள்.
இந்த அடிப்படையில் மொட்டை அடிப்பது நபியவர்கள் காட்டி தந்த வழி முறையா? அல்லது அந்நியர்களின் கலாசாரமா? என்பதை கவனிப்போம்.
மொட்டை அடிப்பது நபியின் வழிமுறை என்றால் (சுன்னத்) என்றால், நபியவர்கள் மரணிக்கின்ற வரை மொட்டையாவே காட்சி தந்திருப்பார்கள். அல்லது நீங்கள் மொட்டை அடியுங்கள் என்று ஸஹாபாக்களுக்கு ஏவியிருந்தால், அவர்களுடன் இருந்த ஸஹாபாக்கள் அனைவரும் மொட்டையாகவே கடைசி வரை இருந்திருப்பார்கள்.
ஆனால் நபியவர்களோ, நபித்தோழர்களோ செய்யாத இந்த செயல்பாட்டை இன்று சிலர் மொட்டை அடிப்பது சுன்னத் என்று மொட்டையாக காட்சி தரக் கூடிய நிலையை நாம் காண்கிறோம்.
மொட்டை அடிப்பதற்கான அனுமதிகள்…
குழந்தை பிறந்து ஏழாம் நாள் மொட்டை அடிப்பதற்கு நபியவர்கள் வழி காட்டியுள்ளார்கள். அதே போல் உம்ரா, அல்லது ஹஜ் செய்ய செல்லும் போது மொட்டை அடிப்பதற்கு நபியவர்கள் அனுமதி வழங்குகிறார்கள். அதே போல தலையில் ஏதாவது பிரச்சனை (நோய்) என்றால் தேவைக்கு ஏற்ப மொட்டை போட்டுக் கொள்ளலாம். இது அல்லாமல் சுன்னத் என்ற பெயரில் அடிக்கடி மொட்டை போடுவதற்கு நபியவர்கள் அனுமதி தரவில்லை என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
மொட்டை அடிப்பதற்கு தடை…?
மொட்டை அடிப்பவர்கள் யார் என்ற தகவலை நபியவர்கள் பின் வருமாறு கூறுகிறார்கள்.
அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள், கிழக்குத் திசையிலிருந்து (இராக்கிலிருந்து) சிலர் புறப்படுவார்கள். அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால், அது அவர்களின் நெஞ்செலும்புகளைத் தாண்டிச் செல்லாது. (வேட்டைக்காரனின்) அம்பு வேட்டையாடப்பட்ட பிராணியின் உடலிலிருந்து (மறு பக்கமாக) வெளியேறிவிடுவதைப் போன்று அவர்கள் மார்க்கத்திலிருந்து வெளியேறிவிடுவார்கள். பிறகு அம்பானது வில்லின் நாண் உள்ள பகுதிக்குத் (தானாகத்) திரும்பாத வரை அவர்களும் மார்க்கத்திற்குத் திரும்பி வரவேமாட்டார்கள்’ என்றார்கள்.
‘அவர்களின் அடையாளம் என்ன?’ என்று வினவப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘மொட்டைபோடுவ(தை ஒரு மரபாகவும் வழிபாடாகவும் கொண்டிருப்ப)து தான் அவர்களின் அடையாளம் என்று பதில் சொன்னார்கள். (புகாரி 7562)
வழி கேடர்கள் மொட்டை போடுவதை ஒரு மரபாகவே கொண்டிருப்பார்கள் என்ற செய்தியின் மூலமாக மொட்டை அடிப்பது தடை என்பதை நபியவர்கள் சொல்ல வருகிறார்கள்.
மத்ரஸாக்களில் மொட்டை போடுதல்…
சில மத்ரஸாக்களில் மொட்டை போடுவதை வழமையாக கொண்டுள்ளார்கள். சுன்னத் என்ற அடிப்படையில் மாணவர்களை மொட்டை போட சொன்னால் அது மார்க்கத்திற்கு முரணாகும். நபியவர்கள் மொட்டை போடும் கலாசாரத்தை நமக்கு காட்டி தரவில்லை. மொட்டை போடுவது நபியின் சுன்னத் என்றால், முடி வளர்ப்பது அதை விட பெரிய சுன்னத் என்று சொல்ல வேண்டி வரும். மார்க்கம் என்ற பெயரில் பிழையான ஒன்றை செய்து கொண்டு, நபியவர்களின் பெயரை பயன் படுத்துவது, சம்பந்தப்பட்டவர்களின் அறியாமையாகும் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
தலைக்கு எண்ணைய் தேய்த்துக் கொள்ளுங்கள், அழகாக சீவிக் கொள்ளுங்கள். அலங்கோலமாக ஷைத்தானை போல இருக்க வேண்டாம். போன்ற ஹதீஸ்கள் தலை முடியை வளர்ப்ப்தற்கு அனுமதியை காணலாம். நபியவர்களின் முடி அவர்களின் தோல் புஜம் வரை நீண்டு இருந்ததாக ஹதீஸ்களில் காண்கிறோம் என்றால், ஹதீஸைப் பற்றி சரியான தெளிவில்லாததினால் ஏற்ப்படக் கூடிய பிரச்சினை தான் இந்த மொட்டை போடுதலாகும். என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். எனவே மொட்டை அடிப்பது இஸ்லாம் மார்க்கத்தில் சுன்னத் கிடையாது.
அல்லாஹ் மிக அறிந்தவன்!