சாப்பிடும் போது கீழே விழும் உணவு அருவருப்பானதா!

அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்: "ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சாப்பிட்டால் தனது மூன்று விரல்களை சூப்பிக்கொள்வார்கள், மேலும் அவர்கள் "உங்களில் ஒருவரது உணவுக் கவளம் கீழே விழ்ந்துவிட்டால், அதிலுள்ள நோவினை தரும் (அறுவறுப்பானதை) விலக்கிவிட்டு, அக்கவளத்தை சாப்பிடட்டும், அதனை ஷைதானுக்கு விட்டுவிட வேண்டாம்." என்று கூறுபவர்களாக இருந்தார்கள் மேலும் சாப்பிட்ட உணவுத் தட்டை மழிக்குமாறு எம்மை பணிப்பதோடு  "நிச்சயமாக நீங்கள் உங்களது எந்த உணவில் பரகத் உள்ளதென்பதை அறியமாட்டீர்கள்" என்றும் கூறுவார்கள்.

நூல்: முஸ்லிம் (2034)

விளக்கம்: 
சாப்பிடும் போது கீழே விழும் உணவுகளை அறுவறுப்பாக பார்த்து விட்டுவிடாது அவற்றில் ஒட்டும் தூசு, மண் போன்றவற்றை அகற்றிவிட்டு சாப்பிட வேண்டும். இவ்வாறு சாப்பிடுவது கௌரவக் குறைச்சல் என எண்ணுவது பொருத்தமற்றது ஏனெனில் இது ஸுன்னாவாகும். 

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மூன்று விரல்களை பயன்படுத்தி சாப்பிடுவதால் சாப்பிட்டு முடித்த பின் அவர்கள் மூன்று விரல்களை சூப்புபவர்களாக இருந்தார்கள். ஆனால் எம்மைப் பொறுத்தமட்டில் ஐந்து விரல்கள் பயன்படுத்தப்படுவதால் ஐந்தையும் சூப்பிக்கொள்வதே முறையாகும். 

எவ்வுணவில் பரகத் உள்ளதென்பது மனிதர்களாகிய எமக்கு தெரியாத விடயம். சில வேளை கீழே வீழ்ந்த அல்லது தட்டில் மீதமாக உள்ள உணவில் கூட பரகத் இருக்க வாய்ப்புண்டு ஆதலால் ஒன்றையும் வீணாக்காது உண்ணுவதே நன்று.

வீண் விரயங்கள் செய்பவர்கள் ஷைதானின் தோழர்கள், தட்டில் விழும் உணவை வீணாக விடுவது ஷைதானுக்கு விட்டுவைப்பதாக அமைந்துவிடும். அத்தோடு தேவைக்கதிகமாக உணவுகளை தட்டில் எடுப்பது, கொள்வனவு செய்வது வீண் விரயங்களில் உள்ளடங்கும்.

வல்ல அல்லாஹ் அவனது தூதர் காட்டித் தந்த ஸுன்னாக்களை மனமுவந்து பின்பற்றி நடக்கும் பேற்றை அனைவருக்கும் நல்குவானாக!

தொகுப்பு
Azhan Haneefa 

أحدث أقدم