பிறருடைய தேவையை அறிந்து அதை நிறைவேற்றிக் கொடுப்பதும் உள்ளங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் வழிகளில் ஒன்றாகும். ஒருவர் தனது தேவையை நம்மிடம் எடுத்துச் சொன்னதும் எந்த அளவு நாம் அவருக்கு நிறைவு செய்ய வேண்டும்.
ஒருவர் தன் தேவையை நம்மிடம் வெளிப்படுத்துவதற்கு முன்பே அதை நாம் உணர்ந்து அவருக்கு உதவினால் அது அவர் மனதில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் அவருடைய பிரியத்தை கூடுதலாக கிடைக்கச் செய்யும்.
பிறருடைய தேவையை நிறைவேற்றுவது என்பதில் அவருடைய பொருளாதார தேவையை பூர்த்தி செய்வது மட்டுமின்றி எதையேனும் இரவலாக கொடுத்து உதவுவது, நமது உடல் உழைப்பின் மூலம் உதவுவது, அவருக்காக சிபாரிசு செய்வது உள்ளிட்டவை அடங்கும்.
ஒருவர் தன் தேவையை நம்மிடம் வெளிப்படுத்திய பின் நம்மால் அதை நிறைவேற்ற முடியும் என்கிற நிலையில் நிறைவேற்றாமல் புறக்கணித்தால் அந்த மனிதரின் பிரியத்தை எறுவதற்கு பதிலாக அவருடைய வெறுப்பை பெறுகிறோம்.
அது மட்டுமல்ல எல்லாம் வல்ல இறைவனின் அன்பையும் நாம் இழக்கிறோம். அதனால் அவனிடம் நாம் பெற வேண்டிய மறு உலக நன்மையையும் இழக்கிறோம்.
நபிகள் நாயம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : “மக்களிலேயே இறைவனுக்கு மிக விருப்பமானவர் மக்களுக்கு அதிக பயனளிப்பவரே! நற்செயல்களில் இறைவனுக்கு மிக விருப்பமானது நீ ஒரு முஸ்லிமை மகிழ்ச்சி அடையச் செய்வது அல்லது அவரை விட்டு ஒரு நெருக்கடியை அகற்றுவது அல்லது அவருடைய கடனை அடைப்பது அல்லது அவருடைய பசியை போக்குவது ஆகியவைகளாகும்!
ஒரு சகோதரரின் தேவையை நிறைவேற்றிக் கொடுப்பதற்காக அவருடன் நான் நடந்து செல்வது, நான் இந்த (மதீனாவின்) மஸ்ஜிதில் ஒரு மாதம் தங்கியிருந்து வணக்கத்தில் ஈடுபடுவதை விட எனக்கு மிக விருப்பமானதாகும். ஒருவர் தனது கோபத்தை அடக்கினால் அவரது குறையை இறைவன் மறைப்பான். ஒருவர் பிறரை தண்டிக்க நாடினால் தன்னால் தண்டிக்க நாடினால் தன்னால் தண்டிக்க இயலும் எனும் நிலையில் தனது ஆத்திரத்தை மென்று விழுங்கினால் மறுமையில் அவரது உள்ளத்தை இறைவன் நன்னம்பிக்கையால் நிரப்புவான். ஒரு சகோதரரின் தேவை நிறைவேறும் வரை அவருடன் ஒருவர் சென்றால் பாதங்கள் சருகும் அந்த (மறுமை) நாளில் அவருடைய பாதத்தை இறைவன் உறுதிப்படுத்துவான்.
நூல் : தப்ரானி
எந்தெந்த விதத்திலெல்லாம் மற்றவர்களுக்கு நாம் உதவி ஒத்தாசை செய்ய வேண்டும் என்பதற்கான விரிவான வழிகாட்டுதலை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த பொன்மொழி மூலம் நமக்கு வழங்கியுள்ளார்கள். இதில் கூறப்பட்டுள்ளவற்றை மட்டும் நாம் நடைமுறைப்படுத்தினாலே பிறருடைய கருத்தை கவரலாம்.
நபிகள் நாயகம் முன்னிலைப்படுத்திப் பேசியது முஸ்லிம்களை என்றாலும் அந்த முஸ்லிம்கள் முஸ்லிம்களோடு அதிக தொடர் வைத்திருந்ததாலும் இந்த நபிமொழியில் முஸ்லிமோடு இணைத்துப் பேசுகிறார்கள். முஸ்லிம் அல்லாதவர்களுக்கு உபகாரம் செய்வது பற்றி நபிவழியி பல ஆதாரங்கள் உள்ளன.
பிறருக்கு உதவுவது பற்றியும் பிறரை மகிழச் செய்ய வேண்டும் என்பது பற்றியும் உபதேசித்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அதில் அனைவருக்கும் சிறந்த முன்மாதிரியாகத் திகழ்ந்தார்கள்.
நபித்தோழர் ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி) கூறியது : ஒரு பெண்மணி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து ஒரு துணியைக் கொடுத்து இதை நீங்கள் அணிவதற்காக என் கையால் நெய்தேன் என்றார். அதை நபியவர்கள் பெற்றுக்கொண்டார்கள். அது அவர்களுக்கு தேவையாகவும் இருந்தது. பின்பு அதை தனது கீழாடையாக அணிந்து கொண்டு எங்களிடம் வந்தார்கள்.
அப்போது ஒரு மனிதர் இறைத்தூதரே! இந்த துணி எவ்வளவு அழகாக உள்ளது. இதை எனக்கு உடுத்தக் கொடுங்கள் என்று கேட்டார். நபிகள் நாயகம் ‘சரி’ என்றார்கள். பிறகு வீட்டிற்கு சென்றதும் அதை மடித்து அந்த மனிதருக்கு கொடுத்தனுப்பினார்கள். அப்போது அங்கிருந்தவர்கள் அவரிடம் “நீர் செய்தது சரியல்ல. நபியவர்களுக்கு அந்த துணி தேவைப்பட்ட நிலையில் தான் அவர்களுக்கு கொடுக்கப்பட்டது. எதையேனும் கேட்டால் இல்லையென்று சொல்ல மாட்டார்கள் என்று தெரிந்திருந்தும் கேட்டு விட்டீரே!” என்று (கண்டித்துச்) சொன்னார்கள்.
அதற்கு அந்த நபர், அல்லாஹ் மீது சத்தியமாக! அதை நான் அணிந்துகொள்ள வேண்டுமென்பதற்காக நபியவர்களிடம் கேட்கவில்லை. ஆனாலும் அது எனது கஃபன் (பிரேத) ஆடையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே கேட்டேன் என்றார். அதுவே அவர் மரணித்த போது அவரது பிரேத ஆடையாக இருந்தது.
நபிமொழியின் கருத்து – நூல் : புகாரி, இபினு மாஜா
நபியவர்களிடம் ஏதேனும் கேட்கப்பட்டால் அதை கொடுக்காமல் இருப்பது அவர்களிடம் வழிமுறையல்ல என்பதை அவர்களைச் சுற்றியிருந்த தோழர்கள் எல்லாம் அறிந்திருந்தார்கள் என்பது இந்த செய்தியில் தெரிய வருகிறது.
தனக்கு தேவைப்படக்கூடிய ஆடையை ஒருவர் கேட்டுவிட்டார் என்பதனால் கொடுத்து விட்டார்கள்.
இது கொடுத்தலில் உயர்ந்த நிலை. நாம் இந்த நிலையையெல்லாம் அடைய வேண்டுமென்பது அவசியமில்லை. (அடைந்தால் சிறப்புதான்)
நம்மிடம் தேவையை விட கூடுதலாக உள்ளதை பிறருக்கு கொடுத்து உதவினாலே மக்களின் நன்மதிப்பையும் பிரியத்தையும் பெற்று விடலாம்.
மக்களின் நேசமும் அவர்களின் வாழ்த்தும் பிரார்த்தனையும் நாம் அடைய வேண்டிய பெரும் பேறு என்பதை உணர்ந்தால் அதற்காக நமது பொருளை இழப்பதை பெரிதாக கருதமாட்டோம், இதை உணராதவர்கள் தான் கொடுப்பதற்கு தயங்குகிறார்கள்.
பிறருக்கு உதவுவதற்காக நாம் எடுத்துக் கொடுக்கும் செல்வம் அருள் வளம் பெற்றதாக ஆகும். அதனால் அதில் அபிவிருத்தி ஏற்படும். இதனை “தர்மம் செல்வத்தை குறைப்பதில்லை” என்று சொல்லி விளக்கினார்கள் நபி (ஸல்) அவர்கள்.
எடுத்தால் குறைய வேண்டும் ஆனால் குறையாமல் இருக்கிறதென்றால் அது மறைமுகமான “இறைஉதவி” இந்த இறை உதவியை நம்ப விடாமல் தடுப்பது சாத்தானிய எச்சரிக்கை .
இதனை திருக்குர்ஆன் இவ்வாறு எடுத்துக் கூறுகிறது : “(பிறருக்கு கொடுத்து உதவுவதால்) வறுமை ஏற்படுமென்று சைத்தான் உங்களை எச்சரிக்கிறான்; அருவருப்பானதை செய்யும்படி உங்களை ஏவுகிறான். இறைவனோ தன்னிடமிருந்து மன்னிப்பும் பேரருளும் உண்டென உங்களுக்கு வாக்குறுதியளிக்கிறான்.” திருக்குர்ஆன் 2:268
நண்பர்களுக்காகவும் நம்மைச் சுற்றியிருப்போருக்காகவும் தன்னார்வத்துடன் செலவு செய்வது ஓர் உயர்பண்பு. இதன் மூலமாகவும் பிறருடைய அன்பும் மரியாதையும் நமக்கு கிடைக்கும்.
நண்பர்களுடன் இருக்கும் போது எல்லோருக்கும் சேர்ந்தவாறு ஏதேனும் வாங்கினால் நமக்கு வாய்ப்பும் வசதியும் இருக்கும்பட்சத்தில் மற்றவர் கொடுக்கட்டும் என்று இருந்து விடாமல் நாமே முந்திக்கொண்டு பணம்கொடுக்க வேண்டும்.
இந்த தயாளத் தன்மையினால் இறைவன் வழங்கும் நற்கூலி நமக்கு அதிகமாகும். மனிதர்கள் நம் மீதுகொள்ளும் பிரியமும் அதிகரிக்கும்.
இதற்கு மாற்றமாக நாம் கொடுக்கத் தயங்கினால் இறைவனின் நற்கூலியை இழப்பதுடன் மனிதர்களின் நேசத்தையும் இழப்போம். இந்த இழப்புக்கள் நமக்கு தேவையா?
பிறருக்காக நாம் தாரளமாக வழங்குவது நம்மால் தாங்க இயலாத சுமையாக ஆகிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்! திருக்குர்ஆன் கூறுகிறது : “(கஞ்சத்தனத்தினால்) உமது கையை உமது கழுத்தில் கட்டப்பட்டதாக்கிக் கொள்ளாதீர். மேலும் (அனைத்தையும் கொடுத்து விட்டு) அதை முற்றிலும் விரித்து விடாதீர். அதனால் நீர் நிந்திக்கப்பட்டவராகவும், கைசேதப்பட்டவராகவும் அமர்ந்து விடுவீர்!” அத்தியாயம் 17 வசனம் 29
-M. அப்துர்ரஹ்மான் மன்பஈ.,MA.,M.phil.,