'தாஇஷ்' (ஐ.எஸ்.ஐ.எஸ்) இயக்கம் பற்றி சமகால பேரறிஞர்களுள் ஒருவரான அல்லாமா அப்துல் முஹ்ஸின் அல்அப்பாத் அவர்களின் குறிப்பு :
அல்லாஹ் ஒருவனுக்கே அனைத்து புகழும். நபியவர்கள் மீதும் அவர்களது குடும்பத்தார், தோழர்கள் மீதும் இறை சாந்தி உண்டாவதாக.
சில வருடங்களுக்கு முன் இராக் நாட்டில் தோன்றிய ஓர் இயக்கம் " இராக்குக்கும் ஷாமுக்குமான இஸ்லாமிய அரசு" என தனக்குத் தானே பெயர் சூட்டிக்கொண்டது. பின்னர் அப் பெயரின் முதலெழுத்துகளை இணைத்து 'தாஇஷ்' என்ற பெயரில் பிரபல்யமடைந்தது. புனை பெயர்களையும் கோத்திரங்களினதும், நகரங்களினதும் பெயர்களையும் இணைத்துக்கொண்ட சிலர் இவ்வியக்கத்துக்கு தலைவர்களாக அறிமுகப்படுத்தப்பட்டார்கள்.
சிரியாவில் அதன் அரசாங்கத்துக்கும் போராளிகளுக்குமிடையே யுத்தம் மூண்டு சில காலங்களின் பின்னர் இவ்வியக்கத்தை சேர்ந்த பலர் சிரியாவினுள் நுழைந்து, சிரிய அரசை எதிர்க்காமல் அங்கிருந்த அஹ்லுஸ் ஸுன்னா முஸ்லிம்களை பகிரங்கமாக கொலை செய்யும் படலத்தை அரங்கேற்றினார்கள். கொலைசெய்யப் பயன்படுத்தப்படும் மிகக் கொடூரமான கத்திகளைப் பயன்படுத்தி அவர்ளுக்கு எதிரானவர்களை அவர்கள் கொலைசெய்வதானது பரவலாக அறியப்பட்ட விடயமாகும்.
கடந்த றமழானின் (2014) ஆரம்ப நாட்களில் அவர்கள் தமது இயக்கத்தின் பெயரை 'இஸ்லாமிய கிலாபத்' என மாற்றிக்கொண்டார்கள். அவர்களது 'கலீபா' எனக் கருதப்படுகின்ற அபூபக்ர் அல்பக்தாதி என்பவர் இராக்கின் மவ்ஸில் ஜும்ஆ மஸ்ஜிதில் ஆற்றிய உரையில் " நான் உங்களுக்கு கலீபாவாக நியமிக்கப்பட்டுள்ளேன், நான் உங்களை விடச் சிறந்தவனல்ல" என்று கூறினார். இவ்விடயத்தில் அவர் உண்மையே கூறியுள்ளார்... அதாவது அவர் கூறியது போன்றே அவர் சிறந்தவர் அல்ல. ஏனெனில் அவரது இயக்கத்தவர்கள் புரிகின்ற கொலைகள் அவரது கட்டளையின் பிரகாரமோ, அல்லது அவருக்கு தெரிந்தோ, அல்லது அவரது அங்கீகாரத்துடனோ நடந்திருந்தால் அவர் உண்மையில் சிறந்தவரல்ல; மிகக் கெட்டவர். ஏனெனில் நபிகளார் கூறினார்கள் : ' யாரேனும் ஒருவர் ஒரு நல்வழியை நோக்கி பிறரை அழைத்தால் அவரைப் பின்பற்றுவோருக்கு கிடைக்கும் நற்கூலி அழைத்தவருக்கும் கிடைக்கும். ஆனால் பின்பற்றியோருக்கு கிடைக்கும் நற்கூலிகளில் எதுவும் குறைந்துவிடாது. அவ்வாறே ஒருவர் வழிகேட்டை நோக்கி அழைத்தால் அவரை பின்பற்றுவோருக்கு கிடைக்கும் பாவத்தின் பங்கு அழைத்தவருக்கும் கிடைக்கும். ஆனால் பின்பற்றியவர்களுக்கு கிடைக்கும் பாவங்களுள் எதுவும் குறைந்துவிடாது' (ஸஹீஹ் முஸ்லிம்).
மேற்படி உரையில் 'தாஇஷ்' இயக்கத்தின் தலைவர் கூறிய வார்த்தை இஸ்லாத்தின் முதல் கலீபாவான அபூபக்ர் (றழி) அவர்கள் தான் கலீபாவாக பதவியேற்ற போது பணிவோடு கூறிய வார்த்தையாகும். அவர்களோ இச் சமூகத்திலேயே மிகச் சிறந்தவர்கள் என்பதை நபிகளாரின் வார்த்தைகளினூடே சுற்றியிருந்த ஸஹாபாக்கள் அனைவரும் அறிவார்கள்.
முற்காலங்களிலும் இவ்வாறான பல இயக்கங்கள் தோற்றம் பெற்று கால ஓட்டத்தில் காணாமற் போனது போல் இவ்வியக்கமும் காணாமற் போய்விடுவதற்கு முன்னர், குறித்த இவ் இயக்கத்தினர் தமது பிழைகளை உணர்ந்து தம்மை திருத்திக்கொண்டு நேர்வழியின் பக்கம் மீள்வதே அவர்களுக்கு சிறந்ததாகும்.
மிகக் கவலைதரும் விடயம் யாதெனில், சில இளைஞர்கள் இவ்வியக்கத்தின் பால் கவரப்பட்டிருப்பதாகும். யாரென்றே தெரியாத ஒருவரை கலீபா என நம்ப எப்படி முடிந்தது இவர்களால்...?! பிற முஸ்லிம்களை காபிராக்குவதிலும் மிக கொடூரமாக கொல்வதிலும் ஈடுபடும் கூட்டத்திலுள்ள ஒருவர் சிறந்தவராக இருப்பார் என எப்படி எதிர்பார்க்க முடியும்? சத்தமிட்டு கரைகின்ற காகங்களுக்கெல்லாம் பின்னால் அணிதரண்டு செல்வதை விடுத்து, தமது அனைத்து செயற்பாடுகளிலும் அல்லாஹ்வினதும் அவனது தூதரினதும் வார்த்தைகளை நோக்கி மீள்வதும் மேலும் உண்மையான அறிஞர்களை நோக்கி திரும்புவதும் இளைஞர்கள் மீதுள்ள பொறுப்பும் கடமையுமாகும். அவ்வாறு செய்வதில்தான் இவ்வுலகிலும் மறுமையிலும் ஈடேற்றமும் பாதுகாப்பும் தங்கியுள்ளது.
பி.கு.
அறிஞர் அறிமுகம் :
-------------------------------
மேற்படி குறிப்பை வரைந்த அல்லாமா அப்துல் முஹ்ஸின் அல்அப்பாத் அவர்கள் ஸஊதி அரேபியாவின் சமகால ஹதீஸ், பிக்ஹ் துறை பேரறிஞர். சர்வதேச ரீதியாக பிரபலமானவர். அகீதா, ஹதீஸ், பிக்ஹ், வரலாறு என பல நூல்களை எழுதியவர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக புனித மதீனா மஸ்ஜிதுந் நபவியில் ஹதீஸ் பாடம் நடத்திவருபவர். பல்கலைக்கழக பேராசிரியர்கள் கூட இவர்களது வகுப்புகளில் கலந்துகொள்வார்கள்.
al-abbaad.com
-ARM. ரிஸ்வான் (ஷர்க்கி)