பரந்து பட்ட கல்வியால் சீரமைக்கப்பட வேண்டிய இலங்கை மௌலவிகள் சமூகம்.

இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்தின் மார்க்க விழுமியங்களின் பாதுகாப்பு அரணாக 40 ஆண்டுகளுக்கு முன்னால் லெப்பைகள் எனப்படுவோர் காணப்பட்டதை விடவும் சிறப்பாக 
காணப்படும் கண்ணியமிக்க இந்த சமூகம் 
தொழுகை, திருமணம், ஜனாஸா போன்ற குறிப்பிட்ட சில சமய பொறுப்புக்களைக் கூட தெளிவான நபிவழியில் நடைமுறைப்படுத்த முடியாத பாவப்பட்ட நிலையில் பயிற்றுக்கப்பட்டு மௌலவிகளாக வெளிவருவது அவர்களின் வாழ்வில் இழைக்கப்படும் பெரும் துரோகமாகும்.

இறை வேதத்தை போதித்து இறை நேசர்களை உருவாக்கும்  நமது மௌலவிகள் சமூகம் முஸ்லிம் சமூகத்தின்  அடிப்படை நம்பிக்கை கோட்பாடு, நமது பண்பாடு மற்றும்  சமய, சமூக கலாசார விழுமியங்களை  குர்ஆன் சுன்னா அடிப்படையில் நபித்தோழர்கள் முன் சென்ற இமாம்களின் வழியில் நின்று ஆராய்ந்து, முடிவை எட்டி செயற்படுவோராக  உருவாக்கப்படுவது காலத்தின் கட்டாயமாகும் என்பது அறிவிலும் அனுபவத்திலும் மிகக் குறைந்த என்போன்ற ஒருவனின்  பார்வையாகும்.

பழபொழிகளையும் இட்டுக்கட்டப்பட்ட  ஹதீஸ்களை நபிமொழியாகவும்,  ஊர்ஜிதமற்ற  கருத்துக்களை மிகச் சரியான கருத்துப்போலவும் மக்கள் முன் போதிக்கின்ற நிலை நமது மௌலிகள் சமூகத்தில் இருந்து மறைய வேண்டுமானால் சிறந்த , முன்மாதிரியான பாடத்திட்டம் ஒன்றே அதன் தீர்வாகும்.

 தவறான சிந்தனைகளைக் கழைந்து புகாரி, முஸ்லிம் போன்ற நபிமொழி நூல்களின் விரிவுரைகளின் துணைகொண்டு சுன்னாவுக்கு நெருக்கமான வழிமுறைகளை போதிக்கின்ற, இறையச்சமுள்ள திறமை உள்ளோரா கவார்த்தெடுப்பது அறிவுள்ள தற்கால சமூகம் அவர்களை மதித்து நடக்க காரணமாகவும் அமையும்.

அரபுக் கல்லூரிகளில் படிக்கின்ற நமது மாணவ மணிகளில் உத்வேகம், விவேகம், திறமை, உற்சாகம், விடாமுயற்சி, கல்வித் தேடல் என அனைத்து பண்புகளையும் ஒரு சேரப் பெற்ற மாணவர்கள் இருக்கின்றனர்.

ஆகவே அவர்களை குறுகிய சிந்தனைக்குள் வளர்த்து அவர்களின்  மதிக் கூர்மையை மழுங்கடிப்பதை விடுத்து, பரந்து பட்ட சிந்தனையாளர்களாக அவர்களை உருவாக்குவது அவர்களை நிர்வகிப்போர் மீது சுமத்தப்பட்டுள்ள சவால் நிறைந்த மிகப் பெ‌ரிய  அமானிதமாகும் . சமூகம் அவர்களையே வேண்டி நிற்கின்றது.

மன்னிக்கவும்!  கலண்டர்களைச் சுமப்போராக   மாற்றப்படும் மாணவர்களைக் கொண்ட கல்லூரிகள் இது விஷயமாக மிகக் கவனமாக நடக்க வேண்டும்.

பயன்பாடு
---
இறையச்சமும் பேணுதலும் நிறைந்த இந்த  
மௌலவிகளின் பரந்துபட்ட சிந்தனைகளைக் கொண்ட உருவாக்கமானது முஸ்லிம் சமூகத்தில் காணப்படும் இயக்க பிளவுகளை பெரியளவில் கட்டுப்படுத்தி, அவர்கள் மத்தியில் ஐக்கியத்தையும் விட்டுக் கொடுப்பையும் உருவாக்கும் என்பதில் ஐமில்லை.

அத்தோடு, ஒரு மௌலவி தான்சார்ந்த அமைப்பில் அங்கம் வகிக்காத மற்றொரு மௌலவியைக் கண்டு ஸலாம் உரைத்து விட்டு, பின் தனது இயக்க உறுப்பினர்களிடம் சம்மந்தப்பட்டவரின் இயக்க கோட்பாடு பற்றி நயவஞ்சகத்தனமாக முதுகுக்குப் பின்னால்  உலமா சபை உறுப்பினர்கள் சிலரைப் போல விமர்சிப்பதும் காலப் போக்கில் இல்லாது போகும்.

கவனிக்க 
-------
இலங்கை வாழ் மெளலவிகள் சமூகத்தை தலை நிமிர்ந்த, ஆராய்ச்சித் திறணுடன் கூடிய  அதி சிறந்த கல்விமான்களாக வார்த்தெடுப்பதை விடுத்து பீ.ஜே. மற்றும் ஷேகு முரீத்  குழுக்களைப் போல ஆமா சாமி கோட்பாட்டு ஆட்டு மந்தைகளாக  வார்த்தெடுப்பதில் சில அரபு மத்ரஸா அதிபர்களுக்கும் அங்கு கற்பிக்கின்ற மௌலவிகளுக்கும் பாரிய பங்கிருப்பதைப் போன்று,  இலங்கை வாழ் இஸ்லாமிய சமூகத்தை உக்கிப்போன தமது உஸ்தாதுகளின் தவறான   மார்க்க விளக்கத்தில் பொதுமக்களை ஜாஹில்களாகவும் காட்டுமிராண்டிகள் போலவும்  நடாத்திச் செல்வதில்
அவர்களிடம் பாடம் படித்த வளர்ந்து வரும் மௌலவிகளுக்கும் பாரிய பங்குண்டு என்பதை இலங்கை  இஸ்லாமிய சமூகத்தில் எழுகின்ற தொடரான மார்க்க பிரச்சினைகள்  நமக்கு உணர்த்துகின்றன.

எவ்வாறான சிந்தனைக் கட்டமைப்பில் மாணவர்கள் உருவாக்கப்படல் வேண்டும்?
-----
இலங்கை மௌலவிகள் சமூகம் சிறந்த நூற்றாண்டுகளில் வாழ்ந்த , பயபக்தி நிறைந்த ஆரம்ப கால ஹதீஸ் மற்றும் ஃபிக்ஹ் துறை இமாம்களைப் போன்ற ஒரு கல்வி நிலைக்கு அடித்தளம் 
இடப்படல் வேண்டும்.

அவர்களின் கல்வித் தேடல், சட்டங்களை அகழ்ந்தெடுக்கும் அவர்களின் கூரிய அணுகு முறைகள் போன்ற வழிமுறைகள் இங்கு முக்கியமானதாகும்.

அது நமது சமூக மௌலவிகளிடம் இழந்து போன சொத்தாகவே பார்க்கப்படுகின்றன.
அதனை அடைய படித்த மார்க்க அறிவுள்ள, நம்பகமான புத்தி ஜீவிகளால் மௌலவிகள் விமர்சிக்கப்படக் காரணமான அனைத்து குற்றச்சாட்டுகளையும்  ஒன்று திரட்டி அது பற்றி  கல்லூரி நிர்வாகங்கள் ஆராய முன்வர வேண்டும். 

பின் அவற்றில் நியாயமான குற்றச்சாட்டுக்கள் இனம் காணப்பட்டு உடனடியாக தீர்க்கப்படல் வேண்டும்.  
நாம் இங்கு சுட்டிக்காட்ட வரும் சில அம்சங்களும் இதில் உள்ளடங்கி இருக்கவே செய்கின்றன.

பாடத்திட்டத்தை மீள் பரிசீலனைக்கு உட்படுத்துதல்
-------
நாட்டில் தற்போதைய நடைமுறையில் உள்ள அரபு மத்ரஸா பாடத்திட்டமானது நூறு ஆண்டுகளைத் தாண்டிய  பழைமையான ஒரு பாடத்திட்டமாகும். 

அதில் போடப்படுள்ள காலத்திற்கு பொருத்தமற்ற நூல்கள் அகற்றப்பட்டு அதனை விட சிறந்த சிந்தனைகளைத் திறக்கும் நூல்கள் அதனுள் உள்வாங்கப்படல் வேண்டும்.  
இயானா, ஃபத்ஹுல் முயீன் போன்ற பழைய ஃபிக்ஹ் நூல்களில்  புத்திக்குப் பொருந்தாதவைகள் நிறையவே உள்ளன.

அந்த நூல்களை படிக்கும் ஒருவர், தனது மத்ஹப் மாத்திரமே சரியானது, மற்ற மத்ஹப் சரியாகச் சொல்லி இருந்தாலும் அல்லது குர்ஆன் ஹதீஸாக இருந்தாலும் அதனை ஏற்பது 
தான் சார்ந்த மத்ஹபில் இருந்து இன்னொரு மத்ஹபுக்கு மாறும் நிலையை உருவாக்கும். அதனை ரித்தா போன்ற   மிகப் பெ‌ரிய தவறு போன்ற நிலையில் பார்ப்பது, போன்ற தளர்வற்ற இறுக்கமான கொள்கையைக் கடைப்பிடிப்பதை அவதானிக்க முடிகின்றது.

அத்துடன், அரபு கல்லூரிகளின் பாட நூல்களாக காணப்படுகின்ற ஃபிக்ஹ், இலக்கண, இலக்கியம் சார்ந்த நூல்களுக்கு அதி கூடிய முன்னுரிமை வழங்கப்பட்டு அகீதா, மற்றும் ஹதீஸ், உசுலுல் ஹதீஸ், உசூலுல் ஃபிக்ஹ் போன்ற நூல்கள் இரண்டாம் நிலையில் பார்க்கப்படுவதால் மாணவர்கள் ஹதீஸ், அகீதா, சட்ட அறிவு போன்ற துறைகளில் அறிவற்ற கதை கப்ஸா  நிபுணர்களாக மாறுகின்றனர்.

அந்த நிலை 1990 களின் பின் சற்று மாறத் தொடங்கிய கையோடு  இயக்க வெறிச் சிந்தனை  கல்லூரிகளில் மேலோங்கத் தொடங்கியது மறுக்க முடியாத உண்மை.

 நாட்டில்  முன்னோடி நிருவணங்கள் எனப் பெயர் பெற்ற கல்வி நிருவணங்களில்  கற்பித்த உஸ்தாதுகளின்  சிந்தனை முகாமின் கவர்ச்சிக்கு அமைவாக  மாணவர்கள் அடிமைப்படுத்தப்பட்டு பிரித்தாளப்பட்டு கல்வி கற்பதில் அவர்கள் பல சங்கடங்களை எதிர் கொண்ட போது சம்பந்தப்பட்ட உஸ்தாதில் ஒருவரோ பலரோ  பதவி நீக்கம் செய்யப்பட்ட வரலாறுகளும்  இல்லாமல் இல்லை.

முன்பு சொன்னது போன்ற பிடிவாதப் போக்கு இயக்க வெறி போன்ற காரணங்களாலும் அ. கல்லூரிகளில் போதிக்கின்ற உஸ்தாதுமார்கள்  தாம் சார்ந்த மத்ஹபு பிடிவாத சிந்தனையோடு தமது  இயக்க வெறியையும் மாணவர்களுக்கு ஊட்டி வளர்ப்பதாலும் சமூகத்தில் இயக்க வெறி ஒரு போதையாகவே தொடர்கின்றது. 

ஒரு காலத்தில் கற்பனை கிலாஃபத்தை முன்னிலைப்படுத்தி அகீதாவையும் பேசாது, கிளை அம்சங்களில் சரியானதையும் சொல்லாது காலத்தை கழித்து சமூகத்தை சீரழித்து  தோல்வி கண்ட சிந்தனையாளர்கள் புதிதாக பின் நவீனத்தும் பேசி மகாஸித் சிந்தனையை இளைஞர்கள் மனங்களில் விதைக்கும்  நோய் ஒன்றைத் தொடங்கி 
இருப்பது நவீன பாதினிய்யா கொள்கையை உயிர்க்குப்பிக்கும் முயற்சியாகவே கருத வேண்டி உள்ளது. 

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தெளிவான அகீதாவைக்  கூறவோ,சரியான  கிளை அம்சங்களையும் தெளிவான பித்அத்துக்கள் பற்றித் தெளிவுபடுத்தவோ முடியாதவாறு வாய்களுக்கு பூட்டுப் போடப்பட்டவர்கள்.

அவ்வாறே; தப்லீக் ஜமாத் சிந்தனை மற்றும் நிர்வாக சார்பு கல்லூரிகளில் நாற்பது நாட்கள்,  ஒரு வருடம்  தப்லீக் ஜமாத்தில் செல்லாது சான்றிதழ்கள் வழங்கப்படுவதில்லை என்பதும் ஒரு நடைமுறையாகும்.

அந்த காலத்தை மாணவர்களின் தொழிற் கல்வி/ ஆய்வு  ஆண்டாகக் கூட உபயோகிக்கலாம்.

உதாரணமாக Automobile,  ஹதீஸ் கலை , ஃபிக்ஹ் கலை , மற்றும் அது தொடர்பான கல்வி, பிற சமயங்கள் பற்றிய தேடல் போன்ற  பாடத்திட்டத்தை வகுத்து போதிக்கலாம் .

மாற்றப்பட வேண்டிய பாடத்திட்ட முறை

அரபு மத்ரஸாக்கள் தமது பாடத் திட்டங்களை வருடந்தோறும் மீள் பரிசீலனை செய்ய புத்தி ஜீவிகள் குழு ஒன்றை நிறுவ வேண்டு்ம். 

பாட நூல்கள் காலத்திற்கு பொருத்தமானதாகவும் மாணவர்களின் மனங்களின் பதியக் கூடிய சுருக்கமானதாகவும் அவை அமைந்திருக்கின்றனவா ?  கூடவே தற்காலத்தில் பயனுள்ள கல்வி முறை அதில்   உள்வாங்கப்பட்டுள்ளதா? என்பது பற்றி எல்லாம் குறித்த குழு ஆராய வேண்டும்.

உதாரணமாக ஃபத்ஹுல் முயீன். இதற்கு பதிலாக 
الفقه الميسر என்ற தலைப்பில் எழுதப்பட்ட நூல்களையோ அல்லது 
فقه السنة 
என்ற நூலுடன் 
تمام المنة في التعليق على فقه السنة 
என்ற நூல்களையோ இணைப்பது பற்றி பரிசீலித்தல் .
.
فقه المقارن 
 ஃபிக்ஹ் ஒப்பீட்டு முறை,
الترجيح بين الأدلة الشرعية 
போன்ற பாடங்களை விடுகை வருட மாணவர்களுக்கு  போதித்தல்.

மொழி, இலக்கியம்
اللغة والأدب 
اللغة المعاصرة 
மொழி சார்ந்த நூல்களைக் கையாழ அந்த துறையில் பட்டம் பெற்ற வெளிநாட்டு பல்கலைக்கழக மாணவர் உப குழு ஒன்று மேலுள்ள பிரதான குழுவுடன்  அமைக்கப்பட்டு அது தொடர்பான அவர்களின் சிபாரிசை நடைமுறைப்படுத்த வேண்டு்ம் .
الأديان والفرق / الحوار بين الأديان 
சமயங்களும் பிரிவுகளும் / சமயங்களுக்கிடையிலான கலந்துரையாடல்கள்
حاضر العالم الإسلامي  
فقه الأقليات
தற்கால முஸ்லிம் உலகு / ஃபிக்ஹுல் அகல்லியாத், 
التاريخ الإسلامي
 பாடத்தில்
شبهات حول الخلافة الراشدة والجواب عليها
شبهات حول الخلافة الأموية والجواب عليها
கிலாஃபா ராஷிதா மற்றும் உமைய்யா கிலாஃபா பற்றிய பொய்யான குற்றச்சாட்டுக்கள் பதில்கள் போன்ற பாடங்கள் புதிதாக இணைக்கப்படல்  வேண்டும்.

கற்பித்தல்
---
இது தொடர்பான சிரேஷ்ட விரிவுரையாளர்கள் உள் நாட்டில் உள்ளனர்.

நம் நாட்டு அரபுக் கல்லூரிகளில் பட்டம் பெற்று, பின்  வெளிநாடுகளில் பட்டப் பின் படிப்பை முடித்த பலர் நாட்டில் உள்ளனர்.

அவர்களையும் தாராளமாக பயன்படுத்த முடியும்.

والله أعلم. 

எம்.ஜே. எம். ரிஸ்வான் மதனி

Previous Post Next Post