-ஆஸிர் ஸலபி
மனிதர்கள் அறிந்து கணக்கிட்டுக் கொள்வதற்காக நாட்களையும், மாதங்களையும் அல்லாஹ் படைத்தான். அவற்றில் நல்ல நாட்கள் என்றோ, கெட்ட நாட்கள் என்றோ கிடையாது. அல்லாஹ்வோ, நபி(ஸல்) அவர்களோ அப்படி குறிப்பிடாதபொழுது ஒரு குறிப்பிட்ட மாதத்தை மட்டும் எந்தவித ஆதாரமுமின்றி அதாவது ஸஃபர் மாதத்தை பீடை மாதம் என்று எண்ணிக்கொண்டு அந்த மாதம் முழுவதும் திருமணம் போன்ற காரியங்களை செய்யாமல் இருப்பது கலாகதிரின் மீது நம்பிக்கையின்மையும், மூடநம்பிக்கையுமாகத் திகழ்கிறது முஸ்லிம்களிடம் குறிப்பாக தமிழக முஸ்லிம்களில் பல பகுதிகளில்.
அறியாமை காலத்து அரபியர்களின் வழக்கம் போன்று இஸ்லாம் அனுமதித்திருக்கின்ற திருமணம் மற்றும் ஏனைய நிகழ்ச்சிகளை நடத்தாமலும் மற்றவர்களையும் நடத்தவிடாமல் தடுப்பதற்கும் இவர்களுக்கு யார் உரிமை வழங்கினார்கள்?
அப்படி அந்த நாள், அந்த மாதம் பீடை மாதம் என்றிருக்குமேயானால் யாருக்கும் எந்த நலனும் நடைபெறாமல் இருக்க வேண்டுமே? அப்படி இருப்பதில்லை. திருமணம் மற்றும் ஏனைய நிகழ்ச்சிகளை நடத்தாது நிறுத்தும் அந்த முஸ்லிம்களின் குடும்பத்தில் குறிப்பிட்ட அந்த மாதத்தில் குழந்தை பிறப்பை தடுத்து நிறுத்த முடியுமா? அல்லது தள்ளித்தான் போட முடியுமா? அப்படியே பிறந்து விட்டால் அந்த குழந்தை பீடை மாதத்தில் பிறந்துள்ளது என்பதற்காக நிராகரித்து விடுவார்களா? அல்லது ஓரந்தான் கட்டுவார்களா?
இந்த சந்தர்ப்பத்தில் வெளிநாடு செல்வதற்கு விசா வந்துவிட்டால், விசாவை நிராகரிப்பார்களா? அல்லது வெளிநாடு செல்வதையே நிராகரிப்பார்களா? இப்படி செய்ய துணிவு இல்லாத இவர்களும் இவர்களை சுற்றியுள்ளவர்களும் மற்ற நிகழ்ச்சிகளை நடத்தவிடாமல் தடுப்பதற்கு எந்தவித ஆதாரமும் குர்ஆன்-ஹதீஸில் இல்லை என்பதை நடு நிலையோடு சிந்தித்துப் பார்த்தால் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் மூடநம்பிக்கையே என்பது தெரியும்.
இவர்களின் கருத்துப்படி ஸஃபர் மாதம் ஒரு பீடை மாதம் என்று வைத்துக் கொண்டால்(?) எல்லோருக்கும் கேடுகள் வரும் நாளாக இருக்க வேண்டும், அதே போன்று நல்ல நாள் என்று ஒன்று இருக்குமேயானால் அந்த நாள் உலகத்தில் இருக்கக்கூடிய அனைவருக்கும் நன்மையானதாகவே இருக்கவேண்டும். எந்தவொரு நாளாக இருந்தாலும் அவற்றில் நல்லவைகளும், கெட்டவைகளும் ஏற்பட்டு கொண்டுதான் இருக்கின்றது. உலகிலுள்ள அனைவருக்கும் நல்லது நடக்கும் நாளாகவோ அல்லது எல்லோருக்கும் தீயவை நடக்கும் நாளாகவோ யாரும் ஒரு நாளைக் காட்ட முடியாது. இந்த அடிப்படை யதார்த்த உண்மையைக்கூட அறிந்து செயல்பட முடியாமல் பிற்காலத்தில் ஏற்பட்ட செயல்களின் காரணமாக மூளைச் சலவை செய்யப்பட்டு சுயமாக சிந்தித்து நல்லது, கெட்டது எது என பிரித்தறிய முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதை நினைக்கும்பொழுது மார்க்க பிடிப்பற்ற அறிஞர்கள் உண்மையான இஸ்லாத்தினை எடுத்து சொல்லாததும், தூய இஸ்லாத்தை அறிந்து கொள்ள ஆர்வம் காட்டாத முஸ்லிம்களும் ஆவர் என்று அறிய முடிகிறது.
பீடை நாட்கள் என்றோ, மாதமென்றோ ஒதுக்கி தள்ளிவிட்டு ஸஃபர் மாதமல்லாத மற்ற நாட்களில், மாதங்களில் நல்ல நாட்கள் என தாங்களாகவே தீர்மானித்து செய்யப்படுகின்ற பல நிகழ்ச்சிகளில் தோல்வி மற்றும் நஷ்டம் ஏற்படுவது இல்லையா? விவாகரத்து பெறுவதும், குழந்தை பாக்கியமில்லாமல் இருப்பதும், தொழில் துறையில் நஷ்டமடைவதும், செல்வ நிலையிலுள்ளவர்கள் வறுமை நிலையை அடைவதும், புயல், வெள்ளம், அதிகமான மழை போன்றவற்றால் விவசாய பொருட்கள் அழிந்து போவதும் எதனால்? பீடை ஸஃபர் அல்லாத மற்ற மாதங்களில் செய்யப்படுகின்ற அனைத்து செயல்களிலும், நிகழ்ச்சிகளிலும் வெற்றி பெற வேண்டும் அல்லவா? அப்படி வெற்றியை மாத்திரம் அடைந்தவர்கள் இருந்திருக்கிறார்கள் என்றால் இல்லவே இல்லையே!.
ஆக யதார்த்த வாழ்க்கையில் ஒருவர் சந்தோஷப்படுவது மற்றொருவர் துக்கப்படுவதென்பது நாள்தோறும் நிகழும் நிகழ்வுகளாகும். இது அல்லாஹ்வின் விதியின் அடிப்படையில் ஏற்படுகிறது. ஒருபக்கம் ஸஃபர் மாதம் பீடை என்று ஒதுக்கி தள்ளக்கூடியவர்கள் மற்றொரு பக்கம் ஸஃபர் மாத இறுதியில் செய்யக்கூடிய அனாச்சாரங்களை பற்றிப் பார்ப்போம்.
ஸஃபர் கழிவு அல்லது ஒடுக்கத்து புதன் என்றழைக்கப்படுகின்ற ஸஃபர் மாதத்தின் கடைசி புதன்கிழமை அன்று தமிழகத்தில் பரவலாக ஒரு சில அரபி வார்த்தைகளை மா இலைகளிலும் தட்டுகளிலும் மை கொண்டு எழுதி, அப்படி எழுதிய வாசகங்களை தண்ணீரில் கரைத்து குடித்து, வீடுகளில் தெளித்து, தலையில் தெளித்து குளித்தால் முஸீபத்துகள் நீங்கும் என்று செய்து வருகிறார்கள் (பொதுவாக நம்மில் யாருக்கேனும் காய்ச்சல், இருமல் வந்தால் மருத்துவரிடம் காண்பித்து நோய் எதிர்ப்பு மருந்து வாங்கி சாப்பிடுவோம் அல்லவா அதேபோல் ஸஃபர் மாத பீடையை தடுக்க நோய் எதிர்ப்பு மருந்துதான் மா இலையின் தண்ணீர்?) இப்படி செய்ய மார்க்கத்தில் ஆதாரம் உள்ளதா என்றால் கியாமத் நாள் வரையிலும் அவர்களால் ஆதாரங்களை கொண்டுவர முடியாது என்பதே உண்மை. (அந்த அரபி வார்த்தை என்னவென்று எழுதியவருக்கும் தெரியாது, குடிப்பவருக்கும் தெரியாது, காரணம் எழுதக்கூடியவர்களில் பெரும்பாலானோர் குர்ஆன் வசனங்களை படிக்க-கற்றுக்கொள்வதற்காக மதரஸா சென்ற அந்தந்த ஊர் சிறுவர் சிறுமிகளே என்பது குறிப்பிடத்தக்கது)
அடுத்ததாக ஸஃபர் மாத கடைசி புதனன்று வீடு முழுவதும் சுத்தம் செய்து (அன்றைய தினத்தில்தான் சுத்தம் செய்ய வேண்டுமா? எப்பொழுதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டியவர்கள் ஒடுக்கத்து புதனுக்காக மட்டும் சுத்தம் செய்வது மூடநம்பிக்கையையே), கறி-சோறு சமைத்து, அரிசி ரொட்டியும் சுட்டு (சமைத்து), ஆக சமைத்த சாப்பாட்டையும், ரொட்டியையும் வீட்டில் சாப்பிடுவார்களா என்றால் இல்லை மாறாக, ஆண்களும் பெண்களுமாக சேர்ந்து கடற்கரைக்கோ, ஆற்றாங்கரைக்கோ, புல்வெளிக்கோ, தர்ஹாக்களுக்கோ சென்று நீராடிவிட்டு அங்கேயே சாப்பிட்டு விட்டு வந்தால் முஸீபத்துகள் நீங்கும் என்பது இவர்களுக்கு இஸ்லாம் பற்றி அறியாமையினால் ஏற்பட்ட நம்பிக்கை. இந்த நம்பிக்கையோடு அன்றைய தினத்தில் இவர்களில் ஒரு சிலர் தொடரக்கூடிய பயணம் சினிமா தியேட்டர், பிறகுதான் வீடு இப்படி செய்யக்கூடிய இவர்களுக்கு முஸீபத்துகள் நீங்குமா அல்லது தொடருமா? நன்றாக சிந்திக்கவும். இவர்களில் அதிகமானோருக்கு அன்றைய தொழுகை இருக்காது.
இன்னும் ஒருசில பகுதிகளில் கணவன்-மனைவி குறிப்பிட்ட ஒடுக்கத்துபுதன் அன்று புல்வெளி பிரதேசம் சென்று சிறிது நேரத்திற்கு புல்வெளியில் காலை வைத்துவிட்டு நேராக செல்வதும் சினிமா தியேட்டர்தான். இதுதான் இவர்களுக்கு முஸீபத்துகளை நீக்கும் முறை.
மேற்கண்ட நிகழ்ச்சிகள் தொடராக ஒவ்வொரு வருடமும் படுவிமர்சியாக உண்டுகளிக்கவும், கண்டுகளிக்கவும் மேற்கோள் இடுகின்ற சம்பவம் இதுதான் அதாவது, நபி (ஸல்) அவர்கள் ஸஃபர் மாதத்தில் நோய்வாய்ப் பட்டிருந்ததால் அந்த மாதம் பீடை மாதம் என்ற நம்பிக்கை தமிழக சில முஸ்லிம்களிடம் உள்ளது. மேலும் அந்த ஸஃபர் மாதத்தின் கடைசி புதன்கிழமை அன்றுதான் நபி (ஸல்) அவர்கள் குணமடைந்து நீராடினார்களாம், அதனால் நாமும் ஒடுக்கத்துபுதனில் குளித்து நமது முஸீபத்தை நீக்க வேண்டுமாம். இந்த சம்பவம் முழுக்க முழுக்க ஆதாரமற்றது.
எவர் மார்க்கத்தில் புதுமையை ஏற்படுத்துகிறாரோ அல்லது அவ்விதம் ஏற்படுத்துபவருக்கு இடமளிக்கிறாரோ, அவர்கள் மீது அல்லாஹ், மலக்குகள் மற்றும் மனிதர்களின் சாபம் உண்டாகிறது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர் : அலி (ரலி) ஆதாரம் : அபூதாவூத், நஸாயீ)
அறியாமை காலத்தவர்களின் அரபியர்கள் ஷவ்வால் மாதத்தை பீடை மாதமாக கருதி வந்தனர், அன்றைய அரபியர் ஷவ்வால் மாதத்தில் எந்த நிகழ்ச்சிகளையும் நடத்தாது தடுத்து வந்தனர், இந்த மூடநம்பிக்கையை தீயிலிட்டு கொளுத்தும் வகையில் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள், நான் ஷவ்வால் மாதத்தில்தான் திருமணம் முடிக்கப்பெற்றேன், ஷவ்வாலில்தான் என் இல்லற வாழ்க்கையை துவங்கினேன், நபி (ஸல்) அவர்களுக்கு என்னைவிட விருப்பமுள்ள மனைவியாக இருந்தது யார்? என்று கூறினார்கள.; (அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி), ஆதாராம் : முஸ்லிம், அஹ்மத்)
பீடை மாதம் என்று ஒன்று இல்லை என்பதை நிரூபித்து நிலைநிறுத்திக் காட்டிய அன்னை ஆயிஷா (ரலி) அவர்களை போல் இன்றைய முஸ்லிம்கள் மத்தியில் ஸஃபர் பீடையில்லை என்று நாமும் நிரூபித்துக் காட்ட முயற்சி செய்வோமேயானால் இதனை முழுமையாக ஒழித்துவிடலாம் இன்ஷா அல்லாஹ்.
அன்புள்ள சகோதர-சகோதரிகளே இது ஒரு தீர்க்கமான ‘பித்அத்’ என்பதை விளங்கி நபி(ஸல்) அவர்களின் எச்சரிக்கையிலிருந்து தவிர்ந்து கொள்ள கீழ்கண்ட நபிமொழியே போதுமானது.
வார்த்தையில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம், நடைமுறையில் சிறந்தது நபி (ஸல்) அவர்களின் நடைமுறை. காரியங்களில் கெட்டது பித்அத்கள், பித்அத்துக்கள் (நபி (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் இல்லாதவைகள்) அனைத்தும் வழிகேடுகள், வழிகேடுகள் அனைத்தும் நரகில் சேர்க்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர் : இப்னு மஸ்வூத், ஜாபிர் (ரலி) அவர்கள் ஆதாரம் : புகாரி, முஸ்லிம் மற்றும் நஸாயீ.
மாற்று மதத்தவர்களின் கலாச்சாரத்தைப் பின்பற்றியே இந்த ‘பித்அத்’தான செயல்கள் இஸ்லாத்தில் புகுத்தப்பட்டிருக்கின்றது. மாற்று மத நம்பிக்கைபடி ஆடி மாதம் பீடை மாதம் என்றும், புதிதாக திருமணம் முடித்த புதுமண தம்பதிகளைகூட பிரித்துவைத்து விடுவதும் அவர்களின் பழக்கம். இந்த நம்பிக்கையை கடைபிடிக்கும் நமது முஸ்லிம்களும் ஸஃபர் மாதத்தை பீடை என்றும் புதுமண தம்பதிகளை பிரித்துவைத்து விடுவதும் அரங்கேறி கொண்டுதான் இருக்கிறது.
பொழுது போக்கிற்காக ஏதோ ஒரு சின்ன விழா-பண்டிகை என்ற பெயரில் ஆண்களும், பெண்களுமாக வீட்டைவிட்டு வெளியேறி மேற்சொன்ன நிகழ்வுகளை அரங்கேற்றுவது.
ஒரு நிகழ்ச்சி இஸ்லாத்தில் முஸ்லிம்களால் நடைமுறைப் படுத்தபடுகின்றது என்றால் அது குர்ஆன், ஹதீஸின் நிழலில்தான் செய்யப்படவேண்டும். ஆக இந்த ஸஃபர் மாதத்தை பீடை என்பதற்கு குர்ஆன்-ஹதீஸில் எந்த ஆதாரமும் இல்லை என்பதை விளங்கி இது போன்ற மார்க்கம் அனுமதிக்காத செயல்களை விட்டொழிக்க வேண்டும்.
இதுபோன்ற சமூக அவலங்களை முஸ்லிம்களை விட்டும் களைவதற்கு கற்றறிந்த மார்க்க அறிஞர்கள் முன் வரவேண்டும். சமூக விழிப்புணர்வு என்ற பெயரில் பற்பல மேடை சொற்பொழிவுகளையும் வாராந்தோறும் நடைபெறுகின்ற ஜும்ஆ பிரசங்கத்திலும் இதுபோன்ற மூடநம்பிக்கைகளை முஸ்லிம்களைவிட்டும் அகற்றிடப் பாடுபட்டால் இன்ஷா அல்லாஹ் விரைவில் ஒழிந்துவிடும். அல்லாஹ் போதுமானவன்