குஃப்ர் - ஷிர்க் வேறுபாடு

குஃப்ர் (நிராகரித்தல்) என்பது சத்தியத்தை மறுப்பதும் அதை மறைப்பதுமாகும். உதாரணமாக: தொழுகை, ஸகாத், ரமழான் நோன்பு, சக்தியுள்ளபோது ஹஜ் செய்தல், பெற்றோருக்கு நல்லுபகாரம் புரிதல் போன்ற கடமைகளில் ஒன்றை மறுப்பதைக் குறிப்பிடலாம்.

அதோபோன்று, விபச்சாரம் செய்தல், மது அருந்துதல், பெற்றோருக்கு நோவினை செய்தல் போன்றன ஹராமாக்கப்பட்டுள்ளன என்பதை மறுப்பது மற்றும் இவை போன்ற அனைத்தும் நிராகரித்தலில் உள்ளடங்கும்.

ஷிர்க் (இணைவைத்தல்) என்றால், ஒரு வணக்கத்தை அல்லாஹ் அல்லாதவருக்குச் செய்வதாகும். உதாரணமாக: மரணித்தவர்கள், மறைவானவர்கள், ஜின்கள், சிலைகள், நட்சத்திரங்கள் போன்றவைகளில் ஒன்றை நாடி அதனிடத்தில் உதவி தேடுவது அல்லது, அதற்காக அறுத்துப் பலியிடுவது அல்லது, அதனிடத்தில் நேர்ச்சை வைப்பது போன்ற செயல்களைக் குறிப்பிடலாம்.

நிராகரிப்பாளருக்கு இணைவைப்பாளர் என்றும் இணைவைப்பாளருக்கு நிராகரிப்பாளர் என்றும் பயன்படுத்தப்படும். அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: "மேலும், (நபியே!) எவன் அல்லாஹ்வுடன் வேறு இரட்சகனை (வணக்கத்திற்குரியவன் என) அழைக்கிறானோ, அவனிடத்தில் அதைப்பற்றி யாதொரு சான்றும் இல்லாமலே, அவனுடைய கணக்கெல்லாம் அவனுடைய இரட்சகனிடத்தில் தான் உண்டு. நிச்சயமாக நிராகரிப்பாளர்கள் வெற்றி பெறமாட்டார்கள்.” (அல்முஃமினூன்: 117)

மேலும் கூறுகின்றான்: "நிச்சயமாக எவர் அல்லாஹ்வுக்கு இணைவைக்கின்றாரோ அவர் மீது திட்டமாக அல்லாஹ் சுவனபதியைத் தடுக்கின்றான். மேலும், அவர் தங்குமிடம் நரகம் தான்.” (அல்மாஇதா: 72)

இன்றும் அல்லாஹுத்தஆலா சூரா பாதிரில் (பின்வருமாறு) கூறுகின்றான்: "இத்தகைய தகுதிக்குரிய அவன் தான் உங்கள் இரட்சகனாகிய அல்லாஹ் ஆவான். அரசாட்சி அவனுடையதே இன்னும், அவனையன்றி நீங்கள் பிரார்த்தித்து அழைக்கின்றீர்களே, அத்தகையவர்கள் ஒரு வித்தின் தொலி அளவும் அதிகாரம் பெறமாட்டார்கள். அவர்கள் நீங்கள் அழைத்தபோதிலும் உங்களுடைய அழைப்பை அவர்கள் செவியுறமாட்டார்கள். அவர்கள் செவியுற்ற போதிலும் பதிலளிக்க மாட்டார்கள். மறுமை நாளிலோ நீங்கள் இணைவைத்ததையும் அவர்கள் நிராகரித்துவிடுவார்கள். (விடயங்களை) அறிந்தவனைப்போல் (மற்றெவரும்) உமக்கு(ச் செய்திகளை) அறிவிக்கமாட்டார்கள்.” (அல்பாதிர்: 13,14)

அவர்கள் அல்லாஹ் அல்லாதவர்களிடம் துஆச் செய்வதை இணைவைத்தல் என்று அல்லாஹ் இந்த வசனத்தில் கூறியுள்ளான். சூரா அல்முஃமினூனில் அதனை அல்லாஹ் நிரகாரித்தல் என்று கூறியுள்ளான்.

மேலும், அல்லாஹ் சூரதுத் தவ்பாவில் கூறுகின்றான்: "அவர்கள் தங்கள் வாய்களினால் (ஊதி) அல்லாஹ்வின் பிரகாசத்தை அணைத்துவிட நாடுகின்றார்கள். இந்நிராகரிப்போர் வெறுத்தபோதிலும் அல்லாஹ் தன்னுடைய பிரகாசத்தைப் பூர்த்தியாக்கி வைப்பதைத் தவிர (வேறெதையும்) நாடவில்லை. அவன் எத்தகையவனென்றால் தன்னுடைய தூதரை நேர்வழியைக் கொண்டும் சத்திய மார்க்கத்தைக் கொண்டும் அனுப்பிவைத்தான். இணைவைத்துக் கொண்டிருப்போர் (அதனை) வெறுத்தபோதிலும் (உலகிலுள்ள) எல்லா மார்க்கங்களையும் விட அதை மேலோங்கச் செய்யவே (அவ்வாறு செய்தான்).” (அத்தவ்பா: 32,33)

மேற்குறித்த வசனத்தில் கூறப்பட்டோரை அல்லாஹ்  நிராகரிப்பாளர்கள் என்றும் இணைவைப்பாளர்கள் என்றும் கூறியுள்ளான். எனவே, நிராகரிப்பாளனுக்கு இணைவைப்பாளன் என்றும், இணைவைப்பாளனுக்கு நிராகரிப்பாளன் என்றும் கூற முடியும் என்பதை மேற்குறிப்பிடப்பட்ட வசனங்கள் அறிவிக்கின்றன. மேலும், இதற்குச் சான்றாக அதிகமான குர்ஆன் வசனங்களும் நபிமொழிகளும் காணப்படுகின்றன.

"ஒரு (முஸ்லிமான) மனிதனுக்கும் இணைவைத்தல், நிராகரித்தல் ஆகியவற்றுக்கும் மத்தியில் உள்ள வித்தியாசம் தொழுகையை விடுவதாகும்” என்ற நபிமொழியும் இதன் சான்றுகளில் உள்ளதாகும். இதனை முஸ்லிம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அவர்களுடைய ஸஹீஹில் ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களைத் தொட்டும் அறிவித்திருக்கின்றார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "எங்களுக்கும் அவர்களுக்கும் மத்தியில் உள்ள உடன்படிக்கை தொழுகையாகும். எனவே, அதனை யார் விடுகின்றாரோ அவர் நிராகரித்துவிட்டார்” என்று கூறியதும் அதன் சான்றுகளில் உள்ளதாகும்.

இந்த ஹதீஸை இமாம் அஹ்மத், அபூதாவூத், திர்மிதீ, நஸாஈ, இப்னுமாஜா ஆகியோர் புரைதா இப்னுல் ஹஸீப் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் சரியான அறிவிப்பாளர் வரிசையின்படி அறிவித்திருக்கின்றார்கள். அனுகூலம் புரிவதற்கு அல்லாஹ்வே சொந்தக்காரனாவான்.

-    வழங்கியவர்: அஷ்ஷெய்ஹ் பின் பாஸ் ரஹிமஹுல்லாஹ்

-    பார்க்க: மஜ்மூஉ பதாவா வமகாலாத் முதனவ்விஆ: (09/174,175)

-    தமிழில்: ஸப்ராஸ் இப்னு ருஷான் (அல்கமா அறபுக்கல்லூரி விடுகை வருட மாணவன்)

Previous Post Next Post