அகிலங்களின் இறைவனான அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும்!
பரேல்விய்யா என்பது சூபியிஸத்தைப் பின்பற்றக் கூடிவர்களின் ஒரு பிரிவு ஆகும். இது இந்தியாவில் ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்து கொண்டிருந்தபோது உருவானது. இந்த கொள்கையைப் பின்பற்றுபவர்கள் அவுலியாக்கள் என்று சொல்லப்படக் கூடிய இறை நேசர்கள் மீதும் இறைத்தூதர்கள் மீதும் அதுவும் குறிப்பாக இறுதி தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும் அளவு கடந்த நேசம் கொள்வதன் மூலம் அவர்களுக்கும் இறைவனின் தன்மைகளை ஆற்றல்களை பங்கிடுகின்றனர்.
பரேல்விய்யாக் கொள்ளையைத் தோற்றுவித்தவர்: –
இந்தக் கொள்கையைத் தோற்றுவித்தவரின் பெயர் ‘அஹமது ரிதா கான் இப்னு தகீ அலிகான்’ என்பதாகும். இவர் இந்தியாவிலுள்ள உத்திர பிரதேச மாநிலத்திலுள்ள பரேலி என்ற ஊரில் கி.பி. 1851 (ஹிஜ்ரி 1272) ஆம் ஆண்டு பிறந்தார். இவர் தன்னைத் தானே ‘அப்துல் முஸ்தஃபா’ என்று அழைத்துக் கொண்டார். (பொருள் : முஸ்தஃபா (முஹம்மது) வின் அடிமை)
அஹமது ரிதா கானின் ஆசிரியர்: –
ஆங்கிலேய ஏகாதிபத்ய ஆட்சிக்கு எதிராக போராடிய முஸ்லிம்களின் ஒற்றுமையைச் சிதைத்து அவர்களின் வலிமையைக் குறைத்திட சதித்திட்டம் தீட்டி இஸ்லாத்தில் பிரிவுகளைத் தோற்றுவிக்கும் எண்ணத்தில் ஆங்கிலேயர்களின் ஆதரவில் காதியானிய்யா என்றொரு பிரிவைத் தோற்றுவித்த மிர்ஸா குலாம் அஹ்மது அல்-காதியானியின் உடன் பிறந்த மூத்த சகோதரர் அல்-மிர்ஸா குலாம் காதிர் பெக்(g) என்பவர் தான் பரேல்விய்யா பிரிவைத் தோற்றுவித்த அஹமது ரிதா கானின் ஆசிரியர் ஆவார். இவரின் பாட்னார் ஷீஆக்களை சார்ந்தவராவார்
அஹமது ரிதா கான் எழுதிய நூல்களில் குறிப்பிடத்தக்கவைகள் : –
அன்பா அல் முஸ்தஃபா மற்றும் காலிஸ் அல்-இத்திகாத் ஆகியவையாகும்.
பரேல்விய்யாவின் வழிதவறிய கொள்கைகளில் சில :
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் படைப்பினங்களை அனைத்தையும் நிர்வகிக்கும் ஆற்றல் உள்ளவர் என்று நம்பிக்கை கொள்வது.
இறை பாதைகளில் தங்களை அர்பணித்த துறவிகளும், இறைநேசர்களும் படைப்பினங்களில் நிர்வாகத்தில் ஆதிக்கம் செலுத்த முடியும் என்று நம்பிக்கை கொள்வது.
முஹம்மது நபி (ஸல்) அவர்களை அளவுக்கு மீறி புகழ்ந்து அவர்களிடமே தேவையைக் கேட்கும் அளவிற்கு நம்பிக்கை கொண்டுள்ளனர்.
முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு மறைவான ஞானம் இருக்கிறது என்று நம்பிக்கை கொள்வது.
முஹம்மது நபி (ஸல்) அவர்களை அல்லாஹ்வின் ஒளி என்று நம்பிக்கை கொள்வது.
இறைத்தூதர்களிடத்திலேயும், மற்ற மஹான்களையும் அழைத்து உதவி தேடலாம் என்று நம்பிக்கை கொள்வது.
அல்லாஹ்வை அல்லாஹ் சாஹிப் என்று அழைக்கலாம்.
நபிமார்களை மனிதர்கள் என்பவன் காபிராவான்.
பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர்ரஹீம் என்று எழுதுவதால் எந்த பலனும் இல்லை.
லாயிலாக இல்லல்லாஹு வஹதஹூ லாஸரீகலஹூ என்று மய்யிதுடைய கபனில் எழுதி அந்த மய்யிதை கபரில் வைத்தால் அந்த மைய்யிதின் அருகில் முன்கர் நகீர் மலக்குமார்கள் வரமாட்டார்கள்.
கபரின் பக்கத்தில் பாங்கு சொல்வதால் சைத்தான் ஓடுகிறான், அந்த கபருக்கு பரக்கத் இறங்குகிறது.
கபருக்கு விளக்கேற்றி வைப்பது ஆகுமான காரியங்களில் உள்ளதாகும்.
இந்தக் கொள்கைகள் அனைத்தும் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையான ‘வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வுத் தஆலாவைத் தவிர வேறு யாருமில்லை மேலும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் திருத் தூதரும் அடியாரும் (மனிதரே) ஆவார்கள்’ என்ற அடிப்படை ஆதாரத்திற்கு முற்றிலுமாக மாறுபடுவதால் இந்த கொள்கைகளுக்கும் இஸ்லாத்திற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.
இஸ்லாத்தின் அடிப்படைகள்: –
இஸ்லாம் என்பது இரண்டு அடிப்படைகளில் அமைந்துள்ளது. அவைகள்: –
இறுதி வேதமாகிய அல்-குர்ஆன்
முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வழிமுறை.
பரேல்வியின் மேற்கூறப்பட்ட கொள்கைகள் அனைத்தும் அல்-குர்ஆன் மற்றும் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வழிமுறைக்கு முற்றிலுமாக மாறுபடுவதால் இஸ்லாம் இவற்றை ஒட்டு மொத்தமாக நிராகரிக்கிறது.
ஏக இறைவன் தனது இறுதி வேதமாகிய அல்-குர்ஆனில் கூறுகிறான்: –
“(நபியே!) நீர் கூறும்: ‘நான் பிரார்த்திப்பதெல்லாம் என்னுடைய இறைவனைத் தான்; அன்றியும், நான் அவனுக்கு எவரையும் இணை வைக்க மாட்டேன்.’
கூறுவீராக: ‘நிச்சயமாக நான் உங்களுக்கு நன்மையோ, தீமையோ, செய்ய சக்தி பெற மாட்டேன்.’
கூறுவீராக: ‘நிச்சயமாக அல்லாஹ்வை விட்டும் ஒருவரும் என்னைப் பாதுகாக்க மாட்டார்; இன்னும்,
அவனையன்றி ஒதுங்குந் தலத்தையும் நான் காணமுடியாது.
‘அல்லாஹ்விடமிருந்து (வருவதை) எடுத்துச் சொல்வதும், அவனுடைய தூதுவத்துவத்தையும் தவிர (எனக்கு வேறில்லை). எனவே, எவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்கிறாரோ அவருக்கு நிச்சயமாக நரக நெருப்புத்தான். அதில் அவர் என்றென்றும் இருப்பார்’ என (நபியே!) நீர் கூறும்” (அல்-குர்ஆன் 72:20-23)
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஓரு சொற்பொழிவில் கண்கள் சிவக்க குரலை உயர்த்தி கூறினார்கள்: –
“…செய்திகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். நேர்வழியில் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களின் நேர்வழியாகும். விஷயங்களில் கெட்டது மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்டது (பித்அத்) ஆகும். ஓவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும்.” அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), ஆதாரம் : முஸ்லிம்
“மரியமின் மகன் விஷயத்தில் கிறிஸ்தவர்கள் நடந்து கொண்டதுபோல் நீங்கள் என்னைப் புகழ்வதில் வீண் விரயம் செய்யாதீர்கள். நான் ஓர் அடிமை மாத்திரமே. எனவே, மிக எளிமையாக “அல்லாஹ்வின் அடிமையும் திருத்தூதருமே” என்று கூறுங்கள்.” (புகாரி)