உம்மத்தில் பிரியும் 72 வழிகெட்ட கூட்டங்கள் பற்றி ஓரு சுருக்கமான பார்வை

بــــــــــــــــســـــم الله الرحـــــــمــــن الرحـــــــــيــم

الحمد لله رب العالمين والصلاة والسلام على من لا نبي بعده اما بعد

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

وَإِنَّ أُمَّتِيِ سَتَفْتَرِقُ عَلَى ثَلاَثٍ وَسَبْعِيْنَ مِلَّةً، كُلُّهَا فِي النَّار إِلاَّ مِلَّةٍ وَاحِدَة: قِيْلَ مَنْ هِيَ يَا رَسُولَ اللهِ قَالَ : مَا أَنَا عَلَيْهِ اليَوْمَ وَأَصْحَابِي كتاب الشريعة للآجري

எனது உம்மத் 73 கூட்டங்களாகப் பிரியும். அவை அனைத்தும் நரகம் செல்லும். ஒன்றைத் தவிர. அல்லாஹ்வின் தூதரே அவர்கள் யார்? என்று கேட்கப்பட்டபோது, அக்கேள்விக்கு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறிய பதில் எமக்கு நேர்வழியின் அடிப்படையை எடுத்துக் காட்டுகிறது. அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பின்வருமாறு பதில் சொன்னர்கள்,

"இன்று நானும் எனது தோழர்களும் எதன் மீதிருக்கின்றோமோ அதில் இருப்பவர்கள்."

 அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (அஷ் ஷரீஆ இமாம் அல் ஆஜுர்ரி)

மேற்கூறப்பட்ட நபிமொழியின் அடிப்படையில் அணுகும்போது, ஸிராதுல் முஸ்தகீம் என்ற நேரான பாதையைத் தவிர்ந்து, இன்னுமொரு பாதையினை தங்களின் பாதையாக எடுத்துக் கொண்ட பிரிவுகளை வழிகேடான பிரிவுகள் என்று நாம் பிரித்துக் காட்டுகிறோம். ஸிராதுல் முஸ்தகீம் என்பது நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களும், அன்னாரின் பயிற்சிப் பாசறையில் வளர்ந்த ஸஹாபாக்களும் பின்பற்றிய பாதையாகும். இதற்கு மாற்றான பாதைகளை யாரெல்லாம் உருவாக்கினார்களோ அவர்கள் அனைவரின் பாதை வழிகேடான பிரிவுகளில் உள்ளடக்கப்படுகின்றன.

மேற்கூறிய ஹதீஸில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறிய உம்மத்தின் 73 கூட்டங்களில் 72 கூட்டங்கள் நரகத்தைச் சென்றடையக் கூடிய கூட்டங்கள் ஆகும். இதனை  ஆறு அடிப்படை கூட்டங்களாக அஇம்மதுல் முஸ்லிமீன் (முஸ்லிம்களின் இமாம்கள்) நமக்கு பிரித்துக் காட்டியிருக்கிறார்கள். 

இந்த ஆறு பிரிவுகளைப் பற்றி சுருக்கமான அறிமுகத்தைப் பெற்றுக் கொள்வோம்.

ஹவாரிஜ் :

அரபியில் "ஹரஜ" என்பதற்கு "வெளியேறினான்" என்று பொருளாகும். தங்களின் வழிகேட்டின் காரணமாக அல் ஜமாஅத்தை விட்டு  பிரிந்து சென்றதால் இவர்களை "வெளியேறியவர்கள்" (ஹவாரிஜ்) என்று உலமாக்கள் அழைத்தார்கள். ஹவாரிஜ் என்ற கூட்டம் அல் ஜமாஅத்தை விட்டும் வெளியேறி (அதாவது ஸஹாபாக்களை விட்டும் பிரிந்து) ஸஹாபாக்களின் விளக்கத்தை மறுத்தார்கள். அத்துடன் பெரும் பாவம் செய்தவதரை காபிர் என்று தீர்ப்பளித்தார்கள். மேலும், ஆட்சியாளர்களுக்கு எதிராகப் போராடுதல் போன்ற பல வழிகேடுகள் இவர்களிடம் உள்ளன.

ரவாபிழ் :

அரபியில் ரப்த் என்பதற்கு "மறுத்தல்" என்று பொருளாகும். இந்த கூட்டம் ஸஹாபாக்களை மறுத்ததன் காரணமாக "மறுத்தவர்கள்" (ரவாபிழ்) என அழைக்கப்பட்டார்கள். ரவாபிழ் என்ற கூட்டம் ஸஹாபாக்களின் அந்தஸ்தை மறுத்து, அவர்களை இழிவாக்கி ஸஹாபாக்களின் பலரை காபிர்கள் என்று கூறினார்கள். இஸ்லாமிய உம்மத்தில் ஸஹாபாக்களின் மீது குறை கூறும் வழிமுறையையும், சந்தேகம் கொள்ளும் வழிமுறையையும் இவர்களே ஆரம்பித்து வைத்தார்கள்.

கதரிய்யா :

கதரிய்யா என்ற கூட்டம், அல்லாஹ் விதித்துள்ள கத்ரை மறுப்பவர்கள். அல்லாஹ்வுக்கு எதிர் காலத்தைப் பற்றிய அறிவு இல்லை என்று கூறினர். அதாவது அல்லாஹ் ஒரு விஷயத்தை, அது நிகழ்ந்த பின்புதான் அறிந்து கொள்கிறான் என்றும் கூறி, அல்லாஹ்வின் பண்புகளில் தங்களின் கைவரிசையைக் காட்டினார்கள்.

ஜபரிய்யா :

ஜபரிய்யா என்ற கூட்டம், மனிதனின் அனைத்துச் செயல்களுக்கும் அல்லாஹ்வே பொறுப்பானவன் என்று கூறினர். அதாவது மனிதர்கள் செய்கின்ற பாவங்களுக்கு மனிதர்கள் பொறுப்பாளிகள் அல்ல. அல்லாஹ் கட்டாயப்படுத்தி மனிதர்களின் செயல்களைச் செய்ய வைக்கிறான் என்றும் கூறி, தங்களின் பாவங்களுக்கு அல்லாஹ்வைக் காரணம் காட்டினார்கள்.

முர்ஜிஆ :

முர்ஜிஆ என்ற கூட்டம், ஈமான் என்பது உள்ளத்தின் செயல்பாடு மட்டுமே என்று கூறினர். மேலும், ஈமான் கூடுவதுமில்லை, அது குறைவதுமில்லை என்றும் கூறினர். இதனால் மனிதன் நன்மை செய்த போதும், பாவத்தில் ஈடுபட்ட போதும் அவனுடைய ஈமானை அது எந்த வகையிலும் பாதிப்பதில்லை என்றும் கூறினர். இந்த வாதத்தின் மூலம், கலிமாவை மொழிந்தால் மட்டுமே போதுமானது என்ற அடிப்படையைத் தோற்றுவித்து, அல்லாஹ் ஏவியதை நிலைநாட்டும் தன்மையையும், அல்லாஹ் தடுத்ததைத் தவிர்ந்து கொள்ளும் தன்மையையும் இந்த உம்மத்தை விட்டும் தூரமாக்கினர். மேலும், அனைவருடைய ஈமானும் சமம்தான் என்று இவர்கள் வாதித்தார்கள். 

அஹ்லுஸ்ஸுன்னாவின் நிலைப்பாடு என்னவெனில்,

ஈமான் என்பது உள்ளத்தினால் உறுதி கொண்டு நாவினால் மொழிந்து உடலுறுப்புகளால் செயற்படுவதாகும். இன்னும் அல்லாஹ்வுக்குக் கீழ்படிவதைக் கொண்டு ஈமான் அதிகரிக்கும், அல்லாஹ்வுக்கு மாறு செய்வதைக் கொண்டு ஈமான் குறையும் என்பதாகும்.

முஃதஸிலா அல்லது ஜஹ்மியா :

முஃதஸிலா அல்லது ஜஹ்மிய்யா என்ற கூட்டமே அனைத்து வழிகேடுகளுக்கும், அஸ்திவாரத்தை அமைத்துக் கொடுக்கிறது. இவர்களின் அடிப்படை அல்குர்ஆனுக்கும், அஸ்ஸுன்னாவுக்கும் சிந்தனை ரீதியாக அல்லது சுய புத்தியால் விளக்கம் கொடுக்க வேண்டும் என்பதாகும். அல் குர்ஆனிலும், அஸ்ஸுன்னாவிலும் எந்த விஷயத்தை தங்களின் அறிவு ஏற்றுக் கொள்ள மறுக்கிறதோ, அவைகளை இவர்கள் மறுத்துவிடுவார்கள். இதனால் ஸஹாபாக்களின் விளக்கத்தை இவர்கள் விட்டுவிட்டார்கள்.

சில உலமாக்கள் முஃதஸிலா என்பதைக் குறிப்பிடாமல் ஜஹ்மிய்யா என்ற பிரிவினரைக் குறிப்பிட்டுள்ளனர். அடிப்படை ரீதியாகப் பார்க்கையில் ஜஹ்மிய்யாவின் அடிப்படையும், முஃதஸிலாவின் அடிப்படையும் ஒன்றே ஆகும். ஜஹ்மிய்யா எனப்படுபவர்கள் தங்களின் அறிவுக்கு முதலிடம் கொடுத்து, படைப்பினங்களுடன் அல்லாஹ்வை ஒப்பிட்டதனால் அல்லாஹ்வின் அனைத்துப் பண்புகளையும் மறுக்கின்றனர்.

இவை, வரலாற்றில் இஸ்லாமிய உம்மத் கொள்கை ரீதியாக பிரிந்த அடிப்படைகளாகும். இவை ஒவ்வொன்றும் பன்னிரெண்டு கூட்டங்களாகப் பிரிவதையும் வரலாறு மூலமாக இமாம்கள் அடையாளம் காட்டியிருக்கிறார்கள். இதுவே, இஸ்லாத்தின் கொள்கையினைப் படிக்கின்ற போது பிரிவுகளின் கொள்கைகளைப் பற்றிப் புரிந்து கொள்வதற்கான கல்வி ரீதியான அணுகுமுறையாகும்.

பூமியில் கோடிக்கணக்கில் கூட்டங்களும், பிரிவுகளும் காணப்பட்டாலும் அவைகள் அனைத்தும் மேற்கூறப்பட்ட 72 கூட்டத்தினுள் உள்ளடங்கியிருப்பதால், நாம் அவைகளை இலகுவாக அடையாளம் கண்டு கொள்ளலாம். மேலும், அவைகளின் அடிப்படைகள் ஆறு முக்கிய பிரிவுகளின் அடிப்படையோடு தொடர்புப்பட்டு இருப்பதையும் நாம் கண்டு கொள்ளலாம். இவை உலமாக்கள் நமக்கு வழிகாட்டிச் சென்றவைகளாகும்.

நாம் இக்கல்வியின் அடிப்படைகளைப் புரிந்து கொண்டால், இன்று நம் சமூகத்தின் மத்தியிலுள்ள வழிகேடுகளையும், வழிகேடர்களையும் கல்வி மூலமாக நாம் அடையாளம் காணலாம்.

எனவே, இன்று நம் சமூகத்தில்

ஒருவன் வந்து அல்குர்ஆனையும், அஸ்ஸுன்னாவையும் தர்க்கத்தின் அடிப்படையில் விளங்கக் கூடியவனாக இருந்தால், அவன் முஃதஸிலாவின் கொள்கையைச் சேர்ந்தவன் என்பதை நாம் அடையாளம் காணலாம்.

அதே போன்று ஒருவன் ஸஹாபாக்களை குறைக் கூறி பேசினால் அவன் ரவாபிழ் என்ற கூட்டத்தின் கொள்கையைக் கொண்டவன் என்பதை நாம் இனம் காணலாம்.

அதே போன்று ஒருவன் ஸஹாபாக்களின் விளக்கம் நமக்கு அவசியமில்லை என்று வாதிட்டால் அவன் ஹவாரிஜ் என்ற பிரிவில் சேர்க்கப்படுவான்.

அதே போன்று ஒருவன் ஈமானைப் பற்றிக் கூறும் போது, ஈமானை நாம் உள்ளத்தினால் நம்பினால் போதுமானது. பாவம் செய்தாலும், செய்யாவிட்டாலும் நன்மை செய்வதற்கு முயற்சி செய்தாலும், செய்யாவிட்டாலும் அது உங்கள் ஈமானைப் பாதிக்காது எனக் கூறினால். மேலும் மனிதர்களுக்கு எச்சரிக்கை செய்யாமலும், நன்மைகளை எடுத்துக் காட்டி வழிகாட்டாமலும், நன்மையின் பால் ஆர்வமூட்டாமலும் இருக்கின்றவன் முர்ஜிஆ என்ற வழிகெட்ட கொள்கையைச் சுமந்தவன் என்பதை நாம் அறியலாம்.

எனவேதான் பிரிவுகள் பற்றிய அறிவை நாம் கல்வி மூலமாக பெற்றிருப்பதன் மூலம், ஒருவனுடைய கொள்கைக்குப் பின்னால் இருக்கும் வழிகேடு என்னவென்று நாம் அறிந்து கொள்ளலாம்.

இந்த 72 கூட்டங்களைப் பற்றி,

1.இமாம் அபுல் ஃபரஜ் அப்துர்ரஹ்மான் இப்னுல் ஜவ்ஸி (ரஹிமஹுல்லாஹ்) – தல்பீஸ் இப்லீஸ் என்ற நூலிலும்

2.இமாம் ஷஹ்ரஸ்தானி (ரஹிமஹுல்லாஹ்) – அல் மிலல் வந்நிஹல் என்ற நூலிலும்

3.இமாம் இப்னு ஹஸ்ம் அந்துலூஸி (ரஹிமஹுல்லாஹ்) – அல் பிஸல் பில் மிலல் என்ற நூலில்

4.இமாம் அப்துல் காஹிர் பக்தாதி (ரஹிமஹுல்லாஹ்) – அல் பர்க் பைனல் பிரக் என்ற நூலிலும் விளக்கியுள்ளார்கள்.

இவர்களைப் போன்று இன்னும் பல இமாம்கள் பிரிவுகளைப் பற்றிய பாடத்தில், வழிகேடுகளின் அடிப்படைகளை எடுத்துக் காட்டுவதற்காக பிரிவுகளின் முக்கிய ஆறு அடிப்படைகளையும் அடையாளம் காட்டியுள்ளனர்.

அல்லாஹ் மிக அறிந்தவன்.

-அஷ்ஷெய்க் அபூ அப்திர் ரஹ்மான் யஹ்யா ஸில்மி ஹபிழஹுல்லாஹ்
أحدث أقدم