திருக் குர்ஆனின் சிறு அத்தியாயங்கள் விளக்கவுரை

திருக் குர்ஆனின் சிறு அத்தியாயங்கள் (அத்: 93 முதல் 114 வரை)

மௌலவி மஸ்தான் அலீ பாகவி, உமரி (அபூ காலித்), வெளியீடு: இஸ்லாமிக் சென்டர், உனைஸா, சவூதி அரேபியா

உள்ளடக்கம்:

சூரத்துல் பாத்திஹா (1)
சூரத்துள் ளுஹா (93)
சூரத்துந் நஷ்ரஹ் (94)
சூரத்துத்(த்)தீன் (95)
சூரத்துல் அலக் (96)
சூரத்துல் கத்ர் (97)
சூரத்துல் பய்யினா (98)
சூரத்து ஜில்ஜால் (99)
சூரத்துல் ஆதியாத் (100)
சூரத்துல் காரிஆ (101)
சூரத்துத் தகாஸுர் (102)
சூரத்துல் அஸ்ர் (103)
சூரத்துல் ஹுமஸா (104)
சூரத்துல் ஃபீல் (105)
சூரத்து குறைஷ் (106)
சூரத்துல் மாஊன் (107)
சூரத்துல் கவ்ஸர் (108)
சூரத்துல் காஃபிரூன் (109)
சூரத்துன் நஸ்ர் (110)
சூரத்துல் லஹப் (111)
சூரத்துல் இ خக்லாஸ் (112)
சூரத்துல் பலக் (113)
சூரத்துன் நாஸ் (114)

பதிப்புரை:
எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே! ஸலாத்தும் ஸலாமும் நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தினர், தோழர்கள் - அனைவர் மீதும் பொழியட்டுமாக!

இவ்வுலகில் அல்லாஹ் நமக்கு வழங்கியிருக்கும் சிறப்பும் கண்ணியமும் இஸ்லாம் மற்றும் குர்ஆனின் அடிப்படையில் அமைந்ததாகும். எவர் தீனுல் இஸ்லாத்தை ஏற்று திருக்குர்ஆனின் வழியில் நடைபோடுகிறாரோ அவரே வெற்றியும் ஈடேற்றமும் அடைவார் என்பதும் இஸ்லாத்தையும் குர்ஆனையும் புறக்கணிப்பவர் வழி கேட்டிற்கும் வீழ்ச்சிக்குமே ஆளாவார் என்பதும் மறுக்க முடியாத உண்மைகளாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "திண்ணமாக அல்லாஹ் இந்த வேதத்தின் மூலம் எத்தனையோ கூட்டத்தார்களை உயர்த்துகிறான். இன்னும் எத்தனையோ கூட்டத்தார்களைத் தாழ்த்துகிறான்" (அறிவிப்பு: உமர் (ரலி), நூல்: ஸஹீஹ் முஸ்லிம், இப்னு மாஜா)

அல்லாஹ்வின்; கயிற்றை உறுதியாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்., பிரிந்து விடாதீர்கள்"(3:103) என்பது திருக் குர்ஆனின் கட்டளை. இதன் கருத்து என்ன? திருக்குர்ஆனின் வழிகாட்டலை உறுதியுடனும் ஒற்றுமையாகவும் பின்பற்றி வாழும் போதுதான் அல்லாஹ்வின் உதவி கிடைக்கும். வெற்றியும் முன்னேற்றமும் பெற முடியும். மறுமையின் ஈடேற்றத்திற்கு உத்தரவாதம் அளிப்பதும் அதுவே! - இந்தக் கருத்தை இன்னும் தெளிவாக விளக்குகிறது பின் வரும் நபிமொழி:

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: "மகிழ்ச்சி அடையுங்கள். இந்த ‘குர்ஆன்’ (எனும் கயிற்றின்) ஒரு பகுதி அல்லாஹ்வின் கையில் உள்ளது. மற்றொரு பகுதி உங்கள் கையில் உள்ளது. எனவே அதை உறுதியாகப் பற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு நிச்சயம் நீங்கள் அழிவுக்குள்ளாக மாட்டீர்கள். வழிதவறிப் போகவும் மாட்டீர்கள்!" (அறிவிப்பு: ஜுபைர்(ரலி), நூல்: ஸஹீஹுல் ஜாமிஃ)

இன்று உலகில் முஸ்லிம்கள் சந்தித்துக் கொண்டிருக்கும் துன்பங்களுக்கும் பின்னடைவுக்கும் என்ன காரணம்? குர்ஆனுடனான தொடர்பில் அவர்கள் பலவீனப்பட்டிருப்பதும் குர்ஆனை கற்காமலும் பிறருக்குக் கற்றுக்கொடுக்காமல் புறக்கணித்ததும் அது வழங்கும் அறிவுரைகளைப் பின்பற்றாததுமே காரணம்.

எனவே முஸ்லிம்கள் தங்களது ஆரம்பகால சிறப்பையும்; முன்னேற்றத்தையும் மீண்டும் பெற வேண்டுமானால் குர்ஆனின் பக்கம் திரும்பினால்தான் முடியும்; குர்ஆன் சுமத்தியுள்ள கடமைகளை முழுமையாக நிறைவேற்றினால்தான் முடியும்.

குர்ஆனுடன் நாம் ஏற்படுத்திக்கொள்ளும் தொடர்பின் ஆரம்பம் குர்ஆனை கற்பதும் கற்பிப்பதும்தான். அதுவே முன்னேற்றம் காண்பதற்கான முதல்படி! முதல் முயற்சி!

நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்: "உங்களிலே மிகவும் சிறந்தவர் யாரெனில், யார் தானும் குர்ஆனை கற்று பிறருக்கும் கற்றுக் கொடுக்கிறாரோ அவர்தான்" (அறிவிப்பு: உஸ்மான் (ரலி) நூல்: புகாரி, திர்மிதி, இப்னு மாஜா)

திருக் குர்ஆனின் சிறு அத்தியாயங்கள் - உச்சரிப்பும் உரையும் எனும் இந்நூல் புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய சகோதரர்களைக் கருத்தில் கொண்டு தயார் செய்யப்பட்டது. ஆனால் ஏனைய சகோதரர்களும் இப்படி ஒரு நூல் எங்களுக்கும் தேவைதான் என்றனர்.

சூரத்துல் பாத்திஹாவையும் இதர சிறு அத்தியாயங்களையும் - அரபி மூலம் மற்றும் தமிழ் உச்சரிப்புடன் கொடுத்தால் போதும் என்று தொடங்கிய இப்பணி, பின்னர் விரிவடைந்து ஒவ்வொரு அத்தியாயத்தின் சுருக்கமான விளக்கமும் அவை இறக்கப்பட்ட வரலாற்று நிகழ்ச்சிகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் உள்ளடக்கிய இந்நூல், தௌஹீத் எனும் ஏகத்துவக் கொள்கைக்கு உரமூட்டக் கூடியதாகவும் பிற மத சகோதரர்களுக்கு நற்சிந்தனை அளித்து சத்தியத்தின் பக்கம் அழைப்பு விடுக்கக் கூடியதாகவும் திகழ்கிறது.

இவ்வாறு எல்லோரின் தேவையையும் எதிர்பார்ப்பையும் நிறை வேற்றும் வகையில் இந்நூல் மலர்ந்திருப்பது ஏக இறைவனாகிய அல்லாஹ்வின் கருணையே தவிர வேறில்லை. அனைத்துப் புகழும் அவனுக்கே சொந்தம்.

இவை சூரத்துள் ளுஹா முதல் அந்நாஸ் வரை 22 அத்தி யாயங்கள்! இந்த சூராக்களுக்கு -கிஸாருல் முஃபஸ்ஸல் (சிறு அத்தியாயங்களின் தொகுதி) என்றொரு சிறப்புப் பெயரும் உண்டு. இவை திருக்குர்ஆனின் 30 வது பாகம் அம்ம ஜுஸ்வில் இடம் பெற்றுள்ளன.

பொதுவாக திருக்குர்ஆனின் 30 ஆம் பாகத்தின் சூராக்கள் வரலாற்றில் தனி முத்திரை பதித்தவையாகும். அவற்றில் பெரும்பாலான சூராக்கள் நபி (ஸல்) அவர்களின் மக்கா வாழ்க்கையின் போது இறக்கியருளப்பட்டவை. ஏகத்துவம், தூதுத்துவம், மறுமை எனும் இஸ்லாத்தின் அடிப்படை கொள்கைகள் அழுத்தமாகவும் இதயங்களை ஈர்க்கும் வண்ணமும் திரும்பத் திரும்ப இவற்றில் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மறுமை நாள் தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகளைக் கண்ணெதிர்க் காட்சிகள் போல் இந்த சூராக்களில் எடுத்துக் காட்டியிருப்பது மறுமை அச்சத்தை நெஞ்சத்தில்; நீங்காமல் நிலைத்திருக்கச் செய்கிறது.

இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் இந்த அத்தியாயங்களின் மூலம் அளிக்கப்பட்ட பயிற்சிதான் நபித்தோழர்களின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. எண்ணற்ற துன்பங்கள் அவர்களுக்கு நேர்ந்தபோதும் இஸ்லாத்தில் - ஏகத்துவக் கொள்கையில் அவர்களை உறுதியாக நிலைத்திருக்கச் செய்தது.

அதுமட்டுமல்ல, இறைமார்க்கத்தை இத்தரணியில் நிலை நாட்டும் பணியில் நபி(ஸல்) அவர்களுக்கு உறுதியான ஒத்துழைப்பை நபித்தோழர்கள் நல்கினார்கள். இஸ்லாத்தின் போதனைகளையும் அடிப்படைக் கொள்கைக் கோட்பாடுகளையும் மக்களிடையே பரப்புவதில், மறுமை வெற்றிக்கான நன்மைகளைத் தேடுவதில் முனைப்பான ஈடுபாட்டை அவர்களுக்கு அளித்தது.

இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் ஹிஜ்ரத் மற்றும் நுஸ்ரத் (மக்காவைத் துறந்து மதீனாவில் குடிபுகுந்தது ஹிஜ்ரத். அப்படி நாடு துறந்து வந்தவர்களுக்கு நல்லுதவி அளித்தது நுஸ்ரத்) எனும் இருபெரும் தியாகங்களை மனித வரலாறே வியக்கும் வண்ணம் நபித்தோழர்கள் மேற்கொண்டார்கள்.

அந்த அளவுக்கு அவர்களின் இதயங்களில் அல்லாஹ் மற்றும் ரஸுல் மீதான அன்பை ஆழப்பதித்ததும் ஆர்வமூட்டியதும் இந்தச் சிறு அத்தியாயங்கள்தாம்! இவற்றின் மூலம் பெற்ற சிறப்புப் பயிற்சிதான்!

ஆனால் இன்று முஸ்லிம்களின் நிலை என்ன? இந்த அத்தியாயங்களை ஆண்கள், பெண்கள், சிறியோர், பெரியோர் என எல்லோரும் அதிக அளவில் ஓதுகிறோம்., மனப்பாடம் செய்கிறோம்;. ஆனாலும் நம் உள்ளத்தில் எழுச்சியோ சிந்தனையில் தெளிவோ, வாழும் போக்கில் ஏதேனும் மாற்றமோ திருப்பமோ எது ஒன்றும் ஏற்படுவதில்லையே, என்ன காரணம்?

வசனங்களின் பொருள் புரியாமலும் அவற்றின் வழிகாட்டல் தெரியாமலும் வரலாற்றுப் பின்னணிகள் அறியாமலும் வெறுமனே ஓதுவதும் வெறுமனே மனப்பாடம் செய்வதும்தானே காரணம்!

மட்டுமல்ல, இவற்றையெல்லாம் எல்லோரும் எளிதில் படித்துத் தெரிந்து கொள்ளும் வகையில் நமது மொழியில் சிறிய ஏடுகள் இல்லை. பெரிய பெரிய தப்ஸீர் - விரிவுரை நூல்களில் ஆய்வு செய்வது எளிதல்ல., எல்லோராலும் முடிவதல்ல என்பதும் உண்மைதான்.

இத்தகைய சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டே இந்நூல் உருவாக்கப்பட்டது. சூரத்துல் பாத்திஹாவையும் இதர சிறு அத்தியாயங்களையும் எளிதாக ஓதி மனப்பாடம் செய்யும் வகையிலும் அவற்றின் கருத்துகளைத் தெளிவாகப் புரிந்து கொள்வதற்கு வசதியாகவும் தமிழில் உச்சரிப்பும் பொருளும் விரிவான கண்ணோட்டத்துடன் சுருக்கமான விளக்கமும் இதில் கொடுக்கப்பட்டுள்ளன.

வசனங்களின் உச்சரிப்பை அனைவரும் எளிதாகப் புரிந்து, முறையாகவும் தெளிவாகவும் ஓதும் வகையில் தமிழ்ப்படுத்திடப் பெரிதும் நான் முயன்றுள்ளேன். அதற்காக ஒரு புதிய பாணியே மேற்கொள்ளப்பட்டுள்ளது. சில அரபி எழுத்துகளின் உச்சரிப்பு தமிழில் இல்லை என்பதால் ஆங்கில எழுத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ளன. சில இடங்களில் தமிழ் எழுத்துக்களுடன் அரபி எழுத்துக்களும் கொடுக்கப்பட்டுள்ளன. புரியவைப்பதற்காகவே இந்தப் புதிய அணுகுமுறை.

இந்நூலில் ஏதேனும் குறை இருந்தால், ‘இப்படிக் கொடுத்தால் இன்னும் சிறப்பாக அமையுமே என்கிற கருத்து’ யாரிடமாவது இருந்தால் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். இன்ஷா அல்லாஹ் அடுத்த பதிப்பில் திருத்திக் கொள்கிறோம்.

மிகக் குறுகிய காலத்தில் எழுதி முடித்த இந்நூலாக்கப் பணி முழுமை பெற ஆலோசனை வழங்கிய அன்பர்களுக்கும் மேலாய்வு செய்து பொருத்தமான திருத்தங்கள் அளித்த மரியாதைக்குரிய ஸெய்யித் முஹம்மத் அன்வரி, ஃபாஸில் பாகவி (மதீனா) அவர்களுக்கும் உளப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த இரண்டாம் பதிப்பில் சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டு திருத்தம்; செய்யப்பட்டுள்ளது. உச்சரிப்பு முறைக்கென தனி அட்ட வணை இடம்பெற்றுள்ளது. அன்பர்கள் சிலர் சுட்டிக்காட்டிய ஒரு சில தவறுகள் மறு ஆய்வு செய்யப்பட்டுத் திருத்தப்பட்டுள்ளன. அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேன்மைமிகு ஷைக் முஹம்மத் பின் ஸாலிஹ் - அல் உஸைமீன் (ரஹ்) அவர்களின் தகுப்ஸீர் ஜுஸ்இ அம்ம நூலில் இருந்து பயன்மிக்க கருத்துகள் சேர்க்கப்பட்டுள்ளன.

அல்லாஹ் நம் அனைவரின் முயற்சியையும் உழைப்பையும் ஏற்று மறுமைக் கூலியை நிறைவாக வழங்குவானாக!

உனைஸா அபூ காலித் உமரி
ஹிஜ்ரி 26.7.1423


ஆதார நூல்கள்:

1) ஹாபிழ் இஸ்மாயீல் இப்னு உமர் இப்னு கஸீர் - அல்- குறைஷிய்யு அல் திமஷ்கிய்யு (ரஹ்) அவர்களின் தஃப்ஸீரு குர்ஆனில் அளீம் (தஃப்ஸீர் இப்னு கஸீர்)

2) முஹம்மத் அல் அமீன் பின் முஹம்மத் அல் முக் தார் அஷ்ஷன்கீத்தி (ரஹ்) அவர்களின் அள்வாவுல் பயானி ஃபீ ஈளாஹில் குர் ஆனி பில் குர்ஆன்

3) அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல் உஸை மீன் (ரஹ்) அவர்களின் தஃப்ஸீருல் குர்ஆனில் கரீம் ஜுஸ்இ அம்ம

4) டாக்டர் ஜைத் உமர் அப்துல்லாஹ் அவர்களின் அல் மஈன் அலா குபஹ் மில் ஜுஸ்இல் அர்பஈன்



சூரத்துல் பாத்திஹா (1), மக்காவில் அருளப்பட்டது

பொருள்:

அளவிலாக் கருணையும் இணையிலாக் கிருபையும் உடைய அல்லாஹ்வின் திருப் பெயரால்!

1) எல்லாப் புகழும் அனைத்துலகையும் படைத்து பரிபாலிக்கக் கூடிய அல்லாஹ்வுக்கே!

2) அவன் மாபெரும் கருணையாளன். தனிப் பெரும் கிருபையாளன்.

3) கூலி கொடுக்கும் நாளின் அதிபதி.

4) உன்னையே நாங்கள் வணங்குகிறோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவி தேடுகிறோம்.

5) எங்களை நீ நேரான வழியில் செலுத்துவாயாக!

6) (அது) எவர்களுக்கு நீ அருள் புரிந்தாயோ அவர்களின் வழி.

7) உனது கோபத்திற்கு ஆளாகாத மற்றும் நெறிகெட்டுப் போகாதவர்களின் வழி!

லா இலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் (இதன் பொருள்: வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை. மேலும் முஹம்மத் நபி அல்லாஹ்வின் தூதர் என்பதாகும். ஒரு மனிதன் இஸ்லாத்தில் சேர விரும்பினால், இதனை மொழிந்து அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர் முஹம்மத் நபி மீதும் நம்பிக்கை கொள்ள வேண்டும்.) எனும் ஏகத்துவக் கலிமாவை மொழிந்து ஏக இறைவனாகிய அல்லாஹ்வின் மீது நாம் நம்பிக்கை கொண்டுள்ளோமே அந்த அல்லாஹ் தான் அகிலம் முழுவதையும் படைத்து பரிபாலித்துக் காத்து வருபவன். அவன் இணையிலா இறைவன். எல்லாப் புகழுக்கும் உரியவன். ஆட்சியதிகாரம் முழுவதும் அவன் கைவசமே உள்ளது. அப்படிப்பட்ட இறைவனைத் தொழுவது - அவனை மட்டுமே தொழுவது நமது கடமை ஆகும்.

‘பேரண்டம் முழுவதையும் படைத்துப் பரிபாலிப்பவனாகிய எனக்கே எல்லாப் புகழும்’ என்று தன்னிலை விதியில் சொல்லாமல் படர்க்கை முறையில் கூறப்பட்டிருப்பது ஏன்?’ என்று ஒரு கேள்வி எழலாம்.

பதில் இதுதான்: அல்லாஹ் அடிப்படை நெறி ஒன்றை நமக்குக்; கற்றுத் தருகிறான்:"என்னுடைய அடியார்களே! நான் வழங்கும் அருட்கொடைகளுக்காகவும் உதவிகளுக்காகவும் எனக்கு நீங்கள் நன்றி செலுத்த நாடினால் எனது மகத்துவத்தையும் மாண்பையும் போற்றிப்புகழ வேண்டுமானால் அல் ஹம்து லில்லாஹி றப்பில் ஆல மீன் (அகிலம் முழுவதையும் படைத்துப் பரிபாலிக்கும் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்) என்று கூறுங்கள்"

எல்லாம் வல்ல இறைவனாகிய அந்த அல்லாஹ்வின் ரஹ்மத்-கருணையும் கிருபையும் எல்லாப் பொருள்களையும் வியாபித்துள்ளது. அவனது பேருபகாரம் எல்லா மனிதர்களையும் சூழ்ந்துள்ளது.

அத்தகைய கருணைமிக்க இறைவன் நம்மைப் படைத்து நமக்கு வாழ்வாதாரம் வழங்கியிருப்பதுடன்; நபிமார்களை அனுப்பித் தந்து வேதங்களையும் இறக்கியருளி நமக்கு நேர்வழி காட்டியிருப்பது இவ்வுலகிலும் மறுவுலகிலும் நாம் நற்பாக்கியம் அடைய வேண்டும் என்பதற்காகத்தான்.

ஆம், கருணைமிக்க அந்த இறைவன்தான் இவ்வுலகில் நாம் நிறைவேற்றும் வணக்க வழிபாடுகளை ஏற்றுக் கொண்டு நாளை மறு உலகில் நற்கூலி வழங்கக் கூடியவனாக இருக்கிறான்.

- பிறகு அல்லாஹ்வை முன்னிலைப்படுத்தி நமது வணக்க வழிபாடுகளை அவனிடம் சமர்ப்பித்து பிரார்த்தனை செய்யும் முறையில் வாசகம் அமைந்துள்ளது.

(யா அல்லாஹ்!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம். அதாவது உன்னை அல்லாத வேறெவரையும் நாங்கள் வணங்க மாட்டோம். வேறு எவரின் ஆணைகளுக்கும் நாங்கள் அடிபணிய மாட்டோம். நாங்கள் அடிமைப்பட்டிருப்பது உனக்கு மட்டும்தான்., உன்னை அல்லாது வேறு எவருக்கும் அல்ல.

ஓர் உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். வணக்க வழிபாடு என்பது, அல்லாஹ்வின் கட்டளைகளை நிறைவேற்றுவதுடன் அவன் விலக்கியவற்றை விட்டும் விலகுவதையும் உள்ளடக்கக் கூடியதாகும். அவ்வாறு செய்யாதவனின் வழிபாடு உண்மையில் நன்மையான காரியமாகாது. எவ்வித நற்பயனும் அளிக்காது. நற்கூலியைப் பெற்றுத்தரக்கூடிய நன்மையான வணக்க வழிபாடு அமைவது கருணைமிக்க இறையோனின் உதவியின்றி சாத்தியமாகாது என்பதால்தான் உன்னையே நாங்கள் வணங்குகிறோம் என்பதைத் தொடர்ந்து கூறப்பட்டுள்ளது: உன்னிடமே நாங்கள் உதவியும் கோருகிறோம்!

அதாவது, உன்னை வணங்கி வாழ்வதற்கான உதவியை உனக்குக் கீழ்ப்படிந்து உனது உவப்பைப் பெறுவதற்கான பாக்கியத்தை நாங்கள் வேண்டுவது உன்னிடம்தான். ஏனெனில் அதற்கான ஆற்றல் உன்னிடம்தான் உள்ளது.

நீ எங்களை நேரான வழியில் செலுத்துவாயாக: அதாவது எந்த மார்க்கத்தை நபிமார்கள் மூலம் நீ அனுப்பித் தந்தாயோ எந்த மார்க்கத்தை இறுதித் தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மூலமாக நிறைவுபடுத்தினாயோ அத்தகைய ஒப்பற்ற இஸ்லாமிய மார்க்கத்தின் பக்கம் எங்களுக்கு வழிகாட்டுவாயாக.அதில் எங்களை நிலைத்திருக்கச் செய்வாயாக. உனது நல்லருளைப் பெற்ற சான்றோர்களின் வழியில் வாழும் பாக்கியத்தை எங்களுக்கு வழங்குவாயாக. அவர்களின் குழுவில் எங்களைச் சேர்ப்பாயாக!

ஆனால் யார் யாரெல்லாம் நேர்வழியை விட்டும் தடம் பிறழ்ந்து போனார்களோ, அதனால் உனது கோபத்திற்கு ஆளானார்களோ அவர்களின் கூட்டத்தில் எங்களைச் சேர்த்து விடாதே!

- இவ்வாறு நாம் கேட்கும் பிரார்த்தனைக்கு பதிலாகவே குர்ஆன் முழுவதும் அமைந்துள்ளது. ஆம், நேர்வழிகாட்டும்படி நாம் வேண்டுகிறோம். அதற்கு இந்த குர்ஆன் முழுவதையும் பதிலாக நம் முன்னால் சமர்ப்பித்து விடுகிறான் இறைவன்.

எனவே வணக்க வழிபாடுகளில் மட்டுமல்ல., வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலும் குர்ஆனின் வழிகாட்டல்களை முழுமையாக நாம் செயல்படுத்துவது அவசியம்.


கவனிக்க வேண்டிய கருத்துகள்:

1) ஏகத்துவம்! அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும்.

2) எந்த உதவியும் அல்லாஹ்விடம் தான் கேட்க வேண்டும்.

அல்லாஹ்விடம் மட்டுமே உதவி கேட்க வேண்டும் எனும் பொழுது இங்கு ஒரு கேள்வி எழலாம்.

நன்மையான காரியத்திலும் பயபக்தியிலும் ஒருவருக்கொருவர் உதவி செய்யுங்கள்"(குர்ஆன் 5 :2) என்று அல்லாஹ் கூறுகிறான்.

நீ ஒரு மனிதனுக்கு அவனது வாகனத்தின் விஷயத்தில் உதவிசெய்வதும், நீ அதன் மீதுஅவனை அமரச்செய்து உதவுவதும் அல்லது அவனது பொருட்களை அதன் மீது ஏற்றி வைப்பதும் தர்மம் ஆகும்" என்று நபி (ஸல்) அவர்களும் நவின்றுள்ளார்கள். (நூல்: புகாரி, முஸ்லிம்)

அல்லாஹ்விடம் மட்டும்தான் உதவி தேட வேண்டும் என்பது மேலே கூறப்பட்ட குர்ஆன் மற்றும் நபிமொழியின் கருத்துகளுடன் முரண்படுவதாகத் தோன்றலாம்.

ஆனால் அல்லாஹ்விடம் உதவி தேடுவதன் கருத்துயாதெனில், எல்லா உதவிகளும் செய்வது அவன்தான்., நமது சக்தியால் எதுவும் ஆகப்போவதில்லை எனும் ரீதியில் அவனிடமே முழுமையாகப் பொறுப்புச் சாட்டுவதாகும். இப்படிப் பொறுப்பு சாட்டும் ரீதியிலான உதவியை அல்லாஹ்விடம் மட்டுமே கேட்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.

ஆனால் நாம் விரும்பக்கூடிய ஒரு காரியத்தில் சக மனிதரின் உதவியை பங்களிப்பை நாடுவது குற்றமில்லை. ஆனால் ஒரு நிபந்தனை: அப்படிப்பட்டவர் உயிருடன் இருக்க வேண்டும்., நமக்கு உதவி செய்யும்; ஆற்றலையும் அவர் பெற்றிருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒருவரிடம் உதவி கேட்பது ஆகுமானதே. அதில் எந்தக் குற்றமும் இல்லை. குர்ஆன் மற்றும் நபிமொழியின் அறிவுரைப்படி ஒருவருக்கொருவர் உதவுவது புண்ணியச் செயலேயாகும்.

ஆனால் உதவி செய்யும் ஆற்றல் இல்லாதவராக அந்த மனிதர் இருந்தால் அவரிடம் உதவி கேட்பது கூடாது. எடுத்துக்காட்டாக, மண்ணறையில் அடக்கம் செய்யப்பட்டவரிடம் உதவி கேட்பது கூடாது. அது ஹராம் (தடுக்கப்பட்டது) மட்டுமல்ல ஷிர்க் எனும் கொடிய இணைவைப்புச் செயலுமாகும். ஏனெனில் மண்ணறை யில் அடக்கப்பட்டிருப்பவர் தனக்கே எந்தப் பயனும் அளித்திட இயலாதவராக இருக்கும்போது பிறருக்கு எவ்வாறு அவரால் உதவிட இயலும்?

3) நிறை புகழ் அனைத்தையும் அல்லாஹ்வின் பால் சேர்ப்பது.

4) மறுமை நம்பிக்கை! மறு உலகில் மனிதர்கள் அனைவரும் மீண்டும் எழுப்பப்படுவதும் உண்மை. சுவனம் அல்லது நரகம் கொண்டு தீர்ப்பளிக்கப்படுவதும்; உண்மை. நற்செயல் புரிந்தவர் களுக்கு நற்கூலி வழங்கும் அந்த அதிபதியின் திரு உவப்பைப் பெறுவதற்காக நன்மைகளைச் சேகரித்துக் கொள்ளுமாறு அனை வருக்கு நல்லார்வம் ஊட்டப்பட்டுள்ளது.

5) மக்கள் மூன்று வகையினராவர். ஒன்று: அல்லாஹ்வின் அருளுக்கு உரியவர்கள். இரண்டு: அவனது சினத்திற்கு ஆளான வர்கள். மூன்று: நெறிதவறிப்போனவர்கள்.

வீண் பிடிவாதத்தினால் நெறிதவறிப்போனவர்கள் யூதர்கள். அறியாமையினால் நெறி தவறிப்போனவர்கள் கிறிஸ்தவர்கள். இது நபி (ஸல்) அவர்களின் வருகைக்கு முன்னால் வாழ்ந்த கிறிஸ்தவர் களின் நிலையாகும்.அதன் பிறகுஅனைவரும் சத்தியத்தை அறிந்து கொண்டே அதற்கு எதிரான போக்கை மேற்கொள்வதால் யூதர்களும் சரி கிறிஸ்தவர்களும் சரி அனைவரும் அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளானவர்களே!



சூரத்துள் ளுஹா (93), மக்காவில் அருளப்பட்டது

பொருள்:

அளவிலாக் கருணையும் இணையிலாக் கிருபையும் உடைய அல்லாஹ்வின் திருப்பெயரால்!

(1) முற்பகலின் மீது சத்தியமாக!

(2) இரவின் மீதும் சத்தியமாக., அது அமைதியாக வந்தடையும்போது!

(3) (நபியே!) உம் இறைவன் உம்மை ஒருபோதும் கைவிடவில்லை! உம்மைக் கோபிக்கவும் இல்லை.

(4) மேலும் திண்ணமாக பிந்திய காலகட்டம் முந்திய காலகட்டத்தை விட உமக்குச் சிறந்தது.

(5) மேலும் விரைவில் உம் இறைவன், நீர் திருப்தி கொள்ளும் அளவு உமக்கு வழங்குவான்.

(6) அவன் உம்மை அநாதையாகக் காணவில்லையா? பிறகு புகலிடம் தந்தானல்லவா?

(7) மேலும் அவன் உம்மை வழியறியாதவராகக் கண்டான்., பிறகு நேர்வழி காண்பித்தான்.

(8) மேலும் அவன் உம்மை ஏழையாகக் கண்டான்., பிறகு செல்வந்தராய் ஆக்கினான்.

(9) ஆகவே நீர் அநாதைகளுடன் கடுமையாக நடந்து கொள்ளாதீர்.

(10) மேலும் யாசகம் கேட்பவரை விரட்டாதீர்.

(11) மேலும் உம் இறைவனின் அருட்கொடை பற்றி எடுத்துரைப்பீராக!

நபிகளார் (ஸல்) அவர்கள் ஹிரா குகையில் தங்கியிருந்த ஒரு நாள் இரவில் வானவர் தலைவர் ஜிப்ரீல் தோன்றி வஹி எனும் இறையருட் செய்தியை அறிவித்தார். அதுதான் ஓதுவீராக, படைத்த உம் இறைவனின் திருப்பெயர் கொண்டு என்று தொடங்கும் ஐந்து வசனங்கள். இவை திருக் குர்ஆனில் சூரத்துல் அலக் எனும் 96 வது அத்தியாயத்தில் இடம் பெற்றுள்ளன. அன்று முதல் வானவர் தலைவர் ஜிப்ரீல், வஹியின் மூலம் அல்லாஹ்வின் வேத வாக்குகளை நபி(ஸல்) அவர்களுக்கு அருளிக் கொண்டிருந்தார்.

மக்களின் இதயங்களில் அறிவுச் சுடரைப் பரவச் செய்த பாக்கியமிக்க அந்நேரம் முதற்கொண்டு நபி (ஸல்) அவர்கள் அளவிலா ஆனந்தம் அடைந்தார்கள். இப்பேரண்டத்தின் அதிபதியாகிய அல்லாஹ், குர்ஆன் வசனங்கள் மூலம் அவர்களுடன் உரையாடியதே அதற்குக் காரணம்.

அப்போதிருந்து சதாவும் ஜிப்ரீலை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள் நபியவர்கள்.

ஆனால் ஜிப்ரீல் வருகை தருவதும் வஹி அருளுவதும் திடீரெனத் தாமதமானது. அதனால் சில நாட்களாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனம் துயரத்திற்குள்ளானது.

வஹி தாமதமான செய்தி அறிந்த மக்கத்து நிராகரிப்பாளர்கள் நபியவர்களின் தூதுத்துவத்தை அலட்சியமாகக் கருதினார்கள். கேலி பேசத் தொடங்கினார்கள்: "முஹம்மதை அல்லாஹ் கைவிட்டு விட்டான்., வெறுத்து விட்டான்போல் தெரிகிறதே. அதனால்தான் வஹி வருவது நின்று விட்டதோ" என்று ஏகடியம் பேசினார்கள்., எள்ளி நகையாடினார்கள்.

இந்நிலையில்தான் அல்லாஹ் இந்த அத்தியாயத்தை இறக்கியருளி நிராகரிப்பாளர்களின் எதிர்பார்ப்புக்கும் ஏளனப்பேச்சுக்கும் மறுப்பளித்து முற்றுப் புள்ளி வைத்தான். அதனால் நபியவர்களின் தூய மனத்திற்கு ஆறுதல் கிடைத்தது. அல்லாஹ்விடத்தில் அவர்களுக்கு இருந்த உயர் பதவி, உன்னத அந்தஸ்து பற்றிய விளக்கமும் அதில் அளிக்கப்பட்டது.

பகலின் ஆரம்ப சில மணி நேரங்கள் மனத்திற்கு மகிழ்ச்சி யாகவும் கண்களுக்குக் குளிர்ச்சியாகவும் இருக்கும்! இதுபோன்றே இப்புவி மீது கருகருவென இருள் படர்ந்து வரக்கூடிய இரவும் அமைதிக்குக் கட்டியங் கூறக்கூடிய அருமையான நேரம்தான்! இவ் விரு கால நேரத்தின் மீதும் சத்தியம் செய்வதன் நோக்கம் என்ன?

ஒரு பேருண்மையை உணர்த்துவதே நோக்கம். தொடங்கியிருக்கும் பகலுக்கும் அடர்ந்துவரும் இரவுக்கும் பின்னடைவு இல்லை என்பது போன்று வஹியும் இனி தொடரத்தான் செய்யுமே தவிர எந்தக் காரணத்தைக் கொண்டும் தொடர்பறுந்து போகாது! கருணைமிக்க இறைவன் காருண்ய நபியவர்களை வெறுத்திடவில்லை., அவர்கள் மீது அவனுக்கு எந்தக் கோபமும் இல்லை.

நபியவர்களுக்காக இவ்வுலகிலும் மறுவுலகிலும் பெரும் பாக்கியங்களை அல்லாஹ் தயார் செய்து வைத்துள்ளான். மனித குலம் முழுவதற்கும் அவர்களை ரஸுலாக -தூதராக அனுப்பி வைத்து அவர்களுக்கு அல்லாஹ் அளித்த கண்ணியத்திற்கும் மேன்மைக்கும் அளவே இல்லை!

மறுவுலகமும் நபியவர்களுக்கு இன்னும் சிறப்பாகவே அமையும். அல்லாஹ் தன் தூதருக்கு எல்லாவிதமான நன்மைகளையும் அருட் பாக்கியங்களையும் அங்கு வழங்குவான். அவர்களின் உம்மத்தினராகிய முஸ்லிம்களுக்கும் நிறைவாகவே அருளுவான். இவ்வாறு அல்லாஹ் வழங்கும் மகத்தான அருட்கொடைகளை நபி (ஸல்) அவர்கள் பொருந்திக் கொள்வார்கள்.

குழந்தைப் பருவம் முதற்கொண்டே நபியவர்களை அல்லாஹ் கைவிட்டு விடவில்லை. ஆம், அநாதையாகப் பிறந்த அண்ணல் நபி (ஸல்) அவர்களைப் பராமரித்து வளர்ப்பதற்கென அவர்களின் பாட்டனார் அப்துல் முத்தலிபை அல்லாஹ் ஏற்பாடு செய்தான். அவர் மரணம் அடைந்தபொழுது எட்டு வயதுச் சிறுவராக இருந்த நபியவர்களை, பெரிய தந்தை அபூ தாலிப் தனது பராமரிப்பில் ஏற்றார்.

அதன் பிறகு நபியவர்கள் சத்திய நெறி குறித்து சீரிய சிந்தனையில் ஆழ்ந்தார்கள். ஏனெனில் நபியவர்கள் எப்போதும் எந்நிலையிலும் சிலைகளை வணங்கியதில்லை. அவற்றை நம்பியதும் இல்லை.

பிறகு நபியவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த சத்திய பாதையின் பக்கம் அல்லாஹ் அவர்களுக்கு வழிகாட்டினான். அதன் பக்கம் மனித குலத்திற்கு அழைப்பு விடுக்கும் தூதராகவும் அவர்களை அனுப்பிவைத்தான்.

ஏழையாக இருந்த நபியவர்களுக்கு அல்லாஹ் உதவினான். ஆம், அவர்களின் பெரிய தந்தை அபூ தாலிபின் செல்வத்தின் மூலம் தேவைகள் நிறைவேறச் செய்தான். பிறகு அவர்களின் அன்பு மனைவி கதீஜா (ரலி)அவர்கள் தம் செல்வம் முழுவதையும் அவர்களிடம் அளித்தார்கள். இதேபோல் பைத்துல் மால் எனும் முஸ்லிம்களின் பொதுநிதியை அல்லாஹ் நபியவர்களின் அதிகாரத்தில் ஒப்படைத்தான். நபியவர்கள் தம்மிடம் இருந்த எல்லாச் செல்வங்களையும் ஏழை எளிய மக்களுக்காகவே செலவு செய்தார்கள்.

இந்த அருட்கொடைகளுக்கு பதிலாகத் தன் தூதருக்கு மூன்று அறிவுரைகள் கூறுகிறான் அல்லாஹ் :
1) நபியே! அநாதைகள் மீது இரக்கம் காட்டுங்கள். கிருபை செய்யுங்கள். அவர்களுடன் அன்பாக நடக்குமாறு முஸ்லிம்களுக்கு ஆணையிடுங்கள்.

2) யாசகம் கேட்பவருடன் மென்மையைக் கடைப்பிடியுங்கள். அவர்களை விரட்டாதீர்கள். அத்தகைய உயர் பண்பைக் கடைப் பிடிக்குமாறு முஸ்லிம்களை ஏவுங்கள்.

3) அல்லாஹ் வழங்கிய அருட்கொடைகள் பற்றி எடுத்துக் கூறுங்கள். அதற்காக அல்லாஹ்வுக்கு நன்றிசெலுத்துங்கள்;. இறை யருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தும் உயர் பண்பாட்டை முஸ் லிம்களுக்கும் கற்றுக் கொடுங்கள்.

இத்தகைய கட்டளைகளை நபியவர்கள் எப்படி அமல் படுத்தினார்கள் என்பதை அவர்களின் அழகிய வரலாற்றில் காணலாம். நபி (ஸல்) அவர்கள் அநாதைகளை அரவணைத்துப் பாதுகாத் தார்கள் என்பது மட்டுமல்ல அநாதைகளுக்கு ஆதரவு நல்குமாறு பிற மக்களையும் ஏவினார்கள்.

நபியவர்கள் நவின்றார்கள்: "நானும் அநாதைகளைப் பாதுகாப் பவரும் சுவனத்தில் இவ்வாறு (நெருக்கமாக) இருப்போம். -அந் நிலையை, தம் ஆட்காட்டி விரலையும் நடுவிரலையும் இணைத்துக் காட்டி விளக்கினார்கள்;" (நூல்: புகாரி)- இது, அநாதைக் குழந்தைகளைப் பராமரிக்கும் அனைவருக்கும் கிடைத்த மிகப் பெரிய கூலியாகும்.

யாசகமோ உதவியோ கேட்டு வந்த எல்லோருக்கும் நபியவர்கள் வழங்கி மகிழ்ந்தார்களே தவிர எதுவும் இல்லை என்று சொல்லி யாரையும் திருப்பி அனுப்பியதில்லை.

இறைவனுக்கு நன்றி செலுத்துவதிலும் நபியவர்களின் வாழ்வில் அழகிய முன்மாதிரி உள்ளது. நாவினால் மட்டுமல்ல இறை வனின் ஆணைகளுக்குக் கீழ்ப்படிந்து வாழ்ந்தும் அழகிய வணக்க வழிபாட்டின் மூலமும் அவனுக்கு நன்றி செலுத்தினார்கள்.

ஆம், இரவு நேரங்களில் கால் கடுக்க நின்று வெகு நேரம் வரை நபி (ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருந்தபோது, ஏன் இவ்வாறு உடலை வருத்துகிறீர்கள் என்று கேட்டதற்கு, நான் நன்றி செலுத்தக்கூடிய அடியானாகத் திகழ வேண்டாமா? என்று பதில் சொன்னார்கள் பூமான் நபியவர்கள். (நூல்: ஸஹீஹ் முஸ்லிம்)

கவனிக்க வேண்டிய கருத்துகள்:

1) நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் வழங்கியுள்ள உன்னத அந்தஸ்தும் உயர் பதவியும்.

2) ஜிப்ரீலை சந்திப்பதிலும் அவரிடம் இருந்து குர்ஆன் வசனங்களைப் பெறுவதிலும் நபியவர்களுக்கு இருந்த அதிக ஆர்வம்.

3) அநாதைகள் மீது பரிவு காட்டுவதும் யாசகர்களிடம் மென்மையாக நடந்துகொள்வதும் மிக்க மேலான பண்புகளாகும்.

4) அல்லாஹ்வை அதிகம் அதிகம் புகழ்வதும் அவனுடைய அருட் கொடைகளை எடுத்துரைப்பதுமே உண்மையான இறைநம்பிக்கையாளனின் குணமாகும்.



சூரத்துந் நஷ்ரஹ் (94), மக்காவில் அருளப்பட்டது.

பொருள்:

அளவிலாக் கருணையும் இணையிலாக் கிருபையும் உடைய அல்லாஹ்வின் திருப்பெயரால்!

(1) (நபியே) நாம் உமது இதயத்தை உமக்கு விரிவாக்கித் தரவில்லையா?

(2) மேலும் உமது பெரும் சுமையை உம்மை விட்டு நாம் இறக்கிவைத்தோம்.

(3) அது, உமது முதுகை முறித்துக் கொண்டிருந்தது.

(4) மேலும் உமக்காக உமது புகழை நாம் உயர்த்தினோம்.

(5) உண்மையில் சிரமத்துடன் இலகு உள்ளது.

(6) திண்ணமாக சிரமத்துடன் இலகு உள்ளது.

(7) நீர் ஓய்வாக இருக்கும்போது வணக்க வழிபாட்டில்; முனைப்புடன் ஈடுபடுவீராக.

(8) மேலும் உமது இறைவன் பக்கமே ஆர்வம் கொள்வீராக!

சிறுவயது முதலே நபியவர்களை அல்லாஹ் பேணிப் பாதுகாத்து வந்தான். அதற்குக் காரணம், இஸ்லாத்தின் அழைப்பை மக்களிடம் நிறைவாக எடுத்துச் சொல்லும் நல்லாற்றலை நபி (ஸல்) அவர்கள் பெற வேண்டும் என்பதுதான். அது பற்றியே இந்த அத்தியாயம் எடுத்துரைக்கிறது. இது, முன்புள்ள அத்தியாயத்திற்கு ஒப்பான கருத்தே ஆகும்.

அல்லாஹ், நபிகளாரின் இதயத்தை நிறைவான இறைநம்பிக்கை மூலம் ஒளி பெறச்செய்து, தூதுத்துவப் பணியை முழுமையாக நிறைவேற்றும் விஷயத்தில்; அவர்களுக்கு நல்லார்வம் ஊட்டுகிறான்;.

மக்கத்து குறைஷிகள் இறைநிராகரிப்புக் கொள்கையில் பிடிவாதமாக இருந்ததினாலும் பலவகையான நெருக்கடிகளை நபியவர்களுக்குக் கொடுத்து வந்ததாலும் நபியவர்கள் பெரிதும் கவலை அடைந்தார்கள். ஏனெனில் அனைத்து மக்களும் இஸ்லாத்தை ஏற்றிட வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் அவர்களுக்கு இருந்தது. இந்த அத்தியாயத்தின் மூலம் நபியவர்களுக்கு அல்லாஹ் ஆறுதல் அளித்து அவர்களின் மனக் கஷ்டங்களையும்; கவலைகளையும் அகற்றினான்.

மேலும் நபி(ஸல்) அவர்களின் பெயரையும் புகழையும் அல்லாஹ் உயர்த்தினான். இப்புவி எங்கும் பரவச் செய்தான். எல்லாக் காலமும் நிலைக்கச் செய்தான். இதோ! தினமும் ஐவேளை தொழுகைளிலும் சரி, தொழுகைக்காக அழைப்பு விடுக்கும் பாங்கிலும் சரி, அல்லாஹ்வின் பெயருடன் நபியவர்களின் பெயரும் சேர்த்தே கூறப்படுகிறது. பூமி உருண்டையின் சுழற்சியின் அடிப்படையில் பார்த்தால் உலகில் எந்நேரமும் எங்காவது ஒரு மூலையில் ஏதாவதொரு பள்ளிவாசலில் பாங்கோசை ஒலித்துக் கொண்டே இருக்கிறது. தொழுகையும் நபியவர்களின் மீதான ஸலவாத்தும் தொடர் நிகழ்வாகவே உள்ளன.

மேலும் நபியவர்களின் மீது ஸலவாத் சொல்லவும் அவர்களுக்குக் கீழ்ப்படிந்து வாழவும் அவர்களை நேசிக்கவும் முஸ்லிம்களுக்கு அல்லாஹ் ஆணையிட்டுள்ளான் இவை அனைத்தும் நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் அளித்த கண்ணியத்திற்கும் புகழுக்கும் சாட்சியாகும்.

மட்டுமல்ல அல்லாஹ் சங்கைக்குரிய தன் தூதருக்கு இவ்வாறு நல்வாக்கு அளித்தான். அதாவது மக்காவில் அவர்களுக்கு ஏற்பட்டிருந்த கவலையும் ஏழ்மையையும் நெருக்கடிகளையும் அகற்றுவதாகவும் செல்வச் செழிப்பையும் அமைதியையும் தருவதாகவும் நிம்மதியான வாழ்வுக்கு வழிவகை செய்வதாகவும் வாக்குறுதி அளித்தான். அந்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றவும் செய்தான்;.

ஆம், முஸ்லிம்கள் மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்ற பின்னர், இஸ்லாம் பல பகுதிகளில் பரவிய பின்னர் எல்லாம் நிறைவேறின. இஸ்லாத்திற்கு வெற்றியையும் முஸ்லிம்களுக்கு ஆட்சியதிகாரத் தையும் நிம்மதியையும் அல்லாஹ் வழங்கினான்.

இத்தகைய அருட்கொடைகளுக்காக நன்றி செலுத்துமாறும் வணக்க வழிபாட்டில் ஆர்வத்துடனும் முனைப்புடனும் ஈடுபடு மாறும் நபியவர்களிடம் அல்லாஹ் கூறுகிறான். அதாவது, அழைப்புப் பணி தொடர்பான பகல் நேர ஈடுபாடுகள் முடிந்து விட்டால் இரவு நேரத்தில் தொழுகையில் நில்லுங்கள். அல்லாஹ்வின் உவப்பைப் பெறும் வகையில் ஆர்வத்துடன் வணங்கி வழிபடுங்கள்; என்று அறிவுரை கூறுகிறான்.

இந்த அத்தியாயத்தின் கட்டளைகள் அனைத்தையும் நபி (ஸல்) அவர்கள் நிறைவாகச் செயல்படுத்தினார்கள்.

கவனிக்க வேண்டிய கருத்துகள்:

1) அழைப்புப் பிரச்சாரப் பணியில் உளப்பூர்வமான ஈடுபாட்டையும் பிடிப்பையும் நபியவர்களுக்கு அல்லாஹ் கொடுத்தான்;. தூதுச் செய்தியை முழுமையாக மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதில் நபியவர்களுக்கு நல்லுதவி அளித்தான்.

2) நபி (ஸல்) அவர்களின் புகழை அல்லாஹ் உயர்த்தினான். அவர்களின் பெயரை இப்புவி எங்கும் பரவச் செய்தான். எல்லாக் காலமும் நிலைக்கச் செய்தான்.

3) இரட்சகனின் உவப்பை அடைய நாடி தொடர்ந்து வணக்க வழிபாட்டில் ஈடுபடுமாறு நபியவர்களுக்கு அல்லாஹ் அறிவுரை கூறுகிறான்.



சூரத்துத்(த்)தீன் (95), மக்காவில் அருளப்பட்டது

பொருள்:

அளவிலாக் கருணையும் இணையிலாக் கிருபையும் உடைய அல்லாஹ்வின் திருப்பெயரால்!

(1) அத்தி மீதும் ஒலிவம் மீதும் சத்தியமாக!

(2) சினாய் மலை மீதும் அமைதியான இந்த (மக்கா) நகர் மீதும் சத்தியமாக!

(3) திண்ணமாக நாம் மனிதனை மிகச் சிறந்த அமைப்பில் படைத்தோம்.

(4) பிறகு அவனைத் தாழ்ந்தவர்களிலே மிகவும் தாழ்ந்தவனாக ஆக்கினோம்.

(5) ஆனால் இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்தவர்களைத் தவிர! அவர்களுக்கு முடிவில்லாத நற்கூலி உண்டு.

(6) எனவே (நபியே) இதன் பிறகும் நற்கூலி - தண்டனை (வழங்கப்படும் மறுமை நாள்) விஷயத்தில் உம்மை யாரால்தான் பொய்ப்படுத்த முடியும்?

(7) அல்லாஹ் ஆட்சியாளர்கள் அனைவரினும் மாபெரும் ஆட்சியாளன் அல்லவா?

இந்த அத்தியாயத்தில் கண்ணியத்திற்குரிய நபிமார்களை உலகிற்கு வழங்கிய மூன்று புண்ணியத்தலங்கள் மீது அல்லாஹ் சத்தியம் செய்கிறான். ஒன்று பைத்துல் முகத்தஸ். அத்தியும் ஒலிவமும் அங்கு அதிகம் விளைகின்றன. அங்கு தான் ஈஸா நபி தோன்றினார்கள்.

இரண்டு ஸினாய் மலை. அங்கு தான் நபி மூஸா அவர்களுடன் பேரருளாளன் அல்லாஹ் உரையாடினான். அவர்களுக்கு தூதுத்துவம் வழங்கி எகிப்தின் கொடுங்கோலன் ஃபிர்அவ்ன் இடம் சென்று சத்தியத்தை எடுத்துச் சொல்லுமாறு பணித்து அனுப்பி வைத்தான்.

மூன்றாவது அமைதி நிலவும் மக்கத் திருநகர். அங்குதான் அருமை நாயகம் முஹம்மத் நபி (ஸல்) அவர்களை இறுதித் தூதராக அல்லாஹ் தோன்றச் செய்தான்.

இம்மூன்று இடங்கள் மீதும் ஒருசேர சத்தியம் செய்து, மனிதனை மிக அழகிய தோற்றத்தில், சிறந்த வடிவத்தில் படைத்துள்ளோம்., கண்ணியமும் சிறப்பும் அளித்துள்ளோம் என்று கூறப்பட்டிருப்பதன் கருத்து இதுதான்:

இறைத்தூதுத்துவத்தை விட மிக உயர்ந்த நிலை மனிதனைத் தவிர வேறெந்த படைப்புக்கும் கிட்டியது இல்லை. அத்தகைய உயர் அந்தஸ்து பெற்ற நபிமார்கள் மனிதர்களில் தோன்றினார்கள்.
பிறகு மனிதர்களில் பெரும்பாலோர் நேரான பாதையை விட்டும் தடம் புறண்டு போகிறார்கள். அல்லாஹ்வை நினைவு கூர்ந்து அவனுக்கு நன்றி செலுத்தி புண்ணியச் செயல்கள் செய்து வாழும் நன்நெறி மறந்து தான்தோன்றித்தனமாகச் செயல்படுகிறார்கள். படைத்த இறைவன் வழங்கிய பகுத்தறிவையும், பார்க்கும் - கேட்கும் ஆற்றல்களையும் அவர்கள் சரியாகப் பயன்படுத்துவதில்லை. அதனால் எது உண்மை, எது பொய்மை- எது நன்மை, எது தீமை எனச்சீர்தூக்கிப் பார்ப்பதில்லை. மனம்போன போக்கிலே செயல்பட்டு, இணைவைப்பு மற்றும் இறைநிராகரிப்புக் கொள்கைகளில் சிக்கி, பாவம் பழிகளில் - தீய செயல்களில் மூழ்கி, அவர்களுக்குக் கீழே வேறெந்தப் படைப்பும் இல்லை எனும் அளவு மிகமிகக் கீழான நிலைக்கு தரம் தாழ்ந்து விடுகிறார்கள்.

ஆனால் இன்னொரு பிரிவினர் உள்ளனர். அவர்கள் தாம் இறை நம்பிக்கையாளர்கள். எல்லாம் வல்ல இறைவனாகிய அல்லாஹ்வை உளமார ஒப்புக்கொண்டு நற்செயல்கள் செய்பவர்கள். அதனால் சுவனபதியில் நீடித்த நிலையான அருட்பாக்கியங்கள் அவர்களுக்கு உண்டு.

நிராகரிப்பாளர்களுக்கு இறுதியில் இவ்வாறு எச்சரிக்கை செய்யப் பட்டுள்ளது:

இவர்கள் ஏன் மறுமை நாளை ஏற்க மறுக்கிறார்கள்? அதனைப் பொய்யென்று ஏன் தொடர்ந்து தூற்றுகிறார்கள்? இத்தகைய நிராகரிப்புக் கொள்கையினாலும் ஆணவமான போக்கினாலும் மறுமை நாளில் கொடுமையான நரக வேதனையைத்தான் இவர்கள் எதிர் கொள்ள வேண்டியது வரும்.

கவனிக்க வேண்டிய கருத்துகள்:

1) அல்லாஹ், மூன்று சத்தியங்கள் செய்து மனிதனை மிக அழகிய வடிவத்தில் படைத்திருப்பதாகக் கூறுகிறான்.

2) இறைநம்பிக்கை மற்றும் நற்செயல் மூலம்தான் மனிதன் இவ் வுலகிலும் மறு உலகிலும் உயர்வு அடைய முடியும்.

3) இறைமறுப்புக்கொள்கை மனிதனை இவ்வுலகில் மிகமிகக் கீழான நிலைக்கே கொண்டு செல்லும். மறுஉலகில் நரகம் செல்லவே வழி வகுக்கும்.

4) அல்லாஹ் நீதிமிக்கவன். அவனது தீர்ப்பும் நியாயமானதே.



சூரத்துல் அலக் (96), மக்காவில் அருளப்பட்டது.

பொருள்:

அளவிலாக் கருணையும் இணையிலாக் கிருபையும் உடைய அல்லாஹ்வின் திருப்பெயரால்!

(1) (நபியே) ஓதுவீராக! படைத்த உம் இறைவனின் திருப்பெயர் கொண்டு!

(2) அலக் எனும் (அட்டை போல் ஒட்டிக்கொண்டிருக்கும்) பொருள்களில் இருந்து மனிதனை அவன் படைத்தான்.

(3) ஓதுவீராக! உம் இறைவன் எத்தகைய பெரும் கொடையாளன் எனில்,

(4) அவனே எழுதுகோல் கொண்டு கற்றுக்கொடுத்தான்.

(5) மனிதனுக்கு -அவன் அறியாதிருந்தவற்றைக் கற்றுக் கொடுத்தான்.

(6) அவ்வாறன்று! மனிதன் வரம்பு மீறி நடக்கிறான்.,

(7) தன்னிறைவுடையவனாக அவன் தன்னைக் கருதிக் கொண்டதனால்!

(8) திண்ணமாக உம் இறைவனிடம்தான் அவன் திரும்பிச் சென்றாக வேண்டும்.

இந்த அத்தியாயத்தின் முதல் ஐந்து வசனங்கள்தான் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மீது முதன்முதலாக இறக்கியருளப்பட்டன.

நபியவர்கள் ஹிரா குகையில் தனித்திருந்த பொழுது அவர்களிடம் மலக்குகளின் தலைவர் ஜிப்ரீல் தோன்றி ‘ஓதுவீராக’ என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘நான் ஓதத் தெரிந்தவன் அல்லவே’’என்று பதில் அளித்தார்கள். இரண்டாவது முறையும்‘ ஓதுவீராக’ என்றார் ஜிப்ரீல். அதற்கும் முன்போலவே நபியவர்கள் பதிலளித்தார்கள். மூன்றாவது முறைதான் ஓதுவீராக! படைத்த உம் இறைவனின் திருப்பெயர் கொண்டு என்று தொடங்கி ஐந்து வசனங்களை நபி (ஸல்) அவர்களுக்கு ஜிப்ரீல் ஓதிக்காட்டினார்.

இந்த முதல் வஹி மூலம் அல்லாஹ் தன்னுடைய தூதருக்கும் மனிதர்கள் அனைவருக்கும் சொல்வதென்ன? படைத்துப் பரிபாலித்து காத்துவரும் எல்லாம் வல்ல இறைவனாகிய அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும். எந்தப் பணியானாலும் பேச்சானாலும் அல்லாஹ்வின் பெயர் கொண்டே தொடங்கிடவேண்டும். அவனது திருப்பெயரிலேயே அருள்வளம் தேடிட வேண்டும். அவனையே முழுவதும் சார்ந்து வாழ வேண்டும். அமல்களிலும் சொற்களிலும் இக்லாஸ் எனும் வாய்மை இருக்க வேண்டும். வணக்க வழிபாடோ நற்செயலோ கல்வியோ எது ஒன்றைச் செய்வதானாலும் அல்லாஹ்வின் திரு உவப்பை நாடியே செய்ய வேண்டும்.

இஸ்லாம் கல்விக்கு எத்துணை முக்கியத்துவம் அளிக்கிறது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது. இதோ! அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு வஹி எனும் இறையருட் செய்தி சொல்லும் முதல் ஆணையே ‘ஓதுவீராக’ என்பது தான்!

மேலும் கூறப்பட்டுள்ளது: தாயின் கருவறையில் தங்கிய விந்து படிப்படியாக வளர்ந்து உருமாறி ‘அலக்’ எனும் (ஒட்டிக் கொண்டிருக்கும்) பொருள்களாகிறது. அந்தப் பொருள்களில் இருந்தே மனிதனை அல்லாஹ் படைத்தான்.

இவ்வாறு அந்த விந்து பரிணாம வளர்ச்சி அடைந்து முழு மனிதனாக வடிவம் பெறுகிறது.அதற்குப் பத்து மாதம் பிடிக்கிறது.

தாயின் கருவில் உருவாகி படிப்படியாக வளர்ச்சி அடையும் ‘மனிதன்’ குழந்தையாகப் பிறக்கிறான். பிறகு சிறுவனாக வளர்ந்து எழுதுகோல் பிடித்து எழுதும் வழிகாட்டலைப் பெறுகிறான். அதன் மூலம் கல்வியில் முன்னேறிக்கொண்டே செல்கிறான்., ஏராளமான விஷயங்கள் அவனது கல்விஞானத்தில் சேர்ந்துகொண்டே இருக்கின்றன. இது அல்லாஹ்வின் அருட்கொடை மட்டுமல்ல, கல்வியின் மூலம் மனிதனுக்கு அவன் அளித்த கண்ணியமும் ஆகும்.

ஆனால் வளர்ந்து பெரியவனாகி கல்வி கற்றுப் பட்டம் - பதவி வந்து சேர்ந்த பிறகு மனிதனுக்கு ஆணவம் தலைக்கேறுகிறது. தனது ஆற்றலைக் குறித்தும் அளவின்றி அள்ளிக் குவித்த செல்வத்தைக் கொண்டும் அதிகளவு பூரிப்படைகிறான். அல்லாஹ் அளித்த பேருபகாரங்கள் அவனுக்கு மறந்து போகின்றன. பாவங்கள் செய்யப்பயப்படுவதில்லை. தீமைகளில் மூழ்குகிறான்.
இத்தகைய மனிதனுக்கு ஓர் உண்மை நினைவூட்டப்படுகிறது. மனிதன் நிச்சயம் இறைவன் பக்கம் திரும்பிச் சென்றாக வேண்டும். தீய செயல்பாடுகள் குறித்து இறைவனின் நீதிமன்றத்தில் அவன் பதில் சொல்லியாக வேண்டும் என்பதே அது!

கவனிக்க வேண்டிய கருத்துகள்:

1) கல்விக்கும் படிப்புக்கும் இஸ்லாம் அளித்துள்ள முக்கியத்துவம். வானத்திலிருந்து இறங்கிய முதல் வசனமே ஓதுவீராக என்பதுதான்!

2) முஸ்லிம்கள் தங்களுடைய செயல்களையும் பேச்சுகளையும் அல்லாஹ்வின் திருப்பெயர் கொண்டே தொடங்கிட வேண்டும்.

3) அல்லாஹ்தான் மனிதனுக்கு எல்லாவற்றையும் கற்றுக்; கொடுத்தான். எழுதுகோலை வழங்கி எழுத்தறிவித்தவனும் அவனே!

4) ஆணவம் கொண்டு, ஆண்டவனுக்குக் கீழ்ப்படியாத போக்கு குறித்து மனிதனை அல்லாஹ் எச்சரிக்கை செய்கிறான்.

5) மனிதர்கள் அனைவரும் ஒருநாள் அல்லாஹ்விடம் திரும்பிச் சென்றாக வேண்டும். அவனது நீதி மன்றத்தில் தத்தம் செயல்கள் குறித்து அனைவரும் பதில் சொல்லியாக வேண்டும்.

வசனம் 9 முதல் 19 வரை

பொருள்:

(9); தடுக்கிறானே அப்படிப்பட்டவனை நீர் பார்த்தீரா?

(10) ஓர் அடியாரை -அவர் தொழுது கொண்டிருக்கும்போது (தடுப்பவனைப் பார்த்தீரா?)

(11) நீர் என்ன கருதுகிறீர்? அவர் நேர்வழியில் நடந்தாலுமா? (தொழவிடாமல் அவரைத் தடுக்க வேண்டும்?)

(12) அல்லது தூய்மையை மேற்கொள்ளும்படி அவர் ஏவினாலுமா? (தொழவிடாமல் அவரைத் தடுக்க வேண்டும்?)

(13) (இந்த மனிதன்) சத்தியத்தைப் பொய் என்று தூற்றினால் மேலும் புறக்கணிக்கவும் செய்தால் (அவனது செயல்பற்றி) நீர் என்ன கருதுகிறீர்?

(14) அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது அவனுக்குத் தெரியாதா?

(15) அவ்வாறன்று! அவன் (இப்படிச் செய்வதிலிருந்து) விலகிட வில்லையெனில், நிச்சயமாக நாம் அவனது நெற்றி முடியைப் பிடித்து இழுப்போம்.

(16) கடும் தவறிழைத்த, பொய்யுரைத்த நெற்றி முடியை!

(17) அவன் தனது கூட்டத்தை அழைக்கட்டும்.

(18) (தண்டிக்கக்கூடிய) மலக்குகளை நாம் அழைப்போம்!

(19) அவ்வாறன்று! அவனுக்குக் கீழ்ப்படியாதீர். ஸுஜூது செய்யும்! (;இறைவனின்) நெருக்கத்தைப் பெறும்!

இந்த வசனங்கள் குறைஷித் தலைவர்களில் ஒருவனைப் பற்றி பேசுகின்றன.பண பலமும் படை பலமும் அவனிடம் குவிந்திருந்தால் ஆணவத்தில் மூழ்கி அடாவடிச் செயல்கள் செய்யத் துணிந்தான். அவன்தான் ஆரம்ப காலத்தில் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் கொடிய விரோதியாக இருந்த அபூஜஹ்ல் என்பவன்.

நபிகளார்(ஸல்)அவர்கள் கஅபா சென்று தொழுவது வழக்கம். ஆனால் அதை அபூ ஜஹ்ல் கடுமையாக ஆட்சேபித்தான். நமது கடவுட் சிலைகளை மறுத்துவிட்டு நமது வழிபாட்டு முறையைக் கடுமையாகக் குறைகூறிக்கொண்டு முஹம்மத் இங்கு வந்து அவர் விருப்பப்படி தொழுவதை-தலையைத் தரையில் வைத்து ஸுஜூது செய்வதை நான் கண்டால் அவரது பிடரியைக் காலால் அழுத்தி முகத்தை மண்ணைக் கவ்வச்செய்து விடுவேன் என்று ஆணவம் பேசினான். (அவன் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டா கட்டுமாக)

இந்நிலையில் நபி (ஸல்) அவர்கள் ஒருதடவை கஅபாவில் தொழுதார்கள்.அவர்கள் ஸுஜூது செய்து கொண்டிருந்த பொழுது அபூ ஜஹ்ல் அதைப் பார்த்துவிட்டான். உடனே நபியவர்களின் பிடரியில் காலால் மிதிக்கும் திமிரான எண்ணத்துடன் வந்தான்.

ஆனால் அபூ ஜஹ்ல் என்பவனால் நபியவர்களை நெருங்க முடியவில்லை. அருகில் வந்ததும் அஞ்சி நடுங்கியவாறு திடுக்கிட்டுத் திரும்பினான். அப்பொழுது அவனுடைய ஆட்கள் கேட்டனர்: "ஏன் இப்படி அலறியடித்துக்கொண்டு வருகிறாய்? உனக்கு என்ன ஆனது?" என்று! அதற்கு அவன் பதில் சொன்னான்: "எனக்கும் முஹம்மதுக்கும் மத்தியில் பெரிய நெருப்புக் கிடங்கு ஒன்றைப் பார்த்தேன்.
வேறு சில பயங்கரமான பொருட்களையும் கண்டேன். அதனால்தான் ஓடி வந்து விட்டேன்"

நபி(ஸல்) அவர்கள் இது பற்றி குறிப்பிடும்பொழுது - "அவன் என்னை நெருங்கியிருந்தால் மலக்குகள் அவனைத் துண்டு துண்டாக வெட்டி வீசியிருப்பார்கள்"

கருத்து இதுதான்: வரம்பு மீறிச் செயல்படும் இந்த அநியாயக் காரனைப் பாருங்கள். மக்களைத் தொழ விடாமலும் வணக்க வழிபாடு செய்ய விடாமலும் தடுக்கிறான். இவனது செயல் எவ்வளவு மட்டரகமானது!

அதுவும் நேர்வழியில் நடைபோட விடாமல் ஒரு நபியைத் தடுத்தான் எனில், பிறரை நன்மை புரியுமாறு ஏவுதல், தீமையை விட்டும் தடுத்தல் எனும் பணியை மேற்கொள்ள விடாமல் ஒரு நபியை அதாவது முஹம்மத் நபி(ஸல்) அவர்களைத் தடுத்தான் எனில் அந்தச் செயல் இன்னும் எவ்வளவு கீழ்த்தரமானது! அடாவடித்தனமானது!

தொழவிடாமல் தடுப்பதுடன் மட்டும் இவன் நிறுத்திக் கொள்ளவில்லை. மறுவுலகத்தை நிராகரிக்கிறான்., அதைப் பொய்யென்று தூற்றவும் செய்கிறான்.அல்லாஹ்வை நிராகரிக்கிறான். இஸ்லாத்தை புறக்கணிக்கிறான்., எதிர்க்கிறான்., சத்தியத்தை அலட்சயமாகக் கருதுகிறான்.

அவனுடைய செயல்கள் அனைத்தையும் அல்லாஹ் கண்காணித்துக் கொண்டிருக்கிறான் என்பதை அவன் அறியவில்லையா? மறு உலகில் அவை குறித்து கடுமையான கேள்வி விசாரணை உண்டு என்பதை அவன் தெரிந்துகொள்ளவில்லையா?

இது அபூ ஜஹ்லுக்கு மட்டுமல்ல., அவனைப் போல் செயல்படும் அனைவருக்கும் விடுக்கப்படும் கடுமையான எச்சரிக்கையாகும்.

அபூ ஜஹ்ல் என்பவன் பாவமீட்சி தேடித் திருந்தவில்லையானால் - நபி (ஸல்) அவர்களைக் கடுமையாக எதிர்ப்பதை, அவர்களது அழைப்புப் பிரச்சாரப் பணிக்கு இடையூறு விளைவிக்கும் கொடிய போக்கை நிறுத்திக் கொள்ளவில்லையானால் இவ்வுலகில் நம்பிக்கையாளர்களின் கைகளாலும் கடும் தண்டனை அவன் மீது சாட்டப்படும். மறுமை எனப்படும் இன்னோர் உலகத்தில் மலக்குகளின் மூலமாகவும் கடும் தண்டனை அவனுக்குக் காத்திருக்கிறது.

மேலும் நிச்சயமாக அல்லாஹ் தண்டனை கொடுக்கும் மலக்குகளுக்கு ஆணையிடுவான். அவர்கள் அபூ ஜஹ்லின் தலை முடியைப் பிடித்து இழுத்து நரகத்தில் தள்ளுவார்கள்.

அபூ ஜஹ்ல் இவ்வுலகில் வேண்டுமானால் உதவிக்காகத் தன் அடியாட்களை அழைக்கலாம்., அவர்களுடன் சேர்ந்து இஸ்லாத்துடன் கடுமையாக மோதலாம். ஆனால் மறு உலகத்தில் அவன் எவரையும் உதவிக்கு அழைக்க முடியாது. ஏனெனில் அவர்கள் அனைவரையும் பிடித்து மலக்குகள் நரகத்தில் வீசியெறிந்து விடுவார்கள்.

பிறகு தன்னுடைய சங்கைக்குரிய நபியிடம் அல்லாஹ் கூறுகிறான்:நபியே! சத்தியத்தின் மீது நிலைத்திருங்கள். அபூஜஹ்லையும் அவன் போன்றவர்களையும் கண்டுகொள்ளாமல் புறக்கணித்து விடுங்கள். தொடர்ந்து உம் இறைவனை நீங்கள் தொழுது வாருங்கள். அவனது திருமுன்னால் சிரம் வைத்து வணங்கி வாருங்கள். அதன் மூலம் அவனது அண்மையைப் பெறுவீர்கள். ஏனெனில் மனிதன் தன் இறைவனோடு மிக நெருக்கமாக இருக்கும் நிலை அவன் ஸுஜூத் செய்யும் நிலைதான்.

இதனையே நபி(ஸல்) அவர்களும் இந்த ஹதீஸில் தெளிவு படுத்துகிறார்கள்: "மனிதன் தன் இறைவனோடு மிக நெருக்கமாக இருக்கும் நிலை அவன் ஸுஜூத் செய்து கொண்டிருக்கும் போதுதான்! எனவே அதில் அதிகமாக பிரார்த்தனை செய்யுங்கள்"

கவனிக்க வேண்டிய கருத்துகள்:

1) இஸ்லாத்தின் பேரிலும் இறைத்தூதருடனும் அபூ ஜஹ்ல் கொண்டிருந்த கடும் பகையும் அவனைப் போன்ற கொடிய விரோதிகளின் தண்டனை என்ன என்பதும் விளக்கப்பட்டுள்ளது.

2) எதிரிகளின் எல்லாவிதமான தீங்கில் இருந்தும் தன் தூதருக்கு அல்லாஹ் பாதுகாப்பு அளிப்பவனாக இருக்கிறான்.

3) இறைவழிபாடு செய்யவிடாமலும் நன்மை செய்யவிடாமலும் மக்களைத் தடுப்பது தான் மிகமிக மோசமான தீமையாகும்.

4) இறைவழிபாட்டில் தொடர்ந்து ஈடுபடுமாறும் ஸுஜூது செய்யு மாறும் நபி(ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் பகரும் அறிவுரை.

5) இந்த அத்தியாயத்தில் ஸஜ்தா திலாவத்-ஓதலின் சிர வணக்கம் வருகிறது.  எனும் அத்தியாயத்தின் இறுதி வசனத்தை ஒருவர் ஓதினால் கிப்லாவை முன்னோக்கி ஒருமுறை ஸுஜூத் செய்திட வேண்டும்.



சூரத்துல் கத்ர் (97), மக்காவில் அருளப்பட்டது.

பொருள்:

அளவிலாக் கருணையும் இணையிலாக் கிருபையும் உடைய அல்லாஹ்வின் திருப்பெயரால்!

(1) திண்ணமாக நாம் இதனை (குர்ஆனை) மாட்சிமை மிக்க இரவில் இறக்கிவைத்தோம்.

(2) மாட்சிமைமிக்க இரவு என்னவென்று உமக்குத் தெரியுமா?

(3) மாட்சிமைமிக்க அந்த இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்ததாகும்.

(4) அதில் மலக்குகளும் ஜிப்ரீலும் தம் இறைவனின் அனுமதியுடன் அனைத்து கட்டளைகளையும் ஏந்திய வண்ணம் இறங்குகிறார்கள்.

(5) அந்த இரவு முழுவதும் நலம் மிக்கதாகத் திகழும்., வைகறை உதயம் வரையில்!

இந்த அத்தியாயம், பாக்கியமிக்க ஓர் இரவு பற்றி பேசுகிறது. அதுதான் புனித ரமளான் மாதத்தில் அமைந்துள்ள லைலத்துல் கத்ர் இரவு.

நபி (ஸல்) அவர்கள் ஹிரா குகையில் தங்கியிருந்த பொழுது மலக்குகளின் தலைவர் ஜிப்ரீல் வருகை தந்து குர்ஆனின் முதல் ஐந்து வசனங்களை இறக்கியருளியது இந்த இரவில்தான்.

லைலத்துல் கத்ர் இரவு அருட்பாக்கியங்கள் நிறைந்தும் உயர் அந்தஸ்து பெற்றும் திகழ்வதற்குக் காரணம் ஜிப்ரீலின் முதல் வருகை அதில் அமைந்ததேயாகும். இவ்வையகம் இறைவழிகாட்டலின் ஒளியால் பிரகாசிக்கத் தொடங்கியது அன்றிலிருந்துதானே. அதனால்தான் அது ஆயிரம் ஆண்டுகளை விடச் சிறந்த இரவாக மலர்ந்துள்ளது.

இந்த இரவில் ஒரு மனிதன் வாய்மையுடனும் மன ஓர்மையுடனும் முழு ஈடுபாட்டுடனும் அல்லாஹ்வை வணங்கி வழிபட்டால் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஈடான நற்கூலியை அல்லாஹ் அவனுக்கு வழங்குகிறான்.

மேலும் இந்த இரவில் ஏனைய மலக்குகளுடன் ஜிப்ரீலும் சிறப்பான முறையில் பூமிக்கு வருகை தருகிறார்கள். நன்மை மற்றும் சாந்திக்குரிய விஷயங்களையும் நம்பிக்கையாளர்களுக்கான பிரார்த்தனைகளையும் ஏந்திக்கொண்டு வருகிறார்கள்.

எவ்வாறு குர்ஆன் ஓதும் பொழுது மலக்குகள் இறங்குகிறார்களோ, திக்ர் செய்யும் நல்லடியார்களை சூழ்ந்து கொள்கிறார்களோ, வாய்மையான எண்ணத்துடன் கல்வி கற்கும் மாணவர்களுக்குத் இறக்கைகளைத் தாழ்த்திக் கண்ணியமும் பாதுகாப்பும் அளிக்கிறார்களோ அதைப் போன்றதாகும் இதுவும்.

இது அதிகாலை வரை தொடர்கிறது. ஏனெனில் அத்துடனேயே இரவு முடிவடைகிறது.

கவனிக்க வேண்டிய கருத்துகள்:

1) லைலத்துல் கத்ர் என்பது மகத்தான ஓர் இரவு. அதில் தான் திருக்குர்ஆன் இறக்கியருளப்பட்டது.

2) நன்மை மற்றும் நற்கூலியைப் பொறுத்து இந்த இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது.

3) இந்த இரவில் மலக்குகளும் ஜிப்ரீலும் பூமிக்கு இறங்கி வருகிறார்கள்.

4) லைலத்துல் கத்ர் இரவு ரமளான் மாதத்தின் கடைசி பத்து நாட்களின் ஒற்றைப்படை இரவுகளில் அமைந்துள்ளது.



சூரத்துல் பய்யினா (98), மதீனாவில் அருளப்பட்டது

பொருள்:

அளவிலாக் கருணையும் இணையிலாக் கிருபையும் உடைய அல்லாஹ்வின் திருப்பெயரால்!

(1) வேதம் அருளப்பட்டவர்களிலும் இணைவைப்பாளர்களிலும் உள்ள நிராகரிப்பாளர்கள் தங்களது நிராகரிப்பிலிருந்து விலகக் கூடியவர்களாய் இருக்கவில்லை., தெளிவான சான்று தங்களிடம் வரும் வரை!

(2) தூய்மையான வேத நூல்களை ஓதிக் காண்பிக்கக் கூடிய ஒரு தூதர் அல்லாஹ்விடம் இருந்து (வரும் வரை!)

(3) அவற்றில் முற்றிலும் செம்மையான - நிலையான சட்டங்கள் எழுதப்பட்டிருக்கும்.

(4) முன்னர் வேதம் வழங்கப்பட்டவர்கள் பிளவுபட்டுப் போனது (நேர்வழி குறித்த) தெளிவான சான்று அவர்களிடம் வந்த பிறகுதான்!

(5) ஆனால் தங்களது கீழ்ப்படிதலை அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தாக்கியவர்களாய், முற்றிலும் மன ஒருமைப்பட்டவர்களாய் அல்லாஹ்வை அவர்கள் வணங்க வேண்டும்., (என்பதைத் தவிர) - தொழுயையை நிலை நாட்ட வேண்டும்., ஜகாத் கொடுக்க வேண்டும் என்பதைத் தவிர வேறெந்தக் கட்டளையும் அவர்களுக்கு இடப்படவில்லை. இதுதான் மிகவும் சீரான, செம்மையான மார்க்கம்.

(6) வேதக்காரர்களிலும் இணைவைப்பாளர்களிலும் உள்ள நிராகரிப்பாளர்கள் திண்ணமாக நரக நெருப்பில்தான் நுழைவார்கள் அதில் நிரந்தரமாக வீழ்ந்து கிடப்பார்கள். அவர்கள்தான் படைப்பினங்களிலேயே மிகவும் கீழ்த்தரமானவர்கள்.

(7) எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களும் புரிந்தார்களோ அவர்கள்தாம் திண்ணமாகப் படைப்பினங்களி-லேயே மிகவும் சிறந்தவர்கள்.

(8) அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் நிலையாகத் தங்கும் சுவனங்களாகும். அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அங்கு அவர்கள் நிரந்தரமாகத் தங்கி வாழ்வார்கள். அல்லாஹ் அவர்களைக் குறித்து திருப்தியுற்றான். அவர்களும் அவனைக் குறித்து திருப்தியுற்றார்கள். இவை (அனைத்தும்) தம் இறைவனை அஞ்சக் கூடிய மனிதருக்கு உரியதாகும்.

நபிகளார் (ஸல்) அவர்கள் சமர்ப்பித்த இஸ்லாமிய சன்மார்க்கம் தொடர்பாக நிராகரிப்பாளர்களின் அதாவது, யூதர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் சிலைவணக்கம் செய்துவந்த இணைவைப்பாளர்கள் ஆகியோரின் நிலைப்பாடு என்னவாக இருந்தது என்பதை இந்த அத்தியாயம் எடுத்துரைக்கிறது.

இம்மூன்று பிரிவினரும் தங்களின் தவறான மத நம்பிக்கைகளிலும் பொய்யான சித்தாந்தங்களிலும் நீடித்துவந்தனர். இறுதி நபியின் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். அது பற்றி அவர்களின் வேதங்களில் கண்ட முன்னறிவிப்புகளையும் சொல்லிக் கொண்டிருந்தனர்.

முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் வராத வரையில் எங்களின் (தவறான) மதத்தை நாங்கள் கைவிடப் போவதில்லை" என்று ஒரு சாரார் கூறினார்கள் - இந்த வார்த்தை அவர்களின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்துகிறது.

அவர்கள் எதிர்பார்த்தபடியே முஹம்மத் நபி (ஸல்) அவர்களும் வருகை தந்து குர்ஆன் எனும் தெளிவானதொரு சான்றையும் அளித்தார்கள். இஸ்லாம் எனும் சத்திய சன்மார்க்கத்தின் பக்கம் அழைப்பும் விடுத்தார்கள்.

அந்த மக்கள் பின்பற்றி வந்த மதமும் மதச் சித்தாந்தங்களும் தவறானவை என்றும் அவர்கள் செய்துவந்த அறியாமைக் காலத்து சடங்கு - சம்பிரதாயங்கள் ஆகாதவை என்றும் தெளிவுபடுத்தினார்கள்.

அப்பொழுது வேதக்காரர்களாகிய யூத, கிறிஸ்தவர்கள் மத்தியில் பிளவு ஏற்பட்டது. அவர்களில் ஒரு பிரிவினர் இஸ்லாத்தை ஏற்றனர்.நேர்வழி திரும்பினர். அறியாமையிலிருந்தும் வழிகேட்டிலிருந்தும் அவர்களை அல்லாஹ் காப்பாற்றினான். ஆம், நபியவர்களின் வருகைக்கு முன்பு வரை தங்கள் நிராகரிப்புப் போக்கிலிருந்து அவர்கள் விலகாமலேயே இருந்தனர்.

ஆனால் அவர்களில் பெரும்பாலோரின் நிலை அப்படியே நீடித்தது. எதிர்பார்த்த நபி வந்த பிறகும் எவ்விதக் கூடுதல் குறைவும் இல்லாத, கற்பனைக் கதைகள் கலந்திடாத, முற்றிலும் பரிசுத்தமான குர்ஆன் எனும் வேதத்தை அவர் வழங்கிய பிறகும் பெரும்பாலான மக்கள் தங்களது போக்கை மறு பரிசீலனை செய்யவில்லை. பழைய மதக்கொள்கைகளிலேயே விடாப்பிடியாக இருந்தார்கள்.

ஆம், கிறிஸ்தவர்கள்-ஈஸா நபியை கடவுளின் குமாரர் என்றனர்., அவர்களின் அன்னை மர்யத்தையும் கடவுள் அல்லது கடவுளின் அன்னை என்றனர். யூதர்கள் - உஸைர் கடவுளின் குமாரர் என்றனர்.

சிலைகளை வணங்கி வந்த இணைவைப்பாளர்கள் - மலக்குமார்கள் இறைவனின் பெண் மக்கள் என்றனர்.

இவ்வாறாக இவர்கள் அனைவரும் உண்மைக்குப் புறம்பான கற்பனைக் கொள்கைகளில் மூழ்கிக் கிடந்தார்கள். மனிதர்களையும் மலக்குகளையும் கடவுளர் என்றும் கடவுளின் குமாரர் என்றும் கடவுளின் அவதாரங்கள் என்றும் விபரீதமான கற்பனைகளில் மூழ்கி அநாச்சாரங்களை ஏற்படுத்திக் கொண்டு வழிகேட்டில் உழன்று கொண்டிருந்தார்கள் இன்றும் அதிலிருந்து அவர்கள் மீளவில்லை.

ஆனால் அவர்கள் அனைவருக்கும் அல்லாஹ் அறிவுறுத்தியது ஏகத்துவக் கொள்கையைத்தான். ஒரே இறைவனை வணங்கி வழிபட வேண்டும் என்றுதான் அவர்களுக்கு ஆணையிடப்பட்டது. இதுவே மக்களைப் பண்படுத்தக் கூடிய, பயனளிக்கக் கூடிய சீரிய மார்க்கம்.

இத்தகைய சீரிய கொள்கைதான் இஸ்லாம் எனும் சத்திய மார்க்கம் என்றும் அதனை ஏற்றுக்கெண்டோர் எத்தகைய உயர் நிலைக்கு உயர்த்தப்படுவார்கள் என்றும் தெளிவுபடுத்தப்பட்டது. நிராகரிப்புப் போக்கை மேற்கொள்வோர் அனைவரும் நரகம் செல்வர் என்றும் அவர்கள்தான் படைப்பினங்களிவேயே மிகவும் கெட்டவர்கள் என்றும் எடுத்துரைக்கப்பட்டது. திருக்குர்ஆன் இன்னோர் இடத்தில் குறிப்பிடுகிறது:

திண்ணமாக எவர்கள் சத்தியத்தை நிராகரித்தார்களோ பிறகு எவ்விதத்திலும் அதனை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லையோ அவர்கள் தாம் பூமியில் நடமாடும் படைப்புகளிலேயே அல்லாஹ் விடத்தில் மிகவும் மோசமானவர்கள்" (8 : 55)

இறைநம்பிக்கை கொள்வதுடன் நல்ல அமல்கள் செய்துவதும் இணைத்தே சொல்லப்பட்டிருப்பது கவனத்திற்குரியது. அப்படிச் செயல்படும் முஸ்லிம்களைக் குறித்தே, அவர்கள் படைப்பினங்களிலேயே சிறந்தவர்கள்., அவர்களுக்காக அல்லாஹ் சுவனத் தோட்டங்களைத் தயார் செய்துவைத்துள்ளான்., அங்கு அவர்கள் நிரந்தரமாகத் தங்கி வாழ்வார்கள்.,அவர்களை அல்லாஹ் நேசிக்கிறான். அவர்கள் செய்த நற்செயல்களை ஏற்றுக்கொள்கிறான் என்றும் புகழ்ந்துரைக்கப் பட்டுள்ளது.

சுவனவாசிகள் பேரானந்தம் அடைவர். அவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய மேலான நன்மைகளைப் பொருந்திக் கொள்வர். இது எவ்வளவு மகத்தான அந்தஸ்து! இவ்வுலகில் அவர்கள், அல்லாஹ்வுக்கு அஞ்சி தீமைகள் செய்யாது நன்மைகள் ஆற்றி வாழ்ந்ததுவே இதற்குக் காரணம்.

கவனிக்க வேண்டிய கருத்துகள்:

1) முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் மனித குலம் முழுவதற்கும் அனுப்பப்பட்ட இறுதி நபி.

2) ஒரிறை மீது நம்பிக்கை கொள்ள வேண்டும்.,ஒரே இறையை மட்டுமே வணங்க வேண்டும் என்பதுதான் மனித குலம் முழுவதற்கும் இறைவன் அளித்த கட்டளை.

3) இஸ்லாம் மட்டுமே சத்திய மார்க்கம். ஏனைய மதங்கள் அனைத்தும் போலியானவை.

4) இறைமறுப்பாளர்கள்தான் படைப்பினங்களிலேயே மிகக் கெட்டவர்கள். அவர்கள் நரகத்தில் நிரந்தரமாக வீழ்ந்துகிடப்பார்கள். இறைநம்பிக்கை கொண்டு நல்ல அமல்கள் செய்யும் முஸ்லிம்கள்தான் படைப்பினங்களிலேயே மிகச் சிறந்தவர்கள். அவர்கள் சுவனபதியில் நிரந்தரமாகத் தங்கிவாழ்வார்கள்.

5) அல்லாஹ் சுவன வாசிகளைப் பொருந்திக்கொண்டான். அங்கு அவர்களுக்காகத் தயார் செய்து வைத்துள்ள மிக்க மேலான இன்ப நலன்கள் குறித்து அவர்களையும் பொருந்திக்கொள்ளச் செய்வான்.



சூரத்து ஜில்ஜால் (99), மதீனாவில் அருளப்பட்டது

பொருள்:

அளவிலாக் கருணையும் இணையிலாக் கிருபையும் உடைய அல்லாஹ்வின் திருப்பெயரால்!

(1) பூமி முழு பலத்துடன் உலுக்கப்படும்பொழுது -

(2) அது தன்னுள் உள்ள சுமைகள் அனைத்தையும் வெளியே தள்ளும்பொழுது

(3) மேலும் இதற்கு என்ன நேர்ந்துவிட்டது என்று மனிதன் கேட்கும் போது

(4) அந்நாளில் - தன் மீது நிகழ்ந்த நிகழ்ச்சிகளை அது எடுத்துரைக்கும்.

(5) ஏனெனில் உம் இறைவன் அதற்கு (அவ்வாறு எடுத்துரைக்கும்படி) ஆணையிட்டிருப்பான்.

(6) அன்று மக்கள் பல்வேறு பிரிவினராய்த் திரும்புவார்கள்., (எதற்காகவெனில்,) தங்கள் செயல்கள் தங்களுக்குக் காண்பிக்கப்படுவதற்காக!

(7) பிறகு எவன் அணுஅளவு நன்மை செய்திருந்தானோ அவன் அதனைக் கண்டுகொள்வான்.

(8) மேலும் எவன் அணுவளவு தீமை செய்திருந்தானோ அவன் அதனைக் கண்டுகொள்வான்.

மறுமை நாளின்போது நிகழக்கூடிய சில காட்சிகளை இந்த அத்தியாயம் எடுத்துரைக்கிறது. கடுமையான பூகம்பம் ஏற்படும்! பூமி உலுக்கி எடுக்கப்படும்! உடனே மக்கள் அனைவரும் பூமியினுள்ளிருந்து அதாவது மண்ணறைகளில் இருந்து வெளியே கொண்டு வரப்படுவார்கள். அது சூர் (எனும் எக்காளம்) இரண்டாவது முறை ஊதப்பட்ட உடன் நிகழும்.

இவ்வுலகில் இறைவனை நிராகரித்து வாழ்ந்து கொண்டிருந்த மனிதன் ஆச்சரியப்படுவான். "இந்தப் பூமிக்கு என்ன நேர்ந்து விட்டது? எதற்காக மண்ணறையில் இருந்து நான் வெளியே கொண்டு வரப்பட்டேன்? "என்று ஆச்சரியம் மேலிட அதிர்ச்சியுடன் கேட்பான்;. ஏனெனில் மறுமை நாள் மீது அவன் நம்பிக்கை கொள்ளாமல் இருந்தானே!

அவ்வாறு மண்ணறைகளில் இருந்து மனிதர்களை வெளியே தள்ளுமாறு அல்லாஹ்தான் பூமிக்குக் கட்டளையிடுவான். மனிதர்கள் இப்புவி மீது என்னென்ன செயல்களைச் செய்தார்கள் என்பதையும் பூமி அறிவித்துக் கொடுக்கும். அதுவும் அல்லாஹ்வின் ஆணைதான்!

நபித்தோழர் அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: "தன் மீது நிகழ்ந்த நிகழ்ச்சிகளை அந்நாளில் அது எடுத்துரைக்கும்" எனும் இந்த வசனத்தை நபி (ஸல்) அவர்கள் ஓதினார்கள். பிறகு அது சொல்லும் செய்திகள் என்ன என்று நீங்கள் அறிவீர்களா? என்று கேட்டார்கள். அதற்கு தோழர்கள், ‘அல்லாஹ்வும் ரஸுலும்தான் மிக அறிந்தவர்கள்’ என்று பதில் சொன்னதும் நபியவர்கள் கூறினார்கள்:

ஆண்கள் பெண்கள் ஒவ்வொருவரும் பூமியில் என்னென்ன அமல் செய்தார்கள் என்பதை இப்பூமி எடுத்துரைத்து அவர்கள் மீது சாட்சி சொல்லும். இன்ன மனிதன் இன்னின்ன நாளில் இத்த கைய செயலைச் செய்தான் என்று விவரிக்கும். இதுதான் பூமியின் செய்திகளாகும்" (நூல்: திர்மிதி)

மண்ணறைகளில் இருந்து வெளியே வரும் மனிதர்கள் பற்பல நிலைகளில் பிரிந்து விடுவார்கள். அச்சமும் பீதியும் அவர்களை ஆட்கொண்டிருக்கும். ஒவ்வொருவரும் தத்தமது நிலை பற்றி அறிந்து கொள்ள (தம்முடைய அமல்கள் பதிவு செய்யப்பட்ட ஏட்டைப் பார்க்க) விரும்புவார்கள்.

அந்நாளில் அல்லாஹ்வின் தீர்ப்பு முற்றிலும் நீதமாக இருக்கும். ஒவ்வொருவரும் தத்தம் அமல்களின் மதிப்பு என்ன என்பதைக் கண்ணெதிரே கண்டு கொள்ளும் வகையில் அவர்களின் முன்னிலையிலேயே அமல்களை தராசில் வைத்து நிறுப்பான்.

மனிதன் ஏக இறைவன் மீது நம்பிக்கை கொண்டு வாழ்ந்திருந்தால் அவன் செய்த நல்ல அமல்களுக்கு நற்கூலி வழங்குவான். சின்னஞ்சிறிய அமல்களும்கூட மதிக்கப்படும். அவற்றிற்கும்கூட கூலி வழங்கப்படும்.

அவ்வாறே மனிதர்களின் சின்னஞ்சிறிய தீமைகளுக்கும்கூட தண்டனை வழங்கப்படும்.

கவனிக்க வேண்டிய கருத்துகள்:

1) மறுமை நாள் ஏற்படும்போது பூமியின் இந்த அமைப்பு முழுவதும் மாறிவிடும்.

2) சூர் (எக்காளம்) இரண்டாவது முறை ஊதப்பட்ட பிறகு மண்ணறைகளில் இருந்து மனிதர்கள் அனைவரும் வெளியேறி வருவர்.

3) இந்தப் பூமியில் மனிதர்கள் என்னென்ன செய்தார்கள் என்பதை இந்தப் பூமியே மறுமை நாளில் அறிவித்துக்கொடுக்கும்.

4) மறு உலகம் என்பது இவ்வுலகத்தை விட்டும் முற்றிலும் மாறுபட்டது.



சூரத்துல் ஆதியாத் (100), மக்காவில் அருளப்பட்டது.

பொருள்:

அளவிலாக் கருணையும் இணையிலாக் கிருபையும் உடைய அல்லாஹ்வின் திருப்பெயரால்!

(1) மூச்சிறைக்கப் பாய்ந்து ஓடுகிற குதிரைகள் மீது சத்தியமாக!

(2) பின்னர் குழம்புகளில் இருந்து தீப்பொறியை எழுப்புகிற குதிரைகள் மீது சத்தியமாக!

(3) மேலும் அதிகாலையில் பாய்ந்து தாக்குதல் நடத்தி அதனால் புழுதியைக் கிளப்புகிற குதிரைகள் மீது சத்தியமாக!

(4) மேலும் கூட்டத்தின் நடுவே நுழைந்து விடும் குதிரைகள் மீது சத்தியமாக!

(5) உண்மையில் மனிதன் தன் இறைவனுக்கு மிகவும் நன்றி கெட்டவனாக இருக்கிறான்.

(6) திண்ணமாக அவனே அதற்குச் சாட்சியாகவும் இருக்கிறான்.

(7) மேலும் அவன், செல்வத்தின் மீது அளவு கடந்த மோகம் கொண்டவனாக இருக்கிறான்.

(8) அவன் அறியமாட்டானா? (அதாவது) மண்ணறைகளில் அடக்கப்பட்டுள்ள அனைத்தும் வெளியே கொண்டு வரப்பட்டால்,

(9) மேலும் நெஞ்சங்களில் மறைக்கப்பட்டு உள்ளவை அனைத்தும்; ஒன்றுதிரட்டப்பட்டால்,

(10) திண்ணமாக அவர்களின் இறைவன் அந்நாளில் அவர்களைப்; பற்றி நன்கு அறிந்தவனாக இருப்பான் என்பதை!

இறைவழிப் போராளிகள் பயணிக்கும் குதிரைகள்; மீது சத்தியம் செய்வதைக் கொண்டு இந்த அத்தியாயம் தொடங்குகிறது.

அத்துடன் அந்தக் குதிரைகளின் பல்வேறு குணங்கள் பற்றி கூறப்பட்டுள்ளது. அந்தக் குதிரைகள் வேகமாகச் செல்கிற பொழுது அவற்றின் குழம்புகள் தரையிலுள்ள பொடிப்பொடிக் கற்களில் பட்டுத் தீப்பொறிகள் தெறிக்கின்றன.

போராளிகள் இவற்றின் மீதேறிப் புறப்பட்டுச் சென்று அதிகாலையில் எதிரிகள் மீது தாக்குதல் தொடுக்கின்றனர். அதனால் அதிகாலை நேரத்தில், காணும் திசை எங்கும் புழுதி மண்டலம்! மேலும் அந்தக் குதிரைகள் எதிரிகளின் அணிகளைப் பிளந்து கொண்டு ஊடுருவிச் செல்வதற்கு எத்தனிக்கின்றன! - குதிரைகள் பற்றிய இந்த வர்ணனை, போராளிகளின் வீரத்தைப் பறை சாற்று வதாகும்.

இந்தத் தொடர் சத்தியங்களுக்குப் பின்னணியில் மனிதனின் தீய குணங்கள் சில இங்கு சுட்டிக் காட்டப்படுகின்றன. அதற்குத் தெளிவான கருத்துப் பொருத்தமும் உள்ளது.

அல்லாஹ் பொழியும் அருட்கொடைகளை அனுபவிப்பதை மனிதன் ஒப்புக்கொள்வதில்லை. அல்லாஹ்விடம் இருந்து அவனுக்குக் கிடைக்கும் எண்ணற்ற நலன்களையும் நன்மைகளையும் அவன் மறந்து விடுகிறான். அவன் மேற்கொள்ளும் நிலைப்பாடுகளும் செயல்பாடுகளுமே அதற்குச் சாட்சி!

மனிதன் செல்வத்தை அளவுகடந்து நேசிக்கிறான். அதுவே தவறான வழிகளில் பணம் சம்பாதிக்குமாறு பல்வேறு காலகட்டங்களில் அவனைத் தூண்டுகிறது.

மேலும் பணத்தைத் திரட்டுவது எப்படி? சம்பாதிப்பது எப்படி? சேமிப்பது எப்படி என்றே எந்நேரமும் மனிதன் சிந்திக்கிறான். அதனால் இறைவழிபாட்டில் அவனது ஈடுபாடு குறைந்து விடுகிறது.

இத்தகைய போக்கு ஆபத்தானது என்று மனிதனை அல்லாஹ் எச்சரிக்கை செய்கிறான். மறுமை நாளினை நினைத்துப் பார்க்கும் படியும் அன்று மக்கள் மண்ணறைகளில் இருந்து வெளியேறி வருவதை எண்ணிப் பார்க்கும்படியும் அவனிடம் கூறுகிறான்.

அந்நாளில் மக்கள் அனைவரையும் அல்லாஹ் ஒன்று திரட்டி உலகத்தில் அவர்கள் செய்த செயல்களையும் பேசிய பேச்சுகளையும் ஏற்றிருந்த கொள்கைகளையும் அவர்கள் முன்னிலையில் சமர்ப் பித்து அவற்றின் பேரில் கேள்வி கணக்கு கேட்பான்.

அந்த மறுமை நாளில் பணமோ, உயர் பதவிகளோ எந்தப் பயனும் அளிக்க மாட்டாது. நல்ல அமல்கள்தாம் நற்பயன் அளிக்க வல்லவை.

கவனிக்க வேண்டிய கருத்துகள்:

1) அல்லாஹ்வின் பாதையில் (தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வது) எனும் ஜிஹாதின் சிறப்பு மகத்தானது.

2) இறையருட்கொடைகளை மறுக்கும் மனிதன் தனக்குத் தானே அநீதி இழைத்தவனாகிறான்.

3) உலகின் சுகபோகங்களையே மனிதன் அதிகம் நேசிக்கிறான்.

4) மறுமை நாளில் மண்ணறைகளில் இருந்து மனிதர்களை அல்லாஹ் வெளியேற்றுவான்.அவர்கள் செய்த அமல்களை ஒன்று திரட்டி கேள்வி - கணக்கு கேட்பான்.



சூரத்துல் காரிஆ (101), மக்காவில் அருளப்பட்டது

பொருள்:

அளவிலாக் கருணையும் இணையிலாக் கிருபையும் உடைய அல்லாஹ்வின் திருப்பெயரால்!

(1) பயங்கரமான சப்தத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சி!

(2) அந்தப் பயங்கரமான நிகழ்ச்சி என்ன?

(3) அந்தப் பயங்கரமான நிகழ்ச்சி என்ன என்று உமக்குத் தெரியுமா, என்ன?

(4) அந்நாளில் மக்கள் சிதறிக்கிடக்கும் ஈசல்கள் போன்று ஆகிவிடுவர்.

(5) மலைகள் கடையப்பட்ட வண்ண வண்ணக் கம்பளி போன்று ஆகிவிடும்.

(6) பிறகு எவரின் எடைத்தட்டுகள் கனத்திருக்குமோ அவர்,

(7) மனதிற்குகந்த வாழ்வைப் பெறுவார்.

(8) ஆனால் எவரின் எடைத்தட்டுகள் இலேசாக இருக்குமோ

(9) அவருடைய தங்குமிடம் ஆழமான படுகுழிதான்!

(10) அது என்ன படுகுழி என்பது உமக்குத் தெரியுமா?

(11) கொழுந்து விட்டெரியும் நெருப்பு!

மறுமை நாளில் ஏற்படக்கூடிய இன்னும் சில நிகழ்ச்சிகளைப் பற்றி இந்த அத்தியாயம் பேசுகிறது. இந்தப் பேரண்டத்தைப் பயங்கரமானதொரு நிகழ்வு பீடிக்கும். அப்பொழுது பயங்கரமான சப்தம் ஏற்படும். அது பீதியையும் பேரழிவையும் உண்டாக்கும்.

அந்நாளில் மனிதர்கள் பரவிக்கிடக்கும் ஈசல்கள் போன்று பரிதாபமாகக் காட்சி அளிப்பர். ஒவ்வொருவரும் அஞ்சி நடுங்கிக் கொண்டிருப்பார்கள். தமக்கு ஏற்படப்போகும் கதி பற்றி அறிவ தற்காக விரைந்து சென்று கொண்டிருப்பார்கள்.

பூமியில் அடி ஆழமாகப் பதிந்து வானுயர எழுந்து நிற்கும் உறுதிமிக்க இந்த மலைகள்கூட அந்த மறுமை நாளில் காற்றில் பறக்கும் கம்பளிப் பஞ்சு போல் மிதக்கும்., ஏதோ மேகக் கூட்டம் போன்று காட்சி அளிக்கும்! மலைகளின் நிலையே இப்படி என்றால் மனிதர்களின் நிலை என்னவாகும்?

அந்த நாளில்தான் மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் அவரவரின் கணக்கு வழக்கை அல்லாஹ் தீர்ப்பான். இவ்வுலகத்தில் அவர்கள் செய்த அமல்களைத் தராசில் வைத்து நிறுப்பான். எவருடைய நல்ல அமல்கள் தீய அமல்களை விட அதிகமாக இருக்குமோ அவர் சுவனபதியின் அழகான வாழ்க்கையை அனுபவிப்பார்.

ஆனால் நல்ல அமல்களைவிட தீமைகளை அதிகம் செய்த மனிதர்கள் நரகத்தின் படுகுழியில் வீழ்வர். அதில் நீங்காத துன்பத் திற்கு ஆளாகித் துயருறுவர்.

கவனிக்க வேண்டிய கருத்துகள்:

1) மறுமை நாளுக்கு, اَلْقاَرَعَةُ (பயங்கர சப்தத்தை ஏற்படுத்தும் நாள்)என்றும் ஒருபெயர் உண்டு. ஏனெனில் அந்த நாளில் பேரிடி போன்ற பயங்கர ஓசை ஏற்பட்டு மக்கள் அனைவரும் அச்சத்திற்கும் பீதிக்கும் உள்ளாவர்! அது இரண்டாவது முறை சூர் (எக்காளம்) ஊதப்படும்பொழுது ஏற்படும்;. குர்ஆன் கூறுகிறது:

(அந்நாளில்) எக்காளம் ஊதப்படும். அப்பொழுது வானங்களிலும் பூமியிலும் உள்ள அனைவரும் பெரும் திகில் அடைவார்கள். (அந்தத் திகிலில் இருந்து) அல்லாஹ் காப்பாற்ற நாடியவர்களைத் தவிர! அனைவரும் அடங்கி ஒடுங்கியவர்களாக அவன் முன்னிலையில் வருவார்கள்" (27:87)

2) மறுமை நாள் ஏற்படும்போது இப்பேரண்டத்தின் அமைப்பு சீர் குலைந்து முற்றிலும் மாற்றம் அடைந்து விடும்.

3) மறுமை நாளில் மனிதர்கள் அனைவரும் நிலைகுலைந்து அங்கும் இங்கும் ஓடுவது ஈசல்கள் சிதறி ஓடுவது போல் இருக்கும். மனிதர்களின் எண்ணிக்கை அளவுக்கு அதிகமாகப்பெருகி இருப்பதும் எங்கு நோக்கினும் அச்சமும் பீதியும் ஆட்கொண்டிருப்பதுமே அதற்குக் காரணம்.

4) ஒவ்வொரு மனிதனும் தத்தம் செயல்களின் மதிப்பீட்டைக் கண்ணெதிரில் காணும் வகையில் மறுமை நாளில் அவர்கள் அனைவரின் அமல்களும் கண்ணெதிரில் தராசில் வைத்து நிறுக்கப்படும்.


சூரத்துத் தகாஸுர் (102), மக்காவில் அருளப்பட்டது

பொருள்:

அளவிலாக் கருணையும் இணையிலாக் கிருபையும் உடைய அல்லாஹ்வின் திருப்பெயரால்!

(1) அடுத்தவரை விட அதிகமாக வசதி வாய்ப்புகளைப் பெற வேண்டும் எனும் எண்ணம் உங்களை மெய்மறதியில் ஆழ்த்தி விட்டது.

(2) நீங்கள் மண்ணறைகளைச் சென்றடையும் வரையில் (இதே எண்ணத்திலேயே மூழ்கியிருக்கிறீர்கள்)

(3) அவ்வாறன்று! விரைவில் உங்களுக்குப் புரிந்துவிடும்!

(4) இன்னும் கேட்டுக்கொள்ளுங்கள். விரைவில் உங்களுக்குப் புரிந்துவிடும்;.

(5) (உங்களது தவறான நடத்தையின் இறுதி விளைவை) உறுதியாக நீங்கள் அறிந்திருந்தால் இப்படிச் செயல்பட மாட்டீர்கள்.

(6) திண்ணமாக நீங்கள் நரகத்தைப் பார்க்கத்தான் போகிறீர்கள்!

(7) இன்னும் (கேட்டுக்கொள்ளுங்கள்) திண்ணமாக நீங்கள் அதனைக் கண்கூடாகப் பார்க்கத்தான் போகிறீர்கள்!

(8) பிறகு அந்நாளில் இந்த அருட்கொடைகளைப் பற்றி கட்டாயம் உங்களிடம் வினவப்பட்டே தீரும்.

இவ்வுலகத்தில் அதிக அளவு பொருட் செல்வத்தையும் குழந்தைச் செல்வத்தையும் ஈட்டுவதிலேயே மனிதர்கள் தங்களை ஈடுபடுத்துகிறார்கள். வீணான பொழுது போக்கிலேயே அவர்களது வாழ்நாட்கள்; கழிக்கின்றன. அவர்களது சிந்தனை உலக இன்பங்களை அனுபவிப்பதிலேயே மூழ்கிக் கிடக்கிறது. மரணம் அடையும் வரை - மண்ணறைகளைச் சந்திக்கும் வரை இந்நிலைதான் நீடிக்கிறது.

மனிதர்களின் இந்தத் தவறான போக்கினை அல்லாஹ் இகழ்ந்துரைக்கிறான். நீங்கள் எத்தகைய தவறினைச் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பது மரணத்திற்குப் பிறகு மண்ணறையிலும் மறுமைநாளிலும்தான் உங்களுக்குப் புரியும். அல்லாஹ்வின் தண்டனையை நீங்கள் நேரில் காணும்பொழுது உண்மை நிலவரம் உங்களுக்குத் தெளிவாகி விடும்.

கருத்துச் சுருக்கம் இதுதான்: நீங்கள் உறுதியாக அறிந்தால், மறுமையின் வேதனை எப்படிப்பட்டது என்பது பற்றி ஒரு முழு மையான சிந்தனை வடிவத்தை உங்கள் மனக்கண் முன்; நீங்கள் கொண்டுவந்தால் இறைநிராகரிப்புப் போக்கையும் வீணான கேளிக்கைகளையும் நீங்கள் விட்டுவிடுவீர்கள். ஆம், அந்த மறுமை வேதனை அவ்வளவு பயங்கரமானது, கதிகலங்கச் செய்யக்கூடியது.

இவ்வாறு சீராக நீங்கள் சிந்தித்தால் அதாவது, இவ்வுலகத்தில் நீங்கள் உயிருடன் இருக்கும்போதே நரகத்தைக் காண்பது போன்ற உணர்வு உங்களுக்கு வந்தால் நீங்கள் நிராகரிப்பில் பிடிவாதமாக இருக்கவா செய்வீர்கள்?

இவ்வுலகில் மனிதர்கள் மிகவும் அலட்சியமாக இருந்து கொண்டிருக்கிறார்கள். நரகத்திற்குச் செல்லும்போது அதன் கொடூரத்தைக் காணத்தான் போகிறார்கள்! உறுதியாக அதை அறிந்து கொள்ளத்தான் போகிறார்கள்! நரகம் என்பது உண்மை! அல்லாஹ்வின் வாக்கு சத்தியமானது.

இறைவன் மீது நம்பிக்கை கொள்ளவிடாமல் உங்களைத் திசை திருப்பியது இவ்வுலகின் சுகபோகங்கள்தான். அவைதான் மறுமை பற்றி சிந்திக்க விடாமல் உங்களைத் தடுத்துவிட்டது. எனவே உங்களிடம் குவிந்து கிடக்கும் சொத்து சுகங்கள், வீடுவாசல்கள், உயர்தர உணவுகள் பற்றியும் நீங்கள் அனுபவிக்கும்; சுகபோகங்கள் பற்றியும் உங்களிடம் கேள்வி கேட்கப்படுவது நிச்சயம்.

நபியவர்களின் வாழ்வில் நடந்த ஒருநிகழ்ச்சி இதற்குச் சிறந்ததொரு பாடமாகவும் அழகிய முன்மாதிரியாகவும் அமைந்துள்ளது.

ஒரு நாள் இரவு நபிகளார் (ஸல்) அவர்கள் வீட்டிலிருந்து வெளியே புறப்பட்டார்கள். வழியில் அபூபக்ர் (ரலி) அவர்கள் எதிர்பட்டார்கள். நபியவர்கள் கேட்டார்கள்:

"அபூ பக்ரே! வீட்டிலிருந்து உங்களை வெளியே வரச் செய்தது எது?"
"எது உங்களை வெளிக் கிளப்பியதோ அதுதான்;! (அதாவது பசிதான்)"
அதேபோன்று உமர் (ரலி)அவர்களும் அங்கே வந்தார்கள். அவர்களிடமும் நபியவர்கள் " இந்த வேளையில் உமரே! எதனால் வெளிக் கிளம்பினீர்கள்"என்று கேட்டார்கள்.
உங்கள் இருவரையும் வெளியே வரச் செய்தது எதுவோ அது தான் என்னையும் வெளியேறச் செய்துவிட்டது " என்றார்கள் உமர் (ரலி) அவர்கள். நபியவர்களும் அவர்களின் அன்புக்குரிய இரு தோழர்களும் ஓர் அன்ஸாரித் தோழர் வீட்டுக்கு வந்தார்கள். அவருடைய பெயர் அபுல் ஹைஸும் பின் தீஹான். அப்பொழுது அவர் வீட்டில் இல்லை. அவருடைய மனைவி நபியவர்களைக் கண்டதும், நபியவர்களையும் இரு தோழர்களையும் வருக வருக என்று வரவேற்றார்.
அவர் எங்கே போய் இருக்கிறார்?"
எங்களுக்கு நல்ல தண்ணீர் கொண்டுவரப் போய் இருக்கிறார் "
அதற்குள் அந்த அன்ஸாரித் தோழரும் வந்தார். நபியவர்களையும் இரு தோழர்களையும் கண்டதும் சொன்னார்: "இன்றைய தினம் விருந்தினர் வருகையால் என்னை விடவும் அதிகக் கண்ணியம் பெற்றவர் யாரும் இருக்க முடியாது! "
அந்தத் தோழர் உடனே தோட்டத்திற்குச் சென்று பேரீத்தம் பழங்களும் தண்ணீரும் கொண்டு வந்தார். "இவற்றைச் சாப்பிடுங்கள்" என்று சொன்னார்.
பிறகு (ஆடு அறுப்பதற்காக) கத்தியை எடுத்தார். அதனைக் கண்டதும் நபி (ஸல்) அவர்கள் அவரிடம் சொன்னார்கள்: "பால் தரும் ஆட்டை அறுத்து விடாதீர்! "
அந்த அன்ஸாரித் தோழர் ஆடு அறுத்து சமைத்துக் கொண்டு வந்தார். எல்லோரும் அவ்வுணவை உண்டார்கள்.
அவற்றை உட்கொண்டு பசி தீர்ந்து தாகம் தணிந்தபொழுது அபூ பக்ர், உமர் (ரலி) இருவரையும் நோக்கி நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனது உயிர் எவன் கைவசம் உள்ளதோ அந்த இறைவன் மீது சத்தியமாக! இப்பொழுது நாம் அனுபவித்த அருட்கொடைகள் பற்றி நிச்சயம் மறுமைநாளில் உங்களிடம் விசாரணை செய்யப்படும். பசி உங்களை வீட்டை விட்டும் வெளியே கிளப்பியது. இதோ! இந்த அருட்கொடைகளை அனுபவித்துக்கொண்டு வீடு திரும்புகிறீர்கள்! "

கவனிக்க வேண்டிய கருத்துகள்:

1) தங்களது வாழ் நாட்களை கேளிக்கையிலும் வேடிக்கையிலுமே கழிப்பவர்களை அல்லாஹ் இகழ்கிறான்.

2) இவ்வுலகின் ஈடுபாடுகள் இறைநம்பிக்கையாளனை மறுமைச் சிந்தனையில் இருந்து திசைதிருப்பிவிடாது.

3) இவ்வுலகில் வழங்கும் அருட்கொடைகளைப் பற்றி மறுமை நாளில் எல்லா மனிதர்களிடமும் கேள்வி கணக்கு கேட்கப்படும். இந்த அருட்கொடைகளுக்கு ஏன் நன்றி கொன்றீர்கள்? என்று அல்லாஹ் வினவுவான்.



சூரத்துல் அஸ்ர் (103), மக்காவில் அருளப்பட்டது.

பொருள்:

அளவிலாக் கருணையும் இணையிலாக் கிருபையும் உடைய அல்லாஹ்வின் திருப்பெயரால்!

(1) காலத்தின் மீது சத்தியமாக!

(2) உண்மையில் மனிதன் பெரும் நஷ்டத்தில் இருக்கிறான்.

(3) ஆனால் யார் இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்து, மேலும் ஒருவருக்கொருவர் சத்தியத்தை எடுத்துரைத்துக் கொண்டும் பொறுமையைக் கடைப்பிடிக்குமாறு அறிவுரை கூறிக்கொண்டும் இருக்கிறார்களோ அவர்களைத் தவிர!

அல்லாஹ், காலத்தின் மீது சத்தியம் செய்து - 'மனிதன் இவ்வுலகில் நெறிதவறிச்செல்கிறான்., மறுவுலகில் பெரும் நஷ்டம் அடையக் கூடியவனாக இருக்கிறான்’ என்று கூறுகிறான்!- இந்நிலைக்குக் காரணம், மனிதன் இறைக்கட்டளைகளுக்கு அடிபணியாததும் மன இச்சையைப் பின்பற்றி தீயசெயல்களைச் செய்வதும்தான் காரணம்.

ஆனால் இவ்வுலகில் வேறு சில மனிதர்கள் உள்ளனர். அவர்களுக்கு எவ்வித நஷ்டமும் இழப்பும் இல்லை. மாறாக பெரும் வெற்றியும் லாபமும்தான் அவர்களுக்குக் காத்திருக்கிறது. அதற்குக் காரணம் பின்வரும் மேலான பண்பு நலன்கள் அவர்களிடம் இருப்பதுதான்:

- அவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்களையும் விசுவாசம் கொண்டு இஸ்லாம் எனும் சத்திய சன்மார்க்கத்தைப் பின்பற்றி வாழ்வார்கள்.

- அவர்கள் நற்செயல்கள் ஆற்றுவார்கள். தீய செயல்களை விட்டும் விலகிவிடுவார்கள்.

-தாங்கள் எவ்வாறு நேர்வழி பெற்றார்களோ அவ்வாறு பிற மக்களுக்கும் நேர்வழி காட்டுவார்கள். சத்தியத்தை ஏற்று நடக்குமாறு அனைவருக்கும் நல்லுரை பகர்வார்கள்.

- நன்மையான காரியங்களை மேற்கொள்ளும்போதும் -இஸ்லாத்தின் பக்கம் மக்களை அழைக்கும் போதும் ஏற்படக்கூடிய கஷ்டங்களைத் தாங்கிக் கொள்வார்கள். துன்பங்களைப் பொறுமையுடன் சகித்துக் கொள்வார்கள். இந்த விஷயத்தில் ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழ்வார்கள்.

ஆனால் இவ்வுயர் பண்புகளைக் கடைப்பிடிக்காதவர்கள் யாரோ இந்த அடிப்படைக் கடமைகளை நிறைவேற்றாதவர்கள் யாரோ அவர்கள் இவ்வுலகிலும் வழிகெட்டுத்தான் போவார்கள். மறுமையிலும் சுவனத்துப் பாக்கியங்கள் இழந்து பெரும் நஷ்டத்திற்குத் தான் ஆளாவார்கள்.

கவனிக்க வேண்டிய கருத்துகள்:

1) இறைநம்பிக்கையும் நல்ல அமலும் இல்லாத மனிதனிடம் எந்த நன்மையும் இல்லை.

2) உண்மை முஸ்லிம்கள் நன்மையான காரியத்தில் ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழ்வார்கள்.

3) உண்மை முஸ்லிம்கள் அழைப்புப் பணியினால் வணக்க வழிபாட்டினால் ஏற்படும் கஷ்டங்களை பொறுத்துக் கொள்வர்.



சூரத்துல் ஹுமஸா (104), மக்காவில் அருளப்பட்டது

பொருள்:

அளவிலாக் கருணையும் இணையிலாக் கிருபையும் உடைய அல்லாஹ்வின் திருப்பெயரால்.

(1) (மக்களை நேருக்கு நேர்) இழித்துரைத்துக் கொண்டும் (முதுகுக்குப் பின்) குறை கூறிக்கொண்டும் திரிகிற ஒவ்வொரு மனிதனுக்கும் கேடுதான்.

(2) அவன் செல்வத்தைச் சேகரித்து எண்ணி எண்ணி வைக்கிறான்.

(3) தன்னுடைய செல்வம் தன்னை என்றென்றும் நிலைத்திருக்கச் செய்யும் என்று கருதுகிறான்.

(4) அவ்வாறன்று! சிதைத்துச் சின்னாப்பின்னமாக்கக் கூடிய ஓர் இடத்தில் அவன் வீசி எறியப்படுவான்.

(5) சிதைத்துச் சின்னாப்பின்னமாக்கக் கூடிய அந்த இடம் எது என்று உமக்குத் தெரியுமா?

(6) அது அல்லாஹ்வின் நெருப்பு! அது உக்கிரமாக மூட்டப்பட்டிருக்கும்!

(7) அது இதயங்கள் வரை சென்று பரவக்கூடியதாகும்!

(8) திண்ணமாக அது அவர்கள் மீது சூழ்ந்து மூடப்பட்டிருக்கும்.

(9) அவர்களோ உயர உயரமான தூண்களில் கட்டப்பட்டிருப்பார்கள்.

இஸ்லாம் தன்னைப் பின்பற்றும் மக்களுக்கு மிக்க மேலான நல்லொழுக்கங்களைக் கற்றுத் தருகிறது. யாரும் யாரைக் குறித்தும் தகாத வார்த்தை பேசக்கூடாது என அறிவுறுத்துகிறது. ஏனெனில் அது அவர்களின் காதுகளுக்கு எட்டினால் அவர்களை மனம் நோகச் செய்யும். பிறர் மனம் நோகும்படியாகப் பேசுவது எவ்விதத்திலும் கூடாது. அதனால் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு நாசமும் கேடும் விளையலாம். எனவே அவர்கள் தொடர்பாகப் பேசப்பட்ட அந்த விஷயம் உண்மையாக இருந்தாலும் அது தவிர்க்கப்பட வேண்டியதே!

பிறரைப் பரிகாசம் செய்வதையும் இஸ்லாம் தடுக்கிறது. இவன் குள்ளன்., அவன் நெட்டையன்., அவன் பரிகாசத்திற்குரிய தோற்றம் உடையவன் என்றெல்லாம் யாரையும் பழித்துப் பேசக்கூடாது!

இப்படிப் பேசுவது மனிதனின் மனத்தைப் புண்படுத்தும் என்பது மட்டுமல்ல, அல்லாஹ்வுக்கே கோபத்தை ஏற்படுத்தக் கூடிய துமாகும். ஏனெனில் மனித குலம் முழுவதும் அல்லாஹ்வின் படைப்பாகும்.

ஒரு முஸ்லிம் பிறரின் குற்றங்குறைகளைக் கூறிக் குத்திக் காட்டுவது கூடாது. இவ்வாறு மக்களை மனம் நோகச் செய்யும் தீயவர்களுக்கு மறுமையில் கடும் தண்டனை காத்திருக்கிறது என்று இந்த அத்தியாயம் எச்சரிக்கை செய்கிறது.

குறைகளைக் குத்திக் காட்டிப் பேசுவதையும் கேலி கிண்டல் செய்வதையுமே வாடிக்கையாகக் கொண்ட தீயவர்கள் உலகின் சுக போக வாழ்வில் அதிக மோகம் கொண்டு திரிகிறார்கள். சொத்து சுகத்தின் மீது அதிகப் பேராசை அவர்களுக்கு. செல்வத்தை அள்ளிக் குவித்து எண்ணி எண்ணிப் பார்த்து பெருமை அடிப்பவர்களாக இருக்கிறார்கள். இவ்வாறு அவர்களிடம் குவிந்து கிடக்கும் ஏராளமான செல்வம்தான் பிற மக்களைப் பரிகாசம் செய்யுமாறு அவர்களைத் தூண்டுகிறது.

அல்லாஹ்வின் தண்டனையில் இருந்து தங்களது செல்வம் தங்களைப் பாதுகாக்கும் என்று அவர்கள் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது ஒருபோதும் நடக்காது. அவர்கள் நரக நெருப்பில் புகுத்தப்படுவது நிச்சயம்! அதிலிருந்து அவர்களின் செல்வம் அவர்களை ஒருபோதும் பாதுகாக்கப் போவதில்லை! நரக நெருப்பு அவர்களின் உடல்களைச் சிதைத்துச் சின்னாபின்னப் படுத்தத்தான் போகிறது! அவர்களது உடலின் உட்பகுதிகளைக் கூட அது கரிக்காமல் விட்டு வைக்காது! நரகத்தின் கொடுமையான தண்டனையில் இருந்து தப்பித்திட எந்த வழியும் அவர்களுக்கு இருக்காது!

கவனிக்க வேண்டிய கருத்துகள்:

1) பிறரைப் பரிகாசம் செய்யக் கூடாது. குற்றங்குறைகளைச் சொல்லிக் குத்திக் காட்டிப் பேசவும் கூடாது. இவற்றை இஸ்லாம் தடை செய்துள்ளது.

2) குவிந்து கிடக்கும் செல்வம் மரணத்தைத் தடுக்கப்போவதில்லை. மறுமைத் தண்டணையில் இருந்தும் காப்பாற்றப் போவதில்லை.

3) நரக வாசிகள் நரகநெருப்பில் புகுத்தப்பட்டு உடல்கள் கரித்துப் பொசுக்கப்படும். அவர்களை உள்ளே தள்ளி நரகம் பூட்டப்பட்டு விடும்.



சூரத்துல் குபீல் (105), மக்காவில் அருளப்பட்டது

பொருள்:

அளவிலாக் கருணையும் இணையிலாக் கிருபையும் உடைய அல்லாஹ்வின் திருப்பெயரால்!

(1) யானைப் படையினருடன் உம் இறைவன் எப்படி நடந்து கொண்டான் என்பதை நீர் பார்க்கவில்லையா?

(2) அவர்களின் சதித் திட்டத்தை அவன் வீணடித்து விட வில்லையா?

(3) மேலும் அவர்கள் மீது பறவைகளைக் கூட்டம் கூட்டமாக அவன் அனுப்பினான்.

(4) அவை, சுடப்பட்ட களிமண் கற்களை அவர்கள் மீது வீசிக் கொண்டிருந்தன.

(5) பிறகு (கால்நடைகளால்) மென்று தின்னப்பட்ட வைக்கோல் போன்று அவர்களை ஆக்கிவிட்டான்!

நபி இப்றாஹீம் (அலை) அவர்கள் அல்லாஹ்வின் ஆணைப்படி மக்கமாநகரில் கஅபா ஆலயத்தை நிர்மாணித்தார்கள். அன்று முதல் கஅபாவின் கண்ணியம் அனைத்து மக்களின் உள்ளத்திலும் ஆழப் பதிந்தது. மக்கள் ஆண்டு தோறும் அங்கு சென்று புனித ஹஜ்ஜை நிறைவேற்றும் பழக்கம் தொன்றுதொட்டு நடைபெற்று வருகிறது!

புனித கஅபாவுக்குப் போட்டியாக யமன் தேசத்தில் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றை அங்கு ஆட்சி செய்துகொண்டிருந்த அப்ரஹா மன்னன் கட்டியெழுப்பினான். அரபு மக்கள் அனைவரும் அதற்கு கண்ணியம் அளிக்க வேண்டும்., அங்கு சென்று ஹஜ் செய்ய வேண்டும் என்று கட்டளையும் பிறப்பித்தான்.

ஆனால் கஅபா ஆலயத்தின் மீது மக்கள் வைத்திருந்த பற்றும் பாசமும் அப்ரஹாவின் சதித் திட்டம் நிறைவேறுவதற்கு பெரும் தடையாக இருந்தது. அதனால் மக்காவிலுள்ள கஅபாவை இடித்துத் தகர்க்கத் திட்டமிட்டான் அவன். அப்படிச் செய்து விட்டால் யமனில் உருவாக்கிய தேவாலயத்தை நோக்கித்தான் எல்லா மக்களும் வந்தாக வேண்டும் என்பது அவனது எதிர்பார்ப்பு.

அவ்விதமே அப்ரஹா மன்னன் 60 ஆயிரம் வீரர்களைக் கொண்ட பெரும் படையைத் திரட்டிக் கொண்டு மக்காவை நோக்கிப் புறப்பட்டான். யானைப்படை ஒன்றும் உடன் வந்தது.இது நபி (ஸல்) அவர்கள் பிறப்பதற்கு 50 நாட்களுக்கு முன்பு நடந்தது.

அப்ரஹாவின் கூலிப்படைகள் மக்காவை நெருங்கியபோது திடீரெனப் பறவைகள் கூட்டம் கூட்டமாகத் தம் அலகுகளிலும் கால்களிலும் பொடிப்பொடிக் கற்களை எடுத்துக் கொண்டு வந்து அவர்கள் மீது கல்மாரி பொழிந்தன. எவர் மீதெல்லாம் அந்தக் கற்கள் விழுந்தனவோ அவர்களின் சதை அழுகி விழுந்தது. கால் நடைகளால் மிதித்து நசுக்கி மென்று தின்னப்பட்ட வைக்கோல் பதர் போன்று அப்படை முழுவதும் ஆகிவிட்டனர். இவ்விதம் அப்ரஹா உட்பட அனைவரும் அழிந்து விட்டனர்!

யானைப் படையினரை அழித்து கஅபா ஆலயத்தைப் பாதுகாத்தது அல்லாஹ்வின் ஆற்றலே தவிர அந்த மக்கள் வணங்கி வந்த சிலைகள் அல்ல., சிலைகள் வெறும் கற்கள்தான்., யாருக்கும் நன்மையோ தீமையோ அளிக்கும் ஆற்றல் அவற்றிற்கு இல்லை! இதனை மக்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டிருந்தனர். அன்று யானைப் படையினரை அழித்தது போன்று இஸ்லாத்தை எதிர்க்கும் நிராகரிப்பாளர்களை அழிக்கும் ஆற்றலும் அல்லாஹ்வுக்கு உண்டு என்று எச்சரிக்கை செய்யவே இந்த நிகழ்ச்சியை இந்த சூராவில் அல்லாஹ் சுட்டிக்காட்டியுள்ளான்.

கவனிக்க வேண்டிய கருத்துகள்:

1) புனித கஅபா ஆலயத்தை எல்லா விதமான தீங்கில் இருந்தும் அல்லாஹ் பாதுகாக்கிறான்.

2) அப்ரஹாவின் கூலிப் படைகளை ஆச்சரியமான முறையில், அச்சுறுத்தும் வகையில் அல்லாஹ் அழித்தான்.

3) திரண்டு வந்த எதிரிப்படைகளை அழித்தது மக்காவாசி களுக்கு அல்லாஹ் செய்த பேருபகாரமாகும். அதனையே இங்கு நினைவூட்டுகிறான்;!

4) இஸ்லாத்திற்கு என்றைக்கும் அல்லாஹ்வின் தக்க பாதுகாப்பு உண்டு என்று முஸ்லிம்களுக்கு ஊக்கம் அளிக்கப்படுகிறது.



சூரத்து குறைஷ்; (106), மக்காவில் அருளப்பட்டது

பொருள்:

அளவிலாக் கருணையும் இணையிலாக் கிருபையும் உடைய அல்லாஹ்வின் திருப்பெயரால்

(1) குறைஷிகள் எத்துணை நன்றாகப் பழக்கப்பட்டு விட்டார்கள்!

(2) (அதாவது)குளிர்கால மற்றும் கோடை காலப் பயணங்களில் நன்கு பழக்கப்பட்டுவிட்டார்கள்!

(3) எனவே அவர்கள் இந்த இல்லத்தின் இறைவனை வணங்கி அடிபணியட்டும்.

(4) அவன்தான் அவர்களைப் பசியிலிருந்து காப்பாற்றி உணவு வழங்கினான். அச்சத்திலிருந்து அவர்களை மீட்டு அமைதி அளித்தான்.

மக்கா வாசிகள் மீது அருளப்பட்ட சில அருட்கொடைகள் இந்த அத்தியாயத்தில் சுட்டிக்காட்டப்படுகின்றன.

பயணம் மேற்கொள்வதை மக்கத்து குறைஷிகளுக்கு பிரியமான ஒன்றாக அல்லாஹ் ஆக்கினான். அவர்கள் கோடை காலத்தில் சிரியா, பாலஸ்தீனம் ஆகிய நாடுகளை நோக்கியும் குளிர் காலத்தில் தெற்கு அரேபியாவை அதாவது யமன் தேசத்துப் பகுதிகளை நோக்கியும் பயணம் மேற்கொண்டு வாணிபம் செய்து பெரும் லாபம் சம்பாதித்து வந்தனர்.

இவ்வாறு இந்தப் பயணங்களை இலகுவாக்கியதே குறைஷிகள் மீது அல்லாஹ் பொழிந்த பெரும் அருட்கொடைதான். ஏனெனில் வாணிபத்திற்காக அவர்கள் சென்று வந்த பாதைகளில் அமைதி நிலவிட அல்லாஹ் ஏற்பாடு செய்த காரணத்தால்தான் அவர்கள் பசி பட்டினி இன்றி வாழ்வதற்கு வழிவகை பிறந்தது.

அது மட்டுமல்ல மக்கள் மத்தியில் குறைஷிகளுக்கு இருந்த செல்வாக்கு கஅபாவின் பொருட்டால் கிடைத்ததாகும். ஏனெனில் அவர்கள்தான் கஅபா ஆலயத்தின் அறங்காவலர்களாக இருந்தனர். அதனால் அரசியல் மற்றும் மத ரீதியிலான தலைமைத்துவம் அவர்களுக்குக் கிடைத்திருந்தது!

இந்த அருட்கொடைகளை கவனத்தில் கொண்டு அல்லாஹ் ஒருவனையே வணங்குவதும் சிலைவழிபாட்டை விட்டொழிப்பதும் குறைஷிகள் மீது கடமையாயிற்று. ஏனெனில் அந்தக் கடவுளர் அவர்களுக்கு எவ்வித நன்மையயும் அளிக்கவில்லை!

- இத்தகைய ஏகத்துவச் சிந்தனையைத்தான் இந்த அத்தியாயம் இங்கு சுட்டிக் காட்டுகிறது.

கவனிக்க வேண்டிய கருத்துகள்:

1) குறைஷிகளுக்கு ரிஜ்க் (வாழ்வாதாரம்), அமைதி வாழ்வு ஆகியவற்றின் மூலம் அல்லாஹ் அளித்த கண்ணியத்திற்கு கஅபா ஆலயமே அடிப்படையாகும். குறைஷிகள் அதன் அரங்காவலர்களாய் இருந்தனர்.

2) குறைஷிகள் ஆண்டில் இரு முறை பயணம் மேற்கொள்வர். குளிர் காலத்தில் யமன் தேசம் செல்வர். கோடை காலத்தில் ஷாம் தேசம் செல்வர்.

3) எல்லா வகையான அருட்கொடைகளுக்காகவும் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவது மக்கள் அனைவர் மீதும் கடமை. அவனை மட்டும் வணங்கி அவனுக்கு அடிபணிந்து வாழ்வதன் மூலம் அது நிறைவேறும்.



சூரத்துல் மாஊன் (107), மக்காவில் அருளப்பட்டது

பொருள்:

அளவிலாக் கருணையும் இணையிலாக் கிருபையும் உடைய அல்லாஹ்வின் திருப்பெயரால்!

(1) (மறுமையில்) நற்கூலி- தண்டனை கொடுக்கப்படுவதைப் பொய்யென்று கூறுபவனை நீர் பார்த்தீரா?

(2) அவன்தான் அநாதையை மிரட்டி விரட்டுகிறான்.

(3) மேலும் அவன் வறியவரின் உணவை அளிக்கும்படி தூண்டுவதுமில்லை.

(4) இப்படிப்பட்ட தொழுகையாளிகளுக்குக் கேடுதான்:

(5) அவர்கள் எப்படிப்பட்டவர்கள் எனில், தங்களது தொழுகையில் அலட்சியமாக இருக்கக்கூடியவர்கள்.

(6) பிறருக்குக் காட்டுவதற்காகவே செயல்படக்கூடியவர்கள்.

(7) மேலும் சாதாரணத் தேவைகளுக்குரிய அற்பப் பொருள் களைக்கூட (பிறருக்குக்) கொடுத்து உதவுவதைத் தடுக்கக்கூடியவர்கள்.

மறுமை நாள் உண்மை என்பதையும் அங்கு மனிதர்கள் அனைவரும் மீண்டும் உயிருடன் எழுப்பப்பட்டு கேள்வி விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்பதையும் நம்பாத மனிதன் தீமைகள் செய்யத் தயங்குவதில்லை., பாவம் பழிகள் செய்யப் பயப்படுவதுமில்லை!

அவனுடைய தீமைகளில் குறிப்பிடத்தக்கவை என்னவெனில், அநாதைக் குழந்தைகளை ஈவிரக்கமின்றியே நடத்துவது, அவர்களின் துன்பநிலை கண்டு மனம் இரங்காதிருப்பது, ஏழை எளியோருக்கும் தேவை உடையோருக்கும் உணவளிக்கவோ உதவிகள் செய்யவோ அவன் முன்வராமலிருப்பது, பலவீனப்பட்டோருக்கு உதவும்படி பிறரைத் தூண்டாமலிருப்பது ஆகியவையாகும்.

நம் மீது இறைவனின் கண்காணிப்பு உள்ளது., நாளை மறுமையில் அவனது நீதிமன்றத்தில் பதில் சொல்லியாக வேண்டும் என்னும் அச்சம் இந்த மனிதனுக்கு இருந்தால் பாவப்பட்ட மக்களுக்கு இப்படிக் கொடுமை செய்யத் துணிவானா? நிச்சயம் துணிய மாட்டான்.

மேலும் இந்த வசனம், தொழுகைக்கு எவ்வித முக்கியத்துவமும் கொடுக்காமல் அலட்சியம் செய்யக்கூடியவர்களுக்கும் அல்லது தொழுகையை உரிய நேரத்தில் நிறைவேற்றாமல் பிற்படுத்துவதையே வாடிக்கையாகக் கொண்டவர்களுக்கும் கடும் தண்டனை உண்டு என்றும் எச்சரிக்கை செய்கிறது!

அப்படி தொழுகையில் பாராமுகமாக இருப்பது வஞ்சகத்தனமாகும். நயவஞ்சகர்கள் இறைவனுக்காக எனும் தூய எண்ணத்துடன் தொழமாட்டார்கள். மக்கள் முன்னிலையில் தங்களைத் தொழுகையாளிபோல் காட்டிக்கொள்வதற்காகவே தொழுவார்கள். அதனாலே தான் தொழுகையில் அவர்களுக்கு அவ்வளவு அலட்சியம்.

இப்படிப்பட்டவர்களிடம் மனித நேயம் இருக்காது. பணம் காசு கொடுத்தோ பிற அத்தியாவசியப் பொருள்கள் தேவையெனில் அவற்றை அளித்தோ யாருக்கும் எந்த உதவியும் செய்ய மாட் டார்கள். செய்யவும் விட மாட்டார்கள்.

கவனிக்க வேண்டிய கருத்துகள்:

1) தீய மனிதன் நல்லறம் எதுவும் செய்யவதில்லை.

2) அநாதைகள் மீது இரக்கம் காட்டுவது இஸ்லாத்தின் போதனை.

3) உண்மையான முஸ்லிம்கள், ஏழை எளியோருக்குத் தாங்களும் உதவி செய்வதுடன் பிறரையும் உதவி செய்யுமாறு தூண்டுவார்கள்

4) பகட்டுக்காகத் தொழுபவர்கள் பொய்யர்கள். அதற்கான தண்டனை அவர்களுக்கு உண்டு.

5) நல்ல முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் உதவிகரமாகத் திகழ்வார்கள்.



சூரத்துல் கவ்ஸர் (108), மக்காவில் அருளப்பட்டது

பொருள்:
அளவிலாக் கருணையும் இணையிலாக் கிருபையும் உடைய அல்லாஹ்வின் திருப்பெயரால்!

(1) (நபியே) நாம் உமக்கு கவ்ஸரை வழங்கினோம்.

(2) எனவே நீர் உமது இறைவனைத் தொழுவீராக. அவனுக்காகவே) பலி எனும் குர்பானி கொடுப்பீராக.

(3) திண்ணமாக உம் பகைவன்தான் வேரறுந்தவன். (சந்ததியற்றவன்)

இந்த அத்தியாயத்தில் அல்லாஹ் தன்னுடைய திருத் தூத ருக்கு ஏராளமான நன்மைகளை வழங்கியிருப்பதாக நற்செய்தி சொல்கிறான்! அத்தகைய குறிப்பிடத்தக்கதோர் அருட்கொடைதான் அல் கவ்ஸர் எனும் சுவனத்து நதி! அது அருட்பாக்கியம் மிக்க மகத்தானதொரு நதி! அது குறித்து நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்:

"என்னுடைய இறைவன் சுவனத்து நதியொன்றை எனக்கு வாக் களித்துள்ளான்.அதில் ஏராளமான நன்மைகள் உள்ளன" (முஸ்லிம்)

அல்லாஹ் தன் திருத் தூதருக்கு வழங்கிக் கண்ணியப்படுத்தியுள்ள சிறப்புகள் இன்னும் அதிகம் உள்ளன. அதனால்தான் தனக்கு நன்றி செலுத்துமாறும் தன்னையே தொழுமாறும் தனது உவப்பைப் பெறும் நோக்கத்துடன் - தனக்காக மட்டுமே பிராணி களைப் பலியிடுமாறும் நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கட்டளை இடுகிறான். இவை நபியவர்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் இடப்பட்ட கட்டளைகளேயாகும்.

மேலும் நேர்வழியின் பக்கம் மனித குலத்தை அழைக்கும் மகத்தான அழைப்பாளராக நபியவர்களை அல்லாஹ் அனுப்பி வைத்த தன் மூலமும் அவர்களை அல்லாஹ் கண்ணியப்படுத்தியுள்ளான்.

மேலும் நபிகளார் (ஸல்) அவர்களின் பெயரையும் புகழையும் உயர்த்தினான். இதோ! தினமும் ஐவேளைத் தொழுகைக்காக உலகின் எல்லாப் பகுதிகளிலும் பாங்கோசை முழங்கப்படுகிறது. அதில் நபிகளார் (ஸல்) அவர்களின் பெயரும் சேர்த்தே ஒலிக்கப் படுகிறது! பாங்கின் முழக்கம் முடிந்ததும் ஒவ்வொரு முஸ்லிமும் நபி (ஸல்) அவர்களுக்காக நன்மை வேண்டி பிரார்த்தனை செய்கின்றனர்.

குறைஷித் தலைவர்களில் ஒருவனாகிய ஆஸ் பின் வாயில் என்பவன் நபிகளார் (ஸல்) அவர்களின் புகழைக் களங்கப்படுத்தும் வகையில் அவதூறு பரப்பினான். மக்களிடம் சொன்னான்: "முஹம்மத் மரணம் அடைந்து விட்டால் அவருடைய பிரச்னையும் முடிவுக்கு வந்துவிடும். அவரை மக்கள் அடியோடு மறந்து விடுவர். ஏனெனில் மரணத்திற்குப் பிறகு அவரது பெயர் சொல்லும் வகை யில் ஆண் வாரிசுகள் அவருக்கில்லை "

இத்தகைய பழிச்சொல்லுக்கு மறுப்பளிக்கும் வகையில் அல்லாஹ் இந்த சூராவை இறக்கியருளினான்: ஆஸ் பின் வாயிலும் அவன் போன்ற நிராகரிப்பாளர்களும்தான் நாதியற்றுப்போவர். மக்கள் மறந்து விடுவது அவர்களைத்தான். ஏனெனில் அவர்கள் இஸ்லாத்தின் எதிரிகள்., அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் எதிர்ப்பவர்கள்;.

கவனிக்க வேண்டிய கருத்துகள்:

1) முஹம்மத் நபி (ஸல்) அவர்களுக்கு இவ்வுலகில் கண்ணியம் அளித்துள்ளான். கவ்ஸர் எனும் சுவனத்து நதி மூலம் நாளை மறுமையில் அவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் கண்ணியம் அளிப்பான்.

2) முஸ்லிம்கள் அல்லாஹ்வை மட்டுமே வாய்மையுடன் வணங்க வேண்டும். தொழுகை, குர்பானி போன்ற எந்த வழிபாடானாலும் எல்லாவற்றையும் அல்லாஹ்வுக்காக மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.



சூரத்துல் காஃபிரூன் (109), மக்காவில் அருளப்பட்டது

பொருள்:

அளவிலாக் கருணையும் இணையிலாக் கிருபையும் உடைய அல்லாஹ்வின் திருப்பெயரால்!

(1) (நபியே) கூறிவிடுவீராக: ஓ! நிராகரிப்பாளர்களே!

(2) நீங்கள் எவற்றை வணங்குகிறீர்களோ அவற்றை நான் வணங்கப்போவதில்லை.

(3) நான் யாரை வணங்குகிறேனோ அவனை நீங்கள் வணங்குபவர்கள் அல்லர்.

(4) நீங்கள் (உங்கள் முன்னோர் உள்பட அனைவரும்) வணங்கியவற்றை நான் வணங்குபவன் அல்லன்.

(5) நான் யாரை வணங்குகிறேனோ அவனை நீங்கள் வணங்கக் கூடியவர்கள் அல்லர்.

(6) உங்களுக்கு உங்கள் மார்க்கம்., எனக்கு எனது மார்க்கம்!

இறுதித் தூதராக இவ்வுலகிற்கு வருகை தந்த அண்ணல் நபி (ஸல்) அவர்கள், ஏக இறைவனாகிய அல்லாஹ்வை மட்டும் வணங்கும்படியும் சிலைவழிபாட்டைக் கைவிடும்படியும் மக்கத்து குறைஷிகளுக்கு அழைப்பு விடுத்தார்கள்.

ஆனால் நபியவர்களின் இந்த அழைப்பை குறைஷிகள் நிராகரித்துவிட்டுச் சிலை வணக்கத்திலேயே மூழ்கிக்கிடந்தனர்.

ஒருநாள் குறைஷித் தலைவர்களில் சிலர் நபிகளார் (ஸல்) அவர்களைச் சந்தித்து ஒரு கோரிக்கையை முன் வைத்தார்கள்.

அதாவது, நாங்கள் ஓராண்டு காலத்திற்கு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு முஸ்லிம்களுடன் சேர்ந்து அல்லாஹ்வை வணங்குகிறோம். இதேபோல் ஓராண்டுக்குப் பிறகு நீங்கள் அனைவரும் அதாவது நபியவர்களும் முஸ்லிம்களும் குறைஷிகளின் மதத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்களோடு சேர்ந்து ஓராண்டுக்கு சிலைகளை வணங்க வேண்டும் என்று வினோதமான கோரிக்கை ஒன்றை முன்வைத்தார்கள்.

இதுதான் சரியான தீர்வு., குறைஷிகளையும் முஸ்லிம்களையும் - இரு சாராரையும் இது திருப்திப்படுத்தி விடும் என்றும் இதனால் சண்டை சச்சரவு தீர்ந்து விடும் என்றும் அவர்களின் எதிர்பார்த்தனர்.

ஆனால் அல்லாஹ் இந்த அத்தியாயத்தை இறக்கியருளி குறைஷிகளின் இந்தக் கோரிக்கையை முற்றாக நிராகரித்து விட்டான். குறைஷிகளுக்கு இவ்வாறு உறுதியாகவும் தெளிவாகவும் கூறிவிடுமாறு நபியவர்களுக்குப் பணித்தான்: அதாவது,

‘நீங்கள் வணங்கிக்கொண்டிருக்கும் இந்தச் சிலைகளை நான் வணங்குவது சாத்தியமல்ல., ஏனெனில் இவை வெறும் கற்களே தவிர கடவுளர் அல்ல., நன்மை - தீமை அளிக்கும் ஆற்றல்கள் இவற்றிற்கு இல்லை.

இணை துணையில்லாத ஏக இறைவனை மட்டுமே வணங்கும்படி கூறும் இஸ்லாம் எனது வழி. ஷிர்க் - இறைவனுக்கு இணைவைத்து வணங்குவதென்பது உங்கள் வழி.

நீங்கள் இந்தச் சிலைகளையும் வணங்கிக்கொண்டு அத்துடன் அல்லாஹ்வை வணங்கினால் அதனை அவன் ஏற்றுக் கொள்ள மாட்டான். எனவே இத்தகைய தவறான போக்கினை கைவிடுவதுதான் உங்களுக்கு நல்லது. நன்றாகச் சிந்தித்துச் சீர்தூக்கிப் பார்த்துச் செயல்படுங்கள்.

இந்த அத்தியாயத்தில் குறைஷிகளின் இத்தகைய தவறான கோரிக்கையை ரத்து செய்வது தொடர்பான கட்டளை திரும்பத் திரும்ப இடம் பெற்றிருப்பதன் நோக்கம் - இறைமார்க்கத்தையும் குறைஷிகளின் மதத்தையும் ஒன்றாகப் போட்டுக் குழப்புவதை அல்லாஹ் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டான் என்பதை குறைஷிகள் உறுதியாக அறிந்து கொள்ள வேண்டும் என்பதுதான்!

கவனிக்க வேண்டிய கருத்துகள்:

1) இஸ்லாம் தவ்ஹீத் - ஓரிறை கொள்கையைப் போதிக்கிறது.

2) இஸ்லாத்தின் அடிப்படையாகிய ஏகத்துவத்துடன் ஏனைய மதங்களையும் அவற்றின் போலிச் சடங்குகளையும் ஒன்றாகப் போட்டுக் குழப்புவது அறவே கூடாது.

3) இறைமறுப்புக்கொள்கையில் பிடிவாதமாக இருந்த குறைஷிகளின் கோரிக்கை எத்துணை வினோதமானது! அதுவே அவர்களின் அறியாமைக்கு ஆதாரமாகும்.



சூரத்துன் நஸ்ர் (110), மதீனாவில் அருளப்பட்டது.

பொருள்:

அளவிலாக் கருணையும் இணையிலாக் கிருபையும் உடைய அல்லாஹ்வின் திருப்பெயரால்!

(1) அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வந்துவிடும்போது,

(2) மேலும் (நபியே) மக்கள் கூட்டம் கூட்டமாக அல்லாஹ்வின் மார்க்கத்தில் (இஸ்லாத்தில்) இணைவதை நீர் காணும்போது

(3) நீர் உம் இறைவனைப் புகழ்ந்து துதிப்பீராக. மேலும் அவனிடம் மன்னிப்புத் தேடுவீராக. நிச்சயமாக அவன் பெரிதும் மன்னிப்பு வழங்குபவனாக இருக்கிறான்.

மக்கத் திருநகர்தான் அன்றைய அரேபியாவின் தலைநகர். அதற்குக் காரணம் இறை ஆலயம் கஅபா அங்கு இருப்பதேயாகும்.

அன்றைய மக்கா வாசிகள் சிலைவழிபாடு செய்பவர்களாக இருந்தனர். புனிதமிகு அகபா ஆலயத்திலேயே முன்னூற்றி அறுபது சிலைகளை வைத்திருந்தனர்.

ஆரம்பத்தில் மக்கத்து குறைஷிகள் இஸ்லாத்தில் இணைய மறுத்தனர். மூதாதையரின் மதத்திலேயே பிடிவாதமாக இருந்தனர்.

மக்காவைத் துறந்து ஹிஜ்ரத் செய்து மதீனாவில் குடியேறிய நபிகளார் (ஸல்) அவர்கள் எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் மக்க மாநகரை வெற்றி கொண்டார்கள். அப்பொழுது கஅபாவினுள் வைக்கப்பட்டிருந்த எல்லாச் சிலைகளையும் அகற்றினார்கள்.

இவ்வாறு மக்கா வெற்றி கொள்ளப்பட்டு அங்கு ஏகத்துவக் கொள்கை நிலைநாட்டப்பட்ட பிறகு மக்கா வாசிகள் அனைவரும் மனமுவந்து இஸ்லாத்தில் இணைந்தனர்.

இந்தச் செய்தியை -அதாவது மக்கா வெற்றி கொள்ளப்பட்டதை யும் மக்கத்து குறைஷிகளும் ஏனைய மக்களும் இஸ்லாத்தில் இணைந்ததையும் சுற்று வட்டாரங்களில் வசித்த அரபுகள் அறிந்த போது அவர்களும் கூட்டம் கூட்டமாக வந்து நபி (ஸல்) அவர்களைச் சந்தித்தார்கள். அனைவரும் ஏகத்துவக் கலிமா மொழிந்து இஸ்லாத்தில் இணைவதாக அறிவித்தார்கள்.

இவ்வாறு இஸ்லாத்தின் செய்தி அனைத்து மக்களையும் எட்டிய பொழுது - அண்ணல் நபிகளார் (ஸல்) அவர்கள் தங்கள் மீது சுமத்தப்பட்ட கடமைகளை முழுமையாக நிறைவேற்றி முடித்த பொழுது அல்லாஹ் இந்த அத்தியாயத்தை இறக்கியருளினான். மேலும் இரட்சகனைச் சந்திப்பதற்கு ஆயத்தமாகும்படி தன் திருத் தூதர் முஹம்மத் நபியவர்களுக்கு அறிவுரை பகர்ந்தான்.

கருத்து இதுதான்: நபியே! மக்காவை வெற்றி கொள்ளும் பாக்கியம் உமக்கு கிடைத்துவிட்டது., மக்கத் திருநகரில் நுழைய வேண்டும்., சிலைவழிபாட்டையும் இணைவைப்பையும் தடுத்து நிறுத்த வேண்டும் எனும் உமது எதிர்பார்ப்பு நிறைவேறி விட்டது.

இதோ! மக்கள் கூட்டம் கூட்டமாக உம்மிடம் வந்து லா இலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் கலிமா ஏற்று இஸ்லாத்தில் இணைவதைக் காண்கிறீர்! எனவே அதிகம் அதிகமாக அல்லாஹ்வை நினைவு கூர்வீராக! அவன் உமக்கு வழங்கிய வெற்றி மற்றும் உதவியின் பேரில் அவனைப்போற்றிப் புகழ்வீராக! அவனி டம் பாவமன்னிப்பு தேடுவீராக! பாவமன்னிப்பு தேடுவோரை அல்லாஹ் பெரிதும் மன்னிப்பவன். கருணை பொழிபவன்.

கவனிக்க வேண்டிய கருத்துகள்:

1) நபியவர்களுக்கு வாக்களித்த உதவியையும் வெற்றியையும் அல்லாஹ் நிறைவேற்றிக் கொடுத்தான். நபியவர்கள் மக்கா நகரை மகத்தான முறையில் வெற்றி கொண்டார்கள்.

2) அல்லாஹ்வை அதிகமாகப் புகழ்ந்து துதிக்குமாறும் பாவமன்னிப் புக் கோருமாறும் நபிகளாருக்கு அல்லாஹ் அறிவுறுத்துகிறான்.



சூரத்துல் லஹப் (111), மக்காவில் அருளப்பட்டது.

பொருள்:

அளவிலாக் கருணையும் இணையிலாக் கிருபையும் உடைய அல்லாஹ்வின் திருப்பெயரால்!

(1) அபூ லஹபின் கைகள் அழிந்துவிட்டன., அவன் நாசமாகி விட்டான்.

(2) அவனது செல்வமும் அவனது சம்பாத்தியமும் அவனுக்கு எந்தப் பலனையும் அளிக்கவில்லை.

(3) கொழுந்துவிட்டெரியும் நெருப்பில் விரைவில் அவனும் நுழைவான்.

(4) முட்களையும் சுள்ளிகளையும் சுமந்து வரக்கூடிய அவனுடைய மனைவியும் (அதில் நுழைவாள்)

(5) (அவற்றைக் கட்டுவதற்காக) திரிக்கப்பட்ட ஈச்சங் கயிறு அவளது கழுத்தில் இருக்கும்.

அண்ணல் நபி(ஸல்) அவர்களுக்கு பெரிய தந்தைமார்களுள் ஒருவர் இருந்தார். அவரது பெயர் அபூ லஹப். அவர் இஸ்லாத்தை ஏற்கவில்லை. நிராகரிப்பாளனாக இருந்ததுடன் நபியவர்களைக் கடுமையாகப் பகைத்துக் கொண்டும் இருந்தார். இஸ்லாத்தைக் கண்மூடித்தனமாக எதிர்த்துக்கொண்டும் இருந்தார்.

எந்த அளவுக்கெனில், நபி(ஸல்)அவர்கள் எங்கெல்லாம் சென்று - தெருவோரங்கள் கடைவீதிகள் என எந்தெந்த இடங்களுக்குச் சென்று மக்களைச் சந்தித்து ஏகத்துவக் கொள்கையைப் போதித்து இஸ்லாத்திற்கு வருமாறு அனைவரையும் அழைத்தார்களோ அங்கெல்லாம் அபூ லஹபும் ஆஜராகி விடுவான்.

"மக்களே! லா இலாஹ இல்லல்லாஹ் என்று கூறுங்கள்., வெற்றி பெறுவீர்கள்"என்று அண்ணல் நபி(ஸல்)அவர்கள் சொல்லி முடித்தவுடன் - அபூலஹப் சொல்வான்: "முஹம்மத் சொல்வதை ஏற்காதீர்கள். அவர் ஒரு பொய்யர்" என்று!

அபூ லஹபின் மனைவியும் மிக மோசமானவள். அவளது பெயர் உம்மு ஜமீல். அவளும் தனது பங்கிற்கு நபி (ஸல்) அவர்களுக்குக் கடும் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தாள். இஸ்லாத்தின் எதிரியாகவே இருந்தாள். நபியவர்கள் நடந்து வரும் பாதை யிலும் அவர்களின் வீட்டு வாசல் முன்புறமும் முட்களையும் குப்பைகளையும் கற்களையும் போட்டு துன்பம் இழைத்துக் கொண்டிருந்தாள்.

இந்த அத்தியாயத்தை அல்லாஹ் இறக்கியருளி நபியவர்களுக்கு ஆறுதல் அளித்தான். அபூலஹப் அழிந்து நாசமடைந்து விட் டான்., விரைவில் அனல் பறக்கும் நரகத்தினுள் புகுத்தப்பட்டு கடுமையாகத் தண்டிக்கப்படுவான் என்று மிகக் கடுமையான வார்த்தைகளுடன் இந்த சூரா இறங்கிற்று. -இத்தனைக்கும் அவன் நபியவர்களின் பெரிய தந்தை!

இவ்வாறு நபியவர்களின் பெரிய தந்தையே பெயர் குறிப்பிட்டுக் கண்டிக்கப்பட்டபொழுது இஸ்லாத்தின் நிலைப்பாடு அதாவது அடிப்படைக் கொள்கை விஷயத்தில் இங்கு யாருக்கும் எவ்வித தயவு தாட்சண்யமும் கிடையாது என்கிற உறுதிப்பாடு தெளிவாக் கப்பட்டது.

நபியவர்களின் நெருங்கிய உறவினருக்கே இந்நிலை எனில் பிறரைப்பற்றி சொல்லவேண்டியதே இல்லை என்பது நிராகரிப் பாளர் உட்பட அனைவருக்கும் தெளிவானது.

கவனிக்க வேண்டிய கருத்துகள்:

1) யார் யாரெல்லாம் நபி(ஸல்) அவர்களை பகைத்துக் கொள்கிறார்களோ, இஸ்லாமிய அழைப்புப் பணிக்குப் பெரும் தடையாக இருக்கிறார்களோ அவர்கள் அனைவரும் நரகத்தில் புகுத்துப்படுவது திண்ணம்!

2) தீமைகள் செய்யும் மனிதனுக்கு மறுமை நாளில் அவனுடைய சொத்து சுகமோ பிள்ளைகளோ எவ்விதப் பயனும் அளித்திட மாட்டா! அப்படிப்பட்டவர்கள் நபி (ஸல்) அவர்களின் நெருங்கிய உறவினராக இருந்தாலும் சரியே!

3) அபூ லஹபும் அவனுடைய மனைவி உம்மு ஜமீலும் நரகம் செல்வது நிச்சயம். இஸ்லாத்தின் பால் அவர்கள் கொண்டிருந்த பகைமையே அதற்குக் காரணம்.



சூரத்துல் இ خக்லாஸ் (112), மக்காவில் அருளப்பட்டது

பொருள்:

அளவிலாக் கருணையும் இணையிலாக் கிருபையும் உடைய அல்லாஹ்வின் திருப்பெயரால்!

(1) கூறுவீராக: அவன் அல்லாஹ்! ஏகன்!

(2) அல்லாஹ் எவரிடத்தும் எத்தேவையுமில்லாதவன்., (அவன்தான் அனைவருக்கும் தேவையானவன்)

(3) அவன் யாரையும் பெறவுமில்லை., யாராலும் பெற்றெடுக்கப்படவும் இல்லை.

(4) எவரும் அவனுக்கு நிகரானவர் அல்லர்.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஏக இறைவனாகிய அல்லாஹ் ஒருவனையே வணங்கி வழிபடுமாறு எல்லா மக்களையும் அழைத்தார்கள். நபியவர்களின் வருகைக்கு முன்பு மக்கள் சிலை வணக்கம் செய்பவர்களாகவே இருந்தனர். அவர்களில் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து கேட்டனர்:

எந்த அல்லாஹ்வை வணங்க வேண்டுமென நீங்கள் அழைக்கிறீர்களோ அந்த அல்லாஹ் எப்படிப்பட்டவன்? அவனது வம்சா வழி என்ன? எந்தப் பொருளினால் அவன் ஆனவன்? இந்த பிரபஞ்சத்தை யாரிடம் இருந்து வாரிசு சொத்தாகப் பெற்றான்? அவனுக்கு யார் வாரிசு ஆவார்? - இத்தகைய கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் அல்லாஹ் இந்த அத்தியாயத்தை இறக்கி அருளினான்.

இந்த அத்தியாயம் ஏகத்துவக் கொள்கையை இரத்தினச் சுருக்கமாக விளக்கித் தருகிறது: அல்லாஹ்; இணைதுணை இல்லாத ஏக இறைவன். இறைமையில் அவனோடு எவருக்கும் பங்கில்லை. ஆக்குவதற்கும் அழிப்பதற்குமான எல்லா ஆற்றல்களும் அவன் கைவசம் மட்டுமே உள்ளன. ஏக இறைவனாகிய அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும். அவனிடம் மட்டுமே பிரார்த்தனை செய்ய வேண்டும்.

இறைவன் தான் எல்லோராலும் நாடப்படுபவனாகவும் எவரிடத்தும் தேவைப்படாதவனாகவும் இருக்கிறான். ஆனால் படைப்பினங்களோ எல்லா நிலையிலும் அவனை நாடி நிற்கின்றன. அவைதான் அவனைச் சார்ந்து வாழ வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளன. இறைமைக்குரிய இத்தகைய ஆற்றல்களில் எதுவும் - தெய்வச் சிலைகளுக்கோ இன்னபிற சக்திகளுக்கோ கிடையாது.

இன்னொரு பேருண்மையையும் இந்த அத்தியாயம் விளக்குகிறது: அதாவது, இறைவனுக்கு குமாரர் என்று யாரும் கிடையாது. ஒரு பெண்ணை மனைவியாகக் கொண்டு அவளைச் சார்ந்து வாழ வேண்டிய தேவையே அவனுக்கு இல்லை எனும் பாது குமாரர் அவனுக்கு எப்படி இருக்க முடியும்?
இதேபோல இறைவன் யாராலும் பெற்றெடுக்கப்பட்டு வரவில்லை. இறைவனுக்கு தாய் தந்தை என்று யாரும் இல்லை.

- இவைதாம் இறைமைக்குரிய பண்புகள். இந்த அடிப்படைப் பண்புகளைப் புரிந்து கொண்டால்,

- பிற ஒன்றின் பக்கம் தேவையாகும் பலவீனமான நிலையில் உள்ள எந்த ஒரு டைப்பினத்தையும் கடவுளாககக் கருதி வணங்கக்கூடாது என்பதையும்

- பிறிதொன்றிற்கு நிகராக உள்ள எந்தப் படைப்பினத்தையும் கடவுளாகக் கருதி வணங்கக்கூடாது என்பதையும்

- ஒரு தாயின் வயிற்றில் கருவாகி உருவாகி அதன் பிறகு பிறந்து வளரும் நிலையிலுள்ள எந்தப் படைப்பினத்தையும் கடவுளாகக் கருதி வணங்கக்கூடாது என்பதையும்

- இதே போல் பிள்ளைகளைச் சார்ந்து வாழும் நிலை யிலுள்ள எந்தப் படைப்பினத்தையும் கடவுளாகக் கருதி வணங்கக் கூடாது என்பதையும் எளிதில் புரிந்து கொள்ளலாம். உண்மை யாதெனில், வணக்கத்திற்குத் தகுதியானவன் ஏக இறைவனாகிய அல்லாஹ் ஒருவன்தான். அவன் ஏகன்.,இணைதுணை இல்லாதவன்., யாரையும் பெற்றெடுக்காதவன்., யாராலும் பெறப்படாதவன்.

கவனிக்க வேண்டிய கருத்துகள்:

1) அல்லாஹ் மட்டுமே வணக்கத்திற்குரிய இறைவன். இப்பேரண்டம் முழுவதையும் படைத்துப் பரிபாலித்துக் காக்கும் இரட்சகன்.

2) குடும்ப உறவு எனும் நிலை அல்லாஹ்வுக்கு இல்லை. தாய் தந்தையோ பிள்ளைகளோ யாரும் அல்லாஹ்வுக்குக் கிடையாது. இவற்றை விட்டும் அவன் தூய்மையானவன்.

3) அல்லாஹ்வுக்கு ஒப்பானவர், சமமானவர், நிகரானவர் என்று யாரும் இல்லை! எந்த சக்தியும் இல்லை!

4) நபி (ஸல்) அவர்கள் இந்த சூராவை ஸுப்ஹு தொழுகையின் ஸுன்னத் இரண்டாவது ரக்அத்திலும் மஃக்ரிப் தொழுகையின் ஸுன்னத்திலும் கஅபாவை தவாஃப் செய்த பின் உள்ள இரண்டு ரக்அத்திலும் வித்ர் தொழுகையிலும் ஓதக்கூடியவர்களாய் இருந்தார்கள்" (நூல்: முஸ்லிம், திர்மதி)



சூரத்துல் பலக் (113), மக்காவில் அருளப்பட்டது.

பொருள்:

அளவிலாக் கருணையும் இணையிலாக் கிருபையும் உடைய அல்லாஹ்வின் திருப்பெயரால்!

(1) கூறுவீராக: வைகரையின் இரட்சகனிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்.

(2) அவன் படைத்துள்ள ஒவ்வொன்றின் தீங்கிலிருந்தும்!

(3) இரவின் இருள் படரும்போது - அதன் தீங்கிலிருந்தும்!

(4) முடிச்சுகளில் ஊதுகிற (ஆண்) பெண்களின் தீங்கிலிருந்தும்!

(5) பொறாமைக்காரர்கள் பொறாமை கொள்ளும்போது அவர்களின் தீங்கிலிருந்தும்! (பாதுகாப்புத் தேடுகிறேன்)

மனிதனுக்குத் தொல்லை கொடுக்கக்கூடிய, அவனைத் துன்பங்களில் ஆழ்த்தக்கூடிய எத்தனையோ படைப்பினங்கள் உலகில் உள்ளன. அத்தகைய படைப்பினங்களின் தீங்கிலிருந்து பாதுகாப்புப் பெறுவது எப்படி என்று விளக்குகிறது இந்த அத்தியாயம்.

இத்தகைய படைப்பினங்களின் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடும் முறையை அல்லாஹ் தன்னுடைய தூதருக்கும் முஸ்லிம்கள் அனைவருக்கும் கற்றுத் தருகிறான். அல்லாஹ்விடம் பாதுகாப்பும் உதவியும் தேடி அவனிடமே தஞ்சம் புகுந்திட வேண்டும். ஏனெனில் அவன்தான் அவற்றின் படைப்பாளன்., அவற்றின் மீது அதிகாரம் செலுத்தும் அதிபதி! அவற்றின் தீங்கில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் ஆற்றல் அவனிடம் மட்டும்தான் உள்ளது.

அவன் படைத்துள்ள ஒவ்வொன்றின் தீங்கிலிருந்தும்: இந்த வாசகம்- மனிதன், ஜின்னு, நடப்பன, ஊர்வன போன்ற உயிரினங் களையும், காற்று, புயல் போன்றவற்றையும் இவ்வுலகில் துன்பம் கொடுக்கும் ஏனைய எல்லா வகையான படைப்பினங்களையும் உள்ளடக்கும்.

இரவின் இருளில் சுற்றித்திரியக்கூடிய படைப்பினங்களின் தீங்கில் இருந்தும் பாதுகாப்புத் தேடப்படுவதால் வைகறையின் இரட்சகனிடம் என்று குறிப்பாகச் சொல்லப்பட்டுள்ளது. அவன் அளிக்கும் பாதுகாப்பு வைகறை வரையிலும் நீடிக்க வேண்டும். மேலும் வைகறையின் மீதான அதிகாரம் அதைப் படைத்துப் பரிபாலித்து இயக்கிக்கொண்டிருக்கும் அதன் இரட்சகனிடம்தான் உள்ளது. இப்புவி வாழ் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தாலும் வைகறையை அவர்களால் கொண்டு வர முடியுமா? ஒருபோதும் முடியாது!

ஒரு முஸ்லிம் அதிகாலையில் எழுந்து அல்லாஹ்வை வணங்கி அவனிடம்; உதவியும் பாதுகாப்பும் தேடுவது போல் இரவு வந்ததும் உதவி வேண்டி அவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும். ஏனெனில் தீங்கு அளிக்கும் உயிரினங்கள் இரவு நேரத்தில் அங்கும் இங்கும் சுற்றித் திரிகின்றன. ஏன், சமூக விரோதச் செயல் களில் ஈடுபடும் தீய மனிதர்கள்கூட திருடுவதற்கும் தீமைகள் விளைவிப்பதற்கும் இரவு நேரங்களில்தான் வெளியே வருகின்றனர்.

எனவே ஒரு முஸ்லிம் இரவு பகல் எந்நேரமும் அல்லாஹ்விடம் உதவி தேடி அடைக்கலம் புகுவது அவசியம்.
மேலும் சூனியம் மற்றும் மந்திர மாயத்தின் தீமையில் இருந்தும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடிட வேண்டும். ஏனெனில் தீயோர்களில் சிலர் சூனியம், மந்திரங்களின் மூலமும் மக்களுக்குத் தொல்லைகள் அளித்து வருகிறார்கள். அதற்கென பற்பல உபாயங்களையும் தீய சூழ்ச்சிகளையும் மேற்கொள்கிறார்கள்.

ஏன், இத்தகைய சூனியக்காரர்கள் நபி (ஸல்) அவர்களுக்கும் கூட சூனியம் செய்து தொல்லை கொடுக்க முற்பட்டனரே! ஆனால் அவர்களின் தீங்குகளிலிருந்து அல்லாஹ் தன்னுடைய நபியவர் களைப் பாதுகாத்தான்.

இவ்வாறே பொறாமைக் காரர்களின் தீங்கை விட்டும் பாதுகாக் கும் படியும் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து வர வேண்டும். மக்கள் நன்மை அடைவதையும் மகிழ்ந்திருப்தையும் பொறாமைக்காரர்கள் விரும்புவதில்லை. அடுத்தவர் சந்தோசமாக இருப்பதைக் கண்டாலே அவர்களின் நெஞ்சு பொறுப்பதில்லை.

தன்னிடம் உதவி வேண்டி அடைக்கலம் தேடும் அடியார்கள் அனைவருக்கும் அல்லாஹ் பாதுகாப்பு அளிக்கிறான்!

கவனிக்க வேண்டிய கருத்துகள்:

1) ஒவ்வொரு முஸ்லிமும் அல்லாஹ்விடமே உதவி தேடி அவனிடமே தஞ்சம் புகுந்திட வேண்டும். தீமைகள், தொல்லைகளை விட்டுப் பாதுகாத்திடுமாறு அவனிடமே பிரார்த்தனை செய்திட வேண்டும்.

2) இரவில் சுற்றித் திரியும் விஷப் பூச்சிகளின் தீங்கு மற்றும் தீய மனிதர்களின் சூழ்ச்சி அனைத்தை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரிட வேண்டும்.

3) சூனியம் ஹராம் - தடை செய்யப்பட்டதாகும். சூனியம் மற்றும் சூனியக் காரர்களின் தீங்கை விட்டும் பாதுகாக்குமாறு ஒவ்வொரு முஸ்லிமும் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்திட வேண்டும்.

4) பொறாமை கொள்வது ஹராம் - தடை செய்யப்பட்டதாகும். பொறாமை மற்றும் போறாமைக்காரர்களின் தீங்கை விட்டும் பாதுகாக்குமாறு ஒவ்வொரு முஸ்லிமும் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்திட வேண்டும்.



சூரத்துன் நாஸ் (114)

பொருள்:

அளவிலாக் கருணையும் இணையிலாக் கிருபையும் உடைய அல்லாஹ்வின் திருப்பெயரால்!

(1) கூறுவீராக: நான் பாதுகாப்புத் தேடுகிறேன்., மக்களின் அதிபதியிடம்,

(2) மக்களின் மன்னனிடம்,

(3) மக்களின் உண்மையான இறைவனிடம்.,

(4) பதுங்கியிருந்து ஊசலாட்டங்களை ஏற்படுத்தக்கூடியவனின் தீங்கிலிருந்து (பாதுகாப்புத் தேடுகிறேன்)

(5) அவன்தான், மனிதர்களின் உள்ளங்களில் ஊசலாட்டங்களை ஏற்படுத்துகிறான்.

(6) அவன் ஜின்னுகளில் உள்ளவனாகவோ மனிதர்களில் உள்ளவனாகவோ இருக்கலாம்.

சில முக்கியமான வழிகாட்டல்களை இந்த அத்தியாயம் வழங்குகிறது. அவை ஒவ்வொரு முஸ்லிமுக்கும் தேவையானவையாகும்.

முஸ்லிம்கள் ஷைத்தானின் தீங்கிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடிக்கொண்டிருக்க வேண்டும். தீய செயல்கள் செய்யுமாறு தான் மனிதனை அவன் தூண்டிக்கொண்டே இருக்கிறான். மனிதன் சதாவும் பாவங்களிலேயே சிந்தனை செலுத்த வேண்டும் என்பது தான் ஷைத்தானின் விருப்பம். ஆனால் ஒரு முஸ்லிம் அல்லாஹ்வை நினைவு கூர்ந்து அவனிடம் உதவிதேடும் பொழுது ஷைத்தான் ஓடி ஒளிந்து கொள்கிறான்.

எனவே அல்லாஹ்வை நினைவு கூர்ந்து அவனிடம் உதவி கேட்காதபொழுது ஷைத்தான் வந்து பாவங்களை நினைவூட்டுகிறான். அவற்றைச் செய்யுமாறு தூண்டுகிறான். தீய வழியில் செல்லுமாறு ஏவுகிறான்.

உலகில் மனிதர்கள் சிலர் உள்ளனர். அவர்கள் ஷைத்தானை போன்றே செயல்படுவார்கள்.

வெறுக்கப்பட்ட தீய செயல்களைச் செய்யுமாறுதான் எப்பொழுதும் பிறரைத் தூண்டிக் கொண்டிருப்பார்கள். குழப்பம் விளைவிக்குமாறு மக்களை எப்பொழுதும் ஏவிக் கொண்டிருப்பார்கள். இப்படிப்பட்டவர்கள் மனித ஷைத்தான்கள்! இத்தகைய தீய மனிதர்களை விட்டும் எப்பொழுதும் விலகியே இருப்பது முஸ்லிமின் கடமையாகும்.

எல்லாவிதமான ஷைத்தான்களின் தீங்கை விட்டும் பாதுகாக்கு மாறு அல்லாஹ்விடம் உதவி தேடிக்கொண்டிருக்க வேண்டும்.

கவனிக்க வேண்டிய கருத்துகள்:

1) அல்லாஹ்தான் மக்களைப் படைத்தவன். அவர்களின் அரசன். வாழ்க்கை விதிகளை அவர்களுக்கு வகுத்துக்கொடுப்பவன்.

2) ஷைத்தானின் தீங்கை தடுக்குமாறு ஒவ்வொரு முஸ்லிமும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடிட வேண்டும்.

3) குழப்பத்தையும் அராஜகத்தையும் பரப்பப்கூடிய, அதில் பிறரை ஊக்கப்படுத்தக்கூடிய அனைத்து மனிதர்களும் ஷைத்தான்களே!

4) அல்லாஹ்வை நினைவு கூர்ந்து அவனை திக்ர் செய்வது ஷைத்தானை விரட்டக்கூடியதாகும்.

5) இந்த சூராவும் இதற்கு முன்னுள்ள சூரத்துல் பலக்கும் இரு மகத்தான அத்தியாயங்களாகும். இவ்விரு சூராக்களுக்கும் பெரும் சிறப்பு உள்ளதாக நபிகளார் (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: இன்றைய இரவில் இறக்கியருளப்பட்ட வசனங்களைப் பார்த்தீர்களா? இவை போன்ற சிறப்புகள் எந்த வசனங்களுக்கும் இல்லை. அவைதான்: குல் அஊذது பிறப்பில் பலக், குல் அஊذது பிறப்பின் நாஸ்" (நூல்: முஸ்லிம்)

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஒவ்வோர் இரவிலும் உறங்கும் போது குறிப்பாக நோயுற்றுவிடும்போது சூரத்துல் இக்லாஸுடன் சேர்த்து இம்மூன்று அத்தியாயங்களையும் மூன்று முறை ஓதி தம் இரு கைகளிலும் ஊதுவார்கள். தலையிலிருந்து கால் வரை உடல் முழுவதும் கை எட்டும் இடங்களிலெல்லாம் அந்தக் கைகளால் தடவுவார்கள்" (நூல்: அபூ தாவூத், நஸாஈ, ஹாகிம்)
Previous Post Next Post