அகீதா விடயங்கள் ஆய்வுக்குட்பட்டவை அல்ல



- S.H.M. இஸ்மாயில் ஸலஃபி 

அகீதா (நம்பிக்கை), மறைவான விடயங்கள் தொடர்பான குர்ஆனும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களும் சொல்லும் செய்திகள் ஆய்வுக்குரியவை அல்ல. அவை அப்படியே நம்பி ஏற்கப்பட வேண்டியவையாகும். அகீதா விடயங்களில் ஆய்வுகள் செய்வது வழிகேட்டை உருவாக்கக் கூடியதாகும்.

அல்குர்ஆன் மறைவான விடயங்கள் பற்றிக் கூறும் போது பின்வருமாறு குறிப்பிடுகின்றது.

‘அலிஃப், லாம், மீ;ம்.’

‘இது வேதமாகும். இதில் எவ்வித சந்தேகமும் இல்லை. பயபக்தியாளர்களுக்கு நேர்வழி காட்டக்கூடியதாகும்.’

‘அவர்கள் மறைவானவற்றை நம்பிக்கை கொள்வார்கள் தொழுகையையும் நிலைநாட்டுவார்கள் நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல்லறங்களில்) செலவும் செய்வார்கள்.’ (2:1-3)

மறைவான விடயங்கள் நம்பப்பட வேண்டியவை. அவை ஆய்வுக்குரியவை அல்ல. உதாரணமாக அல்லாஹ் சுவனம், நரகம், கப்ருடைய வேதனை, கழாகத்ர், மலக்குகள் போன்ற பல அம்சங்கள் உள்ளன. இதில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்பதை அறிய தேடுதல் அல்லது ஆய்வு செய்யலாம். சொல்லப்பட்ட செய்தி தொடர்பில் ஆய்வு இல்லாமல் அதை நம்ப வேண்டும்.

இதன் அர்த்தம் இஸ்லாம் ஆய்வுகளின் வாயில்களை மூடிவிடுகின்றது என்பது அல்ல. உலக விடயங்களிலும் சட்ட விடயங்களிலும் உண்மையைக் கண்டறிய தாராளமாக ஆய்வுகள் செய்யலாம். ஆனால், மறைவான விடயங்கள் அது எப்படி இருக்கும் என ஆய்வு செய்து கண்டு பிடிக்க முடியாது. அல்லாஹ்வும் றஸூலும் என்ன சொன்னார்களோ அப்படியே அதை நம்பித்தான் ஆக வேண்டும். இவ்வாறே அல்லாஹ்வைப் பற்றி அல்லாஹ்வும் அவனது தூதரும் என்ன சொன்னார்களோ அவற்றை அப்படியே நம்ப வேண்டும்.

அது குறித்து எப்படி என கேள்வி எழுப்பக் கூடாது இப்படித்தான் என விபரிக்கக் கூடாது அதன் அர்த்தத்தை மாற்றக் கூடாது. உதாரணமாக, அர்ரஹ்மான் அர்ஷின் மீதானான் என்று குர்ஆன் சொன்னால் அதை அப்படியே நம்பியாக வேண்டும்.

எப்படி அர்ஷில் இருக்கின்றான் என்று கேள்வி கேட்கக் கூடாது. எப்படி இருக்கின்றான் என்பது சொல்லப்படவில்லை. எப்படி என்பதை யாரும் ஆய்வு செய்து சொல்ல முடியாது. இது ஆய்வுக்குட்பட்டதல்ல. எனவே, எப்படி இருக்கின்றான் எனக் கேட்கவோ எப்படி இருப்பான் என சிந்திக்கவோ கூடாது.

அல்லாஹ் அர்ஷில் இப்படித்தான் இருப்பான் என யூகிக்கக் கூடாது. இது அல்லாஹ்வுக்கு ஒப்புவமை கூறுவதாகிவிடும். அல்லாஹ் எப்படி இருக்கின்றான் என்பது யாருக்கும் தெரியாத போது இப்படித்தான் என வர்ணிப்பது பொய்யானதும் போலியானதுமாகும்.

அல்லது, அர்ரஹ்மான் அர்ஷின் மீதானான் என்றால் அல்லாஹ் தன் ஆட்சியை அர்ஷின் மீது நிலைநாட்டினான் என்றுதான் அர்த்தம் செய்ய வேண்டும் என சொல்லப்பட்ட அர்த்தத்தை மாற்றக் கூடாது. அல்லாஹ்விடத்தில் குர்ஆன், ஸுன்னாவில் சொல்லப்பட்டதை சொல்லப்பட்ட விதத்தில் நம்பாமல் மாற்று விளக்கம் கொடுத்த தினால்தான் கவாரிஜ்கள், முஃதஸிலாக்கள், ஜஹ்மிய்யாக்கள், அஷஅரிய்யாக்கள் போன்ற கொள்கைக் கோளாறு மிக்க கூட்டங்கள் உருவாகின.

அல்லாஹ்வின் பண்புகளை ஏற்றுக் கொண்டால் அல்லாஹ்வைப் படைப்புக்களுக்கு ஒப்பிட்டதாகிவிடும் என சிந்தித்த சில வழிகேடர்கள், அல்லாஹ்வின் பண்புகள் பற்றிப் பேசும் வசனங்கள் அர்த்தமே என்னவென்று தெரியாது என அர்த்தத்தையே மறுத்தனர். அஹ்லுஸ் ஸுன்னா அர்த்தத்தைப் புரிந்து அதை ஏற்றுக் கொண்டது. ஆனால், எப்படி என்பது அல்லாஹ்வுக்கே தெரியும். அல்லாஹ் வருவான் என்றால் அல்லாஹ் வருவான், அவனது கண்ணியத்திற்கும் மகத்துவத்திற்கும் ஏற்ப அல்லாஹ் வருவான். அல்லாஹ் எப்படி வருவான் என்பது அவனுக்குத்தான் தெரியும் என்று கூறுவர்.

அல்லாஹ்வுக்கு ஸிபத்துக்கள், பண்புகள் இருக்கின்றன என்று சொல்வது படைப்புக்களுக்கு ஒப்பிடுவதாக இருக்காது.

‘அவனைப் போன்று எதுவுமில்லை. அவன்  செவியேற்பவன்ளூ பார்ப்பவன்.’
(42:11)

இந்த வசனங்கள் அல்லாஹ்வைப் போல எதுவும் இல்லை எனக் கூறும் அதே வேளை அவன் கேட்பவன், பார்ப்பவன் என்பதையும் சேர்த்தே கூறுகின்றது.

அல்லாஹ் கேட்கின்றான் என்று கூறுவதும், மனிதனும் ஏனைய படைப்புக்களும் பார்க்கின்றன, கேட்கின்றன என்று கூறுவதும் ஒப்பாக்குவதாக ஆகாது!

அல்லாஹ்வும் பார்க்கின்றான், மனிதர்களும் பார்க்கின்றனர். ஆனால், பார்க்கும் விடயத்தில் மனிதனும் அல்லாஹ்வும் சமமானவர்களா? நிகரானவர்களா? என்றால் இல்லை.

‘மேலும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.’
(112:4)

அல்லாஹ்வுக்கு நிகர் இல்லை என்று அல்லாஹ் கூறுகின்றான். அல்லாஹ்வின் பெயர்கள், பண்புகளைப் புரிந்து கொள்ள இந்த வசனம் ஒரு அடிப்படையாகும்.

அல்லாஹ் பார்க்கின்றான்:

பார்க்கும் விடயத்தில் அல்லாஹ்வுக்கு நிகராக எவரும் இல்லை. அல்லாஹ் கேட்கின்றான். கேட்கும் விடயத்தில் அல்லாஹ்வுக்கு நிகராக எவரும் இல்லை. அல்லாஹ் அன்பு செலுத்துகின்றான். அன்பு செலுத்தும் விடயத்தில் அல்லாஹ்வுக்கு நிகராக எவரும் இல்லை என எல்லாப் பண்புகளிலும் நிகரற்றவனாக, தனித்தன்மை வாய்ந்தவனாக அல்லாஹ் இருக்கின்றான் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

மனிதப் பார்வையும் அல்லாஹ்வின் பார்வையும் சமமாகாது. மனிதனால் ஒரே நேரத்தில் ஒரு கடுகைக் கூட முழுமையாகப் பார்க்க முடியாது. வெகுதூரத்தில் உள்ளதையோ, இருட்டில் உள்ளதையோ, மிகச் சிறிய பொருளையோ பார்க்க முடியாது. ஆனால், அல்லாஹ் ஒரே நேரத்தில் உலகில் உள்ள அனைத்தையும் மனிதனின் உள்ளத்தில் உள்ளவற்றைப் பார்க்கின்றான்.

எனவே, அல்லாஹ்வின் பார்வையும், மனிதப் பார்வையும் ஒன்றையொன்று ஒத்ததல்ல. இப்படி இருக்கும் போது அல்லாஹ் பார்க்கின்றான் என்று சொன்னால் அல்லாஹ்வைப் படைப்புக்களுக்கு ஒப்பிட்டதாக ஆகிவிடும். எனவே, அல்லாஹ் பார்க்கின்றான் என்பதை ஏற்க முடியாது அல்லது அதற்கு மாற்று விளக்கம் கொடுக்க வேண்டும் அல்லது அல்லாஹ் கண் இல்லாமல் பார்க்கின்றான் எனக் கூற வேண்டும் எனக் குர்ஆனின் வசனத்தின் அர்த்தத்தை அர்த்தமற்றதாக்குவது ஆபத்தான போக்காகும்.

அல்லாஹ்வைப் படைப்புக்களுக்கு ஒப்பிடக் கூடாது என்பது உன்மையானதே. ஆனால், அல்லாஹ்வின் பேச்சு, அல்லாஹ் பேசினான் என்றதும் அல்லாஹ் பேசுவதும் மனிதன் பேசுவதும் ஒன்றுபோலாகிவிடும். எனவே, அல்லாஹ் பேசினான் என்பதை மறுத்து மாற்று விளக்கம் கொடுக்க வேண்டும் என்று சிந்தித்தனர். அல்லது அல்லாஹ்வின் பெயர்கள், பண்புகளை முழுமையாக மறுக்க வேண்டும் என எண்ணினர்.

அல்லாஹ்வின் செயல்கள், பண்புகளை மனிதனது அல்லது படைப்பினங்களின் பண்புகளுடன் ஒப்பிட்டு சிந்தித்ததினால்தான் இவர்கள் மாற்று விளக்கமளிக்கவோ அல்லது பண்புகளை மறுக்கவோ முனைகின்றனர்.

இவர்கள் அல்லாஹ்வை நம்ப வேண்டிய விதத்தில் நம்பவில்லை. படைப்புக்களுக்கு ஒப்பாகவே நம்பியுள்ளனர். எனவே, கோளாறு இவர்களது அறிவிலும், உள்ளத்திலும்தான் உள்ளது.

எனவே, முதலில் அல்லாஹ்வை அவனது உயர்வான அந்தஸ்துக்கு ஏற்ப நம்ப வேண்டும்.

எறும்புக்கும் கால்கள் உண்டு! யானைக்கும் கால்கள் உண்டு. இரண்டும் சரிநிகராகிவிடுமா?

ஒரு நாட்டின் ஜனாதிபதி இன்னுமொரு நாட்டுக்கு விஜயம் செய்கின்றார். அதே நாட்டைச் சேர்ந்த ஒரு குடிமகனும் அந்த நாட்டிலிருந்து குறித்த நாட்டிற்கு விஜயம் செய்கின்றான். சாதாரண குடிமகன் அவன் தகுதிக்கு ஏற்ப செல்வான். நாட்டுத் தலைவன் அவனது தகுதிக்கும் அந்தஸ்துக்கும் ஏற்ப செல்வான். சாதாரண மனிதர்களிடத்திலேயே இப்படி வேறுபாடு இருக்கும் போது அல்லாஹ் பார்க்கின்றான் என்றால் மனிதனும் பார்க்கின்றான். எனவே, மனிதனை அல்லாஹ்வுக்கு அல்லது அல்லாஹ்வை மனிதனுக்கு ஒப்பிட்டதாகிவிடும். எனவே, அல்லாஹ் பார்க்கின்றான் என்பதன் அர்த்தத்தை மாற்ற வேண்டும் அல்லது மறுக்க வேண்டும் என நினைப்பது எவ்வளவு அறிவீனமானது என்று சிந்தித்தீர்களா?

இவர்கள் அல்லாஹ்வின் கண்ணியத்தைக் காக்கப் போகின்றோம் என அல்லாஹ்வின் பண்புகளை நிராகரித்தனர். அதற்கு அவர்கள் சொன்ன காரணம், அல்லாஹ்வைப் படைப்புக்களுக்கு ஒப்பிடும் நிலை வரக்கூடாது என்பதாகும். இப்படி அல்லாஹ்வின் பண்புகளை மறுத்து அவனை ஒன்றுமே இல்லாதவனாக சித்தரித்து அவனை இல்லாமைக்கு ஒப்பிட்டுவிட்டனர்.

எனவே, அல்லாஹ்வின் பெயர்கள், பண்புகள் மற்றும் மறுமை, மலக்குகள் போன்ற மறைவான விடயங்கள் என்பவற்றில் பொதுவாக மூளையைப் போட்டுக் குழப்பிக் கொள்ளாமல் உள்ளதை உள்ளபடி நம்பிவிட்டுப் போக வேண்டும். அல்லாஹ்வின் பெயர்கள், பண்புகள் விடயத்தில் அல்லாஹ்வின் கண்ணியத்திற்கும், மகத்துவத்திற்கும் ஏற்ப அப்பண்புகள் அவனிடம் உள்ளன. அச்செயல்களை அவன் நாடும் போது நாடும் விதத்தில் செய்வான். அது எப்படி என்பது எமக்குத் தெரியாது. எப்படி என்று கேட்கமாட்டோம். இப்படித்தான் என விபரிக்கமாட்டோம். அதன் அர்த்தத்தை மாற்றவும் மாட்டோம், மறுக்கவும் மாட்டோம் என உறுதியோடு இருப்பதுதான் அஹ்லுஸ்ஸுன்னாவின் சரியான நிலைப்பாடாகும். இதுதான் சரியானதும், நியாயமானதும், பாதுகாப்பானதுமான நிலைப்பாடாகும். ஆகவே, இதில் உறுதியாக நிலைத்து நிற்போமாக!

அல்லாஹ்வின் அழகுத் திருநாமங்களை மறுப்பது ஆபத்தானது:

‘அல்லாஹ்வுக்கு அழகிய பெயர்கள் உள்ளன. அவற்றைக் கொண்டே அவனைப் பிரார்த்தியுங்கள். அவனது பெயர்களில் திரிபுபடுத்துவோரை விட்டுவிடுங்கள். அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிற்காக அவர்கள் கூலி வழங்கப்படுவார்கள்.’ (7:180)

‘அல்லாஹ் என்று அழையுங்கள். அல்லது அர்ரஹ்மான் என்று அழையுங்கள். நீங்கள் எவ்வாறு அழைத்தாலும் அவனுக்கு அழகிய பெயர்கள் இருக்கின்றன என்று (நபியே!) நீர் கூறு வீராக! இன்னும் உமது தொழுகையில் அதிக சப்தமிட்டோ அதில் மிகமெது வாகவோ ஓதாதீர். இவற்றிற்கிடையில் ஒருவழியைத் தேடிக் கொள்வீராக!’

‘(தனக்கு) எந்தப் பிள்ளையையும் எடுத்துக் கொள்ளாத, அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும். மேலும், ஆட்சியில் அவனுக்கு எந்த ஒரு பங்காளனும் இல்லை. உதவியாளன் எனும் இழிவும் அவனுக்கில்லை என (நபியே!) நீர் கூறுவீராக! இன்னும் பூரணமான முறையில் அவனைப் பெருமைப் படுத்துவீராக!’ (17:110-111)
Previous Post Next Post