அபுபக்கர் (ரலி) வாழ்க்கை வரலாறு

முதல் கலீஃபா

அபுபக்கர் (ரலி) வாழ்க்கை வரலாறு


உள்ளடக்கம்:-

இஸ்லாத்திற்கு முன்பு

இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பின்பு..!

அற்பணம் மற்றும் தியாகம்

அபீசீனியாவிற்குப் பயணமாகுதல் (ஹிஜ்ரத்)

ஹிஜ்ரத்

பத்ர் யுத்தம் ஹிஜ்ரி 2 ஆம் ஆண்டு

உஹது யுத்தம், ரமளான் 3

அகழ் யுத்தம்

ஹுதைபிய்யா உடன்படிக்கை, துல்காயிதா 6

கைபர் யுத்தம், முஹர்ரம் 7

மக்கா வெற்றி, ரமளான் 8

ஹுனைன் யுத்தம்

தபூக் யுத்தம், ரஜப் 9

ஹிராக்ளியஸ்

ஹஜ் - தலைமைப் பொறுப்பு வகித்தல்

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மரணம் (12, ரபியுல் அவ்வல் 11)

முதல் கலீபா அபுபக்கர் சித்தீக் (ரலி)

தேர்தல்

பைஅத்

உஸாமா (ரலி) தலைமையில் படையெடுப்பு

பொய்த் தூதர்கள்

மதீனாவின் மீதான தாக்குதல் முறியடிப்பு

பொய்த் தூதர்கள் கொல்லப்படுதல்

பனீ தயீ

முஸைலமா என்ற பொய்யன்

ஈராக் மீதான படையெடுப்பு

காலித் பின் வலீத்

பாரசீகர்களை வெற்றி கொள்ளுதல்

காலித் பின் வலீத் அவர்களின் நிர்வாகம்

ஃபிராத் போர்

சிரியா

ரோமர்களின் படையெடுப்பு

ஜர்ஜா இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுதல்

ரோமர்களை வெற்றி கொள்ளுதல்

சுகவீனமும், மரணமும்




இஸ்லாத்திற்கு முன்பு..!

இஸ்லாத்திற்கு முந்தைய நாட்களில் அபுபக்கர் (ரலி) அவர்களின் இயற் பெயராக அப்துல் கஃபா என்ற பெயர், இஸ்லாத்தை அவர்கள் ஏற்றுக் கொண்டதன் பின் மாற்றம் செய்யப்பட்டு, அப்துல்லா என்றழைக்கப்பட்டார். ஆனால் இன்றைக்கு இஸ்லாத்தின் ஆரம்ப நாட்களிலும் சரி, அதன் பின்னாளிலும் சரி அவரது இயற் பெயர் மறைந்து, அபுபக்கர் சித்தீக் என்றழைக்கப்பட்டார்கள். அபுபக்கர் என்பது அவரது பரம்பரைப் பெயராகவும், மக்கள் அவரை அன்போடு சித்தீக் என்றும் அழைத்து பின்னாளில், அபுபக்கர் சித்தீக் என்று, இன்றும் கூட அதே பெயரில் அவரது பெயர் வரலாற்றில் நிலைத்து விட்டது.

இறைத்தூதர் (ஸல்) அவர்களும், அபுபக்கர் (ரலி) அவர்களும் இருவரும் முர்ரா என்ற ஒரே வம்சப் பரம்பரையிலிருந்து வந்தவர்கள் தான். அபுபக்கர் (ரலி) அவர்களுடைய தந்தை உதுமான் அபு குகஃபா அவர்கள் இஸ்லாத்தினைத் தன்னுடைய வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்ட போது, அவர்களுக்கு 90 வயதாகி இருந்தது. அதாவது சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், மக்கா வெற்றியின் போது ஹிஜ்ரி 8 ல் தான் இஸ்லாத்தைத் தழுவிக் கொண்டார். இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட 6 வருடங்கள் கழித்து அதாவது உமர் (ரலி) அவர்கள் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்று வழி நடத்திக் கொண்டிருந்த கால கட்டத்தில் இறந்து விட்டார்கள். அபுபக்கர் (ரலி) அவர்களது தாயாரும் இஸ்லாத்தினை ஏற்றுக் கொண்டார்கள். இவரும் பனீ தயீம் என்ற இறைத்தூதர் (ஸல்) வழி வந்த குலத்தில் பிறந்தவர்கள் தான்.

யானை ஆண்டு என்று சொல்லக் கூடிய ஹிஜ்ரத்திற்கு முந்தைய 50 ஆண்டுகளும் 6 மாதங்களுக்கு முன்பாக அபுபக்கர் (ரலி) அவர்கள் மக்காவில் பிறந்தார்கள். இஸ்லாத்திற்கு முந்தைய அந்த கால கட்டத்திலும் கூட குறைஷிக் குலத்தவர்களில் அபுபக்கர் (ரலி) அவர்கள் நல்ல மரியாதைக்குரிய குறிப்பிடத்தகுந்த ஒருவராகத் திகழ்ந்தார்கள். மக்காவில் இஸ்லாத்திற்கு முந்தைய கால கட்டத்திலும் இன்னும் அதற்குப் பின் வந்த கால கட்டத்திலும் மக்காவில் நன்கு மதிக்கப்பட்ட 10 தலைவர்களில் ஒருவராக அபுபக்கர் (ரலி) அவர்கள் திகழ்ந்தார்கள்.

இவர் மக்காவில் பிறந்து வளர்ந்திருந்தாலும் வியாபார நிமித்தமாக அடிக்கடி சிரியா, எமன் போன்ற நாடுகளுக்குச் சென்று வரக் கூடியவராக இருந்தார். இவ்வாறு அவர் வியாபார நிமித்தமாக முதன் முதலாக மக்காவை விட்டுச் செல்லும் பொழுது அவருக்கு வயது 18.

இஸ்லாத்தினை ஏற்றுக் கொள்வதற்கு முன்பு கூட அபுபக்கர் (ரலி) அவர்களிடம் காணப்பட்ட நல்லலொழுக்கங்கள், பண்பாடுகள், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றுக்காக மக்களிடம் மிகவும் பிரபல்யமான மனிதராகத் திகழ்ந்தார்கள். பிரச்னைக்குரிய விஷயங்களில் மக்கள் இவரிடம் வந்து கலந்தாலோசனை செய்வதும், அவர் கூறக் கூடிய கருத்துக்களுக்கு அதிக மதிப்புக் கொடுக்கக் கூடியவர்களாகவும் மக்கத்து மக்கள் இவரைப் போற்றி வந்தார்கள். அன்றைக்கு மக்காவில் இருந்த மிகப் பெரிய குலத்தவர்களில் மிகவும் செல்வாக்குப் பெற்ற மதிப்புப் பெற்ற குடும்பத்தில் ஒருவராக, குறிப்பாக மக்காவில் வசிக்கக் கூடிய குலங்களில் மிகவும் முதன்மை பெற்ற குலங்களில் ஒன்றில் பிறந்த அபுபக்கர் (ரலி) அவர்கள்.

அன்றைய அரபுலகத்தில் கொலைக்குப் பகரமாக இரத்த இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுக் கொள்ளும் வழக்கமிருந்தது. அவ்வாறு பெறக் கூடிய பணம் அபுபக்கர் (ரலி) அவர்களின் சம்மதமில்லாமல் பெறப்படுவதில்லை என்றதொரு நிலை கூட அன்றைய நாட்களில் நிலவி வந்தது. கவிதை புனைவதில் மிகுந்த திறமை பெற்றவராக இருப்பினும், இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பின் அதனை முழுமையாக விட்டொழித்து விட்டார். இன்னும் இஸ்லாத்தை தழுவுவதற்கு முன்பு கூட மதுவின் வாடையைக் கூட நுகராத மனிதராகத் திகழ்ந்தவர் தான் அபுபக்கர் (ரலி) அவர்கள்.

இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பின்பு..!

இஸ்லாத்தின் வெளிச்சப் புள்ளிகள் மக்காவைத் தரிசப்பதற்கு முன்புள்ள கால கட்டத்தில், இறைத்தூதர் (ஸல்) அவர்களை அடிக்கடி பார்த்துப் பேசி வரும் வழக்கமுள்ளவராக அபுபக்கர் (ரலி) அவர்கள் இருந்தும், இஸ்லாமிய அழைப்பு முதன் முதலாக விடுக்கப்பட்ட அந்த நாட்களில் அவர் எமன் தேசத்திலிருந்தார். பின் எமனிலிருந்து திரும்பி மக்கா திரும்பியவரை அபு ஜஹ்ல், உத்பா, ஷைபா போன்ற மக்காவின் மிகப் பிரபலங்கள் அவரைச் சென்று சந்தித்து, மக்காவின் வெளிச்சப் புள்ளியை விட்டில் பூச்சியாக்க நினைத்தனர்.

வீட்டிற்கு தன்னைப் பார்க்க வந்த அபு ஜஹ்ல், உத்பா, ஷைபா போன்றோரை விளித்து, என்ன விஷயமாக வந்திருக்கின்றீர்கள், ஏதேனும் விசேஷ செய்தி உண்டா? என்று அவர்களைப் பார்த்து அபுபக்கர் (ரலி) அவர்கள் வினவுகின்றார்கள்.

ஆம்! அது ஒரு மிகப் பெரிய செய்தி..!

அபூதாலிப்பின் பாதுகாப்பில் வளரக் கூடிய அந்த அநாதை, தன்னை ஒரு இறைத்தூதரென்று பிதற்றிக் கொண்டு திரிகின்றார்.

நாங்கள் உங்களுடைய வருகைக்காகத் தான் காத்திருக்கின்றோம். நீர் வந்தவுடன் இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும், இன்னும் இதில் உம்முடைய ஆலோசனை என்ன என்பதையும் நாங்கள் அறிய மிக ஆவலாக இருக்கின்றோம். அதற்காகத் தான் உங்களது இல்லமும் வந்தோம் என்று தாங்கள் வந்தததன் நோக்கத்தை அந்த நச்சவரங்கள் வெளிப்படுத்தின. இல்லை, விஷத்தைக் கக்கினர்.

விஷங்கள் விருட்சங்களை என்ன செய்யும்..! செய்தியைக் கேள்விப்பட்ட அபுபக்கர் அவர்கள் தன்னைப் பார்க்க வந்த பெருந்தலைகளை விட்டு விட்டு, தன் ஆருயிர்த் தோழரைக் காண விரைந்து செல்கின்றார்.

தோழரே..! நான் கேள்விப்பட்ட செய்தி உண்மையா?

ஆம்! என்றுரைத்தார் அண்ணல் நபி (ஸல்) அவர்கள்.

உங்களுடைய அந்த அழைப்பின் அர்த்தம் என்ன?

லா இலாஹ இல்லல்லாஹ்! முஹம்மதுர் ரசூலுல்லாஹ்!

என்ற ஓரிறைக் கொள்கையின் தத்துவத்தை அபுபக்கர் அவர்களுக்கு அண்ணலார் (ஸல்) அவர்கள் விளக்குகின்றார்கள்.

இஸ்லாத்தை பற்றி இதற்குப் பிந்தைய நாட்களில் கேள்விப்பட்ட அனைவரும் அந்தக் கொள்கையை முன்பு மறுத்து அல்லது தாமதப்படுத்தியோ தான் ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் அபுபக்கர் அவர்களோ அழைப்பின் வெளிச்சப் புள்ளியைக் கண்டவுடன், தானே சூரியனாக மலர்ந்து நின்றார்கள். உடனே ஏற்றுக் கொண்டார்கள். எந்தவித சுணக்கமும் அவர்கள் காட்டவில்லை என்பது அவருக்கு இறைக் கொள்கையின் மீதுள்ள பற்றும் இன்னும் அதனைக் கொண்டு வந்த இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மீதிருந்த நம்பிக்கை மற்றும் அன்பும் தான் காரணமாகும்.

அபுபக்கர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களின் வரிசையில், அதாவது வயது வந்தோர்களின் வரிசையில் முதலாவது நபராகவும், இன்னும் சிறுவர்களின் வரிசையில் அலி (ரலி) அவர்கள் முதலாவது நபராகவும் இருந்தார்கள். இன்னும் கதீஜா (ரலி) அவர்கள் பெண்களில் முதலாவது நபராகவும் இருந்தார்கள். அடிமைகளில் ஜைத் பின் ஹாரிதா (ரலி) அவர்கள் முதலாவது நபராகவும் இருந்தார்கள்.

முதல் வசனம் இறங்கியதன் பின்பு ஏழு நாட்களில் கழித்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர் ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள். ஆனால் அபுபக்கர் (ரலி) அவர்களும், அலி (ரலி) அவர்களும் இவருக்கு முன்பாகவே இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு விட்டனர்.

எப்பொழுது இஸ்லாத்தை அபுபக்கர் (ரலி) அவர்கள் ஏற்றுக் கொண்டார்களோ, அப்போதிருந்திருந்தே தான் ஏற்றுக் கொண்ட கொள்கைக்காக தனது உடல், பொருள், ஆவி, திறமைகள், அனைத்தையும் வழங்கினார்கள்.

அவரது வாழ்க்கை முழுவதுமே தான் ஏற்றுக் கொண்ட கொள்கைக்காக மாசு மறுவில்லாமல் அவர் தன்னையே இழந்த சரித்திரச் சான்றுகளைத் தான் நாம் காண முடியும். இன்னும் ஹஸ்ரத் உதுமான் (ரலி), சுபைர் (ரலி), தல்ஹா (ரலி), அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) போன்ற இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஸாபிக்கூன் அவ்வலூன் என்ற இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட முன்னோடிகளில் அபுபக்கர் (ரலி) அவர்கள் மிகச் சிறப்பு வாய்ந்தவராக கணிக்கப்பட்டதற்குக் காரணம், அவரது அப்பழுக்கில்லாத தியாக வாழ்வு தான் என்றால் அதில் மிகையில்லை.

இஸ்லாத்தின் ஆரம்ப நாட்களில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டமைக்காக ஏகப்பட்ட அடிமை முஸ்லிம்கள், அவர்களது எஜமானர்களால் துன்புறுத்தப்பட்ட பொழுது அந்தக் கொடுமையைச் சகிக்காது தன்னுடைய சொந்த செல்வத்தைக் கொடுத்து, அந்த அடிமை வாழ்வு வாழ்ந்த முஸ்லிம்களை விடுதலை செய்த பண்பாளராக அபுபக்கர் (ரலி) அவர்கள் திகழ்ந்தார்கள்.

அற்பணம் மற்றும் தியாகம்

இஸ்லாத்தின் அந்த ஆரம்ப மூன்று வருடங்கள் இஸ்லாத்தின் அழைப்புப் பிரச்சாரம் பணி மிகவும் ரகசியாகவே நடந்து வந்தது. அந்த கால கட்டத்தில் அபுபக்கர் (ரலி) அவர்கள் இஸ்லாமிய அழைப்பிற்கான தனது பங்களிப்பையும் மிகவும் ரகசியமாகவே செய்து வந்தார்கள். அதன் நான்காவது வருடம் கீழக்காணும் வசனம் இறங்கியது.

உமக்குக் கட்டளையிடப் பட்டிருப்பதை வெளிப்படையாக அவர்களுக்கு அறிவிப்பீராக! இணைவைத்து வணங்குபவர்களை புறக்கணித்துவிடவீராக! (15:94)

மேற்காணும் வசனம் இறங்கியவுடன் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது தூதுத்துவப் பிரச்சாரத்தை வெளிப்படையாகச் செய்ய ஆரம்பித்தார்கள். இணை வைத்து வணங்கும் அந்தக் கொடிய செயலைச் சாடினார்கள். அவர்களது அறியாமையை இடித்துரைத்தார்கள். அழைப்புப் பணியின் இந்த ஆரம்ப தருணங்கள் இஸ்லாத்தின் கொடிய விரோதிகளை மிகவும் உசிப்பேற்றி விட்டது. இஸ்லாத்திற்கு எதிராக அவர்கள் போர்ப் பிரகடனத்தையே செய்தார்கள் என்றால் அது மிகையில்லை. இன்னும் அவர்கள் எந்தளவு கொடுமைகளைக் கட்டவிழ்த்து விட்டு இஸ்லாத்தின் வெளிச்சப் புள்ளிகளை பனிப் புகை கொண்டு மறைத்து விடலாம் என்று கூடக் கனவு கண்டார்கள். இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மீது சொல்லொண்ணா துன்பத்தைக் கட்டவிழ்த்து விட்டார்கள்.

இந்தக் கொடுமையான தருணங்கள் இஸ்லாத்தினை ஏற்றுக் கொண்டது மட்டுமல்ல, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மீது புரியப்பட்ட கொடுமைகளை தானும் பங்கு போட்டுக் கொண்டு, தனது தலைவரது சுமையைக் குறைக்;கவும் செய்தார்கள்.

இன்னும் இஸ்லாத்தின் அழைப்பானது தங்களது கடவுள்களுக்கு அவமரியாதையை ஏற்படுத்தி விட்டது, தங்களது கடவுள்களின் பெருமை போய் விட்டது என்றும், இன்னும் தங்களது கடவுள்களின் கீர்த்திகளைப் பற்றியும் மக்காவின் அந்த கஃபா எல்லையில் உட்கார்ந்து கொண்டு, அந்த குறைஷிகள் பெருமைப்பட்டுக் கொண்டிருந்தார்கள். இந்த நேரத்தில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கஃபாவினுள் நுழைகின்றார்கள். இதைக் கண்ட அவர்களது கோபம் இன்னும் தலைக்கேறியது. அதில் ஒருவன் எழுந்து வந்து, நீர் தானா எங்களது கடவுளர்களை விமர்சித்துப் பேசித் திரிவது? என்று கேட்டான்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களோ! எந்த பயமுமின்றி ஆம்! நான் தான்! என்றார்கள். இதைக் கேட்ட அத்தனை குறைஷியர்களும் ஒட்டுமொத்தமாக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மீது விழுந்தார்கள், இன்னும் அவர்களைத் தாக்க ஆரம்பித்தார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மீது கடுமையான தாக்குதல்களைத் தொடுத்துக் கொண்டே, நீர் தானா எங்களது இத்தனை கடவுள்களுக்கும் பகரமாக ஒரே ஒரு கடவுளை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கின்றீர்? என்று கேட்டுக் கொண்டு, அடித்துக் கொண்டிருக்கும் போதே இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது சுயநினைவை இழந்து மயங்கிக் கீழே விழுந்தார்கள்.

அந்தத் தருணத்தில் அபுபக்கர் (ரலி) அவர்கள் தனது ஆருயிர்த் தோழரை அந்த இஸ்லாத்தின் எதிரிகளிடமிருந்து காப்பாற்ற விரைந்து வந்தார்கள். அந்த மடையர்களிடம் கேட்டார்கள் :

அல்லாஹ் தான் எனது இறைவன், அவன் தான் அகில உலகங்களையும் பரிபாலிக்கக் கூடியவன் என்று கூறியதற்காகவா அவரை நீங்கள் கொலை செய்யப் பார்க்கின்றீர்கள்? நீங்கள் அத்துமீறிய சமுதாயமாகவல்லவா இருக்கின்றீர்கள்? என்று கூறிக் கொண்டிருக்கும் போதே, அவரையும் அவர்கள் தாக்க ஆரம்பித்தார்கள், இப்பொழுது அபுபக்கர் (ரலி) அவர்களது மண்டை உடைந்து இரத்தம் கொட்ட ஆரம்பித்தது. இப்பொழுது அபுபக்கர் (ரலி) அவர்களது உறவினர்கள் விரைந்து வந்து, எதிரிகளிடமிருந்து இருவரையும் காப்பாற்றுகின்றனர்.

தலையில் அடிபட்டு இரத்தம் வழிந்து கொண்டிருந்த அந்த நிலையிலும், அவர்களது உதடுகள் தன்னைப் படைத்த இறைவனையும், திருத்தூதர் (ஸல்) அவர்களையும் கண்ணியப்படுத்திக் கொண்டே இருந்தது.

படுகாயமுற்ற அபூபக்கர் (ரலி), அவருடைய இல்லத்திற்க எடுத்துச் செல்லப்பட்டார்கள். அங்கு அவருக்கு உடனடி சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. நீண்ட நேரத்திற்குப் பின் அவருக்கு சுயநினைவு வந்தது. எனினும், உடலெல்லாம் இருந்த இரத்தக் காயங்களின் வேதனைகள் காரணமாக முனகிய போது, அவரருகே கவலையே உருவாக இருந்த அவரது அன்னை துடிதுடித்துப் போனார்!

சற்று நேரத்திற்குப் பின் அவர் பேசும் நிலையை அடைந்தார். அதுகண்ட அவரது அன்னை, தன் மகனின் காயங்களுக்குக் கட்டுப் போட்டு விட்டு அன்புடன் தலையை வருடிக் கொண்டே மகனே! உனக்கு எப்படி இருக்கின்றது? என்று வினவினார்.

ஆனால், அபுபக்கர் (ரலி) அவர்களோ அன்னைக்கு உடனடியாகப் பதில் கூறவில்லை. மாறாக, சற்று தாமதித்து அம்மா! அல்லாஹ்வின் தூதர் அவர்களைப் பற்றி எனக்குக் கூறுங்கள். அவர்கள் எங்கு இருக்கின்றார்கள்? எப்படி இருக்கின்றார்கள்? அவர்களுக்கு ஆபத்து ஏதும் இல்லையே? என்று மிக மெதுவாகக் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனார்.

இந்த இக்கட்டான நிலையிலும் இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களைப் பற்றியல்லவா இவர் பேசுகின்றார்? இவர் அவரிடம் எத்தகைய பற்றும் பாசமும் வைத்திருப்பார் என வியப்புற்ற நிலையில் அவ்வன்னை அபூபக்கர் (ரலி) அவர்களை ஆர்வத்துடன் நோக்கினார்.

பின்னர், அன்புள்ள என் மகனே! நீ உன் காயங்களைப் பற்றியோ, அவை தரும் வேதனையைப் பற்றியோ கவலைப்படவில்லை. ஆனால் அந்த நண்பரைப் பற்றித்தான் கவலைப்படுகின்றாய்! அது தான் உன் உள்ளத்தில் மிகைத்து நிற்கிறது. அந்த அளவு அவர் மீது பாசம் கொள்ள அவர் என்ன செய்தாரோ? நீ ஏதோவொன்றினால் ஆட்கொள்ளப்பட்டுள்ளாய் எனத் தெரிகிறது. கவலைப்படாதே! மகிழ்ச்சியாக இரு! உனது நண்பர் எந்தப் பிரச்னையும் இல்லாது நல்ல நிலையில் இருக்கின்றார். அவருக்காக வருத்தப்படுவதை விட்டு விட்டு உன் நிலை எப்படி எனக் கூறு! எனக் கண்ணீர் பெருக அந்த அன்னை வேண்டி நின்றார்.

இப்படி தாயும் மகனும் சற்று நேரம் உரையாடினர். அப்போது தாயாருடைய கருத்துக்கள் புதியதொரு கோணத்திலிருந்து வருவதை உணர்ந்த அபூபக்கர் (ரலி) அவர்கள் அன்னையை அன்புடன் உற்று நோக்கினார். அன்னை இஸ்லாத்தை அறியும் ஆவல் கொண்டுள்ளார் என்பதை உணர்ந்த அவருக்கு இருப்புக் கொள்ளவில்லை. மகிழ்ச்சி மிகுதியால் தம் உடற்காயங்களைக் கூட மறந்து விட்டார்! ஆமாம், இப்படியான மகிழ்ச்சியும் மனநிறைவும் அவரது வாழ்வில் என்றுமே இருந்ததில்லை என்ற உணர்வு அவருக்கு எற்பட்டு விட்டது.

அன்றிரவு அதிக நேரத்தை தம் அன்னையுடன் கழித்த அபூபக்கர் (ரலி) அவர்கள், இஸ்லாத்தின் மேன்மை, இறைத்தூதரின் உயர் குணங்கள் என்பன பற்றி அழகாகவும் தெளிவாகவும் எடுத்துக் கூறினார்கள். அவர்களது உள்ளத்தின் ஆழத்திலிருந்து வெளிப்பட்ட அந்தக் கருத்துக்கள் அந்த அன்னையின் இதயக் கதவுகளைத் தட்டித் திறந்து கொண்டு உள்ளே சென்றன! ஏற்கனவே தம் மைந்தனின் நற்பண்புகளை நன்கு அறிந்திருந்த அவ்வன்னை, அதே மகன் மூலம் இஸ்லாத்தைத் தெரிந்து கொண்ட போது புத்துணர்வு பெற்றார். படிப்படியாக அவரிடம் பல மாற்றங்கள் நிகழலாயின.

மறுநாள் காலை, உம்முல் கைர் என அழைக்கப்பட்ட சல்மா பிந்தி சக்ர் அதாவது அபூபக்கர் (ரலி) அவர்களின் அன்னை இஸ்லாத்தைத் தழுவும் ஆர்வம் கொள்ளவே, அவர்களை நபி (ஸல்) அவர்களிடம் அழைத்துச் சென்றார். அபூபக்கர் (ரலி) அவர்கள், அப்பொழுது நபிகளார் அர்கம் இப்னு அர்கம் அவர்களது இல்லத்தில் இருந்தார்கள்.

அபூபக்கர் (ரலி) அவர்களுக்குக் குறைஷியர் செய்த கொடுமைகள் நபி (ஸல்) அவர்களது செவிகளுக்கும் எட்டியிருந்தன. அதனால் பெரிதும் கவலை அடைந்திருந்தார்கள். துன்பம் தோய்ந்த முகத்துடன் வேதனைத் தாளாது வருவார் அபூபக்கர் என்பதை நினைக்க நினைக்க நபிகளாரின் உள்ளம் கடும் வேதனைப்பட்டது.

ஆனால், அன்று காலை திடீரென மலர்ந்த முகத்துடன் அங்கு வந்த அபூபக்கர் (ரலி) அவர்களைக் கண்டதும் உளம் பூரித்துப் போனார்கள். கூடவே அவரது அன்னையும் வந்திருப்பது நபிகளாருக்கு ஆச்சரியத்தைக் கொடுத்து விட்டது.

நபி (ஸல்) அவர்களைக் கண்டதும் தான் தாமதம், அஸ்ஸலாமு அலைக்கும் யா ரஸூலுல்லாஹ்! என மொழிந்தவாறே அவர்களைக் கட்டித் தழுவினார் அபூபக்கர் (ரலி) அவர்கள்.

நபி (ஸல்) அவர்களும் அதே பாசவுணர்வுடன், ”வ அலைக்குஸ்ஸலாம் அபூபக்கரே!” என்று பதிலிறுத்ததுடன், என்னுயிர் நண்பா! இறையருளால் நலமாக இருக்கின்றீர்கள் அல்லவா? என வாஞ்சையுடன் வினவினார்கள்.

ஆமாம்! யா ரஸூலுல்லாஹ்! என் பெற்றோர் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! நான் நலமாக இருக்கின்றேன். என்னைப் பெற்ற அன்பு அன்னை சத்தியத்தை ஏற்க வந்துள்ளார். கருணையுடன் அதை அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள்! என பணிவன்புடன் பதில் கூறினார் அபூபக்கர் (ரலி) அவர்கள்.

கருணையே உருவான நபி (ஸல்) அவர்கள் இஸ்லாத்தைப் பற்றிய இனிய விளக்கமொன்றை அந்த அம்மையாருக்கு வழங்கினார்கள். அடுத்து, அவர் ஏகத்துவ கலிமாவை மொழிந்து இஸ்லாத்தைத் தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.

இவருடன் இஸ்லாத்தைத் தழுவிய மக்காவாசிகளின் எண்ணிக்கை நாற்பதாக உயர்ந்தது. இந்த வளர்ச்சி முஸ்லிம்களுக்கு மட்டிலா மகிழ்ச்சியைக் கொடுத்தது எனலாம்.

எனினும், அபூபக்கர் (ரலி) அவர்களின் பனூதமீம் கோத்திரத்தினரிடையே ஆத்திரமும் அமைதியின்மையும் அலை மோதிக் கொண்டிருந்தன. எந்த நேரத்திலும் எதுவும் நிகழலாம் என்ற பதற்ற நிலை எங்கும் நிலவியது.

இஸ்லாத்தின் ஆரம்ப காலங்கள் எவ்வாறு கொடுமையாக இருந்தது என்பதை கீழ்க்காணும் சம்பவம் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம். புகாரி என்ற நபிமொழித் தொகுப்பில் காணப்படக் கூடிய இந்தச் சம்பவம், இன்றைக்கும் நமக்கு நல்லதொரு படிப்பினையாக இருந்து கொண்டிருக்கின்றது.

ஒருமுறை கஃபாவின் சுவரின் மீது சாய்ந்து கொண்டிருந்த இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் கப்பாப் (ரலி) அவர்கள் கேட்டார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களே! எதிரிகளின் கொடுமை தாங்க முடியாத அளவு உள்ளது. நீங்கள் எங்களுக்காக இறைவனிடத்தில் பிரார்த்திக்கக் கூடாதா? எங்களது சிரமங்களை அதன் மூலம் போக்கக் கூடாதா? என்று தான் கேட்டார்கள்.

அமைதியாக இருந்த அந்த வதனம், கோவைச் சிவப்பாகியது, இறைத்தூதர் (ஸல்) அவர்களது வதனமும் மட்டுமல்ல, வார்த்தைகளும் கூட சூடாக வந்தது. தோழரே! உங்களுக்கு முன் ஒரு சமுதாயம் உங்களைப் போலவே இறைநம்பிக்கை; கொண்டிருந்தது. அதன் காரணமாக அவர்களது எலும்புகள் தெரியும் அளவுக்கு, இரும்புச் சீப்பு கொண்டு சதைகள் சீவப்பட்டன. அவர்களது தலைகள் வேறாகவும் முண்டங்கள் வேறாகவும் இரு கூறாகப் பிளக்கப்பட்டன. இன்னும் நிச்சயமாக! சன்ஆ விலிருந்து ஹதரல்மவ்த் என்ற இடம் வரும் வரையும், ஒரு குதிரை வீரன் தன்னந்தனியாக இறைவனைப் பற்றிய அச்சத்தைத் தவிர வேறு எந்த அச்சமுமின்றி பயணம் செய்யக் கூடிய நிலை வரும், நீங்கள் வெற்றி பெறுவீர்கள், அதில் எந்த சந்தேகமும்பட வேண்டாம் என்று கூறி முடித்தார்கள்.

அபீசீனியாவிற்குப் பயணமாகுதல் (ஹிஜ்ரத்)

இறைநிராகரிப்பாளர்களின் கொடுமைகள் மிதமிஞ்சிச் சென்று கொண்டிருந்த பொழுது, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது தோழர்களை மக்காவை விட்டு அபீசினியாவிற்குப் பயணமாகும்படி அறிவுறுத்தினார்கள். அந்த காலகட்டத்தில் அபீசீனியாவை ஆண்ட கிறிஸ்தவ மன்னர் நீதிக்கும், இரக்கத்திற்கும் இன்னும் அங்கு அடைக்கலம் தேடிச் செல்வோர்களின் மீது கருணை காட்டக் கூடியவராக இருந்தார். இந்த தருணத்தில் முஸ்லிம்கள் இரண்டு பிரிவாக அபீசீனியாவிற்குப் பயணமானார்கள்.

முதல் குழுவில் 11 ஆண்களும் 4 பெண்களும் இடம் பெற்றிருந்தார்கள். இரண்டாவது குழுவில் 80 க்கும் மேற்பட்டவர்கள் இருந்தார்கள். இந்த இரண்டு குழுவையும் அனுப்பி விட்டு, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவிலேயே இருந்து கொண்டார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மக்காவிலேயே தங்கி விட்டதன் காரணத்தால், அபுபக்கர் (ரலி) அவர்களும் மக்காவிலேயே தன் ஆருயிர்த் தோழருடன் இருக்கவே விரும்பினார்கள். இருப்பினும், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அபுபக்கர் (ரலி) அவர்களையும் அபீசீனியாவிற்குப் பயணமாகும்படி உத்தரவிட்டார்கள். தனது தலைவருக்குக் கட்டுப்படுவதில் இன்பம் கண்ட தோழர் அபுபக்கர் (ரலி) அவர்கள், இப்பொழுது தனது குடும்பத்தவர்கள் அனைவரிடமும் பிரியா விடை கொடுத்து விட்டு, அபீசீனியாவை நோக்கிப் பயணமானார்கள்.

அவர் பயணமாகிக் கொண்டிருந்த வழியில் இப்னு துக்னா, பார்க் அல் காமித் என்ற இடத்தில் வசித்து வந்த காரா கோத்திரத்தாரின் தலைவராகிய இப்னு துக்னாவைச் சந்திக்க நேர்ந்தது. அபுபக்கர் (ரலி) அவர்களது அந்த நிலையைக் கண்ட இப்னு துக்னா அவர்கள், அபுபக்கர் அவர்களே நீங்கள் எங்கு சென்று கொண்டிருக்கின்றீர்கள்? என்னுடைய மக்கள் மக்காவை விட்டும் என்னை வெளியேற்றி விட்டதன் காரணமாக, நான் இப்பொழுது அபீசீனியாவை நோக்கிப் பயணமாகிக் கொண்டிருக்கின்றேன் என்றார்கள்.

உம்மைப் போன்ற ஒரு மனிதரை இந்த மக்காவாசிகள் ஊரை விட்டு வெளியேற்றி விட்டார்களா? கூடாது.

நீர் கஷ்டப்படுகின்றவர்கள் மீது இரக்கம் காட்டுகின்றீர்கள், விருந்தினர்களை வரவேற்று உபசரிக்கின்றீர்கள், பிறரது கஷ்டங்களை நீங்கள் பங்கு கொள்கின்றீர்கள், இத்தகைய நற்குணங்களைப் பெற்ற நீர் ஏன் உமது நாட்டை விட்டுப் போக வேண்டும். நான் உங்களது பாதுகாப்பிற்காகப் பொறுப்பேற்றுக் கொள்கின்றேன். வாருங்கள்! நானும் நீங்களும் மக்காவிற்கே மீண்டும் போவோம். உங்களது பாதுகாப்பிற்கு நான் பொறுப்பேற்றுக் கொள்வதோடு, நீர் உமது இறைவனையும் சுதந்திரத்தோடு வழிபட்டு வரவும் ஏற்பாடு செய்கின்றேன் என்று கூறிய இப்னு துக்னா, அபுபக்கர் (ரலி) அவர்களை அழைத்துக் கொண்டு மக்காவிற்குச் செல்கின்றார்.

அன்று மாலை நேரத்தில், மக்கத்துப் பெருந்தலைகள் கூடியிருந்த அந்த அவையில் இப்னு துக்னா அவர்கள் இவ்வாறு உரை நிகழ்த்தி, அவர்களிடம் கேட்டார்கள், ஏழைகளுக்கு இரக்கப்பட்ட, உங்களது கஷ்டங்களில் பங்கு கொண்ட, உங்களது சிரமங்களைக் கண்டு ஓடோடி வந்து உதவிய இந்த மனிதர் சத்தியத்தை ஏற்றுப் பின்பற்றிக் கொண்டிருக்கின்றார் என்ற காரணத்திற்காகவா நீங்களை அவரை நாட்டை விட்டுத் துரத்துகின்றீர்கள்?

அபுபக்கர் அவர்களை நாடு கடத்தவோ அல்லது அவரது சொந்த விருப்பத்தின் பெயரிலோ அவர் இந்த நகரத்தை விட்டுச் செல்ல அனுமதிக்க முடியாது.

இப்பொழுது, இப்னு துக்னா அளித்த பாதுகாப்பு உத்திரவாதத்தை ஏற்றுக் கொண்ட குறைஷிகள் கூறினார்கள்,

அபுபக்கர் அவர்கள் இந்த ஊரில் இருப்பதில் எங்களுக்கு ஆட்சேபணை இல்லை, ஆனால், அவர் அவரது இறைவனை அவரது வீட்டின் நான்கு சுவர்களுக்குள் வைத்து வணங்கிக் கொள்ளட்டும். அவர் அவரது இறைவனைப் பிரார்த்திக்கும் பொருட்டு சத்தமிட்டு அவர் குர்ஆன் வசனங்களை மக்களை கூடும் திறந்த வெளிகளில் ஓதக் கூடாது. ஏனென்றால் எங்களது பிள்ளைகளும் பெண்களும் இதனை வழி தவறி விடுவார்களோ என்று நாங்கள் பயப்படுகின்றோம்! என்றும் கூறினார்கள்.

மிக நீண்ட யோசனைக்குப் பின் குறைஷியர்களின் இந்த கட்டுப்பாடுகளுக்கு ஒத்துக் கொண்டு, அதன்படி நடக்க அபுபக்கர் (ரலி) அவர்கள் நடக்கச் சம்மதித்தார்கள். இறைவன் மீதுள்ள இறைநம்பிக்கை என்பது குப்பிக்குள் இருக்கும் வாசனைத் திரவியம் போன்றது. அதை இறுக மூடினாலும் அதன் வாசனை வெளி எட்டிப் பார்த்துக் கொண்டு தானே இருக்கும். தனது இறைநம்பிக்கையை மூடி மறைக்க இயலாத அபுபக்கர் (ரலி) அவர்கள், தனது வீட்டிற்கு வெளியே சிறிய பள்ளிவாசல் ஒன்றைக் கட்டி அதில், இறைவனைத் தொழுது வர ஆரம்பித்தார்கள்.

இளகிய மனம் படைத்த அபுபக்கர் (ரலி) அவர்கள், இறைவசனங்களை ஓத ஆரம்பித்தவுடன் அழ ஆரம்பித்து விடுவார்கள். அபுபக்கர் (ரலி) அவர்களது இந்த செயல்பாடுகளை மக்கத்து இளைஞர்களையும், பெண்களையும் ஆச்சரியத்தில் ஆழத்தியது, இன்னும் இஸ்லாத்தைப் பற்றி தாங்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலும் அவர்களிடம் மிகைத்தது. இப்பொழுது, மிகவும் உஷாராகிப் போன மக்கத்துக் குறைஷிகள் இப்னு துக்னாவிடம் சென்று முறையிட ஆரம்பித்தார்கள்.

உங்கள் முன் ஏற்றுக் கொண்ட ஒப்பந்தங்களை அபுபக்கர் அவர்கள் மீறி விட்டார்கள். அவர் வீட்டின் முன் ஒரு பள்ளிவாசலைக் கட்டிக் கொண்டு, அதில் தொழுகை நடத்துவதுடன் இறைவசனங்களை ஓதவும் ஆரம்பித்து விட்டார்கள். இதன் காரணமாக எங்களது பெண்களும், குழந்தைகளும் வழி தவறிக் கொண்டிருக்கின்றார்கள்! என்று புலம்பி முறையிட ஆரம்பித்தார்கள்.

எனவே, இதனை நீங்கள் நேரில் வந்து கண்டு அபுபக்கரைத் திருத்துங்கள். நாங்கள் உங்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறுவதற்கு விரும்பவில்லை அதேநேரத்தில், அபுபக்கர் அவர்களை இதே நிலையில் விட்டு விடவும் எங்களுக்குச் சம்மதமில்லை, அவர் அவரது பள்ளிவாசலில் தொழுவதையும், அங்கு இறைமறை வசனங்களை உரக்க ஓதுவதையும் நாங்கள் அனுமதிக்க முடியாது என்று புலம்பினார்கள்.

குறைஷிகளின் முறையீடுகளை எடுத்துரைத்த இப்னு துக்னா அவர்களிடம், அபுபக்கர் (ரலி) அவர்கள் இவ்வாறு கூறினார்கள், இப்னு துக்னா அவர்களே! உங்களது பாதுகாப்பிற்கு மிக்க நன்றி! தயவு செய்து நீங்கள் எனக்காகப் பொறுப்பேற்றிருந்த அந்த பாதுகாப்பை நீங்கள் தயவுசெய்து, வாபஸ் பெற்றுக் கொள்ளுங்கள். நான் என்னைப் படைத்தவனின் பாதுகாப்பில் இருப்பதையே விரும்புகின்றேன். அதில் தான் நான் சந்தோஷமடைகின்றேன் என்று கூறினார்கள்.

ஹிஜ்ரத்

இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு முதன் முதலாக இறைவேதம் அருளப்பட்ட நாளிலிருந்து 13 வருடங்கள் அவர்கள் மக்காவில் தங்கி இருந்து பிரச்சாரம் பணிகளைச் செய்ய வேண்டியிருந்தது. இந்தப் 13 வருட காலமும் அவர்கள் செய்து கொண்டிருந்த அந்த பிரச்சாரப் பணிகள் பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியிலும் மிகவும் உறுதியாகவும், நிதானமாகவும் நடந்து கொண்டிருந்தது, இத்தகைய பணிக்கு ஈடானதொன்று இன்று வரைக்கும் எந்த சமுதாய வரலாற்றிலும் கிடையாது. இந்தப் பிரச்சாரப் பணிகளின் பொழுது இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கும் இன்னும் அவர்களை வாய்மையாகப் பின்பற்றிய தோழர்களுக்கும் அந்த குறைஷிகள் சொல்லொண்ணாத் துன்பங்களைத் தந்த போதும், அந்தத் துன்பங்கள் யாவும் அவர்களது பிச்சாரப் பணிகளுக்கு புது உத்வேகத்தையும், இன்னும் ஊக்கத்தையுமே தந்து கொண்டிருந்தது. மேலும், குறைஷிகளின் அந்தத் தாக்குதல்களை, அதாவது காட்டுமிராண்டிகள் போல் அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் நடந்து கொண்ட அவர்களது அந்த போர்க்குணம் கொண்ட ஈனச் செயல்களை, அவர்கள் தன்னந்தனியாக எதிர்கொண்டு சமாளித்து வந்தார்கள், அதில் தன்னையும் தன்னுடைய மார்க்கத்தையும் பாதுகாத்துக் கொண்டு, இறைவனையே முற்றிலும் சார்ந்தவர்களாக இந்த மனித சமுதாயத்தை அடிமைத் தளைகளிலிருந்து விடிவிக்க வந்த அந்த விடிவெள்ளி பிரகாசித்துக் கொண்டிருந்ததோடு மட்டுமல்ல, தன்னைப் பின்பற்றியவர்களுக்கு வழிகாட்டியும் கொண்டிருந்தது.

காலம் காலமாக தங்களது மூதாதையர்களின் குல வழக்கப்படி இணை வைத்து வணங்கும் கொடிய பழக்கத்தைக் கடைபிடித்து வந்த அந்த மக்கத்துக் குறைஷிகள், இன்னும் பல்வேறு படுபாதகச் செயல்களை தயக்கமில்லாது செய்து வந்த அவர்கள், இஸ்லாத்தினை ஏற்றுக் கொண்டதன் பின்பு மிகவும் நாகரிக மனிதர்களாக மாற்றம் பெற்றார்கள். நாடோடிகளாக நாகரிகமற்றவர்களாகத் திரிந்த அவர்கள் இப்பொழுது அரேபியப் பிரதேசத்தின் ஆட்சியாளர்களாக மாற்றம் பெற்றார்கள். இன்னும் அதனை விட மனிதநேய மிக்க தலைவர்களாக மாறிப் போனார்கள். இந்த மாற்றம் இரத்தம் சிந்திப் பெறப்பட்டதல்ல, மாறாக சத்தியம் அவர்களிடம் ஏற்படுத்திய தாக்கம் தான் எனலாம். மேலும் இந்த உலகம் இந்த சத்தியப் புள்ளிகளை கண்ட மாத்திரமே தன்னுடைய இருளை அகற்றிக் கொண்டு, சத்திய வெளிச்சம் பட்டவுடன், அந்த அசத்திய இருள்கள் தானாகவே அவர்களது மனப் பிரதேசத்தை விட்டும், இன்னும் அந்த சூழ்நிலைகளை விட்டும் அகன்று, சத்தியத்துக்கு வழிவிட்டு அசத்தியம் அகன்றே போனது.

இஸ்லாத்தின் அந்த ஆரம்ப கால மூன்றாண்டுகளின் இஸ்லாமியப் பிரச்சாரம் மிகவும் இரகசியமாக நடந்தேறிக் கொண்டிருந்த வேளையில், அபுபக்கர் (ரலி), அலி (ரலி), உதுமான் (ரலி), இன்னும் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) போன்ற இறைத்தூதர் (ஸல்) அவர்களின் உற்ற தோழர்கள் இஸ்லாத்தில் நுழைந்து, தங்களது பெயர்களை இஸ்லாமிய வரலாற்றில் முன்னிறுத்திக் கொண்டார்கள்.

பின்பு இஸ்லாமியப் பிரச்சாரத்தை வெளிப்படையாகச் செய்வதற்கு இறைவன் அனுமதி வழங்கியதன் பின்பு, இஸ்லாமியப் பிரச்சாரம் வெளிப்படையாக செய்யப்பட்டு, முழு அரேபிய சமுதாயத்திற்கும் இன்னும் முழு மனித சமுதாயத்திற்கு விடுக்கப்பட்ட அந்த அழைப்பு, அரேபியப் பாலைப் பெருவெளியின் மலைகளிலும், வயல் வெளிகளிலும், சமவெளிப்பகுதிகளிலும் எங்கினும் ஒலிக்க ஆரம்பித்தது. அன்று ஆரம்பித்து வைக்கப்பட்ட அந்த ஏகத்துவப் பிரச்சாரப் பணி இன்றளவும் உலகின் நாலா பாகங்களிலும் எதிரொலித்துக் கொண்டிருக்கின்றது. இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்களது அந்த உற்ற தோழர்கள் தாங்கள் ஏற்றுக் கொண்ட சத்தியத்தை ஏற்றுக் கொண்டு, உலகின் நாலா பகுதிகளுக்கும் பரவிச் சென்று அவற்றைப் பரப்பும் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள ஆரம்பித்தார்கள்.

இஸ்லாமியப் பிரச்சாரப் பணியின் ஆரம்பக் கட்டத்தில், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மக்காவினுள் தனது பிரச்சாரப் பணியை வெளிப்படையாகச் செய்ய ஆரம்பித்தார்கள். ஆரம்பப் பிரச்சாரப் பணிகள் அந்தளவு எளிதானதொரு பணியாக இருக்கவில்லை. இன்னும் உற்சாகமூட்டும் அளவிலும் இருக்கவில்லை. ஆனால் மக்காவின் வெளிப்புறப் பகுதியில் வைத்து, மதீனாவில் இருந்து வந்த சிலர் இஸ்லாத்தின் செய்திகளை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மூலமாக கவனமாகவும், ஆழ்ந்த கவனத்தோடும் செவிமடுத்ததன் பின்பு, ஒரு மிகப் பெரிய மாற்றம் இஸ்லாமியப் பிரச்சாரத்தில் ஏற்பட்டது. அதன் காரணமாக, இரண்டு மூன்று ஆண்டுகளில் முழு மதீனாவுமே முழு இஸ்லாமிய பிரச்சாரக் கேந்திரமாக மாறித்தான் போனது தான் விந்தையான அதிசயமாகும்.

இப்பொழுது மதீனா முஸ்லிம்களைப் பாதுகாக்கக் கூடிய பிரதேசமாக, முஸ்லிம்கள் அடைக்கலம் தேடிச் செல்லும் இடமாக மாறிப் போனதன் பின்பு, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மக்காவில் உள்ள தனது தோழர்களை மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்யும்படி பணித்தார்கள். அதன் பின் நான்கு மாதங்கள் கழித்து, இறைத்தூதர் (ஸல்) அவர்களே மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்து சென்று விட்டார்கள்.

மிகப் பெரும் தோழர்களான உமர் (ரலி) அவர்கள் முதற்கொண்டு, இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்பாகவே ஹிஜ்ரத் செய்து மதீனாவிற்குச் சென்று விட்டார்கள். இப்பொழுது, அபுபக்கர் (ரலி) அவர்கள் தனது ஆருயிர்த் தோழரைப் பார்த்துக் கேட்டார்கள்,

இறைத்தூதர் (ஸல்) அவர்களே..! எனது ஆருயிர்த் தோழர் அவர்களே..!

நான் எப்பொழுது ஹிஜ்ரத் செய்து மதீனாவிற்கு செல்வது? எனக்கு அனுமதி உண்டா? என்று கேட்டார்கள்.

அபுபக்கர் (ரலி) அவர்களே..! என இடை நிறுத்திய இறைத்தூதர் (ஸல்) அவர்கள்..! நானும் தான் உங்களைப் போலக் காத்திருக்கின்றேன், இறைவனது உத்தரவு வரட்டும் பொறுங்கள் என்று கூறினார்கள்.

அபுபக்கர் (ரலி) அவர்களது தொலைநோக்குச் சிந்தனை இப்பொழுது வேலை செய்தது. நாம் மட்டும் தனியாகப் போகப் போவதில்லை. நம்முடன் இறைத்தூதர் (ஸல்) அவர்களும் வர இருக்கின்றார்கள் போலல்லவா தெரிகின்றது..! இனி நாம் பயணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியது தான் என முடிவு செய்த அபுபக்கர் (ரலி) அவர்கள் பயணத்திற்கான ஒட்டகைகளையும், பயண வழிகாட்டியையும் ஏற்பாடு செய்ய ஆரம்பித்தார்கள். இதற்காக இரண்டு ஒட்டகங்களைத் தயார்படுத்தினார்கள்.

வழக்கமாக அபுபக்கர் (ரலி) அவர்களது வீட்டிற்கு மாலையிலோ அல்லது காலையிலோ தான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் செல்வது வழக்கமாக இருந்தது. ஆனால் இப்பொழுது வழக்கத்திற்கு மாற்றமாக, தலையில் ஒரு மறைப்பை வைத்துக் கொண்டு அந்தக் கடுமையான வெயில் நேரத்தில் மதிய நேரத்தில் அபுபக்கர் (ரலி) அவர்களது இல்லத்தினுள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நுழைகின்றார்கள். அப்பொழுது தனது குடும்பத்தவர்களுடன் அபுபக்கர் (ரலி) அவர்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்ற வேளையில், இறைத்தூதர் (ஸல்) அவர்களது வருகையைக் கண்ட அபுபக்கர் (ரலி) அவர்கள், எனது தாயும் தந்தையும் உங்களுக்கு அற்பணமாகட்டும்..! எனது ஆருயிர்த் தோழரே...! நீங்கள் காரணமில்லாமல் இந்த அகால வேளையில் வர மாட்டீர்கள் என்பது திண்ணம்..!

இப்பொழுது கதவுக்கு மிக அருகில் வந்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கதவைத் தட்டி உள்ளே வர அனுமதி கோருகின்றார்கள். உள்ளே வந்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள், அபுபக்கர் (ரலி) அவர்களே..! நான் உங்களுடன் தனிமையில் உரையாட வேண்டும்..!

என்னுடன் எனது இரண்டு மகள்தான் இருக்கின்றார்கள். அவர்களைத் தவிர இங்கு வேறு யாருமில்லை தோழரே..! என்று அபுபக்கர் (ரலி) அவர்களிடமிருந்து பதில் வந்தது.

தோழரே..! நமக்கு அனுமதி வந்து விட்டது. இப்பொழுது மதீனாவிற்குப் பயணமாக வேண்டும்.

நான் உங்களுடன் வருவது பற்றிய முடிவு? என்றார்கள் அபுபக்கர் (ரலி) அவர்கள் மிகவும் ஆவலுடன்..!

நீங்களும் தான் என்னுடன் வருகின்றீர்கள்..! என்னுடன் வருவதற்கு உங்களுக்கும் அனுமதி கிடைத்திருக்கின்றது..! இது இறைத்தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து பதிலாக வந்தது.

இந்த சம்பவத்தைப் பற்றி ஆயிஷா (ரலி) அவர்களது விவரிப்பதைப் பாருங்கள்..!

இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் ஹிஜ்ரத் செய்வதற்கு அனுமதி கிடைத்து விட்டதை அறிந்து எனது தந்தை ஆனந்தத்தில், சந்தோஷமானது கண்ணீராக அவரது கண்களிலிருந்து வழிந்து கொண்டிருந்தது.

இப்பொழுது, பயணத்திற்குத் தேவைப்படும் நோக்கில் தயார் செய்யப்பட்ட இரண்டு ஒட்டகங்களைத் தனது தோழரின் முன்னால் நிறுத்திய அபுபக்கர் (ரலி) அவர்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்களே..! இரண்டில் ஒன்றைத் தங்களுக்காகத் தேர்வு செய்து கொள்ளுங்கள் என்றார்கள். ஒன்றைத் தேர்வு செய்து கொண்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள், அதற்கான கிரயப்பணத்தையும் அபுபக்கர் (ரலி) அவர்களிடம் கொடுத்தார்கள். இப்பொழுது இருவரும் அன்றைய இரவே மக்காவை விட்டும் கிளம்பி விட வேண்டும் என்ற முடிவாகியது.

இப்பொழுது அபுபக்கர் (ரலி) மற்றும் அலி (ரலி) அவர்களைத் தவிர..! மற்ற அனைத்து பிரபலமாக நபித்தோழர்களும் மக்காவை விட்டும் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்து சென்று விட்டிருந்தார்கள். இதில் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் மக்கத்து மக்கள் கொடுத்து வைத்திருந்த அமானிதப் பொருட்களை திருப்பி ஒப்படைக்கும் பொருட்டு, அந்தப் பொருட்களுக்குப் பாதுகாப்பாக, அலி (ரலி) அவர்களை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நியமித்தார்கள். அபுபக்கர் (ரலி) அவர்களோ..! இப்பொழுது இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் பயணப்பட இருக்கின்றார்கள்.

நிர்ணயிக்கப்பட்ட அந்த இரவு நேரத்தில் இறைத்தூதர் (ஸல்) அவர்களும், அபுபக்கர் (ரலி) அவர்களும் மக்காவை விட்டும் புறப்பட்டு, தவ்ர் குகையில் தஞ்சமடைந்தார்கள். அங்கு மூன்று நாட்கள் தங்கி இருந்தார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மக்காவை விட்டும் புறப்பட்டு விட்டார்கள் என்பதை அறிந்த குறைஷித் தலைவர்கள் கோபமடைந்தார்கள். அவரை எப்படியாவது உயிருடன் அல்லது பிணமாகவோ பிடித்து விட வேண்டும் கங்கணம் கட்டிச் செயல்பட்டார்கள்.

இந்த நிலையில் தவ்ர் குகையில் இருவரும் இருந்து கொண்டிருந்த பொழுது தான் கீழ்க்கண்ட வசனத்தை அல்லாஹ் இறக்கி அருளி, தனது உண்மை அடியார்களுக்கு ஆறுதல் வழங்கினான்.

குகையில் இருவரில் ஒருவராக இருந்த போது, (நம் தூதர்) தம் தோழரிடம், ''கவலைப்படாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்”” என்று கூறினார். அப்போது அவர் மீது அல்லாஹ் தன் சாந்தியை இறக்கி வைதுதான்; மேலும் நீங்கள் பார்க்க முடியாப் படைகளைக் கொண்டு அவரைப் பலப்படுத்தினான்;. (9:40)

மக்காவிலிருந்து மதீனாவிற்குச் செல்லும் வழக்கமான பாதையை விட்டு விட்டு, கடலோர மார்க்கமாக மதீனாவைச் சென்றடைந்தார்கள். அப்பொழுது அபுபக்கர் (ரலி) அவர்களுக்கு 49 வயதும், 6 மாதங்களும் ஆகி இருந்தது, அவர்களது தலைமுடி கறுப்பு நிறத்திலிருந்து சற்று நிறம் மங்கத் தொடங்கி இருந்தது. இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு 53 வயதாகியிருந்த போதிலும், தலைமுடி கறுத்தும், அடர்த்தியாகவும் இருந்தது.

அபுபக்கர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பொழுது, 40 ஆயிரம் திர்ஹம்களுக்கு சொந்தக் காரராக இருந்த அவர், இப்பொழுது வெறும் 5 ஆயிரம் திர்ஹம்கள் மட்டுமே மீதமிருந்தது. அவர் தன்னுடைய சொத்துக்களில் அதிகமானதை இறைவனுடைய வழியில் செலவு செய்தவராகவே இருந்தார். இப்பொழுது, மீதமிருந்த அந்த சொத்தையும், தன்னுடனேயே மதீனாவிற்கு எடுத்து வந்து விட்டார். அவர் தனது மனைவியையும், பிள்ளைகளையும், இன்னும் தனது பெற்றோர்களையும் இறைவனது பாதுகாப்பின் கீழ் தான் விட்டு வந்திருந்தார். அவர்களுக்கென எதனையும் விட்டு விட்டு வந்திருக்கவில்லை.



தந்தையின் மனக்குமுறல்

அபுபக்கர் (ரலி) அவர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் சென்று விட்டதை அறிந்த அவரது தந்தையாரான அபூ குஹஃபா அவர்கள் மிகவும் கவலையுற்றார்கள், விசனப்பட்டார்கள். தகவலறிந்தவுடன் நேராக தனது பேத்தியான அஸ்மா (ரலி) அவர்களிடம் வந்து, அஸ்மாவே..! உனது தந்தையார் மக்காவை விட்டு மதீனாவிற்குச் சென்று விட்டதாக அறிகின்றேன்..! இன்னும் இருந்த பணத்தையும் தன்னுடன் எடுத்து விட்டாரோ..? என்று வினவுகின்றார்.

இல்லை..! இல்லை..! நமக்காக எனது தந்தையார் ஓரளவு பணத்தை விட்டு விட்டுச் சென்றிருக்கின்றார்கள் என்று கூறிய அஸ்மா (ரலி) அவர்கள், அபூகுஹஃபாவை கைத்தாங்கலாக அழைத்துக் கொண்டு, துணியினால் சுற்றப்பட்டதொரு மூட்டையில் சில ஓட்டுத் துண்டுகளை நிரப்பி வைத்து, கண் தெரியாத அவரின் கைகளை அதனுள் விட்டு, அவரே அதனை தொட்டுப் பார்த்து, திருப்பி அடைய வைக்கின்றார்கள்.

கண் தெரியாத அவர், அதனைப் பணம் என நம்பி, இந்தளவு பணத்தை அபுபக்கர் விட்டு விட்டுச் சென்றிருப்பதால், நமக்குக் கவலையில்லை என்று கூறுகின்றார்கள்.

அபுபக்கர் (ரலி) அவர்களது ஹிஜ்ரத்துக்குப் பின் அவரது வீட்டில் நடந்த கீழக்கண்ட சம்பவமும் முக்கியத்துவம் பெறுகின்றது.

அஸ்மா (ரலி) அவர்கள் வீட்டில் இருந்து கொண்டிருக்கின்றார்கள். அபுபக்கர் (ரலி) அவர்களும் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் ஹிஜ்ரத் சென்று விட்டதை அறிந்து குறைஷித் தலைவர்கள் பலர் ஒன்று சேர்ந்து அபுபக்கர் (ரலி) அவர்களது வீட்டிற்கு வருகின்றார்கள். அவ்வாறு வந்தவர்களின் தலைவனாக வந்த அபுஜஹல், அபுபக்கர் (ரலி) அவர்களது வீட்டுக் கதவை பலம் கொண்ட மட்டும் தட்டுகின்றான்.

வெளியே வந்த அஸ்மா (ரலி) அவர்களிடம், எங்கே உனது தந்தையார்..? அபுஜஹல் ன் வாயிலிருந்து வார்த்தைகள் நெருப்பாய் விழுந்தன.

அவரைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது.. இது அஸ்மா (ரலி) அவர்களது பதில்..!

என்ன உனக்குத் தெரியாதா? என்று கோபாவேசப்பட்ட அபுஜஹல், அஸ்மா (ரலி) அவர்களின் கன்னத்தில் ஓங்கி அறைய.., அஸ்மா(ரலி) அவர்களின் காதில் போட்டிருந்த தோடு கழன்று சுவரில் பட்டுத் தெரித்து விழுந்தது.

ரபியுல் அவ்வல் மாதம் 12 ம் நாள், இறைத்தூதர் (ஸல்) அவர்களும், அபுபக்கர் (ரலி) அவர்களும் மிகவும் பத்திரமாக மதீனா நகரை வந்தடைந்தார்கள்.

தூரத்தில் இறைத்தூதர் (ஸல்) அவர்களும், அபுபக்கர் (ரலி) அவர்களும் வந்து கொண்டிருப்பதைக் கண்ட மதீனத்து மக்களுக்கு வருவதில் யார் இறைத்தூதராக இருக்கும் என்று கேள்வி துளைத்தெடுத்துக் கொண்டிருந்தது. அவர்களது சந்தேகம் வலுக்க வலுக்க அவர்களது இதயத் துடிப்பு உச்சத்துக்குச் செல்கின்றது.

இப்பொழுது இறைத்தூதர் (ஸல்) அவர்களது முகத்தில் பட்ட வெயிலை மறைப்பதற்காக, அபுபக்கர் (ரலி) அவர்கள், தனது துண்டை எடுத்து இறைத்தூதர் (ஸல்) அவர்களது முகத்திற்கு குடையாகப் பிடிக்கின்றார்கள். இப்பொழுது தான் அந்த மதீனத்து மக்களுக்கு சந்தேகம் தீர்ந்தது. ஆகா..! குடை பிடிப்பவர் அவரது தோழர்..! குடைக்குள் இருப்பவர் தான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என்ற முடிவுக்கு வந்த பின் தான் அவர்களது நாடித் துடிப்பும் சற்று இறங்க ஆரம்பித்தது.

மதீனாவை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அடைந்ததும், முதல் பணியாக மதீனத்து அன்ஸார்களையும், மக்கத்து முஹாஜிர்களையும் ஒன்றிணைத்து சகோதரத்து பந்தத்தை உருவாக்கினார்கள். அந்த அடிப்படையில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ஃகாரிஜா பின் ஸைத் (ரலி) அவர்களை அபுபக்கர் (ரலி) அவர்களது தோழராக இணைத்து வைத்தார்கள்.

இப்பொழுது தனது இல்லத்திற்கு தனது சகோதரராக அபுபக்கர் (ரலி) அவர்களை ஃகாரிஜா பின் ஸைத் (ரலி) அழைத்துச் செல்கின்றார்கள். தனது சொத்துக்களையும், தனது உடமைகளையும் சுட்டிக் காட்டிய ஃகாரிஜா (ரலி) அவர்கள், சகோதரரே..! இந்த சொத்துக்களில் சரி பாதியை எடுத்துக் கொள்ளுங்கள். இன்னும் எனக்கு இரண்டு மனைவிகள் உண்டு. நீங்கள் விரும்பும் மனைவியை நான் விவாகரத்துச் செய்து தருகின்றேன். நீங்கள் மணமுடித்துக் கொள்ளுங்கள் என்று சற்றுப் பேச்சை நிறுத்தினார்.

அனைத்தையும் நிதானமாகக் கேட்டுக் கொண்டிருந்த அபுபக்கர் (ரலி) அவர்கள், சகோதரரே..! உங்களது பெருந்தன்மைக்கு மிக்க நன்றிகள் பல..! இதில் எது ஒன்றும் எனக்குத் தேவையில்லை என்று பதில் கூறினார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களது குடும்பம்

மதீனாவிற்குச் சென்றதிலிருந்து ஏழு மாதங்கள், அபு அய்யூப் அல் அன்ஸாரி (ரலி) அவர்களது இல்லத்தில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தங்கி இருந்தார்கள். பின்பு மதீனத்து நபவி பள்ளியைக் கட்டுவதற்கான இடத்தைத் தேர்வு செய்து, அபுபக்கர் (ரலி) அவர்களிடமிருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு, அந்த இடத்தில் பள்ளியையும் கட்டினார்கள். அதனைச் சுற்றிலும் வீடுகளைக் கட்டிக் கொள்ள இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அனுமதித்தார்கள். அபுபக்கர் (ரலி) அவர்கள் ஜன்னல் கதவு பள்ளியை நோக்கி இருப்பது போல ஒரு வீட்டையும் கட்டிக் கொண்டார்கள். பள்ளிவாசல் கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருக்கும் பொழுது, சிலரை மக்காவிற்கு அனுப்பி தனது குடும்பத்தவர்களை அழைத்து வரும்படி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பணித்தார்கள்.

இப்பொழுது இறைத்தூதர் (ஸல்) அவர்களுடைய குடும்பத்தவர்களுடன், அபுபக்கர் (ரலி) அவர்களது குடும்பத்தவர்களும் இணைந்து மதீனாவிற்கு வந்து, பழைய வீட்டில் அதாவது சுன்ஹ் என்ற இடத்தில் தங்கினார்கள்.

குறிப்பு :

ஹிஜரத் மற்றும் அதில் அபுபக்கர் (ரலி) அவர்களின் பங்கு குறித்து விரிவாக அறிந்து கொள்ள ஹிஜ்ரத் என்ற நூலைப் பார்வையிடுக!!

இத்துடன் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் அபுபக்கர் (ரலி) அவர்களுடைய ஹிஜ்ரத் பயண வரலாறு முடிவுக்கு வந்தாலும், இதிலிருந்து தான் அபுபக்கர் (ரலி) அவர்களின் கிலாபத் - அதாவது இஸ்லாமிய உம்மத்தின் முதல் கலீபா ஆட்சிப் பிரதிநிதியாகப் பரிணமாம் அடைகின்றார்கள். அதற்கான தகுதிகளும், அனுபவங்களும் இதிலிருந்து தான் ஆரம்பமாகின்றன என்பதை வரலாறு அறிந்தவர்கள் கூறும் உண்மையாகும். மேலும், அபுபக்கர் (ரலி) அவர்களது வாழ்க்கையை நாம் மேலும் ஆய்வு செய்வதென்றால், அது இறைத்தூதர் (ஸல்) அவர்களுடைய வாழ்க்கையோடு, அவர்களது வரலாற்றோடு பிண்ணிப் பிணைந்து வரக் கூடியதாக இருக்கும். அதிலும் இத்துடன் உமர் (ரலி) அவர்களது வாழ்க்கையும், பிணைந்தே செல்லும்.

எனவே, சுருக்கம் கருதியும், இன்னும் அபுபக்கர் (ரலி) அவர்களது வாழ்க்கையை அதிகம் சுருக்கி விடாமலும், அவர்களது வாழ்க்கையில் நடந்த முக்கிய சம்பவங்களை கீழக்காணும் தலைப்புகளின் கீழ் இன்ஷா அல்லாஹ் நாம் பார்க்க இருக்கின்றோம்.

· பத்ர் யுத்தம் ஹிஜ்ரி 2 ஆம் ஆண்டு

· உஹது யுத்தம், ரமளான் 3

· அகழ் யுத்தம்

· ஹுதைபிய்யா உடன்படிக்கை, துல்காயிதா 6

· கைபர் யுத்தம், முஹர்ரம் 7

· மக்கா வெற்றி, ரமளான் 8

· ஹுனைன் யுத்தம்

· தபூக் யுத்தம், ரஜப் 9

· ஹிராக்ளியஸ்

· ஹஜ் - தலைமைப் பொறுப்பு வகித்தல்

· இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மரணம் (12, ரபியுல் அவ்வல் 11)

இத்துடன் அபுபக்கர் (ரலி) அவர்களின் ஆரம்ப வாழ்க்கை முடிவுற, அதனை அடுத்து இரண்டாவது பாகமாக கலீபா அபுபக்கர் (ரலி) அவர்களின் வாழ்வு மலரும் இன்ஷா அல்லாஹ்.



பத்ர் யுத்தம் ஹிஜ்ரி 2 ஆம் ஆண்டு

பதர் யுத்தம் நடைபெறுவதற்கு முன் இருந்த சூழ்நிலைகளை நாம் ஆராய்ந்து பார்த்தோமானால், இறைத்தூதர் (ஸல்) அவர்களும், அவர்களது அருமைத் தோழர்களும் மக்கத்துக் குறைஷிகள் தந்த சொல்லொண்ணா வன்கொடுமைகளைச் சகித்தும், பொறுமையுடன் தங்களது இறைநம்பிக்கையைப் பாதுகாத்து வந்தார்கள். ஒரு கட்டத்தில் இறைநிராகரிப்பாளர்களின் கொடுமைகள் எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கவே, தாங்கள் ஏற்றுக் கொண்ட இறை மார்க்கத்தைப் பாதுகாக்கவும், தங்களது உயிர் உடமைகளைப் பாதுகாத்துக் கொள்ளவும், அபிசீனியா மற்றும் மதீனாவை நோக்கி ஹிஜ்ரத் மேற் கொண்டார்கள்.

இதனையும் பொறுக்கமாட்டாத குறைஷிகள் இஸ்லாத்தையும், அதனைப் பின்பற்றும் முஸ்லிம்களையும் அவர்கள் அடைக்கலம் தேடிச் சென்ற இடங்களிலெல்லாம் சென்று, இஸ்லாமிய ஊற்றை அதன் ஆரம்ப பிராவகத்திலேயே அடைத்து விட, அழித்து விட நாடினார்கள். அந்த வகையில் மதீனாவிற்கு அடைக்கலம் தேடிச் சென்ற முஸ்லிம்களையும் நிம்மதியாக இருக்க விடக் கூடாது எனத் தீர்மானித்த குறைஷிகள் தங்களது முழுப் பலத்தையும் திரட்டிக் கொண்டு, மதீனாவை நோக்கிப் படையெடுத்தார்கள்.

இப்பொழுது, தங்களது உயிர்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு ஆயுதமேந்துவதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை முஸ்லிம்களுக்கு..! எனவே, தற்காப்பு யுத்தத்திற்குத் தயாராகுமாறு தனது தோழர்களுக்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அறிவிப்புக் கொடுத்தார்கள். இதிலிருந்து தங்களது இறைநம்பிக்கையைப் பாதுகாத்துக் கொள்வதற்கு வரிசையாகப் பல போர்களைச் சந்திக்க வேண்டியிருந்தது முஸ்லிம்களுக்கு. இன்னும் அனைத்துப் போர்களுக்கும் பத்ருப் போருக்கும் பல வித்தியாசங்களும், இன்னும் சிறப்புத் தகுதிகளும் இருந்தன. இது முஸ்லிம்களின் ஜீவ மரணப் போராட்ட யுத்தமாகும். இதில் முஸ்லிம்கள் வெற்றி பெற்றால் இஸ்லாம் பாதுகாக்கப்படும். முஸ்லிம்கள் தோற்று விட்டால், இஸ்லாத்தைப் பின்பற்ற ஆள் இல்லாத அளவுக்கு அழிவு தான் ஏற்படும் என்ற நிலையில் தான் முஸ்லிம்கள் இருந்தனர்.

இந்தப் போரில் கலந்து கொண்டவர்களை இறைநம்பிக்கையில் முந்திக் கொண்டவர்கள் என்றழைக்கப்படுகின்றனர்.

ஆம்..! 313 முஹம்மதுகள் ஆயிரம் அபூஜஹ்லை எதிர்க்க களம் நோக்கி வந்திருந்தனர். முஸ்லிம்களின் தரப்பில் 313 வீரர்களும், அவர்களில் 236 பேர் அன்ஸாரிகளும், 77 பேர் முஹாஜிர்களாகவும் இருந்தனர். இன்னும் முஸ்லிம்களிடம் 70 ஒட்டகங்களும், 3 குதிரைகளும் இருந்தன. இதனைக் கொண்டே மாற்றி மாற்றிப் பயணம் செய்து போர்க்களம் நாடி வந்திருந்தனர்.

இப்பொழுது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறைவனிடம் பிரார்த்திக்க ஆரம்பித்தார்கள். இறைவா! நீ எனக்கு வாக்களித்தவற்றை நிறைவேற்றித் தருவாயாக..! இறைவா..! இந்தச் சின்னஞ்சிறு கூட்டத்தை நீ அழித்து விட்டால், இந்தப் பூமியில் உன்னை வணங்குவதற்கு யாரும் இருக்க மாட்டார்கள்..! என்றும் பிரார்த்தித்தார்கள்.

அப்பொழுது இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மீது போர்வையைப் போர்த்திக் கொண்டே அபுபக்கர் (ரலி) அவர்கள் கூறினார்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்களே..! எனது தாயும், தந்தையும் உங்களுக்கு அற்பணமாகட்டும்..! இறைவன் உங்களது கோரிக்கைகளை நிச்சயம் ஏற்றுக் கொள்வான், விரைவில் உங்களது கோரிக்கைகள் நிறைவேற்றி வைக்கப்படும் என்று கூறினார்கள்.

அபுபக்கர் (ரலி) அவர்களின் இந்த ஆறுதல் வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டே களம் நோக்கி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வந்தார்கள்.

அதிசீக்கிரத்தில் இக்கூட்டத்தினர் சிதறடிக்கப்பட்டுப் புறங்காட்டி ஓடுவர். (54:45)

என்ற வசனத்தை இறைவன் அருளினான். இறைநத்தூதர் (ஸல்) அவர்கள் இந்த வசனத்தை ஓதிக் கொண்டே களம் நோக்கி விரைந்தார்கள்.

மேலும், அந்தச் சம்பவம் குறித்து இறைவசனம் இவ்வாறு சான்று பகர்ந்து கொண்டிருக்கின்றது.

(நினைவு கூறுங்கள்;) உங்களை இரட்சிக்குமாறு உங்கள் இறைவனின் உதவியை நாடியபோது; ''(அணி அணியாக உங்களைப்) பின்பற்றி வரக்கூடிய ஓராயிரம் மலக்குகளைக் கொண்டு நிச்சயமாக உங்களுக்கு உதவி புரிவேன்”” என்று இறைவன் உங்களுக்கு பதிலளித்தான். (8:9)

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அமர்ந்து போர் நடவடிக்கைகளைக் காண்பதற்காக, நபித்தோழர்கள் ஒரு மேடை ஒன்றை அமைத்தார்கள். அதில் அமர்ந்து கொண்டிருந்த இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு அபுபக்கர் (ரலி) அவர்கள் காவலாக நின்று கொண்டிருந்தார்கள்.

இப்பொழுது போர் தொடங்கியது. வலது பக்க அணிக்கு அபுபக்கர் (ரலி) அவர்களும், இடது பக்க அணிக்கு அலி (ரலி) அவர்களும் தளபதிகளாக இருக்க போர் ஆரம்பமாகியது. இந்தப் போர் நடைபெறும் சமயத்தில் அபுபக்கர் (ரலி) அவர்களது மகன் அப்துர் ரஹ்மான் இஸ்லாத்தை ஏற்றிருக்கவில்லை. அவர் குறைஷிகளின் பக்கம் இருந்து கொண்டிருந்தார். இன்னும் குறைஷிகளின் சார்பாக போருக்கும் வந்திருந்தார். போர்க்களக் காட்சியினூடே நடந்த இந்தச் சம்பவத்தை பின்னாளில் அசை போட்ட தந்தைக்கும் மகனுக்கும் இடையே நடந்த இந்த உரையாடல் இஸ்லாமிய வரலாற்றில் இறைநம்பிக்கைக்கும், இறைநிராகரிப்பிற்கும் இடையே உள்ள கொள்கை வித்தியாசத்தை அளவிடக் கூடிய நிகழ்ச்சியாக அமைந்து விட்டது. ஆம்..!

ஒருநாள் மகன் தந்தையை நோக்கிச் சொன்னார். பத்ருப் போர்க்களத்தின் பொழுது, தந்தையே..! உங்களது தலை எனது வாளுக்கு மிக அருகில் வந்தது. ஆனால் நீங்கள் எனது தந்தை என்ற காரணத்தினால் உங்களைத் தாக்கமால் விட்டு விட்டேன், பெற்ற பாசம் தடுத்து விட்டது என்று கூறினார்.

அதனைக் கேட்ட அபுபக்கர் (ரலி) அவர்கள் தாமதிக்காமல் கூறினார், மகனே..! உனது தலை எனது வாளுக்கு அருகில் அப்பொழுது இருந்திருக்குமானால்..! இந்நேரம் நீ என்னுடன் பேசிக் கொண்டிருக்க மாட்டாய் மகனே..! எனது வாளுக்கு உனது தலையை இரையாக்கி இருப்பேன் என்று கூறினார்கள்.

பத்ருப் போரில் எதிரிகள் தோற்கடிக்கப்பட்டார்கள். இன்னும் தலைமை தாங்கி வந்திருந்த மிகப் பிரபலமான குறைஷித் தலைவர்கள், கொல்லப்பட்டும் விட்டார்கள். அதில் அபூ ஜஹ்ல், உத்பா, ஷைபா போன்ற குறைஷிகளின் தலைவர்களும் கொல்லப்பட்டவர்களின் பட்டியலில் அடங்குவர்.



உஹது யுத்தம், ரமளான் 3

சரியாக ஒரு வருடம் கடந்த பின் தோற்றுப் போன குறைஷிகள் மீண்டும் அபுசுப்யானின் தலைமையில் 3000 பேர் கொண்ட படையைத் தயார் செய்து கொண்டு, உஹது மலை அடிவாரத்தில் முஸ்லிம்களைச் சந்திக்கத் தயாரகி வந்தனர். முஸ்லிம்களைத் தாக்குவதற்காகவே மக்காவை விட்டு வெளிக்கிளம்பி வந்திருக்கின்ற குறைஷிப் படைகளின் வருகையை அறிந்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது தோழர்களையும் போருக்குத் தயாராகுமாறு உத்தரவிட்டார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களது உத்தரவுப்படி 1000 பேர் கொண்ட முஸ்லிம் படைப்பிரிவு உஹதுக் களம் நோக்கி நரக ஆரம்பித்தது.

இடையில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வேஷதாரியான அப்துல்லா பின் உபையின் நயவஞ்சகத்திற்கு முகம் கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இவன் இறைநம்பிக்கை கொண்டிருந்தாலும், அதனை முழுமையாகச் செயல்படுத்த இயலாத நிலையில், நயவஞ்சகத்தை தனது நெஞ்சிலே வளர்த்தவனாக மாறிப் போனவன். இவன் போருக்கு இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் சென்று கொண்டிருந்த முஸ்லிம்களில் மூன்றில் ஒரு பங்கினரை தன்னோடு அழைத்துக் கொண்டு, மீண்டும் மதீனா நோக்கிச் செல்ல ஆரம்பித்தான். எனவே, இப்பொழுது முஸ்லிம் படையினரின் எண்ணிக்கை ஆயிரத்திலிருந்து எழுநூறானது.

குறிப்பு : போர்க்களக் காட்சிகளை விரிவாக அறிந்து கொள்ள எமது இணையத்தளத்தில் உள்ள நூலகத்தில் உள்ள 1. முஹம்மது (ஸல்) அவர்களது வாழ்க்கை வரலாறு மற்றும் 2. போர்க்களத்தில் நாயகம் ஆகிய நூற்களில் பார்வையிடுக.

போர்க்களக் காட்சிகளில் ஓரிடத்தில் இறைத்தூதர் (ஸல்) அவர்களை குறைஷிகளில் ஒருவன் மிகக் கடுமையாகத் தாக்கி விடுகின்றான். அவன் எறிந்த கல் ஒன்று இறைத்தூதர் (ஸல்) அவர்களது முகத்தைப் பதம் பார்த்தது. இன்னொருவன் அவர்களது தலைக் கவசத்தின் மீது கடுமையானதொரு தாக்குதலை நடத்தினான், மூன்றாமவன் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் முகத்தில் தாக்கியதும், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் முகத்திலிருந்து இரத்தம் வழிந்தோட ஆரம்பித்தது.

படைத்தவனை நோக்கி அழைப்பு விடுக்கின்ற தன்னுடைய தூதரது முகத்தை இரத்தத்தால் காயப்படுத்துகின்ற இந்த சமுதாயம் எவ்வாறு வெற்றியடைய முடியும் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அந்த வேளையில் முணுமுணுத்தபடி இருந்தார்கள்.

இப்பொழுது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நினைவிழந்த நிலையில், எங்கு தனது தோழர்கள் தங்களது குருதிகளைச் சிந்தி மரணத்தைத் தழுவிக்கிடந்தார்களோ அவர்களுடனேயே மயங்கிக் கிடந்தார்கள். இப்பொழுது குறைஷிகள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மரணமடைந்து விட்டார்கள் என்ற செய்தி காட்டுத் தீ போலப் பரவ வைத்தனர். போர்க்களமெங்கும் எதிரொலித்த அவர்களது வதந்திகள், முஸ்லிம்களை நிலைகுலையச் செய்தது. இன்னும் எந்தத் திக்கை நோக்கி நின்றார்களோ அந்தத் திக்கை நோக்கி, முஸ்லிம்களில் சிலர் வெருண்டோட ஆரம்பித்தார்கள்.

இந்த நிலையில் பாதகத்திலிருந்து விடுபட்ட சிறிது நேரத்திலேயே, நபித்தோழர்கள் மீண்டும் அணி திரளலானார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மயங்கிக் கிடப்பதை முதன் முதலில் அறிந்து, பிணக்குவியல்களுக்கு நடுவே இருந்த இறைத்தூதர் (ஸல்) அவர்களை இனங் கண்டு கொண்டு விட்டார்கள் அபுபக்கர் (ரலி) அவர்கள். அலி (ரலி) அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களது தோள் புஜங்களைத் தூக்கி விட, தல்ஹா (ரலி) அவர்களது ஒத்துழைப்பினால் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து நின்றார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களது கன்னதைக் கிழித்துக் காயப்படுத்திக் கொண்டிருந்த தலைக்கவசத்தைத் தனது பற்களாலேயே கடித்து அப்புறப்படுத்தினார்கள் அபூ உபைதா (ரலி) அவர்கள். அதன் காரணமாக அவர்களது இரண்டு பற்கள் ஷஹீதாக்கப்பட்டன.

இறைத்தூதர் (ஸல்) அவர்களை இந்தளவு காயப்படுத்திய மக்களுக்கு எதிராக பிரார்த்தனை செய்யுமாறு நபித்தோழர்கள் வேண்டி நின்ற பொழுது கருணையே உருவான இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது தோழர்களை நோக்கிக் கூறினார்கள் :

இல்லை..! நான் மக்களைச் சபிப்பதற்காக அனுப்பப்பட்ட தூதனல்லவே எனப் பதிலிறுத்தார்கள். எனவே, சபிப்பதற்குப் பதிலாக, இறைவா..! எனது மக்களை நேர்வழியில் செலுத்துவாயாக..! அவர்கள் அறியாத மக்களாக இருக்கின்றார்கள்..! என்று பிரார்த்தனை புரிந்தார்கள் கருணை நபியவர்கள்.

இதனை அடுத்து அபுபக்கர் (ரலி), உமர் (ரலி), அலி (ரலி), தல்ஹா (ரலி), மற்றும் சுபைர் (ரலி) ஆகிய நபித்தோழர்கள் இணைந்து இறைத்தூதர் (ஸல்) அவர்களை பாதுகாப்பான மலைப் பகுதிக்கு அழைத்துச்சென்றார்கள். இந்த இடத்தில் தான் காலித் பின் வலீத் அவர்கள் எதிரியின் தரப்பில் இருந்து கொண்டு மீண்டும் தாக்குதல்களைத் தொடுத்த பொழுது, காலித் பின் வலீத் ஐ எதிர்த்து அவர்களை விரட்டி விடுமாறு உமர் (ரலி) அவர்களுக்கு கட்டளையிட்டார்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள். இறுதியில் காலித் பின் வலீத் அவர்கள் தனது படையைத் திருப்பி அழைத்துக் கொண்டு போர்க்களத்தை விட்டுச் சென்று விட்டார்.

ஹஸ்ரத் ஹம்ஸா (ரலி) அவர்கள் இந்தப் போரில் கொல்லப்பட்டார்கள். போர் ஆரம்பித்த சற்றைய நேரத்திற்கெல்லாம் அபுபக்கர் (ரலி) அவர்களது மகன் அப்துர் ரஹ்மான் எதிரிகளின் தரப்பில் இருந்து கொண்டு, என்னுடன் மோதுவதற்கு உங்களில் யாருக்குத் தைரியமிருக்கின்றது வாருங்கள்..! என்று கூக்குரலெழுப்பிக் கொண்டிருந்தார். தனது மகனை சவாலை ஏற்றுக் கொண்டு மகனை உருவிய வாளுடன் சந்திக்கப் புறப்பட்ட அபுபக்கர் (ரலி) அவர்களைத் தடுத்து நிறுத்திய இறைத்தூதர் (ஸல்) அவர்கள்..!

அபுபக்கரே..! உமது வாளை உறையிலிடுங்கள்..! அவர் பிழைத்துப் போகட்டும்..! விட்டு விடுங்கள் என்று கூறினார்கள்.

மலையில் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்ட எழுபது நபர்களில் அபுபக்கர் (ரலி) அவர்களும் ஒருவராவார்.

அகழ் யுத்தம் - ஷவ்வால் 5

அகழ் யுத்தம் - ஷவ்வால் 5

முஸ்லிம்களை அழித்தொழித்தொழித்து விடலாம் என்று குறைஷிகள் கண்ட கனவு பத்ருப் போரிலும், உஹதுப் போரிலும் கானல் நீராகிப் போனாலும், குறைஷிகளை அடுத்து இன்னுமொரு எதிரிக்கு இப்பொழுது முஸ்லிம்கள் முகம் கொடுக்க வேண்டியதிருந்தது. மதீனாவைச் சுற்றிலும் வாழ்ந்து கொண்டிருந்த யூதர்கள் மக்கத்துக் குறைஷிகளைப் போலவே முஸ்லிம்களை வளர விடுவது நமக்கு ஆபத்து என்று உணர ஆரம்பித்தார்கள், முஸ்லிம்களை அழித்து விட வேண்டுமென்பது அவர்களது தனியாத ஆசையாகவும் இருந்தது. இன்னும் இதற்கான சதித் திட்டங்களைத் தீட்டிய அவர்கள், முஸ்லிம்களை நேரிடையாக மோதுவதைத் தவிர்த்துக் கொண்டு, சதித்திட்டங்களின் வாயிலாகவும், மோசடிச் செயல்களின் வாயிலாகவும் முஸ்லிம்களைக் கருவறுக்க வேண்டும் என திட்டம் தீட்டலானார்கள். எனவே, அதன் முதற்கட்டமாக மக்கத்துக் குறைஷிகளுக்கும் இன்னும் தங்களது சகோதர யூத குலத்தவர்களுக்கும் அவர்கள் முஸ்லிம்களை அழித்தொழிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி செய்திகளை அனுப்பி, முஸ்லிம்களுக்கு எதிராக ஆயுதம் தரிக்க வேண்டுகோள் வைத்தார்கள். யூதர்களின் சதிச் செயல்களின் காரணமாக, கிட்டத்தட்ட 10 ஆயிரம் பேர் கொண்ட படை ஒன்று திரண்டது. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கொண்டு வந்த தூதையும், அதனை ஏற்றுக் கொண்ட நெஞ்சங்களையும் அழித்தொழிப்பதற்காக, படை திரண்டு வருகின்றது என்பதனைக் கேள்விப்பட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவைச் சுற்றிலும் அகழ் - குழி தோண்டுமாறு தனது தோழர்களுக்கு உத்தரவிட்டதோடு, தானும் அதில் பங்கெடுத்துக் கொண்டார்கள். மதீனாவின் எல்லைக்குள் எதிரிகள் நுழைவதற்கு முன்பாகவே இப்பொழுது குழி வெட்டப்பட்டு தயார் நிலையில் இருந்தது. எதிரிகள் தரப்பில் 10 ஆயிரம் ஆயுதந் தரித்த போர் வீரர்கள் திரட்டப்பட்டிருந்த அதே வேளையில், முஸ்லிம்களின் தரப்பிலோ 3 ஆயிரத்திற்கு மேல் வீரர்கள் இல்லை. 3 ஆயிரத்திற்கும் சற்றுக் குறைவான எண்ணிக்கையுடையோராக இருந்தார்கள். இவர்களில் பலர் ஊணமுற்றோராக இருந்ததோடு, அந்தக் காலகட்டத்தில் கடுமையான குளிர் நேரமாகவும் இருந்தது. முஸ்லிம்கள் எண்ணிக்கையிலும், இன்னும் வாய்ப்பு வசதிகளிலும் மிகக் குறைவான வளத்தையே பெற்றிருந்தும் கூட, அவர்களது இறைநம்பிக்கையின் உறுதியானது ஒரு மாத கால முற்றுகையைத் தாக்குப் பிடிக்க வைத்ததோடு மட்டுமல்லாது, எதிரிகளின் தரப்பில் கடுமையான சேதத்தையும் ஏற்படுத்தியது. இந்த முற்றுகைப் போராட்டத்தில், அகழியின் ஒரு பகுதி அபுபக்கர் (ரலி) அவர்களின் தலைமையின் கீழ் இருந்தது. அந்த இடத்தில் ஒரு பள்ளிவாசலும் கட்டப்பட்டது, அந்தப் பள்ளிவாசல் ஷா வலியுல்லாஹ் அவர்களது காலத்திலும் கூட இருந்தது என்று வராற்றுக் குறிப்புகள் கூறுகின்றன.



ஹுதைபிய்யா உடன்படிக்கை, துல்காயிதா 6

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது தோழர்களுடன் துல்காயிதா 6 அன்று மதீனாவிலிருந்து மக்காவிற்கு ஹஜ் செய்யும் நிமித்தமாகக் கிளம்பினார்கள். இஹ்ராம் அணிந்திருந்த நிலையில், பலிப் பிராணிகளையும் தங்களுடன் கொண்டு சென்றதோடு, முழுக்க முழுக்க ஹஜ் செய்யும் நோக்கத்துடனேயே மக்காவை நோக்கிக் கிளம்பினார்களே ஒழிய, குறைஷிகளை எதிர்த்துப் போர் புரியும் நிமித்தமாகச் செல்லவே இல்லை. இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன், அன்ஸார்களும், முஹாஜிர்களும் இன்னும் உதவியாளர்களுமாக கிட்டத்தட்ட 3 ஆயிரம் பேர்களுடன் மக்காவை நோக்கிப் புறப்பட்டார்கள். வரும் வழியில் மக்கத்துக் குறைஷிகள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மக்காவிற்கு நுழைவதைத் தடுக்கும் பொறுட்டு திரண்டு நிற்பதாகத் தகவல் கிடைத்தவுடன், வழக்கமான பாதையை விட்டு விட்டு, பாதையை மாற்றி ஹுதைபிய்யா என்ற இடத்தை ஒட்டிய பகுதி வழியாகத் தன்னுடைய பயணத்தைத் தொடர்கின்றார்கள்.

வழக்கம் போல இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது ஆருயிர்த் தோழர் அபுபக்கர் (ரலி) அவர்களிடம் நிலைமையின் போக்கு பற்றி கலந்தாலோசனை செய்த பொழுது, நாம் எந்த நோக்கத்திற்காக மதீனாவை விட்டுப் புறப்பட்டு வந்திருக்கின்றோமோ, அந்த நோக்கம் தவிர வேறு நோக்கம் எதுவும் கிஞ்சிற்றும் கிடையாது, போர் செய்யும் நோக்கமோ அல்லது குறைஷிகளுடன் விவாதம் செய்யும் நோக்கத்துடனோ நாம் இந்தப் பயணத்தைத் தொடரவில்லை என்பதனை குறைஷிகளுக்குத் தெளிவாக விளங்க வைத்து விட வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் முஸ்லிம்கள் தங்களது நோக்கத்தைத் தெளிவாகத் தெரிவித்து விட்ட பின்னரும், குறைஷிகளுக்கு திருப்தி ஏற்படாமல், தங்களது தரப்புப் பேச்சுவார்த்தைக்கு உர்வா பின் மஸ்ஊது என்பவரைஇறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் குறைஷிகள் அனுப்பி வைத்தார்கள்.

இப்பொழுது உர்வா ஒரு மிகப் பெரிய பணியைச் செய்ய ஆரம்பித்தார். அதாவது, முஸ்லிம்களை எதிர்ப்பதற்காக குறைஷிகள் மிகப் பெரிய படை ஒன்றைத் தயார் செய்து தயாராக வைத்திருப்பதாக இறைத்தூதர் (ஸல்) அவர்களை நம்ப வைத்து விட வேண்டும், அவர் மனதில் குறைஷிகளைப் பற்றிய அச்சத்தை ஊட்டி விட வேண்டும் என்பதே உர்வா வின் திட்டமாக இருந்தது.

உர்வா வின் இந்தத் திட்டத்தையும், அவரது ஆணவப் பேச்சையும் பொறுக்க மாட்டதா அபுபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள், கோபம் கொண்டவர்களாக..!

ஓ! கற்சிலைகளான லாத்தையும், உஸ்ஸாவையும் வணங்கக் கூடியவர்களே..! அறிவு கெட்ட நீங்களே போருக்குத் தயாராகி விட்ட பின், அல்லாஹ்வையும், அவனது தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் மீது இறைநம்பிக்கை கொண்டிருக்கின்ற நாங்களும் உங்களுக்கெதிராகத் தயாரகுவேமே ஒழிய, பயம் காரணமாக இறைத்தூதர் (ஸல்) அவர்களை கை கழுவி விட்டுச் சென்று விடுவோம் என்று மட்டும் நினைத்து விடாதீர்கள் என்று முழங்கினார்கள்.

யார் இந்த மனிதர்? உர்வா உறும ஆரம்பித்தார்.

இவர் தான் இப்னு அபீ குஹஃபா, என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உர்வா வுக்கு பதிலளித்தார்கள்.

நான் உங்களிடம் தான் பேச வந்திருக்கின்றேன். அவரிடமல்ல. அவருக்கு நான் தகுந்த நேரத்தில் பதில் கூறுவேன் என்று சினந்தான் உர்வா.

உர்வா வினுடன் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தை முறிந்து போனதன் பின், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது ஒட்டகையுடன், ஒரு தூதரை அனுப்பி குறைஷிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி விட்டு வரும்படி பணித்தார்கள்.

ஆனால் குறைஷிகளோ, அந்த ஒட்டகத்தின் கால்களை வெட்டி விட்டார்கள். இந்தச் சம்பவம் நடந்த பின்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள், பேச்சுவார்த்தைக்கான கதவை மூடி விடவில்லை. இப்பொழுது உதுமான் பின் அஃபான் (ரலி) அவர்களை குறைஷிகளிடமும், இன்னும் முக்கியமாக அபுசுஃப்யான் மற்றும் மற்ற குறைஷித் தலைவர்களைச் சந்தித்து, முஸ்லிம்கள் வந்த நோக்கத்தை விளக்கி வரும்படி அனுப்பி வைத்தார்கள்.

உதுமான் (ரலி) அவர்கள் முஸ்லிம்களின் நோக்கத்தை விளக்கியதன் பின்பும், குறைஷிகளின் பிடிவாதம் தளரவில்லை.

உதுமான் அவர்களே..! நீங்கள் வேண்டுமானால் கஃபாவை வலம் வந்து விட்டுப் போங்கள் என்று சலுகை காட்டினார்கள். ஆனால் உதுமான் (ரலி) அவர்களோ, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கஃபாவை வலம் வராத வரை நான் வலம் வர மாட்டேன் என்று கூறினார்கள்.

இதனைக் கேட்ட குறைஷித் தலைவர்களுக்கு கோபம் கொப்பளித்துக் கொண்டு வந்தது, இப்பொழுது உதுமான் (ரலி) அவர்களை தங்களது பாதுகாப்பின் கீழ் திரும்பிப் போக முடியாத அளவுக்கு தடுத்து வைத்துக் கொண்டார்கள். உதுமான் (ரலி) அவர்களை தடுத்து வைத்துக் கொண்ட செய்தி, இப்பொழுது உதுமான் (ரலி) அவர்கள் கொல்லப்பட்டு விட்டார்கள் என்ற வதந்தியாக ஹுதைபிய்யாவில் இருக்கக் கூடிய முஸ்லிம்களிடம் வந்தடைந்தது.

உதுமான்(ரலி) அவர்கள் கொல்லப்பட்டு விட்டார்கள் என்ற செய்தியைக் கேள்விப்பட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கடுமையான கோபத்திற்கு ஆளானார்கள். இன்னும் கொலைக்குப் பழிக்குப் பழி எடுக்காமல் விடுவதில்லை என்று சபதம் செய்து கொண்டார்கள். இப்பொழுது, தனது தோழர்கள் அனைவரையும் அழைத்தார்கள். புதிதாக உருவெடுத்துள்ள இந்தப் பிரச்னையில், அனைவரும் உறுதியோடு இருந்து போராடுவோம் என்று அனைவரிடம் பைஅத் என்று சொல்லக் கூடிய சத்தியப் பிரமாணம் பெற்றுக் கொண்டார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மரத்தினடியில் நின்று கொள்ள, நபித்தோழர்கள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக வந்து இறைத்தூதர் (ஸல்) அவர்களின் கையில் கை வைத்து, சபதம் எடுத்து உறுதிப் பிரமாணம் செய்தார்கள். இந்த உறுதிப் பிரமாணத்தைத் தான் இஸ்லாமிய வரலாறு, பைஅத்துர் ரிழ்வான் என்றழைக்கின்றது. மேலும், இந்த உறுதிப் பிரமாணத்தைப் பற்றி திருமறைக்குர்ஆனில் இறைவன் இவ்வாறு சிலாகித்துக் குறிப்பிடுகின்றான் :

முஃமின்கள் அந்த மரத்தடியில் உம்மிடம் வாக்குறுதி செய்த போது மெய்யாகவே அல்லாஹ் அவர்களைப் பொருந்தி (ஏற்றுக்) கொண்டான். அவர்களுடைய இதயங்களில் இருப்பதை அவன் அறிந்து, அவர்கள் மீது (சாந்தியையும்) அமைதியை(யும்) இறக்கியருளி, அவர்களுக்கு அண்மையில் வெற்றியையும் அளித்தான்.(48:18)

உதுமான் (ரலி) அவர்கள் அங்கே இல்லாத காரணத்தால், அவர்களுக்காக வேண்டி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தானே பைஅத் எடுத்துக் கொண்டார்கள். தனது கரத்தின் மீது தனது மற்றொரு கரத்தை வைத்து உதுமான் (ரலி) அவர்களுக்காக பைஅத் எடுத்துக் கொண்டார்கள். இந்த பைஅத் நடந்து முடிந்த பின் தான், தமக்குக் கிடைத்த செய்தி தவறான செய்தி என்பதையும், இன்னும் இந்த வருடம் ஹஜ்ஜுச் செய்யாமல் திரும்பி விட்டால், அடுத்த வருடம் தாராளமாக வந்து ஹஜ் செய்து விட்டுப் போகலாம் என்ற நிபந்தனையுடன் கூடிய செய்தியை, சுஹைல் அவர்களிடம் குறைஷிகள் தெரிவித்து அனுப்பி விட்டனர்.

மேலே நடந்த சம்பங்களும் அதில் முஸ்லிம்கள் உறுதியுடன் நிலைத்திருந்ததையும் இறைவன் மிகவும் புகழ்ந்ததோடு, அவர்களைப் பெருமைப்படுத்தியும் விட்டான்.

மிக நீண்ட ஆலோசனைகளுக்குப் பின்பு, இருதரப்பிலும் ஒரு முடிவெடுக்கப்பட்டு, அதற்கான ஒப்பந்தங்களை இருவரும் எழுதிக் கொள்ளச் சம்மதித்தனர். செய்து கொண்ட ஒப்பந்தமானது குறைஷிகளுக்குத் தான் மிகவும் சாதகமானதாக இருக்கின்றது என்று அபிப்பராயப்பட்ட உமர் (ரலி) அவர்கள், தனது கருத்தை அபுபக்கர் (ரலி) அவர்களிடம் எடுத்துக் கூறினார்கள். உமர் (ரலி) அவர்களது ஆலோசனையை மறுத்த அபுபக்கர் (ரலி) அவர்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்களது கருத்தை ஏற்குமாறு ஆலோசனை வழங்கியதோடு, இறைத்தூதர் (ஸல்) அவர்களது வழிமுறையை இறுகப்பற்றிக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார்கள். அதனை அடுத்து, இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் நேரடியாகப் பேசிப் பார்த்து விடுவோம் என்று கிளம்பிய உமர் (ரலி) அவர்கள், தமது கருத்தை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வெளிப்படுத்திய போது, நான் அல்லாஹ்வின் கட்டளைப்படி தான் இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றி உள்ளேன் என்று பதில் தந்ததுடன், உமர் (ரலி) அவர்கள் அமைதியாகி விட்டார்கள்.

ஒப்பந்தங்கள் அலி (ரலி) அவர்கள் எழுத, முஸ்லிம்களின் சார்பில் அபுபக்கர் (ரலி), உமர் (ரலி), அலி (ரலி), அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி), சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) மற்றும் பலர் கையெழுத்திட்டார்கள். ஒப்பந்தங்கள் எழுதப்பட்டு முடிக்கப்பட்டவுடன், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உம்ரா மட்டும் செய்து விட்டு திரும்பி விட்டார்கள். அவ்வாறு திரும்பிக் கொண்டிருந்த வேளையில் தான் சூரா அல் ஃபத்ஹ் - என்ற அத்தியாயம் இறக்கியருள் செய்யப்பட்டது. இந்த அத்தியாயத்தில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தமானது, ஒரு தெளிவான வெற்றி என அருள் செய்யப்பட்டிருந்தது. இமாம் சுஹ்ரி அவர்கள் இந்த அத்தியாயம் பற்றிக் குறிப்பிடும் போது, ஹுதைபிய்யா வெற்றியைப் போல வேறு எப்பொழுதும் முஸ்லிம்கள் வெற்றி பெற்றதில்லை, அவ்வளவு மிகப் பெரிய வெற்றியை ஹுதைபிய்யா உடன்படிக்கை மூலம் முஸ்லிம் அடைந்து கொண்டார்கள் என்று குறிப்பிடுகின்றார்கள். இந்த ஒப்பந்தத்திற்குப் பின், முஸ்லிம்களும் மக்கத்துக் குறைஷிகளும் நட்பு முறையில் சந்தித்துக் கொண்டார்கள், முன்பு இந்த சந்திப்பு போருக்கான சந்திப்பாகத் தான் இருந்தது. இப்பொழுது, இஸ்லாத்தினை ஏற்றுக் கொள்ளாத மக்கள் மத்தியில் இஸ்லாத்தின் தூதை எடுத்துச் செல்வது மிகவும் எளிதாகவும் இருந்தது. இந்த ஒப்பந்தத்திற்குப் பின்பு தான் இஸ்லாத்தின் தூதை ஏராளமான பேர்கள் ஏற்றுக் கொள்ள ஆரம்பித்தார்கள். இதுவரை காலமும் ஏற்றுக் கொண்ட முஸ்லிம்களின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டு நோக்குவோமானால், ஹுதைபிய்யா உடன்படிக்கைக்குப் பின்பு, இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கை இதுகாலம் வரை ஏற்றிருக்கக் கூடியவர்களின் எண்ணிக்கையை விடவும் அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆம்! ஹுதைபிய்யா உடன்படிக்கையின் பொழுது இறைத்தூதர் (ஸல்) அவர்களைப் பின்பற்றி வந்தவர்களின் எண்ணிக்கை வெறும் 1400 தான் இருந்தது. ஆனால் ஹுதைபிய்யா உடன்படிக்கை நடைபெற்ற பின் இரண்டு ஆண்டுகளில் மக்காவை வெற்றி கொண்டு, மக்காவிற்குள் பிரவேசிக்கும் பொழுது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் 10 ஆயிரம் பேர்களுடன் நுழைந்தார்கள் என்று வரலாறு கூறுகின்றது. எனவே, இமாம் சுஹ்ரி அவர்களின் கருத்து முற்றிலும் உண்மையானதே என்று வராற்று ஆசிரியம் இப்னு ஹிஸாம் அவர்கள் கூறுகின்றார்கள்.



கைபர் யுத்தம், முஹர்ரம் 7

ஹுதைபிய்யாஉடன்படிக்கைக்குப் பின்பு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவில் ஒரு மாத கால அளவு தான் தங்கியிருந்திப்பார்கள். பின்பு அவர்கள் கைபரை நோக்கிப் படை எடுத்தார்கள். இந்த கைபர் பகுதியில் அதிமான யூதக் குலங்களும், அவர்களைச் சார்ந்தவர்களின் கோட்டைகளும் அதிகமாக இருந்தன. இந்தப் போரில் அலி (ரலி) அவர்கள் வெள்ளைக் கொடி ஏந்திக் கொண்டு சென்றார்கள். எந்தக் கோட்டையைத் தகர்க்க முடியாது என இறுமாப்புடன் இருந்தார்களோ, அதனைத் தகர்க்கும்படைக்கு தலைமை தாங்கி அபுபக்கர் (ரலி) அவர்கள் சென்றார்கள். ஆனால் அவர்களும் தோல்வியையே தழுவினார்கள். பின்பு உமர் (ரலி) அவர்களின் தலைமையில் படை சென்ற போதும், எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை, மூன்றாவதாக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அலி (ரலி) அவர்களின் தலைமையில் படையை அனுப்பி வைத்தார்கள்.

அப்பொழுது, நான் இப்பொழுது அல்லாஹ்வையும், அவனது தூதரையும் அதிகமதிகம் நேசிக்கக் கூடியவரையும், இன்னும் போர்க்களத்தில் இருந்து புறமுதுகிட்டு ஓடாத ஒருவரையும் இந்தப் படைக்குத் தலைவராகத் தேர்ந்தெடுத்து அனுப்பி வைக்கின்றேன் என்று கூறி அனுப்பி வைத்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களின் அந்த முன்னறிவிப்பு, நிறைவேறியது, அந்த கைபர் கோட்டை கைப்பற்றப்பட்டது. இறைத்தூதர் (ஸல்) அவர்களின் இந்த முன்னறிவிப்புக்குச் சொந்தக் காரர், அலி (ரலி) அவர்கள் தான்.



மக்கா வெற்றி, ரமழான் 8

ஹுதைபிய்யா உடன்படிக்கையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட விதிமுறைகளை வெகு நீண்ட காலம் குறைஷியர்களால் பேணிக் காக்க இயலவில்லை. வெகு சீக்கிரமே அவர்கள் விதிமுறைகளை மீற ஆரம்பித்தார்கள். பனூ குஸாஆ என்ற கோத்திரத்தார்கள் முஸ்லிம்களுடன் நட்பு ஒப்பந்தம் செய்திருந்தார்கள். அந்த அடிப்படையில், அவர்கள் மீது போர் தொடுப்பதும், அவர்கள் மீது போர் தொடுப்பவர்களுக்கு ஒத்துழைப்பதும் ஹுதைபிய்யா உடன்படிக்கைப்படி, உடன்படிக்கையை முறிக்கும் செயலாகும். ஆனால் பனூ குஸாஆ மீது பனூ பக்கர் என்ற கோத்திரத்தவர்கள் தாக்குதல் நடத்திய போது அவர்களுக்கு குறைஷிகள் உதவிகளைச் செய்ய ஆரம்பித்தார்கள்.

பனூ குஸாஆ குறைஷிகள் மற்றும் பனூ பக்கர் கோத்திரத்தவர்களின் தாக்குதலுக்குப் பயந்து கஃபாவில் அடைக்கலம் புகுந்தும் பிரயோசனமின்றிப் போனது. எனவே, இப்னு சலீம் என்பவரை மதீனாவிற்குத் தூது அனுப்பி, முஸ்லிம்களின் உதவியைக் கோரிப் பெறுவது என்று முடிவெடுத்தார்கள். இந்த அடிப்படையில், இப்னு சலீம் மதீனா சென்று இறைத்தூதர் (ஸல்) அவர்களைச் சந்தித்ததோடு மட்டுமல்லாது, தங்களது நிலையைக் குறித்து ஒரு உருக்கமான பாடல் ஒன்றையும் பாடினார். அந்தப் பாடலின் வரிகளில் இழையோடிய சோகத்தையும், அவர்களது தேவையையும் உணர்ந்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ரமழான் மாதம் 8 ம் நாளன்று மக்காவை நோக்கிப் படையெடுக்க முடிவு செய்தார்கள்.

ரமழான் 10 ம் நாளன்று 10 ஆயிரம் தோழர்கள் புடைசூழ மக்காவிற்குள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பிரவேசித்தார்கள். இப்பொழுது, முஸ்லிம்களை எதிர்ப்பது என்பது வீண் வேலை என்றுணர்ந்த இறைத்தூதர் (ஸல்) அவர்களின் சிறிய தந்தையார் அப்பாஸ் அவர்கள், சமாதானம் செய்து கொள்ள இறைத்தூதர் (ஸல்) அவர்களை அணுகினார்கள். அப்பாஸ் அவர்களின் சமாதானத் தூதை ஏற்றுக் கொண்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள், மக்காவில் உள்ள அனைத்து முஸ்லிமல்லாதவர்களுக்கும் பொது மன்னிப்பு வழங்கினார்கள். ஆனால் சில நபர்களைக் குறித்து இறைத்தூதர் (ஸல்) அவர்கள், அவர்களுக்கு பொதுமன்னிப்பு கிடையாது என்றும், இன்னும் அவர்கள் கஃபாவின் திரைச்சீலையினால் சுற்றப்பட்டிருந்தாலும் அவர்களைக் கொன்று விடும்படிக் கூறினார்கள். ஏனெனில், கடந்த காலத்தில் அவர்கள் செய்த கொடுஞ் செயல்கள் மன்னிப்பின் எல்லையையும் கடந்த அநாகரிகச் செயலாக இருந்தது தான் அதன் காரணமாகும்.

கடந்த 13 ஆண்டுகளில் சொல்லொண்ணா துயரங்களை முஸ்லிம்களின் மீது கட்டவிழ்த்து விட்ட அவர்களுக்குத் தான் இன்று பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது. எந்த நகரில் இருந்து இறைத்தூதர் (ஸல்) அவர்கள் விரட்டப்பட்டார்களோ, அதே நகரில் இன்று ஆட்சியாளராக 10 ஆயிரம் தோழர்கள் புடை சூழ எதிர்ப்பின்றி பிரவேசிக்கும் வல்லமையை இறைவன் முஸ்லிம்களுக்கு வழங்கியிருந்தான்.

இப்பொழுது அபுபக்கர் (ரலி) அவர்கள் தனது தந்தையார் அபூ குஹஃபா அவர்களை இறைத்தூதர் (ஸல்) அவர்களின் முன் நிறுத்தி, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே..! எனது தந்தைக்கு இஸ்லாத்தினைப் பற்றி சற்று எடுத்துக் கூறுங்கள் என்று கேட்டுக் கொண்டார்கள்.

அபுபக்கரே..! இந்தப் பெரிய மனிதரை சங்கடத்திற்குள்ளாக்கி விட்டீர்களே..! என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறி விட்டு, அவரைத் தேடி நான் தான் போயிருக்க வேண்டும் என்றார்கள்.

இல்லை..! இறைத்தூதர் (ஸல்) அவர்களே..! அவர் தங்களைத் தேடி வந்திருப்பது தான் சிறந்தது என்றார், அபுபக்கர் (ரலி) அவர்கள்.

தனக்கு முன்பு நெருக்கமாக அபூ குஹாஃபா அவர்களை அழைத்து அமர வைத்துக் கொண்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள், அவரது நெஞ்சின் மீது தனது கையை வைத்து, அபூ குஹஃபா அவர்களே, இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கூறி, கலிமாவைக் கற்றுக் கொடுத்தார்கள்.

இப்பொழுது, இறைத்தூதர் (ஸல்) அவர்களின் இனிய நண்பரான அபுபக்கர் (ரலி) அவர்களின் தந்தையாரும், மக்காவின் வெற்றிக்குப் பின் இஸ்லாத்தினைத் தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டு விட்டார்கள்.



ஹுனைன் யுத்தம்

தபூக் யுத்தம், ரஜப் 9

(குறிப்பு : இரண்டையும் விரிவாக போர்க்களத்தில் நாயகம், என்ற நூலில் பார்வையிடவும்).



ஹிராக்ளியஸ்

அரேபியாவில் உள்ள கிறிஸ்தவர்களின் துணையுடன் ஹிராக்ளியஸ் மதீனாவின் மீது படையெடுக்கத் தயாராகிக் கொண்டிருக்கின்றான் என்ற செய்தி இறைத்தூதர் (ஸல்) அவர்களை அடைந்த பொழுது, தற்காப்புக்காக போர் செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு முஸ்லிம்கள் தள்ளப்பட்டார்கள். இப்பொழுது, மிகப் பெரிய வல்லரசை எதிர்த்துப் போர் புரியத் தயாராகிக் கொண்டிருந்த பொழுது, முஸ்லிம்களின் நிலையோ, மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இருந்தது. காரணம், அப்பொழுது மதீனாவில் பஞ்சம் தலைவிரித்தாடிக் கொண்டிருந்தது. எனவே, இந்தப் போரை ஜெய்ஸுல் யுஷ்ரா என்றழைக்கின்றனர். இன்னும் அந்த நேரத்தில் தான் பேரித்தம் பழங்கள் பழுத்துக் கொண்டிருந்தன, எனவே மதீனாவாசிகள் தங்களது நகரத்தை விட்டுச் செல்வதற்கும் மனமில்லாதிருந்தார்கள். இந்த இரண்டு சூழ்நிலைகளையும் பயன்படுத்திக் கொண்ட மதீனத்து நயவஞ்சகர்கள், முஸ்லிம்களின் மனதில் விஷ வித்துக்களை விதைக்க ஆரம்பித்தார்கள். எனினும், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தோழர்கள் இந்த கஷ்டங்களை எல்லாம் தாண்டி, தங்களது மன உறுதியை நிரூபித்துக் கொண்டிருந்தார்கள். தங்களது பொருள்களாலும், தியாகத்தாலும் இஸ்லாத்தின் மேன்மைக்கு சான்று பகர்ந்து கொண்டிருந்தார்கள்.

இன்னும் உமர் (ரலி) அவர்களோ, இந்த முறையாவது அபுபக்கர் (ரலி) அவர்களை மிஞ்சி விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டவர்களாக, தனது வீட்டிற்குச் சென்ற உமர்(ரலி) அவர்கள் தனது வாழ்நாள் சேமிப்பில் ஒரு பகுதியை எடுத்துக் கொண்டு வந்து இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம்,

இறைத்தூதர் (ஸல்) அவர்களே..! இதோ பெற்றுக் கொள்ளுங்கள். இந்தப் போருக்கான எனது பங்கை என்றார்கள்.

உமரே..! உமது வீட்டாருக்கு எதையேனும் மிச்சம் வைத்திருக்கின்றீர்களா? என்றார்கள். ஆம்! தங்களுக்குக் கொடுத்தது போல அவர்களுக்குத் தேவையான அளவு பொருட்களை வைத்து விட்டு வந்திருக்கின்றேன் என்றார்கள்.

இப்பொழுது அபுபக்கர் (ரலி) அவர்களின் முறை வந்தது..!

அபுபக்கர் அவர்களே..! தாங்கள் என்ன கொண்டு வந்தீர்கள்? இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். இதோ யாரசூலுல்லாஹ்..! என்று தான் கொண்டு வந்த செல்வத்தை இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் கொடுத்த பொழுது,

தங்களது குடும்பத்தாருக்காக எதனை விட்டு வந்திருக்கின்றீர்கள்? என்றார்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்கள்..!

ஆம்..! யா! ரசூலுல்லாஹ்..! அல்லாஹ்வையும், அவனது தூதர் (ஸல்) அவர்களையும் விட்டு வந்திருக்கின்றேன் என்றார்கள்..!

அதாவது, இந்த உலக வாழ்க்கைக்கான எதனையும் நான் விட்டு வரவில்லை, மாறாக, மறுமைக்கானவற்றையும், இறைவனுடைய பாதுகாப்பையும், அவனது தூதரது வழிமுறையையும் விட்டு வந்திருக்கின்றேன் என்றார்கள்.

அப்பொழுது, உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள் :-

இனி, எப்பொழுதும் நான் அபுபக்கர் (ரலி) அவர்களை மிஞ்சவே முடியாது என்றார்கள்.

தலைமை அலுவலகத்தின் தலைமைக் காரியதரிசியாகவும், மற்றும் உத்தரவுகள் பிறப்பித்தல், கொடியை தாங்கிக் கொள்ளுதல் போன்ற அனைத்துப் பணிகளும் அபுபக்கர் (ரலி) அவர்களுக்கு வழங்கப்பட்டது. 30 ஆயிரம் படை வீரர்களுடன் இஸ்லாமியப் படை தபூக் என்ற இடத்தை அடைந்தது. ஆனால் ஹிராக்ளியஸின் படை அதன் முகாமை விட்டும் ஒரு இஞ்ச் கூட நகர்ந்திருக்கவில்லை. ஜெருஸலத்தின் கவர்னராக இருந்த ஜான் என்பவர் முஸ்லிம்களிடம் வந்து சமாதான ஒப்பந்தம் கோரினார். சமாதான ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்ட பின் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மதீனா திரும்பினார்கள்.



ஹஜ்ஜுக்குத் தலைமை தாங்குதல்

துல்ஹஜ் 9 அன்று அபுபக்கர் (ரலி) அவர்களது தலைமையில், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களின் ஒரு குழுவினரை ஹஜ் செய்யும் நிமித்தமாக மக்காவுக்கு அனுப்பி வைத்தார்கள். இதன் மூலமாக முதன்முதலாக ஹஜ் சென்ற குழுவிற்கு தலைமைப் பொறுப்பேற்ற நற்பேற்றை இஸ்லாமிய வரலாற்றில் தக்க வைத்துக் கொண்ட பெருமை அபுபக்கர் (ரலி) அவர்களைச் சாரும். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சார்பாக 20 பலிப்பிராணிகளையும், தனது சார்பாக ஐந்து பலிப்பிராணிகளையும் இன்னும் 300 தோழர்களுடன் மக்காவை நோக்கி ஹஜ் செய்யும் நிமித்தம் அபுபக்கர் (ரலி) அவர்களது தலைமையில் முஸ்லிம்கள் ஹஜ் செய்யச் சென்றனர்.

இந்த வருடத்தில் முஸ்லிம்களுடன், இணைவைப்பாளர்களும் இணைந்து ஹஜ்ஜை நிறைவேற்றினார்கள். இந்த வருடத்திற்குப் பின்பு, இணைவைப்பாளர்கள் ஹரம் பகுதிக்குள் நுழைவதற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள். இந்த சமயத்தில் தான் அலி (ரலி) அவர்கள் சூரா அல் பராஅத் தின் வசனங்களை உரத்த குரலில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சார்பாக முழங்கிக் கொண்டு வந்தார்கள்.



இறைத்தூதர் (ஸல்) அவர்களின் இறுதி வாழ்வு, 12 ரபிய்யுல் அவ்வல்

ஹிஜ்ரி 10 ஆம் ஆண்டு இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ஹஜ்ஜத்துல் விதா என்ற இறுதி ஹஜ்ஜை நிறைவேற்றியதன் பின்னால், மதீனா திரும்பிய நாளில் இருந்து, அதாவது ஸஃபர் மாதம் இறுதி அல்லது ரபிய்யுல் அவ்வல் மாதத்தின் ஆரம்ப நாட்களில் இருந்து சுகவீனத்திற்கு ஆளானார்கள். அதுவே அவர்களது இறுதி வாழ்வுக்கான ஆரம்பமாகவும் இருந்தது.

ஒருநாள் நடுஇரவின் பொழுது தனது அடிமையான அபூ முவைஹபா அவர்களையும் அழைத்துக் கொண்டு ஜன்னத்துல் பக்கியை நோக்கிச் சென்ற இறைத்தூதர் (ஸல்) அவர்கள், இறைவனின் கட்டளைப்படி அங்கே அடக்கமாகி இருக்கின்ற தனது உறவினர்களுக்காகவும் மற்றும் தனது தோழர்களுக்காகவும் பிரார்த்தனை செய்தார்கள்.

ஜன்னத்துல் பக்கீயின் மத்தியில் நின்று கொண்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள்,

மண்ணறைவாசிகளே..! உங்கள் மீது சாந்தி உண்டாகட்டுமாக..! இங்கே உயிருடன் வாழ்ந்து கொண்டிருப்பவர்களைக் காட்டிலும் உங்களது நிலை மிகவும் மேலானது. சோதனைகள் இருளின் ஒரு பகுதியைப் போன்று வந்து கொண்டிருக்கின்றன.

அதன் பின்பு தனது அடிமையான முவைஹபா அவர்களின் பக்கம் திரும்பிய இறைத்தூதர் (ஸல்)அவர்கள்,

இந்த உலகத்தின் முடிவில்லாத வாழ்வும் அதன் வளங்களின் திறவுகோள்கள் ஒரு கையிலும், இன்னும் சுவனம் இன்னுமொரு கையிலும் எனக்கு வழங்கப்பட்டு, இவற்றிற்கிடையே எனது விருப்பம் முன்வைக்கப்பட்டுள்ளது. நான் எனது இறைவனின் சங்கையான முகத்தையும், சுவனத்தையும் தேர்வு செய்து விட்டேன் என்றார்கள்.

அபூ முவைஹபா அவர்களோ..! இறைத்தூதர் (ஸல்) அவர்களே..! இந்த உலக வாழ்க்கையையும், அதன் வளங்களையும் பெற்றுக் கொள்ளுங்களேன் என்றார்கள்..!

இல்லை..! இல்லை..! நான் எனது இறைவனின் சங்கையான முகத்தையும், சுவனத்தையும் தேர்வு செய்து விட்டேன் என்றார்கள்.

அதன் பின் அங்கு அடக்கம் செய்யப்பட்டிருப்பவர்களுக்காக தொழுது விட்டு, அவர்களுக்காகப் பிரார்த்தனையும் செய்து விட்டுத் திரும்பினார்கள்.

வீட்டிற்குத் திரும்பி வந்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள், அங்கு ஆயிஷா (ரலி) அவர்களுக்கு தலைவலி கண்டிருக்கக் கண்டார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கும் தலைவலி ஆரம்பமாகியது.

ஆயிஷாவே..! எனக்கும் தலைவலி வேதனை எடுக்கின்றது..! என்று கூறினார்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்கள். அப்பொழுது ஆரம்பித்த தலைவலி நேரம் செல்லச் செல்ல உயர்ந்து கொண்டே சென்றது.

இந்த அளவு வேதனையிலும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள், தனது மனைவிமார்களிடம் செல்லக் கூடிய நாட் கணக்கின் படி தவறாது, ஒவ்வொருவரது இல்லத்திற்கும் சென்று வந்தார்கள்.

இப்பொழுது, வேதனையின் உச்சத்தில் இருந்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள், தனது மனைவிமார்கள் அனைவரையும் அழைத்து, தனது இறுதிக் காலத்தை ஆயிஷா (ரலி) அவர்களது இல்லத்தில் தங்கிக் கொள்ள அனுமதி கேட்டார்கள். அவர்களும் சம்மதம் தெரிவித்து விடவே, அலி (ரலி) அவர்களது தோளில் ஒரு கையையும், ஃபழ்ல் பின் அப்பாஸ் (ரலி) அவர்களது தோளில் ஒரு கையையும் போட்டுக் கொண்டு, ஆயிஷா (ரலி) அவர்களது வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள்.

தலைவலியிலிருந்து சற்று நிவாரணம் பெற தலையில் சிறு துண்டை வைத்து கட்டப்பட்டது, இருந்தும் மிகவும் பலவீனமான நிலைக்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சென்று கொண்டிருந்தார்கள். எனவே, நடக்க இயலாத அவர்களது பாதங்கள், தரையில் இழுபட்டுக் கொண்டிருந்த நிலையிலேயே ஆயிஷா (ரலி) அவர்களது இல்லம் வந்து சேர்ந்தார்கள்.

சுகவீனமுற்றிருந்த இந்த நிலையிலேயே ஒருநாள், பள்ளிவாசலுக்கு வருகை தந்திருந்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள், மிம்பரில் அமர்ந்தவாறு உஹதுப் போரில் இறந்து போன தனது தோழர்களுக்காக பிரார்த்தனை புரிந்தார்கள்.

பின் அங்கு கூடியிருந்த மக்களிடம் உரையாற்ற ஆரம்பித்தார்கள் :

இறைவன் தனது அடிமைகளில் ஒருவரிடம் இந்த உலக வாழ்க்கையின் வளங்கள், இன்னும் அவனிடம் மீளுதல் இவற்றில் ஒன்றைத் தேர்வு செய்யும்படிக் கூறினான், அந்த அடியான், தனது இறைவனிடம் மீளுவதையே தேர்ந்தெடுத்துக் கொண்டார் என்று கூறினார்கள்.

தனது உற்ற தோழர், ஆருயிர் நண்பர் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் திருவதனங்களில் இருந்து வந்த அந்த வார்த்தையின், அர்த்தப் பொருள் என்ன என்பதை சொல்லாமலேயே விளங்கிக் கொண்ட அபுபக்கர் (ரலி) அவர்களின் கன்னங்களில் இருந்து நீர் முத்துக்கள் உருண்டோடிக் கொண்டிருந்தன.

இறைத்தூதர் (ஸல்) அவர்களே..! நாங்கள் எங்களைத் தங்களுக்காக அற்பணம் செய்யக் காத்திருக்கின்றோம், இன்னும் எங்களது பெற்றோர்களையும் கூட..! என்றார்கள் அபுபக்கர் (ரலி) அவர்கள்.

தோழரே..! உங்களை நீங்கள் ஆசுவாசப்படுத்திக் கொள்ளுங்கள் என்றார்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள்.

பின்பு, இந்தப் பள்ளிக்குள் மக்கள் நுழைவதற்காகத் திறந்து வைக்கப்பட்டிருக்கின்ற அனைத்து வழிப் பாதைகளையும் அடைத்து விடுங்கள், அபுபக்கர் (ரலி) அவர்களது வீட்டிலிருந்து வருகின்ற பாதையைத் தவிர என்று கூறினார்கள். அபுபக்கர் அவர்களை விட உதவிகரமாக இருந்த ஒருவரை நான் அறியமாட்டேன் என்றும் கூறினார்கள்.

எனக்கு உற்ற தோழர் ஒருவரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படிப் பணிக்கப்பட்டால், நான் அபுபக்கர் அவர்களைத் தான் தேர்ந்தெடுப்பேன் என்றார்கள். இந்தத் தோழமையும், சகோதரத்துவமும் இறைநம்பிக்கையினால் விளைந்ததுவாகும், இவை யாவும் இறைவன் நம்மை ஒன்று கூட்டும் நாள் வரைத் தொடர வேண்டும் என்றும் பிரார்த்தித்தார்கள்.

அதன் பின் முஹாஜிர்களை நோக்கி, முஹாஜிர்களே..! அன்ஸார்கள் செய்திருக்கின்ற உதவிகளை எண்ணிப் பார்த்துக் கொள்ளுங்கள், அவர்களது உதவிக்கு நீங்கள் கடன் பட்டுள்ளீர்கள் என்ற பொருள்பட கூறினார்கள்.

பின்பு இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு நோயின் கடுமை அதிகமாகியது. எனவே, அபுபக்கர் (ரலி) அவர்களையே தொழுகையை முன்னின்று நடத்துமாறு கேட்டுக் கொண்டார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, எனது தந்தை இளகிய மனம் படைத்தவர், திருமறைக் குர்ஆனை ஓதும் போது அவருக்கு அழுகை வந்து விடும். எனவே, பின் நிற்பவர்கள் திருமறைக்குர்ஆனை சரியாகச் செவி மடுக்க முடியாது, எனவே, அவருக்குப் பதில் வேறு ஒருவரை நியமியுங்கள் என்று கூறினார்கள். ஆனால், ஆயிஷா (ரலி) அவர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள், மீண்டும் அபுபக்கர் (ரலி) அவர்களையே தொழ வைக்கும்படி ஏவினார்கள். மீண்டும் ஆயிஷா (ரலி) அவர்கள் வலியுறுத்தியும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அபுபக்கர் (ரலி) அவர்களையே தொழ வைக்கும்படி உத்தரவிட்டார்கள்.

அப்பொழுதிலிருந்து, வியாழன் இரவுத் தொழுகையிலிருந்து இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உயிருடன் இருந்து நோய்வாய்ப்பட்ட காலத்தில் இருந்து மரணமாகும் வரைக்கும் 17 நேரத் தொழுகைகளை இமாமாக முன்னின்று அபுபக்கர் (ரலி) அவர்கள் நடத்தியுள்ளார்கள்.

ஞாயிற்றுக் கிழமை காலையில் தனது அறையில் இருந்து வெளியில் வந்த இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தலையில் துண்டு கட்டப்பட்டிருந்தது. அப்பொழுது அபுபக்கர் (ரலி) அவர்களது தலைமையில் தனது தோழர்கள் கூட்டுத் தொழுகையை நிறைவேற்றிக் கொண்டிருப்பதைக் கண்ட இறைத்தூதர் (ஸல்) அவர்களின் முகம் சந்தோஷத்தால் மலர்ந்தது. அவர்கள் முன்னோக்கி வரவும், இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு தோழர்கள் வழி விட்டு ஒதுங்கினார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வருவதை அறிந்து கொண்ட அபுபக்கர் (ரலி) தனது தலைமை தாங்கி தொழுகை நடத்திக் கொண்டிருப்பதில் இருந்து பின்வாங்கி, இறைத்தூதர் (ஸல்) அவர்களை இமாமாக முன்னிறுத்த முயன்ற பொழுது, தடுத்து நிறுத்திய இறைத்தூதர் (ஸல்) அவர்கள், அபுபக்கர் (ரலி) அவர்களையே தொழுகையை முன்னின்று நடத்துமாறு பணித்தார்கள். அபுபக்கர் (ரலி) அவர்களின் வலது பக்கத்தில் அமர்ந்தவாறு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை நிறைவேற்றினார்கள்.

அந்தத் தொழுகை நடந்து முடிந்த பின், உயர்ந்த தொனியில் பள்ளியை விட்டும் வெளியில் கேட்கும் அளவுக்கு அதிக அளவு சப்தத்துடன் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது தோழர்கள் முன் உரையாற்றினார்கள்.

எனது மக்களே..! நெருப்பு மூட்டப்பட்டு விட்டது, சோதனைகள் இருளின் ஒருபகுதியைப் போல வந்து கொண்டிருக்கின்றன.



அண்ணல் நபி (ஸல்) மேலும் நவின்றார்கள்:-

'அனைவரையும் விட அதிகமாக எவருடைய செலவத்திற்கும் நட்புக்கும் நான் கடமைப்பட்டிருக்கின்றேனே அவர் அபூபக்ரு (ரலி) அவர்களாவார். நான் உலகின் என் சமுதாயத்தவரிலிருந்து எவராவது ஒருவரை என் நண்பனாக ஆக்கிக் கொள்ள முடியுமென்றால் அபூபக்ரையே எடுத்துக் கொள்வேன். ஆனால் இஸ்லாத்தின் உறவே நட்புக்கு போதுமானதாகும்.

ஆம்! செவி சாயுங்கள்! உங்களுக்கு முன் வாழ்ந்த சமுதாயங்கள் தம் இறைத்தூதர்கள் மற்றும் பெரியார்களின் மண்ணறைகளை வணக்கஸ்தலங்களாக ஆக்கிக் கொண்டார்கள். இதோ பாருங்கள். நீங்கள் அத்தகைய நடத்தைளை மேற்கொள்ளக் கூடாது. நான் உங்களை அதனை விட்டும் தடுத்துவிட்டுச் செல்கின்றேன்”.

மேலும் கூறினார்கள்:

'ஹலால், ஹராம் (ஆகுமானது, தடுக்கப்பட்டது) என்னும் கட்டளைகளை நானே பிறப்பித்ததாக் கருதி என்னுடன் இணைத்தப் பேசாதீர்கள். இறைவன் அகுமாக்கியுள்ளவற்றையே நான் ஆகுமாக்கியுள்ளேன். அவன் தடை செய்தவற்றையே நான் தடை செய்துள்ளேன்.”

நோய் வாய்ப்பட்ட இதே நிலையில் ஒருநாள் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தம் குடும்பத்தாரை நோக்கி கூறினார்கள்:

'இறைத்தூதரின் மகளான ஃபாத்திமாவே! இறைத்தூதரின் அத்தையான சபிய்யாவே! இறைவனிடம் உங்களுக்குப் பயன்படும் எந்த நற்செயலாது செய்து கொள்ளுங்கள். நான் உங்களை இறைவனின் தண்டனையிலிருந்து காப்பாற்றிட முடியாது.”

ஒருநாள் நோயின் கடுமை அதிகமாக இருந்தது. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தம் முகத்தில் போர்வையைப் போட்டுக் கொள்வார்கள். பிறகு எடுத்து விடுவார்கள். இந்த நிலையில் ஆயிஷா (ரலி) அவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் திருநாவிலிருந்து பின்வரும் சொற்களைச் செவியுற்றார்கள்.

'யூதர்களின் மீதும் கிறஸ்தவர்களின் மீதும் இறைவனின் சாபமுண்டாகட்டும்! அவர்கள் தங்கள் இறைத்தூதர்களின் மண்ணறைகளை வணக்கஸ்தளங்களாக்கின் கொண்டார்கள்.”

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம் எப்போதோ ஒரு முறை சில பொற்காசுகளைக் கொடுத்து வைத்திருந்தார்கள். அந்த அமைதியற்ற நிலையிலேயே ஒருமுறை, 'ஆயிஷாவே! அந்தப் பொற்காசுகள் எங்கே?” என்று வினவினார்கள். 'முஹம்மத் இறைவனின் பரிபாலிக்கும் ஆற்றலைக் குறித்து ஐயங்கள் கொண்டவனாக, அவனைச் சந்திப்பது விருப்பத்தக்கதா? உடனே அந்தப் பொற்காசுகளை இறைவழியில் தருமம் செய்து விடு!” என்று ஆணையிட்டார்கள்.



பேரருளானை நோக்கி...

நோய் சில வேளைகளில் அதிகரிப்பதும் சில வேளைகளில் குறைவதுமாக இருந்தது. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் வாழ்வின் இறுதிநாளான திங்கட்கிழமையன்று காலையில் அவர்கள் நோய் சற்று தளர்ந்ததாகத் தென்பட்டது. ஆனால் நேரம் செல்லச் செல்ல அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அடிக்கடி மூர்ச்சையானார்கள்.

இந்த நிலையில் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் திருநாவிலிருந்து, 'அல்லாஹ் எவர்கள் மீது தன் அருளைப் பொழிந்தானோ அவர்களுடன்” என்னும் சொற்களை அடிக்கடி வெளிப்பட்ட வண்ணமிருந்தன. சிலவேளை, 'இறைவா! நீயே உயர்ந்த நண்பன்!” என்று கூறியவண்ணமிருந்தார்கள். சில வேளைகளில் 'இப்போது வேறு எவருமில்லை. அந்த உயர்ந்த நண்பனே தேவை!” என்று கூறிய வண்ணமிருந்தார்கள், இவ்வாறெல்லாம் பிரார்த்தித்த வண்ணம் இருந்தார்கள. பின்னர் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் புனித ஆத்மா பிரிந்தது.

அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வபாரிக்க வஸல்லம்

அல்லாஹ்வே, முஹம்மத் மீது அருள் வளம் பொழிவாயாக! அவருக்கு சாந்தி வழங்குவாயாக!

ஹிஜ்ரி 11-ல் ரபிய்யுல் அவ்வல் மாதத்தில் பெருமானார் (ஸல்) அவர்கள் மரணித்தார்கள். மரணித்த நாள் திங்கட் கிழமை ஆகும்.

அடுத்த நாள் அவர்களின் உடல் குளிப்பாட்டி கபனிடப்பட்டது. மாலை நேரத்திற்குள் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் திருவுடல் அவர்கள் மரணித்த அதே அறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

'நீரும் மரணிப்பவரே! அவர்களும் மரணிக்கக் கூடியவர்களே!” (39 : 30)

(பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, 'நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்” என்று கூறுவார்கள்.( 2:156).



குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறந்து விட்டார்கள் என்ற செய்தியைக் கேள்விப்பட்ட அபுபக்கர் (ரலி) அவர்கள், தனது குதிரையில் ஏறி இறைத்தூதர் (ஸல்) அவர்களது இல்லத்திற்கு விரைந்தார்கள். அப்பொழுது, உமர் (ரலி) அவர்கள் பள்ளியில் நின்று மக்கள் முன் உரையாற்றிக் கொண்டிருந்த நிகழ்ச்சிகள் எதனையும் கண்டு கொள்ளாத அபுபக்கர் (ரலி) அவர்கள், நேராக இறைத்தூதர் (ஸல்) அவர்களது உடல் வைக்கப்பட்டிருந்த அறைக்குச் சென்றார்கள். அவர்களை மூடியிருந்த போர்வையை நீக்கி விட்டு, அந்த மலர் வதனத்தில் முத்தமிட்ட அபுபக்கர்(ரலி) அவர்களின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடிக் கொண்டிருந்தது.

இறைத்தூதர் (ஸல்) அவர்களே..! எனது தாயும் தந்தையும் உங்களுக்கு அற்பணமாகட்டும்..! உங்களது வாழ்வும் புனிதமாக இருந்தது..! இன்னும் உங்களது மரணமும் புனிதமானதே..! என்றார்கள்.

இறைவன் தனது அடியாரின் மீது தேர்ந்தெடுத்துக் கொண்ட அந்த மரணத்தை நீங்கள் சுவைத்துக் கொண்டு விட்டீர்கள். இனி எப்பொழுதும் நீங்கள் மரணிக்க மாட்டீர்கள்..!

இந்த புகழாரங்களைச் சூட்டி விட்டு, இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மலர் வதனத்தைப் போர்வையால் மூடி வைத்து விட்டு, வெளியே வந்தார்கள். அங்கே உமர் (ரலி) அவர்கள் தன்னைச் சுற்றி நிற்பவர்களிடம் இவ்வாறு உரையாற்றிக் கொண்டிருந்தார்கள் :

இங்கே இருக்கும் நயவஞ்சகர்கள் சிலர் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறந்து விட்டதாகக் கூறுகின்றார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறக்கவில்லை. மூஸா (அலை) அவர்கள் இறைவனிடம் சென்றிருப்பது போல் சென்றுள்ளார்கள். ஆனால் அவர்கள் தனது இறைவனிடம் சென்றிருப்பதை வைத்து, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இறந்து விட்டதாகக் கூறுகின்றார்கள். மூஸா (அலை) அவர்கள் எவ்வாறு நாற்பது நாட்கள் கழித்துத் திரும்பி வந்தார்களோ, அவ்வாறே இறைத்தூதர் (ஸல்) அவர்களும் திரும்பி வருவார்கள் என்று கூறிக் கொண்டிருந்தார்கள்.

இதனைச் செவிமடுத்த அபுபக்கர் (ரலி) அவர்கள், உமரே..! நிறுத்துங்கள்..! அமைதியாக இருங்கள்..! உங்களை நீங்கள் முதலில் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.

பின்பு இறைவனைப் புகழ்ந்தவர்களாக..!

கேட்டுக் கொள்ளுங்கள்..! தோழர்களே..! நிச்சயமாக..! யார் முஹம்மதை வணங்கிக் கொண்டிருந்தார்களோ, அறிந்து கொள்ளுங்கள்..! முஹம்மதும் இறந்து போகக் கூடியவரே..! யார் அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருந்தார்களோ...! அறிந்து கொள்ளுங்கள்..! அவனே நித்திய ஜீவன், அவனுக்கு இறப்பென்பதே கிடையாது..! என்று கூறி விட்டு, கீழ்க்கண்ட இறைவசனத்தை ஓத ஆரம்பித்தார்கள்..

முஹம்மது(ஸல்) (இறைவனின்) தூதரே அன்றி(வேறு) அல்லர். அவருக்கு முன்னரும் (அல்லாஹ்வின்) தூதர்கள் பலர் (காலம்) சென்றுவிட்டார்கள்;. அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டால்; நீங்கள் உங்கள் குதிகால்களின் மேல் (புறங்காட்டித்) திரும்பி விடுவீர்களா? அப்படி எவரேனும் தம் குதிகால்கள்மேல் (புறங்காட்டி) திரும்பி விடுவாரானால் அவர் அல்லாஹ்வுக்கு எவ்விதத் தீங்கும் செய்துவிட முடியாது. அன்றியும், அல்லாஹ் நன்றியுடையோருக்கு அதிசீக்கிரத்தில் நற்கூலியை வழங்குவான். (3:143)

மேற்கண்ட இறைவசனத்தை ஓதிக்காட்டிய பின்பு, தோழர்கள் தங்களது நிலையை உணர்ந்தவர்களாகக் கூறினார்கள், இப்பொழுது தான் இந்த வசனம் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு அருளியது போன்றிருக்கின்றது என்பதை நாங்கள் அப்பொழுது உணர்ந்து கொண்டோம் என்று கூறினார்கள்.

அப்பொழுது உமர் (ரலி) அவர்களின் நிலை எவ்வாறிருந்தது என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :

அபுபக்கர் (ரலி) அவர்களிடமிருந்து இந்த வசனத்தைக் கேட்ட உமர் (ரலி) அவர்களது பாதங்கள் நிலைகுலைய ஆரம்பித்தன, அவரால் சரியாக நிற்கக் கூட முடியாத அளவுக்கு தள்ளாடிய உமர் (ரலி) அவர்கள், நிலைகுலையாத அந்த மனிதர் நிலத்தில் சாய்ந்தே விட்டார், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறந்து விட்டார்கள் என்பதை அபுபக்கர் (ரலி) அவர்கள் ஓதிக்காட்டிய அந்த வசனம் உமர் (ரலி) அவர்களைத் தெளிவு பெறச் செய்தது.

மேற்கண்ட சம்பவத்தைப் பற்றி தனது ஆட்சியின் பொழுது ஒருநாள் அப்துல்லா இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் நினைவு கூர்ந்த உமர் (ரலி) அவர்கள், மேற்கண்ட 2:143 (நாம் உங்களை ஒரு நடு நிலையுள்ள உம்மத்தாக (சமுதாயமாக) ஆக்கியுள்ளோம்; (அப்படி ஆக்கியது) நீங்கள் மற்ற மனிதர்களின் சாட்சியாளர்களாக இருப்பதற்காகவும், ரஸூல் (நம் தூதர்) உங்கள் சாட்சியாளராக இருப்பதற்காகவுமேயாகும்;)வசனத்தின் மூலம், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எப்பொழுதும் வாழ்ந்து கொண்டிருக்கக் கூடியவர்களே..! என்று தான் நான் எண்ணிக் கொண்டிருந்தேன் என்று கூறினார்கள்.

தேர்தல்

இப்பொழுது இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பள்ளியில் அன்ஸார்கள் ஒன்று கூடி இருந்து கொண்டிருந்த பொழுது, அபுபக்கர் (ரலி) அவர்களிடம் ஒருவர் வந்து, அன்ஸார்கள் இப்பொழுது சகீஃபா பனீ சஃதா வில் திரண்டிருக்கின்றார்கள், அவர்கள் அங்கு அடுத்த கலீஃபா யார் என்பது பற்றி பேசிக் கொண்டிருக்கின்றார்கள், நிலைமை முற்றி அதன் பின் நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, இப்பொழுதே சென்று அங்குள்ள முஸ்லிம்களைப் பாதுகாப்பதற்குண்டான நடவடிக்கையை எடுங்கள் என்று அந்த மனிதர் கூறினார்.

நிலைமையின் விபரிதத்தை உணர்ந்து கொண்ட உமர் (ரலி) அவர்கள், அபுபக்கர் அவர்களே..! நாம் இப்பொழுதே சென்று நமது சகோதரர்களான அன்ஸார்களைச் சந்திப்போம் என்று ஆலோசனை கூறினார்கள். அதன்படியே, இருவரும் அந்த இடத்திற்கு விரைந்தார்கள். செல்லும் வழியில் அபூ உபைதா (ரலி) அவர்களும் இவர்களுடன் இணைந்து கொண்டார்கள். இதற்கிடையில் இரண்டு அன்ஸார்கள் இவர்களை வழியில் சந்தித்தார்கள், அவர்கள் இவர்களை நோக்கி நீங்கள் எங்கு செல்கின்றீர்கள் எனக் கேட்டார்கள், அதற்கு உமர் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள். அப்பொழுது அவர்கள் நீங்கள் அங்கு போவதற்குப் பதிலாக திரும்பி விடுவதே மேல், அன்ஸாரிகளாகிய அவர்கள் தங்களது பிரச்னைகளைத் தாங்களே தீர்த்துக் கொள்ளட்டும் என்று ஆலோசனை கூறிய பொழுது, இல்லை, சத்தியமாக நாங்கள் அந்த இடத்திற்குச் சென்றே தீருவோம் என்று உமர் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள்.

இனி பனீ சகீஃபா வில் என்ன நடக்கின்றது என்பதைப் பற்றிப் பார்ப்போம். கூட்டம் திரண்டிருந்த அந்த இடத்தில், சஅத் பின் உபைதா அவர்கள் தனது ஆரம்ப உரையை நிகழ்த்த ஆரம்பித்தார்கள்.

இறைவனைப் புகழ்ந்தவர்களாக, ஓ..! அன்ஸாரிகளே..! இஸ்லாத்தைப் பொறுத்தவரை நீங்கள் அனைத்து விஷயங்களில் முதன்மை பெற்றவர்களாக இருக்கின்றீர்கள், அரேபியாவில் இருக்கக் கூடிய மற்ற அனைத்து குலங்களை விடவும் இஸ்லாத்தின் மேன்மையை உயர்த்திய பெருமை பெற்றவர்களாகவும் இருக்கின்றீர்கள். இன்னும் முஹம்மது (ஸல்) அவர்கள் இஸ்லாத்தின் தூதுத்துவப் பிரச்சாரத்தை அந்த மக்கத்துக் குறைஷிகளிடம் பத்து வருடங்கள் எடுத்து வைத்த போதும், ஒரு சிலரே இந்த சத்தியத்தை ஏற்க முன்வந்தார்கள், இன்னும் பலர் தங்களது பழைய மதத்திலேயே தொடர்ந்து இருந்து வந்த நிலையில், இன்னும் சிலர் இஸ்லாத்தைத் தழுவினாலும் இஸ்லாம் வலுவானதொரு நிலைக்கு வரவில்லை. ஏன் இறைத்தூதர் (ஸல்) அவர்களைப் பாதுகாக்கும் வலிமையைக் கூட பெற்றிருக்கவில்லை, இன்னும் இஸ்லாத்தின் பெருமைகளை உயர்த்த இயலவில்லை, இன்னும் அடக்குமுறையாளர்களின் அடக்குமுறைகளை அடக்கி ஒடுக்கவும் இயலாத நிலையிலேயே இருந்த நிலையில், அல்லாஹ்வின் மீதும் அவனது தூதர் (ஸல்) அவர்கள் மீதும் நம்பிக்கை கொள்ள வைத்ததன் மூலம், அல்லாஹ் உங்களைக் கொண்டு இந்த மார்க்கத்தின் உன்னதத்தை மற்றவர்களுக்கு விளங்கப்படுத்தினான், மேன்மைப்படுத்தினான். இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்களையும், அவர்களது தோழர்களையும் பாதுகாக்கும் பொறுப்பையும் வழங்கியதோடு, இஸ்லாத்தின் கண்ணியத்தை மேன்மையுறச் செய்யும் பொறுப்பையும் உங்களிடம் வழங்கினான், இன்னும் சத்திய மார்க்கத்திற்கு எதிராக போர் தொடுத்த எதிரிகளுக்கு பாடம் கற்பிக்கும் வீரத்தையும் உங்களிடமிருந்து எழும்பச் செய்தான். உங்களது அந்த வீரத்தின் தாக்கமானது எதிரிகளுக்கு கடும் அச்சத்தை ஊட்டியது, அவர்கள் உங்களைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அல்லது வெளிதேசத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்களை நீங்கள் இஸ்லாத்தின் எதிரிகளாகக் கணித்தே எதிர்த்து வந்த, போர் செய்த பெருமைக்குரியவர்களாக இருந்தீர்கள். இதன் மூலம் அரேபியாவானது விரும்பியோ அல்லது விரும்பாமலோ இறைவனின் கட்டளைக்கு சிரம் தாழ்த்தியது. உங்களுடைய வாளின் வலிமையானது அவர்களை மண்டியிட வைத்தது, இதன் மூலம் முழு அரேபியாவும் உங்களுக்கு கட்டுப்பட்டு வரக் கூடிய நிலைமையும் உருவாகியது. இப்பொழுது இறைவனின் கட்டளைப் பிரகாரம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மரணமடைந்து விட்டார்கள், எதில் நீங்கள் இப்பொழுது விவாதம் செய்து கொண்டிருக்கின்றீர்களோ (அதாவது கிலாபத்தைப் பற்றி) அதில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உங்களைப் பொறுத்தவரை முழு திருப்திப்பட்டவர்களாகத் தான் இருந்தார்கள். இது உங்களுடைய உரிமையும் கூட, மற்றவர்களைப் போல அல்ல என்று கூறி விட்டு உரையை முடித்தார்கள்.

உபைதா அவர்களின் உரையைச் செவிமடுத்த மக்கள், நீங்கள் எங்களது தலைவராகவும் இருக்கின்றீர்கள், இறைநம்பிக்கை மிக்கவராகவும் இருக்கின்றீர்கள், உங்களது அறிவுரையை நாங்கள் கேட்டுக் கொள்கின்றோம், அதன்படிச் செயல்படவும் தயாராக இருக்கின்றோம் என்று கூறினார்கள். இந்த உரைக்குப் பின் மீண்டும் ஆலோசனை துவங்கிய பொழுது, ஒருவர் கேட்டார்,

சத்திய மார்க்கத்தை ஏற்றுக் கொண்டவர்களில் முதன்மையானவர்களாகவும், இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர்களாகவும் இருக்கின்ற தகுதியை வைத்து, அவர்கள் அதாவது முஹாஜிர்கள் தலைமைப் பொறுப்பு தங்களுக்குத் தான் வர வேண்டும் என்று விரும்பினால், அதற்கு என்ன பதிலை வைத்துள்ளீர்கள் என்ற கேள்வியைக் கேட்டார்.

அங்கிருந்த ஒரு அன்ஸார் கூறினார், நம்மிடையே ஒருவர் அமீராக இருப்பது போல, அவர்களுக்கு ஒருவர் அமீராக இருப்பார், எந்த நிபந்தனைகளையும் நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர் மேலும் கூறினார்.

அன்ஸார்கள் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும் நிலையில் அபுபக்கர் (ரலி) அவர்களும், உமர் (ரலி) அவர்களும், உபைதா (ரலி) அவர்களும் அந்த அவைக்குள் நுழைகின்றார்கள். அன்ஸார்கள் தங்களுக்குள் மிகப் பெரிய விவாதங்களை நடத்திக் கொண்டிருக்கும் நிலையில், ஒருவர் மட்டும் தன்னைத் துணியால் போர்த்திக் கொண்டவராக படுத்திருந்தார். யார் அவர் என்று உமர் (ரலி) அவர்கள் விசாரித்த பொழுது, அவர் தான் சஅத் பின் உபைதா (ரலி) அவர்கள் என்று பதில் கொடுக்கப்பட்டது. அவர் ஏன் இவ்வாறு படுத்திருக்கின்றார்? என்று கேட்கப்பட்ட போது, அவர் சுகவீனமாக இருக்கின்றார் என்று கூறப்பட்டது.

இதனை அடுத்து வந்த அந்த மூவரும் அவையில் உட்கார்ந்த பிறகு, அன்ஸார்களில் ஒருவர் எழுந்து கலீபாவாக தேர்ந்தெடுக்கப்படுவதில் அன்ஸார்களின் முன்னுரிமை என்னவென்பதைப் பற்றிப் பேசினார். அவருக்கு அடுத்துப் பேசிய பலரும் இதே தொணியில் தான் பேசி விட்டுச் சென்றார்கள்.

இப்பொழுது உமர் (ரலி) அவர்கள் தான் பேச விரும்புவதற்கு எழும்ப முயன்ற பொழுது, அபுபக்கர் (ரலி) அவர்கள் அவரைத் தடுத்து விட்டு, தானே பேசப் போவதாகக் கூறி எழுந்தார்கள்.

இறைவனைப் புகழ்ந்து விட்டு, அல்லாஹ் முஹம்மது (ஸல்) அவர்களைப் படைத்து, அவரது தோழர்களான நமக்கு வழி காட்ட அனுப்பி வைத்தான், அதன் மூலம் அல்லாஹ்வின் அடிமைகள் அவனை வணங்க வேண்டும் என்பதற்காகவும், இன்னும் தவ்ஹீத் என்று சொல்லக் கூடிய ஏகத்துவம் என்ற தத்துவத்தை ஏற்றுப் பின்பற்றுவார்கள் என்பதற்காகவும் தன் தூதரை நம்மிடையே அனுப்பி வைத்தான்.

இஸ்லாத்தின் வருகைக்கு முன்னர் மக்கள் பல நூறு தெய்வங்களை வணங்கி வந்தார்கள், அந்தத் தெய்வங்களிடம் தங்களது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளப் பிரார்த்தித்தார்கள், இன்னும் அந்த தெய்வங்கள் யாவும் கல்லிலும், மரத்திலும் வடிக்கப்பட்டவையாக இருந்த நிலையிலும், அறிந்தே இந்தத் தவறைச் செய்து வந்தார்கள். தனது இந்த பேச்சிற்கு ஆதாரமாகக் கீழ்க்கண்ட இறைவசனத்தையும் அபுபக்கர் (ரலி) அவர்கள் அந்த அவையினருக்கு கோடிட்டுக் காட்டினார்கள்.

தங்களுக்கு (யாதொரு) நன்மையோ தீமையோ செய்ய இயலாத அல்லாஹ் அல்லாதவற்றை (முஷ்ரிக்குகள்) வணங்குகிறார்கள்; இன்னும் அவர்கள், ''இவை எங்களுக்கு அல்லாஹ்விடம் மன்றாட்டம் செய்பவை”” என்றும் கூறுகிறார்கள்; (10:18)

''அவர்கள் எங்களை அல்லாஹ்வின் அருகே சமீபமாகக் கொண்டு செல்வார்கள் என்பதற்காகவே யன்றி நாங்கள் அவர்களை வணங்கவில்லை”” (என்கின்றனர்). (39:3)

இந்தப் பூமிக்கு இஸ்லாம் வந்துதித்த பின்னர், சத்திய மார்க்கத்தை இந்த அரபுக்கள் ஏற்றுப் பின்பற்றுவதில் அதிக அலட்சியம் காட்டினர், தங்களது முன்னோர்களது மார்க்கத்தை விட்டு விட்டு வர மறுத்தனர். இந்த நிலையில் தான், முஹாஜிர்களை அல்லாஹ் அவர்களிலிருந்தே உருவாக்கினான், அவர்களின் மூலம் தனது தூதரை இறைத்தூதரென்று ஏற்றுக் கொள்ளச் செய்தான். இறைநம்பிக்கை கொள்ளச் செய்தான், அவரது சொந்த உடன்பிறப்புக்களே அவரை பொய்யரென்று தூற்றிய பொழுதும், அவருக்கு சொல்லொண்ணா துன்பங்களைக் கொடுத்த பொழுதும், அதில் பங்கு பெறக் கூடியவர்களாக இந்த ஆரம்பகால முஸ்லிம்களை அல்லாஹ் தனது தூதருக்கு வழங்கினான்.

நாம் சிறு கூட்டமாக இருக்கின்றோம் என்பதனாலும், இன்னும் நமது எதிரிகள் நம்மை விட அதிகம் இருக்கின்றார்கள் என்பதனாலும் கூட அவர்களது இறைநம்பிக்கையைத் தளவுறச் செய்ய முடியவில்லை, அவர்களது உளவலிமையை அசைத்து விட முடியாத அளவுக்கு அவர்களிடம் உறுதிப்பாடு இருந்தது என்பது, அந்த ஆரம்பகால முஸ்லிம்களுக்கிருந்த மிகப் பெரும் அருட்கொடைகளாகும். இந்த மக்கள் தான் இறைநம்பிக்கையில் முந்திக் கொண்ட மக்களாவார்கள், இவர்கள் இந்தப் பூமியில் இறைவனை வணங்க ஆட்களே இல்லாத அந்த நிலையில், இறைநம்பிக்கையில் முந்திக் கொண்டு இறைநம்பிக்கை கொண்டார்கள், அல்லாஹ் ஒருவனையே தங்களது ஏக இறைவனாகவும், அவனது திருத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களை, தாங்கள் ஏற்றுப் பின்பற்றுகின்ற தூதராகவும் ஏற்றுக் கொண்டார்கள். இதுவல்லாமல், அவர்கள் அந்தத் தூதருக்குத் தோழராகவும், இன்னும் உறவினர்களாகவும் இருந்தார்கள். இந்த வகையில், இந்த கலீபாவுக்கான முன்னுரிமையில் அவர்களைத் தவிர வேறு எவரும் உரிமை கொண்டாட முடியாத அளவுக்கு அவர்களின் மிகவும் உறுதியான ஆதாரங்கள் இருக்கின்றன. இன்னும் தவறிழைப்பவர்களைத் தவிர வேறு யாரும் இந்த விஷயத்தில் அவர்களுடன் போட்டி போட மாட்டார்கள். அவர்களுக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொள்ள மாட்டார்கள் என்றும் தனது உரையில் கூறினார், அபுபக்கர் (ரலி) அவர்கள்.

இன்னும் என்னுடைய அன்ஸாரித் தோழர்களே...!

இந்த இஸ்லாமிய மார்க்கத்தில் உங்களது உயர் தரத்தை யாரும் மறுத்து விட முடியாது அல்லது இஸ்லாத்தின் மீது உங்களுக்கு உள்ள பற்றை யாரும் சந்தேகித்து விட முடியாது. உங்களை அல்லாஹ் இந்த இஸ்லாமிய மார்க்கத்திற்கும் இன்னும் தனது தூதர் (ஸல்) அவர்களுக்கும் உதவக் கூடிய அன்ஸார்களாகத் தேர்ந்தெடுத்திருக்கின்றான். இன்னும் மக்காவிலிருந்து அவரை வெளியேற்றி உங்கள் பால் அவரை வரச் செய்தான், அதனால் அநேகமான ஆண்களும் பெண்களுமாக இஸ்லாத்திற்குள் நீங்கள் நுழைந்தீர்கள் அந்த வகையில் நீங்கள், மற்றவர்களைக் காட்டிலும் அதிகமான எண்ணிக்கையில் இறைநம்பிக்கை கொண்டவர்களாக இருக்கின்றீர்கள். இந்த போதிலும், நீங்கள் அந்த ஆரம்பகால முஸ்லிம்களுக்குப் பின்னால் தான் நிற்கக் கூடிய நிலையில் இருக்கின்றீர்கள். எனவே, முஹாஜிர்களாகிய நாங்கள் தலைமைப் பொறுப்பிலும், அதாவது அமீராகவும், இன்னும் அந்த அமீரகத்திற்கு உதவக் கூடிய அமைச்சர்களாகவும் இருப்பதே நீதமான தீர்ப்பாகும் என்று நான் கருதுகின்றேன் என்று கூறினார்கள்.

இன்னும் சில அறிவிப்புகளில், அபுபக்கர் (ரலி) அவர்கள் தான் இரு நபர்களைச் சுட்டிக்காட்ட இருப்பதாகவும், அந்த இருவரில் ஒருவரை நீங்கள் தேர்வு செய்தால் அதனை நான் ஆமோதிக்கின்றேன் என்று கூறியதாகவும் வருகின்றது. அவ்வாறு அவர்கள், உமர் (ரலி) அவர்களையும், அபூ உபைதா (ரலி) அவர்களையும் சுட்டிக்காட்டியதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இந்த வாசகத்துடன் தனது உரையை அபுபக்கர் (ரலி) அவர்கள் முடித்துக் கொண்டார்கள் என்றும் குறிப்பிடப்படுகின்றது.

அபுபக்கர் (ரலி) அவர்கள் தனது கருத்தை வலியுறுத்திப் பேசியதன் பின்னரும், சில அன்ஸார்கள் எழுத்திருந்து தங்களுக்கிருக்கின்ற முன்னுரிமைகளை எடுத்துரைத்து, கலீபா என்பவர் எங்களிலிருந்தே வர வேண்டும் என்ற கருத்தையே வலியுறுத்திப் பேசி வந்தனர். அப்பொழுது அபூ உபைதா (ரலி) அவர்கள் எழுந்திருந்தார்கள். ஓ அன்ஸார்களே..! என்னருமைத் தோழர்களே..!

நீங்கள் உதவி மற்றும் ஒத்தாசை செய்யக் கூடியவர்களில் முந்திக் கொண்டவர்கள் என்பதற்காக, இந்த கலீபா தேர்வு விஷயத்திலும் தங்களுக்கு முன்னுரிமை வேண்டும் என்று கோருவது சரியல்ல, அதனை நீங்கள் தவிர்த்து கொள்ள வேண்டும். இந்த வகையில், அன்ஸாரித் தோழர்களில் மூத்தவர்களான ஜைத் பின் தாபித் மற்றும் பஷீர் பின் சஅத் (ரலி) ஆகிய இருவரும் எழுந்திருந்து தங்களது அன்ஸாரித் தோழர்களுக்கு, அபுபக்கர் (ரலி) அவர்கள் மற்றும் அபூ உபைதா (ரலி) ஆகிய இருவரின் பேச்சில் உள்ள நியாயத்தை விளக்கிக் கூறினார்கள்.

அதனையிட்டு, ஜைத் பின் தாபித் (ரலி) அவர்கள் கூறினார்கள் : இறைத்தூதர் (ஸல்) அவர்களும் ஒரு முஹாஜிர், எனவே, அந்த முஹாஜிர்களில் இருந்தே தான் நாம் நமது தலைவரை (இமாமை) த் தேர்ந்தெடுக்க வேண்டும். நாம் அன்ஸார்கள், அதாவது உதவியாளர்கள் - நாம் அவர்களுக்கு உதவுவதில் தான் நமது பங்களிப்பு உள்ளது என்று விளக்கினார்கள். இவரது இந்தக் கூற்றை ஆதரித்து பஷீர் (ரலி) அவர்கள் உரையாற்றினார்கள், ஓ .. அன்ஸார்களே..! என்னருமைத் தோழர்களே..! நாம் அந்த பல தெய்வ வணக்கக் காரர்களை எதிர்த்து பல போர்களில் முன்னணி வகித்துள்ளோம் தான், ஆனால் அந்த அற்பணிப்புகள் எல்லாம் நம்மைப் படைத்த அந்த வல்லோனின் மார்க்கத்தை மேலோங்கச் செய்தவர்கள் என்ற கண்ணியத்தைப் பெற்று, அவனது திருப்பொருத்தத்தைப் பெற்றுக் கொள்ளத் தான். இன்னும் அதன் மூலம் அல்லாஹ்வுக்கு அடிபணிந்தோம், அவனது திருத்தூதர் (ஸல்) அவர்களுக்குக் கீழ்படிந்தோம், இன்னும் குறிப்பாக நமது மறுமைப் பயணத்திற்காகவே உழைத்தோம், பாடுபட்டோம். நாம் பிறரது உரிமைகளைப் பறிக்கும் நோக்கத்தில் இத்தகைய அற்பணிப்புகளில் ஈடுபடவும் இல்லை, இன்னும் இந்த உலக ஆதாயத்திற்காகவும் நாம் பாடுபடவும் இல்லை. அல்லாஹ் தான் நமது அற்பணிப்புகளுக்கு கூலி வழங்கக் கூடியவன்.

இன்னும் ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் குறைஷிக் குலத்திலிருந்து வந்தவர்கள், அதனால் அவர்களும் கூட தாங்கள் தான் கலீபாக வர வேண்டும் என்ற வாதத்தை வலியுறுத்திக் கூற முடியும், இன்னும் அவர்கள் அதற்குத் தகுதியானவர்களும் கூட, அவர்கள் தான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் விட்டுச் சென்ற இடத்தினை நிரப்பி, தலைமைப் பொறுப்புக்கு வரக் கூடியவர்களாகவும் இருக்கின்றார்கள். இன்னும் இந்த விஷயத்தில் என்னை ஒரு விதண்டாவாதக் காரணமாக அல்லாஹ் என்னை ஆக்காதிருக்கவே நாம் விரும்புகின்றேன். அல்லாஹ்வுக்காக..! அவர்களுடன் எந்த விதண்டாவாதங்களும், தர்க்கமும் வேண்டாம், என்றே நான் விரும்புகின்றேன் என்று பேசி முடித்தார்கள்.

இப்பொழுது அபுபக்கர் (ரலி) அவர்கள் எழுந்து, தான் ஏற்கனவே முன்வைத்த கோரிக்கையை முன்னிலைப்படுத்தி, உங்கள் முன் இருக்கின்ற இந்த இருவரில் ஒருவரைத் தேர்வு செய்யுங்கள் என்று கூறினார்கள்.

அபுபக்கர் (ரலி) அவர்களே..! இந்த விஷயத்தில் உங்களை விட நாங்கள் எந்த விதத்திலும் சிறந்தவர்கள் அல்ல, எங்களைக் காட்டிலும் உங்களுக்கே அதிகத் தகுதிகள் இருக்கின்றன, எங்களை வேட்பாளர்களாக முன்னிறுத்த நாங்கள் சம்மதிக்க மாட்டோம் என்று, இருவரும் ஒருசேரக் கூறினார்கள்.

சந்தேகமில்லாமல், முஹாஜிர்களில் நீங்கள் தலைசிறந்தவர்கள், அந்தக் குகையில் இருந்த இருவரில் ஒருவராகவும் இருந்தீர்கள், இன்னும் உங்களைத் தான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையில் இமாமாக நியமனம் செய்தார்கள், இன்னும் தொழுகை என்பது நமது மார்க்கத்தின் தலை போன்றதாக இருக்கின்றது.

இன்னும் உங்களைக் காட்டிலும், இதனை விடச் சிறந்த தகுதியினைப் பெற்ற ஒருவர் நம்மிடையே யார் தான் இருக்கின்றார்கள்?

உங்களது கைகளை நீட்டுங்கள், உங்களை எங்களது தலைவராக ஏற்றுக் கொண்டு உங்களது கரங்களில் நாங்கள் சத்தியப் பிரமாணம் செய்கின்றோம் என்று கூறினார்கள்.

உமர் (ரலி) அவர்களும், உபைதா (ரலி) அவர்களும் பேசி முடித்தவுடன், யாரையும் எதிர்பார்க்கமால் முன் வந்த பஷீர் பின் சஅத் அல் அன்ஸாரி (ரலி) என்ற நபித்தோழர், அபுபக்கர் (ரலி) அவர்களின் கரங்களில் பைஅத் என்ற உறுதிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார். அவரது உறுதிப்பிரமாணத்திற்குப் பின் உமர் (ரலி) அவர்களும், அவருக்கும் பின் அபூ உபைதா (ரலி) அவர்களும் உறுதிப்பிரமாணம் எடுத்துக் கொள்ள, பின் அங்கிருந்த ஒவ்வொருவராக வந்த உறுதிப்பிரமாணம் எடுத்துக் கொள்ள ஆரம்பித்தார்கள், அப்பொழுது அங்கே சுகவீனத்துடன் படுத்துக் கொண்டிருந்த சஅத் பின் உபைதா (ரலி) அவர்கள் எங்கே மக்களின் கால்களில் மீதிபட்டு, உருக்குலைந்து போய்விடுவார்களோ என்று அச்சப்படும் அளவுக்கு மக்கள் அங்கே திரண்டு முண்டியடித்துக் கொண்டு வந்து உறுதிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார்கள். இன்னும் இந்தச் செய்தி மதீனா நகரெங்கும் எதிரொலிக்க மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து குழுமினர். இதுவே, வரலாற்றில் தனிப்பட்ட நபரிடம் எடுத்துக் கொள்ளப்பட்ட உறுதிப்பிரமாணம் என்றழைக்கப்படுகின்றது.



பைஅத் அல்லது உறுதிப்பிரமாணம்

இதனை அடுத்து வந்த (செவ்வாக் கிழமை) தினத்தில், பொதுமக்களிடம் பைஅத் என்ற உறுதிப்பிரமாணம் பெறப்பட்டது. இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பள்ளியின் முன்னால் பொதுமக்கள் திரளாகக் குழுமிய பின், அவையினருக்கு மிம்பரில் இருந்து கொண்டு உமர் (ரலி) அவர்கள் உரையாற்ற ஆரம்பித்தார்கள் :

‘நான் எதிர்பார்த்தேன், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இப்பொழுது உயிருடன் இருந்திருந்தால் நமக்கு இதனை தெளிவாக எடுத்துரைத்திருப்பார்கள். ஆனால், இன்று அவர்கள் நம்மிடையே இல்லை, ஆனால் அல்லாஹ் நமக்கு வழிகாட்ட வழங்கிய வேதமான திருக்குர்ஆன் நம்மிடையே இருக்கின்றது, இதனைக் கொண்டு தான் அல்லாஹ் தன் தூதர் (ஸல்) அவர்களை வழி நடத்தினான். அதே வழிமுறைப் பிரகாரம் இப்பொழுது அபுபக்கர் (ரலி) அவர்கள் வந்துள்ளார்கள், அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தோழரும் ஆவார், இன்னும் குகையில் இருந்த இருவரில் ஒருவரும் அவரே, உங்களுடைய விவகாரங்களை சரியான முறையில் கையாள்வதற்கு அவரை விடச் சிறந்த ஒரு மனிதர் சந்தேகமற நம்மில் யாரும் கிடையாது. இப்பொழுது நீங்கள் அவர் முன்பாக வந்து பைஅத் என்ற உறுதிப்பிரமாணத்தை எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று கூறி முடித்தார்கள்.

பொதுமக்களிடம் இந்த வேண்டுகோளை விடுத்து விட்டு, அபுபக்கர் (ரலி) அவர்களை நோக்கிய உமர் (ரலி) அவர்கள், அபுபக்கர் (ரலி) அவர்களே, நீங்கள் மிம்பரில் ஏறிக் கொள்ளுங்கள், என்று கூறினார்கள். சற்று தயக்கத்திற்குப் பின்னர், உமர் (ரலி) அவர்களின் வேண்டுகோளை ஏற்று மிம்பரில் ஏறிய அபுபக்கர் (ரலி) அவர்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வழக்கமாக அமர்ந்த முதல் படியில் அமராது, அதற்கும் ஒருபடி கீழே உள்ள படியில் உட்கார்ந்தார்கள்.

இப்பொழுது பொதுமக்கள் அனைவரும் ஒவ்வொருவராக வந்து அபுபக்கர் (ரலி) அவர்களின் கரங்களில் உறுதிப்பிரமாணம் வழங்கினார்கள். மக்களில் அனைவரும் உறுதிப்பிரமாணம் வழங்கிய பின்னர், இப்பொழுது பொதுமக்களின் முன்னிலையில் தனது முதல் உரையை ஆற்றுவதற்காக அபுபக்கர் (ரலி) அவர்கள் எழுந்து நின்றார்கள்.

இறைவனைப் புகழ்ந்து விட்டு, என்னுடைய மக்களே..! இறைவன் மீது சத்தியமாக இந்தப் பதவிக்காக இரவிலும் சரி அல்லது பகலிலும் சரி.., நான் என்றுமே குறுக்கு வழியில் செயல்பட்டது கிடையாது, இதனை விரும்பியதும் கிடையாது, இன்னும் இந்தப் பதவியை வேண்டி இறைவனிடம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பிரார்த்தித்ததும் கிடையாது. ஆனால், சில வேண்டத்தகாத விளைவுகள் ஏற்பட்டு விடுமோ என்று தான் நான் அஞ்சுகின்றேன். இப்பொழுது என் மீது நீங்கள் மிகப் பெரிய சுமையைச் சுமத்தியுள்ளீர்கள், இது என்னுடைய சக்திக்கு அப்பாற்பட்டது, இறைவனுடைய உதவியின்றி என்னால் இதனை நிறைவு செய்ய இயலாது. இந்த இக்கட்டான கால கட்டத்தில் என்னை விட சக்தி வாய்ந்ததொரு மனிதரைத் தான் இந்த இடத்தில் நான் பார்க்க விரும்பினேன் என்று கூறினார்கள்.

சந்தேகமில்லாமல், இப்பொழுது நான் உங்களால் தலைமைப் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டிருப்பினும், நான் உங்களை விடச் சிறந்தவனல்லன். நான் நேர்வழியில் இருப்பதற்கு எனக்கு நீங்கள் உதவுங்கள், நான் தவறிழைக்கும் பொழுது என்னை நீங்கள் நேர்வழிப்படுத்துங்கள், சீர்திருத்துங்கள். சத்தியம் என்பது அமானிதம் போன்றது, பொய் என்பது அபகீர்த்தியானது.

உங்களில் பலவீனர்கள் என்னிடம் கடுமையைக் காட்டட்டும், அவர்களது உரிமைகள் நிலைநாட்டப்படும் வரை.., இன்னும் உங்களில் வலிமையானவர்கள் என் மீது இரக்கம் காட்டட்டும்.

அல்லாஹ்வின் பாதையில் போராடுவதனின்றும் விலகி இருக்க எந்த சமுதாயத்தினாலும், ஆனால் படுபாதகக் கொலையில் ஈடுபடுவதைத் தவிர்த்து, அல்லாஹ்வின் பாதையில் போராடுவதனைக் கை விடுவதற்கு எந்த சமுதாயத்திற்கும் அனுமதி கிடையாது. எவரொருவர் மானக் கேடான விஷயத்தை செய்தாலும், அவரை சத்தியத்தின் பால் கொண்டு வரப்பட்டு இறைவனின் தண்டனையை அவர் மீது நிறைவேற்றி வைக்கப்படும்.

நான் அல்லாஹ்வுக்கும் அவனது தூதர் (ஸல்) அவர்களுக்கும் கட்டுப்படும் வரைக்கும் எனக்கும் கட்டுப்படுங்கள். எப்பொழுது அவர்களுக்குக் கட்டுப்படுவதனின்றும் நான் தவிர்ந்து விடுகின்றேனோ அப்பொழுதிலிருந்து நீங்களும் எனக்குக் கட்டுப்பட வேண்டாம்.

இப்பொழுது தொழுகைக்கான நேரம் வந்து விட்டது. அல்லாஹ் நம்மீது கருணை புரிவானாக..!

இந்த சத்தியப் பிரமாணத்திற்குப் பிறகு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கலீபா என்ற பட்டத்தைப் பெற்றுக் கொண்டார். ஒருமுறை அல்லாஹ்வின் கலீஃபா என்று அபுபக்கர் (ரலி) அவர்களை அழைத்த பொழுது, அவ்வாறு என்னை அழைக்க வேண்டாம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கலீஃபா என்றழைப்பதையே நான் போதுமாக்கிக் கொள்ள விரும்புகின்றேன் என்று கூறினார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறந்ததன் பின் அரசு நிர்வாகம் சரியான முறையில் இயங்குவதற்கு முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நிர்வாகம் ஒன்று தேவை என்பது அவசியமாக இருந்தது, இப்பொழுது அது அபுபக்கர் (ரலி) அவர்கள் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டதன் காரணமாக நிறைவேறியது.

உஸாமா (ரலி) தலைமையில் படையெடுப்பு

ஹிஜ்ரி 8 ம் ஆண்டு, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உயிருடன் இருந்த அந்த காலகட்டத்தில், முஸ்லிம்களின் மீது தாக்குதல் நடத்தத் தயாராகி வந்த ரோமப்படைகளை, முஅத்தா என்ற இடத்தில் வைத்து எதிர்ப்பதற்காக உஸாமா (ரலி) அவர்களின் தலைமையில் ஒரு படையைத் தயார் செய்தார்கள். இதில் மதீனாவைச் சேர்ந்த 700 இளைஞர்கள் இருந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சுகவீனம் அடைந்ததன் காரணமாக, இந்தப் படை மதீனாவை விட்டும் இன்னும் கிளம்பாத நிலையில் இருந்தது.

இப்பொழுது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மரணித்ததன் பின்பு, அபுபக்கர் (ரலி) அவர்களும் ஆட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதன் பின்பு, அபுபக்கர் (ரலி) அவர்கள் ஆட்சித் தலைவராக இருந்து, முதன் முதல் உத்தரவாக, உஸாமா (ரலி) அவர்களுடன் ரோமர்களை எதிர்ப்பதற்காக தயார் செய்யப்பட்ட படை கிளம்பத் தயாராகட்டும், அந்தப் படையுடன் செல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்ட எவரும் மதீனாவில் தங்கக் கூடாது, அந்தப் படையுடன் செல்ல அனுமதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஜுர்ஃப் என்ற இடத்தில் போய் படையுடன் சேர்ந்து கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டார்கள்.

இறைத்தூதர் (ஸல்) இறந்ததன் பின்பு, மதீனாவின் சமூகச் சமநிலை பாதிக்கப்பட்டது, அமைதி அழிந்து காணப்பட்டது, புதிதாக பொய்த் தூதர்கள் பலர் தோன்ற ஆரம்பித்தார்கள். இதனை சாக்காக வைத்துக் கொண்டு, கிறிஸ்தவர்களும், யூதர்களும் திட்டமிட்ட முறையில் குழப்பங்களை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்கள். இந்த நிலையில், அபூ மஸ்ஊத் (ரலி) போன்ற முன்னணி நபித்தோழர்கள், உஸாமா (ரலி) அவர்களின் தலைமையில் இப்பொழுது ஒரு படை வெளிக்கிளம்பிச் செல்வது அவ்வளவு உகந்ததல்ல. கடுங்குளிர் நேரத்தில், ஆட்டிடையனைத் தொலைத்த ஆட்டு மந்தை போல, இப்பொழுது முஸ்லிம்களின் நிலை இருக்கின்றது. சுற்றிலும் அந்த ஆட்டைக் காவு கொள்ளக் காத்திருக்கும் ஓநாய் கூட்டத்திற்கு மத்தியில் முஸ்லிம்கள் அகப்பட்டு தத்தளித்துக் கொண்டிருக்கும் வேளையில், இந்தப் படையெடுப்பு சரிதானா? என்ற கேள்வியை எழுப்பினார்கள்.

ஆனால்; அபுபக்கர் (ரலி) அவர்களோ, இது என்னுடைய உத்தரவல்ல, இது இறைத்தூதர் (ஸல்) அவர்களின் உத்தரவு. என்னுடைய உயிர் எவன் கை வசம் இருக்கின்றதோ, அவன் மீது சத்தியமாக..! இந்த உத்தரவில் நான் எந்த மாற்றத்தையும் செய்ய மாட்டேன். படை புறப்படுவது என்பது உறுதியானது. இந்த உங்களது கருத்தில் நான் உடன்படுவதை விட, ஒரு ஓநாய் என்னைக் கவர்ந்து சென்று விடுவதையே நான் பெரிதும் விரும்புகின்றேன், நான் இந்த மதீனாவில் தன்னங்தனியாக தனித்து விடப்படினும் சரியே..! என்று கூறி முடித்தார்கள்.

சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்ததன் பின், படையுடன் செல்ல நியமிக்கப்பட்டவர்களை உடன் கிளம்பத் தயாராகும்படி அபுபக்கர் (ரலி) அவர்கள் உத்தரவிட்டார்கள். அனைத்துப் படையினரும் இப்பொழுது ஜுர்ஃப் என்ற இடத்தில் கூடி விட்டனர். படையினர் அங்கு முகாமிட்டுக் கொண்டிருந்த அந்த நேரத்தில், உமர் (ரலி) அவர்கள் மூலமாக ஒரு செய்தியை உஸாமா (ரலி) அவர்கள் கலீஃபா அபுபக்கர் (ரலி) அவர்களுக்கு அனுப்பி வைக்கின்றார்கள்.

கலீஃபா அவர்களே..!

நமது படை கிளம்பியவுடன், இந்த குழப்பக்காரர்கள் கலீஃபாவையும், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் இடத்தையும், இன்னும் பொதுவாக மக்களையும் சூழ்ந்து தாக்கத் துவங்கி விடுவார்கள். எனவே, நீங்கள் அனுமதித்தால் நான் மதீனாவில் இருக்கவே விரும்புகின்றேன் என்ற செய்தியை அனுப்பி வைத்தார்கள்.

இந்த நேரத்தில் அங்கு கூடியிருந்த அன்ஸார்கள் இந்த ஆலோசனையை உமர் (ரலி) அவர்களின் முன்பாக வைத்தார்கள். உஸாமா (ரலி) அவர்களுக்குப் பதிலாக, அவரை விட வயதில் மூத்த அனுபவமிக்க ஒருவரை தலைமைப் பொறுப்பில் நியமிக்கலாமே என்று ஆலோசனை கூறி, இதனை அபுபக்கர் (ரலி) அவர்களிடம் தெரிவிக்குமாறு கூறினார்கள்.

உஸாமா (ரலி) அவர்களின் வேண்டுகோளுக்கு பதிலளித்த கலீஃபா அவர்கள், அவ்வாறெல்லாம் தேவையில்லை, படை புறப்படுவது என்பது நிச்சயமானது என்று கூறினார்கள்.

அதன் பின் உமர் (ரலி) அவர்கள் அன்ஸார்கள் கூறிய ஆலோசனையை கலீஃபா அவர்களிடம் முன் வைத்தபொழுது, இதனைக் கேட்ட கலீஃபா அபுபக்கர் (ரலி) அவர்கள் சினந்தவர்களாக..,

உங்கள் மீது அழிவு உண்டாவாதாக..! இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நியமித்த ஒருவரை என்னைக் கொண்டு நீக்க முனைகின்றீர்களே..!? என்று கேட்டு விட்டு, கலீஃபா அபுபக்கர் (ரலி) அவர்கள் படையினரை வழியனுப்பி வைப்பதற்காக ஜுர்ஃப் என்ற இடத்திற்கு விரைந்தார்கள்.

இந்த நேரத்தில், படைக்குத் தளபதியாக நியமிக்கப்பட்ட உஸாமா (ரலி) அவர்கள் குதிரையில் அமர்ந்து வருகின்றார்கள். கலீஃபா அபுபக்கர் (ரலி) அவர்கள் நடந்துவர, அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் தனது குதிரையின் மீது அமராமல் அதனை நடத்திக் கூட்டி வருகின்றார்கள்.

இப்பொழுது, உஸாமா (ரலி) அவர்கள், உங்களது குதிரையை நீங்கள் ஓட்டி வாருங்கள் அல்லது என்னை நடந்து வர அனுமதியுங்கள் என்று கூறினார்கள்.

அபுபக்கர் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

நான் குதிரையில் ஏறியும் வர முடியாது, உங்களை இறங்கி நடக்கவும் அனுமதிக்க முடியாது என்று கூறி விட்டு, அல்லாஹ்வின் பாதையில் போரடக் கிளம்பியவரின் பாதங்களில் படக் கூடிய தூசி பட்டதனால் என்னுடைய அந்தஸ்து என்ன குறைந்தா போய்விடும்?

அல்லாஹ்வின் பாதையில் சேவை செய்யக்கூடிய ஒருவரின் அந்தஸ்தை 700 மடங்கை உயர்த்துகின்றான், இன்னும் 700 பாவங்களை போக்குகின்றான், 700 நன்மைகளை அவன் கணக்கில் எழுதி விடுகின்றான்.

பின்பு, படையினரின் பக்கம் திரும்பிய அபுபக்கர் (ரலி) அவர்கள், வீரர்களே..! உங்களுக்கு நான் பத்து கட்டளைகளை இடுகின்றேன். அவற்றை மனதினுள் பதித்துக் கொள்ளுங்கள்..!

மோசடியில் ஈடுபடாதீர்கள், உங்களில் தலைவருக்குக் கட்டுப்பட மறுக்காதீர்கள், உடலை அங்கவீனப்படுத்தாதீர்கள். வயதானவர்களையும், பெண்களையும் அல்லது குழந்தைகளையும் கொலை செய்யாதீர்கள். ஈச்ச மரங்களை வெட்டவோ அல்லது எரிக்கவோ அல்லது கனிதரக் கூடிய மரங்களை வெட்டவோ செய்யாதீர்கள். உணவுக்கா அன்றி ஆடு, மாடு அல்லது ஒட்டகங்களை வெட்டிக் கொல்லாதீர்கள். மடங்களில் தங்கி தங்களது இறுதிக்காலத்தைக் கழிக்கக்கூடிய மக்களை ஒன்றும் செய்யாதீர்கள், அவர்களை அவர்களது வழியிலேயே விட்டு விடுங்கள். நீங்கள் செல்லும் பாதைகளில் விதவிதமான பாத்திரங்களில் உணவு கொண்டு வரக் கூடிய மக்களைக் காண்பீர்கள். அவைகளை நீங்கள் உண்ண ஆரம்பிக்கும் பொழுது, இறைவனது திருப்பெயரை மொழிந்து கொள்ளுங்கள். இன்னும் உச்சந்தலையில் சிரைத்து, அதனைச் சுற்றிலும் உள்ள பகுதிகளில் முடிகளை வளர விட்டு சடை போலத் தொங்க விட்டுக் கொண்டிருக்கும் மனிதர்களைப் பார்ப்பீர்கள். அவர்களை உங்களது வாளால் தாக்குங்கள். அல்லாஹ்வின் பெயரைக் கொண்டு முன்னேறுங்கள். எதிரிகளின் தாக்குதல்களிலிருந்து அல்லாஹ் உங்களைப் பாதுகாப்பானாக இன்னும் கொடிய நோயிலிருந்தும் உங்களைப் பாதுகாப்பானாக..! என்று கூறி முடித்தார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறந்து 19 நாட்கள் கழித்து, ரபீஉல் ஆகிர் மாதம் இறுதியில் படை கிளம்ப ஆரம்பித்தது. இன்னும் இந்தப் படை கிளம்பியதன் மூலம், அரேபியாவைச் சுற்றிலும் உள்ள மக்களின் மனதில் முஸ்லிம்களைப் பற்றி அச்சத்தை ஊட்டியது. அதாவது, மதீனாவில் மிகவும் குழப்பமான நிலை நிலவும் இந்தச் சூழ்நிலையில், படை ஒன்று வெளிக்கிளம்புவது என்பது இயலாத காரியம். அப்படி கிளம்புகின்றதென்றால், முஸ்லிம்கள் மிகவும் வலிமை மிக்க நிலையில் இருந்து கொண்டிருக்கின்றார்கள் என்பது அர்த்தமாகும் என்று அவர்கள் மதிப்பீடு செய்து கொண்டார்கள்.

பொய்த் தூதர்கள்

மக்காவின் வெற்றிக்குப் பின்பு, இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்காக பல்வேறு குலத்தவர்கள் வந்தார்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள். இவ்வாறு இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் அனுப்பி வைக்கப்பட்ட தூதர்கள் மூலம், அந்தப் பிரதேசத்து மக்கள் இஸ்லாத்தைப் பற்றி அறிந்து கொண்டு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள். அவ்வாறே முஸைலமா வாழ்ந்த பகுதியான எமன் மக்களும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள். ஹிஜ்ரி 10 ஆம் ஆண்டு இறைத்தூதர் (ஸல்) அவர்கள், அலீ (ரலி) அவர்களை எமனுக்கு அனுப்பி வைத்து, அங்குள்ள மக்களுக்கு இஸ்லாத்தை எடுத்துக் கூறி இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும்படி அழைப்பு விடுக்க அனுப்பி வைத்தார்கள். அலீ (ரலி) அவர்கள் அனுப்பி வைக்கப்படுவதற்கு 6 மாதங்களுக்கு முன்னர் தான் காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் எமனுக்கு சென்றிருந்தார்கள், எனினும் குறைந்த அளவே அவர்களின் பயணத்திற்கு வெற்றி கிடைத்தது.

அதன் பின் தான் அல்லாஹ்வின் சிங்கமான அலீ (ரலி) அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டார்கள். எமன் தேசத்து மக்கள் அலி (ரலி) அவர்களை எதிர்கொண்டு வரவேற்றார்கள். அலீ (ரலி) அவர்கள் அன்றைய காலைத் தொழுகையை தானே முன்னின்று நடத்தினார்கள். அதன் பின் இஸ்லாத்தைப் பற்றி விரிவானதொரு விளக்கம் அளித்தார்கள். அதனால் கவரப்பட்ட அந்த ஹம்தான் பகுதி மக்கள் அனைவரும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள். பின் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் இறுதி ஹஜ்ஜில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அலீ (ரலி) அவர்கள் எமன் பிரதேசத்தை விட்டு, மக்காவிற்கு கிளம்பினார்கள். அதுபோது, எமன் தேசம் முழுவதும் இஸ்லாத்தை ஏற்றிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹிஜ்ரி 9 ஆம் ஆண்டு, ஜகாத் என்ற ஏழை வரியை இறைவன் அனைத்து வசதி வாய்ப்புள்ள முஸ்லிம்கள் மீது கடமையாக்கி வைத்த பின், அதனை வசூலிப்பதற்காக நிர்வாக அமைப்பு ஏற்படுத்தப்பட்டு, அதன் நிர்வாகிகள் நாடு முழுவதும் ஜகாத் பணத்தை வசூல் செய்து வந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறப்பதற்கு முன்பாகவே எமனைப் பல மாவட்டங்களாகப் பிரித்து, ஒவ்வொன்றிற்கும் ஒரு பொறுப்புதாரியும் நியமிக்கப்பட்டார். முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்களை இஸ்லாத்தின் பிரச்சாரகராக அனுப்பி வைக்கப்பட்டார்கள். இந்த நேரத்தில் தான் சன்ஆ வில் அஸ்வத் அன்ஸி என்பவன் தானும் இறைத்தூதர் தான் என்று தன்னைத் தானே பிரகடனப்படுத்திக் கொண்டான். இவனது ஆரம்ப காலப் பிரச்சாரம் வெகு வேகமான நடைபெற்றது. பனீ அஸத் மற்றும் துலைஹா ஆகிய குலத்தவர்கள் தங்களது குலத்தைச் சேர்ந்த ஒருவனை, தங்களுக்குரிய இறைத்தூதராகப் பிரகடனப்படுத்திக் கொண்டார்கள். மூன்றாவதாக முஸைலமா என்ற பொய்த்தூதன் தோன்றினான். அஸ்வத் அன்ஸி யின் வளர்ச்சி இவனுக்கு ஊக்கத்தைக் கொடுத்தது. இவன் தன்னைப் பொய்த்தூதனாகப் பிரகடனப்படுத்திக் கொண்டதோடல்லாமல், இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு ஒரு மடலையும் அனுப்பி வைத்தான். அதில் :

இறைவனின் தூதனான முஸைலமா, இறைவனின் தூதரான முஹம்மதிற்கு எழுதும் மடல். உங்களது இறைத்தூதுத்துவத்தில் ஒரு பங்காளியாக நான் நியமனம் செய்யப்பட்டுள்ளேன். இந்த உலகின் பாதி நம்மைச் சேர்ந்தது, மீதிப் பங்கு குறைஷிகளுக்கு உரியது. ஆனால் இதில் அதிக உரித்துடையவர்கள் குறைஷிகளே என்றும் அதில் குறிப்பிட்டிருந்தான்.

இதற்கு பதிலளிக்கும் முகமாக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பதில் கடிதம் ஒன்றை முஸைலாமா என்ற பொய்யனுக்கு அனுப்பி வைத்தார்கள். அதில் :

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கின்றேன். அல்லாஹ்வின் தூதரான முஹம்மதுவிடமிருந்து பொய்யனான முஸைலமாவுக்கு.., இறைவனைப் போற்றிப் புகழ்ந்ததன் பின், நேர்வழியைப் பின்பற்றுகின்ற அனைவர் மீதும் சாந்தி உண்டாகட்டுமாக..! சந்தேகமில்லாமல், இந்த உலகமும் அதில் உள்ள அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது. இதில் அவன் தான் விரும்பியவர்களுக்கு அதிலிருந்து தன்னுடைய அடிமைகளுக்கு வழங்கி இருக்கின்றான். இறையச்சமுடையவர்களுக்கே இறுதி வெற்றி உள்ளது.

இந்தப் பொய்யனுக்கு அறவுரைகள் மூலமும், படிப்பினைகள் மூலமும் அவனுடைய பொய் வாதத்தை முறியடிக்க இறைத்தூதர் (ஸல்) அவர்கள் முயற்சிகளை மேற்கொண்டார்கள். ஆனால் இதனால் எந்தப் பயனும் விளயைவில்லை. முஸைலமாவோ தனது படைகளைத் திரட்டிக் கொண்டு முஸ்லிம்களை அச்சுறுத்தவும், முஸ்லிம்களின் மீது போர் தொடுக்கவும் புறப்பட்டு விட்டான். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையிலும், முஸைலமாவினுடைய நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்து வருமாறு தன்னுடைய பிரதிநிதிகளுக்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.

அஸ்வத் அன்ஸி என்பவனை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உயிருடன் வாழ்ந்து கொண்டிருந்த காலத்திலேயே வெட்டிக் கொல்லப்பட்டு விட்டான்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறந்ததன் பின்பு, இந்தப் பொய்த்தூதர்களின் பிரச்சார வேகம் கடுமையாகியது. எமன் முழுவதும் கலவரச் சூழல் பரவியது. எமனில் இறைத்தூதர் (ஸல்) அவர்களால் நியமிக்கப்பட்ட பொறுப்புதாரிகள் தூக்கி எறியப்பட்டு, அந்த இடத்திற்கு கலவரக்காரர்கள் வந்தமர்ந்தார்கள். இன்னும் மதீனாவையும் இந்தப் பிரச்சினை விட்டு வைக்கவில்லை. மதீனாவில் வாழ்ந்த குறைஷிகள் மற்றும் பனூ தக்கீஃப் குலத்தவர்களைத் தவிர மற்ற குலத்தவர்கள் முழுமையாகவோ அல்லது ஒரு பகுதியினரோ இந்த பொய்த் தூதர்களால் கவரப்பட்டு, இஸ்லாத்தை விட்டும் வெளியேறக் கூடிய சூழ்நிலையில் இருந்தனர். இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்ட உலக ஆசையால் வார்க்கப்பட்ட மனிதர்கள் பலர், தங்களை இறைவனது தூதர்கள் எனப் பிரகடனப்படுத்திக் கொள்ள ஆரம்பித்து விட்டார்கள். இன்னும் ஒவ்வொரு குலத்தவர்களும் தங்களது குலத்தவர்களிலிருந்து தூதர்கள் எனப் பிரகடனப்படுத்திக் கொண்டவர்களுக்கு வலுச் சேர்க்க ஆரம்பித்தார்கள். அவர்களை ஆதரித்தும் பேச ஆரம்பித்து விட்டார்கள்.

அமிர் பின் துஃபைல் என்பவர், பனூ ஆமிர் குலத்தைச் சேர்ந்தவர் வெளிப்படையாகவே இவ்வாறு கூற ஆரம்பித்தார். நான் அரேபியா முழுவதற்கும் தலைவராக ஆக விரும்புகின்றேன். எனவே, குறைஷிகளைப் பின்பற்ற வேண்டும் என்ற அவசியம் எனக்கில்லை என்று அறிவித்தார்.

பனூ அஸத் கோத்திரத்தாரின் நண்பர்களான கதஃபான் கோத்திரத்தார்கள், நாங்கள் ஏன் குறைஷிக் குலத்தில் உதித்த ஒருவரை இறைத்தூதராக ஏற்றுக் கொள்ள வேண்டும், எங்களது நண்பர்கள் இருக்க நாங்கள் ஏன் குறைஷிக் குலத்து இறைத்தூதருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? என்று கூற ஆரம்பித்தார்கள். இன்னும் குறைஷிகளின் இறைத்தூதர் இறந்து விட்டார், பனீ அஸத் ன் இறைத்தூதர் உயிருடன் உள்ளார் என்று இறுமாப்புடன் கூறினார்கள்.

பல நூற்றாண்டுகளாக எமன் தேசத்தை அரசாண்டு வந்த ஹிமையரைட்ஸ் குலத்தவர்களின் இறுதி மன்னரான நுஃமான் பின் முன்திர் ன் பேரனான அப்துல் கைஸ் என்பவனும் தன்னை இறைத்தூதராகப் பிகடனப்படுத்திக் கொண்டான்.

ஆண்கள் தான் என்றில்லை, பெண்கள் கூட தாங்களும் இறைத்தூதர்கள் தான் எனப் பிரகடனப்படுத்தும் செயல்களும் நடைபெற்றன. சஜா என்ற எமன் தேசத்துப் பெண்மணி தன்னைப் பொய்த்தூதராகப் பிரகடனப்படுத்திக் கொள்ள, கிறிஸ்தவக் குலமான பனூ தக்லீப் கோத்திரத்தார்கள், இந்த பெண் பொய்த்தூதரை ஆதரிக்க ஆரம்பித்தார்கள். இன்னும் பொய்த்தூதர்கள் தங்களுக்குள்ளே, ஒருவர் மற்றவரது தூதுத்துவத்தை பொய் என பிரஸ்தாபிக்க ஆரம்பித்தார்கள்.

துலைஹா என்பவன் தொழுகையிலிருந்து சஜ்தா வை நீக்கி விட்டான், மதுபானம் அருந்துவதும், விபச்சாரமும் தடை செய்யப்பட்டதல்ல என்று முஸைலமா அறிவித்ததோடு, பெண் தூதராக அறிவித்துக் கொண்ட சஜா வைத் திருமணம் செய்து கொண்டதோடு, ஐந்து வேளைத் தொழுகையை மூன்று வேளையாக மாற்றினான். நீக்கப்பட்ட காலை மற்றும் இரவுத் தொழுகையானது, சஜாவின் திருமணக் கொடைகளாகும் என்றும் அறிவித்தான். இவ்வாறாக விதவிதமான அறிவிப்புகள் வெளிவரத் துவங்கின.

இதில் குறிப்பிட்டத்தக்கதும் நாம் கவனிக்கத் தக்கதும் என்னவென்றால், யார் யாரெல்லாம் இஸ்லாத்தின் ஆரம்பக் கட்டத்தில் இஸ்லாத்தைத் தழுவினார்களோ, அவர்கள் அனைவரும் உறுதியாக இருந்த அதே வேளையில், சமீக காலத்தில் இஸ்லாத்தை; தழுவியோர்கள் தான் இவ்வாறான பொய்ப்பிரச்சாரத்திற்கு பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களது எண்ணிக்கை அதிகமாக இருந்த காரணத்தால், மிக எளிதாக அவர்களால் குழப்பத்தை உண்டு பண்ண முடிந்தது. துலைஹா என்பவன் மட்டும், அவனது பிரச்சாரத்தின் காரணமாக மட்டும் பனூ தாய் மற்றும் அஸத் குலத்தவர்களையே ஒன்று திரட்டி வைத்திருந்தான்.

அபுபக்கர் (ரலி) அவர்கள் கலீபா பொறுப்பேற்றுக் கொண்டவுடன், இந்த விவகாரத்தின் தாக்கத்தை உணர ஆரம்பித்து, இதனை முறியடிக்க திட்டம் வகுத்தார்கள்.

மதீனாவின் மீதான தாக்குதல் முறியடிப்பு

அபுபக்கர் (ரலி) அவர்கள் மதீனாவைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளைத் தானே முன்னின்று செய்ய ஆரம்பித்தார்கள். அலீ (ரலி), சுபைர் (ரலி), தல்ஹா (ரலி), மற்றம் அப்துல்லா பின் மஸ்ஊத் (ரலி) ஆகியோர்களை நகரின் முக்கியப் பகுதிகளின் பாதுகாப்புப் பொறுப்பை வழங்கி, அவர்களின் கண்காணிப்பில் விட்டிருந்தார்கள். இப்பொழுது, தனது மக்களை நோக்கி அபுபக்கர் (ரலி) அவர்கள் நகரின் பாதுகாப்பு மற்றும் எதிரிகளின் நடவடிக்கைகள் குறித்து விளக்கம் கொடுக்க ஆரம்பித்து, மதீனாவைப் பாதுகாப்பதற்கு உண்டான அனைத்து நடவடிக்கைகளிலும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்புத் தருமாறு வேண்டிக் கொண்டதோடு, எதிரிகள் எந்த நேரத்திலும் தாக்க ஆரம்பிக்கலாம் எனவே, முழுத் தயார் நிலையில் இருக்குமாறு கேட்டுக் கொண்டார்கள். ஏனெனில், அபுபக்கர் (ரலி) அவர்களின் சமாதான ஒப்பந்தத்தை, இந்த எதிரிகள் உதாசினம் செய்து விட்டதும், இந்த பாதுகாப்பு நடவடிக்கையை துதரிப்படுத்த வேண்டியதும் அவசியமாயிற்று. சமாதானத் தூதுக் கமிட்டி திரும்பி வந்ததன் பின் மூன்று நாட்கள் கழிந்திருந்த நிலையில், எதிரிகள் இப்பொழுது தங்களது இருப்பிடங்களை விட்டு விட்டு, முஸ்லிம்களைத் தாக்கும் நோக்கத்துடன் வெளியே வர ஆரம்பித்தார்கள். இவர்கள் அனைவரும் தீ ஹஸ்ஸி என்ற இடத்தில் குழு ஆரம்பித்தார்கள்.

ஏற்கனவே மதீனாவின் புறநகர்ப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்புப் படை, இந்த எதிரிகளின் நடவடிக்கைகள் குறித்து, கலீபா அபுபக்கர் (ரலி) அவர்களுக்கு தகவல் அனுப்பி வைத்தார்கள். கலீபா அவர்களோ, தான் வரும் வரை அந்த இடத்திலேயே இருக்கும்படியும், தனது வருகைக்காகக் காத்திருக்கும்படியும் உத்தரவிட்டார்கள். அபுபக்கர் (ரலி) அவர்களுடன் வந்திருந்த தோழர்களும், இன்னும் பொதுமக்களும் இப்பொழுது தாக்கும் நோக்குடன் வந்திருக்கும் எதிரிகள் மீது தாக்குதல் தொடுக்க ஆரம்பித்ததோடு, அவர்களைத் திரும்பி ஓடவும் வைத்தார்கள். ஆனால், இந்தப் பணி சுலபமான பணியாக முஸ்லிம்களுக்கு இருக்கவில்லை.

ஏனெனில், எதிரிகள் செய்த சதிச் செயலின் விளைவாக முஸ்லிம்கள் பின்வாங்கவும் நேரிட்டது. காற்றடைக்கப்பட்ட தோல் பைகளை, பாதையெங்கும் பரப்பி வைத்திருந்ததன் காரணமாக, அதன் மேல் கால் வைத்த ஒட்டகங்கள், மிரண்டு மதீனாவின் பக்கம் திரும்ப ஆரம்பித்தன. முஸ்லிம்களின் படைகள் இவ்வாறு திரும்பி ஓட ஆரம்பித்தது எதிரிகளுக்கு மிகவும் மன ஊக்கத்தை அளித்ததோடு, மேலும் படைகளை முஸ்லிம்களை எதிர்த்துக் குவிக்க ஆரம்பித்தார்கள்.

நிலைமையின் விபரிதத்தை உணர்ந்த கலீஃபா அபுபக்கர் (ரலி) அவர்கள், அன்றைய தினமே புதிய உத்வேகத்துடனான தாக்குதல் ஒன்றைத் தொடுக்க ஆரம்பித்தார்கள். இரவோடிரவாக எதிரிகளின் மீது தாக்குதல் தொடுக்க ஆரம்பித்த அவர்கள், அன்றைய மதிய வேளைக்கு முன்பாகவே எதிரிகளைத் துவம்சம் செய்து, அவர்களைத் தோற்கடித்ததோடு, தீ ஹஸ்ஸியை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து விட்டார்கள்.

இந்த நடவடிக்கையின் காரணமாக, துலைஹா என்ற பொய்த் தூதனின் தளபதியாக இருந்தவனும், ஆதரவாளனாக இருந்தவனுமான ஹப்பல் என்பவனின் தலை துண்டிக்கப்பட்டது. மதீனாவின் பாதுகாப்புப் பொறுப்பை நுஃமான் பின் மக்ரான் (ரலி) என்பவரது தலைமையில் அமைந்த சிறு படையின் பொறுப்பில் விட்டு விட்டு, தப்பித்து ஓடியவர்களை துல் கஸ்ஸா வரைக்கும் விரட்டிச் சென்றார்கள் அபுபக்கர் (ரலி) அவர்கள்.

முஸ்லிம்களின் இந்த வெற்றி எதிரிகளுக்கு எரிச்சலைக் கொடுக்க ஆரம்பித்தது. தங்களது குலத்தவர்களில் யார் யாரெல்லாம் இஸ்லாத்தின் ஆதரவாளர்களாக இருக்கின்றார்களோ, அவர்களை நோவினை செய்ய ஆரம்பித்தார்கள். முஸ்லிம்களின் அங்கங்கள் சிதைக்கப்பட்டன, அவர்களில் சிலரை எரிக்கவும் செய்தார்கள் எதிரிகள். இந்த கொடுமையான செய்திகள் அரபுலக மெங்கும் பரவ ஆரம்பித்தவுடன், இது மாதிரியான கொடுமைகளை முஸ்லிம்களின் மீது அனைத்து எதிரிகளும் புரியத் தலைப்பட்டார்கள்.

முஸ்லிம்களின் மீது புரியப்படுகின்ற இந்த அடக்கு முறைகளையும், சித்தரவதைகளையும் பற்றிக் கேள்விப்பட்ட அபுபக்கர் (ரலி) அவர்கள், எதிரிகளுக்குச் சரியான பாடத்தைக் கற்பிக்க வேண்டும் என்று முடிவெடுத்தார்கள். துல் கஸ்ஸா வில் கிடைத்த வெற்றியின் காரணமாக, முஸ்லிம்களின் இறைநம்பிக்கையின் வேகம் அதிகரித்திருந்தது. மனதளவில் அவர்கள் மிகவும் பலம் மிக்கவர்களாகவும், தன்னம்பிக்கையையும் பெற்றிருந்தார்கள். இன்னும் சில முஸ்லிம்கள், தங்களது பகுதியிலிருந்து ஜகாத் பணத்தைக் கூட, தலைநகருக்கு அனுப்பி வைத்தார்கள்.

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், உஸாமா (ரலி) அவர்களின் தலைமையில் அனுப்பி வைத்திருந்த படைகள் வரும் வரை தலைநகரைப் பாதுகாப்பதற்குண்டான அனைத்து ஏற்பாடுகளையும் கலீபா அவர்கள் செய்து வைத்திருந்தார்கள். இப்பொழுது, உஸாமா (ரலி) அவர்களின் தலைமையில் அனுப்பி வைக்கப்பட்டிருந்த படை வந்தவுடன், அவர்களின் பொறுப்பில் மதீனா நகரின் பாதுகாப்பை வழங்கி விட்டு, அந்தப் படைப்பிரிவு மதீனாவைப் பாதுகாப்பதோடு, சற்று ஓய்வெடுத்துக் கொள்ளட்டும் என்று கலீபா அவர்கள் முடிவெடுத்து, அதன் படியே செய்தார்கள்.

பின்பு, மற்ற முஸ்லிம்களை ஒன்று திரட்டிக் கொண்டு, தன்னுடைய தலைமையின் கீழ் ஒரு படையைத் தயார் செய்து, புறப்பட ஆயத்தமானார்கள். ஆனால், அபுபக்கர் (ரலி) அவர்களது சொந்த தலைமையின் கீழ் மதீனாவை விட்டும் படைகள் புறப்படுவதை, சில தோழர்கள் மறுபரிசீலனை செய்யும்படி கலீபாவை வேண்டிக் கொண்டார்கள். அதாவது, கலீபாவுக்கு நேரக் கூடிய சிறு காயம் கூட, மதீனாவின் நிர்வாக இயந்திரத்தை பலமிழக்கச் செய்து விடும், இன்னும் தேவையில்லாத குழப்பங்கள் பரவுவதற்குக் காரணமாகி விடும் என்று அவர்கள் எதிர்பார்த்ததே, இதன் காரணமாகும். படையின் தளபதிப் பொறுப்பை யாராவது ஒருவரது தலைமையின் கீழ் விடுவது, அவர் இறந்து விட்டால் இன்னொருவரை நியமித்துக் கொள்வது என்ற அடிப்படையில், படையின் தலைமைப் பொறுப்பில் இருந்து அபுபக்கர் (ரலி) அவர்கள் விலகி, மேற்படி செயல்முறைத் திட்டத்தின் படி, படையை நகர்த்துவது என்று ஆலோசனை கூறப்பட்டது. ஆனால், இதற்குச் சம்மதிக்க மறுத்து விட்ட அபுபக்கர் (ரலி) அவர்கள், தனது தலைமையின் கீழ் படையை நகர்த்துவது என்று இறுதியாக முடிவெடுத்து, அதன்படியே, படைக்குத் தலைமைப் பொறுப்பை ஏற்று படையை நகர்த்த ஆரம்பித்தார்கள் அபுபக்கர் (ரலி) அவர்கள். படை இப்பொழுது துல்கஸ்ஸா வழியாக, ரப்தா என்ற பகுதியில் உள்ள அப்ரக் என்ற இடத்தை அடைந்தது. எதிரிகள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டது, எதிரிகள் நிர்மூலமாக்கப்பட்டார்கள். அப்ரக் இப்பொழுது, முஸ்லிம் படைகளில் உள்ள குதிரைகளுக்குரிய தீவனத்தை உற்பத்தி செய்யக் கூடிய புல்வெளியாக மாற்றும்படி, கலீபா அவர்கள் உத்தரவிட்டார்கள்.

பொய்த் தூதர்கள் கொல்லப்படுதல்

இப்பொழுது உஸாமா (ரலி) அவர்களின் தலைமையில் சென்ற படை மதீனாவில் இருந்து நிறைவாக ஓய்வெடுத்திருந்தது, நாட்டின் பல பாகங்களில் இருந்தும் தேவையான அளவுக்கு ஜகாத் - லிருந்து நிதியும் வந்து சேர்ந்திருந்தது. இப்பொழுது அப்ரக் கில் தங்கிக் கொண்டு, பொய்த் தூதர்களின் அட்டகாசங்களை அடக்குவதற்குண்டான தயாரிப்புகளைச் செய்ய ஆரம்பித்தார்கள் கலீபா அபுபக்கர் (ரலி) அவர்கள். பொய்த் தூதர்களின் கொட்டங்களை அடக்குவதற்கென்றே, பதினொரு படைப் பிரிவுகளை உருவாக்கி, நாட்டின் பல பாகங்களுக்கு அந்தப் படைகளை அபுபக்கர் (ரலி) அவர்கள் அனுப்பி வைக்க ஆரம்பித்தார்கள்.

இன்றைக்கு இருப்பது போல அன்றைய நாட்களில் கூலிக்கு ஆள் அமர்த்திப் போராடும் படைப் பிரிவுகள் இருக்கவில்லை. முஸ்லிம்களில் ஒவ்வொருவரும் அல்லாஹ்வின் மார்க்கம் மேலோங்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்துடன், தங்களது உயிர், பொருள், உடமைகளை அற்பணிக்க முன் வந்ததோடு, அதற்கான கூலியை அல்லாஹ்விடம் பெற்றுக் கொள்ளும் எண்ணத்துடன் மட்டுமே போர்க் களத்திற்குள் நுழையக் கூடியவர்களாக இருந்தார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களது காலத்திலும் சரி, அவர்களுக்குப் பின் வந்த அபுபக்கர் (ரலி) போன்ற கலீபாக்களின் காலத்திலும் சரி, முஸ்லிம்களைக் கொண்ட படை உருவாக்கப்பட்டு, அதற்கு ஒரு தலைமையையும் நியமித்ததோடு, அந்த ஒரு தலைமையின் கீழ் பல குலத்தைச் சேர்ந்த முஸ்லிம்களைக் கொண்டு படையை ஒருங்கிணைத்து, அந்த ஒவ்வொரு பிரிவின் தலைமையின் கைகளிலும் அவர்களின் கொடியையும் வழங்கி, போருக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். அந்தக் கொடியை ஏந்தி இருப்பவர் எங்கே செல்கின்றாரோ, அவரைப் பின்பற்றிச் செல்ல வேண்டியது அந்தந்தக் கொடிக்குரிய குலத்தவர்களின் கடமையாகவும், இன்னும் அவர் படை நடத்திச் சென்றால் அவருக்குப் பின்னால் தங்களது இளவல்களை அனுப்பி அவருடன் சேர்ந்து கொள்ளச் செய்வதும் அந்தந்தக் குலத்தவர்களின் பொறுப்பாகவும் இருந்தது. ஒவ்வொரு படை வீரரும் தனது சொந்தச் செலவில் போர்க் கருவிகளையும், வாகனங்களையும் வாங்கி போருக்குத் தயாராக வேண்டியவராவார், இன்னும் அதற்கு வசதியற்றவர்களுக்கு நிதிக் கருவூலகத்திலிருந்து உதவியும் செய்யப்படும். இந்த வழிமுறை நன்றாக அந்தக் காலத்தில் வேலை செய்ததோடு, ஒவ்வொருவரும் தங்களது சொந்த உபயோகத்திற்கென்றே ஆயுதங்களைப் பெற்றிருந்ததும், அவர்கள் போருக்குத் தயாராகும் பணியை மிகவும் எளிதாக்கியது.

மேலே நாம் விவரித்த வண்ணம், துல் கஸ்ஸாவில் இருந்து கொண்டு அபுபக்கர் (ரலி) அவர்கள் பதினொரு படைப் பிரிவுகளைத் தயாரித்ததோடு, அதற்கு பதினொரு தலைமையையும் நியமித்ததோடு, எந்தத் தலைமையுடன் எந்தக் குலத்தவர்கள் இணைந்து கொள்வது என்ற திட்டத்தையும் அறிவித்தார்கள். ஒவ்வொரு தலைமையும், அவரவர்க்கென்ற தனிப்பட்ட உத்தரவுகளை கலீபாவிடம் இருந்து பெற்றுக் கொண்டார்கள். இதற்கு முன் சந்தித்த எதிரிகளுக்கும், இப்பொழுது சந்திக்கப் போகும் எதிரிகளுக்கும் மிகவும் வித்தியாசமிருந்தது, எனவே, அதனைக் கருத்தில் கொண்டு எவ்வாறு தாக்குதல் தொடுப்பது, போரை ஆரம்பிப்பது என்பன போன்ற அறிவுரைகளைத் தனது தளபதிகளுக்கு வழங்கி, அவர்களை அனுப்பி வைக்க ஆரம்பித்தார்கள்.

இந்த அடிப்படையில், காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் துலைஹா என்பவனுக்கு எதிராகவும், இக்ரிமா (ரலி) அவர்கள் முஸைலமாவுக்கு எதிராகவும், சுபைர் (ரலி) அவர்கள் அஸ்வத் அன்ஸிக்கு எதிராகவும் அனுப்பி வைக்கப்பட்ட முக்கியத் தோழர்கள் ஆவார்கள்.

இன்னும் பொதுவான சில உத்தரவுகளை அனைத்து தளபதிகளுக்கும் கலீபா அவர்கள் வழங்கினார்கள். இந்த உத்தரவுகளில் எதிரிகளை எதிர்த்துப் போர் தொடுப்பதற்கு முதலாக, அவர்களிடம் இஸ்லாத்தினை ஏற்றுக் கொள்ளும்படியும், இஸ்லாத்திற்கு எதிரான அனைத்து நடடிவக்கைகளையும் கைவிடும்படியும் விண்ணப்பித்துக் கொள்வது. இன்னும் சமாதான ஒப்பந்தங்களைச் செய்வதற்கு முன் வரும்பட்சத்தில், போர் நடவடிக்கைகளைக் கைவிடுவது போன்ற முறைகளுக்கு முதலில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும், இவற்றில் எதுவுமே அவர்களால் ஏற்றுக் கொள்ளப்படாத பட்சத்தில், இறுதி நடவடிக்கையாக போரைத் துவங்கும்படியும் கலீபா அவர்கள் அனைத்துத் தளபதிகளுக்கும் பொதுவான உத்தரவு ஒன்றை பிறப்பித்து, அவர்களை அனுப்பி வைத்தார்கள்.

கலீபா அவர்களால் உருவாக்கி வழங்கப்பட்ட பிரமாணங்களை, ஒருவர் முதலில் சென்று எதிரிகளிடம் வாசித்துக் காட்டுவது, அதற்காக அங்கு அதான் சொல்லப்பட்டு மக்களை ஒன்று திரட்டுவது. இவ்வாறு ஒன்று திரட்டப்பட்ட மக்களிடம் கலீபாவின் பிரமாணங்களை வாசித்துக் காட்டுவது, இதனைச் செவியுற்று விட்ட பின் எவர், அதனை ஏற்காது அங்கிருந்து திரும்பிச் சென்று விடுகின்றாரோ அவரை இஸ்லாத்தின் எதிரியாகக் கணிப்பிடுவது, அவர்களை ஒடுக்குவது என்பது தான் முஸ்லிம்களின் திட்டமாக இருந்தது. இதுவல்லாமல், இன்னும் சில கட்டளைகளையும் ஒவ்வொரு தளபதிகளுக்கும், அவரவர் செல்லக் கூடிய பகுதிகளுக்கு ஏற்றவாறு உத்தரவுகளும் வழங்கப்பட்டன.

இந்த விரிவான அடிப்படையில் பதினொரு படைப்பிரிவுகளும் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த பதினொரு படைப்பிரிவுகளின் பணிகள் பற்றி நாம் இங்கு நோக்குவது, மிகுந்த சிரமமான ஒன்று என்பதால், குறிப்பிட்ட சில படைப்பிரிவுகளின் பணிகள் குறித்து நாம் இங்கு சிறிது நோக்குவோம்.

பனீ தயீ

காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் இந்த பனீ தயீ என்ற குலத்தை எதிர்ப்பதற்காக அனுப்பி வைக்கப்டடார்கள், இந்தக் குலத்தவர்கள் துலைஹா என்ற பொய்யனுக்கு ஆதரவளித்து வந்தார்கள். காலித் பின் வலீத் (ரலி) அவர்களை அனுப்பி வைக்கப்படுவதற்கு முன்பதாக, அதி பின் காதிம் (ரலி) அவர்களை அபுபக்கர் (ரலி) அவர்கள் இந்தக் கோத்திரத்தவர்களிடம் அனுப்பி வைத்தார்கள்.

முஸ்லிம்களின் அனைத்துத் தயாரிப்புப் பற்றியும் அவர்களிடம் விளக்கிக் கூறுவது, அதன் மூலம் ஏற்படக் கூடிய பாரதூரமான விளைவுகள் குறித்து எச்சரிக்கை செய்வது, ஆகியவையே அதீ பின் காதிம் (ரலி) அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியாக இருந்தது.

இப்பொழுது, இஸ்லாத்தின் தூதை ஏந்திக் கொண்டு அதீ (ரலி) அவர்கள் பனீ தயீ குலத்தவர்களை நோக்கிச் சென்றார்கள்.

பனீ தயீ குலத்தவர்களே..!

முஸ்லிம்களிடம் மோதுவது குறித்து நீங்கள் சற்றுச் சிந்திக்க வேண்டும், அவ்வாறு நீங்கள் மோதுவதென்று முடிவெடுத்தால், அதை விடப் பாரதூரமான விளைவொன்றை நீங்கள் இனிச் சந்திக்கப் போவதுமில்லை என்று கூறினார்கள்.

அதீ (ரலி) அவர்களின் முதல் முயற்சி சற்றுத் தோல்வியைத் தழுவி இருந்தாலும், மீண்டும் மீண்டும் அவர் செய்த முயற்சி நல்ல பலனைத் தந்தது. இப்பொழுது, இஸ்லாத்தின் பால் தங்களை மீண்டும் இணைத்துக் கொள்ளச் சம்மதித்த அவர்கள்,

‘நாங்கள் இஸ்லாத்திற்குள் வந்து விட்டோம் என்பதை துலைஹா அறிந்து கொண்டால், எங்களையும் எங்களது மனைவி மக்களையும் தொந்தரவு செய்ய ஆரம்பித்து விடுவான். எனவே, எங்களது மனைவி மக்களை பாதுகாப்பாக அவனிடம் இருந்து மீட்டுக் கொள்வதற்கு சற்று எங்களுக்கு அவகாசம் அளிக்க வேண்டும்’ என்று அவர்கள் வேண்டிக் கொண்டார்கள்.

இவர்களது இந்த வேண்டுகோளை அதீ (ரலி) அவர்கள் தளபதி காலித் பின் வலீத் (ரலி) அவர்களிடம் தெரிவிக்கவே, அவரும் அதற்குச் சம்மதித்து மூன்று நாட்கள் அவகாசத்தை வழங்கி விடுகின்றார்கள். பனீ தயீ குலத்தவர்கள், வாக்களித்தது போல தங்களது குடும்பத்தவர்களைப் பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு சென்றதன் பின்பு, தங்களை மீண்டும் இஸ்லாத்திற்குள் இணைத்துக் கொண்டார்கள். இரத்தம் எதுவும் சிந்தாமல், இப்பொழுது முஸ்லிம்கள் பனீ தயீ குலத்தவர்களுக்கு எதிரான போர் நடவடிக்கையில் வெற்றி பெற்றார்கள்.

இப்பொழுது, காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் தனது படையை பனீ ஜதீலா என்ற குலத்தை நோக்கித் திருப்பினார்கள். இப்பொழுது காலீத் பின் வலீத் (ரலி) அவர்களது படையில், ஆயிரம் பனீ தயீ குலத்தைச் சேர்ந்த குதிரை வீரர்கள் இடம் பெற்றிருந்தார்கள். படையெடுப்புக்கு முன்பு, இவர்களிடமும் பனீ தயீ குலத்தவர்களிடம் பேசிப் பார்த்தது போன்று பேசிப் பார்த்து விடுவது என்றும், ஒரு பறவையின் இரண்டு இறக்கைகள் போன்றவர்கள், பனீ தயீ குலத்தவர்களும், பனீ ஜதீலா குலத்தவர்களும் என்று காலித் பின் வலீத் (ரலி) அவர்களுக்கு விளக்கம் கொடுத்த அதீ (ரலி) அவர்கள், சமாதானத் தூது சென்றார்கள். பனீ தயீ யைப் போலவே, பனீ ஜதீலா குலத்தவர்களும் தங்களை இஸ்லாத்திற்குள் மீண்டும் இணைத்துக் கொண்டார்கள்.

துலைஹா என்ற பொய்யனுக்கு எதிராகத் துவக்கப்பட்ட இந்தப் போரில், அதீ பின் காதிம் (ரலி) அவர்களின் சாதுர்யத்தால், மிகப் பெரிய வெற்றியை காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் பெற்றார்கள். இந்த வெற்றியை அடுத்து, துலைஹா தனது இருப்பிடத்தை விட்டு விட்டு, சிரியாவை நோக்கி ஓடி விட்டான். பின் அங்கிருந்தபடி, இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு விட்டார்.

ஒரு முறை துலைஹா மக்காவிற்கு ஹஜ் செய்யும் நிமித்தம் வந்த பொழுது, ஒருவர் அபுபக்கர் (ரலி) அவர்களிடம் துலைஹா வந்திருப்பதாகக் கூறிய பொழுது, இப்பொழுது துலைஹா ஒரு முஸ்லிம், அவரது நடவடிக்கை பற்றி எந்த வித கேள்வியும் கிடையாது’ என்று பதில் கூறி விட்டார்கள். உமர் (ரலி) அவர்களின் காலத்தில், உமர் (ரலி) அவர்களிடம் வந்து பைஅத் செய்து கொண்டார் துலைஹா அவர்கள்.

முஸைலமா என்ற பொய்யன்

பொய்த்தூதர்களை முறியடிப்பதற்காக புறப்பட்ட இஸ்லாமியப் படைகள் மிகவும் கடுமையானதொரு போராட்டத்திற்கு முகம் கொடுக்க வேண்டியதிருந்தது. எந்தப் போரும் மிகவும் எளிதாக இருக்கவில்லை. அதிலும் பனூ ஹனீஃபா கோத்திரத்தைச் சேர்ந்தவனும், நஜ்துப் பிரதேசத்தின் யமாமாப் பகுதியின் முஸைலமா வினை எதிர்த்து முஸ்லிம்கள் தொடுத்த போரானது மற்ற போர்களை விடவும் மிகக் கடுமையான போராக இருந்தது. முஸ்லிம்கள் கடுமையான முறையில் அழைக்கழிக்கப்பட்டார்கள். அவன், இறைத்தூதர் (ஸல்) அவர்களுடைய தூதுத்துவத்தில் தனக்கும் பங்கு இருப்பதாக வாதிட்டான்.

யமாமாப் பகுதி மக்களுக்கு இஸ்லாத்தின் தூதை தெளிவாக எடுத்துரைக்க எடுக்கப்பட்ட முயற்சிகளையும் இந்த முஸைலமா தனது வாதத்திறமையினால் முறியடித்தான். மேலும், தொழுகைகக்காக அழைக்கப்படும் அதானிலும் இவன் மாற்றம் செய்தான். இன்னும் மதுபானத்தையும், விபச்சாரத்தையும் ஆகுமானவைகளாக அறிவித்தான். இதன் காரணமாக, கவரப்பட்ட மக்கள், இந்த வழிகேடனைப் பின்பற்ற ஆரம்பித்தார்கள், இன்னும் இவ்வாறு பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே சென்றது. அந்தப் பகுதியெங்கும் இவனைப் பிரபலப்படுத்தியது. இன்னும் இவன் பெண் தூதுவராகத் தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்ட சஜாவை மணந்து கொண்ட பின், தன்னுடைய தூதுத்துவம் முன்னைக் காட்டிலும் வலுவடைந்திருப்பதாகவும் இவன் கூற ஆரம்பித்து விட்டான்.

எனவே, முதலில் அனுப்பி வைக்கப்பட்ட அழைப்புக்கு எந்தவித பலனும் இல்லாத காரணத்தால், இப்பொழுது போரைத் துவக்க வேண்டிய கட்டாயம் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டது. எனவே, இவனை எதிர்த்துப் போர் புரிய முதலில் இக்ரிமா (ரலி) அவர்களையும், அவர்களை அடுத்து ஷுரஹ்பில் பின் ஹஸ்னா (ரலி) அவர்களது தலைமையிலும் படைகள் அனுப்பப்பட்டன. ஆனால், இந்த இரு படைகளையும் முஸைலமா தோற்கடித்தான்.

இப்பொழுது, கலீபா அபுபக்கர் (ரலி) அவர்கள், காலித் பின் வலீத் (ரலி) அவர்களது தலைமையில் ஒரு படையைத் தயார் செய்து, முஸைலமாவை எதிர்த்துப் போர் புரிய அனுப்பி வைத்தார்கள். காலித் பின் வலீத் (ரலி) அவர்கள், சற்று முன் தான் துலைஹா என்ற பொய்யனைத் தோற்கடித்து வந்திருந்தார்கள். இன்னும் தாபித் பின் கைஸ் (ரலி) அவர்களது தலைமையில் அன்ஸார்களையும், ஸைத் பின் கத்தாப் (ரலி) அவர்களது தலைமையில் முஹாஜிர்களையும் காலித் பின் வலீத் (ரலி) அவர்களது படைகளுடன் சேர்ந்து கொள்ளும்படி கலீபா அபுபக்கர் (ரலி) அவர்கள் அனுப்பி வைத்தார்கள். காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் படை நடத்தி வருகின்றார்கள் என்பதனைக் கேள்விப்பட்ட முஸைலமா தனது படைகளை மேலும் அதிகரித்ததோடு, இப்பொழுது 40 ஆயிரம் படை வீரர்களுடன் முஸ்லிம்களை எதிர்ப்பதற்காகத் தனது படையைத் தயாராக்கி, அந்தப் படைகளை அக்ரபா என்ற இடத்தில் நிலைகொள்ள வைத்தான்.

இப்பொழுது, இரண்டு படைகளும் நேருக்கு நேர் மோதுவதற்காகத் தயாராகி விட்டன. இப்பொழுது முஸைலமாவின் படைப்பிரிவில் இருந்த நஹார் என்பவன் முன் வந்து, தன்னை எதிர்க்கும் துணிவு முஸ்லிம்களில் எவருக்கும் உண்டா? என்று கர்ஜித்து நின்றான்.

அவனது சவாலை உமர் (ரலி) அவர்களின் தம்பியான ஸைத் பின் கத்தாப் (ரலி) அவர்கள் ஏற்றுக் கொண்டு அவனுடன் மோதினார்கள். ஒரே வாள் வீச்சில் அவனது தலையைத் தரையில் உருட்டி விட்டார்கள் ஸைத் பின் கத்தாப் (ரலி) அவர்கள். இந்த நேருக்கு நேர் யுத்தம் முடிந்தவுடன், யுத்தம் ஆரம்பமாகியது.

ஆரம்பத்தில், முஸைலமாவின் படைகளை எதிர்க்க இயலாத முஸ்லிம்கள் பின்வாங்கினார்கள், இன்னும் சிறிது நேரங் கழித்து முஸ்லிம்கள் கலைந்து ஓடவும் ஆரம்பித்தார்கள். இதனைப் பயன்படுத்திக் கொண்ட முஸைலமா, காலித் பின் வலீத் (ரலி) அவர்களது கூடாரம் வரைக்கும் முஸ்லிம் படைகளை துரத்திக் கொண்டு வந்து விட்டான். ஏன்...?! காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் கூட பின்வாங்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளானார்கள்.

அப்பொழுது, கூடாரத்தில் காலித் பின் வலீத் (ரலி) இல்லை, அவர்களது மனைவி உம்மு தமீம் (ரலி) அவர்கள் மட்டும் தான் இருந்தார்கள். அங்கே காவலுக்கு முஜாஆ என்ற கைதி நின்று கொண்டிருந்தார்.

இந்த நிலையில், காலித் பின் வலீத் (ரலி) அவர்களின் மனைவியான உம்மு தமீம் (ரலி) அவர்களைக் கொலை செய்யும் நோக்கத்துடன் முஸைலமாவின் ஆட்கள் கூடாரத்தில் நுழைந்தார்கள். இதனைக் கண்ட, கைதி முஜாஆ அவர்களைத் தடுத்தி நிறுத்தியதோடு,

அந்தப் பெண்மணியோ சுதந்திரமான பெண்..!

போயும் போயும் ஒரு பெண்ணையா நீங்கள் கொல்லப் போகின்றீர்கள்..!

அதோ.. பாருங்கள். அவர்களது ஆண்கள் நிற்கின்றார்கள்..! அவர்களை எதிர்த்துப் போரிடுங்கள்..! என்றதுடன், உம்மு தமீம் (ரலி) அவர்களை விட்டு விட்டு, முஸைலமாவின் ஆட்கள் அந்தக் கூடாரத்தை விட்டும் அகன்று விடுகின்றார்கள். அந்த இடத்தை விட்டும் அகலும் பொழுது, கூடாத்தைப் பிணைத்திருந்த கயிறுகளை வெட்டி, அறுத்தெறிந்து விட்டுச் செல்கின்றார்கள்.

(முஸாஆ அவர்கள் காலித் பின் வலீத் (ரலி) அவர்களால் சிறை பிடிக்கப்பட்ட கைதியாக இருப்பினும், அந்தக் கூடாரத்தை விட்டு விட்டு காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் கிளம்பும் பொழுது, அதன் பாதுகாப்புப் பொறுப்பை முஜாஆ விடம் காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் ஒப்படைத்து விட்டுச் சென்றார்கள். காலித் பின் வலீத் (ரலி) அவர்களின் நடத்தை காரணமாகவும், முஜாஆ வைக் கௌரவமாக நடத்தியதன் காரணமாகவும் கவரப்பட்ட முஜாஆ அதற்குப் பிரதயீடாக, காலித் பின் வலீத் (ரலி) அவர்களின் மனைவியைக் காப்பாற்ற மிகவும் சாதுர்யமான முறையில் முஸைலமாவின் ஆட்களைச் சமாளித்து, அதன் மூலம் உம்மு தமீம் (ரலி) அவர்களைக் காப்பாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது).

அசைக்க முடியாத இஸ்லாத்தின் இறைநம்பிக்கையானது, சற்று நேரத்தில் தோற்று விட்டோம் நம்மால் முஸைலமாவை எதிர்த்து நிற்க முடியாது என்று சிதறி ஓடிய முஸ்லிம்களை, எவர் அசைந்தாலும், அசையாத உள்ளத்துக்குச் சொந்தக்காரரான தலைமைத் தளபதி, நிலைமையின் விபரிதத்தினைப் புரிந்து கொண்டு கன நேரத்தில், மீண்டும் சுதாரித்துக் கொண்டு, சிதறி ஓடிய முஸ்லிம்களை மீண்டும் ஒருங்கிணைத்து, அவர்களை களத்தில் நிற்க வைத்துப் போராட வைத்த நிகழ்வானது, இன்றும் வரலாற்றுப் பக்கங்களில் சாதனையாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.

ஒருவர் பின் ஒருவராக தாங்கள் வந்த நோக்கம் நிறைவேற ஒருவர் பின் ஒருவராக, தங்களை அற்பணித்துக் கொண்டிருந்தார்கள் முஸ்லிம் வீரர்கள்.

ஓடிக் கொண்டிருந்த தோழர்களைப் பார்த்து தாபித் பின் கைஸ் (ரலி) அவர்கள் கூவினார்கள்..!

என்னருமைத் தோழர்களே..!

இன்று நீங்கள் மிக மோசமானதொரு பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு விட்டீர்களே..!

யா அல்லாஹ்..!

இந்த யமாமா மக்கள் வணங்குபவற்றை விட்டும், (ஓடிக் கொண்டிருக்கின்றார்களே) இந்த முஸ்லிம்களின் செயல்களை விட்டும் நான் ஒதுங்கிக் கொண்டேன்.

இதோ ..! இங்கே பாருங்கள்.. தோழர்களே..!

இவ்வாறு தான் தாக்க வேண்டும் என்று கூறிக் கொண்டே எதிரியை நோக்கி விரைந்தார்கள் தாபித் பின் கைஸ் (ரலி) அவர்கள். எதிரிகளில் ஒருவனைத் தாபித் கைஸ் (ரலி) அவர்கள் தாக்கிய பொழுது, அவன் கொடுத்த எதிர்த் தாக்குதலின் காரணமாக, தாபித் பின் கைஸ் (ரலி) அவர்கள் தொடை துண்டிக்கப்பட்டது. மிகவும் துணிச்சலானதொரு முஸ்லிம் வீரர் ஒருவர், துண்டிக்கப்பட்ட தொடையை எடுத்து எதிரியின் பக்கம் வீசினார்கள், அந்தத் தொடை எவன் மீது பட்டதோ அவன் அக்கணமே உயிரை விட்டான். தாபித் பின் கைஸ் (ரலி) அவர்களும், உயிர்த்தியாக ஆகி விட்டார்கள்.

இருப்பினும், முஸ்லிம்கள் இன்னும் தங்களது கூடாத்தை விட்டும் வெகு தூரம் விரட்டப்பட்ட நிலையில் இருந்தார்கள். இந்த நிலையில் முஸ்லிம்களைப் பார்த்து, ஸைத் பின் கத்தாப் (ரலி) அவர்கள் கூறினார்கள்..!

(ஓடிக் கொண்டிருந்த முஸ்லிம்களைத் தடுத்த நிறுத்திய) அவர் கூறினார், இந்தக் கூடாரம் காலியானதன் பின் நீங்கள் எங்கு தான் போக முடியும்?

இறைவன் மீது சத்தியமாக..!

எதிரியைத் துரத்தி அடித்து வெற்றி வாகை சூடும் வரையிலும், அல்லது இறைவனிடம் என்னை ஒப்படைக்கும் வரையிலும், இதற்கு மேல் நான் ஒரு வார்த்தை பேச மாட்டேன். அதன் காரணமாக நான் அவனிடம் மன்னிப்பைப் பெற்றுக் கொள்ள முடியும்.

இதனைக் கூறிக் கொண்டே எதிரியை நோக்கிப் பாய்ந்த ஸைத் பின் கத்தாப் (ரலி) அவர்கள், அவர்களது கையில் வாளை ஏந்திக் கொண்டிருந்த நிலையிலேயே இறையடி சேர்ந்தார்கள்.

அவருக்குப் பின் அபூ ஹுதைபா (ரலி) அவர்கள், இவ்வாறு கூறிக் கொண்டே எதிரியின் மீது பாய்ந்தர்கள்.

ஓ..! என்னருமைக் குர்ஆனிய மக்களே..!

உங்களது செயல்களின் மூலம் குர்ஆனை அழகுபடுத்துங்கள்..!

இப்பொழுது அபூ ஹுதைபா (ரலி) அவர்களும் கொல்லப்பட்டார்கள்.

ஸைத் பின் கத்தாப் (ரலி) அவர்களும் கொல்லப்பட்ட பின், பராஆ பின் மாலிக் (ரலி) (இவர் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் உதவியாளரான அனஸ் (ரலி) அவர்களின் சகோதரரவார்) அவர்கள் முன் வந்தார்கள். இவரிடம் ஒருவிதமான பழக்கம் இருந்தது. அதாவது, போருக்குக் கிளம்பு முன் அதன் உத்வேகத்தால், இவரது உடல் குலுங்க ஆரம்பித்து விடும், எந்தளவுக்கெனில் பிறர் இவரைப் பிடித்து நிறுத்தும் அளவுக்கு உடல் குலுங்க ஆரம்பித்து விடும். இப்பொழுது, முஸ்லிம்கள் தோல்வியைச் சந்திக்கக் கூடிய நிலையில் இருந்து கொண்டிருப்பதை நினைத்தும், அடுத்து நாம் களத்தில் மிகவும் உத்வேகத்துடன் இறங்க வேண்டிய சூழ்நிலை வந்திருப்பதையிட்டும், அவரது உடல் குலுங்க ஆரம்பித்தது. அந்த நிலையிலேயே, தனது தோழர்களைப் பார்த்துக் கூவி அழைக்க ஆரம்பித்தார்.

என்னருமை முஸ்லிம்களே..!

நீங்கள் எங்கு செல்கின்றீர்கள்?

இங்கே பாருங்கள்..!

உங்களது சகோதரன் பராஆ பின் மாலிக்..! நின்று கொண்டிருக்கின்றேன்.

என்னிடம் விரைந்து வாருங்கள்..!

பராஆ பின் மாலிக் (ரலி) அவர்கள் கூவியழைத்ததன் தாக்கம், உணர்வு கொண்ட சில முஸ்லிம் வீரர்கள் பராஆ வை நோக்கி, தங்களது அற்பணம் செய்யும் நோக்கில் திரண்டு வந்தார்கள். வந்த வேகத்திலேயே எதிரியுடன் களம் புகுந்து போராட ஆரம்பித்தார்கள்.

இந்தப் புதுவித தாக்குதலை எதிர்பாராத எதிரிகளால், இந்தக் குழுவினரைத் தாக்குப் பிடிக்க இயலாமல் பின்வாங்க ஆரம்பித்த எதிரிகள், முஸைலமாவின் தீவிர ஆதரவாளனான முஹக்கம் பின் அல் துஃபைல் என்பவன் கூடாரமடித்திருந்த இடம் வரை வந்து விட்டார்கள். பின்வாங்கி ஓடிய எதிரிகள் தங்களது ஆட்களைப் பார்த்ததும் முஸ்லிம்களைத் தாக்குவதற்காகத் தங்களது தோழர்களைக் கூவி அழைக்க ஆரம்பித்தார்கள். இந்த நிலையில் அப்துர் ரஹ்மான் பின் அபுபக்கர் (ரலி) அவர்கள் எய்ததொரு அம்பு அல் துஃபைல் ன் கழுத்தில் சொருகியது. அந்த நிலையிலேயே அவன் இறந்து தரையில் சரிந்தான்.

முஸ்லிம்களின் இந்த முன்னேற்றம் புதுவிதத் தெம்பை முஸ்லிம்களுக்கு அளித்தது. இதன் காரணமாக அவர்கள் எதிரிகளை ஹதீகா என்ற இடம் வரை பின்வாங்கச் செய்தார்கள். இந்த இடத்தில் முஸைலமா பாதுகாப்பானதொரு கோட்டையில் நுழைந்து கொண்டு, தன்னைப் பாதுகாத்துக் கொள்ள ஆரம்பித்தான். அவனைத் தொடர்ந்து அவனது ஆட்களும் அந்த கோட்டைக்குள் நுழைந்து கொண்டு, கோட்டைக் கதவைத் தாழிட்டுக் கொண்டார்கள்.

இப்பொழுது, பராஆ பின் மாலிக் (ரலி) அவர்கள் தனது தோழர்களை அழைத்து, தோழர்களே..! இந்த தாழிடப்பட்ட கோட்டை மதில்களையும் தாண்டி, கோட்டைக்குள் என்னைத் தூக்கி எறியுங்கள் என்று கேட்டுக் கொண்டார். அங்கிருந்த தோழர்கள் இந்த ஆபத்தான செயலில் இறங்க மனமில்லாமல் நின்று கொண்டிருந்தார்கள். ஆனால், பராஆ பின் மாலிக் (ரலி) அவர்கள் தனது தோழர்களை வற்புறுத்தி, தன்னை கோட்டைக்குள் தூக்கி எறியுமாறு வேண்டிக் கொண்டார்.

பின், கோட்டைச் சுவரின் மீதேறி கோட்டைக்குள் குதித்த பராஆ பின் மாலிக் (ரலி) அவர்கள், நேரே வாயிற் கதவருகே சென்று வாயிற் கதவை முஸ்லிம்கள் நுழைவதற்காகத் திறந்து விட்டார். கோட்டைக் கதவு திறந்தவுடன், உள்ளே நுழைந்த முஸ்லிம் வீரர்கள் எதிரிகளைத்தாக்க ஆரம்பித்தார்கள். ஆனால், எதிரிகளும் சளைக்காமல் போரிட்டார்கள், முஸைலமா தனது இடத்தை விட்டும் அகலவில்லை, விட்டுக் கொடுக்காது போரிட ஆரம்பித்தான்.

இப்பொழுது, காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் தனது யுத்த தந்திரத்தை மாற்றி அமைக்க ஆரம்பித்தார்கள். ஒவ்வொரு கோத்திரத்தாரையும் அழைத்து, அவரவர் அந்த கோத்திரத்துத் தலைவருக்குக் கீழ் போரிடுமாறு, தனது தோழர்களைக் கேட்டுக் கொண்டார். இதன் மூலம் யார் பலவீனமாக இருக்கின்றார்கள் என்பது தெரிந்து விடும்.

இப்பொழுது, ஒவ்வொரு கோத்திரத்தாரும் தங்களது திறமையையும், தங்களது முழுப்பலத்தையும் பிரயோகித்துத் தங்களது அணிக்கு கௌரவம் சேர்க்க வேண்டும், பலவீனமான நிலையில் நாம் இருந்து விடக் கூடாது, நமக்கு ஒப்பாக யாரும் இல்லை' என்று சொல்லும் அளவுக்கு போரிட வேண்டும் என்ற உத்வேகம் பிறக்கவே, முன்னைக்காட்டிலும் அனைவரும் மிகவும் உத்வேகத்துடன் போரிட ஆரம்பித்தார்கள்.

முஹாஜிர்கள் பக்கமும், அன்ஸாரிகள் பக்கமும் மிகவும் அதிகமான இழப்புகள் ஏற்பட்டன. இருப்பினும், இன்னும் முஸைலமா தனது பிடியை சற்றும் தளர்த்தாமல் போரிட்டுக் கொண்டிருந்தான். முஸைலமா கொல்லப்படாதது வரைக்கும் இந்தப் போர் நிற்காது என்பதை காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் உணர ஆரம்பித்தார்கள். இப்பொழுது, காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் முன்வந்து, தனி நபர் யுத்தத்திற்குத் தயாரா? என்னை எதிர்க்கும் சக்தி உங்களில் எவருக்கேனும் உண்டா? என்று கூவி அழைக்க ஆரம்பித்தார். அவரது அறைகூவலை ஏற்று முன்வந்த பலர் அவரது வாளுக்கு இரையாகி உயிரை மாய்த்துக் கொண்டனர். இவ்வாறாக முன்னேறிக் கொண்டிருந்த காலித் பின் வலீத் (ரலி) அவர்கள், இறுதியாக முஸைலமா இருக்கின்ற இடத்தினருகே வந்து விட்டார். அவனிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டே, அவன் எதிர்பாராத வகையில் அதிரடித் தாக்குதல் ஒன்றை நடத்திய காலித் பின் வலீத் (ரலி) அவர்கள், அந்த அதிரடித் தாக்குதலின் காரணமாக நிலைகுலைந்தான் முஸைலமா.

பின் தனது தோழர்களைப் பார்த்து, காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் கூறினார்கள். தோழர்களே..! நீங்கள் தைரியத்தை இழக்க வேண்டாம். உறுதியாக நின்று நீங்கள் தாக்கினீர்கள் என்றால், அதனைச் சமாளிக்கும் சக்தி அவர்களுக்குக் கிடையாது, எதிரியைச் சுலபமாக வீழ்த்தி விடலாம் என்று ஆர்வமூட்டினார்.

ஒரு தாக்குதலையே சமாளிக்க முடியாமல் நிலைகுலைந்து விட்டான். ஒரு தாக்குதலையே, தலைவரால் தாக்குப்பிடிக்க முடியவில்லையே என்று கூறிக் கொண்டு, முஸைலமாவின் ஆட்கள் இப்பொழுது கலைந்து ஓட ஆரம்பித்தார்கள். இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் முஸைலமாவின் ஆதரவாளர்கள் கேட்டார்கள்,

முஸைலமாவே..

உனக்கு அருளப்பட்டிருப்பதாக வாதிட்டாயே, அந்த வேத வாக்குறுதிகள் என்னவாயிற்று இப்பொழுது?

முஸைலமா பதில் கூறினான் :

'எதனைப் பாதுகாப்பதற்காக நீங்கள் அணி திரண்டிருக்கின்றீர்களோ, அந்த உங்களது கண்ணியத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்'.

இந்த வார்த்தைகளை அவன் முழுவதுமாகச் சொல்லி முடித்திருக்கவில்லை,

ஹம்ஸா (ரலி) அவர்களைக் கொன்ற அதே வஹ்ஸி (ரலி) அவர்கள், தான் இஸ்லாத்திற்கு முன்னிருந்த பொழுது ஹம்ஸா (ரலி) அவர்களைக் கொன்றதனை ஈடு செய்யும் பொருட்டு, தன் கையிலிருந்த வேல் கம்பை முஸைலமாவை நோக்கி வீசினார். அதனை சமாளிக்க இயலாத முஸைலமா கீழே வீழ்ந்த பொழுது, அன்ஸாரிகளில் உள்ள இளைஞரொருவர், அவனது கழுத்தை வெட்டி சாய்த்தார்.

அபீசீனியா அடிமையான வஹ்ஸி (ரலி) அவர்களின் கரங்களால், முஸைலமா கொல்லப்பட்டு விட்டான் என்ற செய்தி காட்டுத் தீ போல போர்க்களத்தில் பரவ ஆரம்பித்தது. இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட முஸைலமாவின் ஆட்கள் நாலா பக்கமும் சிதறி ஓட ஆரம்பித்தார்கள். இத்துடன், முஸ்லிம் படை முஸைலமாவிற்கு எதிரான போரில் மிகப் பெரும் வெற்றியைப் பெற்றது.

இந்தப் போரில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான எதிரிகள் கொல்லப்பட்டார்கள் என்று தபரி அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். இதன் காரணமாக, இந்தப் பகுதியை 'மரணப் பூங்கா' என்றழைக்கப்படுவதுண்டு.

இப்பொழுது, காலித் பின் வலீத் (ரலி) அவர்கள், முஸைலமாவின் உடலை முஜாஆ அவர்களின் துணையுடன் அடையாளம் கண்டு கொண்டார்கள். இந்தப் போரில் முஹாஜிர்களும், அன்ஸாரிகளுமாக 300 பேர்களும், இன்னும் அவர்களல்லாத மற்ற பகுதிகளில் இருந்து வந்து கலந்து கொண்ட முஸ்லிம்கள் 300 பேர்களும், உயிர்த்தியாகிகளானார்கள்.

வெற்றியை கலீபா அவர்களுக்கு அறிவிக்கு முகமாக, பனூ ஹனீஃபா கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவரையே தனது பிரதிநிதியாக காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் அனுப்பி வைத்தார்கள்.

தன்னிடம் வந்த பனூ ஹனீஃபா கோத்திரத்தைச் சேர்ந்த அந்தப் பிரதிநிதியிடம், பாவச்சுமைகளுடன் உங்களது கோத்திரத்தாரின் உயிர்கள் பிடுங்கப்பட்டது குறித்து நான் வருத்தமடைகின்றேன், அவர்கள் நடந்து கொண்ட விதம் மிகவும் கீழ்த்தரமானது என்று அபுபக்கர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

நீங்கள் கேள்விப்பட்டதும், சொல்வதும் அனைத்தும் உண்மையே என்று அந்தப் பிரதிநிதியானவர், அபுபக்கர் (ரலி) அவர்களிடம் கூறினார்.

முஸைலமாவினுடைய போதனைகள் தான் என்ன? சற்று கூறுங்கள் பார்ப்போம் என்றார்கள்.

இதே அதனுடைய நகல் என்னிடமிருக்கின்றது என்று கூறிய அவர் கலீஃபா அபுபக்கர் (ரலி) அவர்களது முன்னிலையில் அதனை வாசித்துக் காண்பிக்க ஆரம்பித்தார் :

“ஓ.. தவளையே..! இது வேதமாகும். குடிப்பவரைத் தடுக்காதீர்கள், தண்ணீரை அசுத்தமாக்காதீர்கள். இந்த உலகத்தின் பாதி நமக்குரியது, மற்ற பாதி குறைஷிகளுக்குரியது. ஆனால் குறைஷிகள் மிகவும் கொடூரமானவர்கள்''.

இதனைக் கேட்ட அபுபக்கர் (ரலி) அவர்கள் இறைவனைப் புகழ்ந்தவர்களாக, உங்களை இரக்கப்படுவதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறிய அபுபக்கர் (ரலி) அவர்கள், இது தான் உங்களது வேத வசனங்களா? இதில் எந்த தெய்வீகத் தன்மையும் இல்லையே..! இவ்வாறிருக்கும் பொழுது, எது தான் சத்தியத்திலிருந்து உங்களைப் பாதை மாற்றிச் சென்றது? தபரி, 3ம் பாகம், பக்.254.

சுருங்கச் சொன்னால், பொய்த்தூதர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் அங்கும் இங்குமாக சில நிகழ்வுகளில் முஸ்லிம்கள் தைரியம் இழந்து பின்வாங்கினாலும், அத்தகைய சந்தர்ப்பங்களை அடுத்து மீண்டும் அவர்கள் சுதாரித்துக் கொண்டு போரிட்டார்கள், பொய்த்தூதர்களை வேரறுத்தார்கள். ஹிஜ்ரி 11 ஆம் ஆண்டில், பொய்த்தூதர்கள் வேரறுக்கப்பட்ட செய்தி அடுத்தடுத்த பகுதிகளுக்கும் பரவ ஆரம்பித்தது, குறுகிய 9 மாத கால அவகாசத்தில், மதீனா விலிருந்து பஹ்ரைன் வரைக்கும் மற்றும் அம்மான் ஆகிய பகுதிகளும் இப்பொழுது முஸ்லிம்களின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது.

ஈராக் மீதான படையெடுப்பு

பொய்த்தூதர்களை ஒரு வழியாக அடக்கி விட்டதன் பின்பு, இப்பொழுது கலீபா அபுபக்கர் (ரலி) அவர்கள், ஈராக்கின் தனது கவனத்தைத் திசை திருப்பினார்கள். இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் மிகப் பெரும் எதிரிகளாக விளங்கிய பைஸாந்தியம் மற்றும் பெர்ஸியப் படைகள் முஸ்லிம்களின் ஆட்சிப் பிரதேசத்திற்கு அதிகமான அச்சுறுத்தல்களைத் தந்து கொண்டிருந்தன. பல்வேறு அரச அலுவல்களுக்கு இடையேயும் கலீபா அவர்கள் எவ்வளவு தூரம் இந்த ஈராக் விவகாரத்தின் மீது மிகுந்த கவனம் செலுத்தி வந்தார்கள் என்பதைக் கீழ்க்கண்ட சம்பவத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியும்.

ஒருநாள் ஒரு நபித்தோழர் தனது குலத்தவர்களில் சிலரைப் பற்றிய பிரச்சினையை விவாதிப்பதற்காக அபுபக்கர் (ரலி) அவர்களிடம் வந்தார். இந்த விவகாரத்தைக் கேட்டு அதில் கலீபா அவர்களின் இறுதி முடிவை எதிர்பார்த்திருந்த அவரை நோக்கி, ''இஸ்லாத்தையும், அதனைப் பின்பற்றிக் கொண்டிருக்கின்ற முஸ்லிம்களையும் அழித்தொழிப்பதற்கான சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி இருக்கும், இரண்டு எதிரிகளைப் பற்றி நான் இங்கு சிந்தித்துக் கொண்டிருக்கும் பொழுது, இந்த அற்பப் பிரச்னையைக் கொண்டு வந்து, எனது கவனத்தைத் திசை திருப்பப் பார்க்கின்றீர்களே.. இது நியாயமா?”” என்று கூறினார்கள்.

ஹிஜ்ரி 6 ஆம் ஆண்டின் பொழுது இஸ்லாத்தினை ஏற்றுக் கொள்ளுமாறு பல்வேறு நாட்டு அரசர்களுக்கு அழைப்பு மடல்களை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள். அவ்வாறானதொரு மடலை ஏந்திக் கொண்டு பெர்ஸியாவின் மன்னர் குஷ்ரூ பர்வேஸ் அவர்களைச் சந்தித்து வழங்குவதற்காக, அப்துல்லா பின் ஹுதைபா (ரலி) என்ற தோழர் சென்றார். அந்த மடலில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது :

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கின்றேன். பெர்ஸியாவின் மன்னரான கிஸ்ரா அவர்களுக்கு அல்லாஹ்வின் தூதரான முஹம்மத் அவர்கள் எழுதிக் கொள்ளும் மடல். அல்லாஹ்வையும், அவனது தூதரையும் இன்னும் நேர்வழியைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு இறைவனுடைய ஆசி உண்டாவதாக! அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாரும் இல்லை. அவனுக்கு இணை துணை ஏதும் இல்லை, முஹம்மத் அத்தகைய இறைவனின் தூதராகவும், அடிமையாகவும் இருக்கின்றார். நான் அல்லாஹ்வின் தூதுத்துவத்தை உங்களுக்கு தெரிவித்து (இஸ்லாத்தின் பால்) அழைப்பு விடுக்கின்றேன், (இத்தகைய பணிக்காகவே) முழு உலக மக்களுக்கும் தூதராக அல்லாஹ் என்னை அனுப்பி வைத்துள்ளான். இந்தப் பூமியில் வசிப்பவர்களின் உள்ளங்களில் இறைவனது அச்சத்தை ஊட்டவும், நிராகரிப்பில் வாழ்கின்ற மக்களுக்கு சத்தியத்தை விளங்கப்படுத்தவுமே என்னை இறைவன் தூதராக அனுப்பி வைத்துள்ளான். (எனவே) இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள் மற்றும் அதன் மூலம் நீங்கள் சாந்தியைப் பெற்றுக் கொள்வீர்கள். அதனை நிராகரிப்பீர்கள் என்று சொன்னால், நெருப்பை வணங்கிய குற்றத்திற்காக நீங்கள் பொறுப்பாளியாக (குற்றம் சுமத்தப்பட்டு குற்றவாளியாக மறுமை நாளில்) ஆக்கப்படுவீர்கள்””.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அனுப்பிய இந்த சத்திய அழைப்பு மடலை பார்த்த மாத்திரத்தில் அதனைக் கிழித்தெறிந்த மன்னர் குஷ்ரூ, யமனின் கவர்னராக இருந்த பதான் என்பவருக்கு ஒரு மடலை எழுதினார். அதில், ஹிஜாஸ் க்கு இரண்டு குதிரை வீரர்களை அனுப்பி, இந்தக் கடிதத்தை எழுதி எனக்கு அனுப்பி வைத்த மனிதரை என்னிடம் அனுப்பி வைக்கும்படி உத்தரவிட்டிருந்தார். மன்னர் குஷ்ரூ வின் கடிதத்தைப் பார்த்த யமனின் கவர்னர் பதான், பாபூயா என்பவரையும், பெர்ஷிய வீரனான கர்கரா என்பவரையும் அனுப்பி, அவர்களிடம் ஒரு மடலையும் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு அனுப்பி வைத்தார். அந்தக் கடிதத்தில் இந்தக் கடிதத்தைக் கொண்டு வரும் தூதர்களுடன் சென்று, மன்னர் குஷ்ரூ அவர்களைச் சென்று சந்திக்கும்படிக் கூறி தெரிவித்திருந்தார். இந்தத் தூதர்கள் இருவரும், தாயிஃப் நகர் வழியாக மதீனாவுக்கு வந்து கொண்டிந்தார்கள். இவர்களது வருகையின் நோக்கம் முழு அரேபியாவுக்கும் இப்பொழுது தெளிவாகத் தெரிந்திருந்தது. இறைத்தூதர் (ஸல்) அவர்களின் முன் நின்று கொண்டிருந்த பாபுயா, மன்னர்களின் மன்னரான கிஷ்ரா அவர்கள், உங்களை மன்னரது சமூகத்திற்கு அழைத்து வரும்படி யமனின் கவர்னருக்கு இட்ட உத்தரவின் பேரில் நாங்கள் இங்கு வந்துள்ளோம் என்று கூறினார். அந்தக் கடிதத்தில், மேன்மைமிகு எங்களது மன்னரது கட்டளையை ஏற்று நீங்கள் எனது தூதுவர்களுடன் மன்னரது அவைக்கு வருவீர்கள் என்று சொன்னால், எங்களது மன்னர் உங்களை அரசராக ஆக்குவதற்கு பரிந்துரைக்க முடியுமாக இருக்கும் என்பதை வாய்மையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த நல்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றால், யமன் தேசத்து இளவரசனான நான் உங்களையும், உங்களது நாட்டையும் இல்லாமலாக்கி விடுவேன் என்பதனையும் நீங்கள் அறிவீர்கள் என்றும் அந்தக் கடிதத்தில் எச்சரிக்கப்பட்டிருந்தது. நன்றாக முகச்சவரம் செய்து, இன்னும் மீசையை பெரிதாக வளர்த்திருந்த அந்தத் தூதுவர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ள இயலாத நிலையில் அவர்களை நோக்கிப் பார்வையை வீசிய இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ''நான் உங்கள் மீது இரக்கப்படுகின்றேன்”” என்று கூறி விட்டு, யாருடைய உத்தரவின் பேரில் உங்களது முகங்கள் இவ்வாறு வெறுமையாக உள்ளன என்று கேட்டார்கள். ''எங்களது இரட்சகரான மன்னர் கிஷ்ரா”” என்று அவர்களிடம் பதில் வந்தது. இப்பொழுது இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ''மீசையை மழித்துக் கொள்ளுங்கள், தாடியை வளர விடுங்கள்”” என்று அவர்களைப் பார்த்துக் கூறி விட்டு, இன்றைய பொழுதை இங்கேயே நீங்கள் கழித்து விட்டு, நாளை மீண்டும் வந்து என்னைப் பாருங்கள் என்று கூறி விட்டுச் சென்றார்கள்.

மறுநாள் இறைத்தூதர் (ஸல்) அவர்களை குஷ்ருவின் தூதுவர்கள் சந்திக்க வந்த பொழுது, உங்களது மன்னாதி மன்னர் அவரது மகனால் இன்ன இரவில் கொல்லப்பட்டு விட்டார். கொலைகாரனான உங்களது மன்னனிடம் நீங்கள் சென்று, என்னுடைய நம்பிக்கையான இஸ்லாமும், என்னுடைய அதிகாரமும் விரைவில் உங்களது பூமியையும், உலகத்தின் கடைசி முனையையும் அது அடையும் என்று தெரிவியுங்கள் என்று கூறினார்கள். இன்னும், நீங்கள் இஸ்லாத்தைத் தழுவினீர்கள் என்று சொன்னால், உங்களது ஆட்சிப் பிரதேசங்களுக்கு உங்களையே ஆட்சியாளர்களாக நியமிப்போம் என்றும் அவர்களிடம் தெரிவியுங்கள். அந்தத் தூதுவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களை விட்டும் பிரிந்து செல்லும் பொழுது, ஒரு இளவரசர் ஒருவர் அன்பளிப்பாக அளித்த தங்கத்தினாலான இடுப்பில் அணியக் கூடிய வார்ப்பட்டை ஒன்றை அவர்களுக்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பரிசாக அளித்தார்கள். இன்னும் இவர்கள் யமனின் கவர்னரைச் சென்று சந்தித்த பொழுது, நடந்த அத்தனை விபரங்களையும் தெரிவித்ததோடு, ''உண்மையில் அவர் ஒரு இறைவனது தூதராகவே இருக்கக் கூடும்”” என்றும் தெரிவித்தார்கள். அடுத்த சில நாட்களில், மன்னர் படுகொலைக்கு ஆளான செய்தி யமனை வந்தடைந்தது. அத்துடன், அரேபியாவின் விவகாரத்தில் எந்த விதத்திலும் தலையீடு செய்ய வேண்டாம் என்றும் யமனின் ஆட்சியாளருக்கு அறிவுறுத்தலும் வந்தடைந்தது. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறப்பெய்வதற்கு முன்னர், பதான் மற்றும் யமனில் வாழ்ந்த பெர்ஸியர்கள் அனைவரும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு விட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பெர்ஸியாவின் மன்னர் குஷ்ரு அவர்கள் படுகொலை செய்யப்பட்டதன் பின்பு, ஆட்சி அதிகாரத்தைப் பிடிப்பதில் போட்டா போட்டி நிலவியது. இதில் 12 அல்லது 13 நபர்கள் போட்டியிட்டதில், அவர்களுள் பெண்களும் இருந்தனர். நாடெங்கும் அரசியல் ஸ்திரத்தன்மை நிலவியது. முதலாவது கலீஃபா அபுபக்கர் (ரலி) அவர்களது காலத்தில், ஈராக் பிரதேசத்தை பெர்ஸியாவின் கவர்னர் ஹெர்மூஸ் அவர்ள் ஆண்டு கொண்டிருந்தார். இவர் அரேபிய மக்கள் மீது தீராத தொல்லைகளைக் கொடுத்துக் கொண்டுமிருந்தார். எனவே, அரபுக்களும் அவரை வெறுத்தனர்.

எனவே, அபுபக்கர் (ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டதன் பின்பு, ஈராக் பகுதியில் வாழும் முஸ்லிம்களைப் பாதுகாப்பதற்குண்டான ஏற்பாடுகளைத் துவங்க ஆரம்பித்தார்கள். இருப்பினும், நாடெங்கும் கிளர்ந்தெழுந்திருந்த பொய்த் தூதுவர்களை அடக்குவதற்கு அவர் முன்னுரிமை கொடுத்ததன் காரணமாக, ஈராக் மீது படையெடுப்பு நடத்துவதற்குண்டான சாத்தியக் கூறுகள் குறைவாக இருந்தன.

இந்த நிலையில், மதனா (ரலி) என்ற நபித்தோழர், இந்தப் பிரச்னைக்கு முற்றுப் புள்ளி வைப்பதற்காக முன் வந்ததோடல்லாமல், தனது குலத்தவர்களுக்கு தன்னை அமீராக நியமிக்கும்பட்சத்தில், எல்லைக் கோட்டுப் பகுதியில் இருந்து வரும் தொல்லைகளுக்கு எதிராக தான் போராடத் தயாராக இருப்பதாகவும் கலீபா அவர்களிடம் தெரிவித்தார். மதனா (ரலி) அவர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டதன் பின்பு, மதனா (ரலி) அவர்கள் ஈராக் சென்று போர் செய்ததோடல்லாமல், பெர்ஸியர்களின் வலிமை ஆகியவற்றைக் கணித்ததோடு, அவர்களது தொந்தரவுகளை சற்று மட்டுப்படுத்தியும் வைத்திருந்தார்.

காலித் பின் வலீத்

பெர்ஸியாவைக் கைப்பற்றியதில் காலித் பின் வலீத் (ரலி) அவர்களின் பங்கு மகத்தானது. பொய்த்தூதர்கள் முறியடிக்கப்பட்டதன் பின்பு, அபுபக்கர் (ரலி) அவர்கள் பெர்ஸியாவைக் கைப்பற்றும் பொறுப்பை காலித் பின் வலீத் (ரலி) அவர்களிடம் கொடுத்ததோடு, காலித் பின் வலீத் (ரலி) அவர்களின் தலைமையில் 10 ஆயிரம் வீரர்களையும், அதன் பின் மதன்னா (ரலி) அவர்களின் தலைமையில் 8 ஆயிரம் வீரர்களையும், ஆக மொத்தம் 18 ஆயிரம் வீரர்களோடு களம் இறங்கினார்கள் காலித் பின் வலீத் (ரலி) அவர்கள். (இந்த வரலாற்றை விரிவாக அறிந்து கொள்ள இணையத்தில் உள்ள காலித் பின் வலீத் (ரலி) அவர்களது வாழ்க்கை வரலாற்றைப் பார்வையிடவும்).

சிரியா (ஹிஜ்ரி 13)

இந்த கால கட்டத்தில் சிரியாவானது ரோமர்களின் ஆட்சிப் பிரதேசத்தில் இருந்து வந்தது. ஈராக்கினைப் போலவே, ரோமப் பிரதேசத்தில் வாழ்ந்து கொண்டிருந்த அரபுக் குலத்தவர்களுக்கும் ஹிஜாஸில் வாழ்ந்து கொண்டிருந்த அரபுக்களுக்கும் தொடர்புகள் பல இருந்து வந்தன. மதீனாவிற்கு முஸ்லிம்கள் ஹிஜ்ரத் செய்து வந்த பின்பு யூதர்களின் எதிர்ப்புக்கள், முஸ்லிம்களுக்கு எதிராக அதிகமாகிக் கொண்டே வந்தன. இந்த எதிர்ப்புகள் மதீனாவின் எல்லை மற்றும் அதன் சுற்றுப் புறங்களில் வாழ்ந்து வந்த குலத்தவர்களைப் பாதிக்க ஆரம்பித்தது, ஆங்காங்கே சிறு சிறு பிரச்னைகள் தலைதூக்க ஆரம்பித்திருந்தன.

ஹிஜ்ரி 8 ம் ஆண்டில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ரோமர்களுக்கு எதிராக மிகப் பெரிய படையெடுப்பு ஒன்றை எடுத்தார்கள், அதற்கு முஅத்தா போர் என்று வரலாறு சிறப்பித்துக் கூறுகின்றது. இந்தப் போரில் மிகச் சிறிய முஸ்லிம்களின் படையானது, மிகப் பெரும் படையான ரோமர்களை எதிர்த்துக் களமிறங்கியது. ரோமர்களின் படையை ஹிராக்குளியஸ் மன்னனே நடத்தி வந்ததோடு, அவனது படையில் அரபுக்களும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போரில் ஜஃபர் தய்யார் (ரலி) மற்றும் ஸைத் பின் ஹாரிதா (ரலி) ஆகிய இருவரும் ஷஹீது என்ற வீரத்தியாகிகளானார்கள். ஹிஜ்ரி 9 ஆம் ஆண்டு, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தானே தலைமையேற்று 30 ஆயிரம் தனது தோழர்களுடன் தபூக் நோக்கி படை எடுத்துச் சென்றார்கள். ரோமர்களை எதிர்த்துக் களமிறங்கிய இந்தப் படையின் தொடர்ச்சியாகத் தான், அபுபக்கர் (ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற பின் உஸாமா (ரலி) அவர்களின் தலைமையேற்க ஒரு படையை, ரோமர்களை எதிர்த்துப் போரிடும் பொருட்டு அனுப்பி வைத்தார்கள் என்பதும், இந்தப் படைக்குத் தலைவராக உஸாமா (ரலி) அவர்களை நியமித்து விட்டதன் பின்னாள் தான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மரணமடைந்தார்கள் என்பதையும் நாம் அறிவோம்.

ரோம மற்றும் பாரசீகப் பேரரசுகள் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் மீது எப்பொழுதும் போர் தொடுப்பதற்கான சந்தர்ப்பத்தை எதிர்நோக்கியே இருப்பதால், அபுபக்கர் (ரலி) அவர்கள் இப்பொழுது ரோமப் பேரரசின் நடவடிக்கைகள் குறித்து எப்பொழுதும், ஒரு உஷாராகவே இருந்தார்கள். ஈராக்கை வெற்றி கொண்டதன் பின்னாள், காலித் பின் ஸயீத் (ரலி) அவர்களது தலைமையில் ஒரு படையை சிரியாவை நோக்கி அபுபக்கர் (ரலி) அவர்கள் அனுப்பி வைத்தார்கள். இந்தப் படையை தைமா என்ற இடத்தில் தங்குமாறும், தனது அடுத்த கட்டளை கிடைக்கும் வரை போரைத் துவக்க வேண்டாம் என்றும் அபுபக்கர் (ரலி) அவர்கள் உத்தரவிட்டிருந்தார்கள். மேலும், நாமாகச் சென்று போரைத் துவக்க வேண்டாம் என்றும், எதிரிகள் போரைத் திணிக்கும்பட்சத்தில் நம்முடைய பகுதிகளைத் தற்காத்துக் கொள்வதற்குண்டான முறையில் போர் செய்யுமாறும் கலீபா அபுபக்கர் (ரலி) அவர்கள் தனது தளபதிக்கு உத்தரவிட்டிருந்தார்கள். மேலும், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தூதுத்துவத்தை மறுத்து, பொய்த்தூதர்களுடன் கூட்டு வைத்திருப்பவர்களைத் தவிர்த்து, அப்பகுதியில் உள்ள ஏனைய குலத்தவர்களை கலந்தாலோசனை செய்து நம்முடைய படைகளுடன் சேர்த்துக் கொள்ள முயற்சிகளை மேற்கொள்ளுமாறும் பணித்தார்கள். முஸ்லிம்களின் இந்த நடவடிக்கைகளைக் கண்டு ரோமர்கள் எச்சரிக்கை அடைந்து, முஸ்லிம்களை எதிர்ப்பதற்குண்டான படைகளைத் தயாரித்ததோடு, அந்தப் படைகளை முஸ்லிம்கள் கூடாரமடித்திருக்கும் தைமா என்ற இடத்திலிருந்து, லாக்ம், கஸ்ஸான் மற்றம் ஜுதாம் என்ற மூன்று ஊர்களுக்கு அப்பால், முஸ்லிம்களுடன் போர் புரிவதற்குப் பதிலாக எச்சரிக்கையாகத் தனது படைகளை ஹிராக்கிளியஸ் நிறுத்திக் கொண்டான்.

ஹிராக்கிளியஸ் ன் இந்த நடவடிக்கைகள் பற்றி கலீஃபா அபுபக்கர் (ரலி) அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. இதனை அறிந்த அபுபக்கர் (ரலி) அவர்கள், சற்றும் தாமதிக்கமால், அல்லாஹ்வின் திருப்பெயர் கொண்டு போரைத் துவக்குமாறு, காலித் பின் ஸயீத் (ரலி) அவர்களுக்கு உத்தரவிட்டார்கள்.

போரைத் துவக்குங்கள், எக்காரணம் கொண்டும் போரை நிறுத்த வேண்டாம், இறைவனிடம் உதவி கோரி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் என்றும் அபுபக்கர் (ரலி) அவர்கள் அறிவுரை கூறினார்கள்.

கலீபா அவர்களின் உத்தரவினை ஏற்றுக் கொண்ட காலித் பின் ஸயீத் (ரலி) அவர்கள் சற்றும் தாமதிக்காமல், தனது படைகளை நகர்த்தினார். எதிரிகள் இப்பொழுது களைந்து புறமுதுகிட்டு ஓட ஆரம்பித்தார்கள். இதில் மகிழ்ச்சிக்குரிய செய்தி என்னவென்றால், முஸ்லிம்களை எதிப்பதற்காக களமிறங்கிய அரபுக்குலத்தவர்கள் பலர் சத்திய மார்க்கத்தை ஏற்றுக் கொண்டார்கள்.

களைந்து ஓடிக் கொண்டிருக்கும் எதிரிகளைத் துரத்தும் பொழுது, மிகவும் எச்சரிக்கையைக் கைக் கொள்ளுமாறு கலீபா அவர்கள் புதிய உத்தரவினை தனது தளபதிக்கு அனுப்பி வைத்தார்கள். இந்த உத்தரவினைப் பெற்றுக் கொண்ட தளபதி அவர்கள், ஸிரா மற்றும் அபில் என்ற ஊர்களுக்கு நடுவே தனது படையை முகாமிட்டுக் கொண்டார்கள். இந்த இடத்தில் வைத்து, முஸ்லிம்களின் படைகளை முன்னேற விடாமல் தடுப்பதற்கு முயற்சித்த பஹான் என்ற ரோமத் தளபதியை வெற்றி கொண்டார்கள்.

ரோமர்களுக்கு எதிரான இந்தப் போர் நடந்து கொண்டிருந்த சமயத்தில் தான், யமன், பஹ்ரைன் மற்றும் திஹாமா போன்ற பகுதிகளில் இருந்து பொய்த்தூதர்களை வெற்றி வாகை சூடி விட்டு, முஸ்லிம் படைகள் மதீனாவிற்குத் திரும்பி இருந்தன. காலித் (ரலி) அவர்களின் வேண்டுகோளிற்கு இணங்க, இந்தப் படைகள் இப்பொழுது, ரோமர்களை எதிர்ப்பதற்காக அனுப்பி வைக்கப்பட்டார்கள்.

நான்கு பிரிவுகளாக அனுப்பி வைக்கப்பட்ட முஸ்லிம்களின் படைப் பிரிவில் காலித் பின் வலீத் (ரலி) அவர்களின் தலைமையில் இயங்கும் படைகளின் எண்ணிக்கையைத் தவிர்த்து 27,000 படை வீரர்கள் இருந்தார்கள். முஸ்லிம்களின் இந்த படை நகர்த்தலை அறிந்து கொண்ட ஹிராக்ளியஸ் மன்னன், தனது தம்பி தியோடிரிக் என்பவர் தலைமையில் 90 ஆயிரம் வீரர்கள் கொண்டதொரு படையை அமைத்து, அமர் இப்னுல் ஆஸ் (ரலி) அவர்களது தலைமையில் வரும் படையை எதிர்க்கவும், தியோடிரிக் - ன் மகன் ஜார்ஜ் ன் தலைமையில் இதே போன்றதொரு எண்ணிக்கையில் ஒரு படையை அமைத்து, யஸீத் பின் சுஃப்யான் (ரலி) அவர்களின் தலைமையில் வரும் படையை எதிர்க்கவும், தராக்கிஸ் என்பவன் தலைமையில் சுராஹ்பில் பின் ஹுஸ்னா (ரலி) அவர்களின் தலைமையில் வரும் படையை எதிர்க்கவும், மற்றும் கெய்கர் பின் நெஸ்டஸ் என்பவனது தலைமையில் 60 ஆயிரம் படைவீரர்கள் கொண்டதொரு படையை அபூ உபைதா பின் அல் ஜர்ராஹ் (ரலி) அவர்களது தலைமையின் கீழ் வரும் படையை எதிர்க்கவும், ஆக நான்கு படைப்பிரிவுகளும் ஒன்றுடன் ஒன்று சந்திக்கு முன்பாகவே, அவர்களைத் தடுத்து நிறுத்தி விட வேண்டும் என்ற திட்டத்துடன் ஹெராக்ளியஸ் செயல்பட்டான்.

தியோடரின் தலைமையில் வந்த படை முஸ்லிம் படைகளுக்கு முன்பதாகவே வந்து பாலஸ்தீனத்தின் மேட்டுப் பகுதியாகிய திமஸ் ல் முஸ்லிம்களை எதிர்ப்பதற்காகத் தயாராக இருந்தார்கள். ரோமர்களின் மிகப் பெரும் படையைப் பார்த்த முஸ்லிம்களின் மனதில் ஒரு வித கலக்கம் உண்டானது, இந்த நான்கு படைப்பிரிவுகளில் மிகப் பெரும் எண்ணிக்கையிலான வீரர்கள் அடங்கிய பிரிவுக்கு தலைமை வகித்து வந்த அம்ர் இப்னுல் ஆஸ் (ரலி) அவர்களிடம் மற்ற தளபதிகள், நிலைமையின் தீவீரம் குறித்தும், இனி செயல்பட வேண்டியதற்கான திட்டங்கள் குறித்தும் கலந்தாலோசனை நடத்தினார்கள்.

நாம் இனி தனித்தனி பிரிவுகளாக நின்று போர் புரிவோமென்றால், இவ்வளவு பெரிய எதிரிகளின் படையை எதிர்த்து வெல்வது என்பது கடினம், எனவே, நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரே படையாக எதிரிகளை நோக்கி களம் புகுவதே சிறந்ததென நினைக்கின்றேன், நாம் அனைவரும் எர்முக் என்ற இடத்தில் ஒன்று கூடுவோம் என்றும் அம்ர் இப்னுல் ஆஸ் (ரலி) அவர்கள் தனது கருத்தைத் தெரிவித்தார்கள்.

அபுபக்கர் (ரலி) அவர்களும் அமர் இப்னுல் ஆஸ் (ரலி) அவர்களின் கருத்தை ஏற்றுக் கொண்டு, ''அனைத்துப் படைப்பிரிவுகளும் எர்முக் ல் ஒன்று கூடி, எதிரிகளை நோக்கி களம் புகுந்து விடுங்கள். நிராகரிப்பாளர்களின் அந்த அணிகளைத் துவம்சம் செய்யுங்கள் என்று கட்டளையிட்டதோடு, மேலும் - நீங்கள் அல்லாஹ்வின் சத்திய வாக்கு மேலோங்க வேண்டும் என்பதற்காக களம் புகுந்திருக்கின்றீர்கள், அந்த சத்தியத்தை மேலோங்கச் செய்ய வேண்டிய பணியின் பொருட்டு அல்லாஹ் உங்களுக்கு வெற்றியைப் பரிசாகத் தர வல்லவனாக இருக்கின்றான், இன்னும் அவன் மீது யார் நம்பிக்கை கொள்ளவில்லையோ அவர்களைத் தான் அவன் இழிவடையச் செய்வான்”” என்றும் தனது படைகளுக்கு கலீஃபா அபுபக்கர் (ரலி) அவர்கள் அறிவுரை வழங்கினார்கள்.

ரோமர்களின் படையெடுப்பு

ஜர்ஜா இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுதல்

ரோமர்களை வெற்றி கொள்ளுதல்

மேற்கண்ட மூன்று தலைப்புக்களில் வரும் சம்பவங்கள் அனைத்தும் காலித் பின் வலீத் (ரலி) அவர்களின் வாழ்க்கை வரலாற்றில் இடம் பெற்றுள்ளது. தயவுசெய்து காலித் பின் வலீத் (ரலி) அவர்களின் வரலாற்றை இதே இணையத்தளத்தில் உள்ள வரலாறு என்னும் பகுதியில், ''இஸ்லாமிய போர்ப் படைத் தளபதிகள்”” என்னும் தலைப்பில் காண்க.

ரோமர்களுடன் முஸ்லிம்கள் போர் நடந்து கொண்டிருக்கின்ற தருணத்தில் மதினாவிலிருந்த வந்ததொரு தூதுவர் அபுபக்கர் (ரலி) அவர்கள் மரணமடைந்து விட்டார்கள் என்ற துயரச் செய்தியைக் கொண்டு வந்தார். மேலும், அபுபக்கர் (ரலி) அவர்களுக்கு அடுத்து ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட உமர் (ரலி) அவர்கள், ரோமர்களுக்கு எதிரான போரில் படைத் தளபதியாக இதுவரை செயல்பட்டு வந்த காலித் பின் வலீத் (ரலி) அவர்களை நீக்கி விட்டு, அவருக்கும் பதிலாக அபூ உபைதா பின் அல் ஜர்ராஹ் (ரலி) அவர்களை படைத் தளபதியாக நியமித்து விடும்படி கட்டளை அனுப்பி வைத்தார்கள்.

சுகவீனமும், மரணமும்

07, ஜமாதுல் ஆகிர் ஹிஜ்ரி 13, ஆம் ஆண்டில், ஒரு குளிர் நாளில் அபுபக்கர் (ரலி) அவர்கள் குளித்து விட்டு வரும் பொழுது அடித்த குளிர் காற்றில் அவர்களது மேனியில் தாக்கப்பட்டதன் காரணமாக, உடனே அவர்களுக்கு காய்ச்சல் காண ஆரம்பித்து விட்டது. அதுவே அவர்களது மரணத்திற்கும் காரணமாக அமைந்தது.

பதினைந்து நாட்களாக அவர்கள் படுத்த படுக்கையாகக் கிடந்தார்கள். அவர்களது நிலைமை மிகவும் மோசமாக ஆனதுடன், பள்ளிவாசலுக்குச் சென்று தொழவே மிகவும் சிரமப்பட்டார்கள். எனவே, உமர் (ரலி) அவர்களை இமாமாக நியமித்து தொழுகைகளை நடத்தும்படி உத்தரவிட்டார்கள். இன்னும் அபுபக்கர் (ரலி) அவர்களது நிலை மிகவும் மோசமாக ஆகிக் கொண்டிருந்த பொழுது, மருத்துவர் அழைக்கப்பட்டார். ஆனால், அபுபக்கர் (ரலி) அவர்களோ எல்லாம் முடிந்து விட்டது, இனி மருத்துவர் வந்து என்ன பயன்! என்று கூறி விட்டார்கள். மீண்டும் அவர்களிடம் இது பற்றிக் கேட்ட பொழுது, நான் என்ன சொல்கின்றேனோ அதனை நீங்கள் செய்தால் போதுமானது என்று கூறி விட்டார்கள். எனவே, மீண்டும் அபுபக்கர் (ரலி) அவர்களைத் தொந்தரவு செய்ய விரும்பாத தோழர்களும், குடும்பத்தவர்களும் அமைதியாக இருந்து விட்டார்கள். நோய்வாய்ப்பட்;டிருந்த அந்த கால கட்டத்தில், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அளித்த வீட்டில் - அதாவது இறைத்தூதர் (ஸல்) அவர்களது பள்ளிக்கு மிக அருகிலேயே தனது இறுதிக் காலத்தைக் கழிக்க ஆரம்பித்தார்கள். உதுமான் (ரலி) அவர்களது வீடும் அபுபக்கர் (ரலி) அவர்களது வீட்டிற்கு மிகத் தொலைவில் ஒன்றும் இல்லை, அன்னார் தனது அதிகமான நேரங்களை அபுபக்கர் (ரலி) அவர்களுடனேயே கழித்தார்கள். எப்பொழுதும் அபுபக்கர் (ரலி) அவர்களது படுக்கைக்கு மிக அருகிலேயே உட்கார்ந்து கொண்டிருக்கக் கூடியவர்களாக இருந்தார்கள். இப்பொழுது கலீஃபா அபுபக்கர் (ரலி) அவர்கள், தனக்குப் பின் ஆட்சிப் பொறுப்பிற்கு யாரை நியமிப்பது என்றும், அவ்வாறு தான் செய்யவில்லையாயின் மக்கள் தங்களுக்குள் முட்டி மோதி, ஒரு குழப்பமான நிலை உருவாகி விடுமே என்றும் கருதலானார்கள். தனது விருப்பத்தை இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மூத்த தோழர்களிடம் கலந்தாலோசனை செய்து, இறுதியாக உமர் (ரலி) அவர்களை தனக்குப் பின் அடுத்த கலீஃபாவாக நியமிப்பது என்ற முடிவுக்கு வந்தார்கள்.

உமர் (ரலி) அவர்களின் முன் கோபம் குறித்து சிலர் அவரை ஆட்சியாளராக நியமிப்பது குறித்து அச்சம் தெரிவித்தனர். அத்தகையவர்களை நோக்கி அபுபக்கர் (ரலி) அவர்கள் கூறினார்கள், உமர் (ரலி) அவர்களிடம் உள்ள நற்குணம் என்னவென்றால், ஆட்சித் தலைவருக்கே உரிய குணங்களான, வளைந்து கொடுத்துப் போகாத தன்மையும், இளகிய மனதும் அவரிடம் இருக்கின்றது என்று விளக்கமளித்தார்கள். மேலும் தொடர்ந்து, நான் அவரிடம் பழகிய நாட்களின் அடிப்படையில் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தின்படி, நான் கோபமாக இருக்கின்ற சமயத்தில் அவர் என்னை சாந்தப்படுத்த முயற்சி செய்திருக்கின்றார், இன்னும் இளகிய மனதுடன் காணப்பட்ட இடங்களில் உறுதியுடன் இருக்குமாறும் அவர் எனக்கு அறிவுரை பகர்ந்துள்ளார். மேற்கண்ட அனைத்தையும் மனதில் வைத்துக் கொண்டு, தனது வீட்டின் மாடிப் பகுதிக்குச் சென்ற அபுபக்கர் (ரலி) அவர்கள், மிகவும் தளர்ந்து போயிருந்த காரணத்தால், தனது மனைவியான அமிஸ் அவர்களின் மகளான அஸ்மா அவர்களின் கரங்களை ஆதரவாகப் பற்றிக் கொண்டவராக அங்கே கூடி நின்ற மக்கள் மன்றத்தில் உரை நிகழ்த்த ஆரம்பித்தார்கள் :

எனக்கு அடுத்ததாக ஆட்சிப் பொறுப்பினை ஏற்று நடத்துவதற்காக நான் தேர்ந்தெடுத்திருக்கின்ற நபரை நீங்கள் உங்களது ஆட்சியாளராக ஒப்புக் கொள்வீர்களா? என்று கேட்டார்கள். நிச்சயமாக, நான் ஏன் அவரைத் தேர்ந்தெடுத்திருக்கின்றேன் என்பதனை விளக்குவதற்கு எனது உடல் வலி இடம் தராத நிலையில் நான் இருக்கின்றேன். நான் எனது உறவினர் எவரையும் தேர்ந்தெடுக்கவில்லை. எனக்குப் பின் ஆட்சிப் பொறுப்பை ஏற்று நடத்துவதற்குரியவராக, உமர் (ரலி) அவர்களையே நான் தேர்வு செய்துள்ளேன். நான் சொல்வதை செவிதாழ்த்திக் கேளுங்கள், எனது விருப்பத்திற்கு நீங்கள் ஒத்துழைப்புத் தாருங்கள் என்று தனது உரையை முடித்தார்கள் அபுபக்கர் (ரலி) அவர்கள்.

அங்கு கூடியிருந்த அனைவரும் ஒருமித்த குரலில், ''நீங்கள் சொல்வதை நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம், அதற்கு கட்டுப்படுகின்றோம்”” என்று கூறினார்கள். அதன் பின் அங்கிருந்த உதுமான் (ரலி) அவர்களை அழைத்த அபுபக்கர் (ரலி) அவர்கள், தனது உரையை மக்களிடம் வாசித்துக் காண்பிக்குமாறு கூறினார்கள் :

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருநாமத்தால்... அபுபக்கர் பின் அபூ குஹஃபா ஆகிய நான் இந்த உலகத்தை விட்டுப் பிரிகின்ற தருணத்தில் இன்னும் மறுமைக்குப் பயணப்படுகின்ற ஆரம்ப நேரத்தில், இன்னும் நிராகரிப்பளர்கள் சத்தியத்தை விசுவாசிப்பவர்களாக மாற விரும்புகின்ற, சத்தியத்தை அசாதாரணமாக கருதிக் கொண்டிருந்தவர்கள் சத்திய சீலர்களாக மாற நினைக்கின்ற மற்றும் பொய்யர்கள் சத்தியவான்களாக மாற விருக்கின்ற அந்த மறு உலகத்தின் முதற்படிக்குச் செல்வதற்காக உங்களிடம் பிரியாவிடை பகர்கின்ற நான் ஆற்றுகின்ற இறுதி உரையாகும் இது!

எனக்குப் பின் ஆட்சியாளராக உமர் (ரலி) அவர்களை நான் நியமித்துள்ளேன். அவருக்கு செவிதாழ்த்துங்கள், கட்டுப்படுங்கள். (நினைவில் இருத்திக் கொள்ளுங்கள்) அல்லாஹ்வின் அவனது தூதர் (ஸல்) அவர்களும் என் மீது பொறுப்புச் சுமத்திய கடமைகளையும், இன்னும் உங்கள் மீதும் என் மீதும், நான் என்னால் இயலுமான வரை நிறைவேற்றி உள்ளேன். அவர் நீதி செலுத்தவராரென்றால், அதனைத் தான் அவரிடம் நான் எதிர்பார்த்தது. மேலும், அது நான் அவரிடம் அறிந்து வைத்திருந்தது, இன்னும் (நல்லதொரு) மாற்றங்கள் செய்வாரென்றால், அதில் கிடைக்கக் கூடிய நல்லனவற்றை நீங்கள் அனுபவித்துக் கொள்ளுங்கள். என்னுடைய நோக்கம் சிறந்ததென்றே கருதுகின்றேன், ஆனால் மறைவானவற்றை நான் அறியக் கூடியவனல்லன். ஆனால், எவரொருவர் தனது ஆட்சியையும் அதிகாரத்தையும் தவறாகப் பயன்படுத்துவாரென்றால், அவர் விரைவில் ஆட்சிப் பொறுப்பினை விட்டும் எவ்வாறு அகற்றப்படுவார் என்பதனையும் கண்டு கொள்வார்.

உங்கள் மீது இறைவனது சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக! (என்று கூறி தனது உரையை முடித்தார்கள்).

இந்த உரையை முடித்த பின் ஒரு மனிதர் அபுபக்கர் (ரலி) அவர்களைச் சந்தித்து, உமரையா உங்களையடுத்த ஆட்சியாளராக நியமித்திருக்கின்றீர்கள், உங்கள் முன்பதாகவே அவர் மக்களை எந்தவிதமாக நடத்தினார்கள் என்பதனை நீங்கள் அறியாததொன்றுமல்ல என்று கூறினார். இப்பொழுது அவரே முழு ஆட்சிப் பொறுப்புக்கும் உரித்தவராகி விட்டார், மக்களின் நிலையைச் சொல்லவே வேண்டாம் என்றும் வந்த அந்த மனிதர் கூறினார். நீங்கள் இப்பொழுது உங்களது இறைவனைச் சந்திக்கப் போகின்றீர்கள், மக்களுக்குப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட உங்களின் இந்த நிலை குறித்து அங்கே நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள் என்றும் அந்த நபர் கூறினார். படுக்கையில் படுத்துக் கிடந்த அபுபக்கர் (ரலி) அவர்கள், வந்திருந்த நபரை அமரச் சொல்லி விட்டு, எனது இறைவனைச் சந்திக்கின்ற பொழுது, அச்சத்தோடு அவனைச் சந்திக்கின்ற நிலையைக் கூறி என்னை கலவரமடையச் செய்கின்றீர்களா? எனது இறைவன் முன்னிலையில் நான் நின்று கொண்டிருக்கும் பொழுது, 'உன்னுடைய படைப்பினங்களிலேயே உன்னதமான படைப்பளார் ஒருவரை எனக்குப் பின் ஆட்சியாளராக நியமித்து விட்டு வந்திருக்கின்றேன்” என்ற பதிலைக் கூறுவேன் என்று அபுபக்கர் (ரலி) அவர்கள் கூறி விட்டு, உமர் (ரலி) அவர்களை அழைத்தார்கள். தனிமையில் அவர்களை அமர வைத்து, உமர் (ரலி) அவர்களுக்குத் தேவையான அறிவுரைகளைக் கூறினார்கள்.

பின்பு, இறைவனை நோக்கி கையை உயர்த்திய அபுபக்கர்(ரலி) அவர்கள், இறைவா! இந்த மக்களின் நல்வாழ்வுக்காகவே இவரை நான் தேர்வு செய்தேன், இன்னும் ஒருவரோடு ஒருவர் கருத்துமுரண்பாடு கொள்வதனின்றும் தடுக்கும் பொருட்டே இந்தத் தேர்வினை நான் செய்தேன். நீயே மிக அறிந்தவன்! என்று கூறினார்.

மிக நீண்ட ஆலோசனைக்குப் பின்னரே நான் உமரை எனக்குப் பின்னர் ஆட்சியாளராக நியமித்தேன். மிகச் சிறந்தவரும், உறுதி படைத்தவரும், இன்னும் நேர்வழியைப் பின்பற்றி நடப்பதற்கு ஆர்வம் கொண்டவருமாவார். யா அல்லாஹ்! ஆட்சியாளர்களை நேர்வழியில் நடப்பவர்களாக நீ ஆக்கியருள்வாயாக! இன்னும் எனக்குப் பின்னர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருப்பவரை ஆட்சியாளர்களிலெல்லாம் மிகச் சிறந்த ஆட்சியாளராக ஆக்கியருள்வாயாக!

மேலும், ஈராக்கை விட்டும் புறப்படுவதற்கு முன்னாள், காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் தனது பொறுப்பினை முதன்னா (ரலி) அவர்களிடம் ஒப்படைத்தார்கள். இதற்குப் பின்னர் பாரசீக மன்னர் மேலும் துணைப்படைகளை ஈராக்கை நோக்கி அனுப்ப ஆரம்பித்தான். கலீபாவின் உடல்நலக் குறைவின் காரணமாக முதன்னா (ரலி) அவர்கள் தலைநகர் மதீனாவிலிருந்து வரக் கூடிய செய்திகளும், தொடர்புகளும் துண்டிக்கப்பட்டிருந்தன. இதனால் மிகவும் மனமுடைந்து போன முதன்னா (ரலி) அவர்கள் தனது பொறுப்புக்களை பஷீர் (ரலி) அவர்களிடம் ஒப்படைத்து விட்டு மதீனாவை நோக்கிக் கிளம்பினார். அவ்வாறு கிளம்பிய அவர் மதீனாவை அடைந்த பொழுது, அந்த நாள் அபுபக்கர் (ரலி) அவர்களின் இறுதிநாளாக இருந்தது.

ஈராக்கின் முழு நிலைமைகளையும் கேட்டறிந்து கொண்ட அபுபக்கர் (ரலி) அவர்கள், உடனே நடவடிக்கை எடுக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்ந்தவர்களாக உமர் (ரலி) அவர்களை அழைத்தார்கள். உமரே..! நீங்கள் மிகவும் கவனமாகக் கேட்டுக் கொள்ளுங்கள். இந்த நாள் எனது இறுதி நாளாக இருக்கக் கூடும் என்றே நான் நினைக்கின்றேன். நான் பகலில் இறந்தால் வரக் கூடிய மாலை நேரத்திலும்  இன்னும் இரவில் இறந்தால் வரக்கூடிய அதிகாலை நேரத்திலும், நீங்கள் முஸ்லிம்களின் படையைத் திரட்டி முதன்னா (ரலி) அவர்களின் உதவிக்கு அனுப்பி வையுங்கள். (நான் இறந்து விடுவதால் ஏற்படுகின்ற) எந்த துக்கமும் இறைநம்பிக்கையாளர்களுக்குச் செய்ய வேண்டிய கடமையினின்றும், இறைவனது கட்டளைகளுக்கு அடிபணிய வேண்டிய கடமையினின்றும் உங்களைத் தடுத்து விட வேண்டாம். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறந்ததை விடவா மிகப் பெரிய துன்பம் ஒன்று இனி ஏற்பட்டு விடப் போகின்றது? அந்த நாளில் நான் செய்த கடமைகளை நீங்கள் அறிவீர்கள். இறைவன் மீது சத்தியமாக! இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மரணமடைந்த அந்த நாளில், என்னிடம் மிகச் சிறிய அளவு பலவீனத்தைக் கூட நான் வெளிப்படுத்தியிருந்திருப்பேன் என்று சொன்னால், கருத்து முரண்பாடு காரணமாக மதீனா நகரமே தீப்பற்றி எறிந்து போயிருக்கும். இறைவன் தன்னுடைய அருட்கொடைகளின் மூலமாக சிரியாவில் வெற்றி அளித்து விட்டான் என்று சொன்னால், காலித் பின் வலீத் (ரலி) அவர்களை நீங்கள் மீண்டும் ஈராக்கிற்கு அனுப்பி வைத்து விடுங்கள். அவர் மிகவும் அனுபவம் வாய்ந்தவராவார், அவர் நாட்டின் முழுமையான நிலையையும் சீர்தூக்கி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்து விடக் கூடியவர் என்றும் கூறினார்கள்.

இன்னும் மரணப்படுக்கையில் இருந்து கொண்டிருந்த நிலையிலேயே, அரசின் கருவூலகத்திலிருந்து நான் எவ்வளவு பணத்தை கடனாகப் பெற்றிருக்கின்றேன் என்று கேட்டார்கள். ஆறாயிரம் திர்ஹம்கள் என்று சொல்லப்பட்டது. குறிப்பிட்ட நிலத்தை விற்று அந்த விற்ற பணம் முழுவதையும் கருவூலகத்தில் ஒப்படைத்து விடும்படிக் கூறினார்கள். அதன்படியே அந்த நிலம் விற்கப்பட்டு, முழுத் தொகையும் கருவூலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் தான் ஆட்சிப் பொறுப்பேற்றுக் கொண்ட நாளிலிருந்து இதுவரை தனக்காகச் சேர்த்துக் கொண்ட சொத்துக்களின் விபரத்தைக் கேட்டார்கள். அவரது குழந்தைகளைக் கவனித்துக் கொள்வதற்காகவும், முஸ்லிம்களின் போர்த்தளவாடங்களை மெருகூட்டுவதற்காக பெறப்பட்ட அடிமையும், தண்ணீர் சுமந்து வருவதற்காக வாங்கப்பட்ட ஒட்டகமும், ஒன்றரை ரூபாய் பணத்திற்குப் பெறப்பட்டதொரு துணியும் உள்ளன என்று கூறப்பட்டது. இவை அனைத்தையும் புதிதாகப் பொறுப்பேற்றுக் கொள்ளவிருக்கின்ற ஆட்சியாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கட்டளையிட்டார்கள்.

இவையனைத்தையும் இரண்டாவது கலீஃபா உமர் (ரலி) அவர்களது முன்னிலையில் கொண்டு வரப்பட்ட பொழுது, அழுதவர்களாக.. ஓ..! அபுபக்கர் அவர்களே..! உங்களுக்குப் பின்னாள் ஆட்சிப் பொறுப்புக்கு வரவிருக்கின்றவர்களை நீங்கள் நிர்க்கதிக்குள்ளாக்கி விட்டீர்களே..! என்றார்கள்.

இறப்பிற்குச் சற்று முன்னதாக தனது மகள் ஆயிஷா (ரலி) அவர்களை அழைத்த அபுபக்கர் (ரலி) அவர்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் ஜனாஸாவை எத்தனை துணிகளைக் கொண்டு சுற்றி கபனிடப்பட்டது என்று கேட்டார்கள். மூன்று துண்டுத் துணிகளை வைத்துக் கபனிடப்பட்டது என்று அவர்கள் பதில் கூறிய பொழுது, அதே போன்ற அளவுத் துணிகளைக் கொண்டு என்னைக் கபனிட்டால் போதுமானது என்று கூறினார்கள். அவற்றில் துவைத்து வைக்கப்பட்ட இரண்டு துண்டுகள் ஏற்கனவே நம்மிடம் உள்ளன, அதனை இதற்காகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள், இன்னுமொரு துண்டை விலைக்கு வாங்கிக் கொள்ளுங்கள் என்றார்கள்.

இதற்கு, என்னுடைய தந்தையே..! புதிய கபன் துண்டுகளை வாங்க இயலாத அளவுக்கு நாம் ஏழைகளாக இருக்கவில்லையே..! என்று அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் தனது தந்தையிடம் கூறினார்கள். புதிய ஆடைகளா..! இறந்த மனிதன் புதிய ஆடைகளை அணிவதை விட உயிருள்ளவர்கள் அணிவதே சிறந்தது என்று பதில் கூறினார்கள். இறந்த உடலைச் சுற்றப்பயன்படும் ஆடை அந்த மனிதனின் சலத்தையும், இரத்தத்தையுமே போர்த்திக் கொண்டிருக்கும் என்றும் கூறினார்கள்.

அபுபக்கர் (ரலி) அவர்கள் மரணத்தை நெருங்கிக் கொண்டிருந்த அந்தத் தருணத்தில், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எந்தநாளில் மரணமடைந்தார்கள் என்றும் கேட்டார்கள். இதற்கு, 'திங்கட்கிழமை” என்று பதில் கூறப்பட்டதும், நானும் இதே நாளில் மரணமடைய வேண்டும் என்றே எதிர்பார்க்கின்றேன் என்றார்கள். மேலும், தன்னை இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில் நல்லடக்கம் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்கள்.

இறுதியாக, இறைவா..! என்னை முஸ்லிமாகவே மரணிக்கச் செய்வாயாக..! இன்னும் நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்த்தருள்வாயாக..! என்றும் பிரார்த்தித்தார்கள். இதுவே, அவர்களது வதனத்திலிருந்து வெளிவந்த இறுதி வார்த்தைகளாகவும் அமைந்தன.

அவர்கள் நினைத்தது போலவே, 22, ஜமாதுல் ஆகிர் மாதம் திங்கட்கிழமை அன்று மக்ரிப் மற்றும் இஷா நேரத்திற்கிடையே மரணமடைந்தார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். இறைவனிடமிருந்தே வந்தோம், அவனிடமே நம்முடைய மீளுதல் இருக்கின்றது.

ஜனஸா நல்லடக்கத் தொழுகையை உமர் (ரலி) அவர்கள் முன்னின்று நடத்தினார்கள். அன்றைய இரவே ஆயிஷா (ரலி) அவர்களின் வீட்டில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அடக்கப்பட்டிருக்கின்ற இடத்திற்கு மிக அருகில், தன்னுடைய தலைவருக்கு மிக அருகிலேயே அவரின் உற்ற நண்பரும் நல்லடக்கம் செய்யப்பட்டார்.

அபுபக்கர் (ரலி) அவர்கள் மரணமடைந்த பொழுது அவருக்கு 63 வயதாகியிருந்தது. ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு வருடங்கள் மற்றும் மூன்று மாதங்கள், பதினொரு நாட்கள் கழித்து மரணத்தைச் சந்தித்தார்கள்.
أحدث أقدم