அத்தியாயம் 53 சமாதானம்

ஸஹீஹுல் புகாரி
அத்தியாயம் 53

சமாதானம்

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்.

சமாதானம்

பகுதி 1

மக்களிடையே சமாதானம் செய்து வைத்தல்.

அல்லாஹ் கூறினான்:

மனிதர்களின் பெரும்பாலான இரகசியப் பேச்சுகளில் எவ்வித நன்மையும் இருப்பதில்லை. தான தர்மம் செய்யும்படியோ, நற்செயல் புரியும் படியோ, மக்களிடையே சீர்திருத்தம் செய்யும்படியோ அறிவுரை கூறுபவர்களின் பேச்சுக்களைத் தவிர. (அவற்றில் நன்மை உண்டு.) மேலும், அல்லாஹ்வின் திருப்தியை நாடி இவ்வாறு செய்கிறவருக்கு நாம் விரைவில் மகத்தான பிரதிபலனை வழங்குவோம். (திருக்குர்ஆன் 04: 114)

மேலும், மக்களுக்கிடையே சமாதானம் செய்து வைப்பதற்காகத் தலைவர் தன் தோழர்களுடன் (சண்டை சச்சரவுள்ள) இடங்களுக்குச் செல்வது.

2690. ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்.

அம்ர் இப்னு அவ்ஃப் குடும்பத்தைச் சேர்ந்த சிலருக்குள் ஏதோ தகராறு இருந்து வந்தது. எனவே, நபி(ஸல்) அவர்கள் தம் தோழர்கள் சிலர் புடைசூழ அவர்களிடையே சமாதானம் செய்து வைப்பதற்காக அவர்களை நோக்கிப் புறப்பட்டார்கள். (நபி(ஸல்) அவர்கள் அங்கு சென்றிருந்த போது) தொழுகை நேரம் வந்துவிட்டது. நபி(ஸல்) அவர்கள் இன்னும் (திரும்பி) வரவில்லை. அப்போது பிலால்(ரலி) பாங்கு சொன்னார்கள். (அதன் பிறகும்) நபி(ஸல்) அவர்கள் வரவில்லை. எனவே, பிலால்(ரலி) அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் சென்று, 'நபி(ஸல்) அவர்கள் (வேலையின் காரணத்தால் உடனே வர முடியாமல்) தாமத்திற்குள்ளாகியிருக்கிறார்கள். தொழுகை நேரம் வந்துவிட்டது. எனவே, தாங்கள் மக்களுக்குத் (தலைமை தாங்கித் தொழுகை நடத்தினர்களா?' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், 'சரி, நீங்கள் விரும்பினால் தொழுகை நடத்துகிறேன்'' என்று கூறினார்கள். உடனே, பிலால்(ரலி) தொழுகைக்கு இகாமத் சொல்ல, அபூ பக்ர்(ரலி) (தொழுகை நடத்துவதற்காக) முன்னால் சென்றார்கள். பிறகு, நபி(ஸல்) அவர்கள் வரிசைகளுக்கிடையே நடந்தவர்களாக வந்து, இறுதியில் முதல் வரிசையில் நின்றார்கள். உடனே, மக்கள் கைதட்டத் தொடங்கி இறுதியில் கைத்தட்டலை அதிகரித்தார்கள். அபூ பக்ர்(ரலி) தொழுகையின்போது திரும்பிப் பார்க்காதவராக இருந்தார்கள். இருந்தாலும் (மக்கள் கைதட்டும் ஓசையைக் கேட்டு) திரும்பிப் பார்த்தார்கள். தமக்குப் பின்னே, அங்கே நபி(ஸல்) அவர்கள் இருப்பதைக் கண்டார்கள். நபி(ஸல்) அவர்கள் அபூ பக்ர்(ரலி) அவர்களை நோக்கிச் சைகை செய்து, அப்படியே தொழுகை நடத்தும்படி கட்டளையிட்டார்கள். உடனே, அபூ பக்ர்(ரலி) அவர்களை நோக்கிச் சைகை செய்து, அப்படியே தொழுகை நடத்தும்படி கட்டளையிட்டார்கள். உடனே, அபூ பக்ர்(ரலி) தம் கையை உயர்த்தி அல்லாஹ்வைப் புகழ்ந்து, திரும்பாமல் அப்படியே பின்பக்கமாக நகர்ந்து, இறுதியில் வரிசைக்குள் புகுந்து கொண்டார்கள். உடனே, நபி(ஸல்) அவர்கள் முன்னால் சென்று மக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். தொழுது முடித்த பின் மக்களை நோக்கி, 'மக்களே! நீங்கள் தொழுகையில் ஏதேனும் (ஆட்சேபகரமான விஷயத்தைக் காண) நேர்ந்தால் கைதட்டத் தொடங்கி விடுகிறீர்கள். பெண்கள் தான் கைதட்ட வேண்டும். (ஆண்களில்) ஒருவர் தொழுகையில் ஏதேனும் (ஆட்சேபணைக்குரிய விஷயத்தைக்) காண நேர்ந்தால், அவர் 'சுப்ஹானல்லாஹ் - அல்லாஹ்வே தூய்மையானவன்' என்று கூறட்டும். ஏனெனில், அதைக் கேட்பவர் எவரும் திரும்பிப் பார்க்காமல் இருக்க மாட்டார்'' என்று கூறிவிட்டு, 'அபூ பக்ரே! நான் உங்களுக்குச் சைகை செய்தபோது நீங்கள் ஏன் மக்களுக்குத் தொழுகை நடத்தவில்லை?' என்று கேட்டார்கள். அதற்கு அபூ பக்ர்(ரலி), 'நபி(ஸல்) அவர்களுக்கு முன்னால் தொழுகை நடத்துவதற்கு அபூ குஹாஃபாவின் மகனுக்குத் தகுதியில்லை'' என்று பதிலளித்தார்கள். 1

2691. அனஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களிடம், 'தாங்கள் அப்துல்லாஹ் இப்னு உபையிடம் வந்தால் நன்றாயிருக்கும்'' என்று கூறப்பட்டது. 2 நபி(ஸல்) அவர்கள் அவனிடம் செல்ல ஒரு கழுதையில் ஏறினார்கள். முஸ்லிம்களும் நபி(ஸல்) அவர்களுடன் நடந்து சென்றார்கள். அவர்கள் சென்ற பாதை உவர் நிலமாக இருந்தது. அவனை நபி(ஸல்) அவர்கள் சென்றடைந்தபோது அவன், 'தூர விலம்ப் போ! அல்லாஹ்வின் மீதாணையாக! உன் கழுதையின் துர்நாற்றம் என்னைத் துன்புறுத்திவிட்டது'' என்று கூறினான். அப்போது அவர்களிடையே இருந்த அன்சாரி (தோழர்) ஒருவர், 'அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதருடைய கழுதை உன்னை விட நல்ல வாசனையுடையதாகும்'' என்று கூறினார். அப்துல்லாஹ்வுக்காக அவனுடைய சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் ஆத்திரமடைந்து அந்த அன்சாரியை ஏசினார். அந்த இருவருக்காகவும் அவரவருடைய நண்பர்கள் கோபமடைந்தார்கள். தங்களுக்கிடையே ஈச்சங் (ம்ளையின்) குச்சியாலும், கைகளாலும் செருப்புகளாலும் அடித்துக் கொண்டார்கள். அப்போது, 'மேலும், இறைநம்பிக்கையாளர்களில் இரண்டு குழுவினர் தங்களுக்குள் சண்டையிட நேர்ந்தால் அவர்களிடையே சமாதானம் செய்து வையுங்கள்'' (திருக்குர்ஆன் 49:09) என்னும் வசனம் அருளப்பட்டிருக்கிறது என்னும் செய்தி எங்களுக்கு எட்டியது.

பகுதி 2

மக்களிடையே சமாதானம் செய்து வைப்பவன் (அதற்காகப் பொய்யே கூறினாலும்) அவன் பொய்யன் அல்லன்.

2692. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

(பரஸ்பரம் பிணங்கிய இரண்டு தரப்பரிடமும்) நல்லதை (புனைந்து) சொல்லி மக்களிடையே சமாதானத்தை ஏற்படுத்துபவன் பொய்யன் அல்லன்.

என உம்மு குல்தூம் பின்த்து உக்பா(ரலி) அறிவித்தார்.

பகுதி 3

தலைவர் தம் தோழர்களிடம், 'நம்மை அழைத்துச் செல்லுங்கள்; நாம் (அவர்களிடையே) சமாதானம் செய்து வைப்போம்'' என்று சொல்லுதல்.

2693. ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்.

ஒருவர் மீதொருவர் கற்கள் வீசிக் கொள்ளுமளவிற்கு 'குபா' வாசிகள் (தமக்கிடையே) சண்டையிட்டனர். அல்லாஹ்வின் தூதரிடம் இச்செய்தி தெரிவிக்கப்பட்டது. அவர்கள், 'நம்மை அழைத்துச் செல்லுங்கள். நாம் அவர்களுக்கிடையே சமாதானம் செய்து வைப்போம்'' என்று கூறினார்கள்.

பகுதி 4

அல்லாஹ் கூறினான்:

கணவன் - மனைவி இருவரும் ஒருவருக்கொருவர்விட்டுக் கொடுத்து தங்களுக்கிடையே சமாதானம் செய்து கொள்வதில் தவறேதும் இல்லை. மேலும் சமாதானம் செய்து கொள்வதே நன்மையானதாகும். (திருக்குர்ஆன் 04:128)

2694. உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார்.

''ஒரு பெண், தன் கணவன் (தன்னை வெறுத்து) முகம் சுளிப்பான் என்றோ (தன்னைப்) புறக்கணிப்பான் என்றோ அஞ்சினால் கணவன் மனைவி இருவரும் (ஒருவருக்கொருவர்விட்டுக் கொடுத்து) தங்களுக்கிடையே சமாதானம் செய்து கொள்வதில் தவறில்லை'' என்னும் (திருக்குர்ஆன் 04:128) திருக்குர்ஆன் வசனத்திற்கு விளக்கம் தரும்போது ஆயிஷா(ரலி), 'ஒரு மனிதன் தன் மனைவியிடம் தனக்கு மகிழ்வைத் தராத வயோதிகம் முதலியவற்றைக் கண்டு அவளைப் பிரிந்து விட விரும்பும் நிலையில், அவள் 'என்னை (உன் மணபந்தத்திலேயே) வைத்துக் கொள். (என் உரிமைகளில்) நீ விரும்பியதை எனக்குப் பங்கிட்டுத் தந்து விடு' என்று சொல்வதை இது குறிக்கும்'' என்று கூறிவிட்டு, 'இருவரும் பரஸ்பரம் ஒத்துப் போய்விட்டார்கள் என்றால் தவறேதுமில்லை'' என்று கூறினார்கள்.

பகுதி 5

(மக்கள் தமக்கிடையே) அநியாயமான முறையில் சமாதான ஒப்பந்தம் செய்தால் அந்த சமாதான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட வேண்டும்.

2695 { 2696 அபூ ஹுரைரா(ரலி) அவர்களும் ஸைத் இப்னு காலித்(ரலி) அவர்களும் கூறினார்கள்கள்.

(ஒருமுறை) கிராமவாசி ஒருவர் (மற்றொருவருடன்) வந்து, 'இறைத்தூதர் அவர்களே! எங்களுக்கிடையே அல்லாஹ்வின் சட்டத்தின்படி தீர்ப்பளியுங்கள்'' என்று கேட்டார். அவரின் எதிரி எழுந்து நின்று, 'உண்மை தான் சொன்னார். எங்களுக்கிடையே அல்லாஹ்வின் சட்டத்தின்படி தீர்ப்பளியுங்கள்'' என்று கூறினார். அந்த கிராமவாசி (எதிரியைச் சுட்டிக்காட்டி), 'என் மகன் இவரிடம் கூலியாளாக வேலை பார்த்துக் கொண்டிருந்தான். (அப்போது) இவரின் மனைவியுடன் விபச்சாரம் செய்துவிட்டான். மக்கள் என்னிடம், 'உன் மகனுக்குக் கல்லெறி தண்டனை கொடுக்கப்படவேண்டும்' என்று தண்டனை கொடுக்கப்பட வேண்டும்' என்று கூறினர். நான் என் மகனை அதிலிருந்து காப்பாற்ற ஈட்டுத் தொகையாக நூறு ஆடுகளையும் ஓர் அடிமைப் பெண்ணையும் தந்தேன். பின்னர் (சட்ட) அறிஞர்களிடம் கேட்டேன். அவர்கள், 'உன் மகனுக்கு நூறு கசையடிகளும், ஓராண்டுக் காலத்திற்கு நாடு கடத்தும் தண்டனையும் தான் கொடுக்கப்பட வேண்டும்' என்று தீர்ப்புக் கூறினார்கள்'' என்றார். நபி(ஸல்) அவர்கள், 'உங்கள் இருவருக்குமிடையே நான் அல்லாஹ்வின் சட்டத்தின்படியே தீர்ப்பளிக்கிறேன்: அடிமைப் பெண்ணும், ஆடுகளும் உன்னிடம் திருப்பித் தரப்பட வேண்டும்; உன் மகனுக்கு நூறு கசையடிகளும் ஓராண்டுக் காலத்திற்கு நாடு கடத்தும் தண்டனையும் தரப்படவேண்டும்'' என்று கூறிவிட்டு (அருகிலிருந்த) ஒரு மனிதரைப் பார்த்து, 'உனைஸே! இவருடைய (ம்ராமவாசியின் எதிரியுடைய) மனைவியிடம் சென்று (அவள் குற்றத்தை ஒப்புக் கொண்டால்) அவளுக்குக் கல்லெறி தண்டனை கொடுப்பீராக'' என்று கூறினார்கள். அவ்வாறே, உனைஸ் (என்னும் அந்தத் தோழர்) அப்பெண்ணிடம் சென்று (அவள் குற்றத்தை ஒப்புக் கொண்டதும்) அவளுக்குக் கல்லெறி தண்டனை கொடுத்தார். 3

2697. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகிறானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும்.

என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

பகுதி 6

சமாதான ஒப்பந்தம் எப்படி எழுதப்பட வேண்டும்? 'இது இன்னாருடைய மகன் இன்னாரும், இன்னாருடைய மகன் இன்னாரும் செய்த சமாதான ஒப்பந்தம்'' என்று எழுதப்பட வேண்டும். அந்த இன்னாரின் பெயரை அவரின் குலத்தாருடன் அல்லது அவரின் வமிசாவளியுடன் இணைத்து எழுதினாலும் சரி, இணைக்காமல் எழுதினாலும் சரி (செல்லும்.)

2698. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஹுதைபிய்யாக்காரர்களிடம் (மக்காவாசிகளான குறைஷிகளிடம் ஹுதைபிய்யா எனுமிடத்தில்) சமாதான ஒப்பந்தம் செய்தபோது அலீ இப்னு அபீ தாலிப்(ரலி), அவர்களிடையிலான ஒப்பந்தப் பத்திரத்தை எழுதினார்கள். அப்போது, 'அல்லாஹ்வின் தூதரான முஹம்மத்' என்று அவர்கள் எழுத, இணைவைப்பவர்கள், 'அல்லாஹ்வின் தூதரான முஹம்மத்' என்று எழுதாதீர்கள்'' (என்று சொல்லிவிட்டு) முஹம்மத்(ஸல்) அவர்களை நோக்கி), 'நீர் அல்லாஹ்வின் தூதரக இருந்திருந்தால் நாங்கள் உம்முடன் போரிட்டிருக்க மாட்டோம்'' என்று கூறினர். எனவே, நபி(ஸல்) அவர்கள் அலீ(ரலி) அவர்களிடம், 'அதை அழித்து விடுங்கள்'' என்று கூறினார்கள். அலீ(ரலி), 'நான் அதை (ஒருபோதும்) அழிக்கப் போவதில்லை'' என்று கூறிவிட்டார்கள். எனவே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தங்களின் திருக்கரத்தால் அதை அழித்தார்கள். நானும் என் தோழர்களுடம் (மக்கா நகரில்) மூன்று நாள்கள் தங்குவோம். அதில் நாங்கள், 'ஜுலுப்பானுஸ் ஸிலாஹ்' உடன் தான் நுழைவோம் என்றும் அவர்களுடன் சமாதான ஒப்பந்தம் செய்தார்கள். மக்கள், 'ஜுலுப்பானுஸ் ஸிலாஹ்' என்றால் என்ன?' என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்டனர். அவர்கள், 'உள்ளிருக்கும் ஆயுதங்களுடன் கூடிய உறை'' என்று பதிலளித்தார்கள்.

2699. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் துல்கஅதா மாதத்தில் உம்ரா செய்தார்கள். மக்காவாசிகள் அவர்களை மக்காவிற்குள் நுழைய விட மறுத்தார்கள். இறுதியில், நபி(ஸல்) அவர்கள், 'மக்காவில் (வரும் ஆண்டில்), தாம் (தம் தோழர்களுடன்) மூன்று நாள்கள் தங்க (அனுமதிக்க) வேண்டும் என்னும் நிபந்தனையின் போரில் மக்காவாசிகளுடன் சமாதான ஒப்பந்தம் செய்தார்கள். ஒப்பந்தத்தை அவர்கள் எழுதியபோது, 'இது அல்லாஹ்வின் தூதரான முஹம்மத் அவர்கள் செய்த சமாதான ஒப்பந்தத்தின் ஷரத்துகள்'' என்று எழுதினார்கள். உடனே மக்காவாசிகள், 'நாங்கள் இதை ஒப்புக் கொள்ள மாட்டோம்; நீங்கள் இறைத்தூதர் தாம் என்று நாங்கள் அறிந்திருப்போமாயின் உங்களை (மக்காவில் நுழையவிடாமல்) தடுத்திருக்க மாட்டோம். ஆயினும், நீங்கள் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது தான்'' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், 'நான் அல்லாஹ்வின் தூதராவேன்; அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது ஆவேன்'' என்று பதிலளித்துவிட்டு, அலீ(ரலி) அவர்களை நோக்கி, 'இறைத்தூதர்' என்பதை அழித்து விடுங்கள்'' என்று கூறினார்கள். அலீ(ரலி), 'முடியாது. அல்லாஹ்வின் மீதாணையாக! நான் தங்கள் (அந்தஸ்தைக் குறிக்கும்) பெயரை ஒருபோதும் அழிக்க மாட்டேன்'' என்று கூறிவிட்டார்கள். உடனே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பத்திரத்தை எடுத்து, 'இது அப்துல்லாஹ்வின் குமாரர் முஹம்மத் செய்த சமாதான ஒப்பந்தத்தின் ஷரத்து(கள் கொண்ட பத்திரம்) ஆகும். (அந்த ஷரத்துகளாவன:) (முஸ்லிம்களின்) ஆயுதம் எதுவும் உறையிலிருந்தபடியே தவிர, மக்காவினுள் நுழையக்கூடாது. மக்காவாசிகளில் எவரும் முஹம்மதைப் பின்தொடர்ந்து வர விரும்பினாலும் கூட, அவரை முஹம்மது தம்முடன் அழைத்துச் செல்லக் கூடாது. மேலும், தம் தோழர்களில் எவரும் மக்காவில் தங்கிவிட விரும்பினால் அவரை முஹம்மது தடுக்கக் கூடாது'' என்று எழுதினார்கள். (அடுத்த ஆண்டு) நபி(ஸல்) அவர்கள் மக்காவினுள் நுழைந்தபோது (அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட) தவணையான மூன்று நாள்கள் கழிந்தவுடன் மக்காவாசிகள் அலீ(ரலி) அவர்களிடம் வந்து, 'உங்கள் தோழரிடம் எங்களை (எங்கள் நகரை)விட்டு வெளியேறும்படி கூறுங்கள். ஏனெனில், தவணைக் காலம் கழிந்துவிட்டது'' என்றார்கள். நபி(ஸல்) அவர்களும் (மக்காவைவிட்டுப்) புறப்பட்டார்கள். அப்போது (உஹுதுப் போரில் கொல்லப்பட்டிருந்த) ஹம்ஸா(ரலி) அவர்களின் (அனாதை) மகள், 'என் சிறிய தந்தையே! என் சிறிய தந்தையே!'' என்று (கூறிக் கொண்டே) அவர்களைப் பின்தொடர்ந்து வந்தாள். அலீ(ரலி) அச்சிறுமியை (பரிவோடு) எடுத்து அவளுடைய கையைப் பிடித்தார்கள். ஃபாத்திமா(ரலி) அவர்களிடம், 'இவளை எடுத்துக் கொள். (இவள்) உன் தந்தையின் சகோதரருடைய மகள். இவளை (இடுப்பில்) சுமந்து கொள்'' என்று கூறினார்கள். அச்சிறுமியின் விஷயத்தில் அலீ(ரலி) அவர்களும், ஸைத் இப்னு ஹாரிஸா(ரலி) அவர்களும், ஜஅஃபர்(ரலி) அவர்களும் (ஒவ்வொரு வரும், 'அவளை நானே வளர்ப்பேன்' என்று) ஒருவரோடொருவர் போட்டியிட்(டு சச்சரவிட்டுக் கொண்)டனர். அலீ(ரலி), 'நானே இவளுக்கு மிகவும் உரிமையுடையவன். ஏனெனில், இவள் என் சிறிய தந்தையின் மகள்'' என்று கூறினார்கள். ஜஅஃபர்(ரலி), 'இவள் என் சிறிய தந்தையின் மகள். மேலும், இவளுடைய சிற்றன்னை என் (மணபந்தத்தின்) கீழ் இருக்கிறாள்'' என்று கூறினார்கள். ஸைத்(ரலி), '(இவள்) என் சகோதரரின் மகள்'' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் அச்சிறுமியின் சிற்றன்னைக்கு சாதகமாக (சிற்றன்னையின் கணவரான ஜஅஃபர்(ரலி) அவளை வளர்க்கட்டும் என்று) தீர்ப்பளித்தார்கள். மேலும், 'சிற்றன்னை தாயின் அந்தஸ்தில் இருக்கிறாள்'' என்று கூறினார்கள். அலீ(ரலி) அவர்களை நோக்கி, 'நீங்கள் என்னைச் சேர்ந்தவர்; நான் உங்களைச் சேர்ந்தவன்'' என்று (ஆறுதலாகக்) கூறினார்கள். ஜஅஃபர்(ரலி) அவர்களை நோக்கி, 'நீங்கள் தோற்றத்திலும் குணத்திலும் என்னை ஒத்திருக்கிறீர்கள்'' என்றார்கள். மேலும், ஸைத்(ரலி) அவர்களை நோக்கி, 'நீங்கள் எம் சகோதரர்; எம்(மால் விடுதலை செய்யப்பட்ட, எம்முடைய பொறுப்பிலுள்ள) அடிமை (ஊழியர்)'' என்று கூறினார்கள்.

பகுதி 7

இணைவைப்பவர்களுடன் சமாதானம் செய்து கொள்வது.

இது குறித்து அபூ சுஃப்யான்(ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. 4

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அவ்ஃப் மாலிக் இப்னு(ரலி) கூறினார்.

பிறகு உங்களுக்கும் மஞ்சள் நிறத்தாருக்கும் (ஐரோப்பியர்களான பைஸாந்தியர்களுக்கும்) இடையே சமாதான ஒப்பந்தம் ஏற்படும்.

இது குறித்து ஸஹ்ல் இப்னு ஹுனைஃப்(ரலி) வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் அவர் 'அபூ ஜந்தலுடைய (நிகழ்ச்சி நடைபெற்ற) நாளில் எங்களை நான்... கண்டேன்'' என்று கூறினார். 5 அஸ்மா(ரலி) வழியாகவும், மிஸ்வர்(ரலி) வழியாகவும் நபி(ஸல்) அவர்களிடமிருந்து (இது பற்றி) அறிவிக்கப்பட்டுள்ளது.

2700. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) கூறினார்.

ஹுதைபிய்யா நிகழ்ச்சியின்போது 6 நபி(ஸல்) அவர்கள் இணைவைப்பவர்களுடன் மூன்று நிபந்தனைகளின் போரில் சமாதான ஒப்பந்தம் செய்தார்கள். அவையாவன:

1. நபி(ஸல்) அவர்கள் இணைவைப்பவர்களிடையேயிருந்து தம்மிடம் (மதீனாவுக்கு) வருபவரை (அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டிருந்தாலும் கூட) அவர்களிடமே திருப்பியனுப்பி விட வேண்டும். தங்களிடம் (மக்காவிற்கு) வரும் முஸ்லிம்களை இணைவைப்பவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் திருப்பியனுப்ப மாட்டார்கள்.

2. நபி(ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் அடுத்த ஆண்டு (உம்ரா செய்ய) மக்காவினுள் நுழைந்து மூன்று நாள்கள் தங்கலாம்.

3. (ஆனால்,) வாள், வில் போன்ற ஆயுதங்களை உறையிலிட்டுக் கொண்டே உள்ளே நுழைய வேண்டும்.

இந்த சமாதான ஒப்பந்தம் பேசப்பட்டுக் கொண்டிருந்தபோது அபூ ஐந்தல்(ரலி), தம் (கால்) சங்கிலிகளுடன் தத்தித் தத்தி (நடந்து) வந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் இணைவைப்பவர்களிடமே அவர்களைத் திருப்பியனுப்பிவிட்டார்கள்.

அபூ அப்தில்லாஹ் புகாரீயாகிய நான் கூறுகிறேன்:

முஅம்மல்(ரஹ்) சுஃப்யான்(ரஹ்) அவர்களிடமிருந்து அறிவித்த அறிவிப்பில் அபூ ஜந்தல்(ரலி) அவர்களைக் குறித்த நிகழ்ச்சியைக் கூறவில்லை.

2701. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உம்ரா செய்ய நாடியவர்களாக (மக்காவை நோக்கிப்) புறப்பட்டார்கள். குறைஷிகளில் இறைமறுப்பாளர்கள் அவர்களை இறையில்லம் கஅபாவிற்குச் செல்லவிடாமல் தடுத்தனர். எனவே, நபி(ஸல்) அவர்கள் ஹுதைபிய்யாவில் தம் தியாகப் பிராணியை அறுத்து (பலியிட்டு)விட்டுத் தம் தலையை மழித்தார்கள். மேலும், அவர்களுடன், 'வரும் ஆண்டில், நான் (என் தோழர்களுடன்) உம்ரா செய்ய அனுமதிக்கப்பட வேண்டும்; வாள்களைத் தவிர வேறு ஆயுதங்களை நாங்கள் எடுத்து வர மாட்டோம்; குறைஷிகள் விரும்புகிற வரை மட்டுமே மக்காவில் தங்கியிருப்போம்' என்னும் நிபந்தனையின் போரில் சமாதான ஒப்பந்தம் செய்தார்கள். அவர்களிடம் செய்த சமாதான ஒப்பந்தத்தின்படியே (அடுத்த ஆண்டு மக்கா நகரினுள்) நுழைந்தார்கள். அங்கு மூன்று நாள்கள் தங்கி (முடித்து)விட்டபோது, குறைஷிகள் நபி(ஸல்) அவர்களை (மக்காவைவிட்டு) வெளியேறும்படி உத்தரவிட, நபி(ஸல்) அவர்களும் வெளியேறிவிட்டார்கள்.

2702. ஸஹ்ல் இப்னு அபீ ஹல்மா(ரலி) அறிவித்தார்.

அப்துல்லாஹ் இப்னு ஸஹ்ல்(ரலி) அவர்களும் முஹய்யிலா இப்னு மஸ்வூத் இப்னி ஸைத்(ரலி) அவர்களும் கைபரை நோக்கிச் சென்றார்கள். கைபர் அப்போது முஸ்லிம்களுடன் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தது. 7

பகுதி 8

இழப்பீட்டுத் தொகையில் சமாதானம் செய்து கொள்வது.

2703. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

என் தந்தையின் சகோதாரி - ருபய்யிஉ பின்த்து நள்ர், - ஓர் இளம் பெண்ணின் முன்பல்லை உடைத்துவிட்டார். அப்பெண்ணின் குலத்தாரிடம் என் குலத்தார், 'இழப்பீட்டுத் தொகையைப் பெறுங்கள்; அல்லது (ருபய்யிஉவை) மன்னித்து விடும்படி சொல்லுங்கள்'' என்று கோரினார்கள். அவர்கள் (இரண்டில் எதற்குமே ஒப்புக் கொள்ள) மறுத்துவிட்டார்கள். எனவே, எங்கள் குலத்தார் நபி(ஸல்) அவர்களிடம் (விபரம் கூறி, தீர்ப்புப் பெற) வந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் (ருபய்யிஉவைப்) பழி வாங்கும்படி அவர்களுக்கு உத்தரவிட்டார்கள். அப்போது (என் தந்தையின் சகோதரர்) அனஸ் இப்னு நள்ரு(ரலி), 'இறைத்தூதர் அவர்களே! (என் சகோதாரி) ருபய்யிஉவின் முன்பல் உடைக்கப்படுமா? அப்படி நடக்காது. தங்களை சத்திய மார்க்கத்துடன் அனுப்பி வைத்தவனின் மீது சத்தியமாக! அவளுடைய முன்பல் உடைக்கப்படாது'' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், 'அனஸே! அல்லாஹ்வின் சட்டம் பழிவாங்குவதாகும். (எனவே, அதை வெறுக்கவோ மறுக்கவோ வேண்டாம்)'' என்று கூறினார்கள். பிறகு, அந்த (இளம் பெண்ணின்) குலத்தார் (ஈட்டுத் தொகை பெற) ஒப்புக் கொண்டு (ருபய்யிஉவை) மன்னித்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் அடியார்களில் சிலர் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு (எதையேனும் கூறி) விடுவார்களாயின் அதை அல்லாஹ் நிறைவேற்றி விடுகிறான்'' என்றார்கள்.

அனஸ்(ரலி) வழியாக அறிவிக்கப்படும் மற்றோர் அறிவிப்பில், '(அந்த வாலிபப் பெண்ணின்) குலத்தார் (பழிவாங்காமல்விட்டுவிட) ஒப்புக் கொண்டு பரிகாரத் தொகையை ஏற்றார்கள்' என்று வந்துள்ளது.

பகுதி 9

நபி(ஸல்) அவர்கள் (தம் பேரர்) ஹஸன் இப்னு அலீ(ரலி) அவர்களைக் குறித்து, 'இவர் என் புதல்வர்; (கண்ணிய மிக்க) தலைவர். இவரைக் கொண்டு இரண்டு பெரும் குழுவினருக்கிடையே அல்லாஹ் சமாதானம் செய்து வைக்க விரும்புகிறான்'' என்று கூறிய தகவலும், 'விசுவாசிகளில் இரண்டு கூட்டத்தார் போரிட்டால் அவர்களிடையே சமாதானம் செய்து வையுங்கள்' என்னும் (திருக்குர்ஆன் 49:09) இறைவசனமும்.

2704. ஹஸன் பஸாரீ(ரஹ்) அறிவித்தார்.

8அலீ(ரலி) அவர்களின் மகனான ஹஸன்(ரலி), முஆவியா(ரலி) அவர்களை மலைகளைப் போன்ற (பிரம்மாண்டமான) படையணிகளுடன் எதிர்கொண்டார்கள். (அவற்றைக் கண்ட முஆவியா(ரலி) அவர்களின் ஆலோசகர்) அம்ர் இப்னு ஆஸ்(ரலி), 'இவற்றில் உள்ள (போரிடுவதிலும், வீரத்திலும்) சமபலம் வாய்ந்தவர்களை நீங்கள் கொன்று விடாதவரை இந்தப் படைகள் பின்வாங்கிச் செல்லாது என்று கருதுகிறேன்'' என்று கூறினார்கள். அவருக்கு முஆவியா(ரலி) அல்லாஹ்வின் மீதாணையாக! அவ்விருவரில் முஆவியாவே, சிறந்தவராக இருந்தார்...'' அம்ரே! இவர்கள் அவர்களையும் அவர்கள் இவர்களையும் கொன்று விடுவார்களாயின் மக்களின் நிர்வாகத்திற்குப் பொறுப்பேற்க என்னிடம் வேறு யார் இருப்பார்கள்? (என் குடி) மக்களின் பெண்களைப் பாதுகாக்க என்னிடம் (வேறு) யார் இருப்பார்கள்? அவர்களின் சொத்துகளைப் பாதுகாக்க என்னிடம் (வேறு) யார் தான் இருப்பார்கள்?' என்று பதிலளித்தார்கள். எனவே, ஹஸன்(ரலி) அவர்களிடம் குறைஷிகளில் பனூ அப்தி ஷம்ஸ் கிளையாரைச் சேர்ந்த அப்துர் ரஹ்மான் இப்னு சமுரா(ரலி) அவர்களையும், அப்துல்லாஹ் இப்னு ஆமிர் இப்னி குரைஸ்(ரலி) அவர்களையும் அனுப்பி, 'நீங்கள் இருவரும் இந்த மனிதரிடம் சென்று விபரத்தை எடுத்துரைத்துப் பேசி, அவரிடம் (சமாதான ஒப்பந்தம் செய்து கொள்ளும்படி) கோருங்கள்'' என்று கூற, அவ்விருவரும் (அவ்வாறே) ஹஸன்(ரலி) அவர்களிடம் சென்று, அவர்களின் அறைக்குள் நுழைந்து பேசினார்கள்; ஹஸன்(ரலி) அவர்களிடம் (முஅவியா(ரலி) அவர்களின் தூதை எடுத்துச்) சொல்லி (அமைதி ஒப்பந்தம் செய்து கொள்ள முன்வரும்படி) கோரினார்கள். அதற்கு அவ்விருவரிடமும் ஹஸன்(ரலி), 'நாங்கள் அப்துல் முத்தலிபின் மக்கள்; இந்த செல்வத்தை (எங்கள் தலைமைத்துவத்தின் காரணத்தால்) பெற்றிருக்கிறோம். (அதை எங்கள் குடிமக்கள், படைவீரர்கள் மற்றும் ஆதரவாளர்களிடையே செலவு செய்து வருகிறோம்.) இந்தச் சமுதாயமோ தன் இரத்தத்தை சிந்திப் பழம்விட்டது'' என்று கூறினார்கள். இதற்கு அவ்விருவரும், 'முஆவியா(ரலி) உங்களுக்கு இவ்வளவு (மானியம்) தருவதாகக் கூறுகிறார்கள்; மேலும் (சமாதான ஒப்பந்தம் செய்து கொள்ளும்படி) உங்களிடம் கோருகிறார்கள்'' என்று கூறினர். அதற்கு ஹஸன்(ரலி), 'இந்த விஷயத்தில் எனக்குப் பொறுப்பு யார்?' என்று கேட்க, அவ்விருவரும் 'இதில் உங்களுக்கு நாங்கள் பொறுப்பு'' என்று கூறினர்.

ஹஸன்(ரலி) கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் அவர்கள், 'நாங்கள் உங்களிடம் இதற்குப் பொறுப்பேற்கிறோம்'' என்றே கூறினார்கள். இறுதியாக, ஹஸன்(ரலி), முஆவியா(ரலி) அவர்களுடன் சமாதான ஒப்பந்தம் செய்தார்கள். மேலும், '(ஒரு முறை) இறைத்தூதர் மிம்பர் மீதிருக்க, அவர்களின் ஒரு பக்கத்தில் ஹஸன் இப்னு அலீ(ரலி) அமர்ந்திருக்க, நபி(ஸல்) அவர்கள் ஒரு முறை மக்களை நோக்கியும், மற்றொரு முறை ஹஸன்(ரலி) அவர்களை நோக்கியும் (உரை நிகழ்த்திய வண்ணம்), 'இந்த என்னுடைய புதல்வர் (கண்ணியத்திற்குரிய) தலைவராவார். முஸ்லிம்களின் இரண்டு பெரும் கூட்டத்தாரிடையே இவரின் மூலமாக அல்லாஹ் சமாதானம் செய்து வைக்க விரும்புகிறான்'' என்று கூறிக் கொண்டிருந்ததை பார்த்தேன்'' என்று அபூ பக்ரா(ரலி) கூறியதை கேட்டேன்.

பகுதி 10

(தகராறு செய்து கொள்ளும் இருவரை) சமாதானம் செய்து கொள்ளும்படி ஆட்சித் தலைவர் குறிப்பால் உணர்த்தலாமா?

2705. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (தம் வீட்டின்) வாசலருகே (இருவர்) சச்சரவிட்டுக் கொள்ளும் சத்தத்தைக் கேட்டார்கள். சச்சரவிட்டுக் கொண்டிருந்தவர்களின் குரல்கள் உயர்ந்தன. ஒருவர் மற்றவரிடம் ஏதோ ஒரு (கடன்) விஷயத்தில் சற்றுக் குறைத்து வாங்கிச் செல்லும்படியும், மென்மையாக நடந்து கொள்ளும்படியும் கேட்டுக் கொண்டிருந்தார். அதற்கு மற்றவர், 'அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அவ்வாறு செய்ய மாட்டேன்'' என்று கூறிக் கொண்டிருந்தார். அவர்களிடம் இறைத்தூதர்(ஸல்) புறப்பட்டு வந்து, 'நன்மை(யான செயலைச்) செய்ய மாட்டேன் என்று அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுக் கூறியவர் எங்கே?' என்று கேட்டார்கள். அந்த மனிதர், 'நானே இறைத்தூதர் அவர்களே! (நான் என் சத்தியத்தைத் திரும்பப் பெற்றக் கொள்கிறேன்;) அவர் விரும்பியது எதுவானாலும் (அது) அவருக்குக் கிடைக்கும்'' என்று கூறினார்.

2706. கஅப் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

எனக்கு அப்துல்லாஹ் இப்னு அபீ ஹத்ரத் அல் அஸ்லமீ(ரலி) சிறிது பணம் தர வேண்டியிருந்தது. எனவே, அவரை நான் சந்தித்து (கடனை அடைக்கச் சொல்லி) நச்சரித்தேன். (எங்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு) எங்கள் குரல்கள் உயர்ந்தன. நபி(ஸல்) அவர்கள் எங்களைக் கடந்து சென்றார்கள். அப்போது, 'கஅபே!'' என்று கூறி 'பாதி' ('பாதி கடனைத் தள்ளுபடி செய்து விடு') என்பது போல் தம் கரத்தால் சைகை செய்தார்கள். அவ்வாறே பாதியைப் பெற்றுக் கொண்டு, பாதியைத் தள்ளுபடி செய்து விட்டேன்.

பகுதி 11

மக்களுக்கிடையே சமாதானம் செய்து வைத்து அவர்களிடையே நீதி செலுத்துவதின் சிறப்பு.

2707. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

மனிதர்கள், தம் ஒவ்வொரு மூட்டு எலும்புக்காகவும் தர்மம் செய்வது கடமையாகும். சூரியன் உதிக்கிற ஒவ்வொரு நாளிலும் மக்களிடையே நீதி செலுத்துவதும் ஒரு தர்மமே.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பகுதி 12

சமாதானமாகப் போகுமாறு ஆட்சித் தலைவர் குறிப்பால் உணர்த்தியும் கூட அதை (ஒரு பிரஜை) ஏற்க மறுத்தால், தெளிவான ஆணையை அவர் பிறப்பிப்பார்.

2708. ஸுபைர்(ரலி) அறிவித்தார்.

எனக்கு பத்ருப் போரில் பங்கெடுத்த அன்சாரி ஒருவருடன் (மதீனாவின்) 'ஹர்ரா' எனும் (கருங்கல் பூமியிலுள்ள) ஒரு கால்வாயின் விஷயத்தில் தகராறு ஏற்பட்டது. நாங்கள் இருவரும் அந்தக் கால்வாய் மூலமாகத் தான் எங்கள் தோட்டங்களுக்கு நீர்பாய்ச்சி வந்தோம். நபியவர்களிடம் வழக்கில் தீர்ப்புக் கேட்டு சென்றபோது நபி(ஸல்) அவர்கள் என்னிடம், 'ஸுபைரே! (முதலில்) நீங்கள் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டு, பிறகு உங்கள் அண்டையிலிருப்பவருக்கு அதை அனுப்பி விடுங்கள்'' என்று கூறினார்கள். இதைக் கேட்ட அந்த அன்சாரி கோபமடைந்து, 'இறைத்தூதர் அவர்களே! உங்கள் அத்தையின் மகன் என்பதாலா (இப்படித் தீர்ப்புக் கூறினீர்கள்?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்களின் முகம் (கோபத்தால் சிவந்து) நிறம் மாறியது. பிறகு வரப்புகளைச் சென்றடையும் வரை தடுத்து நிறுத்திக் கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள். இவ்வாறு ஸுபைர்(ரலி) அவர்களுக்கு, அன்னாருடைய முழு உரிமையையும் இறைத்தூதர் வழங்கினார்கள்.

''இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அதற்கு முன் ஸுபைர்(ரலி) அவர்களுக்கும் அந்த அன்சாரிக்கும் தாராளமாகப் பயன் தரும் விதத்தில் ஸுபைர்(ரலி) அவர்களிடம் யோசனை தெரிவித்தார்கள். ஆனால், அந்த அன்சாரி அல்லாஹ்வின் தூதருக்குக் கோபமூட்டியபோது ஸுபைர்(ரலி) அவர்களுக்கு அவர்களின் உரிமையை தெளிவான ஆணையின் வாயிலாக முழுமையாக வழங்கிவிட்டார்கள்'' என்று அறிவிப்பாளர் இமாம் ஸுஹ்ரீ(ரஹ்) கூறினார்.

''(நபியே!) உங்களுடைய இறைவன் மீது ஆணையாக! அவர்கள் தமக்குள் ஏற்படும் சச்சரவுகளில் உங்களை நீதிபதியாக ஏற்று, நீங்கள் வழங்கும் தீர்ப்பை மனத்தில் எந்த அதிருப்தியும் கொள்ளாமல் அங்கிகாரித்து, முற்றிலும் கட்டுப்பட்டு நடக்காத வரையில், அவர்கள் உண்மையான விசுவாசிகளாய் ஆக மாட்டார்கள்' என்னும் (திருக்குர்ஆன் 04:65) வசனம் இது தொடர்பாகவே இறங்கியதாக நான் நினைக்கிறேன்'' என்று ஸுபைர்(ரலி) கூறினார்.

பகுதி 13

கடன்காரர்களுக்கும் (கடனாளியின்) வாரிசுகளுக்கும் இடையே சமாதானம் செய்து வைப்பதும், தோராயமாகக் கொடுத்து கடனைச் சரி செய்வதும்.

''இரண்டு பங்காளிகளுக்கிடையே சச்சரவு வந்து, ஒருவர் இருப்பையும் மற்றொருவர் வர வேண்டிய கடனையும் எடுத்துக் கொண்டால் தவறில்லை; பிறகு இவரின் இருப்புக்கோ, அவரின் கடனுக்கோ ஆபத்து ஏற்படுமாயின் அடுத்தவரை அணுகக் கூடாது'' என்று இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்.

2709. ஜாபிர்(ரலி) அறிவித்தார்.

என் தந்தை தன் மீது கடன் (சுமை) இருந்த நிலையில் இறந்துவிட்டார். எனவே, நான் அவருக்குக் கடன் தந்தவர்களிடம் என் தந்தை மீதிருந்த கடனுக்கு பதிலாக பேரீச்சங் கனிகைளை எடுத்துக் கொள்ளும்படி சொன்னேன். அதற்கு (உடன்பட) அவர்கள் மறுத்துவிட்டார்கள். அப்படி எடுத்துக் கொள்வதால் (தம் உரிமை முழுமையாக நிறைவேறாது என்று அவர்கள் கருதினார்கள். எனவே, நான் நபி(ஸல்) அவர்களிடம் வந்து அதைக் கூறினேன். நபி(ஸல்) அவர்கள், 'நீ அதைப் பறித்துக் களத்தில் (காய) வைக்கும்போது அல்லாஹ்வின் தூதரிடம் (என்னிடம்) தெரிவி'' என்று கூறினார்கள். (பிறகு நான் அவ்வாறே தெரிவிக்க) நபி(ஸல்) அவர்கள் அபூ பக்ர்(ரலி) அவர்களுடனும் உமர்(ரலி) அவர்களுடனும் வருகை தந்தார்கள். அந்தப் பழத்தின் அருகே அமர்ந்து (இறைவனின் அருளால் அதில்) பெருக்கம் ஏற்படுவதற்காகப் பிரார்த்தனை செய்தார்கள். பிறகு, 'உன் (தந்தையின்) கடன்காரர்களை அழைத்து அவர்களுக்கு நிறைவாகக் கொடு'' என்று கூறினார்கள். என் தந்தை எவருக்கெல்லாம் கடனைத் திருப்பித் தரவேண்டியிருந்தோ அவர்களில் ஒருவரையும் விடாமல் கடனை அடைத்து விட்டேன். மேலும், பதின்மூன்று வஸக்கு பேரீச்சங் கனிகள் எஞ்சிவிட்டன. ஏழு வஸக்குகள் 'அஜ்வா' (என்னும் மதீனாவின் உயர் ரகப்) பேரீச்சம் பழமும், (அஜ்வா மற்றும் அது போன்றவையல்லாத) மற்றவகைப் பேரீச்சம் பழங்களும், அல்லது ஏழு வஸக்குகள் லவ்னும் ஆறு வஸக்குகள் அஜ்வாவும் மீதமாம்விட்டன. (அன்று) நான் அல்லாஹ்வின் தூதருடன் மக்ரிப் தொழுகையைத் தொழுதேன்; இந்த விஷயத்தை அவர்களிடம் கூறினேன். அதற்கு அவர்கள் சிரித்துவிட்டு, 'அபூ பக்ரிடமும் உமாரிடமும் சென்று தெரிவி'' என்று கூறினார்கள். (நானும் அவ்வாறே தெரிவித்தேன்.) அதற்கு அவர்கள் இருவரும், 'இறைத்தூதர், பெருக்கத்திற்காகப் பிரார்த்தனை செய்த நேரத்திலேயே இதுதான் நடக்கும் என்று நாங்கள் அறிந்து கொண்டோம்'' என்று கூறினார்கள். ஜழபிர்(ரலி) அவர்களிடமிருந்து வஹ்ப்(ரஹ்) வழியாக ஹிஷாம்(ரஹ்) அறிவிக்கும் அறிவிப்பில், 'அல்லாஹ்வின் தூதருடன் மக்ரிபு தொழுகையைத் தொழுதேன்'' என்பதற்கு பதில், 'அஸர் தொழுகையைத் தொழுதேன்'' என்று வந்துள்ளது. மேலும், அதில் அபூ பக்ர்(ரலி) அவர்களைக் குறிப்பிடவில்லை. 'நபி(ஸல்) அவர்கள் சிரித்தார்கள்' என்பதும் அதில் இல்லை. மேலும், 'என் தந்தை, தன் மீது முப்பது வஸக்குகள் கடனை வைத்துவிட்டுச் சென்றிருந்தார்' என்றும் வந்துள்ளது. ஜாபிர்(ரலி) அவர்களிடமிருந்து வஹ்ப்(ரஹ்) வழியாக இப்னு இஸ்ஹாக்(ரஹ்) அறிவிக்கும் ஓர் அறிவிப்பில், 'நான் அல்லாஹ்வின் தூதருடன் லுஹர் தொகையைத் தொழுதேன்'' என்று வந்துள்ளது.

பகுதி 14

வரவேண்டிய கடனைக் கொண்டும் இருப்பைக் கொண்டும் சமாதானம் செய்து கொள்வது.

2710. கஅப் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

அல்லாஹ்வின் தூதருடைய காலத்தில் எனக்கு இப்னு அபீ ஹத்ரத்(ரலி) தர வேண்டியிருந்த ஒரு கடனை (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் வைத்துத் திருப்பிச் செலுத்தும்படி கேட்டேன். (எங்கள்) இருவரின் குரல்களும் நபி(ஸல்) அவர்கள் தம் வீட்டிலிருந்தபடியே அதைக் கேட்கும் அளவிற்கு உயர்ந்தன. எனவே, நபி(ஸல்) அவர்கள் எங்களிருவரையும் காணப் புறப்பட்டு வந்தார்கள். தம் அறையின் திரையை விலக்கி, 'கஅபே!'' என்றழைத்தார்கள். நான், 'இதோ வந்துவிட்டேன், இறைத்தூதர் அவர்களே!'' என்று பதிலளித்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'பாதிக் கடனைத் தள்ளுபடி செய்துவிடு' என்று தம் கரத்தால் சைகை காட்டினார்கள். 'அவ்வாறே செய்து விட்டேன், இறைத்தூதர் அவர்களே!'' என்று நான் கூற, இப்னு அபீ ஹத்ரத்(ரலி) அவர்களைப் பார்த்து, 'நீங்கள் எழுந்து சென்று அவரின் கடனை அடையுங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
Previous Post Next Post