அத்தியாயம் 52 சாட்சியங்கள்

ஸஹீஹுல் புகாரி
அத்தியாயம் 52

 சாட்சியங்கள்

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்.

பகுதி 1

வாதி தான் ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

அல்லாஹ் கூறினான்:

இறைநம்பிக்கையாளர்களே! ஒரு குறிப்பிட்ட காலத் தவணைக்கு நீங்கள் உங்களுக்குள் கடன் கொடுத்து வாங்கிக் கொள்வீர்களாயின் அதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். உங்களிடையே எழுத்தர் ஒருவர் அதை நீதியுடன் எழுதட்டும். எழுதத் தெரிந்தவர், அல்லாஹ் அவருக்குக் கற்றுத் தந்ததைப் போன்று (பிறருக்காக அவரும்) எழுதித் தரட்டும். அவர் எழுதித் தர மறுக்க வேண்டாம். எவரின் மீது (கடன் சுமையைத் தீர்க்கும்) பொறுப்புள்ளதோ அவர் (எழுதுவதற்காக) வாசகம் சொல்லித் தரட்டும். (அந்த நேரத்தில்) தன் அதிபதிக்கு அவர் அஞ்சட்டும். மேலும், கடன் விஷயமாகத் தீர்மானிக்கப்பட்டதிலிருந்து எதையும் அவர் மறைக்க வேண்டாம். (உள்ளதை உள்ளபடி சொல்லட்டும்.) கடனைத் திருப்பிச் செலுத்தும் பொறுப்புடையவர் பேதையாகவோ (மூளை வளர்ச்சி குன்றியவராகவோ) பலவீனராகவோ, வாசகம் சொல்ல இயலாதவராகவோ இருந்தால் அவரின் காப்பாளர் நீதியுடன் (வாசகம்) சொல்லட்டும். மேலும், உங்களில் இரண்டு ஆண்களை சாட்சிகளாக்கிக் கொள்ளுங்கள். இரண்டு ஆண்கள் இல்லையென்றால் ஓர் ஆணையும் இரண்டு பெண்களையும் சாட்சிகளாக்கிக் கொள்ளுங்கள்; அவ்விருவரில் ஒருத்தி மறந்துவிட்டால் மற்றொருத்தி அவளுக்கு நினைவூட்டுவதற்காக, இவர்கள் நீங்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய சாட்சிகளாய் இருக்க வேண்டும். சாட்சிகள் (சாட்சியமளிப்பதற்காக) அழைக்கப்படும்போது (வர) மறுக்கக் கூடாது. (கடன் தொகை) சிறிதாயினும் பெரிதாயினும் அதை எழுதி வைத்துக் கொள்வதில் கவனக் குறைவாக இருந்து விடாதீர்கள். இதுவே, அல்லாஹ்விடம் நீதிமிக்க வழிமுறையாகும். மேலும், சாட்சியத்தை நிலைநாட்டக் கூடியதும் நீங்கள் சந்தேகம் கொள்ளாமலிருக்கப் பொருத்தமானதும் ஆகும். ஆனால், அது உங்களுக்கிடையே நீங்கள் (வழக்கமாக) செய்து கொள்கிற உடனடி கொடுக்கல் வாங்கலாக இருக்குமாயின், அதை எழுதி வைத்துக் கொள்ளாமல் இருப்பதில் உங்களின் மீது குற்றமேதும் இல்லை. எனினும், வியாபார ஒப்பந்தங்கள் செய்தால் அவற்றிற்கு சாட்சியம் வைத்துக் கொள்ளுங்கள். எழுத்தரும் சாட்சிகளும் துன்புறுத்தப்படக்கூடாது. அவ்வாறு நீங்கள் துன்புறுத்தினால் அது நீங்கள் செய்யும் பாவமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். அவன் உங்களுக்குச் சரியான வழிமுறைகளைக் கற்றுத் தருகிறான். மேலும், அல்லாஹ் அனைத்து விஷயங்களையும் நன்கறிந்தவன் ஆவான். (திருக்குர்ஆன் 02:282)

மேலும், அல்லாஹ் கூறினான்:

இறைநம்பிக்கையாளர்களே! நீங்கள் நீதியைக் கடைப்பிடிப்பவர்களாகவும் அல்லாஹ்வுக்காக சாட்சி சொல்பவர்களாகவும் திகழுங்கள். (நீங்கள் செலுத்துகிற நீதியும் சொல்லும் சாட்சியமும்) உங்களுக்கோ உங்கள் பெற்றோர் மற்றும் நெருங்கிய உறவினர்களுக்கோ எதிராக இருப்பினும் சரியே. (நீங்கள் யாருக்காக சாட்சி சொல்கிறீர்களோ) அவர் வசதியுடையவராகவோ ஏழையாகவோ இருப்பினும் சரியே அல்லாஹ் அவர்களை (உங்களை விட) அதிகமாகப் பாதுகாப்பவனாக இருக்கிறான். எனவே, நீதி செலுத்தத் தவறி இச்சையைப் பின்பற்றி விடாதீர்கள். நீங்கள் நீதிக்குப் புறம்பாக சாட்சி சொன்னாலோ (நீதியைக் காப்பாற்ற மனமின்றி) சாட்சியளிக்காமல் விலகினாலோ நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்துள்ளான். (திருக்குர்ஆன் 04:135)

பகுதி 2

ஒருவரை நல்லவர் என்று அறிவிப்பதற்காக (அவரைப் பற்றி) நான் நல்லதையே அறிந்துள்ளேன் என்று ஒருவர் சொன்னால்...

...அது (சாட்சியாக) ஏற்கப்படும் என்று கூறியவர்கள், ஆயிஷா(ரலி) அவர்களின் மீதான அவதூறு குறித்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு வருகிறார்கள். அதில், நபி(ஸல்) அவர்கள் உஸாமா(ரலி) அவர்களிடம், 'ஆயிஷா மீது கூறப்படும் இந்தக் குற்றச் சாட்டின் காரணத்தால், 'அவரை (விவாகரத்து செய்து) பிரிந்து விடலாமா' என்று ஆலோசனை கேட்டபோது, 'அவர்கள் தங்கள் மனைவி அவர்களைப் பற்றி நாங்கள் நல்லதைத் தவிர வேறெதையும் அறிய மாட்டோம்'' என்று உஸாமா(ரலி) கூறினார்.

2637. இப்னு ஷிஹாப்(ரஹ்) அறிவித்தார்.

உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்), இப்னுல் முஸய்யப்(ரஹ்), அல்கமா இப்னு வக்காஸ்(ரஹ்) மற்றும் உபைதுல்லாஹ் இப்னு அப்தில்லாஹ்(ரஹ்) ஆகியோர் எனக்கு (மக்கள் சிலர்) ஆயிஷா(ரலி) அவர்களை (அவதூறு பேசியது) பற்றிய ஹதீஸை அறிவித்தார்கள். ஒருவர் அறிவித்த ஹதீஸ் மற்றவர் அறிவித்த ஹதீஸை உறுதிப்படுத்துவதாக இருந்தது. 'அபாண்டப் பழி சுமத்தியவர்கள் தாங்கள் பேசிய அவதூறுகளையெல்லாம் சொன்னபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் மனைவியை (ஆயிஷாவை)ப் பிரிந்து விடுவது குறித்து ஆலோசனை கலப்பதற்காக அலீ(ரலி) அவர்களையும், உஸாமா(ரலி) அவர்களையும் அழைத்தார்கள். அப்போது 'வஹீ' (தற்காலிகமாக நின்று போய், வரத்) தாமதமாகிக் கொண்டிருந்தது. உஸாமா(ரலி), 'அவர்கள் (ஆயிஷா), தங்கள் மனைவி. (அவர்களைப் பற்றி) நல்லதைத் தவிர வேறெதையும் நாங்கள் அறிய மாட்டோம்'' என்று கூறினார்கள். மேலும், (ஆயிஷா(ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட) பாரீரா(ரலி), 'அவர்கள் (ஆயிஷா), தம் வீட்டாரின் குழைத்தமாவை (அப்படியே)விட்டுவிட்டு உறங்கி விடுகிற இளவயதுச் சிறுமி என்பதையும் (அப்படி அவர்கள் தூங்கும் போது) வீட்டு ஆடு வந்து அதைத் தின்றுவிடும் என்பதையும் தவிர அவர்களின் மீது குறைசொல்லக் தக்க விஷயம் எதையும் நான் பார்க்கவில்லை'' என்று கூறினார்கள். (அதன்பின்னர்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'என் வீட்டாரின் விஷயத்தில் எனக்கு (மன) வேதனை தந்துவிட்ட ஒரு மனிதனை தன் சார்பாக தண்டிக்கக் கூடியவர் யார்? அல்லாஹ்வின் மீதாணையாக! என் மனைவியிடமிருந்து நன்மையைத் தவிர வேறெதையும் நான் அறியவில்லை. மேலும், எந்த மனிதரைக் குறித்து நன்மையைத் தவிர வேறெதையும் நான் அறிய மாட்டேனோ அவரைப் போய் (ஆயிஷாவுடன் இணைத்து) அவர்கள் (அவதூறு) கூறியுள்ளனர்'' என்றார்கள்.

பகுதி 3

மறைந்திருந்து கேட்டவரின் சாட்சியம்.

இதை அம்ர் இப்னு ஹுரைஸ்(ரலி) அனுமதித்துள்ளார்கள்.

மேலும், அவர்கள், 'தீயவனான பொய்யனிடம் இப்படித்தான் செய்ய வேண்டும்'' என்று கூறினார்கள். 'ஷஅபீ (ரஹ்), இப்னு ஸீரீன்(ரஹ்), அதாஉ இப்னு அபீ ரபாஹ்(ரஹ்), கத்தாதா(ரஹ்) ஆகியோர், '(கண்ணால் பார்க்காமல் காதால்) கேட்டதை (மட்டும்) வைத்து சாட்சி சொல்லாம். (அதுவும் ஏற்கப்படக் கூடியதே. சாட்சி சொல்பவர் வாக்குமூலம் தந்தவரை அவர் வாக்கு மூலம் தரும்போது கண்ணால் பார்த்திருக்கவேண்டிய அவசியமில்லை)'' என்று கூறினர்.

''ஒருவரைப் பார்க்காமலேயே அவரின் வாக்குமூலத்தை மட்டும் கேட்டுவிட்டு, நீதிபதியிடம் அதைப் பற்றி சாட்சியமளிக்க வருபவர், 'என்னை (சாட்சியாக அழைத்து வந்தவர்கள்) எதையும் பார்க்கச் செய்யவில்லை. நான் இன்னின்ன விதமாகச் செவியுற்றேன்' என்று கூற வேண்டும். (அப்படிக் கூறினால் அது செல்லும்)'' என்று ஹஸன் பஸாரீ(ரஹ்) கூறினார்கள்.

2638. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களும் உபை இப்னு கஅப்(ரலி) அவர்களும் இப்னு ஸய்யாத் இருந்த பேரீச்சந் தோட்டத்தை நாடிச் சென்றார்கள். (தோட்டத்தில்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நுழைந்தவுடன் இப்னு ஸய்யாத் தம்மைப் பார்ப்பதற்கு முன்பு, அவனிடமிருந்து (அவனுடைய சொற்களைக்) கேட்க உபாயம் செய்தவர்களாய், பேரீச்ச மரங்களுக்கிடையே தம்மை மறைத்து நடக்கலானார்கள். இப்னு ஸய்யாத் தன் படுக்கையில் ஒரு பூம்பட்டுப் போர்வைக்குள் (குறிகாரர்கள் முணு முணுப்பதைப் போல்) எதையோ முணு முணுத்தபடி படுத்துக் கொண்டிருந்தான். நபி(ஸல்) அவர்கள் பேரீச்ச மரங்களுக்கிடையே தம்மை மறைத்துக் கொண்டு வருவதை இப்னு ஸய்யாதின் தாய் பார்த்துவிட்டாள். அவள் தன் மகனை நோக்கி, 'ஸாஃபியே! இதோ முஹம்மத் (வந்து கொண்டிருக்கிறார்)'' என்று கூறிவிட்டாள். உடனே, இப்னு ஸய்யாத் விழிப்படைந்து முணுமுணுப்பதை நிறுத்திவிட்டான்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அவள் (இப்னு ஸய்யாதின் தாய்) அவனை (உஷார்படுத்தாமல்)விட்டுவிட்டிருந்தால் (தன் உண்மை நிலையை அவனே) அம்பலப்படுத்தி விட்டிருப்பான்'' என்று கூறினார்கள். 1

2639. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

ரிஃபாஆ அல் குரழீ(ரலி) அவர்களின் மனைவி நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'நான் ரிஃபாஆவிடம் (அவரின் மண பந்தத்தில்) இருந்தேன். பிறகு, அவர் என்னை மணவிலக்கு செய்து மணவிலக்கை முடிவானதாக்கிவிட்டார். எனவே, நான் அப்துர் ரஹ்மான் இப்னு ஸபீர்(ரலி) அவர்களை மணந்தேன். அவரிடம் இருப்பதெல்லாம் (உறுதியின்றித் தொங்கும்) முந்தானைத் தலைப்பைத் போன்றது தான் (அவர் ஆண்மை குறைந்தவர்)'' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், 'நீ ரிஃபாஆவிடம் திரும்பிச் செல்ல விரும்புகிறாயா? (தற்போதையை உன் கணவரான) அவரின் இனிமையை நீ சுவைக்காத வரையிலும் உன்னுடைய இனிமையை அவர் சுவைக்காத வரையிலும் உன் முன்னாள் கணவரை நீ மணந்து கொள்வதென்பது முடியாது'' என்று கூறினார்கள். அப்போது அபூ பக்ர்(ரலி), நபி(ஸல்) அவர்களிடம் அமர்ந்து கொண்டிருந்தார்கள். காலித் இப்னு ஸயீத் இப்னு ஆஸ்(ரலி), தமக்கு உள்ளே நுழைய அனுமதியளிக்கப்படும் என்று எதிர்பார்த்த வண்ணம் வாசலில் நின்றிருந்தார்கள். அவர்கள், 'அபூ பக்ரே! இந்தப் பெண் நபி(ஸல்) அவர்களிடம் எதை பகிரங்கமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறாள் என்பதைக் கேட்க மாட்டீர்களா?' என்று (வாசலில் நின்றபடியே) சொன்னார்கள். 2

பகுதி 4

ஒருவரோ, பலரோ ஒரு விஷயத்திற்கு சாட்சியம் அளித்திருக்க, மற்ற சிலர் வந்து, 'இதை நாங்கள் அறிய மாட்டோம்'' என்று கூறினால் (முதலில்) சொன்னவர்களின் சாட்சியத்தை வைத்தே தீர்ப்பளிக்கப்படும்.

''இது (எப்படியென்றால்) பிலால்(ரலி), 'நபி(ஸல்) அவர்கள் (மக்கா வெற்றியின் போது) கஅபாவினுள் தொழுதார்கள்' என்று செய்தியறிவிக்க, ஃபிள்லு இப்னு அப்பாஸ்(ரலி), 'நபி(ஸல்) அவர்கள் கஅபாவினுள் தொழவில்லை' என்று கூறியபோது, பிலால்(ரலி) அவர்களின் சாட்சியத்தையே மக்கள் ஏற்றதைப் போன்றதாகும்'' என்று ஹுமைதீ(ரஹ்) கூறினார்.

இவ்வாறே, 'இன்னாருக்கு இன்னாரிடமிருந்து ஆயிரம் திர்ஹம்கள் (கடன் தொகை) வரவேண்டியுள்ளது'' என்று இருவர் சாட்சியமளித்து, வேறு ஒருவர், 'இரண்டாயிரம் திர்ஹம்கள் வர வேண்டியுள்ளது'' என்று சாட்சியம் அளித்தால் (இரண்டு தொகைகளில்) அதிகமான தொகை எதுவோ அதைச் செலுத்தும்படியே தீர்ப்பு வழங்கப்படும்.

2640. உக்பா இப்னு ஹாரிஸ்(ரலி) அறிவித்தார்.

நான் அபூ இஹாப் இப்னு அஸீஸ் அவர்களின் மகளை மணந்துகொண்டேன். ஒரு பெண் என்னிடம் வந்து, 'உனக்கும் நீ மணந்த பெண்ணுக்கும் நான் பாலூட்டியிருக்கிறேன்'' என்று கூறினாள். நான், 'நீ எனக்குப் பாலூட்டியதை நான் அறியமாட்டேன்; (நான் மணந்தபோது) நீ எனக்கு (இதை) அறிவிக்கவில்லையே'' என்று கூறிவிட்டு, அபூ இஹாபின் குடும்பத்தாரிடம் (இது உண்மை தானா என்று) கேட்டனுப்பினேன். அவர்கள், 'எங்கள் பெண்ணுக்கு அவள் பாலூட்டியதாக நாங்கள் அறியவில்லை'' என்று கூறினர். உடனே (மக்காவில் இருந்த) நான், மதீனாவிலிருந்த நபி(ஸல்) அவர்களிடம் (மார்க்கத் தீர்ப்புப் பெறுவதற்காக) பயணித்துச் சென்று அவர்களிடம் (இது குறித்துக்) கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், '(நீயும் உன் மனைவியும் ஒரே செவிலித் தாயிடம் பால்குடித்தாகச்) சொல்லப்பட்டுவிட்ட பின்னால், (நீங்கள் இருவரும் இணைந்து வாழ்வது) எப்படி (செல்லும்)?' என்று கூறினார்கள். எனவே; நான் அவளைப் பிரிந்துவிட்டேன். அவள் வேறொரு கணவனை மணந்தாள்.

பகுதி 5

நேர்மையான சாட்சிகள்

அல்லாஹ் கூறினான்:

மேலும், உங்களில் நேர்மையுள்ள இருவரை சாட்சிகளாக்கிக் கொள்ளுங்கள். (திருக்குர்ஆன் 65:02)

இந்த சாட்சிகள் நீங்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியவர்களாய் இருக்க வேண்டும். (திருக்குர்ஆன் 02: 282)

2641. உமர் இப்னு கத்தாப்(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில் மக்கள் வஹீயின் (வேத வெளிப்பாடு அல்லது இறையறிவிப்பின்) வாயிலாக (ரகசியமாகச் செய்த குற்றங்கள் அம்பலமாகி) தண்டிக்கப்பட்டு வந்தார்கள். இப்போது நபி(ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின்) வஹீ (இறைச்செய்தி) வருவது நின்று போய்விட்டது. இப்போது நாம் உங்களைப் பிடி(த்து தண்டி)ப்பதெல்லாம் உங்கள் செயல்களில் எமக்கு வெளிப்படையாகத் தெரிபவற்றைத் கொண்டே. எனவே, தம்மிடம் நன்மையை வெளிப்படுத்துகிறவரை நம்பிக்கைக்குரியவராக்கி கெரளவித்துக் கொள்வோம். அவரின் இரகசியம் எதையும் கணக்கிலெடுக்க மாட்டோம். அவரின் அந்தரங்கம் குறித்து இறைவனே கணக்குக் கேட்பான். நம்மிடம் தீமையை வெளிப்படுத்துகிறவரைக் குறித்து நாம் திருப்தியுடனிருக்க மாட்டோம்; தம் அந்தரங்கம் அழகானது என்று அவர் வாதிட்டாலும் சரியே.

பகுதி 6

ஒருவர் நேர்மையானவர் என்று சாட்சி சொல்ல எத்தனை பேர் வேண்டும்?

2642. அனஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் இருந்த இடத்தின் வழியாக ஜனாஸா (பிரேதம்) ஒன்று கொண்டு செல்லப்பட்டது. மக்கள் அதைக் குறித்து நல்லவிதமாகப் (புகழ்ந்து) பேசினார்கள். இதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள், 'உறுதியாகிவிட்டது'' என்று கூறினார்கள். பிறகு, மற்றொரு ஜனாஸா கொண்டு செல்லப்பட்டது. மக்கள் அது குறித்து (இகழ்ந்து) கெட்டவிதமாகப் பேசினார்கள். நபி(ஸல்) அவர்கள், 'உறுதியாகிவிட்டது'' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! அதற்கும் 'உறுதியாகிவிட்டது' என்று கூறினீர்கள்; இதற்கும் 'உறுதியாகிவிட்டது' என்று கூறினீர்களே. (இரண்டிற்குமே இவ்வாறு கூறக் காரணமென்ன)?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், 'இது சமுதாயத்தின் சாட்சியமாகும். இறைநம்பிக்கையுடையவர்கள் பூமியில் அல்லாஹ்வின் சாட்சிகள் ஆவர்'' என்று கூறினார்கள்.

2643. அபுல் அஸ்வத்(ரஹ்) அறிவித்தார்.

மதீனா நகரை (கொள்ளை) நோய் பீடித்திருக்கும் நிலையில் நான் அங்கு சென்றேன். மக்கள் பரவலாகவும் விரைவாகவும் இறந்து கொண்டிருந்தார்கள். நான் உமர்(ரலி) அவர்களிடம் சென்று அமர்ந்தேன். அப்போது ஒரு ஜனாஸா சென்றது. அதைக் குறித்து நல்லவிதமாகப் (புகழ்ந்து) பேசப்பட்டது. உடனே, உமர்(ரலி), 'உறுதியாகிவிட்டது'' என்று கூறினார்கள். பிறகு மற்றொரு ஜனாஸா அவர்களைக் கடந்து சென்றது. அதைக் குறித்தும் நல்ல விதமாகப் பேசப்பட்டது. அதற்கும் உமர்(ரலி), 'உறுதியாகிவிட்டது'' என்று கூறினார்கள். பிறகு, மூன்றாவது ஜனாஸா அவர்களைக் கடந்து சென்றது. அதைக் குறித்து (இகழ்ந்து) கெட்ட விதமாகப் பேசப்பட்டது. உமர்(ரலி), 'உறுதியாகிவிட்டது'' என்று கூறினார்கள். நான், 'விசுவாசிகளின் தலைவரே! என்று உறுதியாகிவிட்டது?' என்று கேட்டேன். அவர்கள் (பின்வருமாறு) பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள் சொன்னதைப் போன்றே நானும் சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், 'எந்த முஸ்லிமுக்கு நான்கு பேர், 'அவர் நல்லவர்' என்று சாட்சி சொல்கிறார்களோ அவரை அல்லாஹ் சொர்க்கத்தில் புகுத்துவான்'' என்று கூறினார்கள். நாங்கள், 'மூன்று பேர் சாட்சி சொன்னாலுமா?' என்று கேட்டோம். நபி(ஸல்) அவர்கள், 'ஆம்; மூன்று பேர் சாட்சி சொன்னாலும் சரி (அவரை அல்லாஹ் சொர்க்கத்தில் புகுத்துவான்)'' என்று கூறினார்கள். நாங்கள், 'இரண்டு பேர் சாட்சி சொன்னாலுமா?' என்று கேட்டோம். அவர்கள், 'ஆம்; இரண்டு பேர் சாட்சி சொன்னாலும் சரியே'' என்று கூறினார்கள். பிறகு, நாங்கள் நபி(ஸல்) அவர்களிடம் ஒருவரைப் பற்றி (''ஒருவர் சாட்சி சொன்னாலுமா?' என்று) கேட்கவில்லை.

பகுதி 7

இரத்த உறவு, பால்குடி உறவு, வெகு நாள்களுக்கு முன் நடந்த மரணம் ஆகியவற்றை நிரூபிக்க சாட்சியம் அளித்தல்.

நபி(ஸல்) அவர்கள், 'எனக்கும் அபூ ஸலமாவுக்கும் ஸுவைபா(ரலி) பாலூட்டினார்கள்'' என்று கூறியதும் (செவிலித் தாயிடம்) பால் குடித்ததை சாட்சிகள் வாயிலாக உறுதிப்படுத்திக் கொள்வதும்.

2644. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

என் வீட்டில் நுழைவதற்கு 'அஃப்லஹ்'(ரலி) அனுமதி கேட்டார்கள். நான் அவர்களுக்க அனுமதி தரவில்லை. அவர்கள், 'நன் உன் தந்தையின் சகோதரராயிருக்க, நீ என்னிடமே திரையிட்டு (மறைத்து)க் கொள்கிறாயா?' என்று கேட்டார்கள். நான், 'அதெப்படி (நீங்கள் என் தந்தையின் சகோதரராக முடியும்)?' என்று கேட்டேன். அதற்கவர், 'என் சகோதரரின் மனைவி என் சகோதரரின் (வாயிலாக அவரிடம் ஊறிய) பாலை உனக்குப் புகட்டியுள்ளார்'' என்று கூறினார். நான் அல்லாஹ்வின் தூதரிடம் அதைப் பற்றிக் கேட்டேன். அவர்கள், 'அஃப்லஹ் உண்மையே சொன்னார். (நீ திரையின்றி இருக்கும் நிலையில் உன் முன்னால் வர) அவருக்கு அனுமதி கொடு'' என்று கூறினார்கள்.

2645. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள், ஹம்ஸா(ரலி) அவர்களின் மகளின் விஷயத்தில், 'அவள் எனக்கு ஹலாலாக (மணந்து கொள்ள அனுமதிக்கப்பட்டவளாக) ஆக மாட்டாள். (ஏனெனில்) இரத்த பந்தத்தின் காரணத்தால் எவையெல்லாம் விலக்கப்பட்டதாகுமோ அவையெல்லாம் (செவிலித் தாயிடம்) பால்குடிப்பதாலும் விலக்கப்பட்டதாகும். அவள் என் பால்குடிச் சகோதரரின் மகள் ஆவாள்'' என்று கூறினார்கள். 3

2646. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

(ஒரு நாள்) நபி(ஸல்) அவர்கள் என்னிடம் இருந்தார்கள். நான் ஹஃப்ஸா(ரலி) அவர்களின் வீட்டில் (யாரோ) ஒருவர் உள்ளே செல்ல அனுமதி கேட்கும் குரலைச் செவியுற்றேன். நான் நபி(ஸல்) அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! அவர் (ஹஃப்ஸாவின் வீட்டுக்குள் செல்ல அனுமதி கேட்பவர்) ஹஃப்ஸாவின் பால்குடித் தந்தையின் சகோதரர் என்று நான் நினைக்கிறேன்'' என்று கூறினேன். நபி(ஸல்) அவர்களும், 'அவர் ஹஃப்ஸாவின் பால்குடித் தந்தையின் சகோதரர் என்றே நானும் நினைக்கிறேன்'' என்று கூறினார்கள். நான், 'இன்னார் - என் பால்குடித் தந்தையின் சகோதரர் உயிருடன் இருந்தால் நான் திரையின்றி இருக்கும்போது என்னிடம் அவர் வரலாமா?' என்று கேட்டேன். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'ஆம். (வரலாம்.) இரத்த உறவின் காரணத்தால் ஹராமாகிற அனைத்துமே பால்குடி உறவின் காரணத்தாலும் ஹராமாகி விடும்'' என்று கூறினார்கள்.

2647. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

என்னிடம் ஒருவர் அமர்ந்திருக்க, நபி(ஸல்) அவர்கள் என் வீட்டிற்கு வந்தார்கள். 'ஆயிஷாவே! இவர் யார்?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். நான், 'என் பால் குடிச் சகோதரர்'' என்று கூறினேன். நபி(ஸல்) அவர்கள், 'ஆயிஷாவே! உங்கள் சகோதரர்கள் யார் என்று ஆராய்ந்து பாருங்கள். ஏனெனில், பால்குடிப்பதென்பதே பசியினால் தான்'' என்று கூறினார்கள். 4

பகுதி 8

(விபசாரம் புரிந்ததாக ஒருவரின் மீது) அவதூறு கூறியவன், திருடன் மற்றும் விபசாரியின் சாட்சியம்.

அல்லாஹ் கூறினான்:

கற்புள்ள பெண்களின் மீது அவதூறு சொல்லிவிட்டுப் பின்னர் நான்கு சாட்சிகளைக் கொண்டு வராதவர்களுக்கு எண்பது சாட்டையடிகளைக் கொடுங்கள். இனி அவர்கள் கூறும் சாட்சியத்தை என்றைக்கும் ஏற்றுக் கொள்ளாதீர்கள். மேலும், அவர்களே தீயவர்கள். இந்தக் குற்றத்திற்குப் பிறகு பாவ மன்னிப்புக் கோரி தங்களைச் சீர்திருத்தியவர்களைத் தவிர. ஏனெனில், அல்லாஹ் அதிகம் மன்னிப்பவனாகவும் கருணை புரிபவனாகவும் இருக்கிறான். (திருக்குர்ஆன் 24: 45)

முகீரா இப்னு ஷுஅபா(ரலி) விபசாரம் புரிந்ததாக, அவரின் மீது அவதூறு கூறியதற்காக அபூ பக்ரா(ரலி), ஷிப்ல் இப்னு மஅபத்(ரலி), நாஃபிஉபின் ஹாரிஸ்(ரலி) ஆகியோருக்கு உமர்(ரலி) கசையடி கொடுத்தார்கள். பிறகு, அவர்களிடம் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கோரும்படி கேட்டார்கள். மேலும், 'பாவமன்னிப்புக் கோரி திருந்திவிடுகிறவரின் சாட்சியத்தை நான் ஏற்றுக் கொள்வேன்'' என்று கூறினார்கள். 5

அப்துல்லாஹ் இப்னு உத்பா(ரஹ்), உமர் இப்னு அப்தில் அஸீஸ்(ரஹ்), ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்), தாவூஸ் இப்னு கைஸான் அல் யமானீ(ரஹ்), முஜாஹித்(ரஹ்), ஷஅபீ (ரஹ்), இக்ரிமா(ரஹ்), ஸுஹ்ரீ(ரஹ்), முஹாரிப் இப்னு திஸார்(ரஹ்), ஷுரைஹ்(ரஹ்), முஆவியா இப்னு குர்ரா(ரஹ்) ஆகியோர், 'ஒருவர் விபசாரம் செய்ததாக அவதூறு கற்பித்து, அதற்காகக் கசையடி தண்டனை பெற்றவர் பாவமன்னிப்புக் கோரி திருந்திவிட்டால் அவரின் சாட்சியத்தை ஏற்றுக் கொள்வது செல்லும்'' என்று கூறியுள்ளனர்.

அபுஸ் ஸினாத்(ரஹ்), 'மதீனா நகரில் எங்கள் நடைமுறை எப்படி இருந்ததென்றால், அவதூறு கற்பித்தவர் தன் சொல்லைத் திரும்பப் பெற்று, பாவ மன்னிப்புக் கோரிவிட்டால் அவரின் சாட்சியம் ஏற்றுக் கொள்ளப்படும்'' என்று கூறினார்கள்.

ஷஅபீ (ரஹ்), கதாதா(ரஹ்) ஆகிய இருவரும், 'அவதூறு கற்பித்தவன், தான் பொய் சொல்லிவிட்டதாகக் கூறிவிட்டால் கசையடி கொடுக்கப்படுவான்; அவனுடைய சாட்சியம் ஏற்றுக் கொள்ளப்படும்'' என்று கூறுகின்றனர்.

''ஓர் அடிமை (அவதூறு கற்பித்த குற்றத்திற்காக (கசையடி கொடுக்கப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்டால் அவனுடைய சாட்சியம் ஏற்றுக்கொள்ளப்படும். அவனிடம் தீர்ப்புக் கேட்கப்பட்டு அவன் தீர்ப்பு வழங்கினால் அவனுடைய தீர்ப்புகள் செல்லும்'' என்று சுஃப்யான் அஸ் ஸவ்ரீ(ரஹ்) கூறினார்.

சிலர் 'அவதூறு கூறியவனின் சாட்சியம் அவன் பாவமன்னிப்புக் கோரிவிட்டாலும் கூட ஒப்புக் கொள்ளப்படமாட்டாது'' என்று கூறிவிட்டு, பிறகு, 'திருமணம் இரண்டு சாட்சிகள் இல்லாமல் செல்லுபடியாகாது. (அவதூறு பேசி) கசையடி கொடுக்கப்பட்டவர்கள் இருவரின் சாட்சியைக் கொண்டு ஒருவன் மணந்தால் அந்தத் திருமணம் செல்லுபடியாகும். அடிமைகள் இருவரின் சாட்சியத்தில் மணந்தால் அந்தத் திருமணம் செல்லாது'' என்று கூறினார்கள்.

''கசையடி கொடுக்கப்பட்டவன், அடிமை மற்றும் அடிமைப் பெண்கள் ஆகியோர் ரமளான் மாதப் பிறையைப் பார்த்ததாக சாட்சியம் அறிவித்தால் அது செல்லும்'' என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

அவதூறு கற்பித்தவன் பாவ மன்னிப்புக் கோரிவிட்டதை எப்படி அறிந்து கொள்வது? 6 நபி(ஸல்) அவர்களோ விபசாரியை ஓராண்டுக் காலத்திற்கு நாடு கடத்தினார்கள். நபி(ஸல்) அவர்கள், 'கஅப் இப்னு மாலிக்(ரலி) மற்றும் அவர்களின் இரண்டு தோழர்களுடன் பேசக் கூடாது' என்று (மக்களைத்) தடை செய்தார்கள்; ஐம்பது நாள்கள் கழியும் வரை இவ்வாறு தடை செய்து வைத்திருந்தார்கள். 7

2648. உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார்.

மக்காவை வெற்றி கொண்ட போரின்போது (மக்ஸூமி குலத்தவரான ஃபாத்திமா பின்த்து அஸ்வத் என்னும் பெயருடைய) திருட்டுக் குற்றம் புரிந்த ஒருவர் இறைத்தூதர் அவர்களிடம் கொண்டு வரப்பட்டார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அவரின் கையைத் துண்டிக்கும்படி உத்தரவிட்டார்கள். அதன்படி அவரின் கை துண்டிக்கப்பட்டது.

(அவரைப் பற்றி) 'அவள் அழகிய முறையில் தவ்பா செய்திருந்தாள்; திருமணமும் செய்தாள். அதன் பிறகு அவள் (எங்களிடம்) வந்து கொண்டிருந்தாள். நான் அவளுடைய தேவையை (அறிந்து) நபி(ஸல்) அவர்களிடம் சொல்வேன்'' என்று ஆயிஷா(ரலி) கூறினார். 8

2649. ஸைத் இப்னு காலித்(ரலி) அறிவித்தார்.

திருமணமாகாத நிலையில் விபசாரம் செய்தவன் விஷயத்தில், அவனுக்கு நூறு கசையடிகள் கொடுக்கவேண்டும் என்றும் ஓராண்டுக் காலத்திற்கு அவனை நாடு கடத்த வேண்டும் என்றும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். 9

பகுதி 9

அநியாயத்திற்கு (ஆதரவாக) சாட்சி சொல்லக்கூடாது.

2650. நுஃமான் இப்னு பஷீர்(ரலி) அறிவித்தார்.

என் தாயார் என் தந்தையிடம் அவரின் செல்வத்திலிருந்து எனக்கு சிறிது அன்பளிப்பு வழங்கும்படி கேட்டார்கள். பிறகு, அவருக்கு (இதுவரை கொடுக்காமலிருந்துவிட்டோமே என்ற வருத்தம் மனதில்) தோன்றி எனக்கு அதை அன்பளிப்புச் செய்தார். என் தாயார், 'நீ நபி(ஸல்) அவர்களை சாட்சியாக்காதவரை நான் திருப்தி கொள்ள மாட்டேன்'' என்று கூறினார்கள். எனவே, என் தந்தை நான் சிறுவனாயிருந்ததால் என் கையைப் பிடித்து இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் என்னை அழைத்துச் சென்று, 'இவனுடைய தாயாரான (அம்ர்) பின்த்து ரவாஹா இவனுக்கு சிறிது அன்பளிப்புத் தரும்படி என்னிடம் கேட்டாள்'' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், 'இவனைத் தவிர வேறு குழந்தை ஏதும் உங்களுக்கு உண்டா?' என்று கேட்டார்கள். என் தந்தை, 'ஆம் (உண்டு)'' என்று பதிலளித்தார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'என்னை அக்கிரமத்துக்கு சாட்சியாக்காதீர்கள்'' என்று கூறினார்கள் எனக் கருதுகிறேன்.

இன்னோர் அறிவிப்பில், 'நான் அக்கிரமத்துக்கு சாட்சியாக இருக்கமாட்டேன்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என வந்துள்ளது. 10

2651. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

உங்களில் (மக்களில்) சிறந்தவர்கள் என் தலைமுறையைச் சேர்ந்தவர்கள்; பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள்; பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள்.

-இந்த ஹதீஸை அறிவிக்கும் அறிவிப்பாளர் இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி), 'இரண்டு தலைமுறைக்குப் பிறகு மூன்றாவதாக ஒரு தலைமுறையை நபி(ஸல்) அவர்கள் சொன்னார்களா என்று எனக்குத் தெரியாது'' என்று கூறுகிறார்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நிச்சயமாக, உங்களுக்குப் பின் ஒரு சமுதாயத்தார்(வர) இருக்கிறார்கள். அவர்கள் நம்பிக்கை மோசடி செய்வார்கள். அவர்களிடம் எதையும நம்பி ஒப்படைக்கப்படாது. அவர்கள் சாட்சியாக இருக்கத் தாமாகவே முன் வருவார்கள். ஆனால், சாட்சியம் அளிக்கும்படி அவர்களை யாரும் கேட்கமாட்டார்கள். அவர்கள் நேர்ச்சை செய்வார்கள்; ஆனால் அதை நிறைவேற்ற மாட்டார்கள். அவர்களிடையே பருமனாயிருக்கும் (தொந்தி விழும்) நிலை தோன்றும்.

என இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) அறிவித்தார்.

2652. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

மக்களில் சிறந்தவர்கள் என் தலைமுறையினர். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள். பிறகு சில சமுதாயங்கள் வரும். அவர்களின் சாட்சியம் அவர்களின் சத்தியத்தையும், அவர்களின் சத்தியம் அவர்களின் சாட்சியத்தையும் முந்திக் கொள்ளும். 11

என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

இப்ராஹீம் நகயீ(ரஹ்), '(சிறுவர்களான) எங்களை அவர்கள் (நபித் தோழர்கள்), 'அஷ்ஹது பில்லாஹ்' அல்லாஹ்வைக் கொண்டு சாட்சியம் அளிக்கிறேன்' என்றோ, 'அல்லாஹ்வுடன் செய்த ஒப்பந்தப்படி' என்றோ கூறினால் கடிந்து (கண்டித்து) வந்தார்கள்'' என்று கூறினார். 12

பகுதி 10

பொய்சாட்சியம் அளிப்பது தடை செய்யப்பட்டதாகும்.

ஏனெனில், அல்லாஹ் கூறினான்:

மேலும், (ரஹ்மானின்) உண்மையான அடியார்கள் யாரெனில்) அவர்கள் பொய் சாட்சியம் அளிக்க மாட்டார்கள். (திருக்குர்ஆன் 25:72)

சாட்சியத்தை மறைப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது.

அல்லாஹ் கூறினான்:

மேலும், சாட்சியத்தை நீங்கள் மறைத்து விடாதீர்கள். சாட்சியத்தை மறைப்பவரின் இதயம் நிச்சயமாக பாவத்திற்குள்ளாகி விடுகிறது. மேலும், அல்லாஹ் நீங்கள் செய்கிற அனைத்தையும் நன்கறிபவனாயிருக்கிறான். (திருக்குர்ஆன் 02:283)

2653. அனஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களிடம் பெரும் பாவங்கள் பற்றிக் கேட்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வுக்கு இணை வைப்பது, பெற்றோருக்குத் துன்பம் கொடுப்பது, தற்கொலை செய்து கொள்வது, பொய்சாட்சி சொல்வது ஆகியன (பெரும் பாவங்களாகும்)'' என்று கூறினார்கள்.

2654. அபூ பக்ரா(ரலி) அறிவித்தார்.

(ஒரு முறை) 'பெரும் பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?' என்று நபி(ஸல்) அவர்கள் (மூன்று முறை) கேட்டார்கள். மக்கள், 'ஆம், இறைத்தூதர் அவர்களே! (அறிவியுங்கள்)'' என்றார்கள். உடனே, நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வுக்கு இணைவைப்பதும், பெற்றோருக்குத் துன்பம் தருவதும் (தான் அவை)'' என்று கூறிவிட்டு, சாய்ந்து கொண்டிருந்தவர்கள் எழுந்து அமர்ந்து, 'அறிந்து கொள்ளுங்கள்; பொய் சாட்சியமும் (மிகப் பெரும்பாவம்) தான்'' என்று கூறினார்கள். 'நிறுத்திக் கொள்ளக் கூடாதா' என்று நாங்கள் சொல்கிற அளவுக்கு அதை (இறுதியாகச் சொன்னதை) திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டேயிருந்தார்கள்.

பகுதி 11

கண் பார்வையற்றவரின் சாட்சியம், அவரின் நடவடிக்கை, அவரின் திருமணம், பிறருக்கு அவர் திருமணம் செய்து வைத்தல், விற்றல் - வாங்கல், பாங்கு சொல்வது முதலானவற்றில் அவரை ஏற்றல் ஆகியன பற்றியும், குரல்களைக் கொண்டு மட்டுமே அறியப்பட்டதை சாட்சியாக ஏற்பது பற்றியும்.

காசிம்(ரஹ்), ஹஸன் பஸாரீ(ரஹ்), இப்னு சீரின்(ரஹ்), ஸுஹ்ரீ(ரஹ்), அதாஉ(ரஹ்) ஆகியோர், 'குருடரின் சாட்சியம் செல்லும்'' என்று கூறுகிறார்கள். 'குருடர் புத்திக் கூர்மையுடையவராக இருந்தால் அவரின் சாட்சியம் செல்லும்'' என்று ஷஅபீ (ரஹ்) கூறினார்.

''எத்தனையோ விஷயங்களில் (குருடருக்கு) சலுகை அளிக்கப்படும்'' என்று ஹகம்(ரஹ்) கூறினார்.

''இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்? அவர்கள் (கண்பார்வையற்ற முதியவராக இருக்கும் போது) ஒரு சாட்சியம் அளித்தால் அதை நீங்கள் ஏற்க மறுப்பீர்களா?' என்று ஸுஹ்ரீ(ரஹ்) கேட்டார்கள்.

இப்னு அப்பாஸ்(ரலி) ஓர் ஆளை அனுப்பி (செய்தியறிந்து) சூரியன் மறைந்து விட்டிருந்தால் நோன்பை நிறைவு செய்து கொள்வார்கள்; அதிகாலை நேரம் பற்றிக் கேட்பார்கள்; 'அது உதயமாகி விட்டது' என்று கூறப்பட்டால் இரண்டு ரக்அத்துகள் தொழுது கொள்வார்கள்.

''நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம் (மைமூனா(ரலி) அவர்களின் வீட்டுக்குள் செல்ல) அனுமதி கேட்டேன். அவர்கள் என் குரலைப் புரிந்து கொண்டு, 'சுலைமானே! உள்ளே செல். ஏனெனில், நீ கடன் ஏதும் பாக்கி வைக்காத (முகாத்தபான) அடிமையாவாய்' என்று கூறினார்கள்'' என சுலைமான் இப்னு யஸார்(ரஹ்) கூறினார்.

''முகத்திரை அணிந்த பெண்ணின் சாட்சியம் செல்லும்'' என்று சமுரா இப்னு ஜுன்தப்(ரலி) கூறினார்.

2655. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் ஒருவர் பள்ளிவாசலில் குர்ஆன் ஓதுவதைக் கேட்டு, 'அல்லாஹ் அவருக்குக் கருணை புரியட்டும். நான் இன்னின்ன அத்தியாயத்திலிருந்து (சற்று) மறந்து விட்டிருந்த இன்னின்ன வசனத்தை எனக்கு அவர் நினைவூட்டிவிட்டார்'' என்று கூறினார்கள்.

ஆயிஷா(ரலி) அவர்களின் மற்றோர் அறிவிப்பில் பின்வரும் வரிகள் அதிகப்படியாக இடம் பெற்றுள்ளன:

நபி(ஸல்) அவர்கள் என் வீட்டில் தஹஜ்ஜுத் தொழுகை தொழுதார்கள். அப்பாத் இப்னு பிஷ்ர்(ரலி) பள்ளிவாசலில் தொழுது கொண்டிருக்க, அவரின் (குர்ஆன் ஓதுகின்ற) குரலைச் செவிமடுத்து (என்னிடம்), 'ஆயிஷாவே, இது அப்பாதின் குரலா?' என்று கேட்டார்கள். 'ஆம் (இது அப்பாதின் குரல் தான்)'' என்று நான் பதிலளித்ததும் நபி(ஸல்) அவர்கள், 'இறைவா! அப்பாதிற்குக் கருணை செய்'' என்று பிரார்த்தித்தார்கள்.

2656. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

பிலால்(ரலி) இரவில் பாங்கு சொல்வார்கள். எனவே, அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம்(ரலி) (ஃபஜ்ருக்கு) பாங்கு சொல்லும் வரை (ஸஹருக்காக) உண்ணுங்கள்; பருகுங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மேலும், இப்னு உம்மி மக்தூம்(ரலி) கண்பார்வையற்றவராக இருந்தார்கள். மக்கள் 'காலை நேரம் வந்துவிட்டது' என்று அவரிடம் கூறும் வரை அவர் பாங்கு சொல்லமாட்டார்.

2657. மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி) கூறினார்.

நபி(ஸல்) அவர்களிடம் சில அங்கிகள் வந்தன. என் தந்தை மக்ரமா(ரலி) என்னிடம், 'நாம் நபி(ஸல்) அவர்களிடம் செல்வோம். அவர்கள் நமக்கு அவற்றிலிருந்து எதையேனும் தருவார்கள்'' என்று கூறினார்கள். என் தந்தை (நபி(ஸல்) அவர்களின் வீட்டு) வாசலருகே நின்று பேசினார்கள். நபி(ஸல்) அவர்கள் அவரின் குரலைப் புரிந்து கொண்டு, தம்முடன் ஓர் அங்கியை எடுத்துக்கொண்டு, அதன் நிறைகளைக் காட்டியபடி வெளியே வந்தார்கள். அப்போது அவர்கள், 'உனக்காக இதை நான் எடுத்து வைத்தேன்; உனக்காக இதை நான் எடுத்து வைத்தேன்'' என்று கூறிக் கொண்டிருந்தார்கள்.

பகுதி 12

பெண்களின் சாட்சியம் (செல்லும்)

அல்லாஹ் கூறினான்:

(சாட்சி சொல்வதற்கு) இரண்டு ஆண்கள் இல்லையென்றால் ஓர் ஆணையும் இரண்டு பெண்களையும் சாட்சிகளாக்கிக் கொள்ளுங்கள். (திருக்குர்ஆன் 02:282)

2658. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.

''பெண்களின் சாட்சியம் ஆண்களின் சாட்சியத்தில் பாதியளவு அல்லவா?' என்று நபி(ஸல்) அவர்கள் (பெண்களை நோக்கிக்) கேட்டார்கள். அவர்கள், 'ஆம் (பாதியளவு தான்)'' என்று பதிலளித்தார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அதுதான் அவளுடைய அறிவின் குறை பாடாகும்'' என்று கூறினார்கள். 13

பகுதி 13

ஆண் அடிமைகள் மற்றும் பெண் அடிமைகளின் சாட்சியம்.

அனஸ்(ரலி) கூறினார்.

அடிமையின் சாட்சியம், அவன் நேர்மையானவனாக இருந்தால் செல்லுபடியாகும்.

நீதிபதி ஷுரைஹ்(ரஹ்) அவர்களும், ஸுராராபின் அவ்ஃபா(ரஹ்) அவர்களும், 'அடிமையின் சாட்சியம் செல்லும்'' என்று கூறினார்கள். 'அடிமையின் சாட்சியம் (எல்லா விஷயங்களிலும்) செல்லுபடியாகும்; அடிமை, தன் எஜமானுக்கு சாதகமாக அளிக்கும் சாட்சியத்தைத் தவிர'' என்று இப்னு சீரின்(ரஹ்) கூறினார்.

''அற்பமான, சாதாரண விஷயங்களில் மட்டும் அடிமையின் சாட்சியம் செல்லுபடியாகும்'' என்று ஹஸன்(ரஹ்) அவர்களும், இப்ராஹீம் நகயீ(ரஹ்) அவர்களும் கூறுகிறார்கள்.

(தம் கருத்தை நியாயப்படுத்தும் விதத்தில்) நீதிபதி ஷுரைஹ்(ரஹ்), 'நீங்கள் ஒவ்வொருவரும் ஆண் அடிமைகள் மற்றும் பெண் அடிமைகளின் மக்களே'' என்று கூறினார்கள்.

2659. உக்பா இப்னு ஹாரிஸ்(ரலி) அறிவித்தார்.

நான் உம்மு யஹ்யா பின்த்து அபீ இஹாபை மணந்தேன். ஒரு கருப்பு நிற அடிமைப் பெண் வந்து, 'நான் உங்கள் இருவருக்கும் (உனக்கும் உன் மனைவிக்கும்) பாலூட்டியிருக்கிறேன்.'' என்று கூறினாள். இச்செய்தியை நான் நபி(ஸல்) அவர்களிடம் கூறினேன். அவர்கள் (முகம் திருப்பி) என்னை அலட்சியம் செய்தார்கள். நான் (என் இருப்பிடத்திலிருந்து விலகி (அவர்களின் முகம் இருக்கும் பக்கம்) சென்று அவர்களிடம் அதை (திரும்பக்) கூறினேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அவள் உங்கள் இருவருக்கும் பாலூட்டியிருப்பதாக வாதிட்டுக் கொண்டிருக்கும் நிலையில் எப்படி (நீங்கள் இருவரும் கணவன் மனைவியாக வாழ முடியும்)?' என்று கேட்டார்கள்; என்னை அவளுடன் சேர்ந்து வாழக் கூடாதென்று விலக்கினார்கள்.

பகுதி 14

செவிலித் தாயின் சாட்சியம்.

2660. உக்பா இப்னு ஹாரிஸ்(ரலி) அறிவித்தார்.

நான் ஒரு பெண்ணை மணமுடித்தேன். வேறொரு பெண் வந்து, 'நான் உங்கள் இருவருக்கும் (உனக்கும், உன் மனைவிக்கும்) பாலூட்டியிருக்கிறேன்'' என்று கூறினார். நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்றேன்; (அவர்களிடம் இது பற்றிக் கேட்டதற்கு), '(நீயும் உன் மனைவியும் ஒரே செவிலித்தாயிடம் பால் குடித்ததாகக்) கூறப்பட்டுவிட்டு பிறகு, எப்படி (நீங்கள் இருவரும் சேர்ந்து வாழ முடியும்)? அவளை உன்னிடமிருந்து பிரித்து விடு'' என்றோ அது போன்றதையோ கூறினார்கள்.

பகுதி 15

பெண்களில் ஒருவர் மற்றவரை நேர்மையானவர் என்று உறுதி செய்வது.

2661. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒரு பயணம் புறப்பட விரும்பினால் தம் மனைவிமார்களிடையே (எவரைப் பயணத்தில் தம்முடன் அழைத்துச் செல்வது எனத் தீர்மானித்திட) சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள். அவர்களில் எவருடைய (பெயருள்ள) சீட்டு வருகிறதோ அவரைத் தம்முடன் அழைத்துக் கொண்டு பயணம் புறப்படுவார்கள். இவ்வாறே, அவர்கள் செய்த ஒரு புனிதப் போரின்போது 14 (பயணத்தில் உடன் அழைத்துச் செல்ல) எங்களுக்கிடையே சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். என்னுடைய (பெயருள்ள) சீட்டு வந்தது. எனவே, நான் அவர்களுடன் (பயணம்) புறப்பட்டுச் சென்றேன். இது (பெண்கள் பர்தா முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்னும்) ஹிஜாபின் சட்டம் அருளப்பட்ட பிறகு நடந்ததாகும். நான் ஓர் ஒட்டகச் சிவிகையில் வைத்துச் சுமந்து செல்லப்படுவேன். நான் அதில் இருக்கும் நிலையிலேயே கீழே இறக்கி வைக்கப்படுவேன். நபி(ஸல்) அவர்கள் அந்தப் போர் முடிந்து புறப்பட்டபோது நாங்கள் மதீனாவை நெருங்கிய வேளையில் இரவு நேரத்தில் (ஓரிடத்தில்) தங்கும்படி அறிவித்தார்கள்.

நான் (சிவிகையிலிருந்து) எழுந்து (மலஜலம் கழிப்பதற்காக மறைவிடம் தேடி) படையைக் கடந்து சென்றேன். என் (மலஜலத்) தேவையை நான் முடித்தபோது முகாமிட்டிருந்த இடத்தை நோக்கிச் சென்றேன். அப்போது என் நெஞ்சை நான் தொட்டுப் பார்த்தபோது, (என் கழுத்திலிருந்த) யமன் நாட்டு முத்துமாலையொன்று அறுந்து (விழுந்து) விட்டிருந்தது. எனவே, நான் திரும்பிச் சென்று என் மாலையைத் தேடலானேன்; அதைத் தேடிக் கொண்டிருந்தது (நான் சீக்கிரம் திரும்பிச் சென்று படையினருடன் சேரவிடாமல்) என்னைத் தாமதப்படுத்திவிட்டது. எனவே, என்னை எடுத்துச் சென்று ஒட்டகத்தில் வைப்பவர்கள், என் சிவிகைக்குள் நான் இருப்பதாக எண்ணிக் கொண்டு அதைச் சுமந்து சென்று, நான் வழக்கமாக சவாரி செய்கிற என் ஒட்டகத்தின் மீது வைத்துக் கட்டிவிட்டனர். அந்தக் கால கட்டத்தில் பெண்கள் பருமனாக இன்றி மெலிந்தவர்களாக இருந்தனர். அவர்களுக்கு சதை போட்டிருக்கவில்லை. சிறிதளவு உணவே அவர்கள் உண்பார்கள். எனவே, சிவிகையைத் தூக்கியபோது அதன் (இலேசான) கனத்தை மக்கள் வித்தியாசமாகக் கருதவில்லை. மேலும், நான் வயது குறைந்த சிறுமியாக இருந்தேன். அவர்கள் ஒட்டகத்தை (முன்னே) அனுப்பிவிட்டு நடக்கலானார்கள். படையினர் சென்ற பிறகு நான் (தொலைந்து போன) என் மாலையைப் பெற்றுக் கொண்டேன். பிறகு, நான் அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு வந்தேன். அப்போது, அங்கு ஒருவரும் இல்லை. நான் ஏற்கனவே தங்கியிருந்த இடத்தைத் தேடிச் சென்று அங்கு அமர்ந்து கொண்டேன். படையினர், நான் காணாமல் போயிருப்பதைக் கண்டு என்னிடம் திரும்பி வருவார்கள் என்று நான் கருதினேன். நான் அப்படியே உட்கார்ந்தபடி இருந்த பொழுது என் கண்கள் (உறக்கம்) மிகைத்து நான் தூங்கி விட்டேன். ஸஃப்வான் இப்னு முஅத்தல் அல் ஸுலமீ என்பவர் படையினர் பின் அணியில் இருந்தார். அவர், நான் தங்கியிருந்த இடத்தில் காலை வரை தங்கி விட்டிருந்தார். அவர் (காலையில் விழித்தெழுந்தவுடன்) தூங்கிக் கொண்டிருந்த ஓர் உருவத்தை (என்னை)ப் பார்த்துவிட்டு என்னிடம் வந்தார். பர்தாவுடைய சட்டம் அருளப்படுவதற்கு முன்னால் அவர் என்னைப் பார்த்திருந்தார். (எனவே, என்னை அடையாளம் புரிந்து கொண்டு) அவர், 'இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் நாம் அல்லாஹ்விற்கே உரியவர்கள்; மேலும், நாம் அவனிடமே திரும்பிச் செல்லவிருக்கிறோம்'' என்று கூறும் சப்தத்தைக் கேட்டு நான் கண் விழித்தேன். பிறகு, அவர் தம் ஒட்டகத்தை மண்டியிடச் செய்து, அதன் முன்னங்காலை (தன் காலால்) மிதித்துக் கொள்ள நான் அதன் மீது ஏறிக் கொண்டேன். அவர் என்னுடன் ஒட்டகத்தை ஒட்டிக் கொண்டு நடக்கலானார். இறுதியில் நாங்கள் படையினரை வந்தடைந்தோம். அதற்குள் அவர்கள் (மதிய ஓய்வுக்காக) நடுப்பகல் நேரத்தில் (ஓரிடத்தில்) தங்கி விட்டிருந்தார்கள். (இப்போது எங்களைக் கண்டு அவதூறு பேசி) அழிந்தவர்கள் அழிந்தார்கள். என் மீது அவதூறு (பிரசாரம்) செய்ய (தலைமைப்) பொறுப் பேற்றிருந்தவன் அப்துல்லாஹ் இப்னு உபை இப்னி ஸலூல் (எனும் நயவஞ்சகர்களின் தலைவன்) ஆவான். நாங்கள் மதீனாவை வந்தடைந்தோம். அங்கு ஒரு மாத காலம் நான் நோயுற்று விட்டேன். மக்களோ அவதூறு கற்பித்தவர்களின் சொல்லைப் பரப்பிக் கொண்டிருந்தார்கள். நான் நோயுற்று விடும்போது நபி(ஸல்) அவர்கள் வழக்கமாக என்னிடம் காட்டுகிற பாரிவை (இந்த முறை) நான் நோயுற்றிருக்கும்போது அவர்களிடம் காணமுடியாமல் போனது எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவர்கள் வருவார்கள்; சலாம் சொல்வார்கள்; பிறகு, 'அவள் எப்படி இருக்கிறாள்?' என்று கேட்பார்கள்; (பிறகு போய் விடுவார்கள்.) அவ்வளவு தான். (என்னைக் குறித்து வெளியே பேசப்பட்டு வந்த அவதூறில்) ஒரு சிறிதும் எனக்குத் தெரியாது. இறுதியில், நான் (நோயிலிருந்து குணமடைந்து விட,நானும் உம்மு மிஸ்தஹ்(ரலி) அவர்களும் நாங்கள் கழிப்பிடமாகப் பயன்படுத்தி வந்த 'மனாஸிஉ' என்னுமிடத்தை நோக்கிச் சென்றோம். நாங்கள் இரவு நேரங்களில் மட்டும் இவ்வாறு செல்வோம். எங்கள் வீடுகளுக்கு அருகிலேயே கழிப்பிடங்களை அமைத்துக் கொள்வதற்கு முன்னால் நாங்கள் இவ்வாறு அங்கு சென்று கொண்டிருந்தோம். எங்களுடைய இந்த வழக்கம் வனாந்திரங்களில் வசித்து வந்த முற்கால அரபுகளின் வழக்கத்தை ஒத்ததாயிருந்தது. நானும் அபூ ருஹ்மின் மகளாகிய உம்மு மிஸ்தஹும் நடந்து முன்னால் சென்று கொண்டிருந்தோம். உம்மு மிஸ்தஹை அவர் அணிந்திருந்த கம்பளி அங்கி இடறியது. அப்போது அவர், 'மிஸ்தஹ் நாசமாகட்டும்'' என்று கூறினார். நான், 'மிக மோசமான சொல்லைச் சொல்லிவிட்டாய். பத்ருப் போரில் பங்கெடுத்த ஒரு மனிதரையா நீ ஏசுகிறாய்'' என்று கூறினேன். அதற்கு அவர், 'அம்மா! அவர்கள் என்ன சொன்னார்கள் என்று நீங்கள் கேள்விப்படவில்லையா?' என்று கூறிவிட்டு, அவதூறு கற்பித்தவர்கள் சொன்ன (அபாண்டத்)தை எனக்குத் தெரிவித்தார். அதைக் கேட்டு என் நோய் இன்னும் அதிகரித்துவிட்டது. நான் என் வீட்டிற்குத் திரும்பி வந்தபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம் வந்து, 'அவள் எப்படி இருக்கிறாள்?' என்று கேட்டார்கள். நான் 'என் தந்தையாரிடம் செல்ல எனக்கு அனுமதி கொடுங்கள்'' என்று கேட்டேன். அப்போது நான் அவ்விருவரிடமிருந்தும் (உண்மையிலேயே அப்படியொரு வதந்தி உலவுகிறது என்று விசாரித்து என் மீதான அவதூறுச்) செய்தியை உறுதிப்படுத்திக் கொள்ள விரும்பினேன். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எனக்கு அனுமதியளிக்கவே நான் என் தாய் தந்தையரிடம் சென்றேன். என் தாயாரிடம், 'மக்கள் (என்னைப் பற்றி) என்ன பேசிக் கொள்கிறார்கள்?' என்று கேட்டேன். என் தாயார், 'என் அன்பு மகளே! உன் மீது இந்த விஷயத்தை; பெரிதுபடுத்திக் கொள்ளாதே. அல்லாஹ்வின் மீதாணையாக! சக்களத்திகள் பலரும் இருக்க, (தன்) கணவரிடம் பிரியத்துக்குரியவளாக இருக்கும் அழகுமிக்க பெண்ணொருத்தியைக் குறித்து அவளுடைய சக்களத்திகள் அதிகமாக (வதந்திகள்) பேசத் தான் செய்வார்கள். அவ்வாறு பேசாமலிருப்பது (பெரும்பாலும்) குறைவேயாகும்'' என்று கூறினார்கள். நான், 'சுப்ஹானல்லாஹ் (இறைவன் தூய்மையானவன்!) இப்படியா மக்கள் பேசிக் கொள்கிறார்கள்?' என்று கேட்டேன். அன்றிரவை இடைவிடாமல் அழுது கொண்டும் தூக்கம் சிறிது மின்றியும் காலை வரை கழித்தேன். காலை நேரம் வந்தது. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் மனைவியை (என்னை)ப் பிரிந்து விடுவது குறித்து ஆலோசனை கேட்பதற்காக அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) அவர்களையும், உஸாமா இப்னு ஸைத்(ரலி) அவர்களையும் அழைத்தார்கள். அப்போது 'வஹீ' (தற்காலிகமாக) நின்று போயிருந்தது. உஸாமா(ரலி) அவர்களோ தம் உள்ளத்தில் நபி(ஸல்) அவர்களின் மனைவிமார்கள் மீதிருந்த பாசத்தை அடிப்படையாகக் கொண்டு ஆலோசனை கூறினார்கள். 'இறைத்தூதர் அவர்களே! தங்கள் துணைவியரிடம் நல்ல (குணத்)தைத் தவிர வேறெதையும் நான் அறிய மாட்டேன்'' என்று அவர்கள் கூறினார்கள். அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) அவர்களோ (நபி(ஸல்) அவர்களின் மனக் கவலையைக் குறைத்து ஆறுதல் கூறும் நோக்குடன்), 'இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ் உங்களுக்கு எந்த நெருக்கடியையும் ஏற்படுத்தவில்லை. அவர் (ஆயிஷா) அன்றிப் பெண்கள் நிறையப் பேர் இருக்கின்றனர். பணிப் பெண்ணைக் கேளுங்கள். அவள் உங்களிடம் உண்மையைச் சொல்வாள்'' என்று கூறினார்கள். எனவே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (பணிப் பெண்ணான) பாரீராவை அழைத்து, 'பாரீராவே! நீ ஆயிஷாவிடம் உனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும் (செயல்) எதையாவது பார்த்திருக்கிறாயா?' என்று கேட்டார்கள். அதற்கு பாரீரா(ரலி), 'தங்களை சத்திய(மார்க்க)த்துடன் அனுப்பியவன் மீது ஆணையாக! அவர் (குழைத்து வைத்த) மாவை அப்படியே போட்டுவிட்டு உறங்கிப் போய்விடுவார்; வீட்டிலுள்ள ஆடு வந்து அதைத் தின்றுவிடும்; அத்தகைய (விபரமறியாத) இளவயதுச் சிறுமி என்பதைத் தவிர அவரைக் குறை சொல்லக்கூடிய விஷயம் எதையும் அவரிடம் நான் பார்க்கவில்லை'' என்று பதில் கூறினார். உடனே, அன்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (மிம்பரில் ஏறி) நின்று, அப்துல்லாஹ் இப்னு உபை இப்னி சலூலை தண்டிப்பதற்கு (தமக்கு) உதவும்படி (தம் தோழர்களிடம்) கோரினார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'என் வீட்டார் விஷயத்தில் (வதந்தி கிளப்பி) எனக்கு மன வேதனையளித்த ஒரு மனிதனை தண்டித்திட எனக்கு உதவிபுரிபவர் யார்? அவர்கள் (அவதூறு) கூறியுள்ளனர். ஆனால், அவரைப் பற்றி நல்லதையே அறிவேன். அவர் என் வீட்டாரிடம் என்னுடனேயல்லாமல் (நான் வீட்டிலிருக்கும் போதே தவிர) வந்ததில்லை'' என்று கூறினார்கள். உடனே, ஸஅத் இப்னு முஆத்(ரலி) எழுந்து நின்று, 'இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் மீதாணையாக! அவனை தண்டிக்க நான் தங்களுக்கு உதவுகிறேன். அவன் (எங்கள்) அவ்ஸ் குலத்தைச் சேர்ந்தவனாயிருந்தால் நாங்கள் அவனுடைய கழுத்தைத் துண்டித்து விடுகிறோம். எங்கள் சகோதரர்களான கஸ்ரஜ் குலத்தைச் சேர்ந்தவனாக இருந்தால் (என்ன செய்ய வேண்டுமென்று) தாங்கள் உத்தரவை நாங்கள் நிறைவேற்றுகிறோம்'' என்று கூறினார்கள். உடனே, கஸ்ரஜ் குலத் தலைவராயிருந்த ஸஅத் இப்னு உபாதா(ரலி) எழுந்து நின்று, 'அல்லாஹ்வின் மீதாணையாக! நீர் பொய்யுரைத்தீர்; அவனை நீர் கொல்லமாட்டீர். அது உம்மால் முடியாது'' என்று கூறினார். அதற்கு முன் அவர் நல்ல மனிதராகத் தான் இருந்தார்; ஆயினும், குலமாச்சரியம் அவரை அவ்வாறு பேசத் தூண்டிவிட்டது. உடனே, உசைத் இப்னு ஹுளைர்(ரலி) எழுந்து நின்று, உபாதா(ரலி) அவர்களை நோக்கி, 'நீர் தாம் பொய்யுரைத்தீர். அல்லாஹ்வின் மீதாணையாக! அவனை நாங்கள் கொன்றே தீருவோம். நீர் ஒரு நயவஞ்சகர். (அதனால்தான்) நயவஞ்சகர்களின் சார்பாக வாதிடுகிறீர்'' என்று கூறினார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மிம்பரின் மீது நின்று கொண்டிருக்க, அவ்ஸ், கஸ்ரஜ் ஆகிய இரண்டு குலத்தாரும் ஒருவர் மீதொருவர் பாய்ந்து சண்டையிட முற்பட்டனர். நபி(ஸல்) அவர்கள் மிம்பரிலிருந்து இறங்கி அவர்கள் மௌனமாகும் வரை அவர்களை அமைதிப்படுத்தினார்கள். பிறகு அவர்களும் மௌனமானார்கள். அன்று நான் இடைவிடாமல் அழுது கொண்டிருந்தேன்; சிறிதும் உறங்கவில்லை. காலையானதும் என் தாய் தந்தையர் என் அருகேயிருந்தனர். நானோ இரண்டு இரவுகள் ஒரு பகல் (முழுக்க) என் ஈரல் பிளந்து விடுமோ என்றெண்ணும் அளவிற்கு அழுதிருந்தேன். நான் அழுதவண்ணமிருக்கும்போது என் தாய்தந்தையார் என்னிடம் அமர்ந்திருக்க, அன்சாரிப் பெண்ணொருத்தி வந்து உள்ளே வர அனுமதி கேட்டாள். நான் அவளுக்கு அனுமதியளித்தவுடன் என்னோடு சேர்ந்து அவளும் அழுதபடி அமர்ந்தாள். நாங்கள் இவ்வாறு இருந்து கொண்டிருக்கும்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வந்து அமர்ந்தார்கள். என்னைப் பற்றி அவதூறு சொல்லப்பட்ட நாளிலிருந்து அவர்கள் என்னருகே அமர்ந்ததில்லை. மேலும், ஒரு மாத காலம் வரை என் விஷயத்தில் (அல்லாஹ்விடமிருந்து தீர்ப்பு) எதுவும் அவர்களுக்கு வஹீயாக அருளப்படவில்லை. பிறகு நபி(ஸல்) அவர்கள், 'லாஇலாஹ இல்லல்லாஹ்' (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை)'' என்று கூறிவிட்டு, 'ஆயிஷாவே! உன்னைக் குறித்து இன்னின்னவாறு எனக்குச் செய்தி கிடைத்துள்ளது. நீ நிரபராதியாக இருந்தால் அல்லாஹ் விரைவில் உன்னைக் குற்றமற்றவள் என்று அறிவித்து விடுவான். நீ குற்றமேதும் செய்திருந்தால் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி, அவன் பக்கம் திரும்பி விடு. ஏனெனில், அடியான் தன் பாவத்தை ஒப்புக் கொண்டு (மனம் திருந்தி) பாவ மன்னிப்புக் கோரினால் அவனுடைய கோரிக்கையை ஏற்று அல்லாஹ் அவனை மன்னிக்கிறான்'' என்றார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், தம் பேச்சை முடித்தபோது என் கண்ணீர் (முழுவதுமாக) நின்று போய் விட்டிருந்தது. அதில் ஒரு துளியும் எஞ்சியிருக்கவில்லை. நான் என் தந்தையிடம், 'அல்லாஹ்வின் தூதருக்கு என் சார்பாக பதில் கூறுங்கள்'' என்று சொன்னேன். அதற்கு என் தந்தை, 'அல்லாஹ்வின் தூதரிடம் என்ன (பதில்) சொல்வது என்று கூறினார்கள். நான் என் தாயாரிடம், 'இறைத்தூதர் சொன்னதற்கு என் சார்பாக பதில் கூறுங்கள்'' என்று சொன்னேன். அதற்கு என் தாயார், 'அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் மீதாணையாக! இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு என்ன (பதில்) சொல்வது என்றே எனக்குத் தெரியவில்லை'' என்று கூறினார்கள். நானோ இளவயதுடைய சிறுமியாக இருந்தேன். குர்ஆனிலிருந்து அதிகமாக (ஓதத்) தெரியாதவளாகவும் இருந்தேன். எனவே, 'அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள், மக்கள் என்னைப் பற்றிப் பேசியவற்றைக் கேட்டிருக்கிறீர்கள் என்பதையும் அது உங்கள் மனதில் பதிந்து போய், அதை உண்மையொன்று நம்பி விட்டீர்கள் என்பதையும் அறிவேன். நான் குற்றமற்றவள் என்று நானே தங்களிடம் சொன்னால்... நான் குற்றமற்றவள் என்பதை அல்லாஹ் அறிவான்... நீங்கள் அதை நம்பப் போவதில்லை; நான் குற்றமேதும் புரிந்திருப்பதாக ஒப்புக் கொண்டால் (நான் சொல்வதை அப்படியே உண்மையொன்று ஏற்று) என்னை நம்பி விடுவீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! எனக்கும் உங்களுக்கும் (நபி) யூசுஃப்(அலை) அவர்களின் தந்தையை (யஃகூப்(அலை) அவர்களை)யே நான் உவமையாகக் கருதுகிறேன். (அதாவது): (இதை) சகித்துக் கொள்வதே நல்லது; நீங்கள் புனைந்து சொல்லும் விஷயத்தில் அல்லாஹ்விடம் தான் நான் பாதுகாப்புத் கோர வேண்டும். (குர்ஆன் 12:83)15 பிறகு, அல்லாஹ் நான் குற்றமற்றவள் என அறிவிப்பான் என்ற நம்பிக்கையுடன் நான் என் படுக்கையில் (வேறு பக்கமாகத்) திரும்பிப் படுத்துக் கொண்டேன். ஆயினும், திருக்குர்ஆனில் என் விஷயத்தைப் பற்றிப் பேசுகிற அளவிற்கு நான் ஒன்றும் முக்கியத்துவமுடையவளல்ல மிகச் சாதாரணமானவள் தான் என்று என்னைக் குறித்து நான் கருதிக் கொண்டிருக்க, அல்லாஹ்வின் மீதாணையாக! இறைவன் என் விஷயத்தில் வஹீயையே -வேத வெளிப்பாட்டையே (திருக்குர்ஆனில்) அருளுவான் என்று நான் நினைத்தும் பார்க்கவில்லை. மாறாக, 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னை அல்லாஹ் குற்றமற்றவள் என்று உணர்த்தும் கனவு எதையாவது தூக்கத்தில் காண்பார்கள்'' என்றே எதிர்பார்த்தேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நபி(ஸல்) அவர்கள் தாம் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்திருக்கவுமில்லை; வீட்டிலிருந்து எவரும் வெளியே செல்லவுமில்லை; அதற்குள் அல்லாஹ், நபி(ஸல்) அவர்களின் மீது (திருக்குர்ஆன் வசனங்களை) அருள ஆரம்பித்துவிட்டான். உடனே, (வேத வெளிப்பாடு வருகிற நேரங்களில்) ஏற்படும் கடும் சிரமமான நிலை அவர்களுக்கு ஏற்பட்டது; அது கடும் குளிர் காலமாயிருந்தும் அவர்களின் மேனியிலிருந்து முத்துக்களைப் போல் வியர்வைத் துளிகள் வழியத் தொடங்கின. அந்த நிலை அல்லாஹ்வின் தூதரைவிட்டு நீங்கியவுடன் அவர்கள் சிரித்துக் கொண்டே முதல் வார்த்தையாக, 'ஆயிஷாவே! அல்லாஹ்வைப் புகழ்ந்து நன்றி செலுத்து. உன்னை அல்லாஹ் குற்றமற்றவள் என அறிவித்துவிட்டான்'' என்று கூறினார்கள். என் தாயார், 'அல்லாஹ்வின் தூதரிடம் எழுந்து செல்'' என்று கூறினார்கள். நான், 'மாட்டேன்; அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்களிடம் செல்ல மாட்டேன். அல்லாஹ்வை மட்டுமே புகழ்ந்து, அவனுக்கே நன்றி செலுத்துவேன்'' என்றேன். அப்போது அல்லாஹ், '(ஆயிஷாவின் மீது) அவதூறு பரப்பியவர்கள் உங்களில் ஒரு குழுவினர் தான்'' என்று தொடங்கும் (திருக்குர்ஆன் 24:11) வசனங்களை அருளியிருந்தான். என் குற்றமற்ற நிலையைத் தெளிவுபடுத்தி அல்லாஹ் இதை அருளியபோது (என் தந்தை) அபூ பக்ர்(ரலி), 'அல்லாஹ்வின் மீதாணையாக! (என் மகள்) ஆயிஷாவைப் பற்றி (அவதூறு) கூறிய பின்பு ஒருபோதும் மிஸ்தஹுக்காக செலவிட மாட்டேன்'' என்று கூறினார்கள். மிஸ்தஹ் இப்னு உஸாஸா தம் உறவினர் என்பதால் அவருக்காக அபூ பக்ர்(ரலி) செலவிட்டு வந்தார்கள்... உடனே அல்லாஹ், 'உங்களிடையேயுள்ள (பொருள்) அருளப் பெற்றோரும் (பிறருக்கு உதவும்) இயல்புடையோரும், (தங்கள்) உறவினர்களுக்கோ, ஏழைகளுக்கோ, இறைவழியில் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கோ (எதுவும்) கொடுக்க மாட்டேன் என்று சத்தியம் செய்ய வேண்டாம். (அவர்களால் தங்களுக்கு ஏதும் வருத்தம் ஏற்பட்டிருந்தால்) அதனை மன்னித்துப் (பிழைகளைப்) பொருட்படுத்தாமல்விட்டு விடட்டும். அல்லாஹ் உங்களுக்கு மன்னிபளிப்பதை நீங்கள் விரும்பமாட்டீர்களா? அல்லாஹ் மிகவும் மன்னிப்போனும் கிருபையுடையோனுமாய் இருக்கிறான்'' என்னும் (திருக்குர்ஆன் 24:22) இறைவசனத்தை அருளினான். அதன் பிறகு அபூ பக்ர்(ரலி), 'ஆம், அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் எனக்கு மன்னிப்பளிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்'' என்று கூறிவிட்டு, மிஸ்தஹ்(ரலி) அவர்களுக்கு ஏற்கனவே தாம் செய்து வந்த (பொருள்) உதவியைத் தொடரலானார்கள்.

(திருக்குர்ஆனில் என்னைப் பற்றிய வசனங்கள் அருளப்படுவதற்கு முன்னால்) இறைத்தூதர் என் விஷயத்தில் (தம் இன்னொரு மனைவியான) ஸைனப் பின்த்து ஜஹ்ஷ்(ரலி) அவர்களிடம் விசாரித்தார்கள்; 'ஸைனபே! நீ (ஆயிஷாவைப் பற்றி) என்ன அறிந்திருக்கிறாய்? (அவர் விஷயத்தில்) என்ன பார்த்திருக்கிறாய்?' என்று கேட்டார்கள். அதற்கு அவர், 'இறைத்தூதர் அவர்களே! என் காதுகளையும் என் கண்களையும் (அவற்றின் மீது பழி சுமத்தாமல்) பாதுகாத்துக் கொள்வேன். 16 அல்லாஹ்வின் மீதாணையாக! ஆயிஷாவைக் குறித்து நல்லதையே அறிவேன்'' என்று பதிலளித்தார்கள். ஸைனப்(ரலி) தாம் எனக்கு (அழகிலும் நபி(ஸல்) அவர்களின் அன்பிலும்) போட்டியாக இருந்தார்கள். ஆயினும், அல்லாஹ் அவர்களை இறையச்சமுடைய, பேணுதலான பண்பையளித்துப் பாதுகாத்திருந்தான். 17

இந்த அறிவிப்பு இன்னும் பலர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பகுதி 16

ஒருவர் மற்றொரு மனிதரை நல்லவர் என்று கூறினால் (அவரின் சாட்சியத்தை ஏற்க) அதுவே போதுமானதாகும்.

அபூ ஜமீலா(ரலி) கூறினார்:

நான் கேட்பாரற்ற குழந்தை ஒன்றைக் கண்டெடுத்தேன். என்னை உமர்(ரலி) பார்த்தபோது, (அது கண்டெடுக்கப்பட்ட குழந்தை என்பதை நம்பாமல், நான் என் குழந்தையைத் தான் அதன் தகப்பன் என்கிற பொறுப்பை ஏற்க மறுத்துப் பொதுநிதியிலிருந்து பணம் பெறுவதற்காக இப்படிக் கூறுகிறேன் என்று கருதி), 'இது உனக்கு ஆபத்தாகவே முடியும்'' என்று குற்றம் சாட்டுவதைப் போல் கூறினார்கள்.

எங்கள் (வட்டார அரசு) அதிகாரி ஒருவர், 'அவர் நல்ல மனிதர்'' என்று கூறியதும், 'அப்படித்தான் (என்று ஒப்புக் கொள்கிறேன்), போ! அக்குழந்தையின் பராமரிப்புச் செலவு எம் (அரசின்) மீது சாரும்'' என்று உமர்(ரலி) கூறினார்.

2662. அபூ பக்ர்(ரலி) கூறினார்.

ஒருவர் இன்னொரு மனிதரைப் பற்றி நபி(ஸல்) அவர்களிடம் புகழ்ந்து பேசினார். நபி(ஸல்) அவர்கள், 'அழிந்து போவீர். உம் தோழரின் கழுத்தை நீர் துண்டித்து விட்டீர். உம் தோழரின் கழுத்தை நீர் துண்டித்து விட்டீர்'' என்று (பலமுறை) கூறினார்கள். பிறகு, 'தன் சகோதரனைப் புகழ்ந்தே ஆகவேண்டும் என்ற நிலையில் உங்களில் இருப்பவர், 'இன்னாரை நான் இப்படிப்பட்டவர் என்று எண்ணுகிறேன். அல்லாஹ்வே அவருக்குப் போதுமானவன். அல்லாஹ் (உண்மை நிலையை அறிந்தவனாக) இருக்க, அவனை முந்திக் கொண்டு நான் யாரையும் தூய்மையானவர் என்று கூற மாட்டேன். அவரை இன்னின்ன விதமாக எண்ணுகிறேன்'' என்று கூறட்டும். அந்தப் பண்பை அவர் அந்த மனிதரிடமிருந்து அறிந்திருந்தால் மட்டுமே இப்படிக் கூறட்டும்'' என்றார்கள்.

பகுதி 17

மிகையாகப் புகழ்வது வெறுக்கத் தக்கதாகும்; மேலும், (ஒருவர் தாம்) அறிந்தவற்றை மட்டுமே (மற்றவரைப் பற்றிக்) கூறட்டும்.

2663. அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் ஒருவர் மற்றொரு மனிதரைப் புகழ்ந்து கொண்டிருப்பதையும் அவரை மிகைப்படுத்தி (ஒரேயடியாக உயர்த்திப்) புகழ்ந்து கொண்டிருப்பதையும் செவியுற்றார்கள். உடனே, 'நீங்கள் அந்த மனிதரின் முதுகை நாசமாக்கி விட்டீர்கள் - அல்லது - துண்டித்து விட்டீர்கள்'' என்று கூறினார்கள்.

பகுதி 18

குழந்தைகள் பருவமடைவதும் அவர்களின் சாட்சியமும்.

அல்லாஹ் கூறினான்:

உங்கள் சிறுவர்கள் பருவம் அடைந்தால் அவர்களின் பெரியவர்கள் எவ்வாறு அனுமதி கேட்கிறார்களோ அவ்வாறு அவர்களும் அனுமதி பெற்று வரட்டும். (திருக்குர்ஆன் 24:59)

''நான் பன்னிரண்டு வயதுடையவனாக இருந்தபோது பருவமடைந்தேன்'' என்று சட்ட நிபுணர் முகீரா(ரஹ்) கூறினார்.

பெண்கள் பருவ வயதை அடைவது, மாதவிலக்கு (வரத்) தொடங்கும் போதாகும். 18

ஏனெனில், அல்லாஹ் கூறினான்:

உங்களுடைய பெண்களில் எவர் மீதேனும் இனி மாதவிலக்கு வரப் போவதில்லை என்று நம்பிக்கையிழந்தவர்களைக் குறித்து சந்தேகம் ஏற்பட்டால், (தெரிந்து கொள்ளுங்கள்:) அவர்களின் இத்தா காலம் மூன்று மாதங்களாகும. மேலும், எந்தப் பெண்களுக்கு இதுவரையிலும் மாத விலக்கு வரவில்லையோ (அவர்களுக்குரிய சட்டமும் இதுதான்.) மேலும், கர்ப்பிணிகளுக்கான இத்தா காலம் அவர்கள் குழந்தையைப் பெற்றெடுப்பதுடன் முடிவடைகிறது. (திருக்குர்ஆன் 65:04)

ஹஸன் இப்னு சாலிஹ்(ரஹ்) கூறினார்கள்:

எங்கள் அண்டை வீட்டுக்காரப் பெண்ணொருத்தி 21 வயதிலெல்லாம் பாட்டியாகிவிட்டதை கண்டேன். 19

2664. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நான் பதினான்கு வயதுடையவனாக இருக்கும்போது, உஹுதுப் போர் நடந்த காலகட்டத்தில் நபி(ஸல்) அவர்கள் என்னைத் தமக்கு முன்பாக வரவழைத்தார்கள்; ஆனால், (போரில் கலந்து கொள்ள) எனக்கு அனுமதியளிக்கவில்லை. அகழ்ப் போரின் போதும் என்னைத் தமக்கு முன்பாக வரவழைத்தார்கள். அப்போது நான் பதினைந்து வயதுடையவனாயிருந்தேன். அப்போது, போரில் கலந்துகொள்ள எனக்கு அனுமதியளித்தார்கள்.

அறிவிப்பாளர் நாஃபிஉ(ரஹ்) கூறினார்:

உமர் இப்னு அப்தில் அஸீஸ்(ரஹ்) கலீஃபாவாக இருந்தபோது அவர்களிடம் நான் சென்றேன். (இப்னு உமர்(ரலி) அவர்களின்) இந்த ஹதீஸை அவர்களுக்கு அறிவித்தேன். அவர்கள், '(அப்படியென்றால்) இதுதான் சிறியவருக்கும் பெரியவருக்குமிடையில் (வேறுபடுத்திக் காட்டும்) எல்லைக் கோடாகும்'' என்று கூறிவிட்டு, பதினைந்து வயதை அடைந்தவர்களுக்கு (ராணுவப் பணிக்கான ஊதியத் தொகையை) நிர்ணயிக்கும்படி தம் ஆளுநர்களுக்கு எழுதினார்கள்.

2665. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

'ஜும்ஆ' நாளில் குளிப்பது பருவ வயதை அடைந்துவிட்ட ஒவ்வொருவரின் மீதும் கடமையாகும்.

என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.

பகுதி 19

நீதிபதி (பிரதிவாதியிடம்) சத்தியப் பிரமாணம் செய்யும்படி கேட்பதற்கு முன்பாக வாதியிடம், 'உனக்கு ஆதாரம் இருக்கிறதா?' என்று கேட்பது.

2666, 2667 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:

ஒரு முஸ்லிமின் செல்வத்தைப் பறித்துக் கொள்வதற்காக, ஒரு பிரமாணத்தின்போது பொய் சொல்லி சத்தியம் செய்கிறவர், அல்லாஹ் அவரின் மீது கோபம் கொண்டிருக்கும் நிலையில் அவனை மறுமையில் சந்திப்பார்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவர் கூறுகிறார்:

அஷ்அஸ் இப்னு கைஸ்(ரலி) (வந்து), 'அல்லாஹ்வின் மீதாணையாக! என் விவகாரத்தில் தான் இப்படி (நபி(ஸல்) அவர்கள் சொன்னது) நடந்தது. எனக்கும் ஒரு யூதருக்குமிடையே ஒரு நிலம் (பற்றிய தகராறு) இருந்து வந்தது. அந்த யூதர் என் உரிமையை மறுத்தார். நான் நபி(ஸல்) அவர்களிடம் வழக்கைக் கொண்டு சென்றேன். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'உனக்கு ஆதாரம் ஏதும் உண்டா?' என்று என்னைக் கேட்டார்கள். நான், 'இல்லை'' என்று பதிலளித்தேன். எனவே, அந்த யூதரிடம் நபி(ஸல்) அவர்கள், '(நிலம் உன்னுடையது என்று) சத்தியம் செய்'' என்று கூறினார்கள். நான், 'இறைத்தூதர் அவர்களே! அப்படியென்றால், அவன் (தயங்காமல் பொய்) சத்தியம் செய்து என் செல்வத்தை எடுத்தச் சென்று விடுவானே'' என்று கூறினேன். அப்போதுதான், 'அல்லாஹ்விடம் செய்த ஒப்பந்தத்தையும் தம் சத்தியங்களையும் சொற்ப விலைக்கு விற்பவர்களுக்கு மறுமையில் எவ்வித நற்பேறுமில்லை. இறுதித் தீர்ப்பு நாளில் அல்லாஹ் அவர்களிடம் பேசவும் மாட்டான்; அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான். அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். மாறாக, அவர்களுக்குத் துன்புறுத்தும் தண்டனை தான் இருக்கிறது'' என்னும் திருக்குர்ஆனின் (திருக்குர்ஆன் 03:77) வசனத்தை அல்லாஹ் அருளினான்.

பகுதி 20

பொருளாதார மற்றும் குற்றவியல் (சிவில் - கிரிமினல்) விவகாரங்களில் (தான் நிரபராதி என்று) சத்தியம் செய்வது பிரதிவாதியின் மீதே கடமையாகும்.

நபி(ஸல்) அவர்கள், '(வாதியான) உன்னுடைய இரண்டு சாட்சிகள்; அல்லது (பிரதிவாதியான) அவரின் சத்தியம் (ஆகியன இவ்வழக்கில் தீர்ப்பளிக்கத் தேவையப்படுகின்றன)'' என்றார்கள்.

மேலும், இப்னு ஷுப்ருமா(ரஹ்) கூறினார்:

ஒரேயொருவரின் சாட்சியம் மற்றும் வாதியின் சத்தியம் குறித்து, அபுஸ் ஸினாத்(ரஹ்) என்னிடம் கருத்துக் கேட்டபோது நான் இந்த இறை வசனத்தை எடுத்துரைத்தேன்.

அல்லாஹ் கூறினான்:

மேலும், உங்களில் இரண்டு ஆண்களை சாட்சிகளாக ஆக்கிக் கொள்ளுங்கள். இரண்டு ஆண்கள் இல்லையென்றால் ஓர் ஆணையும் இரண்டு பெண்களையும் சாட்சிகளாக ஆக்கிக் கொள்ளுங்கள். அவ்விருவரில் ஒருத்தி மறந்துவிட்டால் மற்றொருத்தி அவளுக்கு அதை நினைவூட்டுவதற்காக. (திருக்குர்ஆன் 02:282)

''ஒரு சாட்சியுடன் வாதியின் சத்தியமும் இருந்தால் போதும் என்றிருக்குமாயின் ஒருத்தி மற்றொருத்திக்கு நினைவூட்டத் (துணையாக மற்றொரு சாட்சி) தேவையில்லையே. மற்றொருத்தி நினைவூட்டுவதால் என்ன பயன்?' என்று (புகாரியாகிய) கேட்கிறேன்.

2668. இப்னு அபீ முலைக்கா(ரஹ்) அறிவித்தார்.

பிரதிவாதி தான் சத்தியம் செய்ய வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் தீர்ப்பளித்ததாக இப்னு அப்பாஸ்(ரலி) எனக்கு (கடிதம்) எழுதினார்கள்.

2669, 2670 அபூ வாயில்(ரஹ்) கூறினார்.

''ஒரு செல்வத்தை அநியாயமாக அடைவதற்காக, ஒரு பிரமாணத்தின்போது பொய் சத்தியம் செய்பவர், அல்லாஹ் அவரின் மீது கோபம் கொண்டிருக்கும் நிலையில் அவளை (மறுமையில் அவர் சந்திப்பார்)'' (என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.) பிறகு, அதை உறுதிப்படுத்தும் விதத்தில் அல்லாஹ், 'அல்லாஹ்விடம் செய்த ஒப்பந்தத்தையும் தம் சத்தியங்களையும் அற்ப விலைக்கு விற்பவர்களுக்கு மறுமையில் எவ்வித நற்பேறுமில்லை. இறுதித் தீர்ப்பு நாளில் அல்லாஹ் அவர்களிடம் பேசவும்மாட்டான்; அவர்களைப் பார்க்கவும் மாட்டான். மாறாக, அவர்களுக்குத் துன்புறுத்தும் தண்டனை தான் இருக்கிறது' என்னும் (திருக்குர்ஆன் 03:77) வசனத்தை அருளினான்'' என்று அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார்: பிறகு அஷ்அஸ்பின் கைஸ்(ரலி) எங்களிடம் வந்து, 'அபூ அப்திர் ரஹ்மான் (அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) உங்களிடம் என்ன சொல்கிறார்?' என்று கேட்க, நாங்கள் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) சொன்னதைத் தெரிவித்தோம். அவர் உண்மையே சொன்னார். என் விவகாரத்தில் தான் அந்த வசனம் அருளப்பட்டது. எனக்கும் ஒரு மனிதருக்குமிடையே ஒரு விஷயத்தில் தகராறு இருந்து வந்தது. நாங்கள் அல்லாஹ்வின் தூதரிடம் வழக்கைக் கொண்டு சென்றோம். அவர்கள், 'உன்னுடைய இரண்டு சாட்சிகள் அல்லது அவரின் சத்தியம் (தீர்ப்பளிக்கத் தேவைப்படுகின்றன'') என்று கூறினார்கள். நான், 'அப்படியென்றால், அவர் (அந்த யூதர், தயங்காமல்) பொய் சத்தியம் செய்வாரே. (பொய் சத்தியம் செய்வதைப் பற்றி) கவலைப்பட மாட்டாரே'' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'ஒரு பிரமாணத்தின்போது அதன் மூலம் ஒரு சொத்தை அடைந்து கொள்வதற்காகப் பொய் சத்தியம் செய்கிறவன், தன் மீது கோபமுற்ற நிலையில் (மறுமையில்) அல்லாஹ்வைச் சந்திப்பான்'' என்று கூறினார்கள்.

''அல்லாஹ், நபி(ஸல்) அவர்களின் இச்சொற்களை உறுதிப்படுத்தி (திருக்குர்ஆனில் ஒரு வசனத்தை) அருளினான்'' என்று கூறிவிட்டு அந்த (திருக்குர்ஆன் 03:77) இறைவசனத்தை ஓதிக் காட்டினார்கள்.

பகுதி 21

ஒன்றை வாதிடக் கூடியவர், அல்லது குற்றம் சுமத்துகிறவர் தன் கூற்றுக்கு ஆதாரத்தைத் தேடிச் செல்லாம்.

2671. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

ஹிலால் இப்னு உமய்யா(ரலி) தம் மனைவியை ஷாரீக் இப்னு சஹ்மாவுடன் இணைத்து விபசாரக் குற்றம் சாட்டினார். நபி(ஸல்) அவர்கள், 'ஆதாரம் கொண்டுவா! இல்லையென்றால் (அவதூறு செய்ததற்கு தண்டனையாக) உன் முதுகில் கசையடி தரப்படும்'' என்று கூறினார்கள். அதற்கு அவர்கள், 'இறைத்தூதர் அவர்களே! எங்களில் ஒருவர், தன் மனைவியின் மேல் ஒரு மனிதரைப் பார்த்தாலும் ஆதாரம் தேடிச் செல்ல வேண்டுமா?' என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், 'ஆதாரம் கொண்டு வா! இல்லையென்றால் உன் முதுகில் கசையடி தரப்படும்'' என்று மீண்டும் கூறினார்கள்.

அறிவிப்பாளர் கூறுகிறார்:

இந்த ஹதீஸை அறிவித்துவிட்டு இப்னு அப்பாஸ்(ரலி) 'லிஆன்' தொடர்பான ஹதீஸைக் கூறினார்கள். 20

பகுதி 22

அஸ்ருத் தொழுகைக்குப் பிறகு சத்தியம் செய்வது.

2672. 'மூன்று பேரிடம் (மறுமை நாளில்) அல்லாஹ் பேசவும் மாட்டாள்; அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். அவர்களுக்குத் துன்பம் தரும் வேதனை உள்ளது. ஒருவர், (மக்களின் போக்குவரத்துப்) பாதையில் உள்ள (தன் உபயோகத்திற்குப் போக, தேவைக்கு மேலுள்ள) மீதமான தண்ணீரை வழிப் போக்கர்களுக்குத் (தராமல்) தடுத்துக் கொள்ளும் மனிதராவார். மற்றொருவர், உலக லாபங்களுக்காக மட்டும் ஓர் ஆட்சியாளரிடம் விசுவாசப் பிரமாணம் செய்தவராவார். அவர் தனக்கு, தான் விரும்புவதைக் கொடுத்தால் (பிரமாணத்தின் அடிப்படையில்) அவரிடம் விசுவாசமாக நடந்து கொள்வார். இல்லையெனில் விசுவாசமாக நடந்து கொள்ளமாட்டார். இன்னொருவர் ஒரு மனிதரிடம் அஸர் தொழுகைக்குப் பிறகு ஒரு பொருளுக்கு விலை கூறி, அந்தப் பொருளுக்கு இன்ன விலையைக் கொடுத்ததாக அல்லாஹ்வின் மீது (பொய்) சத்தியம் செய்ய, (அதை நம்பி) அந்த மனிதர் (அவர் சொன்ன விலைக்கு) அதை எடுத்துக் கொள்ளும்படி செய்தவராவார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பகுதி 23

பிரதிவாதியின் மீது சத்தியம் செய்வது கட்டாயமாகி விடும் இடத்தில் அவன் சத்தியம் செய்வான். ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திலிருந்து அவனைக் கொண்டு செல்ல வேண்டிய அவசியமில்லை.

(ஒரு வழக்கில்) பிரதிவாதியாக இருந்த ஸைத் இப்னு ஸாபித்(ரலி) மிம்பரின் மீதிருந்தவாறு சத்தியம் செய்ய வேண்டும் என்று (மதீனாவின் ஆளுநர்) மர்வான் இப்னி ஹகம் தீர்ப்பளித்தார். ஸைத் இப்னு ஸாபித்(ரலி), 'நான் என்னிடம் இருந்தபடியே சத்தியம் செய்வேன்'' என்று கூறி, மிம்பரின் மீதிருந்து சத்தியம் செய்ய மறுத்துவிட்டார்கள். மர்வான் அவரைக் கண்டு வியப்படைந்தார். (ஆனால்) நபி(ஸல்) அவர்கள், 'உன்னுடைய இரண்டு சாட்சிகளும் அவரின் சத்தியமும்'' என்றே கூறினார்கள். எந்த இடத்தையும் குறிப்பிட்டு ('இன்ன இடத்தில் செய்யும் சத்தியம்' என்று) கூறவில்லை.

2673. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

(பிரமாண வாக்குமூலத்தின் போது) ஒரு செல்வத்தை அபகரித்துக் கொள்ளும் நோக்கத்துடன் சத்தியம் செய்பவர், அல்லாஹ் அவரின் மீது கோபமுற்ற நிலையில் (மறுமையில்) அவனை அவர் சந்திப்பார்.

என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

பகுதி 24

பிரமாண வாக்குமூலம் தர வேண்டிய ஒரு சமுதாயத்தார் அதற்காக ஒருவரையொருவர் முந்திக் கொண்டால்... (குலுக்கல் முறை கையாளப்படும்.)

2674. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் ஒரு கூட்டத்தாரை சத்தியப் பிரமாணம் அளிக்கும் படி அழைத்தார்கள். அவர்கள் (ஒருவரையொருவர்) முந்திக் கொண்டு வந்தார்கள். அவர்களில் யார் சத்தியம் செய்வதென்று அவர்களிடையே (முடிவு செய்வதற்காகச்) சீட்டுக் குலுக்கிப் பேகுதிபடி நபி(ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.

பகுதி 25

அல்லாஹ் கூறினான்:

அல்லாஹ்வுடன் செய்த ஒப்பந்தத்தையும், தம் சத்தியங்களையும் அற்ப விலைக்கு விற்று விடுகிறவர்களுக்கு மறுமையில் எவ்வித நற்பேறுமில்லை. இறுதித் தீர்ப்பு நாளில் அல்லாஹ் அவர்களிடம் பேசவும் மாட்டன்; அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். மாறாக, அவர்களுக்குத் துன்புறுத்தும் தண்டனை தான் இருக்கிறது. (திருக்குர்ஆன் 03:77)

2675. அபூ அவ்ஃபா(ரலி) அறிவித்தார்.

ஒருவர் (கடைத் தெருவில்) தம் சரக்கை (மக்கள் முன்) வைத்து, அல்லாஹ்வின் பெயரால் சத்தியமிட்டு, அதற்கு அவர் தராத விலையைத் தந்திருப்பதாக (பொய்) கூறினார். அப்போது மேற்கண்ட (திருக்குர்ஆன் 03:77) இறைவசனம் அருளப்பட்டது.

2676, 2677 அபூ வாயில்(ரஹ்) அறிவித்தார்.

''ஒரு மனிதரின் செல்வத்தை அபகரித்துக் கொள்வதற்காக, ஒரு பிரமாண (வாக்குமூலத்)தின்போது பொய்யாக சத்தியம் செய்பவர் அல்லாஹ் அவரின் மீது கோபமுற்ற நிலையில் (மறுமையில்) அவனைச் சந்திப்பார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ் இந்த வாக்கை உறுதிப்படுத்தி, திருக்குர்ஆனின் மேற்கண்ட (திருக்குர்ஆன் 03:77) வசனத்தை இறக்கினான். அப்போது அஷ்அஸ்(ரலி) என்னைச் சந்தித்து, 'அப்துல்லாஹ் இன்று உங்களிடம் என்ன பேசினார்?' என்று கேட்க, நான். 'இன்னின்ன விஷயங்களைப் பேசினார்'' என்று கூறினேன். அதற்கு அவர்கள், 'அந்த வசனம் என் விவகாரத்தில் தான் இறங்கியது'' என்று கூறினார்கள்.

பகுதி 26

சத்தியம் செய்வது எப்படி?

அல்லாஹ் கூறினான்:

அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியமிடுகிறார்கள். (திருக்குர்ஆன் 09:62, 74)

பிறகு அவர்கள், 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! நன்மை செய்வதையும் இரண்டு பிரிவினாரிடையே உடன்பாடு ஏற்படுத்துவதையும் தவிர நாங்கள் வேறெதையும் நாடவில்லை'' என்று சத்தியம் செய்து (நபியே!) உங்களிடம் வருவார்கள். (திருக்குர்ஆன் 04:62)

சத்தியம் செய்யும்போது, 'பில்லாஹி, தல்லாஹி, வல்லாஹி' இவற்றில் ஏதாவதொன்றைச் சொல்ல வேண்டும். (இவையனைத்துமே 'அல்லாஹ்வின் மீது சத்தியமாக' என்ற பொருளையே கொண்டுள்ளன.)

நபி(ஸல்) அவர்கள், 'அஸர் தொழுகைக்குப் பிறகு பொய் கூறியவனாக அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்த ஒரு மனிதன்'' என்று (ஒரு ஹதீஸில்) கூறினார்கள்.

அல்லாஹ் அல்லாதவர்களின் மீது சத்தியம் செய்யக் கூடாது.

2678. தல்ஹா இப்னு உபைதில்லாஹ்(ரலி) கூறினார்.

ஒருவர் அல்லாஹ்வின் தூதரிடம் வந்து, இஸ்லாத்தைப் பற்றிக் கேட்கலானார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'பகலிலும் இரவிலும் ஐந்து தொழுகைகள் (தான் இஸ்லாத்தில் கட்டாயக் கடமையான வணக்கம்)'' என்று பதில் கூறினார்கள். அவர், 'இதைத் தவிர (வணக்கம்) ஏதும் என் மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா?' என்று கேட்க, 'இல்லை; நீ தானாக விரும்பிச் செய்யும் (உபரியான) வணக்கத்தைத் தவிர' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மேலும், ரமளான் மாதம் நோன்பு நோற்க வேண்டும் என்றும் அவருக்குக் கூறினார்கள். அவர், 'இதைத் தவிர வேறேதும் என் மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா?' என்று கேட்க, 'இல்லை; நீ தானாக விரும்பிச் செய்யும் (உபரியான) வணக்கத்தைத் தவிர' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மேலும், ரமளான் மாதம் நோன்பு நோற்க வேண்டும் என்றும் அவருக்குக் கூறினார்கள். அவர், 'இதைத் தவிர வேறெதும் என் மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா?' என்று கேட்க, 'இல்லை; நீ தானாக விரும்பி நோற்கும் (உபரியான) நோன்பைத் தவிர' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மேலும், இறைத்தூதர் ஸகாத்தையும் அவருக்கு (எடுத்துக்) கூறினார்கள். அவர் 'இதைத் தவிர வேறெதும் என் மீது (கடமையாக்கப்ப்டடு) உள்ளதா?' என்று கேட்டார். 'இல்லை; நீ தானாக விரும்பிச் செலுத்தும் (உபரியான) ஸகாத்தைத் தவிர' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அந்த மனிதர், 'அல்லாஹ்வின் மீதாணையாக! இதற்கு மேல் நான் அதிகமாகச் செய்யவும் மாட்டேன்; இதைக் குறைத்துச் செய்யவும் மாட்டேன்'' என்று கூறியபடி திரும்பிச் சென்றார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அவர் உண்மையாகவே (இதைக்) கூறியிருந்தால், அவர் வெற்றியடைந்துவிட்டார்'' என்றார்கள்.

2679. 'சத்தியம் செய்கிறவர் அல்லாஹ்வின் மீதே சத்தியம் செய்யட்டும்; அல்லது வாய்மூடி இருக்கட்டும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

பகுதி 27

பிரதிவாதி சத்தியம் செய்த பிறகு வாதி ஆதாரம் கொண்டு வந்தால் (ஏற்கப்படுமா?)

நபி(ஸல்) அவர்கள், 'உங்களில் சிலர் மற்ற சிலரை விட தன் ஆதாரங்களைச் சமர்ப்பிப்பதில் வாக்கு சாதுர்யம் அதிகமுள்ளவராக இருக்கலாம்'' என்று கூறினார்கள்.

''நீதியான ஆதாரம், பொய்யான சத்தியத்தைக் காட்டிலும் (ஏற்றுக் கொள்ள) முன்னுரிமை பெற்றதாகும்'' என்று தாவூஸ்(ரஹ்), இப்ராஹீம்(ரஹ்), ஷுரைஹ்(ரஹ்) ஆகியோர் கூறுகிறார்கள். 21

2680. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

நீங்கள் என்னிடம் வழக்குகளைக் கொண்டு வருகிறீர்கள். உங்களில் ஒருவர் மற்றொருவரை விட வாக்கு சாதுர்யம் மிக்கவராக இருக்கக் கூடும். எனவே, எவருடைய (சாதுர்யமான) சொல்லை வைத்து அவரின் சகோதரனின் உரிமையில் சிறிதை (அவருக்குரியது) என்று தீர்ப்பளித்து விடுகிறேனோ அவருக்கு நான் நரக நெருப்பின் ஒரு துண்டைத் தான் துண்டித்துக் கொடுக்கிறேன். எனவே, அவர் அதை எடுத்துக் கொள்ள வேண்டாம்.

பகுதி 28

வாக்குறுதியை நிறைவேற்றும்படி கட்டளையிடுவது.

ஹஸன் பஸாரீ(ரஹ்) வாக்குறுதியை நிறைவேற்றும்படி கட்டளையிட்டிருக்கிறார்கள்:

(அல்லாஹ் கூறினான்:)

(நபியே!) இஸ்மாயீலைப் பற்றியும் இவ்வேதத்தில் (உள்ளதைக்) குறிப்பிடுவீராக! திண்ணமாக, அவர் வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுபவராக இருந்தார். (திருக்குர்ஆன் 19:54)

(கூஃபா நகர நீதிபதியான) இப்னு அஷ்வஃ(ரஹ்), 'வாக்குறுதியை நிறைவேற்றுவது அவசியம்' என்று தீர்ப்பளித்துள்ளார். இந்தத் தீர்ப்பை அவர், சமுரா இப்னு ஜுன்தப்(ரலி) அவர்களிடமிருந்து (கேட்டுக்) கூறினார்.

மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி) கூறினார்.

நபி(ஸல்) அவர்கள் தம் மருமகனை (மகள் ஸைனபின் கணவரான அபுல் ஆஸ் இப்னு ரபீஉ(ரலி) என்பாரை) நினைவு கூர்ந்து, 'அவர் எனக்கு வாக்குறுதியளித்து, அதை எனக்கு நிறைவேற்றித் தந்தார்'' என்று கூறினார்கள்.

அபூ அப்தில்லாஹ் (புகாரீ) கூறுகிறேன்:

நான் இஸ்ஹாக் இப்னு இப்ராஹீம் ராஹவைஹீ(ரஹ்), இப்னுல் அஷ்வஃ(ரஹ்) அவர்களின் இந்த ஹதீஸை ஆதாரம் காட்டுவதைப் பார்த்திருக்கிறேன்.

2681. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

அபூ சுஃப்யான்(ரலி) என்னிடம் கூறினார்:

(ரோம மன்னர்) ஹிராக்ளியஸ் என்னைப் பார்த்து, 'உம்மிடம், 'அவர் (முஹம்மது - ஸல்) எதையெல்லாம் கட்டளையிடுகிறார்?' என்று கேட்டேன். நீர், 'அவர் தொழுகை தொழும்படியும், வாய்மையையும் நல்லொழுக்கத்தையும் கைக் கொள்ளும் படியும், ஒப்பந்தத்தையும், வாக்குறுதியையும் நிறைவேற்றும்படியும், நம்பி ஒப்படைக்கப்பட்ட அடைக்கலப் பொருளைச் சரிவரப் பாதுகாத்துத் திரும்பத் தரும்படியும்22 கட்டளையிடுகிறார்' என்று சொன்னீர். இதுதான் ஓர் இறைத்தூதரின் பண்பாகும்'' என்று கூறினார்.

2682. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

நயவஞ்சகனின் அடையாளம் மூன்றாகும்: அவன் பேசும்போது பொய் பேசுவான். அவனிடம் ஒரு பொருள் (அல்லது பணி) நம்பி ஒப்படைக்கப்பட்டால் (அதில்) மோசடி செய்வான். அவன் வாக்களித்தால் மாறு செய்வான்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

2683. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் இறந்தபோது அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் அலா இப்னு ஹள்ரமீ(ரலி) அவர்களிடமிருந்து (சிறிது) செல்வம் வந்தது. அபூ பக்ர்(ரலி), 'யாருக்காவது நபியவர்கள் கடன் பாக்கி தர வேண்டியதிருந்தால் அல்லது நபியவர்களின் தரப்பிலிருந்து யாருக்காவது வாக்குறுதி ஏதும் தரப்பட்டிருந்தால் அவர் நம்மிடம் வரட்டும் (அவரின் உரிமையை நாம் நிறைவேற்றுவோம்)'' என்று கூறினார்கள். (இந்த அறிவிப்பைக் கேட்டு) நான், 'எனக்கு இவ்வளவும், இவ்வளவும், இவ்வளவும் தருவதாக நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வாக்களித்திருந்தார்கள்'' என்று கூறினேன். - 'இப்படிக் கூறும்போது, தம் இரண்டு கைகளையும் ஜாபிர்(ரலி) மூன்றுமுறை விரித்துக் காட்டினார்கள்'' என்று அறிவிப்பாளர் முஹம்மத் இப்னு அலீ(ரஹ்) கூறினார் - அபூ பக்ர்(ரலி) என் கையில் (முதலில் பொற்காசுகள்) ஐநூறையும், பிறகு ஐநூறையும் பிறகு ஐநூறையும் எண்ணி வைத்தார்கள். 23

2684. ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அறிவித்தார்.

என்னிடம் 'ஹீரா'வாசியான யூதர் ஒருவர், 'மூஸா(அலை) அவர்கள் இரண்டு தவணைகளில் எதை நிறைவேற்றினார்கள்'' என்று கேட்டார். நான், 'எனக்குத் தெரியாது. நான் அரபுகளில் பேரறிஞரிடம் சென்று அவரிடம் கேட்கும் வரை (காத்திரு)'' என்று கூறினேன். அவ்வாறே, நான் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் சென்று கேட்டேன். அவர்கள், 'அவ்விரண்டில் அதிகமானதை, அவ்விரண்டில் மிக நல்லதை நிறைவேற்றினார்கள். இறைத்தூதர் (எவராயிருப்பினும் அவர்) சொன்னால் செய்(து முடித்துவிடு)வார்'' என்று கூறினார்கள்.

பகுதி 29

இணைவைப்போர் சாட்சியம் முதலான காரியங்களுக்கு அழைக்கப்படமாட்டார்கள்.

''பிற சமுதாயங்களிடையே ஒரு சமுதாயத்தைச் சேர்ந்தவர் மற்றொரு சமுதாயத்தைச் சேர்ந்தவருக்கு எதிராக சாட்சியம் கூறினால், அது செல்லுபடியாகாது; ஏனெனில், அல்லாஹு தஆலா, 'நாம் அவர்களுக்கிடையே மறுமை நாள் வரை விரோதத்தையும், பொறாமையையும் விதைத்து விட்டோம் (திருக்குர்ஆன் 05:14) என்று கூறுகிறான்'' என ஷஅபீ (ரஹ்) கூறினார்.

''வேதக்காரர்களை 24 மெய்பிக்கவும் வேண்டாம்; பொய்ப்பிக்கவும் வேண்டாம். 'நாங்கள் அல்லாஹ்வையும், அவனால் அருளப் பெற்ற வேதங்களையும் நம்புகிறோம்' என்று மட்டும் கூறுங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

2685. அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

முஸ்லிம்களே! இறைவனின் தூதர்(ஸல்) அவர்களின் மீது இறக்கியருளப்பட்ட உங்கள் வேதம் (குர்ஆன்) இறைவனின் செய்திகளில் மிகவும் புதியதாக இருக்க, அதை நீங்கள் (மனிதக் கருத்துகள்) கலக்கப்படாத நிலையில் ஓதிக் கொண்டிருக்க, நீங்கள் வேதக்காரர்களிடம் எப்படி (வேதங்களின் விபரங்களைக்) கேட்கிறீர்கள்? வேதக்காரர்கள் அல்லாஹ் எழுதியதை மாற்றிவிட்டார்கள். தங்கள் கைகளால் இறைவேதத்தை மாற்றிவிட்டு - (திருக்குர்ஆன் விவரிப்பது போல்) 'அதன் மூலம் சொற்ப விலையை வாங்கிக் கொள்வதற்காக, இது அல்லாஹ்விடமிருந்து வந்தது' - என்று கூறினார்கள். (அல்லாஹ்விடமிருந்து) உங்களுக்கு வந்துள்ள அறிவு ஞானம் (இறைவேதமான திருக்குர்ஆன்) உங்களை அவர்களிடம் கேட்பதிலிருந்து தடுக்கவில்லையா? அல்லாஹ்வின் மீதாணையாக! வேதக்காரர்களில் ஒருவரையும் உங்களின் மீது அருளப்பட்டதை (திருக்குர்ஆனைப்) பற்றிக் கேட்பவராக நான் கண்டதேயில்லையே.

என உபைதுல்லாஹ் இப்னு உத்பா(ரஹ்) அறிவித்தார்.

பகுதி 30

சிக்கலான விஷயங்களில் குலுக்கல் முறையைக் கையாள்வது.

அல்லாஹ் கூறினான்:

(நபியே!) இவையனைத்தும் மறைவான செய்திகள். இவற்றை உங்களுக்கு வஹீ (இறைச்செய்தி) (இறைச்செய்தி) (எனும் வேத வெளிப்பாட்டின்) மூலம் நாம் அறிவிக்கிறோம். (இறையில்லத்தின் சேவகர்களான அவர்கள்) தங்களில் யார் மர்யமுக்குப் பொறுப்பாளராவது என்று முடிவு செய்திடத் தங்கள் எழுதுகோல்களை எறிந்து கொண்டிருந்தபோதும், தங்களுக்குள் சச்சரவிட்டுக் கொண்டிருந்த போதும் (நீங்கள் அவர்களிடையே இருக்கவில்லை.) (திருக்குர்ஆன் 03:44)

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்:

அவர்கள் தங்கள் எழுதுகோல்களைக் குலுக்கிப் போட்டார்கள்; அவர்களின் எழுதுகோல்கள் நீரோட்டத்துடன் சென்றுவிட்டன. ஸகரிய்யா (அலை) அவர்களின் எழுதுகோல் மட்டும் நீரோட்டத்தை மிகைத்து (அதில் அடித்துச் செல்லப்படாமல் நின்று)விட்டது. எனவே, ஸகரிய்யா(அலை) அவர்கள மர்யம் (அலை) அவர்களைப் பராமரிக்கும் பொறுப்பை ஏற்றார்கள்.25

மேலும், அல்லாஹ் கூறினான்:

சீட்டுக் குலுக்கலில் (யூனுஸ்) பங்கு பெற்றார்; அதில் தோற்றுப் போய்விட்டார். (திருக்குர்ஆன் 37:141)

அபூ ஹுரைரா(ரலி) கூறினார்:

நபி(ஸல்) அவர்கள் ஒரு சமுதாயத்தை சத்தியப் பிரமாணம் செய்யும்படி அழைத்தார்கள். அவர்கள் விரைந்து ஒருவரோடொருவர் போட்டியிட்டுக் கொண்டு வந்தார்கள்; எனவே, அவர்களில் 'எவர் (முதலில்) சத்தியம் செய்வது' என்று (முடிவு செய்ய) அவர்களிடையே சீட்டுக் குலுக்கிப் போடும்படி நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். 26

2686. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

அல்லாஹ்வின் சட்டங்களில் விட்டுக் கொடுப்பவரும், அதை மீறுபவருக்கும் உதாரணம் ஒரு கூட்டத்தாரின் நிலையாகும். அவர்கள் ஒரு கப்பலில் இடம் பிடிப்பதற்காக சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். அவர்களில் சிலருக்குக் கப்பலின் கீழ்த் தளத்திலும் சிலருக்குக் கப்பலின் மேல் தளத்திலும் இடம் கிடைத்தது. கப்பலின் கீழ்த் தளத்தில் இருந்தவர்கள் தண்ணீரை எடுத்துக் கொண்டு மேல் தளத்தில் இருந்தவர்களைக் கடந்து சென்று கொண்டிருந்தார்கள். அதனால் மேல் தளத்திலிருந்தவர்கள் துன்பமடைந்தார்கள். எனவே, கீழ்த் தளத்தில் இருந்த ஒருவன் ஒரு கோடரியை எடுத்து, கப்பலின் கீழ்த் தளத்தைத் துளையிடத் தொடங்கினான். மேல் தளத்திலிருந்தவர்கள் அவனிடம் வந்து, 'உனக்கு என்ன நேர்ந்தது?' என்று கேட்டார்கள். அவன், 'நீங்கள் என்னால் துன்பத்திற்குள்ளானீர்கள். எனக்குத் தண்ணீர் அவசியம் தேவைப்படுகிறது. (அதனால், கப்பலின் கீழ்த்தளத்தில் துளையிட்டு அதில் வரும் தண்ணீரைப் பயன்படுத்தித் கொள்வேன்)'' என்று கூறினான். (துளையிடவிடாமல்) அவனுடைய இரண்டு கைகளையும் அவர்கள் பிடித்தால் அவர்கள் அவனையும் காப்பாற்றுவார்கள்; தங்களையும் காப்பறிக் கொள்வார்கள். அவனை அவர்கள் (கப்பலில் துளையிட)விட்டுவிட்டால் அவனையும் அழித்து விடுவார்கள்; தங்களையும் அழித்துக் கொள்வார்கள்.

என நுஃமான் இப்னு பஷீர்(ரலி) அறிவித்தார்.

2687. காரிஜா இப்னு ஸைத் அல் அன்சாரீ(ரஹ்) அறிவித்தார்.

உம்முல் அலா(ரலி) எங்கள் (அன்சாரிப்) பெண்களில் ஒருவராக இருந்தார்கள்; 27 நபி(ஸல்) அவர்களிடம் பைஅத் (விசுவாசப் பிரமாணம்) செய்திருந்தார்கள்.

அவர்கள் எனக்குத் தெரிவித்தாவது: 'முஹாஜிர்களை யாருடைய வீட்டில் தங்க வைப்பது' என்று அன்சாரிகள் சீட்டுக் குலுக்கிப் போட்டபோது (எங்கள் வீடு) உஸ்மான் இப்னு மழ்வூன்(ரலி) அவர்களின் பங்காக வந்தது. எனவே, அவர்கள் எங்களிடம் தங்கினார்கள், அவருக்கு நோய் ஏற்பட்டபோது நாங்கள் அவரை கவனித்துக் கொண்டோம். இறுதியில், அவர் மரணித்துவிட்டபோது அவரை அவரின் துணிகளில் வைத்து (கஃபனிட்டு) விட்டோம். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். (நான் உஸ்மான் இப்னு மழ்வூனை நோக்கி), 'அபூ சாயிபே! அல்லாஹ் உங்களை கண்ணியப்படுத்தியுள்ளான் என்பதற்கு நான் சாட்சி சொல்கிறேன்'' என்று கூறினேன். நபி(ஸல்) அவர்கள், 'அவரை அல்லாஹ் கண்ணியப்படுத்தியுள்ளான் என்பது உனக்கு எப்படித் தெரியும்?' என்று கேட்டார்கள். நான், 'இறைத்தூதர் அவர்களே! எனக்குத் தெரியாது?' என் தந்தையும், என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்'' என்று கூறினேன். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் மீதாணையாக! உஸ்மானுக்கோ மரணம் வந்துவிட்டது. நான் அவருக்கே நன்மையையே விரும்புகிறேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அல்லாஹ்வின் தூதராக இருந்தும் 'அவரிடம் எப்படி நடந்து கொள்ளப்படும்; (மறுமையில் அவரின் நிலை என்னவாகும்?)' என்று எனக்குத் தெரியாது'' என்று கூறினார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அதன் பிறகு நான் யாரையும் பாராட்டிக் கூறுவதேயில்லை. நபியவர்கள் இப்படிச் சொன்னது எனக்குக் கவலையளித்தது. பிறகு, நான் உறங்கினேன். அப்போது கனவில் உஸ்மான் இப்னு மழ்வூன்(ரலி) அவர்களுக்கு (சொர்க்கத்தில்) ஓடிக் கொண்டிருக்கும் ஒரு நீருற்று (கொடுக்கப்பட்டு) இருப்பதாகக் கண்டேன். அல்லாஹ்வின் தூதரிடம் வந்து அந்தக் கனவைத் தெரிவித்தேன். அதற்கு அவர்கள் 'அது அவரின் (நற்)செயல்'' என்று கூறினார்கள்.

2688. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பயணம் செய்ய விரும்பினால் தம் மனைவிமார்களிடையே சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள். அவர்களில் எவருடைய பெயர் வருகிறதோ அவர் நபி(ஸல்) அவர்களுடன் புறப்படுவார். நபி(ஸல்) அவர்கள் (தம்) மனைவிமார்களில் ஒவ்வொருவருக்கும் தம் இரவையும் பகலையும் பங்கிட்டு விட்டிருந்தார்கள். (ஆனால், நபியவர்களின் துணைவியாரில் ஒருவரான) சவ்தா பின்த்து ஸம்ஆ(ரலி) மட்டும் தம் பகலையும், இரவையும் எனக்குப் பரிசளித்துவிட்டார். அல்லாஹ்வின் தூதருடைய திருப்தியை (பெற) விரும்பியே அவர்கள் இப்படிச் செய்தார்கள்.

என உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார்.

2689. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

(தொழுகை அழைப்பான) பாங்கு சொல்வதிலும் (கூட்டுத் தொழுகையில்) முதல் வரிசையிலும் இருக்கும் நன்மையை மக்கள் அறிவார்களாயின் (அதை அடைந்து கொள்ள) சீட்டுக் குலுக்கிப் போடுவதைத் தவிர வேறு வழியில்லாமல் போகுமானால் நிச்சயம் சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள். தொழுகைக்கு அதன் ஆரம்ப வேளையில் விரைந்து செல்வதில் உள்ள நன்மையை மக்கள் அறிவார்களாயின் அதற்கு முந்திக் கொள்வார்கள். இஷா தொழுகையிலும். ஃபஜ்ருத் தொழுகையிலும் உள்ள நன்மையை அவர்கள் அறிவார்களாயின் அதற்குத் (தரையில்) தவழ்ந்தாவது அவர்கள் வந்து விடுவார்கள்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்.

சமாதானம்.

பகுதி 1

மக்களிடையே சமாதானம் செய்து வைத்தல்.

அல்லாஹ் கூறினான்:

மனிதர்களின் பெரும்பாலான இரகசியப் பேச்சுகளில் எவ்வித நன்மையும் இருப்பதில்லை. தான தர்மம் செய்யும்படியோ, நற்செயல் புரியும் படியோ, மக்களிடையே சீர்திருத்தம் செய்யும்படியோ அறிவுரை கூறுபவர்களின் பேச்சுக்களைத் தவிர. (அவற்றில் நன்மை உண்டு.) மேலும், அல்லாஹ்வின் திருப்தியை நாடி இவ்வாறு செய்கிறவருக்கு நாம் விரைவில் மகத்தான பிரதிபலனை வழங்குவோம். (திருக்குர்ஆன் 04: 114)

மேலும், மக்களுக்கிடையே சமாதானம் செய்து வைப்பதற்காகத் தலைவர் தன் தோழர்களுடன் (சண்டை சச்சரவுள்ள) இடங்களுக்குச் செல்வது.

2690. ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்.

அம்ர் இப்னு அவ்ஃப் குடும்பத்தைச் சேர்ந்த சிலருக்குள் ஏதோ தகராறு இருந்து வந்தது. எனவே, நபி(ஸல்) அவர்கள் தம் தோழர்கள் சிலர் புடைசூழ அவர்களிடையே சமாதானம் செய்து வைப்பதற்காக அவர்களை நோக்கிப் புறப்பட்டார்கள். (நபி(ஸல்) அவர்கள் அங்கு சென்றிருந்த போது) தொழுகை நேரம் வந்துவிட்டது. நபி(ஸல்) அவர்கள் இன்னும் (திரும்பி) வரவில்லை. அப்போது பிலால்(ரலி) பாங்கு சொன்னார்கள். (அதன் பிறகும்) நபி(ஸல்) அவர்கள் வரவில்லை. எனவே, பிலால்(ரலி) அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் சென்று, 'நபி(ஸல்) அவர்கள் (வேலையின் காரணத்தால் உடனே வர முடியாமல்) தாமத்திற்குள்ளாகியிருக்கிறார்கள். தொழுகை நேரம் வந்துவிட்டது. எனவே, தாங்கள் மக்களுக்குத் (தலைமை தாங்கித் தொழுவிக்கிறீர்களா?' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், 'சரி, நீங்கள் விரும்பினால் தொழுகை நடத்துகிறேன்'' என்று கூறினார்கள். உடனே, பிலால்(ரலி) தொழுகைக்கு இகாமத் சொல்ல, அபூ பக்ர்(ரலி) (தொழுகை நடத்துவதற்காக) முன்னால் சென்றார்கள். பிறகு, நபி(ஸல்) அவர்கள் வரிசைகளுக்கிடையே நடந்தவர்களாக வந்து, இறுதியில் முதல் வரிசையில் நின்றார்கள். உடனே, மக்கள் கைதட்டத் தொடங்கி இறுதியில் கைத்தட்டலை அதிகரித்தார்கள். அபூ பக்ர்(ரலி) தொழுகையின்போது திரும்பிப் பார்க்காதவராக இருந்தார்கள். இருந்தாலும் (மக்கள் கைதட்டும் ஓசையைக் கேட்டு) திரும்பிப் பார்த்தார்கள். தமக்குப் பின்னே, அங்கே நபி(ஸல்) அவர்கள் இருப்பதைக் கண்டார்கள். நபி(ஸல்) அவர்கள் அபூ பக்ர்(ரலி) அவர்களை நோக்கிச் சைகை செய்து, அப்படியே தொழுகை நடத்தும்படி கட்டளையிட்டார்கள். உடனே, அபூ பக்ர்(ரலி) தம் கையை உயர்த்தி அல்லாஹ்வைப் புகழ்ந்து, திரும்பாமல் அப்படியே பின்பக்கமாக நகர்ந்து, இறுதியில் வரிசைக்குள் புகுந்து கொண்டார்கள். உடனே, நபி(ஸல்) அவர்கள் முன்னால் சென்று மக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். தொழுது முடித்த பின் மக்களை நோக்கி, 'மக்களே! நீங்கள் தொழுகையில் ஏதேனும் (ஆட்சேபகரமான விஷயத்தைக் காண) நேர்ந்தால் கைதட்டத் தொடங்கி விடுகிறீர்கள். பெண்கள் தான் கைதட்ட வேண்டும். (ஆண்களில்) ஒருவர் தொழுகையில் ஏதேனும் (ஆட்சேபணைக்குரிய விஷயத்தைக்) காண நேர்ந்தால், அவர் 'சுப்ஹானல்லாஹ் - அல்லாஹ்வே தூய்மையானவன்' என்று கூறட்டும். ஏனெனில், அதைக் கேட்பவர் எவரும் திரும்பிப் பார்க்காமல் இருக்க மாட்டார்'' என்று கூறிவிட்டு, 'அபூ பக்ரே! நான் உங்களுக்குச் சைகை செய்தபோது நீங்கள் ஏன் மக்களுக்குத் தொழுகை நடத்தவில்லை?' என்று கேட்டார்கள். அதற்கு அபூ பக்ர்(ரலி), 'நபி(ஸல்) அவர்களுக்கு முன்னால் தொழுகை நடத்துவதற்கு அபூ குஹாஃபாவின் மகனுக்குத் தகுதியில்லை'' என்று பதிலளித்தார்கள். 1

2691. அனஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களிடம், 'தாங்கள் அப்துல்லாஹ் இப்னு உபையிடம் வந்தால் நன்றாயிருக்கும்'' என்று கூறப்பட்டது. 2 நபி(ஸல்) அவர்கள் அவனிடம் செல்ல ஒரு கழுதையில் ஏறினார்கள். முஸ்லிம்களும் நபி(ஸல்) அவர்களுடன் நடந்து சென்றார்கள். அவர்கள் சென்ற பாதை உவர் நிலமாக இருந்தது. அவனை நபி(ஸல்) அவர்கள் சென்றடைந்தபோது அவன், 'தூர விலகிப் போ! அல்லாஹ்வின் மீதாணையாக! உன் கழுதையின் துர்நாற்றம் என்னைத் துன்புறுத்திவிட்டது'' என்று கூறினான். அப்போது அவர்களிடையே இருந்த அன்சாரி (தோழர்) ஒருவர், 'அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதருடைய கழுதை உன்னை விட நல்ல வாசனையுடையதாகும்'' என்று கூறினார். அப்துல்லாஹ்வுக்காக அவனுடைய சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் ஆத்திரமடைந்து அந்த அன்சாரியை ஏசினார். அந்த இருவருக்காகவும் அவரவருடைய நண்பர்கள் கோபமடைந்தார்கள். தங்களுக்கிடையே ஈச்சங் குச்சியாலும், கைகளாலும் செருப்புகளாலும் அடித்துக் கொண்டார்கள். அப்போது, 'மேலும், இறைநம்பிக்கையாளர்களில் இரண்டு குழுவினர் தங்களுக்குள் சண்டையிட நேர்ந்தால் அவர்களிடையே சமாதானம் செய்து வையுங்கள்'' (திருக்குர்ஆன் 49:09) என்னும் வசனம் அருளப்பட்டிருக்கிறது என்னும் செய்தி எங்களுக்கு எட்டியது.

பகுதி 2

மக்களிடையே சமாதானம் செய்து வைப்பவன் (அதற்காகப் பொய்யே கூறினாலும்) அவன் பொய்யன் அல்லன்.

2692. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

(பரஸ்பரம் பிணங்கிய இரண்டு தரப்பாரிடமும்) நல்லதை (புனைந்து) சொல்லி மக்களிடையே சமாதானத்தை ஏற்படுத்துபவன் பொய்யன் அல்லன்.

என உம்மு குல்தூம் பின்த்து உக்பா(ரலி) அறிவித்தார்.

பகுதி 3

தலைவர் தம் தோழர்களிடம், 'நம்மை அழைத்துச் செல்லுங்கள்; நாம் (அவர்களிடையே) சமாதானம் செய்து வைப்போம்'' என்று சொல்லுதல்.

2693. ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்.

ஒருவர் மீதொருவர் கற்கள் வீசிக் கொள்ளுமளவிற்கு 'குபா' வாசிகள் (தமக்கிடையே) சண்டையிட்டனர். அல்லாஹ்வின் தூதரிடம் இச்செய்தி தெரிவிக்கப்பட்டது. அவர்கள், 'நம்மை அழைத்துச் செல்லுங்கள். நாம் அவர்களுக்கிடையே சமாதானம் செய்து வைப்போம்'' என்று கூறினார்கள்.

பகுதி 4

அல்லாஹ் கூறினான்:

கணவன் - மனைவி இருவரும் ஒருவருக்கொருவர்விட்டுக் கொடுத்து தங்களுக்கிடையே சமாதானம் செய்து கொள்வதில் தவறேதும் இல்லை. மேலும் சமாதானம் செய்து கொள்வதே நன்மையானதாகும். (திருக்குர்ஆன் 04:128)

2694. உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார்.

''ஒரு பெண், தன் கணவன் (தன்னை வெறுத்து) முகம் சுளிப்பான் என்றோ (தன்னைப்) புறக்கணிப்பான் என்றோ அஞ்சினால் கணவன் மனைவி இருவரும் (ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து) தங்களுக்கிடையே சமாதானம் செய்து கொள்வதில் தவறில்லை'' என்னும் (திருக்குர்ஆன் 04:128) திருக்குர்ஆன் வசனத்திற்கு விளக்கம் தரும்போது ஆயிஷா(ரலி), 'ஒரு மனிதன் தன் மனைவியிடம் தனக்கு மகிழ்வைத் தராத வயோதிகம் முதலியவற்றைக் கண்டு அவளைப் பிரிந்து விட விரும்பும் நிலையில், அவள் 'என்னை (உன் மணபந்தத்திலேயே) வைத்துக் கொள். (என் உரிமைகளில்) நீ விரும்பியதை எனக்குப் பங்கிட்டுத் தந்து விடு' என்று சொல்வதை இது குறிக்கும்'' என்று கூறிவிட்டு, 'இருவரும் பரஸ்பரம் ஒத்துப் போய்விட்டார்கள் என்றால் தவறேதுமில்லை'' என்று கூறினார்கள்.

பகுதி 5

(மக்கள் தமக்கிடையே) அநியாயமான முறையில் சமாதான ஒப்பந்தம் செய்தால் அந்த சமாதான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட வேண்டும்.

2695, 2696 அபூ ஹுரைரா(ரலி) அவர்களும் ஸைத் இப்னு காலித்(ரலி) அவர்களும் கூறினார்கள்கள்.

(ஒருமுறை) கிராமவாசி ஒருவர் (மற்றொருவருடன்) வந்து, 'இறைத்தூதர் அவர்களே! எங்களுக்கிடையே அல்லாஹ்வின் சட்டத்தின்படி தீர்ப்பளியுங்கள்'' என்று கேட்டார். அவரின் எதிரி எழுந்து நின்று, 'உண்மை தான் சொன்னார். எங்களுக்கிடையே அல்லாஹ்வின் சட்டத்தின்படி தீர்ப்பளியுங்கள்'' என்று கூறினார். அந்த கிராமவாசி (எதிரியைச் சுட்டிக்காட்டி), 'என் மகன் இவரிடம் கூலியாளாக வேலை பார்த்துக் கொண்டிருந்தான். (அப்போது) இவரின் மனைவியுடன் விபச்சாரம் செய்துவிட்டான். மக்கள் என்னிடம், 'உன் மகனுக்குக் கல்லெறி தண்டனை கொடுக்கப்படவேண்டும்' என்று கூறினர். நான் என் மகனை அதிலிருந்து காப்பாற்ற ஈட்டுத் தொகையாக நூறு ஆடுகளையும் ஓர் அடிமைப் பெண்ணையும் தந்தேன். பின்னர் (சட்ட) அறிஞர்களிடம் கேட்டேன். அவர்கள், 'உன் மகனுக்கு நூறு கசையடிகளும், ஓராண்டுக் காலத்திற்கு நாடு கடத்தும் தண்டனையும் தான் கொடுக்கப்பட வேண்டும்' என்று தீர்ப்புக் கூறினார்கள்'' என்றார். நபி(ஸல்) அவர்கள், 'உங்கள் இருவருக்குமிடையே நான் அல்லாஹ்வின் சட்டத்தின்படியே தீர்ப்பளிக்கிறேன்: அடிமைப் பெண்ணும், ஆடுகளும் உன்னிடம் திருப்பித் தரப்பட வேண்டும்; உன் மகனுக்கு நூறு கசையடிகளும் ஓராண்டுக் காலத்திற்கு நாடு கடத்தும் தண்டனையும் தரப்படவேண்டும்'' என்று கூறிவிட்டு (அருகிலிருந்த) ஒரு மனிதரைப் பார்த்து, 'உனைஸே! இவருடைய (கிராமவாசியின் எதிரியுடைய) மனைவியிடம் சென்று (அவள் குற்றத்தை ஒப்புக் கொண்டால்) அவளுக்குக் கல்லெறி தண்டனை கொடுப்பீராக'' என்று கூறினார்கள். அவ்வாறே, உனைஸ் (என்னும் அந்தத் தோழர்) அப்பெண்ணிடம் சென்று (அவள் குற்றத்தை ஒப்புக் கொண்டதும்) அவளுக்குக் கல்லெறி தண்டனை கொடுத்தார். 3

2697. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகிறானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும்.

என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

பகுதி 6

சமாதான ஒப்பந்தம் எப்படி எழுதப்பட வேண்டும்? 'இது இன்னாருடைய மகன் இன்னாரும், இன்னாருடைய மகன் இன்னாரும் செய்த சமாதான ஒப்பந்தம்'' என்று எழுதப்பட வேண்டும். அந்த இன்னாரின் பெயரை அவரின் குலத்தாருடன் அல்லது அவரின் வமிசாவளியுடன் இணைத்து எழுதினாலும் சரி, இணைக்காமல் எழுதினாலும் சரி (செல்லும்.)

2698. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஹுதைபிய்யாக்காரர்களிடம் (மக்காவாசிகளான குறைஷிகளிடம் ஹுதைபிய்யா எனுமிடத்தில்) சமாதான ஒப்பந்தம் செய்தபோது அலீ இப்னு அபீ தாலிப்(ரலி), அவர்களிடையிலான ஒப்பந்தப் பத்திரத்தை எழுதினார்கள். அப்போது, 'அல்லாஹ்வின் தூதரான முஹம்மத்' என்று அவர்கள் எழுத, இணைவைப்பவர்கள், 'அல்லாஹ்வின் தூதரான முஹம்மத்' என்று எழுதாதீர்கள்'' (என்று சொல்லிவிட்டு) முஹம்மத்(ஸல்) அவர்களை நோக்கி), 'நீர் அல்லாஹ்வின் தூதரக இருந்திருந்தால் நாங்கள் உம்முடன் போரிட்டிருக்க மாட்டோம்'' என்று கூறினர். எனவே, நபி(ஸல்) அவர்கள் அலீ(ரலி) அவர்களிடம், 'அதை அழித்து விடுங்கள்'' என்று கூறினார்கள். அலீ(ரலி), 'நான் அதை (ஒருபோதும்) அழிக்கப் போவதில்லை'' என்று கூறிவிட்டார்கள். எனவே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தங்களின் திருக்கரத்தால் அதை அழித்தார்கள். நானும் என் தோழர்களுடம் (மக்கா நகரில்) மூன்று நாள்கள் தங்குவோம். அதில் நாங்கள், 'ஜுலுப்பானுஸ் ஸிலாஹ்' உடன் தான் நுழைவோம் என்றும் அவர்களுடன் சமாதான ஒப்பந்தம் செய்தார்கள். மக்கள், 'ஜுலுப்பானுஸ் ஸிலாஹ்' என்றால் என்ன?' என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்டனர். அவர்கள், 'உள்ளிருக்கும் ஆயுதங்களுடன் கூடிய உறை'' என்று பதிலளித்தார்கள்.

2699. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் துல்கஅதா மாதத்தில் உம்ரா செய்தார்கள். மக்காவாசிகள் அவர்களை மக்காவிற்குள் நுழைய விட மறுத்தார்கள். இறுதியில், நபி(ஸல்) அவர்கள், 'மக்காவில் (வரும் ஆண்டில்), தாம் (தம் தோழர்களுடன்) மூன்று நாள்கள் தங்க (அனுமதிக்க) வேண்டும் என்னும் நிபந்தனையின் போரில் மக்காவாசிகளுடன் சமாதான ஒப்பந்தம் செய்தார்கள். ஒப்பந்தத்தை அவர்கள் எழுதியபோது, 'இது அல்லாஹ்வின் தூதரான முஹம்மத் அவர்கள் செய்த சமாதான ஒப்பந்தத்தின் ஷரத்துகள்'' என்று எழுதினார்கள். உடனே மக்காவாசிகள், 'நாங்கள் இதை ஒப்புக் கொள்ள மாட்டோம்; நீங்கள் இறைத்தூதர் தாம் என்று நாங்கள் அறிந்திருப்போமாயின் உங்களை (மக்காவில் நுழையவிடாமல்) தடுத்திருக்க மாட்டோம். ஆயினும், நீங்கள் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது தான்'' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், 'நான் அல்லாஹ்வின் தூதராவேன்; அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது ஆவேன்'' என்று பதிலளித்துவிட்டு, அலீ(ரலி) அவர்களை நோக்கி, 'இறைத்தூதர்' என்பதை அழித்து விடுங்கள்'' என்று கூறினார்கள். அலீ(ரலி), 'முடியாது. அல்லாஹ்வின் மீதாணையாக! நான் தங்கள் (அந்தஸ்தைக் குறிக்கும்) பெயரை ஒருபோதும் அழிக்க மாட்டேன்'' என்று கூறிவிட்டார்கள். உடனே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பத்திரத்தை எடுத்து, 'இது அப்துல்லாஹ்வின் குமாரர் முஹம்மத் செய்த சமாதான ஒப்பந்தத்தின் ஷரத்து(கள் கொண்ட பத்திரம்) ஆகும். (அந்த ஷரத்துகளாவன:) (முஸ்லிம்களின்) ஆயுதம் எதுவும் உறையிலிருந்தபடியே தவிர, மக்காவினுள் நுழையக்கூடாது. மக்காவாசிகளில் எவரும் முஹம்மதைப் பின்தொடர்ந்து வர விரும்பினாலும் கூட, அவரை முஹம்மது தம்முடன் அழைத்துச் செல்லக் கூடாது. மேலும், தம் தோழர்களில் எவரும் மக்காவில் தங்கிவிட விரும்பினால் அவரை முஹம்மது தடுக்கக் கூடாது'' என்று எழுதினார்கள். (அடுத்த ஆண்டு) நபி(ஸல்) அவர்கள் மக்காவினுள் நுழைந்தபோது (அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட) தவணையான மூன்று நாள்கள் கழிந்தவுடன் மக்காவாசிகள் அலீ(ரலி) அவர்களிடம் வந்து, 'உங்கள் தோழரிடம் எங்களை (எங்கள் நகரை)விட்டு வெளியேறும்படி கூறுங்கள். ஏனெனில், தவணைக் காலம் கழிந்துவிட்டது'' என்றார்கள். நபி(ஸல்) அவர்களும் (மக்காவைவிட்டுப்) புறப்பட்டார்கள். அப்போது (உஹுதுப் போரில் கொல்லப்பட்டிருந்த) ஹம்ஸா(ரலி) அவர்களின் (அனாதை) மகள், 'என் சிறிய தந்தையே! என் சிறிய தந்தையே!'' என்று (கூறிக் கொண்டே) அவர்களைப் பின்தொடர்ந்து வந்தாள். அலீ(ரலி) அச்சிறுமியை (பரிவோடு) எடுத்து அவளுடைய கையைப் பிடித்தார்கள். ஃபாத்திமா(ரலி) அவர்களிடம், 'இவளை எடுத்துக் கொள். (இவள்) உன் தந்தையின் சகோதரருடைய மகள். இவளை (இடுப்பில்) சுமந்து கொள்'' என்று கூறினார்கள். அச்சிறுமியின் விஷயத்தில் அலீ(ரலி) அவர்களும், ஸைத் இப்னு ஹாரிஸா(ரலி) அவர்களும், ஜஅஃபர்(ரலி) அவர்களும் (ஒவ்வொரு வரும், 'அவளை நானே வளர்ப்பேன்' என்று) ஒருவரோடொருவர் போட்டியிட்(டு சச்சரவிட்டுக் கொண்)டனர். அலீ(ரலி), 'நானே இவளுக்கு மிகவும் உரிமையுடையவன். ஏனெனில், இவள் என் சிறிய தந்தையின் மகள்'' என்று கூறினார்கள். ஜஅஃபர்(ரலி), 'இவள் என் சிறிய தந்தையின் மகள். மேலும், இவளுடைய சிற்றன்னை என் (மணபந்தத்தின்) கீழ் இருக்கிறாள்'' என்று கூறினார்கள். ஸைத்(ரலி), '(இவள்) என் சகோதரரின் மகள்'' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் அச்சிறுமியின் சிற்றன்னைக்கு சாதகமாக (சிற்றன்னையின் கணவரான ஜஅஃபர்(ரலி) அவளை வளர்க்கட்டும் என்று) தீர்ப்பளித்தார்கள். மேலும், 'சிற்றன்னை தாயின் அந்தஸ்தில் இருக்கிறாள்'' என்று கூறினார்கள். அலீ(ரலி) அவர்களை நோக்கி, 'நீங்கள் என்னைச் சேர்ந்தவர்; நான் உங்களைச் சேர்ந்தவன்'' என்று (ஆறுதலாகக்) கூறினார்கள். ஜஅஃபர்(ரலி) அவர்களை நோக்கி, 'நீங்கள் தோற்றத்திலும் குணத்திலும் என்னை ஒத்திருக்கிறீர்கள்'' என்றார்கள். மேலும், ஸைத்(ரலி) அவர்களை நோக்கி, 'நீங்கள் எம் சகோதரர்; எம்(மால் விடுதலை செய்யப்பட்ட, எம்முடைய பொறுப்பிலுள்ள) அடிமை (ஊழியர்)'' என்று கூறினார்கள்.

பகுதி 7

இணைவைப்பவர்களுடன் சமாதானம் செய்து கொள்வது.

இது குறித்து அபூ சுஃப்யான்(ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. 4

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அவ்ஃப் மாலிக் இப்னு(ரலி) கூறினார்.

பிறகு உங்களுக்கும் மஞ்சள் நிறத்தாருக்கும் (ஐரோப்பியர்களான பைஸாந்தியர்களுக்கும்) இடையே சமாதான ஒப்பந்தம் ஏற்படும்.

இது குறித்து ஸஹ்ல் இப்னு ஹுனைஃப்(ரலி) வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் அவர் 'அபூ ஜந்தலுடைய (நிகழ்ச்சி நடைபெற்ற) நாளில் எங்களை நான்... கண்டேன்'' என்று கூறினார். 5 அஸ்மா(ரலி) வழியாகவும், மிஸ்வர்(ரலி) வழியாகவும் நபி(ஸல்) அவர்களிடமிருந்து (இது பற்றி) அறிவிக்கப்பட்டுள்ளது.

2700. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) கூறினார்.

ஹுதைபிய்யா நிகழ்ச்சியின்போது 6 நபி(ஸல்) அவர்கள் இணைவைப்பவர்களுடன் மூன்று நிபந்தனைகளின் பேரில் சமாதான ஒப்பந்தம் செய்தார்கள். அவையாவன:

1. நபி(ஸல்) அவர்கள் இணைவைப்பவர்களிடையேயிருந்து தம்மிடம் (மதீனாவுக்கு) வருபவரை (அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டிருந்தாலும் கூட) அவர்களிடமே திருப்பியனுப்பி விட வேண்டும். தங்களிடம் (மக்காவிற்கு) வரும் முஸ்லிம்களை இணைவைப்பவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் திருப்பியனுப்ப மாட்டார்கள்.

2. நபி(ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் அடுத்த ஆண்டு (உம்ரா செய்ய) மக்காவினுள் நுழைந்து மூன்று நாள்கள் தங்கலாம்.

3. (ஆனால்,) வாள், வில் போன்ற ஆயுதங்களை உறையிலிட்டுக் கொண்டே உள்ளே நுழைய வேண்டும்.

இந்த சமாதான ஒப்பந்தம் பேசப்பட்டுக் கொண்டிருந்தபோது அபூ ஜந்தல்(ரலி), தம் (கால்) சங்கிலிகளுடன் தத்தித் தத்தி (நடந்து) வந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் இணைவைப்பவர்களிடமே அவர்களைத் திருப்பியனுப்பிவிட்டார்கள்.

அபூ அப்தில்லாஹ் புகாரீயாகிய நான் கூறுகிறேன்:

முஅம்மல்(ரஹ்) சுஃப்யான்(ரஹ்) அவர்களிடமிருந்து அறிவித்த அறிவிப்பில் அபூ ஜந்தல்(ரலி) அவர்களைக் குறித்த நிகழ்ச்சியைக் கூறவில்லை.

2701. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உம்ரா செய்ய நாடியவர்களாக (மக்காவை நோக்கிப்) புறப்பட்டார்கள். குறைஷிகளில் இறைமறுப்பாளர்கள் அவர்களை இறையில்லம் கஅபாவிற்குச் செல்லவிடாமல் தடுத்தனர். எனவே, நபி(ஸல்) அவர்கள் ஹுதைபிய்யாவில் தம் தியாகப் பிராணியை அறுத்து (பலியிட்டு)விட்டுத் தம் தலையை மழித்தார்கள். மேலும், அவர்களுடன், 'வரும் ஆண்டில், நான் (என் தோழர்களுடன்) உம்ரா செய்ய அனுமதிக்கப்பட வேண்டும்; வாள்களைத் தவிர வேறு ஆயுதங்களை நாங்கள் எடுத்து வர மாட்டோம்; குறைஷிகள் விரும்புகிற வரை மட்டுமே மக்காவில் தங்கியிருப்போம்' என்னும் நிபந்தனையின் பேரில் சமாதான ஒப்பந்தம் செய்தார்கள். அவர்களிடம் செய்த சமாதான ஒப்பந்தத்தின்படியே (அடுத்த ஆண்டு மக்கா நகரினுள்) நுழைந்தார்கள். அங்கு மூன்று நாள்கள் தங்கி (முடித்து)விட்டபோது, குறைஷிகள் நபி(ஸல்) அவர்களை (மக்காவைவிட்டு) வெளியேறும்படி உத்தரவிட, நபி(ஸல்) அவர்களும் வெளியேறிவிட்டார்கள்.

2702. ஸஹ்ல் இப்னு அபீ ஹல்மா(ரலி) அறிவித்தார்.

அப்துல்லாஹ் இப்னு ஸஹ்ல்(ரலி) அவர்களும் முஹய்யிலா இப்னு மஸ்வூத் இப்னி ஸைத்(ரலி) அவர்களும் கைபரை நோக்கிச் சென்றார்கள். கைபர் அப்போது முஸ்லிம்களுடன் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தது. 7

பகுதி 8

இழப்பீட்டுத் தொகையில் சமாதானம் செய்து கொள்வது.

2703. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

என் தந்தையின் சகோதாரி - ருபய்யிஉ பின்த்து நள்ர், - ஓர் இளம் பெண்ணின் முன்பல்லை உடைத்துவிட்டார். அப்பெண்ணின் குலத்தரிடம் என் குலத்தார், 'இழப்பீட்டுத் தொகையைப் பெறுங்கள்; அல்லது (ருபய்யிஉவை) மன்னித்து விடும்படி சொல்லுங்கள்'' என்று கோரினார்கள். அவர்கள் (இரண்டில் எதற்குமே ஒப்புக் கொள்ள) மறுத்துவிட்டார்கள். எனவே, எங்கள் குலத்தார் நபி(ஸல்) அவர்களிடம் (விபரம் கூறி, தீர்ப்புப் பெற) வந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் (ருபய்யிஉவைப்) பழி வாங்கும்படி அவர்களுக்கு உத்தரவிட்டார்கள். அப்போது (என் தந்தையின் சகோதரர்) அனஸ் இப்னு நள்ரு(ரலி), 'இறைத்தூதர் அவர்களே! (என் சகோதரி) ருபய்யிஉவின் முன்பல் உடைக்கப்படுமா? அப்படி நடக்காது. தங்களை சத்திய மார்க்கத்துடன் அனுப்பி வைத்தவனின் மீது சத்தியமாக! அவளுடைய முன்பல் உடைக்கப்படாது'' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், 'அனஸே! அல்லாஹ்வின் சட்டம் பழிவாங்குவதாகும். (எனவே, அதை வெறுக்கவோ மறுக்கவோ வேண்டாம்)'' என்று கூறினார்கள். பிறகு, அந்த (இளம் பெண்ணின்) குலத்தார் (ஈட்டுத் தொகை பெற) ஒப்புக் கொண்டு (ருபய்யிஉவை) மன்னித்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் அடியார்களில் சிலர் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு (எதையேனும் கூறி) விடுவார்களாயின் அதை அல்லாஹ் நிறைவேற்றி விடுகிறான்'' என்றார்கள்.

அனஸ்(ரலி) வழியாக அறிவிக்கப்படும் மற்றோர் அறிவிப்பில், '(அந்த வாலிபப் பெண்ணின்) குலத்தார் (பழிவாங்காமல் விட்டுவிட) ஒப்புக் கொண்டு பரிகாரத் தொகையை ஏற்றார்கள்' என்று வந்துள்ளது.

பகுதி 9

நபி(ஸல்) அவர்கள் (தம் பேரர்) ஹஸன் இப்னு அலீ(ரலி) அவர்களைக் குறித்து, 'இவர் என் புதல்வர்; (கண்ணிய மிக்க) தலைவர். இவரைக் கொண்டு இரண்டு பெரும் குழுவினருக்கிடையே அல்லாஹ் சமாதானம் செய்து வைக்க விரும்புகிறான்'' என்று கூறிய தகவலும், 'விசுவாசிகளில் இரண்டு கூட்டத்தார் போரிட்டால் அவர்களிடையே சமாதானம் செய்து வையுங்கள்' என்னும் (திருக்குர்ஆன் 49:09) இறைவசனமும்.

2704. ஹஸன் பஸாரீ(ரஹ்) அறிவித்தார்.

8அலீ(ரலி) அவர்களின் மகனான ஹஸன்(ரலி), முஆவியா(ரலி) அவர்களை மலைகளைப் போன்ற (பிரம்மாண்டமான) படையணிகளுடன் எதிர்கொண்டார்கள். (அவற்றைக் கண்ட முஆவியா(ரலி) அவர்களின் ஆலோசகர்) அம்ர் இப்னு ஆஸ்(ரலி), 'இவற்றில் உள்ள (போரிடுவதிலும், வீரத்திலும்) சமபலம் வாய்ந்தவர்களை நீங்கள் கொன்று விடாதவரை இந்தப் படைகள் பின்வாங்கிச் செல்லாது என்று கருதுகிறேன்'' என்று கூறினார்கள். அவருக்கு முஆவியா(ரலி) அல்லாஹ்வின் மீதாணையாக! அவ்விருவரில் முஆவியாவே, சிறந்தவராக இருந்தார்...'' அம்ரே! இவர்கள் அவர்களையும் அவர்கள் இவர்களையும் கொன்று விடுவார்களாயின் மக்களின் நிர்வாகத்திற்குப் பொறுப்பேற்க என்னிடம் வேறு யார் இருப்பார்கள்? (என் குடி) மக்களின் பெண்களைப் பாதுகாக்க என்னிடம் (வேறு) யார் இருப்பார்கள்? அவர்களின் சொத்துகளைப் பாதுகாக்க என்னிடம் (வேறு) யார் தான் இருப்பார்கள்?' என்று பதிலளித்தார்கள். எனவே, ஹஸன்(ரலி) அவர்களிடம் குறைஷிகளில் பனூ அப்தி ஷம்ஸ் கிளையாரைச் சேர்ந்த அப்துர் ரஹ்மான் இப்னு சமுரா(ரலி) அவர்களையும், அப்துல்லாஹ் இப்னு ஆமிர் இப்னி குரைஸ்(ரலி) அவர்களையும் அனுப்பி, 'நீங்கள் இருவரும் இந்த மனிதரிடம் சென்று விபரத்தை எடுத்துரைத்துப் பேசி, அவரிடம் (சமாதான ஒப்பந்தம் செய்து கொள்ளும்படி) கோருங்கள்'' என்று கூற, அவ்விருவரும் (அவ்வாறே) ஹஸன்(ரலி) அவர்களிடம் சென்று, அவர்களின் அறைக்குள் நுழைந்து பேசினார்கள்; ஹஸன்(ரலி) அவர்களிடம் (முஅவியா(ரலி) அவர்களின் தூதை எடுத்துச்) சொல்லி (அமைதி ஒப்பந்தம் செய்து கொள்ள முன்வரும்படி) கோரினார்கள். அதற்கு அவ்விருவரிடமும் ஹஸன்(ரலி), 'நாங்கள் அப்துல் முத்தலிபின் மக்கள்; இந்த செல்வத்தை (எங்கள் தலைமைத்துவத்தின் காரணத்தால்) பெற்றிருக்கிறோம். (அதை எங்கள் குடிமக்கள், படைவீரர்கள் மற்றும் ஆதரவாளர்களிடையே செலவு செய்து வருகிறோம்.) இந்தச் சமுதாயமோ தன் இரத்தத்தை சிந்திப் பழகி விட்டது'' என்று கூறினார்கள். இதற்கு அவ்விருவரும், 'முஆவியா(ரலி) உங்களுக்கு இவ்வளவு (மானியம்) தருவதாகக் கூறுகிறார்கள்; மேலும் (சமாதான ஒப்பந்தம் செய்து கொள்ளும்படி) உங்களிடம் கோருகிறார்கள்'' என்று கூறினர். அதற்கு ஹஸன்(ரலி), 'இந்த விஷயத்தில் எனக்குப் பொறுப்பு யார்?' என்று கேட்க, அவ்விருவரும் 'இதில் உங்களுக்கு நாங்கள் பொறுப்பு'' என்று கூறினர்.

ஹஸன்(ரலி) கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் அவர்கள், 'நாங்கள் உங்களிடம் இதற்குப் பொறுப்பேற்கிறோம்'' என்றே கூறினார்கள். இறுதியாக, ஹஸன்(ரலி), முஆவியா(ரலி) அவர்களுடன் சமாதான ஒப்பந்தம் செய்தார்கள். மேலும், '(ஒரு முறை) இறைத்தூதர் மிம்பர் மீதிருக்க, அவர்களின் ஒரு பக்கத்தில் ஹஸன் இப்னு அலீ(ரலி) அமர்ந்திருக்க, நபி(ஸல்) அவர்கள் ஒரு முறை மக்களை நோக்கியும், மற்றொரு முறை ஹஸன்(ரலி) அவர்களை நோக்கியும் (உரை நிகழ்த்திய வண்ணம்), 'இந்த என்னுடைய புதல்வர் (கண்ணியத்திற்குரிய) தலைவராவார். முஸ்லிம்களின் இரண்டு பெரும் கூட்டத்தரிடையே இவரின் மூலமாக அல்லாஹ் சமாதானம் செய்து வைக்க விரும்புகிறான்'' என்று கூறிக் கொண்டிருந்ததை பார்த்தேன்'' என்று அபூ பக்ரா(ரலி) கூறியதை கேட்டேன்.

பகுதி 10

(தகராறு செய்து கொள்ளும் இருவரை) சமாதானம் செய்து கொள்ளும்படி ஆட்சித் தலைவர் குறிப்பால் உணர்த்தலாமா?

2705. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (தம் வீட்டின்) வாசலருகே (இருவர்) சச்சரவிட்டுக் கொள்ளும் சத்தத்தைக் கேட்டார்கள். சச்சரவிட்டுக் கொண்டிருந்தவர்களின் குரல்கள் உயர்ந்தன. ஒருவர் மற்றவரிடம் ஏதோ ஒரு (கடன்) விஷயத்தில் சற்றுக் குறைத்து வாங்கிச் செல்லும்படியும், மென்மையாக நடந்து கொள்ளும்படியும் கேட்டுக் கொண்டிருந்தார். அதற்கு மற்றவர், 'அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அவ்வாறு செய்ய மாட்டேன்'' என்று கூறிக் கொண்டிருந்தார். அவர்களிடம் இறைத்தூதர்(ஸல்) புறப்பட்டு வந்து, 'நன்மை(யான செயலைச்) செய்ய மாட்டேன் என்று அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுக் கூறியவர் எங்கே?' என்று கேட்டார்கள். அந்த மனிதர், 'நானே இறைத்தூதர் அவர்களே! (நான் என் சத்தியத்தைத் திரும்பப் பெற்றக் கொள்கிறேன்;) அவர் விரும்பியது எதுவானாலும் (அது) அவருக்குக் கிடைக்கும்'' என்று கூறினார்.

2706. கஅப் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

எனக்கு அப்துல்லாஹ் இப்னு அபீ ஹத்ரத் அல் அஸ்லமீ(ரலி) சிறிது பணம் தர வேண்டியிருந்தது. எனவே, அவரை நான் சந்தித்து (கடனை அடைக்கச் சொல்லி) நச்சரித்தேன். (எங்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு) எங்கள் குரல்கள் உயர்ந்தன. நபி(ஸல்) அவர்கள் எங்களைக் கடந்து சென்றார்கள். அப்போது, 'கஅபே!'' என்று கூறி 'பாதி' ('பாதி கடனைத் தள்ளுபடி செய்து விடு') என்பது போல் தம் கரத்தால் சைகை செய்தார்கள். அவ்வாறே பாதியைப் பெற்றுக் கொண்டு, பாதியைத் தள்ளுபடி செய்து விட்டேன்.

பகுதி 11

மக்களுக்கிடையே சமாதானம் செய்து வைத்து அவர்களிடையே நீதி செலுத்துவதின் சிறப்பு.

2707. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

மனிதர்கள், தம் ஒவ்வொரு மூட்டு எலும்புக்காகவும் தர்மம் செய்வது கடமையாகும். சூரியன் உதிக்கிற ஒவ்வொரு நாளிலும் மக்களிடையே நீதி செலுத்துவதும் ஒரு தர்மமே.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பகுதி 12

சமாதானமாகப் போகுமாறு ஆட்சித் தலைவர் குறிப்பால் உணர்த்தியும் கூட அதை (ஒரு பிரஜை) ஏற்க மறுத்தால், தெளிவான ஆணையை அவர் பிறப்பிப்பார்.

2708. ஸுபைர்(ரலி) அறிவித்தார்.

எனக்கு பத்ருப் போரில் பங்கெடுத்த அன்சாரி ஒருவருடன் (மதீனாவின்) 'ஹர்ரா' எனும் (கருங்கல் பூமியிலுள்ள) ஒரு கால்வாயின் விஷயத்தில் தகராறு ஏற்பட்டது. நாங்கள் இருவரும் அந்தக் கால்வாய் மூலமாகத் தான் எங்கள் தோட்டங்களுக்கு நீர்பாய்ச்சி வந்தோம். நபியவர்களிடம் வழக்கில் தீர்ப்புக் கேட்டு சென்றபோது நபி(ஸல்) அவர்கள் என்னிடம், 'ஸுபைரே! (முதலில்) நீங்கள் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டு, பிறகு உங்கள் அண்டையிலிருப்பவருக்கு அதை அனுப்பி விடுங்கள்'' என்று கூறினார்கள். இதைக் கேட்ட அந்த அன்சாரி கோபமடைந்து, 'இறைத்தூதர் அவர்களே! உங்கள் அத்தையின் மகன் என்பதாலா (இப்படித் தீர்ப்புக் கூறினீர்கள்?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்களின் முகம் (கோபத்தால் சிவந்து) நிறம் மாறியது. பிறகு வரப்புகளைச் சென்றடையும் வரை தடுத்து நிறுத்திக் கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள். இவ்வாறு ஸுபைர்(ரலி) அவர்களுக்கு, அன்னாருடைய முழு உரிமையையும் இறைத்தூதர் வழங்கினார்கள்.

''இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அதற்கு முன் ஸுபைர்(ரலி) அவர்களுக்கும் அந்த அன்சாரிக்கும் தாராளமாகப் பயன் தரும் விதத்தில் ஸுபைர்(ரலி) அவர்களிடம் யோசனை தெரிவித்தார்கள். ஆனால், அந்த அன்சாரி அல்லாஹ்வின் தூதருக்குக் கோபமூட்டியபோது ஸுபைர்(ரலி) அவர்களுக்கு அவர்களின் உரிமையை தெளிவான ஆணையின் வாயிலாக முழுமையாக வழங்கிவிட்டார்கள்'' என்று அறிவிப்பாளர் இமாம் ஸுஹ்ரீ(ரஹ்) கூறினார்.

''(நபியே!) உங்களுடைய இறைவன் மீது ஆணையாக! அவர்கள் தமக்குள் ஏற்படும் சச்சரவுகளில் உங்களை நீதிபதியாக ஏற்று, நீங்கள் வழங்கும் தீர்ப்பை மனத்தில் எந்த அதிருப்தியும் கொள்ளாமல் அங்கீகரித்து, முற்றிலும் கட்டுப்பட்டு நடக்காத வரையில், அவர்கள் உண்மையான விசுவாசிகளாய் ஆக மாட்டார்கள்' என்னும் (திருக்குர்ஆன் 04:65) வசனம் இது தொடர்பாகவே இறங்கியதாக நான் நினைக்கிறேன்'' என்று ஸுபைர்(ரலி) கூறினார்.

பகுதி 13

கடன்காரர்களுக்கும் (கடனாளியின்) வாரிசுகளுக்கும் இடையே சமாதானம் செய்து வைப்பதும், தோராயமாகக் கொடுத்து கடனைச் சரி செய்வதும்.

''இரண்டு பங்காளிகளுக்கிடையே சச்சரவு வந்து, ஒருவர் இருப்பையும் மற்றொருவர் வர வேண்டிய கடனையும் எடுத்துக் கொண்டால் தவறில்லை; பிறகு இவரின் இருப்புக்கோ, அவரின் கடனுக்கோ ஆபத்து ஏற்படுமாயின் அடுத்தவரை அணுகக் கூடாது'' என்று இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்.

2709. ஜாபிர்(ரலி) அறிவித்தார்.

என் தந்தை தன் மீது கடன் (சுமை) இருந்த நிலையில் இறந்துவிட்டார். எனவே, நான் அவருக்குக் கடன் தந்தவர்களிடம் என் தந்தை மீதிருந்த கடனுக்கு பதிலாக பேரீச்சங் கனிகைளை எடுத்துக் கொள்ளும்படி சொன்னேன். அதற்கு (உடன்பட) அவர்கள் மறுத்துவிட்டார்கள். அப்படி எடுத்துக் கொள்வதால் (தம் உரிமை முழுமையாக நிறைவேறாது என்று அவர்கள் கருதினார்கள். எனவே, நான் நபி(ஸல்) அவர்களிடம் வந்து அதைக் கூறினேன். நபி(ஸல்) அவர்கள், 'நீ அதைப் பறித்துக் களத்தில் (காய) வைக்கும்போது அல்லாஹ்வின் தூதரிடம் (என்னிடம்) தெரிவி'' என்று கூறினார்கள். (பிறகு நான் அவ்வாறே தெரிவிக்க) நபி(ஸல்) அவர்கள் அபூ பக்ர்(ரலி) அவர்களுடனும் உமர்(ரலி) அவர்களுடனும் வருகை தந்தார்கள். அந்தப் பழத்தின் அருகே அமர்ந்து (இறைவனின் அருளால் அதில்) பெருக்கம் ஏற்படுவதற்காகப் பிரார்த்தனை செய்தார்கள். பிறகு, 'உன் (தந்தையின்) கடன்காரர்களை அழைத்து அவர்களுக்கு நிறைவாகக் கொடு'' என்று கூறினார்கள். என் தந்தை எவருக்கெல்லாம் கடனைத் திருப்பித் தரவேண்டியிருந்தோ அவர்களில் ஒருவரையும் விடாமல் கடனை அடைத்து விட்டேன். மேலும், பதின்மூன்று வஸக்கு பேரீச்சங் கனிகள் எஞ்சிவிட்டன. ஏழு வஸக்குகள் 'அஜ்வா' (என்னும் மதீனாவின் உயர் ரகப்) பேரீச்சம் பழமும், (அஜ்வா மற்றும் அது போன்றவையல்லாத) மற்றவகைப் பேரீச்சம் பழங்களும், அல்லது ஏழு வஸக்குகள் லவ்னும் ஆறு வஸக்குகள் அஜ்வாவும் மீதமாகி விட்டன. (அன்று) நான் அல்லாஹ்வின் தூதருடன் மக்ரிப் தொழுகையைத் தொழுதேன்; இந்த விஷயத்தை அவர்களிடம் கூறினேன். அதற்கு அவர்கள் சிரித்துவிட்டு, 'அபூ பக்ரிடமும் உமரிடமும் சென்று தெரிவி'' என்று கூறினார்கள். (நானும் அவ்வாறே தெரிவித்தேன்.) அதற்கு அவர்கள் இருவரும், 'இறைத்தூதர், பெருக்கத்திற்காகப் பிரார்த்தனை செய்த நேரத்திலேயே இதுதான் நடக்கும் என்று நாங்கள் அறிந்து கொண்டோம்'' என்று கூறினார்கள். ஜாபிர்(ரலி) அவர்களிடமிருந்து வஹ்ப்(ரஹ்) வழியாக ஹிஷாம்(ரஹ்) அறிவிக்கும் அறிவிப்பில், 'அல்லாஹ்வின் தூதருடன் மக்ரிபு தொழுகையைத் தொழுதேன்'' என்பதற்கு பதில், 'அஸர் தொழுகையைத் தொழுதேன்'' என்று வந்துள்ளது. மேலும், அதில் அபூ பக்ர்(ரலி) அவர்களைக் குறிப்பிடவில்லை. 'நபி(ஸல்) அவர்கள் சிரித்தார்கள்' என்பதும் அதில் இல்லை. மேலும், 'என் தந்தை, தன் மீது முப்பது வஸக்குகள் கடனை வைத்துவிட்டுச் சென்றிருந்தார்' என்றும் வந்துள்ளது. ஜாபிர்(ரலி) அவர்களிடமிருந்து வஹ்ப்(ரஹ்) வழியாக இப்னு இஸ்ஹாக்(ரஹ்) அறிவிக்கும் ஓர் அறிவிப்பில், 'நான் அல்லாஹ்வின் தூதருடன் லுஹர் தொகையைத் தொழுதேன்'' என்று வந்துள்ளது.

பகுதி 14

வரவேண்டிய கடனைக் கொண்டும் இருப்பைக் கொண்டும் சமாதானம் செய்து கொள்வது.

2710. கஅப் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

அல்லாஹ்வின் தூதருடைய காலத்தில் எனக்கு இப்னு அபீ ஹத்ரத்(ரலி) தர வேண்டியிருந்த ஒரு கடனை (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் வைத்துத் திருப்பிச் செலுத்தும்படி கேட்டேன். (எங்கள்) இருவரின் குரல்களும் நபி(ஸல்) அவர்கள் தம் வீட்டிலிருந்தபடியே அதைக் கேட்கும் அளவிற்கு உயர்ந்தன. எனவே, நபி(ஸல்) அவர்கள் எங்களிருவரையும் காணப் புறப்பட்டு வந்தார்கள். தம் அறையின் திரையை விலக்கி, 'கஅபே!'' என்றழைத்தார்கள். நான், 'இதோ வந்துவிட்டேன், இறைத்தூதர் அவர்களே!'' என்று பதிலளித்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'பாதிக் கடனைத் தள்ளுபடி செய்துவிடு' என்று தம் கரத்தால் சைகை காட்டினார்கள். 'அவ்வாறே செய்து விட்டேன், இறைத்தூதர் அவர்களே!'' என்று நான் கூற, இப்னு அபீ ஹத்ரத்(ரலி) அவர்களைப் பார்த்து, 'நீங்கள் எழுந்து சென்று அவரின் கடனை அடையுங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
Previous Post Next Post