ஸஹீஹுல் புகாரி
அத்தியாயம் 51
அத்தியாயம் 51
அன்பளிப்பும் அதன் சிறப்பும்
பகுதி 1
2566. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஸ்லிம் பெண்களே ஓர் அண்டை வீட்டுக்காரி, மற்றோர் அண்டை வீட்டுக்காரிக்கு ஓர் ஆட்டின் குளம்பை (அன்பளிப்பாகக்) கொடுத்தாலும் அதை(க் கொடுப்பதையும் பெறுவதையும் அவர்கள்) இழிவாகக் கருத வேண்டாம். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
2567. உர்வா பின் ஸுபைர் (ரலி)அவர்கள் கூறினார்கள்; என்னிடம் ஆயிஷா (ரலி) அவர்கள், என் சகோதரி மகனே!- நாங்கள் பிறை பார்ப்போம். மீண்டும் பிறை பார்ப்போம். பிறகும் பிறை பார்ப்போம். இப்படி இரண்டு மாதங்களில் மூன்று முறை பிறை பார்ப்போம்-. அப்படியிருந்தும், அல்லாஹ்வின் தூதருடைய வீட்டில் (அடுப்பில்) நெருப்பு மூட்டப்படாது என்று கூறினார்கள். நான், என் சிற்றன்னையே! நீங்கள் எதைக் கொண்டு தான் வாழ்ககை நடத்தினீர்கள்? என்று கேட்டேன். அதற்கு அவர், இரு கருப்பான பொருட்கள் (ஒன்று) பேரீச்சம் பழம் (மற்றொன்று) தண்ணீர் தவிர அல்லாஹ்வின் தூதருக்கு அன்சாரிகளான சில அண்டை வீட்டார் இருந்தார்கள். அவர்களிடம் சில அன்பளிப்பு ஒட்டகங்கள் (மனீஹாக்கள்) இருந்தன. (அவற்றைக் குறிப்பிட்ட காலத்திற்கு இலவசமாக பயனபடுத்திக் கொள்வதற்காக அவர்கள் இரவல் வாங்கியிருந்தனர்.) அவர்கள் (அவற்றிலிருந்து கிடைக்கின்ற) தமக்குரிய பாலை நபி (ஸல்) அவர்களுக்குக் கொடுப்பார்கள். நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு அருந்தக் கொடுப்பார்கள். என்று கூறினார்கள்.
பகுதி 2
சிறிய அன்பளிப்பு.
2568. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; ஓர் ஆட்டின் விலாவை அல்லது காலை அன்பளிப்பாகப் பெற்றுக் கொள்ளும்படி நான் அழைக்கப்பட்டாலும் நான் ஏற்றுக் கொள்வேன். எனக்கு ஓர் ஆட்டின் விலா அல்லது கால் அன்பளிப்பாக தரப்பட்டாலும் சரி, நான் அதைப் பெற்றுக் கொள்வேன். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்.
பகுதி 3
பகுதி 3
நண்பர்களிடம் அன்பளிப்பு கேட்பது. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) கூறியதாவது: உங்களுடன் எனக்கு ஒரு பங்கை ஒதுக்குங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.4
2569. அபூ சயித் அல்குத்ரீ(ரலி) கூறியதாவது: தச்சு வேலை தெரிந்த அடிமை ஒருவனை வைத்திருந்த முஹாஜிர் பெண் ஒருவரிடம் நபி (ஸல்) அவர்கள் ஆளனுப்பி மிம்பருக்கு (மேடைக்கு)த் தேவையான மரச்சட்டங்களைச் செய்து தரும்படி உன் அடிமைக்குக் கட்டளையிடு என்று கூறினார்கள். அவ்வாறே, அப்பெண்மணி தன் அடிமைக்குக் கட்டளையிட, அவ்வடிமை (காட்டிற்குச்) சென்று, (இறகு போன்ற இலைகளை உடைய) தர்ஃபா எனும் ஒரு வகை மரத்தை வெட்டியெடுத்து வந்து நபி (ஸல்) அவர்களுக்கு மிம்பர் ஒன்றைச் செய்தார். அதைச் செய்து முடித்தபின் அப்பெண்மணி நபி (ஸல்) அவர்களுக்கு மிம்பரை அவர் செய்து முடித்துவிட்டதாகத் தகவல் சொல்லி அனுப்பினார். நபி (ஸல்) அவர்கள் அதைக் கொடுத்தனுப்புமாறு சொன்னார்கள். பின்னர் அதைக் கொண்டு வந்தனர். நபி (ஸல்) அவர்கள் அதைச் சுமந்து சென்று இப்போது நீங்கள் பார்க்கும் இடத்தில் வைத்தார்கள்.
2570. அபூ கத்தாத(ரலி) கூறியதாவது: நான் (ஹுதைபிய்யா ஆண்டில்) ஒரு நாள் மக்கா (செல்லும்) சாலையில் இருந்த ஒரு வீட்டில் நபித்தோழர்கள் சிலருடன் அமர்ந்திருந்தேன். அல்லாஹ்வின் தூதர் எங்கள் முன்னால் தங்கியிருந்தார்கள். அனைவரும் இஹ்ராம் அணிந்திருந்தார்கள். நான் (மட்டும்) இஹ்ராம் அணியாமல் இருந்தேன். அப்போது அவர்கள் ஒரு காட்டுக் கழுதையைப் பார்த்தார்கள். நானோ, என் செருப்பைத் தைப்பதில் ஈடுபட்டிருந்தேன். ஆகவே, அ(வர்கள் பார்த்த)தை எனக்கு அறிவிக்கவில்லை. எனினும், நான் அதைப் பார்த்தால் நன்றாயிருக்கும் என்று அவர்கள் விரும்பினார்கள். (தற்செயலாக) நான் அதைத் திரும்பிப் பார்த்தேன். உடனே, நான் எழுந்து குதிரையின் பக்கம் சென்று, அதற்குச் சேணம் பூட்டி, பிறகு அதில் ஏறினேன். சாட்டையையும் ஈட்டியையும் (எடுத்துக் கொள்ள) நான் மறந்து விட்டேன். ஆகவே, அவர்களிடம், எனக்கு சாட்டையையும் ஈட்டியையும் எடுத்துக் கொடுங்கள் என்று கேட்டேன். அதற்கு அவர்கள், (இஹ்ராம் அணிந்திருந்ததால்), இல்லை அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் உங்களுக்கு இந்த விஷயத்தில் சிறிதும் உதவ மாட்டோம் என்று கூறினர். எனவே, நான் கோபமுற்றேன். உடனே (குதிரையிலிருந்து) இறங்கி அவ்விரண்டையும் எடுத்துக் கொண்டேன். (குதிரையில்) மீண்டும் ஏறி கழுதையைத் தாக்கி காயப்படுத்தினேன் பிறகு, அது இறந்துவிட்ட நிலையில் அதைக் கொண்டு வந்தேன். அவர்கள் (என் தோழர்கள்) அதன் மீது பாய்ந்து உண்ணலானார்கள். பிறகு, தாங்கள் இஹ்ராம் அணிந்திருந்த நிலையில் அதை உண்ட(து கூடுமா கூடாதா என்னும் விஷயத்)தில் சந்தேகம் கொண்டார்கள். ஆகவே, நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்றோம். நான் (கழுதையின்) ஒரு புஜத்தை என்னுடன் மறைத்து (எடுத்து)க் கொண்டேன். நாங்கள் அல்லாஹ்வின் தூதரை அடைந்ததும், அவர்களிடம் அது (காட்டுக் கழுதையை நான் வேட்டையாட, இஹ்ராம் அணிந்திருந்தவர்கள் அதை உண்டது) பற்றிக் கேட்டோம். அவர்கள், அதிலிருந்து (இறைச்சி) ஏதும் உங்களுடன் இருக்கின்றதா? என்று கேட்டார்கள். நான், ஆம் என்று அவர்களுக்கு (அதன்) புஜத்தை (முன்னங் காலை)க் கொடுத்தேன். நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் அணிந்தவர்களாக இருக்கும் நிலையில் அதை உண்டு முடித்தார்கள்.
பகுதி 4
நீர் புகட்டும்படி கேட்பது. சஹ்ல் (ரலி) அவர்கள் கூறியதாவது: என்னிடம் நபி (ஸல்) அவர்கள், எனக்குத் தண்ணீர் புகட்டு என்று கூறினார்கள்.
2571. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுடைய இதே வீட்டில் எங்களிடம் வந்து தண்ணீர் புகட்டும்படி கேட்டார்கள். ஆகவே, நாங்கள் எங்களுடைய ஓர் ஆட்டின் பாலை அவர்களுக்காக கறந்தோம். பிறகு, நான் எங்களுடைய இந்தக் கிணற்றின் தண்ணீரை அதில் கலந்து அதை அவர்களுக்குக் கொடுத்தேன். அப்போது நபி (ஸல்) அவர்களின் இடப்பக்கத்தில் அபூபக்ர் (ரலி) அவர்களும் எதிரில் உமர் (ரலி) அவர்களும் வலப்பக்கத்தில் ஒரு கிராம வாசியும் இருந்தனர். நபி (ஸல்) அவர்கள் பாலை குடித்து முடித்தவுடன் உமர் (ரலி) அவர்கள் இதோ அபூபக்ர் என்று கூறினார்கள். எனினும், நபி (ஸல்) அவர்கள் தமது (பாலின்) மீதத்தை கிராம வாசிக்குக் கொடுத்தார்கள். பிறகு வலப்பக்கத்தில் இருப்பவர்களே முன்னுரிமை உடையவர்கள். ஆகவே, வலப்பக்கத்தில் இருப்பவர்களுக்கு முதலிடம் கொடுங்கள் என்று கூறினார்கள். இறுதியில் அனஸ் (ரலி) அவர்கள், அது நபிவழியாகும். அது நபிவழியாகும். என்று மும்முறை கூறினார்கள் என்று இதை அவர்களிடம் இருந்து கேட்டு அறிவிக்கும் அப்துல்லாஹ் பின் அப்திர் ரஹ்மான் கூறுகிறார்கள்.
பகுதி 5
வேட்டைப் பிராணியை அன்பளிப்புச் செய்தால் ஏற்றுக் கொள்ளுதல். நபி (ஸல்) அவர்கள், அபூ கத்தாதா (ரலி) அவர்களிடமிருந்து வேட்டைப் பிராணியின் புஜத்தை (அன்பளிப்பாக) ஏற்றுக் கொண்டார்கள்.
2572. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: மர்ருழ் ழஹ்ரான் என்னுமிடத்தில் நாங்கள் ஒரு முயலை (அதன் பொந்திலிருந்து) கிளப்பி விரட்டினோம். மக்கள் அதைப் பிடிக்க முயற்சி செய்து களைத்துவிட்டார்கள். நான் அதைப் பிடித்துவிட்டேன். அதை எடுத்துக் கொண்டு அபூதல்ஹா (ரலி) அவர்களிடத்தில் வந்தேன். அவர்கள் அதை அறுத்து அதன் பிட்டத்தை அல்லது - தொடைகளை அல்லாஹ்வின் தூதரிடம் அனுப்பினார்கள். அதை நபி (ஸல்) அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். அதிலிருந்து நபி (ஸல்) அவர்கள் உண்டார்களா? என்று ஓர் அறிவிப்பாளர் கேட்க, மற்றோர் அறிவிப்பாளர், (ஆம்,) நபி (ஸல்) அவர்கள் அதிலிருந்து உண்டார்கள் என்று கூறிவிட்டு, அதன் பிறகு, அதை நபி (ஸல்) அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்று கூறினார்.
பகுதி 6
அன்பளிப்பை ஏற்றுக் கொள்ளுதல்.
2573. ஸஅப் பின் ஜஸ்ஸாமா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஒரு காட்டுக் கழுதையை பரிசாக அளித்தேன். அப்போது அவர்கள் அப்வா என்னுமிடத்தில் - அல்லது வத்தான்- என்னும் இடத்தில் - இருந்தார்கள். அதை நபி (ஸல்) அவர்கள் என்னிடமே திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். என் முகத்தில் (தோன்றிய) கவலைக் குறியைக் கண்டபோது, நாம் இஹ்ராம் அணிந்திருப்பதனால் தான் உன்னிடம் அதைத் திருப்பித் தந்தோம் என்று கூறினார்கள்.
பகுதி 7
பகுதி 7
அன்பளிப்பை (ஹதியாவை) ஏற்றுக் கொள்ளுதல்.
2574. ஆயிஷா(ரலி) அவர்கள் கூறியதாவது: மக்கள், நபி (ஸல்) அவர்கள் என் வீட்டில் தங்கும் நாளையே, தமது அன்பளிப்புகளை அவர்களுக்கு வழங்குவதற்காகத் தேர்ந்தெடுத்து (வழங்கி) வந்தார்கள். அதைக் கொண்டு நபி (ஸல்) அவர்களின் திருப்தியைப் பெற விரும்பியே அவர்கள் இப்படிச் செய்து வந்தார்கள்.
2575. இப்னு அப்பாஸ்(ரலி)அவர்கள் கூறியதாவது: என் தாயாரின் சகோதரியான உம்மு ஹுஃபைத் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களுக்கு (உலர்ந்த) பாலாடைக் கட்டியையும் வெண்ணையையும் உடும்புகளையும் அன்பளிப்பாகத் தந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் பாலாடைக் கட்டியிலிருந்தும். வெண்ணையிலிருந்தும் (சிறிது எடுத்து) உண்டார்கள். ஆனால், அவர்களுக்கு அருவருப்பாகத் தோன்றியதால் உடும்புகளை உண்ணாமல் விட்டு விட்டார்கள். (எனினும்) அது (உடும்பு) அல்லாஹ்வின் தூதருடைய உணவு விரிப்பில் வைத்து உண்ணப்பட்டது. அது ஹராமாக (தடை செய்யப்பட்டதாக) இருந்திருந்தால் அல்லாஹ்வின் தூதருடைய உணவு விரிப்பில் வைத்து உண்ணப்பட்டிருக்காது.
2576. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் உணவுப் பொருள் கொண்டு வரும் போது இது அன்பளிப்பா? தருமமா? என்று அவர்கள் கேட்பார்கள். தருமம் தான் என்று பதிலளிக்கப்பட்டால் தம் தோழர்களிடம், நீங்கள் உண்ணுங்கள் என்று கூறிவிடுவார். தாம் உண்ண மாட்டார்கள். அன்பளிப்பு என்று கூறப்பட்டால், தம் கையை தட்டிக் கொண்டு (விரைந்து) தோழர்களுடன் சேர்ந்து உண்பார்.
2577. அனஸ்(ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் ஓர் இறைச்சி கொண்டு வரப்பட்டது. இது பரீரா (ரலி) அவர்களுக்கு தர்மமாகக் கிடைத்தது என்று கூறப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், இது அவருக்கு தருமமாகும். நமக்கு அன்பளிப்பாகும் என்று கூறினார்கள்.
2578. ஆயிஷா(ரலி) அவர்கள் கூறியதாவது: நான் பரீராவை (விலைக்கு) வாங்கிட விரும்பினேன். அவர்கள் (அவருடைய எஜமானர்கள்) அவருடைய வாரிசுரிமை தமக்கே சேர வேண்டும். (என்று ஒப்புக் கொண்டால் மட்டுமே அவரை விற்போம்) என்று நிபந்தனையிட்டார்கள். நபி (ஸல்) அவர்களிடம் இது குறித்துச் சொல்லப்பட்டது. அப்போது அவர்கள், அவரை நீ விலைக்கு வாங்கி விடுதலை செய்துவிடு. ஏனெனில், (ஓர் அடிமையை) விடுதலை செய்தவருக்கே (அவ்வடிமையின்) வாரிசுரிமை உரியதாகும் என்று கூறினார்கள். பரீரா (ரலி) அவர்களுக்கு இறைச்சி அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்களிடம், இது பரீரா அவர்களுக்கு தருமமாக கிடைத்தது என்று கூறப்பட்டது. அதற்கு அவர்கள், இது அவருக்கு தருமமாகும். நமக்கு அன்பளிப்பாகும். என்று கூறினார்கள். மேலும், பரீரா (ரலி) அவர்கள் (தம் கணவரை பிரிந்து விடுவது அல்லது தொடர்ந்து அவருடன் வாழ்வது என்னும் இரு விஷயங்களில்) தாம் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள உரிமை வழங்கப்பட்டார்கள். அறிவிப்பாளர் அப்துர் ரஹ்மான் பின் காசிம் (ரஹ்) அவர்கள் பரீரா (ரலி) அவர்களின் கணவர் சுதந்திரமானவரா? அடிமையா? என்று கேட்டார்கள். நான் அப்துர் ரஹ்மானிடம் பரீரா (ரலி) அவர்களின் கணவரைப் பற்றிக் கேட்டேன். அவர் சுதந்திரமானவரா, அடிமையா என்று எனக்குத் தெரியாது என்று கூறினார் என்பதாக மற்றோர் அறிவிப்பாளர் ஷுஅபா (ரஹ்) கூறுகின்றார்கள்.
2579. உம்மு அதிய்யாரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், ஆயிஷா (ரலி) அவர்களின் வீட்டிற்கு வந்து, உங்களிடம் உண்பதற்கு ஏதும் இருக்கிறதா? என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், நீங்கள் உம்மு அதிய்யாவுக்கு தருமமாக அனுப்பிய ஆட்டின் ஒரு பகுதியை அவர் (நமக்கு) அனுப்பி வைத்துள்ளார். அதைத் தவிர வேறொன்றுமில்லை என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அது தனது இடத்தை அடைந்து விட்டது என்று கூறினார்கள்.
பகுதி 8
ஒருவர் தன் தோழருக்கு அன்பளிப்பு வழங்குவதும், அத் தோழர் தன் மனைவிமார்களில் குறிப்பிட்ட ஒருவருடைய வீட்டில் இருக்கும் நேரத்தைத் தேர்ந்தெடுத்து அன்பளிப்பு வழங்குவதும், வேறு மனைவிமார்களின் வீட்டில் இருக்கும் போது அன்பளிப்பு வழங்காமலிருப்பதும்.
2580. ஆயிஷா(ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் என் (வீட்டில் தங்குகின்ற) நாளையே அவர்களுக்குத் தங்கள் அன்பளிப்புகளை வழங்குவதற்காக மக்கள் தேர்ந்தெடுத்து வந்தார்கள். உம்மு ஸலாமா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்„ என் தோழிகள் (நபி (ஸல்) அவர்களின் பிற மனைவிமார்கள் எனது வீட்டில்) ஒன்று கூடி(ப் பேசி)னர். (அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க) நான் நபி (ஸல்) அவர்களிடம் (அவர்களின் கோரிக்கையைச்)- சொன்னேன். அவர்கள் அதை (கண்டு கொள்ளாமல்) புறக்கணித்து விட்டார்கள்.
2581. ஆயிஷா(ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதருடைய மனைவிமார்களான நாங்கள் இரு குழுக்களாக இருந்தோம். ஒரு குழுவில் நானும் ஹஃப்ஸா, ஸஃபிய்யா, மற்றும் சவ்தா ஆகியோரும் இருந்தோம். மற்றொரு குழுவில் உம்மு சலாமா அவர்களும் அல்லாஹ்வின் தூதருடைய மற்ற மனைவிமார்களும் இருந்தனர். அல்லாஹ்வின் தூதர் என்னை எவ்வளவு (ஆழமாக) நேசித்து வந்தார்கள் என்பதை முஸ்லிம்கள் அறிந்திருந்தார்கள். ஆகவே, அன்பளிப்பு செய்பவர் தம்மிடம் பரிசுப் பொருள் ஏதும் இருந்தால், அதை அல்லாஹ்வின் தூதருக்கு அன்பளிப்புச் செய்ய அவர் விரும்பினால், அதை தள்ளிப் போட்டு, என் வீட்டில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தங்கும் நாள்) வரும்போது என் வீட்டிற்கு அன்பளிப்பு கொடுத்தனுப்புவார். ஆகவே, (இது தொடர்பாக) உம்மு சலாமா குழுவினர் (தங்களிடையே கலந்து) பேசினர். பின்னர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிடம் பேசி, எவர் எனக்கு ஓர் அன்பளிப்பைத் தர விரும்புகிறாரோ அவர், நான் என் மனைவிமார்களின் வீடுகளில் எங்கிருந்தாலும் அங்கு அந்த அன்பளிப்பை அனுப்பி வைக்கட்டும் என்று கூறும்படி (அல்லாஹ்வின் தூதரை) கேட்டுக் கொள் என்று உம்மு ஸலாமா அவர்களிடம் அவர்களின் குழுவினர் கூறினர். அவ்வாறே உம்மு சலாமா அவர்களும் நபி (ஸல்) அவர்களிடம் தம் குழுவினர் கூறியதை எடுத்துச் சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள் அவருக்கு பதில் ஏதும் கூறவில்லை. பிறகு, உம்மு சலமா அவர்களின் குழுவிலிருந்த மற்ற மனைவிமார்கள் உம்மு சலமா அவர்களிடம், (நமது கோரிக்கையை நபி (ஸல்) அவர்கள் ஏற்றுக் கொண்டார்களா? என்று) கேட்டனர். உம்மு சலமா அவர்கள், எனக்கு நபி (ஸல்) அவர்கள் பதில் எதுவும் கூறவில்லை என்று சொன்னார்கள். அவர்கள், மீண்டும் நபி (ஸல்) அவர்களிடம் (இது பற்றிப்) பேசு என்று கூறினர். உம்மு சலமா அவர்களும் அடுத்து தமது முறை வந்தபோது நபி (ஸல்) அவர்களிடம் அது குறித்துப் பேசினார்கள். அப்போதும் அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் பதில் எதுவும் கூறவில்லை. மீண்டும் உம்மு சலமா (ரலி) அவர்களின் குழுவினர், அவர்களிடம் (நபி (ஸல்) அவர்கள் என்ன பதில் சொன்னர்கள் என்று) கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் எனக்கு பதில் எதுவும் கூறவில்லை என்று உம்மு சலமா அவர்கள் கூறினார்கள். அதற்கு அவர்கள், அவர்கள் உனக்கு பதில் தரும்வரை நீ அவர்களிடம் (இது குறித்துப்) பேசிக் கொண்டேயிரு என்று கூறினார்கள். மீண்டும் உம்மு சலமா (அவர்களின் முறை வந்தபோது) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள். உம்மு சலமா அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், மீண்டும் (இது குறித்துப்) பேசினார்கள். அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள், ஆயிஷாவின் விஷயத்தில் எனக்குத் துன்பம் (மன வேதனை) தராதே. ஏனெனில், ஆயிஷாவின் படுக்கையில் (நான் இருக்கும் போதே தவிர) வேறெந்த மனைவியின் படுக்கையிலும் வஹீ (வேத வெளிப்பாடு) எனக்கு வருவதில்லை என்று கூறினார்கள். உம்மு சலமா அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்குத் துன்பம் தந்ததற்காக அல்லாஹ்விடம் நான் பாவ மன்னிப்புக் கோருகிறேன் என்று கூறினார்கள். பிறகு, அந்த மனைவியர் அல்லாஹ்வின் தூதருடைய மகள் ஃபாத்திமா (ரலி) அவர்களை அணுகி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், உங்கள் மனைவிமார்கள் அபூபக்ர் (ரலி) அவர்களுடைய மக(ளான ஆயிஷா(ரலி) அவர்க)ளின் விஷயத்தில் (தாங்கள் நடந்து கொள்வது போன்றே பிற மனைவியரிடமும்) நீதியுடன் நடந்து கொள்ளும்படி அல்லாஹ்வின் பெயரால் கேட்கிறார்கள் என்று கூறுமாறு (சொல்லி) அனுப்பினார்கள். (அவ்வாறே) ஃபாத்திமாவும் நபி (ஸல்) அவர்களிடம் பேசினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், என் அன்பு மகளே! நான் நேசிப்பதை நீயும் நேசிக்கவில்லையா? என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ஆம் (தாங்கள் நேசிப்பதை நானும் நேசிக்கிறேன்) என்று கூறிவிட்டு திரும்பிச் சென்று அவர்களிடம் (தன் சின்னம்மாக்களிடம்) செய்தியைத் தெரிவித்து விட்டார்கள். அதற்கு அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் மறுபடியும் போ(ய்ச் சொல்) என்று கூறினார்கள். மீண்டும் (இது தொடர்பாக நபி (ஸல்) அவர்களிடம்) செல்ல ஃபாத்திமா அவர்கள் மறுத்து விட்டார்கள். ஆகவே, அவர்கள் (தம் சார்பாக) ஸைனப் பின்த்து ஜஹ்ஷ் அவர்களை அனுப்பி வைத்தார்கள். அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, (சற்று) கடுமையாகப் பேசி, உங்கள் மனைவிமார்கள் அபூ குஹாஃபாவின் மகனுடைய (அபூபக்ருடைய) மகளின் (ஆயிஷா(ரலி)வின்) விஷயத்தில் (நடந்து கொள்வது போன்றே பிற மனைவிமார்களிடமும்) நீதியுடன் நடந்து கொள்ளும்படி அல்லாஹ்வின் பெயரால் உங்களிடம் கேட்கின்றார்கள் என்று கூறினார்கள். நான் (ஆயிஷா) அமர்ந்து கொண்டிருக்க, அவரது குரல் உயர்ந்தது. அவர் என்னைக குறை கூறித் திட்டினார். எந்த அளவுக்கென்றால், அல்லாஹ்வின் தூதர் நான் பதில் பேசுவேனா என்று எதிர்பார்ப்பது போல் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். உடனே, நான் ஸைனபுக்கு பதில் சொல்லி, இறுதியில் அவரை வாயடைக்கச் செய்து விட்டேன். நபி (ஸல்) அவர்கள் என்னைப் பார்த்து, இவள் (உண்மையிலேயே) அபூபக்கருடைய மகள் தான் என்று கூறினார்கள். மற்றோர் அறிவிப்பில், நான் நபி (ஸல்) அவர்களிடம் இருந்தபோது, ஃபாத்திமா அனுமதி கேட்டு உள்ளே வந்தார் என்று ஆயிஷா(ரலி) கூறியுள்ளார்கள்.
பகுதி 9
நிராகரிக்கக் கூடாத அன்பளிப்பு.
2582. அஸ்ரா பின் ஸாபித் அல் அன்சாரி (ரஹ்) கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், தம்மிடம் ஹவாஸின் குலத்தாரின் தூதுக் குழு ஒன்று வந்தபோது, மக்களிடையே எழுந்து நின்று அல்லாஹ்வை அவனுக்குத் தகுதியான பண்புகளை எடுத்துரைத்துப் புகழ்ந்து விட்டு பிறகு, (மக்களே!) உங்கள் சகோதரர்கள் (மனம் திருந்தி) பாவ மன்னிப்புக் கோரி நம்மிடம் வந்துள்ளனர். அவர்களுடைய போர்க் கைதிகளை அவர்களிடமே திருப்பித் தந்து விடுவதையே நான் உசிதமாகக் கருதுகிறேன். ஆகவே, உங்களில் எவர் மனப்பூர்வமாகத் திருப்பித் தந்துவிட விரும்புகிறாரோ அவர் அவ்வாறே திருப்பித் தந்துவிடட்டும். எவர், அல்லாஹ், நமக்கு முதலாவதாக (கிடைக்கும் வெற்றியில்) அளிக்கின்ற பொருள்களிலிருந்து அவருக்கு நாம் கொடுக்கின்றவரை தனது பங்கைத் தானே வைத்துக் கொள்ள விரும்புகிறாரோ அவர் அவ்வாறே செய்யட்டும் என்று கூறினார்கள். மக்கள் நாங்கள் உங்களுக்காக மனப்பூர்வமாக (போர்க் கைதிகளைத் திருப்பித் தந்து விட) சம்மதிக்கின்றோம் என்று கூறினார்கள்.
பகுதி 10
தற்போது கைவசம் இல்லாத அன்பளிப்பை (வழங்குவதாக வாக் களிப்பது) செல்லும் என்று கருதுவது.
2583, 2584. மிஸ்வர் பின் மக்ரமா(ரலி)அவர்களும் மர்வான்(ரலி) அவர்களும் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், தம்மிடம் ஹவாஸின் குலத்தாரின் தூதுக் குழு ஒன்று வந்தபோது, மக்களிடையே எழுந்து நின்று அல்லாஹ்வை அவனுக்குத் தகுதியான பண்புகளை எடுத்துரைத்துப் புகழ்ந்து விட்டு பிறகு, (மக்களே!) உங்கள் சகோதரர்கள் (மனம் திருந்தி) பாவ மன்னிப்புக் கோரி நம்மிடம் வந்துள்ளனர். அவர்களுடைய போர்க் கைதிகளை அவர்களிடமே திருப்பித் தந்து விடுவதையே நான் உசிதமாகக் கருதுகிறேன். ஆகவே, உங்களில் எவர் மனப்பூர்வமாகத் திருப்பித் தந்துவிட விரும்புகிறாரோ அவர் அவ்வாறே திருப்பித் தந்துவிடட்டும். எவர், அல்லாஹ், நமக்கு முதலாவதாக (கிடைக்கும் வெற்றியில்) அளிக்கின்ற பொருள்களிலிருந்து அவருக்கு நாம் கொடுக்கின்றவரை தனது பங்கைத் தானே வைத்துக் கொள்ள விரும்புகிறாரோ அவர் அவ்வாறே செய்யட்டும் என்று கூறினார்கள். மக்கள் நாங்கள் உங்களுக்காக மனப்பூர்வமாக (போர்க் கைதிகளைத் திருப்பித் தந்து விட) சம்மதிக்கின்றாறோம் என்று கூறினார்கள்.
பகுதி 11
அன்பளிப்புக்கு ஈடு செய்வது
2585. ஆயிஷா(ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் அன்பளிப்பை ஏற்று அதற்கு (பதிலாக எதையாவது கொடுத்து) ஈடு செய்து வந்தார்கள்.
பகுதி 12
பிள்ளைக்கு அன்பளிப்புச் செய்வது. ஒருவர் தன் பிள்ளைகளில் சிலருக்கு மட்டும் அன்பளிப்புச் செய்தால் அவர்களிடையே நீதி செலுத்தி மற்ற பிள்ளைகளுக்கும் அதே போன்று கொடுக்கும் வரை அது செல்லாது. அது வரை (யாரும்) அதற்கு சாட்சியாக இருக்கவும் கூடாது. நபி (ஸல்) அவர்கள், அன்பளிப்புச் செய்யும் விஷயத்தில் உங்கள் பிள்ளைகளிடையே நீதியாக நடந்து கொள்ளுங்கள் என்று கூறினார்கள். தந்தை, தான் செய்த அன்பளிப்பைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாமா? மேலும் தந்தை, தன் பிள்ளையின் செல்வத்திலிருந்து வரம்பு மீறாமல் நியாயமான அளவு உண்பது அனு மதிக்கப்பட்டதா? நபி (ஸல்) அவர்கள், உமர் (ரலி) அவர்களிடமிருந்து ஓர் ஒட்டகத்தை வாங்கி இப்னு உமர் (ரலி) அவர்களுக்கு (அன்பளிப்பாகக்) கொடுத்து விட்டார்கள். மேலும், இதை நீ விரும்பியவாறு செய்து கொள் என்று கூறினார்கள்.
2586. நுஃமான் பின் பஷிர் அவர்கள் கூறியதாவது: என்னை என் தந்தையார் (பஷீர் பின் சஅத் (ரலி) அவர்கள்) அல்லாஹ்வின் தூதரிடம் கொண்டு சென்று, நான் எனது இந்த மகனுக்கு ஓர் அடிமையை அன்பளிப்புச் செய்திருக்கின்றேன் என்று சொன்னார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், உங்கள் பிள்ளைகள் அத்தனை பேருக்கும் இதைப் போன்றே அன்பளிப்புச் செய்துள்ளீரா? என்று கேட்டார்கள். என் தந்தை, இல்லை என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், அப்படியென்றால் அதை (உங்கள் அன்பளிப்பைத்) திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.
பகுதி 13
அன்பளிப்புச் செய்ய சாட்சிகள் வைத்தல்
2587. ஆமிர் பின் ஷர்ஹபீல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நுஃமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் மிம்பரின் மீது நின்று கொண்டு, என் தந்தை அன்பளிப்பு ஒன்றை எனக்குக் கொடுத்தார். என் தாயார் அம்ரா பின்த்து ரவாஹா (ரலி) அவர்கள் என் தந்தையிடம், நீங்கள் இதற்கு அல்லாஹ்வின் தூதரை சாட்சியாக ஆக்காதவரை நான் இதை ஒப்புக் கொள்ள மாட்டேன் என்று கூறினார்கள். என் தந்தை அல்லாஹ்வின் தூதரிடம் சென்று, அல்லாஹ்வின் தூதரே! நான் அம்ரா பின்த்து ரவாஹாவின் வாயிலாக, எனக்குப் பிறந்த என் மகனுக்கு அன்பளிப்பு ஒன்றைக் கொடுத்தேன், அவள் (என் மனைவி) தங்களை சாட்சியாக ஆக்கும் படி எனக்குக் கட்டளையிட்டாள் என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், உங்கள் மற்ற பிள்ளைகளுக்கும் இதே போன்று கொடுத்துள்ளீர்களா? என்று கேட்டார்கள். அதற்கு என் தந்தை, இல்லை என்று பதிலளித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், அவ்வாறெனில் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். உங்கள் பிள்ளைகளிடையே நீதி செலுத்துங்கள் என்று கூறினார்கள். இதைக் கேட்ட என் தந்தை உடனே திரும்பி வந்து, தனது அன்பளிப்பை ரத்து செய்தார்.
பகுதி 14
கணவன் தன் மனைவிக்கும் மனைவி தன் கணவனுக்கும் அன்பளிப்புச் செய்தல். இப்ராஹீம் நகயீ (ரஹ்) அவர்கள், கணவனும் மனைவியும் ஒருவருக் கொருவர் அன்பளிப்புச் செய்து கொள்வது செல்லும் என்று கூறினார்கள். கணவன் மனைவிக்கோ, மனைவி கணவனுக்கோ அன்பளிப்புச் செய்தால் தமது அன்பளிப்பை அவர்கள் திரும்பப் பெற்றுக் கொள்ளக் கூடாது என்று உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்ட போது, ஆயிஷா (ரலி) அவர்களின் வீட்டில் தங்கி, அவர்களுடைய கவனிப்பையும் சிகிச்சையையும் பெற்றுக் கொள்ள விரும்பி, தம் மற்ற மனைவி மார்களிடம் (அவர்களிடம் தாம் தங்கவேண்டிய நாட்களிலும் ஆயிஷா (ரலி) அவர்களிடமே தங்கிக் கொள் வதற்கு) அனுமதி கேட்டார்கள். மேலும், தன் அன்பளிப்பைத் திரும்பப் பெற்றுக் கொள்பவன், தான் கக்கிய வாந்தியைத் தானே தின்கின்ற நாயைப் போன்றவன் ஆவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒருவர் தன் மனைவியிடம், உனது மஹ்ரில் சிறிதளவை அல்லது உன் மஹ்ர் முழுவதையும் எனக்கு அன்பளிப்புச் செய்து விடு என்று கூறி (அதைப் பெற்றுக் கொண்டு) சிறிது காலத்திற்குள் அவளை விவாகரத்துச் செய்து விட, (விவாகரத்துச் செய்யப்பட்ட) அப்பெண், அவரிடம் தான் கொடுத்த மஹ்ரைத் திரும்பக் கேட்பாளாயின், அவர் அவளை ஏமாற்றி (மோசடியாக மஹ்ரைப் பெற்று) இருந்தால் அவர் அவளிடம் அதைத் திருப்பித் தந்து விடுவார். அப்பெண் அவருக்கு அதை மனப்பூர்வமாகக் கொடுத்திருந்தால், அதை அவளிட மிருந்து மோசடி எதுவும் செய்யாமல் அவளுடைய சம்மதத்துடன் பெற்றிருந் தால் அவர் அதைத் திருப்பித் தராமல் தானே வைத்துக் கொள்ளலாம் என்று இமாம் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறு கிறார்கள். அல்லாஹ் கூறுகின்றான்: மேலும், பெண்களுக்கு அவர் களுடைய மஹ்ரை மனப்பூர்வமாகக் கொடுத்து விடுங்கள். ஆயினும், அந்த மஹ்ரிலிருந்து ஒரு பகுதியை அவர்கள் உங்களுக்கு மனப்பூர்வமாக விட்டுக் கொடுத்தால் அதைத் தயக்கமின்றி நீங்கள் உண்ணலாம். (4:4)
2588. ஆயிஷா(ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் கடுமையாக நோய்வாய்ப்பட்டு, அவர்களின் வேதனை அதிகரித்தபோது, என் வீட்டில் (தங்கி) நோய்க்கான கவனிப்பையும் சிகிச்சையையும் பெற்றுக் கொள்ள அனுமதியளிக்கும்படி தம்முடைய மற்ற மனைவிமார்களிடம் கேட்டார்கள், அவர்களும் அனுமதி அளித்துவிட்டனர். பின்னர் (ஒருநாள்) நபி (ஸல்) அவர்கள், தம் இரு கால்களும் பூமியில் இழுபட, இரு மனிதர்களுக்கிடையே தொங்கிய வண்ணம் புறப்பட்டார்கள். அப்போது, அவர்கள் அப்பாஸ் (ரலி) அவர்களுக்கும் மற்றொரு மனிதருக்குமிடையே இருந்தார்கள். அறிவிப்பாளர் உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்„ நான் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதை இப்னு உமர் (ரலி) அவர்களிடம் சொன்னேன். அதற்கு அவர்கள், ஆயிஷா (ரலி) அவர்கள் பெயர் குறிப்பிடாமல் விட்ட மனிதர் யாரென்று உனக்குத் தெரியுமா? என்று கேட்டார்கள். நான், தெரியாது என்று பதிலளித்தேன். அவர்கள், அந்த மனிதர் அலீ பின் அபீதாலிப் அவர்கள் தாம் என்று கூறினார்கள்.
2589. நபி (ஸல்) அவர்கள் கூறினர்கள்; தன் அன்பளிப்பைத் திரும்பப் பெறுபவன் வாந்தியெடுத்த பிறகு, அதை மீண்டும் தின்கின்ற நாயைப் போன்றவன் ஆவான். இதை அவர் அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
பகுதி 15
ஒருத்திக்குக் கணவன் இருக்கும் போதே, தன் கணவனல்லாத மற்றவர்களுக்கு அவள் அன்பளிப்புச் செய்வதும், தனது அடிமையை விடுதலை செய்வதும் அவள் விவரமற்ற பேதை யாக இல்லாமலிருந்தால் செல்லும்; அவள் விவரமற்ற பேதையாக இருந்தால் செல்லாது. அல்லாஹ் கூறுகிறான்: மேலும், உங்கள் வாழ்க்கைக்கு நிலைபாட்டைத் தரக் கூடியவையாக உங்களுக்கு அல்லாஹ் ஆக்கியுள்ள உங்கள் செல்வங்களை விவரமறியாத வர்களிடம் ஒப்படைக்காதீர்கள். (4.:5)
2590. அஸ்மா(ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! எனக்கு (என் கணவர்) ஸுபைர் (ரலி) அவர்கள் அளித்ததைத் தவிர வேறு செல்வம் எதுவும் என்னிடம் இல்லை. அதை நான் தர்மம் செய்யலாமா? என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், தர்மம் செய். கஞ்சத்தனமாக பையில் (சேகரித்து) வைத்துக் கொள்ளாதே. அவ்வாறு செய்தால் உன்னிடமும் கஞ்சத்தனம் காட்டப்படும் என்று கூறினார்கள்.
2591. நபி (ஸல்) அவர்கள் கூறினர்கள்; செலவழி கணக்கிட்டு (செலவழித்து)க் கொண்டிருக்காதே! (அப்படிக் கணக்கிட்டு நீ செலவழித்தால்) அல்லாஹ்வும் உனக்கு (தரும் போது) கணக்கிட்டு (தந்து) விடுவான். கஞ்சத்தனமாகப் பையில் (சேர்த்து) வைத்துக் கொள்ளாதே. அவ்வாறு செய்தால் அல்லாஹ்வும் உன்னிடம் கஞ்சத்தனமாக நடந்து கொள்வான். இதை அஸ்மா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
2592. மைமூனா பின்த்து ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் ஓர் அடிமைப் பெண்ணை விடுதலை செய்தேன். ஆனால், நபி (ஸல்) அவர்களிடம் அதற்காக அனுமதி கேட்கவில்லை. என்னிடம் நபி (ஸல்) அவர்கள் தங்குகின்ற முறை வந்தபோது, அல்லாஹ்வின் தூதரே! அடிமைப் பெண்ணை விடுதலை செய்துவிட்டேனே, அறிவீர்களா? என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், நீ (விடுதலை) செய்து விட்டாயா? என்று கேட்க, நான், ஆம், (விடுதலை செய்து விட்டேன்) என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள், நீ உன் தாயின் சகோதரர்களுக்கு (தாய் மாமன்களுக்கு அன்பளிப்பாக) அவளைக் கொடுத்து விட்டிருந்தால் உனக்குப் பெரும் நற்பலன் கிடைத்திருக்கும் என்று கூறினார்கள்.
2593. ஆயிஷா(ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரயாணம் செய்ய நாடினால் தம் மனைவிமார்களுக்கிடையே (எவரைத் தம்முடன் அழைத்துச் செல்வது என்று) சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள். எவரது பெயர் (குலுக்கலில்) வருகின்றதோ அவரைத் தம்முடன் அழைத்துக் கொண்டு புறப்படுவார்கள். தம் மனைவிமார்களில் ஒவ்வொருவருக்கும் தம் பகலையும் இரவையும் பங்கு வைத்து வந்தார்கள். ஆனால், சவ்தா பின்த்து ஸம்ஆ (ரலி) அவர்கள் மட்டும் தம் பங்குக்குரிய நாளை, நபி (ஸல்) அவர்களின் (பிரியத்திற்குரிய) மனைவியான ஆயிஷா (ரலி) அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கி விட்டிருந்தார்கள். அதன் வாயிலாக, அல்லாஹ்வின் தூதருடைய திருப்தியை அடைவதற்காகவே அவர்கள் அவ்வாறு செய்தார்கள்.
பகுதி 16
யாருக்கு முதல் அன்பளிப்புச் செய்வது?
2594. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் அடிமையான குரைப் (ரஹ்)அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான மைமூனா (ரலி) அவர்கள் தமது அடிமைப் பெண் ஒருத்தியை விடுதலை செய்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் மைமூனா (ரலி) அவர்களிடம், (இந்த அடிமைப் பெண்ணை அன்பளிப்பாகக் கொடுத்து,) உன் தாய்மாமன்கள் சிலரின் உறவைப் பேணியிருந்தால் உனக்குப் பெரும் நற்பலன் கிடைத்திருக்கும் என்று கூறினார்கள்.
2595. ஆயிஷா(ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! எனக்கு அண்டை வீட்டுக்காரர்கள் இருவர் உள்ளனர். அவர்களில் எவருக்கு நான் அன்பளிப்புச் செய்வது? என்று கேட்டேன். அவ்விருவரில் எவரது வாசல் உன் வீட்டு வாசலுக்கு அருகிலுள்ளதோ அவருக்கு அன்பளிப்புச் செய் என்று கூறினார்கள்.
பகுதி 17
தகுந்த காரணத்தினால் அன்பளிப்பை ஏற்க மறுப்பது. அல்லாஹ்வின் தூதருடைய காலத்தில் அன்பளிப்பு அன்பளிப்பாக இருந்தது; இன்று அது லஞ்சமாக மாறிவிட்டது என்று உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
2596. ஸஅப் பின் ஜஸ்ஸாமா(ரலி)அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் அப்வா என்னும் இடத்தில் அல்லது வத்தான் என்னும் இடத்தில் இருந்தபோது, (வேட்டையாடிய) காட்டுக் கழுதையை அவர்களுக்கு நான் அன்பளிப்பாகத் தந்தேன், அப்போது அவர்கள் இஹ்ராம் அணிந்திருந்தார்கள். ஆகவே, அதைத் திருப்பித் தந்து விட்டார்கள். அவர்கள் என் அன்பளிப்பை ஏற்க மறுத்து விட்டதால் என் முகத்தில் தோன்றிய கவலைக் குறியைக் கண்டபோது, நாம் இஹ்ராம் அணிந்திருப்பதால் தான் உன் அன்பளிப்பைத் திருப்பித் தந்தோம் என்று கூறினார்கள்.
2597. அபூஹுமைத் அஸ்ஸா இதீ(ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் அஸ்த் என்னும் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதரை (ஸகாத்) வசூலிப்பவராக நியமித்தார்கள். அவர் இப்னுல் லுத்பிய்யா என்று அழைக்கப்பட்டு வந்தார். அவர் ஸக்காத் வசூலித்துக் கொண்டு வந்தபோது, இது உங்களுக்குரியது, இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், இவர் தன் தகப்பனின் வீட்டில் அல்லது தாயின் வீட்டில் உட்கார்ந்து கொண்டு, தமக்கு அன்பளிப்புக் கிடைக்கிறதா இல்லையா என்று பார்க்கட்டுமே! என் உயிரைத் தனது கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! உங்களில் யாரேனும் அந்த ஸகாத் பொருளில் இருந்து (முறைகேடாக) எதைப் பெற்றாலும் அதை அவர் மறுமை நாளில் தன் பிடரியில் சுமந்து கொண்டு வருவார். அது ஒட்டகமாக இருந்தால் கனைத்துக் கொண்டிருக்கும், பசுவாகவோ ஆடாகவோ இருந்தால் கத்திக் கொண்டிருக்கும் என்று கூறினார்கள். பிறகு, அவர்களுடைய அக்குள்களின் வெண்மையை நாங்கள் பார்க்கும் அளவுக்குத் தம் கைகளை உயர்த்தி, இறைவா! (உன் செய்தியை மக்களுக்கு) நான் எடுத்துரைத்து விட்டேன் அல்லவா? நான் எடுத்துரைத்துவிட்டேன் அல்லவா? என்று மும்முறை கூறினார்கள்.
பகுதி 18
ஒருவர் மற்றொருவருக்கு அன்பளிப்புச் செய்து, அல்லது அன்பளிப்புச் செய்வதாக வாக்களித்து,அன்பளிப்பு தன்னிடம் வந்து சேருவதற்கு முன்பே (அன்பளிப்புச் செய்ய வாக்களித்தவர் அல்லது வாக்களிக்கப்பட்டவர்) இறந்து விட்டால்... (வாக்களித்தவர், வாக்களிக்கப்பட்டவர் இருவருமே இறந்து விட்டால், அன்பளிப்புப் பெறுபவர் உயிராயிருந்த போதே அன்பளிப்புப் பொருள் தனியாக எடுத்து வைக்கப்பட்டிருந்ததெனில் அது அன்பளிப்புப் பெறுபவருடைய வாரிசுகளுக்குரியதாகும். அன்பளிப்புப் பெறுபவர் உயிராயிருந்த போது அன்பளிப்புப் பொருள் (அவருக்கென்று) தனியாக எடுத்து வைக்கப்படவில்லை யென்றால் அது அன்பளிப்புச் செய்தவரின் வாரிசுகளுக்குரியதாகும் என்று அபீதா பின் அம்ரு (ரஹ்) கூறுகின்றார்கள். இருவரில் எவர் முத-ல் இறந்தாலும் அன்பளிப்புப் பொருளை அன்பளிப்புப் பெறுபவரின் தூதர் கைவசம் பெற்றுக் கொண்டிருந்தால் அது அன்பளிப்புப் பெற்றவரின் வாரிசுகளுக் குரியதேயாகும் என்று ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.
2598. ஜாபிர்(ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் என்னிடம் பஹ்ரைனின் நிதி வந்துவிட்டால் நான் உனக்கு இவ்வளவு தருவேன் என்று மூன்று முறை கூறினார்கள். ஆனால், அந்த நிதி வருவதற்குள் நபி (ஸல்) அவர்கள் மரணமடைந்துவிட்டார்கள். அப்போது (ஆட்சித் தலைவராகத் தேர்வு பெற்ற) அபூபக்ர் (ரலி) அவர்கள், எவருக்காவது நபி (ஸல்) அவர்கள் எதனையும் வாக்களித்திருந்தால் அல்லது எவருக்காவது அவர்கள் பாக்கி வைத்திருந்தால் அவர் நம்மிடம் வரட்டும் என்று (பொது) அறிவிப்புச் செய்யும்படி பறையறிவிப்பவருக்குக் கட்டளையிட, அவர் அவ்வாறே அறிவித்தார். ஆகவே, நான் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் சென்று, எனக்கு (பஹ்ரைனின் நிதியிலிருந்து) தருவதாக நபி (ஸல்) அவர்கள் வாக்களித்திருந்தார்கள் என்று கூறினேன். இதைக் கேட்ட அவர்கள் எனக்கு (நிதியை) மூன்று முறை கைகளால் அள்ளிக் கொடுத்தார்கள்.
பகுதி 19
(அன்பளிப்பாக வழங்கப்படும்) அடிமை களையும் பொருட்களையும் எப்படிப் பெற்றுக் கொள்வது? இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் ஒரு முரட்டு ஒட்டகக் குட்டியின் மீது (சவாரி செய்து கொண்டு) இருந்தேன்; அதை நபி (ஸல்) அவர்கள் வாங்கினார்கள். பின்னர், அப்துல்லாஹ்வே! இது உனக்குரியது என்று நபியவர்கள் கூறினார்கள்.13
2599. மிஸ்வர் பின் மக்ரமா(ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சில அங்கிகளைப் பங்கிட்டார்கள். ஆனால், என் தந்தை (மக்ரமாவு)க்கு ஒன்றையும் கொடுக்கவில்லை. என் தந்தை மக்ரமா (ரலி) அவர்கள், என் அன்பு மகனே! என்னுடன் அல்லாஹ்வின் தூதரிடம் வா! என்று கூறினார்கள். நான் அவர்களுடன் சென்றேன். என் தந்தை, எனக்காக நபி (ஸல்) அவர்களைக் கூப்பிடு என்று கூற, நான் நபி (ஸல்) அவர்கள் வெளியே வந்தார்கள். அவர்கள் மீது அந்த அங்கிகளில் ஒன்று இருந்தது. அவர்கள், நான் உங்களுக்காக இதை (யாருக்கும் தராமல்) எடுத்து வைத்திருந்தேன் என்று கூறினார்கள். என் தந்தை மக்ரமா (ரலி) அவர்கள் அதைப் பார்த்துவிட்டு, மக்ரமா திருப்தியடைந்தான் என்று கூறினார்கள்.
பகுதி 20
அன்பளிப்பு பெற்றவர் அன்பளிப்பைக் கைவசம் பெற்றுக் கொண்டார்; ஆனால், நான் ஏற்றுக் கொண்டேன்என்று கூறவில்லையென்றால்........
2600. அபூஹுரைரா(ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, நான் அழிந்து விட்டேன் என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், அப்படியென்ன (நடந்தது)? என்று கேட்டார்கள். அவர் நான் ரமளான் மாதத்தில் (பகலில்) என் மனைவியுடன் உடலுறவு கொண்டு விட்டேன் என்றார். நபி (ஸல்) அவர்கள் உன்னிடம் அடிமை எவரும் உண்டா? என்று கேட்டார்கள். அம்மனிதர், இல்லை என்று கூறினார். தொடர்ந்து இரு மாதங்கள் நோன்பு நோற்க உன்னால் முடியுமா என்று கேட்டார்கள். அதற்கும் அவர், முடியாது என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள், அப்படியென்றால் அறுபது ஏழைகளுக்கு உன்னால் உணவளிக்க முடியுமா என்று கேட்டார்கள்.. அதற்கும் அவர் முடியாது என்று பதிலளித்தார். அப்போது அன்சாரி ஒருவர், அரக் ஒன்றை; கொண்டு வந்தார். அரக் என்பது பேரீச்சம் பழக்கூடையாகும். நபி (ஸல்) அவர்கள் (கேள்வி கேட்ட) அம்மனிதரிடம், இதை எடுத்துச் சென்று தர்மம் செய்து விடு என்று கூறினார்கள். அதற்கு அம்மனிதர், அல்லாஹ்வின் தூதரே! எங்களை விட அதிகத் தேவையுடைய(வறிய)வர்களுக்கா நான் இதை தர்மம் செய்வது? உங்களை சத்திய மார்க்கத்துடன் அனுப்பி வைத்த (இறை)வனின் மீதாணையாக! மதீனாவின் இருமலைகளுக்கிடையே எங்களை விட அதிகத் தேவையுடைய வீட்டார் எவருமில்லை என்று கூறினார், அப்போது நபி (ஸல்) அவர்கள் போ! (போய்) உன் வீட்டாருக்கு இதை உண்ணக் கொடு என்று கூறினார்கள்.
பகுதி 21
வரவேண்டிய கடனை அன்பளிப்பாக்கி விடுவது. இதற்கு அனுமதியுண்டு என்று ஹகம் (ரஹ்) கூறுகிறார்கள். ஹுசைன் பின் அலீ (ரலி) அவர்கள் தமக்கு ஒரு மனிதர் தரவேண்டிய கடனை அன்பளிப்புச் செய்தார்கள். எவர் மீது ஒரு கடமை (அல்லது கடன்) இருக்கின்றதோ, அவர் அதனை நிறைவேற்றி விடட்டும்;அல்லது உரிய வரிடம் மன்னிப்பு வாங்கி அதை ஹலால் (தனக்கு அனுமதிக்கப்பட்டதாக) ஆக்கிக் கொள்ளட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: என் தந்தை தன் மீது கடன் இருக்கின்ற நிலையில் கொல்லப்பட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் என் தந்தைக்குக் கடன் கொடுத்தவர்களிடம், என் தோட் டத்தின் கனிகளைப் பெற்றுக் கொள்ளும் படியும் (மீதியிருந்த கடனைத் தள்ளுபடி செய்து) என் தந்தையை மன்னிக்கும் படியும் கேட்டுக் கொண்டார்கள்.
2601. ஜாபிர் பின் அப்தில்லாஹ்(ரலி) அவர்கள் கூறியதாவது: என் தந்தை உஹுதுப் போரின் போது ஷஹீதாகக் கொல்லப்பட்டார்கள். கடன்காரர்கள் தங்கள் உரிமைகள் விஷயத்தில் (கடனைத் திரும்பப் பெறுவதில்) கடுமை காட்டினார்கள். நான் அல்லாஹ்வின் தூதரிடம் சென்று (இது பற்றிக்) கூறினேன். அவர்கள், என் தந்தைக்குக் கடன் கொடுத்தவர்களிடம், என் தோட்டத்தின் கனிகளைப் பெற்றுக் கொள்ளும்படியும் (மீதியுள்ள கடனை) மன்னித்து விடும்பியும் கேட்டுக் கொண்டார்கள். ஆனால், அவர்கள் (நபி (ஸல்) அவர்களின் பரிந்துரையை) ஏற்க மறுத்துவிட்டார்கள். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் தோட்டத்தை அவர்களிடம் கொடுக்கவுமில்லை, கனிகளைப் பறித்து அவர்களுக்குத் தரவுமில்லை. மாறாக, நான் உன்னிடம் நாளை வருவேன் என்று கூறினார்கள். (அடுத்த நாள்) காலையில் எங்களிடம் வந்தார்கள். பேரீச்ச மரங்களுக்கிடையே சுற்றி வந்து, அதன் கனிகளில் பரக்கத் (எனும் அருள் வளத்திற்காக பிரார்த்தித்தார்கள். நான் அவற்றைப் பறித்துக் கடன்காரர்களின் உரிமைகளை நிறைவேற்றினேன். எங்களுக்கு அவற்றின் பழங்களில் சிறிதளவு எஞ்சியது. பிறகு, நான் அல்லாஹ்வின் தூதரிடம் அவர்கள் (தமது அவையில்) அமர்ந்திருந்த பொழுது வந்து, நடந்ததைத் தெரிவித்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கு அமர்ந்திருந்த உமர் (ரலி) அவர்கள், தாங்கள் அல்லாஹ்வின் தூதர் தாம் என்று நாங்கள் அறிந்திருக்கவில்லையா? அல்லாஹ்வின் மீதாணையாக! தாங்கள் அல்லாஹ்வின் தூதர் தாம் என்று கூறினார்கள்.
பகுதி 22
ஒருவர் பலருக்கு அன்பளிப்புச் செய்வது. அஸ்மா (ரலி) அவர்கள் காசிம் பின் முஹம்மத் (ரஹ்) அவர்களையும்14 அப்துல்லாஹ் பின் அபீ அத்தீக் (ரஹ்)15 அவர்களையும் பார்த்து, நான் என் சகோதரி ஆயிஷாவிடமிருந்து ஃகாபாவி லிருந்த16 ஒரு சொத்தை வாரிசாகப் பெற்றேன். அதற்குப் பகரமாக முஆவியா (ரலி) அவர்கள் எனக்கு ஒருலட்சம் கொடுத்திருந்தார்கள். அதை உங்கள் இரு வருக்கும் என் அன்பளிப்பாகக் கொடுத்து விடுகிறேன் என்று கூறினார்கள்.
2602. சஹ்ல் பின் சஅத்(ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பானம் (பால்) கொண்டு வரப்பட்டது. (அதை) அவர்கள் குடித்தார்கள். அப்போது அவர்களுடைய வலது பக்கத்தில் ஒரு சிறுவரும் இடது பக்கத்தில் முதியவர்கள் இருந்தனர். நபி (ஸல்) அவர்கள் அந்த சிறுவரிடம், நீ அனுமதியளித்தால் நான் இவர்களுக்கு (என் பக்கத்திலுள்ள முதியவர்களுக்கு) கொடுத்து விடுகின்றேன் என்று கூறினார்கள். அந்தச் சிறுவர், அல்லாஹ்வின் தூதரே! தங்களிடமிருந்து (எனக்குக் கிடைக்கக் கூடிய) என் பங்கை வேறெவருக்காகவும் விட்டுக் கொடுக்க நான் தயாராக இல்லை என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் அச்சிறுவரின் கையில் அந்த (மீதி) பானத்தை வைத்தார்கள்.
பகுதி 23
கைவசம் பெற்றுக் கொண்ட அன்பளிப்பும் பெற்றுக் கொள்ளப் படாத அன்பளிப்பும், பங்கிடப்பட்ட அன்பளிப்பும், பங்கிடப்படாத அன்பளிப்பும். நபி (ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் ஹவாஸின் குலத்தாருக்கு அவர்களிடமிருந்து போர்ச் செல்வங் களாக (கனீமத்தாக) தாங்கள் பெற்ற வற்றை அவை பங்கிடப்படாத நிலையிலேயே அன்பளிப்புச் செய்து விட்டார்கள்.
2603. ஜாபிர்(ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களிடம் பள்ளி வாசலில் சென்றேன், எனக்கு (என்னிடம் வாங்கிய ஒட்டகத்தின் விலையைச்) செலுத்தி எனக்கு அதிகமாகவும் தந்தார்கள்.
2604. ஜாபிர் பின் அப்தில்லாஹ்(ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களுக்கு ஒரு பிரயாணத்தில் ஒட்டகம் ஒன்றை நான் விற்றேன். மதீனாவிற்கு நான் வந்தபோது நபி (ஸல்) அவர்கள், பள்ளிவாசலுக்கு வந்து இரண்டு ரக்அத்துக்களைத் தொழு என்று கூறினார்கள். பிறகு நிறுத்(துத் தந்)தார்கள். சிறிது அதிகமாகவும் தந்தார்கள். ஷாம் வாசிகள் ஹர்ராவுடைய நாளில் அதை எடுத்துக் கொள்ளும் வரை அதிலிருந்து சிறிதளவு எப்போதும் என்னிடம் இருந்து வந்தது.
2605. சஹ்ல் பின் சஅத்(ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதரிடம் ஒரு பானம் (பால்) கொண்டு வரப்பட்டது, அப்போது அவர்களின் வலப் பக்கத்தில் ஒரு சிறுவரும் அவர்களின் இடப் பக்கத்தில் முதியவர்கள் சிலரும் இருந்தனர். நபி (ஸல்) அவர்கள் சிறுவரை நோக்கி, இவர்களுக்கு இந்தப் பாலைக் கொடுப்பதற்கு எனக்கு அனுமதி தருகிறாயா? என்று கேட்டார்கள். அச்சிறுவர், மாட்டேன். அல்லாஹ்வின் மீதாணையாக! தங்களிடமிருந்து எனக்குக் கிடைக்கக் கூடிய (நற்)பேற்றை வேறெவருக்காகவும் நான் விட்டுத் தரமாட்டேன் என்று கூறினார். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் அந்த பானத்தை சிறுவரின் கையில் வைத்தார்கள்.
2606. அபூஹுரைரா(ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டியிருந்தது. (அவர் நபி (ஸல்) அவர்களிடம் கடுமையாகப் பேசியதால்) நபி (ஸல்) அவர்களின் தோழர்கள் அந்த மனிதரை தண்டிக்க முனைந்தார்கள். நபி (ஸல்) அவர்கள், அவரை விட்டுவிடுங்கள். ஏனெனில், உரிமையுடையவர் (கடன் கொடுத்தவர்), தன் உரிமையை வசூலிக்கும் போது கடுமையாகப் பேச(வும் கடுமையாக நடந்து கொள்ள)வும் அவருக்கு உரிமையுண்டு என்று கூறிவிட்டு, அவருக்கு (நான் தரவேண்டிய ஒட்டகத்தின் சம வயதுடைய ஒட்டகத்தை வாங்கி, அதை அவரிடம் கொடுத்துவிடுங்கள் என்று கூறினார்கள். நபித்தோழர்கள், தாங்கள் தரவேண்டிய ஒட்டகத்தின் வயதை விட அதிக வயதுடைய ஒட்டகம் தான் எங்களுக்குக் கிடைக்கிறது என்று கூற, நபி (ஸல்) அவர்கள், அதை வாங்கி, அவருக்குக் கொடுத்து விடுங்கள். ஏனெனில், உங்களில் எவர் அழகிய முறையில் கடனைத் திருப்பிச் செலுத்துகிறாரோ அவரே உங்களில் சிறந்தவர் ஆவார் என்று கூறினார்கள்.
பகுதி 24
பலர் பலருக்கு அன்பளிப்புச் செய்தல்.
2607, 2608. மர்வான் பின் ஹகம் (ரலி) மிஸ்வர் பின் மக்ரமா(ரலி) ஆகியோர் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் ஹவாஸின் குலத்தார் முஸ்லிம்களாக வந்தபோது அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், தங்கள் செல்வங்களையும் போர்க்கைதிகளையும் தங்களிடம் திருப்பித் தந்துவிடும்படி கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், என்னுடன் நீங்கள் பார்க்கின்ற (இந்தப்) படைவீரர்களும் இருக்கின்றனர். உண்மை பேசுவது எனக்கு மிகவும் விருப்பமானதாகும். (உங்கள்) போர்க் கைதிகள் அல்லது (உங்கள்) செல்வம் இரண்டில் ஏதேனும் ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். நான் (உங்களை) எதிர்பார்த்துக் காத்திருந்தேன் என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் தாயிஃப் நகரத்திலிருந்து புறப்பட்ட நேரத்திலிருந்து பத்துக்கு மேற்பட்ட இரவுகள் அவர்களை எதிர்பார்த்திருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் போர்ச் செல்வங்கள் அல்லது போர்க் கைதிகள் இரண்டிலொன்றைத் தான் திருப்பித் தருவார்கள் என்று அவர்களுக்குத் தெளிவாகி விட்டபோது, நாங்கள் எங்கள் போர்க்கைதிகளையே திரும்பப் பெற்றுக் கொள்கிறோம் என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களிடயே எழுந்து நின்று, அல்லாஹ்வை அவனுக்குத் தகுதியுள்ள பண்புகளைக் கொண்டு புகழ்ந்தார்கள். பிறகு, (முஸ்லிம்களே!) உங்களுடைய இந்தச் சகோதரர்கள் தவ்பா செய்தவர்களாக (மனம் திருந்தியவர்களாக) நம்மிடம் வந்துள்ளனர். அவர்களிடம் அவர்களுடைய போர்க் கைதிகளை திரும்பக் கொடுத்து விடுவதை நான் உசிதமானதாகக் கருதுகிறேன். உங்களில் எவர் இதற்கு மனப்பூர்வமாகச் சம்மதிக்கின்றாரோ அவர் அவ்வாறே செய்யட்டும். (போர்க் கைதிகளை விடுதலை செய்யட்டும்) எவர் நமக்கு அல்லாஹ் (இனி கிடைக்கவிருக்கும் வெற்றிகளில்) முதன் முதலாகக் கொடுக்கவிருக்கும் செல்வத்திலிருந்து அவருக்கு நாம் கொடுக்கின்றவரை தனது பங்கைத் தானே வைத்துக் கொள்ள விரும்புகின்றாரோ அவர் அவ்வாறே செய்யட்டும், (அதுவரை தன்னிடமே வைத்துக் கொள்ளட்டும்) என்று கூறினார்கள். மக்கள், அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் மனப்பூர்வமாக அவர்களிடம் (அவர்களுடைய உறவினர்களான போர்க் கைதிகளை திருப்பித்) தந்து விடுகிறோம் என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அவர்களிடம் உங்களில் எவர் சம்மதிக்கிறார், எவர் சம்மதிக்கவில்லை என்று எமக்குத் தெரியாதாகையால் நீங்கள் திரும்பிச் செல்லுங்கள். உங்கள் தலைவர்கள் வந்து (உங்கள் முடிவை) எங்களிடம் தெரிவிக்கட்டும் என்று கூறினார்கள். பிறகு அவர்கள் (தலைவர்கள்) திரும்பி வந்து, நபி (ஸல்) அவர்களிடம் தங்கள் போர்க் கைதிகளைத் திருப்பித் தர மனப்பூர்வமாகச் சம்மதிப்பதாகத் தெரிவித்தார்கள்.
பகுதி 25
சகாக்களுடன் அமர்ந்திருக்கும் ஒருவருக்கு அன்பளிப்பு வழங்கப் பட்டால் அவரே அதைப் பெறுவ தற்கு அதிக உரிமையுடையவர் ஆவார். ‘‘சகாக்களும் அதில் அவருடன் கூட்டாளிகளாவர்” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், அது உண்மையல்ல.
2609. அபூஹுரைரா (ரலி) கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஒரு குறிப்பிட்ட வயதையுடைய ஒட்டகத்தை ஒருவரிடமிருந்து கடனாகப் பெற்றார்கள். அதைக் கடன் கொடுத்தவர் நபி (ஸல்) அவர்களிடம் தனது கடனைத் திருப்பிச் செலுத்தும்படி கேட்டு வந்தார். (அப்போது அவர் நபியவர்களிடம் வற்று கடுமையாகப் பேசினார். ஆகவே, தோழர்கள் அவரை தண்டிக்க விரும்பினார்கள்.) நபி (ஸல்) அவர்கள் (தம் தோழர்களைத் தடுத்து), உரிமையுடையவர் கடுமையாகப் பேச அனுமதியுண்டு என்று கூறினார்கள். பிறகு, அவரது சிறு வயது ஒட்டத்தை விடச் சிறந்ததைக் கொடுத்து அவரது கடனை அடைத்தார்கள். மேலும், உங்களில் எவர் அழகிய முறையில் கடனை அடைக்கிறாரோ அவரே உங்களில் சிறந்தவர் என்று கூறினார்கள்.
2610. இப்னு உமர்(ரலி) கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பிரயாணத்தில் இருந்தேன். உமர் (ரலி) அவர்களுக்குச் சொந்தமான முரட்டு ஒட்டகம் ஒன்றின் மீது நான் சவாரி செய்து கொண்டிருந்தேன். அது நபி (ஸல்) அவர்களை முந்திக் கொண்டு சென்றது. அப்போது என் தந்தை உமர் (ரலி) அவர்கள், அப்துல்லாஹ்வே! நபி (ஸல்) அவர்களை யாரும் முந்தக் கூடாது என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் என் தந்தையிடம், அதை எனக்கு விற்று விடுங்கள் என்று கேட்டார்கள். என் தந்தை, அதை உங்களுக்கு நான் விற்றுவிட்டேன் என்று கூறினார்கள். அதை நபி (ஸல்) அவர்கள் வாங்கினார்கள். பிறகு என்னைப் பார்த்து, அப்துல்லாஹ்வே! இது உனக்குரியது. நீ விரும்பியபடி இதைப் பயன்படுத்திக் கொள் என்று சொன்னார்கள்.
பகுதி 26
ஒருவர், தன் ஒட்டகத்தில் சவாரி செய்து கொண்டிருப்பவருக்கே அதை அன்ப ளிப்புச் செய்து விட்டால் அது செல்லும்.
2611. இப்னு உமர்(ரலி) கூறியதாவது: நாங்கள் ஒரு பிராயணத்தில் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். நான் (என் தந்தைக்குச் சொந்தமான) ஒரு முரட்டு ஒட்டகத்தின் மீது சவாரி செய்து கொண்டிருந்தேன். நபி (ஸல்) அவர்கள் (என் தந்தை) உமர் (ரலி) அவர்களிடம், இதை எனக்கு விற்று விடுங்கள் என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அதை விலைக்கு வாங்கி (கையகப்படுத்தாமலேயே), அப்துல்லாஹ்வே! இது உனக்குரியது என்று என்னிடம் கூறினார்கள்.
பகுதி 27
எதை அணிவது வெறுக்கத் தக்கதோ அதை அன்பளிப்பாக வழங்குதல்.
2612. இப்னு உமர்(ரலி) கூறியதாவது: உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் பள்ளிவாசலின் நுழைவாயிலருகே பட்டு அங்கி விற்கப்படுவதைக் கண்டு அல்லாஹ்வின் தூதரே! இதை நீங்கள் வாங்கி, ஜும்ஆ நாளிலும் தூதுக் குழுக்கள் உங்களைச் சந்திக்க வரும் போதும் அணிந்து கொண்டால் நன்றாயிருக்குமே என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், எவருக்கு மறுமையில் எந்த நற்பேறும் இல்லையோ அவர்தான் இதை அணிவார் என்று கூறினார்கள். பிறகு, சில பட்டு அங்கிகள் நபி (ஸல்) அவர்களுக்கு வந்தன. அவற்றிலிருந்து ஓர் அங்கியை நபி(ஸல்) அவர்கள், உமர் (ரலி) அவர்களுக்குக் கொடுத்தார்கள். உமர் (ரலி) அவர்கள், எனக்கு இதை அணிந்து கொள்ளக் கொடுக்கிறீர்களா? உதாரிதுடைய- அங்கியின் விஷயத்தில் நீங்கள் முன்பு ஒரு விதமாகச் சொன்னீர்களே என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், இதை நீங்கள் அணிந்து கொள்ள நான் உங்களுக்குத் தரவில்லை என்று பதிலளித்தார்கள். ஆகவே, உமர் (ரலி) அவர்கள் அதை மக்காவிலிருந்து இணைவைப்பவரான தன் சகோதரர் ஒருவருக்குக் கொடுத்துவிட்டார்கள்.
2613. இப்னு உமர்(ரலி) கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், (தமது மகள்) ஃபாத்திமா (ரலி) அவர்களின் வீட்டுக்கு வந்தார்கள். ஆனால், அவர்களிடம் செல்லவில்லை. (திரும்பிப் போய்விட்டார்கள்.) (இதற்கிடையில் அங்கே) அலீ (ரலி) அவர்கள் வந்தார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம் விஷயத்தைச் சொன்னார்கள். அலீ (ரலி) அவர்கள் அதை நபி (ஸல்) அவர்களிடம் சொல்ல, நான் ஃபாத்திமாவின் வீட்டு வாசலில் பல வண்ணச் சித்திரங்கள் வரையப்பட்ட திரைச் சீலை ஒன்றைக் கண்டேன். எனக்கும் இந்த (ஆடம்பரமான) உலகத்திற்கும் என்ன தொடர்பு? (அதனால்தான் திரும்பி வந்துவிட்டேன்) என்று கூறினார்கள். அலீ (ரலி) அவர்கள் ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் சென்று, நபி (ஸல்) அவர்கள் கூறியதைச் சொன்னார்கள். அதற்கு ஃபாத்திமா (ரலி) அவர்கள், அந்தத் திரைச் சீலையின் விஷயத்தில் நபி (ஸல்) அவர்கள், தாம் விரும்புவதை எனக்குக் கட்டளையிடட்டும். (அதன்படியே நான் நடந்து கொள்கிறேன்) என்று கூறினார்கள். நபி (ல்) அவர்கள், அதை இன்னாரின் வீட்டாரிடம் அனுப்பிவிடு அவர்களுக்குத் தேவையுள்ளது என்று கூறினார்கள்.
2614. அலீ(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் எனக்குப் பட்டு அங்கி ஒன்றை அன்பளிப்புச் செய்தார்கள். அதை நான் அணிந்து கொண்டேன். (அதைக்கண்ட) நபி(ஸல்) அவர்களின் முகத்தில் கோபக் குறியை கண்டேன். எனவே, அதைப் பல துண்டுகளாக்கி எங்கள் (குடும்பப்) பெண்களிடையே பங்கிட்டு விட்டேன்.
நபி(ஸல்) அவர்கள் எனக்குப் பட்டு அங்கி ஒன்றை அன்பளிப்புச் செய்தார்கள். அதை நான் அணிந்து கொண்டேன். (அதைக்கண்ட) நபி(ஸல்) அவர்களின் முகத்தில் கோபக் குறியை கண்டேன். எனவே, அதைப் பல துண்டுகளாக்கி எங்கள் (குடும்பப்) பெண்களிடையே பங்கிட்டு விட்டேன்.
பகுதி 28
இணைவைப்போரின் அன்பளிப்பை ஏற்றுக் கொள்வது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இப்ராஹீம் (அலை) அவர்கள் (தம் மனைவி) சாராவுடன் ஹிஜ்ரத் செய்தார்கள். அப்போது அரசன் ஒருவன்.... அல்லது அடக்கியாளும் கொடுங்கோலன் ஒருவன்.... இருந்த ஓர் ஊருக்குச் சென்றார்கள். அவன் சாராவுக்கு ஹாஜரை (அன்பளிப்பாக)க் கொடுங்கள் என்று கட்டளையிட்டான். நபி (ஸல்) அவர்களுக்கு விஷம் கலந்த ஆடு ஒன்று அன்பளிப்பாகத் தரப்பட்டது. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அபூஹுமைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அய்லாவின் அரசர் நபி (ஸல்) அவர்களுக்கு (தல்தல் எனும்) வெள்ளை நிறக் கோவேறுக் கழுதை ஒன்றை அன்பளிப்புச் செய்தார். நபி (ஸல்) அவர்கள் அவருக்கு சால்வையொன்றை (அன்பளிப்பாக அனுப்பி) அணிவித்தார்கள். மேலும், இஸ்லாமிய அரசின் கீழ் கட்டுப்பட்டு இருக்கும்படியும் அவருக்கு நபி (ஸல்) அவர்கள் எழுதினார்கள்.
2615. அனஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களுக்கு மெல்லிய பட்டாலான அங்கி ஒன்று அன்பளிப்பாகத் தரப்பட்டது. அவர்கள் பட்டுத் துணியை (அணிவதைத்) தடை செய்து வந்தார்கள். மக்களோ அந்த அங்கி(யின் தரம் மற்றும் மென்மை)யைக் கண்டு வியந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'முஹம்மதின் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! சொர்க்கத்தில் ஸஅத் இப்னு முஆத்துக்கு கிடைக்கவிருக்கும் கைக்குட்டைகள் (தரத்திலும் மென்மையிலும்) இதைவிடத் தரமானவையாயிருக்கும்" என்று கூறினார்கள்.
2616. அனஸ்(ரலி) அறிவித்தார்.
தூமத்துல் ஐந்தலின் அரசர் உகைதிர், நபி(ஸல்) அவர்களுக்கு அன்பளிப்புகளை அனுப்பினார்.
2617. அனஸ்(ரலி) அறிவித்தார்.
யூதப் பெண் ஒருத்தி நபி(ஸல்) அவர்களிடம் விஷம் தோய்க்கப்பட்ட ஓர் ஆட்டை அன்பளிப்பாகக் கொண்டு வந்தாள். நபி(ஸல்) அவர்கள் அதிலிருந்து (சிறிது) உண்டார்கள். 'அவளைக் கொன்று விடுவோமா?' என்று நபி(ஸல்) அவர்களிடம்) கேட்கப்பட்டது. அவர்கள், 'வேண்டாம்" என்று கூறிவிட்டார்கள். நபி(ஸல்) அவர்களின் தொண்டைச் சதையில் அந்த விஷத்தின் பாதிப்பை நான் தொடர்ந்து பார்த்து வந்தேன்.
2618. அப்துர் ரஹ்மான் இப்னு அபீ பக்ர்(ரலி) அறிவித்தார்.
நாங்கள் நூற்றி முப்பது பேர் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தோம். அவர்கள், 'உங்களில் எவரிடமாவது உணவு இருக்கிறதா?' என்று கேட்டார்கள். அப்போது ஒரு மனிதரிடம் சுமார் ஒரு ஸாவு அளவு உணவு தான் இருந்தது. அது தண்ணீர் கலந்து குழைக்கப்பட்டது. பிறகு, மிக உயரமான (முரட்டு சுபாவம் கொண்ட) தலைவிரிகோலமான இணைவைக்கும் மனிதர் ஒருவர் ஆடுகளை ஓட்டி வந்தார். நபி(ஸல்) அவர்கள் அவரிடம், '(இவை) விற்பதற்காகவா? அன்பளிப்பாகவா?' என்று கேட்டார்கள். அவர், 'இல்லை. விற்பதற்காகத் தான் (கொண்டு வந்துள்ளேன்)" என்று பதிலளித்தார். அவரிடமிருந்து ஓர் ஆட்டை நபி(ஸல்) அவர்கள் வாங்கினார்கள்; அது அறு(த்து சமை)க்கப்பட்டது. அதன் ஈரலைப் பொறிக்கும்படி நபி(ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். 'அல்லாஹ்வின் மீதாணையாக! எங்கள் நூற்றி முப்பது பேரில் ஒருவர் விடாமல் அனைவருக்குமே அதன் ஈரலில் இருந்து ஒரு துண்டை நபி(ஸல்) அவர்கள் துண்டித்துத் தந்திருந்தார்கள். அங்கிருந்தவருக்கு அதைக் கொடுத்தார்கள். அங்கில்லாதவருக்கு எடுத்து (பாதுகாத்து) வைத்தார்கள். இரண்டு (அகன்ற) தட்டுகளில் அவற்றை வைத்தார்கள். அனைவரும் உண்டார்கள். நாங்களும் வயிறு நிரம்ப உண்டோம். அப்படியிருந்தும் இரண்டு தட்டுகளும் அப்படியே மீதமாம்விட்டன. அவற்றை நாங்கள் ஒட்டகத்தின் ஏற்றிச் சென்றோம்.
பகுதி 29
இணைவைப்பவர்களுக்கு அன்பளிப் புச் செய்வது. அல்லாஹ் கூறுகிறான்: தீன் (இறைமார்க்கம்) தொடர்பான விஷயத்தில் எவர்கள் உங்களுடன் போர் புரியவில்லையோ, உங்களை உங்க ளுடைய வீடுகளிலிருந்து வெளியேற்ற வில்லையோ அவர்களிடம் நீங்கள் நல்லவிதமாகவும் நீதியுடனும் நடக்க வேண்டாமென்று அல்லாஹ் உங்களைத் தடுப்ப தில்லை. (60:8)
2619. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
உமர்(ரலி) ஒரு மனிதரின் (தோள்) மீது, விற்கப்படுகிற பட்டு அங்கியைக் கண்டார்கள். உடனே நபி(ஸல்) அவர்களிடம், 'இந்த அங்கியை வாங்கிக் கொள்ளுங்கள். ஜும்ஆ நாளிலும் (குலங்கள் மற்றும் நாடுகளின்) தூதுக் குழுக்கள் தங்களிடம் வரும் போதும் அணிந்து கொள்வீர்கள்" என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், 'எவருக்கு மறுமையில் எந்த நற்பேறும் இல்லையோ அவர்தான் இதை அணிவார்" என்று கூறினார்கள். பிறகு, ஒரு முறை நபி(ஸல்) அவர்களிடம் (அதே போன்ற பட்டு) அங்கிகள் கொண்டு வரப்பட்டன. நபி(ஸல்) அவர்கள் அவற்றிலிருந்து ஓர் அங்கியை உமர்(ரலி) அவர்களுக்கு அனுப்பி வைத்தார்கள். உமர்(ரலி), 'இது குறித்துக் கடுமையான சொற்களைத் தாங்கள் கூறியிருக்க, நான் எப்படி இதை அணிவேன்?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'நான் இதை நீங்கள் அணிந்து கொள்வதற்காகத் தரவில்லை. இதை நீங்கள் விற்றுவிடுங்கள்; அல்லது வேறு எவருக்காவது அணிவித்து விடுங்கள்" என்று கூறினார்கள். உமர்(ரலி) அதை மக்காவாசிகளில் ஒருவராயிருந்த தம் சகோதரருக்கு அவர் இஸ்லாத்தைத் தழுவுவதற்கு முன்பு அனுப்பி வைத்துவிட்டார்கள்.
2620. அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) கூறினார்.
என்னிடம், என் தாயார் அல்லாஹ்வின் தூதருடைய காலத்தில் வந்திருந்தார்கள். அப்போது அவர்கள் இணைவைப்பவராக இருந்தார்கள். நான் அல்லாஹ்வின் தூதரிடம், 'என் தாயார் என்னிடம் ஆசையுடன் வந்துள்ளார். என் தாயிடம் அவரின் உறவைப் பேணி நல்லமுறையில் நடந்து கொள்ளட்டுமா?' என்று கூறி மார்க்கத் தீர்ப்பு கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், 'ஆம். நீ உன் தாயின் உறவைப் பேணி அவருடன் நல்ல முறையில் நடந்து கொள்" என்று கூறினார்கள்.
பகுதி 30
தன் அன்பளிப்பையும் தருமத்தையும் திரும்பப் பெற்றுக் கொள்வது எவருக்கும் அனுமதிக்கப்பட்டதல்ல.
2621. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தன் அன்பளிப்புப் பொருளைத் திரும்பப் பெற்றுக் கொள்பவன் தன் வாந்தியைத் தானே திரும்ப உண்பவனைப் போன்றவன் ஆவான்.
என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
2622. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தன் அன்பளிப்பைத் திரும்பப் பெற்றுக் கொள்பவன் தன் வாந்தியைத் தானே திரும்பத் தின்கிற நாயைப் போன்றவன் ஆவான். (இது போன்ற) இழிகுணம் நமக்கு முறையல்ல.
என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
2623. உமர் இப்னு கத்தாப்(ரலி) அறிவித்தார்.
ஒரு குதிரையின் மீது ஒருவரை நான் இறைவழியில் (போரிடுவதற்காக) ஏற்றியனுப்பினேன். (அவருக்கே அதை தர்மமாகக் கொடுத்து விட்டேன்.) அதை வைத்திருந்தவர் அதை (சரியாகப் பராமரிக்காமல்) பாழாக்கிவிட்டார். எனவே, அந்த குதிரையை அவரிடமிருந்து வாங்க விரும்பினேன். அவர் அதை விலை மலிவாக விற்று விடுவார் என்று எண்ணினேன். எனவே, நபி(ஸல்) அவர்களிடம் அது குறித்துக் கேட்டேன். அவர்கள், 'நீங்கள் அதை வாங்காதீர்கள்; அவர் உங்களுக்க அதை ஒரேயொரு திர்ஹமுக்குக் கொடுத்தாலும் சரியே! ஏனெனில், தன் தருமத்தைத் திரும்பப் பெறுபவன், தன் வாந்தியைத் தானே திரும்பத் தின்கிற நாயைப் போன்றவன் ஆவான்" என்று கூறினார்கள்.
பகுதி 31
2624. அப்துல்லாஹ் இப்னு உபைதில்லாஹ் இப்னி அபீ முலைக்கா(ரஹ்) அறிவித்தார்.
இப்னு ஜுத்ஆனால் விடுதலை செய்யப்பட்ட அடிமையான சுஹைப்(ரலி) அவர்களின் மக்கள், தங்கள் தந்தையான சுஹைப்(ரலி) அவர்களுக்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (தம் ஆயுட்காலத்தில்) இரண்டு வீடுகளையும் ஓர் அறையையும் (அன்பளிப்பாகக்) கொடுத்ததாகக் கூறினர். '(உங்கள் கூற்று உண்மையானது என்பதற்கு) உங்கள் இருவருக்கும் யார் சாட்சி சொல்வார்?' என்று (ஆளுநர்) மர்வான் கேட்டார். அவர்கள், 'இப்னு உமர் அவர்கள் (எங்களுக்காக சாட்சி சொல்வார்கள்)" என்று கூறினர். உடனே மர்வான், இப்னு உமர்(ரலி) அவர்களைக் கூப்பிட்டனுப்பினார். இப்னு உமர்(ரலி), 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சுஹைப் அவர்களுக்கு இரண்டு வீடுகளையும் ஓர் அறையையும் கொடுத்தது உண்மை தான்" என்று சாட்சியம் அளித்தார்கள். இப்னு உமர்(ரலி) அவர்களின் சாட்சியத்தை வைத்து சுஹைப்(ரலி) அவர்களின் மக்களுக்குச் சாதகமாக மர்வான் தீர்ப்பளித்தார்.
பகுதி 32 உம்றாவும் ருக்பாவும்.21
2625. ஜாபிர்(ரலி) அறிவித்தார்.
உம்ராவாக (ஆயுட்கால அன்பளிப்பாக) வழங்கப்பட்ட பொருளைக் குறித்து நபி(ஸல்) அவர்கள், 'அது எவருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டதோ அவருக்கே உரியது" என்று தீர்ப்பளித்தார்கள்.
2626. நபி(ஸல்) அவர்கள் 'உம்ரா செல்லும்" என்று கூறினார்கள்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
"ஜாபிர்(ரலி) அவர்களும் இதே போன்றதை நபி(ஸல்) அவர்களிடமிருந்து எனக்கு அறிவித்தார்கள்" என்று அதாவு(ரஹ்) கூறினார்.
"ஜாபிர்(ரலி) அவர்களும் இதே போன்றதை நபி(ஸல்) அவர்களிடமிருந்து எனக்கு அறிவித்தார்கள்" என்று அதாவு(ரஹ்) கூறினார்.
பகுதி 33
மக்களிடமிருந்து குதிரையை இரவல் வாங்குதல்.
2627. அனஸ்(ரலி) அறிவித்தார்.
மதீனாவில் (பகைவர்கள் படையெடுத்து வருவதாக வதந்தி பரவி மக்களிடையே) பீதி ஏற்பட்டது. நபி(ஸல்) அவர்கள் அபூ தல்ஹா(ரலி) அவர்களிடமிருந்து 'மன்தூப்' என்று அழைக்கப்பட்ட குதிரை ஒன்றை இரவல் வாங்கினார்கள். அதில் ஏறி சவாரி செய்தார்கள். திரும்பி வந்தபோது, '(எதிரிகளின் படை எதனையும் அல்லது பீதியூட்டும்) எதனையும் நாம் காணவில்லை. தங்குதடையின்றி வேகமாக ஓடக் கூடியதாகவே நாம் இதனைக் கண்டோம்" என்று கூறினார்கள்.
பகுதி 34
மணமக்களுக்காக திருமணத்தின் போது இரவல் வாங்குதல்.
2628. அய்மன்(ரஹ்) அறிவித்தார்.
ஆயிஷா(ரலி) அவர்களிடம் நான் சென்றேன். அவர்கள் ஐந்து திர்ஹம்கள் விலையுடைய கெட்டியான சட்டை ஒன்றை அணிந்திருந்தார்கள். அவர்கள், 'உன் பார்வையை உயர்த்தி என் அடிமைப் பெண்ணைப் பார். அவள், வீட்டில் கூட இதை அணிய (மறுத்துப்) பெருமை பாராட்டுகிறாள். ஆனால், அல்லாஹ்வின் தூதருடைய காலத்தில் மற்ற பெண்களிடையே என்னிடம் (மட்டும் தான்) இதுபோன்றதொரு சட்டை இருந்தது. (அப்போது) மதீனாவில் (தங்கள் கணவன்மார்கள் முனபு அழகாகத் தோற்றமளிப்பதற்காக) அலங்கரிக்கப்படுகிற (புதுமணப்) பெண்கள் என்னிடம் அதை இரவல் வாங்குவதற்காக ஆளனுப்பாமல் இருந்ததில்லை" என்றார்கள்.
பகுதி 35
பாலுக்காக இரவல் வழங்கப்படும் ஆடு, அல்லது ஒட்டகத்தின் சிறப்பு.23
2629. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பாலுக்காக இரவல் வழங்கப்பட்ட, அதிகப் பால் தருகிற ஒட்டகம் தான் (அன்பளிப்பில்) சிறந்ததாகும். அதிகப் பால்தரும் ஆடும் (அன்பளிப்பில்) சிறந்ததாகும். அது காலையில் ஒரு பாத்திரம் (நிறையப்) பால் தருகிறது; மாலையில் ஒரு பாத்திரம் (நிறையப்) பால் தருகிறது.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
2630. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
முஹாஜிர்கள் (மக்காவிலிருந்து) மதீனாவுக்கு வந்தபோது அவர்களின் கையில் (செல்வம்) எதுவும் இருக்கவில்லை. அன்சாரிகள் நிலங்களையும் (பிற) அசையாச் சொத்துக்களையும் வைத்திருந்தார்கள். ஒவ்வோர் ஆண்டும் தங்கள் சொத்துக்களின் விளைச்சல்களை அவர்களுக்கு (குறிப்பிட்ட விகிதத்தில்) கொடுப்பதாகவும் 'எங்களுக்கு பதிலாக நீங்கள் அதில் சிரமப்பட்டு உழைக்க வேண்டும்' என்ற நிபந்தனையின் பேரிலும் அவற்றை முஹாஜிர்களுக்கு (குத்தகை நிலங்களாகப்) பங்கிட்டுக் கொடுத்தார்கள். என்னுடைய தாயார் உம்மு சுலைம் அவர்கள் (என் தாய்வழிச் சகோதரர்) அப்துல்லாஹ் இப்னு அபீ தல்ஹாவின் தாயாராகவும் இருந்தார்கள். அவர்கள் அல்லாஹ்வின் தூதருக்குச் சில பேரீச்ச மரங்களை (அவற்றின் கனிகளை மட்டும் பயன்படுத்திக் கொள்ளும்படி அன்பளிப்பாகக்) கொடுத்திருந்தார்கள். அவற்றை நபி(ஸல்) அவர்கள் தங்களின் அடிமைப் பெண்ணான, உஸாமா இப்னு ஜைத்டைய தாயார் உம்மு அய்மனுக்கு (அன்பளிப்பாகக்) கொடுத்தார்கள். கைபர்வாசிகளின் மீது போர் தொடுத்து முடித்து, மதீனாவுக்குத் திரும்பியபோது முஹாஜிர்கள், அன்சாரிகளின் மனீஹாக்களை (இரவலாகப் பயன்படுத்திக் கொள்ளும்படி அன்பளிப்புச் செய்த பேரீச்சந் தோட்டங்களை) அவர்களிடமே திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களும் என் தாயாரிடம் அவரின் பேரீச்ச மரங்களைத் திருப்பித் தந்துவிட்டார்கள். அவற்றுக்கு பதிலாக, உம்மு அய்மன் அவர்களுக்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தங்களின் தோட்டத்திலிருந்து (சில மரங்களை அன்பளிப்பாகக்) கொடுத்தார்கள்.
2631. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நாற்பது நல்ல காரியங்கள் உண்டு. அவற்றில் ஒன்றை, அதன் நன்மையை நாடியும், அதற்கென வாக்களிக்கப்பட்டுள்ள (சொர்க்கத்)தை உண்மையென நம்பியும் ஒருவர் கடைப்பிடித்து நடப்பாராயின், அதன் காரணத்தால் அவரை அல்லாஹ் சொர்க்கத்தில் புகுத்தியே தீருவான். அவற்றில் மிக உயர்ந்தது பெட்டை வெள்ளாட்டைப் பாலுக்காக இரவல் தருவதாகும்.
இதை அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.
அறிவிப்பாளர் ஹஸ்ஸான் இப்னு அதிய்யா(ரஹ்) கூறினார்:
பெட்டை வெள்ளாட்டைப் பாலுக்காக இரவல் தருவதையடுத்து, அதற்குக் கீழேயுள்ள நல்ல காரியங்களான சலாமுக்கு பதில் சொல்வது, தும்மியவருக்காகப் பிரார்த்திப்பது, பாதையில் கிடக்கும் தொல்லை தரும் பொருளை அகற்றுவது முதலியவற்றை நாம் எண்ணிப் பார்த்தோம். ஆனால், பதினைந்து நற்செயல்களைக் கூட நம்மால் எட்ட முடியவில்லை.
2632. ஜாபிர்(ரலி) அறிவித்தார்.
எங்களில் சிலருக்கு உபரி நிலங்கள் சில இருந்தன. அவர்கள், 'நாங்கள் அவற்றை அவற்றின் விளைச்சலில் மூன்றிலொரு பங்குக்கோ, கால் பங்குக்கோ, அரைப் பங்குக்கோ குத்தகைக்க விடுவோம்" என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், 'விளைச்சல் நிலம் வைத்திருப்பவர் அதில் தானே பயிரிடட்டும்; அல்லது தன் சகோதரருக்கு (மனீஹாவாகக்) கொடுத்து விடட்டும் அப்படிக் கொடுக்க மறுத்தால் அவர் தம் நிலத்தைத் தம்மிடமே வைத்துக் கொள்ளட்டும்" என்றார்கள்.
2633. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
அல்லாஹ்வின் தூதரிடம் கிராமவாசி ஒருவர் வந்து ஹிஜ்ரத்தைப் பற்றிக் கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ் உனக்குக் கருணை புரியட்டும். ஹிஜ்ரத் செய்வது ஒரு கடினமான காரியம். உன்னிடம் ஒட்டகம் இருக்கிறதா?' என்று கேட்டார்கள். அதற்கு அவர், 'ஆம்" என்று கூறினார். 'அதற்கு நீ ஸகாத் கொடுக்கிறாயா?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர், 'ஆம், (கொடுக்கிறேன்)" என்று பதிலளித்தார். '(அதன் பாலைப் பிறர் உபயோகித்துக் கொள்ள) அதை இரவலாக (மனீஹாவாக) கொடுக்கிறாயா?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர், 'ஆம், (கொடுக்கிறேன்)" என்று பதிலளித்தார். நபி(ஸல்) அவர்கள், 'அது நீர் அருந்தும் முறைவரும் நாளில் அதனிடம் பால் கறக்கிறாயா?' என்று கேட்க அவர், 'ஆம்" என்று பதிலளித்தார். 'அப்படியாயின், கடல்களுக்கு அப்பால் சென்று(கூட) நீ வேலை செய். ஏனெனில், அல்லாஹ் உன் நற்செயல்(களின் பிரதிபலன்)களிலிருந்து எதையும் குறைக்க மாட்டான்" என்று கூறினார்கள்.
2634. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் பயிர்(களின் கதிர்)கள் அசைந்தாடிக் கொண்டிருந்த ஒரு நிலத்திற்குச் சென்றார்கள். 'இது யாருடைய நிலம்?' என்று கேட்டார்கள். அங்கிருந்த மக்கள், 'இன்னார் இதைக் குத்தகைக்குக் கொடுத்திருக்கிறார்" என்று கூறினார்கள். அதற்கு அவர்கள், 'இந்த நிலத்திற்காகக் குறிப்பிட்ட ஒரு வாடகை அவர் பெற்றுக் கொள்வதை விட குத்தகைக்கு எடுத்தவருக்கு (அவர் அதை இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளும் படி) மனீஹாவாக (இரவலாக) கொடுத்து விட்டிருந்தால் அவருக்கு (நில உரிமையாளருக்கு) அது நன்மையானதாக இருந்திருக்கும்" என்று கூறினார்கள்.
பகுதி 36
மக்களின் வழக்கிலுள்ளபடி உனக்கு இந்த அடிமைப் பெண்ணைப் பணிப் பெண்ணாகக் கொடுத்து விடுகிறேன் என்று ஒருவர் கூறினால் அது செல்லும். இப்படிச் சொல்வது இரவலாகக் கொடுப்பதையே குறிக்கும் (அன்பளிப்பு ஆகாது) என்று சிலர் கூறுகின்றனர். மேலும், ஒருவர், நான் இந்த ஆடையை உனக்கு அணிவிக்கிறேன் என்று கூறினால் அது(வும்) அன்பளிப்பாகும்.26
2635. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இப்ராஹீம்(அலை) அவர்கள் (தம் மனைவி) ஸாரா அவர்களுடன் ஹிஜ்ரத் செய்தார்கள். எகிப்து நாட்டு மன்னரின் ஆட்கள், ஸாராவுக்கு ஹாஜரை (பணிப் பெண்ணாகக்) கொடுத்தார்கள். ஸாரா திரும்பி வந்து, 'அல்லாஹ், நிராகரிப்பாளனை இழிவுபடுத்தி (எனக்கு) ஓர் அடிமைப் பெண்ணைப் பணிப் பெண்ணாகத் தந்ததை நீங்கள் அறிவீர்களா?' என்று இப்ராஹீம்(அலை) அவர்களிடம் கேட்டார்கள்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
"எகிப்து நாட்டு மன்னன், ஸாராவுக்கு ஹாஜரைப் பணிப் பெண்ணாக அன்பளிப்புச் செய்தான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அவர்களின் மற்றோர் அறிவிப்பில் உள்ளது.
பகுதி 37
ஒரு மனிதர் (மற்றொரு மனிதரை) குதிரையின் மீது ஏற்றி (அனுப்பி) விட்டால் அது உம்றாவையும் சதகா வையும் போன்றதாகும்.27 அதைத் திரும்பப் பெற்றுக் கொள்ள அவனுக்கு உரிமையுண்டு என்று சிலர் கூறினர்.
2636. உமர்(ரலி) அறிவித்தார்.
நான் இறைவழியில் (போரிடுவதற்காக எனக்குச் சொந்தமான) ஒரு குதிரையின் மீது ஒருவரை ஏற்றி அனுப்பினேன். அந்த குதிரை (சந்தையில்) விற்கப்படுவதைக் கண்டேன். இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ("அதை வாங்கலாமா?' என்று) கேட்டேன். அவர்கள், 'அதை வாங்காதீர்கள். உங்கள் தர்மத்தைத் திரும்பப் பெறாதீர்கள்" என்று கூறினார்கள்.