அல்குர்ஆன் வரலாறு


அல்லாஹுதஆலா ஆதம், ஹவ்வா(அலை) இருவரையும் பூமிக்கு இறக்கும் போது,

فَإِمَّا يَأْتِيَنَّكُمْ مِنِّي هُدًى فَمَنْ تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ

... என்னிடமிருந்து (மனிதர்களாகிய) உங்களுக்கு வழிகாட்டுதல் வரும், என் வழிகாட்டுதலை எவர்கள் பின்பற்றி நடக்கிறார்களோ அவர்களுக்கு பயமில்லை. மேலும் அவர்கள் கவலை கொள்ளவும் மாட்டார்கள். (அல்குர்ஆன் 2:38)
என்று கூறினான்.

இந்த வாக்குறுதியின்படி, மனித சமுதாயம் பெருகி கருத்து வேறுபாடுகளும் தவறுகளும் தோன்றியபோது அல்லாஹுதஆலா, மனிதர்களில் தான் நாடியவர்களை தன் தூதர்களாக தேர்ந்தெடுத்து நல்வழிகாட்டும் வேதங்களை அவர்களுக்கு வழங்கி அதன்மூலம் மனிதரை நல்வழிப்படுத்துமாறு பணித்தான்.

كَانَ النَّاسُ أُمَّةً وَاحِدَةً فَبَعَثَ اللَّهُ النَّبِيِّينَ مُبَشِّرِينَ وَمُنذِرِينَ وَأَنزَلَ مَعَهُمْ الْكِتَابَ بِالْحَقِّ لِيَحْكُمَ بَيْنَ النَّاسِ فِيمَا اخْتَلَفُوا فِيهِ

மனிதர்கள் ஒரே சமுதாயமாக இருந்தனர். அல்லாஹ் நபிமார்களை நற்செய்தி கூறுபவர்களாகவும், எச்சரிக்கையாளர்களாகவும் அனுப்பினான். மனிதர்களுக்கிடையில்- அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டவற்றிலே- சத்தியத்தைக் கொண்டு தீர்ப்பளிப்பதற்காக வேதத்தையும் அவர்களுடன் இறக்கினான். (அல்குர்ஆன் 2:213)

அந்த வரிசையில் அல்லாஹுதஆலா தன் இறுதித் தூதராக தேர்ந்தெடுத்த முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு இறக்கியருளிய வேதமே குர்ஆன். அதுவே இறுதி வேதமுமாகும்.


அல்குர்ஆன் இறக்கியருளப்பட்ட விதம்:

முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு நாற்பது வயதாகியபோது தனித்திருந்து இறைவனை நினைவு கூர்வது பிரியமாய் தோன்றியது. அதன்படி மக்காவிலுள்ள ஒரு மலைக்குகையில் தனிமையில் பல நாட்கள் கழித்த பின் ஒரு நாள் வானவர் ஜிப்ரீல்(அலை) அங்கு தோன்றி திருகுர்ஆனின் அலக் என்ற அத்தியாயத்தின் முதல் ஐந்து வசனங்களை படிக்கும்படிச் செய்தார். இதுவே துவக்கமாக இறக்கியருளப்பட்ட குர்ஆன் வசனங்களாகும்.

பின்பு, முஹம்மத்(ஸல்) அவர்களின் இருபத்து மூன்று வருட நபித்துவ காலத்தில், பல்வேறு சந்தர்ப்பங்களில், தேவைக்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப இறைவனால் வானவர் ஜிப்ரீல்(அலை) அவர்களுக்கு அறிவிக்கப்பட்டு, அவர் மூலம் முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டது.


குர்ஆன்:

குர்ஆன் என்ற வார்த்தையின் பொருள் ஓதுதல் என்பதாகும் - இது அதிகம் ஓதப்படக் கூடியது என்ற கருத்திலேயே இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.

மேலும் குர்ஆனுக்கு வேறு சில பெயர்களும் உண்டு அவற்றில் சில:


  • வேதநூல்

  • பிரித்தறிவிப்பது (சத்தியம் அசத்தியத்தை)

  • உபதேசம்

  • ஒளி

  • வழிகாட்டி

மேலும் பல பண்புப் பெயர்கள் குர்ஆனில் கூறப்பட்டுள்ளன.


குர்ஆன் இறுதி வேதம் என்பதற்கான தகுந்த காரணங்கள்:

1) அல்குர்ஆனுக்கு முந்தைய வேதங்களில் முஹம்மத்(ஸல்) அவர்களின் வருகையைப்பற்றி கூறப்பட்டிருந்ததால் எல்லா மதத்தினரும் இறைவனின் இறுதித் தூதரை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் அரபுமக்கள் அல்குர்ஆனுக்கு முன்பு எந்த வேதமும் கொடுக்கப்படாதவர்களாக வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில் வேதங்கள் கொடுக்கப்பட்ட யூதர்களிலோ அல்லது கிருஸ்துவர்களிலோ இறைவனின் இறுதித் தூதர் தோன்றி இறுதிவேதம் கொடுக்கப்பட வேண்டும் என்றும் ஆனால் வேதமே கொடுக்கப்படாத அரபுக்களை நீதியாளனாகிய இறைவன் (வேதம் கொடுத்து) நல்வழிப்படுத்தாமல் விட்டுவிட வேண்டும் என்றும் சரியான சிந்தனை உள்ள மனிதர்கள் சொல்லமாட்டார்கள்.

மற்ற இனத்தவர்களுக்கு வேத வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டும் வழிகேட்டில் வாழ்ந்து கொண்டிருக்கையில் வேதமே வழங்கப்டாத அரபுகள் மிகவும் வழிகேட்டில் மூழ்கிக்கிடந்தனர். அதனை அவர்களும் அறிந்திருந்தார்கள்.

وَهَذَا كِتَابٌ أَنزَلْنَاهُ مُبَارَكٌ فَاتَّبِعُوهُ وَاتَّقُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ - أَنْ تَقُولُوا إِنَّمَا أُنزِلَ الْكِتَابُ عَلَى طَائِفَتَيْنِ مِنْ قَبْلِنَا وَإِنْ كُنَّا عَنْ دِرَاسَتِهِمْ لَغَافِلِينَ - أَوْ تَقُولُوا لَوْ أَنَّا أُنزِلَ عَلَيْنَا الْكِتَابُ لَكُنَّا أَهْدَى مِنْهُمْ فَقَدْ جَاءَكُمْ بَيِّنَةٌ مِنْ رَبِّكُمْ وَهُدًى وَرَحْمَةٌ

நாம் இறக்கி வைத்துள்ள இந்த வேதம் பாக்கியம் பொருந்தியதாகும். அதனைப் பின்பற்றுங்கள்...(இதனை அரபியில் இறக்கியதற்கான காரணம்) வேதம் இறக்கப்பட்டதெல்லாம் எங்களுக்கு முன் இரண்டு பிரிவினருக்குத்தான். நாங்கள் அவர்களிடம் படிக்கத் தெரியாதவர்களாயிருந்தோம் என்றோ அல்லது எங்கள் மீது வேதம் இறக்கப்பட்டிருந்தால் நாங்கள் அவர்களை விட அதிகம் நல்வழி நடப்பவர்களாய் இருந்திருப்போம் என்று சொல்கிற காரணத்தினால்..... (அல்குர்ஆன் 6:155, 156, 157)

ஆகவே இறுதிவேதம் அரபியில் இறக்கப்படுவதே நியாயம்.

2) அரபுக்கள் கீழை தேசத்தவரோடும் மேலை தேசத்தவரோடும் சம அளவிலே தொடர்புடையவர்களா இருந்தனர் - இருக்கின்றனர். இறுதி வேதம் என்பது உலகமக்களுக்கு எல்லாம் பொது வேதமாகவும் இருக்க வேண்டும். ஆகவே இறைவனின் இறுதி வேதம் பொது மறை உலகின் மத்திய பகுதியில் கிழக்கிலும் மேற்கிலும் சம அளவில் தொடர்புகொண்டுள்ள இனத்தில், மொழியில் இருப்பதே முறை. அரபுக்கள் அத்தகைய இனத்தவராகவும் அரபி மொழி அத்தகைய மொழியாகவும் உள்ளது.

3) முந்தைய வேதங்கள் இறக்கப்பட்ட மொழிகளெல்லாம் சில இல்லாமல் போய்விட்டன. சில குறுகிய வட்டத்திற்குள்ளேயே இருக்கின்றன. ஆனால் திருகுர்ஆன் இறக்கியருளப்பட்டுள்ள மொழியாகிய அரபிமொழி உலகின் எல்லாப் பகுதியிலும் பரவலாக எல்லா இனத்தவராலும் படிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.


குர்ஆன் ஒன்று திரட்டப்படுதல்:

நபி(ஸல்) அவர்கள் தனக்கு அருளப்பட்ட குர்ஆனை முழுமையாக மனதில் சுமந்தவர்களாக இருந்தார்கள்.

...ரமலான் மாதத்தின் ஒவ்வொரு இரவிலும் ஜிப்ரீல்(அலை) நபியவர்களை சந்திப்பார்கள். அவரிடம் நபி(ஸல்) அவர்கள் குர்ஆனை எடுத்தோதிக் காட்டுவார்கள். (புகாரி 4997)

சஹாபாக்களில் பலரும் குர்ஆனை முழுமையாக மனனம் செய்திருந்தார்கள். அவர்களில் பிரபலமான ஏழு பேரின் பெயர்கள் கீழ் வரும் மூன்று ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது.

1) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத், ஸாலிம், முஆத், உபய் பின் கஃப் ஆகிய நால்வரிடமிருந்து குர்ஆனை எடுத்துக் கொள்ளுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி 4999)

2) நபி(ஸல்) அவர்களின் காலத்தில் குர்ஆனை முழுமையாக மனனம் செய்திருந்தவர்கள் யார்? என்று அனஸ்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள், உபய் பின் கஃப், முஆத் பின் ஜபல், ஜைத் பின் ஸாபித், அபூ ஜைத் ஆகிய நால்வர் என்று பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: கத்தாதா(ரஹ்) புகாரி 5003)

3) அபூதர்தா, முஆத் பின் ஜபல், ஜைத் பின் ஸாபித், அபூ ஜைத் ஆகிய நால்வரைத் தவிர வேறு யாரும் நபியவர்கள் மரணிக்கும் போது குர்ஆனை முழுமையாக மனனம் செய்திருக்கவில்லை என அனஸ்(ரலி) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸாபித். புகாரி 5004)

மேற்குறிப்பிட்ட மூன்றாவது ஹதீஸ் நான்கு சஹாபாக்கள் மட்டுமே குர்ஆனை முழுமையாக மனனம் செய்திருந்ததாக கூறுகிறது - இதற்கு அறிஞர்கள்,  விளக்கம் கூறும்போது, அனஸ்(ரலி) அவர்களுக்கு தெரிய வந்தது இந்த நால்வர் மட்டும் தான் அல்லது தாங்கள் முழுமையாக மனனம் செய்ததை நபியிடம் முழுமையாக ஓதிக்காண்பித்தவர்கள் இந்நால்வர் மட்டுமாக இருக்கக்கூடும் என்று கூறுகின்றனர்.

ஏனெனில் குர்ஆனை முழுமையாக மனனம் செய்திருந்த சஹாபாக்களின் எண்ணிக்கை அதிகமாகும். அவர்களின் பெயர்கள்:

நான்கு கலீஃபாக்கள், தல்ஹா, ஸஃத், இப்னு மஸ்ஊத், ஹீதைஃபா, ஸாலிம், அபூஹுரைரா, அப்துல்லாஹ் பின் அஸ்ஸாஇப், அப்துல்லாஹ் பின் அப்பாஸ், அப்துல்லாஹ் பின் அம்ர், அப்துல்லாஹ் பின் உமர், அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர், ஆயிஷா, ஹஃப்ஸா, உம்மு ஸலமா, உபாதா பின் அஸ்ஸாமித், முஆத், முஜம்மிஃ பின் ஜாரியா, ஃபுளாலா பின் உபைத், மஸ்லமா பின் முக்லித்.

இவர்களில் சிலர் நபி(ஸல்) அவர்களின் மரணத்திற்கு பின்பே மனனம் செய்தலை நிறைவு செய்தார்கள். இந்த விபரங்கள், அபூ உபைத் அல் காஸிம் அவர்களின் "அல்-கிராஆத்" என்ற நூலை மேற்கோள்காட்டி, ஸுயூத்தி அவர்களின் "அல்இத்கான்" பாகம் 1, பக்கம் 72ல் இடம் பெற்றுள்ளது.


ஒரே ஏட்டில் எழுதப்படுதல்:

நபி(ஸல்) அவர்கள் குர்ஆனை எழுதுவதற்கு அலி, முஆவியா, உபய் பின் கஃப், ஜைத் பின் ஸாபித் போன்ற சஹாபாக்களை நியமித்திருந்தார்கள். வஹி இறங்கியவுடன் எழுதுபவர்களை அழைத்து அதனை எழுதும் படி கட்டளையிடுவார்கள்.

அதே போல் சஹாபாக்களில் பலரும் தாங்கள் ஓதுவதற்காக தாங்களாக முன் வந்து குர்ஆனை எழுதிவைத்திருந்தார்கள்.

இப்படி குர்ஆன் முழுவதும் எழுதப்பட்டிருந்தது. ஆனால் ஒரே ஏட்டில் முழுமையாக எழுதப்படவில்லை. அதாவது சிலரிடம் சில சூராக்களும் வேறு சிலரிடம் வேறு சில சூராக்களும் என்கிற நிலையே இருந்தது. இவ்வாறு இருக்கும் நிலையிலேயே நபியவர்கள் மரணமடைந்தார்கள்.

நபியின் மரணத்திற்குப் பின்பு, அபூபக்ர்(ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் ஹிஜ்ரி பனிரெண்டாம் வருடம் நடைபெற்ற யமாமா யுத்தத்திற்கு பின்பு குர்ஆன் ஒரே ஏட்டில் எழுதப்பட்டது. அதுபற்றிய விபரம்:

ஜைத் பின் ஜாபித்(ரலி) அவர்கள் கூறுகிறார்கள். யமாமா யுத்தத்திற்குப் பின்பு அபூபக்ர்(ரலி) என்னை கூப்பிட்டு ஆள் அனுப்பினார்கள். நான் அவர்களிடம் சென்ற போது அவர்களோடு உமர்(ரலி) அவர்களும் இருந்தார்கள். அப்போது அபூபக்ர்(ரலி) அவர்கள் கூறினார்கள். யமாமா யுத்தத்தில் குர்ஆனை மனனம் செய்த காரீகள் அதிகமாக கொல்லப்பட்டு விட்டனர். வேறு போர்களில் இன்னும் அதிக காரீகள் கொல்லப்படலாம் என்று நான் அஞ்சுகிறேன். அப்படி நடந்தால் குர்ஆனின் பல பகுதிகள் இல்லாமல் போய்விடும். ஆகவே குர்ஆன் முழுமையாக(ஒரே ஏட்டில்)ஒன்று திரட்டப்படுவதற்கு நீங்கள் உத்தரவிட வேண்டுமென்று நான் எதிர்பார்க்கிறேன் என உமர் என்னிடம் வந்து கூறினார். அதற்கு நான் உமரிடம், அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றை நாம் எப்படிச் செய்வதென்றேன், அதற்கு உமர், அல்லாஹ்வின் மீது சத்தியமாக இது நல்ல செயல்தான் என்று கூறி என்னிடம் இது பற்றி திரும்பத்திரும்ப பேசியபின் அல்லாஹ் என் மனதில் அது பற்றிய தெளிவை ஏற்படுத்தினான். உமரின் கருத்தை நான் சரியென கருதுகிறேன். [இவ்வாறு அபூபக்ர்(ரலி) அவர்களுக்கும் உமர்(ரலி) அவர்களுக்கும் நடந்த உரையாடலை ஸஜத்(ரலி) அவர்களிடம் அபூபக்ர்(ரலி) அவர்கள் கூறினார்கள்].

ஜைத்(ரலி) தொடர்ந்து கூறுகிறார்கள்: அபூபக்ர் தொடர்ந்து என்னைப்பார்த்து, நீங்கள் விவரமான இளைஞர் நபி(ஸல்) அவர்களுக்கு வஹியை எழுதுபவராக இருந்திருக்கிறீர்கள் உங்களை நாங்கள் சந்தேகிக்கவில்லை. குர்ஆனை பலரிடமிருந்து பெற்று ஒன்று சேருங்கள் என்றார்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக மலைகளில் ஒரு மலையை நகர்த்தும் படி அவர்கள் என்னைப் பணித்திருந்தால் குர்ஆனை ஒன்று சேர்க்கும் படி இட்ட கட்டளையை விட கனமானதாக இருந்திருக்காது. அப்போது நான் (அபூபக்ர், உமர் இருவரையும் நோக்கி) அல்லாஹ்வின் தூதர் செய்யாத ஒன்றை நீங்கள் இருவரும் எப்படிச் செய்யலாம்? என்றேன். அல்லாஹ்வின் மீது சத்தியமாக இது நல்ல செயல்தான் என்று கூறி அபூபக்ர் என்னிடம் திரும்பத்திரும்ப பேசினார்கள்- அதனால் அபூபக்ர் உமர் ஆகியோரின் மனதில் எதுபற்றிய தெளிவை அல்லாஹ் ஏற்படுத்தினானோ அதுபற்றிய தெளிவை என் மனதிலும் ஏற்படுத்தினான்.

அதன் பின் குர்ஆனை பலரிடமிருந்து பெற்று மரப்பட்டைகளிலிருந்தும், கற்தகடுகளிலிருந்தும் மனிதர்களின் இதயங்களிலிருந்தும் ஒன்று சேர்த்தேன். சூரத்துத் தவ்பாவின் கடைசி இரண்டு வசனங்களை அபூ குஜைமா அல் அன்சாரியிடம் கிடைக்கப் பெற்றேன் மற்றவர்களிடம் கிடைக்கவில்லை, (ஒன்று சேர்க்கப்பட்ட) அந்த முழு குர்ஆன் அபூபக்ர் அவர்களிடம் அவர்கள் மரணிக்கும் வரையிலும் இருந்தது. பின்பு உமரிடமும் அதன்பின் அவர்களின் மகள் ஹஃப்ஸாவிடமும் இருந்தது. (அறிவிப்பவர்: ஜைத் பின் ஸாபித்(ரலி) நூல்: புகாரி 4986)

குர்ஆனை ஒன்று திரட்டுவதில் ஜைத் பின் ஸாபித்(ரலி) அவர்கள் மிக கண்ணும் கருத்துமாக இருந்து நுட்பமான வழி முறையை கையாண்டிருக்கிறார்கள் என்பது மேற்கூறிய செய்திகளால் இருந்து தெரியவருகிறது. அதாவது மனப்பாடத்திலிருந்து மட்டும் அவர்கள் கேட்டு எழுதவில்லை. எல்லா வசனங்களையும் எழுத்து வடிவிலும் பெற்ற பின்பே எழுதியிருக்கிறார்கள். அதில் வெறும் இரண்டு வசனங்கள் மாத்திரம் பலரிடம் மனனத்தில் இருந்தாலும் கூட அபூ குஜைமா(ரலி) அவர்களிடம் மட்டுமே எழுத்து வடிவில் இருந்தது என்பதை குறிப்பிட்டுச் சொல்வதை கவனிக்கவும்.


குர்ஆன் பிரதியெடுக்கப்படுதல்:

இஸ்லாம் பல நாடுகளிலும் பரவியபோது குர்ஆனின் ஏழு ஹர்ஃப் முறைப்படி (ஏழு ஹர்ஃப் பற்றி பின்பு காண்போம்) ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு முறையில் குர்ஆனை மக்கள் படித்தார்கள். அதேபோல் குர்ஆனின் வார்த்தைகளை தங்கள் பகுதி உச்சரிப்பின்படி படித்தனர். இதனால் வெவ்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் ஒரே இடத்தில் கூடினால் குர்ஆனை ஓதுவதில் வேறுபாட்டை கண்டனர். ஒவ்வொரு பகுதியினரும் தாங்கள் ஓதுவதே சரியான முறை என்றும் மற்றவர்களுடைய கிராஅத் தவறு என்றும் கூறினர். இதனால் பல இடங்களில் குர்ஆனை ஓதுவதில் சர்ச்கைகள் எழுந்தது. ஆகவே ஒரே வித கிராஅத்தில் முஸ்லிம்கள் அனைவரையும் ஒன்றினைப்பது அவசியமானது. உஸ்மான்(ரலி) அவர்கள் தங்கள் ஆட்சி காலத்தில் அதனைச் செய்தார்கள். அதுபற்றியவிவரம்:

அனஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அர்மீனிய்யா மற்றும் அதர்பய்ஜான் போர் நாட்களில் ஷாம் வாசிகளுக்கும் இராக் வாசிகளுக்கும் குர்ஆனை ஓதுவதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதைக் கண்டு கவலை கொண்ட ஹுதைஃபா பின் அல்யமான்(ரலி) அவர்கள் கலீஃபா உஸ்மான்(ரலி) அவர்களிடம் வந்து, யூத கிருத்தவர்கள் கருத்து வேறுபாடு கொண்டது போல் இந்த உம்மத்தும் வேதத்தில் கருத்து வேறுபாடு கொள்வதற்கு முன் பிடித்து நிறுத்துங்கள் என்று கூறினார்கள். உடனே ஹஃப்ஸா(ரலி) அவர்களிடமிருந்த மூல குர்ஆனைப் பெற்று, ஜைத் பின் ஸாபித், அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர், ஸஈத் பின் அல்ஆஸ், அப்துர்ரஹ்மான் பின் அல்ஹாரிஸ் ஆகிய நால்வர் குழுவிடம் அதனைப் பிரதி எடுக்கும் படி உஸ்மான்(ரலி) அவர்கள் பணித்தார்கள். அப்போது உஸ்மான்(ரலி) இந்நால்வரில் குறைஷிகளாகிய பிந்திய மூவரையும் பார்த்து. நீங்கள் குர்ஆனின் ஏதேனும் வார்த்தையை எந்த விதத்தில் எழுதுவது என்று(மதீனாவாசியாகிய) ஜைத் பின் ஸாபித்தோடு முரண்பட்டீர்களென்றால் அந்தவார்த்தையை குறைஷிகளின் பேச்சு வழக்குப்படியே எழுதுங்கள். ஏனெனில் குர்ஆன் குறைஷிகளின் பேச்சுவழக்கில் தான் இறங்கியது என்றார்கள். அதன்படி அவர்கள் நால்வரும் குர்ஆனை பல பிரதிகளாக எழுதி முடித்தபோது மூல குர்ஆனை ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் உஸ்மான்(ரலி) திருப்பிக் கொடுத்தார்கள். பிரதி எடுக்கப்பட்டதை எல்லாப்பகுதிகளுக்கும் அனுப்பி வைத்தார்கள். மேலும் அதற்கு முன்பிருந்த எல்லா குர்ஆன் பிரதிகளையும் எரித்துவிடும்படி கட்டளையிட்டார்கள். நூல்: புகாரி 4987

இந்தச் செய்தி மூலம், குர்ஆனை ஏழு ஹர்ஃப் முறைப்படி ஓதுவது அனுமதியிருந்தாலும் அதனால் கருத்து வேறுபாடு ஏற்படுவதை தவிர்க்கவும், மேலும் அரபுமக்கள் ஒவ்வொரு பகுதியினரும் குர்ஆனின் வார்த்தைகளை தங்களின் பகுதி வழக்கப்படி உச்சரிக்கும் நிலையை மாற்றவும் உஸ்மான்(ரலி) அவர்கள் ஏற்பாடு செய்ததை அறிகிறோம்.

அதாவது குர்ஆனை ஒரே முறையில் எல்லோரும் ஓதுதல். பல பகுதிகளின் பேச்சு வழக்கம் (எழுத்து உச்சரிப்பு) மாறு பட்டாலும் குர்ஆனின் வார்த்தைகள் மக்கா குறைஷிகளின் வழக்கப்படி மொழியப்படுதல். உஸ்மான்(ரலி) அவர்களின் உத்தரவினால் எழுதப்பட்ட குர்ஆனின் பிரதிகளின் எண்ணிக்கை ஏழு என்றும் நான்கு என்றும் ஐந்து என்றும் மூன்று விதமான கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன.

1) அபூ ஹாத்தம் அஸ்ஸஜிஸ்தானி(ரஹ்) அவர்கள் கூறினார்கள். எழுதப்பட்ட குர்ஆன் பிரதிகள் ஏழு. அவை மக்கா, ஷாம், யமன், பஹ்ரைன், பஸரா, கூஃபா ஆகிய ஆறு பகுதிகளுக்கும் ஒவ்வொன்று அனுப்பப்பட்டு மதீனாவில் ஒன்று வைக்கப்பட்டது. (ஆதாரம்: இப்னு அபீதாவூத் அவர்களின் கிதாபுல் மஸாஹிஃப் என்ற நூல்).

2) பெரும்பான்மை உலமாக்கள், உஸ்மான்(ரலி) அவர்களால் பிரதியெடுக்கப்பட்ட குர்ஆன் பிரதிகளின் எண்ணிக்கை நான்கு என்ற கருத்தைக் கொண்டுள்ளார்கள். கூஃபா, பஸரா, ஷாம் ஆகியவற்றுக்கு ஒவ்வொன்று அனுப்பிவிட்டு, ஒன்றை தன்னிடம் (மதீனாவில்) வைத்துக் கொண்டார்கள். (ஆதாரம்: அபூ அம்ர் அத்தானீ அவர்களின் அல் முக்னிஉ என்ற நூல்).

3) ஐந்து பிரதிகள் எடுக்கப்பட்டது என்ற கருத்தை இமாம் ஸுயூத்தி அவர்கள் தனது அல் இத்கான் என்ற நூலில் குறிப்பிடுகிறார்கள்.


குர்ஆன் பற்றிய சில விவரங்கள்:

குர்ஆனின் சூராக்கள் அவற்றின் அளவை கவனித்து நான்கு வகை:

1) (அத்திவால்) நீளமானவை: அவை ஏழு. 1)பகரா 2)ஆல இம்ரான் 3)அந்நிஸா 4)அல்மாயிதா 5)அல் அன்ஆம் 6)அல் அஃராஃப் 7)அல் அன்ஃபால், அத்தவ்பா (இரண்டும் இணைந்து)

2) (அல்மிஊன்) நூறுகள்: அவை நூறு வசனங்களை விட சற்று அதிக வசனங்களைக் கொண்ட சூராக்கள். அல்லது நூறு வசனங்களுக்கு சற்று குறைவான வசனங்களை கொண்டவை.

3) (அல் மஸானீ) மீண்டும் மீண்டும் ஓதப்படுபவை: (முதல் இரண்டு வகைகளை காட்டிலும் அதிகமாக திரும்பத்திரும்ப இவை ஓதப்படுவதால் இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. இவை இரண்டாவது வகையை விட குறைந்த எண்ணிக்கையிலான வசனங்களை கொண்டவை.

4) (அல் முஃபஸ்ஸல்) பிரிக்கப்பட்டது: (இந்த வகை சூராக்கள் அதிகமான ''பிஸ்மில்லா(ஹ்)"க்களால் பிரிக்கப்பட்டிருப்பதால் இப்பெயர் பெற்றுள்ளன). இவ்வகை, மூன்று பிரிவுகளைக் கொண்டது.

ஒன்று, (திவாலுல் முஃபஸ்ஸல்) முஃபஸ்ஸலில் நீளமானவை - அவை சூரத்துல் ஹுஜ்ராத்திலிருந்து சூரத்துல் புரூஜ் வரையிலாகும்.

இரண்டு, (அவ்ஸாத்துல் முஃபஸ்ஸல்) முஃபஸ்ஸலில் நடுத்தரமானவை - இவை சூரத்துல் புரூஜ் முதல் சூரத்துல் ளுஹா வரையிலாகும்.

மூன்று, (கிஸாருல் முஃபஸ்ஸல்) முஃபஸ்ஸலில் சுருக்கமானவை - இவை சூரத்துல் ளுஹா முதல் குர்ஆனின் இறுதி (அந்நாஸ்) வரையிலாகும்.

குர்ஆனின் சூராக்கள்(அத்தியாயங்கள்)எண்ணிக்கை 114 (நூற்றி பதினான்கு).

குர்ஆனின் ஆயத்துக்கள் (வசனங்கள்) மொத்தம் 6200 (ஆராயிரத்து இருநூறு) ஆகும். (இதை விட கூடுதல் எண்ணிக்கையும் கூறப்படுகிறது அதற்கான காரணம், சில நிறுத்தங்களை ஆயத்து முடிவதாக சிலர் கருதுவதால்)

குர்ஆனின் வார்த்தைகள் மொத்தம்: 77439 ஆகும். (சிலர் 77437 என்றும் வேறுசிலர் 77277 என்றும் கூறுகின்றனர்).

குர்ஆனின் எழுத்துக்கள் மொத்தம்: 323015 ஆகும். (சிலர் 321000 என்றும் வேறுசிலர் 340740  என்றும் கூறுகின்றனர்).


குர்ஆனை ஓதுவதற்கு எளிதாக கீழ்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது.

ஜுஸ்வுக்கள் (பாகங்கள்) - 30 (முப்பது)

ஹிஸ்புக்கள் (குழுக்கள்) - 60 (அறுபது) (அதாவது இரண்டு ஹிஸ்புக்கள் சேர்ந்து ஒரு ஜீஸ்வு ஆகும்)

ருப்உக்கள் (கால் பகுதிகள்) - 240 இருநூற்றி நாற்பது (அதாவது நான்கு ருப்உக்கள் சேர்ந்து ஒரு ஹிஸ்பு ஆகும்)


ஏழு ஹர்ஃபுக்கள் மற்றும் ஏழு கிராஅத்துகள்:

திருகுர்ஆனின் தனிச் சிறப்புக்களில் ஓன்று, அது ஏழு ஹர்ஃபுக்களில் (ஏழு எழுத்துக்களில்) இறக்கப்பட்டது. இப்போது, ஒரே ஹர்ஃபைத் தவிர வேறு எந்த ஹர்ஃபும் நடைமுறையில் ஓதப்படுவதில்லையே ஏன்? என்ற கேள்வி எழலாம்.

ஒரு ஹர்ஃப் தவிர்த்து மற்ற ஹர்ஃபுக்களில் குர்ஆனை ஓதுவதை உஸ்மான்(ரலி) அவர்கள் தங்கள் ஆட்சிக்காலத்தில் நிறுத்தினார்கள். (இதனை பாடம் ஒன்றில் கண்டோம்.) ஏனென்றால் குர்ஆன் முழுமையாக ஏடுகளில் ஏழுதப்படுவதற்கு முன்னால் ஓதுவதற்கு இலகுவாயிருப்பதற்காகத்தான் ஏழு ஹர்ஃப் முறை, குர்ஆன் முழுமையாக ஏடுகளில் வந்த பின்பும் பல ஹர்ஃபுகளில் ஓதுவது குழப்பத்திற்கு வழி வகுக்கும். ஆகவே ஒரே ஹர்ஃபில் ஓதப்படுவதே குர்ஆன் பாதுகாக்கப்படுவதற்கு சரியான வழி முறை என்பதால் ஸஹாபாக்கள் அனைவரும் உஸ்மான்(ரலி) அவர்களின் முடிவை ஏக மனதாக ஒப்புக்கொண்டார்கள். இஸ்லாமிய உம்மத் முழுவதும் சேர்ந்து ஒன்று பட்டு தவறு செய்யாது என்ற அடிப்படையின் படி, ஒரே ஹர்ஃபில் எல்லோரும் ஒன்றுப்பட்டு ஒதுவது சரியான வழியே ஆகும்.

ஏழு ஹர்ஃபுகள் என்பதற்கு நாம் மேலே கண்ட விளக்கத்தின் படி, ஏழு ஹர்ஃபுக்கள் என்பது ஏழு கிராத்துகள் அல்ல என்பது புலனாகும். ஆனால் சிலரது கருத்துப்படி ஏழு கிராஅத்துகள் ஏழு ஹர்ஃபுக்களில் சேரும். ஆனால் இக்கருத்து பலவீனமானதாகும்.


ஏழு கிராஅத்துக்கள்:

ஏழு கிராஅத்துகள் என்பது குர்ஆனை ஏழு முறைகளில் படித்தலாகும். அதாவது குர்ஆனின் பல்வேறு வார்த்தைகளை ஒவ்வொரு கிராஅத்திலும் வித்தியாசமாக படித்தல். ஒரே வார்த்தை மீது அரபி இலக்கணத்தின் வெவ்வேறு சட்டத்தை பிரயோகிப்பது. உதாரணமாக

ஒரு வார்த்தைக்கு அரபி இலக்கண சட்டப்படி  ــُ  என்கிற அடையாளமிட்டு படிப்பது அதே வார்த்தைக்கு இலக்கணத்தின் இன்னொரு சட்டத்தைப் பிரயோகித்து  ــَ என்கிற அடையாளம் கொடுத்து படிப்பது. அதே போல் ஒரே வார்த்தையை வெவ்வேறு அமைப்பில் படிப்பது, எழுத்துக்களின் உச்சரிப்பில் வல்லினம், மெல்லினம், நீட்டல், சுருக்கல், நெருக்கமான உச்சரிப்புள்ள எழுத்துக்களை இணைத்து ஒன்றாக ஆக்குதல் போன்றவற்றில் வேறுபட்ட முறைகளை கையாண்டு படிப்பதால் கிராஅத்துகள்(ஓதுதல்கள்) பலவாறாக ஆகின்றது.

அப்படி வேறுபட்ட கிராஅத்துகளின் எண்ணிக்கை ஏழு. இத்தகைய வேறுபாட்டினால் அர்த்தம் வேறு படுவதில்லை. அப்படியே அர்த்தம் வேறு பட்டாலும் முரண்பாடான அர்த்தம் வருவதில்லை.
சூரத்துல் ஃபாத்திஹாவில் கிராஅத்துக்கள் வித்தியாசப்படும் இடங்கள் உதாரணத்திற்காக கீழே தரப்பட்டுள்ளது:


வித்தியாசப்படும் கிராஅத்:

مَلِكِ يَوْمِ الدِّينِ மலிகி என படிப்பது

வித்தியாசப்படும் கிராஅத்தில் "மலிக்" என்ற வார்த்தைக்கு அரசன் என்று பொருள். இது நடைமுறை கிராஅத்திலுள்ள "மாலிக்" என்ற வார்த்தையின் பொருளாகிய அதிபதி என்ற அர்த்தத்தோடு வித்தியாசப்பட்டாலும் இரண்டு பொருளும் அவ்விடத்தில் பொருந்திப் போவதைக் கவனிக்கவும்.

اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ   - சிவப்பு மார்க் செய்யப்பட்டதை  அரபி எழுத்து சீன் (س) உச்சரிப்பில் படிப்பது (அர்த்தம் மாறுவதில்லை).

صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ  -  சிவப்பு மார்க் செய்யப்பட்டதை சீன் (س) உச்சரிப்பில் படிப்பது (அர்த்தம் மாறுவதில்லை).

ஏழு கிராஅத்களும் நபி(ஸல்) அவர்களிடமிருந்து சஹாபாக்கள் படித்து சஹாபாக்கள் தாபியீன்களுக்கு படித்துக் கொடுத்ததாகும். ஏழு கிராஅத்தில் ஒவ்வொன்றையும் ஏழு காரீக்கள் (ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கிராஅத்) ஹிஜ்ரீ இரண்டாம் நூற்றாண்டில் மக்களுக்குப் படித்துக் கொடுத்து பிரபலமடைந்தார்கள். அவர்களில் சிலர் தாபிஈன்கள் சிலர் தபஉத்தாபியீன்களாவர்.


ஏழு கிராஅத்களின் இமாம்கள்:

1) அபூ அம்ர் பின் அல் அலாஃ அல்பஸரீ, மரணம் 154 ஹிஜ்ரி

2) அப்துல்லாஹ் இப்னு கஸீர் அல்மக்கீ, தாபிஈ, மரணம் 120 ஹிஜ்ரி

3) நாஃபிஉ பின் அப்துர்ரஹ்மான் அல்மதனீ, மரணம் 169 ஹிஜ்ரி

4) அப்துல்லாஹ் இப்னு ஆமிர் அல்யஹ்ஸுபீ, தாபிஈ, மரணம் 118 ஹிஜ்ரி

5) ஆஸிம் பின் அபின்னஜ்வத் அல்கூஃபி, தாபிஈ, மரணம் 128 ஹிஜ்ரி

6) ஹம்ஜா பின் ஹபீப் அல்கூஃபி, மரணம் 156 ஹிஜ்ரி

7) அல்கஸாஈ அலி பின் ஹம்ஜா அல்கூஃபி, மரணம் 189 ஹிஜ்ரி

மேற் கூறிய ஏழு கிராஅத்களுடன் இன்னும் ஏழு கிராஅத்கள் உண்டு. ஆனால் அவை குறைந்த அளவில் ஓதப்படுபவை பிரபலமாகாதவை.

ஏழு கிராஅத்களில் நடைமுறையில் நாம் ஓதிக் கொண்டிருப்பது, ஆஸிம் பின் அபின்னஜ்வத் அவர்களின் கிராஅத்தாகும்.

ஏழு கிராஅத்களையும் விளக்கி எழுதப்பட்ட முற்கால நூற்களில் சில:

நூல்
ஆசிரியர்
மரணம் (ஹிஜ்ரி)

السبعه في القراءات
ابو بكر بن مجاهد
324

الحجه للقراء السبعه
ابو علي الفارسي
377

التيسير في القراءات السبع
ابو عمر الداني
444

தற்காலத்தில் எல்லா கிராஅத்களையும் விளக்கி விரிவாக எழுதப்பட்ட நூல் முஃஜமுல் கிராஆத் ஆகும். அதன் ஆசிரியர் அப்துல்லத்தீஃப் அல் கத்தீப், இது 11 வால்யூம்களைக் கொண்டதாகும்.
கிராஅத்களை உள்ளடக்கிய குர்ஆன் வெளீயீடுகள்:

நூல்
فيض الرحيم في القران الكريم

ஆசிரியர்
سعيد محمد اللحام

இதில் நடைமுறையிலுள்ள கிராஅத்தைக் கொண்ட குர்ஆன் நடுப்பக்கத்திலும் ஓரங்களில் மற்ற ஆறு கிராஅத்கள் வித்தியாசப்படும் விவரமும் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் مصحف القراءات العشر என்ற குர்ஆன் பதிப்பில் நடுவில் நடைமுறையிலுள்ள கிராஅத் குர்ஆனும் ஓரங்களில் ஒன்பது கிராஅத்கள் வித்தியாசப்படும் விவரமும் கூறப்பட்டுள்ளது.

மேலும் மதீனாவிலுள்ள மன்னர் ஃபஹத் குர்ஆன் வெளியீட்டு நிறுவனத்தால் அபூ அம்ர் அவர்களின் கிராஅத்திலும் நாஃபிஉ அவர்களின் கிராஅத்திலும் தனித்தனியாக குர்ஆன்கள் பிரசுரித்து வெளியிடப்பட்டுள்ளது. அவற்றின் பெயர்:

القران الكريم برواية الدوري عن ابي عمر
القران الكريم برواية ورش عن نافع

குர்ஆனின் கிராஅத்கள் பற்றிய கல்வி இஸ்லாமிய பல்கலைக் கழகங்களில் குர்ஆன் பிரிவில் படித்துக் கொடுக்கப்படுகிறது, குறிப்பாக மதீனாவிலுள்ள அல்ஜாமிஆ அல் இஸ்லாமிய பல்கலைக் கழகத்திலும் கெய்ரோ ஜாமிஉல் அஸ்ஹர் பல்கலைக் கழகத்திலும் முக்கியத்துவத்துடன் அதிக அளவில் படிக்கப்படுகிறது.

சவூதி அரேபியா தலைநகர் ரியாதிலிருந்து ஒலி பரப்பாகும் "இதாஅத்துல் குர்ஆன்" ரேடியோ ஒலிபரப்பில் பல கிராஅத்துகளில் குர்ஆன் ஓதப்படுவதைக் கேட்கலாம்.



மக்கிய்யா, மதனிய்யா:

குர்ஆனின் சூராக்கள் இறங்கிய காலகட்டத்தை கருத்தில் கொண்டு மக்கிய்யா என்றும் மதனிய்யா என்றும் இரண்டு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.

மக்கிய்யா என்பது நபி(ஸல்) அவர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செல்வதற்கு முன்புள்ள மக்கா வாழ்க்கையில் இறங்கிய சூராவாகும். மதனிய்யா என்பது நபியவர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் சென்ற பின்னுள்ள மதீனா வாழ்க்கையில் இறங்கிய சூராவாகும்.

இந்த விளக்கத்தின்படி மக்கா வாழ்க்கையில் மக்காவிற்கு வெள்யே இறங்கியதும் மக்கிய்யா என்றே சொல்லப்படும். உதாரணமாக,

وَاسْأَلْ مَنْ أَرْسَلْنَا مِنْ قَبْلِكَ مِنْ رُسُلِنَا أَجَعَلْنَا مِنْ دُونِ الرَّحْمَانِ آلِهَةً يُعْبَدُونَ

என்று துவங்கும் திருகுர்ஆனின் 43:45 வது வசனம் மிஃராஜ் இரவில் பைத்துல் முகத்தஸில் இறங்கியது. இது மக்கா வாழ்க்கையில் இறங்கியதால் மக்கிய்யாவில் சேரும்.

அதே போல் மதீனா வாழ்க்கை காலகட்டத்தில் மதீனாவிற்கு வெளியே இறங்கியதும் மதனிய்யா என்றே சொல்லப்படும். உதாரணமாக,

إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَنْ تُؤَدُّوا الْأَمَانَاتِ إِلَى أَهْلِهَا وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَنْ تَحْكُمُوا بِالْعَدْلِ إِنَّ اللَّهَ نِعِمَّا يَعِظُكُمْ بِهِ إِنَّ اللَّهَ كَانَ سَمِيعًا بَصِيرًا

என்று துவங்கும் திருகுர்ஆனின் 4:58 வது வசனம் மக்கா வெற்றி நாளில் மக்காவில் கஃபாவினுள் வைத்து இறங்கியதாகும். ஹிஜ்ரத்திற்குப்பின் மதீனா வாழ்க்கையில் இறங்கியதால் இது மதனிய்யாவாகும்.

மக்கிய்யா, மதனிய்யாவை முடிவு செய்வதில் அறிஞர்கள் இரண்டு வழிமுறையை கையாண்டிருக்கிறார்கள். ஒன்று சஹாபாக்கள், தாபிஈன்களால் அறிவிக்கப்பட்ட செய்தியை வைத்து முடிவு செய்வது. மற்றொன்று இஜ்திஹாத்(ஆய்வு செய்தல்) மூலம் முடிவு செய்வது. இப்படி ஆய்வின் மூலம் முடிவு செய்யப்பட்ட சூராக்களில் மக்கிய்யா என்றும் மதனிய்யா என்றும் இரு வேறு கருத்துக்கள் சொல்லப்பட்டுள்ளது.


மதனிய்யா சூராக்கள் மொத்தம் இருபது, அவை:
(சூராவின் எண் அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளது)

1) அல்பக்கரா (2)
2) ஆலு இம்ரான் (3)
3) அந்நிஸா (4) 
4) அல்மாஇதா (5)
5) அல் அன்ஃபால் (8)
6) அத்தவ்பா (9)
7) அந்நூர் (24)
8) அல் அஹ்ஸாப் (33)
9) முஹம்மத் (47)
10) அல் ஃபத்ஹ் (48)
11) அல் ஹுஜ்ராத் (49)
12) அல் ஹதீத் (57)
13) அல் முஜாதலா (58)
14) அல் ஹஷ்ர் (59)
15) அல் மும்தஹினா (60)
16) அல் ஜும்ஆ (62)
17) அல் முனாஃபிகூன் (63)
18) அத்தலாக் (65)
19) அத்தஹ்ரீம் (66)
20) அந்நஸ்ர் (110)


மதனிய்யா என்று சிலராலும் மக்கிய்யா என்று வேறு சிலராலும் சொல்லப்படும் சூராக்கள் பனிரண்டு, அவை:

1) அல் ஃபாத்திஹா (1)
2) அர்ரஃத் (13)
3) அர்ரஹ்மான் (55)
4) அஸ்ஸஃப் (61)
5) அத்தகாபுன் (64)
6) அத்தத்ஃபீஃப் (83)
7) அல்கத்ர் (97)
8)அல் பய்யினா (98)
9) அஸ்ஸல்ஸலா (99)
10) அல் இக்லாஸ் (112)
11) அல் ஃபலக் (113)
12) அந்நாஸ் (114)

மேற் கூறிய சூராக்கள் தவிர்த்து மீதியுள்ள 82 சூராக்கள் மக்கிய்யாவாகும்.

ஒரு சூராவை மக்கிய்யா என்றோ மதனிய்யாவென்றோ கூறப்படுவதனால் அந்த சூரா முழுமையும் அப்படி இருக்க வேண்டும் என்பதில்லை, சில வேளை மக்கிய்யாவான சூராவில் மதீனா வாழ்க்கையில் இறங்கிய சில ஆயத்துக்கள் இடம் பெறலாம். அதே போல் மதனிய்யாவான சூராவில் மக்கா வாழ்க்கையில் இறங்கிய சில ஆயத்துக்கள் இடம் பெறலாம். எனவேதான் திருகுர்ஆனின் சில பதிப்புக்களில் சில சூராக்களின் துவக்கத்தில் "இது மக்கிய்யா ஆனால் சில ஆயத்துக்களைத்தவிர" என்றும் "இது மதனிய்யா ஆனால் சில ஆயத்துக்களைத்தவிர" என்றும் குறிப்பிட்டிருப்பதைக் காண்கிறோம்.


சூரா மதனிய்யாவில் மக்கிய்யாவான ஆயத்து இடம் பெறுவது:

உதாரணம்:

சூரத்துல் அன்ஃபால் மதனிய்யாவாகும். ஆனால்

وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ

என்று துவங்கும் 30வது ஆயத்து மக்காவில் இறங்கியது.

மேலும் அதே சூராவின் 64வது ஆயத்து உமர்(ரலி) இஸ்லாத்தை ஏற்றபோது இறங்கியது என்ற இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களின் கூற்றுப்படி(ஆதாரம் முஸ்னதுல் பஸ்ஸார்) மக்கிய்யாவாகும்.


சூரா மக்கிய்யாவில் மதனிய்யாவான ஆயத்து இடம் பெறுவது:

உதாரணம்:

சூரத்துல் அன்ஆம் மக்கிய்யாவாகும், ஆனால்

قُلْ تَعَالَوْا أَتْلُ مَا حَرَّمَ رَبُّكُمْ عَلَيْكُمْ أَلَّا تُشْرِكُوا بِهِ شَيْئًا وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَلَا تَقْتُلُوا أَوْلَادَكُمْ مِنْ إِمْلَاقٍ نَحْنُ نَرْزُقُكُمْ وَإِيَّاهُمْ وَلَا تَقْرَبُوا الْفَوَاحِشَ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ وَلَا تَقْتُلُوا النَّفْسَ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلَّا بِالْحَقِّ ذَلِكُمْ وَصَّاكُمْ بِهِ لَعَلَّكُمْ تَعْقِلُونَ
وَلَا تَقْرَبُوا مَالَ الْيَتِيمِ إِلَّا بِالَّتِي هِيَ أَحْسَنُ حَتَّى يَبْلُغَ أَشُدَّهُ وَأَوْفُوا الْكَيْلَ وَالْمِيزَانَ بِالْقِسْطِ لَا نُكَلِّفُ نَفْسًا إِلَّا وُسْعَهَا وَإِذَا قُلْتُمْ فَاعْدِلُوا وَلَوْ كَانَ ذَا قُرْبَى وَبِعَهْدِ اللَّهِ أَوْفُوا ذَلِكُمْ وَصَّاكُمْ بِهِ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ
وَأَنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيمًا فَاتَّبِعُوهُ وَلَا تَتَّبِعُوا السُّبُلَ فَتَفَرَّقَ بِكُمْ عَنْ سَبِيلِهِ ذَلِكُمْ وَصَّاكُمْ بِهِ لَعَلَّكُمْ تَتَّقُونَ

ஆகிய 151வது ஆயத்து முதல் 153வது ஆயத்து வரை மதீனாவில் இறங்கியது.


சூரா மக்கிய்யாவை வரையறுப்பவை:

1) ஸஜ்தா இடம் பெறும் சூராவெல்லாம் மக்கிய்யா.

2) பின்வரும் பதம் இடம் பெறும் சூராவெல்லாம் மக்கிய்யா.
كَلَّا
3) எந்த சூராவிலெல்லாம்
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا
என்ற வாசகம் இடம் பெறாமல்
يَاأَيُّهَا النَّاسُ
என்ற வாசகம் மட்டும் இடம் பெறுகிறதோ அதுவெல்லாம் மக்கியா. (இதில் சூரத்துல் ஹஜ் மட்டும் விதிவிலக்கு) எனினும் அதன் இறுதியில்
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا
என்ற வாசகம் இடம் பெறுகிறது.

4) நபிமார்கள் சரித்திரமும், பழங்கால சமுதாயங்களின் சரித்திரமும் இடம் பெறும் சூராவெல்லாம் மக்கிய்யா. (சூரத்துல் பக்கரா இதில் விதிவிலக்கு)

5) ஆதம் இப்லீஸ் பற்றி செய்தி இடம் பெறும் சூராவெல்லாம் மக்கிய்யா (சூரத்துல் பக்கறா இதில் விதிவிலக்கு)

6) தனித்தனி எழுத்துக்களால் துவக்கப்படும் சூராவெல்லாம் மக்கிய்யா. உதாரணமாக:
الـم - الر - حم
(ஆனால் இதில் சூரத்துல் பக்கராவும் ஆலு இம்ரானும் விதிவிலக்கு)



மக்கிய்யா சூராக்களின் தனித்தன்மைகள்:

1) தவ்ஹீதுக்கான அழைப்பு, தூதுத்துவம் மற்றும் மறுமை வாழ்வை உறுதிப்படுத்துதல், கியாமத், சொர்க்கம், நரகம் ஆகியவற்றை கூறுதல், அறிவுப்பூர்வமான ஆதாரங்கள் மூலம் முஷ்ரிக்கீன்களுடன் தர்க்கம் செய்தல்.

2) சட்டத்தை நடைமுறைப்படுத்த தேவையான பொதுவான அடிப்படைகளை எடுத்துவைத்தல் சமுதாயத்தில் இருக்கவேண்டிய சிறந்த குணநலன்களை எடுத்துக்கூறல், முஷ்ரிக்கீன்களின் பாவங்களையும் தீய பழக்கங்களையும் விவரித்தல்.

3) சத்தியத்தை மறுப்பவர்கள் படிப்பினை பெறுவதற்காகவும், நபி(ஸல்) அவர்களுக்கு ஆறுதல் அளிப்பதற்காகவும் முற்கால நபிமார்களின் சரித்திரத்தையும் முற்கால சமுதாயத்தினர் சரித்திரத்தையும் எடுத்துக் கூறல்.

4) உள்ளத்தை உலுக்கும் படியான கடுமையான வார்த்தைகளை சுருக்கமாக இடம் பெறுதலும் ஆயத்துக்கள் சுருக்கமாக இருத்தலும்.


சூரா மதனிய்யாவை வரையறுப்பவை:

1) எந்த சூராவில் ஃபர்ள்(கடமையான செயல்) பற்றி கூறப்பட்டுள்ளதோ அல்லது குற்றவியல் தண்டனை கூறப்பட்டுள்ளதோ அது மதனிய்யா.

2) முனாஃபிக்குகள் பற்றி கூறப்பட்டுள்ள சூரா, மதனிய்யா(ஆனால் இதில் சூரத்துல் அன்கபூத் சேராது அது மக்கிய்யா)

3) வேதக்காரர்களுடன் விவாதம் இடம் பெறும் சூராவெல்லாம் மதனிய்யாவாகும்.


மதனிய்யா சூராக்களின் தனித்தன்மைகள்:

1)வணக்கங்கள், கொடுக்கல் வாங்கள், குற்றவியல் சட்டங்கள், குடும்பவியல், வாரிசுரிமை, புனிதப்போரின் சிறப்பு, சமூகத் தொடர்பு, சமாதானம் மற்றும் போரில் தங்களுக்கிடையிலான தொடர்பு, சட்டங்களின் அடிப்படைகள் ஆகியவை பற்றி விளக்கங்கள் இடம் பெறுதல்.

2) வேதக்காரர்களாகிய யூத - கிருத்தவர்களோடு உரையாடுதல், மற்றும் அவர்களை இஸ்லாத்தின் பால் அழைத்தல், இறைவேதத்தில் அவர்கள் செய்த இடைச் செருகல் பற்றிவிளக்குதல்.

3) முனாஃபிக்குகளின் நடத்தையை தெளிவுபடுத்துதல், அவர்களின் துரோகத்தை வெளிக்கொண்டு வருதல், மார்க்கத்துக்கு அவர்களால் ஏற்படும் ஆபத்தை விளக்குதல்.

4) ஷரீஅத் சட்டத்தையும் அதன் நோக்கங்களையும் விளக்குவதில் ஆயத்துகள் நீண்டிருத்தல்.


மக்கிய்யா மதனிய்யா பற்றி அறிவதினால் ஏற்படும் பலன்கள்:

அ) குர்ஆன் விளக்க உரைக்கு உதவியாக அமையும் ஏனெனில் ஒரு ஆயத்து இறங்கிய இடத்தையும், சூழ்நிலையையும் அறிவது, அதனை சரிவரம் புரிந்து தெளிவான விளக்கம் கொடுக்க ஒத்துழைக்கும்.

ஆ) குர்ஆனின் வெவ்வேறு பாணியை அனுபவிக்கும் வாய்ப்பு, ஏனெனில் மக்கா முஷ்ரிகீன்களுடன் உரையாடுவதிலும் மதீனாவில் முஃமின்களுடனும் வேதக்காரர்களுடனும் முனாஃபிகீன்களுடன் உரையாடுவதிலும் குர்ஆன் வெவ்வேறு பாணியை கொண்டுள்ளது. மேலும் இறைவழியில் மக்களை அழைக்கும் முறையை கற்றுக் கொள்வதும் ஒருபலன், ஏனெனில் முஷ்ரிக்கீன்களை இறைவழியில் அழைக்கும் முறையிலும் வேதக்காரர்களை அழைக்கும் முறையிலும் இறை நம்பிக்கையாளர்களுக்கு உபதேசம் செய்வதிலும் வித்தியாசமான முறையைக் கையாளவேண்டும், மக்கிய்யா மதனிய்யா மூலம் அதைத் தெரிந்து கொள்ளலாம்.

இ) நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை சரிதையின் முக்கிய பகுதிகளை அறியும் வாய்ப்பு - ஏனெனில் மக்கிய்யா சூராக்கள் நபியின் பதிமூன்று வருட மக்கா வாழ்வில் சந்தித்த பல்வேறு பிரச்சனைகளோடு தொடர்பு கொண்டு இறங்கியதாகும். அதுபோல் மதனிய்யா சூராக்கள் நபியின் பத்து வருட மதீனா வாழ்வின் பிரச்சனைகளோடு தொடர்புடையவையாகும்.


குர்ஆனில் முதலாவதாக இறங்கியது:

நபி(ஸல்) அவர்கள் தங்களின் நாற்பதாவது வயதில் மக்காவிற்கு அருகிலுள்ள மலையிலுள்ள ஹிரா குகையில் தனிமையில் பல நாட்கள் இறைவணக்கத்தில் ஈடுபட்ட பின் வானவர் ஜிப்ரீல்(அலை) அவர்கள் முன் தோன்றி

اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ

என்று தொடங்கும் சூரத்துல் அலக்கின் முதல் ஐந்து வசனங்களை நபியவர்களுக்கு ஓதிக் கொடுத்தார்கள் - இதுவே குர்ஆனில் முதலாவதாக இறங்கிய பகுதியாகும். இது பற்றிய விரிவான விளக்கம் புகாரியின் மூன்றாவது ஹதீஸில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் புகாரியின் 4922வது ஹதீஸ், சூரத்துல் முத்தஸ்ஸிர் முதலாவதாக இறங்கியதாக குறிப்பிடுகிறது, அதில் ஜாபிர்(ரலி) அவர்கள் கூறுகிறார்கள். ரசூலுல்லாஹி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் ஹிராவில் தங்கியிருந்து விட்டு இறங்கினேன். அப்போது என்னை அழைக்கப்படும் சப்தத்தைக் கேட்டேன். என் வலப்புரமும் இடப்புறமும், முன்னாலும் பின்னாலும் பார்த்தேன் எதையும் காணவில்லை. மேலே தலையை உயர்த்திப்பார்த்தேன். ஏதோ ஒன்றைக் கண்டேன். கதீஜாவிடம் வந்து என்னைப் போர்த்துங்கள் என்மீது குளிர்ந்த நீரை ஊற்றுங்கள் என்றேன். என்மீது குளிர்ந்த நீரை ஊற்றினார்கள். போர்த்திவிட்டார்கள் அப்போது

يَاأَيُّهَا الْمُدَّثِّرُ

என்று துவங்கும் சூரத்துல் முத்தஸ்ஸிர் இறங்கியது.

இந்த ஹதீஸில் கூறப்பட்டுள்ள சூரத்துல் முத்தஸ்ஸிரை, நபி(ஸல்) அவர்கள்
اقْرَأْ
மூலமாக நபித்துவம் கிடைத்த பின் முதலாவதாக இறங்கியது என்ற எடுத்துக் கொள்வதே சரியாகும். ஏனெனில் இதே ஹதீஸ் கூடுதல் விளக்கத்துடன் புகாரியில் நான்காவது ஹதீஸாக இடம் பெற்றுள்ளது.

அதில் நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:

நான் நடந்து சென்று கொண்டிருக்கும் போது மேலிருந்து ஒரு சப்தத்தைக் கேட்டேன். என் பார்வையை உயர்த்திப் பார்த்தபோது, என்னிடத்திலே ஹிராகுகையில் வந்த அதே மலக்கு வானத்துக்கும் பூமிக்கும் மத்தியில் ஒரு ஆசனத்தில் அமர்ந்திருக்கக் கண்டேன், அவரைக் கண்டு திடுக்கிட்டேன். திரும்பி வந்து என்னைப் போர்த்துங்கள் என்றேன். அப்போது அல்லாஹுதஆலா
يَاأَيُّهَا الْمُدَّثِّرُ
என்று தொடங்கும் சூராவை இறக்கினான்.

இந்த ஹதீஸில் "என்னிடத்திலே ஹிராகுகையில் வந்த அதே மலக்கு" என்ற வாசகத்தின் மூலம் ஹிராகுகையில் இதற்குமுன் நபியவர்கள் ஜிப்ரீலை சந்தித்தார்கள் என்பது புலனாகிறது. அப்போது
اقْرَأْ
இறங்கியது என்பதும் புகாரியின் மூன்றாவது ஹதீஸில் கூறப்பட்டுள்ளது - ஆகவே
اقْرَأْ
மூலமாக நபியவர்களுக்கு நபித்துவம் கிடைத்து அடுத்து சிறிது காலம் வஹி இறங்காமல் இருந்த பின் முதலாவதாக அல் முத்தஸ்ஸிர் இறங்கியது என்று எடுத்துக் கொள்ளலாம். அல்லது சூரத்துல் அலக்கின் முதல் ஐந்து ஆயத்துகள் மட்டுமே இறங்கியிருந்து நிலையில் முதலாவதாக முழுமையாக இறங்கிய சூரா அல் முத்தஸ்ஸிர் என்றும் வைத்துக்கொள்ளலாம்.


குர்ஆனில் இறுதியாக இறங்கியது:

الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمْ الْإِسْلَامَ دِينًا

என்று துவங்கும் சூரத்துல் மாயிதாவின் மூன்றாவது ஆயத்து மார்க்கத்தை முழுமைப்படுத்தி விட்டதாக கூறுவதாலும், நபியவர்களின் இறுதி ஹஜ்ஜில் அரஃபா தினத்தில் (நபியின் மரணத்திற்கு மூன்று மாதங்களுக்கு முன்) இறங்கியதாலும் (ஆதாரம் புகாரி 45) இதுவே குர்ஆனில் இறுதியாக இறங்கியது என்று புரிய முடிகிறது.

மேலும்
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَذَرُوا
என்று துவங்கும் சூரத்துல் பக்கராவின் 278வது வசனம் இறுதியாக இறங்கியதாகவும் (புகாரி 4544) அதே தொடரில் வரும்
وَاتَّقُوا يَوْمًا تُرْجَعُونَ فِيهِ إِلَى اللَّهِ  
என்று தொடங்கும் 281 வசனம் இறுதியாக இறங்கியதாகவும் (நஸாயீ) இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களால் கூறப்பட்டுள்ளது.

இதன்படி, அல்மாயிதாவின் மூன்றாவது ஆயத்துக்கு சில நாட்கள் முன் அல்பக்கராவின் ஆயத்துகள் இறங்கியிருக்கலாம். அல்லது அல்மாயிதாவின் ஆயத்துக்குப் பின் தான் இறங்கியது என்று வைத்துக் கொண்டாலும் முரண்பாடில்லை. ஏனெனில் வட்டி பற்றி ஏற்கனவே இருந்த சட்டத்தை மீண்டும் நினைவூட்டியே சூரத்துல் பக்கராவின் ஆயத்து இறங்கியுள்ளது. ஆகவே மார்க்கத்தை முழுமைப்படுத்திவிட்டதாக கூறும் அல்மாயிதாவின் ஆயத்தோடு முரண்படுவதாக கொள்ள முடியாது.

மேலும் சூரத்துன்னஸ்ர் இறுதியாக இறங்கிய சூராவென்று இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கூறும் கூற்று ஸஹீஹ் முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது.

நபி(ஸல்) அவர்கள் இறுதியாக இறங்கியது இதுதான் என்று குறிப்பிட்டு கூறாததால், இப்படி மூன்று விதமான கருத்து கூறப்பட்டுள்ளது.
அல்லாஹ் நன்கறிந்தவன்.


ஸபபுன் னுஸுல்
سبب النزول
மனிதருக்கு நல்வழிகாட்டுதலான குர்ஆனை அல்லாஹுதஆலா இருபத்து மூன்று வருடகால இடைவெளியில், விரும்பிய பகுதியை தான் விரும்பும் நேரத்தில் நபியவர்களுக்கு இறக்கிவைத்தான். இப்படித்தான் குர்ஆனின் பெரும் பகுதி இறக்கப்பட்டது.

ஆயினும், குர்ஆனின் சில பகுதிகள், குறிப்பிட்ட பிரச்னைகளுக்குத் தீர்வாகவோ அல்லது நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலாகவோ இறக்கப்பட்டுள்ளன, ஒரு வசனம்(அல்லது சில வசனங்கள்) இறங்குவதற்கு காரணமாயிருந்த பிரச்னையும் கேள்வியும் ஸபபுன் னுஸுல் (இறங்கியதன் காரணம்) என்று கூறப்படும்.

உதாரணம்: ஒன்று (பிரச்சினை காரணமாகயிருத்தல்)

இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். "உன் நெருங்கிய உறவினர்களை எச்சரிக்கை செய்" என்ற (சூரத்துஷ்ஷுஅராஃ 214) வசனம் இறங்கியதும் நபி(ஸல்) அவர்கள் ஸஃபா மலை மீது ஏறி நின்று தன் உறவினர்களை சப்தமாட்டு அழைத்தார்கள். எல்லோரும் ஒன்று கூடினார்கள் அப்போது நபியவர்கள், இந்த மலைக்குப் பின்னிருந்து ஒரு குதிரைப்படை (உங்களைத்தாக்க)வருகிறது என்று நான் கூறினால், என்னை நம்புவீர்களா? என்று கேட்டார்கள். அதற்கவர்கள் நீங்கள் பொய் சொல்லி நாங்கள் கேட்டதில்லை என்று பதிலளித்தார்கள். அப்போது, கடும் வேதனை வருவதற்கு முன் உங்களுக்கு எச்சரிக்கையாளனாக நான் இருக்கிறேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூலஹப், "உனக்கு அழிவு உண்டாகட்டும் இதற்குத்தானா எங்களை ஒன்று கூட்டினாய்", என்று கூறி எழுந்து சென்றான், அப்போது, "தப்பத்யதா அபீலஹபிவ்வதப்" என்ற (சூரத்துல் மஸத்) சூரா இறங்கியது.
ஆதாரம்: புகாரி(4971) முஸ்லிம்.

அதாவது சூரத்துல் மஸத் இறங்குவதற்கு காரணமாக இருந்தது நபி(ஸல்) அவர்கள் ஸஃபா மலையில் நின்று தம் உறவினர்களுக்கு பிரச்சாரம் செய்த நிகழ்ச்சியாகும். ஆகவே இந்திகழ்ச்சி சூரத்துல் மஸதிற்கு ஸபபுன்னுஸுல் ஆகும்.


உதாரணம் இரண்டு: (கேள்வி காரணமாயிருத்தல்)

கவ்லா பின்த் ஸஃலபா(ரலியல்லாஹீ அன்ஹா) அவர்களை அவரது கணவர் அவ்ஸ் பின் அஸ்ஸாமித்(ரலி) "ளிஹார்" செய்தார். (அச்சமூகத்தில் ளிஹார் என்பது கணவன் தன் மனைவியைப் பார்த்து, "நீ எனக்கு என் தாயின் முதுகு போல் ஹராம் ஆவாய்" என்று கூறி பிரிவது, இது தலாக்கைப் போல் முழுமையான பிரிவை ஏற்படுத்தாததினால் பெண்ணிற்கு கொடுமை புரிவதாக அமையும்). இந்த ளிஹாருக்க எதிராக நியாயம் கேட்டு தன்னிலையை விளக்கி கவ்லா(ரலி) அவர்கள் நபியிடம் தர்க்கம் செய்தார். அதற்கு தீர்வு கூறி சூரத்துல் முஜாதலாவின்
நபியே!) எவள் தன் கணவனைப் பற்றி உம்மிடம் தர்க்தித்து, அல்லாஹ்விடமும் முறையிட்டுக் கொண்டாளோ, அவளுடைய வார்த்தையை நிச்சயமாக அல்லாஹ் செவியேற்றுக் கொண்டான் - மேலும், அல்லாஹ் உங்களிருவரின் வாக்கு வாதத்தையும் செவியேற்றான். நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியேற்பவன், (எல்லாவற்றையும்) பார்ப்பவன்.

"உங்களில் சிலர் தம் மனைவியரைத் "தாய்கள்" எனக் கூறிவிடுகின்றனர், அதனால் அவர்கள் இவர்களுடைடைய தாய்கள்" (ஆகிவிடுவது) இல்லை இவர்களைப் பெற்றெடுத்தவர்கள் தாம் இவர்களுடைய தாய்கள் ஆவார்கள் - எனினும், நிச்சயமாக இவர்கள் சொல்லில் வெறுக்கத்தக்கதையும், பொய்யானதையுமே கூறுகிறார்கள் - ஆனால் நிச்சயமாக அல்லாஹ் மிகவும் பொறுப்பவன், மிகவும் மன்னிப்பவன்...
எனத் தொடரும் ஆரம்பப்பகுதிகளை அல்லாஹ் இறக்கினான்.
(ஹதீஸின் கருத்து) - அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்: இப்னுமாஜா, ஹாக்கிம்.

கவ்லா(ரலி) தனக்கொரு முடிவைக்கேட்டு நபியிடம் தர்க்கம் செய்த நிகழ்ச்சி, சூரத்துல் முஜாதலாவின் துவக்கம் பகுதிக்கு "ஸபபுன்னுஸுல்" ஆகும்.


எல்லா வசனம்களுக்கும் ஸபபுன்னுஸுல் இருக்கிறதா?

குர்ஆனின் ஒவ்வொரு வசனத்துக்கும் ஸபபுன்னுஸுல் இல்லை. ஏனென்றால், இஸ்லாமிய நம்பிக்கையையும் இஸ்லாத்தின் கடமைகளையும் நடைமுறைக் கூட்டங்களையும் விளக்குவதற்காக அல்லாஹ் தன் விருப்பத்தின் படி எந்த நிகழ்ச்சியோடும் பிரச்னையோடும் தொடர்பில்லாமலும் எந்தக் கேள்வியும் கேட்கப்படாத நிலையிலும் குர்ஆனின் பெரும் பகுதியை இறக்கிவைத்துள்ளான்.

குர்ஆன் இரண்டு வகையில் இறங்கியது. ஒன்று தானாக இறங்கியது. மற்றொன்று ஏதேனும் நிகழ்ச்சி அல்லது கேள்வியின் பின்னணியில் இறங்கியது என்ற அல்ஜஃபரீயின் கூற்றை இமாம் ஸுயூத்தி அவர்கள் தனது அல் இத்கான் என்ற நூலின் முதல் பாகத்தில் பக்கம் 28ல் குறிப்பிட்டுள்ளார்கள்.


ஸபபுன்னுஸுலை அறிவதால் விளையும் பலன்:

வசனம் இறங்கியதன் காரணத்தை அறிவது அதனை தெளிவாக புரிந்து கொள்வதற்கு சிறந்த வழியாகும். சில வசனம்க்களில் மூடலாக குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்களை ஸபபுன்னுஸுலை அறிவதனாலேயே விவரமாக புரிந்து கொள்ள முடிகிறது.

உதாரணமாக, "இன்ன ஸஃபா வல் மர்வத்த மின்ஷஆயிரில்லாஹ்" என்று தொடங்கும் சூரத்துல் பக்கராவின் 158வது வசனத்தின் பொருள், "ஸஃபாவும் மர்வாவும்" அல்லாஹ்வின் சின்னங்களில் உள்ளவை. எனவே யார் ஹஜ்ஜோ அல்லது உம்ராவோ செய்கிறாரோ அவர் அவ்விரண்டிலும் சுற்றிவருவது (ஸஃயி செய்வது) குற்றமில்லை".

இந்த ஆயத்தில் குற்றமில்லை என்று கூறப்பட்டுள்ளதின் படி பார்த்தால் ஸஃபா மர்வாவில் ஸஃயி செய்வது அவசியமில்லை என்று புரியமுடிகிறது, ஆனால் அப்படிப் புரிவது தவறு என்பது ஸபபுன்னுஸுலை அறிந்தால் புலனாகும்.

உர்வா கூறுகிறார்: நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம் "இன்ன ஸஃபா வல் மர்வத்த மின்ஷஆயிரில்லாஹ்" (சூரத்துல் பக்கரா 158) என்ற அல்லாஹ்வின் கூற்றுப்படி, ஒருவர் ஸஃபா மர்வாவில் சுற்றிவராவிட்டால் (அதாவது ஸஃயி செய்யாவிட்டால்) குற்றமாகும் என்று நான் கருதவில்லை என்றேன். அதற்கு ஆயிஷா(ரலி) அவர்கள், "என் சகோதரியின் மகனே நீ சொல்வது தவறு, நீ கூறுகிற விளக்கம் சரியாக இருக்குமென்றால் அந்த ஆயத்தில் "ஸஃபா மர்வாவில் ஸஃயி செய்யாமலிருப்பது குற்றமில்லை" என்று தான் இடம் பெற்றிருக்கும். எனினும் இந்த வசனம் இறங்கக் காரணம், அன்ஸார்கள் இஸ்லாத்திற்கு முன் மனாத் என்கிற கற்பனை தெய்வத்துக்காக ஸஃயி செய்து கொண்டிருந்தார்கள். அப்படிச் செய்து கொண்டிருந்தவர்கள் முஸ்லிமான பின் ஸஃயி செய்ய சங்கடப்பட்டார்கள். எனவேதான் அல்லாஹ் இந்த ஆயத்தை இறக்கினான்", என்று விளக்கிய ஆயிஷா(ரலி) அவர்கள் தொடர்ந்து, நபி(ஸல்) ஸஃபா மர்வாவில் ஸஃயி செய்வதை தெளிவுபடுத்தி விட்டார்கள் எனவே அதனை விட்டு விடுவதற்கு யாருக்கும் அனுமதியில்லை என்று கூறினார்கள். (புகாரி 1643)


காரணம் குறிப்பிட்ட ஒன்றானாலும் வழிகாட்டல் பொதுவானதே:

ஒரு வசனம் இன்னார் விஷயத்தில் இறங்கியது என்று சொல்லப்பட்டாலும் அதிலிருந்து பெறப்படும் படிப்பினை எல்லோருக்கும் பொதுவானதே.

அதாவது குறிப்பிட்ட ஒருவருக்குக் கட்டளையாகவோ அல்லது தடையாகவோ ஒரு வசனம் இறங்கியிருந்தால், அது அந்த குறிப்பிட்ட நபரையும் அவருடைய நிலையிலுள்ள மற்றவர்களையும் உள்ளடக்கும், அதேபோல் குறிப்பிட்ட ஒருவரையோ அல்லது சிலரையோ புகழ்ந்தோ இகழ்ந்தோ ஒரு வசனம் இறங்கியிருந்தால் அவர்களையும் அவர்கள் நிலையிலுள்ள மற்றவர்களையும் உள்ளடக்கும்.

உதாரணம், இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

ஹிலால் பின் உமய்யா(ரலி) அவர்கள், தன் மனைவியை ஷரீக் பின் ஸஹ்மாஃ என்பவரோடு தொடர்பு படுத்தி நபி(ஸல்) அவர்களிடம் குற்றம் சுமத்தினார்- அதற்கு நபியவர்கள், ஆதாரம் வேண்டும்(சாட்சியை கொண்டுவா) இல்லாவிட்டால் உன் முதுகில் கசையடிவிழும் என்றார்கள். அதற்கு ஹிலால்(ரலி) அல்லாஹ்வின் தூதரே எங்களில் ஒருவர் தன் மனைவி மீது ஒரு ஆணைக் கண்டால் அவர் நடந்துபோய் ஆதாரத்தை(சாட்சியை) தேடவேண்டுமா? என்றார்- அதற்கும் நபியவர்கள் ஆதாரம்! இல்லாவிட்டால் உன் முதுகில் கசையடி! என்றார்கள் அப்போது ஹிலால்(ரலி), உங்களை சத்தியத்துடன் அனுப்பிவைத்தவன் மீது சத்தியமாக நான் உண்மைதான் சொல்கிறேன்- என் முதுகை கசையடியை விட்டு அகற்றிவைக்கும் தீர்வை அல்லாஹ் இறக்கிவைப்பான் என்றார்- அப்போது ஜுப்ரீல்(அலை) இறங்கி சூரத்துன்னூரின் ஆறாவது வசனத்திலிருந்து ஒன்பதாவது வசனம் வரையிலான வசனங்களை நபி(ஸல்) அவர்கள் மீது இறக்கிவைத்தார்கள். (நூல்: புகாரி 4747)

இந்த வசனங்கள் ஹிலால்(ரலி) அவர்களின் பிரச்னைக்குத்தீர்வாக இறங்கினாலும் அவர்களின் சூழ்நிலைக்கு ஆளாகுபவருக்கும் அதுதான் சட்டம் என்பதை எளிதாக புரிகிறோம்.


ஸபபுன்னுஸுலைக் குறிக்கும் வாசக அமைப்பு:

ஸபபுன்னுஸுலை விளக்கும் அறிவிப்புகளில் சில தெளிவாக இருக்கும் இன்னும் சில தெளிவற்றதாக இருக்கும். அதாவது ஸபபுன்னுஸுலை அறிவிக்கும் சஹாபி இன்ன நிகழ்ச்சி நடந்தது அப்போது இன்ன வசனம் இறங்கியது என்று குறிப்பிட்டாலோ அல்லது இன்ன கேள்வி நபியிடம் கேட்கப்பட்டது அதற்கு பதிலாக இன்ன வசனம் இறங்கியது என்று குறிப்பிட்டாலோ தெளிவான வாசகமாகும். ஆகையினால் அதனை ஸபபுன்னுஸுல் என்று உறுதியாக குறிப்பிடலாம்.

ஆனால் அறிவிக்கும் சஹாபி ஒரு ஆயத்தைப்பற்றி, இன்ன விஷயமாக அந்த வசனம் இறங்கியது என்றோ அல்லது இன்ன வசனம் இன்ன விஷயமாக இறங்கியது என்று தான் நான் கருதுகிறேன் என்றோ குறிப்பிட்டால் அதனை ஸபபுன்னுஸுல் என்று உறுதியாக குறிப்பிட முடியாது. ஸபபுன்னுஸுலாகவும் இருக்கலாம். அல்லது அந்த சஹாபி அந்த வசனத்துக்குக் கூறுகிற விளக்கம் மற்றும் அவர் யூகித்துச் சொல்கிற கருத்து என்றும் எடுத்துக் கொள்ளலாம். முதல் வகையான தெளிவான ஸபபுன்னுஸுலுக்கு உதாரணமாக நாம் இப்பாடத்தில் முன்பு கூறியுள்ள பல்வேறு ஸபபுன்னுஸுல்களை எடுத்துக் கொள்ளலாம்.

தெளிவற்ற ஸபபுன்னுஸுல் வாசக அமைப்புக்கு உதாரணம், சூரத்துல் பக்கராவின் 223வது வசனம் பெண்களிடம் பின்பக்கத்தில் அமர்ந்து தாம்பத்ய உறவு கொள்வது பற்றி இறங்கியது என்று இப்னு உமர்(ரலி) அவர்கள் கூறுகிற கூற்று.

இங்கு இப்னு உமர்(ரலி) அவர்கள் இதுதான் காரணம் என்று புரிகிற விதத்தில் தெளிவாக கூறவில்லை, மேலும் இதே வசனத்துக்கு வேறொரு ஸபபுன்னுஸுல் இன்னொரு ஹதீஸில் தெளிவாக இடம் பெற்றுள்ளது (அது பின்பு வரும்) ஆகையால் இப்னு உமர்(ரலி) அவர்களின் இக்கூற்றை ஒரு விளக்கம் என்று மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்- தவிர ஸபபுன்னுஸுல் அல்ல.

மற்றொரு உதாரணம், அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

ஸுபைர்(ரலி) அவர்களுக்கும் அவர்களின் பக்கத்து நிலத்துக்காரரான அன்சாரி ஸஹாபிக்கும் பேரீச்சமரங்களுக்கு தண்ணீர் விடுவதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதில் இருவருக்கும் நன்மையான ஒரு முடிவை நபி(ஸல்) அவர்கள் கூறியபோது அதை விரும்பாத அன்சாரி சஹாபி நபி(ஸல்) அவர்களைப் பார்த்து, ஸுபைர் உங்கள் மாமி மகன் என்பதாலா இப்படி ஒரு முடிவைக் கூறுகிறீர்கள் என்றார். அப்போது நபி(ஸல்) அவர்களின் முகம் சிவந்தது...

இந்த நிகழ்ச்சியை கூறிய ஸுபைர்(ரலி) அவர்கள்,

"உம் இறைவன் மேல் சத்தியமாக, அவர்கள் தங்களிடையே எழுந்த சச்சரவுகளில் உம்மை நீதிபதியாக, ஏற்றுப் பின்னர் நீர் தீர்ப்பு செய்தது பற்றி எத்தகைய அதிருப்தியையும் தம் மனங்களில் கொள்ளாது (அத்தீர்ப்பை) முற்றிலும் ஏற்றுக் கொள்ளாத வரையில், அவர்கள் நம்பிக்கை கொண்டவர்கள் ஆகமாட்டார்கள்". என்ற சூரத்துன்னிஸா 65-வது வசனம் இந்த நிகழ்ச்சிக்காகத்தான் இறங்கியதாக நான் கருதுகிறேன் என்றார்கள். (ஹதீஸ் சுருக்கம் புகாரி 2359)

(இந்த ஆயத்தின் பொருள் உம் ரட்சகன் மீது சத்தியமாக, அவர்கள் தங்களுக்கிடையில் ஏற்பட்ட பிணக்கில் உம்மை நீதிபதியாக்கி, பிறகு நீர் தீர்ப்பளித்ததிலே எந்த சங்கடத்தையும் தங்களின் மனங்களில் உணராமல் முழுமையாக கட்டுப்படாத வரை அவர்கள் ஈமான் கொண்டவர்களாக மாட்டார்கள்)

இந்த ஹதீஸில் ஸுபைர்(ரலி) அவர்கள், நான் கருதுகிறேன் என்ற வாசகத்தைப் பயன்படுத்தியுள்ளதால், இந்நிகழ்ச்சி இந்த ஆயத்தின் ஸபபுன்னுஸுலாக இருக்கவும், இல்லாமலிருக்கவும் வாய்ப்புள்ளது.


ஒன்றுக்கு மேற்பட்ட ஸபபுன்னுஸுல் வருதல்:

ஒரே வசனத்துக்கு ஸபபுன்னுஸுலாக ஒன்றுக்கு மேற்பட்ட செய்திகளை குறிப்பிடும் வெவ்வேறு அறிவிப்புகள் வருவதுண்டு. கீழ்கண்ட வழிமுறைகளை கையாண்டால் முரண்பாடு வருவதற்கு வழியில்லை.

அ) ஒரு வசனம் இறங்கியதற்கு காரணமாக வெவ்வேறு செய்திகளை இருவேறு சஹாபிகள் அறிவித்து அவ்விரண்டு அறிவிப்புகளும் ஆதாரப்பூர்வமானவையாகவும் இருந்தால், அவ்விரண்டில் எது தெளிவாக குறிப்பிடுகின்றதோ அதையே ஸபபுன்னுஸுல் என்று எடுத்துக் கொள்ளவேண்டும். தெளிவாக குறிப்பிடாத அறிவிப்பை அந்த ஸஹாபியின் விளக்கம் என்று எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதற்கு உதாரணமாக சூரத்துல் பக்கராவின் 223-வது வசனத்துக்கு கூறப்படும் இரு ஸபபுன்னுஸுல்களை எடுத்துக்கொள்ளலாம்.

நாஃபிஉ(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். நான் ஒருநாள் "உங்கள் மனைவியர் உங்கள் விளைநிலங்கள்" (சூரத்துல்பகரா 223) என்று தொடரும் ஆயத்தை ஓதினேன். அப்போது இப்னு உமர்(ரலி) அவர்கள், இந்த வசனம் எது விஷயத்தில் இறங்கியது என்று அறிவாயா? என்று கேட்டார்கள். அதற்கு தெரியாது என்றேன். பெண்களிடம் பின்பக்கமாக அமர்ந்து தாம்பத்ய உறவில் ஈடுபடும் விஷயத்தில் இறங்கியது என்றார்கள். (புகாரி 4526, 4527)

இப்னு உமர்(ரலி) அவர்களின் இக்கூற்று தெளிவாக இதுதான் இந்த வசனம் இறங்கக்காரணம் என்று குறிப்பிடவில்லை. ஆனால் இதற்க மாற்றமாக காரணத்தை தெளிவாக குறிப்பிடக்கூடிய ஜாபிர்(ரலி) அவர்களின் கூற்று வேறொரு செய்தியில் வந்துள்ளது.

யூதர்கள், ஒரு ஆண் தன் மனைவியிடம் பின் பக்கமாக இருந்து தாம்பத்ய உறவு கொண்டால் பிள்ளை மாறு கண் உள்ள பிள்ளையாக பிறக்கும் என்று கூறிக்கொண்டிருந்தார்கள் எனவேதான் "உங்கள் மனைவியர் உங்கள் விளைநிலங்கள்" என்ற சூரத்துல் பகராவின் 223-வது வசனம் இறங்கியது என்று ஜாபிர்(ரலி) அவர்கள் கூறினார்கள். (புகாரி 4528)

இதில் ஜாபிர்(ரலி) அவர்களின் கூற்றையே ஸபபுன்னுஸுலாக கொள்ளவேண்டும். ஏனென்றால் அதுதான் தெளிவான வாசகத்தைக் கொண்டுள்ளது. எனவே இப்னு உமர்(ரலி) அவர்களின் கூற்றை அவர்களின் விளக்கம் என்று எடுத்துக் கொள்ளவேண்டும்.

ஆ) ஒரு வசனத்துக்கு இரண்டு ஸபபுன்னுஸுல்கள் அறிவிக்கப்பட்டு அவ்விரண்டுமே தெளிவாக ஸபபுன்னுஸுல்தான் என்று குறிப்பிடுமானால் அப்போது இரண்டு இறிவிப்புக்களுடைய அறிவிப்பாளர் வரிசையை பார்க்கவேண்டும் ஒன்று பலவீனமானதாகவும் மற்றொன்று பலமானதாகவும் இருக்குமானால் பலமான அறிவிப்பாளர் வரிசையை உடைய செய்தியையே ஸபபுன்னுஸுலாக முடிவு செய்யவேண்டும்.

இதற்கு உதாரணம், ஜுன்துப்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி(ஸல்) அவர்கள் நோயுற்றிருந்தார்கள். இரண்டு அல்லது மூன்று இரவுகள் நின்று வணங்கவில்லை. அப்போது ஒரு பெண் அவர்களிடம் வந்து, முஹம்மதே உன்னுடைய ஷைத்தான் உன்னை விட்டுவிட்டதாகத்தான் கருதுகிறேன். உன்னை அவன் இரண்டு அல்லது மூன்று இரவுகள் நெருங்கவில்லையே என்றாள். அப்போது அல்லாஹ் "முற்பகல் மீது சத்தியமாக இருள்சூழும் இரவின்மீதும் சத்தியமாக, உம்மை உமது இரட்சகன் விட்டுவிடவில்லை, வெறுக்கவுமில்லை" என்று தொடரும் சூரத்துள்ளுஹாவை இறக்கிவைத்தான். (ஆதாரம்: புகாரி 4950, முஸ்லிம்)

மேற்கூறிய செய்திக்கு மாற்றமாக சூரத்துள்ளுஹா இறங்கியதற்கான காரணம் இன்னொரு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. அது வருமாறு:

நபி (ஸல்) அவர்களின் பணியாளராக இருந்த பெண்மனி கவ்லா (ரலி) அவர்கள் கூறினார்கள்:

ஒரு நாய்க்குட்டி நபி (ஸல்) அவர்களின் வீட்டில் நுழைந்து கட்டிலுக்கடியில் சென்று செத்துவிட்டது. அதைத்தொடர்ந்து நான்கு நாட்கள் நபி (ஸல்) அவர்களுக்கு வஹி இறங்கவில்லை. அப்போது நபி (ஸல்) அவர்களுக்கு வஹி இறங்கவில்லை. அப்போது நபியவர்கள் கவ்லாவே அல்லாஹ்வின் தூதரின் வீட்டில் என்ன நடந்தது, ஜிப்ரீல் என்னிடம் வருவதில்லையே என்றார்கள். அப்போது எனக்குள் நான், வீட்டை சரிபடுத்தி கூட்டி சுத்தம் செய்ய வேண்டும் என்று சொல்லிக்கொண்டேன். அப்போது துடைப்பத்துடன் கட்டிலுக்கு கீழே குனிந்து, அங்கே கிடந்த நாய்க்குட்டியை கண்டு, வெளியே எடுத்துப் போட்டேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் முகம் நடுக்கத்துடன் வந்தார்கள். - அவர்களுக்கு வஹி இறங்கினால் நடுக்கம் எடுக்கும் - எனவே என்னைப் பார்த்து கவ்லாவே, என்னைப் போர்த்திவிடு என்றார்கள். அப்போது அல்லாஹுத்தஆலா, "வள்ளுஹா" என்று தெடங்கி "ஃபதர்ளா" முடிய உள்ள வசனங்களை இறக்கி வைத்தான். (ஆதாரம்: தப்ரானீ, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா)

மேற்கூறிய இரண்டு செய்திகளிலும், சூரத்துள்ளுஹா இறங்கியதற்கு காரணமாக இரண்டு வெவ்வேறு செய்திகள் கூறப்பட்டுள்ளன. இரண்டில் முதலாவது செய்தி பலமானதும் இரண்டாவது பலவீனமானதாகும்.

ஆகையினால் பலமானதையே ஸபபுன்னுஸுல் என கொள்ள வேண்டும்.

புகாரியின் விளக்கவுரையில் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள், கூறுவதாவது, "நாய்க்குட்டியின் காரணத்தால் ஜிப்ரீல் வர தாமதமானதாக கூறப்படும் செய்தி பிரபலமானதாகும். எனினும் அதுவே ஸபபுன்னுஸுலாக ஆவதாக கருதுவது விநோதமான கருத்தாகும். மேலும் அதன் அறிவிப்பாளர் வரிசையில் யாரென்று அறியப்படாதோர் இடம் பெறுகின்றனர். எனவே புகாரியிலும் முஸ்லிமிலும் இடம் பெறுவதே ஆதாரப்பூர்வமானதாகும்.

(இ) இரண்டு அறிவிப்புகளும் பலமானதாக இருக்குமானால் ஒன்றை மட்டும் தேர்ந்தெடுப்பதற்கு ஏதேனும் வழிமுறை இருந்தால் அதை வைத்து அந்த ஒன்றையே ஸபபுன்னுஸுல் ஆக முடிவு செய்ய வேண்டும்.

உதாரணமாக ஒரு அறிவிப்பை கூறும் ஸஹாபி அந்நிகழ்வின் போது, தான் அங்கு ஆஜராகி இருந்ததாக கூறினால் மற்றொரு அறிவிப்பை கூறும் ஸஹாபியின் அறிவிப்பையே தேர்ந்தெடுப்பது.

இதற்கு உதாரணம்:

இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். நான் நபி (ஸல்) அவர்களுடன் மதீனாவில் நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது யூதர்களில் சிலரை நபியவர்கள் கடந்து சென்றார்கள். அப்போது அவர்களில் ஒருவர், அவரிடம் ஏதேனும் கேள்வியை நீங்கள் கேட்டால் என்ன? என்றார். அப்போது அவர்கள் நபியைப் பார்த்து, ரூஹைப் பற்றி எங்களுக்குத் கூறும் என்றனர். நபியவர்கள் சற்று நேரம் நின்றார்கள் தன் தலையை உயர்த்தினார்கள் அவர்களுக்கு வஹீ அறிவிக்கப்படுகிறது என்று நான் அறிந்து கொண்டேன். அடுத்து நபியர்கள் "குல் ரூஃஹு மின் அம்ரி ரப்பி" (சூரத்துல் இஸ்ராஃ: 85)
என்று தொடரும் ஆயத்தை ஓதினார்கள். (புகாரி)

மேற்கூறிய வசனத்துக்கு ஸபபுன்னுஸுலாக இன்னொரு செய்தியை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

குரைஷிகள் யூதர்களிடம், இந்த மனிதரிடம் (நபியிடம்) கேட்பதற்கு ஏதேனும் ஒரு கேள்வியை எங்களுக்கு கொடுங்கள் என்று கேட்டனர். அதற்கு யூதர்கள், அவரிடம் ரூஹை(உயிரை)க் குறித்து கேள்வி கேளுங்கள் என்றார்கள். குறைஷயரும் நபியிடம் அதுபற்றி கேட்டார்கள், அப்போது அல்லாஹ்தஆலா, "வயஸ்அலூனக அனிர்ரூஹ் குல் ரூஃஹு மின் அம்ரி ரப்பி" (சூரத்துல் இஸ்ராஃ: 85) என்று தொடரும் ஆயத்தை இறக்கினான். (திர்மிதி)

இந்த இரண்டாவது அறிவிப்பாகிய இப்னு அப்பாஸின் செய்தியை விட இப்னு மஸ்வூதின் செய்தியை முன்னிலைப்படுத்துகிறோம். ஏனென்றால் அந்த நிகழ்ச்சியின் போது இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் அவ்விடத்தில்தான் இருந்ததாக குறிப்பிடுவதால். மேலும் அந்த அறிவிப்பு புகாரியில் இடம் பெற்றிருப்பது வலுவை கூட்டுகிறது.

இங்கு சில அறிஞர்கள் இன்னொரு கருத்தை கூறுவர். அதாவது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் கூற்றுப்படி முதலில் இதே வசனம் மக்காவிலும், பின்பு மதீனாவில் வைத்து இரண்டாவது தடவையாகவும் (இப்னு மஸ்வூத் கூற்றுப்படி) இறங்கியது என.

ஆனால் இது ஏற்றுக்கொள்ள முடியாத கூற்று. ஏனெனில் முதலில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலாக மக்காவில் வைத்து இறக்கப்பட்டிருந்தால் மதீனாவில் ஐவத்து அதே கேள்வி கேட்கப்படும்போது நபியவர்கள் அதே ஆயத்தை பதிலாக ஓதிக்காட்டியிருக்க வேண்டுமே தவிர அதே வசனம் இன்னொரு முறை இறக்கப்பட வேண்டியதில்லை என்று பதில் சொல்லிவிடலாம்.

(ஈ) இரண்டு அறிவிப்புகளும் ஒன்றை விட ஒன்றை முன்னிலைப்படுத்த முடியாத அளவுக்கு வலுவில் சமமாக இருந்தால் இரண்டையும் இணைத்து ஒரு முடிவு செய்வது. இரண்டு நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து நடந்தால் அவ்விரண்டையும் காரணமாக வைத்து அந்த வசனம் இறங்கியதாக முடிவு செய்வது.

இதற்கு உதாரணமாக லிஆன் (சாப பிரமாண) வசனங்கள் என்று கூறப்படும் சூரத்துன்னூரின் 6 முதல் 9 வரையிலான வசனம்க்களுக்கு கூறப்படும் இரு ஸபபுன்னுஸுல்களை எடுத்துக்கொள்ளலாம்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

ஹிலால் பின் உமய்யா தன் மனைவியை ஷதீத் பின் ஸஹ்மாவோடு தொடர்பு படுத்தி குற்றம் சுமத்தியபோது சூரத்துன்னுரின் 6 முதல் 9 வரையிலான வசனங்கள் இறங்கியது. (புகாரி: 4747)

(இச்செய்தியை முழுமையாக முன்பு படித்துள்ளோம்).

ஸஹ்ல் பின் ஸஃது (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து யாரசூலல்லாஹ், ஒருவர் தன் மனைவியுடன் ஒரு ஆணைக்கண்டு அவனை அவர் கொல்ல அவரை நீங்கள் கொல்வீர்களா? அல்லது அவர் எப்படிச் செய்ய வேண்டும் எனக் கேட்டார். அப்போது, சாபப்பிராணம் பற்றி குர்ஆனில் கூறப்பட்டுள்ளவற்றை (சூரத்துன்னூரின் 6 முதல் 9 வரையிலான வசனங்களை) அல்லாஹ் இறக்கிவைத்தான். (புகாரி 4746)

மேற்குறிப்பிட்ட வசனங்கள்:

24:6 எவர்கள் தம் மனைவிமார்களை அவதூறு கூறி (அதை நிரூபிக்கத்) தங்களையன்றி அவர்களிடம் வேறு சாட்சிகள் இல்லாமலிருந்தால் அவன், நிச்சயமாக தாம் உண்மையே கூறுவதாக அல்லாஹ்வின்மீது நான்கு முறை சத்தியம் செய்து கூறி

24:7 ஐந்தாவது முறை, "(இதில்) தான் பொய் சொல்வதாக இருந்தால், நிச்சயமாக அல்லாஹ்வுடைய சாபம் தன்மீது உண்டாகட்டும்" என்றும் (அவன் கூற வேண்டும்).

24:8 இன்னும் (அவனுடைய மனைவி குற்றத்தை மறுத்து) தன் மீதுள்ள தண்டனையை விலக்க, "நிச்சயமாக அவன் பொய்யர்களில் நின்றுமுள்ளவன்" என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து நான்கு முறை கூறி

24:9 ஐந்தாவது முறை, "அவன் உண்மையாளர்களிலுள்ளவனானால் நிச்சயமாக அல்லாஹ்வுடைய கோபம் தன்மீது உண்டாவதாக என்றும் (அவள் கூற வேண்டும்).

ஆக சூரத்துன்னூரின் ஆறு முதல் ஒன்பது வரையிலான வசனங்கள் இறங்க மேற்பட்ட இரண்டு நிகழ்வுகளும் காரணமாக இருந்திருக்கின்றன. இரண்டு நிகழ்வுகளும் அடுத்தடுத்து நடந்திருக்கின்றன என்பது தெளிவாகிறது. ஆகவே இரு நிகழ்வுகளையும் அந்த வசனம்களுக்கு ஸபபுன்னுஸுலாகக் கொள்ளலாம்.


முஹ்கம், முதஷாபிஹ்:

المحكم والمتشابه

அல்குர்ஆன் வசனங்களின் கருத்தைப் புரிவதை கவனத்தில் கொண்டு, வசனங்கள் இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது.

1) முஹ்கம் (உறுதிசெய்யப்பட்டது)
2) முதஷாபிஹ் (இரு கருத்துக்கு வாய்ப்பானது)

அதாவது முஹ்கமான வசனங்கள் முடிவாக ஒரே கருத்தைத்தான் தரும். குழப்பத்தை விரும்புகிறவர்கள் அதிலே மாற்றுக் கருத்துக் கூறி குழப்பம் செய்ய முடியாது. ஆனால், முதஷாபிஹான வசனங்கள் இரு கருத்து கொள்கிற விதத்தில் வாசகங்களை கொண்டிருக்கும். வழி தவறியவர்கள் தங்கள் தவறான கருத்துக்கு சாதகமாக அதற்கு விளக்கமளித்து குழப்பம் செய்யமுடியும்.

இது குறித்துப் பேசும் குர்ஆன் வசனமானது:

هُوَ الَّذِي أَنْزَلَ عَلَيْكَ الْكِتَابَ مِنْهُ آيَاتٌ مُحْكَمَاتٌ هُنَّ أُمُّ الْكِتَابِ وَأُخَرُ مُتَشَابِهَاتٌ فَأَمَّا الَّذِينَ فِي قُلُوبِهِمْ زَيْغٌ فَيَتَّبِعُونَ مَا تَشَابَهَ مِنْهُ ابْتِغَاءَ الْفِتْنَةِ وَابْتِغَاءَ تَأْوِيلِهِ وَمَا يَعْلَمُ تَأْوِيلَهُ إِلَّا اللَّهُ وَالرَّاسِخُونَ فِي الْعِلْمِ يَقُولُونَ آمَنَّا بِهِ كُلٌّ مِنْ عِنْدِ رَبِّنَا وَمَا يَذَّكَّرُ إِلَّا أُوْلُوا الْأَلْبَابِ

அவனே உம்மீது இவ்வேதத்தை இறக்கிவைத்தான். அதில் உறுதிசெய்யப்பட்ட வசனங்களும் -அவையே இவ்வேதத்தின் தாய்- இரு கருத்துக்கு இடம் தருகிற வேறு சில வசனங்களும் உள்ளன. எவர்களின் இதயங்களில் சருகல் இருக்கிறதோ அவர்கள் குழப்பத்தை நாடியும் (அதற்கேற்ப) விளக்கத்தை நாடியும் அதில் இருகருத்துக்கு இடம் தருபவற்றை தொடர்கின்றனர். அல்லாஹ்வையும், கல்வியில் தேர்ந்தவர்களையும் தவிர (மற்றவர்கள்) அதன் விளக்கத்தை அறியமாட்டார்கள். அவர்கள், இதனை நம்பினோம், அனைத்தும் எங்கள் இரட்சகனிடமிருந்து வந்தவையே என்று கூறுவார்கள். அறிவுடையவர்கள் தவிர (மற்றவர்கள்) சிந்திப்பதில்லை. (அல்குர்ஆன் 3:7)

முதஷாபிஹான ஆயத்துக்களை வைத்து குழப்பம் செய்வதற்கு உதாரணமாக கீழ்காணும் வசனத்தை சிலர் கையாளுவதை குறிப்பிடலாம்.

அல்குர்ஆனின் 2:154 வது வசனம், அல்லாஹ்வின் வழியில் கொல்லப்பட்டவர்களை மரணித்தவர்கள் என்று கூறாதீர்கள் அவர்கள் உயிருள்ளவர்கள் எனினும் நீங்கள் அறியமாட்டீர்கள்.

என்று குறிப்பிடுவதால், நல்லடியார்கள் மரணித்த பின் அவர்களை அழைத்து பிரார்த்திக்கலாம் என்று சிலர் கருத்துக் கூறி வழி கெடுக்கின்றனர்.

இந்த வசனத்தில் நீங்கள் அறிய மாட்டீர்கள் என்றும் இதற்கு விளக்கமாக நபி(ஸல்) அவர்கள், "அல்லாஹ்வின் வழியில் கொல்லப்பட்ட ஷஹீதுகளின் உயிர்கள் சொர்க்கத்தில் பச்சை நிறத்துப் பறவைகளின் உடலினுல் இருக்கும் அவை சொர்க்கத்தில் விரும்பியவாறு சுற்றித்திரியும்" என்று கூறியிருப்பதையும் (நூல்: முஸ்லிம், 3500) கருத்தில் கொள்வதில்லை.

இத்தகையவர்கள் அல்குர்ஆனின் அடிப்படையாகிய ஓரிறைக் கொள்கைக்கு எதிராக அல்குர்ஆனின் வசனத்தையே பயன்படுத்தி குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள், இதன் மூலம் 3:7ல் "குழப்பத்தை நாடி" என்று அல்லாஹ் பழித்துக் கூறுவது நிதர்சனமாகிறது.
அல்லாஹ்வைத்தவிர மற்றவர், முதஷாபிஹின் கருத்தை அறிய முடியாதா?

முதஷாபிஹான வசனங்களின் பொருளை அல்லாஹ்வைத்தவிர வேறு யாரும் அறிய முடியாது என்று பல அறிஞர்கள் கூறுகிறார்கள். அதற்கான காரணம் மேற்கூறிய 3:7வது வசனத்தில் இடையில் செய்யும் நிறுத்தத்தினால் இப்படிப் பொருள் வருகிறது.

அதாவது:

وَمَا يَعْلَمُ تَأْوِيلَهُ إِلَّا اللَّهُ

என்று நிறுத்திவிட்டு,

وَالرَّاسِخُونَ فِي الْعِلْمِ

என்பதை தனியாக துவக்குவது.

இதன் காரணமாக, "அதன் விளக்கத்தை அல்லாஹ்வைத் தவிர (யாரும்) அறிவதில்லை. கல்வியில் தேர்ந்தவர்கள் இதனை நம்பினோம்.. என்று கூறுவார்கள்" என்று பொருள் வருகிறது.

இக்கருத்தின் படி குர்ஆனிலே அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமே புரிந்து கொள்ள முடியாத வசனங்கள் உண்டு என்றாகிறது. இந்தக் கருத்துக்கு எதிராக, குர்ஆனின் எல்லா வசனங்களுக்கும் விளக்கம் கூறப்படுகிறது, மொழி பெயர்ப்பும் செய்யப்படுகிறது! மேலும் மனிதர்களுக்கு வழிகாட்டுவதற்காக அல்லாஹ் இறக்கிய வேதத்தில் மனிதர்களின் எவருமே புரிந்து கொள்ளமுடியாத விஷயத்தைக் கூறினால் அது பயனற்ற செயல் அத்தகைய பயனற்ற செயலை அல்லாஹ் செய்வானா? என்ற நியாயமான கேள்வி எழுகிறது.

இந்தக் கேள்விக்கு, இக்கருத்தைக் கொண்டோர் சார்பில் அளிக்கப்படும் பதில் என்னவெனில், அல்லாஹ்வை தவிர(யாரும்) அதன் விளக்கத்தை அறிய மாட்டார் என்பதின் கருத்து என்னவென்றால், அதன் யதார்த்தமான விளக்கத்தை என்பதாகும். ஏனெனில் குர்ஆனில் கூறப்படும் சில விசயங்களை நாம் மேலோட்டமாக குறுகிய அளவில் தான் புரிந்து கொள்கிறோம். அது யாராக இருந்தாலும்.

உதாரணத்திற்கு மறுமை நாளில் நன்மை தீமையை நிறுக்க தராசு இருப்பதாக (21:47) குர்ஆனில் கூறப்படுகிறது. சொர்க்கத்தில் சுவைமாறாத பால் ஆறுகளும் சுவையான மது ஆறுகளும் சுத்தமான தேன் ஆறுகளும் ஓடுவதாக (47:15) கூறப்படுகிறது. 

இதனையெல்லாம் உலகத்தில் நாம் அறிந்துள்ள பொருள்களோடு ஒப்பிட்டு மேலோட்டமாக புரிந்து கொள்கிறோம். ஆனால் மறுமையில் அவை எப்படி இருக்குமோ அப்படியே எதார்த்தமான நிலையில் புரிவதில்லை. இது போன்றவற்றைத்தான் அல்லாஹ்வைத்தவிர வேறு யாரும் அதன் சரியான விளக்கத்தைப் புரிவதில்லை என்கிறோம் என்று கூறுகிறார்கள்.

இதன் படி இரு கருத்துடையவர்களுக்கு மத்தியில் முரண்பாடு இல்லை. ஒவ்வொருவரும் மற்றவர் விளக்கத்தை ஒப்புக் கொள்ளத்தான் செய்கிறார்கள்!
நபியவர்களின் எச்சரிக்கை!

இரு பொருள் கொள்கிற குர்ஆன் வசனத்தை எடுத்துக்கொண்டு குழப்பம் செய்கிற விதத்தில் அதையே தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பவர்கள் பற்றி நபியவர்கள் எச்சரித்துள்ளார்கள். அது பற்றிய ஹதீஸ் வருமாறு:

நபி(ஸல்) அவர்கள், குர்ஆனின் 3:7வது வசனத்தை இறுதிவரை ஓதிவிட்டு, முதஷாபிஹான வசனத்தையே தொடர்ந்து கொண்டிருப்பவர்களை நீ கண்டால் அவர்களைத் தான் அல்லாஹ் இங்கு குறிப்பிடுகிறான். அவர்களிடத்தில் எச்சரிக்கையாக இரு! என்று கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்.

அப்துர்ரஹ்மான் மன்பயீ,
Previous Post Next Post