இஸ்லாத்தின் பூரணத்தன்மை:
இஸ்லாம் ஒரு பரிபூரண மார்க்கமாகும். அதன்
பூரணத்தன்மை மனிதனின் அனைத்துத் துறைகளுக்குமான அனைத்து கால
கட்டத்திற்குமான செவ்வையான வழிகாட்டல்களில் பிரதிபலிக்கிறது.
இஸ்லாத்தின் ஒரே மூலாதாரமான வஹி, அதன் இரு
வடிவங்களான அல்குர் ஆன் அஸ்ஸுன்னா மனிதனின் நம்பிக்கைக் கோட்பாடு (அகீதா),
வணக்கவழிபாடுகள் (இபாதத்), பண்பாடுகள் (அஹ்லாக்), சட்டதிட்டங்கள் (பிக்ஹ்),
அன்றாட கொடுக்கல் வாங்கல்கள் (முஆமலாத்), பிரச்சார முறைமை (மன்ஹஜ்) என சகல
துறைகளுக்குமான பூரண வழிகாட்டல்களை எமக்கு வழங்கியுள்ளது.
வழி கேட்டின் அடிப்படை:
இவ்வாறு இஸ்ஸாம் வழங்கியுள்ள
வழிகாட்டல்களின் பூரணத்தன்மையில் முஸ்லிம்களில் சிலர் நம்பிக்கை கொள்ளாததன்
காரணமாக அல்லது நம்பிக்கை கொண்டிருந்தும் அதை சரிவரப் புரிந்து கொண்டு
அவைகளைப் போதுமாக்கிக் கொண்டு அதன் அடிப்படையில் வாழ்க்கையை அமைத்துக்
கொள்ளாததன் காரணமாகவே எமது முஸ்லிம் சமூகத்தில் பல்வேறுபட்ட
சித்தாந்தங்கள், கோட்பாடுகள், சிந்தனைப் பிரிவுகள் தோற்றம் பெற்றன.
உதாரணமாக இஸ்ஸாம் கூறும் ஆன்மீக நெறிகள்
போதாது எனக் கருதப்பட்டதால் அல்லது அதைவிடவும் அதிக ஆன்மீக பயிற்சிகள்
விருப்பப்பட்டதால் முஸ்லிம் சமூகத்திலே காதிரிய்யா, ஷாதுலிய்யா,
நக்ஷபந்திய்யா போன்ற வழிகட்ட தரீக்காக்கள் தோற்றம் பெற்றன.
அவ்வாறே இஸ்லாத்தை எவ்வாறு பிரச்சாரம்
செய்யவேண்டும் என்ற வழிகாட்டல்கள், வழிமுறைகள் அல்குர் ஆனிலும்
ஆதாரபூர்வமான நபிவழியிலும் தெளிவுபடுத்தப்பட்டிருக்க அதை விடுத்து ஒவ்வொரு
சீர்திருத்தவாதியும், சிந்தனையாளரும் தான் வாழ்ந்த கால சூழல் தாக்கத்தினால்
ஒரு வகையில் பிரச்சாரம் செய்ய ஆரம்பிக்க அதுவே நாளடைவில் பிழையான பிரச்சார
இயக்கங்களாக தோற்றம் பெற்றன.
நாசம் விளைவிக்கும் நம்பிக்கைக் கோட்பாடுகள்:
இதைவிடவும் அபாயகரமானதாக, இஸ்லாம்
காட்டித்தந்துள்ள எளிமையான, சகலராலும் புரிந்து கொள்ளத்தக்க, அல்குர்ஆன்
ஆதாரபூர்வமான ஹதீஸ்களில் உள்ளவாறு ஏற்று நம்பப்பட வேண்டிய அகீதா
(நம்பிக்கைக் கோட்பாடு) தனி மனித சிந்தனைகளாலும் அந்நிய சமூகங்களின்
சித்தாந்தங்களாலும் பல்வேறு தத்துவக் கோட்பாடுகளாலும் மாசுபடுத்தப்பட்டு
இஸ்லாத்தின் தூய போதனைகளுக்கு மாற்றமான நம்பிக்கைக் கோட்பாடே இன்று
இஸ்லாமிய நம்பிக்கைக் கோட்பாடு என்ற பெயரில் போதிக்கப்படும் அளவிற்கு
வந்துள்ளது!!.
இதற்கு மிகச் சரியான உதாரணந்தான் எமதூர்
அறபுக் கல்லூரிகள் உட்பட எமது நாட்டில் உள்ள பெரும்பாலான அறபுக்
கல்லூரிகளிலும் வேறுபல நாடுகளிலும் போதிக்கப்படும் வழிகெட்ட சிந்தனைக்
கோட்பாடான “அஷ்அரிய்யா” கோட்பாடாகும்.
அஷ்அரியாக்கள் தாங்கள் இமாம் அபுல் ஹஸன் அல் அஷ் அரி அவர்களால் வடிவமைக்கப்பட்ட (அகீதா) நம்பிக்கைக் கோட்பாட்டைப் பின்பற்றி வருவதாக வாதிடுகின்றனர்.
இவர்களது இந்த அகீதா இஸ்லாத்தின்
போதனைகளுக்கு எந்தளவு எதிரானது என்பதை நோக்கும் முன் இமாம் அபுல் ஹஸன் அல்
அஷ் அரி அவர்களைப் பற்றி சிறிது நோக்குவது அவசியமாகும்.
இமாம் அபுல் ஹஸன் அல் அஷ் அரி (ரஹ்)
இமாம் அபுல் ஹஸன் அல் அஷ் அரி (ரஹ்)
அவர்கள் ஹிஜ்ரி 260 முதல் 324 வரையிலான அப்பாசிய ஆட்சிக் காலப் பகுதியில்
ஈராக் நகரின் பஸ்ரா, பக்தாத் ஆகிய பகுதிகளில் வாழ்ந்தவராவர். நபித்தோழர்
அபூ மூஸா அல் அஷ்அரிய் (ரழி) அவர்களது வழித்தோன்றலில் பிறந்த இவரது
இயற்பெயர் அலி பின் இஸ்மாஈல் ஆகும். இவரது தந்தை அல்குர்ஆன் அஸ்ஸுன்னா வலியுறுத்தும்
சரியான நம்பிக்கைக் கோட்பாட்டின் படி வாழ்ந்தார்கள் என்பதற்கு இவர்
மரணிக்கும் போது தனது மகன் அபுல் ஹஸன் அவர்கள் அன்றைய ஹதீஸ் கலை அறிஞர்
இமாம் ஸாஜி என்பவரிடம் கல்வி கற்க வேண்டும் என்ற மரண சாசனம் சான்றாக
உள்ளது.
தந்தையின் வழிகாட்டலுக்கேற்ப சிறிதுகாலம்
இமாம் ஸாஜி அவர்களிடம் கல்வி கற்ற இமாம் அபுல் ஹஸன் அவர்கள் பின்பு தனது
தாயின் அடுத்த கணவரும் பகுத்தறிவு? வாதம் பேசி வழிகொட்டுப் போன முஃதஸிலா
சிந்தனைப் பிரிவின் தலைவர்களில் ஒருவருமான ஜுப்பாஈ என்பவரிடம் நீண்ட காலம்
கல்வி கற்று வழிகெட்ட முஃதஸிலா பிரிவின் மிகப் பெரும் மேதையாகத்
திகழ்ந்தார்கள்.
இவ்வாறு முஃதஸிலா பிரிவின் தலைவர்களுல்
ஒருவராகத் திகழ்ந்த இமாம் அவர்கள் தனது நாப்பதாவது வயதில் பதினைந்து
நாட்கள் மக்களைவிட்டும் தனது வீட்டில் ஒதுங்கியிருந்துவிட்டு பள்ளியில்
மிம்பரில் ஏறி தான் முஃதஸிலாக் கொள்கையை விட்டும் தௌபா செய்து
திருந்திவிட்டதாக பகிரங்கமாக அறிவிக்கிறார்கள்.
இவ்வாறு வழிகெட்ட முஃதஸிலா பிரிவிலிருந்து மீண்ட இமாம் அவர்கள் முஃதஸிலாக் கோட்பாட்டுக்கெதிரான “இப்னு குல்லாப்”
என்பவரது சித்தாந்தத்தைப் போதிக்கலானார். எனினும் தனது இறுதிக் காலத்தில்
அதிலிருந்தும் மீண்டு இஸ்லாம் வலியுறுத்தும் சரியான நம்பிக்கைக் கோட்பாட்டை
ஏற்றுக் கொண்டு அதனையே பிரச்சாரம் செய்பவராக வாழ்ந்து மரணித்தார்
என்பதற்கு அவர் இறுதியாக எழுதிய “அல் இபானா அன் உஸூலித் தியானா” எனும் நூல் சான்று பகர்கிறது.
இவர் தொடர்பாக வரலாற்று ஆசிரியர்களான கதீப்
அல் பக்தாதி, காழி இயாழ், இப்னு அஸாகிர், ஸுபுகி ஆகியோர்
புகழ்ந்துரைக்கும் அதேவேளை அல் அஹ்வாஸி, இப்னு ஹஸ்ம், இப்னுல் ஜவ்ஸி
ஆகியோரது கண்டனத்துக்கும் அபுல் ஹஸன் அல் அஷ் அரி அவர்கள் ஆளாகியிருப்பதைப்
பார்க்கிறோம்.
இவரது வாழ்க்கை, இவர் கடந்து வந்த பிழையான
சித்தாந்த்தங்கள், எழுதிய நூற்கள் பற்றி வரலாற்று ஆசிரியர்கள் பலரும்
பலவிதமாக விமர்சனங்கள் செய்திருப்பினும் இந்த இடத்தில் இத்துடன்
போதுமாக்கிக் கொண்டு இது தொடர்பாக தேவையேற்படும் போது மேலதிகமாக
விளக்கத்திற்குச் செல்வோம்.
மேற்கண்டவாறு இமாம் அவர்கள் தான் எந்தக் கோட்பாட்டிலிருந்து மீண்டு தௌபா செய்தார்களோ அந்த “இப்னு குல்லாப்”
என்பவரது கோட்பாட்டையே இன்றைய அஷ் அரிய்யாக்கள் கொண்டிருக்கிறார்கள்.
அத்துடன் இப்பிழையான வழி கெட்ட சித்தாந்தமே இமாம் அவர்களது கொள்கையாக
இருந்தது என்றும் வாதிட்டு வருகிறார்கள்.
இச்சிந்தாந்தத்தின் வழிகேட்டையும்
நாசத்தையும் சகலரும் அறிந்து புரிந்து தெளிவு பெற்று விழிப்புணர்வுடன்
அதைத் தவிர்க்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக வேண்டி அக்கோட்பாடு
போதிக்கப்படும் அறபுக் கல்லூரிகளின் நம்பிக்கைக் கோட்பாடு (அகீதா) தொடர்பான
பாடத்திட்டத்தில் இருந்து பிரபல்யமான பாட நூலான “துஹ்பதுல் முரீத் அலா ஜௌஹறதித் தௌஹீத் (تحفة المريد علي جوهرة التوحيد)” என்ற
இப்றாஹீம் அல்லக்கானி என்பவரால் எழுதப்பட்டு அல்பைஜூரி என்பவரால்
வழங்கப்பட்ட பக்கக் குறிப்புகள் என்ற புத்தகத்தை ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு
சோறு பதம் என்ற ரீதியில் இக்கட்டுரையில் விளக்கத்திற்காக எடுத்துக்
கொள்கிறோம்.
1. ஸுன்னாவை நிராகரிக்கும் சுன்னத் வல் ஜமாஅத்!!
மேற்படி வழிகெட்ட அஷ் அரியா கோட்பாடைப் போதிக்கும் பிரிவினர் தங்களை “சுன்னத் வல் ஜமாஅத்” என அடையாளப் படுத்துகிறார்கள்.!! காலமெல்லாம் நபியவர்களின் போதனைகளுக்கு மாற்றமான அனுஷ்டானங்களை கைக்கொண்டு பித்அத் எனும் சாக்கடையில் புரளும் இவர்கள் ஸுன்னத் என்ற அடையாளத்தையும், அகீதா (நம்பிக்கைக் கோட்பாடு) ரீதியாக அஷ் அரிய்யா என்றும் மாதுரீதிய்யா என்றும் சட்ட ரீதியாக (பிக்ஹ்) ஹனபிய்யா, மாலிகிய்யா, ஷாபிஇய்யா, ஹன்பலிய்யா என்றும் ஆன்மீக ரீதியாக காதிரியா, ஷாதுலிய்யா, நக் ஷபந்தியா போன்ற தரீக்காக்களாகவும் பிரிந்து கிடக்கும் இவர்கள் “ஜமாஅத்” (ஓரணி) என்ற அடையாளத்தையும் தங்களுக்கு வைத்துக் கொள்வது முடமாய் பிறந்த பிள்ளைக்கு நடராஜா என்று பெயர் சூட்டியதைப் போன்றதாகும்.
எனினும் அழ்ழாஹ்வின் விதி(கத்ர்)ரை நிராகரித்தவர்கள் வரலாற்றில் “கத்ரிய்யாக்கள்” என பெயர் சூட்டப்பட்டார்கள் என்ற ரீதியில் வேண்டுமானால் இத்தகைய வழிகெட்ட அஷ் அரிய்யா கொள்கையைக் கொண்டிருப்போரை நாமும் “ஸுன்னத் வல் ஜமாஅத்!!” என அழைக்கலாம்!!. ஆனால் ஆரம்ப கால ஸலஃப் அறிஞர்கள் அகீதா சார்ந்த நூல்களை ஸுன்னத் என்ற பெயர்களில்தான் எழுதி இத்தகைய பித்அத் வாதிகளுக்கு பதில் வழங்கி வந்தார்கள். பார்க்க
(السنة لابن أبي عاصم، السنة لعبد الله بن أحمد )
ஆக, வெளியில் தங்களை சுன்னத் வல் ஜாமாஅத்
என அறிமுகப்படுத்தும் இவர்கள் உன்மையில் ஸுன்னாவை நபியவர்களின் பொன்னான
போதனைகளை எவ்வாறு நிராகரிக்கிறார்கள் என்பதை முதலில் நாம் நோக்குவோம்.
நபி (ஸல்) அவர்களது போதனைகள் (ஹதீஸ்கள்) எவ்வாறு எம்மை வந்தடைந்தது என்பதைக் கருத்திற் கொண்டு அவைகளை இரு பிரதான வகைகளாக ஹதீஸ்கலை அறிஞர்கள் பிரித்து நோக்கியுள்ளார்கள். அவைகளாவன:
1.பல(ர்) வழிச் செய்திகள் (அல்முதவாதிர் المتواتر ).
2.சில(ர்) வழிச் செய்திகள்(அல் ஆஹாத் الآحاد )
அதாவது குறித்த ஒரு நபி மொழி ஸஹாபாக்கள்
காலம், தாபிஈன்கள் காலம், தப்உ தாபிஈன்கள் காலம் என புஹாரி முஸ்லிம்
அபூதாவுத் போன்ற ஹதீஸ் கிரந்தங்களின் நூலாசிரியர்கள் காலம் வரை ஒவ்வொரு காலகட்டத்திலும் பல அறிவிப்பாளர்களால் அறிவிக்கப்பட்டிருந்தால்
அதை பல(ர்) வழிச் செய்தி என்றும் அவ்வாறு அறிவிக்கப்படாதிருந்தால் அதை
சில(ர்) வழிச் செய்தி என்றும் ஹதீஸ் திறனாய்வுக் கலை அறிஞர்கள் அடையாளப்
படுத்துகிறார்கள்.
இவ்வாறு நபி மொழிகளின் அறிவிப்பளர்
வரிசைகளை பிரித்து அறிந்து கொள்வது குறித்த ஒரு ஹதீஸின் அறிவிப்பாளர் சற்று
பலங்குன்றியவராகக் காணப்படும் போது அதே ஹதீஸை அவர் தரத்தில் உள்ள மற்றொரு
அறிவிப்பாளர் அறிவிக்கும் பட்சத்தில் இருவரையும் இணைத்து குறித்த ஹதீஸை
ஏற்றுக் கொள்ளத்தக்கது எனத் தீர்மானிப்பதற்கும் இரண்டு நபிமொழிகள் ஒன்றுக்
கொன்று முரண்பாடாகி அவை இரண்டையும் எத்தவகையிலும் இணைத்து செயற்படுத்த
முடியாது என்ற சூழல் ஏற்பட்டு ஒன்றை விட்டு ஒன்றைத்தான் எடுத்தாக வேண்டும்
என்ற நிலை ஏற்படும் போது எதை எடுப்பது எதை விடுவது என்பதைத் தீர்மானிக்கும்
வழிகளில் ஒன்றாக சில(ர்) வழிச் செய்தியை விட்டு விட்டு பல(ர்)வழிச்
செய்தியை எடுக்க வேண்டும் என்று முடிவு செய்வதற்கும் மேற்படி வகைப்படுத்தல்
பெரிதும் உதவியாக அமைந்துள்ளது.
மேற்கண்டவாறு கல்வி ரீதியான காரணங்களுக்காக
மேற்கொள்ளப்பட்ட வகைப்படுத்தலில் (பிழையான) பகுத்தறிவு வாதம், தத்துவம்,
அந்நிய சித்தாந்தங்கள் என்பவற்றால் தாக்கமடைந்தவர்கள் குறிப்பாக வழிகெட்ட
இச் சிந்தனைப் பிரிவான அஷ்அரிய்யாக்கள் முற்றிலும் பிழையான அபாயகரமான அணுகுமுறையை கடைப் பிடிக்கிறார்கள்.
அது என்னவெனில், பல(ர்) வழிச் செய்திகள்
மூலமாக மாத்திரம்தான் நாம் நபி (ஸல்) அவர்கள் குறித்த ஒரு விடயத்தைச்
சொன்னார்கள், செய்தார்கள், அங்கீகரித்தார்கள் என்ற “அறிவைப் பெற்றுக் கொள்ள முடியும்”
என்றும் சில(ர்) வழிச் செய்திகள் மூலமாக நபி (ஸல்) அவர்கள் குறித்த ஒரு
விடயத்தைச் சொல்லியிருப்பார்கள், செய்திருப்பார்கள்,
அங்கீகரித்திருப்பார்கள் என்ற “யூகத்தை அல்லது பலமான யூகத்தையே எம்மால் பெற்றுக் கொள்ளமுடியும்” என்ற சித்தாந்தமே இவர்களால் கடைப்பிடிக்கப்படுவதாகும்.
அத்துடன் இதை விடவும் ஒரு படி மேலே போய்……
மன்னிக்கவும் ஒருபடி கீழே இறங்கி இத்தகைய சிந்தனைச் சிக்கலுக்கு
செயல்வடிவம் கொடுக்கும் வகையில் “அறிவைப் பெற்றுக் கொள்ள முடியுமான
பல(ர்) வழிச் செய்திகளை மாத்திரம்தான் அகீதா (நம்பிக்கைக் கோட்பாடு)
தொடர்பான விடயங்களில் ஏற்றுக் கொள்ள முடியும் என்றும் சில(ர்)
வழிச் செய்திகளை அகீதா (நம்பிக்கைக் கோட்பாடு) தொடர்பான விடயங்களில்
ஏற்றுக் கொள்ள முடியாது, ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றும் சூத்திரம் வகுத்து
மட்டிடப்பட்ட எண்ணிக்கைக்குள் அடங்கும் பல(ர்) வழிச் செய்திகளைத் தவிர
ஏனைய அழ்ழாஹ்வின் திருப் பெயர்கள், பண்புகள் பற்றிக் கூறும், மலாஇகாமார்கள் பற்றி வர்ணிக்கும், நபிமார்கள் சரிதை எடுத்துச் சொல்லும், மறுமை பற்றிய விரிவான விளக்கங்கள் இடம் பெறும் சில(ர்) வழிச் செய்திகளை, நபி மொழிககளை நிராகரிக்கும் வாயிலை அகலத் திறந்து விட்டிருக்கிறார்கள்.
மேற்படி காரணத்தால் இப்புத்தகத்தில் அதன் விரிவுரையாளர் பைஜூரி என்பார் “நபி (ஸல்) அவர்களது தந்தை நரகத்தில் உள்ளார்”, “இரத்த பந்தங்களைப் பேணி நடப்பவரது ஆயுள் அதிகரிக்கப்படும்”,” மறுமையில் நபிமார்களுக்கு நீர்த்தடாகங்கள் இருக்கும்” ஆகிய நம்பகமான நபிமொழிகளை 29,160,184 ஆகிய பக்கங்களில் நிராகரிப்பதைக் காண்கிறோம்.
மேற்படி வழிகெட்ட சித்தாந்தம் பிழையானது
என்பதை இமாம்களான ஷாபிஇ, அஹ்மத், மாலிக், இப்னு ஹஸ்ம், இப்னு அபில் இஸ்,
இப்னு தைமியா, இப்னுல் கையிம் போன்ற ஹதீஸ் கலை அறிஞர்கள் ஆதார பூர்வமாகவும்
அறிவு பூர்வமாகவும் நிரூபித்துள்ளார்கள்.
இவ் வழிகெட்ட சித்தாந்தத்தின் காரணமாக
எத்தகைய நபி மொழிகளை நிராகரிக்க வேண்டி வரும் என்பதற்கான உதாரணமாக ஒரு சில
அகீதா (நம்பிக்கைக் கோட்பாடு) தொடர்பான ஆதார பூர்வமான சில(ர்) வழி நபி
மொழிகளை இங்கு எடுத்தெழுதுவது சாலப் பொருத்தமாகும்.
1.ஆதம் (அலை) அவர்களது நபித்துவமும் அல்குர்ஆனில் கூறப்படாத ஏனைய நபிமார்களது நபித்துவங்களும்.
2.நபி (ஸல்) அவர்களது மஹ்ஷரில் இடம் பெறும் ஷபாஅத் (சிபாரிசு)
3. உம்மத்தில் பெரும்பாவங்கள் செய்தவர்கள் தொடர்பாக நபி (ஸல்) அவர்களது ஷபாஅத் (சிபாரிசு).
4. ஹஜருல் அஸ்வத் சுவனத்தில் இருந்து வந்தது என்ற நம்பிக்கை.
5. சுவனத்திற்கு நன்மாரயம் செய்யப்பட்ட பத்து நபித்தோழர்கள் பற்றிய நம்பிக்கை.
6. கப்ரில் இடம் பெறும் முன்கர், நகீர் ஆகிய மலக்குகளின் விசாரனை.
7.கப்ர் வேதனை பற்றிய நம்பிக்கை.
8. மறுமையில் நன்மை தீமை நிறுக்கப்படும் இரு தட்டுகள் உள்ள (மீஸான்) தராசு பற்றிய நமிக்கை.
9. எழுபதாயிரம் பேர் கேள்வி கணக்கின்றி சுவனம் நுழைவார்கள் என்ற நம்பிக்கை.
10. விசுவாசிகளில் பெரும் பாவம் செய்தவர்கள் நரகில் நிர்ந்தரமாக வேதனை செய்யப்படமாட்டார்கள் என்ற நம்பிக்கை.
இது போன்ற நம்பிக்கை கோட்பாடு தொடர்பான
ஏராளமான நபிமொழிகள் நிராகரிக்கப் படுவதற்கு காரணமாக இருக்கும், சில(ர்)
வழிச் செய்திகள் மூலம் (அது கூறும் விடயம் தொடர்பான) அறிவை நாம் பெறமுடியாது எனக் கூறி அதன் மூலம் ஏராளமான அகீதா (நம்பிக்கைக் கோட்பாடு) தொடர்பான சில(ர்) வழிச் செய்திகளை நிராகரிக்கும் அஷ்அரிய்யாக் கோட்பாடு அபாயகரமான வழிகேடு என்பதில் சந்தேகமில்லை.
எனவே, இவ்வாறான அகீதா (நம்பிக்கைக்
கோட்பாடு) தொடர்பான நம்பகமான நபி மொழிகளை நிராகரிக்கும் வழிகெட்ட அஷ்
அரிய்யா சித்தாந்தத்தையே சமகாலத்தில் அறிஞர்களாக!! பிரபல்யமடைந்துள்ள கலாநிதி யூஸுப் அல் கர்ளாவி, முஹம்மத் அல் கஸ்ஸாலி ஆகியோரும் கொள்கையாகக் கொண்டுள்ளார்கள் என்பதையும் இங்கு விசனத்துடன் குறிப்பிடுவது பொருத்தமாகும்.
அத்துடன் மேற்படி சித்தாந்தம் அபத்தமானது,
வழிகெட்டது என்பதை பின்வரும் அல்குர்ஆன் வசனங்களும் ஆதாரபூர்வமான
நபிமொழிகளும் சந்தேகமின்றி நிரூபிக்கப் போதுமானதாக உள்ளன.
1. “நம்மிக்கை கொண்டோர் ஒட்டுமொத்தமாக புறப்படக் கூடாது அவர்களில் ஒவ்வொரு கூட்டத்திலிருந்தும் ஒரு தொகையினர் மார்க்கத்தைக் கற்றுக் கொள்வதற்காகவும்
தமது சமூகத்திடம் திரும்பிச் செல்லும் போது அவர்களை எச்சரிப்பதற்காகவும்
புறப்பட்டிருக்க வேண்டாமா அவர்கள் (இதன் மூலம்) தவறிலிருந்து விலகிக்
கொள்வார்கள்.” (அல்குர்ஆன் 9:122)
மேற்படி வசனத்தில் ஒரு தொகையினர் என்பதற்குப் பயன்படுத்தப் பட்டிருக்கும் அறபிச் சொல்லான “தாஇபாஃ” எனும் பதம் குறைந்தது ஒரு நபரைக் குறிக்கும் என்பதாலும் அவர் கற்ற மார்க்க விடயங்களை
அது அகீதா, இது சட்டம் என்ற பாகுபாடின்றி எச்சரிக்கும் போது அதை
ஏனையவர்கள் ஏற்று தவறுகளிலிருந்து விலகி நடக்க வேண்டும் என்பதையும்
இவ்வசனம் வலியுறுத்துவதனூடாக சில(ர்) வழிச் செய்திகளை அகீதா விடயத்தில்
ஏற்றுக் கொள்ள முடியாது என்ற வாதம் செல்லுபடியற்றதாக ஆகி விடுகிறது.
2. “நகரின் தூரப் பகுதியிலிருந்து ஒரு மனிதர் வந்து ‘எனது சமூகமே இறை தூதர்களைப் பின்பற்றுங்கள் ‘ என்று கூறினார்.” (அல்குர்ஆன் 36:20)
இவ்வசனமும் அகீதா தொடர்பான விடயத்தை ஒரு
நபர்தான் எடுத்துக் கூறினாலும் ஏற்றுப் பின்பற்ற வேண்டும் என்பதை
வலியுறுத்துவதைக் காண்கிறோம்.
3. “விசுவாசிகளே தீயவன் ஒரு செய்தியை உங்களிடம் கொண்டுவந்தால் அதை தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்.” (அல்குர்ஆன் 46;6)
இவ்வசனமும் நம்பகமான ஒருவரின் செய்தியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை தெளிவாக வலியுறுத்துவதைக் காண்கிறோம்.
4. “முஆத்
(ரழி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் யமனுக்கு அனுப்பும் போது “நீர்
வேதங்கொடுக்கப்பட்ட ஒரு சமுதாயத்தினரிடம் செல்கிறீர், நீர் அவர்களுக்கு
அழைப்பு விடுக்கும் முதலாவது விடயம் இறைவனை ஒருமைப் படுத்துவதாக அமையட்டும்
‘ என்று கூறினார்கள்.” (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரழி), நூல் ஸஹீஹுல் புகாரி-6937)
5. அலி (ரழி)
அவர்களை நபி (ஸல்) அவர்கள் யுத்தத்திற்கு அனுப்பும் போது ‘எதிரிகளை நீர்
இஸ்லாத்தின் பால் அழைப்பீராக! அழ்ழாஹ் விடயத்தில் அவர்கள் மீது உள்ள
கடமைகளை அவர்களுக்கு அறிவிப்பீராக! உன் மூலம் ஒருவர் நேர்வழி பெறுவது
சிகப்பு ஒட்டகங்களை விட உமக்கு சிறந்தது’ என்று உபதேசித்தார்கள்.” (அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஃத் (ரழி), நூல்: ஸஹீஹுல் புகாரி-3498)
இவை போன்ற பல ஆதாரங்கள் நம்பிக்கை கோட்பாடு (அகீதா) தொடர்பான சில(ர்) வழிச் செய்திகளை மறுக்கும் சித்தாந்தத்தை அடியோடு மறுக்கின்றன.
எனவே குறித்த ஒரு நபிமொழி ஒரே ஒரு
அறிவிப்பாளர் வரிசை மூலமாகவேனும் ஆதாரபூர்வமான முறையில் பதிவு
செய்யப்பட்டிருந்தால் அதை எப்படி நாம் சட்டம் தொடர்பில் எடுத்து
சிரமேற்கொண்டு செயற்படுத்துகிறோமோ அவ்வாறே அகீதா (நம்பிக்கைக் கோட்பாடு )
தொடர்பில் ஒரே ஒரு அறிவிப்பாளர் வரிசை மூலமாகவேனும் ஆதாரபூர்வமான முறையில்
பதிவு செய்யப்பட்டிருந்தால் அதை ஏற்றுக் கொண்டு அதில் கூறப்படும்
விடயத்தில் உறுதியான நம்பிக்கை கொள்வதே ஒரு உன்மை முஸ்லிமின் அடையாளமாகும்.
இத்தகைய ஸுன்னாவை நிராகரிக்கும்
சித்தாந்தம் இஸ்லாமிய அகீதா என்ற பெயரில் எமது மத்ரஸாக்களில்
போதிக்கப்படுவதும் இதைப் போதிப்பவர்கள், கற்றுத் தேர்ந்து சரிகாண்பவர்கள்
தங்களை கொஞ்சங்கூட வெட்கமில்லாமல் “சுன்னத் வல் ஜமாஅத்” என அறிமுகப்படுத்துவதும் வன்மையாகக் கண்டிக்கப் படத்தக்கதாகும் என்பதை சகலரும் அறிந்து கொள்ள வேண்டும்.